Saturday, December 12, 2009

முத்துப்பேட்டை லகூன் இயற்கையின் ஓர் அதிசயம்: Muthupettai Lagoon

இந்தப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னர் எனக்கு அலையாத்தி (லகூன்) எந்தப் பக்கம் இருக்கிறது என்றே தெரிந்திருக்கவில்லை. ஏதேச்சையாக எனது மைத்துனன் மூலமாக அறிய நேர்ந்த ஓர் அற்புத இடம். எனது பெற்றோர்கள் வசிக்கும் கரம்பக்குடியிலிருந்து ஐம்பது கிலோமீட்டர்கள் தொலைவிலேயே அமைந்திருந்தாலும், அது வரையிலும் கேள்விப்படாமலும் அங்கு சென்று வராமலிருந்ததை இப்பொழுது நினைக்கும் பொழுது ஆச்சர்யமாகவும் இருக்கிறது.

அது ஒரு ஆச்சர்யக் காடு என்றால் மிகையில்லை. எனக்கென்னவோ, நாமெல்லாம் படங்களில் பார்த்து அசந்த அந்த அமேசான் காடுகளில் இரு மருங்கும் அடர்ந்த வனப் பிரதேசத்தின் ஊடாக ஓடும் நீண்ட ஆற்றினூடாக ஒரு பயணத்தை கொண்டதாக நினைக்கச் செய்தது; இந்த முத்துப்பேட்டை லகூனில் பயணித்ததின் மூலம், அப்படியானதொரு அழகு!

அந்த சதுப்பு நிலக் காட்டினை (Mangrove Forest) சென்றடைய இரண்டே மணி நேர பயண ஏற்பாட்டின் பேரில் இரண்டே பேருந்துகள்தான் எனக்கு எடுத்தது. அந்தப் பயணத்திற்கு முன்னதாக மைத்துனன் ஆர்வத்தின் பேரில் இணையத்தில் தேடி இரண்டு வலைப்பதிவுகளின் மூலமாக கிடைத்த கட்டுரைகளை படிப்பதற்கென அச்சுப் பிரதி வீட்டிற்கு எடுத்து வந்திருந்தார்.

எங்களது திட்டம் அவர் எனது வீட்டிற்கு முன்னிரவே வந்துவிடுவது எனவும், இரவு தங்கலின் பொருட்டு பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு வசதியாக இருக்கும் எனவும் திட்டமிட்டோம்.

காலை உணவை வீட்டில் வைத்துக் கொள்ள அவகாசமின்றி கிடைத்த ஆறு மணி பேருந்தை பிடித்தோம். பட்டுக்கோட்டையில் இறங்கிய நேரம் காலை சிற்றுண்டி முடிக்கத் தகுந்த நேரமாகிப் போனதால், ஹோட்டல் லக்சுமி நாராயணனில் இனிமேல் காலை உணவே சாப்பிடப் போவதில்லை என்ற அளவிற்கு ஒரு கட்டு கட்டி வயிற்றை நிறைத்துக் கொண்டோம்.

பேருந்துப் பயணம் நான் இழந்திருந்ததாக நினைத்திருந்த நான்கு வருடத்திய ஜன்னலோர இருக்கையும், நல்ல நண்பருனூடான சம்பாஷணைகளையும் ஒருமித்து அந்த ஒரு மணி நேர பேருந்து பயணம் நிறைவுற்றதாக அமைத்து தந்தது. அப்படியானதொரு பயணமாக கரம்பக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டை பயணமும் அமைந்தது. இரண்டு பேருந்துகளுமே (கரம்பக்குடியிலிருந்து பத்து கிலோமீட்டர்கள் தாண்டி) காவேரிப் பாசனத்தை நம்பியதொரு ஊர்களின் வழியாக பயணித்ததால், பசுமைக்கு பஞ்சமில்லாமல் இருந்தது; சம்பா சாகுபடி நடந்து கொண்டிருந்தது.

எங்களின் பேச்சு அதிகமாக புத்தகங்களைப் பற்றியும் அதனை எழுதிய சமகால மனிதர்களின் நிஜ வாழ்க்கையின் பயணிப்பு பற்றியும், எப்படியுமாக சந்தர்ப்ப வாதம் மனிதர்களின் வாழ்வியல் கோட்பாடுகளையே புரட்டிப் போட்டு விடுகிறது எனவும், அதனையும் மிஞ்சிய சில 'பிழைக்கத் தெரியாத' படைப்பாளிகளைப் பற்றியுமாக சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாமல் இரண்டு மணி நேரப் பயணம் அரைமணி நேரமாக பயணித்தது. அவர் என்னைக் காட்டிலும் தமிழில் அதிகமாக வாசித்திருந்ததாக தெரிந்து கொண்டேன்.


