Tuesday, December 28, 2010

மன் மதன் அம்பு ஒரு மீள்பார்வை - A Re-View

என்னுடைய முந்தைய இடுகையில் ஒரு மூன்று படங்களுடன் சேர்த்து கமல்ஹாசனின் மன்மதன் அம்பு படத்திற்கும் ஒரு பத்தி விமர்சனம் ஒன்று வைத்திருந்தேன். பெரிய அளவிளான பதிவு இதற்கு தேவையில்லை என்றே கருதி அவ்வாறாக சுருக்கியிருந்தேன்.

ஆனால், அண்மையில் சிலரின் விமர்சனப் பதிவுகளை படிக்கும் பொழுது கண்டிப்பாக ஒரு தனி பதிவிடுவதின் அவசியம் விளங்கியது. களத்தில் இறங்கி விட்டேன். இந்தப் படத்திற்கு எங்க பக்கமிருந்து நான்கு பேர் சென்றிருந்தோம். தசவதாரம் பார்த்துவிட்டு திரும்ப வரும் பொழுது எனக்கு என்னவோ மனது நெருடலாகவே இருப்பதாக உணர முடிந்தது. அந்த மனநிலையை என்னுடைய அந்தப் பதிவினை வாசித்தவர்களுக்கே புரிந்திருக்கும்.

மாறாக மன்மதன் அம்பு படத்தை பார்த்துவிட்டு வரும் பொழுது அப்படியான ஓர் இறுக்கமில்லை. மனது குதூகலமாக, காருக்குள் நிறைய மகிழ்ச்சி இருந்ததாக உணர முடிந்தது. ஏன் பதிவர்களுக்கு இந்தப் படம் பிடிக்காமல் போனது என்று பெரிய அளவில் ஒன்றும் ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. படம் வருவதற்கு முன்பே மெஜாரிடிகளின் மனதில் பேரிடியை இறக்குவது போன்ற அந்த கமல் கவிதை அமைந்து போனது, அதனைத் தொடர்ந்து இந்து சபை அமைப்பு நடத்திய சீன் பொது ஜனம் மத்தியிலும் என்னவோ ஏதோ என்ற பிரம்மையை ஏற்படுத்தி படம் பார்க்கும் மூளைப் பகுதியை தற்காலிகமாக மற்றுமொரு ’ஆட்டுக்கார அலமேலு’ வரும் வரைக்கும் ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கலாம். ;-)

சரி இந்தப் படம் எந்த விதத்தில் என்னுடைய மூன்று மணி நேரத்தை சுணக்கமில்லாமல் கொலை செய்தது என்று பார்ப்போம். எதிர்பார்த்த மாதிரியே கமலின் வசனங்கள் நிறைய பஞ்ச்களை சுமந்தே வலம் வந்து கொண்டிருந்தது. குறிப்பாக மாதவன் கதாபாத்திரத்தின் மூலமாக நமது சமூக ஆண்களின் டிஃபெண்டென்சி அம்மாவை மையமாக வைத்து வளர்க்கப்பட்டதின் கூறுகளை செம கிண்டலாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள். உச்சமாக ஒரு சீனில் கழிவறைக்குள் இருக்கும் பொழுது மாதவனின் அம்மா உள்ளே வரலாமா என்று கதவைத் தட்டி கேட்கும் பொழுது அப்பொழுதே டயபர் ஸ்டேஜ்லிருந்து வெளி வந்தவனாக, "அம்மா இப்பொழுதெல்லாம் நான் பெரிய பையனாகிவிட்டேன்" என்ற வாக்கில் அடிக்கும் வசனம் இருப்பதிலேயே அல்டிமேட் கிண்டல் எனக் கொள்ளலாம்.

