Tuesday, January 12, 2010

காதலர்களா? தியாகிகளா?

சில சமூகம் சார்ந்த பொது நிகழ்ச்சிகளை பார்க்கவோ, படிக்கவோ நேர்ந்தால் அதனையொட்டி மனத்தினுள் எழும் எண்ணங்களுக்கு ஒரு வாய்ச் சல்லடை போட்டு அவ்வளவு எளிதில் பூட்டி வைத்து விட முடிவதில்லை. வெளிப் புறத்தில் பூட்டியே வைத்திருந்தாலும், மனசின் ஓரத்தில் எங்கோ சுவர்க்கோழியின் மண்டையை குடையும் ரீங்காரமாக ஆராவாரித்துக் கொண்டே மண்டை கனத்துத்தான் விடுகிறது.

அப்படியாக நேற்று இரவு ஒரு நிகழ்ச்சிக் காணக் கிடைத்தது. அந்த நிகழ்ச்சி நம் சமூகத்தினூடான காதல் மணங்கள்(!?) சந்திக்கும் கூறுகளை சம்பந்தப்பட்டவர்களைக் கொண்டே பேச விட்டு ட்டி.வி பெட்டிக்கு முன்னால் அமர்ந்து பார்க்கும் நம்மை போன்றவர்களுக்கு இன்னொரு மணி நேரக் கடத்தலுக்கு தேவையான மிளகாய், காரம், உப்பு எல்லாம் போட்டு கொடுத்ததாக எடுத்துக் கொண்டு பார்த்தும் முடித்திருப்போம்.

இது போன்ற நிகழ்ச்சிகள் எது போன்ற சிந்தனைகளை பார்ப்பவரிடத்தில் கிளர்த்தி விடுகிறது? உண்மையிலேயே நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தி, மூர்க்கமாக ஓடித் திரியும் மனத்திற்கு ஒரு மூக்கணாங்கயிறு போட்டு விட்டால் அந்த ஒரு மணி நேர காணொளி எத்தனை ஆழத்திற்கு சென்று ஒரு மனிதனின் கோணலான பார்வையை சற்றே தளர்த்தி, மிச்சமிருக்கும் வாழ்க்கைக்கும் பயன் உள்ளதாய் அமைத்து விடக்கூடும்.

சரி, அப்படி என்னதான் பெரிசா அந்த நிகழ்ச்சி பேசினிச்சுன்னு கேக்குறீங்களா. அது ஒண்ணுமில்ல காதல் மணங்களைப் பற்றியும், அது பல விதமான சமூக இறுக்கங்களால் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றியும் பேசியது.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு வாலண்டைன்ஸ் டே சமயத்தின் போது, நான் எழுதிய "ஏன் நடிக்கணும்" என்ற கட்டுரைக்கு ஒரு இறுதி பாகமாகக் கூட அமையட்டுமேன்னு, எனக்குள் எழுந்த சில கேள்விகளையும் இணைச்சு ஒரு கட்டுரையா வைச்சிடுறேன். அந்தப் பதிவில் எது போன்ற காரணிகள் எல்லாம் நம் சமூகத்தில் காதல் மணங்களை நிர்ணயிக்கின்றன, வளர்ப்பும், தனி மனித எண்ண ஓட்டம், காதலிப்பதற்கான அடிப்படைத் தகுதிகள் என்னன்ன என்ற ரீதியில் பேசியிருக்கும்.

நம் சமூகத்தின் இறுக்கம், நேசித்து, ஒரு மனிதரை நன்கு புரிந்து வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ளும் ஒரு நிலையை ஒரு தீண்டத் தகாத செயலாக, வெட்கி தலை குனியும் ஒரு சம்பவமாக எடுத்துக் கொள்ளும் துரதிருஷ்ட நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறது. அதனுடைய முரண் நகை என்னவென்றால் அது போன்ற உறவு தளத்தின் அடிப்படையில் தொடங்க வேண்டிய விசயம் தான் திருமணங்கள். ஆனால், இதற்கு குறுக்காக நிற்பது அடிப்படையில் பல சமூக கட்டமைப்புகளே என்றாலும், அவைகளையே தலையில் பாரமாக கருதிக் கொண்டு தூக்கிச் சுமந்தலைவதற்கு யார் காரணம். தனி மனித மனங்களேன்றி வேறு யார்? ஏன் இது போன்ற ஸ்டாம்புகள், வேறு எது போன்ற சுயம்பு சிந்தனைகளுமே அற்ற நிலையில், யாரோ போட்ட சுகமான சாலையிலேயே பயணிக்க வேண்டுமென்ற நிர்பந்தத்தில் இட்டு வைத்ததாக எடுத்துக் கொள்கிறது? இங்கும், தனி மனித கேள்விகளற்ற, சுய வளர்ச்சிக்கான உழைப்பற்ற, ரெடி மேட் வாழ்க்கை தேர்ந்தெடுப்பே காரணமேயன்றி வேறு யாரையும் குற்றம் சொல்வதற்கில்லை.

அப்படியாக தன்னைச் சுற்றி அமைத்துக் கொண்ட சுகமான ஒரு உலகத்தில் மூழ்கி கிறங்கிப் போய், உப்பிக் கிடக்கும் நிலையில், ஒரு சில சேலஞ்ச்களை வாழ்க்கை தன் முன்னே விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வைத்து திணிக்கும் பட்சத்தில், மாற்றுச் சிந்தனைக்கான இயக்கத்தை தொடங்கி வைத்து விடுகிறது (அது தனது 60 வயதிலே கூட நடக்கலாம்), அது வரையிலும் தன்னுள் நடந்த அத்தனை சுய விசாரிப்புகளும் குணாதிசயமான தன் நடைமுறை எண்ணங்களாக பீறிட்டு வெளிக் கிளம்புகின்றன.

