Tuesday, August 07, 2007

இந்தியாவிற்கு வால்மார்ட் அவசியமா?

கீழே காணும் தலைப்பின் கீழ் நேற்று IBNல் ஒரு செய்தி படித்தேன், அதனைத் தொடர்ந்து எனக்கு ஏற்பட்ட ஆதங்கத்தை இப்படியாக அங்கு பதிந்து வைத்தேன். ஒரு வாசிப்பாளனின் பின்னூட்டமாக.

Walmart-Bharti ink deal to start operations in India

The companies expect to open their first store towards the end of 2007.

...Prabhakar: I dont like Walmart is getting into a country like India, where small scale farmers are running their daily lives by selling their fresh garden produce. We dont need a whale to swallow down the beauty of small scale businesses. Please, God save us from this disaster!
( Posted: Tuesday , August 07, 2007 at 04:39 ) ...

அந்தப் பாராவில் தெரிவித்தது போல இன்று பல்லிளித்துக் கொண்டு போடும் ஒரு கையெப்பம் ஒரு தனி நபரின் லாப நோக்கை முன்னிறுத்தியே என்பது இங்கு யாவருக்கும் தெரிந்ததே. இது இப்படியாக இருக்கும் பட்சத்தில் முன்னயே இது போன்ற சூப்பர் ஸ்டோர்கள் வளர்ந்த நாடுகளில் அடித்து வரும் அட்டூழியம் தாங்க முடியாமல், அவ் வளர்ந்த நாடுகளில் சிறு விவசாயிகளே அற்றுப் போய் பெரும் திமிங்கிலங்களாக இந்தச் சங்கிலிக் கடை மன்னர்கள் எல்லாவற்றையும் தானே தயாரித்து, சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் விலையையும் நிர்ணயித்து சந்தைக்கு கொண்டு வந்து மக்களை சிறுகக் கொன்றுவருகிறார்கள் என்பதனை இன்று அந்த சிறு விவசாயத்தை இழந்து தவிக்கும் மக்கள் துயறுற்று நொந்து தனியார் தொலைக்காட்சிகளில் பல கண் திறக்கும் கேள்விகளை நம் முன் வைக்கிறார்கள்.

இச் சூழலில் இந்தியா போன்ற ஒரு பெரும் விவசாய நாட்டை கபளீகரம் செய்ய இதோ வந்து விட்டது அந்தச் சுறாமீன். வழியில் இருக்கும் அத்துனை சிறு மீன்களையும் அதனில் இருக்கும் அழகையும் தின்று, மென்று விடப் போகிறது. கிடைப்பதென்னவோ உடனடி விலை வீழ்ச்சிதான் சந்தேகமில்லை; நாம் அவ் சிறு விவசாயிகளை இடுகாட்டுக்கு அனுப்பும் வரையில். ஆனால், எதிர் காலத்தைப் பற்றி நாம் சிறிதும் யோசிக்கிறோமா? எது போன்ற உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் இந்த பெரிய மீன்கள் பயன்படுத்தி விலை வீழ்ச்சியை கட்டுப் படுத்துகிறதென. தெரியாது.

இன்று அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒவ்வொரு ஐந்து பெண்களுக்கும் ஒரு பெண் மார்பக புற்று நோயால் தாக்கப் படுகிறாள். இது எங்கிருந்து தருவிக்கப் படுகிறது? திடீரென இது போன்ற ஒரு சங்கிலிக் கடைத் தயாரிப்பில் ஒரு குறிப்பிட்ட இன உணவு தயாரிப்பிலோ, விவசாயத்திலோ குளறுபடி நேர்ந்து நமக்கும் அதுவும் தெரியாமல் போய் அந்த மெல்லக் கொல்லும் நச்சுவை எப்பவோ உடம்பில் உணவாக உண்டு ஏற்றி செத்தால் யார் அதனை நமக்குத் தெரியப்படுத்துவது?

சரி இந்த சிறு விவசாயிகளை இழப்பது குறைந்தப் பட்சம் ஓர் பல்லூயிர் பேணுவதின் பொருட்டு ஒரு பலத்த இழப்பு அல்லவா - சமூக, மற்றும் கலாச்சார கட்டமைப்பின் படியாவது? இந்த வளர்ச்சி ஒரு அழிவுப் பாதையையே நமக்கு காட்டுகிறது.

வால்மார்ட்டுகளும், ஹோம் டிபோக்களும் இந்தியாவுக்குள் நுழைந்தால் அதனைச் சார்ந்த இழப்பு நமக்கு நிறையவே உண்டு. விழித்துக் கொள்வோமா என்றாவது, ரொம்பவும் தாமதமாவதற்கு முன்பே?


பி.கு: சிவா இங்கே இதனைப் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார். அங்கும் சென்று கருத்துச் சொல்லுங்க.

55 comments:

Unknown said...

தெகா, அருமையான வார்த்தைகள். வால்மார்ட்டின் தரம் அமெரிக்காவில் தெரிந்ததுதானே! குறைந்த விலை குறைந்த விலை யென்று சொல்லியே தரமில்லா சீனச் சரக்கை விக்கிறார்கள். இதனால், ஒரு சில அமெரிக்க தொழில் அதிபர்களுக்கும், சீனாவுக்கும்தான் லாபமே தவிர நமக்கு ஒன்றுமில்லை. ஆனால், இந்திய அரசியல்வாதிகளின் கொள்ளையடிக்கும் போக்கு மாறும்வரை, சில இந்திய தொழில் அதிபர்களின் பேராசை மாறும் வரை, அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் ஒழியும்வரை, இந்திய மக்களின் அந்நிய மோகம் தீரும்வரை, இந்த மாதிரி செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கும்!

Anonymous said...

ரிலையன்ஸ் ஆரம்பித்திருக்கும் கடைகள் பற்றி உங்கள் கருத்தைத் தெரிந்துகொள்ளலாமா ?

Thekkikattan|தெகா said...

Anonymous said...
ரிலையன்ஸ் ஆரம்பித்திருக்கும் கடைகள் பற்றி உங்கள் கருத்தைத் தெரிந்துகொள்ளலாமா ? //

அனானி,

இதிலென்ன இருக்கிறது. அது வால்மார்ட்டாக இருக்கட்டும் இல்லையென்றால் இன்னொரு தொல்லையன்ஸாக இருக்கட்டும் இந்த சங்கிலித் தொடர் கடைகளே ஒழிய வேண்டும் அல்லது மக்கள் புறக்கனிக்க வேண்டுமென்பதுதான் எனது நிலை.

இந்த ரிலையன்ஸ் காரர்கள் அரக்க பறக்க எங்கே வேறு ஒருத்தன் வந்து இந்திய மார்க்கெட்டை பிடித்து விடுவானோ என்று தானே, இன்று பல நிலைகளில் தொழில் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இதே வியபாரத் தந்திரமெல்லாம் எங்கே போனது ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு.

எல்லா கழிசடைகளும் அதே பணம் என்ற ஒன்றைத்தான் குறிக்கோளாக வைத்து இயங்கிறது. எனவே மீண்டும் சொல்கிறேன், நமக்கு வேண்டியது நிறைய சிறு விவசாயிகளும், வியபாரிகளும்தான் இந்த திமிங்கிளங்களும், பண முதலைகளும் அல்ல, அல்ல!!

வவ்வால் said...

தெ.கா,

கண்டிப்பாக இது போன்ற பெரு வணிக கூட்டத்தினால் சிறு வணிகர்கள் நேரடியாகவும், அதன் பின்னர் விவசாயிகளுக்கும் பாதிப்பு வரும்.

ஆனால் இது போன்ற பெரு வணிகர்கள் இங்கே வருவதற்கு சாதகமான் சூழல் நிலவ யார்க்காரணம். எல்லாம் இங்கு நிலவும் முறையற்ற இடைத்தரகர்களின் கொட்டம் தானெ , விளைவிப்பவன் எல்லா காலத்திலும் வெறும் கையுடன் தான் செல்ல வேண்டும். அவனுக்கு உழைப்புக்கேற்ற வருமானம் கிடைப்பதே இல்லை. வியாபாரிகளும் , இடைத்தரகர்களுமே லாபம் பார்க்கிறார்கள். அதனை தடுத்தாலே மக்களும் ,விவசாயிகளும் பயன் அடைவார்கள்.

மேலும் இந்தியாவில் வர்த்தகம் என்பது ஒரு குறிப்பிட்ட ஜாதியினராலே ஆக்ரமித்து செய்யப்படுவதால் மக்களும் இப்பிரச்சினையை பொது பிரச்சினையாக பார்க்க தயங்குகிறார்கள்.

Thekkikattan|தெகா said...

தஞ்சாவூராரே,

மிகவும் விரிவாக மேலும் சில உண்மைகளை வெளிக்கொணர்ந்திருக்கிறீர்கள், நன்றி.

//ஆனால், இந்திய அரசியல்வாதிகளின் கொள்ளையடிக்கும் போக்கு மாறும்வரை, சில இந்திய தொழில் அதிபர்களின் பேராசை மாறும் வரை,//

இது என்று ஒழிவது, என்று நம் கண் விழித்துப் பார்ப்பது. எனது ஆதங்கம் முழுதுமே, எப்படி இவ்வளவு பெரிய ஒரு விவசாய நாடு இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ள முடியுமென்ற ஆச்சர்யம்தான் நினைக்க நினைக்க மேலோங்குகிறது.

அமெரிக்காவில் சிறு விவசாயிகளை ஒழித்ததின் மூலமாக அந்த விவசாயக் குடும்பமும் அவர்களின் சந்ததிகளும் இன்று காரில் சர், சர்ரென்று எழுந்தோமோ எதோ ஒரு அலுவலகத்தில் குப்பைக் கொட்டி வயிறு வளர்த்தோமா என்றல்லவா தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இருப்பினும் இது போன்ற தனக்கு மனசீகமாக பிடித்த தொழிலை செய்து மன நிறைவுடன் வாழக் கூடியவர்களும் அல்லவா இந்த ரோபாட்டிக் வாழ்க்கையில் சிக்குண்டு அழிய நேரிடுகிறது.

ஆனால், இதன் முழு வீச்சத்தையும் மூடர்கள் இன்னும் புரிந்து கொள்ள வில்லையே என்பதுதான் எனக்கு ஆச்சர்ய மூட்டுகிறது. ஒரு சிவாஜி என்ற படத்திற்கு இருக்கக் கூடிய ஹைப் இது போன்ற வாழ்வினை அச்ச மூட்டும் விசயங்களுக்கு நம்மிடையே இல்லையே என்னவென்று சொல்வது.

சொல்லிக் கொண்டே போகலாம், ஒழியட்டும் சனியன்கள்.

