Monday, December 28, 2009

அவதார் - இது சினிமா மட்டுமல்ல!

ஒரு நான்கு நாட்கள் வட துருவம் :) வரைக்கும் போயிட்டு வருவோமின்னு மினசோட்ட போயிருந்தேன். போறன்னிக்கு முதல் நாளிலிருந்தே தொலைக்காட்சி செய்திகள் அங்கு பனிப் புயல் ஒன்று தாக்கப் போவதாகவும், பயணம் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டுமெனவும் நடுங்கிக் கொண்டே அறிவிச்சுக்கிட்டு இருந்தது.

எப்படியோ ஒரு வழியா போய்ச் சேர்ந்து வாடகைக்கும் ஒரு காரை அமர்த்திக்கிட்டு விடுமுறையை கொண்டாடினோம். கிரிஸ்துமஸ் மறுநாள் சனிக்கிழமை, அமெரிக்காவில் இருக்கிற அத்தனை ஷாப்பிங் மால்களுக்கும் அன்னை போன்ற அளவில் இருக்கிற 'மால் ஆஃப் அமெரிக்கா' போனோம். ரொம்பப் பெரிசு. அது உண்மையா ஒரு ஃபுட்பால் அரங்கமாம், பின்னாடி ஷாப்பிங் மாலாக மாத்திவிட்டார்களாம்.

சரி கதைக்கு வருவோம். என்னோட பதினொரு வயது நிரம்பிய பையனோட நானும் அவதார் படம் பார்த்திட்டேங்க. அவன் திருகிட்டே வந்தான் என்னது 2.30 மணி நேரம் ஓடுமா, இப்பவே அசதியா இருக்கே அப்படின்னு ஒரு விருப்பமில்லாம சொன்னவனை, வாடா நல்லாருக்குமின்னு உள்ளே தள்ளிட்டுப் போனேன். படம் ஆரம்பிச்சு சரியா 20 நிமிஷத்தில என் பக்கமா சாய்ஞ்சு, "அப்பா, படம் எனக்குப் பிடிச்சிருக்கு"ன்னு சொல்லிட்டான்.

படம் இரண்டரை மணி நேரம் ஓடினாலும், எல்லா தரப்பினரையும் ஏதோ ஒரு வகையில் கட்டிப் போடுற மாதிரியான விசயங்களுடன் இயக்குநர் கேமருன் உழையோ உழைன்னு உழைச்சு இருக்கையோட நம்மை எல்லாம் கட்டிப் போட்டுட்டார்.

இந்தப் படத்தை நான் பார்க்க ஆரம்பிச்ச கோணமே கொஞ்சம் வித்தியாசமானது! மெல் க்ப்சனின் "அபோகாலிப்டே" படத்திற்கு அப்படியே எதிர் தரப்பிலிருந்து படத்தினுடைய கதை நகர்த்தப் பட்டிருக்கிறது (முடிவிலிருந்து தொடக்கமாக). அபோகாலிப்டோவில், க்ப்சன் நாகரிகத்தின் உச்சத்தில் இருந்த மாயா இன மக்கள் வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த காலகட்டத்திலிருந்து ஆரம்பித்து அந்த நாகரிக மக்களை ஒரு காட்டுமிரண்டிகளைப் போல சித்தரித்துக் கொண்டே வந்து கடைசியில் ஸ்பானியார்ட்ஸ் 'மிஷனரிகள்' கப்பல் கட்டி வந்து இறங்கி மிச்சம் மீதி தப்பிக் கிடந்தவர்களை காப்பாற்றுவது போல, கட்சிதமாக தன் பார்வையை மக்களின் முன் படமாக வைத்திருப்பார்.

ஆனால், கேமருன் எடுத்துக் கொண்ட தளம் முற்றிலும் மாறுபட்டது. ஒரு பரந்து பட்ட படிப்பாளியின் தன்மையை முழுமையாக படம் முழுதுமே உணர முடிந்தது. கி.பி 1490களுக்குப் பிறகு அமெரிக்காவின் வரலாறு பலவாறாக திரிக்கப்பட்டு, இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறை என்னவோ இங்கயே பூர்விகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் காலனியின மக்களை, எங்கிருந்தோ வந்த செவ்விந்தியர்கள் கொன்று குவித்து, நாடு பிடித்ததினைப் போன்ற மயக்க அளவிற்கு வரலாறு கற்பிக்கப் பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் (அது பள்ளிப் பாடப் புத்தகங்களிலிருந்தே தொடங்கிவிடுகிறது) இந்தப் படம் சினிமாவிற்கென சில விசயங்களை மாற்றி உண்மை பேசியிருக்கிறது.