அந்த நிலையிலும் கூட ஒரு தனி மனித நிலையில் தனது மகனுக்கு/ளுக்கு பிடித்ததெல்லாம் கேட்டு, பார்த்து பார்த்து செய்து வைத்தவர்கள், அதே பிள்ளைகள் நன்கு விபரமறிந்து தனக்கென முடிவெடுக்கும் ஒரு திறனும் கிட்டிய பிறகும், தனக்கென பிடித்த ஒருவரை முன் கொண்டு வந்து நிறுத்தும் பொழுது, சமூக இறுக்கங்களுக்கென தன்னை பலிகடாய் ஆக்கி தான் நேசித்தவர்களையே வெறுத்து ஒதுக்கும் நிலைக்குத் தள்ளப்பட விடுவது எத்தனை முதிர்ச்சியற்ற ஒரு வளர்ச்சி :). இங்கே என்ன வசதியாக மறந்து போய் விடுகிறோமென்றால், குட்டிக் கரணம் அடித்தாவது தனது குடும்பத்தை தூக்கி நிறுத்துவதற்காக தனது வாழ் நாளை செலவு செய்து, எந்த விதமான தன் சார்ந்த குலத்தின் பங்களிப்புமில்லாமல் வாழ்ந்த ஒருவர், பின்பொரு நாளில் தன் சார்பற்ற அந்தக் குலத்திற்காக தன் நேசித்த பிள்ளைகளையே வஞ்சிப்பதனைத்தான். அது ஒரு நிலை என்றால்....

இத்தனை தனி மனித இறுக்கம் சார்ந்த சமூக தேக்க நிலையைத் தாண்டி மண முடித்துக் கொள்ளும் நபர்கள், அதே சமூக தேக்க நிலையில் தன்னை உட்படுத்திக் கொள்ள நேர்வது, எதனையெல்லாம் எதிர்த்து நின்று செய்தார்களோ அப்படியாக செய்ததே தவறு என்கிற ரீதியில் சரணாகதி ஆகிப் போவதுதான் கொடுமையின் உச்சம். அந்த நிகழ்ச்சியில், பலர் மதம் விட்டு, சாதி விட்டு மணம் புரிந்து கொண்டவர்கள் ஏதோ ஒரு புள்ளியில் ஒரு பக்கமாக கணவனின்/மனைவின் பக்கம் சார்ந்த மதத்திற்கோ அல்லது சாதியினையோ சார்ந்து, தன் உண்மையான இயல்பு இழந்து, பெயரிழந்து யாருக்காகவோ வாழ்வதனைப் போன்ற ஒரு 'தியாக' நிலையில் வாழ்வதாக புரெஜெக்ட் பண்ணப்பட்டது நெருடலாக இருந்தது.

அப்படியாக தியாக நிலையில் வாழ்வதில் அதனைப் பெற்றுக் கொள்பவருக்கு வேண்டுமானால் பயனளிப்பதாக இருக்குமே ஒழிய கண்டிப்பாக, ஒரு காலமும் அது எதிர் தரப்பினருக்கு நாம் வழங்கிய நியாயமாக போய்விடவே முடியாது. பரஸ்பரமாக இருவரும் பாதிவழியில் வந்து சந்தித்துக் கொண்டு இருவருக்குமே எதெல்லாம் இணக்கமாக, மனதிற்கு சுமையில்லாமல் இருக்கக் கூடிய வகையில் அமைத்துக் கொள்ள முடியாத ஒரு வாழ்க்கையில் எப்படி காதலும், நேசமும் இருக்க முடியும்? முதலில் அந்த தனிமனித விருப்புகளை பூர்த்திக்க தெரிந்த மனதுதானே நேசிப்பு நிலைக்கு உறவை நகர்த்தி ஒரு நல்ல நண்பர்கள் நிலையில் வைத்துக் கொள்ள சாத்தியப்படுத்தும். அதனைத் தவிர்த்து, மீண்டும் சமூகம் நமது குழந்தைகளை வஞ்சித்து விடக் கூடாதே என்ற காரணத்தினாலோ அல்லது வாழ் நாள் முழுதும் நாம் ஒரு வெளியாளாக என் சமூகத்தால் கருதப்பட்டு விடுவோமோ என்ற சுமையை சுமந்து கொண்டு ஒருவரை மட்டும் பலிகடாய் ஆக்கி அவ்வாறு ஆக்கிக் கொள்வதில் 'காதல்' எப்படி அங்கே இருக்க முடியும்?

மற்றுமொரு கேள்வி, காதலும், நேசிப்பும் நெத்தியில் பொட்டு/பட்டை போட்டுருக்காங்களா, நம்ம டயலக்ட் பேசுறாங்களா, செவப்பு/கருப்புத் தோலா அப்புறம் என்ன சாதி, மதம் அப்படின்னு பார்த்துக்கிட்டு வந்ததுச்சுனா, அது உண்மையான மனசு சம்பந்தப் பட்ட நேசிப்பா இல்ல கணக்குப் போட்டு சேர்ந்ததா? எனக்கும் மதம், இனம், மொழி அப்பாற்பாட்டு ஒரு காதல் வந்துச்சு. அதில எந்த நிர்பந்தமுமில்லை. எதனையும் யாரும் எவருக்காகவும் மாற்றிக்கவும் தேவைப்படலை. ஆனால், அதுவும் கொஞ்ச நாட்களில் ஆட்டம் கண்டு உதிர்ந்து போனது; அதுவும் தனிமனித பழக்க வழக்கங்களின்பாற் (attitude) பட்டு, ஆனால், என்னுடைய பையனுக்கு இது வரையிலும் எது போன்ற அடையாளங்களையும் சிலுவை ஏற்ற வேண்டுமென்ற இக்கட்டில் இன்றளவும் என் நிலையில் இல்லை. சுய சிந்தனை உடையவனாகவும், நிதர்சனத்தை சந்திக்க தயாரனவானகவும் வாழக் கூடிய சாத்தியங்களை அவனைச் சுற்றிலும் அமைத்துக் கொடுத்து விட்டால், யாரும் யாருக்காகவும் சமரசம் செய்து கொண்டு, தியாகியாக (ஒரு பக்கமாக) வாழ்ந்து முடிக்க வேண்டிய கட்டாயமிருக்காது.

