Wednesday, January 12, 2011

சீமான் என்ன செய்யவேண்டும்?

சமீப காலமாக நான் கவனித்து வருபவர்களில் முக்கியமான இடத்தை பிடித்து வைத்திருப்பவர் இந்த சீமான். இவரை ஓர் அரசியல் கட்சி தலைவர் என்று பார்ப்பதனைக் காட்டிலும் இன்றைய நிலையில் பெரும்பாலான இளைஞர்களின் மனக் குமுறல்களின் ’பேசுவாய்’ என்றே கொள்ளத் தோன்றுகிறது. தமிழகத்திலுள்ள இரு பெரும் அரசியல் கட்சிகளின் புளித்துப் போன நடவடிக்கைகளையும், சுழற்சி அடிப்படையில் கோணிப் பைகளுடன் வந்து அள்ளிக் கொண்டு போக காத்திருக்கும் கூட்டங்களாகவே இருக்கிறது.

சமீபகாலமாக இளைய சமூகத்தின் மூளையின் முழுப் பகுதியையும் டாஸ்மார்க் அரித்து விடாத மக்கள் ஓரளவுக்கேனும் உணர்ந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் வெளிப்படுத்த வழியில்லாமல் அரசியல்வியாதிகளை நாட்டிய நாடகங்களை தினந்தோறும் பார்த்துக் கொண்டுருக்கிறார்கள்.

இந்த சந்திப்பில் சரியான திசையில் மீண்டும் வழி நடத்தி செல்லவும் ‘பணத்தை’ மட்டுமே குறியாக கொண்ட தலைகளைத் தாண்டி ஏதோ ஒரு வகையில் மாநிலத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பிரச்சினைகளுக்கு (தண்ணீர்) விடையறியும் ஒரு புள்ளியில் வந்து நிற்கிறது மாநில அரசியல். ஒரு அரசியல் தலைமையின் எதிர்காலம் என்னவாகப் போகின்றது என்பதை இந்த தேர்தல் நிச்சயம் முழுமையாக உணர்த்தாவிட்டாலும் கூட விபரம் புரிந்தவர்களுக்கு கோடிட்டி காட்டிவிடும்.

பரந்த பார்வையாற்ற, பணத்தை தாண்டி யோசிக்க தெரியாத தரித்திர குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் சதா காலமும் இன்றைய சூழ்நிலையில் தமிழினத்தை காக்க வந்த தேவர்களாக காட்சி அளித்துக் கொண்டுருப்பது ஒரு மகத்தான் ஆச்சரியமே? தங்களுக்கான தேவைகளை அதீதமான ஒரு ‘மேனியாக்’ தனமாகவே பாவித்து அதன் பின்னாலே சமரசங்களுடன் ஓடித்திரிந்து கொண்டுருக்கிறார்கள். எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்று ஒவ்வொரு முறையும் ஏமாறுவது திருவாளர் பொதுஜனம் மட்டுமே? இத்தகைய அவலத்தினை தாண்டி உண்மையாக யோசித்து மக்களுக்கு நிறந்தரமான ஒரு தீர்வை பெற்றுத் தரும் ஒரு தலையை ஒவ்வொரு காலகட்டத்திலும் காலம் கொண்டுவந்தும் சேர்த்துவிடுகிறது. நாங்கள் பொற்காலத்தை தமிழர்களுக்கு கொடுத்தவர்கள் என்பவர்களுக்கும் இல்லையில்லை எங்களால் மட்டுமே தமிழர்கள் விரும்பும் மறுமலர்ச்சியை அளிக்க முடியும் என்று சொல்லிக் கொண்டுருப்பவர்களுக்கும் இந்த தேர்தல் ஒரு குருஷேத்திர யுத்தம் போலத்தான் காட்சியளிக்கப் போகின்றது. பணம் தான் இன்று பாராளுமன்றத்தை தீர்மானிக்கிறது என்பதைப் போலவே இந்த பணமே இந்த தேர்தலில் பாதாளம் வரைக்கும் பாயப் போகின்றது..

இதற்கான தலைமையை நாம் காலம் தோரும் சினிமாவை பின்புலமாக கொண்டவர்களிடமிருந்தே எதிர்ப்பார்த்து பெற்றுக் கொள்கிறோம். அது நமது சாபங்களில் ஒன்று! அதன் பின்னணியிலிருந்து நமக்கு யாரோ ஒருவர் கிடைக்கப்பெற்றாலும், பேசும் விசயங்கள் சார்ந்து இருக்கும் ஆழ அறிவினைக் கொண்டு ஒரு நம்பிக்கை கீற்றை நமக்கு அவர்கள் வழங்கலாம்.

தெளிவற்ற, கொள்கையடிப்படையற்ற, குழப்ப மனநிலையிலிருக்கும் ஒரு சினிமா பிரபலத்தை விட, பிரச்சினையின் ஆழமறிந்த உடனடித் தேவைகளை கண்டறிந்த இளைஞனே இன்றைய தேவை. சீமானுக்கு இது அமைந்திருக்கிறது; திரைப்படம் என்றொரு பின்புலத்தை மட்டும் நீக்கிவிட்டு பார்த்தால். அவருக்கு உடனடியான, தடாலடியாக இந்திய பிரதம மந்திரியாகும் ஆசையெல்லாம் இருப்பதாக தெரியவில்லை.

துணிச்சலாக பிரச்சினைகளின் ஆழத்தைப் பற்றி பேசுகிறார். அரசியலாகிப் போன காவேரி, கொஹோனக்கல், முல்லை பெரியார் நீர் பகிர்தலைப் பற்றி ஆதாரப்பூர்வமாக பேசிகிறார். ஈழத்தின் துரோகத்தினைப் பற்றி ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாமல் பேசுகிறார். ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் வைத்து பகடையாடப்படும் தனத்தையும், அண்டைய நாடுகளுக்குள் எல்லைகளை வைத்து தேவையான பொழுது சில திசை திருப்பல்களுக்காக அரசியல் செய்து கொள்வதனைப் போன்று இன்றைய நிலையில் அண்டைய மாநிலங்களுக்குள்ளும் இது போன்ற உயிர்வாதார தண்ணீரை வைத்தும் விளையாட தலைப்பட்டுள்ள ஒரு நிலையில் சரியான கேள்விகளை முன் வைத்து தன் இருப்பை காட்டியுள்ளார் இந்த சீமான்.

என்னய பொருத்த மட்டிலும் இன்றைய கால கட்டத்தில் ஒரு அரசியல் கட்சியாக பரிணமிப்பதும் அதை இந்தியா உருவாக்கியிருக்கும் போலியான ஜனநாயக தார்மீக நெறிகளுக்குள் உருவாக்குவதும் சாதாரண காரியம் அல்ல. நமது ஊழல்/அராஜகம் மலிந்த, மக்களை இலவச நோய் பீடித்த, தார்மீக கோப முனை மழுங்கடிக்கப்பட்ட சமூகத்தில் அவ்வளவு சுலபமில்லை என்றே தோணச் செய்கிறது. இன்றை நிலை தேர்தல் வந்தால் யார் குடம் கொடுப்பார்கள், ஓட்டிற்கு அய்ந்தாயிரம் வரையிலும் கொடுத்தால் வாங்க மலினப்பட்டுள்ள மக்களைக் கொண்ட சமூகத்தில் நெறி சார்ந்தெல்லாம் கட்டியிழுப்பது என்பது சாத்தியமே இல்லை.

புரட்சி பேச்சுக்களை பேசி ஓர் இரவின் உட்சத்தில் மக்களை தெருவிற்கு இழுப்பது என்பதெல்லாம் சினிமாவில் பார்ப்பதற்கு வேண்டுமானால் சாத்தியப்படும்.

ஆனால், உண்மை சற்றே நேர்மாறானது. ஒரு நாடு என்ற கட்டமைப்பிற்குள் இருக்கும் பொழுது அதன் ஓட்டத்தில் சென்று விசயங்களை சாதித்து கொள்ள முடியும் என்பதே நிதர்சனம். அதற்கான வியூகங்களை வகுத்துக் கொள்வதே மேற்கொண்ட சிறைப்படுத்தல்களையும், தீவிரவாதி என்ற படைபலங்களின் முத்திரைக் குத்த காத்திருத்தல்களிலிருந்து தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கான அடிப்படையாக இருக்க முடியும்.

மாறாக, சீமான் புரட்சிகரமாக பேசுகிறார் என்பதற்காக சில இளைஞர்கள் அவரை அப்படியே பேசிக் கொண்டு, துண்டு பிரசுரங்கள் விநியோகித்து கொண்டு ஒரு நிலையில் கையில் கம்பெடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்தளவில் நன்மை பயக்கும்.??

சீமான் வெறுமனே ஈழம் சார்ந்த பிரச்சினையை மட்டுமே பேசி தமிழகத்தில் பெரும் அரசியல் கட்சியாக சாதிப்பதின் சாத்தியக் கூறும் மிகவும் குறைவு.. எனவே, தமிழகத்திற்குள் நிலவும் பிரச்சினைகளையும் எடுத்து முன் வைத்தே சமச்சீறாக நின்று தன்னை வார்த்து எடுத்துக் கொண்டாலே பெரியளவில் நாளை ஈழத்திற்காக மட்டுமல்ல புலம் பெயர்ந்து வாழும் எந்த தமிழர்களுக்கும் நினைத்தபடி குரல் எழுப்ப முடியும்.

அனைத்து வித பின்னணிகளை கொண்டு வைத்து பார்க்கும் பொழுது தன்னிச்சையாக நின்று பெரியளவில் எதனையும் சாதித்து காட்டிவிட முடியாது வரப் போகும் தேர்தலில் என்பதால் தமிழகத்தின் இரு பெரும் சக்திகளில் எதிர் முனையில் இருப்பவருடன் கை கோர்த்து, இன்றைய நிர்வாகத்தில் இருப்பவர்களை வீட்டிற்கு யோசிக்க அனுப்பவது ஒன்றே சமயோசிதமாக இருக்க முடியும். இதுவே நாற்பது ஆயிரம் மக்கள் எதற்காக நாம் சாகின்றோம் என்று தெரியாமல் இறந்து போனவர்களுக்கும் இரண்டு லட்ச ஈழ மக்கள் தங்கள் உறவுகளை மறந்து உயிர்ப்பிச்சைக்காக கூடார வாசிகளாக மாறிப் போனதற்கும் காரணமாக இருந்தவர்களுக்கும் கிடைத்த ஒரு சிறிய தண்டனையாக இருக்க முடியும்.

இதற்கு முன்னால் நாம் எத்தனையோ இன்றைய அரசியல் கட்சிகளின் ‘பல்டிகளை’ பல தேர்தல் களங்களில் பார்த்திருக்கிறோம். அதே சமூகப் பின்னணியில் சீமான் நிகழ்த்தியிருப்பதும் ஒரு பல்டியெனவே வைத்துக் கொண்டாலும், எதிர்காலத்தில் அவர் கொண்ட கொள்கையில் சிறிதேனும் நேர்மையாக இருப்பார் என்று நம்பி பெரிய படத்தை பார்க்க ஆயத்தமாவோம்.

73 comments:

ஜோதிஜி said...