பூர்விக குடிமக்களின் மகத்துவத்தை, அவர்களுடைய வாழ்க்கை முறையை, இயற்கையுடன் எவ்வாறு அவைகளின் சூழலமைவு (ecosystem) புரிந்து, இயைந்து வாழ்ந்திருந்திருக்கிறார்கள் என்ற பேருண்மையை அழுத்தமாக எல்லா திரிக்கப்பட்ட வரலாற்றுப் புத்தகங்களின் பக்கங்களிலிருந்தும் கிழித்தெறிந்து விட்டு, அம்மக்களும் நாகரிகத்துடன், குடும்பங்களாக தங்களுடைய நாட்டில் வாழ்ந்திருக்கிறார்கள் என்று விதையை எல்லா தரப்பு சிறியவர்களிலிருந்து, படிக்க, யோசிக்க வாய்ப்பற்ற பெரியவர்கள் வரைக்கும் சென்றடையுமாறு நாசுக்காக விசயம் தூவப் பட்டிருக்கிறது.

என்னை கட்டிப் போட்ட விசயங்களாக நான் கருதுவது, பரிணாம-உயிரியியல் ரீதியில் சிந்தித்து நம்முடைய கிரகத்தில் நாம் பார்த்துப் பழகிய தாவர, விலங்குகளையும் அவைகளுக்கிடையேயான இயற்கைத் தேவை, மற்றும் உணவுச் சங்கிலித் தொடர்பு, வாழ்விடம் என பல விசயங்களை படித்து, ஆராய்ந்து கொஞ்சமே சினிமாத் தனங்களுடன் வழங்கப்பட்டிந்த விதம். இயற்கையின் அங்கங்களான மனிதர்களும், தாவரங்களும், விலங்குகளும் எவ்வாறு ஒன்றிற்கு ஒன்று நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பதனை இந்தப் படத்தை விட வேறு எந்தப் படமும் எடுத்துக் காட்டியதாக நானறிந்த வரையிலும் காண முடிந்ததில்லை.

ஒரு நாகரிகத்தின் வாழ்வும், சாவும் இயற்கை வளங்களை வைத்து கையாளும் விதத்திலேயே தீர்மானிக்கப்படுகிறது. அதற்குச் சான்றாக இறந்து போன பல நாகரிகங்களைக் கொண்டு நாம் காணமுடியும். அது பாலிநேசியத் தீவுகளான ஈஸ்டர், ஹெண்டர்சன் மற்றும் அவைகளையொட்டிய ஏனைய தீவுகளாகட்டும் அல்லது அமெரிக்கா தென்கிழக்கு தொன்மை நாகரிங்களான அனசாசி, மற்றும் பிற தென் அமெரிக்கா நாகரிகங்களாகட்டும் (மாயா, inca, aztec) அனைத்து நாகரிகங்களின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் இந்த இயற்கை பேணலை ஒட்டியே நிகழ்ந்திருக்கிறது.

எத்தனைப் பேருக்கு பழைய வரலாறுகளிலிருந்து இன்றைக்குத் தேவையான பாடங்களை கற்றுணரும் பண்பும், பொறுமையும் இருக்கிறது. இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த பொருளாதார, உலகமயமாக்கல் அரிபரிகளில் நாமும் அது போன்றதொரு இயற்கை பேரழிவின் விளிம்பு நிலைக்கே நம்மை முன் தள்ளி சென்று கொண்டிருக்கிறோம் என்ற அடையாளப் படமாக, அதனை சுட்டிக் காட்டும் விதமாகவும் இந்தப் படம் கட்டமைக்கப் பட்டிருக்கிறது.

படத்தில் பல வசனங்கள் அப்படியே வருமாறும் பார்த்து பார்த்து கேமருன் அமைத்திருக்கிறார். அமைதியாக இயற்கையின் ஒத்திசைவை நன்கு அறிந்து, புரிந்து வைத்திருக்கும் ஒரு இன மக்களுக்கிடையில் (நா'வி = செவ்விந்தியர்கள்) காட்டுமிரண்டித் தனமாக பொருளையே தேடித் திரியும், அரைவேக்காட்டு ஆதிவாசிகள் (காலனி அமைக்கும் இனம்) வேறு எந்த சிந்தனையுமில்லாமல் வந்து நுழைகிறார்கள், விளைவு பேரழிவு. இதனை கதநாயகனுக்கும், கதநாயகிக்குமான முதல் சம்பாஷணைகளில் அழுத்தமாக பதியப்பட்டிருக்கிறது; இப்படியாக - எப்படி பலமான நெஞ்சுத் துணிவு இருப்பவர்களாக இருக்கும் அதே நேரத்தில் குழந்தைத் தனமாக முட்டாள்களைப் போல இயங்குகிறோம் என்று அமெரிக்கர்களை நோக்கி சுய விமர்சனமாக முன் வைக்கிறது ஒரு சம்பாஷணை.

