Sunday, September 28, 2008

உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs!

ம்ம்... சரியாக 2001ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், நானும் மாநிலம் மாறி என்னுடைய ஓட்டுநர் உரிமத்தை மாற்றி புதிய மாநிலத்தில் இணைத்துக் கொள்ளும் அவசியத்தில் இருந்தேன். அப்படியாக நானும் அந்த அலுவலகத்தில் என்னுடைய பழைய ஓட்டுநர் உரிம அட்டையை ஒப்படைத்து விட்டு, புதிய மாநில அட்டையை வாங்கும் பொழுதும், புகைப்படம் எடுத்துக் கொண்டு, இதர கேள்விகளுக்கு பதிலுரைத்துக் கொண்டு வரும் பட்சத்தில், ஓரிடத்தில் நிறுத்தி பொறுமையாக "டு யூ வாண்ட் ட்டு பி ஆன் ஆர்கன் டொனர்" என்று கேட்டார்.

அப்படியே ஒரு நிமிடம் ஆடிப் போய் யாரோ பொடீர் என்று செவுட்டில் அடித்ததினைப் போன்று உறைந்து போனேன். அவரிடம் ஒரு நிமிடம் என்று கேட்டுக் கொண்டு, என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு" என்னடா இது இதுபோன்ற ஒரு கேள்வியை என் வாழ் நாளில் நான் கேட்டுக் கொண்டதே இல்லையே இப்படியான சாவுடன் தொடர்படுத்தக் கூடிய கேள்வியை இவ்வளவு சாதாரணமாக கேட்டு சிந்திக்க வைத்திவிட்டாரே என்று ஆட வைத்தது.

இருந்தாலும் மறுபக்கம் வாய் கிழிய எல்லாம் பேசும் நமக்கு சாவு என்றவுடன் சும்ம அதிர்ந்து போகுதே ஏன், இறந்த பிறகு தம்மிடம் பிரயோசனமாக பிறருக்கு உதவும் வாக்கில் உள்ள சில உறுப்புகளை எடுத்துக் கொள்ளட்டுமா என்று கேட்டவுடன் ஏன் உள்ளங்கால் முதல் உச்சந்தலை வறை உதறுதே ஏன்? என்று மனம் குழம்பிப் போனது உண்மை. சுதாகரித்துக் கொண்டு மரண பயத்தை தூரத்தே வைத்துவிட்டு உள்ளுணர்வை எழுப்பி கேட்டவுடன் இயல்பென்ற ஒரு விசயம் கடிவாளத்தை பற்றிக் கொண்டது, நானும் அதன்படியே "எஸ், ப்ளீஸ் ஆட் மீ" என்று கூறிவிட்டேன். அன்றிலிருந்து நானும் ஒரு உடலுறுப்பு பங்களிப்பாளன்.


இதனை எழுத வேண்டுமென நீண்ட நாட்களாகவே ஆசைப் பட்டதுண்டு, ஆனால் பிறரை தர்மசங்கடத்தில் ஆட்படுத்தக் கூடும் என்பதினால் தள்ளிப் போட்டதுண்டு. இன்று தினகரனில் ""உள்ளத்தில் நல்ல உள்ளம்..."" என்ற தலைப்பிட்ட உடலுறுப்பு தானம் எந்தளவில் இந்தியாவில் செயலில் இருக்கிறது என்பதனைப் பற்றி படிக்கும் பொழுது மிகவும் ஆச்சர்யமாக இருந்ததது அங்கே குறிப்பிடப்பட்டிருந்த சில புள்ளியல் சார்ந்த குறியீடுகள்.

உதாரணத்திற்கு அந்தக் கட்டுரையிலிருந்து... "உலக அளவில் ஸ்பெயின்தான் உறுப்பு தானம், உடல் தானத்தில் முதலிடம் வகிக்கிறது. அங்கு வசிக்கும் 4.60 கோடி பேரில் 14500 பேர் முன்வந்து உறுப்பு மற்றும் உடல் தானம் செய்கிறார்கள். ஆனால், 100 கோடி பேர் வசிக்கும் இந்தியாவில் ஆண்டுக்கு 30 முதல் 40 பேர் மட்டுமே உடல் தானம் செய்கிறார்கள்.".... என்று குறிப்பிட்டதை படித்தவுடன், நான் ஏன் அப்படி அது போன்ற ஒரு கேள்வி ப்ரக்ஞையுணர்வே அற்று வாழ்ந்திருக்கிறேன் 2001ம் ஆண்டு வரை என்பது பட்டென புரிந்தது.

ஏன், இத்தனை மக்கள் தொகையுடன் உள்ள ஒரு நாடு, இத்தனை மீடியாக்கள் தங்களுடைய பிழைப்பை ஜரூராக நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் கூட வெறும் 30 லிரிந்து 40 பேர் மட்டுமே முன் வந்து தானம் செய்யும் நிலை? மதத்தில், இறப்பிற்குப் பிறகு இது போன்ற உடலுறுப்புகளுடன் மேலே வந்தால்தான் மீண்டும் பிறப்பெடுக்கும் பொழுது ஏதுவாக இருக்க முடியும் என்ற முறையில் எழுதப் பட்டுள்ளதா? எனக்குத் தெரிந்தவரையில் இந்து மதத்தில் அப்படிய் அடிக் கோடிட்டு காட்டப்பட்டு குறிப்பிடப் பட்டுள்ளதாக தெரியவில்லை. பிற மதங்களை பற்றி, நோ ஐடியா!

இத்தனை நல்லவர்களை கொண்ட(?!) நம் நாடு ஏன் ஸ்பெயினைக் காட்டிலும் இத்தனை கருமியாக இறப்பிற்குப் பிறகும் கூட மனிதர்களை வைத்திருக்கச் செய்கிறது? எப்படியோ, எல்லா மதங்களும் ஆத்மா என்ற ஒன்று இருப்பதாகவும், அது மட்டுமே நமது மரணிப்பிற்கு பிறகு மேலெழும்பிச் சென்று பிறகு எங்கடைய வேண்டுமோ அங்கடைந்து மறு-சுழற்சி (ரீ-சைக்கிலிங்) செய்யப் படுவதாக அறிகிறேன்.

அப்படி இருக்கும் பொழுது உடலுறுப்பிற்கும், ஆத்மாவிற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? எனவே, இந்த உடலுறுப்புச் சார்ந்த விசயத்தில் நிறைய மரண பயமும், கொஞ்சமே மதம் சார்ந்த விசயமும் குறுக்கிடுவதாக நான் கருதுகிறேன். மரணத்தைப் பற்றிய பயத்தை மரணிக்க வைத்துவிட்டால் நீங்களும் குபேரனாக வாழ்ந்து முடித்ததாக இச் சமூகம் உணரும் இந்த "தானாக முன் வந்து உடலுறுப்பு தானம் செய்யும் பொறுட்டு" இல்லையா?

ஆனால், இன்னும் கொஞ்ச காலங்களில் இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சிகளின் உச்சமாக ஆய்வுக் கூடங்களிலே இது போன்ற டி.என்.ஏ பொறுத்தம் கொண்ட உடலுறுப்புகளை உற்பத்திக்கவும் முனைந்துவிட்டால், மனித பயத்தினையும், மதம் சார்ந்த நம்பிக்கைகளையும் போற்றி பாதுகாத்து கேள்வி நிலைக்கு நம்மை இட்டுச் செல்ல வேண்டிய நிர்பந்தமிருக்காது - அதுவும் ஒன்று.

நம்மூரில் நடிகர் கமல்ஹாசன் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானம் செய்திருப்பதாக அறியும் தருவாயில், அவரின் மீது பன்மடங்கு அறிவுசார் மரியாதை கூடுகிறது.

இதனை வாசிப்பவர்களின் பார்வை எதனைப் பொறுட்டு ஒத்துப் போகிறது, விலகி நிற்கிறது என்பதனை அறிய ஆவலாக இருக்கிறது. பகிர்ந்து கொள்ளுங்கள், நல்லவர்களே!

70 comments:

Thekkikattan|தெகா said...

பி.கு: தவறாம எல்லாரும் பின்னூட்டத்தில கலந்துக்கங்க வேண்டுகிறேன். கொஞ்சம் க்யூரியஸ் என்ன நம்மை தடுக்கிறதுன்னு அறிந்து கொள்ள, அவ்வளவே!!

தருமி said...

நீங்களே 2001-ல் அதிர்ந்து போய் நின்றுள்ளீர்கள். காரணம் என்ன? அதுபற்றிய சிந்தனை – awareness - ஏதுமில்லை நம்மிடம். உடலையே தானம் பண்ணலாம் என்பது எனக்கெல்லாம் கமல் தன்னுடலை தானமாகத் தருவதாகச் சொன்ன பிறகே, ஓ! அப்படி ஒன்று இருக்கிறதோ என்பது தெரிந்தது. வீட்டில் அதைப் பற்றி சொன்னேன். ஏன் நானும் அப்படி தரக்கூடாதென்று சொன்னேன். பிள்ளைகள் உடனே சரியென்றார்கள். தங்கமணி .. ஹுஹூம் அப்டின்றாங்க. Generation gap?

அதைவிட சோகம் நண்பனின் தம்பி. மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு மருத்துவர். நண்பனிடம் என்ன procedure என்று கேட்டு வா என்றேன். ஒரு விண்ணப்பம் இருப்பதாகக் கூறினான். ஒன்று வாங்கிவா என்றேன். நண்பன் தம்பியிடம் கேட்டிருக்கிறான். “அந்த ஆளுக்கு என்ன ஆச்சு? இதெல்லாம் எதுக்கு? அந்த ஆளை பேசாம இருக்கச் சொல்” என்று சொல்லியனுப்பி விட்டாராம் அந்த மருத்துவர்.

அட… நீங்க செத்த பிறகு உறுப்பு தானத்துக்கு போய்ட்டீங்க. இங்க இன்னும் எத்தனை படித்தவர்கள் ரத்ததானத்தையே ஒத்துக் கொள்வதில்லை தெரியுமா? நான் முதல் தடவை கொடுத்தபோது மாணவர்களோடு சென்று கொடுத்தேன். ஒரு வயதான டாக்டரம்மா படுத்திருந்த என் கையை நீவி விட்டுக் கொண்டே ‘எதுக்குப்பா இதுக்கெல்லாம் நீங்க வர்ரீங்க’ அப்டின்னு அனுசரணையா , அன்பா கேட்டாங்க. (உண்மையான அக்கறை அந்த குரலில் இருந்தது.) அவங்க என்னையும் ஒரு மாணவனாக நினைத்துக் கேட்டிருக்கிறார்கள். மேலும் என்னைப் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள்ள எந்த க்ளாஸ் என்றார்கள். ஆசிரியன் என்றேன். பாவம் தவித்துப் போய்விட்டார்கள். குற்றவுணர்வும் இருந்தது அவர்களிடம்.

