Friday, September 10, 2010

புனைவுகளின் தீவிரம் உணர்வோம்: To Writers...!!

நேற்று ஒரு நண்பரோட அரட்டைக் கச்சேரி நடத்திக்கொண்டிருந்தேன். அவரு வலையுலகில் நடக்கும் அவ்வப்போதைய அடிதடிகளிலிருந்து எப்பொழுதாவது எழுதினாலும் கூட செறிவு மிக்க, சிந்தனைகளை தூண்டக் கூடிய விசயங்களை எழுதுபவர்கள் ஏன் விலகியே இருக்கிறார்கள் என்று என்னய சீண்டிப் பார்த்தார். அதுக்காக ”சுயமாக” தன்னை வளர்த்து எடுத்துக்கொண்ட அந்தக் கூட்டத்திற்குள்ளர விழுற ஆள்னு என்னய படிச்சி வைக்காதீங்க.

நான் எதிலும் சேராசேத்தி. இன்னும் நான் அவதானிக்கும் நிலையிலேயே இருக்கிறேன். எனக்கும் திரிச்சு எழுதும் சோ கால்ட் ‘புனைவிற்கும்’ ரொம்பத் தூரம். வலையுலக புனைவு இலக்கியம் படிச்சுப் படிச்சு, புனைவு எழுதுறது அவ்வளவு எளிமையான விசயமாக பட்டாலும் என்னால அப்படி பார்க்க முடியல :). நான் எழுதும் கட்டுரைகளிலிருந்தே புனைவிற்கு தேவையான அனேக கருக்களை எடுத்து கையாள முடியும்தான். இருந்தாலும், புனைவு கொடுப்பதற்கின்னு எனக்கு நானே பல எதிர்பார்ப்புகளை, கட்டுப்போக்குகளை உருவாக்கி வைச்சிருக்கேன்.

எப்பொழுதெல்லாம் என்னாலும் புனைவுகள் கொடுக்க முடியும், என் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக் கொண்ட விசயங்களிலிருந்தே வண்டி வண்டியாக மூக்கை சிந்த வைக்கும், தன்னையே உணர்ந்து (தடவி) பார்த்து கொள்ள வைக்கும் ரேஞ்சிற்கு கூட அனுபவ பாடங்களைக் கொண்டு புனைவு என்ற பெயரில் வாந்தி எடுத்து வைக்க முடியும்தான். அது எனது கட்டுரைகளின் நீளங்களைக் கொண்டே கூட நீங்களும் யூகிக்க முடியும்தானே!

சரி இத்தனை முஸ்தீபுகளைக் கொண்டிருந்தாலும், ஏன் முயற்சி எடுத்துப் பார்க்கவில்லை, என்ற அடிப்படைக் கேள்வி எழும்பலாம். முதலாவது, புனைவுகளின் மூலம் நம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி பாசாங்கு செய்ய முடியாது. நன்கு அறிந்த வாசகர்களிடம் மாட்டிக் கொள்வோம். இரண்டாவதாக, தகவல் பிழையோ, அல்லது தன்னுடைய அரைகுறை மண்டைப் புரிதலை வைத்துக் கொண்டு ஒரு பெண்ணின் மூலமாக அவளுடைய வாழ்வியல் சிக்கலை சொல்கிறேன் என்று தத்துபித்துத் தனமாக நம்முடைய சிறு சாளரத்தின் வழியாக கண்ட விசயத்தை வாந்தி செய்து வைத்தால் அதுவே தம்மை விட இன்னும் பல படிகள் வளர்ச்சியில் பின் தங்கி இருக்கும் மக்களின் மனத்தில் தவறான ஒரு கற்பிதத்தை வளர்த்து விடச் செய்யலாம்.

என்னை பொருத்த மட்டிலும் கதை சொல்லிக்கென்றே பல திறமைகள் வேண்டும். காப்பியடித்து எழுதுவதான எழுத்து நடை, சொல்லாடல், வட்டார மொழி பயனேற்றம் செய்வது மட்டுமே புனைவிற்கான அடிப்படை தகுதிகள் கிடையாது என்று நினைக்கிறேன். அவன் மிக மிக கூடு விட்டு கூடு பாயும் திறன் கொண்டவனாக இருத்தல் அவசியமென்று கருதுகிறேன். அஃறிணை பொருட்கள் கூட சம்பாஷணை செய்து கொண்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனை உலகத்திலும் சஞ்சரிக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும்.

விசயம் அப்படியாக இருக்கும் பொழுது மனிதர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியைப் போன்றவன் வெறும் பிறர் படைப்புகளையும், உலகச் சினிமாக்களையும், பேருந்து நிலையத்தில் அமர்ந்து வயதான பாட்டி ஒன்று பேருந்தில் ஏறக் கஷ்டப்படும் பொழுது மற்றொருவன் உதவுவதைப் பார்த்து, கேட்டு, வாசித்து கதை சொல்லியாக பக்குவப் பட்டிருந்தால் போதுமா? அது படிக்கும் வாசகனிடத்தில் உண்மையான ஒரு தாக்கத்தை நிகழ்த்தி விட்டுச் செல்ல முடியுமா? அப்படியே பயிற்சியின் மூலமாக ஒரு தேர்ந்த கதை சொல்லியாக பேர் பட்டுப் போனாலும் அது எந்த அளவிற்கு அந்த கதை சொல்லியின் சொந்தப் பார்வையில் தாக்கத்தினைக் கொடுத்து அவன் உண்மையான அகப் பார்வையினை மாற்றியிருக்கக் கூடும்?

உண்மை உலகில் சமூகம் கட்டமைத்த பல நம்பிக்கை, அவ நம்பிக்கைகளை உடைத்து, பிற விளிம்பு நிலை மனிதர்களுக்கெதிரான சமூக அநீதிகளுக்கூடான வாழ்க்கைப் பயணத்தில் தானும் பங்கேற்று எது போன்ற அனுபவப் பொதிகளை சிறிதேனும் தன்னுள் இறக்கி இருப்பார்கள். இது போன்ற என்னுடைய சொந்த எதிர்பார்ப்புகளே ஒரு கதை சொல்லியின் பின்புலமாக இருக்க வேண்டுமென்ற நிலைப்பாடோ என்னவோதான், புனைவிற்கெதிரான படிப்போட்டத்தை இன்றைய நிலையில் தடை செய்து வைத்திருக்கிறது எனதுள்ளம் என்று எண்ணச் செய்கிறது. இருப்பினும் அது போன்ற பயணங்களின் ஊடாக எழுதும் மனிதர்களை என் மனதும் தேடிச் சென்று படிக்கச் சொல்கிறது.

கற்பனை உலகில் சஞ்சரித்து எழுதும் அறிவியல் புனைவுகளின் மீது எனக்கு அலாதியான காதல் இருக்குமளவிற்கு, நம் சமூகத்தில் எழுதும் சமூகம் சார்ந்த எழுத்துக்களை என்னால் படிக்க முடிவதில்லை காரணம், அதனில் நிறைய skewed பார்வை இருக்கிறது. அது நிகழக் காரணமாக இருப்பதற்கு அவர்கள் வாழ்ந்த உலகின் பக்கமாக உள்ள பகுதியை மட்டுமே பார்த்து வளர்ந்ததுனாலேதான் என்று என்னால் கூற முடியும். அதனைத் தாண்டியும் இன்னமும் கதைச் சொல்லிகளே வளரவில்லை என்றுதானே கட்டியம் கூறி நிற்கிறது அவர்களின் படைப்புகளும்.

அப்படியாக நமது சமூகத்தில் நல்ல தேர்ந்த எழுத்தாளர் பல இளைஞர்களுக்கு ஆதர்ஷ குரு என்று பெருமையாக கூறிக் கொள்பவரும் கூட தனது பயணக்கட்டுரைகளில் தன் கண்டக் காட்சிகளை, பிரிதொறு கலாச்சாரத்தில் வாயிலாக பார்க்கும் திறனற்று அதே குறுக்குச் சந்து பார்வையோடு வெகு ஜன பத்திரிக்கைகளில் கூட வாந்தியெடுத்து வைத்திருப்பார். இது போன்ற கட்டுரைகளே ஒரு எழுத்தாளனின் வளர்ச்சியை உலகம் பொருத்து, தான் சார்ந்து வாழும் சமூகம் பொருத்து உண்மையான பார்வையினை வைக்கும் முகமாக அமைந்த சாளரம்; அந்த மனிதனை உள் முகமா படிக்க.

