Monday, October 31, 2005

சொந்த விடயத்தில் இரண்டாம் வாக்கெடுப்பு

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ????????????????



மற்றுமொரு எண்ண அலை இன்று என்னை அனாலாக தீண்டிப்போனது. சொந்த விடயங்களின் பொருட்டு நாம் முடிவு எடுக்கும் பொழுது இரண்டாவது அல்லது மூன்றாவது என்று தொடர் கருத்து கணிப்பு எந்த வகையில் தமக்கு நலம் அல்லது நலம் பயக்காது என்பதனை பற்றிய ஒரு சிறு பதிவு. வள்ளுவம் கூறுகிறது:

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

மற்றுமொரு இடத்தில் படித்ததில் பிடித்த வரிகள்:

'Adventure without risk is Disnelyland.'

'Do what you will, this life is a fiction/And is made up of contradiction.'

மேலே கூறிய இரண்டு ஆங்கில வரிகளும் "Shaving The Inside of Your Skull" என்ற புத்தகத்திலிருந்து சுட்டது. இருப்பினும் கவனத்தில் நிறுத்தத் தகுந்த வரிகள்.

இப்பொழுது விடயத்திற்கு வருகிறேன். தமக்கு கிட்டிய உலகறிவும் உள்ளார்ந்த ஆன்மா விழிப்புணர்வும் மனிதனுக்கு மனிதன் சில வேறு நிலைகளில் (தட்டுகளில்) அமர்ந்து நாம் பார்க்கும் விடயங்களை அலசிபார்த்து எதனை எடுத்தால் நம்மால் செய்து முடிக்க முடியும் அது நம் வாழ்வு முறைக்கு உகந்ததா என்பதனை உள் மனம் கூற நாம் அதனை செயலாக படுத்துகிறோம் என்பது எனது நிலைப்பாடு. இதற்காக நான் Sigman Freud_யை உதவிக்கு அழைக்கும் எண்ணம்மில்லை இங்கு.

உண்மை இப்படியாக இருக்க நாம் எடுக்கும் முடிவுகளை மற்றவர்கள் நம்மை போலவே சிந்தித்து அவ் முடிவு எதிர் பார்த்தது போலவே அமையும் என்று அடுத்தவர்கள் கூற வேண்டும் அல்லது அம் முடிவை அங்கீகரிக்க வேண்டும்மென்று நினைப்பது தவறு என்பதும் கடந்த காலங்களில் நான் (வயதுக்கு வந்தபிறகு) தெரிந்து தெளிந்தவைகளில் ஒன்று.

அப்படி எடுத்த முடிவுகளுக்கு ஒரு உருவமும் கொடுத்து அதன் பயன்பாடும் வெளிக்கொணரும் பட்சத்தில் வேண்டுமானால் நீ என்ன சொல்ல வந்தாய் என்பதனை உனக்கருகமையிலிருந்தும் குறைந்த உலக அனுபவமே கிடைத்த உனது நெருங்கிய நண்பனோ அல்லது கூட பிறந்த சகோதரனோ கூட புரிந்து கொள்ளக் கூடும்.

பெரியப் பெரிய வெற்றிகள், ஏன் வாழ்வின் பயணப்பாடும் கூட இப்படி முரண்பாடுற்ற தீர்க்கமான முடிவுகளின் பொருட்டே அமைந்திருப்பதை நம் அன்றாட வாழ்வில் காண/கேட்டிருக்கக் கூடும். தனிப்பட்ட ஒருவரின் வாழ்வு ஏன் திறன்பட்டதாகவும் மற்றொருவரின் வாழ்வு அதாளபாதளத்தில் வீழ்ந்து கிடப்பதாகவும் கேள்வியுறுகிறோம் இவ்வளவுக்கும் அந்த இரண்டு அன்பர்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி, வாழ்வு சூழ்நிலை அமைந்தும். அவ் விடத்தில் தான் இந்த "decision making art" ஊடுருவி அவர்களிடத்தே உள்ள வித்தியாசங்களை வெளிச்சம் போட்டு காட்டி விடுவதாக எனக்குத் தோன்றுகிறது.

உங்களுக்கு எப்படியோ...?

Saturday, October 29, 2005

ஆமா, என்னிக்கு தீவாளி...!

புலம் பெயர்ந்து வாழ்வதால் கோடி நன்மை கிட்டுவதாக பல பேர் சொல்லக் கேட்டு நானும் சொல்லிக்கிட்டு திரியறேன். ஆனா, இந்த மாதிரி தீவாளி, பொங்கள்னு வந்திட்ட 'ச்செ' இதுவும் ஒரு வாழ்க்கையான்னு வருதுப்பா. இவ்வளவுக்கும் குடும்பமாகவே வெளி ஊர்ல இருந்தும், இப்படி நியாயமான கோபம் வருவதை என்னால தவிர்க்க முடியலை.

தீவாளி நெரிசல்ல சும்மா எல்லாப் பொருளும் இலவசமா கொடுக்கிற கணக்கா கடை வாசல்ல கட்டையால ஒரு அடி வாங்கிபோட்டு, கொட்ற வேர்வையா இருந்தாலும் சரி இல்ல மழையா இருந்தாலும் சரி அப்படி அனாசியமா நடந்து திரிஞ்சிப்புட்டு, தொப்பலா நனைஞ்சு போன பட்டாச வீட்டுக்கு எடுத்துட்டு போயி ஊது வத்தியோ இல்லன்னா சாட்டை பொரியோ வைச்சு சும்மா வெத்து வேட்ட பத்த வைக்கிற கணக்கா பத்து நடை நடந்து பட்டாசுக்கும் வீட்டு முக கதவுக்குமா பொம்பள பயக சிரிக்க நாம காட்ற சீனல்லாம் போச்சே, இதுவும் ஒரு பொழப்பால.

ஆமா, இந்த தீவாளி என்னிக்கு வருது. சொன்னிங்கன்ன அன்னிக்கு இங்ஙன உள்ள கோயிலுக்வாது போயித்து வாரோம். ஆங், துணி மணியா, அதான்
வருச முழுக்க அந்த sale இந்த sale_ன்னு எடுத்து வைச்சுருகிறதேயே போட முடியாம இருக்கே இதில என்ன thrilling இருக்கு, அதில இருந்து ஒன்ன எடுத்து போட்டுகிட்டா போச்சு. என்னங்க பட்டாசா, ஏப்பா நான் வெளில இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா, அதெல்லாம் வெள்ளகார மச்சான் independence தினத்துக்கு கப்பல்ல வைச்சு மெத்தமா வெடிச்சு காமிப்பான், நாம கையை கட்டிகிட்டு பத்திரமா ஒரு மைலு தள்ளி நின்னு பாத்துகிடுறொம்.

சரி நான் பொயித்து வரட்டா, இந்த நாயித்து கிழமை 0vertime பார்கணும். காசு... காசு... ஹாலோவின் இருக்கு கிரிஸ்துமஸ் வருது I have to ask my kids to make a wish list, so Santa can (check his pocket and) do early shopping (ஆமாப்பா, நான் தெக்கிக்காட்டான்தான்).

Thursday, October 27, 2005

புலம்பெயரவைக்கும் குழந்தை தத்தெடுப்பு முறை-2

இன்னும் முதல் பதிவு படிக்கலன்னா இங்கே சொடுக்குங்க...

கடந்த கட்டுரையில் குழப்பச் சூழலிருந்து விடுபட்டு தட்டுத் தடுமாறி கரை சேர்ந்தவர்களை பற்றி கூறியிருந்தேன். இப்பகுதியில் அதற்கு மாறாக அச் சூழலில் சிக்கிப் போகும் நபர்களின் நிலைதான் என்ன என்பதை பற்றி ஒரு சிறு கண்ணோட்டம். தனக்கு நல்ல ஒரு மாற்று பெற்றோர் அமைந்து போய் நன்கு படித்து விடவும் சந்தர்பம் கிடைத்த சில lucky ones தனக்குக் கிடைக்கும் பொது உலகறிவை வைத்துக் கொண்டு தப்பி பிழைத்து மனச் சாந்தி ஒரு காலக் கட்டத்தில் அடைந்து விடுகின்றனர் தன் விடாப் பிடியான ஆர்வத்தின் பொருட்டு.