அதேபோல் ஒரு பணக்காரக் குடும்பம். தடபுடல் நுனிநாக்கு ஆங்கிலம். அம்மாவுக்கு ஒரு சின்ன அறுவை சிகிச்சை. மகனுக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவென்பதால் அவனிடமிருந்து எடுக்க முடியாது. அவனுக்குத்ததான் அதில் எப்படி ஒரு சந்தோசம்!! உடன் வந்திருந்த அந்த பெண்ணின் கணவரிடம் மருத்துவர் குருதிதானம் நல்லதுதான் என்று ஏதேதோ சொல்கிறார். Already the govt is draining my blood in the form of taxes. I am not going to give blood என்று cool-ஆகச் சொல்லிவிட்டு நடையைக் கட்டினார். அந்த பெண்ணோ தன் குடும்பத்தாரின் ரத்தம் மட்டுமே ரொம்ப நல்ல ரத்தம் என்பதுபோலவும் அதுவே தனக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் புலம்பிக்கொண்டு இருந்தார். மருத்துவர்கள் இருவர் செவிலியர்களோடு அறுவை சிகிச்சையின்போது எந்த ரத்தம் யாருக்குப் போகும் என்பதெல்லாம் தெரியாது என்றவுடன், நாங்கள் யோசித்துவிட்டு வருகிறோம் என்று அந்த மெத்தப் படித்த குடும்பம் வெளியேறியது. இந்த நாடகம் நடந்து முடியும் வரை ரத்தம் கொடுக்க வந்த நானும் நண்பனும் (அவன் ஒவ்வொரு ஆடி பதினெட்டு அன்றும், தன் பிறந்த நாட்களிலெல்லாம் ரத்ததானம் செய்பவன்) காத்திருந்தோம். இதெல்லாமே படித்தவர்கள், ஏன் மருத்துவர்கள் கூட awareness இல்லாமல் இருக்கிறார்கள் என்பதற்காகச் சொன்னேன்.

Awareness மட்டுமல்ல நம் சடங்காச்சாரங்களும் இதற்குக் காரணமாக இருக்கலாமென்றே நினைக்கிறேன். குளிப்பாட்டி, நெத்தியில காசு வச்சி, கட்டி அழுது, நீர்க்குடம் உடைத்து .. இப்படி பழக்கப்பட்டுப் போன நம் சமூகத்தில் இது போன்று கண்தானம், உடல்தானம், உறுப்புதானம் என்பதெல்லாம் நுழைய நாளாகுமென்றுதான் நினைக்கிறேன்.

ரொம்ப நீளமா போச்சோ…

Radha Sriram said...

நல்ல பதிவு. தருமி சொல்வது போல் awareness கம்மிதான். நான் ரொம்ப நாளைக்கு கண் தானம் என்றவுடன் அப்படியே முழியோட கட் பண்ணி எடுத்ருவாங்கன்னு நினைச்சிருக்கேன். கோர்னியாவ மட்டும் தான் எடுப்பாங்கன்னு அப்புறம்தான் தெரிஞ்சது. சில பேருக்கு இது இறந்து போன உடலை வயலேட் செய்வது போல் தோணுகிறது என்று நினைக்கிறேன்.மரியாதை இல்லாத செயல் போல் தோணுதுன்னு நினைக்கிறேன். எனிவே நானும் ஒரு டோனர்..:):)


தருமி பேரன்களோட உங்க ஃபோட்டோ அருமை.!!

Namma Illam said...

விழிப்புணர்வு இல்லை என்பது முதல் காரணம்.. இரண்டாவது 99 சதவீதம் மக்கள் மதத்தின் அடிப்படையில் இறந்த பிறகு உடலை சிதைப்பது என்று அதற்கு மறுப்பதாகவே படுகின்றது.

Thekkikattan|தெகா said...

தமிழ்ப்ரியன்,

//விழிப்புணர்வு இல்லை என்பது முதல் காரணம்.. இரண்டாவது 99 சதவீதம் மக்கள் மதத்தின் அடிப்படையில் இறந்த பிறகு உடலை சிதைப்பது என்று அதற்கு மறுப்பதாகவே படுகின்றது.//

முதற் காரணத்துடன் முழுமையாக ஒத்துப் போக முடிந்த என்னால், அந்த இரண்டாவது காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே, அது அப்படியெனில் ஆத்மாவிற்கும், உடலிற்கும் என்ன தொடர்பு? ஆத்மா மட்டுமே மறு-சுழற்சி செய்யப்படுகிறதா இல்லை உடலுமா, தமிழ்ப்ரியன்?

விபரமறிந்த எவரேனும் எனக்கு தெளிய வைங்களேன்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிச்சயமா இதுபற்றி சரியான விவரங்கள் தெரியாமலே ரொம்ப நாளா இருந்துட்டுருக்கங்க்றது காரணம் என்றாலும்.. ஒருத்தர் எழுதி ஒப்பமிட்டுப்போனாலும் இதற்கெல்லாம் குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதால் சரியாக நடைமுறைப்படுத்துவதும் சிரமம் தான்.

மங்கை said...

எந்த ஒரு பயத்திற்கும் காரணம் ஐயா சொன்ன மாதிரி விழிப்புணர்வு இல்லாமை தான்.. அவர் சொன்ன மாதிரி இரத்த தானம் நம்மில் எவ்வளவு பேர் ரெகுலரா செய்து வரோம்... அதற்கான தேவையின் அளவு யாருக்காவது தெரியுமா.. உலகில் உள்ள மொத்த தேவையில் 80%இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏற்படுகிறது.. ஆனா இதில் 20% தான் சப்ளை... இதுல இருந்தே தெரிந்து கொள்ளலாம் நம் விழிப்புணர்வை..

அது மாதிரி சிறுநீரக அறுவை சிகிச்சையும் அப்படித்தான்... வருஷத்திற்கு 1,00,000 பேருக்கு இந்த மாற்று அறுவை சிகிச்சை தேவைப் பட்டாலும், உண்மையில் நடக்குறதோ 2,500ல இருந்து 3,000க்கு உள்ள தான்..

மோகன் ஃப்வுண்டேஷன் இந்த விழிப்புணர்வை செய்து வருகிறது...

இந்ஹ்ட இடத்துல போன வாரம் நடந்த ஒரு சம்பவம்.. தில்லியில போன வாரம் ஒரு விபத்துல இரண்டு மாணவர்களுக்கு பலமான அடி.. அதுல ஒரு மாணவன் பிழைக்க மாட்டான்னு தெரிந்ததும் அவனின் பெற்றோர், உடனே அந்த துயரமான நேரத்திலும் அவனுடைய உடல் உறுப்புக்களை தானமாக கொடுத்துவிட்டார்கள்..

ஐயா..நீங்க சொன்ன மாதிரி சடங்குகளும் ஒரு காரணம்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா உங்களைப்போல எல்லாம் ஆத்மா உடலுன்னு எல்லாம் எல்லாரும் பிரிச்சு பாத்துட்டிருக்கறதுல்ல.. வழிவழியா வந்த பழக்கப்படி உடலும் ஒழுங்கா டிஸ்போஸ் செய்யப்படனுங்கறது தானே..அந்த காலத்து மம்மிலேர்ந்து ..இன்னைக்கும் எலெக்ட்ரிக் தகனம்தானே நடக்குது..நம்மாளுங்க நம்பிக்கை பத்தி தெரியுமில்ல..மாட்டுக்கண்ணுல பெருமாளப்பார்ப்பாங்க.. மனுசன் கண்ணுல அவங்களயே மீண்டும் பார்த்துட்டா...

தருமி said...

ராதாஸ்ரீராம்,
//அப்படியே முழியோட கட் பண்ணி எடுத்ருவாங்கன்னு நினைச்சிருக்கேன். கோர்னியாவ மட்டும் தான் எடுப்பாங்கன்னு அப்புறம்தான் தெரிஞ்சது.//

நானும் இதுபோலவே நினைத்திருந்தேன். பின்னால் கேள்விப்பட்டது கார்னியா மட்டும் இல்லை, விழி முழுவதுமாக எடுக்கப்படும் என்றே சொன்னார்கள்.

மருத்துவ விவரம் தெரிந்தவர்கள் யாராவது (யாரு .. ந்ம்ம புருனோதான் ) வந்து சொல்வார்கள் என நினைக்கிறேன்.

போட்டோ கமென்ட்டுக்கு நன்னி!!

இலவசக்கொத்தனார் said...

எதுக்குப் பயப்படணும்? எதற்கு அதிர்ந்து போய் நிக்கணும்? இதை எல்லாம் பள்ளியில் பாடமா வெச்சு சொல்லித் தந்திடணும். அப்போதான் அடுத்த தலைமுறையிலாவது விழிப்புணர்வு வரும்.

Namma Illam said...

///ஆத்மா மட்டுமே மறு-சுழற்சி செய்யப்படுகிறதா இல்லை உடலுமா, தமிழ்ப்ரியன்? ///
என்னுடைய மத நம்பிக்கைப் படி ஆத்மா மட்டுமே உயிர்பெற்று எழும். உடலுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பு இறந்தவுடன் அறுந்து விடுகின்றது. எனவே இறந்த பிறகு உறுப்புகள் தானம் செய்வதை எனது மதம் தடுக்கவில்லை. இரத்ததானத்திற்கு கேள்வியே இன்றி அனுமதி உள்ளது. வருடம் குறைந்த பட்சம் இரண்டு முறையேனும் செய்து கொண்டிருக்கிறேன்.

ramachandranusha(உஷா) said...

வூட்டுக்காரர் கிட்ட, புள்ளைங்க கிட்ட சொல்லி வெச்சாச்சு. முழு உடலையும் த்ந்துடணும். மிச்ச
மீதீய தருவாங்க. அதை வைத்து என்ன சாங்கியம் வேணா செஞ்சிக்குங்கன்னு. இங்க குஜராத்ல்
கண் தானம் அதிகம். ஜெய்ன்ஸ் செய்யறாங்க

Thekkikattan|தெகா said...

தருமி,

இன்னும் கூட உங்களால் நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டிருக்க முடியும், ஏனெனில் உங்களின் அனுபவம் அப்படியாக இருக்கையில். இதெல்லாம் ஒரு நீண்ட பின்னூட்டமே கிடையாது. எத்தனையே பேர் இது போன்ற கேள்விகளையே கேட்கும் பொழுதே காதை பொத்திக் கொண்டு விலகி நடக்கும் நேரத்தில் நேருக்கு நேராக பதிலுரைத்து அதற்கும் காரண காரியமறிய விரும்பவதற்கு பயமற்றல்லவா இருக்க வேண்டும்.

இப்பொழுது உங்க பின்னூட்டத்தைப் பொறுட்டு, ஒவ்வொரு பாராவிற்கு தனித்தனியாக பதிலுரைக்க வேண்டியது அவசியமாகப் படுகிறது. எனக்கு விழிப்புணர்வு அற்ற நிலையில் வைத்திருந்தது எதுவாக இருந்திருக்க முடியும், என்னைச் சுற்றி அமைந்திருந்த சமூகமாக இருக்கலாமா? பலதரப்பட்ட புணைவுகளை மனத்தினுள் புகுத்தி, இது போன்ற சிந்தனைகளை எழாமல் இருக்கும் வண்ணம் ஒரு வண்ணத்துப் பூச்சியின் மெழுகு கூட்டிற்குள் அடைந்த வண்ணமாக நாமும் மிக பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு, நமக்கு ஏதேனும் துரதிருஷ்டவசமாக நடைபெற்று, நம்மை அது வந்து தீண்டும் வரையிலும் இது போன்ற மன நிலை...