சிவபாலன் said...

Theka,

Nice Post!


I will come back again!

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

நீங்களாவது வந்தீங்களே, இதனுடைய தாக்கத்தை புரிந்து கொண்டு. இருங்க ஒரு பெரிய பின்னூட்டத்துடன் வரேன் கொஞ்ச நேரத்தில்.

Thekkikattan|தெகா said...

வாங்க டாக்,

I think Reliance veg markets are different.
They get the vegetables directly from the small farmers. so there is no middle man called as the commission agents... //

அந்த ரிலையன்ஸ் அப்படியே சிறு விவசாயிகளிடம் கொள்முதல் பண்ணி ஓரிடத்தில் வைத்து விற்று அதன் பொருட்டு வரும் லாபத்தில் டீசண்டான ஒரு தொகையாக விவசாயிகளிடம் பகிர்ந்து கொண்டால் இதில் ஒரு பிரச்சினையும் இல்லைதான்.

ஆனால், இந்த கொள்ளையடிக்கும் லாப நோக்கு போகப் போக நிலங்களை அவர்களிடத்தே பரித்துக் கொண்டு பிறகு தானே விளைவித்துக் கொள்ளும் உத்தியில் இறங்கும் பொழுது அது கொஞ்சம் பய மூட்டக் கூடியாக போய் விடுகிறது, டாக்டர்.

பாருங்க நீங்க சொன்ன சரவணா கடையிலே எங்கேயிருந்து வந்தது அந்த திமிர்? வியபாரம் செய்ய வர மக்களை ஒரு மா'க்களைப் போன்று நடத்த வேண்டுமென்ற மனோபாவம். அதே மொத்த விலைப் கொள்முதலும், இரண்டு அல்லது மூன்று ரூபாய் குறைத்துக் கொடுக்கிறான் என்பதனால் இரண்டு கட்டை அடி வாங்கிக் கொண்டு கூட நம் உள்ளே நுழைய தயராக இருப்பதால் தான்.

கன்ரோல் ஸ்விட்ச் இன்னமும் நம் கையில் தான் இருக்கிறது.

வவ்வால் said...

தெ.கா,

//ஆனால், இந்த கொள்ளையடிக்கும் லாப நோக்கு போகப் போக நிலங்களை அவர்களிடத்தே பரித்துக் கொண்டு பிறகு தானே விளைவித்துக் கொள்ளும் உத்தியில் இறங்கும்//

இப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது , ஒரு காலத்தில் தேயிலை சாகுபடியில் தனிப்பட்டவர்கள் தான் இருந்தார்கள் , பின்னர் அது பெரிய வணிக நிறுவனங்களான டாடா , itc போன்றோரின் கையில் போய்விட்டது , அவர்களுக்கு தேவையான தேயிலையை அவ்வர்களே பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்து போட்டு பயிரிட ஆரம்ப்பித்து விட்டார்கள்.எனவே தெயிலை சந்தையின் விலையை அவர்கள் விருப்பபடி நிர்ணயிக்க ஆரம்ப்பித்து விட்டார்கள்.

ஆண்டு தோரும் பச்சை தேயிலை விலை குறைந்தாலும் இந்த நிறுவனங்கள் தேயிலை தூள் விலையைக்குறைப்பதே இல்லை. தனிப்பட்ட விவாசாயிகள் தேயிலை பயிரிட தான் முடியும், அதனை பதப்படுத்த வசதி இல்லை எனவே கிடைத்த விலைக்கு விற்று விடு போகிறார்கள். ஓட்டி,குன்னூரில் விளையும் தேயிலைகளை உபாசி என்ற அமைப்பு மூலம் ஏலத்தில் விற்கிறார்கள் ஏலத்தை நிர்ணயிப்பதே பெரும் நிறுவனங்கள் தான்.

இத்தகைய நிலை காய் ,கறி மற்றும் விவசாயத்திலும் கூட வரலாம் , ரிலையன்ஸ்,வால் மார்ட் மூலம்.

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

ஓட்டி,குன்னூரில் விளையும் தேயிலைகளை உபாசி என்ற அமைப்பு மூலம் ஏலத்தில் விற்கிறார்கள் ஏலத்தை நிர்ணயிப்பதே பெரும் நிறுவனங்கள் தான். //

அழகு, வெகு அழகாக விவரித்திருக்கிறீர்கள். சொல்லப் போனால் வவ்ஸ், உலக மொத்தத்திற்குமே ஒரு நான்கு அல்லது ஐந்து பெரிய தொழி நிறுவனங்கள் இந்த உலகத்தையே கட்டி ஆள முடியும் இப்பொழுது எப்படி இந்த பில் கேட்ஸ் என்ற முதலை கம்பியூட்டர் தொழிலில் கொழித்து வளர்கிறதோ அப்படி, எலக்ட்ரானிக்ஸ் என்றால் ஒருவர், ஹார்டுவேர் கடைகள் என்றால் ஒருவர், அதனைப் போலவே இந்த உண்ணும் பொருட்களை உற்பத்திப்பதிலும் நிகழ்ந்தால் கூட்டச் சாவாக இருந்தாலும் அவர்கள் உணவில் விஷம் கலந்து கொடுக்கலாம், நாமும் கடைகளுக்குச் சென்று வாங்கி சாப்பிட்டுச் சாகலாம். கேப்பார் யார்?

ஆனால், இந்தியாவிற்கு இந்த வால்மார்ட் உத்தி கிஞ்சிதமும் உகந்ததல்லவே. இருக்கும் விவசாய மக்கட் தொகையை கருத்தில் நிறுத்தினால்...

//இத்தகைய நிலை காய் ,கறி மற்றும் விவசாயத்திலும் கூட வரலாம் , ரிலையன்ஸ்,வால் மார்ட் மூலம் //

அதிலென்ன சந்தேகம் இதோ வந்தே விட்டது. இனிமேல் சிறு கடைகளுக்கு சென்று கரு வேப்பிலை விற்கும் பாட்டியிடம் ஒரு சம்பாஷனை பண்ண முடியாது, அதன் பொக்கை வாய் சிரிப்பை கண்டு மகிழ அருங்காட்சியகத்துக்குத்தான் செல்ல வேண்டும். வாழ்க முதலைகள்!!

நாமக்கல் சிபி said...

தெகா!

இந்த மாதிரி வணிக நிறுவணங்கள் நம்ம ஊருக்குள்ளே வருவதற்கு முன்பே தடுத்து நிறுத்தணும்.

இந்த ரிலையன்ஸ் காய்கறிக் கடையை அரசு எப்படி அனுமதித்ததுன்னே தெரியலை!

அவன் சொல்ற நோக்கம் என்னவோ நம்ம உழவர் சந்தை நோக்கத்தை விடப் பெரிசா ஒண்ணும் இல்லைன்னே நினைக்கிறேன்!

என்னைக் கேட்டா உழவர் சந்தைத் திட்டத்தை இன்னும் நல்லா மெருகேற்றி அரசே விவசாயிகளை நெரடியா மக்கள்கிட்டே விற்பனை செய்ய வழி வகுக்கலாம்! இடைத்தரகர்கள் பண்ணுற இம்சைல இருந்து விவசாயிகளுக்கு விடுதலை கிடைக்கும்!

இதனால ஜனங்களுக்கும் சரி, விவசாயிகளுக்கும் சரி! ரெண்டு பேருக்குமே லாபம்தான்!

வவ்வால் said...

//என்னைக் கேட்டா உழவர் சந்தைத் திட்டத்தை இன்னும் நல்லா மெருகேற்றி அரசே விவசாயிகளை நெரடியா மக்கள்கிட்டே விற்பனை செய்ய வழி வகுக்கலாம்! இடைத்தரகர்கள் பண்ணுற இம்சைல இருந்து விவசாயிகளுக்கு விடுதலை கிடைக்கும்!//

சிபி ,

இது குறித்து ரொம்ப நீளமாகவே மா.சி அவர்களின் பதிவில் பேசியுள்ளோம் பாருங்கள். நானும் நீங்கள் சொன்னது போலத்தான் சொன்னேன் அதில்.

http://masivakumar.blogspot.com/2007/06/blog-post_7495.html

Thekkikattan|தெகா said...

சிவா,

உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது இது சார்ந்து நிறைய கண்டிப்பாக எப்பொழுது வேண்டுமானாலும் தங்கள் கருத்தை இங்கு பதிந்து வைக்கிறீர்கள். எதிர்பார்க்கிறேன்.

ஏனெனில் நாம் எல்லாம் ஒரு காலக் கட்டத்தில் விவசாய பின்புலத்தில் வளர்ந்து வந்தவர்கள்தான், இன்னமும் நமக்குத் தெரிந்தவர்கள் அத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் தானே, எனவே இதன் பொருட்டு கலந்துரையாட நிறைய உங்களிடமிருக்கும் என்று எதிர் பார்பதினால்தான் அப்படி சொல்கிறேன்.

நன்றி!

சிவபாலன் said...

ஆமாம் தெகா. எங்க குடும்பம் விவசாயக் குடும்பம் தான். அதுவும் வானம் பார்த்த பூமி (மானவாரி நிலங்கள்).

அது போன்ற நிலங்களில் விளைச்சலும் அதை வணிகம் செய்வதும் எவ்வளவு கடினம் எனபதை உணர்ந்தவன்.

வால்மார்ட், இது போன்ற விவாசாயிகளில் குரல் வலையை நசுக்குகிறதா அல்லது இடைத்தரகர்களை நசுக்குகின்றதா என்பதைப் பார்க்க வேண்டும்.

பொதுவாக விவசாயிகள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதில்லை. அதனால் வால்மார்ட் இடைத்தரகர்களைவிட நல்ல விலை கொடுக்கலாம்.

ஆனால் பிரச்சனை ஆரம்பமே அங்கு தான். விவசாயிக்கு நல்ல விலை வரவில்லை என்றால் மற்ற இடத்திற்கு பொருளை தற்பொழுது நிலையில் விற்க முடியும். ஆனால் வால்மார்ட் வந்தால் இந்த நிலையில் என்ன மாற்றம் வரும் என்பதை அறிய விரும்பிகிறேன்.

அதே போல் விதைகளை அவர்களே கொடுக்கும் பட்சத்தில் அந்த விதைகள் நம் மண் வளங்களை சுரண்டும் வண்ணமும், ஒவ்வொரு முறை விதைகளுக்கு வால்மார்ட் நம்பி இருக்கும் நிலையும் இருந்தால் அது மிகப் பெரிய ஆபத்து. ஏனென்றால் விதைகளின் விலை வால்மார்ட் வசம் போய்விடும். அப்படியாகின் நம் விவசாயிகள் தூக்கில் தான் தொங்க வேண்டும்.