என்ன ஒன்னு தெரியுதுன்னா, நம்மூர் காதல் மணங்களில் டூ மச் சினிமா செண்டிமெண்ட் பெருக்கெடுத்து ஓடுது. தியாகியா வாழ ஆரம்பிச்சா அது ஒரு சாயம் மாதிரி கொஞ்சம் கொஞ்சமா நிறமிழந்து கடைசியில சுய கழிவிரக்கம் பெருக்கெடுத்து ஓடி பின்னாடி தன்னையே ஒரு லூசரா மனசு அங்கீகரிக்க ஆரம்பிச்சுடும். பாவம்யா!

22 comments:

வெடிகட்டி said...

அடுத்த சரவெடி ரெடியாகிடுச்சா?????????

Venkat said...

ரொம்ப சரி. தூங்குபவர்களை எழுப்பி விடலாம் தூங்குவதுபோல் நடிபவர்களை எழுப்ப முடியாது.
ஜாதியினால் கவுரவத்தை விட்டு கொடுக்க தயாரா இல்லை... மத்தவங்க உணர்சிகளை மதிக்க மனசும் இல்லை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தெளிதல் சார்ந்தா :)

அய்யா தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கறதுங்கறது இதானா.. ( அவ்வை சண்முகில வரமாத்ரீ)

அல்ரெடி பெண்கள் பொதுவா தங்கள் வீட்டு பழக்கங்களை எல்லாம் விட்டுட்டு த்தான் வராங்க அரேஜ்டு ஜோசிய மேரேஜ்களிலேயே.. அதனால் காதல்கல்யாணத்தில் தியாகமெல்லாம் அவர்களுக்கு ஆரம்பத்தில் பெரிசா பிரச்சனை இருக்காது.. பின்னால் தெளிஞ்சுட்டாங்கன்னா .. ப்ரச்சனை தான்.. :)

உனக்காக தியாகியானேன் மட்டும் புதுசு மத்தபடி உன்னக்கட்டி என்ன சுகம் பல்லவிகள்.

ஆனா ஆண்கள் முஸ்லீம் மதப்பெண்ணைக் கட்ட நேரும் போது சிலசமயம் மதமெல்லாம் விட்டு போறதா கேள்விப்பட்டிருக்கேன்.. மத்தபடி சதவீதம் குறைவு தான் ..

இப்ப என்ன ? முதல்லயே பத்திரத்தில் நான் இவ்வள்வு விட்டுக்கொடுப்பேன் நீ இவ்வளவு விட்டுக்கொடுன்னு சமமா டீல் பேசிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டா சரியாகிடுமா?

Raji said...

Muthulakshmi...ethukku % kanakkil vittu kodukkanum. Appadiye entha vittikoduthalum illaamal ethukkalaame.
Valiappathu allathi valanchu koduppathu...ithu rendu thaan namma ooril theriyum.
:(

Radhakrishnan said...

//சில சமூகம் சார்ந்த பொது நிகழ்ச்சிகளை பார்க்கவோ, படிக்கவோ நேர்ந்தால் அதனையொட்டி மனத்தினுள் எழும் எண்ணங்களுக்கு ஒரு வாய்ச் சல்லடை போட்டு அவ்வளவு எளிதில் பூட்டி வைத்து விட முடிவதில்லை.//

பேசித் தீர்த்துக்கிட்டா பிரச்சினையே இல்லைனு மனசு கணக்குப் போடுமோ?!

//நம் சமூகத்தின் இறுக்கம், நேசித்து, ஒரு மனிதரை நன்கு புரிந்து வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ளும் ஒரு நிலையை ஒரு தீண்டத் தகாத செயலாக, வெட்கி தலை குனியும் ஒரு சம்பவமாக எடுத்துக் கொள்ளும் துரதிருஷ்ட நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறது. //

முன்னெச்சரிக்கை, பாதுகாப்புணர்வு காரணம்.

//அதே பிள்ளைகள் நன்கு விபரமறிந்து தனக்கென முடிவெடுக்கும் ஒரு திறனும் கிட்டிய பிறகும், தனக்கென பிடித்த ஒருவரை முன் கொண்டு வந்து நிறுத்தும் பொழுது, சமூக இறுக்கங்களுக்கென தன்னை பலிகடாய் ஆக்கி தான் நேசித்தவர்களையே வெறுத்து ஒதுக்கும் நிலைக்குத் தள்ளப்பட விடுவது எத்தனை முதிர்ச்சியற்ற ஒரு வளர்ச்சி :). //

பிள்ளைக முடிவு தப்பாப் போயிரக்கூடாதேனு ஒரு பயம் தான். நாம செய்றது தப்பாப் போகாதுனு ஒரு அனுபவ நம்பிக்கை தான்.


//இத்தனை தனி மனித இறுக்கம் சார்ந்த சமூக தேக்க நிலையைத் தாண்டி மண முடித்துக் கொள்ளும் நபர்கள், அதே சமூக தேக்க நிலையில் தன்னை உட்படுத்திக் கொள்ள நேர்வது, எதனையெல்லாம் எதிர்த்து நின்று செய்தார்களோ அப்படியாக செய்ததே தவறு என்கிற ரீதியில் சரணாகதி ஆகிப் போவதுதான் கொடுமையின் உச்சம். //

காலப் போக்கில அன்பு தானே பெரிதாக தெரியும், உதறிவிட்டு வாழ்வதா சிறப்புனு தோணியிருக்கும்.


// பரஸ்பரமாக இருவரும் பாதிவழியில் வந்து சந்தித்துக் கொண்டு இருவருக்குமே எதெல்லாம் இணக்கமாக, மனதிற்கு சுமையில்லாமல் இருக்கக் கூடிய வகையில் அமைத்துக் கொள்ள முடியாத ஒரு வாழ்க்கையில் எப்படி காதலும், நேசமும் இருக்க முடியும்?//

அப்படியே மாத்தி யோசிச்சுப் பாருங்களேன், சரியாகத்தான் இருக்கும்.

//சமூகம் நமது குழந்தைகளை வஞ்சித்து விடக் கூடாதே என்ற காரணத்தினாலோ அல்லது வாழ் நாள் முழுதும் நாம் ஒரு வெளியாளாக என் சமூகத்தால் கருதப்பட்டு விடுவோமோ//

இதெல்லாம் காதல் பண்ணும்போது யோசனைக்கு வராது போல! ;)

//உண்மையான மனசு சம்பந்தப் பட்ட நேசிப்பா இல்ல கனக்குப் போட்டு சேர்ந்ததா? //

எல்லாமே கணக்குப் போட்டுத்தான் சேரும். அது காதலும் சரி, பெற்றோர் பார்க்கும் திருமணமும் சரி. கணக்கு சரியாக இருக்க வேண்டுமல்லவா. என் எண்ணத்துக்கு நீ சரி எனும்போதுதான் ஒரு இணக்கமே வரும்.