சினிமாத்தனமாக இருந்தாலும், எப்படி மனிதர்களும் இயற்கையுடன் ஒத்திசைவு காட்டி 'சூப்பர் கான்சியஸ்' நிலையில் ஒருமித்து வாழ வேண்டுமென்ற கான்செப்டை இந்தப் படத்தில் - நா'விக்களின் கொண்டை முடியை விலங்குகளுடனும், தாவரங்களுடனும் இணைத்து பரஸ்பரமாக கலந்து ஒன்று பிறிறொன்றின் அங்கம் என்று காட்டும் ஸ்டைல், ரொம்ப அலாதியாக இருந்த அதே வேளையில் இப்படியாக சொல்லித்தான் அழுத்தமாக சொல்ல வந்த விசயத்தை விளங்க வைக்க முடியும் என்பதில் கேமருன் மனதை தொட்டு வெற்றியடைந்திருக்கிறார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இந்தப் படம் காலனிகளின் நாடுபிடிக்கும் அணுகுமுறைக்கும், அவர்கள் இயற்கையை கையாண்ட விதத்திற்கும் எதிர்மறையானது. நா'பிக்கள் சந்தர்ப்ப சூழலில் வேட்டையாட நிகழ்ந்த பொழுதும், வேட்டையாடப் பட்ட மிருகங்களுக்கு வழங்க வேண்டிய உரிய சடங்கை நிகழ்த்துவதாக காமித்தது, மேற்குலகில் கால் பதித்த காலனி கண்ட மிருககங்களையும் தனக்கு ஆபத்தாக அமையலாம் என்று சுத்தமாக துடைத்தெறிந்ததை (உ.தா: அமெரிக்கன் ஓநாய்) சொல்லாமல் அடிக்கோடிட்டு சொல்லிவிட்டு, ஒரு காட்சியில் கதாநாயகின் மூலமாக காட்டு நாய்களைப் போன்று இருக்கும் மிருகங்கள் கதாநாயகனைத் தாக்க வரும் பொழுது, அவளும் அந்த நாய்களை தாக்கி அழித்துவிட்டு பின்பு இறந்து கிடக்கும் நாய்களை கண்டு இரக்கப்பட்டுவிட்டு, பேசும் வசனம் தெல்லத் தெளிவாக இயற்கையப் பற்றிய விழிப்புணர்வு ஊட்டக் கூடிய முறையில் அமைந்திருந்தது. இருந்தாலும், மக்களுக்கு அலுப்புத் தட்டாத முறையில் அமைந்திருந்தது கூடுதல் சிறப்பு. படத்தில் எல்லா காட்சிகளுமே மிகவும் நுணுக்கமாக அமைத்து என்னைப் போன்றவர்களுக்கு ஒரு செமையான மதியச் சாப்பாடு கொடுத்து அனுப்பியதனைப் போன்று இருந்தது.

திரையரங்கத்தை விட்டு வெளியில் வந்ததும், எனது பையன் 'வாவ்... வாவ்' என்று கூறிக்கொண்டே வந்தான். அவனுக்கு இப்பொழுது செவ்விந்தியர்களைப் பற்றிய மாற்றுப் பார்வை, அவனுக்கு புரிந்த, அதே கலாச்சாரத்தில் வாழ்ந்த ஒருவரின் மூலமாக கூறியது அழுத்தமாக பதிந்திருக்கிறது. அது மட்டுமன்றி வேற்று நாடுகளில் அடவடியாக இராணுவ ஆக்கிரமிப்புகளை நிகழ்த்தியிருக்கும் போது எப்படி போர்களை நடத்தும் 'காமண்டர்கள்' வேடிக்கையாக மனிதர்களை கொல்லும் வார்த்தைகளை, கையில் தேநீர் கோப்பையுடன் குண்டுகளை வீசுவதற்கு கட்டளையிட்டுவிட்டு, மரணங்களை கண்டு ரசிக்கும் காட்சியில், காமண்டரின் மண்டைக்குள் வேறு எதுவுமே இல்லாததனைப் போன்ற பிம்பத்தை நமக்கு வழங்கி, அது போன்ற மனிதர்கள் how evil என்பதனை அழுத்தமாக காமித்திருக்கிறார், கேமருன்.