சிவபாலன் said...

தெகா

மேலும், இது மற்ற வர்த்தகத்திற்கும் பொருந்தும். எப்படி என்றால், ஒரு லுங்கி தாயாரிக்கும் ஆலையை எடுத்துக்கொள்வோம்.( சேலும் அதை ஒட்டிய இடங்களில் இந்த ஆலை மிக அதிகம்).

ஒரு வேளை வால்மார்ட் இந்த நிறுவனங்களிடமிருந்து ( அதாவது குடிசைத் தொழில் போல் செய்யும் நிறுவனங்கள்) கொள்முதல் செய்வதாக வைத்துக் கொண்டால், வால்மார்ட் போக போக தனது தனது தொழில் ஏற்படும் மாற்றங்கள் இந்த நிறுவனங்களின் மீது தினிக்கும்.

மக்களும் வால்மார்டிடமே விரும்பி செல்கிறார்கள் என்றால், மற்ற நிறுவனங்கள் தனித்து இயங்க முடியாமல் போகலாம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், குடிசை தொழில் போல் செய்பவர்கள் காணாமல் போய்விடுவர்.

இது என் சிற்று அறிவுக்கு ஏற்ப என் கருத்தை சொல்லியிருக்கிறேன். இந்த வர்த்தகத்தை பற்றி அறிந்தவர்கள் இன்னும் தெளிவாக விளக்கலாம். எனக்கும் மற்றவர்களும் உபயோகமாக இருக்கும்.

நன்றி

Thekkikattan|தெகா said...

சிவா,

வால்மார்ட், இது போன்ற விவாசாயிகளில் குரல் வலையை நசுக்குகிறதா அல்லது இடைத்தரகர்களை நசுக்குகின்றதா என்பதைப் பார்க்க வேண்டும். //

இதில் பொருத்திருந்து பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லை, சிவா! இப்பொழுது நீங்கள் வசிக்கும் பகுதியில் ஏதோனும் சிறு விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைவித்த காய், கறிகளை ஆர்கனிக்காக விளைவித்தேன் கொஞ்சம் விளை அதிகம்தான் ஆனால் சுகாதாரமிக்கது என்று விற்கும் காட்சியினை பார்க்க முடிகிறதா? அதிகமாக கண்ணுற முடியாது, தெரியும். ஏன்?

இதுவே இந்த அசுரக் திமிங்கிளங்களின் முடிவு அத்தியாயம் நமக்கு.

எல்லாவற்றையுமே வியபாரமாகவே பார்த்துவிட்டால், வாழ்வினில் சுகமேது, 42" கலர் ட்டிவியில் எந்த நாட்டில் எப்படி குண்டு வீசுகிறார்கள் என்று நடுக் கூடத்தில் பிள்ளைகளுடன் அமர்ந்து மற்றவர் சாவதை ஒரு படத்தினை கண்டு களிப்பது போல் கையில் கோக்கும், வால்மார்ட் சிப்ஸும் கொண்டு கண்டுகளிப்பதற்கா?

எங்கே போகிறது நமது கலாச்சாரமும், மனித மேன்மையும். மேற்கத்திய வாழ்வு முறையே சிறந்தெதென அதன் போக்கில் வீங்கி வெடித்தால் தான் நாம்மை நாமே சுட்டுக் கொண்டதாக உணர முடியுமா?

துளசி கோபால் said...

இந்தப் பிரச்சனை இந்தியாவில் மட்டும்தான்னு நினைச்சுறாதீங்க.

பெரியபெரிய 'சங்கிலிக் கடைகள்' வந்து சின்ன வியாபாரத்தை மூடவைக்கிறது
இங்கெயும் இருக்கு. 24 மணி நேரம் திறந்திருக்கும் சூப்பர் மார்கெட் வகைகளால்,
பொட்டிக்கடையா இருக்கும் கார்னர் Dairyகளை நடத்தமுடியாம ஒவ்வொண்ணா
மூடும் நிலை இங்கே.

இந்த டெய்ரிகள் எல்லாம் நடத்திக்கிட்டு இருக்கறது குஜராத்திக் குடும்பங்கள்.

Unknown said...

தெகா, சிவபாலன்: நானும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில், நடக்கும் விசயங்கள் மிகக் கவலையளிக்கின்றன. அமெரிக்காவில், சிறு விவசாயிகள் ஒழிக்கப்பட்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டன. தெகா சொன்னமாதிரி, இப்போது அவர்கள் சந்ததியினர் விவசாயம் என்றாலே என்னவென்று தெரியாமல், மரபணு மாற்ற்ப்பட்ட மொன்சான்டோ போன்ற நிறுவனங்கள் அளிக்கும் விச விதைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் உணவு வகைகளைத்தான் உண்கின்றனர்.

எல்லாமே இந்த நாட்டில் பணம் தேடி அலையும் கூட்டமாகிவிட்டது. ஏதாவதொரு பண்ணைக்கு சென்று பாருங்கள், அந்தப் பக்கமே செல்ல முடியாத அளவுக்கு நாற்றமடிக்கும்! ரசாயன உரங்களின் மகத்துவத்தால்.

அமெரிக்காவை கண்ணைமூடிக் கொண்டு பின்பற்றுவதின் ஆபத்து நம் தலைமுறைக்குத்தான். ஆனால் அப்போது, நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடும். அப்போது, நாம் இரண்டாம் முறையாக அன்னிய அடிமைகளாக இருப்போம்.

இந்தியாவின் முதுகெலும்பு, விவசாயம். அதை உடைய விடாமல் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை மற்றுமன்று. நமது கடமையுமாகும்.

2010-ல் நான் இந்தியா திரும்புகிறேன். ஆர்கானிக் விவசாயம்தான் எனது இலக்கு! இப்போதே, இந்தியாவில் அதற்கான விழிப்புணர்வு ஆரம்பித்து விட்டது. விகடன் குழுமத்தாரின் 'பசுமை விகடன்' நல்ல பங்காற்றுகிறது, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் உதவியுடன்!

என்னுடைய நீண்ட பின்னூட்டத்தைப் படித்தமிக்கு நன்றி. இதுபற்றி, விரிவாக ஒரு பதிவு இடலாம் என்பதும் என் எண்ணம்.

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்!

Thekkikattan|தெகா said...

இந்த மாதிரி வணிக நிறுவணங்கள் நம்ம ஊருக்குள்ளே வருவதற்கு முன்பே தடுத்து நிறுத்தணும்.//

அதான் நான் சொல்ல வருவதும். முன்னமே அறிந்தவைகளில் இருந்து பாடங்களை தெரிந்து கொண்டு, வருமுன் காப்போம்.

அவன் சொல்ற நோக்கம் என்னவோ நம்ம உழவர் சந்தை நோக்கத்தை விடப் பெரிசா ஒண்ணும் இல்லைன்னே நினைக்கிறேன்!//

என்னங்க பெரிய பெருங்காய நோக்கம். அதெல்லாம் ஒண்ணுமில்லை, காசு பண்ணுவதைத் தவிற. நீங்க சொன்னத்துக்கு பிறகு தான் இந்த உழவர் சந்தைன்னு ஒண்னு இருக்குன்னே ஞாபகத்துக்கு வந்துச்சு. அது அருமையான, முன்னமே ஆதரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற ஒரு திட்டம் தானே. அதனை இன்னமும் செப்பனாக முறையீட்டு எல்லா ஊர்களிலும் நுழைத்தால் முடிந்தது.

என்ன நம்ம மக்களும் வரும் காய்கறி விற்கும் பாட்டி, தாத்தாக்களிடம் ரொம்ப ஆசைப்பட்டு அநியாயத்திற்கு பேரம் பேசுவதை குறைத்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

இதனால ஜனங்களுக்கும் சரி, விவசாயிகளுக்கும் சரி! ரெண்டு பேருக்குமே லாபம்தான்! //

அது மட்டுமில்லாமல். யானை, புலி, சிங்கமெல்லாம் நாம அதுக வாழ்ற இடத்தில வைச்சே பாதுகாத்து வரும் சந்ததிகள்கிட்ட விட்டுட்டு போற மில்லை அது மாதிரியேத்தான் இந்த பழங்கால சந்தைமுறை விற்பனைக் கூடங்களும், நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கம். அது பாதுகாத்து நமது பிள்ளைகள் கிட்ட விட்டுட்டுப் போறது நமது கடமை.

Thekkikattan|தெகா said...

வாங்க துள்சிங்க,

இந்தப் பிரச்சனை இந்தியாவில் மட்டும்தான்னு நினைச்சுறாதீங்க.//

இது ஒரு தொற்று வியாதி மாதிரி கண்ட இடமெல்லாம் பரவ ஆரம்பிச்சதினாலேயேத்தான் இது கண்டிப்பாக எழுதி ஆகணுமின்னு இங்கே எழுதினெங்க.

இந்தச் சங்கிலிக் கடைகள் இருக்கும் கொஞ்ச நஞ்ச shopping funயையும் இழக்க வைக்குது. கடந்த முறை நான் இந்தியாவிற்கு வந்திருந்தப்ப எவ்வளவு பாட்டி, தாத்தாக்களை சந்தோஷப் பட வைச்சேன் அரட்டை அடிச்சே. அதில் எவ்வளவு மனித நேயம் இருந்தது. அதுக்கே எவ்வளவு வறச்சியாக இருக்கிறது இந்த காங்ரீட் காடுகளில்.

எல்லாவற்றுக்கும் காரணம், அறிவிலித்தனம்தான் (ignorance) எது நல்லது எது கெட்டது என அறிந்துக் கொள்ளக் கூடிய ஒரு வாய்ப்பு கிட்டமைதான் இப்படி மந்தை ஆடுகளைப் போன்று அடுத்தவர்களைப் பார்த்து தானும் சூடுப் போட்டுக்கொள்ளத் தோன்றும் தனம்.

எனக்கு இதன் பொருட்டு நிரம்பவே வருத்தம். ஆனால், நடக்கும் நிகழ்வுகளை கண்ணுற மட்டுமே முடியக் கூடிய நிலையில் நாம்... என்ன செய்ய!!

Anonymous said...

inge blog-la vanthu karuthu sollara pala per - USA-la kuppai kottitikkity irukkanga...

yen avangala ellam india-la velai seithu siru samabalam vaanga vendiyathu thane? :-) summa film kaataatheengapppa!!!!

///குறைந்த விலை குறைந்த விலை யென்று சொல்லியே தரமில்லா சீனச் சரக்கை விக்கிறார்கள். ///

I disagree... the prodcuts I get here in wal-mart is not that of low quality..... take for example the children garments, the price is cheaper and the quality is so good and the for the same price in india, u get very very bad quality clothes.... even if u pay double the price in india, u don't get that quality...this is just one example..