முத்துப்போட்டையில் இறங்கி கண்ணில் தென்பட்ட ஒரு பெட்டிக் கடையில் அலையாத்திக்கு பொடிநடையாக நடந்தே சென்று விடலாமா என்று வினவினோம். பெட்டிக் கடைக்காரர் ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, சார் அந்த இடத்திற்கு போகாமலேயே நிறைய பேர் நிறைய கதையைச் சொல்வார்கள் அதிலொன்று இது! நீங்கள் பேசாமல் ஒரு ஆட்டோவை அமர்த்திக் கொண்டு செல்வது எதற்கும் நல்லது என்று ஆட்டோ ஒன்றையும் அமர்த்திக் கொடுத்தார்.

அந்தப் பெட்டிக் கடையிலேயே கொஞ்சம் கொறிப்பதற்கென பண்டங்களும், தண்ணீர் பாட்டில்களும் வாங்கிக் கொண்டு ஆட்டோவிற்கு 30 ரூபாய் கொடுத்து லகூனை(அப்படித்தான் அந்த ஊரை குறிப்பிடுகிறார்கள்) சென்றடைந்தோம். வரும் வழியில் சில ஆயுதமேந்திய காவல்துறை அலுவலர்களைக் காண முடிந்தது. ஓட்டுனரிடம் என்ன விசயம் என்று விசாரிக்கும் பொழுது ஒரே வார்த்தையில் கூறி விட்டார் “நல்லா இருந்த ஊரைக் கெடுத்துப்புட்டாங்க சார், 'இன்னொரு காஷ்மீர் ரேஞ்சிற்கு” இருக்கு என்றார். போய்ச் சேரும் வரையிலும் யோசித்துக் கொண்டே போகும்படி ஆகிவிட்டது.

வனத்துறை அலுவலகத்திற்கு முன்பு இறக்கி விடும் பொழுது மணி சரியாக காலை 9.30யை தொட்டிருந்தது. அந்த ஊர் எனது பதினைந்து வருடத்திற்கு முன்னதான என் சொந்த ஊரை ஞாபமூட்டியது. வனத்துறை அலுவலகத்திற்கு முன்பாக இறங்கிய சமயத்தில் யாரும் தென்படவில்லை ஆதலால், கிடைத்த இருக்கையில் அமர்ந்து அப்படியே புழுக்கத்தின் அடர்விற்கிடையே வழிய எத்தனிக்கும் வியர்வையை வழித்துதெறிந்து கொண்டே சுற்றிலும் பார்வையை ஓட்டும் பொழுது, எதிரில் ஒரு குளம் கிடந்தது. அங்கு பெண்களும் ஆண்களுமாக தனித்தனியான படித்துறைகளில் அமர்ந்து இதனைத் தாண்டிய ஒரு உலகம் இருப்பதற்கான எந்த ஒரு பிரக்ஞனையும் காட்டாமல் மகிழ்ச்சி வெள்ளத்தில் முங்கி, துவைத்து, பல் துலக்கி, கால் அலம்பி, சோப்பு போட்டு அதிலேயே மீண்டும் மீண்டும் குளித்து என்று இருப்பதனைக் காணும் பொழுது, என்னாலும் அப்படியானதொரு ஒரு வாழ்க்கையை மீண்டும் மீட்டெடுத்து விட முடியுமா என்ற ஒரு பேராசையை மனதினுள் எழுப்பியது.

என்னுடைய வாழ்க்கை பயணிப்பு, மிக நீண்ட தொலைவுகளை கொண்டது. சில விசயங்களிலிருந்து துண்டித்துக் கொண்டு செல்லுமளவிற்கும், பல விசயங்களை மேலும் நெருக்கமாக்கிக் கொள்வதற்குமான ஒரு தோணியாகிப் போனது. அதிலொன்றுதான் இந்த குளம், குட்டைகளில் குளிப்பதனை நிறுத்திக் கொண்ட துண்டிப்பும் கூட.