இருந்தாலும் அதனினும் முரண் இருக்கிறதே, அதற்கு உங்ககிட்டே இருந்தே பதிலும்... "அந்த பெண்ணோ தன் குடும்பத்தாரின் ரத்தம் மட்டுமே ரொம்ப நல்ல ரத்தம் என்பதுபோலவும் அதுவே தனக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் புலம்பிக்கொண்டு இருந்தார்..." இப்படியாக படித்தக் கூட்டத்திலிருந்தும் இது போல, ரத்தத்தில் பச்சை நிறம், வெள்ளை நிறம், ஊதா என்று நிறமிகள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்குமென்று நினைப்பவர்களும் இருக்கச் செய்கிறார்களோ... ;-)

இருங்க இன்னும் வாரேன் பாரா பாராவா :)... செம ஹாட்

SurveySan said...

//இந்த உடலுறுப்புச் சார்ந்த விசயத்தில் நிறைய மரண பயமும், கொஞ்சமே மதம் சார்ந்த விசயமும் குறுக்கிடுவதாக நான் கருதுகிறேன்.//

As everybody else said, I think it is because of lack of awareness.

எல்லாம் எடுத்துச் சொன்னா, நம்மாளுங்க, கண்டிப்பா செய்வாங்க.
ரத்த தானம் செய்யாமலா இருக்காங்க?

எது எதுக்கோ சட்டம் போடும் அரசாங்கம் இதுக்கு ஒரு வழி பண்ணலாம்.
அட்லீஸ்ட், டோனர் ஆவது சுலபம் ஆக்கலாம், லைசன்ஸ் வாங்கு இடத்திலும், வங்கியிலும், ரேஷன் கடைகளிலும், இதுக்கான விழிப்புணர்வை கொடுத்து, விண்ணப்பங்களையும் வாங்க ஏற்பாடு செய்யலாம்.

டி.வியில் நாக்கு முக்கக்கு பதில், அடிக்கடி ஒரு சின்ன குறும்படம் இதைப் பத்தி போட்டு சுலபமா விழிப்புணர்வு கொடுக்கலாம்.

ers said...

இறப்புக்கு பின் நிகழப்போகும் எந்த உடல் மாற்றங்களையும் நாம் காணப்போவதில்லை. அப்புறம் கருமணிகள் மட்டும் எடுத்தால் என்ன... கண்ணையே எடுத்தால் என்ன... என்னை பொறுத்தவரையில் என் உடலில் எந்த பாகத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் இறப்புக்கு பின்... இப்போது என்னால் கொடுக்க முடிவது ரத்தத்தை மட்டும் தான்...

மங்கை said...

awarness ஒரு காரணம் தான்... religious sentiments and clutural practices play an important role here... ப்ளட் சேஃப்டி பற்றி ஒரு மாட்யூல் தயார் பண்ணீட்டு இருகேன்.. அப்ப கிடைச்ச ஒரு தகவல்.. இந்த உடல் உறுப்பு தானம் பற்றி ஆசியாவில் ஒரு ஆராய்ச்சி நடந்தது... அதுல சீக்கியர்கள் தவிர மற்ற மதத்தை சேர்ந்தவர்கள்.. மத குருமார்கள் சொல்வதை கேட்பதாக சொல்லி இருக்கிறார்கள்.. சீக்கியர்கள் தாங்கள் தானம் கொடுக்க எந்த வித தயக்கமும் காட்டவில்லை.. அதற்கும் மத கோட்ப்பாடுகளையே காரணம் காட்டி இருக்கிறார்கள்....

இஸ்லாமியர்கள் தங்கள் மதகுருக்கள் என்ன சொல்கிறார்களோ அதன் படி நடந்து கொள்வதாக கூறி இருக்கிறார்கள்.. ஹிந்துக்கள்..என்ன இருந்தாலும் தங்கள் 'மனது' இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறி இருக்கிறார்கள்..

live beyond your life ங்குற கான்சப்ட் எல்லாம் இன்னும் ரொம்ப காலமாகும் வர்ரதுக்கு..

கொடுக்கனும்னு நினச்சா சிலசமயம் ரிலீஜியஸ் சென்டிமென்ட்ஸ் அதிகமா பாதிக்காது.. அப்படி ரெண்டுகெட்டானா முடிவெடுக்க முடியாம இருக்குறவுங்களுக்கு மதகுருக்களின் வார்த்தைகள் வழிநடத்தலாம்...

Thekkikattan|தெகா said...

தருமி,

//அதைவிட சோகம் நண்பனின் தம்பி. மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு மருத்துவர். நண்பனிடம் என்ன procedure என்று கேட்டு வா என்றேன். ஒரு விண்ணப்பம் இருப்பதாகக் கூறினான். ஒன்று வாங்கிவா என்றேன். நண்பன் தம்பியிடம் கேட்டிருக்கிறான். “அந்த ஆளுக்கு என்ன ஆச்சு? இதெல்லாம் எதுக்கு? அந்த ஆளை பேசாம இருக்கச் சொல்” என்று சொல்லியனுப்பி விட்டாராம் அந்த மருத்துவர். //

இதை என்னான்னுங்க சொல்றது. அப்ப அந்த மருத்துவருக்கே விழிப்புணர்வில்லைன்னு எடுத்துக்கிறதா, இல்லை வேற ஏதாவது அவரை மென்னு திங்க வைக்குதா? இப்ப சாதாரண ஆட்கள்னா நிறைய யோசிக்கணும், பல விசயங்களை கடந்து வரணும், ஆனா அந்த மருத்துவருக்கு என்ன?

தருமி, தட்ஸ்தமிழ்.காம்ல் படித்தேன் ஒருவர் கூறியிருந்தார் பிரபலங்கள் மட்டுமே இதுபோன்ற தானங்களை உடனடியாக எடுத்துக் கொள்ள வைக்கக் கூடிய சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். சாமான்யர்களால் அது முடியாத காரியம், அதாவது அப்படி அணுகினால் கூட கால தாமத்தில் ஒன்றுக்கும் உதவாமல் ஆவது போல ஆக்கிவிடுகிறார்கள் என்று அங்காலயத்துருந்தார், தனது சொந்த அனுபவமாக. அது எந்தளவிற்கு உண்மை நம் ஊரில்?

//Awareness மட்டுமல்ல நம் சடங்காச்சாரங்களும் இதற்குக் காரணமாக இருக்கலாமென்றே நினைக்கிறேன். குளிப்பாட்டி, நெத்தியில காசு வச்சி, கட்டி அழுது, நீர்க்குடம் உடைத்து .. இப்படி பழக்கப்பட்டுப் போன நம் சமூகத்தில் இது போன்று கண்தானம், உடல்தானம், உறுப்புதானம் என்பதெல்லாம் நுழைய நாளாகுமென்றுதான் நினைக்கிறேன்.//

அதேதான் நானும் நினைக்கிறேன். இது வெறும் விழிப்புணர்வு சார்ந்தது மட்டுமே காரணமில்லை, அதனைத் தாண்டியும் சில விசயங்கள் தடுக்கிறது. நீங்கள் கூறிய அந்தனை சடங்குகளும் எப்படி பொட்டலத்தின்(பிண) முன்பு செய்ய முடியும் என்றதொரு அறியாமை. அப்படித்தான் கட்டித் தருவார்கள் என்ற பிம்பம் ஆதியிலேயே ஊட்டப் பட்டிருக்கிறது.

புருனோ Bruno said...

//நம்மூரில் நடிகர் கமல்ஹாசன் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு தானம் செய்திருப்பதாக அறியும் தருவாயில், அவரின் மீது பன்மடங்கு அறிவுசார் மரியாதை கூடுகிறது.//

கமல் அளித்தது "Body Donation". அதாவது அவர் இறந்த பின்னர் அவரது உடல் எரிக்கப்படாமல், புதைக்கப்படாமல், மருத்துவக்கல்லூரிக்கு அளிக்கப்படும்

இதை அனைவரும் அளிக்கலாம். இயற்கையாக இறப்பவர்களின் உடலே இங்கு வழங்கப்படும்

-

புருனோ Bruno said...

தற்பொழுது பேசுவது organ donation. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் cadaver transplant from brain death patients.

மூளை மீண்டு வர முடியாத நிலைக்கு செயலிழந்து விட்ட நிலையில் இதயம் மேலும் ஒர் 12 அல்லது 24 மணி நேரம் மட்டுமே துடிக்கும். அதன் பிறகு இதயத்துடிப்பும் நின்று விடும். அப்படி பட்ட நிலையில், அந்த பிணியாளரின் உடலிலிருந்து உறுப்புகளை பெறுவதே உறுப்பு தானம்.

இது இயற்கை மரணத்தில் சாத்தியம் இல்லை. இயற்கை மரணத்தில் முதலில் செயலிழப்பது இதயம். அதன் பின்னரே மூளைக்கு செல்லும் குருதி தடைபடுவதால் 8 நிமிடங்களில் மூளை முற்றிலும் செயலிழக்கிறது

புருனோ Bruno said...

இயற்கையாக மரணமடைந்தவரின் உடலிலிருந்தும் சில உறுப்புகளை பெற முடியும்

1. எலும்புகள்
2. கண்கள்

புருனோ Bruno said...

மேலும் சில விபரங்களுக்கு எனது இந்த இடுகையை பாருங்கள்

http://www.payanangal.in/2008/09/blog-post_28.html

புருனோ Bruno said...

//அதைவிட சோகம் நண்பனின் தம்பி. மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு மருத்துவர். நண்பனிடம் என்ன procedure என்று கேட்டு வா என்றேன். //

உடல் தானத்திற்கு நீங்கள் மருத்துவக்கல்லூரியில் உள்ள உடற்கூறு (அனாடமி) துறையில் சில படிவங்களை அளிக்க வேண்டும்.

அவ்வளவு தான்.

புருனோ Bruno said...

//என்றவுடன் அப்படியே முழியோட கட் பண்ணி எடுத்ருவாங்கன்னு நினைச்சிருக்கேன். கோர்னியாவ மட்டும் தான் எடுப்பாங்கன்னு அப்புறம்தான் தெரிஞ்சது.//

எடுப்பது முழுவதும் எடுத்து ஒரு prosthesis வைத்து விடுவார்கள்

ஆனால் பொருத்துவது கார்னியவை மட்டும் தான்

புருனோ Bruno said...