நாட்டை இனி திருத்தமுடியாது என்பவர்களுக்கு மத்தியில் நான் திருத்தவரவில்லை. திருடுபவர்களை சுயநலமிகளை கொள்கையற்றவர்களையும் கொள்ளைக்கூட்டத்தை அடையாளம் காட்ட வந்துள்ளேன் என்பது போல இவரின் கர்ஜனை கேட்க நன்றாகவே இருக்கிறது. ஆனால் அரசியலில் நிலையாமை தத்துவம் முயலாமை ஆகிவிடக்கூடாது.

ஜோதிஜி said...

முதலில் தன்னை இவர் இந்த அரசியலில் ,ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு இளைஞர் கூட்டம் இவரை நம்ப ஆரம்பித்துள்ளது. ஆனால் இதன் முடிவும்? எங்கே செல்லும் இந்த பாதை? என்பதை நினைக்கும் சற்று கலவரமாகவே இருக்கிறது.

ஜோதிஜி said...

படம் ஒன்றே போதும். செய்திகள் பல சொல்கிறது.

ILA(@)இளா said...

அரசியல்னா சாக்கடை,. அதுல குதிச்சாத்தான் சுத்தம் செய்ய முடியும். சீமானும் அப்படித்தான் குதிச்சிருக்காரு. பலர் அப்படி குதிச்சு அந்த நாத்தம் பழகி அப்படியே இருந்துட்டாங்க. சிலர் நாத்தம் தாங்காம வெளியே போயிட்டாங்க. யாரும் சுத்தம் செய்யவே இல்லை. இவர் இப்போதான் குதிச்சிருக்காரு. பார்ப்போம்

முகுந்த் அம்மா said...

ம், நிறைய கருத்துக்களை கொடுத்து சீமானின் நிலைப்பாட்டை உணர வச்சிருக்கீங்க..ஆனாலும் மறுபடியும் இந்த ரெண்டு கட்சிகளை சுத்தி தான் தமிழ் அரசியல் வாழனுமா...வேற வழியே இல்லையா :(((

நசரேயன் said...

// எதிர்காலத்தில் அவர் கொண்ட கொள்கையில் சிறிதேனும் நேர்மையாக இருப்பார் என்று நம்பி பெரிய படத்தை பார்க்க ஆயத்தமாவோம்//

ம்ம்ம்

கும்மி said...

அதுக்குள்ளே பெருந்தலைகள்லாம் பின்னூட்டக் களத்துல இறங்கிட்டாங்களா? நான் அப்படி ஓரமா நின்னு வேடிக்கை பாக்குறேன்.

Thekkikattan|தெகா said...

நான் அப்படி ஓரமா நின்னு வேடிக்கை பாக்குறேன்.//

கும்மி அப்படியெல்லாம் சொல்லிட்டு ஒதுங்கி நின்னு பார்க்கப்பிடாது. சொல்ல வேண்டியதை சொல்லுற நேரத்தில சொல்லிப்புடணும். வ்யசுப்புள்ளாய சங்கதியா ;-)

கும்மி said...

உங்கள் பதிவில் ஏற்புடைய கருத்துக்கள் இருந்தாலும், இளவரசனின் இன்றைய பதிவு சரியானதாகத் தெரிகின்றது. இளவரசனின் பதிவை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போதும், இளவரசனின் முந்தைய பதிவு இன்னும் சுழற்றி அடிக்கின்றது. ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

அதனால் தற்போதைக்கு வேடிக்கை பார்க்கின்றேன்.

---
யார் முதல்வராகத் தொடரக் கூடாது என்பதில் எவ்விதக் குழப்பமுமில்லை.

Thekkikattan|தெகா said...

இளவரசனின் முந்தைய பதிவு இன்னும் சுழற்றி அடிக்கின்றது. ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. //

கும்மி நானும் இளவரசனின் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். அவரின் நிலை/ஆதங்கம் புரிகிறது. இருப்பினும் நம்மூர் யானைகளுக்கு முன்னால் இந்த சோளப் பொரியெல்லாம் ஒன்றுமல்ல என்றைய நிலையை எட்ட இன்னுமொரு ஐந்து வருட ஆட்சியே போதுமானதாக இருக்கும். இப்படியே தொடர்ந்து சீமான் பேசிக் கொண்டிருந்தால், வெற்று கோஷங்களாகிவிடக் கூடிய அபாயமிருக்கிறது.

புரட்சி என்பது மூன்று மணி நேர சினிமாவில் பேசி மறுமலர்ச்சி ஏற்படுத்தக் கூடிய விசயமல்லவே! வேறு என்ன செய்திருக்க முடியும் இந்த சந்திப்பில்... அந்தக் காலம் மாதிரி இந்தக் காலம் இல்லை மக்கள் எல்லாம் தொலைக்காட்சி பெட்டியின் போதையிலிருந்தும், டாஸ்மார்க்கின் அடிமைத்தனத்திலிருந்தும் வெளியில் வரும்படியாக இல்லை... நிதர்சனம் பார்ப்போம். என்பது என்னுடைய நிலை!

கும்மி said...

தமிழக அரசியல் களத்தில் ஆட்சியைத் தீர்மானிக்கும் ஒற்றைப் புள்ளியாய் ஈழம் இருந்ததில்லை; இனி இருக்கவும் வாய்ப்பில்லை. அதனால், சீமான் ஈழம் தவிர்த்து மற்றவற்றிலும் கவனம் செலுத்துவது; அவற்றுள் ஆழ்ந்த அறிவு பெற்றிருப்பதெல்லாம் வரவேற்கத்தக்கதுதான்.

ஆனால், மிகப்பெரும் கேள்வியாக இப்பொழுது தொக்கி நிற்பது, சீமானின் சாதீய நிலைப்பாடு. அதனை வைத்துப் பார்த்தால் இவரும் இன்னொரு சந்தர்ப்பவாதியாக இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகின்றது. (சாதீய நிலைப்பாட்டையே நான் சந்தர்ப்பவாதம் என்று கூறியுள்ளேன்; வேறு எதனையும் அல்ல)

அவரது சாதீய நிலைப்பாடு பற்றி சமீபத்தில்தான் நான் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒருவரை, ஒரு மாற்று என்று ஏற்றுக்கொள்வதில் ஏனோ எனக்குத் தயக்கம் உள்ளது.

அவரது சாதீய நிலைப்பாடு தவிர, வேறு எந்த விஷயத்திலும் அவர்மீது எனக்கு எதிர்மறை எண்ணம் இல்லை. நான் அறிந்தவரையிலும் மற்ற அரசியல்வாதிகளை விட அவர் மேம்பட்டவராகதான் தெரிகின்றார்.

---
எங்கே சுற்றினாலும், சாதீய நிலைப்பாடு என்னும் அதே இடத்தில் வந்துதான் நிற்பதாகத் தெரிகின்றது. அதனைத் தவிர்த்து விட்டு வேறு விஷயங்கள் பேசலாம் என்று நினைக்கின்றேன்.

--
இன்னும் ஒரு கை கொறையுதே! எங்கே போனார் நம்ம கல்வெட்டு?

.

Thekkikattan|தெகா said...

நாட்டை இனி திருத்தமுடியாது என்பவர்களுக்கு மத்தியில் நான் திருத்தவரவில்லை. திருடுபவர்களை சுயநலமிகளை கொள்கையற்றவர்களையும் கொள்ளைக்கூட்டத்தை அடையாளம் காட்ட வந்துள்ளேன் என்பது போல இவரின் கர்ஜனை கேட்க நன்றாகவே இருக்கிறது. ஆனால் அரசியலில் நிலையாமை தத்துவம் முயலாமை ஆகிவிடக்கூடாது//

அதேதான் ஜோதிஜி! கர்ஜிப்பது கேக்கவே நல்லா இருக்கு. அதுவும் புதிசா கட்சி தொடங்கி பேசவே பயப்பிடுகிற விசயகோந்துகள் மத்தியில் இது மாதிரி ஓர் ஆளு உரக்க பேசுவது... முயலாமை ஆகிவிடக் கூடாது - முயற்சிக்கட்டும். பேசுவோம் இருங்க, பின் உள்ள பின்னூட்டங்களில் :)

பழமைபேசி said...

ஊரில் அரசியல் நடத்துவது என்பது பெரும் சிக்கலான காரியம்.

1965 வரையிலும், அதிகார அரசியல்!

1965-1975 வரையில், உணர்வு அரசியல்(இந்திய அரசியலில், பரவாயில்ல காலம்)!!

1975-1990 வரையில், கவர்ச்சி அரசியல்

1990-2005 வரையிலும், கவர்ச்சி, சாதி/வாரிசு அரசியல்

2005லிருந்து, பணம், கவர்ச்சி, சாதி, வாரிசு அரசியல்

பணம், கவர்ச்சி, சாதி, வாரிசு இதுக்கும் கூடுதலா எதனா, யாராவது கொண்டு வந்தா, அவர்கள் முன்னுக்கு வரலாம்!!!

Thekkikattan|தெகா said...

பணம், கவர்ச்சி, சாதி, வாரிசு இதுக்கும் கூடுதலா எதனா, யாராவது கொண்டு வந்தா, அவர்கள் முன்னுக்கு வரலாம்!!!//

பழம, அதான் அழக வரிசை படுத்தி சொல்லிட்டீங்களே! பிறகென்னா இதை வைச்சு ஒரு புத்தகமே எழுதுற அளவிற்கு விசயமிருக்கு. செஞ்சிட வேண்டியதுதான் ;-)!

சரி, இதனை பின்னோக்கி நகர்த்தி ...1965-1975 வரையில், உணர்வு அரசியல்... அந்த கால கட்டதிற்கு எடுத்திட்டு போக வழியே இல்லையா? அதற்கான தேவைதான் ரொம்ப அவசியமாயிடுச்சே.

சொன்ன மாதிரி கட்சி ஸ்தாபனம் ஒன்று வைச்சு நடத்துவது என்பது நம்மூரில் பில் கேட்ஸ்தனம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை... ஏதாவது ஐடியா கொடுங்க சாமீஈஈ ;-)

Sethu said...

ஒன்றைப் பிடிக்க வில்லை என்றால் அதற்கு மாற்றாக இன்னொரு கட்சி, அதுவும் தான் ஆரம்பித்து தான் வர வேண்டும் என்று எதிர் பார்த்தால் இன்னும் ஆயிரக் கணக்கான கட்சிகள் தான் உருவாகும்.

நிறை குறை இல்லாத மக்களும் கிடையாது, கட்சிகளும் கிடையாது. ஒரு நாணயத்துக்கு இரு பக்கம் போல, ஒரு கருத்துக்கு இன்னொரு மாற்று கருத்து இருந்து கொண்டு தான் இருக்கும்.

தவறு நேரும் பொது அதை உட்கட்சிக்குள் விமர்சனம் செய்துகொண்டு நேர்மையாக வருவதற்கு ஒரு குழு இருக்கக் கூடிய அமைப்பா இருக்கணும்.

இருக்கும் கட்சிகளில் தன்னை இணைத்துக் கொண்டு தனது கோரிக்கைகளை கொள்கை லட்சியங்களை அவர்களிடம் கொண்டு சென்று மேல் வருவது, தலைமை பதவிக்கு வருவது நன்றாக இருக்கும். அதை விட்டுவிட்டு தானும் ஒரு தனி மனித ஹீரோவாக காண்பிக்க முயற்ச்சித்தால் தோல்வியில் தான் முடியும்.