//எனக்கும் மதம், இனம், மொழி அப்பாற்பாட்டு ஒரு காதல் வந்துச்சு. அதில எந்த நிர்பந்தமுமில்லை. எதனையும் யாரும் எவருக்காகவும் மாற்றிக்கவும் தேவைப்படலை. ஆனால், அதுவும் கொஞ்ச நாட்களில் ஆட்டம் கண்டு உதிர்ந்து போனது;//

யதார்த்தம் சொன்னீங்க நீங்க.

//என்னுடைய பையனுக்கு இது வரையிலும் எது போன்ற அடையாளங்களையும் சிலுவை ஏற்ற வேண்டுமென்ற இக்கட்டில் இன்றளவும் என் நிலையில் இல்லை. சுய சிந்தனை உடையவனாகவும், நிதர்சனத்தை சந்திக்க தயாரனவானகவும் வாழக் கூடிய சாத்தியங்களை அவனைச் சுற்றிலும் அமைத்துக் கொடுத்து விட்டால், யாரும் யாருக்காகவும் சமரசம் செய்து கொண்டு, தியாகியாக (ஒரு பக்கமாக) வாழ்ந்து முடிக்க வேண்டிய கட்டாயமிருக்காது.//

அதிகப்படியான எதிர்பார்ப்புகளை விதைச்சிக்கிட்டீங்களே. தியாகியாகத்தான் இவ்வுலகில் ஏதாவது ஒரு வகையில் வாழ்ந்து தீர வேண்டும். உலக சூழல் அப்படி.

//நம்மூர் காதல் மணங்களில் டூ மச் சினிமா செண்டிமெண்ட்//

சினிமாவே டூ மச். இதுல சினிமா செண்டிமெண்ட் வேறயா! எப்படியோ காதல் பண்ணி சந்தோசமா இருந்தா போதும்னு நினைக்கறவங்க அதிகம் தான். கல்யாணம் பண்ணினப்பறம் ஏண்டா காதல் பண்ணினோம்னு நினைக்காம இருந்தாலே போதும்.

மிகச் சிறப்பாக எழுதி இருக்கீங்க, தெகா அவர்களே.

இனிய தமிழர்திருநாள் நல்வாழ்த்துகள்.

Paleo God said...

வித்தியாசமான பேர், எழுத்து, நடை, அந்த லுங்கி மேட்டர் ஸூப்பர்::))

இந்த பதிவு படிச்சிட்டு வாரேன்..:)
..

காட்டாறு said...

அய்யா நீங்க சொன்னது காதல் திருமணம் என்றில்லை, எல்லா வகைக்கும் பொருந்தும். வேலை செய்யும் இடத்திலும் சரி, திருமண பந்தத்திலும் சரி, ஓங்கியவன் கை எப்பவும் ஓங்கியே இருக்குது. அதை உடைத்து வெளி வரும் போது பிரசவ வேதனை. வேதனைக்கு பின் இன்பம் என்பது உணர்ந்தால் புரியும். அந்த வேதனையை அனுபவிக்கும் முன், விட்டுக் கொடுத்தல் என்ற மாயை முன்வைக்கப் படுகிறது. இருவரும் சமரசம் பேசி, பின்விளைவுகள் யோசிக்கும் போது, இந்த மாயை கழண்டு விடும். ஆனா… எத்தனை பேரு யோசிக்கிறோம்.

காதலை அடையும் முன் உள்ள நிதானம், திருமணம் என்ற நீண்ட கால பந்தம் வரும் போது இருப்பதில்லை. காதலிக்கும் போது ஒருவரும் பெற்றோர் விருப்பம், சமுக விருப்பம் என்ன என்று கேட்பதில்லை. காதலிக்கும் போது சுருங்கி இருவர் தான் உலகம் என்றிருந்த எண்ணம், திருமணம் என்று வரும் போது சமூகம், பெற்றோர் என்று அவர்களையும் உள்ளிழுத்து விரிந்த உலகமாகிறது. சார்பற்ற நிலையிலிருந்து சார்பு நிலைக்கு தள்ளப் படுகிறது. சார்பு நிலையில் ‘taken for granted’ உள் நுழையும் போது, மனஸ்தாபங்கள் வர ஆரம்பிக்கிறது. இதெல்லாம் சமாளித்து வருவது அவங்க அவங்க வளர்ச்சியை பொருத்தது. இந்த வளர்ச்சி இல்லாத வரைக்கும் தொலைகாட்சியும் இதெல்லாம் பெரிய விசயம் போல பேச தான் போகுது. நீங்களும் பதிவு போட தான் போறீங்க. ;-)

காட்டாறு said...

// பிள்ளைக முடிவு தப்பாப் போயிரக்கூடாதேனு ஒரு பயம் தான். நாம செய்றது தப்பாப் போகாதுனு ஒரு அனுபவ நம்பிக்கை தான்.//

அனுபவம்… ம்ம்… இந்த மாயச்சொல் தான் எத்தனை பேரை படுத்துது பாருங்க. ஆழ்கருத்துக்கள் கூறும் நாவலாசிரியரே தம் பதிலில் அனுபவ நம்பிக்கை என்று சொல்லி விட்டாரே. :-( இப்படி தான் நாவலாசிரியர் சொன்னது போல பெற்றவங்க அனுபவம் என்ற ஒற்றை சொல்லால் அடக்கிறாங்க. அனுபவம் என்பது என்ன? காதல் திருமணம், பெற்றோர் பார்த்த திருமணம் இரண்டுமே செய்து பார்த்தார்களா இந்த அனுபவஸ்தர்கள்? இல்லை தோல்வியுற்ற மணங்களுக்கு கவுன்சிலிங் பண்ணி பார்த்தார்களா? தன் மகன்/மகள் செய்தது தவறா போகுமே என்ற எண்ணம் ஒரு பெற்றொருக்கு வருமெனில் அவர்கள் அனுபவமும், மேலோட்டமான அனுபவம் தான். மணங்கள் தோற்பதும், நற்முறையில் வாழ்வதும், அவரவர் (பெற்றவர்கள்/சமூகம் அல்ல) ‘புரிதல்’ என்ற வளர்ச்சியை பொறுத்து மட்டுமே. இந்த புரிதலில் சமுகத்தின் தலையீடு தன் வாழ்வில் எந்த விகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்; தன் தனித்தன்மையை எந்த அளவில் முழுமையாக (முழு மனதுடன்) விட்டுக் கொடுத்து வாழனும் என்பதும் அடங்கும். எந்த அனுபவமும் அவரவர் அனுபவித்தால் தான் அதன் முழு ஆழம் தெரியும் என்பது என்னுடைய கருத்து.

