Thursday, September 25, 2008

ஹெய்டி - ஒர் மனித இயற்கைத் துயரம்: Haiti's Man Made Disaster!!

ஹெய்டி (Haiti) என்றொரு கரீப்பியன் தீவு நாட்டைப் பற்றி எனக்கு படிக்க, கேக்க நேரும் பொழுதெல்லாம் மனித குலம் தன்னுடைய இயற்கைசார்ந்த ப்ரக்ஞையுணர்வை மேலும் ஊட்டிக் கொள்ளவும் விழிப்புணர்வு பெறவும் ஒரு இன்றியமையா இடமாக வாழும் நரகமாக எப்படி அந்த தீவு நாடு தன்னை வழி நடத்தி இன்று அத் தீவில் வாழவே அருகதையற்றதாக மாற்றிக் கொண்டது என்று ஏனைய நாடுகள் பார்த்து தெரிந்து கொள்ள ஒரு ஆய்வுக் கூடமாக திகழ்கிறதுங்கிற மாதிரி எண்ணத் தோன்றும்.

இத் தீவின் ஆதீயைத் தோண்டிப் பார்த்தால் இது ஒரு சொர்க்கப் பூமியாகத்தான் மலையும், மலையுஞ்சார்ந்த இடமாக மழைக் காடுகளுடன் கட்சியளித்ததாக தெரியவருகிறது. அதாவது 16வது நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையிலும். அதற்கு பிறகுதான் கப்பல் கட்ட தெரிந்து கொண்ட துரைமார்கள் ஊரோடியாக இருந்துப் போய் துரதிருஷ்ட வசமாக இந்தத் தீவினிலும் கால் பதித்திருக்கிறார்கள். முதற் காலனி ஃப்ரெஞ்ச்சும், ஸ்பானிஷும் இங்கே கோலோச்சியிருக்கிறார்கள்.

துரைமார்கள் என்றாலே இயற்கை படைக்கப்பட்டதே மனிதன் நுகர்ந்து அழிப்பதற்குத்தான் என்ற மன நிலை தீர்க்கமாக அவர்களின் புத்தகத்தின் மூலமாகவே அடி மனதில் தூவப்பட்டுவிட்டது. இந் நிலையில் 16ம் நூற்றாண்டு வாக்கில் கிட்டத்தட்ட 6000 வேறுபட்ட மர இனங்களும்(இதில் அவ்வூருக்கேயான இனங்கள் 35% இருந்திருக்கிறது - i.e., Endemic species), 220 பறவை இனங்களும்(அவைகளில் 21 பறவை இனம் அங்கு மட்டுமே காணப்படுபவை), கிட்டத்தட்ட நம்மூர் மேற்கு மலைத் தொடரில் காணப்படும் பறவை இனங்களின் கூட்டுத் தொகைக்கு நிகர், அப்படியெனில் அத் தீவின் உயிரின பன்முகத் தன்மை (Bio-diversity) எந்தளவிற்கு செழித்து இருந்திருக்க வேண்டுமென பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆனால், ஃப்ரெஞ்ச் மக்கள் அத் தீவை உறித்து எடுத்தது போக, 1915லிருந்து 1934 வரையிலும் அமெரிக்க ஆக்கிரமிப்பின் பொழுது அலும்னியத்திற்கான தாதுப் பொருள் கிடைக்கிறதென நாட்டையே புரட்டிப் போட்டு தோண்டியிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல், ரப்பர் மரங்களை அங்குள்ள இயற்கை மழைக்காடுகளை அழித்து ஒரு தனியார் நிறுவனம் தனது இஷ்டத்திற்கு அவ் மரக் கன்றுகளை நட்டு விளையாண்டிருக்கிறது. எனது நண்பர் ஒருவர் அவரின் அனுபவத்தை இது தொடர்பாக பகிர்ந்து கொள்ளும் பொழுது எப்படி சிறு நாடுகளை தன் சொந்த லாபத்திற்காக வளர்ந்த நாடுகள் கண்மூடித்தனமாக பயன்படுத்திக் கொண்டு விட்டெறிந்து விட்டு வந்துவிடுகிறது பின்னாளில் என்பது விளங்கியது.

