Wednesday, July 01, 2009

கடவுள்கள்: சாரு Vs ஜெமோ-Readers

சில நேரத்தில "எவன் கடவுள்"னு தன்னய வித்து நிரூபிக்க நடத்துகிற சில கண்றாவி அடிதடிகளையும், பல்டிகளையும் படிச்சி தெரிஞ்சிக்கிறப்ப ஏண்டா எழுதப் படிக்க வருதுன்னு வர்றது எல்லாருக்கும் இயற்கைதானோ? எனக்கும் வந்துச்சுங்க. சமீபத்தில ஒரு சில ஆட்களோட பதிவுகளில் இணைச்சு வைக்கப்பட்டிருந்த அந்தக் கடவுள்களின் எழுத்தை தரிசிச்சப்போ.

உடனே தோணியது என்னான்னா, நல்ல வேளை இது போன்ற ஆட்களின் புத்தகங்களை நான் உழைச்சு சம்பாரிச்ச காசை கொடுத்து வாங்கி என் அலமாரியில வைக்காம இருந்திருக்கேனேன்னு நினைக்கும் பொழுதும், அந்தத் தேடல் இவிங்க கையில கொண்டு வந்து நிப்பாட்டாம இருந்துச்சேன்னு நினைக்கும் பொழுதும் கொஞ்சம் ஆறுதலாத்தான் இருக்கு.

இன்னிக்கு காலையில கூட ஒரு "ஆண்டிக்(antique)" கடையில நிப்பாட்டி வந்தேன். எனக்கு பக்கத்தில உள்ள கடை. அங்கேதான் பழைய புத்தங்கள் அது ஒரு மூணு மாசத்திற்கு முன்ன வெளி வந்ததாகக் கூட இருக்கலாம் அடி மாட்டு விலைக்கு கிடைக்கும். ஆயிரக்கணக்கான புத்தகங்கள். ஒரு மணி நேரத்திற்கும் மேலா நின்னேன். அழகு அழகான எழுத்துக்களில், வண்ணமயமான அட்டைப் படங்களுடன் அவ்வளவு புத்தங்கள். அதுவும் மலிவான விலைக்கு! என்னோட வர்றதுக்கு தயாரா இருந்தாலும் ஒன்று கூட நம்ம சுவைக்கு ஒத்து வரலை. நான் தூக்கியும் சுமக்கல. இத்தனைப் புறக் காரணிகளும் சேர்ந்து ஒரு புத்தகம் வாங்குவதை தீர்மானிக்கிறது; அதுவுமில்லாம எழுதப்பட்ட நடை, வாக்கியமைப்பு, எழுத எடுத்துக் கொள்ளப்பட்ட பொருள் இவைகளும் கூடவே ஒரு புத்தகம் தன்னை வித்துக் கொள்வதில் பெரும்பங்காற்றுகிறதென்றால் அது மிகையில்லைதானே.

புத்தகங்களின் வாழ்க்கையே இப்படியாக இருக்கும் பொழுது, அதனை எழுதியவர்களின் நிலையை யோசித்தால் காலம் தோறும் வளர்ந்து, தேய்ந்து வரும் கருத்துகளின் ஊடாக தன் நிலை வாசிக்கும் வாசிப்பாளனுக்கு வெளிச்சமூட்டி வாசகர் வட்டத்தை கூட்டியும் குறைத்தும் கொள்ளும் காலம் தோறும் அவர்களினூடாக பிரசவித்த புத்தகங்களும் சந்தையில் விலை போகிறது அல்லது சிறு பூச்சிகளுக்கு புகலிடமாகிறது.

இத்தனை தடைகளையும் தாண்டி ஒருவன் தன் உழைப்பு பணத்தைக் கொடுத்து வாங்கி வாசிக்கிறான் என்றால், அதில் வாசிப்பவனை ஒரு முட்டாள் என்கிற ரீதியில் தவறாக வழி நடத்தி, தன் சுய அரிப்புகளை தீர்த்துக்கொள்ள கிடைத்த ஒரு தளமாக்கப்பட்டிருந்தால் அது எவ்வளவு பெரிய அயோக்கியத் தனமாக வாசிப்பாளனுக்கு தோன்றக் கூடும். அதி தீவிர படிப்பாளிகளின் உலகத்தில கூட என்ன நடக்குதுன்னா, ஏற்கெனவே தான் படிச்ச புத்தகங்களை அது எப்பேர்பட்ட எழுத்தாளனா இருந்தாலும் சரி ஒரு குறிப்பிட்ட ஆளைத் தாண்டி அதெல்லாம் அடுத்த ஆளுக்கு கைமாறும் பொழுது பெரும்பாலானவை குப்பையாக கருதப்பட்டு அது சென்றடைய வேண்டிய இடத்திற்கு சென்றடைகிறது.

இந் நிலையில் அப் புத்தங்களை எழுதியவர்களே வலிய முன் வந்து "நான் எழுத்துலகின் ப்ரம்மா" என்ற ரீதியில் சுய தம்பட்டம் செய்து கொள்வது, பொது பேருந்து இடத்தில் நின்று கொண்டு கைமதுனம் செய்து கொள்வதற்கு சமமாகவே கருதமுடிகிறது. இன்றைய எழுத்துலகில் அதிலும் நம்மூரில் சினிமா பிரபலங்களைப் போலவே எழுத்தாளர்களும் அறியப் படவேண்டும் என்று நினைப்பது கேலிக் கூத்தானது. சினிமாவின் மூலமாக ஒரு நடிகன் அறியப்படுகிறான் என்றால் அது கருவாட்டுக் கடையில் நிற்கும் கூட்டத்திற்கும் வைரக் கடையில் கூடுமிடத்திற்கும் உள்ள வித்தியாசங்களைப் போன்றது.

