Wednesday, December 02, 2009

கோடியக்கரையில் ஒரு பொழுது : Blackbucks in Point Calimere

கோடியக்கரைக்கு நான் முதுகலை பட்டப் படிப்பு படிக்கும் பொழுதே 90களின் தொடக்கத்தில் வன விலங்குகளின் கணக்கெடுப்பிற்கென சென்றிருக்கிறேன். இருப்பினும் இந்தப் பயணம், 15 வருட வித்தியாசத்தில் வாழ்வின் சில அடர் அனுபவங்களுக்கிடையே எனக்கு நானே தருவித்துக் கொண்ட ஒரு வாய்ப்பாகவும், அதுவும் எதிர்பாராமல் நிகழும் ஒரு சம்பவம் என்பதால் மிகவும் குதூகலத்துடன் மற்ற இரு நண்பர்களுடனும் பயணத்தைத் தொடங்கினேன், எல்லாவற்றையும் பின் தள்ளியவாரே!

கோடியக்கரை வனச் சரணாலயத்தை இரு வகையாக பிரிக்கலாம். ஒன்று வன விலங்குகளுக்கெனவும் மற்றது பறவைகளுக்கெனவும் அமைந்ததாக. இந்தக் கட்டுரையில் முதலாவதாக வன விலங்குகளுக்கென அமைந்த பகுதியில் நடந்த விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பறவைகள் பகுதியில் சுற்றுப் புறச் சூழலின் சேதாரம் கொஞ்சம் தூக்கலாகவும் மனசை நெருட வைப்பதாகவும் அமைந்திருப்பதால் அதனைத் தனியாக பிரிதொரு நேரம் பதிக்கிறேன்.

எனது வேதாரண்யம் நோக்கிய பயணம் அன்று தஞ்சாவூரிலிருந்து தொடங்கியதால் வரும் வழியில் மிகவும் எதிர்பாராத வகையில் வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் இடறி விழுந்தோமென்று கூறியிருந்தேன். அந்த நிகழ்வு மனது முழுதும் மேற்கொண்டு கொண்டாட்டத்திற்கான விதையை தூவியிருந்ததால் பார்க்கும் பச்சையெல்லாம் அடர்ந்த வனப்பகுதிக்குள் இருப்பதாகவே மனசை ஒரு மயக்கத்தில் வைத்திருந்தது. அது வடுவூர் நகரமாகத்தான் இருந்திருக்க வேண்டும். அந்த வடுவூர் ஏரியைத் தாண்டி கண்ணில் பட்ட முதல் டீக் கடையைப் பார்க்க வண்டியை மூர்ச்சையாக்கிவிட்டு, ஆளுக்கொரு வடையும் அருமையான டீயுமென எங்களது நெஞ்சுக்குள்ளும் சிறிது ஈரத்தை வடித்துக் கொண்டு மீண்டும் கிளம்பினோம்.

எங்களது அடுத்த நிறுத்தம் வேதாராண்யம் பேருந்து நிலையமாக இருந்தது. அங்கே தினமணி நிருபர் ஒருவரை சந்தித்து அவரின் மூலமாக கோடியக்கரை சூப்பர் மேன் ஒருவரையும், அந்த ஏரியாவிற்கான வனத்துறை அலுவலர்கள் சிலரையும் அலைபேசியின் மூலமாக தொடர்பு படுத்திக்கொண்டு, நிருபரையும் எங்க கூடவே அழைத்துக் கொண்டு கோடியக்கரை நோக்கி சூரியனார் தன்னை சுருட்டி கவிழ்த்துக் கொள்வதற்கு முன்பாகவே இரவு கேம்பிற்கு தேவையான எதனையுமே அங்கு வாங்கிக் கொள்ளாமல் எல்லாம் கோடியக்கரையில் கிடைக்குமென்ற நம்பிக்கையில் கிளம்பிவிட்டோம்.