Thekkikattan|தெகா said...

திரு வெ. இரா,

ஒரு எழுத்தாளர், ஏற்கெனவே சில படைப்புகளை கொடுத்தவர் என்ற முறையில் இந்தப் பதிவிற்கு உங்களின் கருத்து வந்தது ரொம்ப முக்கியமான விசயம்.

இருப்பினும், தங்களின் கருத்துக்கள் கொஞ்சம் மேலோட்டமாகவே ஒரு பெரிய விசயத்தை தொட்டுச் சென்றதாக எனக்குப் படுகிறது.

"கணக்குப் போட்டு" என்ற பதத்தினை விட, ஒருமித்த சிந்தனைகள், தெளிவு, லயிப்பு போன்ற விசயங்களே ஒரு முதிர்ச்சியடைந்த நேசத்திற்கு அடிப்படையான விசயங்களாக நண்பர்கள் என்றவொரு விதயத்தை அமைக்கவே அடிப்படையான காரணிகளாக அமையும் பொழுது, அதுவே நாள்பட பரிணமித்து ஆண்/பெண் நிலையில் மற்றுமொரு பரிமாணத்தை எட்டியும் முழுமையடை சாத்தியப்படுத்துவதாய் அமைய முடியும்.

மனது ஒருமித்து, இரு உடல்களாகினும் ஒரே பார்வை கொண்டு விசயங்களை பார்க்கும் கணம் தோரும், வாழ்வு எவ்வளவு உயிர்ப்பு உள்ளதாக அமையக் கூடும். இந்த நிலையில்தானே ஒரு கவிஞனும், கதையாசிரியனும் உள்ளே புகுந்து புறப்பட்டு வரமுடிகிறது. அதுவே ஃபாண்டசி நிலையில், முரணுற்று வாழும் நம்மில் பலருக்கும் தேவையாகப் படுகிறது. அந்த எண்ண லயிப்பை, உயிர்ப்பை கதை சொல்லிகளின் மூலமாக கேட்பதின் மூலம் சற்றே கிறக்கம் கொள்ள வைத்தும், கட்டிப் போடவும் முடிகிறது.

அந்த லயிப்பு, உயிர்ப்பு நிலையில் இருக்க வைக்கக் கூடிய ஒரு மாபெரும் 'சக்தி'யை எப்படி நாம் இந்த 'கணக்குப் போட்டு' செய்யும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தினோம். எது? ஏன்?

--------to be contd...2

Thekkikattan|தெகா said...

மேலும், கணவன்/மனைவி என்ற ஒரு designationக்குள் வந்த உடனேயே உறவுகள் பல வித மாறுதல்களை சந்திந்து அங்கே சமூகம் சார்ந்த obligation/necessities முன் நிறுத்தப் படுவதால் அந்த உயிர்ப்பு இறந்து விடுகிறது, கண் கூடாக காணும் நிதர்சனம் தானே?

எத்தனை பேர் திருமணத்திற்குப் பிறகும் தனது மனைவியை ஒரு காதலியைப் போல், கணவனை ஒரு காதலனைப் போல வைத்திருக்கக் கூடிய பேர் பெற்றவர்களாக இருக்கிறோம் (நல்ல நண்ப/நண்பி என்ற நிலையில் என்று புரிந்து கொள்வோம் :) ? மேலும் தன்னை இழக்காமல், ஒரு உணர்வினை முழுதுமாக அடையாமல் 'பயம்' என்ற நிலையிலேயே தவிர்த்து விட்டு அதனைப் பற்றிய புரிதலாக நடை முறை இடையூறுகளை மட்டுமே முன் வைத்து நம்மால் எப்படி நமது படைப்புகளை முழுமையுடையதாக படைக்க முடியும்? குறைந்த பட்சம் இது போன்று நாம் அடிக்கடி தொட்டுப் போகும் இந்த உறவுசார் உணர்வு நிலை - காதல்.

பி.கு: வெ. இரா, தவறாக நினைக்க வேண்டாம். சில ஐயங்களை எனக்கு கேள்விகளாக மனதினுள் உதிப்பதை உங்களுடன் உரையாடும் எண்ணத்திலேயே இங்கு வைத்திருக்கிறேன்.

கல்வெட்டு said...

கண்டவுடன் வருவது காமம். பார்த்தவுடன் பிடித்தது என்று சொல்லலாம்.

*
காதல் என்பது தற்பொழுது "கள‌வு ஒழுக்கம்" என்று மட்டுமே அறியப்படும் தமிழ்ச் ழூழலில் , காதல் என்றால் என்ன என்று புரிந்துகொள்ளவிழைகிறேன்.
*

ஆங்கில Love என்பது பரந்தவிளக்கம் உடைய ஒன்று.

திருக்குறளிள் காமம்,களவொழுக்கம், தலைவன் , தலைவி என்றே பெரும்பாலும் உள்ளது. காமத்துப்பால்தான் உள்ளதேதவிர காதல்பால் இல்லை.
*

இன்றைய தமிழகத்தில் காதல் கல்யாணம் என்பதன் அர்த்தம் "நானாக பொண்ணு/மாப்பிள்ளை பார்த்துக்கொண்டேன்" என்பதுதான்.