ஒரு எழுத்தாளன் தனது அவதானிப்பின் ஆளுமை பொருட்டு ஒரு வாசிப்பாளனின் மனதினுள் தனது சுவடுகளை விட்டுச் செல்கிறான். அது வாழ்வு முழுவதுக்குமே சில மாற்றங்களை வாசிப்பாளனின் உலகியல் பார்வையினுள் ஏற்படுத்திச் செல்லலாம். அவ்வாறாக, தன்னை பரிணமித்தாக கருதிக் கொள்ளும் எழுத்தாளர்களோ அந்த எழுத்தை தாண்டிய உலகத்தினுள் இது போன்ற அற்ப "சுய விளம்பரங்களுக்கு" விலை போய் தன்னை தரம் தாழ்த்திக் கொள்வதில் என்ன பொருளிருக்க முடியும்? தன்னைக் காட்டிலும் தனக்கு முன்னமோ, அல்லது சமகாலத்திலோ வாழ்ந்த, வாழ்கிற பிற சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் "அறிவுசார்ந்த கைமதுனம்" செய்து கொண்டார்கள்/கிறார்கள் என்றால் இப்பொழுது அவர்களின் மீதும், சமகால எழுத்தாளர்களின் மீதும் வாறி வீசும் சேறுகளின் ஊடாக நீங்கள் எதனை நிறுவ முயற்சிக்கிறீர்கள்? அதனைக் காட்டிலும் நீங்கள் சிறந்தவர்களாக கருதப் படவேணும் என்ற எண்ணத்தினாலேதானே இருக்க முடியும்.

தொடக்க காலத்தில் நீங்களே கூட அதே ஆட்களின் படைப்புகளை வாசித்தே உங்களின் மாறுபட்ட சிந்தனையை வளர்த்து கொண்டவர்களாய் இருந்திருக்கக் கூடலாமல்லவா? மாறாக, இப்பொழுது மாற்று எழுத்தாளரின் மீது வைக்கும் உங்கள் கருத்துக்கள் அடுத்தவரின் படைப்புகள் அனைத்துமே குப்பையெனவும், தான் மட்டுமே தமிழகத்தில் சிந்திப்பவன் அதனால் மற்ற படைப்பாளிகளை படிக்காதீர்கள் என்ற உங்களது தொனி வாசிப்பாளனின் பரந்து பட்ட வாசிப்பினை நீங்களே வலியச் சென்று அடைக்க முயற்சிக்கிறீர்கள் என்ற ரீதியில் எடுத்துக் கொள்ளலாமா? இது எது மாதிரியான "கை மதுனம்?" வெக்கமாக இல்லை? இவ்வளவு பரந்து, விரிந்து சிந்திக்க தெரிந்தும் ஒரு பொது இடத்தில் எப்படி நாகரீகமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவற்று உளறி கொட்டுவதால் எங்களைப் போன்றவர்களுக்கு - சகித்துப் போவதில் கூட சலிப்பு தட்டிவிடுகிறது.

நீ பார்த்து, படித்து அனுபவித்தாய் என்றால் அதனைக் கூட வெளிப்படுத்துவதில் ஒரு நாகரீகம் இருக்கிறது. எதனை உன் விருப்பத்தின் பேரில் பார்த்து அனுபவித்தாயோ அது உன்னுடைய சுய விருப்பத்தின், சுவையின், தேடலின் பொருட்டு அமைந்தாக இருக்கலாம். அதனை பொது இடத்தில் அறிமுகப் படுத்தும் பொழுது கேட்கும் அனைவருக்கும் பிடித்திருக்க வேண்டுமென்ற தொனி, "அர்ப்பனக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில கொடை பிடிப்பானாம்" என்பதாகப் படுகிறது.

இன்றை காலகட்டத்தில் மற்றுமொரு வியாபார உத்தியும் கொடி கட்டி பறக்கிறது. அது எதிர்மறை விமர்சனங்கள் கொண்டுவரும் கருத்துக்களை கொச்சையாக அது தனி மனித தாக்குதலாகவோ அல்லது எல்லாமே தெரியும் எனக்கு என்ற ரீதியில் கருத்து கூறுவதாகாவோ அல்லது பால் உணர்வுகளை தூண்டும் மட்டரகமான ரசனைகளை ஊக்குவிப்பதனைப் போல தன்னை வெளிப்படுத்தி அதன் மூலமாக (thriving in controversy) தன்னை மக்களிடத்தே கொண்டு சேர்க்க விரும்புவது. ஆனால், இது போன்ற ஸ்டண்டுகள் காலப் போக்கில் உதிர்ந்து விடுகிறது என்பதனை எப்படி இந்த முற்றிலும் உணர்ந்த ஞானிகள் அறியாமல் மறந்துவிடுகிறார்கள்.