அப்படியாக அமர்ந்திருக்கும் பொழுது பக்கத்தில் இருந்த ஒரு பார்க் எங்களை ஈர்த்தது. அங்கு அந்த ஊரே ஓய்வாக இருந்ததாக பட்டது. இப்படி ஒரு அழகான ஆட்டுக் குட்டியும், எதனை நோக்கியோ அமர்ந்திருக்கும் ஒரு பெரியவரையும் கிளிக்க வேண்டுமென கை பரபரத்தது அது உங்களின் பார்வைக்கும், இங்கே.


நாங்கள் வனத்துறை சரக அலுவலகத்தை அடைந்த நேரம் மிக சீக்கிரம் என்பதால் சற்று நேரம் அமர்ந்து அலுவலர்களின் வருகைக்காக காத்திருக்கும் படியாக அமைந்து போனது. பின்பு ஒரு வனத்துறை பாதுகாவலர் ஒருவர் வந்தார், எங்களிடம் வந்ததிற்கான காரணத்தை அறிந்து கொண்டு வனச்சரகரை அலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை பேச வைத்தார். நானும் அறிமுகப் படுத்திக் கொண்டு அவரிடமிருந்து அலையாத்தி தொடர்பான பொதுச் செய்திகளையும், அலையாத்திக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளையும் கேட்டு தெரிந்து கொண்டு, அவர் ஏற்பாடு செய்து கொடுத்த ‘வாட்சர்’ ஒருவருடன் ஒரு படகை ஏற்பாடு செய்து கொண்டு ஏறி அமரும் பொழுது சரியாக சூரியனும் எங்கள் மண்டைக்கும் நேர் மேலாக தன்னை அமர்த்திக் கொண்டான்.


அதுவே எனது முதல் கழிமுகத்துவார நீர் நிலை மற்றும் தாவர வகைகளுக்கூடான படகுப் பயணம். இருப்பினும் என்னுடைய முந்தைய வாசிப்புகளும், சதுப்பு நிலக் காடுகளைப் பற்றியான பொது அறிவும் ஏற்கெனவே அந்த இடங்களுக்குள் பிரயாணித்ததனைப் போன்ற பிரமையை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும், ஒவ்வொரு முறையும் இயற்கை வனங்களுக்குள் பிரவேசிக்கும் பொழுதும் ஆச்சர்யங்களுக்கு அளவில்லை என்பதனால், மனம் எதனை நாம் இந்தப் பயணத்தின் மூலம் இன்று சந்திக்கவிருக்கிறோமோ என்ற எதிர்பார்ப்பை தூவாமல் இல்லை.


எதிர்பார்த்த படியே ஒரு நரியுடனான வீர தீர செயல்களையும், இன்னும் அதிகப் படியான படங்களுடனும் சதுப்பு நிலக் காடுகளின் மேலதிக விபரங்களுடனும், முத்துப்பேட்டை லகூன், அழிவிற்கென முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் காரணங்களைப் பற்றியும் எனது அடுத்தப் பதிவில் தொடர்கிறேன்...

***தொடர்ச்சியும் போட்டாச்சு, பதிவிற்கு இங்கே சொடுக்குங்க ...


நரியுடன் ஒரு நேரடி அலையாத்திக் காட்டில் - 2 : Muthupettai Lagoon - II விடியோவுடன்!

17 comments:

கோவி.கண்ணன் said...

அனுபவம் அருமை. நான் சதுப்பு நிலக் காடுகளினூடாக பயணித்தது இல்லை.

டீ ஆத்தும் படம் சூப்பர். மேலே வெறுமையில் இருந்து டீ கொட்டுவது போல. செம க்ளிக்

ஜேகே - JK said...

எங்களூர் பக்கம் வந்து அதைப் பற்றி சிறப்பாக வலைப்பதிவுகளில் எழுதியமைக்கு நன்றி...

அலையாத்திக் காடுகள் தொடர்பான எங்களூர் வலைத்தளத்தில் உள்ள கட்டுரை.

தருமி said...

//டீ ஆத்தும் படம் சூப்பர்.//

அசத்தலுங்க அது .. எப்படி இப்படி?

blogpaandi said...

படங்கள் அருமை. ஆட்டுக்குட்டியை படம் எடுக்குமுன் Smile Please என்று சொன்னீர்களா ? நல்ல புன்சிரிப்புடன் போஸ் கொடுத்திருக்கிறது.

ஜீவன் said...