திருமணம் என்பது ஒரு அக்ரீமெண்ட். பொண்ணை நீங்களே தேடிக் கொள்கிறீர்களா அல்லது அப்பா அம்ம தேடித்தருகிறார்களா என்பதுதான் வித்தியாசம். மற்ற நாடுகளில்இடங்களில் காலம் கால்மாக அவனவன் அவனாகவே பொண்ணுப் பார்த்துக்கிறான் , ஆனால் எவனும் "எங்க கல்யாணம் காதல் கல்யாணம்" என்று சொன்னதில்லை.


*

தெகா,
காதல் (தமிழ் வார்த்தை) என்றால் என்ன என்று விளக்கினீர்கள் என்றால் அதைப்பற்றிப் பேசலாம்.

:-))

Thekkikattan|தெகா said...

கல்வெட்டு,

என்ன இப்படியொரு கேள்விய கேட்டு என்னய சிக்கல்ல மாட்டி விட்டிட்டீங்க :))) ஒரே சிரிப்பாணியா மண்டுது போங்க.

அப்போ, "காதல்" தமிழ் வார்த்தை இல்லையா? நிசமாலுக்குமே எனக்குத் தெரியாது.

இருங்க பேசுவோம்.

இதுக்கு இடையில யாராவது, காதல்னா என்னான்னு பதில் சொல்லுங்கப்பா இந்தப்பக்கமா எட்டிபார்க்கிறவங்க :)

கல்வெட்டு said...

தெகா,
காதல் என்ற தமிழ் வார்த்தையின் அர்த்தம் தானாக பொண்ணுப்பார்ப்பது என்ற அளவிலேயே பயன்படுகிறது. அதனால்தான் "எங்க கல்யாணம் காதல் கல்யாணம்" என்று சொல்கிறார்கள். இதன் பொருள் என்ன? "நாங்களா வரன் பாத்துக்கிட்டோம்" என்பதுதானே?

எனக்கு இந்தப்பயன்பாட்டுக் குழப்பம் உள்ளது. யாராவது விளக்கம் ப்ளீஸ்?
களவு ஒழுக்கமும், தலைவன் தலைவியுமே அதிகமாக காணக்கிடைகிறது பழைய தமிழ்ப்பாடல்களில்.

நீங்கள் சொல்லியுள்ள் மற்ற பிர்சசனைகள் (தியாகம்) காதலை ஒட்டி வருவதால், காதல் என்ன என்று தெரியாமல் பேச இயலவில்லை.

:-))

Radhakrishnan said...

தங்களின் எண்ணங்களிலோ, காட்டாறு அவர்களின் கருத்துகளிலோ எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை.

மிகவும் அருமையாகவே நேசம், புரிதல் பற்றிய விசயத்தைச் சொல்லி இருக்கிறீர்கள். நிச்சயமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய விசயமே.

ஆனால் இன்றைய வாழ்க்கை சூழலை சற்று உற்று நோக்கும் போது எல்லாமே கணக்குப் போடுவதாகத்தான் எனக்குத் தெரிகிறது. இந்த கணக்குத் தவறாகவே இருக்க ஆசைப்படுகிறேன்.

ஒரு தேவையின் பொருட்டே எல்லாம் நடைபெறுகிறது என்பது உலக நியதி. தேவையின் பொருட்டு ஒரு விசயம் நடைபெறும் பட்சத்தில் அங்கே எல்லாம் கணிக்கப்பட்டு, திட்டமிட்டு நடைபெற வேண்டிய சூழல் அமைந்துவிடுகிறது.

எனக்கு ஒரு கதையானது மிக மிகப் பிடிக்கும். கணவன் தன் மனைவிக்கு பொருள் வாங்கி வர நினைப்பான், பணம் இருக்காது, தன்னிடம் இருக்கும் பொருளை விற்று தன் மனைவிக்கு பொருள் வாங்கி வருவான். அங்கே அவனது காதலை நிலைநாட்ட அந்த பொருளின் அவசியம் தேவையில்லை என்பதை அவளது மனைவி கண்களால் கண்ணீர் நிறைத்து காண்பிப்பாள். இதே கதையை ஒரு கவிதையில் வைத்தேன்.

காதல் மட்டும் எனும் ஒரு கவிதையில் 'காதல் புரிந்து கொள்ளும்' என்றே எழுதி இருக்கிறேன். ஆனால் இவையெல்லாம் வார்த்தைகளில் உள்ள அடர்த்தி, ஆனால் வாழ்க்கையில் இந்த அடர்த்தி தொலைந்து போனதாகவே கருதுகிறேன், அதன் காரணமாகவும் கவிதைத் தொகுப்புக்கு வெறும் வார்த்தைகள் எனவும் பெயர் சூட்டினேன்.

அனுபவம் பற்றிய சிந்தனை கூட அவரவர் அனுபவம் பற்றிய சிந்தனை மட்டுமே மிஞ்சுகிறது.

நுனிப்புல் நாவலில் கூட ஒரு இடத்தில் 'தவறாகப் போகவேண்டும் என எவரேனும் முடிவு எடுப்பார்களா' என ஒரு விசயத்தில் ஒரு பெண் எடுக்கும் முடிவுக்கும், அவரது பெற்றோர் எடுக்கும் முடிவுக்கும் ஒரு வினா வைத்திருந்தேன். வாழ்க்கையில் சூழ்நிலைகள் பல இருப்பினும் மனத் தெளிவு, மனக் கட்டுபாடு அதிக அளவில் அவசியமாகிறது.

எடுக்கும் எந்த முடிவுமே ஒன்று தவறிப் போகும், அல்லது சரியாகப் போகும், இதை யார் நிர்ணயம் செய்வது? முடிவு எடுத்தவரும், முடிவுக்கு உடன்படுபவரும். இந்த புரிந்துணர்வானது நட்பு, காதல், திருமணம் என எல்லாவற்றிலும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லைதான். உலகில் என்ன நடக்கிறது என உற்று நோக்கிப் பார்க்கும்போது நுனிப்புல் மேய்வது போல எனக்கு இருக்கிறது.

நிறைய எழுத நினைக்கிறேன், எழுத்துகள் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை, வாழ்க்கை முறையை மாற்றுவதில்லை என எண்ணும்போது எழுத்துகள் மிகவும் வெறுமையாக இருக்கிறது.