ஆனால், தன் ஊரின் எல்லையையே தாண்டி உலகம் பார்த்திடாத ஒருவர் பிரிதொரு கலாச்சாரத்தின் அத்தனை கூறுகளும் தெரியக் கூடியதாக பாசாங்கு செய்து எழுதும் புனைவுகள் எத்தனை தகவல் பிழைகளை கொண்டிருக்கக் கூடும். தன்னுடைய சொந்த சமூகத்திலேயே விரவிக் கிடக்கும் ஏற்றத் தாழ்வுகளை தனக்குக் கிடைத்த வளர்ப்பு சூழ்நிலைக் கொண்டு அதன் வழியாக குணாதிசியங்களின் மூலமாக குருட்டுத் தனமாக வைத்துப் பேசும் பொழுது, பிரிதொரு கலாச்சாரம், அவர்களின் வாழ்வியல் முறைகளைப் பற்றி ஆய்ந்து எப்படி biased பார்வை இல்லாமல் கொடுக்க முடியும்.

இன்றைக்கு இணையம் வழங்கியிருக்கும் வாய்ப்பு தனிப்பட்ட மனித நிலையில் ஏதாவாது எழுதி தானும் ஒரு தேர்ந்த எழுத்தன் என்று அவனளவில் பாராட்டிக் கொள்ளவே பயன்படுத்தப் பட்டிக் கொண்டிருக்குமளவிற்கு செழித்து வளர்ந்து வருகிறது. அரைவேக்காட்டுத்தனமான புரிந்துணர்வோடு மனித உணர்வுகள் சார்ந்து உளறி வைப்பது. ஒற்றைப் பரிமாணத்தில் விசயங்களை அணுகி தன்னுடைய பார்வையை பொது சமூகத்தின் எண்ணமாக புனைந்து வைப்பது என்ன எந்த விதமான பொறுப்புணர்வில்லாமல், எழுத தலைப்படுவதுமென ஜரூரா நடந்து வருகிறது.

இலக்கியம் ஒரு சமூகத்தின் சமகால நிகழ்வுகளை பதியப்படுவதாக அதன் நீள, அகலங்களை அறியும் கண்ணாடியாக அமைய வேண்டும். அதற்கு அதனை படைக்கும் படைப்பாளி எத்தனை தீர்க்கமான, திறந்த மனதுடைய, மாற்றங்களை தழுவிச் செல்லும் ஒரு கருவியாக செயல் பட வேண்டியதிருக்கும். அவன் எப்படி மூடிய நிலையில், சார்பு நிலைகளை கொண்டு இயங்கும் ஒரு சாமான்யனாக இருக்க முடியும். இப்பொழுது இயங்கக் கூடிய பல சமகால எழுத்தாளர்கள் பிளவுற்ற (duality) மன நிலையிலேயே இருப்பதாகப் படுகிறது எனக்கு.

எழுத்து என்பது என் நிலையில் ஒரு தவம் போன்றது. எழுதுவது பிரிதொரு மனிதருடன் உரையாடுவதனைப் போல சிந்தனை சிதறலுக்கு அங்கே வாய்ப்பில்லை. நேரடியாக சமயோசிதமாக, புத்திசாலித்தனமாக சிந்திக்கும் புத்தி செயலிழந்து, நேரடியான ஆத்ம உரையாடல் நடைபெறுகிறது. அப்பொழுது எழுதும் எழுத்தும் நேர்மையாக சுய லாப நோக்குகள் அழிந்து, அறச் சீற்றம் கொள்ளும் நேரத்தில் சரியாக பிரதிபலித்து சமூகத்திற்கு தேவையான விசயங்கள் வந்து சேரும். ஒரு எழுத்தாளன், படைப்பாளியாக இருப்பதால் மற்றவரின் கஷ்ட நஷ்டங்கள், ஒடுக்கப்படும் சமூகத்தில் வாழும் மக்களின் அவல நிலை அவ்வாறாக ஒடுக்கப்படும் சமூகம் தொடர்ந்து அமிழ்த்து வைக்கப்படுமாயின் அது எது போன்ற விளைவுகளை உற்பத்திக்கக் கூடுமென்ற அனைத்து விளைவுகளையும் அறிந்தவனாக இருக்க வேண்டும். அதுவே அவன் பேனா பிடிப்பதற்கான அடிப்படைத் தகுதி கூட!

ஆனால், அண்மையில் நடந்தேறிய ஈழப் படுகொலையின் போது சில விரல் விட்டு எண்ணும் படைப்பாளிகளைத் தவிர ஏனையோர் அனைவரும் முதுகெலும்பு உடைந்தவர்களாக, எழுதவே தகுதியற்றவர்களாக, தான் சார்ந்து வாழும் சமூகத்திற்கு ஒரு சொல்லனாத் துயரம் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது பேனாவின் முனை உடைந்து விட்டதாக ஆன்மீக தத்துவங்களும், லத்தீன் இலக்கியமும், சினிமா இயக்குனர்களின் முதுகையும் சொறிந்து கொண்டிருந்தார்கள். பிறகு இவர்களின் படைப்பை எந்த சீற்றத்தை, எந்த உலக ஞானத்தை அடைய நான் வாசிக்க வேண்டும்; இவர்கள் எழுதுவதற்கான அடிப்படைத் தகுதியே இழந்து நிற்கும் பொழுது? அந்த மொழி பேசும், அந்த உணர்விற்காக இந்த துயரங்களை சுமந்து திரிபவர்களின் எலும்பு கூடுகளின் மீது இவர்கள் இலக்கியம் வடித்து அடிக்கி வைக்கும் பொழுது அவர்கள் கல்லறைகளிலிருந்து படைத்த இலக்கியங்களை கொண்டாடுவார்களா?

இதுவே இன்றைய இணைய காலத்தில் பல ’சோ கால்ட்’ எழுத்தாளர்கள் விமர்சனத்திற்கு ஆளாவதும், புனைவுகளைத் தாண்டியும் சமூக நிகழ்வுகளையொட்டி அவர்களின் கருத்துக்களை வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதால், அவர்களின் உண்மையான குறிக்கோளும், வளர்ச்சியும் வெளிப்பட்டு சந்தி சிரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்களோ என்று எண்ணச் செய்கிறது.

எப்பொழுது ஒரு எழுத்தாளன், படைப்பாளி தான் சார்ந்து வாழும் சமூகத்தை அவதானிக்கத் தவறி, தேவையான ஏற்றத் தாழ்வுகளை செப்பனிடும் பொருட்டு தன் பொறுப்புகளிலிருந்து நழுவி தன் சுய லாபத்திற்காக பாதையை மாற்றிக் கொள்கிறானோ அவன் எழுத்தை வைத்து விபச்சாரம் செய்து வருகிறான் என்றே என்னால் பொருள் கொள்ள முடிகிறது. அதற்கு இது போன்ற புனிதமாக கருதப்படக் கூடிய படைப்புத் திறனை விட்டு விலகி விடல் நலம் பயக்கும்; பிற்கால தலைமுறைகளாவது தப்பிப் பிழைக்கும். நன்றி!

48 comments:

மதுரை சரவணன் said...

//இலக்கியம் ஒரு சமூகத்தின் சமகால நிகழ்வுகளை பதியப்படுவதாக அதன் நீள, அகலங்களை அறியும் கண்ணாடியாக அமைய வேண்டும். //

அருமையான பகிர்வு. நன்றி. வாழ்த்துக்கள்

Change said...

உங்கள் மனதின் பிரதிபலிப்பு, மிக சரியான கோணத்தில் வெளிப்பட்டுள்ளதாக கருதுகிறேன். மனதின் உண்மை உணர்வு எழுத்தாக வெளிப்படும்போது, அந்த உணர்வு எழுத்தில் உருவாக்கும் தீவிரம் மிக எளிதாக உணரப்படலாம். பொது நோக்கு இல்லாத, பல்வேறு தன்மைகளை ஓரளவு உண்மையுடன் கூட உணர முடியாத மனம், எழுத்துலகை ஆக்கிரமிக்க ஆரம்பித்தால் அந்த எழுத்து சமூகத்தை அதன் ஓட்டத்தின் சமன்பாட்டிலிருந்து தடம் புரள செய்யலாம்.

நம்மால் முடிவது அத்தகைய எழுத்துகளிலிருந்து விலகி இருப்பது மட்டுமே!

கலகலப்ரியா said...

awesome! brilliantly written!

கலகலப்ரியா said...

||||என்னை பொருத்த மட்டிலும் கதை சொல்லிக்கென்றே பல திறமைகள் வேண்டும். காப்பியடித்து எழுதுவதான எழுத்து நடை, சொல்லாடல், வட்டார மொழி பயனேற்றம் செய்வது மட்டுமே புனைவிற்கான அடிப்படை தகுதிகள் கிடையாது என்று நினைக்கிறேன்.||

:o)...

||அவன் மிக மிக கூடு விட்டு கூடு பாயும் திறன் கொண்டவனாக இருத்தல் அவசியமென்று கருதுகிறேன். அஃறிணை பொருட்கள் கூட சம்பாஷணை செய்து கொண்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனை உலகத்திலும் சஞ்சரிக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். ||

அருமையாச் சொல்லி இருக்கீங்க..

||ஆனால், தன் ஊரின் எல்லையையே தாண்டி உலகம் பார்த்திடாத ஒருவர் பிரிதொரு கலாச்சாரத்தின் அத்தனை கூறுகளும் தெரியக் கூடியதாக பாசாங்கு செய்து எழுதும் புனைவுகள் எத்தனை தகவல் பிழைகளை கொண்டிருக்கக் கூடும். தன்னுடைய சொந்த சமூகத்திலேயே விரவிக் கிடக்கும் ஏற்றத் தாழ்வுகளை தனக்குக் கிடைத்த வளர்ப்பு சூழ்நிலைக் கொண்டு அதன் வழியாக குணாதிசியங்களின் மூலமாக குருட்டுத் தனமாக வைத்துப் பேசும் பொழுது, பிரிதொரு கலாச்சாரம், அவர்களின் வாழ்வியல் முறைகளைப் பற்றி ஆய்ந்து எப்படி biased பார்வை இல்லாமல் கொடுக்க முடியும்.||

இந்தத் தெளிவு உங்களை மிக உயரத்தில் வைக்கும்...