காட்டாறு said...

வாதங்களும், விவாதங்களும் நல்லாத்தான் இருக்குது. நாம அதுக்கு என்ன செய்கிறோம் என்று எழுதலாமே.

Thekkikattan|தெகா said...

அனானி, உங்களுக்கென எழுத ஆரம்பிச்சது ஒர் தனிப் பதிவ போச்சு இங்க போய் பாருங்க... உங்களுக்கு கண்ணீர்த் தண்ணியே வந்துடும், ஏண்டா இவன கேட்டோமின்னு ஆகிடப் போகுது அனானிக்கு ஓர் உருக்கமான பதில்!!!

காட்டாறு said...

எனக்கு எப்போ பதில்?

Thekkikattan|தெகா said...

எனக்கு எப்போ பதில்? //

ஏங்க காட்டாறு நீங்களும்தானே பார்த்துட்டு இருக்கீங்க. ஏதாவது இதற்கு ஒரு தீர்வு சொல்றது. என்னையே கேக்குறீங்களே. சரி, வாங்க ஒரு அனானி, நம்மள ஊருக்குப் கூப்பிடுறார், அங்கே போயி அவரு வீட்டாண்டை தங்கிட்டு, வால்மார்ட் இந்தியாவுக்குள் வரக்கூடாதுன்னு ஸ்டிரைக் பண்ணுவோம். அவரே டிக்கெட் எல்லாம் எடுத்துக் கொடுக்கிறாராம்.

எனக்கு வேற இந்த மாசம் மேர்ட்கேஜ் லேட் :D

மங்கை said...

நானும் டாக்டரம்மா நினச்சது போலத்தான் நினச்சுட்டு இருந்தேன்..

ஹ்ம்ம்...பாருங்க நாங்களே இப்படி இருக்கோம்

காட்டாறு said...

//I disagree... the prodcuts I get here in wal-mart is not that of low quality..... take for example the children garments, the price is cheaper and the quality is so good and the for the same price in india, u get very very bad quality clothes.... even if u pay double the price in india, u don't get that quality...this is just one example.. //

அனானிமஸ் அவர்களே! தெகாவும், நண்பர்களும் வால்மார்ட் போன்ற கடைகள் அவசியமா என்று தானே கேட்கிறார்கள். அதனால் சிறு வியாபாரிகள் எப்படி பாதிக்கப் படுவர் என்பது தானே அவர்களின் வாதம்.

மேலும் நீங்கள் எந்த கம்பேனியின் தரத்துடன் வால் மார்ட் தரத்தை கம்பேர் செய்கிறீர்கள் எனத் தெளிவாக சொல்லியிருக்கலாம். ஒட்டு மொத்தமாக இந்தியாவில் தயாராகும் உடு துணிகளை சொல்லியிருந்தால், உங்களுடன் வாதிக்கும் நேரமே வேஸ்ட் என்பேன்.

காட்டாறு said...

//Thekkikattan|தெகா said...
ஏங்க காட்டாறு நீங்களும்தானே பார்த்துட்டு இருக்கீங்க. ஏதாவது இதற்கு ஒரு தீர்வு சொல்றது. என்னையே கேக்குறீங்களே
//
நண்பரே... நான் தீர்வு கேட்கவில்லை. பேசிப் பேசியே பொழுதை கழித்துவிடுவதும் ஒரு தீர்வே. ஏன்னா, நம்ம மனப் பாரம் குறைந்துவிடும். பாரம் குறைந்தால் வேகம் குறைந்து விடும். ஆகவே, நாம் அடுத்து என்ன செய்யலாம் எனப் பதிவை ஆரம்பிச்சா, நம் நண்பர்கள் ஆளாளுக்கு தெரிந்த, புரிந்த, உணர்ந்த, நடை முறை படுத்த முடிந்த ஒன்றை நாமும் பின்பற்றலாம் இல்லையா.

Thekkikattan|தெகா said...

நானும் டாக்டரம்மா நினச்சது போலத்தான் நினச்சுட்டு இருந்தேன்..

ஹ்ம்ம்...பாருங்க நாங்களே இப்படி இருக்கோம்//

அப்படித்தான் மங்கை எல்லாமும் எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கணுமின்னு ஒண்ணும் அவசியமில்லை. அதான் ஒருத்தருக்கு தெரிஞ்சதை மத்தவங்ககிட்ட சொல்லி பகிர்ந்துக்கிறோம்.

Thekkikattan|தெகா said...

காட்டாறு,

நண்பரே... நான் தீர்வு கேட்கவில்லை. பேசிப் பேசியே பொழுதை கழித்துவிடுவதும் ஒரு தீர்வே. ஏன்னா, நம்ம மனப் பாரம் குறைந்துவிடும். பாரம் குறைந்தால் வேகம் குறைந்து விடும். ஆகவே, நாம் அடுத்து என்ன செய்யலாம் எனப் பதிவை ஆரம்பிச்சா, நம் நண்பர்கள் ஆளாளுக்கு தெரிந்த, புரிந்த, உணர்ந்த, நடை முறை படுத்த முடிந்த ஒன்றை நாமும் பின்பற்றலாம் இல்லையா.//

இதிலென்ன சிக்கல் என்றால், இச் சூழலில் நம்மால் முடிந்ததெல்லாம் முடிஞ்சளவிற்கு இதிலுள்ள நிறை, குறைகளை எல்லோருக்கும் சென்று சேரும் வண்ணம் பொது இடங்களில் பேசுவது. ஏனெனில், அந்த பண முதலைகள் கையெழுத்திட்டு கடையை திறந்து விட்டால் செய்வதற்கு ஒன்றுமில்லை, மக்களாக பார்த்து தவிர்த்து வந்தாலே உண்டு.

இங்கு சில மாநிலங்களில் வால்மார்ட் போன்ற பெரிய சங்கிலிக் கடைகளே உள்ளே நுழைய முடியா வண்ணம் மக்கள் போராடி ஜெயித்தும் வருகிறார்கள். கலிஃபோர்னியாவில் சில கவுண்டிகளில் இந்த சங்கிலிக்கடைகளே கிடையாதாம். காரணம் அவ் வூரில் வாழும் மக்களின் சுகாதாரம் கலந்த பொறுப்புணர்வு.

இன்னமும் சொல்ல வேண்டுமானால், நேரடியாக நாம் இறங்கி செய்ய இதன் பொருட்டு போராட அருந்ததி ராய்க்கு ஒரு புத்தகத்தின் மூலமாக அடித்த நிறைவு, நமக்கும் பம்பர் பரிசாக அடித்து வாழ்வையே அன்றாட பிரச்சினைகளிலிருந்து மேலெழும்பி நேரடியாக பிரச்சினையில் குதித்தால்தான் உண்டு.

அந்த நாள் வரை, இது ஒன்றுதான் ஆயூதம். நமக்குகிட்டியது.

Unknown said...

அனானி,
வால்மார்ட்டில வாங்குறதுக்குன்னே சில பொருட்கள் இருக்கு. ஆனா 3 மாததுக்கு மேலே அவைகள தூக்கிப் போட்டுடனும். குழந்தைங்க துணி எல்லாம் அந்த டிசைன்ல கிடைக்காதுனு வேனா சொல்லுங்க. இந்தியத் தரம் எதற்கும் குறைந்தது அல்ல! டார்கெட், கோல்ஸ் மாதிரி கடைகளில், இந்தியத் துணிகள்தான் அதிகமா விக்குது. சீனாவோட பொருட்களின் தரம் இப்போ கொஞ்சம் கொஞ்சமா வெளுக்க ஆரம்பிக்குது. பேஸ்ட், நாய் உணவு, இறால் நு சொல்லிகிட்டே போகலாம்.

வால்மார்ட்டோட, மினிமம் சாலரி தெரியுமா? அங்கே வேலை செய்றவங்களுக்கு ஹெல்த் இன்சுரன்சு இல்லே அது தெரியுமா?

வால்மார்ட் போன்ற கடைகள் நமது ஊருக்குத் தேவைன்னா, புஷ் மாதிரி தலைவரும் நம்ம ஊருக்குத் தேவைதான்!

உங்களுக்கு, தெ.கா தனிப் பதிவே போட்டுட்டார். நான் தனியா எதுவும் சொல்லத் தேவை இல்லே.

Anonymous said...

//அனானிமஸ் அவர்களே! தெகாவும், நண்பர்களும் வால்மார்ட் போன்ற கடைகள் அவசியமா என்று தானே கேட்கிறார்கள். அதனால் சிறு வியாபாரிகள் எப்படி பாதிக்கப் படுவர் என்பது தானே அவர்களின் வாதம்.//

Kaataaru avargalae, nan main post-a mattum paarkala, but oru nambar comment-la, he was telling that wal mart products are of bad quality... Hence i was answering him.

//மேலும் நீங்கள் எந்த கம்பேனியின் தரத்துடன் வால் மார்ட் தரத்தை கம்பேர் செய்கிறீர்கள் எனத் தெளிவாக சொல்லியிருக்கலாம். ஒட்டு மொத்தமாக இந்தியாவில் தயாராகும் உடு துணிகளை சொல்லியிருந்தால், உங்களுடன் வாதிக்கும் நேரமே வேஸ்ட் என்பேன்//

It is not one shop, I have tried many shops, paid invariably higher amount than what I used to pay in wal-mart, Kohls, target... but the clothes doesn't even last for few months....

Thekkikattan|தெகா said...

தஞ்சாவூராரே,

நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. அருமையான சிந்தனைகள். வாழ்த்துக்கள்.

2010-ல் நான் இந்தியா திரும்புகிறேன். ஆர்கானிக் விவசாயம்தான் எனது இலக்கு! //

கேப்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது. நானும் உங்க பக்கத்து ஊர்க்காரன் தான் எனக்கும் ஒரு வேலைப் போட்டுக் கொடுங்க உங்க தோட்டத்தில :-)

Santhosh said...

It is good that this debate has started again. I donno If you knew that me and selvan had a similar debate some time back. The people who support chain of stores jst talk about things like middlemen and stuff but they never think in longterm.
I donno If you have heared, Walmart places orders for a lower grade of product with all the producers, in some places it even defines the starndard of lower grade products so as the saravana stores.

Unknown said...

தெகா,

வால்மார்ட் சீனாவிலிருந்து வருடத்துக்கு 10 பில்லியன் டாலர் மதிப்பில் சரக்கை ஏற்றுமதி செய்கிறது.இதுபோல் ஒரு ஏற்றுமதி மையமாக இந்தியாவும் மாறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.ரீடெயில் துறையில் இந்தியா பின் தங்காமல் இருக்கவும் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தவும் டெக்னாலஜி, மிகப்பெரும் முதலீடு ஆகியவை தேவை.அவற்றை இந்திய சிறு வணிகர்களால் வழங்க இயலாது.