//மருத்துவ விவரம் தெரிந்தவர்கள் யாராவது (யாரு .. ந்ம்ம புருனோதான் ) வந்து சொல்வார்கள் என நினைக்கிறேன்.//

விழித்திரையை (கார்னியாவை) மட்டும் தனியாக அறுவை சிகிச்சை செய்து எடுப்பது முழு விழியையும் எடுப்பதை விட சிக்கலானது. மற்றும் அதிக நேரம் தேவைப்படுவது

எனவே முழு விழியும் எடுக்கப்படும்

ஆனால் பொருத்தப்படுவது விழித்திரை மட்டும் தான்

புருனோ Bruno said...

// இதை எல்லாம் பள்ளியில் பாடமா வெச்சு சொல்லித் தந்திடணும். அப்போதான் அடுத்த தலைமுறையிலாவது விழிப்புணர்வு வரும்.//

இன்னனும் மாதவிடாய் பற்றி பள்ளியில் பாடம் எடுப்பதற்கே எதிர்ப்பு முடியவில்லை.

இந்த நிலையில்.......

புருனோ Bruno said...

முக்கியமான விஷயம்.

உடல் தானம் என்றால் உடல் திருப்பி தரப்பட மாட்டாது.

Thekkikattan|தெகா said...

வாங்க ராதா ஸ்ரீராம்,

விழிப்புணர்வு ரொம்பவே குறைவுதான் நம் நாட்டில் என்பதற்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஆனால், தருமி குறிப்பிட்ட "அந்த நல்ல ரத்தம்" என் குடும்பத்திலதான் இருக்குன்னு, இவ்வளவு இரத்த தானம் குறித்து விழிப்புணர்வு கிடைச்சும் அப்படி எண்ணுகின்ற மனப் போக்கை எந்தளவில் வைப்பது.

அந்த கண் கார்னியாவ மட்டுமே எடுப்பார்களா என்று எனக்கும் தெளிவாக தெரியவில்லை... விடுங்க தேடிப் பிடிச்சுடுவோம் இல்லன்னா டாக்டர். ப்ரூனோ வந்து சொல்வாரான்னு பார்ப்போம்.

//சில பேருக்கு இது இறந்து போன உடலை வயலேட் செய்வது போல் தோணுகிறது என்று நினைக்கிறேன்.மரியாதை இல்லாத செயல் போல் தோணுதுன்னு நினைக்கிறேன்.//

இப்படி நினைக்கவும் அதிக சாத்தியமிருக்கிறது. காரணம் மேலே ஒரு பின்னூட்டத்தில தருமிக்கு சொன்னதும் ஒரு காரணமா இருக்கலாமோ.

//எனிவே நானும் ஒரு டோனர்..:):)//

வாழ்த்துக்கள்!தைரியமானவரே :))).

Thekkikattan|தெகா said...

முத்து,

//நிச்சயமா இதுபற்றி சரியான விவரங்கள் தெரியாமலே ரொம்ப நாளா இருந்துட்டுருக்கங்க்றது காரணம் என்றாலும்... ஒருத்தர் எழுதி ஒப்பமிட்டுப்போனாலும் இதற்கெல்லாம் குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதால் சரியாக நடைமுறைப்படுத்துவதும் சிரமம் தான்.//

விழிப்புணர்வு சார்ந்து எந்தளவிற்கு பின் தங்கியிருக்கிறோம் என்பதற்கு சில பின்னூட்டங்களின் மூலமாக பேசியிருக்கிறோம் இங்கு.

இப்ப வீட்டிளுள்ள மக்களின் ஒத்துழைப்பைப் பற்றி பேசுவோமா? இப்ப வாழ்க்கைத் துணையில் ஒருவருக்கு அதன் பொருட்டு போதுமான நம்பிக்கை அல்லது தைரியமில்லையென்றால் காலப் போக்கில் பேசி புரிய வைத்துக்கொள்ள முடியும், இல்லையென்றால் நாம் ஒரு அடல்ட் என்ற விதத்தில் நமக்கு முடிவெடுக்கும்(அதுவும் ஒரு நல்ல காரியத்திற்கு) எல்லாம் உரிமையையும் உண்டுதானே.

இதற்காகவெல்லாமா எல்லோரின் மன ஒத்துழைப்பிற்கு காத்துக்கொண்டிருக்க வேண்டும். இதுவேதான் நமது பெற்றோர்களின் சம்மதத்தை பெறுவதற்கும் என அறிக!

என்னுடைய நிலைப்பாட்டை இது வரையிலும் எனது பெற்றோர்களிடத்தே கூட தெரிவித்துக் கொண்டதில்லை, ஏனெனில் அவர்களுக்கு அது புரியாமல் போய் கலக்கத்தை ஏற்படுத்துவானேன்றோ அல்லது பெரிதாக நான் எடுத்துக் கொள்ளாததாலோ தெரிவிக்கவில்லை. ஆனால், துணைவியாருக்குத் தெரியும். அம்புட்டுத்தேன். :-).

புருனோ Bruno said...

//இதை என்னான்னுங்க சொல்றது. அப்ப அந்த மருத்துவருக்கே விழிப்புணர்வில்லைன்னு எடுத்துக்கிறதா, இல்லை வேற ஏதாவது அவரை மென்னு திங்க வைக்குதா? இப்ப சாதாரண ஆட்கள்னா நிறைய யோசிக்கணும், பல விசயங்களை கடந்து வரணும், ஆனா அந்த மருத்துவருக்கு என்ன?//

உடல் தானம் என்பது பல யதார்த்த சிக்கல்களை கொண்டது.

தானம் அளிக்கப்பட்டவரின் உடல் இருக்கும் உடற்கூறியல் கூடத்திறு அவரது உறவினர்கள் வந்து பார்ப்பது போன்ற பல சிக்கல்களை சந்தித்தாகி விட்டது.

அதனால் மருத்துவர்கள் உடல் தானத்தை வலியுருத்துவதில்லை.

--

மருத்துவர்களுக்கு பல விஷயங்களில் போதுமான விழிப்புணர்வு இல்லை என்பது உண்மைதான்

Thekkikattan|தெகா said...

மங்கை,

நீங்க வந்து கை நனைக்கலேன்னா பந்தி முடியுமா, சொல்லுங்க :)). இன்னும் சொல்லுங்க, எல்லாம் சொல்லுங்க சரக்கு இருக்கிறவர் கொடுத்துட்டே இருக்கலாம்.

//எந்த ஒரு பயத்திற்கும் காரணம் ஐயா சொன்ன மாதிரி விழிப்புணர்வு இல்லாமை தான்..//

இருட்டப் பார்த்தா ஏன் பயம் வருது? அந்த இருட்டிற்குள் என்ன இருக்குமோ என்ற அறியாப் பயம்தானே, அங்கே கொஞ்சூண்டு வெளிச்சம் அடிச்சி காமிச்சிட்டா கிடக்கிற அத்தனையும் தெரிஞ்சு, தெளிஞ்சு போயிடுமில்லையா, அது மாதிரியேதான் இந்த "பயம்"மென்ற ஒட்டு மொத்த விசயமே போல.

//உலகில் உள்ள மொத்த தேவையில் 80%இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏற்படுகிறது.. ஆனா இதில் 20% தான் சப்ளை... இதுல இருந்தே தெரிந்து கொள்ளலாம் நம் விழிப்புணர்வை...//

என்ன ஒரு முரண் பாருங்க. உலகத்தில் கிட்டத்தட்ட 5/1 பகுதிய நாம பிடிச்சி வைச்சிருக்கோம், ஆனா, இரத்தத் தேவைன்னா கைவசம் 20%. அப்ப இரத்த தானத்திற்கு கூட போதுமான விழிப்புணர்வு இல்லைன்னு பொருளா?

//அது மாதிரி சிறுநீரக அறுவை சிகிச்சையும் அப்படித்தான்... வருஷத்திற்கு 1,00,000 பேருக்கு இந்த மாற்று அறுவை சிகிச்சை தேவைப் பட்டாலும், உண்மையில் நடக்குறதோ 2,500ல இருந்து 3,000க்கு உள்ள தான்.. //

நீங்க இப்படிச் சொல்லுறீங்க, ஆனா, இன்னிக்கு மெடிக்கல் ட்டூரிஸம் கொடி கட்டி பறப்பதாகவும், சில பல நாடுகளிருந்து சிறுநீரக மாற்றுச் சிகிச்சை மிக எளிதாக இந்தியாவில் பண்ணிக் கொள்ள முடிவதாக அங்கே படையெடுத்து வருவதாக கேள்வி, அப்பன்னா, இந்த சிறுநீரகங்கள் எல்லாம் எங்கிருந்து கிடைக்கிறது :))) ?

டெல்லி பெற்றோர்களின் முடிவிற்கு ஒரு வந்தனங்கள்.

இலவசக்கொத்தனார் said...

இந்த மஞ்சளில் வெள்ளை கலர் ஸ்கீமை மாத்துங்க. கண்ணு வலிக்குது.

G.Ragavan said...

கட்டுரையைப் படிச்சதும் ஸ்பெயின்காரங்க மேல மரியாதை வந்துருச்சுய்யா. நல்லாயிருக்கனும் மகராசங்க.

தருமிசார் ரத்ததானம் பத்திச் சொன்னாரு. ஒரு அனுபவம். கல்லூரியில் படிக்கையில் நானும் ரத்ததானம் செய்திருக்கிறேன். வேலைக்கு வந்த புதிதிலும் செய்திருக்கிறேன்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு என்னுடைய தந்தைக்கு அறுவை சிகிச்சை நடந்தது. நான்கு யூனிட்டுகள் ரத்தம் தேவை என்றார்கள். அதை அவர்களே ஏற்பாடு செய்து கொள்வார்கள். ஆனால் நாம் வேறு நான்கு யூனிட்டுகள் தானம் செய்ய வேண்டும். என்னுடைய சகோதரி, மைத்துனன், சகோதரியின் தோழியின் நண்பன் மற்றும் நான் என்று முடிவு செய்து சென்றோம். எனக்கு ஒரு ஐயம் இருந்தது. அங்கு ரத்தம் எடுக்கும் முன் பரிசோதனை செய்து கொண்டிருந்த மருத்துவரிடம் (அல்லது உதவியாளரிடம்) கேட்டேன். "சொரியாசிஸ் இருப்பவர்கள் ரத்தம் குடுக்கலாமா?" என்று. ஏனென்றால் பணிக்கு வந்து சில வருடங்களுக்குப் பிறகு சொரியாசிஸ் வந்திருந்தது. உடனே அந்த மருத்துவர்..."அடடா.. கூடாதுங்க. சொரியாசிஸ் இருந்தா ரத்தம் கெட்டுப் போன மாதிரி" என்றார்.

உண்மையில் அது கெட்டுப் போவதல்ல. குடுக்கக் கூடாது என்று சொல்லியிருக்கலாம். ஏனென்றால் சொரியாசிஸ் நோய் ஒருவரிடம் இருந்து ஒருவர் பரவாது. பரவினாலும் அது மரபணுக்கள் வழியாக...அதாவது குழந்தைகள் வழியாகத்தான் பரவும். ஆகையால் தானத்திற்கு ஏற்க மாட்டார்கள்.