ராஜ நடராஜன் said...

சூடான பகுதியில் வரவேண்டிய இடுகை ஈழம் பக்கத்தில் ஏன் வந்தது?நிறைய பேரின் கண்ணில் படாமலே போகுமே?

Raji karthik said...

Good one தெகா, தேவையான நேரத்தில் எழுதப்பட்ட சரியான பகிர்வு.

//எப்பொழுது ஒரு எழுத்தாளன், படைப்பாளி தான் சார்ந்து வாழும் சமூகத்தை அவதானிக்கத் தவறி, தேவையான ஏற்றத் தாழ்வுகளை செப்பனிடும் பொருட்டு தன் பொறுப்புகளிலிருந்து நழுவி தன் சுய லாபத்திற்காக பாதையை மாற்றிக் கொள்கிறானோ அவன் எழுத்தை வைத்து விபச்சாரம் செய்து வருகிறான் என்றே என்னால் பொருள் கொள்ள முடிகிறது. அதற்கு இது போன்ற புனிதமாக கருதப்படக் கூடிய படைப்புத் திறனை விட்டு விலகி விடல் நலம் பயக்கும்; பிற்கால தலைமுறைகளாவது தப்பிப் பிழைக்கும்.//

சாட்டையடி வார்த்தைகள்!

சேட்டைக்காரன் said...

வார்த்தைகள் இல்லை! பாராட்டுவதைக் காட்டிலும் நன்றி தெரிவிப்பதே சிறந்தது என நினைக்கிறேன். பாராட்டுக்கள்.

பழமைபேசி said...

தலை, பின்னீட்டீங்க..... ஓரிரு இடங்களில் மாற்றுக் கருத்துக் கொண்டவனாக இருப்பினும், தங்களது சிந்தனையும் எழுத்தாக்கமும் மிகவும் நன்று!!!

துளசி கோபால் said...

அருமை.

செல்வநாயகி said...

Good post Theka, thanks.

Thekkikattan|தெகா said...

[[[மதுரை சரவணன் said...

//இலக்கியம் ஒரு சமூகத்தின் சமகால நிகழ்வுகளை பதியப்படுவதாக அதன் நீள, அகலங்களை அறியும் கண்ணாடியாக அமைய வேண்டும். //

அருமையான பகிர்வு. நன்றி. வாழ்த்துக்கள்]]]

You are welcome, Sara!!

ப்ரியமுடன் வசந்த் said...

அவதனிக்கவே இல்லைன்னு சொல்லிட்டு அவதாரம் எடுத்திருக்கீங்க தலைவா சூப்பர்ப்!

//அஃறிணை பொருட்கள் கூட சம்பாஷணை செய்து கொண்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனை உலகத்திலும் சஞ்சரிக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும்//

கிகிகிகி அப்பிடி எழுதுனா அஃறிணையோட நம்மளையும் சேர்த்துடறாய்ங்க...என்னா செய்ய சொல்றீங்க!

Thekkikattan|தெகா said...

வாங்க Change,

மிக்க மகிழ்ச்சி இது போன்ற முக்கியமான பதிவுகளுக்கு தங்களின் தடங்களை விட்டுச் செல்வதனையொட்டி.

//பொது நோக்கு இல்லாத, பல்வேறு தன்மைகளை ஓரளவு உண்மையுடன் கூட உணர முடியாத மனம், எழுத்துலகை ஆக்கிரமிக்க ஆரம்பித்தால் அந்த எழுத்து சமூகத்தை அதன் ஓட்டத்தின் சமன்பாட்டிலிருந்து தடம் புரள செய்யலாம்.//

இதுவே இந்தக் கட்டுரையின் ஆதங்கம். ஏனெனில், இலக்கியங்கள் காலம் தாண்டி நிற்க வேண்டுமென எதிர்ப்பார்த்து ஒரு படைப்பைக் கொடுக்கும் ஒரு படைப்பாளி, தான் சார்ந்து வாழும் சமூகத்தினை அடிப்படையாகக் கொண்டுதான் படைப்புகளை அது எது போன்ற மொக்கை படைப்பாக இருந்தாலும் பின்ன முடிகிறது எனும் பட்சத்தில் அந்த படைப்பாளியின் அரைகுறை புரிதல் மேலும் பல அரைகுறை பார்வையாளனை உருவாக்கி வைக்கும் அபாயம் இருப்பதால், இந்த விசயம் பேசு பொருளாகிறது.

அவர்களுக்கான ஆடுதளத்தை அடிப்படையாக உருவாக்கிக் கொடுப்பதே இது போன்ற சம்பாஷணைகளே என்பது என்னுடைய புரிதல்! ஒரு குணாதிசியத்தின் மூலமாக ஒரு சமூக பார்வையாக அந்தப் படைப்பாளி ஒரு விசயத்தை முன் மொழிகிறார் என்றால், தட்டையாக ஒரு பக்க பரிமாணத்தைக் கொண்டாதாக மட்டுமே இருப்பதில் ஆபத்து விரவிக் கிடக்கிறது. அதனை உணர வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் மூலம் நான் வைக்கும் வேண்டுகோள்.

புரிந்து கொள்வார்கள் என்று நம்புவோம்.

//நம்மால் முடிவது அத்தகைய எழுத்துகளிலிருந்து விலகி இருப்பது மட்டுமே!//

நாம் அந்த நிலையை அடைந்து விட்ட பாக்கியசாலிகளாக இருக்கும் பட்சத்தில் அன்னமாக தரம்பிரித்து விலகி நடக்கலாம். அந்த நிலையை அடையாத அபாக்கியசாலிகளின் கதி... உழன்றே அடுத்த தலை முறைக்கு கடத்தி செல்வதாகி விடாதா??

நன்றி Change!

காட்டாறு said...

இந்தப் பதிவிற்கு நிறைய கருத்துக்கள் பரிமாறப்படலாம் என்பது என்னோட கருத்து. பாராட்டுவதோடு இல்லாமல் தங்களது பார்வையையும், குறை நிறைகளையும், மாற்றுக் கருத்துக்களும் வைப்பதால் பதிவின் நோக்கம் பலப் படுமே. :)

ரவிச்சந்திரன் said...

அருமை....

//எப்பொழுது ஒரு எழுத்தாளன், படைப்பாளி தான் சார்ந்து வாழும் சமூகத்தை அவதானிக்கத் தவறி, தேவையான ஏற்றத் தாழ்வுகளை செப்பனிடும் பொருட்டு தன் பொறுப்புகளிலிருந்து நழுவி தன் சுய லாபத்திற்காக பாதையை மாற்றிக் கொள்கிறானோ அவன் எழுத்தை வைத்து விபச்சாரம் செய்து வருகிறான் என்றே என்னால் பொருள் கொள்ள முடிகிறது//

சம்மட்டி அடி!

காட்டாறு said...

அருமையா எழுதி இருக்கீங்க நண்பரே. ஆனாலும் ஒரு சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஒரு ஆசிரியன், தன் கதையின்(புனைவு/fiction) வழியே, தான் நோக்கிய பார்வையை தந்து விட்டு, வாசிப்பவனை சிந்திக்க விடுகிறான். எல்லாமே திறம் பட அப்புனைவில் அமைய வேண்டும் என எதிர் பார்ப்பது சரியல்லவே. ஸ்பூன் ஃபீடிங் வளர்ச்சியை தடை செய்யுமே. தான் காலூன்றி நடை பயில தன் முயற்சி தானே முக்கியம். தன் அறிவு வளர வளர அன்று நல்ல புத்தகமாக தோன்றியவை இன்று சுமாரான ரகமாய் தெரியலாமே. உதாரணமாய், பால குமாரன் கதைகளின் நுணுக்கத்தை ரசித்து வாசித்தோம் இளம் பிராயத்தில்; இன்று அவரின் படைப்புகள் நம்மை ஈர்க்காததன் காரணம் ஏனோ? புனைவுகளில் எல்லாம் திறம் பட இருக்க வேண்டுமென்ற வாதம் தவறானதாய் படுகின்றதே. மாற்று கருத்து இருப்பின் விளக்கம் தாருங்களேன்.

