Friday, July 10, 2009

தமிழ் பெரும் விழா - தாமரை - வைரமுத்து: Fetna 2009 - II

அடுத்த நாள் விழாவை ஓரளவிற்கு முழுமையா பார்த்த மாதிரி இருந்தாலும், காலையில 9.30 மணிக்கு முன்னால் வரைக்கும் நடந்த நிகழ்ச்சிகளை பார்க்க முடியல [எனது முதல் நாள் அனுபவம் இங்கே]. ஏன்னா வீட்டிலருந்து கிளம்பி வந்ததே தாமதம். நான் வந்து அமர்ந்த சிறிது நேரம் கழிச்சு ஐயா சிலம்பொலியார் அவர்கள் பேசக் கேட்டேன். அவர் நம் தமிழ்ப் பெயர்கள் என நம்பி வைக்கும் சில பெயர்களுக்கு உண்மையான பொருள் என்ன என்று தமிழிலாக்கி காமித்த விதம் அரங்கையே வெடிச் சிரிப்பு சிரிக்க வைத்தது.

அதனைத் தொடர்ந்து ஒரு அரட்டை அரங்கம் பாணி நிகழ்ச்சி ஒன்று. அது ஓடிட்டு இருக்கும் போது என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரை ஆவலுடன் கவிஞர். தாமரை வந்திருக்கிறாரா என்று கேட்டேன் அதற்கு அவர் வரவில்லையென்று நினைக்கிறேன் என்று கூறிக்கொண்டே நிகழ்ச்சி நிரல் அட்டையின் மீது தனது அலைபேசியின் வெளிச்சத்தை நிரப்பி தேடி இல்லையென்றார்.

இதென்ன புதுக் கதை! நான் இந்த விழாவிலே நண்பர்களன்றி தாமரைக்காகவும் தான் இத்தனை நெருக்கடியிலும் அங்கு சென்றேன். ஆனால், உட் கட்சி பூசலோ இல்லை வேறு என்ன காரணத்தாலோ தாமரை கழட்டி விடப்பட்டிருக்கிறார் போல. எனக்கு ஒரு ஆள் மேலதான் கண்ணா இருக்கு, பார்ப்போம்; பின்னால் என் கெஸ் சரியா என்று. உண்மை பேசுற எவனுக்கும் கிடைக்கும் மரியாதை இப்படியாகத்தான் இருக்க முடியுமென்று பக்கத்து இருக்கையாளரிடம் முனகிக் கொண்டே சீட்டில் நெளிந்தேன்.

அங்கயே பல விதப் பட்ட எண்ணங்களால் சிக்குண்டது மனது. என்ன உலகமிது? மனித மனம் எப்பொழுதும் உண்மைகளை மறுத்து, போலியாக நடித்துக் கொள்வதிலயே அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது. போலி மனிதர்கள் தன் நிறம் உயர்த்தி காமிக்க முகச் சாயங்களுக்கு கீழ் ஒளிந்து, உதட்டில் இனிப்பு தடவிய வார்த்தைகளைக் கொண்டு பேசும் விற்பனை மனிதர்களை அப்படியே நம்பி தெரிந்தே வாங்க எத்தனிக்கும் நம் மனது, தெரிந்தே, உண்மை பேசுபவர்களை தவிர்க்க முனைகிறதே, இது எதனால்? பிரச்சினைகளிலிருந்து தன்னை விளக்கி வைத்து, ஒரு பாதுகாப்பான இலக்கிய, காலச்சார காவலன் அவதாரம் எடுக்கத்தானோ? இது எப்படி, தனியொருவனாக தன்னுள்ளே என்றேனும் ஒரு நாள் உண்மையான "அவனை" சந்திக்கும் பொழுது அவன் வாழ்வே அவனை பார்த்து நகைப்பதிலிருந்து விலகி நிற்பதாக அன்றும் தன்னை ஏமாற்றிக் கொள்ள முடியும்? இப்படியே எண்ணச் சுழிப்பில் சிக்குற எத்தனித்தது என் மனது...

பின்பு மதிய உணவு இடைவேளை, அதனின்று எனை மீட்டது. சாப்பாடு அசத்தல்! செட்டிநாடு போல, நல்லாவே பண்ணியிருந்தாங்க. அங்கே ஒரு ஜிகு, ஜிகு பிரபலம் கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்தில், மேஜைக்கு மேஜைக்கு "நீங்க, ரொம்ப அழகா இருக்குறீங்க" பாட்டு பாடியிருப்பாங்க போல சுளுக்காம சிரிச்சிட்டே எதிர்பாட்டு "நன்றிங்க" சொல்லியிருப்பார் போல, அதப் பார்த்திட்டே நான் அரை "நான்(bread)" சாப்பிடாம தட்டிலயே விட்டுட்டேன். பிரபலம்ங்கிற வேலை ரொம்ப கஷ்டம்தானோ!

சாப்பாட்டிற்கு பிறகு நான் ரொம்ப சிலாகிச்சு பார்த்த ஒரு பேச்சுன்னா அது மனித உரிமை குழுவிலிருந்து வந்து பேசிய ஒரு வெள்ளக்காரம்மா டாக்டர் Ellyn Shander. அரங்கத்தில் இருந்த சில மக்களை நெளிய வைச்சு, மனசை நெருடுகிற ஸ்லைடுகளை இது வரைக்கும் நம்மக்களில் சிலர் பார்க்கவே கூச்சப்பட்ட(பயந்த) படங்களையும் வழங்கி அந்தம்மா பாதிக்கப்பட்ட ஈழ மக்களோட தன்னை இணைச்சு பேசிய விதம் என்ன சொல்றது. ம்ம்ம்.