சுய சிந்தனை மீட்டெடுப்பு என்பது ஒரு விதத்தில் அதிக வாசிப்பினை நாடும் மனிதர்களுக்கு நாட்பட நாட்பட கைவரும் ஒரு கலையாக மாறுவது இயற்கை. ஆனால், இன்றைய நிலையில் சினிமா நடிகர்களுக்கும், கட்சி தலைவர்களுக்கும் கொடி பிடித்தும், மண் சோறு தின்றும் தனது முரட்டுத் தனமான அர்ப்பணிப்பை காட்டுவது போலவே, இந்த சுய சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட இலக்கிய உப நடிகர்களும்(வாசிப்பாளன் எனக் கொள்க) தயாராக இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். இது போன்ற வாசிப்பாளர்கள், வாசிப்பின் அடிப்படை நோக்கமே பகுத்தறிந்து தன் இயல்பு மாறாமல் எச் சூழலிலும் தன்னை தக்க வைக்கத்தான் என்பதனை மறந்து தன் நேசிக்கும் ஒருவன் எது செய்தாலும் அது சரியே என்ற நிலை எடுப்பது எப்படி "சுய சிந்தனையின்" பொருட்டு கட்டப்பட்டதாக அமையமுடியும்? எது மாற்றியது? இது போன்ற புத்தி மழுங்கல்களை வாசிப்பாளனிடத்தும், எழுத்தாளனிடத்தும்?

ஒரு சமூகத்தின் மொத்த அறியாமையும் இதற்குள் அடங்குமா? ஒப்பீட்டு நிலையில் இந்தியா போன்ற சமூகத்தில் ஒரு பணக்கார, ஏழைத் தன்மை எப்படியாக வரையறுக்கப் படுகிறது? மாடி வீட்டில் வாழ்பவன், கூரை வீட்டில் வாழ்பவனை கீழே போட்டுப் பார்க்கிறான்; அது போலவே மிதி வண்டி வைத்திருப்பவனை, இரு சக்கர மோட்டர் வாகனம் வைத்திருப்பவனும்; கார் வைத்திருப்பவன் மோட்டர் வாகனம் வைத்திருப்பவனையும் தாழ்வான எண்ணத்தில் பார்ப்பது போலவே, இங்கு சமீப காலமாக நான் கண்டு வருவது, இந்தப் புத்தகத்தை வாசித்திருக்கிறேன், இந்த உலக சினிமா பார்த்திருக்கிறேன், அதனை பார்க்க, கேட்க நேராதவர்கள் எல்லாம் என்னை கடவுளாக மதிக்க, போற்ற கற்றுக் கொள்ள வேண்டுமென்ற அதே அகம்பாவ மனவோட்டத்தின் அடிப்படைதான் இதன் ஊற்றா? இது போன்ற ஒப்பீட்டு ட்ரெண்ட் மேலை நாட்டு எழுத்தாளர்களிடம் இன்று இருக்கிறதா?

சரி, மற்ற மொழி படங்களையும், இலக்கியங்களையும் படித்து, பார்த்து (சில நேரத்தில செய்யமாலயே) சிலாகித்து யார் முதலில் அதனை வெளிக் கொண்டுவரப் போகிறோம் என்ற போட்டா போட்டியில் வசதியாக ஒரு விசயத்தை மறந்து விடுகிறோம், அது அந்தப் படைப்புகளை படைத்த மனிதர்கள் தனி பட்ட வாழ்வில் கடைபிடித்த எழுத்து நாகரீகம். அதனை ஏன் நாமும் கடைபிடிக்க முன் வருவதில்லை? விடுதலை போராட்டத்தில் வன்முறை கூடாது என்று போதிக்கும் நாம், தனிப்பட்ட வாழ்வில் துப்பாக்கி கிடைத்தால் தன் துறை சார்ந்த மற்றுமொரு பிரபலத்தை போட்டுத் தள்ளிவிடுவோமென்கிற அளவிற்கு மன ஆர்பரிப்பு. இது எப்படி சாத்தியமாகிறது?

எல்லா நிலைகளிலும் தனிமனித துதி பாடல் அவசியம்தானா? அதனையே முதலில் ஒரு சமூகத்தில் கட்டுடைத்து மாற்றமடைய வைக்காமல், என்னவர் என்ன சொன்னாலும் அதற்கு "சப்பை கட்டுவோம்" என்ற திவீரவாத எண்ணவோட்டத்தை ஊக்குவிப்பது, காந்தியத்தின் பால் காதல் கொண்ட நம்மூர் எழுத்தாளர்களுக்கு நியாயமா? ஊரான் ஒருவனின் சட்டையை பிடிக்கும் பொழுது ஒரு நியாயம், தனக்கு என்றால் ஒன்றா? என்னங்கடா இது நியாயம்? வளருங்கப்பா!பி.கு: மேலும் நம் இலக்கிய எதிர்காலம் முகமூடி கழட்டப் பட்ட நிலையில் ... சாரு நிவேதா எனும் ’பரமார்த்த குருவும்’ அவரின் இணைய சிஷ்யார்களும்

30 comments:

Thekkikattan|தெகா said...

P.S: நேற்று இதே பதிவினை இணைத்தும் பதிவு இணைய மறுத்து சொதப்பி விட்டதால், தலைப்பு மாற்றி மீண்டும் இங்கே. பின்னூட்டங்களையும் வெட்டி இணைத்துள்ளேன். படித்தவர்கள் பொருத்தருள்க!

Thekkikattan|தெகா said...

கலையரசன் said...

அருமையான எழுத்து நடை!
தொடருங்கள்..

Tuesday, June 30, 2009

Thekkikattan|தெகா said...

தருமி said...

சரி .. சரி .. ரொம்ப பெரியா ஆளுவ பத்தி பேசுறீகன்னு நினைக்கிறேன்.