எங்களுடன் இருப்பதில் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸில் நிருபர் (என்னுடைய நண்ப - சொந்தக்காரர்), அதனால் வனத்துறை அலுவலர்களிடம் விசயத்தைக் கூறி அனுமதி பெறுவது ரொம்ப எளிதாகவும் பரஸ்பரமாகவும் இருந்தது. கேட்டதெல்லாமே கிடைத்தது. இரவு தங்கல் எங்களுக்கு சற்றே வனப்பக்கமாக அமையும்படி பார்த்துக் கொண்டோம். தான் சரியான படி மின்சார வசதியோ, தண்ணீர் வரத்தோ இருக்காது என்று கூறியும் அப்படியே இருப்பதுதான் நல்லது என்று கேட்டு அதிலேயே நின்ற பொழுது வனச்சரகருக்கே ஆச்சர்யம். அவர் அந்த இல்லங்களில் இன்சார்ஜில் இருக்கும் வாட்சர்களை கூப்பிட்டு கேட்கும் பொழுது இரண்டுமே எப்படியாவது தேர்த்தி கொடுத்து விடலாம் என்று கூறியதாக பின்பு எங்களிடம் தெரிவித்தார்.

அப்படியாக பேசிக்கொண்டு இருக்கும் பொழுது மாலைச் சூரியன் மேலும் மேற்கிற்குள் தன்னை திணித்துக் கொண்டிருந்தது. அவசர அவசரமாக அவரிடம் நாங்கள் பறவைகள் சரணாலயம் பக்கமாக செல்லவேண்டுமென கூறி விடை பெற்றுக் கொண்டு, விரட்டோ விரட்டென்று விரட்டிச் சென்று அங்கே என்னவெல்லாம் கண்டோம் என்பதனை எனது கோடியக்கரை பறவைகள் சரணாலயப் பதிவில் பல படங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மீண்டும் நன்கு இருட்டிய பிறகு எங்களுக்குத் தேவையான விசயங்களை, எதுவெல்லாம் தேவைப்படுமோ அவைகளை இருட்டிற்குள் தேடியலைந்தோம். மின்சாரம் புடுங்கிக் கொண்டு விட்டது, இங்கும் எங்கும் நடப்பதனைப் போன்றே! கோடியக்கரை ஒரு சிறு கிராமம். அதிகமாக மீனவ மக்கள் வசிக்கும் பகுதியாக இருப்பதாக அறிய முடிந்தது. அவர்களின்றி மற்ற சமூக மக்களும் சிறிய எண்ணிக்கையில் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். நல்ல கும்மிருட்டு. இருட்டினுள் வெளிச்சம் விற்கும் ஒரு பெட்டிக் கடையில் கிடைத்த அளவில் சில மெழுகு வர்த்திகளும், தீப்பெட்டிகளும் வாங்கிக் கொண்டு, கண்ணில் பட்ட ஒரு கையேந்தி பவனில் நிறைய புரோட்டாக்களும், சில வீச்சு புரோட்டா மற்றும் கொத்து புரோரோட்டவென ஊரில் உள்ள மற்றவர்களுக்கு மிச்சம் வைக்காத அளவில் எல்லாவற்றிற்கும் ஆர்டர் கொடுத்துவிட்டு, அந்த இருட்டில் நின்று கொண்டு நாங்களும் சில மாடுகளுமாக மேலே அண்ணார்ந்து பார்த்தால் கடையில் புகைந்து கொண்டிருந்த புகையினூடே வானத்தில் கொட்டிக் கிடக்கும் அத்துனை நடசத்திரங்களும் எங்கயோ நாங்கள் வேறு ஒரு உலகத்தில் இருப்பதனைப் போல உணர்வை வழங்கிக் கொண்டிருந்தது.

ஒரு சில விசயங்களின் கனமறிய அதற்கு தொடர்பில்லாத வகையில் தம்மை அந்நியப் படுத்தி வைத்திருந்தாலே முழுதுமாக சில விசயங்களில் விழிப்புணர்வு அடையமுடிகிறது போலும். அது சொந்தங்களின் அருகாமையின் அவசியம் உணர்வதாகட்டும் அல்லது விலகியே வாழ்வதாகட்டும், மேலும் மனதுக்கு நெருக்கமாக நாம் வாழ்ந்து பழக்கப்பட்ட ஊரின் சிறு சிறு விசயங்களின் ஆளுமை நம்முள் ஏற்படுத்திய தாக்கங்களை உணரக் கூட இது போன்ற அந்நியப்பட்டுப் போதல் அவசியமாக பயன்பட்டுப் போகிறதோ?