பல சீன்களில் மாதவனே அம்மாவை இழுத்து, இழுத்து முன் நிறுத்தும் வசனங்களின் மூலமாக எந்த அளவிற்கு நம் இளைஞர்களின் மன முதிர்வின்மை இருப்பதாக காட்டுவதற்கெனவே அது போன்ற காட்சியமைவுகள் என்று விளங்கிக் கொள்ள முடிந்தது. அதன் அடிப்படையிலேயே விவகாரத்தாகி, இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் சங்கீதாவை மாதவன் போன்ற இன்னும் அம்மாவை துணைக்கு அழைக்கும் ஆடவனுக்கு அம்மாவையே வாழ்க்கை துணையாக பெறுவதே பொருத்தமாக இருக்கும் என்கிற அந்த முடிவுக் காட்சி பஞ்ச் என்றும் புரிந்து கொள்ள முடிந்தது.

ரமேஷ் அரவிந்த் ஒரு கேன்சர் நோயாளியாக வருகிறார். அடையாளமே தெரியவில்லை! அந்த கதாபாத்திரத்தின் மூலமாக புற்று நோயின் ஆளுமையும், வதையும் நன்றாகவே புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். புற்று நோயாளியின் மனைவியாக ஊர்வசி. பணம் கேட்டு நொய்யென்று அழுது கொண்டே இருக்கிறார். கணவர் பிழைத்துக் கொள்வார் என்றவுடன், தமிழ் சினிமாவின் தாலி செண்டிமெண்டிற்கு அடி கொடுக்கும் விதமாக கைபேசியில் மாங்கல்யத்தை தட்டி, கமலிடம் ”அண்ணா சத்தம் கேக்கிறதா, என் தாலி கெட்டி” என்கிற வாக்கில் வசனம் பரவலாக படம் பார்த்தவர்களால் எதிர்த்த சீட்டின் முனையில் இடித்துக் கொள்ளும் அளவிற்கு தாவிக் குதித்து சிரிப்பலையை உண்டு பண்ணியது.

அடுத்து த்ரிஷா ஒரு நடிகையாகவே வந்து போகிறார். அவர் பாரிசில் இருக்கும் பொழுது கார் ஓட்டியாக ஓர் ஈழத்து தமிழர் அமைந்து போகிறார். அவரும் த்ரிஷாவுடைய பரம விசிரியாகிப் போகிறார். சொல்லவும் வேணுமோ! நம்முடைய மக்களின் தனிமனித துதி பாடல், கடல்கள், மலைகள், தேச எல்லைகளை தாண்டியதில்லையா? நாக்கை வெட்டிக் கொள்ளுபவர்களும், சாலையில் சோறு போட்டு வேண்டுதெலுக்கென மண் சோறு தின்பவர்களும், முட்டிக்காலலேயே மலைப் படிகள் ஏறிச் செல்பவர்களையும், தீ மிதிப்பவர்களையும் உள்ளடக்கியதல்லவா இந்த ரசிக அர்ப்பணிப்பு. அதனை சாடும் வாக்கில், சரியான தேர்ந்தெடுப்பாக இந்த கால கட்டத்தில் ஈழத் தமிழரை வைத்து சொன்ன விதமும் மிகவும் நன்றே!

இவர்களில் பெரும்பாலோனோர் மிக்க உடல் உழைப்பால், பொருளீட்டி சம்பந்தமே இல்லாத சீதோஷ்ண நிலைகளுக்கு முகம் கொடுத்து சொந்த நாட்டிலிருந்து விருப்பமில்லாமலேயே விலகி வாழக் கூடிய நிலையிலிருப்பவர்கள். இருப்பினும், இது போன்ற ஒன்றுக்கும் உருப்பிடாத நடிகை/நடிகர்களுக்கென செலவழிக்கும் தொகையும், அவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவதும் சற்றே யோசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. இவர்களாலேயே வெளி நாடுகளில் குப்பை படங்களும் வசுலில் கொடி கட்டிப் பறக்கிறது. நேர் மாறாக அந்தப் பணத்தில் திளைப்பவர்களோ பணத்தை வாரி வழங்கிய மனிதர்களுக்கு ஒன்றென்றால் எதிர் திசைகளில் இயங்குகிறார்கள். நம் போன்ற அப்பாவிகளுக்கு எது போன்ற கருத்தைச் சொல்லி விளங்க வைக்க முடியும், அதே நடிகை செருப்பெடுத்து காமித்தாலாவது அறிவு வருமா என்று கொஞ்சம் சுருக், நறுக்கென்றே சுடச் சுட ஒரு காட்சியையும் அமைத்துக் கொடுத்து விளங்கிக் கொள்ள ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் கமல் (இங்கே நடிகை அசின் ஞாபகத்துக்கு வரணுமே!).