அதற்கு மாறாக சில சமயங்களில் அது போன்ற உந்துதல்கள் அற்ற நிலையில் மனச் சோர்வுற்று சூம்பிப் போனவர்கள் தவறான சேர்க்கைகளின் மூலமாக தவறான பாதையில் சென்று மதுவுக்கும், போதைப் பொருளுக்கும், ஒரினச் சேர்க்கைக்கும் தள்ளப்பட்டு தனது வாழ்வையே தொலைத்துக் கொண்டவர்கள் எத்தனை பேரோ, யாருக்குத் தெரியும்.

இருப்பினும் எனக்கு அப்படி போனவர்களில் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, அதுவும் நமது டில்லியில் நான் ஒரு விடுமுறையின் பொருட்டு அங்கு சென்றிருந்த பொழுது ஒரு மாலை நேர பொழுதில் கையெந்தி பவன் அருகில் வாயில் புகையுடன். அவளுக்கு ஒரு 20 பதிலிருந்து 25 வயதுக்குள் தான் இருந்திருக்க வேண்டும், நல்ல நிறம், உயரம் மற்றும் அத்தியதிகளுடன் தனியாக ஒரு குமரி கையில் சிகரெட் மற்றும் கலைந்த தலையுடன் கேட்கவா வேண்டும் அவளை குறி வைத்து வரும் வண்டுகளைப் பற்றிச் சொல்ல. நான் தங்கியிருந்த விடுதியிலேயே அவளும் தங்க நேர்த்ததால் (அதெல்லாம் ஒரு காலம், நானும் ஒரு ஹிப்பியாக நினைத்துக் கொண்டு back pack செய்ததுண்டு) அவளுடன் பின் ஒரு சமயம் உரையாட சந்தர்ப்பம் கிடைத்தது. அப் பொழுது அவளிடமிருந்து நான் அறிந்து கொண்ட விடயங்கள் மனதை இடறியதில் இன்று இதனை எழுதும் வரையில் நெஞ்சில் தைத்துப் போனது என்றால் அது மிகையாகது.

அவளின் பெயர் கிளாரவாம், தனக்கு 9 வயதிருக்கும் பொழுது இந்தியாவிலிருந்து ஒரு அமெரிக்கா தம்பதியினாரால் தத்தெடுக்கப் பட்டு புலம் பெயரவைக்கப்பட்டாளாம், பிறகு அவளுக்கு நேர்ந்த தெல்லாம் ஒரு புத்தகமாக இடும் அளவிற்கு சோதனைகளை தவிர வேறுன்ருமில்லை அவள் வாழ்க்கையில் சந்தித்தாக அவள் நினைவு கூர்ந்தாள். அவளது தத்தெடுத்த பெற்றொர்கள் விவகாரத்து பெற்று யார் இக் குழந்தையை வளர்ப்பது என்பதில் தொடங்கி அவள் அதில் சிக்கி இங்கும் அங்கும் பந்தாடப் பட்டு பிறகு அவளது தாய் மறுமணம் புரிந்து அவளின் கணவன் நம்ம கிளாராவை சூரையாடிதில் முடித்து தான் இப் பொழுது எங்கு செல்கிறேன் எனது பயணத்தின் நோக்கம் தான் என்ன என்று விளங்கவில்லை என்று கேட்டு முடித்தால்.

தான் இந்தியாவில் இருக்கும் தருணத்தில் மனதில் ஒரு அமைதி ஏற்படுவதாகவும் தான் இங்கேயே (புலம் பெயராமல்) இருந்திருந்தால் இன்று வேறு மாதிரியாக இருந்திருப்பேனோ என்று வினாவும் அவளின் கண்கள் குளமாய், அதனை கேட்டுக் கொண்டிருக்கும் எனது கைகளில் ஒஷோவின் "வெற்றுப் படகு."

இங்கு ஒரு கேள்வி ஏன் நமது ஊர் அனாதை காப்பகங்களும் அரசாங்கமும் குழந்தை தத்தெடுப்பை ஒரு வியபாரமாக கருதாமல் நமது ஊரிலேயே குழந்தை தத்தெடுப்பை மேலும் தீவிரமாக ஊக்குவித்து மக்களாகிய நாமும் தானகவே முன் வந்து இக் குழந்தைகளை நம்மில் ஒருவராக ஆக்கிக் கொள்ளக்கூடாது? ஆன்மீகம் பேசும் இந்தியா ஏன் பல குழந்தைகளை நாடு கடத்தும் கட்டாயத்திலிருக்கிறது? நம்மில ஏன் பல பேருக்கு இம் மன (தத்தெடுப்பதற்கான) நிலையை இவ் ஆன்மீக இந்தியா வழங்கவில்லை? ஐயொ! யாரவது எனக்கு இதுக்கு இது சம்பந்தமாக எடுத்து வியம்புங்களேன். இந்தா வந்துருச்சு இன்னொரு சூறாவளி BETA...

Saturday, October 22, 2005

புலம்பெயரவைக்கும் குழந்தை தத்தெடுப்பு முறை-1

சுனாமி போன்ற இயற்கை சீரழிவுகளாலும் ஏனைய பிற சூழ்நிலை காரணங்களாலும் சிறுவர் சிறுமியர் அனாதையாக்கப் பட்ட நிலையில் அவர்கள் அனாதை காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டோ அல்லது தானகவோ தஞ்சம் புகுகின்றனர். இச் சூழ்நிலையிக்கு உட்பட்டு போன அக்குழந்தைகளின் எதிர் காலம் அவர்கள் எது போன்ற நிறுவனத்தில் சென்று அடைகிறார்கள் என்பதனை பொறுத்துதான் அமைகிறது. அண்மையில் ஒரு அனாதை விடுதியிலிருந்து கிளம்பிய சர்ச்சை யாவரும் அறிந்திருக்கக் கூடும். குழந்தைகளை ஆடு மாடுகளை சந்தையில் விற்பது போலவே பணத்திற்காக
விற்று போலி ஆவணங்களையும் தயார் செய்து வெளி நாடுகளுக்கு தத்து கொடுக்கப்படும் குழந்தை எங்கு சென்று எச் சூழ்நிலையில் யாருடன் வாழப் போகிறது என்ற எந்த விதமான ஆராய்சிகளும் அற்ற நிலையில் விலைக்குப் போகும் இந்த பிஞ்சு குழந்தைகள் தான் பெரியவனாக(ளாக) மற்றுமொரு கலாச்சார சூழ்நிலையில் வளர்ந்து, ஒரு நேரத்தில் வந்த பாதையை சற்றே நின்று நிதானித்து பார்க்கும் தருணத்தில் எத்தனை விதமான குழப்ப நிலைகளை கடந்து வந்திருப்பதும், இன்னும் தன்னைப் பற்றிய அடையாள தன்னுணர்வு தாக்கம் மேலோங்கியே இருப்பதையும் உணர்வது மறுக்க முடியாத உண்மை.

இக் குழந்தைகள் வெளிநாட்டு சூழ்நிலையில், வளர்க்கப் படுமிடமும் சிறு ஊராக இருந்து, பெற்றோரும் பொறுப்பற்றவர்களாக அமைந்து, தன்னையொத்த (தோற்றத்தில், நிறத்தில்) சிறுவர் சிறுமிகளும் அற்ற நிலையில் தான் ஒரு காட்சிப் பொருளாக போகுமிடமனைத்தும் உணரவைக்கப் பட்டு பின்னாளில் பல நிலைகளில் தன்னைப் பற்றி மேலும் அறிய நடத்தும் மனப் போரட்டம், தான் யார் என்ற சுய சிந்தனை தன்னை ஒத்த இனத்தவர்களை பார்க்கும் பொழுது மனதில் எழும் உணர்ச்சி, அதனை தொடர்ந்து தனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது என்று காலம் தோரும் உரக்க சப்தம்மிடும் தன் மனச் சினேகிதி(தன்) என்று தனது வாழ் நாள் முழுதும் ஒரு போரட்டமே வாழ்வாக அமைந்து விடுகிறது இவர்களுக்கு.

நாம் பேசிக் கொண்டிருப்பது ஒரு சில குழந்தைகள் தான் தத்தெடுக்கும் பொழுது ஒரளவிற்கேனும் விபரம் தெரியும் வயதில் அப்படி புலம் பெயர்ந்திருந்து தன் விட முயற்சியின் பொருட்டு தனக்கு முன்னமே பரிச்சாயமான மொழியையும் ஏனைய பிற விடயங்களையும் மனக் கண் முன் நிறுத்தி பின்னாளில் கரை சேர்வபவர்களைப் பற்றி.