நடத்துங்க .. நடத்துங்க

இருந்தாலும், //எதிர்மறை விமர்சனங்கள் கொண்டுவரும் கருத்துக்களை கொச்சையாக அது தனி மனித தாக்குதலாகவோ அல்லது எல்லாமே தெரியும் எனக்கு என்ற ரீதியில் கருத்து கூறுவதாகாவோ//

இது நூல்களில் மட்டுமல்ல நம் பதிவுகளிலேயே தலைவிரித்து ஆடுவதும் உண்டு. இல்லையா?!

Tuesday, June 30, 2009

Thekkikattan|தெகா said...

பதி said...

தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள் !!!! கொஞ்ச நாளா ரசிகர்கள் அடித்துக் கொள்வது அதனினும் அருமை !!!!

///நல்ல வேளை இது போன்ற ஆட்களின் புத்தகங்களை நான் உழைச்சு சம்பாரிச்ச காசை கொடுத்து வாங்கி என் அலமாரியில வைக்காம இருந்திருக்கேனேன்னு நினைக்கும் பொழுதும், அந்தத் தோடல் இவிங்க கையில கொண்டு வந்து நிப்பாட்டாம இருந்துச்சேன்னு நினைக்கும் பொழுதும் கொஞ்சம் ஆறுதலாத்தான் இருக்கு.////

:))))))))

Tuesday, June 30, 2009

கோவி.கண்ணன் said...

செம செருப்படியாக இருக்கு.

ஆனால் கொடுக்க வேண்டிய ஒன்று !

நீங்கள் இப்படியெல்லாம் சீற்றம் கொள்ளுவிங்கன்னு இப்பதான் தெரிகிறது.
:)

Thekkikattan|தெகா said...

பதி said...

பக்தர்களை ரசிகர்கள் என விழித்தற்காக என்னை மன்னியுங்கள் !!!!!

;)

Tuesday, June 30, 2009

Thekkikattan|தெகா said...

கலையரசன்,

முயன்று கொண்டே இருக்கிறேன்... ஆனா, எனக்கு பாப்பிலாரிடி மட்டும் வேண்டவே வேண்டாம் ;-)

Thekkikattan|தெகா said...

ஆயில்யன் said...

//புத்தகங்களின் வாழ்க்கையே இப்படியாக இருக்கும் பொழுது, அதனை எழுதியவர்களின் நிலையை யோசித்தால் காலம் தோறும் அவர்களினூடாக பிரசவித்த புத்தகங்களும் சந்தையில் விலை போகிறது அல்லது சிறு பூச்சிகளுக்கு புகலிடமாகிறது.//


எத்தனையோ புத்தகங்கள் மலிவு விலையில் வாங்க ஆட்களின்றி பல்கலைகழக (எனக்கு தெரிந்து தஞ்சை தமிழ் பல்கலை) லைப்ரரிகளிலும் அரசு லைப்ரரிகளிலும் பூச்சிகளுக்கு புகலிடமாய் சில சமயங்களில் காகித குப்பைகளாய் கடைகளுக்கு விற்பனை செய்யப்படும்போது, சுயநலமின்றி தன்னால் முடிந்த கருத்துக்களை புத்தகங்களாக்கி மகிழ்ந்த அந்த காலத்து எழுத்து ஆளுநர்களை நினைத்துப்பார்த்தால் நிச்சயம் மனம் கலங்கும்! :(

Tuesday, June 30, 2009

Thekkikattan|தெகா said...

காட்டாறு said...

Long long ago.. இலக்கியவாதிகள் கூட்டமொன்று போய் வந்த என் நண்பர் (அவரும் அந்த வாதி தான்), இலக்கிய கூட்டங்களில் இதுமாதிரி சண்டைகள் வரும் என்பார். எனக்கு ஆச்சரியமா இருக்கும். ஏன்னா.. அதெல்லாம் பொது மக்களை வந்தடையாது. யாரும் யாரையும் பொது இடத்தில் காறி துப்புவதில்லை. அவங்களுக்குள்ள அடிச்சிப்பாங்க பிடிச்சிப்பாங்க போல.

ஆனா இன்று... வெகு எளிதில் பொது மக்களை செய்திகள் சென்றடையும் வசதிகள் பெருகி விட்டன. அவ்வாறு இருக்கும் போது, நம் பொறுப்புகளும் கூடி விட்டன என்பதை நாம் மறந்து போகிறோம். அதனால் வரும் பிரச்சனை தானோ இது?

Tuesday, June 30, 2009

Thekkikattan|தெகா said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\\நல்ல வேளை இது போன்ற ஆட்களின் புத்தகங்களை நான் உழைச்சு சம்பாரிச்ச காசை கொடுத்து வாங்கி என் அலமாரியில வைக்காம இருந்திருக்கேனேன்னு நினைக்கும் பொழுது // :))

Wednesday, July 01, 2009

Thekkikattan|தெகா said...

//சரி .. சரி .. ரொம்ப பெரியா ஆளுவ பத்தி பேசுறீகன்னு நினைக்கிறேன்.

நடத்துங்க .. நடத்துங்க//

அப்படியா தெரியுது, நடக்குற விசயங்களை வைச்சுப் பார்க்கும் போது, தருமி? இதனையெல்லாம் பார்த்துக் கொண்டு எப்படி இந்த மனிதர்களின் படைப்புகளை வாசிக்க மனம் வரும் சொல்லுங்க.