அந்தம்மா இந்த ஈழ அவலத்தை தன்னோட இனமான யூதர்கள் , நாசி காலத்தில் பட்ட அவஸ்தைகளுக்கும், வேதனைக்களுக்கும் எந்த விதத்திலும் குறைந்ததல்ல இந்த ஈழ நிகழ்வு என்று, ராஜபக்சாவையும், ஹிட்லரையும் ஒரே ஸ்லைடில் காமிக்கும் பொழுது ஏன் இதனை இந்த ஒட்டு மொத்த உலகமும் அவ்வாறு கண்ணுறவில்லை என்ற கேள்வியே தொக்கி நின்றது என் முன்னால்.

ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த உணர்ச்சிகளோட பேசிக் கொண்டே சென்றார்கள். அப்பொழுதும் நினைச்சேன், இந்த சில்லூண்டி ஊர்க்கார சினிமாக் காரய்ங்க எல்லாரையும் கொண்டு வந்து முன்னாலே அமர வைச்சிருக்கலாம்னு. உண்மையான பாடத்தை ஒரு முறையாவது கேக்க வைக்க. தன் உரையை முடிப்பதற்கு முன்பாக பல முறை அரங்கம் உறங்குவதாக உசிப்பேத்தி மக்கள் அனைவரையும் "Next year in Eelam" என்று மூன்று முறைக்கும் அதிகமாக கூற வைத்து அரங்கத்தையே நடு நடுங்க வைத்துவிட்டார்.

உரையின் இறுதியில் அவரை ஊக்கப்படுத்தும் விதமாகவும், கெளரவிக்கும் விதமாகவும் எல்லாரும் எழுந்து நின்று கை தட்டியது அரைகுறை மனதோடும், தர்மசங்கடத்தோட ஏண்டா வென்று நினைத்தவர்களையும் கூட எழுந்து நிக்க வேண்டிய கட்டாயத்தில் நிறுத்தியது என்றால் மிகையாக இருக்க முடியாது.

அப்படியாக ஒருவர் முன் வரிசையில் அமர்ந்திருந்தார், எனக்கு அந்த டாக்டர் பேசப் பேச கண்டிப்பாக நம்மூர் கவிஞர் நெளிந்திருக்கக் கூடுமென்றே எண்ணச் செய்தது. அவர் வேறு யாருமல்ல நம்ம கவிப் பேரரசு வைரமுத்து அவர்களேதான். யார் அந்த நிகழ்ச்சி நிரலை அப்படி அமைத்தார்களோ தெரியவில்லை, ஆனால், கண்டிப்பாக கவிஞருக்கு ஒரு செம ச்சேலஞ்சாக அமைந்திருந்தது அந்த மேடை, டாக்டர் Ellyn Shanderக்குப் பிறகு. எனக்கு அப்பொழுதே தோன்றி விட்டது கவிஞர் கடுமையாக இன்னமும் சீரவேண்டும் டாக்டரின் இருப்பை அந்த அரங்கம் சிறிது நேரம் மறக்க வேண்டுமானலென்று.

ஆனால், இம் முறை அவரின் சீற்றம் வயதானால் காடுகளில் வசிக்கக் கூடிய புலிகள் பற்களை, நகங்களை, உடல் வலிமையை இழந்து நிற்கும் பட்சத்தில் எளிமையான விலங்குகளை கொய்துதான் தனது இருப்பை நகர்த்த முடியும். அது போலவே, இவரும் ஏதோ வந்துட்டேன் எல்லாரும் பார்த்துக்கோங்க; நான் தான் அந்தக் கவிஞன் அப்படின்னு மேடையேறி காமிச்சிக்கிட்ட மாதிரியும், ஃபெட்னா மலர் போட்டவர்களை தமிழ் வளர்க்க வேண்டுமானல் இப்படி வரலாறு புறக்கணிக்கப்படக் கூடாதென்று கூறி அண்ணா நூற்றாண்டு விழா மலரில் பசும்பொன் முத்துராமலிங்கம் இடம்பெறவில்லையென்று சீறினார். மேலும் பல சில உள்குத்துக்கள்!

பின்பு திருவிளையாடல் கே.பி சுந்தரம்பாள் பாட்டியை ஞாபப் படுத்துவதைப் போல ஒன்று... இரண்டு... மூன்று... என்று வரிசைப் படுத்தி கூறியதெல்லாம் "நேரக் கொலை" செய்வதின் பொருட்டாகவே நினைக்கச் செய்தது. மொத்தத்தில் என் பணம் அதை நோக்கிச் செல்லவில்லை எனும் போது சற்றே ஆறுதலாகவும் இருந்தது.

அவரின் உரை முடிந்ததுமே நான் மூட்டையைக் கட்டிக் கொண்டு வெளிக் கிளம்பி மீண்டும் நுழைவு வாயிலுக்கு வந்த பொழுது பயங்கர "எஸ்கார்ட்களுடன்" கவிப் பேரரசு தன்னைச் சுற்றி நிற்பவர்களையெல்லாம் எறும்புகள் கணக்காக பார்க்காமலயே என்னமோ ஒரு இறுக்கம் ஆழ்ந்து எதனையோ கேட்டுக் கொண்டே நடப்பதனைப் போல நடந்து சென்றதை ஒரு சில விநாடிகள், நானும் நடந்து கொண்டே பார்த்து தொலைத்து விட்டு வீட்டிற்கு வந்தடைத்தேன்.