எனது மகன் ஒத்துக்கொண்ட மற்றுமொரு விசயம், முதல் முறையாக நாம் (அமெரிக்கர்கள்) தேல்வியடைந்ததாக காமித்த படம் இது என்று கூறினான். அதற்கு நான் கூறிய மறுமொழி, ஆம் அது எந்தப் பக்கமிருந்து யார் கதை சொல்கிறார்கள் என்பதனைப் பொருத்து, மாறி மாறி வரும் என்றேன். கடைசியாக படம் பொருத்து, அவன் கூறிய ஒற்றை வரி கமெண்ட்... என்னைய யாராவது இந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதச் சொன்னால், ஒரே வார்த்தை "வாவ்!" என்று மட்டுமே எழுதுவேன் என்று முடித்துவிட்டான். அதுதான் எனது எண்ணமுமாக இருந்தது.

19 comments:

ILA (a) இளா said...

WOW!

Thekkikattan|தெகா said...

இளா,

அந்த வாவ், படத்திற்கா இல்லை எழுதினத்துக்கா :)) ?

Anonymous said...

நல்ல விமர்சனம் .............

சென்ஷி said...

நான் விமர்சனத்துக்கு வாவ் போட்டுக்கறேன்..

எனக்கு படம் ரொம்பப் பிடிச்சிருந்தது

ராஜ நடராஜன் said...

டிக்கட் முன்பதிவு செய்து இரண்டு நாளாச்சு!இன்னும் ஒரு மணி நேரத்துல படம் பார்க்க ஜூட்......போறதுக்கு முன்னாடி என்னதான் சொல்றீங்கன்னு பார்த்துட்டுப் போயிடறேனே.

ராஜ நடராஜன் said...

கொஞ்சம் வித்தியாசமாய் சொல்லியிருக்கீங்க!தொழில் நுட்பமா தெரிஞ்சுக்கணுமின்னா ஹாலிவுட் பாலா வீட்டுக்கும் கொஞ்சம் டேரா போடுங்க!(கேமரன்அடுத்த படத்துல கூட்டுச் சேர்த்துக்கற மாதிரி நுணுக்கங்கள் தேடி கண்டு பிடிச்சு சொல்கிறார்)

Thekkikattan|தெகா said...

சென்ஷி, பார்த்தாச்சா ...கூல்.

*********

ராஜ நடராஜன்,

பின்னூக்கியமைக்கு நன்றி! எஞ்சாய் த ஷோ :).

*********

SurveySan said...

//எனது மகன் ஒத்துக்கொண்ட மற்றுமொரு விசயம், முதல் முறையாக நாம் (அமெரிக்கர்கள்) தேல்வியடைந்ததாக காமித்த படம் இது என்று கூறினான்//

அமெரிக்கனை ஜெயிக்க அமெரிக்கனின் தயவு இருந்தால் தான் முடியும் என்பதே மாரல் ஆஃப் த ஸ்டோரி ;)

Thekkikattan|தெகா said...

//அமெரிக்கனை ஜெயிக்க அமெரிக்கனின் தயவு இருந்தால் தான் முடியும் என்பதே மாரல் ஆஃப் த ஸ்டோரி ;)//

ஆமா, ஹாலிவுட் படங்களில் மட்டும் :)) ...

என்ன பண்றது சர்வேயரே, எடுக்கிற படமனைத்தும் நம்ம பூமியில இருந்தில்ல கதை சொல்லுது அப்படி இருக்கும் பொழுது சினிமான்னாவே, கதாநாயகன் புஜத்தை திருகி, முறுக்கி காமிச்சே ஆகணுங்கிற ஃபார்மிலா பார்த்துப் பார்த்து பழகின கண்களுக்கு, இது வித்தியாசமா இருக்கில்ல, கதாநாயகனோட தோல்வியை அவர் வாயாலே சொல்லுறது... அதேய்ன் :D

குட்டிபிசாசு said...

நானும் பார்த்து ரசித்தேன். Dances with wolves போன்ற கதை.

நாபிகள் பேசும் மொழியும் படத்திற்காக உருவாக்கப்பட்ட ஒன்று.

hayyram said...

gud post.

regards,
ram
www.hayyram.blogspot.com

Thekkikattan|தெகா said...