இன்று அந்த நாட்டிலிருந்து சாகுபடியாகிக் கொண்டிருந்த கரும்பையும், வாழை, மா போன்றவைகளின் இறக்குமதியைக் கூட சில அரசியல் காரணங்களால் அமெரிக்கா நிறுத்தப் போக விளைவு மக்கள் உள்ளதைக் கொண்டு வாழும் நிலை உள் நாட்டில். விளைவு எது அவர்களின் அழியா சொத்தாக, உயிர் காக்கும் தோழனாக இருக்க வேண்டியிருந்த வனங்களும், பலன் தரும் பழ மரங்களும் கூட தனது அகோர பசிக்கு ஒன்றன் பின் ஒன்றாக வெட்டி வீழ்த்தப் போக எஞ்சி நின்றது வெறும் மலை அதுவும் மணல் குன்றுகளாகத்தான் போல.

அதனையொட்டி ஓவ்வொரு முறையும் ட்ராபிகல் சூறாவளிகள் அந் நாட்டை கடக்கும் பொழுதும் மலைகள் மரங்களற்ற நிலையில் கரைந்து வெறும் சேற்று ஆறாக வெள்ளம் ஊர்க்காடுகளில் பெருக்கெடுத்து நடக்கவோ அல்லது வீடுகளில் கூட வாழவோ முடியாத நிலை. அண்மைய குஸ்டவ் மற்றும் ஐக் என்று பெயரிடப் பட்ட சூறாவளிகள் அடுத்தடுத்து தாக்கும் பொழுது அதிகளவில் உயிரிழப்பை சந்தித்தது ஹெய்டி மட்டுமே.

இந் நிலையில் அந் நாட்டில் சரியான அரசியலமைப்பும் சீர் கெட்டுப் போன நிலையில், வறுமையும், வன்முறையும் ஒரு சேர கூட்டுச் சேர்ந்து அந் நாடே ஒரு அழிவின் விளிம்பில்.



(மேலே உள்ள படத்தில் கவனித்துப் பார்த்தீர்களேயானல் சேற்று ஆறிலிருந்து தப்பிக்க மக்கள் அகப்பட்ட கூரைகளில் தஞ்சம் புகுந்திருப்பதனை காணலாம்)

இதனிலிருந்து உலகிற்கு கிடைக்கும் பாடம் என்னவெனில், அரசியல் வாதிகளின் சுரண்டல் புத்தியும், சுயநலமும், தீர்க்க மற்ற பார்வை இயற்கை சார்ந்தும் தனது நாடு சார்ந்தும் இல்லாமல் போனால், அதனால் ஏற்படும் பின் விளைவுகள்தான் இன்று கண்ணுரும் இந்த மனித அவலம். வளரும் அத்துனை நாடுகளும் பிற வளர்ந்த நாடுகளுடன் போட்டுக் கொள்ளும் ஒவ்வொரு கண்மூடித்தனமான ஒப்பந்தங்களுக்குப் பின்னாலும் எது போன்ற இயற்கை சுரண்டல்கள் நடைபெறும் என்பதனை நீண்ட கால யுத்தியாக யோசித்து நகர்வடைவது நலம் பயக்கும் என்று அறிந்து கொள்வதே.

இருந்தாலும் அந்த பாடத்தை பிற நாடுகள் கண் கூடாக அறிந்து கொள்ள ஹெய்டி மக்கள் கொடுத்த விலை அளவிடற்கரியது.


20 comments:

Thekkikattan|தெகா said...

புகைப்படங்கள் நியு யார்க் டைம்ஸ். நன்றி!

RATHNESH said...

இப்படி எச்சரிக்கைகளில் இருந்தெல்லாம் யார் பாடம் கற்க முயற்சிக்கிறார்கள்?

தங்கள் உணர்வு வெளிப்பாடு பாராட்டுக்குரியது.

இந்தச் செய்திக்கான புகைப்படங்கள் உதவி "நியூயார்க்" டைம்ஸ் என்கிற அழகிய முரணையும் ரசித்தேன்.

Anonymous said...

அதிர்ச்சியான விசயம்தான் :(

Anonymous said...

ஆதிக்க வெறியர்கள் ஒட்டுண்ணியாய் அந்த தேவை உறிஞ்சி இருக்கிறார்கள். என்ன கொடுமை இது. இதை எல்லாம் தட்டி கேட்க அங்கே ஒரு நல்ல தலைவன் இல்லையா?