காரை ஓட்டிக்கொண்டே சிந்தனைக்குள் பயணிக்க வேண்டியாதாகிப் போனது. இந்த மனிதர் அன்று கிராமத்து மனிதனின் எளிமைக்குள் புகுந்து தனது வாழ்வு எனும் பெரும் சமுத்திரத்தில் நீந்தத் தொடங்கிய காலத்திற்கும் இன்று நிற்கும் புள்ளிக்கும் உள்ள வித்தியாசங்களை கண்ணுற்றால் விரிசல் இரு பெரும் கண்டங்கள் விலகிப் போன தொலைவாகப் படுகிறதெனக்கு. மனிதனின் உயரங்களின் நிலை மாற மாற, மனித நிலைகளும் பல விசயங்களை இழக்கத்தான் நேரிடுகிறதோ. சிலர் தனது தூக்கத்தை, சிரிப்பை, சந்தோஷத்தை, சிலர் நல்ல நண்பர்களை, நல்ல தன்னிடம் உள்ள வாழ்வு நெறிகளை இப்படி... இவரின் முகத்தில் நிலவிய இறுக்கத்தை கவனித்தால் பெரும் நிகழ்வுகள் இவரின் எளிமையை சிதைத்துக் கொண்டிருப்பதாகப் படுகிறது...

அதனைத் தொடர்ந்து இரவு உணவும், பாட்டுக் கச்சேரியும் போல. ஆனால், எனக்கு அதுக்கு மேல தாங்காது என்பதால் கிளம்ப வேண்டியதாப் போச்சு. இத் தருணத்தில் இத்தனை எண்ணங்களையும் எனக்கு வாய்க்க பேருதவிய நண்பர் பழமைபேசிக்கு ஒரு நன்றி.

விழா சிறப்பாக நடந்தேற உழைத்தவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும், நன்றிகளும்!

நிறைய தமிழ்பதிவர்கள் வந்திருப்பாங்க போல, ஆனா, என் கண்ணில எப்படியோ தட்டுப்படாம தப்பிச்சிட்டாங்க. அடுத்த முறை வைச்சிக்கிறேன். இத்தனைக்கும் பரவாயில்லாம ஒரு டி-ஷர்ட்தான் போட்டுருந்தேன் :-) .

27 comments:

Anonymous said...

தெக்கி ...... இன்னும் சூடா எதிர்பார்த்தேன் ஹெஹெஹெ

பழமைபேசி said...

//ஒரு டி-ஷர்ட்தான் போட்டுருந்தேன் :-) . //

குசும்பு? இஃகிஃகி!!

தலை, ஏன் எல்லாரும் அரசியல் சம்பந்தமான விசயங்களிக்கே முக்கியத்துவம் தர்றீங்க....

அதை விட்டு வெளில வாங்க இராசா! வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம், நாங்கெல்லாம் கவியரங்கத்துல என்ன வாசிச்சோம். நீயா நானா நிகழ்ச்சியில என்ன பேசினோம்... இது போல எடுத்து வுடுங்க... நாமெல்லாம் எப்பவும் இருட்டுலயே இருக்க வேண்டியதுதானா? அவ்வ்வ்வ்........

Anonymous said...

கல்வெட்டு said...

//ரொம்ப கஷ்டப்பட்டு இந்த விழாவை முன்னெடுத்தி, எவ்வளவோ சகிப்புத்தன்மையோட//

***
ஏன் கஷ்டப்பட்டு நடத்த வேண்டும்?

**

வருடா வருடம் சில சினிமா xxxxxகைகளைக் கூட்டிவந்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்துவதைத்தவிர வேறு ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை.

***

Why do they exist as a sangam ?


இதுதான் அவர்கள் சொல்லும் காரணம்.

What is our objective?
http://www.fetna.org/index.php?option=com_content&view=article&id=47&Itemid=59

·To establish a centralized organization comprised of elected representatives of Tamil associations in North America and of individuals living in North America who have contributed to the objectives of the Federation and who join as Life Members.

ஒகே ... மெம்பர் சேர்த்தாகிவிட்டது. ஒரு குறிக்கோள் நிறைவேறிவிட்டது.

·To cultivate, promote, foster, and develop the advancement of knowledge in Tamil language, literature and culture.

நெஜமாகவே இதில் என்ன நடந்துள்ளது என்று அறிய ஆவல்.
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழங்களில் எத்தனை பல்கலை, தமிழ் மொழிக்கு துறைகளை ஒதுக்கியுள்ளது என்ற தகவலாவது உண்டா?

வடக்கு கரோலைனா பல்கலைக்கழகத்தில் துறைப்பேராசிரியரிடம் தொடர்பில் உள்ளதால் உண்மை நிலை தெரிந்தே கேட்கிறேன்.

1.cultivate,
2.promote,
3.foster, and
4.develop

இதற்கு என்ன அஜெண்டா (action plan) உள்ளது ?



·To cultivate, promote, and foster the exchange of ideas and understanding between the Tamil people and other cultures.

???

·To promote better understanding and foster friendship among various Tamil associations in North America and to encourage the formation of new Tamil Sangams.

சங்கத்தை வைத்து என்ன செய்வது என்றே தெளிவில்லாதபோது நிறைய சங்கங்களை பெருக்கி ...அப்ப்புறம் ??

·To act upon charitable causes directly concerning the welfare of Tamil community living throughout the world.

காமெடி... மலேசியத் தமிழர்கள் அல்லது இலங்கத் தமிழர்கள் அல்லது துபாய் தமிழர்கள் , கனடா தமிழர்கள் ...தமிழ் நாட்டுத் தமிழர்கள் ...இவர்களுக்காக செய்ய என்ன அஜெண்டா உள்ளது ?

*******************

மனமகிழ் மன்றம், வருத்தப்படாத வாலிபர் சங்கங்களுக்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை. சும்மா பொழுது போக்குச் சங்கங்களே இவை.

கூட்டமாகச் சேர்ந்து பொழுதைப் போக்க நல்ல அமைப்பு. மற்றபடி எதிர்பார்க்க ஒன்றும் இல்லை.

Thekkikattan|தெகா said...