அவற்றுக்கு மாறாக குழப்ப நிலையிலேயே லயித்து தன் வாழ்வை சூன்யமாக்கி கொண்டவர்களை பற்றியும், அது போன்ற இன்னல்களை நமது அரசங்கமும் ஏனைய காப்பக நிறுவனங்களும் தடுப்பதற்கான வழி முறைகள் என்ன என்பதையும் எனது அடுத்தப் பதிப்பில் பார்ப்போம்.

...தொடரும்.

இதன் இரண்டாம் பாகம் ===> புலம்பெயரவைக்கும் குழந்தை தத்தெடுப்பு முறை-2

Friday, October 21, 2005

பழுத்த மரமே கல்லடி படும்

காசி போன்றவர்கள் சமுதாய பொது நலனுக்காக தனது அசொவ்கரியத்தையும் பொருட்படுத்தாமல் தனது சொந்த முயற்ச்சியில் இது போன்ற உன்னத விடயங்களை வழங்கும் தருனத்தில் அவரின் மீது கல் வீசப்படுவதை பார்க்கும் பொழுது ஒரு பழமொழியைத்தான் எனக்கு ஞாபக மூட்டுகிறது, "பழுத்த மரமே கல்லடி படும்" மென்பதுதான் அது.

இது போன்ற தருனத்தில் அட போங்கப்பா என்று எடுத்த காரியத்தைக் கூட விட்டு தள்ளிவிட தோன்றுவது தவிர்க்க முடியாத விடயம், தான் எடுத்த காரியத்தின் ஆழத்தை அதன் உயரிய நோக்கை சரியாக பயன் படுத்திக் கொள்ளாத பட்சத்தில் அது போன்ற மனச் சோர்வு சொல்லிமாலாது. இருப்பினும் விழுகின்ற கற்களிலிருந்து ஏதெனும் சுட்ட கற்களும் கிடைகின்றனவா என்று பார்க்கலாம்.

Thursday, October 20, 2005

தனிப்பட்ட நபரின் நிதி நிலை சுதந்திரம்

தனிப்பட்ட நபரின் நிதி நிலை சுதந்திரம் அவரின் சமுதாய கண்ணோட்டத்தில் தொடங்குவதாக எனக்குப் படுகிறது. நான் முன்பே எனது வலைப்பூ பக்கத்தில் "உதவாக்கரை பட்டாதாரிகள்" என்ற தலைப்பின் கீழ் சில பல அன்பர்களின் (படிப்பிற்கு பிறகு ஊர் திரும்பும்) பொதுவான மனவோட்டத்தை அதில் நான் கவனித்து அவர்களுடன் பழகிய நாட்களிலிருந்து தெரிந்து கொண்டதை அங்கு எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக மேலும் சில சிந்தனைத் துளிகளை இங்கு விட்டுச் செல்லப் போகிறேன்.

எங்கேயோ கேட்டது "செய்யும் தொழிலே தெய்வம்" என்று நம்ம ஊரில் எல்லா விசயத்திற்கும் இது போன்ற பழ மொழி ஒன்று இருக்கும் அதற்கு எதிர் இணையான ஒரு சொல்லும் இருக்கும். நமது சமுதாயத்தில் இதனை தொழிலாக செய்தால் அவன் பெரியவன் அதனை தொழிலாக செய்தால் இவன் சிறியவன் என்று பால்ய வயதிலிருந்தே நாம் கற்பிக்கப் பட்டு நமக்கென்று ஏதேனும் சிறு தொழில் தொடங்க அனைத்து வாய்ப்புகளும் (வயதும்) சாதகமாக இருக்கும் நிலையிலும் அந்த தொழிலப் போயி நான் எடுத்து நடத்துறதான்னு விட்டுத் தள்ளிப்புட்டு மோட்டு வளையத்தை பார்த்தபடி வருடங்கள் பல கழிப்பதுண்டு.

என் நண்பர் ஒருவர் லண்டனிலிருந்து திரும்ப விடுமுறைக்காக ஊர் வந்திருந்த போது அவரை மற்ற வேலை வெட்டி இல்லாத (இருந்தும்) நண்பர்களுடன் ஒரு தேனீர் கடை முச்சந்தியில் சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது ஒரு நண்பர் அந்த லண்டன் நண்பரை பார்த்து என்ன வேலை பாக்றீங்க அங்கன்னு சும்மா கேட்டு வைச்சார், கொஞ்சம் வாய் துடுக்கான மற்றொரு நண்பர் கொஞ்சமும் எதனைப் பற்றியும் கவலைப்படாமல் (அவர் வீட்டில் வேலை இல்லாமல் மூன்று பட்டதாரி சகோதரர்களிருந்தும்) "என்ன லண்டன்ல ஏதாவது டீ கடைல கப்பு கழுவு வாரு" என்று கூறியதை கேட்டு அனைவரும் அது ஒரு joke-ஆக நினைத்து சிரித்து வைத்தார்கள். என் மனதில் எங்கோ தைத்தது பிரிதொரு சமயத்தில்.

அப்படி வேலை செய்வதில்தான் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை. எனக்கு தெரிந்து அமெரிக்காவில் சில நண்பர்கள் மென்பொருள் தொழில் தொய்வுற்று தனது வேலை போன நிலையில் பெட்ரோல் பங்களில் வேலைக்கு அமர்ந்தது இன்று ஞாபகத்திற்கு வருகிறது, எப்படி அவர்களால் அவ்வளவு சுலபமாக அதை எடுத்துக் கொள்ள முடிந்தது (Besides the reason working for dollars)? யோசிக்க வைக்கிறது.

இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் Royal Blood Run_ ஆவதாக பிரிதொரு சமயத்தில் ஒரு ஆந்திர அன்பர் அமெரிக்காவில் இருக்கும் பொழுது சொல்ல கேட்டதும் உண்டு. ஆக மொத்தத்தில் நாம் இந்தியர்கள் அனைவரும் கீழே கூறப்பட்டுள்ளது போல் இல்லாமல் (we think like a king but work like a dog) போலி கெளரவத்திற்கு உட்பட்டு தன்னிலையறிந்து உலகயியல்பு புரிந்து முன்னேறும் மற்றவர்களையும் அவதூறு பேசித் திரிபவர்களையும் நம் சமுதாயம் தக்கவைத்துக் கொண்டுதான் விடுகிறது.

என்று நம்மிடத்தில் இவ் மன ஓட்டம் மாறி எத் தொழில் புரினும் அதனை நேர்மையுடன் வழி நடத்தி நாமும் வாழ்வதற்கு ஒரு வழிவகை தெரிந்து கொண்டு மற்றவர்களையும் வாழ வைத்தால், தன் குடும்பமும் நாடும் சுபிட்சம்காணும் என்பதில் ஐயமில்லை.

Wednesday, October 19, 2005

முதுமை ஒரு சாபக்கேடா...?

முதுமை என்பது ஒரு அழகானதொரு விசயமென்பதை நான் பல சந்தர்ப்பங்களில் கவனித்து அதிசயித்தது உண்டு. அதே சமயத்தில் சில காணக் கூடாத விசயங்களையும் கண்டுணர்ந்தது உண்டு. இன்றைய சமூக அமைப்பு பெரும்பாலும் தன்னிச்சையாக இயங்கும் (கூட்டுக் குடும்ப அமைப்பிலிருந்து விலகிய) குடும்பங்களையே பெரிதும் சார்ந்துள்ளது. இது பல நிலைகளில் அம் மாதிரியான அமைப்பை அங்கீகரிப்பதும் யாவரும் அறிந்ததே.

இச் சூழ்நிலையில் ஒரு காலக் கட்டத்தில் 'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பதற்கிணங்க ஒரு சில குடும்பங்களில் உள்ள ஒரு நபரோ அல்லது குடும்பமோ புலம் பெயர்ந்து சென்று அயல் நாடுகளில் அமர்ந்தார்கள், ஆனால் இன்றைய நிலையோ வேறாக இருக்கிறது. இன்று புலம் பெயர்தல் என்பது அயல் நாடுகளுக்குத்தான் என்ற நிலை மாறி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் செல்வது அத்தியாவசியமாகி வருகிறது.

