Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் - படத்திற்கான விமர்சனமல்ல!


இந்த கட்டுரை பேசப்போவது கமல்ஹாசனின் விஸ்வரூபமான ”கேளிக்கை” படத்தை பற்றிய விமர்சனமாக இல்லை.  அந்த படத்தை இப்பொழுது என்னால் பார்க்கக் கூடிய வாய்ப்புமில்லை.  தேடி ஓடி பார்க்கும் அத்தனை தீவிரமான சினிமா ரசிகனுமில்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் நடக்கும் கட்டிப் புரதல்களை கண்ணுற்று அங்குமிங்குமாக ஓடி என்னுடைய பார்வையை வைத்தும் மனது கேக்காததால் சில விசயங்களை எனக்கு நானே தெளிவு படுத்திக் கொள்ள இங்கு பதிந்து வைக்கிறேன்.

நான் கமலைப் பற்றி பல பதிவுகளில் சிலாகித்தும் அவர் அப்படித்தான் என்ற தனிமனித வெளிப்பாடுகளை பாராட்டியும், அவர் திரையுலகில் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக் கொள்ள எடுக்கும் மெனக்கெடல்களையும் பாராட்டியே எழுதி வந்திருக்கிறேன். அப்பொழுதும் தனியாகவே நின்றதாக ஓர் உணர்வு, இப்பொழுது இந்த படத்தின் சர்ச்சையை ஒட்டியும் தனித்தே இருப்பதாக ஓர் உணர்வு! ஆனா, இன்று அவருக்கு சேர்ந்திருக்கும் கூட்டம் பெரும் கூட்டம். இங்கேதான் அவர் நின்று நிதானித்து தனது மேற்கொண்ட பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒருவர் இரண்டு வழிகளில் ஒரு குன்றின் உச்சத்தை அடையாளம். ஒன்று, பழனி மலையில் ஏறுவதற்கு விஞ்ச் ஏற்பாடு செய்து அலுங்காமல், குலுங்காமல் போய் ஆயிரம் ரூபாயை சிறப்பு தரிசனத்திற்கென யார் கையிலாவது வைத்து திணித்து எல்லாரையும் குறுக்காக நடந்து மிடுக்காக போய் அந்த வேலவனைப் பார்த்து கண்ணடித்து விட்டு வரலாம்.  இல்லையென்றால், அரைநாள் முழுக்க வரிசையில் நின்று தனக்கு முன்னாலும், பின்னாலும் இருப்பவர்கள் பேசிக்கொள்ளும் சம்பாஷணைகளை கேட்டுக் கொண்டே ஒவ்வொரு அடியாக முன்னேறி உண்மையான உள்ளொளி பெற்று கடைசியில் உச்சத்தை அடையாளம். அது அவரவர்களின் தேர்வு!

ஆனால், விஞ்சில் போவது சரட்டென்று ஏறி உச்சத்தை அடைந்து விடலாம்தான்.  ஆனால் படியேறி வரிசையில் நின்று போவதின் பல அணுகூலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டாமலே அது செய்து விடும்தானே! அதுவும் நல்ல இயங்கும் உடற் செயல் பாடுகளுடன் இருக்கும் ஒருவருக்கு. விஞ்சில் ஏறும் பொழுது இதுதான் உண்மையென்று பூமியில் நடக்கும் விசயங்கள் அறியாமல் போக நிறைய ஆபத்துகள் நமக்குள்ளேயே குவியும் வாய்ப்புகள் அதிகம் தானே?

