Sunday, February 05, 2023

ஜம்தாரா (Jamtara): கடன் அட்டை திருட்டு

இந்திய சினிமாவிற்கு நெட்ப்ளிக்ஸ் வந்ததிலே ஒரு சிறப்பான சம்பவம் நடந்திருக்கின்னா அது பரவலாக பேசப்படதா விசயங்களை பேச வைக்கிற படங்களை கொடுப்பதுதான். நமக்கு இது வரைக்கும் ஹிந்திப்படங்கள் என்றாலே பளபளப்பான பெரிய பெரிய அரண்மனை போன்ற வீடுகளில் ஐட்டம் பாடல்களை ஒத்தப் பின்னணியில் வண்ண வண்ண பெண்டீரையும், இசையையும் தவழ விட்டு நம்மை மயக்கி படம் காட்டுவார்கள்.



ஆனா, இதற்கு நேர்மாறாக இன்று நெட்ப்ளிக்ஸ் வேறு மாதிரியான ஒரு சினிமா அனுபவத்தை நமக்கு வழங்கி வருகிறது. இது வரைக்கும் நான் பார்த்த ஒரு சில படங்களையும், தொடர்களையும் வைத்து இணைத்துப் பார்த்தால், இந்தியா ஏன் மோடி, அமிச்சா, நிர்மலா போன்றவர்களுடன் மாரடித்துக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஏற்கெனவே "தெ ஒயிட் டைகர்" என்ற படத்தைப் பற்றி பேசி ஒரு பகுப்பாய்வு செய்தோம்.

அதன் தொடர்ச்சியாக அமைந்திருக்கிற "#ஜம்தாரா (Jamtara)" என்ற தொடரைப் பார்த்தேன். வேலையில்லா இளைஞர்கள் ஒரு சிறு கிராமத்திலிருந்து அலைபேசியைப் பயன்படுத்தி வங்கி அட்டைகளின் செய்திகளைப் வாடிக்கையாளர் களிடமிருந்து கறந்து (Phising) நூதன திருட்டு செய்கிறார்கள் என்பதே படத்தின் ஒன்லைனர். அந்த திருட்டில் ஈடுபடும் மனிதர்கள் வாழும் இடமும், சமூக கட்டமைப்பும் அவர்களுக்கிடையேயான உறவாடலும் எத்தகையது என்பதை கடத்துவதில் தான் இந்த தொடர் சிக்ஸர் அடித்திருக்கிறது எனலாம்.

அப்படியே இன்றைய வட இந்தியாவின் ஒரு மினி சிற்றூரும், சிறு நகரமும் அதிலுள்ள மக்களின் வாழ்வமைவையும் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. வட இந்தியா ஏன் தென் மாநிலங்களை விட மிகவும் பின் தங்கி இருக்கிறது? படை படையாக ஊரையே காலி செய்து கொண்டு புலம் பெயர என்ன காரணம்? ஏன் கொலை, கொள்ளை, திருட்டில் அதிகமாக ஈடுபடுகிறார்கள்? இவை அனைத்தையும் இந்தத் தொடரில் இணைக்கும் புள்ளி ஒன்று இருக்கிறது.

அந்தத் தொடரைப் பார்க்கும் போதே எனக்குத் தோன்றியது, இன்றையத் தமிழ்நாடு அவர்களின் பார்வைக்கு ஒரு மினி சிங்கப்பூராகத்தான் காணக் கிடைக்க வேண்டும். நாம் நிலச்சுவாந்தார்களை கடந்து விட்டோம். மகாபாரத சூழ்ச்சி வாய்ப்பாடுகளை தினசரி வாழ்வில் தொடர்பு படுத்தி செய்யப்போகும் படுபாதக செயல்களுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டு செய்யும் தனத்திற்கு என்றென்றைக்கும் தொடர்பற்று இருந்திருக்கிறோம். ஆனால், இவை அனைத்தும் வட மாநிலங்களில் இன்னமும் இருப்பதாகத் தெரிகிறது.


இந்தத் தொடரில் ஜாதிய கட்டமைப்பு மிகப் பெரிய பூதமாக எழுந்து நிற்கிறது. ஒரு பிராமண நிலச்சுவாந்தார் அந்த ஊரையே ஆட்டி வைக்கிறார். அனைத்து அதிகாரமும் ஓரிடத்தில் ஒடுங்கிக் கிடக்கிறது. மக்களும், காவல்துறையும் அவரின் கடைக்கண் பார்வையில் கட்டுண்டுக் கிடக்கிறது. அந்த கதாபாத்திரம் வட இந்தியாவின் சமூக நோய்மைத் தன்மையின் மூல ஊற்றை பேசிச் செல்கிறது.

உழைக்கும் வயதில் உள்ள இத்தனை பெரிய மக்கட்தொகையைக் கொண்ட ஒரு நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும், வறுமையும், பேராசையும் ஒன்று சேர்ந்தால் என்னாகும் என்பதற்கு இந்த அலைபேசி வழி வாடிக்கையாளர்களிடம் நடத்தப்படும் கொள்ளையேச் சான்று. நைச்சியமாக ஆசை காட்டி வாடிக்கையாளர்களின் கார்டுகளில் இருக்கும் 16 இலக்க எண்ணைப் பெற்று எப்படியாக பணத்தை பரிமாற்றிக் கொள்கிறார்கள் அத்தனை சிறிய சிற்றூரிலிருந்து என்பது ஆச்சர்யமோ ஆச்சர்யம்.

அதுவும் அந்த வாழ்வுப் பின்னணியோடு லட்சக்கணக்கில் இப்படிச் சுருட்டும் போது பயமாக வருகிறது. தொடர்ந்து மன்மோகன் சிங் கூறிய "முறைப்படுத்தப்பட்ட சுருட்டல்" என்ற பதம், அவர்கள் யார் யாரையோ ஒவ்வொரு முறையும் வங்கிக்கு கூட்டிச் சென்று பணத்தை எடுக்கும் போதும், ஓ! இதற்காகத்தன் நாட்டு மக்களையே பாடாய் படுத்தி வங்கிக் கணக்கு தொடங்கச் சொன்னார்களோ என்பதை நினைவூட்டியதை மறக்க முடியாது.

அண்மைய காலத்திய பணச் சுருட்டலில் இது போல பல திட்டங்களில் மக்களுக்கு சென்றடைய வேண்டிய வங்கிக் கடன்கள் யார் யாருடைய இயக்கப்படாத வங்கிக் கணக்குகளிலெல்லாம் வரவு வைத்து பெரியளவில் ஸ்கேம் செய்திருப்பதையும் தினமும் தொலைக்காட்சி செய்திகளில் கேட்டு வருகிறோம். அதனுடைய இன்னொரு வடிவம் தான் இந்த phising.  இது ஓர் உறுபிணி போல வட மாநிலங்களில் பெருகி வருவதாகத் தெரிகிறது. 

வரும் காலங்களில் இடப்பெயர்வின் மூலமாக அடைந்து கொள்ளும் வேலை வாய்ப்புகளைத் தாண்டி, அந்தந்த மாநில அரசுகள் ஏதாவது வாழ்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கிக் கொடுத்து வாழவைத்துப் பார்க்க வில்லை என்றால், மென்மேலும் கூட்டம் கூட்டமாக தெற்கு புறமாக வந்து அள்ளிக் கொண்டு ஓடி மறைந்து கொள்ளும் கூட்டம் பெருகக் கூடும்.

#ஜம்தாரா

#Jamtara_Netflix_Series

0 comments:

Related Posts with Thumbnails