இதனால் பாதிக்கப் படுவது பெரும்பாலும் முதுமையில் காலம் தள்ளி வரும் வயதான பெற்றோர்கள்தான் என்பது சொல்லித் தெரிவதற்கில்லை. அவர்களை முதியவர்கள் காப்பகத்தில் பிடித்துத் தள்ளி விட்டு விட்டு நாம் right behind our own dreams since we have gotten our own wings.

இவ் விடத்தில் யாரைக் குற்றம் கூறுவது என்று எனக்கு விளங்கவில்லை. புலம் பெயர்தலால் அடையும் நன்மைகள் பலப்பல, அதே தருனத்தில் நாம் நமது பெற்றோர்களுக்கு கொடுக்கும் மன உளைச்சலுக்கும் நிம்மதியின்மைக்கும் அளவில்லைதான்.

வந்த இடத்தில் நன்றாக பணமும், பெயரும், வாழ்க்கைத் துணையும் நமக்கு அமைந்து விட்ட தருனத்தில் நாம் நமது எதிர் கால பத்தாண்டு திட்டத்தில் நம்மை தொலைத்துக் கொண்ட நேரத்தில் குரல் மக்கிப் போன அப்பாவின் ஞாபகம் கொஞ்சம் காணாமல் போனதில் வியப்பில்லைதான்.

இருந்தாலும் அவர்களுக்கென்று நம் வயதில் என்ன கனவு இருந்ததென்று நாம் அவர்களிடத்தே எப்பொழுதாவது வினாவி இருக்கிறோமா? அவர்களின் கனவின் விலையில் நம்முடைய வாழ்க்கை, அது தானே உண்மை.

அம்மாவிற்கு நெஞ்சு வலியென்றால் பணம் மட்டுமே அவரை குணப் படுத்திவிட முடியுமா? அதே சமயத்தில், யாரும் அவர்கள் அருகாமையில் இன்றி குறைந்த அளவிற்கே அவர்களுக்கும் தன் உடல் நலத்தைப் பற்றிய பிரக்ஞை இருக்கும் பட்சத்தில் அவர்களின் கதிதான் என்ன? Ignorant people just leave them alone என்று கூறி மூட்டை கட்டி அனுப்பி விடத்தான் முடியுமா? எப்படி எனக்கு நானே ஆறுதல் அளித்துக் கொள்வேன், ஏதாவது ஒன்று ஏடா கூடமாக நடந்து விட்டால்? அவர்களுக்கென்று கனவு இருந்திருக்காதா, நம் பிள்ளைகள் நம்மை வயதான கலத்தில் பக்கத்திலிருந்து காப்பாற்றுவார்கள் என்று?

இது இப்படியாக இருக்க அருகாமையில் இருக்க வாய்ப்பு கிடைத்தும் பெற்றோரைப் புறக்கணிக்கும் பிள்ளைகளை எந்தக் கணக்கில் சேர்ப்பது? எனக்கு தெரிந்து ஒரு கிராமத்தில் மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனான ஒரு பெரியவர் தனது இறுதி காலத்தில் தட்டை தூக்கிக் கொண்டு நேரத்திற்கு ஒரு வீட்டில் சோறு என்று அலைந்து திரிந்த கன்றாவியும் எனது சிறு வயதில் பார்க்க நேர்ந்ததுண்டு. இன்றும் இதில் விளங்காத ஒரு விசயம் அம் மூன்றில் ஒருவருக்கு கூடவா வாழ்வியல் சார்ந்த எதார்த்தம் புரியாது போயிருக்குமென்பது தான் அது?

நம் குழந்தை நாம் எப்படி இச் சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பதனை role model-ஆக நம்மை வைத்துதானே பார்த்துக் கற்றுக் கொள்கிறது "விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்" இதனை ஏன் நாம் மிகவும் தாமதமாகவே விளங்கிக் கொள்கிறோம்?

பி.கு: இங்கே மங்கையும், காட்டாறும் இதே லைனில் ஆளுக்கொரு பதிவும் பதிந்து வைத்திருக்கிறார்கள். (ஆகஸ்ட் 15, 2007 என் ஞாபகத்திற்காக இங்கு இந்த லிங்குகளை இணைத்துக் கொண்டுள்ளேன்).

இயற்கைச் சீற்றம்...

மனித வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு இன்றைய தினத்திலே எங்கு திரும்பினும் இயற்கை பேரழிவுகளால் நாம் பாதிக்கப் பட்டு வருவதுபோல் காணப்படுகிறதே, அது எந்த அளவிற்கு உண்மை. இது காலங்கள் தோறும் நடந்துவரும் ஒரு சாதாரண இயற்கைச் சுழற்சியா அல்லது காட்சி ஊடகங்களின் அதீத பங்களிப்பால் நாம் அப்படி உண்ர்கிறோமா அல்லது விஞ்ஞானப் பூர்வமாக நிருபிக்கப் பட்ட Green House Effect-ஆல் ஆன Global Warming-கினால? அண்மைக் காலங்களில் நாம் கடந்து வந்திருக்கின்ற பாதையை சற்று உற்று நோக்கினால் அச்ச மூட்டுவதாகத்தான் எண்ணத் தோன்றுகிறது.

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் நடந்தேரிய சுனாமி, அண்மையில் மும்பை மற்றும் ஆந்திராவில் கொட்டிய மழையளவு, வட மற்றும் தென் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் (Glaciers) உருகி கடல் மட்ட உயர்வால் காணாமல் போகும் தீவுகள், வட மற்றும் தென் அமெரிக்கா சூறாவளிக் காற்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஈரான் நில நடுக்கம் இப்பொழுது நடந்திருக்கின்ற பாகிஸ்தான் நில நடுக்கமும் அதனையொட்டிய மனித இழப்புகளையும் காணும் பொழுது இயற்கை நமக்கு ஏதோ சொல்ல வருவதாக எனக்குத் தோன்றுகிறது.

இப் பூமிப் பந்து சூரியனில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவில் தன்னை தக்க வைத்துக் கொண்டதின் மூலமாக போதுமான அளவிற்கு வெப்பமும் ஏனைய மூலப் பொருட்களும் ஒருங்கே அமைந்து உயினங்கள் தோன்ற வழி வகை செய்தது. அதில் முதன்மை காரணியாக கருதப்படும் வெப்பநிலை மாறும்பொருட்டு அதனையே சார்ந்துள்ள அனைத்தும் மாற்றங்களை சந்திப்பதில் ஒன்றும் ஆச்சரியமூட்டுவதிற்கில்லை. இது இப்படியாக இருக்க எந்த அளவிற்கு இந்த Global Warming என்பது உண்மையென்பதை நம்புவதில் நம்மில் பலருக்கு (ஏன் தீரன் புஷ்-க்கு கூட) பிரச்சனையிருப்பதாக தெரிகிறது.

நாம் இப் பூமிப் பந்தை சூடேற்றித்தான் வருகிறோம் என்பதற்கு ஆதாரமாக ஆய்வுக் கூடங்களிலிருந்து வரும் ஆய்வுச் சுட்டறிக்கைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை. நம் தாத்தா நம்மிடம் விட்டு விட்டுச் செல்ல துடிக்கும் ஏனைய விடயங்களில் இந்த இயற்கை பற்றிய அனுபவச் சுட்டறிக்கையும் அடங்கும். "என் காலத்தில மும்மாறி தப்பாம மழை பெய்யும், குளம் குட்டையெல்லாம் நிரம்பி வழியும்" என்று கூறி வந்த அதே தாத்தா இன்னிக்கு நம்மோட சேர்ந்து எலி பிடிச்சு வயித்த நிரப்பிக் கொள்ள வேண்டிய நிலை. என்னாச்சு அப்படின்னா? எங்கே போனது அந்த குளம் குட்டையெல்லாம்?