வாங்க குட்டிப் பிசாசு,

//நானும் பார்த்து ரசித்தேன். Dances with wolves போன்ற கதை.
நாபிகள் பேசும் மொழியும் படத்திற்காக உருவாக்கப்பட்ட ஒன்று.

ஓ! அப்படியா, நான் இன்னும் அந்தப் படம் பார்க்கவில்லை. பிரத்தியோக மொழி பற்றி... 12 வருட புராஜெக்ட் இல்லையா, பின்புலத்தில் இன்னும் எது எதுக்கோ கடுமையா உழைத்திருப்பார்கள் ... நன்றி.

//hayyram said...

gud post.//

நன்றி! ஹே...

ஆடுமாடு said...

புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.

கல்வெட்டு said...

//திரையரங்கத்தை விட்டு வெளியில் வந்ததும், எனது பையன் 'வாவ்... வாவ்' என்று கூறிக்கொண்டே வந்தான். //


தெகா PG 13 ஆயிற்றே ?
டீனேஜ் மகன்?

**

8 வயதுக்கு ஏற்றதா?

Thekkikattan|தெகா said...

//ஆடுமாடு said...

புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா//

புத்தாண்டு வாழ்த்துகள், ஆடுமாடு. என்னய ஐயா என்று விழித்து மிரள வைக்கிறீங்களே :)... சும்மா, தெகா, காட்டான், பிரபா னு கூப்பிடுங்க .

**********

கல்வெட்டு,

PG13 அவனும் சொல்லிட்டுத்தான் வந்தான், அது மாதிரி ஏதாவது சீனு வந்தா வெளியில போகணுமான்னு, அப்படி ஒண்ணும் படத்தில பயங் காட்டுற மாதிரி இல்லையே, கல்வெட்டு.

இப்ப பயலுவ ஐபாட்லும், pspலும் விளையாடுற ரத்த சகதி வன்முறையைக் காட்டிலும், அவதார்ல அது மாதிரி சொல்லிக்கிற மாதிரி இல்ல. அப்போ நீங்க இன்னும் பார்க்கலையா? பசங்களை கண்டிப்பா கூட்டிடுப் போயி காமிங்க :)

8 வயசுக்கு ஏத்ததான்னா, கண்டிப்பான்னு சொல்லுவேன்... avatar - is a fantasy world, நம்மை விட பசங்களுக்குப் பிடிக்கும்.

கல்வெட்டு said...

.//8 வயசுக்கு ஏத்ததான்னா, கண்டிப்பான்னு சொல்லுவேன்.//

நன்றி தெகா !!
குழப்ப நிலையிலேயே இருந்தேன்

பார்த்திருவோம்

Thekkikattan|தெகா said...

குழப்ப நிலையிலேயே இருந்தேன்//

:)) எதுக்கும் கொஞ்சம் எடுத்துச் சொல்லி கூட்டிட்டுப் போங்க, சில ச்சேசிங் எல்லாம் ட்டூ மச்சா இருக்கலாம். பயமா இருந்தா சொல்லச் சொல்லிடுங்க... ஹோப், the kid will enjoy the show.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

Excellent review :) ஒரு வருஷங் கழிச்சுச் சொல்றேன்னு நினைக்காதீங்க.. இப்போ தான் பார்க்க நேரிட்டது..

அபோகாலிப்டோ பாக்க என்னமோ தயக்கம்.. ஒரே வன்முறையா இருக்குமோன்னு தோணுது.. பாத்துட்டு உங்களோட ரெவியூக்கு வர்றேன்..

Thekkikattan|தெகா said...

வாங்க எல்போர்ட்,

நம்ம விமர்சனமெல்லாம் எப்போ வேணாலும் வைச்சிப் படிக்கலாமிங்க :)) இப்பயாவது வந்து படிச்சிங்களே அதைச் சொல்லுங்க. எங்க என் வீட்டுப் (ப்ளாக்) பக்கமெல்லாம் பார்க்க முடியறதில்ல?!

விடாம அபோகாலிப்டோவும் பார்த்திடுங்க. பார்க்க வேண்டிய படம்தான். ஆமா, அந்த பதிவில நிறைய டாகுமெண்டரிஸ் இணைப்புகள் இருக்கும் எல்லாம் பார்த்திட்டீங்களா? செமையா இருக்கும்... don't miss it!

Related Posts with Thumbnails