இந்த நிலையில் மற்ற உடலுறுப்புகளை என்ன சொல்வது! ம்ம்ம்.. நம்முடைய பொருள்..நமக்குப் பிறகு பலருக்குப் பயன்படுமானால் அது நன்றே.

இந்து மதத்தின் எந்தப் பிரிவிலும் உடல் பிரதானம் என்று சொல்லவில்லை. உடல் பிறப்போடு மட்டும் ஒட்டியது. ஆனால் ஆன்மா மட்டுமே மீண்டும் வரக்கூடியது. ஆகையால் உடலுறுப்புகளைத் தானம் செய்வதில் தடையில்லை.

Thekkikattan|தெகா said...

இந்த மஞ்சளில் வெள்ளை கலர் ஸ்கீமை மாத்துங்க. கண்ணு வலிக்குது.
//

கொத்ஸ், என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க :((, நானே மண்டையை உடைச்சு மாவிளக்கு போட்டு மாத்திக்கிட்டேன், டீஃபால்ட்டா வந்த கலர்தான்... கண்ணுக்கு இதமா இருக்குதுன்னுதான் இத நான் தேர்வு செஞ்சேன், நீங்க வலிக்குதுங்கிறீங்க... ரெண்டாவது ரீசன் அந்த ... சீட்டா, போங்கய்யா மாத்தமுடியாது... ;).

துளசி கோபால் said...

நம்மூரில் சாஸ்த்திரம் சம்பிரதாயம் எல்லாத்துக்க்கும் மேலா அறியாமை இப்படின்னு பலகாரணங்கள் இருக்கே.

மண்ணோ, தீயோ தின்பதை இன்னொரு உயிர் வாழப் பயன்படுத்துவதில் என்ன தப்பு?

நியூஸியில் அநேகமாக 90% மக்கள் ஓட்டுனர் உரிமத்துலே 'எஸ்'ன்னுதான் எழுதிக்கொடுத்துருக்கோம்.

ramachandranusha(உஷா) said...

நன்றி டாக்டர் சார், அப்ப இயற்கையாய் மரணம்டைந்தால், கிட்னி போன்ற உள் உறுப்புகளை தானம் செய்ய முடியாதா :-(
தெ.கா பல் நாட்களுக்கு பிற்கு உருப்படியாய் ஒரு பதிவும், பின்னுட்டங்களுக்கும் நன்றி

Unknown said...

Good post to share whole world to know about donating at the same time everyone should think on their own what else after died.

Unknown said...

//மதம் சார்ந்த விசயமும் குறுக்கிடுவதாக நான் கருதுகிறேன்.//

கொல்லைக்கு போகக் கூட மதப் புத்தகத்தில் என்ன எழுதியிருக்குனு பார்க்கிற மக்கள் இருப்பதால் உங்களுக்கு இந்த அய்யம் வந்திருப்பது புரிகிறது. இந்த மதப் புத்தகத்தை பார்த்து எப்படி கொல்லைக்கு போவது என்கிற விடயமே எதிர் காலத்தில் இருக்கப் போவது இல்லை. எனவே போதிய விழிப்புணர்வு வந்து விட்டால் நம் மக்கள் தானத்தில் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து விடுவார்கள்.

சுரேகா.. said...

என்ன தடுக்குதுன்னு தெரியலை!

அனேகமா..
வீட்டுக்காரங்க நம்ம உடம்பை
புதைக்கவோ...எரிக்கவோ
செஞ்சு அதை வச்சு டகால்ட்டி வேலையெல்லாம் செய்வாங்களே அதால இருக்கும்!

ஆனா நான் 2003 மே யில் இருந்து உடல் தானத்துக்கு எழுதிக்கொடுத்துட்டேன். இப்பவும்
தூரப்பயணங்களின் போது, ரத்ததான அட்டையுடனேயே அதையும் சேத்து வைத்துக்கொண்டுதான் போகிறேன்.

என்னமோ நம்மால முடிஞ்சது...!

ஆமா...நீங்க புதைக்கிறது,எரிக்கிறது பத்தி
ஒரு பதிவப்போட்டு அது பத்திக்கிட்டு எரிஞ்சதில்ல?
:)

சுரேகா.. said...

//இந்த மஞ்சளில் வெள்ளை கலர் ஸ்கீமை மாத்துங்க. கண்ணு வலிக்குது.//

ஆமா...தீம் நல்லா இருக்கு!
அந்த பின்னூட்டம் எழுத்து கலரை படிக்க முடியலை!

Thekkikattan|தெகா said...

உடலுன்னு எல்லாம் எல்லாரும் பிரிச்சு பாத்துட்டிருக்கறதுல்ல.. வழிவழியா வந்த பழக்கப்படி உடலும் ஒழுங்கா டிஸ்போஸ் செய்யப்படனுங்கறது தானே..அந்த காலத்து மம்மிலேர்ந்து ..இன்னைக்கும் எலெக்ட்ரிக் தகனம்தானே நடக்குது..நம்மாளுங்க நம்பிக்கை பத்தி தெரியுமில்ல..மாட்டுக்கண்ணுல பெருமாளப்பார்ப்பாங்க.. மனுசன் கண்ணுல அவங்களயே மீண்டும் பார்த்துட்டா...//

அப்போ கேள்வியே கேக்காம வந்தமா போனமான்னு இருக்கோங்கிறீங்க... அந்தக் காலத்தில இவ்வளவு மருத்துவ தொழிற் நுட்பம் வளரலை அதுவும் ஒரு காரணமா இருக்காலமில்ல...

மனுசன் கண்ணுல அவங்களயே மீண்டும் பார்த்துட்டா..... சொல்ல வந்ததை முழுசா முடிக்கலையே...

தருமி said...

//இந்த மதப் புத்தகத்தை பார்த்து எப்படி கொல்லைக்கு போவது என்கிற விடயமே எதிர் காலத்தில் இருக்கப் போவது இல்லை.//

பின்னூட்டம் பெரியசாமி,
இதெல்லாம் ஒரு wishful thinking! அவ்வளவுதான். இதெல்லாம் இருக்கும் எப்பவும்.

தெரிந்தவர் ஒருவர்.கிறித்துவத்தில் ஒரு சின்ன குரூப்பைச் சேர்ந்தவர். jehovites என்று நினைக்கிறேன். அவர்கள் ரத்ததானம் கொடுப்பது தவறு, "பாவம்" என்கிறார்கள். இவர் தொழிலே ஓட்டுனர் தொழில்தான். ஒருமுறை இவர் ஒரு விபத்தில் மாட்டிக் கொள்ள அவருக்கு அங்கு ரத்தம் கொடுக்கப்பட்டது. அதனால் இப்போது இவர் எப்போதும் தன் ஓட்டுனர் உரிமத்துடன் dont give blood to me, in case of any emergency என்று ஒரு கார்டு வைத்துக் கொண்டுள்ளார்.

இதெல்லாம் மாறும் அப்டின்னா சொல்றீங்க. அடப் போங்க, சார்.

:-(

Thekkikattan|தெகா said...

//எதுக்குப் பயப்படணும்? எதற்கு அதிர்ந்து போய் நிக்கணும்? இதை எல்லாம் பள்ளியில் பாடமா வெச்சு சொல்லித் தந்திடணும். அப்போதான் அடுத்த தலைமுறையிலாவது விழிப்புணர்வு வரும்.//

உங்க மாதிரி தைரியசாலியாவும், தெளிவாவும் எல்லோரும் இருந்துட்டா இது மாதிரி ஒரு பதிவெல்லாம் தேவையா :)? இந்தப் பள்ளியில பாடங்கள் எத சொல்லிக் கொடுக்கிறது, எத சொல்லிக் கொடுக்கக் கூடாதுன்னு எழுதுற, தீர்மானிக்கிற ஆட்களைப் பார்த்தா கொஞ்சம் காமிச்சிக் கொடுகங்களேன், சொல்றேன்... :-P.

டாக்டர் புரூனோ சொன்னதை படிச்சீங்கள்லே...

Thekkikattan|தெகா said...

//என்னுடைய மத நம்பிக்கைப் படி ஆத்மா மட்டுமே உயிர்பெற்று எழும். உடலுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பு இறந்தவுடன் அறுந்து விடுகின்றது. எனவே இறந்த பிறகு உறுப்புகள் தானம் செய்வதை எனது மதம் தடுக்கவில்லை. இரத்ததானத்திற்கு கேள்வியே இன்றி அனுமதி உள்ளது. வருடம் குறைந்த பட்சம் இரண்டு முறையேனும் செய்து கொண்டிருக்கிறேன்.//

நன்றி, தமிழ்ப்ரியன்! அப்படியே இருங்க, பக்கத்தில இருக்கிறவங்களுக்கும் உங்களால ஒரு தாக்கம் அழுத்தமா உருவாகும் என்று நம்புவோம்.

Thekkikattan|தெகா said...

வாங்க உஷா,

//வூட்டுக்காரர் கிட்ட, புள்ளைங்க கிட்ட சொல்லி வெச்சாச்சு. முழு உடலையும் த்ந்துடணும். மிச்ச
மீதீய தருவாங்க. அதை வைத்து என்ன சாங்கியம் வேணா செஞ்சிக்குங்கன்னு. இங்க குஜராத்ல்
கண் தானம் அதிகம். ஜெய்ன்ஸ் செய்யறாங்க.//

சொல்லியாச்சா, சொல்லியாச்சா :)). அது எப்படிங்க இம்பூட்டு வேகமா இருக்கீங்க, நீங்க பெண் வேங்கைன்னு நேற்றைக்கே பட்டம் வழங்கியாச்சு...

ஆமா இது என்னாது....தெ.கா பல் நாட்களுக்கு பிற்கு உருப்படியாய் ஒரு பதிவும், பின்னுட்டங்களுக்கும் நன்றி :-))) அப்ப இதுக்கு முன்னாடி போட்ட பதிவெல்லாம் ஒன்னும் தேராதா - அடக் கொடுமையே,.. :-).

தருமி said...

பின்னூட்டம் வாசிக்கிறது கஷ்டமாத்தான் இருக்கு.

Thekkikattan|தெகா said...

சர்வேயரே வாங்க,

//As everybody else said, I think it is because of lack of awareness.

எல்லாம் எடுத்துச் சொன்னா, நம்மாளுங்க, கண்டிப்பா செய்வாங்க.
ரத்த தானம் செய்யாமலா இருக்காங்க?//

விழிப்புணர்வு மட்டுமே ஒரு காரணமான்னு பல பின்னூட்டங்களில் பேசியிருக்கோம், பாருங்க.

ரத்த தானம் செய்றாங்கதான், ஆனா, கொஞ்சம் பதிவர் "மங்கை" சொல்றதையும் கவனிங்க, நம்மூரின் நிலவரம் என்ன அப்படின்னு புரியும்.