இங்கே கமல் உலக ரசிகர்களின் பார்வையை நம் பக்கம் திருப்ப நம் ஊர்லயும் உலகப்பார்வை கொண்ட  ஒரு கலைஞன் இருக்காண்டான்னு உலகத்திற்கு எடுத்து இயம்ப வேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் இருந்தால் அவர் ஆங்கிலத்திலேயே ஒரு படத்தை ஆஃப்கான், பாலஸ்தைன், நைஜீரியா போன்ற நாடுகளில் சுடச் சுட  உலக தீவிரவாதம் பற்றி பேசி இயக்கி எடுத்து பிறகு அது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வந்தால் ரொம்ப நன்மை பயக்கும் என் ஊருக்கும், உங்கள் ஊருக்கும். உலக தீவிரவாதத்தை வீட்டுவாதமாக உருவேற்றி காமிப்பது மிக்க அபத்தமானது, ஆபத்தானது. இந்த விஷ பரீட்சையை உலக மொழியில் நமக்கு கிஞ்சித்தும் 

சம்பந்தமே இல்லாத மொழியில், உடையில், தெருவில் இருந்து தொடங்குவதாக பேசி ஆரம்பித்தாரென்றால் இந்த கட்டுரைக்கே எனக்கு வேலையில்லை. ஆனால், நமது தெருக்களிலிருந்தும் நாம் இதனை வளர்த்தெடுத்து உலகத்திற்கு வழங்குகிறோம் என்ற சிறு எண்ண விதை விதைத்து அதனை இவரின் உக்கிர மெனக்கெடல் வழியாக வழங்கினால், நம்முடனே வாழ்ந்து வரும் பிற மனிதர்களை மென்மேலும் தனிமைப் படுத்துகிறோம் என்ற அடிப்படை அக்கறையுடன் இருப்பதாக படவில்லை.

உலக அரங்கில் இது வரையிலும் இந்தியாவிலிருந்து வளர்த்தெடுக்கப்பட்ட பூர்வீகமாக கொண்ட குடிமகன்களில் யாரேனும் தீவிரவாதத்தில் தோள் கொடுத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதுண்டா? வீட்டினுள் நடக்கும் பிரச்சினைகள் வேறு. ஆனால், அதனை பொறுப்பற்று, தீர்த்துக் கொள்ளும் நிலைக்கு நம்மை நகர்த்தி நமது வாழ்வு சூழலுக்கு தகுந்தாற்போல் தீர்வுகளை கண்டடைந்து கொள்வதனைத் தவிர்த்து, கேளிக்கையின் வழியாக உலக சென்றடைதல் நிகழ்த்துகிறேன் பார் என்று கிளம்பினால், கொள்ளிக்கட்டையால் தலையை பிராண்டிக் கொள்வதாகத்தான் புரிந்து கொள்ள முடிகிறது என்னால். அதிலும் இந்த கால கட்டத்தில்.

உலகிலேயே ரெண்டாவது பெரிய இஸ்லாம் வாழ் மக்களை உள்ளடக்கியது இந்தியா. நாம் ஒன்றும் அமெரிக்கா இல்லை. இங்கே நாம் இரண்டற பின்னி பிணைந்து கிடக்கிறோம். இருவரும் ஒத்திசைவுடன் இயங்குவதின் அவசியம் மிக நுண்மையாக மெதுவாக ஆழப் பதிக்கப்பட வேண்டியதின் அவசியம் உணருதல் ஒன்றே நிரந்தர தீர்வு என்பதனை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

நம்முடைய உடனடித் தேவை உள்ளூருக்குள் எப்படியாக அனைவருக்கும் எல்லாமும் கிட்டும் ஒரு நிலையை எட்டுவது என்பதாகத்தான் இருக்க வேண்டும். பரம்பரை பரம்பரையாக இங்கே வாழ்ந்து, உண்டு, வளர்ந்து, மடிந்து வாழும் அனைவருக்கும் கல்வியும், வேலையும் நீக்கமற கிடைப்பது போல ஒரு அடிப்படையான வாழ்வாதாரத்தை அமைத்து, எல்லாரையும் போல வாழ அனைவருக்கும் ஒருவாழ்வு அடிப்படையிலேயே கிடைக்க வேண்டிய சூழலை, ஒரு வாய்ப்பை அமைத்து கொடுப்பதே உண்மையானத் தேவை. 