துளசி கோபால் said...

இதே கதிதானே இப்ப நா(வ்)ரு தீவுக்கும் ஏற்பட்டு இருக்கு.

அங்கே பாக்சைட்(?) தோண்டித் தோண்டி இப்ப ஒரு புல்கூட இல்லாத தீவா ஆகிக்கிடக்கு.

நாட்டோட நிதி நிலமை பூஜ்ஜியம்.

கஷ்டப்படும் ஜனங்களுக்கு நாமம் ஒரேதாப் போட்டாச்சு(-:

Thekkikattan|தெகா said...

வாங்க ரத்னேஷ்,

//இப்படி எச்சரிக்கைகளில் இருந்தெல்லாம் யார் பாடம் கற்க முயற்சிக்கிறார்கள்?//

பெரும்பாலான ஆராய்ச்சிகளில் "மாதிரி" செய்முறைகளை கையாண்டே எது போன்ற விளைவுகளை படிக்கப்படும் விசயம் வெளிக்கொணர்கிறது என்பது அவதானிக்கப் படுகிறது -- ஆய்வுக்கூடங்களில்.

இந்த ஹெய்டி ஆய்வுக் கூடம் சற்றே பெரிய அளவில் மக்களைக் கொண்டு, சீர்கேடான அரசியலமைப்பையும், லஞ்ச லாவன்யங்களில் செழித்துக் கொழுத்த அரசு எந்திரங்களும் ப்ரக்ஞையற்று இயங்கினால் என்ன நடக்கும் என்பது எல்லா நாடுகளுக்கும் அதுவே முடிவாக அமையுமென்பதற்கு இந்த சிறு தீவைக் கொண்டு பெரும் நாடுகள், அதே வழியில் நடக்கும் பொழுது பார்த்து உணர்வதற்கு நிறையவே உள்ளதுதானே.

தவிர்த்தால் நீண்ட நடைக்குப் பிறகு சந்திக்கவிருக்கும் புள்ளி - ஹெய்டி.

//இந்தச் செய்திக்கான புகைப்படங்கள் உதவி "நியூயார்க்" டைம்ஸ் என்கிற அழகிய முரணையும் ரசித்தேன்.//

அதாவது பிள்ளையையும் கிள்ளிவிட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுறது :)).

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அந்த சேற்று ஆறுப்பார்க்கவே திகிலா இருக்கு.. :(

Thekkikattan|தெகா said...

கிங்,

//அதிர்ச்சியான விசயம்தான் :(//

பார்க்கவே கொலை நடுங்கும் நிகழ்வுகள் அங்கிருந்து வெளிவந்த வண்ணம் உள்ளது, கிங். அந்தவூர்க்காரர் ஒருவர் அங்கே செல்லவே பயப்பிடுகிறார், என்றால் எந்தளவிற்கு நிலவரமிருக்குமென்று அறிக! :‍((.

Thekkikattan|தெகா said...

//ஆதிக்க வெறியர்கள் ஒட்டுண்ணியாய் அந்த தேவை உறிஞ்சி இருக்கிறார்கள். என்ன கொடுமை இது. இதை எல்லாம் தட்டி கேட்க அங்கே ஒரு நல்ல தலைவன் இல்லையா?
//

இதையெல்லாம் கேப்பவர்களும் , பிடுங்குபவர்களும் அவர்களே! இது போன்ற சக்தி வாய்ந்த நாடுகள் அண்டைய நாடுகளாய் இருக்க நேரிடின் அங்கிருக்கும் தலைவர்களுக்கு இரு வாய்ப்புகள் வழங்கப்படலாம், எங்களுடன் ஒத்துழைத்துப் போ, இல்லையேல் உன்னை எங்கு அனுப்ப வேண்டுமோ அங்கே அனுப்பிடுவோம்... எது வசதி, நீயே முடிவு பண்ணிக்கோ - அணுகுமுறையில், அத் தலைவனுக்கு தன் உயிரை விட என்ன உசத்தியாக இருக்க முடியும்...?

மங்கை said...

ஊட்டி, குன்னூர் வழி இப்படித்தானே ஆயிட்டு இருக்கு...முந்தி எல்லாம் ட்ரெக்கிங்க போறப்போ இருந்த காடுகள், இப்ப ஒன்னுமே இல்லாம வெறும் மனல் பரப்பு தான் இருக்கு... முக்கூர்த்தி பக்கமும் அப்படித்தான்...