ஏதேனும் தவறு இருப்பின் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் தெகா அவர்களே.

கல்வெட்டு said...

.

களவு ஒழுக்கம், திருமணம் எல்லாம் ஒரு அக்ரீமெண்ட்தான். பரஸ்பரம் எதிர்பார்ப்புடன் கூடியதுதான். prenuptial agreement இப்போதைய அமெரிக்கத் திருமணங்களில் பரவலாக செய்யப்படுகிறது. ஏன்?

நம்பிக்கையின்மை அல்லது நிதி/சொத்து சம்பந்தமான சுயபாதுகாப்பு.

.

மங்கை said...

கமென்டறதுக்கு முன்னாடி ஒரு அப்ளிகேசன்.... ஐயா..கொஞ்சம் சின்ன சின்ன வரிகளா போடுங்க ஐயா.. படிக்க படிக்க அனுமார் வாலு மாதிரி நீண்டுட்டே போகுது... முதல்ல என்ன படிச்சோம்னு மறந்து போகுதய்யா.. எனக்கு கொஞ்சம் கம்மி...

இந்த தனித்தன்மையை விட்டு கொடுத்து வாழ்தல்...ம்ம்ம்...இது நம்ம குப்பாத்தா..சுப்பாத்தாகெல்லாம் என்னனே தெரியாதுங்க... அவங்கள பத்தியெல்லாம் கவலப்படறது யாரு...அவ்வளவு ஏன்...என்னுடன் மேற்படிப்பு படித்த பெண்கள்/ஆண்கள் கூட அப்படித்தான்... அவங்களப் பொறுத்த வரைக்கும் புருசன் வீட்டுக்கு போனா அவர் சொல்றதைத்தான் கேட்கனும்.. இது இயற்கையிலேயே வந்துடுதே.. அங்க நடக்கும் கருத்து வேறுபாடுகளுக்கு எந்த சமூக இருக்கம் காரணம்.. (பெற்றோர் முடித்து வைத்த திருமணங்கள் சொல்றேன்) விட்டுகொடுத்து போறோம்ங்கற எண்ணம் வந்தாலே அங்க வேறுபாடு வந்துடுதே..ஒத்துழைப்புன்னு நினைக்கலாமே...

ஏற்றுக்கொள்ளுதல், காது கொடுத்து கேட்டல், நேரம் ஒதுக்குக்குதல்..இது மூனும் 99% பிரச்சனைகளை தீர்த்திடும்ங்குறது என் எண்ணம்

காதல் மணமா பெற்றோர்கள் பாத்து வைத்த மணமாங்குறது பிரச்சனை இல்லை... அதுக்கு அப்புறம் எப்படி இருக்காங்க..அதாங்க பிரச்சனை.. வேனும்னா பிரச்சனைகளுக்கு காதல் திருமணத்தை ஒரு சாக்கா பயன் படுத்திக்கலாம்... சுலபமில்லையா..

பெற்றோர்கள் பார்த்து சேர்த்து வைத்த திருமணங்கள் தோத்து போன கதை எங்க வீட்லயே 3.. இதுல யாரை பாவம்னு சொல்றது.. அப்பவும் சமூகம் பேசத்தான் செய்யுது.. சரிப்பா என் சமூகம் இப்படியான வாழ்க்கையை அங்கீகரிக்காது அதுனால என்ன ஆனாலும் நான் என் மனைவியுடன்/கணவனுடன் ஒத்துழைத்து போகிறேன்னு சொன்னாலும்.. நீ ஆம்பிளையானு கேட்டு இம்சை படுத்தே அதே சமூகம்.. உன்ன மாதிரி பொண்ணுக இருக்குற வரைக்கும் ஆம்பிளைக இப்படித்தான் இருப்பாங்கன்னு பெண்ணையும் திட்டி தூண்டி விடத்தான் செய்யறாங்க..

சரி..இப்போதைக்கு நிறுத்திக்கறேன்.. பதிவை விட நீளமா போயிடும் போல இருக்கு

Thekkikattan|தெகா said...

வெடிகட்டி,

நன்றி...

******

வாங்க வெங்கட்,

//ஜாதியினால் கவுரவத்தை விட்டு கொடுக்க தயாரா இல்லை... //

அப்படின்னு நீங்க சொல்லுறீங்களா :)), இல்ல மக்களைச் சொல்லுறீங்களா...

//மத்தவங்க உணர்சிகளை மதிக்க மனசும் இல்லை.//

இந்த மாதிரி விசயத்தில 'உணர்ச்சிகளை மதிக்கத்' தெரிந்தா ரிஸ்க் எடுக்கணும், புரிஞ்சிக்கணும் வாழ்க்கையை ரசிச்சு வாழணும்னா, தூக்கத்திலேயே நடக்கிற மாதிரி எந்த தடங்களுமில்லாம ஒரு வீட்டை (துணை) அமைச்சுக் கொடுத்துட்டா எதுக்கு அடுத்தவங்களப் பத்தியெல்லாம் கவலைப் பட்டுகிட்டு ...

Thekkikattan|தெகா said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

தெளிதல் சார்ந்தா :)//

கேள்வி கூட கேட்டுக்கிடலைன்னா, பின்னே நான் படிக்கிற புத்தகமெல்லாம் என்னயச் சுத்தி எதுக்கு, யாரை 'இம்ப்ரெஸ்' பண்ண :D ?

உங்க 'டீல்' சார்ந்த பதிலுக்கு ராஜீக்கு ஒரு பதில் நீங்க கொடுக்கணுமின்னு நினைக்கிறேன். மேலும் கீழே பல நண்பர்கள் கொஞ்சம் விரிவா அதே மனவோட்டட்தை பிரிச்சு மேஞ்சிருக்காங்க அவைகளையும் வாசிங்க நேரமிருக்கும் பொழது.

//Raji said...

Muthulakshmi...ethukku % kanakkil vittu kodukkanum. Appadiye entha vittikoduthalum illaamal ethukkalaame.
Valiappathu allathi valanchu koduppathu...ithu rendu thaan namma ooril theriyum.
:( //

வாங்க ராஜீ, நீங்க சொன்னதைப் படிக்கும் பொழுது, மக்களாகிய நாம் அந்த ஜங்சனை எல்லாம் கடந்து ரொம்ப தூரம் நகர்ந்து வந்தாச்சுன்னு நினைக்கத் தோணுது.