கல்வெட்டு உங்க பின்னூட்டத்தை பார்த்தவுடன் கைகால் எல்லாம் உதறிடுச்சு போல ;-), மூணு வேலைய ஒரே நேரத்தில செய்ய முற்பட்டேனா, உங்க பின்னூட்டத்தை தேர்வு செஞ்சு ரிஜெக்ட் பண்ணிட்டேன்
அதான் வெட்டி ஒட்டியிருக்கேன்...

உங்க பின்னூட்டம் படிச்சிட்டு வாரேன்.... என்ன சொல்லப் போறேனோ, உதறுதே :)))

கல்வெட்டு said...

//கல்வெட்டு உங்க பின்னூட்டத்தை பார்த்தவுடன் கைகால் எல்லாம் உதறிடுச்சு போல ;‍)//

ம்ம்ம்..இது பார்ட் 1 க்ககு போட்ட பின்னூட்டம் ஆச்சே?
http://thekkikattan.blogspot.com/2009/07/fetna-2009atlanta-i.html

***

எழுதும்போதே எனக்கும் உதறியது :-)))

என்ன மாத்து வாங்கப்போறேன் என்று எண்ணி. பல இடங்களில் சொல்லி வாங்கிக் கட்டிக்கொன்ட ஒன்றுதான் இது. இன்னும் கொஞ்சம் வாங்கிக் கட்டிக் கொள்வதால் ஒன்றும் ஆகாது எனவேதான் .... :-))))

***

மனமகிழ் மன்றங்கள் என்ற அளவில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. மானாட மசிராட போல டான்ஸ் காட்டுறோம் வாங்க பாசு நூறு ரூபாய்தான் என்றால் பிரச்சனை இல்லை. ஆனால்.....
கலாச்சாரம், தமிழ் வளர்ச்சி, உலகளாவிய தமிழ்த்தொண்டு, உலகத்தமிழர்நலன், என்ற அடிப்படை குறிக்கோள் ஜல்லியைத்தான் தாங்க முடியவில்லை.இந்தக் கருமத்தில் வடக்கு கரோலைனாவில் ரெண்டு தமிழ்ச்சங்கம் இருக்கு தெரியுமா? xxx க்கு ஒன்று, மற்றவர்களுக்கு ஒன்று.

http://www.tcanc.org/
http://www.carolinatamilsangam.org/

அரசூரான் said...

தாமரை வருவார் என நான் கூட நிறைய எதிர்பார்ப்புகளுடன் இருந்தேன், அவரால் வர இயலவில்லை.

Thekkikattan|தெகா said...

அரசூரான் said...
தாமரை வருவார் என நான் கூட நிறைய எதிர்பார்ப்புகளுடன் இருந்தேன், அவரால் வர இயலவில்லை.//

அரசூரான், வாங்க! வரமுடியவில்லையா இல்லை அப்படி ஆக்கப்பட்டாரா, தெரியாமத்தான் கேக்குறேன் தெரிஞ்சா பகிர்ந்துக்கோங்க. என்னாச்சுன்னு.

Anonymous said...

வருடா வருடம் சில சினிமா xxxxxகைகளைக் கூட்டிவந்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்துவதைத்தவிர வேறு ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை.

உண்மை . ஒருமுறை சென்றதோடு சரி. இப்போதெல்லாம் எந்த தமிழ் சங்க நிகழ்ச்சிகளுக்கும் போவதில்லை.

அருண்

Anonymous said...

தாமரை அழைக்க கூடாதன சில அமைபளர்கள் சொன்னதாக கேள்வி.

Thekkikattan|தெகா said...

Anonymous said...
தெக்கி ...... இன்னும் சூடா எதிர்பார்த்தேன் ஹெஹெஹெ//

ஏம்பா, நல்லாருக்குறது புடிக்கலையா... உசிப்பேத்தி, உசிப்பேத்தியே அனுப்பி வைச்சிருவீங்க போலிருக்கே!



பழமையாரே,

//தலை, ஏன் எல்லாரும் அரசியல் சம்பந்தமான விசயங்களிக்கே முக்கியத்துவம் தர்றீங்க....//

என்னய "தல"யாக்கிப்புட்டீங்களா இப்போ.... நானும் அவ்வ்வ்வ்வ்வ்வ் :)))

அதுதானே எல்லா இடத்திலும் நடக்குது. அதுவும் அப்பட்டமா அதான் பளிச்சின்னு கண்ணுல தட்டுப்படுது போல.... எல்லாம் வயசுதான் ...

//நீயா நானா நிகழ்ச்சியில என்ன பேசினோம்... //

என்ன இருந்தாலும் நீங்க கலந்துகிட்ட அந்த அரட்டை அரங்கம், மறக்க முடியுமா? செமயா ஒரு பஞ்ச் வைச்சு எல்லார் வாயயையும் அடைச்சுப்புட்டிகளே :-)).

//நாமெல்லாம் எப்பவும் இருட்டுலயே இருக்க வேண்டியதுதானா? அவ்வ்வ்வ்.......//

யார் சொன்னா நீங்க இருட்டுக்குள்ளர இருந்தான்னு, நாம இருட்டுக்குள்ளர இருந்தாலும் நீங்க பளிச்சின்னு தானே தெரிஞ்சீங்க :-P. டையமெண்ட்தான் வெளிச்சத்தில இருந்தாலும் இருட்டுக்குள்ளர இருந்த மாதிரியே தெரிஞ்சார் .... அவ்வ்வ்வ் ன்னு சொல்லதீக திரும்பவும் :D.

பழமைபேசி said...

கல்வெட்டு ஐயா,

வணக்கம்! தலைமைங்றது வேற யாரும் அல்ல, நம்முள் ஒரு சிலர்தான்... எத்தனை இளைஞர்கள் முன்னாடி வந்து நிக்கிறாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க?