அது போன்ற ஒரு பின்னணியில் வாழும் எந்த இந்திய குடும்பத்தவனும், வலியப் போயி டுப்பாக்கி தூக்குகிறேன் என்று அலையமாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன். ஏனெனில் நம் சமூக கட்டமைப்பு அப்படி அதற்கான ஊறல்கள் மனிதர்களை இப்படியாக நொதிக்க வைத்து தண்மை படுத்தி விடுகிறது என்ற அடிப்படை நம்பிக்கை கொள்ளல் வேண்டும். மாற்றம் சிறுகச் சிறுகத்தான் விதைக்க முடியும், அதுவே நீண்ட காலத்திற்கு நிற்கவும் செய்யும். இப்படியாகத்தான் இங்கே வாழ்வும் நகர்ந்து வந்திருக்கிறது. இத்துணை வெளிநாட்டு பிரவேசிப்பு, ஆக்கிரமிப்புகளுக்கு பின்னாலும்.

கிராமப்புரங்களில் இன்னும் எத்தனையோ இடங்களில் படித்தும் வேலை கிடைக்காத இளைஞர்கள் தனது பெயர்களுக்கு பின்னால் இருக்கும் மத அடையாளத்தால் வேலைகள் மறுக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரு நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் சென்று தனது இளமையை தொலைத்து, குடும்பத்தையும் பிரிந்து வாழ்கிறார்கள். அது போன்ற மனிதர்களில் பலரும் மீண்டும் ஊருக்கு திரும்பி கையிலிருக்கும் சொற்ப பணத்தில் தனது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு, மேற்கொண்டு தனது குடும்பத்துடன் ஒரு நிம்மதியான பொருளாதார தன்னிறைவை எட்டி வாழ முடியாத பட்சத்தில் இன்னும் பலரும் இருக்கிறார்கள். 

எங்கள் ஊரில் பெரும்பாலான மக்கள் கருவாட்டுக் கடையும், கறிக்கடையும், காய்கறி/பழக்கடைகளும், பேரீச்சை பழத்திற்கு இரும்பு வாங்கிக் கொண்டும், மிதிவண்டிகளில் ஐஸ்க்ரீம் விற்றுக் கொண்டும் இருப்பவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களும் ஏனையவர்களைப் போல பெரும்பான்மையுடன் தனது பிள்ளைகளுக்கு எது போன்ற வாழ்வு வேண்டுமென்ற தேர்ந்தெடுப்பு சமூகத்தில் வளர்க்க வேண்டுமென்ற ஆவலை உருவாக்காது போனது யாருடைய குற்றம்?

இப்படியான மறுக்கப்பட்டச் சூழலில் இயல்பாகவே அரசியல் நடத்தும் குருந்தாடி மனிதர்களில் சிலர் ஏதோ சில பல கேள்விகளை அள்ளி வீசி - ஏன் இப்படியாக மாற்றான் தாய் மகன் என்ற முறையிலே நம் பூர்விக மண் என்றாலும் நடத்தப் பெறுகிறோம் என்று கேள்வியே  வீசி குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதனைப் போன்று உருவாக்கும் சூழலுக்கு இட்டு, அவர்களும் மண்டையை குடைந்து கேள்விக்கான பதிலை தேடிக் கொண்டிருக்கும் பொழுது, இந்த கமல்ஹாசன்களின் உலகளாவிய தீவிரவாத எக்ஸ்போர்ட் கல்வியூட்டு செயல்முறை கேளிக்கை படம் தேவையற்றது. அது தன்னை காதலிக்காத பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசு என்ற செயல்முறை வகுப்பு எடுப்பதற்கு ஒப்பானதுதானே!

அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்ட தவறான(?!) கேள்விகளுக்கான பதிலை எட்டி நியாயமான கேள்விகளுக்கு முகம் கொடுக்கிறோம் என்ற நிலைக்கு எட்டும் முன்பு எனது பக்கத்து வீட்டு குடும்பத்திற்கும், எனக்கும், நண்பனுக்கு நல்ல வேலை, வசதி வாய்ப்பு தேவை. நான் எங்கும் சென்று பஞ்சம் பிழைக்க புறப்பட்டு செல்லும் இடத்தில் வைத்து என் மூளை சலவை செய்யப்படுவதற்கு முன்பு இது நடந்தாகணும்.

பிரச்சினையை தூண்டி விடும் சலசலப்பான விசயங்கள் தேவை இல்லை.  நமக்கு இந்தச் சூழலில் பிரச்சனையின் ஆணி வேருக்குச் சென்று பேசி அதற்கான தீர்வை நோக்கி மனிதர்களின் மனதில் ஈரத்தை விதைக்கும் அடிப்படையைப் பேசும் படங்களே தேவை. சிறு பிள்ளைத்தனமான படங்களாகவோ அது கேளிக்கைக்கான படங்களாகவோ இருந்தாலும்.

கமலின் கேளிக்கைக்கான படமான இந்த விஸ்வரூபத்தில் கமல் எப்படி குழந்தைகள் தீவிரவாதத்தின் பால் ஈர்க்கப்படுகிறார்கள், எது அவர்களை அது போன்ற ஒரு சூழலில் போடுகிறது, நம்மூர் கிராமப்புறங்கள் வறுமையில் வாழும் குழந்தைகளுக்கும் இப்படியான ஒரு நிலை வந்துவிடக் கூடாதுங்கிற அக்கறையில் நடுநிலையில் நின்று இந்த தீவிரவாதத்திற்கான பரவலை தடுக்க தனது அறிவுஜீவி எண்ணங்களை பயன்படுத்தி இருப்பார் என்று சிலர் நம்பி படத்தை ஆதரிக்கலாம். படத்தைப் பார்த்தபிறகு மற்றொரு பதிவின் மூலமாக இந்த படத்தின் அரசியல் கூறுகளை அலச வாய்ப்பிருக்கிறது அப்பொழுது சந்திப்போம். அதுவரையிலும் இதையே படிச்சிட்டு இருங்க !



பி.கு: என்னுடைய பால்ய காலத்து கல்லூரி படிப்பு திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியிலேயே தொடங்கியது. எனக்கு வாய்த்த அனைத்து நண்பர்களும் அந்த சமூக பின்னணியிலேயே இருந்தார்கள். எனக்கு பரிணாமம் முதல் மரபியல் வரை கல்வியூட்டிய அறிவார்த்தமான பேராசியர்களும், அறிவியர்களும் இவர்களே! எனவே கமல் தொட்டுப் போகும் விசயம் நமது தமிழகத்திற்கு தேவையற்றது. அவர்களுடனான உரையாடலுக்கான சாளரம் எப்பொழுதோ நமது நாட்டில் திறந்து வைத்தாகி விட்டது. அதனை எப்படி நாம் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதனை பொருட்டே, பின் வரும் காலம் அமையவிருக்கிறது.

10 comments:

வவ்வால் said...

தெ.கா,

//நம்முடைய உடனடித் தேவை உள்ளூருக்குள் எப்படியாக அனைவருக்கும் எல்லாமும் கிட்டும் ஒரு நிலையை எட்டுவது என்பதாகத்தான் இருக்க வேண்டும். பரம்பரை பரம்பரையாக இங்கே வாழ்ந்து, உண்டு, வளர்ந்து, மடிந்து வாழும் அனைவருக்கும் கல்வியும், வேலையும் நீக்கமற கிடைப்பது போல ஒரு அடிப்படையான வாழ்வாதாரத்தை அமைத்து, எல்லாரையும் போல வாழ அனைவருக்கும் ஒருவாழ்வு அடிப்படையிலேயே கிடைக்க வேண்டிய சூழலை, ஒரு வாய்ப்பை அமைத்து கொடுப்பதே உண்மையானத் தேவை.
//

நாம் பேச வேண்டிய பேசாப்பொருள்களும்,பிரச்சினைகளும் ஏராளம் அப்படி இருக்கையில் இப்படம் நீங்கள் சொன்னார்ப்போல ஒரு கொள்ளிக்கட்டை தான்.