அதனையொட்டியே குறிப்பாக எனக்கு அண்மைய காலங்களில் கும்மிருட்டில் இது போன்ற நட்சத்திரம் நிரம்பிய வானத்தை அண்ணார்ந்து பார்ப்பதென்பது ஒரு ஆடம்பரமான விசயமாகவே அமைந்து போய் விட்டது. அதனால் கிடைத்த ஒவ்வொரு கணத்தையும் முழுதுமாக பருகினேன் என்றால் அது கண்டிப்பாக மிகையாக இருக்க முடியாது. ஒரு இரண்டு மணி நேரத்திற்கு முன்புதான் சில அற்புதமான காட்சிகளை பறவைகளுக்கென ஒதுக்கிய ஏரியாவில் பார்த்துவிட்டு வந்த எனக்கு இது மேலும் கிரக்கத்தை அதிக மூட்டியது.

யாரும் யாரையும் கண்டு கொள்ளும் நிலையிலில்லாத ஒரு குழு என்பதால், அது க்ரேசி தனங்களை ஒவ்வொருவரின் தனித்தன்மையிலும் வைத்து இயங்கக் கூடிய ஒரு இரவாக அமைந்துப்பட்டிருந்தது. எனது சார்பாக அந்த கும்மிருட்டில் புதிதாக வாங்கியிருந்த கேமரா ட்ரைபாட் வைத்து இரவு வானத்தை புகைப்படம் எடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன், வாட்சரின் பாம்புகளின் நடமாட்ட எச்சரிக்கையை கேட்ட ஒரே காதில் கொஞ்சமே வாங்கிக் கொண்டு. இரண்டு படங்கள் நன்றாக வந்திருந்ததாக நினைத்துக் கொண்டேன்.

மறுநாள் காலையில் "யானை, குதிரை எல்லாம் குளிக்குதா, பல்லு தேய்க்கிதா" என்ற கோட்பாட்டினை மற்ற இருவருக்கும் ஞாபகமூட்டி சீக்கிரமாக கிளம்ப வேண்டுமென கொண்டு வந்தவைகளை சுருட்டி வாகனத்தில் திணித்துக் கொண்டு ஆறு மணிக்குள்ளாகவே வெளிமான்கள் (blackbuck - Antelope cervicapra) வாழும் திறந்த புல்வெளி மற்றும் புதர்க்காடுகளைப் போன்றமைந்த (scrub jungle) காய்ந்த பசுமை மாறா மரங்களடங்கிய (dry evergreen) சரணாலயத்தினுள் வனத்துறை பாதுகாவலர் ஒருவருடன் ஊடுருவி விட்டோம்.

நுழைவாயில் பெரும் பொருட்செலவில் நாமெல்லாம் சினிமாக்களில் பார்த்துப் பழகிய ஜுராசிக் பார்க் தோட்டத்தில் நுழைவதனைப் போன்ற பிரமிப்பை ஊட்டியது. இருப்பினும் இது இயற்கை அமைவில் அமைந்த ஒரு காடு. அங்கு எந்த விதமான கட்டுப்பாடுகளுமில்லாமல் (free ranging) வாழும் வெளி மான், புள்ளி மான், ஜக்கால், காட்டுப் பன்றி, பரட்டைத் தலை குரங்கு, முயல், புனுகுப் பூனை, கீரிப் பிள்ளை மற்றும் பல பத்தாண்டுகளுக்குப் முன்பு இந்த வனத்தினுள் குடியேறிய வளர்ப்பு குதிரைகள் (கோவேரிக் கழுதைகள்?) இன்றும் அங்கேயே தங்கி குட்டி ஈன்று (Feral Pony) வாழும் விலங்குகளென கோடியக்கரை இருக்கிறது.

