Monday, October 10, 2005

மனித அட்டைகள்...?

நான் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அலைந்து திரிந்த காலங்களில் அட்டைகளையும் (leech) கவனிப்பதில் எனக்கு ஆர்வமுண்டு. அவைகளின் இயல்புத் தன்மை குறித்தும் எப்படியெல்லாம் தன்னுடைய ரத்தப் பசியை தனித்து கொள்ள அவைகள் தகவமைப்புகளை பெற்றிருக்கிறது என்பதனை பார்த்தும், படித்தும், அதிசயித்தும் அதில் உலகியல் சார்ந்த பொருள் மிக்க உள்ளதை உணர்ந்ததுண்டு.

அந்த உணர்தலை தரம் பிரித்துக் காணும் பொழுது ஒவ்வொரு தட்டிலும் இருக்கும் தன்மையிலும் உறவு முறை மட்டும் மாறுபட்டு எல்லா நிலைகளிலும் இருந்துக் கொண்டிரு(ந்)பதை உணர முடிகிறது. உதாரணமாக கூட்டுக் குடும்பங்களில் நடக்கும் இந்த "அட்டைத்தன்மையை" எடுத்துக் கொள்வோம்.

இந்திய கூட்டுக் குடும்பங்களில் அதிகமாக இது போன்ற தன்மை நிகழ என்ன காரணம்? அப்படி நிகழும் பொழுது அந்த மொத்த கூட்டமைப்பே அழகிழந்து ஏனையோரும் நிம்மதி இழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டும் அதனின்று வெளியேற முடியாமல் புழுங்கி மழுங்கிப் போவதற்கு எது காரணியாக அமைகிறது? வெளியில் தெரிந்தால் வெட்கக் கேடு என்று அண்டை அயலாருக்கு அஞ்சியா அல்லது தெளிவான பேச்சுவார்த்தை அற்ற நிலையாலா அல்லது அந்த அமைப்பிலுள்ள ஒரு சிலரின் மனோத்துவத்தாலா 'என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல' என்ற அருதப் பழசான (அல்லது தாமதமாகவே புரிந்து கொள்ளப்படும்) தத்துவ நோக்கிலா?

எது எப்படியாகினும் இன்றைய சூழலில் இந்த கூட்டுக் குடும்ப கட்டமைப்பு நடைமுறைக்கு ஒத்துவராத விசயமாகிவிட்டதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. இது கிராம நகர வேறுபாடின்றி அரங்கேறி வருகிறது. தொ(ல்)லைக்காட்சித் தொடர்களை எடுத்துக் கொண்டாலே இது தொடர்பாகத்தான் காரசாரமாக விவாதிக்கப்படும். இத் தொடர்கள் வாழ்வியல் சம்பந்தப் பட்டவைகளைப் பற்றியே தொல்லை கொடுத்து வந்தாலும், சாதாரண மக்களுக்கு என்ன தீர்வு இவைகளிலிருந்து சென்றடைகிறது?

இதில் என்ன வேடிக்கையான விசயமென்றால் அந்தத் தொடர்களில் வரும் வில்(லி)லன்கள் போன்று, இக்குடும்பங்களில் உள்ளவர்களும் (வில்லி(லன்)களும்) தன்னிலை மறந்து தொடர் வில்(ல)லியை கண்டு ரசிப்பதும் தனக்குத் தெரியாத புது உத்திகளை கீழிறக்கம் செய்து கொள்வதும்தான்.

சில குடும்பங்களில் இந்த ஒட்டுண்ணிகள் ஒரு படி மேலேயும் சென்று சிதருண்ட உள்ளங்ளை இணைக்கும் பாலங்களாக செயல்படும் பெற்றோர்களையே சிறுகச் சிறுக உயிரையும் குடிப்பதுண்டு. இச் சூழ்நிலையில் யாரைக்குற்றம் கூறுவது? பெற்றோர்களின் வளர்ப்பில் ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என்பதா அல்லது அவர்களின் பாசம் தவறாக கையாளப்படுகிறது என்பதா?

இதில் யார் புத்திசாலி, யார் யாரை ஏமாற்றிக் கொள்கிறார்கள்? இறுதியில் யாருக்கு இழப்பு? நன்றாக வாழ்ந்து அனுபவித்து சென்றிருக்க வேண்டிய ஆட்களை மனச்சுமைக்கு ஆளாக்கி விரைவிலேயே அனுப்பிவைக்கும் இந்த (சமுதாயச்) சம்பிரதாயக் கட்டமைப்பு தேவைதானா? காலம் டார்வினிய விதிகளுக்கு உட்பட்டு மாறிச் செல்லும்பொழுது நாம் கொண்டிருந்த கொள்கைகளையும் பரிசோதித்து அது இக் காலச்சூழக்கு உகந்ததா என்பதை அறியாவிடில் இவ்வொட்டுண்ணிகள் பல்கிப் பெருகி சமுதாயக் கேடு விளைவிப்பதை நாம் தவிர்க்க முடியாது.

இங்கு ஒரு கேள்வி எனக்குத் தோன்றுகிறது. இக் கூட்டுக் குடும்ப கட்டமைப்பு நேற்று இன்று தொடங்கப்பட்டிருக்க முடியாது. நிச்சயமாக, பல நூறு ஆண்டுகளாய் இப்பழக்கம் புழக்கத்திலிருந்திருக்க வேண்டும். அப்பொழுதெல்லாம், இத் துர்ச்சம்பவங்கள் இன்று இருப்பது போலிருந்தால் இத்தனை நூற்றாண்டுகளை தாண்டியிருக்குமா என்பது சந்தேகமே! அப்படியிருக்கும் பட்சத்தில் ஏன் இன்று குடும்பங்கள் தோரும் ஏதாவது ஒரு அழுகிப் போன பழமிருக்க நேரிடுகிறது?

"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்ற முதுமொழி ஒரு கால கட்டத்தில் இன்றைக்கு இருக்கக் கூடிய தாக்கங்களுக்கு எல்லாம் அப்பாற் பட்டு இந்த உலகமயமாக்களின் தத்துவ நோக்கிலிருந்து விலகி, கூடி வாழ்வதற்கே உரித்தான "விட்டுக் கொடுத்து போதல், சகிப்புத்தன்மை, பொறாமையின்மை, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஏனையோரின் உழைப்பு" அதீதமாக அக்கால கட்ட மக்களிடையே இருந்திருக்கலாம். ஆனால், இந்த தன்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக இன்றைய சூழலில் நலிந்து மெலிந்து வருகிறது இக்கால குளம் குட்டைகள் போலவே.

பொதுநலம் என்பது அரிதாகி வரும் இக்கால கட்டத்தில் பெற்றோர்களும் தனது பொறுப்புணர்ந்து குழந்தைகளை எதிர்காலச் சூழ்நிலைக்கேற்ப தயார் செய்வது காலத்தின் கட்டாயமாகிறது. மேலும் இது அவர்களின் எதிர் கால ஏமாற்றங்களிலிருந்து தன்னை தக்கவைத்துக் கொள்ள பெரிதும் உதவும்.





0 comments:

Related Posts with Thumbnails