அரசூரான் said...

தெகா, வழக்கம் போல் ஒரு அருமையான பதிவு. உங்களுடைய பெரும்பான்மையான கருத்துக்களும் சரியே, நீங்களே ஒரு விசயம் பற்றி எழுதுவதற்க்கு சரியான புரிதல் வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறீர்கள். மற்றவர்கள் ஈழம் பற்றி எழுதாதற்க்கு அதுவே காரணமாய் இருக்கலாம் அல்லவா?

Change said...

இந்த கட்டுரையின் இன்னொரு தரப்பையும் இவ்வாறு முன் வைக்கலாம்.

‘பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ . இந்த வரி கட்டுரைக்கு தொடர்பு இல்லாமல் இருந்தாலும். இந்த மாற்று தரப்பை வெளிப்படுத்த உதவலாம். எந்த ஒருவரும் தான் எழுத தொடங்கும்போது தனக்கு போதிய புனைவு திறன் இருப்பதாக கருதிதான் எழுதுவர். பலர் அந்த எழுத்தை படிக்கும்போது அவருக்கு தன் எழுத்து மேல் நம்பிக்கை வர ஆரம்பிக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு எழுதுவதை ஒரு விமர்சகராக இருந்து விமர்சிக்கலாமே தவிர, அவருக்கு புனைவு திறன் இல்லாதலால் எழுத கூடாது என்பது வன்முறையாகும். எழுதுவது அவர் விருப்பம், படிப்பது நம் விருப்பம் - ஆனால் விமர்சிக்கும்போது அது தனி மனித விமர்சனமாக இல்லாமல் அந்த எழுத்து சார்ந்த விமர்சனம்/விவாதமாக இருக்க வேண்டும். தனி மனித விமர்சனத்துக்கு அவர் எழுத்து இன்னொரு தலைமுறைக்கு தவறான கருத்துகளை எடுத்து செல்லும் என்பது ஒரு காரணமாக இருக்க முடியாது. காரணம், நமது நோக்கில் மட்டுமே அது தவறாக தெரியும். நமது நோக்கு சரியான நோக்கு என்பதை நம்மால் எவ்வாறு உறுதி செய்ய முடியும். அது நம் மன பிம்பம் மட்டும் தானே? அந்த எழுத்தாளரின் மன பிம்பத்தின் படி, அதி உயரிய கருத்தாக கூட இருக்க முடியும் அல்லவா?

இந்த கட்டுரையில் கூறிய படி சுய மதிப்பீடு மிக மிக அவசியம். ஒரு விமர்சகனாக அந்த மதிப்பீட்டின் தரத்தை உயர்த்த நாம் கோரலாம். ஆனால் மதிப்பீடு செய்ய முடியாதவர்கள் என கூற முடியாது. காரணம், அது நமது கருத்து மட்டுமே! மேலும் அந்த எழுத்து, எழுதுபவரின் மன ஓட்டத்தை பிரதிபலித்தால், அதன் தரம் எத்தகையதாக இருந்தாலும், அது நேர்மையானது ஆகும். ஆனால் அந்த நேர்மையை உணர அந்த மன நிலையில் இருக்கும் வாசகனால் மட்டுமே முடியும். ஒரு விமர்சகனால் முடியுமா என்பது கேள்வி குறி.

ஆக, இந்த கருத்து ஒரு மிகவும் நுண்மையான ஒரு கருத்து. அதற்கான தளத்தில் சென்று, அனைத்து மாறும் தரப்புகளையும் கருத்தில் கொண்டு சுய முடிவுக்கு வர வேண்டிய ஒன்று. இந்த கட்டுரையின் கருத்து, எழுதுபவர்களை சுய பரிசோதனை செய்ய தூண்டினால் - அந்த பரிசோதனையின் முடிவு எதுவாக இருந்தாலும், அது இக்கட்டுரையின் வெற்றி ஆகும்!

Thekkikattan|தெகா said...

//அரசூரான் said...

தெகா, வழக்கம் போல் ஒரு அருமையான பதிவு. உங்களுடைய பெரும்பான்மையான கருத்துக்களும் சரியே, நீங்களே ஒரு விசயம் பற்றி எழுதுவதற்க்கு சரியான புரிதல் வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறீர்கள். மற்றவர்கள் ஈழம் பற்றி எழுதாதற்க்கு அதுவே காரணமாய் இருக்கலாம் அல்லவா?//

அரசூரான் தங்கள் கருத்திற்கு நன்றி! இது போன்ற படைப்பாளிகள் மிகுந்த வாசிப்பனுபவம் கொண்டவர்களாகவும், தன்னை பிறரிடமிருந்து பிரித்துணர தக்கவர்களாகவும், கடவுளர்கள் ரேஞ்சிற்கும் தங்களை முன்னிருத்து பேசி, நடந்து கொள்வதை நாம் கண்டுவருகிறோம்.

மேலும் பரந்து பட்ட பார்வைகளை, பிற மனிதர்களின் நுண்ணர்வுகளைக் கூட தனதாக உணர்ந்து படைப்புகளை முன் வைப்பவர்கள். தன் மொழி சார்ந்த ஒரு இனத்தின் வரலாறு படிக்காமல் எப்படி பின் தங்கியவர்களாக இருந்து போக முடியும். அதுவும் ஒரு ஒடுக்கப்பட்ட மனிதனின் மன அவலம் இவர்களால் உணர முடியாது. ஈழம் சார்ந்த பிரச்சினையும், இருத்தலுக்கான போராட்டமும் எந்த ஒரு படைப்பாளியும் எளிமையாக brush away பண்ணிப்போகக் கூடிய சாமாச்சாரமில்லையே.

வேண்டுமானால் சுய லாபம் கருதி அறச் சீற்றம் கொள்ளும் சமயம் வரும் போதெல்லாம், மாடுகளுக்கு போடும் வாய்ச் சல்லடை போட்டுக் கொண்டு இருந்திருப்பார்கள் போல.

அதனால்.... மற்றவர்கள் ஈழம் பற்றி எழுதாதற்க்கு அதுவே காரணமாய் இருக்கலாம் அல்லவா? நீங்க சொன்ன விசயத்திற்கு சமமாக அவர்களின் = சுயநலம் ‘மட்டுமே’ காரணமாக இருக்க முடியும். ஆனால், எழுத்துத் தர்மம் அவர்களிடத்தில் மரணித்து விட்டது என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

Thekkikattan|தெகா said...

வாங்க கலகலப்ரியா,

ஊக்கங்களுக்கு நன்றி! :)

காட்டாறு said...

ஆங்கிலத்தில் புனைவு (fiction) என்ற சொல்லுக்கு உண்மை அல்லாத மற்ற பிற என்று அர்த்தம். Non-fiction கொடுக்கும் போது உண்மை சம்பவம், உண்மை கதை, அல்லது இவ்வளவு % உண்மை என்று கூறி எழுதுவர். இதே தமிழில் நான் பார்த்த வரைக்கும் புனைவிற்கும் அபுனைவிற்கும் தெளிவான வரையறை (clear distinction) இல்லாதது போலவே என் சிறு புத்திக்கு தோன்றும்.

சமூகம் பற்றிய பார்வையை தன் புனைவு மூலம் கொண்டு வர படைப்பாளி எத்தனிக்கும் போது அது அபுனைவு ஆகிவிடுமே. ஆனாலும் மேம்போக்கான எண்ணங்களை சமூகப் பார்வை என்ற அர்த்தம் தொனிக்க தன் புனைவுகளில் அந்த ஆசிரியர் வைக்கும் போது, வாசிப்பவர் குழம்ப வாய்ப்பு இருக்கிறது. என்ன இந்த ஆளு நல்ல படைப்பாளி என்றே எண்ணினோம்; ஆனால் தொனிக்கும் தொனியோ தொலைநோக்கு பார்வையாய் அல்லாது அரைவேக்காடாய் தெரிகிறதே என எண்ணத் தோன்றுகிறது.

நண்பரின் வாதமும் இதை ஒட்டியே அமைந்துள்ளது என்று நினைக்கிறேன். புனைவு, அபுனைவு என நோக்காமல் சமூக விழிப்புணர்வு கொண்டு வருகிறேன் என எழுதுபவர்கள், தயவு செய்து தொலை நோக்கு சிந்தனையுடன், தன் அனுபவ கோட்பாடுகளுடன் எழுதினால் பயன் என்பதும் சரியெனவே படுகிறது.

நண்பர் சேஞ்ச் அவர்களின் கருத்துகளுடன் ஒத்துப்போகிறேன். //நமது நோக்கு சரியான நோக்கு என்பதை நம்மால் எவ்வாறு உறுதி செய்ய முடியும். அது நம் மன பிம்பம் மட்டும் தானே? அந்த எழுத்தாளரின் மன பிம்பத்தின் படி, அதி உயரிய கருத்தாக கூட இருக்க முடியும் அல்லவா?// இதன் மறுபக்கமாக நான் எடுத்துக் கொண்டது; படைப்பாளியின் நோக்கம் என்ன என்பதை கருத்தில் கொள்ளாது எந்த ஒரு படைப்பையும் ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதே.