//டி.வியில் நாக்கு முக்கக்கு பதில், அடிக்கடி ஒரு சின்ன குறும்படம் இதைப் பத்தி போட்டு சுலபமா விழிப்புணர்வு கொடுக்கலாம்.//

இதப் பத்தி பேசிட்டே இருக்கலாம். அண்மையில் என்னமோ தமிழகத்தில் டைட்டானிக் பட ரேஞ்சிக்கு ஒரு காதல் படம் வந்து வெளியிட முடியாமயும், ஜனங்கள் எல்லாம் கொந்தளிச்சு ஊரே ரெண்டு பட்டு கெடக்கிறதாவும், வாசிக்கிற செய்தியைப் பார்க்க தினமும் நான் பணம் கட்டி அதுவும் டாலர்ல அந்தக் கன்றாவியப் பார்க்கிற கேவல நிலையில இருக்கேன் :((. இவனுங்கள எல்லாம் எத்தாலே சாத்துறதுன்னே தெரியலயே....

அரைமணி நேரம் அந்தக் குத்தாட்டம் இந்தக் குத்தாட்டமின்னு போடுற சமயத்தில இது போன்ற துறை சார்ந்த மக்களையும், ஆன்மீக ஆட்களையும் ஒரு சேர உட்கார வைச்சு சில விசயங்களை விவாதித்து மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கலாமில்ல... மற்றபடி உங்க ஆலோசனைகளும் சூப்பர் :).

Thekkikattan|தெகா said...

தமிழ் சினிமா,

//உடல் மாற்றங்களையும் நாம் காணப்போவதில்லை. அப்புறம் கருமணிகள் மட்டும் எடுத்தால் என்ன... கண்ணையே எடுத்தால் என்ன...//

நல்ல புரிதல், தைரியமான முடிவு. அப்படியே தொடர வாழ்த்துக்கள்.

Thekkikattan|தெகா said...

மங்கை, மீண்டும் வந்து ரொம்ப முக்கியமான விசயத்தை முன் வைத்ததற்கு நன்றி! உங்களோட பின்னூட்டத்தின் சில ஹைலைட்டுகள்:

//***அதுல சீக்கியர்கள் தவிர மற்ற மதத்தை சேர்ந்தவர்கள்.. மத குருமார்கள் சொல்வதை கேட்பதாக சொல்லி இருக்கிறார்கள்..

***இஸ்லாமியர்கள் தங்கள் மதகுருக்கள் என்ன சொல்கிறார்களோ அதன் படி நடந்து கொள்வதாக கூறி இருக்கிறார்கள்..
***ஹிந்துக்கள்..என்ன இருந்தாலும் தங்கள் 'மனது' இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறி இருக்கிறார்கள்..

***கொடுக்கனும்னு நினச்சா சிலசமயம் ரிலீஜியஸ் சென்டிமென்ட்ஸ் அதிகமா பாதிக்காது.. அப்படி ரெண்டுகெட்டானா முடிவெடுக்க முடியாம இருக்குறவுங்களுக்கு மதகுருக்களின் வார்த்தைகள் வழிநடத்தலாம்...//

இங்கதான் இந்த மீடியாக்கள் உதவலாம்... சர்வேசனுக்கு சொல்லியிருப்பேன் பாருங்க இப்படி ...அரைமணி நேரம் அந்தக் குத்தாட்டம் இந்தக் குத்தாட்டம், கண்டெழவு சீரியல்ன்னு போடுற சமயத்தில இது போன்ற துறை சார்ந்த மக்களையும், ஆன்மீக ஆட்களையும் ஒரு சேர உட்கார வைச்சு சில விசயங்களை விவாதித்து மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கலாமில்ல...

நல்ல பின்னூட்டமிங்க, நிறைய கேள்விகளுக்கு பதிலுருக்கிறது.

delphine said...

இதைப்பற்றி நானே எழுத வேண்டுமென்றிருந்தேன். ஏனெனில் கழிந்த வாரம் எங்கள் ஆஸ்பத்திரி லாபியில் அத்தனை மக்கள் கூட்டம். அதுவென்னவோ அந்த ஞாயிறென்று அத்தனை விபத்துக்கள். லாபி முழுவதும் ஒரே வி.ஐ.பி கூட்டங்கள்.
விழிப்புணர்வு அது இது என்று சொல்லாதீங்க தெ.கா..... நம் மக்களுக்கு எடுத்து சொல்ல யாருமில்லை. எடுத்து அவர்களிடம் கூறும் போது அதை ஒத்துக்கொண்டு நிறைய பேர் ஆர்வமாக முன் வருகிறார்கள். போன வாரம் மட்டும் இரண்டு பேர் தானத்திற்கு முன் வந்து தானம் செய்தார்கள். "மூளை இறந்துவிட்டது" (brain dead) என்று முடிவெடுத்து சொல்ல அதற்கே ஒரு பெரிய protocol ஊண்டு. patient-ன் immediate உறவினர்கள்தான் சம்மதம் தெரிவிக்க வேண்டும். இந்த 2 வருடத்தில் நிறைய பேர் தானம் கொடுத்துள்ளார்கள். இதில் ஒரு பிரச்னையும் உண்டு.. நம் மக்கள் உடனே உடல் உறுப்புகளை திருடிவிட்டார்களென்று ஒரு குற்றச்சாட்டையும் கொண்டு வருவார்கள்.

Thekkikattan|தெகா said...

வாங்க டாக்டர் புரூனோ,

//கமல் அளித்தது "Body Donation". அதாவது அவர் இறந்த பின்னர் அவரது உடல் எரிக்கப்படாமல், புதைக்கப்படாமல், மருத்துவக்கல்லூரிக்கு அளிக்கப்படும்//

அப்போ அந்தப் உடம்பிலிருந்து உறுப்புகளை எடுத்துட்டுத்தான் அப்படியே வைச்சிப்பாங்களா இல்லை வெறுமனே பதப் படுத்தி வைச்சிப்பாங்களா, எத்தனை ஆண்டுகள் அப்படியே வைத்திருக்கப்படும்?

//உடல் தானம் என்பது பல யதார்த்த சிக்கல்களை கொண்டது.

தானம் அளிக்கப்பட்டவரின் உடல் இருக்கும் உடற்கூறியல் கூடத்திறு அவரது உறவினர்கள் வந்து பார்ப்பது போன்ற பல சிக்கல்களை சந்தித்தாகி விட்டது.

அதனால் மருத்துவர்கள் உடல் தானத்தை வலியுருத்துவதில்லை.//

புரிகிறது என்ன சொல்ல வாரீங்கன்னு. இப்ப ஒரு பிரபலத்தின் உடல் அவ்வாறு பல காலங்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் உறவினர்களும், அல்லது அவரது அனுதாபிகளும் அவ்வப்பொழுது வந்து உடலை பார்க்க வேண்டுமென்று அடம் பிடிக்கலாம்... அதனைத் தொடர்ந்து நடைபெறும் நடைமுறைச் சிக்கலைத்தானே அப்படி கூறியிருக்கீர்கள்?

Thekkikattan|தெகா said...

டக்டர் புரூனோ,

நிறைய விசயங்களை நீங்கள் இங்கு அப்டேட் செய்திருக்கிறீர்கள், இது தொடர்பாக நீங்கள் உங்களின் தளத்தில் சில பதிவுகள் எழுதுமளவிற்கு இன்னமும் விசயங்கள் இருக்கக் கூடும் நேரமிருந்து, முடிந்தால் எழுதுங்கள், அவசியம்.

//விழித்திரையை (கார்னியாவை) மட்டும் தனியாக அறுவை சிகிச்சை செய்து எடுப்பது முழு விழியையும் எடுப்பதை விட சிக்கலானது. மற்றும் அதிக நேரம் தேவைப்படுவது

எனவே முழு விழியும் எடுக்கப்படும்

ஆனால் பொருத்தப்படுவது விழித்திரை மட்டும் தான்//

நன்றி டாக்டர். அப்படியாகத்தான் நானும் நினைத்திருந்தேன். முழு விழியையும் தானே கழட்டி எடுத்துக் கொள்வார்கள் என்று குடுவைகளிலும் அப்படித்தானே பார்த்திருக்கிறோமென்று, ஒருவருக்கு சந்தேகம் வந்தால் எல்லோருக்கும் (பாதி தெரிந்து வைத்திருக்கும்) வருவது இயற்கைதானே :).

புருனோ Bruno said...

//நன்றி டாக்டர் சார், அப்ப இயற்கையாய் மரணம்டைந்தால், கிட்னி போன்ற உள் உறுப்புகளை தானம் செய்ய முடியாதா :-(//

முடியாது. இயற்கை மரணம் என்னும் பட்சத்தில் சிறுநீரகமும் செயலிழக்கும் நிலையில் தான் இருக்கும்.

விழித்திரை மற்றும் (உடல்வாகை பொருத்து) எலும்புகளை வேண்டுமானால் தானம் செய்யலாம்

புருனோ Bruno said...

//அதனால் இப்போது இவர் எப்போதும் தன் ஓட்டுனர் உரிமத்துடன் dont give blood to me, in case of any emergency என்று ஒரு கார்டு வைத்துக் கொண்டுள்ளார்.//

:( :(

அந்த ஆட்கள் jehova's witness என்றழைக்கப்படுவார்கள்

புருனோ Bruno said...

// இதில் ஒரு பிரச்னையும் உண்டு.. நம் மக்கள் உடனே உடல் உறுப்புகளை திருடிவிட்டார்களென்று ஒரு குற்றச்சாட்டையும் கொண்டு வருவார்கள்.//

இது குறித்து எனது இடுகையில் விளக்கமாகவே எழுதியுள்ளேன்

புருனோ Bruno said...

//அப்போ அந்தப் உடம்பிலிருந்து உறுப்புகளை எடுத்துட்டுத்தான் அப்படியே வைச்சிப்பாங்களா இல்லை வெறுமனே பதப் படுத்தி வைச்சிப்பாங்களா, எத்தனை ஆண்டுகள் அப்படியே வைத்திருக்கப்படும்?//

பதப்படுத்தி வைத்திருப்பார்கள். அதிக பட்சம் ஒரு அல்லது இரு வருடங்கள். அதற்குள் அந்த உடலை ஆய்விற்கு உட்படுத்துவார்கள்

புருனோ Bruno said...

//இப்ப ஒரு பிரபலத்தின் உடல் அவ்வாறு பல காலங்கள் பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் உறவினர்களும், அல்லது அவரது அனுதாபிகளும் அவ்வப்பொழுது வந்து உடலை பார்க்க வேண்டுமென்று அடம் பிடிக்கலாம்... அதனைத் தொடர்ந்து நடைபெறும் நடைமுறைச் சிக்கலைத்தானே அப்படி கூறியிருக்கீர்கள்?//

சரியாக சொல்லிவிட்டீர்கள். நம்ம ஊர் ரசிகர்களை நினைத்து பாருங்கள். :(

Thekkikattan|தெகா said...

வாங்க ஜீரா,

உங்கள என் வீட்டுப் பக்கம் கடைசியா வைச்சிப் பார்த்தது, ஐயப்பன் சாமீயப் பத்தி பேசிக்கிட்டப்பதான். அதுக்குப் பிறகு இப்போதான் பார்க்கிறேன். அதுவும் மீண்டும் ஒரு நல்ல விசயத்திற்கு வந்து எட்டிப் பார்த்திருக்கீங்க.