தனி மனிதனை முன்னுறுத்தி வரும் கட்சிகள் எல்லாம் அடையாளம் இல்லாமல் போகிவிடுவதைப் பார்க்கலாம். வெறும் பெயருக்கு மட்டும் இருந்து வரும். நானே ராஜா நானே மந்திரி, கூட்டணி அமைப்பதை தலைவன் பார்த்து கொள்வான் என்று ஆனால், கூடிய சீக்கிரம் கட்சிக்கு அந்திமக் காலம் தான்.

Santhose said...

I have a different opinion. Seeman should act independently like Periyar. He should not give up his policies at any cost.

அருண்மொழிவர்மன் said...

//இன்றைய நிலையில் பெரும்பாலான இளைஞர்களின் மனக் குமுறல்களின் ’பேசுவாய்’ என்றே கொள்ளத் தோன்றுகிறது//

சரியான அவதானம். சீமான் பற்றியும் அவரது உணர்ச்சியூட்டும் பேச்சுகள் பற்றியும் விமர்சனம் இருந்தாலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் அட்டகாசம் அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்களின் மெத்தனமும், இப்படித்தான் கோபம் கொண்ட இளைஞர்களை உருவாக்கும்

மீன்துள்ளியான் said...

சீமான் இந்த தேர்தலுக்கு அப்புறம் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும் . இல்லை என்றால் அவரை நம்புவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்

கல்வெட்டு said...

.

தெகா,
நல்ல நேரத்தில் ஒரு பதிவு.
.
கும்மி வந்தாச்சு நானும் :‍))
.

**

ஏற்கனவே ஜோதிஜி அவர்களின் பதிவில் சீமான் குறித்து நிறையப் பேசியாகிவிட்டது (எனது பார்வை என்ற அளவில்)

சீமான் தேறுவாரா? தடம் மாறுவாரா?
http://deviyar-illam.blogspot.com/2010/12/blog-post_21.html

இப்போது பேசப்பட வேண்டியது அவர் எடுத்திருக்கும் தேர்தல் நிலைப்பாடே. யார்வாது சீமானின் "நாம் தமிழர் இயக்கம் " கொள்கைகளை விளக்கும் சுட்டி கொடுத்தால் நல்லது.

அவரின் கொள்கைகள் என்று தெரியாமல் அவரை விமர்சிக்க முடியவில்லை. (காங்கிரஸ் , அதிமுக திமுக , கம்யூனிஸ்ட் க்கு எல்லாம் கொள்கை இருக்கா என்று கேட்கப்படக்கூடாது. அவைகள் மக்களின் எல்லாம் எதிர்பார்ப்பை ஏமாற்றிவிட்ட கூட்டம். வேண்டும் என்றால் தனியாகப் பேசலாம்.)

**

கருணாநிதி எதிர்ப்பு என்ற ஒற்றை நோக்கத்தில் ஏற்படும் கூட்டணி எனக்கு ஏற்புடையதல்ல. ஒரு வேளை சீமான் இருக்கும் (பிரச்சாரம் செய்யும்) கட்சி வெற்றி பெற்று அதைல் இருந்து முதல்வர் வந்து விட்டால், அதை வைத்துச் சீமான் என்ன செய்ய உத்தேசம்? அதை அவர் பொதுவில் வெளியிட வேண்டும்.

1. நாம் தமிழர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் என்ன?

2. "நாம் தமிழர் இயக்கம்" ஏன் இந்தக் கூட்டணியில் சேர்கிறது?
வெற்றி பெற்று முதல்வராக அந்தக் கூட்டணித் தலைவர் வந்துவிட்டால்...

3. அவரிடம் இருந்து என்னவெற்றைப் பெற "நாம் தமிழர் இயக்கம்" நினைக்கிறது?

4. அதற்கான கால அளவு என்ன?

5. அது நடக்காத பட்சத்தில் , என்ன செய்யப்போகிறது?

6. கூட்டணி தோற்றால், அடுத்த திட்டம் என்ன?

..

இப்படி திட்டங்கள் இல்லாமல் கல்யாண வீட்டில் கூடும் கூட்டம் போல , தேர்தல் முடிந்தவுடன் கலைந்து செல்வது என்பது, தேர்தல் நேரத்தில் முளைக்கும் லெட்டர் பேட் சாதிக் கட்சிகள் போன்றது.

..cont

கல்வெட்டு said...

cont....

அரசியல் என்பது தேர்தல் வெற்றி தோல்வி அல்ல. மக்கள் பிரச்சனைகளை இடைவிடாமல் பேசுவது மற்றும் செயல்படுத்துவது. தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரம் கிடைத்தால் அது ஒரு ப்ளஸ் தானே தவிர , தேர்தல் கால கூட்டணிகள் வெற்றிமட்டும் அரசியல் அல்ல.

...

தெகா சொன்னது...

//என்னய பொருத்த மட்டிலும் இன்றைய கால கட்டத்தில் ஒரு அரசியல் கட்சியாக பரிணமிப்பதும் அதை இந்தியா உருவாக்கியிருக்கும் போலியான ஜனநாயக தார்மீக நெறிகளுக்குள் உருவாக்குவதும் சாதாரண காரியம் அல்ல. நமது ஊழல்/அராஜகம் மலிந்த, மக்களை இலவச நோய் பீடித்த, தார்மீக கோப முனை மழுங்கடிக்கப்பட்ட சமூகத்தில் அவ்வளவு சுலபமில்லை என்றே தோணச் செய்கிறது. இன்றை நிலை தேர்தல் வந்தால் யார் குடம் கொடுப்பார்கள், ஓட்டிற்கு அய்ந்தாயிரம் வரையிலும் கொடுத்தால் வாங்க மலினப்பட்டுள்ள மக்களைக் கொண்ட சமூகத்தில் நெறி சார்ந்தெல்லாம் கட்டியிழுப்பது என்பது சாத்தியமே இல்லை.//

இது உண்மையே .
இந்த நிலையில் யாரும் தேர்தலில் பணம் இல்லாமல் வெற்றிபெற முடியாது. பணம் ஒன்றே பிராதானம். இதற்கான காரணம் அரசியல் கட்சிகளில் இருக்கும் ஒரு ஆயிரம் அல்லது பத்தாயிரம் தலைவர்கள் (சோனியா, கருணாநிதி, வைகோ, அத்வானி,...) மட்டும் காரணம் என்று கை காட்டிவிட்டு நாம் சும்மா தப்பித்துக் கொள்ளமுடியாத

* முட்டாள்கள் வாழும் நாட்டில் ஆகச்சிற‌ந்த முட்டாளே முதல் ரேங்க் வாங்கியவராக அறிவிக்கப்படுவார்.

* சோற்றால் அடித்த பிண்டங்களாக மக்கள் இருக்கும் வரை அவர்கள், இருக்கும் முட்டாள்களில் எந்த முட்டாளைத் தேர்ந்தெடுப்பது என்றுதான் தேர்தல் இருக்கும்.

* கழக பிரியாணிக் குஞ்சுகளும் (பிரியாமணி அல்ல) நக்கிப்பிழைக்கும் நாய்களாக Why do we exist as a political party and what are our core principles என்று தெரியாமல் அவனவன் அவன் சார்ந்த தலைமை எடுத்த கூட்டணி முடிவுக்கு வக்கலாத்து வாங்குவதிலேயே குறியாய் இருப்பார்கள்.

**

முதலில் மக்களுக்கு என்ன தேவை என்று அந்த மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதன் பின்னர்தான் , தனது தேவையை நிறைவேற்ற ஒரு தலைவனைத் தேட முயல்வார்கள்.

...contd

கல்வெட்டு said...

...cont

தெகா சொன்னது..

//புரட்சி பேச்சுக்களை பேசி ஓர் இரவின் உட்சத்தில் மக்களை தெருவிற்கு இழுப்பது என்பதெல்லாம் சினிமாவில் பார்ப்பதற்கு வேண்டுமானால் சாத்தியப்படும்.

ஆனால், உண்மை சற்றே நேர்மாறானது. ஒரு நாடு என்ற கட்டமைப்பிற்குள் இருக்கும் பொழுது அதன் ஓட்டத்தில் சென்று விசயங்களை சாதித்து கொள்ள முடியும் என்பதே நிதர்சனம். அதற்கான வியூகங்களை வகுத்துக் கொள்வதே மேற்கொண்ட சிறைப்படுத்தல்களையும், தீவிரவாதி என்ற படைபலங்களின் முத்திரைக் குத்த காத்திருத்தல்களிலிருந்து தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கான அடிப்படையாக இருக்க முடியும்.

மாறாக, சீமான் புரட்சிகரமாக பேசுகிறார் என்பதற்காக சில இளைஞர்கள் அவரை அப்படியே பேசிக் கொண்டு, துண்டு பிரசுரங்கள் விநியோகித்து கொண்டு ஒரு நிலையில் கையில் கம்பெடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்தளவில் நன்மை பயக்கும்.??//


சரிதான் ஒத்துக் கொள்ளலாம்.
சீமானையே உதாரணமாக் கொள்வோம்.

அவரால் ஒரு அரசியல் சாம்ராஜ்யத்தை இந்த மக்களை வைத்து எழுப்ப முடியாது.

எனது கேள்வி , அது அவருக்குத் தெரியுமா?

அப்படித் தெரிந்து உள்ளது என்றே கொள்வோம்.

ஏன் கூட்டணி?

சரி தனது கொள்கைகளை நிறைவேற்றவே கூட்டணிக்கு சம்மதிக்கிறார் என்று கொள்வோம்.

எந்தக் கொள்கையை நிறைவேற்ற?

கருணாநிதி தோற்பு என்னும் கொள்கை மட்டுமா?

சரி கருணாநிதி தோற்றுவிட்டார் என்றே கொண்டால் அதை அடுத்து என்ன செய்யப்போகிறார்?

ஈழப்பிரச்சனை மட்டுமே இவரின் பேச்சில் தெரிகிறது. சரி அது சம்பந்தமாக இவர் கூட்டணியிடம் என்ன பேசி எதற்கு ஒத்துக்கொண்டார் என்று சொல்வாரா?

சீமான் சேர்ந்துள்ள கூட்டணி வென்றால் ஈழ விடுதலைக்கு என்ன என்ன திட்டம் செய்யப்படும் என்று பட்டியல் இடுவாரா?

எல்லைப்புற மாநிலமான நமக்கு வெளியுறவுக் கொள்கைகளை மாநிலங்களின் நலனுக்கு ஏற்ப திருத்தி அமைக்க அறைகூவல்விட எல்லா தார்மீக அடிப்படையும் உண்டு.

ஒரு வேளை இவர்களே அடுத்த மத்தியத் தேர்தலிலும் வென்றால், வெளியுறவு கேபினட் அமைச்சகத்தையும் ,இராணுவ அமைச்சகத்தையும் கேட்டுப்பெறுவோம் என்று சொல்வார்களா?

cont....

கல்வெட்டு said...

...cont
தமிழகத்தின் விதி...

1.நல்ல தலைமை வேண்டும் என்று நினைக்கும் மக்கள் புதிய தலைமையை தேடவேண்டும்.

2.இருப்பது போதும் என்று நினைக்கும்போது அங்கே வளர்ச்சி தடைப்படுகிறது.

3.இருப்பதில் எது நல்லது என்று தேடினால் அழுகிய தக்காளிக்கூடையில் முறைந்தபட்ட அழுகலையே தேர்ந்தெடுக்கமுடியும்.