எதோ பெருசுகதான் கெடந்து அல்லாடிட்டு இருக்குறாங்க... அவங்களுக்கு ஊர்ல பெருசா யாரும் தொடர்புல இருக்க வாய்ப்பு இல்ல... அதனால மத்தவங்களை நம்பித்தான் அவங்க....

அப்படியிருந்தும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்துல ஒரு துறை தமிழுக்கு இருக்கு... அதுபோல இன்னும் குறைஞ்சது இரண்டு பல்கலைக்கழகத்துலயாவது கொண்டு வந்திடணும்ன்னு மேடையில பேசினது யாரும் காதுல கூட வாங்கலை.... அதான் பிரச்சினை!

எனக்கு இதான் முதல் அனுபவம்... யரையும் முன்கூட்டியே எனக்குத் தெரியவும் தெரியாது... நுழைவுச்சீட்டு கிடைக்காம அல்லாடிட்டு இருந்தேன்...

போனதுக்கு அப்புறமாதான் தெரிஞ்சது... அவங்க திறந்த மனதோடதான் இருக்காங்க...

சமச்சீரோட நடத்தியும் விகடன்ல எதோ ஒரு இயக்க மாநாடு மாதிரித் திரிச்சி விட்டுட்டாங்களே?

என்னைப் பொறுத்த வரைக்கும் இளைஞர்கள் கூடக் கூட வளர்ச்சியும் வரும்... அதுக்கு நீங்களும் நானும் உழைக்கணும்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எல்லா ஊருலயும் அதே கதை தான் சங்கங்கள் ஒரு கூட்டமா கூடி ஜாலியாக இருக்க.. நீங்க எதயாச்சும் சாதிக்கன்னு நினைச்சீங்களா.?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பஞ்ச் எல்லாம் வைக்கிறீங்க.. :)

Thekkikattan|தெகா said...

அரசியல் காலச் சூழலில்...

நீங்கள் கூறியிருக்கும் "அந்தப் பெருசுகள்" தன்னலமற்று இது போன்ற நிகழ்வுகளில் திறந்த மனதுடன் இயங்கி வருகிறதென்றா நினைக்கிறீர்கள்? எனக்குத் தெரிந்த வரையிலும் இது போன்று நாலு பேர் கூடும் இடங்களில் தங்களுடைய "அந்தஸ்தின்" அடையாளத்தை தேடிக் கண்டுபிடிப்பதில் நடக்கும் போட்டா போட்டியில் உண்மை "நெருப்புடன்" இருப்பவர்கள் காணாமல் அல்லவா அடிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் பலப் பல காரணிகளைக் கொண்டு (உ.தா: பணம், பட்டம், செய்யும் வேலை, தனது சமூக பின்னணி இத்தியாதி, இத்தியாதி...).

இருந்தாலும் உங்களின் தனிப்பட்ட முன்னெடுப்புகள் [விழாவில் கலந்து கொள்ளும் பாங்கு - very positive personality] என்னைக் கவராமலில்லை...

கல்வெட்டு said...

பழமைபேசி,

1. விகடன்/குமுதம்/அந்த பிரபலம் என்ன சொன்னார் என்பது குறித்தான அக்கரை/கவலைகள் எனக்குகிடையாது. விகடனோ/குமுதமோ நிகழ்வுகள் எதையும் தீர்மானிப்பது கிடையாது. நிகழ்வுகளை அவர்கள் சட்டகத்திற்குள் பொருத்தி அவர் அவர் அரசியல் நிலைப்பாடுகளுடன் செய்தியாக வெளியிடுவார்கள். ஒரே நிகழ்வு Fox இல் ஒன்றாகவும் CNN இல் ஒன்றாகவும் செய்தியாக்கப்படும். இது ஊடகங்களின் அரசியல் . நிகழ்ச்சி அமைப்பாளர்களால் ஒன்றும் செய்ய முடியாது. கவர் செய்ய கவர் வேண்டுமானல் தரலாம். ஊடகங்கள் எங்ஙனம் நிகழ்வைச் செய்தியாக்கின்றது என்பது உங்களின் கவலையாக இருக்கலாம். அது மிக முக்கியமானதுதான். ஆனால் நான் எடுத்துக்கொண்ட விசயம் அதுவல்ல.


2.என்னுடைய நோக்கம் எல்லாம் சரியான இலக்கை நிர்ணயிப்பதே. அதாவது

Why do they exist as a sangam ?

இதை நிர்ணயித்துவிட்டால். அதை எப்படி அடைவது என்பது பற்றி பேச வழி இருக்கும்.

3.இலக்கே சேர்ந்து கும்மி அடிப்பது என்றால் அதில் தவறே இல்லை. மனமகிழ் மன்றங்கள் அவசியம் தேவை. கொண்டாட்டங்கள் இல்லாத வாழ்க்கை சுவராசியமாக இருக்காது.ஆனால் காசு வேண்டும்/கூட்டம் வேண்டும் என்பதற்காக சினிமா xxxxக்களை வருடா வருடம் அழைத்தே தீருவோம் என்றால் அதற்கு ரிக்கார்டு டான்ஸ் நடத்தி கூட்டம்/பணம்/உறுப்பினர் சேர்க்கலாம்.

4.இலக்கு என்னவாக இருக்கவேண்டும் என்பதை நிர்வாகிகள் கேட்டால் அதற்கான பரிந்துரைகளைச் செய்யத்தயார்.

5.எனது பரிந்துரைகள் ஏற்கப்படும் பட்சத்தில் அதற்கான உழைப்பை வழங்கத் தயார்.

கூத்து நடத்துவதற்கும் வெட்டி அரட்டைகள் அடிப்பதற்கும் தமிழ் என்ற பெயரில் சங்கம் தேவை இல்லை. "மானட மசிராட சங்கம்" என்றே இருக்கலாம். அல்லது "நீயா? நாயா?" என்று அரட்டைக் கச்சேரி நடத்தலாம். சும்மா கூடி பேசி உண்டுகழிக்க வேறு பெயரில் சங்கம் நடத்தலாம்.