சரி, க்ரூய்ஸ் கப்பலில் ஒரு நடிகை விடுப்பில் ஊர் சுற்ற செல்லும் பொழுது அவள் கூடவே மேக் அப் மேனையும் பெட்டி பெட்டியாக துணிமணிகளையும், இழுத்துக் கொண்டுச் செல்வாளா, இல்லை வெறும் காப்ரீஸ் பாண்ட்ஸும், ப்ளைன் டி-ஷர்ட்டிலும், தனக்கு மிகவும் பிடித்த சாண்டலிலும் இருக்க பிரியப்படுவாளா? ஒலகப் படம் பார்த்து ரசிக்கும் ஆராய்ச்சியாளர்களே இதில் எது பொருத்தமான உடை, சிகை அலங்காரங்கள் இது போன்ற ஒரு சூழ்நிலைக்கு படத்திற்கு பொருத்தமாக அமையும். வருஷ வருஷம் க்ரூய்ஸ் சுத்துவரய்ங்க கணக்கா அட அட முகத்தில பரு, போட்ட அழுக்குச் சட்டை, முகத்தில சவர வித்தியாசம்னு மைனூட்டா கவனிக்கிறாங்கப்பா. இனிமே தமிழ் சினிமா பொழச்சிக்கும்டோய், ரேஞ்சுதான்.

இந்த படத்தில் எனக்கு பிடிச்ச விசயங்கள் நிறைய. எத்தனை பேர் க்ரூய்ஸ் கப்பலில் பிரயாணம் செய்திருக்கோம். செய்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். வித்தியாசமான முயற்சியாக படத்தின் பெரும் பகுதியை அப்படியாக அமைத்து பழைய ரோமானிய நகரங்களை அவரகளுனூடேயே மிக்க பொறுமையாக நடந்து திரியும் அளவிற்கு கூட்டிக் கொண்டு திரிகிறார்கள். ஒளிப்பதிவு சான்சே இல்லை என்ற ரேஞ்சிற்கு பளிச், பச்சை, வெண்மை எது எப்படி இருக்கணுமோ அதற்கும் ஒரு படி மேலே சென்று கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அளவிலான கேமரா - ஒளிப்பதிவு.

படத்தின் ஒரே தொய்வு கொடுக்கும் விசயமென்றால் கடைசி ஒரு 20 நிமிடங்களைச் சொல்லலாம். நீன்ன்ன்ண்டு கொண்டே சென்றதனைப் போன்ற பிரமையைக் கொடுத்தது எனக்கு. அந்த கமல் கவிதையை அட்லாண்டாவிலும் கழட்டி விட்டார்கள். இங்கும் சாமியைக் காப்பாற்றும் பிரகஸ்தபதிகள் அதிகமாக இருப்பார்களோ என்று எண்ணச் செய்கிறது. காட்டுமிராண்டித் தனத்தின் உச்சம். ஒரு கலைஞன், தான் அமைக்கும் காட்சிக்கு எது உகந்தது என்று நினைக்கிறானோ அதனை வைப்பதற்கான உரிமை கூட இல்லையென்றால் என்ன பெரிய ஊடக உரிமை, படைப்பாளிச் சுதந்திரம் என்று விளங்கவில்லை. தலீபானியம் தலை தூக்குகிறதோ என்று எண்ணச் செய்கிறது.