நண்பர் தெக்கி கூறுவது படி படைப்பாளியை மட்டும் சாடாமல், வாசிப்பவன் தன் கேட்ட/கற்ற அனுபவங்களையும் சேர்த்து, விரிந்த பார்வையுடன் வாசிக்க பழகினால் நன்று; அந்த பொறுப்பு அவனுடையதே என்பதே என் கருத்து.

Thekkikattan|தெகா said...

//ராஜ நடராஜன் said...

சூடான பகுதியில் வரவேண்டிய இடுகை ஈழம் பக்கத்தில் ஏன் வந்தது?நிறைய பேரின் கண்ணில் படாமலே போகுமே//

ராஜ நட, கவனிச்சிருப்பீங்கன்னு நம்புறேன். இப்பொழுது பதிவு எங்கும் காட்டி அடைத்துக் கொண்டு நிற்கிறது :)) ... எங்க வும்ம பார்வை, ஹா!

Anonymous said...

are you from Karambakudi or Paramakudi.

Kudukuduppai.

Thekkikattan|தெகா said...

//Anonymous said...
are you from Karambakudi or Paramakudi.

Kudukuduppai.//

Are you that Kudukuduppai, i doubt it, anyway here you go - yes, I am from Karambakudi - enna auto'vaa ;)

குடுகுடுப்பை said...

Yes its me, konjam kamal maathiri writing irunthathu, athan.:)

மங்கை said...

புனைவுல ஒரு எழுத்தாளனின் தேர்ச்சி இருக்கனும்ங்குறது மட்டும் எனக்கு விளங்குது...

தெரியலை...எனக்கு புரிஞ்சதா புரியலையானு...பல தடவை படிச்ச பின்னாடி சொல்லனும்னு தோன்றதை சொல்லிட்டு போயிடறேன்...

எனக்கு பெருசா எழுத்து புலமை இல்லை... ஆனா பார்க்கிறது.. மனசை பாதிக்கிறது...என்ன செய்யலாம் னு எல்லாம் ரொம்பத்தான் தோனும்...அதை எழுத்தா வடிக்கறப்போ என் எண்ணங்கள் முழுசா என்னால எப்பவும் கொடுக்க முடியறதில்லை...

என் பதிவுகளை படிச்சுட்டு தானே வரீங்க.... நீங்க முன் வைத்த கருத்துக்களுடன் அது ஒத்து போகுதா..

புனைவு என்பது பெருசா கட்டுப்பாடுகள் அற்ற ஒரு களமா நாம எடுத்துக்களாமா....சமூக புனைவுகள் யதார்த்ததின் வெளிப்பாடு... என்னை புனைவு எழுத சொன்னா அல்லது எனக்கு எழுத வந்தா அது அப்படியானதா தான் இருக்கும்.. புனைவு என்பது பொய் என்ற ஒரு அனுமானம் எப்பொழுதும் உண்மையா இருக்க முடியாது...

மங்கை said...

இன்னொன்னு நியாபகம் வருது... ரொம்ப நாளா நான் பதிவா போட நினைத்த விஷ்யம்...

நம்ம படத்துல காட்டற மன நோயாளிகள் பற்றியது... பொதுமக்களுக்கும் முக்கியமா குழந்தைகளுக்கு மனநோயாளிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம் பெரும்பாலும் சினிமால இருந்து தானே வருது...

அதுல எந்த அளவிற்கு யதார்த்தம் இருக்குங்குறது இரு கேள்விக்குறிதான்.. மனநோயாளிகளை ஒரு stereo type ஆ தான் காட்டறாங்க.. this will give a negative effect on the people's perception of these marginalised people.உண்மை தான்...

விளிம்புநிலை மக்களின் அவலங்களை காட்டுவதில் இருக்கும் அக்கறை அது நோக்கத்தின் சாரம் கெட்டுப்போகாமல் காட்டவேண்டும்... அதுல தான் படைப்பாளியின் சூட்சுமம் இருக்கு... அவர்களை காமெடி பீசாக மட்டும் காட்டாமல், அவர்களுக்கென்று இருக்கும் உலகில் அவர்கள் ராஜா...அவர்களின் செயல்களில் அவர்களுக்கு இருக்கும் நியாயத்தை கட்ட வேண்டும்... எந்த ஒரு படைப்பும் அனாவசியான ஒரு ஸ்டிக்மாவை உண்டு பண்ணக்கூடாது... படிப்பவர்களை/ பார்ப்பவர்களை யோசிக்க செய்ய வேண்டும்

ஜோதிஜி said...

செறிவான சிந்தனைகளுக்கு சிறப்பான பின்னோட்டங்கள்.

அரசூரான் said...

{//Anonymous said...
are you from Karambakudi or Paramakudi.

Kudukuduppai.//

Are you that Kudukuduppai, i doubt it, anyway here you go - yes, I am from Karambakudi - enna auto'vaa ;)}
அட்லாண்டாவுக்கு எல்லாம் ஆட்டோ வராது ஒரு ஆடி இல்லைன்னா ஹம்மர் தான் வரும் பரவாயில்லையா?

Thekkikattan|தெகா said...

//சேட்டைக்காரன் said...

வார்த்தைகள் இல்லை! பாராட்டுவதைக் காட்டிலும் நன்றி தெரிவிப்பதே சிறந்தது என நினைக்கிறேன். பாராட்டுக்கள்//

வாங்க சேட்டைக்காரன். முதல் முறையா நம்ம வீட்டாண்டை. தங்களுடைய ஊக்கங்கத்திற்கு நன்றி :)!

Thekkikattan|தெகா said...

//பழமைபேசி said...

தலை, பின்னீட்டீங்க..... ஓரிரு இடங்களில் மாற்றுக் கருத்துக் கொண்டவனாக இருப்பினும், தங்களது சிந்தனையும் எழுத்தாக்கமும் மிகவும் நன்று!!//

என்ன பழம என்னய போயி தலையாக்கிட்டீங்க :) ... அந்த மாற்றுக் கருத்துக்கள் என்னான்னு சொல்லியிருக்கலாம்; இருந்தாலும் புரியுது.

தட்டிக் கொடுத்தலுக்கு நன்றி வாத்தியாரே :D இது எப்படி இருக்கூ...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காட்டாறு, மங்கை மற்றும் சேஞ்ச் இவங்களின் கருத்துக்கள் .. எனக்கு பிடிச்சிருக்கு..
உங்கள் கட்டுரையில் சில இடங்களை ஒத்துக்கொள்கிறேன் சில இடங்களில் மாறுபடுகிறேன்..
முக்கியமாக சேஞ்ச் நான் சொல்ல நினைத்த பல கருத்துக்களை ( எனக்கு
இவ்வளவு அழகா நிச்சயமா
சொல்ல்வந்திருக்காது ) சொல்லி இருக்கார்.

இன்னோரு தரப்பின் வாதம் என்று அவர் வைத்திருப்பதை ஆமாங்க ஆமாங்கன்னு நான் வழிமொழிகிறேன்.

Thekkikattan|தெகா said...

//துளசி கோபால் said...

அருமை//

வணக்கம். நலமா? நன்றிம்மா...
********************

//செல்வநாயகி said...

Good post Theka, thanks.//

வாங்க நாயகி. you are welcome! :)

Thekkikattan|தெகா said...

//ப்ரியமுடன் வசந்த் said...

கிகிகிகி அப்பிடி எழுதுனா அஃறிணையோட நம்மளையும் சேர்த்துடறாய்ங்க...என்னா செய்ய சொல்றீங்க!//

வணக்கம் ப்ரியமுடன். மனசுக்கு நெருக்கமானதை பாசாங்கு இல்லாமல் கொடுங்க. அப்புறம் யார் என்ன சொல்லுறான்னு பார்ப்போம் :). வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, வசந்த்.

ஆடுமாடு said...

விரிவான பதிவுதான்.
இதனூடாக என்னையும் சில கேள்விகள் கேட்டுக்கொண்டேன்.
நன்றி தெகா சார்.

சரி, இப்ப என்ன கோபம்?

Thekkikattan|தெகா said...

//Raji karthik said...

Good one தெகா, தேவையான நேரத்தில் எழுதப்பட்ட சரியான பகிர்வு.//

வாங்க! எப்படியோ மிஸ் பண்ணிட்டு உங்களைத் தாண்டி மற்றவங்களுக்கு பதில் சொல்லிட்டு பொயிட்டேன் :).

தேவையான நேரத்தில கொடுத்திரணும்ல. கொஞ்சனுண்டு உள்ளர ஒரு சில நிமிடங்களேனும் இதன் அழுத்தம் இருந்திட்டாப் போதும். அவ்வளவுதான் இந்தப் பதிவின் நோக்கம் முடிந்தது.