எனக்கு பிடிக்காத கருத்தாக இருந்தாலும் படைப்புக்கு தடை என்பதை ஏற்க இயலவில்லை, எனவே தார்மீக ரீதியாக தடையையும் எதிர்க்க வேண்டும்.

Thekkikattan|தெகா said...

//எனக்கு பிடிக்காத கருத்தாக இருந்தாலும் படைப்புக்கு தடை என்பதை ஏற்க இயலவில்லை, எனவே தார்மீக ரீதியாக தடையையும் எதிர்க்க வேண்டும்.//

இந்த நிலையில் நானும் இணைகிறேன். இருப்பினும் ஏதோ பேசவே முடியாத, ஆண்மைத்தனமான விடயத்தை எடுத்து இவர் பேசிவிட்டதாக சிலர் மார்தட்டிக் கொண்டு அலைவதும் சகிக்கவில்லை. எல்லையில் நடந்த இந்திய சிப்பாய்களில் தலை கொய்தல்களுக்கு எது போன்ற விடை இது போன்ற சினிமா ஹாசன்களிடமிருந்து.

அப்படியே இவர்கள் தீர்வாக கொடுக்கும் விடயத்தை எடுத்து நடத்த நமது அரசாங்கம் பல முறை யோசிக்கப்போவது என்னவாக, எதுக்ககாவா இருக்கலாம்.

சினிமாவில் படம் காட்டி என்ன செய்வது?

கல்வெட்டு said...
This comment has been removed by the author.
கல்வெட்டு said...

.

தெகா,
படத்திற்கான விமர்சனம் அல்ல என்று நீங்கள் சொல்லியிருக்கும் பார்வையில் நான் ஒத்துப்போகிறேன்.

ஆனால் ஒரு கதைக்களனை தேர்ந்தெடுத்து, அந்த கதை மாந்தர்கள் அந்தக் கதைக்களனுக்கு ஏற்ப பேசும் ஒரு படம், தமிழக மண்ணிற்கு ஒத்துவராது என்றால்.... சாக்கிசானின் படங்கள்கூட நமக்கு தேவையில்லாதது. சிலம்பம் ஆடும் சாக்கிசான் படம் வரும்வரை.

எனது நிலை. மதமே வெளியில் இருந்து வந்தது எனும்போது ..படத்தை தடுக்கக் கூடாது.

.

Thekkikattan|தெகா said...

கல்வெட்டு, நானும் புதிய முயற்சிகளை மேற் கொள்ள வேண்டாம் என்று நினைக்கும் கட்டுப் பொட்டியானவன் அல்ல. இருப்பினும் நமது சமூகத்திற்குள் நடக்கும் தினப்படி மனித போராட்டங்களை நைச்சியமாக ஒரு தெருவிற்குள் வாழும் இரண்டு (வேறுபட்ட மத பின்னணி) குடும்பங்கள் தங்களது வாழ்வை நகர்த்த நடாத்தும் போரட்டங்களையே முழு நீள படமாக எடுத்து அதனை எப்படி உலகப்படமாக மாற்ற முடியும் என்றும் அவருக்குத் தெரியும்.

அது போன்ற படங்களே உலகத்திற்கு எப்படி இந்தியா தீவிரவாத மனிதர்களை உருவாக்கி கொடுக்காமல் வைத்திருக்கிறது என்று பாடம் கற்றுக் கொள்ள முறையாக அமையும். சாதா மனிதர்களுக்கும் உலக அரசியல் ஜாம்பவான்களுக்கும் இதுவே தேவை!