//இது நூல்களில் மட்டுமல்ல நம் பதிவுகளிலேயே தலைவிரித்து ஆடுவதும் உண்டு. இல்லையா?!//

அப்படி இருந்தா பொழைக்க தெரிஞ்சவிங்களாம்... அது தெரியாமதான் உங்க கடையில சரியான படி வியாபாரமாகிறதே இல்ல, இவ்வளவு நாள் இது தெரியாமத்தான் இங்கன குப்பை கொட்டிக்கிட்டு இருக்கீங்களா அப்போ :-)) - வாயுள்ள பிள்ளையே பொழச்சிக்கெடக்குமாங்கோவ்.

கவிதா | Kavitha said...

தெகாஜி.. ஒய் ப்ளட்???

//இன்றை காலகட்டத்தில் மற்றுமொரு வியாபார உத்தியும் கொடி கட்டி பறக்கிறது. அது எதிர்மறை விமர்சனங்கள் கொண்டுவரும் கருத்துக்களை கொச்சையாக அது தனி மனித தாக்குதலாகவோ அல்லது எல்லாமே தெரியும் எனக்கு என்ற ரீதியில் கருத்து கூறுவதாகாவோ அல்லது பால் உணர்வுகளை தூண்டும் மட்டரகமான ரசனைகளை ஊக்குவிப்பதனைப் போல தன்னை வெளிப்படுத்தி அதன் மூலமாக (thriving in controversy) தன்னை மக்களிடத்தே கொண்டு சேர்க்க விரும்புவது.//

ம்ம்ம்ம்....

//தனிப்பட்ட வாழ்வில் துப்பாக்கி கிடைத்தால் தன் துறை சார்ந்த மற்றுமொரு பிரபலத்தை போட்டுத் தள்ளிவிடுவோமென்கிற அளவிற்கு மன ஆர்பரிப்பு. இது எப்படி சாத்தியமாகிறது?//

சுயநலம், சுயசிந்தனை இல்லாதது, சுய மதிப்பீடும் இல்லாதது..

//என்னங்கடா இது நியாயம்? வளருங்கப்பா!//

ஆமா நீங்க யாரை இந்த பதிவில் வளருங்கன்னு சொல்லியிருக்கீங்க. . சரி.. எனக்கு நிஜமா புரியல... :(

சுரேகா.. said...

அண்ணாத்த! -நீங்க சொல்றதெல்லாம் சரி!
நல்லதையே பாருங்க!
நல்லதையே படியுங்க!

இதுக்குப்போய் நேரம் செலவழிச்சுட்டீங்களோன்னு தோணுது!

லூசுல வுடுங்க!

படைப்புகளையும்-படைப்பாளியையும் பிரிச்சுப்பாக்கமுடியாம போன சமூகத்தில் இருக்கோம்.அதான் அவுங்களும் ஆடுறாங்க! விஜயை விடவா ஆடிட்டாங்க! வுடுங்க வுடுங்க

வாங்க நம்ப புள்ளைங்களை படிக்க வைப்போம்.!

zorbathebuddha said...

இவர்களின் எழுத்துக்களை நீங்கள் எதுவும் படித்ததே இல்லையா?

அதைப்பற்றி........

வெ.இராதாகிருஷ்ணன் said...

இப்படி எழுதும்போதே நாமும் சக எழுத்தாளர்களைப் பற்றி குற்றம் சாட்டியே எழுதுகிறோம் என்ற எண்ணம் எழாமல் இருப்பது மிகவும் வியப்புக்குரியது.

ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களைப் பார்க்காமல் அந்த எழுத்தாளனைப் பார்ப்பதால் வரும் விளைவுதான் இது.
ஒருவரின் எழுத்துக்களைப் படித்ததும் அவரது எழுத்துக்களைக் குறித்த எண்ணங்களை நம்முள் ஏற்படுத்திக் கொள்கிறோம். 'அவர் எழுதியதையாப் படித்தோம்' எனும் உணர்வுக்கு அதுதான் காரணம்.

ஒரு புத்தகத்தைப் படிக்காமல், அந்தப் புத்தகத்தை எழுதியவரை மதிப்பிடுவது என்பது நடந்து கொண்டுதானிருக்கிறது. நமது மனோபாவமே அதற்கு காரணம்.

ஒரு எழுத்தாளர் மற்றவரை கொச்சையாகவோ, தரக்குறைவாகவோ எழுதுவது என்பது மிகவும் கண்டிக்கத்தகுந்தது, ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டியதை இந்த பதிவுலகத்தில் எல்லாருமே எழுதி வேடிக்கைப் பொருளாகவும், கேலிச் சித்திரமாகவும் மாற்றிவிடுகிறார்கள். இது தொடரும் கதைதான், சம்பந்தபட்டவர் பிரபலமாகாதவரை.

மிக்க நன்றி.

Sridhar Narayanan said...