உங்க போன பதிவுல கோடியக்கரை பத்தி சொல்லி இருந்தீங்க..!
பட்டுகோட்டையில் இருந்து எங்க ஊர் வழியா (மதுக்கூர்) வேதாரண்யத்துக்கு ஒரு பஸ் போகும் அந்த பஸ்ஸ பார்க்கும்போதெல்லாம் நெனைச்சுக்குவேன் வேதாரண்யம் போயி கோடியக்கரை போகணும்னு. ஆனா இதுவர போனதில்ல உங்க பதிவ படிச்ச உடன் அடுத்த தடவை ஊருக்கு போனா கண்டிப்பா கோடியக்கரை போகணும்னு முடிவு பண்ணிட்டேன்

வடுவூர் பறவைகள் சரணாலயம் பத்தியும் பதிவிட்டதுக்கு நன்றி..! வடுவூரும் எங்க ஊருக்கு பக்கம்தான் ஆனா இப்போதான் அதன் சிறப்பை தெரிஞ்சுகிட்டேன்..! அங்கயும் போகணும்...!

இப்போ லகூன் பத்தி போட்ட பதிவும் அருமை முத்து பேட்டை எங்க ஊர்ல இருந்து இருவத்து அஞ்சு கிலோமீட்டர்தான் பல தடவை போக வாய்ப்பு கிடைச்சும் போகல
அங்கயும் போகணும்..!

பதிவிற்கு நன்றி...!

நீங்க கரம்பகுடியா...! சந்தோசம்..!;;))

மங்கை said...

இந்த அழகான காடுகளை தானே நம்ம ஹீரோக்கள் வில்லன்களுடன் சண்டை போடுகிறேன் பேர்வழி என்று குண்டு போட்டு விளையாடி வருகிறார்கள்... நல்ல பயண அனுபவம்...நன்றி

Thekkikattan|தெகா said...

வாங்க கோவியாரே,

அவசியம் அடுத்த முறை ஊருக்குச் சென்றால் சென்று பாருங்க. அதுக்காகத்தான் அந்த டீ ஆத்துற படத்தை இங்கன கொண்டு வந்தேன் :) நன்றி!

ஜேஜே - JK,

உங்க ஊருதானே நம்ம ஊரும் :) . இன்னும் வந்துக்கிட்டே இருக்கில்ல அதனையும் படியுங்க.

//அலையாத்திக் காடுகள் தொடர்பான எங்களூர் வலைத்தளத்தில் உள்ள கட்டுரை.//

இணைப்பு கொடுக்க மறந்துட்டீங்க போலவே, முடிஞ்சா கண்டிப்பா கொடுத்திருங்க, ஜேகே - நன்றி!

Thekkikattan|தெகா said...

//அசத்தலுங்க அது .. எப்படி இப்படி?//

தருமி, உங்கள விடவா நாங்க :))

//blogpaandi said...
படங்கள் அருமை. ஆட்டுக்குட்டியை படம் எடுக்குமுன் Smile Please என்று சொன்னீர்களா ? நல்ல புன்சிரிப்புடன் போஸ் கொடுத்திருக்கிறது//

பாண்டி, தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி! அந்த ஆட்டுக் குட்டி புகைப்படம் எடுக்கிறதை ரொம்ப விரும்புனிச்சுப் போல, நிறைய ஷாட் எடுத்தேன், செமையா பல கோணங்களில் கொடுத்திட்டே இருந்தார்.

Thekkikattan|தெகா said...

வாங்க ஜீவா,

//ஆனா இதுவர போனதில்ல உங்க பதிவ படிச்ச உடன் அடுத்த தடவை ஊருக்கு போனா கண்டிப்பா கோடியக்கரை போகணும்னு முடிவு பண்ணிட்டேன்//

கண்டிப்பா எல்லா இடத்திற்கும் குழந்தைகளோட பொயிட்டு வாங்க, அவங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமா இருக்கும்.

எனக்கு கரம்பக்குடியே தான். இன்னும் இரண்டு, மூன்று பதிவுகள் நம்மூர் சார்ந்து வருமுன்னு நினைக்கிறேன், பார்க்கலாம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமை.. தெகா..
நான் சிதம்பரம் பக்கத்துல இதே மாதிரி பிச்சாவரம் போயிருக்கேன்.. இந்த இடம் அடுத்தமுறைக்கு லிச்ட்ல சேத்துக்கலாமா..?

டீ போட்டோ நல்லா ஆத்தறீங்க ( நல்லா கலக்கரீங்க போட்டோகிராபியில் )

மீன்துள்ளியான் said...