அந்தக் கவிதையில் நல்ல பழக்க வழக்கம் வர வேண்டுவதனைப் போன்றுதானே பாடல் வரிகள் இருக்கிறது. கலவி முடிந்தவுடன் சுத்தம் பண்ணிக் கொள்ள கூட மாட நின்று உதவு, தொப்பையை, தூக்கத்தை குறை என்ற வாக்கிலும் கூடுதலாக பல நல்ல கருத்துக்களை சொல்லி நிற்பதாகவே அந்தக் கவிதை என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது. அதனில் எங்கிருந்து வந்தது இத்தனை கடவுள் காப்பாற்றும் மனவோட்டம். என்னமோ நடத்துங்கப்பா!

Sunday, December 26, 2010

இந்த வாரம் சினிமா வரம்!

இந்த வாரம் எனக்கு சினிமா வரமாகிப் போனது. மூன்று நாட்கள் இடைவெளியில் நான்கு தமிழ் சினிமாக்கள். இது வரையிலும் செய்யவே துணியாத ஒரு தன் கொலை முயற்சி என்றுதான் சொல்லுவேன். அதிலும் துரதிருஷ்ட வசமாக ஈரம், ஈசன் மற்றும் மைனா இணையத்திலும் (வேற வழியே இல்ல பார்க்க நான் இருக்கிற இடத்தில), கமல்ஹாசனின் மன்மத அம்பு இங்கு ஓடிக் கொண்டிருப்பதால் திரையரங்களிலும் சென்று பார்த்தேன்.

இது அனைத்தும் எனக்கு சாத்தியமாகிப் போனதற்குக் காரணம் மூன்று நாட்களும் எனது உடம்பு கெஞ்சி அடித்து தேவையான உடல் ஓய்வை பெற எண்ணி தலை, மூக்கு மற்றும் உடல் வலி எனவும், காய்ச்சல் எனவும் வீட்டில் அதிக நேரம் இருப்பதாக செய்து விட்டதாலேயே எனவும் எடுத்துக் கொள்ளலாம்.

ஈரம் படத்தை சரியாக வெளியான ஒரு வருட இடைவெளியில் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். படத்தை வித்தியாசமான முறையில் நகர்த்தியிருந்தார்கள். இரண்டாவது பகுதியில் கொலையுற்ற கதாநாயகியின் ஆவி சுத்தி சுத்தி வந்து தனது கொலைக்கு காரணமானவர்களை கொலை செய்வது சப்பென்று ஆக்கிவிட்டது எனது எதிர்பார்ப்பை. சொல்லப் போனால் நான் இது போன்ற ஒரு கதையையே எதிர்பார்க்கவில்லை; கதையை நகர்த்த ஆரம்பித்த விதமும், படமாக்கப்பட்ட நேர்த்தியும் நான்றாக இருந்ததால். இரண்டாவதாக, செகண்ட் ஹாண்ட் காருக்கும், வாழ்க்கைத் துணைக்குமாக ஒப்பீடு செய்து கொண்டு படத்தின் பாதிக்கும் மேல் கதையை நகர்த்தியிருப்பது ஒரு சமூக சிக்னெஸின் உச்சத்தை காட்டியது.