//நல்ல வேளை இது போன்ற ஆட்களின் புத்தகங்களை நான் உழைச்சு சம்பாரிச்ச காசை கொடுத்து வாங்கி என் அலமாரியில வைக்காம இருந்திருக்கேனேன்னு நினைக்கும் பொழுதும், அந்தத் தேடல் இவிங்க கையில கொண்டு வந்து நிப்பாட்டாம இருந்துச்சேன்னு நினைக்கும் பொழுதும் கொஞ்சம் ஆறுதலாத்தான் இருக்கு.//

படிக்காமலேயே கோபப்படறது என்ன நியாயம்னு புரியல. திறந்த மனதோடப் எழுத்துக்களைப் படிங்க. தமிழின் முக்கியமான புத்தகங்கள்ல நிச்சயமா ஜெமோவட பல புத்தகங்களும், சாருவோட சில புத்தகங்களும் உண்டு :)

இலக்கிய சர்ச்சைகள் எப்பவும் மணிக்கொடி காலத்திலேர்ந்து நடந்துகிட்டுத்தான் இருக்கு. பள்ளிகூடத்துலகூடத்தான் ஆசிரியர்கள் நடுவுல சண்டை சச்சரவு இருக்கும். அப்பா அம்மாவுக்கு நடுவுல கூட ஈகோ பிரச்சினை இருக்கும். அதுக்காக இலக்கிய புத்தகங்களை புறந்தள்ளுவது சரியல்ல. அதுவும் அதைப் படிக்காமலேயே செய்யறது நமக்குத்தான் இழப்பு.

மங்களூர் சிவா said...

:)))))))
/

\\\நல்ல வேளை இது போன்ற ஆட்களின் புத்தகங்களை நான் உழைச்சு சம்பாரிச்ச காசை கொடுத்து வாங்கி என் அலமாரியில வைக்காம இருந்திருக்கேனேன்னு நினைக்கும் பொழுது //
நான் தனியாள் இல்லை
:))

உடன்பிறப்பு said...

தெகா ரிட்டர்ன்ஸ்

அக்னி பார்வை said...

நானெல்லாம் சின்ன குழுந்தைங்க..நல்ல நெத்தியல அடிச்ச மாதிரி சொல்லியிருக்கீங்க

நாமக்கல் சிபி said...

தனிமனிதத் துதிபாடும் ரசிகர்கள் இருக்கும் வரைக்கும் இவர்கள் இப்படியேதான் ஒருவரையொருவர் வசைபாடிக்கொண்டும், எல்லைகளேதுமின்றி தூற்றிக்கொண்டுமிருப்பார்கள்!
இதனால் கிடைக்கும் அற்ப விளம்பரங்களின் பயனை அனுபவிக்கப்போவதென்னவோ அவர்களின் ஹீரோக்கள் என்பதையுமறியாது தெருச்சண்டைகளிட்டுக் கொண்டுதானிருப்பார்கள் இத்தகைய ரசிகப் பெருமக்கள்!

தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் கலாச்சாரம் நீங்கும் வரை இரு தரப்பினரையுமே திருத்துவதென்பது இயலாத காரியமாகவே படுகிறதெனக்கு!

Thekkikattan|தெகா said...

//தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள் !!!! கொஞ்ச நாளா ரசிகர்கள் அடித்துக் கொள்வது அதனினும் அருமை !!!!//

பதி, இன்னமும் நிறைய பக்கதர்கள் வருவார்கள் என்று நினைக்கிறேன் :-))). எல்லாத்துக்கும் அடிமைகள் ஆகிப்போயிடுறோமே, அதெப்படி??

Suresh said...

சாரு ... ஜெ.. பைத்திகாரன்... நரசிம்.. லக்கி... ஆதிஷா..சுரேஷ்கண்ணா

Thekkikattan|தெகா said...

//சுயநலமின்றி தன்னால் முடிந்த கருத்துக்களை புத்தகங்களாக்கி மகிழ்ந்த அந்த காலத்து எழுத்து ஆளுநர்களை நினைத்துப்பார்த்தால் நிச்சயம் மனம் கலங்கும்! :(//

வாங்க ஆயில்யன்,

அதெல்லாம் ஏதோ ஒரு பழைய நூற்றாண்டுகளில் நடந்தென்றே அறியப் படுகிறது. ஆனால், இன்றைய நாட்களில் இப்படி வலிந்து திணித்துக் கொண்டால்தான் டார்வினிய கொள்கைப் படி அடுத்து வரும் தலைமுறைக்கு தன் பெயர் மிஞ்சுமென்ற தலையெடுத்தல் தான் நம் நிற்கும் இன்றைய சந்திப்பு போல.

என்ன செய்வது, சொல்லுங்க?

Thekkikattan|தெகா said...

வெ. இராதாகிருஷ்ணன் வாங்க!

உங்களுடைய மறுமொழி என்ன சொல்ல வருகிறது என்று புரிகிறது, சேற்றை வாரி அறைந்து கொள்ளும் இடம் பொதுத் தளமாகவும், அத் தளத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் மனிதர்களின் மீதும் அது பட்டுத் தெரித்துவிடும் பட்சத்தில் சிறிது சேற்றை நாமும் தொடும் நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிப் போய்விடுகிறது; அதே தொனியில் விளங்குமாறு கூறும் பட்சத்தில், இல்லையா?

என்னைப் போன்றவர்கள் இது வரையிலும் எந்த ஒரு எழுத்தாளனையும் தரக் குறைவான முறையில் எழுதியது கிடையாது. ஆனால், இங்கு அவ் நிலைக்கு வழி நடத்திச் செல்லப்பட சில பிரபலங்களும், வாசிப்பாளர்களுமே காரணமாகிப் போனார்கள் - எழுத்தின் உண்மையான பணி மழுங்கடிக்கப்பட்ட நிலையிலேயே. இது ஒரு ஆரோக்கியமான பாதையாக தெரியவில்லை.