எங்கேயோ உள்ள தெக்கிக்காட்டில் ஒரு ஊருணி வற்றிப் போனதிற்கும் கலிஃபோர்னியாவில் ஹம்வி ஓட்டும் மெலிசாவிற்கும் தொடர்பிருக்கிறதா இல்லையா? இருக்கிறது! Eco-systemல் இவ்வுலகில் உள்ள ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று ஏதோ ஒரு விகிதத்தில் சார்ந்துதான் உள்ளது. அக் கூற்றின் படி ஒவ்வொரு மெலிசாவும் தன் பொறுப்புணர்வு அற்ற நிலையில் "யாருக்கென்ன" என்று மற்றொருவரின் விலையில் இக் காற்றை மாசுபடுத்தலிலும் வெப்பமேற்றலுக்கும் பொறுப்பாளியாகிறார்.

உலகமயமாக்களின் மற்றுமொரு அசிங்க கம்பளம் இப்படியாகத்தான் விரிந்து வருகிறது. Bigger is beautiful and supersize everything are the slogans of globalization: Yet the nature's mantra goes like this Consume as much as you want until you are being consumed as whole.

இப்பொழுது வளர்ந்த நாடுகள் மட்டுமே அடிக்கும் அட்டுழீயத்திற்கே இந்த நிலையென்றால் சீனாவும், இந்தியாவும் இந்த கூத்தில் கலந்து கொண்டு வீட்டுக்கு இரண்டு கார்கள் என்ற நிலையில் நம் உலகம் எப்படியிருக்கும். WTO-வும் G8-தான் நம்மை காப்பற்ற வேண்டும் (ஹா...ஹா). இன்றைய காலக் கட்டத்தில் யாரைப் பார்த்து யார் என்ன கற்பித்துக் கொள்கிறோம் அது எதற்காக என்று நமக்குள்ளாகவே கேள்விகள் தொடுத்துக் கொண்டு, நாம் ஒவ்வொருவரும் நம் பொறுப்புணர்ந்து வாழ்வதற்கென்று இருக்கின்ற இந்த ஒரே ஒரு (பூமி கிரக) வீட்டைப் பேணி பாதுகாப்பது நமது கடமையென்பதை உணர்ந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டுமென்பது என் கருத்து.

Saturday, October 15, 2005

ஆன்மீகம் சினிமா சந்தையில்...!

ஒரு காலக் கட்டத்தில் ஆன்மீகத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள நினைப்பவர்கள் அதற்கான சரியான தருனம் கிடைக்கும் வரை காத்திருந்து அந்த அவாவிற்கு எந்த கலங்கமும் ஏற்படாத வண்ணம் காத்து தக்க நேரத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட காலம் போய் இன்று அது சினிமாக் காரர்களுக்கு அதுவும் ஒரு பாகம்-2 என்றாகிவிட்டதோ என்று தோன்றுகிறது.

எங்கோ எப்பொழுதோ படித்த ஒரு விடயம் இப்பொழுது இங்கு ஞாபகத்தில் வருகிறது "சன்யாசம் என்பது ஒரு மனிதனுக்கு திடீரென நிகழ்வது (கட்டியிருக்கும் வேட்டியை டர்ரென நான்காக கிழித்து ஒரு துண்டை கட்டிக்கொண்டு மீதத்தை உதறித் தள்ளிவிட்டு-மீதமிருப்பது சுமையென்று கருதி சன்யாசம் ஏற்பதுபோல) அது திட்டமிட்டு நிகழ்வது கிடையாது."

நன்றாக ஊன்றிப் பார்த்தால் குஞ்சு முதல் குளுப்பான் வரை இன்று பிரத்தியோக சினிமா மற்றும் பொது விழாக்களில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் அனைத்தும் முற்றும் திறந்த முனியாக இருப்பதுபோல் காட்டிக் கொள்கிறார்களே அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்றே தெரியவில்லை.

இல்லை அது போன்ற பணிவும் தாழ்வும் வளர்ச்சிக்கு உதவும் என்ற வியாபார நோக்கில் காட்டிக் கொள்ளப்படுகிறதா? கையை கட்டிக் கொண்டு நெற்றியில் திருநீரு ததும்ப பேட்டியளிக்கும் ஒருவர் camera-விற்கு பின்னால் கோடியில் விலைபோகிறார். இது போன்ற பாசாங்குத்தனம் வேறு எந்த மாநிலத்திலும் நாட்டிலும் நடப்பதுபோல எனக்குத் தெரியவில்லை.

இங்கு எனக்கு ஒரு கேள்வி நடிக்கும் படமனைத்தும் superhit என்றால் ஏன் ஒரு படத்தை கண், காது அல்லது அனாதை ஆசிரமங்களின் தயாரிப்பில் தன் செலவிலேயே படத்தையும் எடுத்து உரிமத்தையும் அவைகளுக்கு வழங்கக் கூடாது? ஏன் தானே முன் உதாரணமாக தன் வீட்டிலேயே இரண்டு மூன்று அனாதை குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துக் காட்டியிருக்கக் கூடாது அன்பர் பார்த்திபன் போல? புரியலப்பா.

Friday, October 14, 2005

எது நாகரீகம்...?

உலகம(ந்த)யமாக்கப்பட்ட இன்றைய சூழலில் நடுத்தர தட்டு மக்களிடையே எப்படி வாழ்ந்தால் நம்மை நாகரீகம் அடைந்தவர்களாக அடுத்தவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற குழப்ப நிலை பீடித்திருப்பதை எங்கு திரும்பினும் காண, கேட்க முடிகிறது. நாகரீகம் அடைந்ததாக மார் தட்டிக் கொள்ளும் வளர்ந்த நாடுகள் எந்தத் தவறுகளை செய்து தன்னை திருத்திக் கொள்ள முற்பட்டு வருகிறதோ, அதே தவறை நாம் மிகவும் முயற்சித்து பெற்றுக் கொள்ள எத்தனிப்பது வேதனையான விசயம். இயற்கையில் கிடைக்கும் நல்ல குடி நீரை தவிர்த்து "கோக்" குடிப்பது எந்த வகையில் புத்திசாலித்தனம்?

"கோக்" குடித்தால் so cool என்று நினைத்து உடல் நலத்தை தெரிந்தோ தெரியாமலோ பாழடித்துக் கொள்வதை உணர்கிறோமா? மேலை நாடுகளில் நடத்திய ஆராய்ச்சிகளின் மூலம் தெரிந்த உண்மை கோக் குடிப்பதின் மூலம் உடம்பிலுள்ள எலும்புகளின் அடர்வுத் தன்மை குறைகிறது என்பது. இதனால் எலும்பு எளிதில் முறியும் தன்மை அதிகரிப்பதாக அவ் ஆராய்ச்சி எடுத்துரைக்கிறது.

அதன் படி சில அமெரிக்கா மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் கோக் விற்பனை தடுப்பு அமுலில் உள்ளது. உண்மை இப்படியாக இருக்க நாம் ஏன் அறிந்தே அத் தவறை செய்ய நம் குழந்தைகளை அவ் ஆபத்திற்கு யிட்டுச் செல்ல வேண்டும்.

அது போன்றே fast food சாப்பிடுவதும் so cool என்று கருதி வளர்ந்த நாடுகளில் எது Junk Food என்று பெயரிட்டு ஒரு டாலருக்கும் இரண்டு டாலருக்கும் குறைவாக செலவு செய்து ஒடும் ஓட்டத்தில் முழுங்கி வைக்கும் sandwich-களில் எவ்வளவு கலோரி இருக்கிறது எவ்வளவு கொழுப்பு உட்கொள்கிறோம் என்று பிரக்ஞையற்று உண்டு பின்னாலில் obesity-க்கு ஆளாகிறார்கள்.

ஆனால் கொஞ்சம் படித்தவர்களோ அங்கேயே தேடித் தேடி நாம் இப்பொழுது உங்க வீட்டிலும் எங்க வீட்டிலும் சாதாரணமாக உட்கொள்ளும் பச்சைக் காய்கறிகள் (Organic Food-மிக்க பிரபலம்) மற்றும் வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். உண்மை இப்படியாக இருக்க நாம் இப்பொழுது pizza சாப்பிடுவது வயித்து பசிக்கு என்பதை மறந்து மதியம் சாப்பிட்டு விட்டு இரண்டு மூன்று நாள் கழித்தும் அது பற்றி பீற்றிக் கொள்ளும் "பாற்கடல் அமுதம்" ஆகி விட்டதை நினைத்தால் என் தலை தொங்கிப் போய் விடுவதை தவிர்க்க முடியவில்லை. பீட்சா சாப்பிட்டால் முக்தியா கிட்டும் அதுவும் small pie (ரூபாய் 350-க்கு) வாங்கி பழநி பஞ்சாமிர்தம் சாப்பிடுவது போல் ஆறு பேர் சாப்பிட்டுவிட்டு?

இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல அமெரிக்காவில் ஒரு McChicken_னின் விலை ஒரு டாலர் அதே குப்பையை நம்மூரில் 100 ரூபாய்க்கும் மேல் கொடுத்து வாங்கி சாப்பிடுவதின் நோக்கம் என்ன, உடல் நலத்தை பேணுவது கருதியா, இல்லை இதற்கு முன்பே அதை அடிக்கடி சாப்பிட்டு நாக்கு அடிமைப் பட்டு போனதாலா, அல்லது நிறைய சம்பாதித்து (சாதித்து) விட்டோம் எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் போனதினாலா (அப்படியென்றால் இங்கு ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது நல்லது, நமது நாட்டில் இன்னும் அறுபது விழுக்காடுகளுக்குமேல் பட்டினிச் சாவு நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதை) அல்லது merely just to say, hey, look today we ate at McDonald என்ற அல்ப சுய சிந்தனையற்ற நிலையை காட்டவா? இதில் எது?

நம்மையும் நமது குழந்தைகளையும் இந்த வியாபாரச் சந்தையில் தினமும் இழந்து கொண்டிருக்கிறோம். மனிதன் மன மகிழ்வுடன் வாழத்தான் ஒடி ஆடி உழைப்பது எல்லாம் ஆனால் அந்த மகிழ்வு யாருடைய செலவில் வருகிறது என்பதை சற்று சிந்தித்து நமது முன்னோர்கள் நமக்கு விட்டு விட்டுப் போன இந்த இயற்கை வளங்களை நாமும் நமக்கு பின்னால் வரக்கூடியவர்களுக்கு பொறுப்புணர்வுடன் விட்டுச் செல்வது நாம் எந்த அளவிற்கு மனத்தளவில் நாகரீகம் அடைந்திருக்கிறோம் என்பதைக் காட்டும்.

அதை விடுத்து மேலை நாட்டினர் பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து கொள்கிறார்கள் (with all that consumables like disposable everything) என்பதற்காக நாமும் அவ்வழி நடப்பதில் என்ன நாகரிகம்.

Disposable வழிதான் நாகரீகமென்றால் நாம் சேர்க்கும் குப்பையை யார் சுத்தப் படுத்துவது, இயற்கை பேரழிவுகளா? எப்பொழுது நாம் நமக்காக நம் சுற்றுச் சூழலிற்கு தகுந்த வாழ்வு முறையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னலேயே விட்டுச் சென்ற (உ.ம்: வாழை இலையில் உண்பது) "உண்மை நாகரீகச் சான்றோர்கள்" பழக்க வழக்கங்களை பின் பற்றிச் செல்வதில் கேடு ஒன்றுமில்லை என்று உணர்கிறோமோ அன்றுதான் கலச்சார சீரழிவும் இயற்கை வளமும் இந்த copy cat-களிடமிருந்து காப்பாற்றப்படும்.

Wednesday, October 12, 2005

யார் பெரியவன்...?

சிறுவனாக இருக்கும் பொழுது ஒரு சில விசயங்களை பெறுதற்கென, ..ச்சே நான் பெரியவனாக இருந்திருந்தால் அது எனக்கு கிடைத்திருக்குமோ என்று நினைத்து எப்பொழுதுதான் நான் பெரியவனாக ஆவேனோ என்று சிறு வயதில் நினைக்கத்தோன்றும். அது அந்த வயதிற்கே உரித்தானது.

அந்த சிறு வயது அவா நிலையை தான் வயதளவில் நெடுக வளர்ந்தும் மன அளவில் சிறுவனாக வாழும் நம்மில் பலர் எப்படிப் பெரியவனாவது என்ற குழப்ப நிலையில் தான் "இப்படியானால் பெரியவனோ, அப்படி நடந்து கொண்டால் பெரியவனோ" என்று கருதி ஒரு அரசியல் வாதியாகவோ, நிறையப் பணம் சேர்த்தோ அல்லது நிறையப் படிப்பவன் போல் பாசாங்கு செய்தோ அல்லது குறைந்த பட்சம் ஒரு (அடி)கட்டப் பஞ்சாயத்து ஆசாமியாகவோ அவதாரம் எடுக்கச் சொல்கிறதோ, என்று எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

என்னைப் பொருத்தமட்டில் எப்பொழுது இந்த பிரக்ஞை ஒருவருக்கு தான் "பெரியவன்" என்று நினைக்கத் தோன்றுகிறதோ அன்றே அவரின் ஒவ்வொரு அசைவிலும் போலித்த்தன்மை அத்தியாவசியம் ஆகிறது. இன்னும் ஒரு சிலர் இப்படி நடந்து கொண்டால், இப்படிப் பேசினால் நமது அங்கீகாரம் சமுதாயத்தில் உயர்வதாய் நினைத்து தனது வாழ்க்கையையே நகைப்புக்குள்ளாக்கி கொள்கிறார்கள்.

தனக்கு சிறிதும் தொடர்பில்லாத விடயங்களை செய்து கொண்டு வெளிப் பார்வைக்கு நான் இப்படிப் பட்டவனாக்கும் என்பது போல் நடை உடை பாவனைகளை செய்து கொண்டு ஆனால் அவர்களுக்குள் ஒரு ஒன்றுமற்ற வெற்றீடமாக வாழ்கிறார்கள். அப்படி வாழ்வதில் யாருக்கு லாபம்?

இவர்கள் என்றைக்கேனும் தனக்காக என்று ஒரு நாள் வாழ்ந்து அதிலுள்ள சுகத்தை அனுபவித்திருப்பார்களா? போலியாக வாழ்வதில் தான் எத்தனை ஏமாற்றங்கள் முதலில் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதில் எத்தனை இழப்பு?

தனக்காக வாழும் பொழுது அதனை ரசித்து மனநிறைவோடு செய்யும் ஒருவர் அதற்கு மாறாக யாராகவோ நடிப்பதில்தான் எத்தனை அசெளகரியத்தை அனுபவிக்கிறார். மாறி வரும் அல்லது சுருங்கி வரும் இவ்வுலகில் இன்றைய நடைமுறை நாகரீகமாக கருதப் படுவது எதுவெனில் "நீ அடுத்தவர்களுக்கு அசெளகரியத்தை கொடுக்காமல் எது செய்தாலும் அது நாகரீகம்."

அப்படி ஒரு வாழ்க்கையை தனக்காக வாழும் பொழுது வெளிப் பகட்டை ஒரு பொருட்டாக கருதாத பட்சத்தில் வாழ்க்கையில் ஒரு நிம்மதியும் தெளிவும் குடும்ப உறுப்பினர்களிடத்தே தோன்றக் காண்போம். அப்படி வாழும் பொழுதுதான் மனத்தளவில் ஒருவன் பெரியவன் ஆகிறான் என்பது என்னுடைய கருத்து. அப்படிப் பட்டவர்களின் மூலமே அவர்கள் ஒன்றி வாழும் இச் சமுதாயத்திற்கும் ஏதேனும் படைப்ப(பங்க)ளிக்க இயலும்.

இது போலிச் சாமியார்களுக்கும் வனத்தில் (மறைந்து) வாழும் உண்மைச் சாமியார்களுக்கும் உள்ள குறைந்த பட்ச ஆறு வித்தியாசங்களைப் போன்றது.

Tuesday, October 11, 2005

உதவாக்கரை பட்டாதாரிகள்...!

Only musings and more musings from my side until I drain down to the core of my depth...

எனக்கு அடிக்கடி இப்படித் தோணுவது உண்டு வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற நியதி மாறி வீட்டிற்கு ஒரு உதவாக்கரை பட்டாதாரி உருவாக்குகிறோமோ என்று. கல்லுரி சென்று ஏதோ "எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு சென்றார்" என்ற தொனியில் கனவுகள் பல சுமந்து தனது சிரமத்தையும்பாராமல் பெற்றோர்கள் அனுப்பும் பணத்தில் ஊர் சுற்றி திரிந்து, தம் அடித்து, வாழும் தெய்வங்களாய் வணங்கப்படும் சினிமா நட்சத்திரங்களின் படங்கள் தோரும் ஒன்று விடாமல் பார்த்து பிறகு ஏதோ தர்மத்திற்கு கிடைக்கும் just pass மதிப்பெண்களை பெற்று பிறகு சுவற்றில் அடித்த பந்தாக மூன்றாவது ஆண்டு முடித்து வீடு வந்து சேரும் இந்த சராசரி (loser)இளைஞனின் எதிர்கால சூன்யத்தை பற்றியது இந்த வலைப்பதிப்பு.