உள்ளே சென்ற சில நிமிடங்களுக்குள்ளாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாக குழு, குழுவாக கண்களுக்கு வெளிமான்கள் தட்டுப்பட ஆரம்பித்தது. அப்பொழுதுதான் வெளிக்கிளம்பி மேலே ஏற எத்தனித்துக் கொண்டிருக்கும் சூரியனார் தன்னுடைய மஞ்சள் வெயிலை வெளிமான்களின் மீது செலுத்தப் போக அது பெண் மற்றும் இள ஆண் மான்களின் பள பளப்பான தோல்களின் மீது பட்டுத் தெரித்து ஒரு மேஜிக்கல் எஃபெக்ட்டை கொடுத்தது. நன்றாக வளர்ந்த ஆண் வெளிமான்களை அவைகளின் மேல் பகுதியில் இருக்கும் அடர்வான கறு நிறத்தைக் கொண்டு அறிய முடிந்தது.


என்னுடைய கேமராவின் தொலை நோக்கு லென்ஸின் ரேஞ்ச் 480mm அளவிலேயே வித்தையைக் காட்ட திறனுடையது என்பதால், நானும் எப்படியெல்லாம் பல்டி அடித்தும், மான்கள் அவைகளின் இடத்திலிருந்து என்னை நூறு மீட்டர் தொலைவு ரேஞ்சிலேயே நுழையும்படியாக வைத்திருந்தது. இன்னும் அங்கு நேரம் செலவழிக்கும் பொறுமையும், தக்க உபகரணங்களுடனும் ஆயத்தமாக சென்றிருந்தால் பல நல்ல புகைப்படங்களை சுட்டுத் தள்ளியிருக்க முடியும்.

அன்று என் கண்களுக்கு அகப்பட்டது இந்த வெளி மான்களும், ஒரு காட்டுப் பன்றியும், முயல் மற்றும் கீரிப் பிள்ளை. அந்தப் பகுதியின் கடற்கரை ஓரமாக சென்று பார்த்த பொழுது சுனாமி பற்றிய பேச்சு எழும்பியது. ஒரு கலங்கரை விளக்கம் அலேக்காக தூக்கியெறியப் பட்டு சுத்தமாக தரையிலிருந்து ஒரு இரண்டு மீட்டர்கள் அளவே விட்டு விட்டு மீதப் பகுதி ஐம்பது மீட்டர்கள் தொலைவிற்கு அப்பால் கிடந்ததனைப் காண முடிந்தது. அந்த நேரத்தில் கடல் தண்ணீர் சரணாலயத்தினுள் ஏறினாலும் ஒரு விலங்குகளும் மாண்டதாக தெரியவில்லையாம். அனைத்தும் மிகவும் பாதுகாப்பான தொலைவு சென்று விட்டதாக கூறக் கேட்டேம். ஏற்கெனவே செய்தித் தாள்களின் மூலமாகவும் அறிந்து கொண்ட செய்திதான். இருப்பினும் மீண்டும் கேட்கும் பொழுதும், அந்த சம்பந்தப் பட்ட இடத்தில் நின்று கொண்டு பார்க்கும் பொழுது மிகவும் பிரமிப்பாகவும், அச்ச மூட்டக் கூடியதாகவும் இருந்தது. எந்த கடவுள் அல்லது பின்னாடி நடப்பதனை முன்பே அறிவிக்கும் சக்தி கொண்ட சூப்பர் சாமியார்கள் அந்த ஜீவராசிகளின் காதுகளில் ஓதியிருப்பார்கள் என்ற எண்ணமும் எழுந்து வீழ்ந்தது.

கடற்கரை ஓரத்தில் அமைத்திருந்த வாட்ச் டவரின் மீது ஏறி பறவைப் பார்வையில் ஒட்டு மொத்த சரணாலயத்தையும் பார்த்து விட்டு இந்த விடியோவையும் தத்தக்கா பித்தக்கா என்று சுட்டுக் கொண்டு கீழே இறங்கி ஆகாயத் தாமரையின் மலர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டே வந்த பொழுது ஒரு வித்தியாசமான டப்பா ஒன்றை கண்டேன்.