4.ரோட்டில் சிக்னலை மதிக்காத xxxடங்களும்,வரிசையில் எப்படி நிற்பது என்று தெரியாத xxxxகளுக்கும் ,கொள்ளை அடிப்பவர்களே தலைவர்களாக வருவார்கள். இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

5. நல்லவன் கக்கூசுகூட்டினாலும் அவன் வேலையை நன்றாகச் செய்வான். அயோக்கியன் அரசனாக இருந்தாலும் பதவி அவனை நல்லவனாக மாற்றாது.

ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணர்வது முக்கியம். இல்லை என்றால் மந்தையுடன் தான் மிச்ச வாழ்வும் இருக்கும்.

முக்கியம்:
வியாக்கியானம் மட்டும் பேசும் நானும் முகெலும்பில்லாத கோழைதான். :-((

நான் கோழை என்பதனாலேயே கொள்கை அற்றவர்களை ஏற்கவேண்டும் என்பது என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அந்த வகையில் நான் இன்று இப்போது சீமானை நிராகரிக்கிறேன் .எனது நிராகரிப்பு என்பது செல்லாக்காசாக இருந்தாலும் இன்று செய்யமுடிந்தது இதுதான்.

சீமான் கொள்கைகளை அறிவித்து, அவர் இயக்கதில் இருக்கும் ஒவ்வொருவரும் அந்தக் கொள்கைக்காக மட்டுமே சேர்ந்தவர்கள், அவர்களின் கூட்டணி, அந்த அறிவிக்கப்பட்ட கொள்கையை அரசிய‌ல் சாணக்கியத்தின் மூலம் பெறவே கூட்டணி என்ற‌‌ வழியை ஏற்கிறது என்று சொன்னால், அவரின் மீதான எனது கணிப்பு மாறும்.


//

இங்கு நான் சொல்லி இருப்பவை பல ஏற்கனவே மா. சிவக்குமாரின் பதிவில் நான் சொன்னதுதான்.

ஈழம் குறித்து‍ வாய்ச் சொல் வீரர்கள்
http://masivakumar.blogspot.com/2009/05/blog-post_21.html

பிரிவினை வாதி அத்வானி - தேசத் துரோகி நரேந்திர மோடி
http://masivakumar.blogspot.com/2009/04/blog-post_14.html

கல்வெட்டு said...

.
தெகா..
//இதற்கு முன்னால் நாம் எத்தனையோ இன்றைய அரசியல் கட்சிகளின் ‘பல்டிகளை’ பல தேர்தல் களங்களில் பார்த்திருக்கிறோம். அதே சமூகப் பின்னணியில் சீமான் நிகழ்த்தியிருப்பதும் ஒரு பல்டியெனவே வைத்துக் கொண்டாலும், எதிர்காலத்தில் அவர் கொண்ட கொள்கையில் சிறிதேனும் நேர்மையாக இருப்பார் என்று நம்பி பெரிய படத்தை பார்க்க ஆயத்தமாவோம்.//

நிச்சயம் தெகா ஆயத்தமாவோம்.

அவரது கட்சியின் கொள்கைகள் என்ன? என்பது இமாலயக் கேள்வி.

.

Thekkikattan|தெகா said...

ஆஹா! கல்வெட்டு நீங்க விட்ட ஒரு அம்பு நூறு அம்புகளான மாதிரி இத்தனை கேள்விகளை தூக்கி கடாசி இருக்கீங்களே இதுக்கெல்லாம் யாரு பதில் சொல்லுறது.

சீமான், சீமான், சீமான் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் ;-)

//ஈழப்பிரச்சனை மட்டுமே இவரின் பேச்சில் தெரிகிறது. சரி அது சம்பந்தமாக இவர் கூட்டணியிடம் என்ன பேசி எதற்கு ஒத்துக்கொண்டார் என்று சொல்வாரா?//

இதுக்கு கண்டிப்பாக அவரு தேர்தலுக்கு முன்னாடி பதில் சொல்லுவாருன்னு நினைக்கிறேன்.

எனக்கு தெரிஞ்ச வரைக்கும் கல்வெட்டு, சீமானுடைய கண்ணுக்கு இப்போ திமுக மற்றும் காங்கிரசை கவிழ்த்து போடணும். அம்புட்டுத்தேய்ன் போல...

ஜோதிஜி said...

கும்மி அது யாருங்க இளவரசன். கல்வெட்டு போல நீங்க ஏன் சுட்டி கொடுக்கல. இதுக்கு ஆயிரம் பொற்காசு அல்ல. ஆயிரெத்து ஒன்று கசையடி. யார் அங்கே? யாரடா அங்கே?

கல்வெட்டுக்கு ஒரு பூமாலையும் கும்மிக்கு ஒரு குத்தும் கொடுக்க ஓடீ வாங்கடா?

மங்குனி அமைச்சர்.

Thekkikattan|தெகா said...

ஜோதிஜி said...
கும்மி அது யாருங்க இளவரசன். கல்வெட்டு போல நீங்க ஏன் சுட்டி கொடுக்கல. இதுக்கு ஆயிரம் பொற்காசு அல்ல. ஆயிரெத்து ஒன்று கசையடி. யார் அங்கே? யாரடா அங்கே?

கல்வெட்டுக்கு ஒரு பூமாலையும் கும்மிக்கு ஒரு குத்தும் கொடுக்க ஓடீ வாங்கடா//

ஹாஹாஹா... என்ன களப்பிரர், சோழர், பாண்டியர்னு படிச்சு படிச்சு ஹாங்க் ஓவர் ஆயிப்போன மாதிரி இருக்கு ;-)...

இந்தாங்க அந்த இளவரசனின் பதிவு சீமானுக்கும், தமிழ் தேசியத்திற்கும் எட்டு காத தூரம்!

கல்வெட்டு said...

ஜோதிஜிக்காக..

கும்மி சொன்னது இவராக இருக்குமோ?

சீமானுக்கும், தமிழ் தேசியத்திற்கும் எட்டு காத தூரம்!
http://ilavarasanr.blogspot.com

ஜோதிஜி said...

நன்றி கல்வெட்டு

நானும் இளவரசனை தொடர்கின்றவன் தான்.

முதலில் அவரை கருப்பு நிற பின்புலத்தை நீக்கச் சொல்லுங்க. கண்ணுல பூச்சி பறக்குது. அப்புறம் எங்கே போய் படிக்கிறது.

ஜோதிஜி said...

இந்த விமர்சனத்தை எழுதி விட்டு நகர்கின்றேன்.

கூட்டணி, எதிரியை ஓழிப்பது முக்கியம் போன்ற வார்த்தைகளை விட நான் சீமானிடம் எதிர்பார்ப்பது?????????

தோட்டத்திற்குள் நுழைய பல நாட்கள் காத்திருப்பது.........

பொறுமையாக உட்கார்ந்திருப்பது......

நான் சொல்வது வரைக்கும் எவரும் அறிக்கை கொடுக்கக்கூடாது என்ற ஆணவத்தை உடைப்பது........

பார்த்தவுடன் பவ்யமாக கூழைக்கும்பிடு போடுவது..........

சாஷ்டாங்கமாக தொபுக்கடீர்ன்னு நெஞ்சாங்கிடையாக தரையில் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் மாதிரி விழுவது.......

இது போன்ற அசிங்க நிகழ்வுகளில் இருந்து சீமான் எழுந்து நின்று வெளியே வந்து விட்டால் என் பார்வையில் உயர்ந்து நிற்பார்.

இல்லாவிட்டால் இவரும் பத்தோடு இவரும் ஒன்று.....

பார்க்கலாம் இன்னும் சிறிது நாளில் புகைப்படம் வந்து விடும்.

இது போன்ற கருமாந்திரம் எல்லாம் கலைஞரைப் போய்ச் சந்திக்கும் போது எவருக்கும் உருவாகாத ஒன்று.

அந்த வகையில் கலைஞர் கண்ணியமான தலைவர் தான்.

கொள்கைகள் வேறு..... அரசியல் நாகரிகம் வேறு.

சரிதானே கும்மி கல்வெட்டு.......

மீண்டும் வருவேன்.

பயணமும் எண்ணங்களும் said...

ஒரு ஊழல் மலையை அசைக்க பத்து வித குணாதிசயங்கள் கொண்ட குன்றுகள் ஒன்றுபடபோகிறது..

மலை அசையுமா?..

குணாதிசய குன்றுகள் ஒன்றுபட்டு ஆட்சி அமைக்க இயலுமா?..

மொத்தத்தில் தமிழ்நாடு எடுப்பார் கை பிள்ளையாகிப்போனதே...

சீமானிடம் வேகம் இருக்குமளவுக்கு விவேகம் இருந்ததில்லை.. கற்றுக்கொள்ளணும்..

Thekkikattan|தெகா said...

ஒரு ஊழல் மலையை அசைக்க பத்து வித குணாதிசயங்கள் கொண்ட குன்றுகள் ஒன்றுபடபோகிறது..

மலை அசையுமா?..

குணாதிசய குன்றுகள் ஒன்றுபட்டு ஆட்சி அமைக்க இயலுமா?...//

:))) இது என்னங்க சினிமாவிற்கு விளம்பரம் பண்ணுற மாதிரி, மீதத்தை வெள்ளித் திரையில் காண்கங்கிற மாதிரி...

சீமான் இப்போதான் இந்திய அரசியல்’வியாதிகளின் பல்கலையில் முதல் வருடம் சேர்ந்திருக்கார் போக போக கத்துக்குவார்... :)

கல்வெட்டு said...

.

ஜோதிஜி...

//கொள்கைகள் வேறு..... அரசியல் நாகரிகம் வேறு.//

ஆம் உண்மையே

ஆனால்...

கொள்கை இல்லாமல் அரசியல் கட்சியைத் (ஒரு இயக்கம்) தொடங்க முடியுமா?

இவர் தொடங்கியுள்ள இயக்கத்தின் கொள்கை என்ன?

அந்தக் கொள்கை தெரிந்த பிறகு, அந்தக் கொள்கைக்காக நாகரீக அரசியல் நடத்துகிறாரா என்று பார்க்கலாம்.

.

Thekkikattan|தெகா said...

கொள்கை இல்லாமல் அரசியல் கட்சியைத் (ஒரு இயக்கம்) தொடங்க முடியுமா?

இவர் தொடங்கியுள்ள இயக்கத்தின் கொள்கை என்ன?

அந்தக் கொள்கை தெரிந்த பிறகு, அந்தக் கொள்கைக்காக நாகரீக அரசியல் நடத்துகிறாரா என்று பார்க்கலாம்.//

இந்த பதிவினையும் இதற்கென வந்திருக்கும்/வரப்போகும் கருத்துக்களையும், கல்வெட்டு உங்க கேள்விகளையும் கண்டிப்பாக சீமானிடம் கொண்டு சேர்க்க முயற்சிக்கிறேன் ;). ரொம்ப அடிப்படையான கேள்விய கேட்டு என்னய திக்குமுக்காட வைச்சிட்டீங்க.

நாம் தமிழர் இணைய தளத்தில் கொள்கைகளுக்கான இணைப்பு இருக்கா இல்லையா? ம்ம்ம்...

கல்வெட்டு said...

.