"தமிழ்ச்சங்கம்" என்ற சொல் தெரிந்தோ தெரியாமலோ தமிழ் வளர்ச்சியுடன் தொடர்புடைய ஒன்றாகவே தெரிகிறது எனக்கு. அது எனது குறையாக இருக்கலாம். :-((

கல்வெட்டு said...

//எல்லா ஊருலயும் அதே கதை தான் சங்கங்கள் ஒரு கூட்டமா கூடி ஜாலியாக இருக்க.. நீங்க எதயாச்சும் சாதிக்கன்னு நினைச்சீங்களா.?//

முத்துலெட்சுமி சொல்வதுதான் உண்மை. அதுதான் நடக்கிறது. அதுவேதான் நட்க்கும்.அதில் தவறு கிடையாது.

ஆனால் கலாச்சாரம், தமிழ் வளர்ச்சி, உலகளாவிய தமிழ்த்தொண்டு, உலகத்தமிழர்நலன், என்ற அடிப்படை குறிக்கோள் ஜல்லியைத்தான் தாங்க முடியவில்லை.

What is our objective?
http://www.fetna.org/index.php?option=com_content&view=article&id=47&Itemid=59

Thekkikattan|தெகா said...

oops, பாதி நான் மேலே போட்ட பின்னூட்டத்தை வெட்டி ஒட்டும் பொழுது தவறவிட்டுருக்கேன்... முழுசும் கீழே.... உர்ர்ர்ர்ர்ர்ர் ங்காதீங்க... :)

கல்வெட்டு எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். நம்ம பழமைபேசி அவர்கள் இதன் பொருட்டு சில விசயங்களை எனக்கும் சேர்த்துத்தான் தெளிவு கொடுக்க தயாராக இருப்பது போல இருக்கிறது வாங்க பகிர்ந்துப்போம்...

பழமை இப்போ நான் சொல்ற சில விசயங்களையும் கருத்தில போட்டுக் கொண்டு மேலும் தொடருங்கள் உங்களின் "பாசிடிவான" அணுகுமுறையை - எல்லா இடத்திலும் நீக்கமற நிரைந்திருக்கும்
அரசியல் காலச் சூழலில்...

நீங்கள் கூறியிருக்கும் "அந்தப் பெருசுகள்" தன்னலமற்று இது போன்ற நிகழ்வுகளில் திறந்த மனதுடன் இயங்கி வருகிறதென்றா நினைக்கிறீர்கள்? எனக்குத் தெரிந்த வரையிலும் இது போன்று நாலு பேர் கூடும் இடங்களில் தங்களுடைய "அந்தஸ்தின்" அடையாளத்தை தேடிக் கண்டுபிடிப்பதில் நடக்கும் போட்டா போட்டியில் உண்மை "நெருப்புடன்" இருப்பவர்கள் காணாமல் அல்லவா அடிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் பலப் பல காரணிகளைக் கொண்டு (உ.தா: பணம், பட்டம், செய்யும் வேலை, தனது சமூக பின்னணி இத்தியாதி, இத்தியாதி...).

இருந்தாலும் உங்களின் தனிப்பட்ட முன்னெடுப்புகள் [விழாவில் கலந்து கொள்ளும் பாங்கு - very positive personality] என்னைக் கவராமலில்லை...

Thekkikattan|தெகா said...

//காமெடி... மலேசியத் தமிழர்கள் அல்லது இலங்கத் தமிழர்கள் அல்லது துபாய் தமிழர்கள் , கனடா தமிழர்கள் ...தமிழ் நாட்டுத் தமிழர்கள் ...இவர்களுக்காக செய்ய என்ன அஜெண்டா உள்ளது ? //

கல்வெட்டு தங்களின் ஆதங்கம் என்னவென்பது தெளிவாக புரிகிறது; எந்தத் தொனியில் இந்தக் கேள்விகளை முன்னெடுத்து வைத்திருக்கிறீர்களென்று. வேறு பல இடங்களிலும் வைத்து "டின்" வாங்கியிருக்கிறீர்களென்றால் இத்தனை ஆண்டுகளாகியும் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லையா?

பார்க்கலாம், இந்த ஆண்டு நிறைவுக்கு பிறகு யாரேனும் இதற்காக பல ஆண்டுகளாக உழைப்பவர்கள் முன் வந்து சில நியாயமான கேள்விகளுக்கேனும் பதிலுரைக்கிறார்களா என்று.

கல்வெட்டு said...

தெகா,
எனது விமர்சனங்கள் எல்லாம் இவர்களின் அடைப்படைக் கொள்கைகள் குறித்தனதே. அது (இலக்கு) தெளிவாகிவிட்டால் எப்படிச் செல்வது என்று பேசலாம்.

***

உலகளாவிய தமிழர்நலன் ஜல்லி/சொம்புகளைவிட்டுவிடுங்கள். அது எல்லாம் ரொம்ப தூரம். சீசன் காலத்தில் அந்த சீசனுக்கு தகுந்த ஆட்களை கொன்டுவது பேசவைத்தால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன?

**
வட அமெரிக்காவில் ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸ் என்று வைத்துக் கொள்ளுங்கள்... அல்லது எந்த சொந்த பந்தமும் அமெரிக்காவில் இல்லாத புதிதாக அமெரிக்க பல்கலையில் வந்து சேரும் புத்தம் புதிய தமிழ் மாணவருக்கான‌ ( தமிழ்நாடு,இலங்கை,கனடா,மலேசியா...etc பின்னனி கொண்ட தமிழர்) உதவி என்று வைத்துக் கொள்ளுங்கள் (பணம் அல்ல வழிகாட்டல்).. இவர்களுக்கான எந்த உதவியாவது டமில் சங்கத்தில் இருந்து கிடைக்குமா?