//என்னுடைய வாழ்க்கை பயணிப்பு, மிக நீண்ட தொலைவுகளை கொண்டது. சில விசயங்களிலிருந்து துண்டித்துக் கொண்டு செல்லுமளவிற்கும், பல விசயங்களை மேலும் நெருக்கமாக்கிக் கொள்வதற்குமான ஒரு தோணியாகிப் போனது//
அருமையான எண்ண வெளிப்பாடு .. ஒரு தடவை அங்கே போயிட்டு வரணும்னு தோணுது ..
படங்கள் எல்லாம் நல்ல வந்து இருக்கு
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

Anonymous said...

You can see this place in Tamil movie Peraanmai

Thekkikattan|தெகா said...

//மங்கை said...

இந்த அழகான காடுகளை தானே நம்ம ஹீரோக்கள் வில்லன்களுடன் சண்டை போடுகிறேன் பேர்வழி என்று குண்டு போட்டு விளையாடி வருகிறார்கள்... நல்ல பயண அனுபவம்...நன்றி.//

ஆமாம் மங்கை, அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. கீழே ஒரு அனானி கூறியமாதிரியே இந்த சதுப்பு நிலக் காட்டில் கூட சில காட்சிகள் 'பேராண்மைக்'கென படமாக்கியிருக்கிறார்கள் என்று கூறினார்கள் கூட வந்திருந்தவர்கள்.

ஒரு நல்ல செய்தி என்னன்னா, அந்தப் படத்தில் வெடிச்ச குண்டுகளில் ஒண்ணுகூட இந்தக் காட்டில் வெடிக்கல, நிறைய வேற எங்கோ ஒரு காட்டில் வெடிக்க வைச்சிருப்பாங்க. இப்பொழுது டாப்ஸ்லிப் போன்ற வனங்களில் படப் பிடிப்பு நடத்த விடுவதில்லையாம், :). சந்தோஷமா இருந்துச்சு, கேக்க.

Thekkikattan|தெகா said...

வாங்க முத்துலெட்சுமி,

//இந்த இடம் அடுத்தமுறைக்கு லிச்ட்ல சேத்துக்கலாமா..?//

இதுவும் பிச்சாவரம் மாதிரியேதான், கொஞ்சம் வித்தியாசங்களுடன். கண்டிப்பா சேர்த்துக்கோங்க, அந்தப் பக்கத்து ஊர்களையும் பார்த்த மாதிரி இருக்கும்.

//டீ போட்டோ நல்லா ஆத்தறீங்க//

அதெப்படி அந்த புகைப்படத்தில டீ ஆத்துறது நான் தான்னு மிகச் சரியா கண்டுபிடிச்சு சொன்னீங்க :)). அது ஒரு இயற்கையா அமைஞ்ச ஷாட்டுங்க.

மீன்,

//அருமையான எண்ண வெளிப்பாடு .. ஒரு தடவை அங்கே போயிட்டு வரணும்னு தோணுது ..
படங்கள் எல்லாம் நல்ல வந்து இருக்கு

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்//

போயிட வேண்டியதுதானே. நீண்ட வார இறுதி நாட்கள் கிடைச்சா மூட்டையை கட்டிட்டு கிளம்பிரணும். எதையும் யோசிக்கப்பிடாது.

//Anonymous said...
You can see this place in Tamil movie Peraanmai //

ஆமா, அனானி கவனிச்சேன். மேலே 'மங்கை' அவர்களுக்கு கொடுத்த மறுமொழியில் சில விசயங்கள் பேசியிருப்போம் பாருங்க.

ஜேகே - JK said...

முத்து பேட்டை அலையாத்திக் காடுகள் தொடர்பான எங்களூர் வலைத்தளத்தில் உள்ள கட்டுரை

Chitra said...

நாத்து நடவும் போட்டோ, டீ ஆத்தும் போட்டோ, எங்கள் மனக்கண்ணில் நாங்களும் உங்களுடன் பயணிப்பதை போல் உணர்வு கொள்ள வைக்கும் கட்டுரை............... ரொம்ப நன்றி, சார்.

Thekkikattan|தெகா said...

//Chitra said...

நாங்களும் உங்களுடன் பயணிப்பதை போல் உணர்வு கொள்ள வைக்கும் கட்டுரை...............//

அதே மூச்ச விட்டுடாம இரண்டாவது பகுதியையும் படிச்சிட்டு சொல்லுங்க, நிறைவா இருந்துச்சான்னு :) ... நன்றி!

Related Posts with Thumbnails