எழுத்தை விட்டுவிட்டு எழுதிய தனி மனிதர்களை எதற்கு பார்க்க வேண்டுமென்பதிலும் எனக்கு உடன்பாடு உண்டுதான். இருந்தாலும், அஹிம்சை போதிக்கும் "சமூகக் கண்ணாடிகள்" தனிப்பட்ட முறையில் தீவிரவாதத்தை (வாசிப்பு-ஃபேன்களிடம்) தூண்டிவிடுவதனைப் போல, எழுதுவதும், தூற்றுவதும் எந்த விதத்தில் சகித்துக் கொள்வது என்பதுதான் எனது பதிவின் கேள்வி.

ஓஷோ, ஜே. கே போன்றவர்கள் அத்தனை புத்தங்களையும், கருத்துக்களையும் வெளிக்கொணர்ந்ததால் அது "இண்டெலெக்சுவல் ப்ராஸ்ட்டியுஷன்" என்றால் அதே பாதையில் பயணிக்கும் இன்றைய எழுத்தாளர்கள் யாராக இருக்க முடியும் என்ற கேள்வியை தவிர்க்க முடியுமா? இதனை எப்படி நாகரீகமாக கேள்வி எழுப்ப முடியும்?

மேலும் என்னுடைய கட்டுரை அவ் பிரபலங்கள் எழுதிய புதினங்களின் மீதான விமர்சனம் இல்லை. பொது பார்வைக்கு வைக்கப்பட்ட அவர்களின் பல சில கட்டுரைகளை காண நேர்ந்ததின் சீற்றமே!
எது எப்படியாகினும் ஒரு பத்திரிக்கையாளனும் சரி, எழுத்தாளனும் சரி என்று ஒரு சமூகத்தில் நடக்கும் அநீதிகளை தோலுறித்து அக் காலக் கட்டத்திற்கு உகந்த கருத்துக்களை தார்மீக பொறுப்பேற்று மக்கள் முன் வைக்காமல், தன் சுய லாபம் கருதி விசயங்களை திரித்து, விரித்து, சுருக்கி, முன் வைப்பதும், அதற்கு மக்களின் ஏழ்மையை காரணமாக காட்டிவிட்டு தன் மொழி, இனம் சார்ந்த அழிவு நடந்தேறும் பொழுது மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துக் கூறி எழுச்சி கொள்ள வைக்க எத்தனிக்காமல் சாக்கு போக்குகள் வழங்கி, தன் அமரும் இருக்கையை உறுதி செய்து கொள்கிறானோ, அவர்கள் காலப் போக்கில் நிறமிழப்பதும், உதிர்ந்து போவதும் இயற்கையின் விதிப்படி தவிர்க்க முடியாதததும்தானே! என்ற தொனியிலயே இந்தக் கட்டுரை வடிவமைக்கப் பட்டுள்ளது.

இந்தப் பதில் நண்பர் ஸ்ரீதர் நாரயணனுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

இருவருக்கும் எனது நன்றி!

Anonymous said...

/இலக்கிய சர்ச்சைகள் எப்பவும் மணிக்கொடி காலத்திலேர்ந்து நடந்துகிட்டுத்தான் இருக்கு/

அது சரி. ஒங்களுக்கு இதெல்லாம் இலக்கிய சர்ச்சை! அப்போ இந்த ரெண்டும் ஈழத்தமிழருக்கு போதிமரம் காட்டினதுமா? தூ!த்தேரிகளா

வெ.இராதாகிருஷ்ணன் said...

விளக்கத்திற்கு மிக்க நன்றி தெகா அவர்களே.

நமது மனநிலையை நாம் வெளிப்படுத்துவதில் தவறில்லை, வார்த்தையில் கண்ணியம் இருந்தால் படிப்பவர்களும் சந்தோசம் கொள்வார்கள் என்பதை நீங்கள் அறியாதது இல்லை.

மேலும் ஒரு பிரச்சினையை நாம் பேசப் பேச அது பெரிதாகி நமது சிந்தனைகளை வேறொரு திசையில் பயணிக்கச் செல்வதைத் தவிர்க்க இயலவில்லை அல்லவா?

நல்லதொரு படைப்புகள் என்றுமே தம்மைப் பற்றி சிறப்பாகவேப் பேசிக்கொள்ளும்.

சமூக அவலங்களை எழுத்தில் வைத்து சீருபவர்களை விட அந்த அவலங்களை எப்படிப் போக்க முயற்சித்தேன் என செயல்பட்டு அதுகுறித்த பார்வையை, விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே ஒரு சிறந்த எழுத்தின் வெற்றியாக இருக்க முடியும் என்பது எனது தனிப்பட்டக் கருத்து, தவறாக நினைக்க வேண்டாம்.

மிக்க நன்றி.

Thekkikattan|தெகா said...

காட்டாறு,

இலக்கியவாதி நண்பரா? அய்யோ, அப்போ நீங்களும் பூஜிக்கப் பட வேண்டிய ஆளுன்னு சொல்லுங்க :-))

//ஆனா இன்று... வெகு எளிதில் பொது மக்களை செய்திகள் சென்றடையும் வசதிகள் பெருகி விட்டன. அவ்வாறு இருக்கும் போது, நம் பொறுப்புகளும் கூடி விட்டன என்பதை நாம் மறந்து போகிறோம். அதனால் வரும் பிரச்சனை தானோ இது?//

அதான் இங்க உள்ள வித்தியாசமே. பொது இடத்தில் மனசிலுள்ள விகாரங்களை "ஸ்பிட்" பண்ணி வைத்துவிட்டு பின்பு அதனைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் தான் பேச வேண்டுமென்பது எப்படி இருக்கிறதுன்னா, சமூக நிறை/குறைகளைப் பற்றி பேசப் படக் கூடிய படத்தை எடுத்துவிட்டு இயக்குனர் படத்தை வந்து பாருங்க ஆனா யாரும் வாயத் திறக்கக் கூடாதுங்கிற மாதிரி இருக்கு.