நன்றி!

Thekkikattan|தெகா said...

//ரவிச்சந்திரன் said...

அருமை....//

:)) வாங்க வெட்டிக்காட்டாரே! என்னத் தேவைன்னு கஷ்டப்பட்டவிங்களுத்தானே தெரியும். அதேய்ன் அடிச்சிக் கேக்குறோம், தேவையானதையும் கொடுங்கப்பான்னு, தப்பா ;)

Thekkikattan|தெகா said...

வாங்க காட்டாறு,

//எல்லாமே திறம் பட அப்புனைவில் அமைய வேண்டும் என எதிர் பார்ப்பது சரியல்லவே. ஸ்பூன் ஃபீடிங் வளர்ச்சியை தடை செய்யுமே. தான் காலூன்றி நடை பயில தன் முயற்சி தானே முக்கியம்.//

ஒரு சில புனைவுகளின் மூலமாக நாம் ஒரு கதையாசிரியனின் சமூகறிவின் முழு வீச்சத்தையும் உணர்ந்து விட முடியும்தானே! ஸ்பூன் ஃபீடிங் பண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறோமென்று உணராமலேயே அந்த நிலையிலேயே லயித்து, நேரத்தை கொல்வதற்கு மட்டுமே எஞ்சி நிற்பது அந்த தனிப்பட்ட வாசிப்பாளனின் மண்டையை ‘போதையூட்டி’ அதிலேயே சிக்குற வைப்பதுதான் கொடுமையின் உச்சம்.

மற்றபடி தேடித் தேடி பெறுவதெல்லாம் ஓரளவிற்கு உள்ளிருந்து புறப்படுவது என்றாலும், அறிந்தவர்கள் அதனை சுட்டிக் காமிப்பதும் கொஞ்சம் தேவைப்பட்டுப் போகிறது.

//பால குமாரன் கதைகளின் நுணுக்கத்தை ரசித்து வாசித்தோம் இளம் பிராயத்தில்;//

எல்லாரும் அவரைப் போட்டு இப்படிக் கும்முறீங்களே! :)) எனக்கு அப்பவே அதாவது அந்த இளம் பிராயமுன்னு சொல்லுறீங்களே அப்போ படிக்கும் பொழுதே ஏன் அப்பாங்கிற பூரா கேரக்டரும் கொடுமை செய்றவனாவே மெஜாரிடி இடங்கள்லே இவரு எழுத்தில வாரருன்னு...

//புனைவுகளில் எல்லாம் திறம் பட இருக்க வேண்டுமென்ற வாதம் தவறானதாய் படுகின்றதே//

நான் எழுதிப் பழகுறவங்கள சொல்லலீங்க :). குறைந்த பட்சம் ‘பொதுப் புத்தி’ பார்வையிலிருந்து ஒரு குணாதிசியம் ஏதோ தான் நினைப்பது போல மீண்டும் அதே stigamatized கருத்தை வைத்து விட்டு இவரும் (கதை சொல்லியும்) நகர்ந்து விடாமல், கொஞ்சம் அவரு அதன் பின்னணியில் எது நம்மை அவ்வாறாக இன்றளவும் அப்படி அந்த விசயத்தை பார்க்கச் செய்கிறதுன்னு wonderment தொனியில் அடுத்த பத்திகளில் வைச்சா... :D

மங்கை said...

தெகா

ஒரு சம்பவத்தை அல்லது ஒரு நிகழ்வை விவரிக்கும் போது அதுல நம்ம சிந்தனைகளின் தாக்கம் தவிர்க்க முடியாதது.. உதாரணத்திற்கு நான் எச்ஐவியால் பாதிக்கப் பட்டவளாக ஒரு சமயம் தில்லியில் உள்ள ஒரு ஆலோசனை மையத்திற்கு சென்றதை பற்றி எழுதி இருந்தது நினைவிருக்கலாம்... அதை படித்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது... நான் சொல்ல வந்த கருத்து புரிந்ததா.. ஆலோசகராக அவர் செய்ய வேண்டியதை, செய்யக் கூடாததை சொல்லியிருந்தேன்.. பாதிக்கப்பட்ட ஒருவரின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை வாசிப்பவர் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக சிலவற்றை கொஞ்சம் உணர்ச்சி கலந்த சொற்களால் (மிகைப்படுத்தி என்று சொல்ல முடியாது..) சொல்ல வேண்டியிருக்கிறது... மெய்க்கு கொஞ்சம் ஒப்பனை செய்து கொடுக்க வேண்டியிருக்கிறது... அதை ஒரு பகிர்தலா சொன்னதால் பெருசா நான் ஒப்பனை செய்யவில்லை.. இதுவே நான் ஒரு கதையா சொல்ல நினைத்திருந்தால் கொஞ்சம் தூக்கலான ஒப்பனை தேவையாய் இருந்து இருக்கும் இல்லையா..

அதை படிக்கும் வாசகர்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவரின் மனநிலையை புரிந்து கொண்டால் என் நோக்கம் அங்கு நிறைவேறி விடும்...

Thekkikattan|தெகா said...

மாற்றம் மீண்டும் பின்னூட்டமா, நன்று!

மிக ஆழமான பொருள் மிகுந்த பின்னூட்டங்கள். அப்படியே ஒத்துப் போக முடிகிறது, இருப்பினும் தர்க்கத்திற்கென சில விசயங்களை உள் நோக்குவோம்... :)

//தனி மனித விமர்சனத்துக்கு அவர் எழுத்து இன்னொரு தலைமுறைக்கு தவறான கருத்துகளை எடுத்து செல்லும் என்பது ஒரு காரணமாக இருக்க முடியாது. காரணம், நமது நோக்கில் மட்டுமே அது தவறாக தெரியும். நமது நோக்கு சரியான நோக்கு என்பதை நம்மால் எவ்வாறு உறுதி செய்ய முடியும். அது நம் மன பிம்பம் மட்டும் தானே? //

அப்படியாக எளிமையாக சொல்லி விலகி சென்று விட முடியாதென்றே கருதுகிறேன். நல்லதொரு படைப்புகள் காலங்களையும் விஞ்சி அது ஒரு சமூகத்தின் படிகமாக தங்கி அன்றைய நிகழ்வுகளின், வாழ்வியல் சார்ந்த சிக்கல்களை எப்படியாக இந்தச் சமூகம் அனுகியது அல்லது சிந்தனையின் வீச்சம் எதுவாக இருந்தது என்று அறியத் தரும் சான்றாக அமைந்து விடுகிறதுதானே.

அப்படியாக இருக்கையில் உதிர்ந்து போகும் படைப்புகளை கணக்கில் சேர்க்க வேண்டாம். ஆனால், அதை நோக்கிய நகர்வுகளை கொண்ட இலக்கிய படைப்புகள் மிக்க கவனத்துடன் பதியப் பட வேண்டுமென்று எண்ணுகிறேன். உ. தா - மீன் விற்பவளும், பொரி விற்பவளும் ‘அது மாதிரி’யான ஒரு குணாதிசியமாக அந்த மொத்த சமூகமாகவே இருப்பதாக பிரதிபலிப்பூட்டுவது எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்?

//நமது நோக்கு சரியான நோக்கு என்பதை நம்மால் எவ்வாறு உறுதி செய்ய முடியும்//

யுனிவெர்சலாக ஒத்துக் கொள்ளப்படும் வீரியத்தினைக் கொண்டு. கொஞ்சம் நன்கு ஆராய்ந்து பார்த்தால் அது உண்மை இல்லை என்று அறியத் தரும் விசயங்க ‘நமது (கற்பிதங்களாகவே) பிம்பங்களாகவே’ இருக்க முடியாது. கொஞ்சம் வாழ்க்கையை கூர்ந்து அவதானிக்கும் யாருக்கும் புரியுமென்று எண்ணுகிறேன்.

//அந்த எழுத்தாளரின் மன பிம்பத்தின் படி, அதி உயரிய கருத்தாக கூட இருக்க முடியும் அல்லவா? //

//அதன் தரம் எத்தகையதாக இருந்தாலும், அது நேர்மையானது ஆகும்.//

ஆமாம், அவருடைய பார்வையில் அவர் தெரிந்து கொண்ட வரையிலும் அவரின் சார்பு நிலையில், ஏனைய பிற காரணிகளான வாழ்வுச் சூழ்நிலை, சமூக கற்பிதங்கள் எல்லாமும் அவரினுள் தாக்கத்தை கொடுத்தே முன் வரக் கூடும். அது புரிகிறது. சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும் என்பதற்கென.