சிராஜ் said...

அருமையான ஆக்கம்...
பட் படிக்க லேசா கஷ்டமா இருந்துச்சு...
ரொம்ப நல்லா இருக்கு... உங்கள் போன்றவர்கள் தான் சமூக நல்லிணக்கத்தின் எதிர்காலம்...

குறிப்பு : நானும் ஜமாலில் தான் என் இளங்கலைப் பட்டத்தை பெற்றேன்...

குறும்பன் said...

\\இந்த கமல்ஹாசன்களின் உலகளாவிய தீவிரவாத எக்ஸ்போர்ட் கல்வியூட்டு செயல்முறை கேளிக்கை படம் தேவையற்றது\\ படம் சரியில்லை என்றால் போட்ட காசு நட்டம் அதுக்காக இப்படம் தேவையற்றது என்று எப்படி சொல்லமுடியும்? எனக்கு பிடிக்காத பல படங்கள் வந்திருக்கின்றன இனி மேலும் வரும் அப்படிப்பட்ட படங்கள் தேவையற்றது என்பது என் கருத்து ஆனால் சிலர் அதை விரும்பி பார்க்கிறார்களே.

\\அது தன்னை காதலிக்காத பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசு என்ற செயல்முறை வகுப்பு எடுப்பதற்கு ஒப்பானதுதானே! \\ கேளிக்கை படம் தேவையற்றது என்பதற்கு இந்த சொல்லாடல் சரியானது அல்ல என்பது என் கருத்து.

படத்தை பாருங்க கருத்தை வைங்க :))

Thekkikattan|தெகா said...

சிராஜ், வணக்கம்!

நீங்களும் ஜமாலா? மகிழ்சி!! :)

//பட் படிக்க லேசா கஷ்டமா இருந்துச்சு...//

அது நான் ஒரு கமல் ரசிகன். அதான் அவரோட ஜாடை எனக்கு ஒட்டிக்கிச்சு :)) .

பார்க்கலாம்,எப்படி காலம் நகருதுன்னு.

Anonymous said...

விகிர்த்த பரினயத்தனமையுடன் கூடிய கருத்துக்களே சூழ்நிலைகாரனமாய் வலம் வந்த வேளையில் பரிசுத்த பக்கபலத்துடன் வஞ்சிரா சூரியனின் வர்ண தூரிகை தீட்டிய தம்போகித சித்திரம் போன்ற இந்த பொன் வெங்கிய ஜலபாதின கட்டுரை அருமை. சக்கிர நாதமென செளபாம்பர மெளனம் காத்த பத்திர சுகர்த பதிவர்கள் நடுவே நீங்கள் நித்தில தோமையோர்பின் ஜமதக்னியான வென் சீற்ற பதிவராக் மிளிரிகிறீர்கள்.

அம்மோலோக்கியத்தனம் நிறைந்தா சைந்தர மதிபாலன் வகையிலான விளம்பரம் கிடைக்கவே கைந்தீக வால்கண்ணாடியான புனைவோ ?

கஞ்சிராமை கொண்ட படத்துக்கு லெளகீக வாம்சிவ பாலச் செவ்வந்திய நிலை எடுத்தால் மட்டுமே பாராட்டு பத்திரம் வசிக்க இயலும்.தாபரசம்பத்துவத்தின் நிலையில் உள்ள நடுவேட்டுவர்கள் உள்ளமும் அது தான் இது உள்ளங்கை நெ.க.

சையது உசேன்.

Thekkikattan|தெகா said...

திரு. சையது உசேன், உங்கள் தமிழின் நடையை புரிந்து கொள்ள நான்கு பேர் சேர்ந்து வட்டமேசை போட்டு உடைத்து தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

மற்ற பதிவுகளையும் வாசித்து தொடர்ந்து கருத்துக்களை கொடுத்து வாருங்கள். நன்றி! :)

Related Posts with Thumbnails