அதுமட்டுமா, பொது இடத்தில் பார்வைக்கு வைக்கும் கட்டுரைகளில் முன் வைத்ததில் பின்னுக்கு வந்த கட்டுரையில் அப்பட்டமான முரண். அனைத்தும் பார்த்துக் கொண்டு "ச்சும்மாவே" இருன்னா, அவன் மண்ணு மூட்டையாத்தான் இருக்கோணும்.

Thekkikattan|தெகா said...

கோவியாரே,

//நீங்கள் இப்படியெல்லாம் சீற்றம் கொள்ளுவிங்கன்னு இப்பதான் தெரிகிறது.//

கொள்ளமா எங்க முடிஞ்சளவிற்கு "மண்ணு மூட்டையா" இருந்து பார்க்கிறதுதான் .. :))

நன்றி!

முத்துலெட்சுமி - வந்தாச்சா, நன்றி.

கவிதா,

//தெகாஜி.. ஒய் ப்ளட்??? // - கொதிக்குதுங்கிறீங்களா :). திரும்பவும் ஒரு முறைய பதிவிலிருந்து, பின்னூட்டங்கள் அனைத்தும் படிச்சிருங்க புரியும். நன்றி!

சுரேகா,

//இதுக்குப்போய் நேரம் செலவழிச்சுட்டீங்களோன்னு தோணுது!//

இது பொறுத்து பொறுத்துப் பாத்திட்டுத்தான் சொல்ல வேண்டிய சூழ்நிலையில சொல்லப்பட்டிருக்கிறது. மற்ற பின்னூட்டங்களையும் மீண்டும் வாசி, என்ன சொல்ல வந்திருக்கேன்னு புரியலாம், பதிவும் முழுமையாகும்.

நன்றிப்பா!

Thekkikattan|தெகா said...

//zorbathebuddha said...
இவர்களின் எழுத்துக்களை நீங்கள் எதுவும் படித்ததே இல்லையா?

அதைப்பற்றி........//

பேர்லயே புத்தாவா இருக்கிறதுனாலே உங்களுக்கு புரியலாம் நான் சொல்ல வர்றது; என்னான்னா - ஏற்கெனவே சொன்னதுதான் மேலே சில பின்னூட்டங்களில், மனுசனை மனுசன் நேசிக்கவே கஷ்டப்படும் ஒரு படைப்பாளி, நேர நிறமிகளாக அவதரிக்கும் ஒரு படைப்பாளி தான் படைப்பதில் பாசியும், பாசாங்கும் இலவசமாக கொட்டிவைத்திருக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? இணையம் வராமல் இருந்திருந்தால் முகம் தெரியாமலயே இருக்கும் பட்சத்தில் மனதை மட்டும் திறந்து வைத்துக் கொண்டு மேஞ்சு தள்ளியிருக்கலாம் தான்.

இப்பொழுது ஓரளவிற்கு ஊகிக்க முடிகிறது இது போன்ற படைப்பாளிகள் அறிவுக் கண்ணை மட்டும் திறந்து வைத்துக் கொண்டு எல்லாத்தையும் அந்தப் பார்வையைக் கொண்டு எழுத்தை தொழிலாக மாற்றிக் கொண்டதிற்குப் பிறகு எப்படி என்னால் மனத்தை மட்டுமே திறந்து வைத்துக் கொண்டு அவ் எழுத்தை அணுக முடியும்? இழப்பதற்கு அங்கே எனக்கு என்ன இருக்க முடியும்? பிற மனிதர்களை இது போன்ற படைப்பாளிகளின் மூலமாக படித்துத்தான் என்னாகப் போகிறது? என் வழியிலயே சென்று மனிதம் கற்பதுதான் எனது மனதையும், அறிவையும் ஒரு சேர திறக்க வாய்ப்பாக அமைக்க முடியும்?

அதற்காக பிற படைப்பாளிகளின் எழுத்தை நேசிக்கப் போறதில்லை என்று பொருள் கிடையாது, பண்ணுவேன், பண்ணிக் கொண்டுமிருக்கிறேன் - எனது பார்வையில் மனந் திறந்தே இருப்பவர்களாக நினைப்பவர்களின் எழுத்துக்களை. குறைந்த பட்சம் இன்றைய கால கட்டத்தில்.

Thekkikattan|தெகா said...

மங்களூர் சிவா,

தனியாள் இல்ல; தோப்பா நிக்கோம் :))

உடன்பிறபு,

அதென்னங்க மம்மி ரிட்டர்ன்ஸ் மாதிரி "தெகா ரிட்டர்ன்ஸ்" புரியலயே இங்கிட்டு ஏதும் வந்தா சொல்லுங்க என்ன :)

அக்னி பார்வை,

பெரிய பெரிய விசயத்தை எல்லாம் பொளந்து கட்டிட்டு இருக்கீங்க உங்க வீட்டாண்டை வைச்சு ... சின்ன குழந்தைங்கிறீங்க... ஓ! என்னயச் சொன்னீங்களா அப்படி :))

சிபி,

மேலும் விரிவாக தங்களின் பார்வையை இங்கு வைத்து மெருகூட்டியதற்கு நன்றி!

சுரேஷ்,

சுட்டிக்கு நன்றி!

Related Posts with Thumbnails