ஆரஞ்சு நிறத்தில் ஒரு அமுல் பால்பவுடர் டப்பா கணக்கில் அது இருந்தது. நூல் அதன் மூடியிலிருந்தபடி தொங்கிய அதன் வித்தியாசமான அமைப்பில் ஏடாகூடமான விசயம் ஈழ மண்ணிலிருந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என்று உடனே பொறி தட்டியது. மனத்தினுள் அச்சம் கலந்த பல சிந்தனைகள் அதனையொட்டி சுனாமியாக நிரம்பி வழிந்தது. இருப்பினும், அதனையும் விடாமல் டப்பாவை இருபக்கமுமாக திருப்பி வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். பின்பொரு சமயம் கண்டிப்பாக ஈழ மக்களின் உலகம் எப்படி நம்மிலிருந்து 30 கிலோமீட்டர்களே புவி இருப்பில் தள்ளிச் செல்ல நேர்ந்திருந்தாலும் அவர்களின் உலகம் நம் உலகைக் காட்டிலும் ரொம்பவே நகர்ந்து தூரமாக பரிணமித்து விட்டதாக, அந்த ஒத்தை டப்பாவின் மீது எழுதியிருந்த வாசங்களை படிக்கும் பொழுது எனக்குள் எழுந்த எண்ணங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். அதுவே பொருத்தமாகப் படுகிறது.

மீண்டும் கோடியக்கரைக்கே வருவோம். வெளிமான்களுக்கு போட்டியாளர்களாக காணக் கிடைத்தது அந்த கிராமங்களில் கட்டுப்பாடுன்றி அவிழ்த்து விடப்படும் கால்நடைகள்தாம். வெளிமான்களுக்கு தேவைப்படும் அத்துனை உணவையும் மேய்ந்து தள்ளி அவைகளை பட்டினிப் போர் நடத்த விடுமளவிற்கு அதிக எண்ணிக்கையில் உள்ளே நடந்து திரிவதாகப் பட்டது. மற்றுமொரு ஆபத்து வெளிமான்களுக்கு உண்டு அவை தெரு நாய்கள், மான்களின் சிறு குட்டிகளை விரட்டிச் சென்று கடித்து வைப்பது அதன் மூலமான மரணம் என்றும், பல்கிப் பெருகி வரும் கருவேல மரங்களும் இந்த மான்களுக்கே உரித்தான வெட்ட வெளிக்கு இட நெருக்கடியை தருவித்துத் தருவதாக கூடவே வந்திருந்த வனத்துறை அலுவலர் கூறினார்.

வெளிமான்களின் வெளியை தரிசித்து முடித்து விட்டு மீண்டும் அடுத்த கோடியில் அமைந்திருந்த பறவைகள் சரணாலயம் பக்கமாக சென்றதை பற்றி அடுத்தப் பதிவில்... வரும் வழியெங்கும் ஜெர்கின், நீண்ட தலை முடி, தாடி என்று வைத்திருந்த பல மனிதர்கள் தனிமையில் நின்று பரந்து விரிந்து கிடந்த வானத்தின் அடிவாரத்தையோ அல்லது பறவைகளை காண்பதனைப் போன்றோ நிற்பதனைக் பார்த்துவிட்டு அவர்கள் ஆராய்ச்சியாளர்களாக இருக்கக் கூடுமென்று வினவினால், அவர்கள் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வேண்டுமென்றே வேதாரண்யம் பக்கமாக தன் சொந்தக் குடும்ப உறுப்பினர்களால் கொண்டு வந்து தொலைக்கப்பட்ட புத்தி சுவாதீனம் இல்லாதவர்களாம். என்னால் நம்பவே முடியவில்லை, அவர்களின் ஆராவாரமற்ற செய்கைகளை கவனிக்கும் பொழுது, நம்மை எல்லாம் ஏமாற்றி விட்டு நம்மைக் காட்டிலும் தனிமையையும், இயற்கையின் ஏகாந்தத்தையும் அனுபவிக்கிறார்களோ என்று எண்ண வைத்து பொறாமை கொள்ள வைத்தது.