ம்ம்ம்ம்...எல்லாம் தெரிந்தும் இப்படி இருக்கோம்...

Thekkikattan|தெகா said...

வாங்க துள்சிங்க,

//இதே கதிதானே இப்ப நா(வ்)ரு தீவுக்கும் ஏற்பட்டு இருக்கு.

அங்கே பாக்சைட்(?) தோண்டித் தோண்டி இப்ப ஒரு புல்கூட இல்லாத தீவா ஆகிக்கிடக்கு.

நாட்டோட நிதி நிலமை பூஜ்ஜியம்.

கஷ்டப்படும் ஜனங்களுக்கு நாமம் ஒரேதாப் போட்டாச்சு(-://

அதெப்படி ஒரு ஐலண்டை வைச்சு இயற்கை சீரழிவிற்கு மட்டும் மண்டையை குடைஞ்சு, குடைஞ்சு ஆராய்ச்சியெல்லாம் பண்ணி எல்லாத்திற்கும் காரணம் மனிதர்களின் குறுக்கீடுதான்னு பத்து பேரு இருக்கிற அறையில உட்கார்ந்து ஒரு அறிவியல் அறிக்கையைப் படிச்சிட்டு பேர் வாங்கிட்டு வெளியில வந்திடுறோம். ஆனா, நீண்ட கால தீர்வா இது போல மேலும் நடக்காம இருக்க ஏதும் அடிச்சு சொல்ல முடியலயே அப்ப என்னாங்க நடக்குது, நம்மைச் சுற்றி.

அது போன்ற தீவுகளை எல்லாம் கண் கூடாக பார்த்தால் ரத்தக் கண்ணீர் வந்துடும் போலவே... :-((.

தருமி said...

ஒரே ஒருசொல்...EXPLOITATION.வன் கொடுமை.வேறென்ன சொல்ல ...

Thekkikattan|தெகா said...

வாங்க முத்து,

//அந்த சேற்று ஆறுப்பார்க்கவே திகிலா இருக்கு.. :(//

பார்க்கவே அரண்டு போனா அங்கே வாழ நேர்ந்தா எப்படி இருக்கும்...

rapp said...

:(:(:(

சுரேகா.. said...

ஆஹா..
அற்புதமான பார்வை!

ஆம்..வந்தேறிகள் எங்கெல்லாம்
கோலோச்சுகிறார்களோ
அங்கெல்லாம் இதுதான் நிலைமை!
:(

சுரேகா.. said...

வலைப்பூவின் அமைப்பு சூப்பர்!

அதைவிட உங்களை
அடையாளப்படுத்தும்
அந்த போட்டோ.....

ஜூப்பரு!

அந்த வகை விலங்கைப்பற்றி
ஒரு பதிவு போடுங்களேன்!


:)

Thekkikattan|தெகா said...

//ஊட்டி, குன்னூர் வழி இப்படித்தானே ஆயிட்டு இருக்கு...முந்தி எல்லாம் ட்ரெக்கிங்க போறப்போ இருந்த காடுகள், இப்ப ஒன்னுமே இல்லாம வெறும் மனல் பரப்பு தான் இருக்கு... முக்கூர்த்தி பக்கமும் அப்படித்தான்...

ம்ம்ம்ம்...எல்லாம் தெரிந்தும் இப்படி இருக்கோம்...//

இதத்தான் எதிர் பார்த்தேன் இந்த ஹெய்டி பிரச்சினையை நம்மூருக்கும் எப்படி வைச்சிப் பார்க்கலாமின்னு, யாராவது எடுத்துட்டு வருவாங்களான்னு.

மிகச் சரியா நீங்க பண்ணியிருக்கீங்க, மங்கை. ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து நின்னு பார்த்தீங்கன்னாவே கண்ணுக்கு எட்டிய மலைகள் எல்லாம் செவ் மண் முகடா இருப்பதைப் பார்க்க முடியுமே. அடிக்கடி அந்தூர்ப் பக்கமா மழை பெய்யும் பொழுது நிலச் சரிவு, நிலச் சரிவுன்னு செய்தி பார்க்கிறதெல்லாம் இதனையொட்டியே நடைபெறும் நிகழ்வுகள்தான்.