தனிநபர்கள் செய்கிறார்கள் இல்லை என்று சொல்லவில்லை. சங்கமாக தமிழ்/தமிழர் வளர்ச்சிக்கு என்ன அஜெண்டா உள்ளது என்பதே கேள்வி?

விழாக்காலக்கூத்துகள் மட்டுமே சங்கங்களின் அஜெண்டா. அதில் தவறு இல்லை என்றாலும் புராணகால "தமிழ்ச்சங்கம்" என்ற பெயரைப் பயன்படுத்தும் போது சங்கடமாக உள்ளது அவ்வளவே.

மற்றபடி கூத்துக் கட்ட அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆட, பாட, பேச,உண்டுகழிக்க‌ ..அந்த அந்த கூத்து ஆர்வலர்களின் பங்களிப்பே போதும். இப்போது அது நன்றாகவே போய்க்கொண்டு உள்ளது.ஆமென்

கல்வெட்டு said...

//வேறு பல இடங்களிலும் வைத்து "டின்" வாங்கியிருக்கிறீர்களென்றால் இத்தனை ஆண்டுகளாகியும் உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லையா?//


சாதி,மத,பூகோளப் பாலிடிக்ஸ்.

தமிழ் என்ற அடையாளத்தை முன்னிருத்தி, மற்ற அடையாளங்களை தற்காலிகமாக இரண்டாம்பட்சமாக்கி, அனைவரும் இணைந்து செயல்படுவது என்பது காற்றில் வெண்ணெய் எடுப்பது போன்றது.

அப்படியே ஒரு பத்துப்பேரைச் சேர்த்துவிட்டாலும்... "அதெல்லாம் எதுக்கு ? ஆளுக வரமாட்டாங்க. பாட்டு டான்ஸ் வச்சுக்குவோம்.ஜிகினா சிரயையும் பேச்சுப்புயல் டாம்டூம் தகரடப்பாவையும் கூபிடுவோம்.கூட்டம் வரும்" என்று நம்மை சொம்பாக்கிவிடுவார்கள்.

******

பல இடங்களில் தமிழ்ச்சங்கம் என்ற பெயரில் தமிழ் சொல்லித்தருகிறார்கள்.பாராட்டவேண்டிய செயல்.

******
அதைத்தாண்டி ஆக்கபூர்வமான செயல்பாடுகள் இல்லை.

Thekkikattan|தெகா said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

எல்லா ஊருலயும் அதே கதை தான் சங்கங்கள் ஒரு கூட்டமா கூடி ஜாலியாக இருக்க.. நீங்க எதயாச்சும் சாதிக்கன்னு நினைச்சீங்களா.?//

வந்து ஒத்த வரி பின்னூட்டத்தில ஒட்டு மொத்த பதிவையும் அடக்கிப் புட்டீயலே... நமக்கு அந்தளவிற்கெல்லாம் திறமையும், ஆசையுமில்லைங்க... எப்பொழுதும் கூட்டத்தில ஒரு ஆளுதான்.

என்ன போடுற டைம் கொஞ்சம் பயனுள்ளதா யாருக்காவது போய் சேர்ந்தா அட நம்ம ஒத்தப் பைசாவும்/நேரமும் நல்ல படியா போய் சேர்ந்திருக்குன்னு நினைச்சுப் பார்க்க சந்தோஷமா இருக்கும்.

பழமைபேசி said...

அது சரிங்க தலைவா... உங்க கண்ணோட்டம் உங்களுக்கு....

அவங்களால நான் ஒரு முழு இலக்கிய புத்தகத்தையும் படிச்சேன்.... எனக்கு நிறைய ஐயப்பாடு இருந்துச்சு... பெரியவங்க அதுக்கும் விளக்கம் கொடுத்தாங்க....

எங்க ஊர்ல ஏற்கனவே தமிழ் வகுப்புகள் நடந்திட்டு இருக்கு... அதுக்கு தேவையான மேலதிகப் பொருட்களும் கொடுத்திருக்காங்க... ஆகவே நான் மிகவும் மகிழ்ச்சியா இருக்கேன்... அவ்வளவே!

Thekkikattan|தெகா said...

//வட அமெரிக்காவில் ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸ் என்று வைத்துக் கொள்ளுங்கள்... அல்லது எந்த சொந்த பந்தமும் அமெரிக்காவில் இல்லாத புதிதாக அமெரிக்க பல்கலையில் வந்து சேரும் புத்தம் புதிய தமிழ் மாணவருக்கான‌ ...//


கல்வெட்டு, உங்களின் கோரிக்கைகள் நியாயமான பரிந்துரைகளாத்தானே தெரிகிறது. மேற்கொண்ட தளங்களில் ஆசிய அளவில் சில நிறுவனங்கள் உழைத்து வருவதும், நம் சமூகத்தில் தனிப்பட்ட மனிதர்கள் முயற்சித்து வருவதும் பரவலாக அறிந்திருக்க முடியும்.

இருப்பினும் நீங்கள் கூறியபடி இச் சங்கம் அனைத்து மாநிலங்களையும் இணைத்த பெரும் சங்கமென்ற வகையிலயே இதற்கும் ஏதாவது முன்னெடுப்புகள் செய்யப்படுமாயின் ஒரு ஆக்கப்பூர்வமான செயல்பாடாகத்தானே அது அமைய முடியும். கருத்தில் நிறுத்தினால் அது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் தானே நலம் பயக்கும்.

முதலில் இங்கு இதனை சாத்தியப் படுத்தும் பட்சத்தில் "federation" என்றளவில் சர்வ தேசத்திலுள்ள ஏனைய தமிழ் சங்கங்களும் இது ஒரு முன் உதாரணமாக அமையலாமே!