நம்மால் செய்ய முடியாத ஒன்றை ஆதரித்து எழுதவோ பேசவோ கூடாது. வாழ்க்கையைத் துறந்து துப்பாக்கி தூக்கி வவுனியா காடுகளுக்குப் போகத் தயாராக இல்லாத வரை விடுதலைப் புலிகளை ஆதரித்து சத்தம் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

பொறுப்புகளைத் தூக்கி எறிந்து விட்டு தெருவில் இறங்கிப் போராடத் தயாராக இல்லாத வரையில் சமூக அவலங்களைக் குறித்துப் புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது.

பத்து வார்த்தைகள் பேசினால், நூறு வார்த்தைகள் எழுதினால், குறைந்தது அந்த வழியில் வாரத்துக்கு ஒரு நாளாவது செயலில் காட்ட முடிய வேண்டும்.

அப்படி நடைமுறையில் செயல்படுத்த முடியாதவற்றை கதைத்துக் கொண்டிருப்பது intellectual masturbation தான்.

@ Thursday, May 21, 2009
by Ma. Siva

http://masivakumar.blogspot.com/2009/05/blog-post_21.html

.

வெட்கமாக இருக்கிறது எனக்கும். புத்தன் போல பெண்டாட்டி பிள்ளைகளை விட்டு விட்டு நடு இரவில் மறைந்து செல்ல இன்னும் துணிவு வரவில்லை. புத்தன் செய்தது போல ஏதாவது ஒன்றுக்குத் துரோகம் செய்துதான் பொதுப்பணிக்கு வரமுடியுமோ?

ஆயிரம் சப்பைக் காரணங்கள்... எவ்வளவு நாள் என்று என்னை நானே பார்த்துக்கொண்டுள்ளேன்... :-(((((

பயணமும் எண்ணங்களும் said...

:))) இது என்னங்க சினிமாவிற்கு விளம்பரம் பண்ணுற மாதிரி, மீதத்தை வெள்ளித் திரையில் காண்கங்கிற மாதிரி...//

தற்போதைய அரசு நீக்கப்படணும் , மாறுதல் வேண்டும் என அனைவரும் நினைக்க ஆரம்பித்துவிட்டோம்...

ஆனால் நடக்காது என்பதும் உறுதி ( என் கருத்து இது )

மாற்று கட்சி ( கூட்டணிகள் )பற்றி நினைத்தாலே வேறொரு பயம் அப்பிக்கொள்கிறது...:)

தற்போதைய ஆட்சியில் சட்டம் ஒழுங்காவது ஓரளவுக்கு சீர் குலையாமல் இருந்தது ( செம்மொழி மாநாடு )..

மாற்று ஆட்சியில் கூட்டணிகளுக்குள்ளேயே தேவைப்படுமோ னு எண்ணம்..

இருப்பினும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம்..

Thekkikattan|தெகா said...

வெட்கமாக இருக்கிறது எனக்கும். புத்தன் போல பெண்டாட்டி பிள்ளைகளை விட்டு விட்டு நடு இரவில் மறைந்து செல்ல இன்னும் துணிவு வரவில்லை. புத்தன் செய்தது போல ஏதாவது ஒன்றுக்குத் துரோகம் செய்துதான் பொதுப்பணிக்கு வரமுடியுமோ?

ஆயிரம் சப்பைக் காரணங்கள்... எவ்வளவு நாள் என்று என்னை நானே பார்த்துக்கொண்டுள்ளேன்... :-(((((//

இதனைப் பற்றி தனி ஒரு பதிவில் பேசுவோம்.

புத்தன் செய்தது சுயநலம் :)... http://thekkikattan.blogspot.com/2010/02/blog-post_17.html

அதற்கான தெளிவும், மனத் துணிவும் அந்தந்த காலத்தில் இல்லையெனில் இன்று எடுத்த காரியத்தில் நின்று அவைகளை ஓரளவிற்கேனும் தன்னிரைவை கொடுத்ததிற்குப் பிறகே அடுத்த விசயத்தை பற்றி சிந்திக்க வேண்டும். இல்லையெனில் மனது will be in duality :D

கல்வெட்டு said...

.

தெகா,
நாம் தமிழர் இயக்க கொள்கைகளை இணையத்தேடலிலேயே கண்டுபிடிக்க முடிந்தது.

http://www.naamtamilar.org/kolgaigal

மொத்தம் 26 கொள்கைகள். ஈழ விடுதலை முக்கியக் கொள்கை.
இவை அனைத்தையும் பொறுமையாக விமர்சிக்க முயல்கிறேன்.

இந்த் கொள்கையில் எந்தக் கொள்கையை வென்றெடுக்க இப்போது கூட்டணி என்று மட்டும் அறிய ஆவல். உங்களுக்கு தொடர்பு இருந்தால் அவர்கள் இணையத் தளத்திலேயெ வெளியிடச் சொல்லலாம். நல்ல முன் மாதிரியாக் இருக்கும்.

Thekkikattan|தெகா said...

உங்களுக்கு தொடர்பு இருந்தால் அவர்கள் இணையத் தளத்திலேயெ வெளியிடச் சொல்லலாம். நல்ல முன் மாதிரியாக இருக்கும்.//

கேட்டுப் பார்க்கிறேன். முயற்சித்துப் பார்ப்போம்...

ஜோதிஜி said...

சூடு

ச்சும்மா அதிருதில்ல...........

சொன்னது பலித்துவிட்டது.

கும்மி said...

இவ்வளவு நடந்திருக்கா? அப்பாலிக்கா வர்றேன். ஆணிக் குவியலுக்கு நடுவுல உட்காந்திருக்கேன். :-)

---
ஜோதிஜி கள்ள ஓட்டு போடுவது தவறு. சொல்லிப்புட்டேன். :-)

Prakash said...

In this 2011 election, Seemon can focus only in Congress Constituencies and ensure their defeat.

கோவி.கண்ணன் said...

நல்லா எழுதி இருக்கிங்க தெகா

தவறு said...

சீமானை பொறுத்தவரையில் சரியான சமயத்தில் மேடை ஏறிய பேச்சாளர் என்ற முறையிலே அரசியலில் அவரைப்பார்க்கிறேன் தெகா.

The Analyst said...

நன்றாக எழுதியுள்ளீர்கள்.

"புரட்சி பேச்சுக்களை பேசி ஓர் இரவின் உட்சத்தில் மக்களை தெருவிற்கு இழுப்பது என்பதெல்லாம் சினிமாவில் பார்ப்பதற்கு வேண்டுமானால் சாத்தியப்படும்."

பல‌ வேளைகளில் நிஜ வாழ்க்கையிலும் மக்களைக் கொண்டு வரலாம்/வரப் பட்டுள்ளது. ஆனால் தெருவில் வந்து கத்தும் போது கேட்பதற்கு எவராவது உண்டா/அதனால் உண்மையாக ஏதும் பலன் வருமா என்றாவது முதலில் யோசிக்க வேண்டும்.

"ஆனால், உண்மை சற்றே நேர்மாறானது. ஒரு நாடு என்ற கட்டமைப்பிற்குள் இருக்கும் பொழுது அதன் ஓட்டத்தில் சென்று விசயங்களை சாதித்து கொள்ள முடியும் என்பதே நிதர்சனம். அதற்கான வியூகங்களை வகுத்துக் கொள்வதே மேற்கொண்ட சிறைப்படுத்தல்களையும், தீவிரவாதி என்ற படைபலங்களின் முத்திரைக் குத்த காத்திருத்தல்களிலிருந்து தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கான அடிப்படையாக இருக்க முடியும்.

மாறாக, சீமான் புரட்சிகரமாக பேசுகிறார் என்பதற்காக சில இளைஞர்கள் அவரை அப்படியே பேசிக் கொண்டு, துண்டு பிரசுரங்கள் விநியோகித்து கொண்டு ஒரு நிலையில் கையில் கம்பெடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்தளவில் நன்மை பயக்கும்.??"


Very well said.

ராஜ நடராஜன் said...

தெகா!எப்படி இருக்கீங்க?
ஊர் சுத்திட்டு வந்து சொல்றதுக்கு நெஞ்சாங்கூட்டுல நிறையவே இருக்குது.சொல்றதுக்கான கால அவகாசமில்லை.அதனால் பின்னூட்டமாகவேனும் கொஞ்சம்.

ஒரு கைபேசியின் பேச்சால் சீமானை சந்தித்து விடும் தூரத்திலேயே இருந்தும் சந்திக்க இயலாத சுற்றல்.பதிவர் செந்தில் கூட ஒரு விழாவில் சந்தித்து விடலாமென்று சொல்லியும் இயலாது போய் விட்டது.

ஸ்பெக்ட்ரம் -இராசா - கொட்டை எழுத்துக்களாக பொட்டிக்கடைகளில் தினசரிகளாக காட்சியளிக்கிறது.இருந்தும் இதனையும் கடந்தும் நான் தி.மு.க காரன் தான் என்ற வட்ட செயலாளரை ரயில் பயணத்தில் காண முடிந்தது.இது ஒரு பக்கம்.

ஈழம்,கலைஞரின் மீதான கோபம்,சீமான் நேர் எதிர் விமர்சனமென்றும் ஒரு சிறிய கூட்டம் உணர்வு பூர்வமாக இருக்கிறது.

வெறுமாவின் பெயரால் நிறைய தட்டிகள் காணப்படுகின்றன.போரைக் காணாமலே போர்வீரன் தொப்பி போட்டுக்கொண்டு பேனர் போராளியாகி விட்டார்.கூடவே பேனர்களில் பிரபாகாரனின் படத்தையும் இணைக்கும் துணிவிற்காகவோ கலைஞரின் அனுமதிக்காகவோ பாராட்டவும் செய்யலாம்.

வை.கோ வா?நெடுஞ்செழியனா? உணர்வு பூர்வமான ஒரு கூட்டத்திற்குள் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கலாம்.

ராமதாஸ்?பொங்கல் தின்னுட்டு சொல்றேன் கூட்டணியை என்கிறார்.

திருடா திருடியை தாண்டி ஓடும் வேகம் ஒருவருக்கும் கூட இல்லை.தொலைபார்வையாக மூன்றாவது அணி என்ற பார்வையும் கூட இல்லை.இவர்களுக்கு ஈழம் என்பது அரசியல் ஊறுகாய் மட்டுமே என்பது தெளிவு.

பதிவுலக கூட்டம் ஒரு இத்தூனுண்டு தீவு.பெரும்பாலான தமிழக மக்கள் மந்திருச்சு விட்ட கோழிகள் மாதிரிதான் அன்றாட உழைப்பு,பயணம்ன்னு அவதிப்படறாங்க.

சீமான் தற்போதைய விவாதப் பொருளாகிப் போனது வரவேற்க தக்கதே.ஆனால் அ.தி.மு.க சார்பு எதிர்கால அவரது அரசியலை பாதிக்கவே செய்யும்.

(கூகிளண்ணா!போஸ்ட்!தபால் செய்யேன்)

ராஜ நடராஜன் said...

முக்கியமான ஒன்றை சொல்ல வேண்டும்.பொதுநலம் பற்றிய விவாதங்களும்,அரசியல் சார்ந்த கருத்துக்களும் இன்னும் பொதுமக்கள் அனைவரும் பார்க்காத காரணத்தாலே மட்டுமே பதிவுலகில் அனைத்தும் விவாதிக்க முடிகிறது.