ரீடெயில் துறை உயர்ந்தால் தான் விவசாயம், தொழில்துறை ஆகிய துறைகள் பெரிய அளவில் முன்னேறும்.கிரெட்கார்ட், பைனான்ஸ், வங்கி, போக்குவரத்து என பல துறைகளிலும் முன்னேற்றம் இருக்கும்.

நசிந்து வரும் இந்திய விவசாயதுறைக்கு இம்மாதிரி முதலீடுகளும், உள்கட்டமைப்பு மேம்படுத்தலும் தான் குளுகோசாக இருக்கும். இந்தியாவில் விற்கும் காய்கறிகளில் 50% சந்தையை தொடுமுன்னரே அழுகி விடுகின்றன.எத்தனை நஷ்டம் இதனால்?உணவை பதப்படுத்தி, டப்பாக்களில் அடைத்து விற்றால் விவசாயிக்கு எத்தனை லாபம்?ஆனால் இதை செய்யும் டெக்னாலஜியும், முதலீடும் சிறு வணிகர்களிடம் இல்லையே?

Thekkikattan|தெகா said...

வாங்க செல்வன்,

வால்மார்ட் சீனாவிலிருந்து வருடத்துக்கு 10 பில்லியன் டாலர் மதிப்பில் சரக்கை ஏற்றுமதி செய்கிறது.இதுபோல் ஒரு ஏற்றுமதி மையமாக இந்தியாவும் மாறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.//

நன்றாகவே வேண்டிய அளவிற்கு ஏற்றுமதியில் சிறப்பாக செய்யட்டும் அதனைப் பற்றி எந்த கேள்வியும் கிடையாது. ஆனால், விவசாயிகளிடம் உள்ள சிறு நிலங்களை பறித்துக் கொண்டு ஒரே ஆள் விவசாயத்தையும் செய்து உணவு processing, preservation, and bottling எல்லாவற்றையும் செய்து அவர்களின் கையயே எதிர் பார்த்து வாழும் நிலைக்குத் தள்ளப் படுவதையே இங்கு கேள்விக்கு உள்ளாக்குகிறேன்.

ஏன் அதே நீங்கள் கூறிய அடிப்படை கட்டமைப்பு, மேம்படுத்திய தொழிற் நுட்பம் போன்றவைகளை அரசாங்கமே முன்னின்று நடத்தி ஏன் பல நாடுகளுக்கு ஒரு முன்னுதாரனமாக இருக்கக் கூடாது. இங்கு என்ன நடந்தது, ஆப்பில், ஆரஞ்சு விளைவிக்கக் கூடிய சிறு விவசாயிகள் எல்லாம் மலையேற்றிவிட்டு இன்று எது போன்ற ரகம், எது போன்ற விலையில் கொண்டு வர வேண்டுமென்ற வியபார நோக்கம் மட்டுமே அதில் குறிக்கோலாக இருக்கிறதெ அன்றி, அதனை ஒரு தொழிலாகவும், தான் நேசிக்கும் ஒரு வாழ்க்கையாகவும் வாழ்ந்த மக்களை பூண்டோடு அழித்து ஒழித்து விட்டார்களே அதற்கு என்ன செய்வது.

இதுவே அப்துல் காலமும் மற்றொருவரும் 2020யில் குறிப்பிட்ட சில விவசாய மேம்பாடுகளில் எப்படி, சிறு விவசாயிகளிடத்தே குளிர் சாதனமேற்படுத்தப் பட்ட வாகனங்களின் மூலமாக சென்று நேரடியாக கொள்முதல் செய்து, பதப் படுத்தப் படக் கூடிய இடங்களுக்கு எடுத்து வந்து பாட்டில் செய்யலாம் என்பதும் அறிவுருத்தப் பட்டிறுக்கிறதே. அதில் இரண்டுமே காரியம் ஆகிறது அல்லவா?

இதற்காக, ஒரு முழு விவசாயக் கூட்டத்தையே அழித்து விட்டு, பெரும் முதாலலீகளிடத்தே ஒரு நாட்டின் முதுகெலும்பையே கொடுத்து விடு என்பது ஒரு நாட்டின் தன்னிறைவை எப்படி போக்கச் செய்யும். இது உசிதமான ஒரு ஐடியாவா?

எங்கே நம்மிடத்தே இருந்த 2000 வகை அரிசி இனங்கள் இன்று? பெண்களின் கர்ப்ப காலத்திற்கெனவே சாப்பிடுவதற்கென இருந்த ஒரு நெல் இனம் எங்கே இன்று? வளர்ச்சி ஒரு நாட்டிற்கு அவசியம்தான், அதே நேரத்தில் தன்னை தொலைத்துக் கொண்டு முன்னேறும் ஒரு முன்னேற்றம் எப்பொழுதும் நீண்ட தூரத்திற்கு நிலைப்பது கிடையாது. மேலும் நம் நாடு ஒரு ஹைடி(Haiti)யைப் போல் எல்லாவற்றிற்கும் அன்னிய செய்முறைகளை நம்பி இல்லை, அப்படி இருந்திருந்தாலும் இன்றைய கால கட்டத்தில் அப்படி இருக்க வேண்டிய அவசியமுமில்லை, குறிப்பாக விவசாயத் துறையில்.

You can do it, come up with some better idea of your own, without losing much of your native beauty, Selvam.

வவ்வால் said...

எங்கடா இன்னும் செல்வன் இந்த பக்கமா வரலையேனு பார்த்தேன் வந்தாச்சு ...

வால்மார்ட் போன்றவர்களின் சங்கிலி தொடர் கடைகள் மற்றும் நுகர்வு கலாச்சாரத்தால் விவசாயிக்கு தம்பிடி கூட பிரயோசனம் இருக்கதுனு செல்வனுக்கு தெரியாதா.

அப்புறமாக விரிவா பேசுறேன்!(ஆமாம் 50 சதவீதம் அழுகி போகுதுனு யாரு சொன்னங்க சார்)

Unknown said...

//வால்மார்ட் போன்றவர்களின் சங்கிலி தொடர் கடைகள் மற்றும் நுகர்வு கலாச்சாரத்தால் விவசாயிக்கு தம்பிடி கூட பிரயோசனம் இருக்கதுனு செல்வனுக்கு தெரியாதா.

அப்புறமாக விரிவா பேசுறேன்!(ஆமாம் 50 சதவீதம் அழுகி போகுதுனு யாரு சொன்னங்க சார்) //

About 30% of the fruits and vegetables grown in India (40 million tons amounting to US$ 13 billion) get wasted annually due to gaps in the cold chain such as poor infrastructure, insufficient cold storage capacity, unavailability of cold storages in close proximity to farms, poor transportation infrastructure, etc.

(Article published in IV International Conference on Managing Quality in Chains - The Integrated View on Fruits and Vegetables Quality )

http://www.actahort.org/members/showpdf?booknrarnr=712_100

Unknown said...

//ஆனால், விவசாயிகளிடம் உள்ள சிறு நிலங்களை பறித்துக் கொண்டு ஒரே ஆள் விவசாயத்தையும் செய்து உணவு ப்ரொcஎச்சிங், ப்ரெசெர்வடிஒன், அன்ட் பொட்ட்லிங் எல்லாவற்றையும் செய்து அவர்களின் கையயே எதிர் பார்த்து வாழும் நிலைக்குத் தள்ளப் படுவதையே இங்கு கேள்விக்கு உள்ளாக்குகிறேன்.//


வால்மார்ட் உலகின் எந்த நாட்டிலும் விவசாயம் செய்யவில்லை தெகா.வணிகம் தான் செய்கிறது.ஒரே ஆள் கையில் இத்தனையும் இருக்கும் நிலைமை உலகம் முழுக்க எந்த நாட்டிலும் கிடையாது.

//ஏன் அதே நீங்கள் கூறிய அடிப்படை கட்டமைப்பு, மேம்படுத்திய தொழிற் நுட்பம் போன்றவைகளை அரசாங்கமே முன்னின்று நடத்தி ஏன் பல நாடுகளுக்கு ஒரு முன்னுதாரனமாக இருக்கக் கூடாது.//

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத அரசாங்கம் வானம் ஏறி வைகுந்தம் போக முடியுமா?ரேஷன் கடையில் எடையை குறைத்து மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசு ஊழியர்களை வைத்துக்கொண்டு அடிப்படை கட்டமைப்பு, தொழில்நுட்பம் என்று பேசுவது சாத்தியமா?அத்தனை லட்சம் கோடி முதலீட்டுக்கு முதலில் நம்மிடம் காசு எங்கே இருக்கிறது?

நடக்க சாத்தியமுள்ளதை பேசுவதே பிரச்சனையை தீர்க்கும்.விளைபொருள் நஷ்டம், தொழில் நுட்பமின்மையால் விவசாயி தவிக்கும்போது அரசை நம்பி இருக்க சொன்னால் அவன் செத்தே போய்விடுவான்.

//எங்கே நம்மிடத்தே இருந்த 2000 வகை அரிசி இனங்கள் இன்று? பெண்களின் கர்ப்ப காலத்திற்கெனவே சாப்பிடுவதற்கென இருந்த ஒரு நெல் இனம் எங்கே இன்று?//

குறைந்த காலத்தில், அதிக மகசூல் தரும் நெல்வகைகள் நின்றன.மற்றவை மறைந்துவிட்டன.மட்டை அரிசியை சாப்பிட மக்கள் விரும்புவதில்லை.அதனால் அதை விவசாயிகள் அதிகம் பயிரிடுவதில்லை.நஷ்டம் வரும் பயிரை யார் தான் பயிரிட விரும்புவார்கள்?

வவ்வால் said...

தெ.கா,

நீங்கள் சொல்வது உண்மை தான் , எல்லாவற்ரையும் தாரவார்த்து கொடுத்து விட்டு கை ஏந்தும் நிலை தான் வரும்.

சரி சீனாவில் இருந்து 10 பில்லியன் அளவுக்கு பொருட்களை வாங்கும் வால்மார்ட்டுக்கு எத்தனை கடைகள் சீனாவில் உள்ளது என்று சொல்வாரா செல்வன்.

வால்மார்ட்டுக்கு உற்பத்தி பொருட்கள் வேண்டுமா வாங்கி கொண்டு போய் அமெரிக்காவில் விற்கட்டும் , தடை இல்லை , இங்கே வந்து கடை விரிக்க வேண்டாம் என்பது தானே இப்போது பேசுவது!