இந்த வகையான இளைஞர்கள் குறைந்த பட்சம் "கலெக்டர்" வேலைக்கு குறைந்து வேறு எந்த வேலையும் செய்ய முடியாது என்று சத்தியமாய் கூறி ஊர்வலா வரும் இவர்கள் ஒரு ஐந்திலிருந்து எட்டு வருடங்கள் வெட்டியாய் இருக்கும் நிலையில் இடை இடையே தான் சொந்த தொழில் தொடங்குவதாய் கூறி வட்டிக் கடையோ அல்லது ஒரு வெட்டிக் கடையோ திறந்து அதனை நண்பர்களின் சாயந்திர நேரக் குழுமுமிடமாகவும் மாற்றி பிறகு அதுவே "Bar" ஆக மாறும் அபாயத்தையும் உண்டுபண்ணிவிடுவார்கள்.

இதற்கிடையே இந்த நவீன நிதி திர(ரு)ட்டு வல்லுனர்கள் திருமண வயதையும் அடைந்து விட்டதால் பெற்றோர்களின் அடுத்த தலைவலி ஆரம்பிக்கிறது. நெட்டையோ குட்டையோ, நொண்டியோ நொடமொ நல்ல வர(ராத)தட்சிணை கொடுக்கும் இடமாய் பார்த்து நம்ம கதாநாயகனை கலுவேற்றியும் வைத்து விடுவார்கள். பிறகென்ன இவர்களையும் நமது சமுதாயம் ஈர்த்து தன்னிலை கொண்டுவிடும்.

இவர்களுக்கும் பிள்ளை குட்டி என்று பிறந்து (ஒன்றுக்கு மூன்றாக மூன்றும் பெண்ணாகிப் போனால் ஆஸ்திக்கென்று ஒரு ஆண் வாரிசு வேண்டுமென்று இடையில் ஒரு இரண்டு மூன்று முறை கருக்கலைப்பும் நடத்தி, ஒரு நான்காவதாகவோ அல்லது ஐந்தாவதாகவோ ஒரு இளவரசனும் பிறப்பான்) இவர்களும் தமது கிடைத்தற்கறியா அறிவையெல்லாம் கொட்டி தனது வாரிசுகளை அச்சு பிறழாமல் தனது தாய் திரு நாட்டிற்கு வழங்கி தான் பெற்றோர்களுக்கு இழைத்த துன்பங்களை எல்லாம் தானும் பெற்று இதுதான் வாழ்க்கை என்று நம்பிச் சாவும் மனிதச் சிம்பன்சிகள்.

இங்கு நான் மனிதச் சிம்பன்சிகள் என்று இவர்களை அழைத்ததற்கு காரணமுண்டு. சிம்பன்சிகள் கூட ஆய்வுக் கூடங்களில் வைத்து நீண்ட நாட்கள் மொழி சார்ந்த கோட்பாடுகளை கற்பிக்கும் பொருட்டு அவைகள் ஒரிரு வார்த்தைகளையும் படம் சார்ந்த குறீயிட்டு உணவு வகைளையும் சுட்டிக் காட்ட கற்றுக்கொண்டு விடுகிறது.

ஆனால் இவர்கள் தனது அண்டை வீட்டு முதியவர் ஒருவர் தனக்கு முன்பே ஒரு ஆண் வாரிசு வேண்டி ஏழு பெண்களை பெற்று எட்டாவதாக ஒரு பையனையும் பெற்று அந்த அப்பா மூன்றாவது பெண்னை கட்டிக் கொடுக்க அலைந்து நாக்கு வெளியே தள்ளி இறந்த கதை தெரிந்தும் அந்தப் பெரியவரின் இளவரசன் இப்பொழுது நாயாகி வீடு வீடாக ஏரி கட்ட பஞ்சாயத்து நடத்தி நடை பிணமாய் வாழும் அந்த பையனை பற்றி அறிந்தும், ஏன் இப்படி?

இது போன்ற hands on அனுபவங்கள் அருகாமையே இருந்தும் எது நம்வர்களை தன்னிலை மறந்து விட்டில் பூச்சிகள் போல் மீண்டும் மீண்டும் அதே தவற்றை இழைக்க வைக்கிறது? எது தூண்டுகோளாய் அமைகிறது? கல்வியறிவா? சமுதாய நோக்கு அற்ற நிலையினாலா? தன் பொறுப்பற்ற நிலையாலா? அல்லது நமது சமுதாய கோட்பாடுகளாலா (ஆண் பிள்ளை ஒன்று வேண்டும் கடைசி காலத்தில் கொல்லி போட) ?

பிறகு இவர்களே பேருந்தில், சினிமா கொட்டகையில், ஜவுளி மற்றும் நகைக் கடைகளில் விழி மிரள வைக்கும் ஜனத்திரளை கண்டு "அப்பப்பா என்ன கூட்டம் என்ன கூட்டம்" என்று அங்களாய்க்கும் இவர்கள் என்றாவது ஏன் இப்படி என்று தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டதுண்டா, எல்லோரும் கேட்டுக் கொண்டால் we can avoid a human disaster which is "POPULATION EXPLOSION" in the future.

Monday, October 10, 2005

மனித அட்டைகள்...?

நான் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அலைந்து திரிந்த காலங்களில் அட்டைகளையும் (leech) கவனிப்பதில் எனக்கு ஆர்வமுண்டு. அவைகளின் இயல்புத் தன்மை குறித்தும் எப்படியெல்லாம் தன்னுடைய ரத்தப் பசியை தனித்து கொள்ள அவைகள் தகவமைப்புகளை பெற்றிருக்கிறது என்பதனை பார்த்தும், படித்தும், அதிசயித்தும் அதில் உலகியல் சார்ந்த பொருள் மிக்க உள்ளதை உணர்ந்ததுண்டு.

அந்த உணர்தலை தரம் பிரித்துக் காணும் பொழுது ஒவ்வொரு தட்டிலும் இருக்கும் தன்மையிலும் உறவு முறை மட்டும் மாறுபட்டு எல்லா நிலைகளிலும் இருந்துக் கொண்டிரு(ந்)பதை உணர முடிகிறது. உதாரணமாக கூட்டுக் குடும்பங்களில் நடக்கும் இந்த "அட்டைத்தன்மையை" எடுத்துக் கொள்வோம்.

இந்திய கூட்டுக் குடும்பங்களில் அதிகமாக இது போன்ற தன்மை நிகழ என்ன காரணம்? அப்படி நிகழும் பொழுது அந்த மொத்த கூட்டமைப்பே அழகிழந்து ஏனையோரும் நிம்மதி இழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டும் அதனின்று வெளியேற முடியாமல் புழுங்கி மழுங்கிப் போவதற்கு எது காரணியாக அமைகிறது? வெளியில் தெரிந்தால் வெட்கக் கேடு என்று அண்டை அயலாருக்கு அஞ்சியா அல்லது தெளிவான பேச்சுவார்த்தை அற்ற நிலையாலா அல்லது அந்த அமைப்பிலுள்ள ஒரு சிலரின் மனோத்துவத்தாலா 'என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல' என்ற அருதப் பழசான (அல்லது தாமதமாகவே புரிந்து கொள்ளப்படும்) தத்துவ நோக்கிலா?

எது எப்படியாகினும் இன்றைய சூழலில் இந்த கூட்டுக் குடும்ப கட்டமைப்பு நடைமுறைக்கு ஒத்துவராத விசயமாகிவிட்டதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. இது கிராம நகர வேறுபாடின்றி அரங்கேறி வருகிறது. தொ(ல்)லைக்காட்சித் தொடர்களை எடுத்துக் கொண்டாலே இது தொடர்பாகத்தான் காரசாரமாக விவாதிக்கப்படும். இத் தொடர்கள் வாழ்வியல் சம்பந்தப் பட்டவைகளைப் பற்றியே தொல்லை கொடுத்து வந்தாலும், சாதாரண மக்களுக்கு என்ன தீர்வு இவைகளிலிருந்து சென்றடைகிறது?