உங்களின் பின்னூட்டங்களின் மூலமாக பல விசயங்கள் பலரின் சிந்தனைத் தளத்திற்கு கொண்டு சென்றிருக்கப்படலாம்... hope that the concerned people will look into the possibility of what is placed here; rather than paying attention to read between the lines.

Thanks Kalvettu!

Thekkikattan|தெகா said...

பழமையாரே,

இன்னும் நிறைய ஆக்கப்பூர்வமான சிந்தனையூட்டு பரிமாறல்கள் கல்வெட்டின் சில கேள்விகளைச் சார்ந்து உங்களிடமிருந்து வருமென நினைத்திருந்தேன்...

//அவங்களால நான் ஒரு முழு இலக்கிய புத்தகத்தையும் படிச்சேன்.... எனக்கு நிறைய ஐயப்பாடு இருந்துச்சு... பெரியவங்க அதுக்கும் விளக்கம் கொடுத்தாங்க....//

நானும் மறுக்கவில்லை அதனை பழமை. கண்டிப்பாக அதற்காகவேணும்தானே நீங்கள் அவ்வளவு தொலைவு பயணிச்சு வந்திருப்பீங்க, சோ, உங்க எதிர்பார்ப்பு நிறைவேறினதில சந்தோஷம் எனக்கும்.

நான் நேர்லயே உங்கள வியந்து பார்த்தது நினைவிலிருக்குமென நினைக்கிறேன். உங்ககிட்ட சரக்கு இருக்கு நல்லாவே கிடைத்த இலக்கிய மக்களோட ஊடாடி ஐயங்களை தீர்த்திருப்பீங்க, நானெல்லாம் இன்னும் பல மைல் போவணும் அதுக்கு :-).

இருந்தாலும் கல்வெட்டின் ""..டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸ் என்று வைத்துக் கொள்ளுங்கள்... "" - இது போன்ற கூற்று பேசப்பட வேண்டிய, செயல்படுத்தப் பட வேண்டிய விசயமாகப் படவில்லையா? because of its intensity of usage right away to reach concerned people when it happens under a single umbrella...

மற்றபடி, //எங்க ஊர்ல ஏற்கனவே தமிழ் வகுப்புகள் நடந்திட்டு இருக்கு... // இதெல்லாம் தனிப்பட்ட நபரின்/குடும்பத்தின் ஆர்வமே கூட இதனை முன்னெடுத்து நடத்துவதின் மூலம் வெற்றியடைய வைக்கலாம்...

எனிவே பழமை, பின்னூட்டங்களின் மூலம கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொண்டமைக்கு, நன்றி!

கல்வெட்டு said...

தெகா,
நான் சொல்லியுள்ள உதாரணங்கள் மிகச்சாதரண உதாரணங்களே. அவைதான் இலக்கு(கொள்கை) அல்லது இலக்கில்(கொள்கையில்) அதுவும் சேர்க்கப்படவேண்டும் என்று சொல்லமுனையவில்லை.


என்னுடைய நோக்கம் இவர்களின் இலக்கு என்ன ( Why do they exist as a sangam ? ) என்று தெரிந்துகொள்வதே.

இவர்கள் இலக்காக சொல்லியுள்ளவற்றிற்கும் நட‌ப்பவைக்கும் எந்த சம்பந்தங்களும் இருப்பதாகத்தெரியவில்லை.

What is our objective?
http://www.fetna.org/index.php?option=com_content&view=article&id=47&Itemid=59

என்ன செய்கிறார்களோ அல்லது என்ன செய்யமுடியுமோ அதை இலக்காகச் சொன்னால் என்னைப்போன்ற ஆட்கள் ஏன் வெட்டிக் கேள்விகளை எழுப்பப்போகிறார்கள்? :-))

***

தெகா & பழமைபேசி,
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

அளவிலா ப்ரியங்களுடன்...

Anonymous said...

//சாதி,மத,பூகோளப் பாலிடிக்ஸ்.

தமிழ் என்ற அடையாளத்தை முன்னிருத்தி, மற்ற அடையாளங்களை தற்காலிகமாக இரண்டாம்பட்சமாக்கி, அனைவரும் இணைந்து செயல்படுவது என்பது காற்றில் வெண்ணெய் எடுப்பது போன்றது//

உண்மை . வட அமெரிக்காவில் சுமார் ஆயிரம் தமிழ் பேசும் இஸ்லாமிய குடும்பங்களாவது இருக்கும் . நிகழ்ச்சியில் நான் பார்த்தது பத்துக்கும் குறை வான இஸ்லாமிய தமிழர்கள்!!!!!.

பல தமிழ் அமைப்புகள் இங்கு தமிழ் படம் திரை இடுவதில் காட்டும் ஆர்வம் வேறு ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் இல்லை.

விழாவில் யாரோ சொன்னார்கள் " given a Good Southern Hospitality"

இனியாவது நல்ல "Thamil Hospitality" க்கு முயற்சி செயட்டும்

சுந்தரவடிவேல் said...

தெகா,
பகிர்வுகளுக்கு இடமேற்படுத்திய இடுகைக்கு நன்றி.
உங்களது கருத்துக்களோடு எனக்குப் பலவிடங்களில் உடன்பாடு உண்டு. பேரவை இன்னும் மேம்படவேண்டும் என்ற ஆதங்கம் எனக்கும் உண்டு. நோக்கம் என்று ஒன்று இருந்தாலும் அதை நோக்கி எவ்வளவு தூரம் இப்பேரவை பயணித்திருக்கிறது என்பது, கல்வெட்டு கேட்டிருப்பதைப் போன்று, முக்கியமான கேள்வி. இது குறித்தும், விகடன் கட்டுரை குறித்தும் எழுதலாம் என இருக்கிறேன்.

Related Posts with Thumbnails