இந்தியா என்பது மிகவும் பிந்தங்கியோ இல்லை மிகவும் வளர்ந்தோ இல்லை, ஆனால் வளமான எதிர்காலம் உள்ள ஒரு சந்தை பொருளாதாரம் கொண்ட் நாடு எனவே நாம் சுயமாக செய்வது தான் எதிர்காலத்திற்கு நல்லது.

2000 வகை அரிசி வகை இருந்தது என்று சொன்னீர்கள் உண்மையில் மொத்தம் 2,00,000 வகைகல் இருந்தது ,அவை எல்லாம் எங்கே போயிற்று எல்லாம் உற்பத்தி , அதன் பலன் என்று ஒரே நோக்கோடு மோனோ கல்சர் என்ற விவசாயம் ஆகி விட்டது.விளைவு பல வகைகளும் வழக்கொழிந்து விட்டது. இதனால் பல்லுயிர் பெருக்கம்(bio diversity) பாதிக்கப்பட்டது , இயற்கை சமச்சீர் குலைந்தது.

ஒரு பயிரின் பல வகைகள் பயிரிடப்பட்டால் அதன் மீது தாக்கும் பூச்சிகள் , நோய்களும் குறைவாக இருக்கும், அதுவே ஒரே ஒரு வகை என பயிரிட்டால் ஒரு குறிப்பிட்ட பூச்சி, நோய் என மிக வலுவாக பரவி ,பலத்த சேதம் உண்டாக்கும், இது குறித்து பேசினால் பெரிதாக போய்விடும்!

இப்போது கூட அத்தகைய பயிரிடும் வழக்கொழிந்து போய் விட்ட பாரம்பரிய விதைகள் தேசிய விதை வங்கிகளில் நைட்ரஜன் மூலம் குளிரூட்டப்பட்ட பெட்டகங்களில் உறைவிக்கப்பட்டு சேமிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் முன்வந்து பயிரிட்டால் கொடுத்து உதவுவார்கள்!

Thekkikattan|தெகா said...

செல்வன்,

நீங்க சொல்ற லிங்க் எல்லாம் சங்கிலியால் கட்டி இணைப்பதற்கான முதற் கட்டம். நம்ம, நம்ம ஊர்க்காடுகளைப் பற்றியும், பொங்கள் விழா பற்றியும் தெரிந்தவங்கங்கிற முறையில எப்படி இந்த துறையை சார்ந்தவங்க of their own innovativeness have to come up with some plan, how we can meet our own needs plus the global demand of exportation of food products. Give me some of your own ideas rather than what we have read in the text book of others ideology.

The situation here is, we want to find our own ways to meet our own needs without damaging much of our pristine way of our farmers. Above all how we are going to face the water shortage, leaving behind the blaming games upon the govt helplesness etc.,
You are asking me where is the money, well, you have said in so many posts of yours that India is overspilling with surplus amount of money, and going to be a super power etc., I am sure, we are having such a kind of money.

If you can share your knowledge in this line; I love to hear of your own idea which is coming from your own brain cells.

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

2000 வகை அரிசி வகை இருந்தது என்று சொன்னீர்கள் உண்மையில் மொத்தம் 2,00,000 வகைகல் இருந்தது ,அவை எல்லாம் எங்கே போயிற்று எல்லாம் உற்பத்தி , அதன் பலன் என்று ஒரே நோக்கோடு மோனோ கல்சர் என்ற விவசாயம் ஆகி விட்டது.விளைவு பல வகைகளும் வழக்கொழிந்து விட்டது. இதனால் பல்லுயிர் பெருக்கம்(bio diversity) பாதிக்கப்பட்டது , இயற்கை சமச்சீர் குலைந்தது. //

ஒரு பயிரின் பல வகைகள் பயிரிடப்பட்டால் அதன் மீது தாக்கும் பூச்சிகள் , நோய்களும் குறைவாக இருக்கும், அதுவே ஒரே ஒரு வகை என பயிரிட்டால் ஒரு குறிப்பிட்ட பூச்சி, நோய் என மிக வலுவாக பரவி ,பலத்த சேதம் உண்டாக்கும், இது குறித்து பேசினால் பெரிதாக போய்விடும்! //

அருமையோ அருமை! இதன் மூலமாக எனக்கு இரண்டு விசயங்கள் தெரிய வருகிறது. 1) நீங்கள் உயிரியல் சார்ந்த விசயங்களை நிறைய படித்திருக்கிறீர்கள் என்பது 2) உங்களின் வாழ்வின் தத்துவம் பணம் மட்டுமே பிரதானம் கிடையாது, அதனை தாண்டியும் ஒரு பொறுப்புள்ள இயற்கையுணர்வு சார்ந்த உலக பிரஜையென்பதுவும் அது.

நீங்கள் பேசிய விசயங்களை ஒருவர் உள் வாங்காத வரையிலும் அவரிடம் எடுத்துச் சொல்லும் அத்துனை விசயங்களும் எங்குமே செல்லப் போவதில்லை. Inbreeding, Monoculture போன்றவைகள் எல்லாமே நீங்கள் கூறிய விளைவுகளையேத்தான் விட்டுச் செல்லும். இந்த பல்லுயிர் பெருக்கம் என்ற ஒரு கான்செப்ட்டே இயற்கையில் எதற்கு இருக்கிறது என்பது விளங்காமல் இருப்பதனால்தான் இது போன்ற அடிப்படை பொருளாதாரம் பேசுபவர்களுக்கு புரிய வைப்பதில் கொஞ்சம் கஷ்டம் ஏற்படுகிறது.

எப்படி இன்று வியபார உத்தியில் இந்த சங்கிலித் தொடர் கடைகள் பெரிய அளவில் வெற்றியடைந்ததோ அதனைப் போலவே இயற்கையில் Ecological Web என்ற ஒன்றும் இருக்கிறது அதுவும் இப்படியேத்தான் பல பரிணாமக்காலங்களையும் தாண்டி வெற்றியடைந்து வருவது. இதன் அழிவு பொருட்டு விளைவு ஐம்பது வருடங்களில் தெரிந்து கொள்ளாவிடினும், தெரிந்து கொள்ளும் பொழுது சொந்த வீட்டையே எரித்துக் கொண்டதற்கு சமமாக அதன் பின் விளைவுகள் இருக்கும். என்பதில் எந்த ஐயமுமில்லை.

இது தொடர்பாக இன்னும் வந்து எழுதுங்க, வவ்ஸ்.

Unknown said...

//The situation here is, we want to find our own ways to meet our own needs without damaging much of our pristine way of our farmers//

Our own way = re-inventing the wheel.

Pristine way of our farmers = traditional subsistence farming which leads them to disaster.

One cannot feed empty stoamches with attarctive slogans like "our own way" and "our own methods".

// Above all how we are going to face the water shortage, leaving behind the blaming games upon the govt helplesness etc.//

Govt helplessness is not a blaming game.It is a fact.Farmers who get paid after 2 years, farmers who get crop loan at harvesting season are living proof for this fact.

//You are asking me where is the money, well, you have said in so many posts of yours that India is overspilling with surplus amount of money, and going to be a super power etc., I am sure, we are having such a kind of money.//

Not even super power USA can duplicate the distribution, transportation and storage facilities of the private sector.Such is the scale of investment and technology needed in this sector.Government is not god.It cannot be anything and everything.

Lets be pragmatic theka.Lets talk about working solutions.Government suddenly becoming effecient and creating world class infrastructure is never going to happen.Let us be pragmatic and not idealistic.

Unknown said...

//சரி சீனாவில் இருந்து 10 பில்லியன் அளவுக்கு பொருட்களை வாங்கும் வால்மார்ட்டுக்கு எத்தனை கடைகள் சீனாவில் உள்ளது என்று சொல்வாரா செல்வன்//

66 கடைகள்.

அதுபோக ட்ரஸ்ட் மார்ட்டை வாங்கியதன் மூலம் மேலும் 70 கடைகள் சீனாவில் வால்மார்ட்டுக்கு உள்ளன.கடைசியாக கிடைத்த தகவலின்படி $18 பில்லியன் அளவுக்கு சீன பொருட்களை ஏற்றுமதி செய்து அங்குள்ள சிறுதொழில் மற்றும் விவசாயிகளை வாழ வைக்கிறது வால்மார்ட். வால்மார்ட் 20,000 சீன சிறு தொழில் நிறுவனங்களுடன் பார்ட்னர்ஷிப் வைத்துகொண்டுள்ளது.

இந்த நன்மைகள் எல்லாம் இந்தியாவுக்கும் கிடைக்கும்.சீனாவை விட திறமை வாய்ந்த சிறுதொழில் நிறுவனங்கள், ஆங்கிலம் தெரிந்த லேபர் ஃபோர்ஸ் ஆகியவை நம்மிடம் உள்ளன.இந்த வளர்ச்சியை நாம் ஏன் தடுக்க வேண்டும் வவ்வால்?

Thekkikattan|தெகா said...

மீண்டும் நாளைக்கு இந்த பறிமாற்றங்கள் தொடரும். சொந்தமாக சிந்திப்பதின் பொருட்டு. இரவல் வாங்கியதை ஓரத்தில் வைத்து விட்டு, சொந்தமாக யோசிப்பின் பொருட்டு. :-)

Unknown said...

தெகா,

சொந்த சிந்தனை, இரவல் சிந்தனை என்பதல்ல விஷயம்.அறிவுக்கும், கல்விக்கும் காலம், தேசம்,இடம், சொல்வது யார் என்பது போன்ற தடைகளே கிடையாது. "அடுத்தவன் சிந்தனை.அது எனக்கு வேண்டாம்" என்று சொல்லும் மனத்தடை நம் யாருக்கும் வரகூடாது.

எனது சொந்த சிந்தனையில் வரும் கருத்துக்கள் மற்றவரைப்பொறுத்தவரை இரவல் சிந்தனைதான். ஆக அவன் எனது சொந்த சிந்தனையை ஏற்றுகொள்ள மூடாது என்று அல்லவா ஆகிறது?அப்புறம் அறிவுப்பரவலும், ஞானத்தெளிவும் எப்படி நடக்கும்?

மேற்கின் தத்துவங்களை, கலைவடிவங்களை, தொழில்நுட்பங்களை, நூல்களை ஏற்க நாம் தயங்குவதில்லை.மேற்கத்திய சிந்தனை என்று ஒதுக்க துவங்கினால் நாம் சைக்காலஜி துவங்கி உலகின் அனைத்து விஞ்ஞான அறிவியல் துறைகளையும் ஒதுக்க வேண்டியிருக்கும்.

அறிவுப்பரவலுக்கு எந்த தீண்டாமையும், ஒவ்வாமையும் கிடையாது.சிறந்த கருத்தை ஏற்க நாம் என்றும் தயங்க வேண்டியதில்லை.அது யாருடையதாக இருந்தாலும் சரி

Thekkikattan|தெகா said...