களத்தில் உண்மையாக சாலை போராட்டக்குரல் கொடுப்பவனுக்கு சிறை தண்டனையும்,வழக்குகளும் மட்டுமே பரிசாக கிடைக்கிறது.இந்த வரிகள் சீமானுக்காக அல்ல.முகம் தெரியாமல் களப்போராளியாக சிறை சென்றும்,வழக்குகள் சந்திக்கும் அனைத்து பொதுநல விரும்பிகளுக்குமான பின்னூட்டம்.

ராஜ நடராஜன் said...

//* கழக பிரியாணிக் குஞ்சுகளும் (பிரியாமணி அல்ல) நக்கிப்பிழைக்கும் நாய்களாக Why do we exist as a political party and what are our core principles என்று தெரியாமல் அவனவன் அவன் சார்ந்த தலைமை எடுத்த கூட்டணி முடிவுக்கு வக்கலாத்து வாங்குவதிலேயே குறியாய் இருப்பார்கள்.//

கல்வெட்டு! கழக கண்மணி வட்ட செயலாளர் ஒருவரை ரயில் பயணத்தில் காண நேர்ந்தது.நீங்கள் சொல்கிற மாதிரி நக்கிப் பிழைக்காமல்,சொந்தக்காசைப் போட்டு கட்சி வளர்க்கும் பேர்வழி.

பாரதிராஜா எடுத்த உண்மைத்தோழனில் தலைவருக்கும்,தொண்டனுக்குமான இடைவெளியும்,இருவரின் நோக்கங்கள் வேறுபட்டும் கூட தலைவன் சொல்லே மகேசன் சொல்.

//Why do we exist as a political party and what are our core principles //

The moment DMK stepped into George port I think muster roll has emerged and the core principles of a party had vanished with the split of DMK Vs ADMK.

Eventhough the socio economic status has improved for a common man with Dravidan rule the side effects of feuds are greater.

The worst scenario is family politics and negligence of Eelam war.

Thekkikattan|தெகா said...

வாங்க இளா,

//அதுல குதிச்சாத்தான் சுத்தம் செய்ய முடியும். சீமானும் அப்படித்தான் குதிச்சிருக்காரு.//

ஆமா! அப்படியேதான் நானும் பார்க்கிறேன். அவங்க பாதையிலேயே போயி சுத்தம் பண்ண முயன்றாத்தான் உண்டு. ஆனா, படுத்து புரண்டுற கூடாது :). பார்ப்போம்தான்.
*******************

நசரேயன்,

என்ன திரும்பவும் ஆரம்பிச்சிட்டீங்க... ம்ம்ம் கொட்ட. ஆனாலும் அதுக்கு பின்னால் நிறைய விசயங்கள் பொதிந்சு கிடக்கின்னு நாங்க புரிஞ்சிப்போமே ;-)

ராஜ நடராஜன் said...

//நம்மால் செய்ய முடியாத ஒன்றை ஆதரித்து எழுதவோ பேசவோ கூடாது. வாழ்க்கையைத் துறந்து துப்பாக்கி தூக்கி வவுனியா காடுகளுக்குப் போகத் தயாராக இல்லாத வரை விடுதலைப் புலிகளை ஆதரித்து சத்தம் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது.

பொறுப்புகளைத் தூக்கி எறிந்து விட்டு தெருவில் இறங்கிப் போராடத் தயாராக இல்லாத வரையில் சமூக அவலங்களைக் குறித்துப் புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது.//

கல்வெட்டு!தாமதமாக உங்கள் வரிகளை கண்டேன்.உலகின் எந்த மூலையிலிருந்து பின்னூட்டமிடுகிறீர்கள் என்று தெரியவில்லை.உலக அரசியல் பின்னுக்கு தள்ளப்பட்டாலும் கூட பூகோளம் என்ற வரையறை இருக்கிறது.அடைப்பானின் முதல் பாராவுக்கு விளக்கம் இது.

இதனை விட தெருவில் இறங்கி போராடுவதற்கு கூட அரசு அடக்கு முறை ஒன்று இருக்கிறது.ஈழம் கூட வேண்டாம்,சாலை பராமரிப்பு சரியில்லை,சுகாதாரம் சரியில்லையென்று மொத்தக் குரல் கொடுத்தால் கூட அதில் சிலரை அள்ளிப் போட்டு சிறையில் வைக்கும் நிலையும்,எப்படி போராடுவது என்று கற்றுக்கொடுக்காத முறையும்,எதுவும் அறியாத,கவலைப்படாத சுயநல வாழ்க்கைச் சூழல் என சமூக சூழலில் இங்கேயாவது விவாதிக்க அல்லது உங்கள் மொழியில் புலம்ப இயலுகிறதே என்று மகிழ்ச்சியடைகிறேன்.

Any மாற்றுக்கருத்துக்கள்?

Thekkikattan|தெகா said...

முகுந்தம்மா,

//ஆனாலும் மறுபடியும் இந்த ரெண்டு கட்சிகளை சுத்தி தான் தமிழ் அரசியல் வாழனுமா...வேற வழியே இல்லையா :(((//

அப்படித்தான் தெரிகிறது. அது நம் வாழ்நாள் காலம் பூராவும் தொடர்ந்தாலும் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றமல்ல. மாற்றத்தை காண்பதற்கேனும் இது போன்ற புது முகங்களை சட்டசபைக்குள் அனுப்பி, படத்தை மாத்திப் பார்ப்போம்னு ஒரு நப்பாசைதான். :)

இன்றைய நிலையில் அரசியல் கட்சிகள் என்பது பல கோடிகள் புழங்கும் பெரிய ஸ்தாபனங்கள் என்பதால் பாதுகாப்பாக ஜெயித்து பேர் படுவது என்பது வெகு தொலை போல. மக்கள் முழித்து கொள்ளவும் வாய்ப்பே இல்லை என்பதாகவும் தெரிகிறது. வருத்தமான நிஜம்!

Thekkikattan|தெகா said...

இதனை விட தெருவில் இறங்கி போராடுவதற்கு கூட அரசு அடக்கு முறை ஒன்று இருக்கிறது.ஈழம் கூட வேண்டாம்,சாலை பராமரிப்பு சரியில்லை,சுகாதாரம் சரியில்லையென்று மொத்தக் குரல் கொடுத்தால் கூட அதில் சிலரை அள்ளிப் போட்டு சிறையில் வைக்கும் நிலையும்,எப்படி போராடுவது என்று கற்றுக்கொடுக்காத முறையும்,எதுவும் அறியாத,கவலைப்படாத சுயநல வாழ்க்கைச் சூழல் என சமூக சூழலில் இங்கேயாவது விவாதிக்க அல்லது உங்கள் மொழியில் புலம்ப இயலுகிறதே என்று மகிழ்ச்சியடைகிறேன்.//

ராஜ நட, உங்க மறுமொழி விளக்கத்தோட ஒத்துப் போகிறேன். எப்படி முறையாக கட்டுக் கோப்பாக தங்களது தார்மீக உரிமைகளை, கோபங்களை வெளிப்படுத்தும் நேரத்தில் வெளிப்படுத்துவதின் அவசியம் அறிந்து முன் வைப்பது மிக்க அவசியமாகிறது. அதுவே நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கும், தளத்தில் போராடுபவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக, தேவைப்படும் moral supportஆகவும் பயன்படலாம்.

அது உண்மையான அக்கறையுடன் கூடியதாக இருத்தல் அவசியம். வரலாறு தோரும் அது போன்ற குரல்களும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

Thekkikattan|தெகா said...

வாங்க சேது,

//ஒன்றைப் பிடிக்க வில்லை என்றால் அதற்கு மாற்றாக இன்னொரு கட்சி, அதுவும் தான் ஆரம்பித்து தான் வர வேண்டும் என்று எதிர் பார்த்தால் இன்னும் ஆயிரக் கணக்கான கட்சிகள் தான் உருவாகும். //

ஏற்கெனவே சீறிய சிறுத்தைகளை பழக்கி சர்க்கஸ் கூண்டிற்குள் அடைக்கப்பட்டதை எண்ணி தானும் அது போல ஆகிவிடக் கூடாது, தனித்துவமா நின்று விளையாடுவது அவசியம் என்ற எண்ணத்தால் தனியாக சீறிபார்ப்பதெற்கேனும் தனக்கான கொள்கைகள், கோட்பாடுகளை வைத்துக் கொண்டு முயற்சித்து பார்க்கத்தான். சிறு கூடானாலும் தன் கூடுன்னு சொல்லுவதில்லையா அது மாதிரிதான். :)

//தவறு நேரும் பொது அதை உட்கட்சிக்குள் விமர்சனம் செய்துகொண்டு நேர்மையாக வருவதற்கு ஒரு குழு இருக்கக் கூடிய அமைப்பா இருக்கணும்.//

அதெல்லாம் நீர்த்து போயிருக்கும். இன்னிக்கு கூடுவாங்க. எதுக்கின்னா, என்ன இருந்தாலும் இப்படி போயி இந்த ஊழல்ல சிக்கி இருக்கக் கூடாதுங்கிறதுக்கும், பெட்டி பிரிச்சிக்கிறதுக்கும் போல :)

//தனி மனிதனை முன்னுறுத்தி வரும் கட்சிகள் எல்லாம் அடையாளம் இல்லாமல் போகிவிடுவதைப் பார்க்கலாம். //

சோ, அதுனாலே ஆரம்ப கால கட்டத்தில கூட்டு சேரணுங்கிறீங்க :) இல்லன்னா கால வெள்ளமும், பண பலமும் அடிச்சு இழுத்துட்டு போயி இருந்த இடம் தெரியாம பண்ணிடும்னு சொல்ல வாரீங்க :))

Thekkikattan|தெகா said...

Santhose said...

I have a different opinion. Seeman should act independently like Periyar. He should not give up his policies at any cost.//

அது இன்றைய கால கட்டத்திற்கு சாத்தியமானதென்றா நினைக்கிறீர்கள்? நாம் அதனின்று வெகு தொலைவு நகர்ந்து வந்து விட்டோமென்று நான் கருதுகிறேன். காலத்திற்கேற்ப வியூகங்களை வகுத்து அதன் பாதையில் நடப்பது ஒன்றே இப்போதைக்கு சாத்தியமென்றும் நினைக்கிறேன். ஆனால், அந்தப் பாதையில் காணாமல் போகாமல் தன்னை தக்க வைத்துக் கொள்வது கத்தி மேல் நடப்பதனைப் போன்றது. பார்க்கலாம்.

கல்வெட்டு said...

//.....கல்வெட்டு!தாமதமாக உங்கள் வரிகளை கண்டேன்.உலகின் எந்த மூலையிலிருந்து பின்னூட்டமிடுகிறீர்கள் என்று தெரியவில்லை.//

...


:-)))))


....பொறுப்புகளைத் தூக்கி எறிந்து விட்டு தெருவில் இறங்கிப் போராடத் தயாராக இல்லாத வரையில் சமூக அவலங்களைக் குறித்துப் புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது......


இது நான் சொன்னதல்ல.. மா.சிவக்குமார் என்ற பதிவர். நீங்கள் அவரை வாசித்திருக்கலாம்.

@ Thursday, May 21, 2009
by Ma. Siva

http://masivakumar.blogspot.com/2009/05/blog-post_21.html

இங்கே நான் மேற்கோள் மட்டும் காட்டினேன். அவரின் சுட்டியும் ஏற்கனவே கொடுத்துள்ளேன்.

.

கல்வெட்டு said...

//...ராஜ நடராஜன் said...