நீங்க சொன்ன அணுகுமுறையெல்லாம் புத்தங்களில் வேணா படிச்சு ஓ! இப்படி ஒரு விசயம் இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம். மக்கள் எதார்த்தங்கிற ஒரு கட்டமைபுக்குள்ளர தங்களை நுழைச்சிக்கிட்டவுடன் தனக்கு கொடுக்கப்பட்ட designation என்ற 'கடமை'யைத்தான் ஆற்றுகிறார்கள் பாதி இறந்த நிலையிலேயே மற்ற எதற்கும் நேரத்தை செலவு செய்ய அங்கே நேரமில்லை. sorry :D. So, wake up and get into system ASAP :))

Thekkikattan|தெகா said...

வாங்க பலா பட்டறை,

அந்த வித்தியாசமான பேரா - நான் நாணலுக்கு எதிர் தரப்புன்னு சொல்லவாரேனோ :-) . உங்க புனை பெயரும் தான். இன்னும் எனக்கு பொருள் விளங்கலை. நன்றி, பலா!

****************

வாங்க காட்டாறு,

...இருவர் தான் உலகம் என்றிருந்த எண்ணம், திருமணம் என்று வரும் போது சமூகம், பெற்றோர் என்று அவர்களையும் உள்ளிழுத்து விரிந்த உலகமாகிறது. சார்பற்ற நிலையிலிருந்து சார்பு நிலைக்கு தள்ளப் படுகிறது. சார்பு நிலையில் ‘taken for granted’ உள் நுழையும் போது, மனஸ்தாபங்கள் வர ஆரம்பிக்கிறது. இதெல்லாம் சமாளித்து வருவது அவங்க அவங்க வளர்ச்சியை பொருத்தது...

இந்த வளர்ச்சிங்கிற விசயத்திலே சமூகம் சார்ந்த சார்பு நிலைக்குள் எவ்வளவு ஊறிக் கெடக்கிறோமோ, அந்த அளவிற்கே ஒரு தனிமனிதனின் வளர்ச்சி அளவிடப் படுகிறதுன்னு நினைக்கிறேன்.

தெளிவா புரியற மாதிரி 'நடிப்பு உலகின்' கூறுகளை எடுத்து வெளியே கொண்டு வந்திருக்கு உங்களின் பின்னூட்டம். பதிவின் முழுமைக்கு இதுவும் உதவும், நன்றி!

Thekkikattan|தெகா said...

கல்வெட்டு,

//கண்டவுடன் வருவது காமம். பார்த்தவுடன் பிடித்தது என்று சொல்லலாம்.//

...ஏன்னா, அண்ணலும் நோக்கினால் அவளும் நோக்கினால்... அங்கே காதல் மலர்ந்தது :)

இந்த நிலையிலேயே நம்மில் பெரும் பகுதியினர் 'காதல்' என்ற பதத்தைப் புரிந்து வைத்து, சீப்பும், கையுமாக பெண்களைப் பார்த்தால் 'டச் அப்' செய்து கொள்வதும், பெண்கள் சினிமா நாயகர்கள் :D , அழகிற்கு வெளிப்புறத்தில் தெரிந்தால், அழகு என்று நம்பும் நிலையில் நீங்கள் கூறிய ...படி... நிலையிலேயே 'காதல்' எல்லா வயது தரப்பிலும் தங்கிப் போனதில் ஆச்சர்யமில்லைதான்.

*******

கடவுள் எங்கே இருக்கிறார் என்று மதம் பேசும் ஒருவரிடம் கேட்டால், அதனை உணர்ந்து பார்த்தால்தான் உண்டு என்று கூறுகிறார். அது எதன் அடிபடையில் அந்த 'உணர்ந்து - நேசம்' வருகிறது? அதே நிலையில் கூடவே வாழும் துணைவி/துணைவனிடத்தில் தன்னை இழந்து முழுதுமாக நேசிப்பு வயப்பட்டு வாழ முடியாதா? அப்போ, கண்ணுக்கு புலப்படாத, தினப்படி வாழ்க்கையில் இடரலை தொடுக்க முடியாத ஒன்றின் மீது வைத்திருக்கும் காதலை, நேசிப்பை ஏன் தன் அருகில் இருக்கும் ஒருவரின் மீது ஆளுமையாக செலுத்தி அந்தத் தேனில் குழைய வைக்க முடியாது?

//திருக்குறளிள் காமம்,களவொழுக்கம், தலைவன் , தலைவி என்றே பெரும்பாலும் உள்ளது. காமத்துப்பால்தான் உள்ளதேதவிர காதல்பால் இல்லை.//

ம்ம்ம்ம்.... நல்ல கேள்வியாத்தான் கேட்டு இருக்கீங்க. இப்போதான் எனக்கு எல்லா சங்கப் பாடல்களும் ஞாபகம் வருகிறது. திருட்டுத் தனமா சந்திக்கிறது, அதுக்கு தோழி துணையா நிக்கிறது - களவொழுக்கம். அப்படின்னா, களவாடல் முறையில் வருவதுதான் இந்த "நானாக பொண்ணு/மாப்பிள்ளை பார்த்துக்கொண்டேன்" அப்படிங்கிறதா?

//"எங்க கல்யாணம் காதல் கல்யாணம்"//

இப்படி இந்தப் பூமிப் பக்கம் சொல்லி அடையாளப் படுத்திக்கிட்டா அப்போ அரேஞ்சுடு கல்யாணம்மெல்லாம் 'காதலே இல்லாம பண்ணிக்கிடுறதான்னு" கேக்குறாய்ங்க :D ...அவ்வ்வ்

Thekkikattan|தெகா said...

கலந்து கொண்டு தங்களுடைய புரிதலை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Vijay Ramaswamy said...

மிகவும் உண்மையான கருத்து இதை ஒட்டிய என் பகிர்வு தான் http://seithialasal.blogspot.com/2010/05/blog-post.html

கலப்பு திருமணம் செய்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு தங்களுடையது

Related Posts with Thumbnails