//கட்டுரையைப் படிச்சதும் ஸ்பெயின்காரங்க மேல மரியாதை வந்துருச்சுய்யா. நல்லாயிருக்கனும் மகராசங்க.//

இது மாதிரி எக்கச் சக்க வித்தியாசங்களின் அடிப்படையிலதான் ஒரு நாட்டை வளர்ந்த நாடு, வளர்கிற நாடுன்னு பிரிக்கிறாய்ங்களா :)? அப்போ வீட்டுக்கு வீடு ட்டி.விப் பொட்டி இருக்கிறதோ, காதுல ஒண்ணு, கழுத்துல ஒண்ணுன்னு மாட்டித் தொங்குற கைப் பேசிகளை கணக்குல கொண்டு இல்லையா... எனிவே, இது மாதிரி ரொம்ப நல்ல விசயங்களிலும் நாம விகிதாச் சாரத்தில எகிறணும்.

//உண்மையில் அது கெட்டுப் போவதல்ல. குடுக்கக் கூடாது என்று சொல்லியிருக்கலாம். ஏனென்றால் சொரியாசிஸ் நோய் ஒருவரிடம் இருந்து ஒருவர் பரவாது. பரவினாலும் அது மரபணுக்கள் வழியாக...அதாவது குழந்தைகள் வழியாகத்தான் பரவும். ஆகையால் தானத்திற்கு ஏற்க மாட்டார்கள்.//

இது நடந்தது எப்போ, ஜீரா? அறுவை சிகிச்சை அப்பாவிற்கு எப்படிப் போனது?

இதில பார்த்தீங்கன்னா, அந்த மருத்துவருக்கே எப்படி விசயங்களை வழங்கணுமின்னு தெரியாம ""...சொரியாசிஸ் இருந்தா ரத்தம் கெட்டுப் போன மாதிரி""" ... அப்படின்ருக்கார், என்னாத்தை சொல்றது - அந்தளவிற்கு இருக்கு அவரின் விசய ஞானம், டாக்டர் புரூனோ கூட ஒரிடத்தில் ""...மருத்துவர்களுக்கு பல விஷயங்களில் போதுமான விழிப்புணர்வு இல்லை என்பது உண்மைதான்..."" என்று சொல்லியிருப்பார். அது இந்த விசயத்திலும் வெளி வந்திருக்கு பாருங்க.

//இந்து மதத்தின் எந்தப் பிரிவிலும் உடல் பிரதானம் என்று சொல்லவில்லை. உடல் பிறப்போடு மட்டும் ஒட்டியது. ஆனால் ஆன்மா மட்டுமே மீண்டும் வரக்கூடியது. ஆகையால் உடலுறுப்புகளைத் தானம் செய்வதில் தடையில்லை.//

அப்படியாகத்தான் நானும் நினைத்தேன். நம்ம திண்டு வளர்ந்தது, நம்மை திங்கப் போற மாதிரிதான் பல இடங்களில் படித்ததாக ஞாபகம். அருமையா இருந்துச்சு ஜீரா உங்க பின்னூட்டம், நன்றி!

Thekkikattan|தெகா said...

துள்சிங்க,

//நம்மூரில் சாஸ்த்திரம் சம்பிரதாயம் எல்லாத்துக்க்கும் மேலா அறியாமை இப்படின்னு பலகாரணங்கள் இருக்கே.//

உண்மை. கடைசி நேரத்தில கூட தன்னைச் சுத்தியே இருக்கிற வட்டத்தை உடைக்க விட்றதில்லே...

//மண்ணோ, தீயோ தின்பதை இன்னொரு உயிர் வாழப் பயன்படுத்துவதில் என்ன தப்பு?//

அதானே தெரியல. பிறகு துள்சிங்க ஒன்னுமே கஷ்டப்படுத்திக்காம ஒரு பெரிய விசயம் பண்ற மாதிரி இருக்காம, நான் இன்னொரு பதிவில அது என்னான்னு கொண்டாரேன் பாருங்க, நீங்களே ஆச்சர்யப் பட்டுப் போயிருவீங்க.

//நியூஸியில் அநேகமாக 90% மக்கள் ஓட்டுனர் உரிமத்துலே 'எஸ்'ன்னுதான் எழுதிக்கொடுத்துருக்கோம்.//

அட அப்படியா? சூப்பர்.

Anonymous said...

இந்த பிரச்சினை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும்

1மக்கள் மனதில் இறந்த உடலை சிதைத்தால் அடுத்த பிறவியில் உடல் குறைபாடு உள்ளவர்களாக பிறக்க நேரிடுமோ என்ற ஒரு ஐயம் உள்ளது.அது நீக்கப்படவேண்டும்

2.ஆனால் விபத்துக்கள் ஏற்பட்டு இறந்தால் உடலை கூறு போட்டு மூட்டை கட்டி தரும்போது மக்கள் ஒன்றும் அதுபற்றி சிந்திப்பதில்லை

3.ஆனால் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால் இந்தியாவில் பாமர மக்களை ஏமாற்றி கிட்னீ திருடும் கும்பல்கள் இருப்பதுபோல் உடலின் பாகங்கள் தனித்தனியாக விலை பேசப்பட்டு விற்கும் கும்பல்கள் பெருகிவிடும் என்பதில் ஐயம்மில்லை

4.எனவே விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தி தகுந்த மேற்பார்வையுடன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இந்த திட்டத்தை செயல்படுத்தலாம்

புருனோ Bruno said...

//3.ஆனால் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால் இந்தியாவில் பாமர மக்களை ஏமாற்றி கிட்னீ திருடும் கும்பல்கள் இருப்பதுபோல் உடலின் பாகங்கள் தனித்தனியாக விலை பேசப்பட்டு விற்கும் கும்பல்கள் பெருகிவிடும் என்பதில் ஐயம்மில்லை //

மன்னிக்கவும். முற்றிலும் ஆதாரமில்லாத ஒரு தவறான கருத்தை நீங்கள் இப்படி தெனாவட்டாக கூறுவது வருத்தமளிக்கிறது

இந்த திட்டமே ”கிட்னி திருட்டு” என்று ஊடகங்களால் கூறப்படுவதை தவிர்க்கத்தான்

இது குறித்து எனது இடுகையில் விளக்கமாகவே எழுதியுள்ளேன்

நீங்கள் கூறியது எப்படி நடக்கும் என்பது குறித்து நீங்கள் விளக்கினால், உங்கள் வினாக்களுக்கு / சந்தேகங்களுக்கு விடை அளிக்க தயாராக உள்ளேன்.

அது வரை கற்பனையான தவறான செய்திகளை இது போன்ற பொது இடத்தில் பரப்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

//4.எனவே விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தி தகுந்த மேற்பார்வையுடன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இந்த
திட்டத்தை செயல்படுத்தலாம்//

உங்களின் அக்கறைக்கு நன்றி. சென்ற வாரம் நடந்த அறுவை சிகிச்சை முற்றிலும் சட்டப்படி தான் நடந்தது

இது குறித்து எனது இடுகையில் விளக்கமாகவே எழுதியுள்ளேன்

உங்கள் வினாக்களுக்கு / சந்தேகங்களுக்கு விடை அளிக்க தயாராக உள்ளேன்.

அது வரை கற்பனையான தவறான செய்திகளை இது போன்ற பொது இடத்தில் பரப்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

Thekkikattan|தெகா said...

சிங்காரவேலு,

//Good post to share whole world to know about donating at the same time everyone should think on their own what else after died.//

நன்றி! அப்படியாக யோசிப்பார்கள் என்று நம்புவோம்.

//பின்னூட்டம் பெரியசாமி.. said...

//மதம் சார்ந்த விசயமும் குறுக்கிடுவதாக நான் கருதுகிறேன்.//

கொல்லைக்கு போகக் கூட மதப் புத்தகத்தில் என்ன எழுதியிருக்குனு பார்க்கிற மக்கள் இருப்பதால் உங்களுக்கு இந்த அய்யம் வந்திருப்பது புரிகிறது. இந்த மதப் புத்தகத்தை பார்த்து எப்படி கொல்லைக்கு போவது என்கிற விடயமே எதிர் காலத்தில் இருக்கப் போவது இல்லை. எனவே போதிய விழிப்புணர்வு வந்து விட்டால் நம் மக்கள் தானத்தில் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து விடுவார்கள். //

ம்ம்... உங்களின் ஆப்டிமிஸ்டிக் எண்ணத்திற்கு ஒரு வந்தனங்கள். ஆனா, பல நூறு(ஆயிரம்) வருடங்களை தாண்டியும் கூட நம்மை மதம் சார்ந்த நன்மைகளைக் காட்டிலும் முரண் கருத்துக்கள் தானே அதிகமாக பின் தொடர்ந்து வந்திருப்பாக வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரிகிறது.

தருமியோட பின்னூட்டம் உங்களுக்கு விளித்து வந்திருக்கிறதையும் படிங்க, ஒரு தனிப்பட்ட மனிதரின் எண்ணவோட்டம் எப்படி பல மனிதர்களுக்கு ஒத்துப் போகக் கூடிய வாய்ப்புகள் அதிகமென்பது தெரிய வரும்.

Thekkikattan|தெகா said...

சுரேகா!

//என்ன தடுக்குதுன்னு தெரியலை!

அனேகமா..
வீட்டுக்காரங்க நம்ம உடம்பை
புதைக்கவோ...எரிக்கவோ
செஞ்சு அதை வச்சு டகால்ட்டி வேலையெல்லாம் செய்வாங்களே அதால இருக்கும்!//

தோண்டிப் பார்த்தா என்ன தடுக்குதுன்னு கண்டுபிடிச்சிடலாம்வோய்.

அந்த "டகால்ட்டி" வார்த்தை செம கலக்கல் படிச்சா வீட்டில உன்னய கொன்னே போட்டுடுவாங்க. ஆனா, அதான் உண்மையில்லையா :))?

//ஆனா நான் 2003 மே யில் இருந்து உடல் தானத்துக்கு எழுதிக்கொடுத்துட்டேன். இப்பவும்
தூரப்பயணங்களின் போது, ரத்ததான அட்டையுடனேயே அதையும் சேத்து வைத்துக்கொண்டுதான் போகிறேன்.

என்னமோ நம்மால முடிஞ்சது...! //

பெரிய விசயம்தானே, சுரேகா. இங்க சொன்னதின் மூலமா சில நண்பர்கள் இதனை பின் தொடராலமில்லையா. சூப்பர்ப்.

//ஆமா...நீங்க புதைக்கிறது,எரிக்கிறது பத்தி
ஒரு பதிவப்போட்டு அது பத்திக்கிட்டு எரிஞ்சதில்ல?
:)//

அது நானேதான். அதப் பத்திக்கிட்டு எரிய வைச்சிட்டு இத வைச்சி ஊத்தியணைச்சாச்சு, எல்லாமே சாவப் பத்தியே ஆகிப்போச்சு :)).

Thekkikattan|தெகா said...