ஒருவரின் புரிதலின் படி, அதாவது இன்னாளில் சாதிக் கணக்கெடுப்பு தவறு, அது இந்தியாவில் மென்மேலும் சாதீயக் கூறுகள் தலைத்தோங்க வழி வகுக்கிறதென்று (2000 ஆயிரம் வருஷமா இருந்திருக்கும் தெரியல, அல்லது பதினைந்து வருஷத்திற்கு முன்ன வரைக்கும் இருந்திருக்கும் தெரியல), இன்று எந்த மக்கள் பின் தங்கிப் போய் நலிவடைந்து இருக்கிறார்களோ அவர்களுக்கு சிறிதே கை கொடுத்து உதவுவதற்காக எடுக்கப்படும் ஒரு முன்னெடுப்பு, மேலும் இந்தியாவை பின் தள்ளப் போகிறது என்ற புரிதலில் வைக்கும் கருத்துக்களைப் போல - அது இது போன்ற பொய் பிரச்சாரங்கள் கூட அது போன்ற புத்திசாலிகளுக்கு ‘உயரிய கருத்தாகத்தான் இருக்கக் கூடும்... :) - அப்படியே ஏத்துக்க முடியுமா என்ன, மாற்றம்?

//இந்த கட்டுரையின் கருத்து, எழுதுபவர்களை சுய பரிசோதனை செய்ய தூண்டினால் - அந்த பரிசோதனையின் முடிவு எதுவாக இருந்தாலும், அது இக்கட்டுரையின் வெற்றி ஆகும்!//

அவ்ளோதாங்க நாம கேட்டுக் கொள்வது. சுய லாபத்திற்காக இன்றையத் தேவையை கணக்கில் கருதி தொலை தூர பார்வையற்று சமூக சாக்கடைத்தனங்களை கடத்தி செல்ல வேண்டாமென்பதே! நன்றி, மாற்றம்! தங்களின் மேலான பின்னூட்டக் கருத்துக்களுக்கு.

Thekkikattan|தெகா said...

[[. //நமது நோக்கு சரியான நோக்கு என்பதை நம்மால் எவ்வாறு உறுதி செய்ய முடியும். அது நம் மன பிம்பம் மட்டும் தானே? அந்த எழுத்தாளரின் மன பிம்பத்தின் படி, அதி உயரிய கருத்தாக கூட இருக்க முடியும் அல்லவா?//

இதன் மறுபக்கமாக நான் எடுத்துக் கொண்டது; படைப்பாளியின் நோக்கம் என்ன என்பதை கருத்தில் கொள்ளாது எந்த ஒரு படைப்பையும் ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்பதே.]]

காட்டாறு, இந்த அணுகுமுறையும் நன்றாகவே இருக்கிறது. ஒரு வாசகனின் பொறுப்பாக அவன் கையில் கொடுத்துவிடுவது... நண்பர் சேஞ்சிற்கு அந்த வரிகளையொட்டி ஒரு நீண்ட விளக்கம் கொடுத்திருந்தேன். அதோட உங்களது புரிதலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பின்னூட்டக் கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி!

Thekkikattan|தெகா said...

//என் பதிவுகளை படிச்சுட்டு தானே வரீங்க.... நீங்க முன் வைத்த கருத்துக்களுடன் அது ஒத்து போகுதா..//

மங்கை, உங்க பதிவுகள் பூராவும் பொய் கலக்காத நிஜமுங்க. Real time people and eventsஆ இருக்கிது. கொஞ்சம் ஜோடிச்சு வழ வழ கொழ கொழ வாக்கினீங்கன்னா அதான் சுவராசியம் கலந்த படைப்பாம் :). அதெல்லாம் நமக்கு எதுக்குங்க, களத்தில இறங்கி முகத்தை கொடுக்கிற ஆளுக்கு அது நேரக் கொல :)) சோ, அனுபவிங்க செய்றதை.

//நம்ம படத்துல காட்டற மன நோயாளிகள் பற்றியது... பொதுமக்களுக்கும் முக்கியமா குழந்தைகளுக்கு மனநோயாளிகள் பற்றிய ஒரு கண்ணோட்டம் பெரும்பாலும் சினிமால இருந்து தானே வருது... //

நம்மூர் சினிமாக் கதை எழுதுறவங்க எல்லாம் ட்டி.வி சீரியல் எழுதுறவய்ங்க கணக்குதானேங்க. என்னாத்தை பெரிசா படிச்சு ஆராய்ச்சி எல்லாம் செஞ்சு நீஙக் சொல்லுற கோணத்தில சிந்திக்க. அதெல்லாம் பெரிய இடத்து பொல்லாப்பு. நாலு டிவிடி பழைய படங்கள பார்த்து அதிலிருந்து ஒண்ணு கொடுக்கிற ஆளுங்ககிட்டப் போயி டிஸ்-ஆர்டர் பத்தியெல்லாம் படிச்சு அறிவுப் பூர்வமா சென்சிடிவா கொடுக்கச் சொல்லுறீங்க. இதெல்லாம் எந்தளவிற்கு சாத்தியமின்னு தெரியல.

உங்க கருத்துக்கள் எல்லாம் உண்மையாவே சீரியசா யோசிக்கணுங்க, புனைவு செய்றவங்க.

சென்ஷி said...

காட்டாறு, மங்கை மற்றும் சேஞ்ச் இவங்களின் கருத்துக்கள் .. எனக்கும் பிடிச்சிருக்கு..


**


மத்தபடி உங்க புனைவு பற்றிய கருதுகோள்களில் எத்தனை சதவீதம் சரியானதுன்னு தெரியலை. எந்த ஒரு படைப்பாளியையும் நீ இந்த சமூக நோக்கிற்கான பயன்பாட்டிற்காகத்தான் எழுத வேண்டுமென்பதோ அதைத்தான் இலக்கியமாய் கொண்டாடவேண்டுமென்பதோ வழக்கொழிந்த ஒன்றுதான். எழுத்துவீச்சைப் பொறுத்தவரை இன்றைய தினம்வரை புதியபுதிய எழுத்து அணுகுமுறைகள் பரீட்சித்துப் பார்க்கும் நிலை இருக்கின்ற சமூகத்தில் இன்னமும் புனைவு என்பது இப்படித்தான் எழுத வேண்டும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கருதுகோள்கள் புனைவுத்தன்மையை மிகவும் நீர்த்துப் போகச் செய்யும் ஒன்றாகக் கருதுகிறேன்.


உங்க கட்டுரையில் குறிப்பிட்ட பல பகுதிகள் ஏற்புடையதில்லை. சில வெட்டிப்பேச்சு வீரர்களை மாத்திரம் கருத்தில் கொண்டு நீங்கள் இந்தக் கட்டுரை வடித்திருப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இதை ஒட்டுமொத்த சமூகத்தின் மீதான குறையாக நிரூபிக்க முயல்வது சற்று கடினமாக உள்ளது.

திரிச்சி எழுதப்படுவது புனைவுன்னு சொல்லிட்டு அதுல கருத்துப்பிழை வரக்கூடாது தகவல்பிழை இருக்கக்கூடாதுங்கறது எந்த வகையில நியாயம்? நீங்க கருத்துப்பிழைன்னு கருதுறது உங்க பார்வைன்னா அதோட மாற்றுப்பார்வை எழுத்து சுட்டிக்காட்டுதுன்னு பாருங்க. அவருடைய கருத்து என்பது பிழையென்று சொல்ல வாசகனுக்கு உரிமையில்லை. விமர்சகன் விமர்சித்துக்கொள்வதில் கவலையில்லை.

தகவல்பிழைங்கறதை நீங்க எதை சொல்றீங்கன்னு தெரியல. குறிப்பிட்ட சமூகத்தினருக்கிடையேயான பேச்சுமொழி, இடம், உறவுமுறைகள் குறித்த புனைவுகள் வெளிப்படுத்தும் தகவலையோ அல்லது உலகத்தலைவர்கள், உலகளாவிய இடங்கள் குறித்த அறிவில்லாமல் எழுதப்படும் எழுத்தையா..

அறிவியல் புனைவிற்கும் புனைவிற்குமிருக்கும் வித்தியாசமே முன்னது நிச்சயம் நடந்திராத ஒன்று.. பின்னது நடந்ததை மாற்றியிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அறிவியல் புனைவில் எழுதிய விஷயங்கள் எதிர்காலத்தில் நடக்கும்பொழுது அறிவியல் புனைவு என்பது அர்த்தமற்றதுன்னு சொல்லிடுவீங்களா?

உங்களுடைய பார்வையில் புனைவை நீங்கள் அணுக்கமாய் அணுகும் விதம் குறித்து எழுதிய கட்டுரையாக மாத்திரமே என்னால் புரிந்துகொள்ள முடிகிறதே தவிர.. புனைவு என்பதே இதுதான் என்று சுட்டிக்காட்டும் இடுகையாய் கருத முடியவில்லை..

(தொடருவேன்)

kutipaiya said...

தெக்கி

//காட்டாறு, மங்கை மற்றும் சேஞ்ச் இவங்களின் கருத்துக்கள் .. எனக்கும் பிடிச்சிருக்கு..//
எனக்கும்...

ஆனாலும்,
புனைவுகளையே ஒட்டுமொத்தமாக சாடியிருப்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை.