14 comments:

Thekkikattan|தெகா said...

பி.கு: நண்பர்களே பதிவு கொஞ்சம் நீளமாத்தான் போயிருச்சு... புதுசா ஏதாவது சொல்லுன்னு சொல்லுறீங்களா :-).

சரி, மேலாதிக தகவல்களுக்கு இதச் சொடுக்கிப் பாருங்க...

ஜெட்லி... said...

பயண கட்டுரை நன்று

முத்துலெட்சுமி/muthuletchumi said...

துளசிக்கு போட்டியா ’அப்பறம் கதைகள் 1001’ போடுவீங்க போலயே... எல்லாம் அப்பறம் சொல்றேன் அப்பறம் சொல்றேன்னு , .. :)

அப்நார்மல் எல்லாம் நார்மலா தெரிஞ்சுருக்காங்க.. அவங்கள பாத்து பொறாமை வேற.. :)

தருமி said...

கட்டுரையின் தமிழ் நடை, செய்திகள், படங்கள் எல்லாமே நன்கிருக்கிறது.
இயற்கை என்றால் அய்யாவுக்குத் தமிழும் தாவி வருகிறதே.........

Thekkikattan|தெகா said...

//ஜெட்லி said...

பயண கட்டுரை நன்று...//

you are welcome, jetlee :)

Thekkikattan|தெகா said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

துளசிக்கு போட்டியா ’அப்பறம் கதைகள் 1001’ போடுவீங்க போலயே... எல்லாம் அப்பறம் சொல்றேன் அப்பறம் சொல்றேன்னு , .. :)//

ஓ! இப்படி வேற இருக்கா... வேற என்ன செய்றது அவ்வளவு உள்வாங்கப்பட்டு இருக்கே. அன்லோட் பண்ணியாகணுமே :)

//அப்நார்மல் எல்லாம் நார்மலா தெரிஞ்சுருக்காங்க.. அவங்கள பாத்து பொறாமை வேற.. //

என்னய அப்படியாவது தொலைப்பாங்களாங்கிற ஒரு நப்பாசைதான் :))

மீன்துள்ளியான் said...

படங்களும் விவரித்த அழகும் அருமை .

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

Thekkikattan|தெகா said...

தருமி said...

கட்டுரையின் தமிழ் நடை, செய்திகள், படங்கள் எல்லாமே நன்கிருக்கிறது.
இயற்கை என்றால் அய்யாவுக்குத் தமிழும் தாவி வருகிறதே......//

எல்லாம் பெரியவங்க நீங்க கொடுக்கும் தகிரியம்தான், தருமி.

உண்மையாவே ரசிச்சீங்களா... அப்போ அடுத்து அடுத்து சமைச்சிர வேண்டியதுதான் :).

கோமதி அரசு said...

//எந்த கடவுள் அல்லது பின்னடி நடப்பதனை அறிவிக்கும் சக்தி கொண்ட சூப்பர் சாமியார்கள் அந்த ஜீவராசிகளின் காதுகளில் ஓதியிருப்பார்கள் எனற எண்ணமும் எழுந்து வீழ்ந்தது.//

எந்த கடவுள் சந்தேகமென்ன?
இயற்கை என்ற கடவுள் தான்.

பயண கட்டுரை படிக்கும் போது நேரே
பார்ப்பது போல் இருந்தது.

Thekkikattan|தெகா said...

//மீன்துள்ளியான் said...

படங்களும் விவரித்த அழகும் அருமை//

நன்றி மீன் ... இன்னும் நிறைய வருது :D

tamiluthayam said...

தன் சொந்தக் குடும்ப உறுப்பினர்களால் கொண்டு வந்து தொலைக்கப்பட்ட புத்தி சுவாதீனம் இல்லாதவர்களாம். என்னால் நம்பவே முடியவில்லை, அவர்களின் ஆராவாரமற்ற செய்கைகளை கவனிக்கும் பொழுது, நம்மை எல்லாம் ஏமாற்றி விட்டு நம்மைக் காட்டிலும் தனிமையையும், இயற்கையின் ஏகாந்தத்தையும் அனுபவிக்கிறார்களோ என்று எண்ண வைத்து பொறாமை கொள்ள வைத்தது.\\\\மிகச் சிறந்த பதிவு.