சாலை பராமரிப்பு சரியில்லை,சுகாதாரம் சரியில்லையென்று மொத்தக் குரல் கொடுத்தால் கூட அதில் சிலரை அள்ளிப் போட்டு சிறையில் வைக்கும் நிலையும்,எப்படி போராடுவது என்று கற்றுக்கொடுக்காத முறையும்,எதுவும் அறியாத,கவலைப்படாத சுயநல வாழ்க்கைச் சூழல் என சமூக சூழலில் இங்கேயாவது விவாதிக்க அல்லது உங்கள் மொழியில் புலம்ப இயலுகிறதே என்று மகிழ்ச்சியடைகிறேன்.

Any மாற்றுக்கருத்துக்கள்?//

கற்றுக் கொடுக்கப்படவேண்டும்.

மந்தைகள் எப்போதும் மந்தைகளாக உணருவது இல்லை . வெளியில் இருந்தே மேய்ப்பர்கள் வரவேண்டியுள்ளது.

கும்மி said...

சீமான் குறித்து முன்வைக்கப்படும் தற்போதையக் குற்றச்சாட்டு, அவரும் சாதீய நிலைப்பாடு கொண்ட ஒரு சராசரி அரசியல்வாதி என்பதாகும். தமிழ் தேசியத்திற்கும் அவருக்கும் தொடர்பில்லை என்னும்போது, தமிழக அரசியல் களத்தில் அவரை வைத்து ஏதேனும் நல்ல விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளனவா என்று பார்க்கலாம்.

தமிழக அரசியல் களத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர் ஒரு தவிர்க்க முடியாத நபர் என்பது பல மட்டங்களிலும் நடைபெறும் உரையாடல்களிலிருந்து தெரிகின்றது. இதனைப் பயன்படுத்தி, இன்று நிலவும் மன்னராட்சி முறைக்கு சாவு மணி அடிக்க முயலவேண்டும். 1967, 1996 தேர்தல்களில் நிலவியது போல் ஆட்சியாளர்களுக்கு எதிரான மன நிலை முழுமையாக இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு இருக்கின்றது. ஆனால், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், பிறகு தமிழ்நாட்டின் நிலை எவராலும் காப்பாற்ற முடியாத நிலைக்குச் சென்றுவிடும்.

எனவே, ஆட்சிக்கு எதிரான மன நிலையை பரவலாக்கவேண்டும். நெல்லுக்குப் பாயும் நீர் ஆங்கே சிறு புல்லுக்கும் பாய்வதைப் போல், கருணாநிதி குடும்பத்திற்கு செல்லும் பணத்தில் சிறு பகுதி மக்கள் நலத் திட்டங்களாக நிறைவேறுவதை, மக்கள் நலத்திட்டங்கள் மூலம் மக்கள் பயன் பெறுவதாக பொய்கள் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால், மக்கள் நலத் திட்டங்கள் மூலம் மக்களை விட கருணாநிதி குடும்பத்தாரே பயன் பெறுகின்றனர் என்பதை அம்பலப்படுத்த வேண்டும். இவற்றை செய்வதற்கு முறையாக திட்டமிட்டு மக்களிடம் தகவலைக் கொண்டு சேர்ப்பதை முன்னெடுத்தால், கருணாநிதியை ஆட்சியை விட்டு இறக்கும் தற்போதைய நோக்கம் நிறைவேற வாய்ப்புள்ளது.

கருணாநிதியின் ஆட்சியை வீழ்த்தும் முதல் நோக்கத்தை வெற்றிகரமாகக் கடந்து, அடுத்து என்ன நிலை எடுக்கிறார் என்று பார்க்கலாம்.

.

Thekkikattan|தெகா said...

அருண்மொழிவர்மன் said...

அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் அட்டகாசம் அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்களின் மெத்தனமும், இப்படித்தான் கோபம் கொண்ட இளைஞர்களை உருவாக்கும்//

அந்த கோபம் ஒரு தீக்குச்சியாய் தழல் விட்டு எரிந்து கொண்டே இருக்க வேண்டும் இந்த நாளில் என்பதுதான் நமது எதிர்பார்ப்பு. பெரும்பான்மை மக்களின் மெத்தனம் வீட்டின் கூரையை எட்டி விட்டது, பல நிலைகளில் அவர்களின் புலன்கள் மரத்துப் போக செய்துவிட்டிருக்கிறது... அந்த தூக்க நிலையிலிருந்து தட்டியெழுப்புவர்/மேய்ப்பர் யார்?

Thekkikattan|தெகா said...

மீன்துள்ளியான் said...

சீமான் இந்த தேர்தலுக்கு அப்புறம் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும் . இல்லை என்றால் அவரை நம்புவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்//

ஆமா, மீனு! இந்த தேர்தலுக்கு பிறகு அது ஓரளவிற்கு புரிய ஆரம்பிக்கும்.

ஆனா, ஜுவலை நின்னுகிட்டு இருந்தா அமுல்படுத்தி ஓரளவிற்கேனும் சலசலப்பை ஏற்படுத்தி ஒரு சில விசயங்களாவது நிறைவேத்துற வரைக்கும் நிற்கும்...

இயற்பியல் அடிப்படையின் படி பார்த்தா... எரிந்து கொண்டே இருக்கும் சூரியன் ஒரு நாள் வீங்கி, வெடித்து, நீர்த்துப் போய் மீண்டும் டுவார்ஃப்பாக சுருங்கி விடுவதனை போன்றே ;-)

Thekkikattan|தெகா said...

கல்வெட்டு,

//இந்த் கொள்கையில் எந்தக் கொள்கையை வென்றெடுக்க இப்போது கூட்டணி என்று மட்டும் அறிய ஆவல். உங்களுக்கு தொடர்பு இருந்தால் அவர்கள் இணையத் தளத்திலேயெ வெளியிடச் சொல்லலாம். நல்ல முன் மாதிரியாக் இருக்கும்.//

உங்க கேள்விகளுக்கெல்லாம் நான் குருடனாக இருந்து யானையின் வாலைத் தடவி பதில் சொல்லுவதனைக் காட்டிலும் சம்பந்தப்பட்டவர்கள் வந்து சில கேள்விகளுக்கேனும் பதிலுரைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

இணைப்பு அனுப்ப வேண்டியவர்களுக்கு அனுப்பியாச்சு. மக்களின் குரலாக நினைத்து பயன் படுத்திக் கொள்ளும் காலத்தில் பயன்படுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும்.

முத்துகுமரன் said...

நல்ல பகிர்வு தெகா, விரிவான விவாதமாக நகர்த்தியிருக்கும் கல்வெட்டு, கும்மி, ஜோதிஜி, மற்றும் பலருக்கும் நன்றிகள். சீமானின் இன்றைய வெற்றி என்பதை குறைந்தபட்சம் சிலரையாவது அவர் பெயரை உச்சரிக்க வைத்திருப்பதும், ஒரு விவாதத்திற்கு காரணியாகவும் இருப்பதுதான். அனுமதிக்கப்பட்ட சட்டகத்துக்குள்ளே நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளுக்குள்தான் ஜனநாயக நாட்டில் பேச்சுரிமை என்பதாக சுருங்கிவிட்ட அரச இயக்க நடைமுறைகளுக்குள் வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம். சீமான் தன் வாசிப்பை இன்னும் விரிவுபடுத்திக்கொள்ள வேண்டிய சூழலில்தான் இருக்கிறாரே தவிர இன்னும் முழுமையான புரிதல்கள் அவருக்கு வந்திருக்கிறதா என்பது சந்தேகத்துக்குரியதே ஆனால் இந்த அளவாவது புரிதல்கள் இருக்கிறது என்பது இன்றைய அரசியல்வியாதிகளை ஒப்பிட்டு ஆறுதல் படுத்திக்கொள்ளலாம்.

முத்துகுமரன் said...

இன்றைய சூழலில் ஈழம் சார்ந்த பலரின் எண்ணக்குமுறல்களின் ஒரு பிரதியாகத்தான் சீமான் தன் அரசியல் பயணத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார்.ஒரு போராளியாக இருப்பதற்கும் அரசியல்வாதியாக இருப்பதற்குமான இடைவெளியையையும் அதன் சாத்திய எல்லைகளை உணர்ந்து விவாதிப்பதே சரியானதாக இருக்க வேண்டும். ஊடக சர்வாதிகாரத்தினால் இன்றைய பொதுப்புத்தி உற்பத்தி செய்யப்படும் சூழலில் மாற்றுக்குரல்களின் தேவை மிக அத்தியாவசியமானதாக இருக்கிறது. தமிழர்களுக்குள் இருந்த ஒரு மனத்தடையை தயக்கத்தை சீமானின் பேச்சுக்கள் உடைத்து வருகிறது. குறைவான எண்ணைக்கையாக இருந்தாலும் சர்வாதிகாரத்துக்கான எதிர்ப்பு குரல்களை ஒன்றுதிரட்டுவதுதான் மாற்றத்திற்கான பயணத்திற்கு/போராட்டத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வழிவகை செய்கிறது.

முத்துகுமரன் said...

உரையாடல்களின் அரசியல் இன்று மிக முக்கியமானதொரு இடத்தை வகிக்கிறது. உரையாடுவோரில் ஏறத்தாழ அனைவரும் ஒருவகையான இலக்குகளோடும், தேர்ந்தெடுத்த தாக்குதல்களை மட்டுமே செய்து வருகிறோம். ஒரு பன்முகப் பரிமாணத்தோடு உரையாடல் அமைவது என்பது கானல் நீராகவே இருக்கிறது. இன்னபிற அரசியல் தலைவர்களின் தாவல்களும் சமரசங்களும் அரசியல் ஆளுமை, சாணக்கியத்தனம், ராஜதந்திரம் என்னும் பொட்டலங்களுக்குள் அடைக்கப்படும் அதே நேரம் ஒரு சிலரது மாறுதல்கள் மட்டும் சறுக்கல்கள், சரணாகதியாக, தோல்வியாக சித்தரிக்கப்படுகிறது. அதற்கு இலக்கு ஆவோரின் பொதுவான அடையாளமாக இருப்பது அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின்/இனத்தின் குரலாக இருப்பதை கவனிக்க வேண்டியது அவசியமானதாகும். அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் முதலில் நெரிக்கப்படும் குரல் சீமானுடையதாகத்தான் இருக்கும் என்பதை அவர் நிச்சயம் உணர்ந்தே இருப்பார். ஏனென்றால் அரசுகள் எப்போதும் அரசுகளே.இந்திய ஜனநாயகப் பெருவெளியில் மனிதாபிமானர்களுக்கான இருப்பும் இடமும் மிகவும் மெல்லியதே. இந்த கட்டமைப்புக்குள் ஒருவன் வாழத்தலைப்படும் போதே அவன் பல சமரசங்களுக்கு தன்னை உட்படுத்தியேயாக வேண்டும். இல்லை என்றால் ஒரு கனவுவெளியில் மட்டுமே அவன் இயங்க வேண்டும்.

முத்துகுமரன் said...