இதில் என்ன வேடிக்கையான விசயமென்றால் அந்தத் தொடர்களில் வரும் வில்(லி)லன்கள் போன்று, இக்குடும்பங்களில் உள்ளவர்களும் (வில்லி(லன்)களும்) தன்னிலை மறந்து தொடர் வில்(ல)லியை கண்டு ரசிப்பதும் தனக்குத் தெரியாத புது உத்திகளை கீழிறக்கம் செய்து கொள்வதும்தான்.

சில குடும்பங்களில் இந்த ஒட்டுண்ணிகள் ஒரு படி மேலேயும் சென்று சிதருண்ட உள்ளங்ளை இணைக்கும் பாலங்களாக செயல்படும் பெற்றோர்களையே சிறுகச் சிறுக உயிரையும் குடிப்பதுண்டு. இச் சூழ்நிலையில் யாரைக்குற்றம் கூறுவது? பெற்றோர்களின் வளர்ப்பில் ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என்பதா அல்லது அவர்களின் பாசம் தவறாக கையாளப்படுகிறது என்பதா?

இதில் யார் புத்திசாலி, யார் யாரை ஏமாற்றிக் கொள்கிறார்கள்? இறுதியில் யாருக்கு இழப்பு? நன்றாக வாழ்ந்து அனுபவித்து சென்றிருக்க வேண்டிய ஆட்களை மனச்சுமைக்கு ஆளாக்கி விரைவிலேயே அனுப்பிவைக்கும் இந்த (சமுதாயச்) சம்பிரதாயக் கட்டமைப்பு தேவைதானா? காலம் டார்வினிய விதிகளுக்கு உட்பட்டு மாறிச் செல்லும்பொழுது நாம் கொண்டிருந்த கொள்கைகளையும் பரிசோதித்து அது இக் காலச்சூழக்கு உகந்ததா என்பதை அறியாவிடில் இவ்வொட்டுண்ணிகள் பல்கிப் பெருகி சமுதாயக் கேடு விளைவிப்பதை நாம் தவிர்க்க முடியாது.

இங்கு ஒரு கேள்வி எனக்குத் தோன்றுகிறது. இக் கூட்டுக் குடும்ப கட்டமைப்பு நேற்று இன்று தொடங்கப்பட்டிருக்க முடியாது. நிச்சயமாக, பல நூறு ஆண்டுகளாய் இப்பழக்கம் புழக்கத்திலிருந்திருக்க வேண்டும். அப்பொழுதெல்லாம், இத் துர்ச்சம்பவங்கள் இன்று இருப்பது போலிருந்தால் இத்தனை நூற்றாண்டுகளை தாண்டியிருக்குமா என்பது சந்தேகமே! அப்படியிருக்கும் பட்சத்தில் ஏன் இன்று குடும்பங்கள் தோரும் ஏதாவது ஒரு அழுகிப் போன பழமிருக்க நேரிடுகிறது?

"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்ற முதுமொழி ஒரு கால கட்டத்தில் இன்றைக்கு இருக்கக் கூடிய தாக்கங்களுக்கு எல்லாம் அப்பாற் பட்டு இந்த உலகமயமாக்களின் தத்துவ நோக்கிலிருந்து விலகி, கூடி வாழ்வதற்கே உரித்தான "விட்டுக் கொடுத்து போதல், சகிப்புத்தன்மை, பொறாமையின்மை, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஏனையோரின் உழைப்பு" அதீதமாக அக்கால கட்ட மக்களிடையே இருந்திருக்கலாம். ஆனால், இந்த தன்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக இன்றைய சூழலில் நலிந்து மெலிந்து வருகிறது இக்கால குளம் குட்டைகள் போலவே.

பொதுநலம் என்பது அரிதாகி வரும் இக்கால கட்டத்தில் பெற்றோர்களும் தனது பொறுப்புணர்ந்து குழந்தைகளை எதிர்காலச் சூழ்நிலைக்கேற்ப தயார் செய்வது காலத்தின் கட்டாயமாகிறது. மேலும் இது அவர்களின் எதிர் கால ஏமாற்றங்களிலிருந்து தன்னை தக்கவைத்துக் கொள்ள பெரிதும் உதவும்.





Sunday, October 09, 2005

எனது முதல் வலைப்பதிவு...

இதுவே எனது முதல் வலைப்பதிவு, பிழைகள் இருப்பின் சான்றோர்கள் மன்னிக்கவும். எனக்கு மிக நீண்ட நாட்களாகவே ஆசை. நானும் இந்த நீரோட்டத்தில் கலந்து விட வேண்டுமென. அது மிக்க சிரத்தைகளுக்கிடையில் இன்றுதான் முடிந்தது. இதற்கு முக்கிய தூண்டுகோளாய் இருந்தது வலைப்பதிவு ஆர்வலர்கள்தான். நன்றி!

சரி இனிமேல் எனக்குத் தோன்றியதை இங்கு இறைத்து கொட்டிவிடலாம். நான் சொல்லப் போகும் விசயங்கள் அனைத்தும் பொதுவாக இன்றைய சூழலில் எப்படி சில மனிதர்கள் தன் முகம் மறந்து முகமூடி அணிந்து கொள்ள பிரயத்தனப்படுகிறார்கள். அதுவும் தான் இந்த ஊரின் "கலங்கரை விளக்கமென்றும்" அலைந்து திரி(ந்)து தெரியும் இவர்கள் ஒரு அழுக்கு பெரியவர்கள். கவிப்புலவன் பாரதி பாடிவைத்த பாடல்களில ஏதாவது ஒன்று ஒரு சூழலில் இந்த போலிமனிதர்களின் வாழ்க்கையை தரம் பிரித்துக் காட்டி விடுகிறது.

எனது வாழ்விலும் அப்படி சில மனிதர்களை சந்திக்கும் சமயத்தில் அவர்களுனூடே இருந்து கொண்டு அவர்களின் வாழ்வியல் சம்பந்தப்பட்ட விசயங்களை கவனிக்கும் வாய்ப்பையும் பெற்றேன், இவைகளை வழி தவறி, இடறி இவ்வலைப் பதிப்பிலே விழும் நண்பர்களுக்கு வாசிக்கும் பொழுது எங்கேயோ கேட்ட குரலாக இருந்தால் நான் மட்டும் இத்தனிமையில் இல்லை என்பது திண்ணம்.

அவ்வப்பொழுது வாழ்வியல் சார்ந்த முரண்பாடுகள், எனக்குள்ளும் என்னைச் சுற்றியும் நிகழும் பொழுதெல்லாம் அது எவ்விதம் என் மனத்தினுள் மாற்றங்களை நிகழ்த்தியது என்பதனை அப்படியே எந்தக்கலப்படமும், முகமூடியும் அற்ற நிலையில் கொட்டித் தீர்க்க எத்தனித்துள்ளேன். முடிந்த அளவிற்கு நாகரீகமான வார்த்தைகளைக் கொண்டு. இங்கு அனைத்தும் உண்டு அறிவியல் முதல் ஆன்மீகம் வரை.

நாம் ஓடி ஓடிச் சேர்க்கும் அத்தனை மனம் சார்ந்த அறிவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கே என்பதனில் சிறிதும் எனக்கு சந்தேகமில்லை. சில அன்பர்கள் அவ்வாறு பெற்ற அறிவை அதெப்படி மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொள்வது எவ்வளவு உழைப்பிற்கிடையில் எனக்கு கிடைத்த பொக்கிஷம் அதனை எப்படி நான் வந்து... என்று எண்ணி தனக்கென மட்டுமே வாழ்ந்து கருகிச் சாவும் கடுகுகளுக்கிடையே...

இங்கு எனக்குத் தெரிந்து தெளிந்தவைகளை உங்களுடன் கட்டாயமாக தெக்கிக்காட்டான் என்ற புனைபெயரில் பகிர்ந்துகொள்ளப் போகிறேன். தெக்கிக்காட்டானுக்கு முகமூடி கிடையாது, பெயரிலே தெரிந்திருக்கலாம். பெயரில் என்ன இருக்கிறது?

Related Posts with Thumbnails