வாங்க டாக்டர் delphine,

நல்லா இருக்கீங்களா? எவ்வளவு நாட்களாச்சு ஆளையேப் பார்த்து. சுத்தமா பதிவு எழுதுறதையே நிறுத்திட்டீங்களா, என்ன? ஆமா, உங்க மருத்துவமனையிலதானே அண்மையில் நடந்த உறுப்புகள் இடமாற்றம் நடந்தது. தினமும் இது போல கேசுகள் பார்ப்பீர்கள்.

இப்பத்தான் பார்த்தேன் உடனே இது தொடர்பா ஒரு பதிவும் போட்டிருக்கீங்க... படிக்க பிரியப்படுகிறவர்களுக்கு சுட்டி இதோ உடல் உறுப்புகள் தானம்

டாக்டர் உங்கள் பதிவிற்கு ஓர் நன்றி!

புருனோ Bruno said...

உடல் தானம் என்றால் என்ன, உறுப்பு தானம் என்றால் என்ன, கண் தானம் ??, இரத்த தானம் ?? என்ற என் பதிவில் முழு உடல் தானம், உறுப்பு தானம், கண் தானம், எலும்பு தானம், இரத்த தானம் ஆகியவை குறித்து விளக்கியுள்ளேன். சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்

suvanappiriyan said...

மிகவும் பயனுள்ள பதிவு! நிறைய விபரங்களை தெரிந்து கொண்டேன்.

இஸ்லாத்தில் ரத்த தானம், கண்தானம் போன்றவற்றிற்கு எந்த தடையும் இல்லை. நானும் பலமுறை ரத்ததானம் செய்துள்ளேன். ஒரு சில இஸ்லாமிய அறிஞர்கள் குர்ஆனை சரியாக விளங்காமல் இஸ்லாத்தில் தடை இருப்பதாக சொல்லி வந்தார்கள். அது தவறு என்று விளக்கி வருகிறோம்.

Anonymous said...

To Dr. Bruno...

'மோசடி மன்னர்களின் தாயகமாக விளங்குவது தமிழ்நாடு,இஙகு எதையும் ஆராயாமல் அப்படியே நம்பி மோசம் போகும் மக்களும் தங்க காசு மோசடி என கணக்கிலடங்கா மோசடிகளை அரங்கேற்றிகொண்டிருக்கும் அயோகியர்களுக்கு பஞ்சமில்லை,எப்படி திருட்டு நடந்தது என்பதை பல மாதங்களாக ஊடகங்களில் வந்த செய்திகளையும் பேட்டிகளையும் பார்த்து தெரிந்துகொள்ளவும்,
உறுப்புதானம் குறித்து கடுமையான சட்டங்களை அரசு இயற்றியிருந்தும் மோசடிகள் நடைபெற்றுள்ளன,முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது ஊடகங்களே,தவறுகள் நடந்தது உண்மை ,இனி வரும் காலத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில்கருத்து தெரிவிக்கபட்டது அதற்காக வரிந்துகட்டிக்கொண்டு நீங்கள் துவக்கிய போரை தொடர்ந்து நடத்த நான் தயாரில்லை,

நான் உடல் உறுப்பு தானத்தை பற்றி தவறான கருத்துக்கள் எதையும்தெரிவிக்கவில்லை,பல மாதங்களாக ஊடகஙகளில் பாமர மக்களை ஏமாற்றி கிட்னி மோசடி நடைபெற்றதாக வெளிவந்ந செய்திகள் அனைத்தும் பொய் என்கிறீர்களா?நீஙகள் வேண்டுமானால் உத்தமராக இருக்கலாம்,ஆனால் எல்லா துறையிலும் அயேக்கியர்கள் இருப்பதுபோல் பணத்திற்காக மனிதாபிமானத்தை குழிதோண்டி புதைத்து மருத்துவ துறைக்கு இழுக்கு ஏற்படுத்திய கயவர்களை எல்லாரும் அறிவார்கள், சிறைக்குள் இருக்கும் அவர்களைப் பற்றி பற்றி இந்த உலகம் நன்றாக அறியும், '

Thekkikattan|தெகா said...

வாங்க சுவனப்ரியன்,

நலமா?

//மிகவும் பயனுள்ள பதிவு! நிறைய விபரங்களை தெரிந்து கொண்டேன்.//

நன்றி தங்களின் வருகைக்கும், கீழே உள்ள கருத்துக்கும்...

//இஸ்லாத்தில் ரத்த தானம், கண்தானம் போன்றவற்றிற்கு எந்த தடையும் இல்லை. நானும் பலமுறை ரத்ததானம் செய்துள்ளேன். ஒரு சில இஸ்லாமிய அறிஞர்கள் குர்ஆனை சரியாக விளங்காமல் இஸ்லாத்தில் தடை இருப்பதாக சொல்லி வந்தார்கள். அது தவறு என்று விளக்கி வருகிறோம்.//

இது போன்று அவசியம் உங்களைப் போன்றவர்கள் நிறைய எழுதி ஏனையோர்களிடத்தும் நல்ல தெளிவினையும், விழிப்புணர்வையும் ஊட்ட வேண்டும், ஊட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.

Anonymous said...

You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to

valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

Let's show your thoughts to the whole world!

புருனோ Bruno said...

To trpattabiraman

//'மோசடி மன்னர்களின் தாயகமாக விளங்குவது தமிழ்நாடு,இஙகு எதையும் ஆராயாமல் அப்படியே நம்பி மோசம் போகும் மக்களும் தங்க காசு மோசடி என கணக்கிலடங்கா மோசடிகளை அரங்கேற்றிகொண்டிருக்கும் அயோகியர்களுக்கு பஞ்சமில்லை,எப்படி திருட்டு நடந்தது என்பதை பல மாதங்களாக ஊடகங்களில் வந்த செய்திகளையும் பேட்டிகளையும் பார்த்து தெரிந்துகொள்ளவும்,
உறுப்புதானம் குறித்து கடுமையான சட்டங்களை அரசு இயற்றியிருந்தும் மோசடிகள் நடைபெற்றுள்ளன,முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது ஊடகங்களே,தவறுகள் நடந்தது உண்மை ,இனி வரும் காலத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில்கருத்து தெரிவிக்கபட்டது//

உண்மை. சிறுநீரகங்களை 2 லட்சம் பெற்றுக்கொண்டு கொடையாக அளித்தவர்கள் அதன் பிறகு காவல் துறையில் புகார் அளித்தது உண்மை. அதை யார் இல்லை என்றது

// அதற்காக வரிந்துகட்டிக்கொண்டு நீங்கள் துவக்கிய போரை தொடர்ந்து நடத்த நான் தயாரில்லை,//

தவறான் தகவல் அளித்தது நீங்கள் என்பதால் தான் அப்படி கூறினேன்.

தவறான தகவல்கள் அளிக்கப்பட்டாம் போரை தொடர நான் தயாராகவே உள்ளேன்

//நான் உடல் உறுப்பு தானத்தை பற்றி தவறான கருத்துக்கள் எதையும்தெரிவிக்கவில்லை,//

மன்னிக்கவும். தாங்கள் கூறிய ”3.ஆனால் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால் இந்தியாவில் பாமர மக்களை ஏமாற்றி கிட்னீ திருடும் கும்பல்கள் இருப்பதுபோல் உடலின் பாகங்கள் தனித்தனியாக விலை பேசப்பட்டு விற்கும் கும்பல்கள் பெருகிவிடும் என்பதில் ஐயம்மில்லை” என்ற கருத்து முற்றிலும் தவறு. இந்த திட்டமே உயிருடன் இருப்பவர்களிடம் இருந்து ஒரு சிறுநீரகத்தை பெறுவதற்கு பதில், மூளை இறப்பு ஏற்பட்டவர்களிடம் இருந்து 2 சிறுநீரகங்களையும் பெறுவது தான்

இந்த திட்டத்தினால் ”உடலின் பாகங்கள் தனித்தனியாக விலை பேசப்பட்டு விற்கும் கும்பல்கள்” குறையுமே தவிர கூடாது என்பது தான் நிஜம்

அப்படி இருக்கும் போது இத்திட்டத்தினால் மோசடி ”கும்பல்கள் பெருகிவிடும் என்பதில் ஐயம்மில்லை” என்ற தங்களின் தவறான, ஆதாரமில்லாத கருத்திற்கு எனது எதிர்ப்பை பதிந்தேன்.

மற்றப்படி மோசடி நடக்கவில்லை என்று நான் கூறவில்லை. மோசடியை தடுக்கத்தான் இத்திட்டம் என்று தான் கூறினேன்

என் கருத்து இந்த சட்டத்தினால் ”கிட்னி திருட்டு” குறையும் என்பது. நீங்கள் கூறியது இந்த திட்டத்தினால் மோசட் அதிகரிக்கும் என்பது
இன்று வரை தாங்கள் இந்த சட்டத்தினால் மோசடி அதிகரிக்கும் என்ற தங்களின் தவறான கருத்திற்கு ஆதாரம் அளிக்க் வில்லை

//பல மாதங்களாக ஊடகஙகளில் பாமர மக்களை ஏமாற்றி கிட்னி மோசடி நடைபெற்றதாக வெளிவந்ந செய்திகள் அனைத்தும் பொய் என்கிறீர்களா?//
இல்லை. முற்றிலும் உண்மை. ஆனால் இத்திட்டத்தினால் மோசடிகள் குறையும் என்பது தான் உண்மை. மோசடி அதிகரிக்கும் என்ற தங்களின் கருத்து தவறு

//நீஙகள் வேண்டுமானால் உத்தமராக இருக்கலாம்,ஆனால் எல்லா துறையிலும் அயேக்கியர்கள் இருப்பதுபோல் பணத்திற்காக மனிதாபிமானத்தை குழிதோண்டி புதைத்து மருத்துவ துறைக்கு இழுக்கு ஏற்படுத்திய கயவர்களை எல்லாரும் அறிவார்கள், சிறைக்குள் இருக்கும் அவர்களைப் பற்றி பற்றி இந்த உலகம் நன்றாக அறியும்,//
இதை யார் மறுத்தார்கள்.

நான் மறுத்தது உங்களின் தவறான் கருத்து எண் 3 மற்றும் 4 மட்டும் தான்

வேளராசி said...

நம்மில் பெரும்பாலோர் கண்தானம் செய்ய பதிவுசெய்து வைத்துஇருப்பர்.ஆனால் பார்வையற்றோர் கண்தானம் பெற அதற்காக நிறையவருடங்கள் காத்திருக்கவேண்டும்.இருப்பினும் நம்மால் இப்பொழுதே உதவமுடியும்.எவ்வாரெனில் நமது வீட்டிற்க்கு அருகில் ஒரு இறப்பு நிகழும்பொழுது நாம் அங்குசென்று அவர்களிடம் பக்குவமாக எடுத்துக்கூறினால் கூடுமானவரையில் அங்கு கண்தானம் நடக்க வாய்ப்புஉண்டு. இந்த அடிப்படையில் நான் 3 ஜோடி கண்களை தானமாகக் கொடுக்க வைத்தேன்.

Related Posts with Thumbnails