செல்வன்,

அது போன்ற பொருளிலில் நானும் நினைத்துக் கூறவில்லை. நான் கூறவருவது, இது போன்ற இயற்கை சார்ந்த கூடாடலுடன் நாம் முனையும் ஒவ்வொரு விசயமும், மிகவும் ஆழ்ந்து யோசித்து நமது நாட்டிற்கும், வீட்டிற்கும் எது உகந்ததோ அதனைத்தான் பேணி பாதுகாக்க வேண்டுமென கூற வருகிறேன்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், வன உயிரியியல் ஆராய்ச்சில், ஒரு களப் பணிக்கென செய்முறை நாம் மேற்கத்திய ஆராய்ச்சியின் செய்முறைப்படி செய்யப்பட்டதை (Methodology) நமது மேற்கு மழைக்காடுகளில் அப்படியே கண்களை மூடிக் கொண்டு பயன்படுத்து விட முடியாது. நமது topographyக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். அது போலவே ஒரு திட்டம் இங்கு வெற்றியடைந்தது என்பதற்காக, 3000 வருடங்களாக பேணி பாதுகாத்து வந்த உயிரியல் பல்பெருக்கத்தினையும், நில வர்ஜினிட்டியையும் அப்படியே தாரை வார்த்து பணத்தினை பெருக்குவது மட்டுமே மூலதானம் என்ற ஒரு கம்பெனி CEOவின் சிந்தாந்தத்தின் படி செய்து விட முடியுமா?

இது ஒரு அவசர கால சிகிச்சையைப் போல வேண்டுமானல் இன்று உதவி விடலாம், ஆனால் தொடர்ந்து சூரையாடப் படும் இயற்கை கற்பழிப்பு எத்துனை நாட்களுக்கு ஒரு sustainable dependency இல்லாமல் நிகழ்த்தி, இருந்ததை அப்படியே மண்ணின் மணம் சீர்கெடாது(ரொம்பவுமே) கொடுத்து விட்டுச் செல்வது என்பதனைப் பொருத்துத் தான் நான் "நம் நாட்டிற்கென உள்ள சுய சிந்தனை"யைக் கொஞ்சம் நாமும் தட்டி வெளிக்கொணர்வோம் என்றேன்.

மற்றபடி நான் எப்பொழுதும் அறிவுத் தேக்கத்திற்கு இடமளிப்பது கிடையாது. ஒபன் டூ ஆல்.

என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிகிறதா? A little note here, have you chanced to read "the Hinduism and Ecology" in which there are so many ways explained how we have been sustained for so long with the soil without altering it, without the aid of alien technology (it has not been interrupted at any chance before 300 years).

I have not pointed out at you directly by asking you to tap on of our ancient wisdom.

வவ்வால் said...

தெ.கா.

ஆனாலும் இதெல்லாம் ரொம்ப ஓவருங்க! எங்கே நான் திசை திருப்பிட்டேனு சொல்லிடுவிங்களோனு பார்த்தேன். ஏன் எனில் நமது நில வளம், இயற்கை , என்பது பொருளாதாரத்தின் அடிப்ப்டை என்பதை பலரும் பார்க்காமல், பொருளாதாரம் என்பது ஒரு தனிப்பட்ட ஒரு அம்சமாகவே பார்க்கிறார்கள் அதை தான் நீங்களும் சொல்லியுள்ளீர்கள்.

கண்டிப்பாக இது குறித்தேல்லாம் பேசுவோம் ,சந்தர்ப்பம் வாய்க்கட்டும்.

வவ்வால் said...

செல்வன்!

வால்மார்ட் சீனாவுக்கு எப்படி போனது, ஹாங்காங் ஆரம்பத்தில் இங்கிலாந்தின் கீழ் இருந்த போது ஆரம்பித்தது ,பின்னர் சினாவின் கைக்கு போனது ,அப்போது ஏற்பட்ட ஒப்பந்தம் தான் வால்மார்ட் அங்கே இருக்க காரணம். மேலும் நேரடியாக சீனாவிற்குள் போனது 2005 இல் தான். இன்னும் அது முழு வீச்சில் வளரவில்லை அங்கே , ஆனாலும் கடையை விரித்து விட்டார்கள். அதன் விளைவுகள் பின்னர் தான் தெரிய வரும்.

சரி வால்மார்ட் வரவில்லை எனில் இந்தியாவில் எவனுக்கும் அரிசி பருப்பு கிடைக்காமல் போய்விடுமா?

பெருவணிகர்கள் எப்படி எல்லாம் அரசை வற்புறுத்தி தங்களுக்கு சாதகமாக செயல் படுவார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் , அயோடின் கலந்த உப்பை தவிர சாதாரண உப்பு விற்க போடப்பட்ட தடையை சொல்லலாம்.

எல்லோருக்குமே அயோடின் குறைபாடு இருக்கும் என்று சொல்ல முடியாது, சில இடங்களில் நீரில் கூட அயோடின், ஃப்ளோரின் அதிகம் இருப்பதால் மக்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். அயோடின் அதிகம் ஆனாலும் பிரச்சினை தரும் அப்படி இருக்கும் போது பொத்தாம் பொதுவாக அயோடின் கலந்த உப்பை தான் விற்க வேண்டும் என சட்டம் போடுவது ஏன். பெரிய நிறுவனங்களின் பிராண்ட்டட் உப்பு அதிகம் விற்பதில்லை , அதனை அதிகரிக்க அவர்கள் செய்த தந்திரம் தான் இது!

இது போன்ற பல விளைவுகளையும் வால்மார்ட் போன்ற அசுர சக்தி கொண்ட விறபனை குழுமங்களால் செய்ய முடியும்!

மரபணு மாற்றப்பட்ட மக்கா சோளம் , கோதுமை , தானியங்கள் பயன்படுத்த உலகளாவிய எதிர்ப்பு உள்ளது , ஆனால் பதப்படுத்தப்பட்ட புட்டிகளில் அடைக்கப்பட்ட உணவுகளில் அவைப்பயன்படுத்த படவில்லை என வால் மார்ட் போன்றவை உத்திரவாதம் அளிப்பதில்லை என அமெரிக்காவிலேயே சர்ச்சை எழுந்தது. அதற்கு வால்மார்ட் உரிய பதிலை இன்று வரை அளிக்கவில்லை.

நுகர்வோர் சட்டம் கடுமையாக உள்ள நாட்டிலேயே இப்படி நடந்து கொள்ளும் வால்மார்ட் இந்தியாவில் என்ன செய்யும் , நம்மை ஒரு குப்பை கூடையாக பாவித்து கண்டதையும் கொட்டும் , நாமும் மடத்தனமாக சர்வதேச படைப்பு என்று நாக்கை சப்ப்ய்கொட்டி சாப்பிடுவோம்!

வால்மார்ட் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தானியங்களை பயன்படுத்தவில்லை என உங்களால் உறுதியாக கூற முடியுமா செல்வன்?

Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

இப்படி வந்து ஆளும் பேருமா கலந்துகிட்டால்ல தெரிஞ்சும் தெரியாம இருக்கிறத தெரிஞ்சுக்கலாம்.

ஆமா, வவ்வா உங்க ஈமெயில் ஐ.டி கொஞ்சம் தரமுடியுமா? இங்கே ஒரு மின்னஞ்சல் தட்டி விடுங்க சொல்றேன்... karthikprab@gmail.com

சிவபாலன் said...

செல்வன், தெகா, வவ்வால் போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில் என்னுடைய கருத்தை பதிவு செய்து கொள்கிறேன்.

வால்மார்ட்க்கு முன் வால்மார்ட்க்கு பின்.

வா.மு: அதாவது இங்கே HORLICKS நிறுவனம் நம்து சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலங்களில் தனக்கு தேவையான மூலப்பொருள்களை விளைவித்துகொள்ள்கிறது. இது அனைவரும் அறிவர். இது சுமார் 20 வருடங்களுக்கு மேலாக நடந்துகொண்டிருக்கிறது. சரி, தற்பொழுது அந்த விவாசாயிகளின் நிலை மற்றும் அவர்களின் நிலங்களின் வளங்கள் எவ்வாறு உள்ளது. அப்படி ஒன்றும் ஓகோ ஆகா என்று இல்லை.

நிலங்களின் வளங்கள் குறைந்து உள்ளது. HORLICKS நிறுவனம் சொல்லும் அனைத்தையும் செய்ய வேண்டும். இதனால் அவர்கள் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்துகள் இலாபத்தை நோக்கிமட்டும்.

சரி, இதற்கும் வால்மார்ட்டுக்கும் என்ன சம்பந்தம். HORLICKS போன்ற நிறுவனங்கள் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனும் போது வால்மார்ட் சொல்ல வேண்டியதே இல்லை.

அந்த விவசாயிகளால் இப்போதும் வேறு எதும் செய்ய முடியவில்லை. புத்திசாலித்தனமாக பல பேர் இதில் போய் விழவில்லை. அதனால் பல நிலங்கள் காப்பட்டப் பட்டிருக்கிறது.

வால்மார்ட் ஒன்றும் இந்திய விவசாயிகளின் வாழ்வை முன்னேற்ற வேண்டும் என்று சொல்லி இந்தியா வரவில்லை. லாபம் மட்டுமே நோக்கம்! அதனால் நல்ல வளங்கள் உள்ள நிலங்கள் மட்டுமே அவர்கள் எடுத்து கையாளுவார்கள். அப்படிப் பட்ட நிலங்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு எண்ணவாகும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

சரி, வா.பின்: செல்வன் அவர்கள் சொல்லுவது போல், சில விவாசாயிகளின் நலங்கள் வளரும் எனும் போது சரி முயற்சி செய்து பார்க்கலாம் என்று எண்ணத் தோன்றும் ஆனால், அதுவே முழு ஆளுமை எனும் போது இது கிட்டத்தட்ட தற்கொலை முயற்சிதான்.

தற்பொழுது கரும்பு, நெல் போன்றவற்றிக்கு அந்த காலத்திற்கேற்ப அரசாங்கம் விலை நிர்ணயம் செய்கிறது. இதெல்லாம் வால்மார்டிட்டம் வேலை செய்யாது. அவனுடைய ஆளுமைக்கு கிழே உள்ள நிலங்கள் எல்லாம் அவன் வைத்ததுதான் சட்டம்.

சரி, குளிர்சாதன வசதி எப்படி சாத்தியப்படும். அரசாங்கம் பண உதவியுடன் விவாசாயிகளே கையாளும் பல விசயங்கள் பெரிதள்வு இந்தியாவில் வெற்றி அடைந்துதான் இருக்கிறது. சரி, குளிர்சாதன வசதிக்கு பணம் பெருமளவு தேவை. என்ன செய்யலாம்.

