Sunday, February 05, 2023

அறநிலையத்துறையை தனியார்மயமாக்குதல்!

 = கற்காலமாக்குதலியம்!

கடந்த கால சமூக நீதிக்கு எதிரான விடயங்களை போரட்டாங்களின் வழியாக கை வரப் பெற்ற சமூக நீதி சட்டங்களை மீண்டும் திருத்துவது என்பது நாகரீகமடைந்த ஒரு சமூகத்தை மீண்டும் அந்த கற்காலத்திற்கே எடுத்துச் செல்லுவதற்கு ஒப்பானதாகும்.

அண்மைய காலங்களில் அவசர கோலத்தில் ஒன்றன் பின் ஒன்றாக சில மத அரசியல் கட்சிகள் கொண்டு வரும் பிரச்சினைகளின் வீச்சத்தைப் பார்த்தால் அதற்கான முயற்சியாகவே படுகிறது.

என்னவோ ஒரு சமூகத்தினர் மட்டுமே பன்னெடும் காலமாக சமூக சீர் திருத்தத்தையும், பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்கி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட உழைத்த உத்தம புத்திரர்களாக தங்களை வரலாற்றில் தூக்கி நிறுத்திக்   கொள்ள எத்தனிக்கிறார்கள்.

ஆனால், உண்மை என்னவோ அதே வரலாற்று பாதையில் ஓடும் பேருந்தால் நசுங்கி மாண்ட ஒரு வன விலங்கைப் போல மரணித்துக் கிடக்கிறது

ஒரு நாகரீமடைந்த சமூகம் என்பது நாட்டில் வாழும் அனைவரையும் சமமாக பாவித்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு கூட்டாக அழைத்துச் செல்வது. அதனைத் தவிர்த்து ஏதோ ஒரு காலத்தில் சொரண்டி தின்று உடல் வளர்த்தோம் என்பதால் இந்த நவீன காலத்திலும் அந்த இத்துப்போன கோட்பாடுகளை நடை முறை படுத்த எண்ணுவது எத்தனை சாபக்கேடு ஒரு சமூகத்திற்கே?

சரி பிரச்சினைக்கு வருவோம். ஓர் இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தினுள் தீ, எந்த பொது இடமாகினும் அங்கே விபத்து நடப்பதற்கான அனைத்து சாத்தியங்களும் உள்ளதுதானே? தீ விபத்து ஏதோச்சையாக நடந்தது என்றே வைத்துக் கொள்வோம், அறநிலையத்துறையும் மெத்தனமாகவே இருந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்... அதற்காக உடனே அந்த அறநிலையத் துறைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அனைத்து அறநிலையத்துறைக்கு    கீழே வரும் கோவில்களையும் தனியார் மயம் ஆக்கி பழைய பஞ்சாங்கப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்த ஒப்படைக்க வழிவகை செய்து கொடுக்க தடி எடுப்பீர்களா?

கோவில் என்பது ஜஸ்ட் ஒரு கோவில் வளாகம் மட்டும்தானா? எதற்காக அந்த காலத்திலயே அத்தனை போராட்டதிற்கிடையே பெரிய கோவில்களை இந்த "அறநிலையத்துறைக்கு" கீழாக ஒரு அரசாங்கம் கொண்டு வந்தது,அந்த துறைக்கு  கீழ் வருவதற்கு முன்பாக நாமெல்லாம் அந்த கோவிலுக்குள் நுழைந்து அறிய முடிந்ததா?

அந்த கோவிலின் நிர்வாகம் யாரிடமிருந்தது, அங்கு விழும் காணிக்கைகளை யார் எண்ணினார்கள், எந்த வாசப்படி வழியாக அது யாருடைய காஜானவிற்கு சென்றடைந்தது என்று நமக்குத் தெரியுமா?

ஒரு டேட்டா வந்தது. ஒரு பெரிய கோவில் அது அறநிலையத் துறைக்கு கீழ் வருவதற்கு முதல் வருடம் வெறும் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதாக காட்டப்பட்டதாகவும், அடுத்த வருடமே அது 40 லட்ச ரூபாயாக உயர்ந்ததாகவும் அறிந்தோம். அது எப்படி சாத்தியம் மக்களே? கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், கடவுளுக்கு வெகு அருகமையில் இருப்பவர்கள் இப்படியாக ஆயிரம் ஆண்டுகளாக கணக்கு காமித்து வந்திருக்கிறார்கள்.


அது மட்டுமா? ஒரு கிராமத்திற்குள்ளாகவே வாழும் மனிதர்களை பிரித்து இவன் உள்ளே வரலாம், வரக்கூடாது என்று பிரித்து ஆண்டதும் நடக்கிறது, நடந்து வந்திருக்கிறது. 

இவற்றையெல்லாம் களைந்து ஒரு சமூக சமன் பாட்டை கொண்டு வர எண்ணி உருவாக்கப்பட்டதுதான் "அறநிலையத் துறை." இது எத்தனை பெரிய புரட்சி? சமூக சீர் திருத்த எட்டல்??

இதனையெல்லாம் சீர் படுத்த ஒரு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து முறைமைப்படுத்துவது எப்படி தவறாகும்? அந்தத் துறை இன்றைக்கு சற்றே சீர் குலைந்து அதனில் நிர்வாகச் சீர் கேடுகள் நடக்கிறது என்றால் உடனே ஊசி காதுக்குள் ஒட்டகத்தைத் திணிப்பது போல மீண்டும் கோவில்களை பழைய சுரண்டலுக்கே தனியார் வசம் ஒப்படைத்து விடுங்கள் என்று சந்தில் சிந்து பாடுவது யார்? எதற்காக?

எது எப்படியோ மக்கள் சிந்திப்பதற்கேனும் இது போன்ற நாகரீகமடைந்த ஒரு சமூகத்தில், இன்னமும் அந்த இடத்திற்கு தங்களை நகர்த்திக் கொள்ள முயற்சிக்காத கயவர்களை அடையாளம் காணவும், இந்த பிரச்சினையை ஒட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்றவுமாவது இது உதவுகிறதே என்ற வகையில் அந்த பொய்யர்களுக்கு இந்த தருணத்தில் ஓர் நன்றி!


#மீள்

#AdmkFails _2018

0 comments:

Related Posts with Thumbnails