Friday, February 03, 2023

The White Tiger: வெள்ளை புலி!

நேற்று நெட்ப்ளிக்ஸ்ல "த ஒயிட் டைகர்"நு ஒரு படம் பார்த்தேன். இந்தப் படத்தோட கதை புத்தகமாக வெளி வந்திருக்கிறது. ஆனா, அந்தப் புத்தகம் பெரிய அளவில் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. சுதந்திர இந்தியா ஏன் முற்று முழுதுமாக அனைத்து மக்களுக்குமான நாடாக இன்னும் தலையெடுக்க முடியவில்லை என்பதை இந்தப்படம் ஃப்ரேம் பை ஃப்ரேமாக சுழன்று மிக அழுத்தமான கதைக்களத்துடன் பேசுகிறது.


வட இந்திய கிராமங்களை உங்கள் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தும் சில காட்சிகளும் உண்டு. சைக்கிள் ரிக்ஷா இழுக்கும் கதாநாயகனின் அப்பா. வாழுமிடத்திற்கு கந்து வட்டியாய் பணம் வசூல் செய்யும் பண்ணையார் கூட்டம், கதாநாயகனின் அப்பாவை தெரு முனையில் நிற்க வைத்து கன்னத்தில் அறையப்படுவதை காண்கிறான்.

அப்பா, சைக்கிள் ரிக்‌ஷா இழுக்கும் ஒரு நாள் நுரையீரலை கரைத்து இரத்த வாந்தியாய் எடுத்து இறந்து போகிறார். கதாநாயகன் பள்ளிப்படிப்பு இடைநிற்றலாகி கூலி வேலைக்குச் செல்கிறான். நிலச்சுவான்தாரான ஊர்த்தலையின் பிள்ளைகளில் ஒன்று அமெரிக்கா ரிடர்ன்.

அமெரிக்காவில் நான் வாழ்ந்தாலும் என்னுடைய அகம் என்னவோ இந்தியப் புத்தியாய்த் தான் இருக்கிறது என்கிறான். அவன் பேசும் வசனங்கள் ரொம்ப முக்கியமானது. அவனுடைய மனைவி அமெரிக்காவில் படித்து மருத்துவராகப் பணியாற்றுகிறவர். அவளே கதாநாயகனை ஒரு விதத்தில் எம்பவர் செய்பவளாய் இருக்கிறாள். ஒவ்வொரு கேரக்டரும் அளவோடு இந்தியாவின் அவலத்தை பேசவோ, கோர முகத்தை எடுத்துக் காட்டவோ அமைக்கப்பட்டவை. அவனிடத்தில் வேலைக்குச் சேர கதாநாயகன் ஆசைப்பட்டு கிராமத்திலிருந்து கிளம்பிச் சென்று கார் ஓட்டுநராகச் ஆகிவிடுகிறான்.

அந்தக் கிராமும் கதாநாயகனோட குடும்பமும் இந்தியா இரண்டிலிருந்து வருபவர்கள் என்றால், பண்ணையார் தனக்குடும்பம் முதல் தர வாழ்வமைவு கொண்ட முதல் இந்தியாவைப் பற்றிப் பேசுகிறது. ஏன் நான் அடிமையாக இருக்கிறேன் என்று கதாநாயகன் தன்னுடைய லோயல் தனம் முழுமையும் காட்டி வேலை செய்யும் பொழுதும், நாயை விடக் கேவலமாக நடத்தப்படும் பொழுது அவனுக்குள்ளாகவே உரையாடிக் கொள்ளும் வசனங்கள் மிக முக்கியமானவை.

படத்தில் இரண்டே சீன் என்னை கவிழ்த்து விட்டது எனலாம். கதாநாயகன் தன்னுடைய பல்லின் கறையை எடுக்க முதன் முதலாக பிரஸ், டூத் பேஸ்ட் எடுத்து கண்ணாடிக்கு முன் நின்று ஒரே நாளில் விளக்கி விளக்கி பற்களின் வெள்ளைத் தன்மையை கொண்டு வர முயற்சிப்பது போல ஒரு காட்சி...


இரண்டாவது, வேலையை விட்டு விலக்கி வைப்பது போல ஒரு சூழல், அதே நேரத்தில் அமெரிக்கா ரிடர்ன் பண்ணையாரின் மகன் டில்லியில் தங்கி அரசியல் வாதிகளுக்கு தினம் தினம் பை பையாக லஞ்சப் பணம் கொண்டு சென்று கொடுப்பதுமாக பிசியாக இயங்கிக் கொண்டிருப்பான் அதனை ஓட்டுநராக கவனித்துக் கொண்டிருப்பான் கதாநாயகன். 

இவை இரண்டையும் இணைத்து போகும் வழியில் திறந்த வெளியில், வானுயர எழுந்து நிற்கிற கட்டிடப் பின்னணியில் மலம் கழித்துக் கொண்டிருப்பவர் ஒருவருடன் தானும் பேன்ட்டை தளர்த்தி நேர் எதிராக அமர்ந்து அவனுடன் சேர்ந்து கதாநாயனும் ஒரு மேனியாக் தனமாக அலறிச் சிரிக்குமொரு காட்சி, ஒட்டு மொத்த இந்திய மனநிலை, அரசியல் போக்கு, பணம், அதிகாரம் படைத்தவர்களின் பொறுப்பற்றத் தனத்தை எள்ளலாகச் சுட்டிக்காட்டும் நுட்பத்தனமென அமைந்தது... 

படத்தில் அது போல பலப்பல காட்சி அமைப்புகள்... நிகழ்கால அரசியல் சூழலை போகிறப் போக்கில் எள்ளி நகையாடிச் செல்கிறது. A must watch movie! 


#Cinema 

#சினிமா

#TheWhiteTiger

0 comments:

Related Posts with Thumbnails