Thekkikattan|தெகா said...

வாங்கம்மா,

//எந்த கடவுள் சந்தேகமென்ன?
இயற்கை என்ற கடவுள் தான்.//

அதேய்ன் நானும் நினைச்சேன் :)

//பயண கட்டுரை படிக்கும் போது நேரே
பார்ப்பது போல் இருந்தது//

பாராட்டுதலுக்கு நன்றி, மீண்டும் மீண்டும் வருக!

வவ்வால் said...

தெ.கா,

உங்க சரணாலாயம் தொகுப்பை முழுசா படிச்சேன் ஏக் தம்ல! பின்னி பெடெல் எடுத்துட்டிங்க! ம்ம் நான் நீள் உறக்கத்தில் இருந்தப்போ இதெல்லாம் நடந்திருக்கு! வவ்வால் கண்ணை மூடிக்கிட்டா லோகமே கண்ணை மூடிக்குமா என்ன?

ஏற்கனவே உங்க இயற்கையை நேசிப்பதிவுல கூட என்னோட கோடியக்கரை அனுபவம் சொல்லி இருப்பேன், அப்போ போலவே இப்பவும் இருக்கு போல.. நாங்க கூட பனங்காட்டுல இருக்க பூத் பங்களாவில தான் தங்கி இருந்தோம்,இயற்கை உபாதை எல்லாம் வெட்ட வெளில தான்.

அங்கே ஒண்ணுமே கிடைக்காது , பூநாரை இல்லம் பக்கத்தில கொட்டகைல இருக்க ஹோட்டல்ல எல்லாம் நாங்க தான் காலி பண்ணுவோம்.டீ லாம் புகை வாசத்தோட வித்தியாசமா இருக்கும்(நான் நிறைய பன் சாப்பிட்டேன் அப்போ)

நீங்க சொல்ற லைட் ஹவுஸ் பழைய பயன்பாடு இல்லாத ஒன்றா இருக்கும் புதுசு நடுவில இருக்கும், அங்கே இருந்து கடல் ரொம்ப தூரம் எனவே அது சுனாமில போய் இருக்காது.அங்கே வாட்டர் ஹார்வெஸ்டிங் முறைல தான் வருடம் முழுக்க குடி தண்ணீர் சேமித்து வைத்திருப்பாங்க அன்டெர் கிரவுண்ட்ல.லைட்ஹவுஸ் மேல ஏறி பார்த்திங்களா?

வலசைப்போதல் பறவைகள் சீசன்ல நிறைய வரும் இப்போ அட்ரெஸ் மறந்து போய் வரலையோ?நான் போனப்போலாம் பிளமிங்கோ, கூட்டமா இருக்கும்.

உள்ளூர் வாசிகள் மான், பிளமிங்கோ எல்லாம் சட்டவிரோதமா வேட்டை வேற ஆடுவாங்க அதுவும் பெரிய பிரச்சினை அங்கே.சல்மான் வேட்டையாடியது பிளாக்பக் தான்.

முத்துப்பேட்டை, வடுவூர் எல்லாம் கழுகுப்பார்வைப்பார்த்ததோட சரி, நீங்க படமெல்லாம் எடுத்து அசத்திட்டிங்க, கொசுவர்த்தி சுத்துது எனக்கு! :-))

Santhini said...

///அவர்களின் ஆராவாரமற்ற செய்கைகளை கவனிக்கும் பொழுது, நம்மை எல்லாம் ஏமாற்றி விட்டு நம்மைக் காட்டிலும் தனிமையையும், இயற்கையின் ஏகாந்தத்தையும் அனுபவிக்கிறார்களோ என்று எண்ண வைத்து பொறாமை கொள்ள வைத்தது.///// I always feel that.

Related Posts with Thumbnails