அது போலவே சாலையோர மரங்களை கண்களை மூடிக் கொண்டு வெட்டித் தள்ளுவது, அதற்கு ஈடாக எங்கேனும் மரக் கன்றுகள் நடப்படுகிறதா தெரியவில்லை. இப்படியே போய்க் கொண்டிருந்தால் கருவேல மரங்களை தவிர்த்து எதுவுமே பச்சையாக நிற்கும் மரங்களை பார்க்க முடியுமா என்ற ஒரு நிலை வரலாம்.

வருமுன் காப்பாதுதானே நல்லது.

Thekkikattan|தெகா said...

ஒரே ஒருசொல்...EXPLOITATION.வன் கொடுமை.வேறென்ன சொல்ல...//

"Exploitation" நாம் படிக்கும் ஒவ்வொரு இயற்கை சார்ந்து செய்யப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும், புத்தகங்களிலும் தவறாமல் காணப்படும் வார்த்தை. ஐந்து வருட உழைப்பிற்கு பிறகு கண்டெடுக்கப்படும் ரொம்ப காஸ்ட்லியானதொரு வார்த்தை :-(.

ஆனால், படிப்பினைகள் முறைப்படுத்தப்பட்டு அவைகள் பிரயோகப் படுத்தப்படுகிறதா என்றால், அடுத்த ஐந்து வருட ஆராய்ச்சிக்கென பணம் தேர்த்துவதிலேயே தகிடுதத்தம் போட்டு முடங்கிவிடும் ஆராய்ச்சியாளர்கள் எங்கே field oriented implementation of their findings செய்வது. ஹெய்டி ரொம்ப முக்கியமான இடம் எந்த ஆராய்ச்சியும் நடத்தாமல் எங்கே போனது அத்தனை வகை பறவை, விலங்குகள், மரங்கள் என அறிந்து கொள்ள...

உங்க ஒரு வார்த்தைக்கு எவ்வளவு பெரிய பதில் கொடுக்க வேண்டியதாப் போச்சு... :) ரொம்ப பவர்ஃபுல்லான வார்த்தை ...

Thekkikattan|தெகா said...

rapp said...
:(:(:( //

முதல் முறையோ, வரும் பொழுதே சோகமா வர வைச்சிட்டேனே... :-(( <=== நானும் போட்டுட்டேன் :).

சுரேகா!

ஊரோடியா இருந்தா இப்படித்தான் அந்த ஊரோட எந்த மாண்பும் தெரியாது, ஜஸ்ட் கண்ணை மூடிட்டு நினைக்கிறதெல்லாம் செஞ்சிடலாம், ஏன்னா அடுத்த எடத்துக்கு போயிடலாமிங்கிற நம்பிக்கை, அது 16வது நூற்றாண்டுக்கு முன்பு வரை வேணா சாத்தியாமாயிருக்கலாம் இப்போ வேற வழியே இல்லை, ஆங்காங்கே கிடந்து அனுபவிச்சு போய்ச் சேர்ந்திட வேண்டியதுதான்.

Arizona penn said...

உங்க பதிவு மிகவும் யோசிக்க வைக்க கூடியதாக இருந்தது...இன்றைய கால கட்டத்தில், அரசாங்கங்கள் பெரிய ஆராய்ச்சி எல்லாம் செஞ்சி பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பு, பனிக்கட்டிகள் வேகமாக உருகுது, இயற்கை சீரழிவு அப்படி இப்படின்னு ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டுகிட்டே சைடுலே எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு இயற்கையை சீரழிக்கவும் செய்யிறாங்க...சாமானிய மக்கள் தான் மனசு வெச்சு விழிப்புணர்வோட இருக்கணும்!!!!!!
நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க...என்னோட அமெரிக்க நண்பர் ஒருத்தர் " பூமியின் வெப்ப நிலை உயர்தல், இயற்கை சீரழிவு எல்லாமே பொய்...அப்படியெல்லாம் ஒண்ணுமே இல்லை, எல்லாம் விஞ்ஞானிகள் சொல்ற பொய்" அப்படின்னு உறுதியா நம்பறார்...இதுக்கு என்ன சொல்றீங்க????

Related Posts with Thumbnails