சீமான் ஈழத்தை பற்றிப் பேசுவதை மட்டுமே அவருக்கு எதிர்ப்பானவர்களும் ஆதரவானவர்களும் முன்னிறுத்துவது ஒரு பெரும் சறுக்கலே. அவரின் மற்ற போராட்டங்களுக்கு அவரைச் சார்ந்தவர்களே அதிகம் முக்கியத்துவம் தராத போக்கும் காணப்படுகிறது. இங்கு எல்லாருமே ஒரு தியாகப் பட்டத்தை அடைந்துவிட வேண்டும் என்ற தணியாத மோகத்தோடே திரிகிறோம். அதுதான் ஈழத்து விசயத்தில் அதிகம் நடைபெறுகிறது. சீமானின் சாதியம் மிக அதிகமாக விவாதத்திற்குள் உள்ளாக்கபடும் ஒன்றாக இருக்கிறது. இன்றுவரை அவரிடமே அதற்கு தெளிவான ஒரு புரிதல் இல்லை என்பதாகவே உணர்கிறேன். அவருக்கும் எண்ணிக்கையின் மீதான ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அது போராட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற ஆர்வத்தினாலும் இருக்கலாம். உதாரணமாக பெரியாரின் வழித்தோன்றலாக அவர் தன்னை முன்னிறுத்தும் அதே வேளையில் தாழ்த்தப்பட்டோரையும், சாதி இந்துக்களையும் ஒரு சட்டகத்துக்குள் உட்கொணர முனைகிறார். இது இருபக்க கூர்மையுடைய கத்தியினை கையாள்வது போன்றதாகும். இந்த சமரசம் மிகவும் சிக்கலானது. எதிர்தரப்பில் இருவரை ஓரிடத்தில் ஒரு பொதுப்பண்பில் இணை சேர்க்கலாம் என்பதாக சில முடிவுகளை அவர் எடுக்கும் போது அதற்கான அடிப்படை அறமும் நேர்மையையும் அவர் இழக்காமல் இருக்கிறாரா என்பதை கணிக்க சில காலம் நமக்குத் தேவைப்படும். அந்த காலச் சலுகையை அவருக்கு வழங்கியே விவாதிக்க வேண்டும் என்று நம்புகிறேன்.

முத்துகுமரன் said...

வழக்கம் போல கல்வெட்டு பல்வேறு கேள்விகளுடன் விசாலமான விவாதத்தை அமைத்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய விசயம். அவை ஒவ்வொன்றும் தனித் தனியே பேச வேண்டிய உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது. சீமானை தேவதூதுவனாக எண்ணத்தேவையே இல்லை. நம்மிடையே இருக்கும் ஒரு சக குரல் மேடைக்கு நகர்ந்திருக்கிறது என்ற அளவோடுதான் அவரை அணுக வேண்டும் என்று நினைக்கிறேன். எனது உரையாடல் கோர்வையாக இல்லாது இருக்கிறது என்பதை உணர்ந்தே இருக்கிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு பதிலுரைக்கை இந்தக்கட்டுரை உந்தியது.அவ்வளவே

கல்வெட்டு said...

.

அப்பாடா.. ஒரு வழியாக சீமான் அதிமுக விற்கான ஆதரவிற்கான் காரணங்களைச் சொல்லிவிட்டார்.

காங்கிரஸை அழிப்பது என்பது தந்தை பெரியாரின் கனவு, அண்ணல் அம்பேத்கரின் கனவு, ஐயா முத்துராமலிங்கத் தேவரின் கனவு -சீமான்

ஐயா முத்துராமலிங்கத் தேவரின் கனவுகளை நிறைவேற்றச் சரியான இடம் அதிமுக தான். சரியான தேர்வு. சீமான்.

சீமானின் சாகாத சாதிப் பற்று
http://kalvetu.blogspot.com/2011/01/blog-post_15.html

கல்வெட்டு said...

முத்துக்குமரன்,
சுருக்கமாகச் சொன்னாலும் சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.

யோசித்துப்பாருங்கள் விஜயகாந்திற்கு எதிராக/ஆதரவாக இத்தனை உரையாடல்களை நாம் பார்த்திருக்க மாட்டோம். அவரிடம் அரசியல் , தமிழ், தமிழன் பற்றிப் பேச வேண்டுமானல், ... ஜீரோவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

குறைந்த பட்சம் சீமானிடம் அதைத்தாண்டி கேள்வி கேட்கலாம். சீமான் அதிகம் பேசப்படுவதற்கு காரணம், அவராவது சரியான வழியில் செல்ல வேண்டும் என்ற ஆதங்கமே.

சீமான் சாதியைத் தாண்டி வரவேண்டும்.

அய்யா முத்துஇராமலிங்கத் தேவரின் வழியில் சென்றால் அதிமுகவிடம்தான் போக வேண்டும்.

உண்மையில் சீமானுக்கு உண்மை தெரியாத, சின்னப்புள்ளத்தனமான சாதிப் பற்றா? அல்லது எல்லாம் தெரிந்தும், வைரம் பாய்ந்த சாதிய உணர்வா? எது அவரை இடைவிடாமல் அய்யா முத்துஇராமலிங்கத் தேவரை நேசிக்க வைக்கிறது?

.

கும்மி said...

//சீமான் சாதியைத் தாண்டி வரவேண்டும்.//

நான் வேறொரு கோணத்தில் யோசித்திருந்தேன். இரவு பின்னூட்டமிடலாம் என்று நினைத்திருந்தேன். அதற்குள் உங்கள் பதிவு பார்த்ததும் அந்தப் பாடலைப் பற்றிய தகவல்களை தேடிச் சென்றுவிட்டேன்.

--
ராமதாசும், திருமாவும் செய்த ஒரு உருப்படியான விஷயம். வன்னியர்களுக்கும் தலித்களுக்கும் நடைபெறும் மோதலைப் பெருமளவில் குறைத்ததுதான். அதுபோல், சீமான் தேவர் சாதி மக்களை நல்வழிப்படுத்தி தலித்துகளிடம் நல்ல உறவினைப் பேண வழிவகை செய்யலாம் என்று யோசித்தேன். ஆனால், முத்துராமலிங்கத்தை எந்நிலையிலும் முன்னிலைப்படுத்தாமல், தான் முன்னின்று இதனை செய்யலாம்.

அவருக்கு சாதிப் பற்றை விட, முத்துராமலிங்கம் மேல் இருக்கும் பற்று அதிகமாக இருக்கும் போல. முத்துராமலிங்கத்தின் பெயரைப் பயன்படுத்தும் வரை சாதி வேறுபாடுகள் பெருகிக்கொண்டேதான் இருக்கும்.

முத்துகுமரன் said...

நிச்சயமாக கல்வெட்டு, சீமான் சரியான தளத்தில் பயணிக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் எண்ணம். அவர் வீரம் என்பது மறவர்க்கு மட்டுமே உரிய குணம் என்று கருதுகிறாரா என்று யோசிக்க வைக்கிறது. வாய்ப்பிருந்தால் அதை அவரிடம் நேரடியாகவும் கேட்கும் எண்ணமிருக்கிறது. பெரியார் பலரை பலமுறை விமர்சித்து இருக்கிறார் சில முறை ஆதரித்தும் இருக்கிறார். ஆனால் அவைக்குரிய முறையான காரணங்கள் இருந்திக்கிறது. பைனரியாக ஒன்று ஆதரவு இல்லை எதிர்ப்பு என்று இயங்குவது பன்முகத்தன்மையை இல்லாது செய்துவிடும். சீமான் பெரிய எல்லைகளைத் தொட வேண்டுமென்றால் அவருக்கு அத்தியாவசியத் தேவை சுயபரிசோதனை. சீமானின் வாசிப்பு அனுபவக்குறைவே இது மாதிரியான அரைகுறை வார்த்தை பிரயகோகங்களுக்கு காரணமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். தம்பிகளை கூட வைத்திருக்கும் அதே நேரம் அவர் சில அறிவுசார் தளத்தில் இயங்கியவர்களையும் வைத்துக்கொள்ள வேண்டும். அவரைச் சுற்றி இருப்பவர்கள் இது குறித்து அக்கறை செலுத்த வேண்டும் ஆனால் அவருடன் இருப்பவர்களுக்கே தேவர் மயக்கம் இருப்பதாகவே தோன்றுகிறது.

முத்துகுமரன் said...

கல்வெட்டு பெரியார் சுயமரியாதை-சமதர்மம் எஸ்விஆர்-வ.கீதா தொகுத்த நூல் கிடைத்தால்/வைத்திருந்தால் வாசித்துப்பாருங்கள். பெரியாரின் பன்முக இயக்கவியல் வீச்சை உணர்ந்து கொள்ள முடியும். இன்று இருப்பது போன்றே ஒரு இருண்மையான சூழலில்தான் பெரியார் அன்று இயங்கியிருக்கிறார். ஆனால் அவரின் சிறப்பு அவர் தீர்க்கமாக சிக்கல்களையும் தீர்வுகளையும் பகுத்தறிந்து இருக்கிறார். அவர் கையாண்ட வழிமுறைகள் இன்றைக்கும் நமக்கு பாடமாக இருக்கின்றது.

முத்துகுமரன் said...

கல்வெட்டு பெரியார் சுயமரியாதை-சமதர்மம் எஸ்விஆர்-வ.கீதா தொகுத்த நூல் கிடைத்தால்/வைத்திருந்தால் வாசித்துப்பாருங்கள். பெரியாரின் பன்முக இயக்கவியல் வீச்சை உணர்ந்து கொள்ள முடியும். இன்று இருப்பது போன்றே ஒரு இருண்மையான சூழலில்தான் பெரியார் அன்று இயங்கியிருக்கிறார். ஆனால் அவரின் சிறப்பு அவர் தீர்க்கமாக சிக்கல்களையும் தீர்வுகளையும் பகுத்தறிந்து இருக்கிறார். அவர் கையாண்ட வழிமுறைகள் இன்றைக்கும் நமக்கு பாடமாக இருக்கின்றது.

ஜோதிஜி said...

சீமான் என்ன செய்ய வேண்டும் என்பதைவிட நான் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்த்திய தானைத்தலைவன் பாசகார பயபுள்ளைக்கும் டீச்சரும் எங்கள் இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்.

பொங்கலோ பொங்கல்.

14.1.2011

Thekkikattan|தெகா said...

முத்துகுமரன்,

நான் காணாம போன கொஞ்ச நேர இடைவெளியில அடிச்சு விளையாண்டுருக்கீங்க. நீண்ட கருத்து பகிர்தலுக்கு நன்றி! இன்னும் இந்தப் பதிவிற்கான உரையாடலை முடிக்கவில்லை. இங்கு பகிர்ந்திருக்கும் விசயங்களை நேர்மறையாக அணுகி அவர்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புவோம்.

இந்த கட்டத்தில் இவ்வளவுதான் சொல்லத் தோன்றுகிறது.

Zacharyarud said...

கல்வெட்டு பெரியார் சுயமரியாதை-சமதர்மம் எஸ்விஆர்-வ.கீதா தொகுத்த நூல் கிடைத்தால்/வைத்திருந்தால் வாசித்துப்பாருங்கள். பெரியாரின் பன்முக இயக்கவியல் வீச்சை உணர்ந்து கொள்ள முடியும். இன்று இருப்பது போன்றே ஒரு இருண்மையான சூழலில்தான் பெரியார் அன்று இயங்கியிருக்கிறார். ஆனால் அவரின் சிறப்பு அவர் தீர்க்கமாக சிக்கல்களையும் தீர்வுகளையும் பகுத்தறிந்து இருக்கிறார். அவர் கையாண்ட வழிமுறைகள் இன்றைக்கும் நமக்கு பாடமாக இருக்கின்றது.

Related Posts with Thumbnails