நிச்சயம் பல வழிகள் உண்டு. புது வரிகள் அல்லது உலக வங்கி கடன் போன்றவைதான். ஏனென்றால், இன்று இந்தியா முழுவதும் சாலை வசதி பெருமளவு மேம்பட்டிருக்கிறது. அதாவது தேசிய நெடுஞ்சாலைகள். இவைகளை செய்ய நாம் எந்த தனியாரையும் நம்பவில்லை. அது போல் தான் இதுவும்.

தனியார் கூடாது என்பதல்ல வாதம், நம் உயிர் நாடியில் கை வைப்பது தற்கொலைக்கு சமம் என்பதுதான் வாதம்.

WALMART - SLOW POISON அவ்வளவே!


நன்றி

Thekkikattan|தெகா said...

செல்வன்,

//குறைந்த காலத்தில், அதிக மகசூல் தரும் நெல்வகைகள் நின்றன.மற்றவை மறைந்துவிட்டன.//

சரி நீங்கள் கூற வருவது, செலக்டிவ் ப்ரீடிங், இதன் பொருட்டு எது 60 நாட்களுக்கு ஒரு முறை அறுவடைக்கு ரெடியாகிறதோ அதனையே ஸ்டாம்ப் அடிப்பது போல் அந்த புவிப் பரப்பு முழுதுமே பயிரிடப் பட்டு ஜனத்தொகையை பரப்புவோம் என்ற புரிதலின் கோட்பாட்டின் படி சரியா.

இப்பொழுது இந்தக் காட்சியை சிறிது வனத்தினுள் நகர்த்துவோம். அங்கு என்னாகிறது இப்படியே இயற்கை(நம்மைப் போலவே-புத்திச்சாலித்தனமாக) "செலக்டிவ் ப்ரீடிங்" பண்ண ஆரம்பித்தால் ஒரே ஒரு உயிரினத்தை மட்டும் அவ் இயற்கையே காதலிக்கும் பொருட்டு (உதாரணமாக புலி அழகாக இருக்கிறது என). இப்பொழுது ஒரு வனத்தில் புலியையும் படைத்து அவைகளுக்கு நன்கு கேட்டு உணரக்கூடிய புலன்களையும், கால் பாதங்களில் மிருதுவான பஞ்சடைத்ததைப் போன்ற padயையும் கொடுத்து, ஒளிந்து மறைந்து அதற்கு இறையாகும் ஒரு மானையும் கொடுத்து இருந்துகொண்டிருக்கிறது அவ்வனம்.

இப்பொழுது அந்த மானோ அதனை விட விரைவாக ஓடவும், நன்கு கவனித்து பிறகு இரை உட்கொள்ளும் பழக்கத்தையும் கொடுத்து தப்பிப் பிழைப்பதற்கென ஒரு தகவமைப்யையும் கொடுத்திருக்கிறது. இந்த பின்புலத்தில் அங்கு என்ன நடக்கிறது, அங்கு இயற்கை என்ன விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது. இதுவே அவ் இயற்கை அந்தப் புலியை அதீதமாக காதலிக்கும் பொருட்டு சுலபமாக மான்களின் இனபெருக்கத்தை முடிக்கியும், சும்மா மான்கள் எல்லாம் லபக், லபக்கென்று படுத்துக் கிடப்பதை பிடித்து உண்பதனைப் போலவும் படைக்கவில்லையே ஏன்? அப்படி "செலக்டிவ் சாய்ஸ்" இயற்கை நிகழ்த்தியிருந்தால் என்னவாகும்? கொஞ்சம் யோசித்தால் அங்கே இயற்கையின் Prey-Predator relationship and Carrying Capacity at play என்பது விளங்க வரும். அது எதற்காக என்பதுவும் விளங்க வரும்.

இப் பொழுது நாம் முரட்டுத் தனமாக அந்த இயற்கையே விரும்பாத ஒரு செயலில் இறங்கி அந்த carrying capacity என்ற அமைப்பை எல்லாம் உடைத்து செய்வதெல்லாம் இன்னும் நிறைய வியாதிகளை தருவித்துக் கொண்டதுடன், பரிணாம சமச் சீராற்ற நிலையும் தான். இது எங்கு எடுத்துச் செல்லும் என தெரியாமலேயே கால்குலேட்டாரும், பென்சிலுமாக அமர்ந்து கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

//மட்டை அரிசியை சாப்பிட மக்கள் விரும்புவதில்லை.அதனால் அதை விவசாயிகள் அதிகம் பயிரிடுவதில்லை.நஷ்டம் வரும் பயிரை யார் தான் பயிரிட விரும்புவார்கள்?//

நான் பேசுவது மட்டை அரிசி (முரட்டுக் காளை) ரகத்தை மட்டுமல்ல.

அதனால் ஒரு சில மாதங்கள் சேர்த்து எடுத்துக் கொள்கிறது அந்த நெல் பயிரின் பயனை அனுபவிக்க என்று, அதன் மருத்துவப் பயனைக் கூட கருத்தில் கொள்ளாமல் உரங்களைப் போட்டு 60 நாட்களில் மண்ணில் கொஞ்சம், நம் உடம்பில் கொஞ்சம் என்று அந்த உரங்கலை உணவின் ஊடாக தின்று வாழ்ந்து விட்டால் வரக்கூடாத, வளரக் கூடாத விகிதத்தில் கட்டி வளரும் பொழுது அடித்துக் கொள்வதில் என்ன இருக்கிறது.

இதில் எது சமயோசிதப் புத்தி? ஒன்று சொல்லுங்கள் எனக்கு விளங்கவில்லை, ஏன் இன்று மேற்கத்திய நாடுகளில் ஆர்கானிக் காயகறிகளும், உணவு வகைகளும் மிகவும் பிரபலமடைகிறது, அதிக விலை கொடுத்தேனும் வாங்கிச் சாப்பிட வேண்டுமென, பெரிய பணக்காரர்களும், ஹாலிவுட் நடிகர்களும் முன் வருகிறார்கள்? அதே ஆர்கானிக் உணவு வகைகள்தானே ஒரு காலத்தில் ஒரு சராசரி இந்தியா குடும்பம் சாப்பிட்டு வந்தது. ஆனால், இன்று நிலைமை இப்படி ஆகி இருக்கிறதெ அது ஏன், செல்வன்.

கிரி said...

நிறைய விஷயம் இருக்கும். இருங்க மெதுவா படித்து விட்டு பின்னூட்டம் திரும்ப போடுறேன். :-)

கிரி said...

தெகா.

முதலில் ஒன்றை கூறி விடுகிறேன். எனக்கு இதனுடைய தாக்கம் எப்படி இருக்கும் என்று தெரியாததாலும், பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று சரியாக யூகிக்க முடியாததாலும் என்னால் சரியாக கருத்து கூற முடியவில்லை. மன்னிக்க. என் மனதில் இது பற்றி தோன்றிய என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.

முதலில் நான் கூற வருவது தற்போது நம் ஊரில் இருக்கும் கொழும்பு ஸ்டோர்,நெல்லை ஸ்டோர், அண்ணாச்சி கடை என்று இதை போன்ற கடைகளை பற்றி. இவர்களும் ரிலையன்ஸ் கடைகளை போன்றவர்களே, எப்படி என்றால் இவர்கள் தங்களின் விற்பனை திறமையால் மக்களை கவர்ந்து விற்பனையை கூட்டி அதிக லாபங்களை எடுக்கின்றனர், ஆனால் கிடைத்த லாபத்தில் கடைக்கு வருபவர்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுக்காமல் புதிய கிளைகளை ஒவ்வொரு தெருவிலும் திறந்து தங்களின் விற்பனையை உயர்த்தி லாபத்தை சம்பாதிக்கிறார்கள். இவர்களினால் இவர்களை விட சிறு வியாபாரிகள் இவர்களுடன் போட்டி போட முடியாமல் துவண்டு போய் விடுகிறார்கள். சொல்ல போனால் இவர்களும் அறிவிக்கப்படாத ரிலையன்ஸ் நிறுவங்களை போன்றவர்களே.

ரிலையன்ஸ் நிறுவனமாவது தன் வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகளை செய்து கொடுக்கிறது, மற்றும் பல எளிதான நடைமுறைகளை கொண்டு செல்கிறது. ஆனால் இவர்கள் எந்த வசதியும் வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்காமல், தங்கள் வளர்ச்சியை அதிகரித்து கொண்டு இருக்கிறார்கள்.

நிற்க

ரிலையன்ஸ் நிறுவனம் தானே பயிரிட்டு, காய் கறிகளை உற்பத்தி செய்து (தற்போது விவசாயிகளிடம் கொள்முதல் செய்கிறது) கொள்ளும் போது, நீங்கள் கூறுவது போல் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் தங்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய நுகர்வோர்கள் கிடைக்காததால் பெரும் பாதிப்பு அவர்களுக்கு தான் மொத்த நுகர்வோர்களையும் அவர்களே கவர்ந்து விடுவதால். எனவே இவ்வகை கடைகளினால் பாதிப்புக்கள் அதிகம் இருந்தாலும் நன்மைகளும் உண்டு.

ஆனால் இதை போன்ற கடைகளே இனிமேல் வரும், மக்களும் இதற்கே ஆதரவு தருவார்கள். ஏனென்றால் மக்கள் மேலை நாட்டு கலாச்சாரங்களை பார்த்து மற்றும் அதன் சொகுசு பகட்டில் மயங்கி இருக்கிறார்கள், நாம் உட்பட. எனவே இந்த மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்றே.

ஆனால் இதனால் ஒன்று நடந்து இருக்கிறது கவனித்தீர்களா? ஓட்ட கடையாகவும், அழுக்கு படிந்த பொருட்களாகவும், புன்முறுவலுடன் வரவேற்காதவர்களும், எந்த வசதியையுமே வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்கதவர்களும் மாறி இருக்கிறார்கள். தற்போது கடைகள் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன. வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. இவை அனைத்தும் தனக்கு வரும் போட்டியாளர்களிடம் இருந்து சமாளிக்கவே ஆகும். போட்டி இருந்தால் மட்டுமே தரத்தை எதிர்ப்பார்க்க முடியும். ஆனால் அது ரிலையன்ஸ் போன்ற யானையாக இருப்பது தான் பிரச்சனை. மாற்றங்கள் தவிர்க்க முடியாது.

அன்புடன்
கிரி

ஜோதிஜி said...

அடேங்கப்பா....... எவ்வளவு உருப்படியான விமர்சன விவாதங்கள்?

Related Posts with Thumbnails