ஏன் நாம் இது வரை சிறுகதைகளையே படிக்காமலா வந்துவிட்டோம்..கதைகளோ கவிதைகளோ , எல்லாமே ஒருவகையில் புனைவின் அம்சம் தானே!

வாசிப்பனுபவம், மொழி, சொல்லாடல், எண்ணவோட்டம், நடை, கரு, என புனைவு படிப்பவர்களுக்கு ரசிக்க எவ்வளவோ இருக்கிறது. அதன் மூலம் எந்த தகவல் பரிமாற்றத்தையும் பெரிதாக அதை படிப்பவர்கள் எதிர்பார்க்கமாட்டார்கள் என்றே நம்புகிறேன்.அவ்வாறு எதிர்பார்ப்பவர்கள் படிக்க வேண்டியது புனைவும் அல்ல..

நீங்கள் சொல்லும் இலக்கியம், சமூகம், கண்ணாடி என்பதெல்லாம் மிகச்சரி..ஆனால், நீங்கள் கூறும், சோ கால்ட் எழுத்தாளர்களின், அல்லது நானும் வலைப்பதிவிடிகிறேன் என்று எழுதுபவர்களும், அல்லது, என் போன்ற எழுத முயற்சிக்கிறேன் பேர்வழி என இப்போது தான் கத்துக்குட்டி நீச்சல் அடிப்பவர்களும் போன்றவர்கள் எழுதுவதெல்லாம் காலம் கடந்து இலக்கியம் என நிற்குமா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி.

Just bcoz we recording something and making it available for everybody, would'nt make it as classics, all time!!!

வாசகர்களுக்கும் spoon feeding தேவைப்படுவதில்லை! காட்டாறு கூறியிருப்பது போல் அவன் perception'க்கும் அங்கே மிகப் பெரிய பங்கு இருக்கிறது..

அதனால் ,
இங்கே இதற்காக இவ்வளவு கோபம் தேவையா எனத் தோன்றுகிறது..

உங்கள் கோபம் ஒட்டுமொத்த புனைவின் மீது அல்ல என்றே நினைக்கிறேன்!!

Better divert it your TARGET AUDIENCE :) so it be better felt and understood!!!

Thekkikattan|தெகா said...

//ஆடுமாடு said...

விரிவான பதிவுதான்.
இதனூடாக என்னையும் சில கேள்விகள் கேட்டுக்கொண்டேன்.
நன்றி தெகா சார்.//

ஆடுமாடு வாங்க, வாங்க :) - செஞ்சீங்களா அம்புட்டுத்தேய்ன் வேணும். நீங்க ஜமாய்ங்க சொல்லுதேன். by the way I like your way of writing -

//சரி, இப்ப என்ன கோபம்//

அது கோபமில்ல ரொம்ப நாளா மனசிக்குள்ளர அரிச்சிட்டு இருந்த சந்தேகம். So, contained and capped தார்மீக உரிமையை எதிர்பார்த்து பொதுவில வைச்சிருக்கேன். அம்புட்டுத்தேய்ன்! நன்றி - ஆடுமாடு!!

Thekkikattan|தெகா said...

சென்ஷி,

வணக்கம்! வாங்க!!

ஏற்கெனவே பதிவின் மூலமும், பல பின்னூட்ட் உரையாடல்களின் மூலமும் பதிவின் மையம் எதனை வேண்டி நிற்கிறது என்று புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்காது என்று நினைந்தேன்.

//திரிச்சி எழுதப்படுவது புனைவுன்னு சொல்லிட்டு அதுல கருத்துப்பிழை வரக்கூடாது தகவல்பிழை இருக்கக்கூடாதுங்கறது எந்த வகையில நியாயம்//

நம்முடைய சமூகத்தில் எழுதப்படும் எந்த ஒரு புனைவுகளும், நம் சமூக நிகழ்வுகளை, வாழ்வியல் முறைகளைத் தாண்டி புனையப் படுவது கிடையாதுதானே? அப்படியாக இருக்கையில் சமூகம் பொருத்து நன்கு அறிந்தவனாக அதன் உளவியல் பின்னணி பேசுகிறேன் என்று முன் வைக்கும் கருத்துக்கள் தனிப்பட்ட பார்வையாக, வளர்ச்சியின் நிலை கொண்டு இருப்பதனை ஒரு குணாதிசியத்தின்பால் வைத்துக் கொடுப்பது எந்த வகையில் சாரும்?

இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வினையொட்டி ஒரு விசயம் கூறுகிறேன். அதனை ஒரு பதிவாக கொண்டு வர வேண்டுமென்று கருதினேன், இருந்தாலும் குறுகிய காலத்தில இரண்டு ‘ஹாட்’ பதிவுகள் வேண்டாமே என்று அடங்கி விட்டேன். இருப்பின்னும், டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் I am really sorry: Salman Khan நடிகர் சால்மான் குறித்து ஒரு செய்தி, அதனில் எத்தனை சதவீதம் புனைவு ஒரு சாதா செய்தியில் அதனையொட்டி எது போன்ற கருத்துப் பிழை முன் மொழியப் பட்டிருக்கிறது, அதற்கான பின்னூட்டங்களையும் பாருங்க எவ்வளவு அபத்தமானதென்று. இது போன்ற கூறுகளைக் கொண்டே மொத்தமாக அதுவே புனைவே ஆனாலும் தனி மனித சுய லாபங்களுக்காகவும் தான் சார்ந்த அரசியல் நிலைப்பாடுகளுக்காகவும் புனைவுகளின் மூலம் விதை தூவப்படலாம் என்றே கருத்தியல் ரீதியாகவே, படைப்பாளி இவற்றை தாண்டியவனாக இருக்க வேண்டுமென்ற அவா வில் இந்தக் கட்டுரையை முன் வைத்திருக்கேன். புரிஞ்சிக்கோங்க!!

Thekkikattan|தெகா said...

வாங்க குட்டிப்’பையா

தாமதமா வந்தாலும் ச்சூடான கேள்விகளோட வந்திருக்கீங்க. எது எப்படியோ இங்க நீங்க புரிஞ்சிகிட்ட வரையிலும் இறக்கி வைச்ச வரைக்கும் நல்லது.

//வாசிப்பனுபவம், மொழி, சொல்லாடல், எண்ணவோட்டம், நடை, கரு, என புனைவு படிப்பவர்களுக்கு ரசிக்க எவ்வளவோ இருக்கிறது. அதன் மூலம் எந்த தகவல் பரிமாற்றத்தையும் பெரிதாக அதை படிப்பவர்கள் எதிர்பார்க்கமாட்டார்கள் என்றே நம்புகிறேன்.//

அதெல்லாம் சரிதான். ஆனா, அந்த வாசிப்பாளனை அப்படியே முடக்கிப் போட்டு வைப்பதனில் நீங்க மேற்கோல் காட்டிய காரணிகளும் அமைந்து போயி அந்தப் புனைவு பேசும் அரசியல் புரியாமலே இருந்து போனால் எப்பொழுது வாழ்க்கையை கற்றுக் கொள்வது. வாசிப்பாளனும் நேரம் செலவிட்டு வாரக் கணக்காக மூழ்கிப் போயி கிடந்தாலும், அவனுக்கும் சமூக பொறுப்பின்னு ஒன்னு இருக்கில்ல...

//அவ்வாறு எதிர்பார்ப்பவர்கள் படிக்க வேண்டியது புனைவும் அல்ல...//

இதை முழுசா ஒத்துக்கிறேன்! ஆமா, அவிங்களுக்கு என்ன வேல இது மாதிரி காத்தில பஞ்சு மிட்டாய் விற்கிற புனைவுகளை படிச்சிக்கிட்டுங்கிறீங்க :)

//உங்கள் கோபம் ஒட்டுமொத்த புனைவின் மீது அல்ல என்றே நினைக்கிறேன்!!//

அப்படியெல்லாம் மொத்தத்தையும் ஒரே பாட்டில்ல போட்டு குலுக்குவோமா... இது படிக்கிறவங்களுக்கு ஒரு மாற்றுப் பார்வையை கொடுக்கிறதுக்கும், புதிசா பேட்டைக்கு வந்திருக்கிற எழுத்தர்களுக்கு வைக்கிற ஒரு சின்ன ரெக்வெஸ்ட் :).

*********************************

இத்துடன் இந்தப் பதிவிற்கான உரையாடல் முடிவடைந்தது. உரையாடிய அத்துனை நண்ப/நண்பிகளுக்கும் நன்றி!

ஜோதிஜி said...

வார்த்தைகள் இல்லை! பாராட்டுவதைக் காட்டிலும் நன்றி தெரிவிப்பதே சிறந்தது என நினைக்கிறேன். பாராட்டுக்கள்.

இதைத்தவிர என்னாலும் ஒன்றும் எழுத முடியல.

கடைசி பத்தி படிக்கும் போது வலைபதிவுகள் பலதும் நினைவுக்கு வந்து போகின்றது பங்கு (பங்காளி சுருக்கம்)

Related Posts with Thumbnails