*********************************

ஈசன் - இயக்குனர் சசிகுமார் சுப்ரமணியபுரத்தை போன்றே மீண்டும் மென்மையான ஒரு கதைத் தேர்வுடன் நம்மையும் ஒட்டவைத்து, நமக்கும் சினமேற்றி கடைசியில் கதாநாயகன் எதிரிகளை கரகரவென்று கழுத்தறுபட்டு கொல்லப்படும் பொழுது நம்மையும் சேர்த்து கலந்து கொள்ள வைப்பதில் ஜெயித்து காட்டுவாரே அது போன்றே ஈசனிலும் ஜெயித்திருக்கிறார். ஈசனில் ஓர் உண்மையான போலீஸ் அதிகாரி எது போன்ற சூழ்நிலைகளில் நிதர்சனத்தை எதிர் கொண்டு கையறு நிலையில் தனது சீனியர் அலுவலர்களால் கூர் மழுங்கடிக்கப்படலாம் என்பதனை அழகாக காட்சியகப்படுத்தி இருக்கிறார். இருந்தாலும், இந்தப் படத்தில கொலை செய்யும் கதாபாத்திரமாக வரும் டீனேஜித்திய பருவம் கொஞ்சம் உருத்தலாக இருந்தது.
**********************************

மைனா - ரொம்ப பிடித்திருந்தது! லாஜிக்கலாக நிறைய துளைகள் இருந்தாலும், கதையுடனும் படமாக்கப்பட்ட மலையும் மலை சார்ந்த இடங்களும் கதாபாத்திரங்களின் பங்களிப்பும் அப்படியே நம்மை கட்டிப் போட்டுவிட்டு இதர விசயங்களை எக்ஸ்க்யூஸ் செய்ய வைத்து அத்துடனே நம்மையும் காட்சிகள் நகர்த்திச் செல்கிறது. போலீஸ் அதிகாரியின் மனைவி பக்கம் வரும் உறவுகளும், அவரின் மனைவியும் பல உண்மைகளைச் சொல்லி நிற்கிறது. அந்த உறவில் அந்த அதிகாரி மனிதனுக்கு அவர்களுடன் பேசுவதற்கான வாய்ப்பே இல்லாத நிலையை இயக்குனர் அழகாக செதுக்கி தனித்து நிற்க வைத்திருக்கிறார். இந்தப் படத்தை பார்க்கும் பொழுது தமிழில் சமீபமாக நல்ல படங்களை கொடுக்க நிறைய புதிய இயக்குனர்கள் வந்திருக்கிறார்கள் என்று நம்பிக்கை பிறக்கிறது. அதில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் அப்படியே அவர் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களுடன் வாழ்ந்து கொடுத்திருக்கிறார்கள். படத்தின் முடிவு மக்கள் எதனையும் எடுத்துக் கொள்ளும் பக்குவ நிலைக்கு வந்துவிட்டதாக சொல்லி நிற்கிறது.
*******************************

மன்மதன் அம்பு:

என்ன சொல்ல, நல்லா சிரி சிரின்னு வேற எதையும் யோசிக்காம சிரிச்சு படத்தை உள்வாங்கி பார்த்தேன். என் மூணு வயது பொண்ணுக்கு மொதப் படம் இது. கொஞ்சம் டான்ஸ் ஆடினோம். என்னதான் இருந்தாலும் மாதவன் கதாபாத்திரம் மூலமாக சிரிப்பு, சிரிப்பா பல ஆழமான விசயங்களை போற போக்கில எடுத்து கடாசிவிட்டார் நம்ம கோடம்பாக்கத்து ஒலக நாயகன்.

அவர் சந்தேகப் புத்திக்காரர் என்பதால் த்ரிஷா போன்ற இளமையான பெண் சரிபட்டு வரதென்றும், தொட்டத்திற்கெல்லாம் மாதவன், தான், அம்மாவின் பிள்ளை என்பதனை எடுத்து இயம்புவதாலும் கமல், மாதவனுக்கு தனது காதலியான த்ரிஷாவின் விவாகரத்தான நண்பியை இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் ஒருவரை, மாதவனுக்கு தேவை அது போன்ற ஓர் அம்மாதான் என்று க்ரேசி மோகன் ஸ்டைல் ஸ்கிரிப்புடன் பலத்த சிரிப்புகளுக்குகிடையே அவருடன் கோத்து விடுவது யோசிக்க வேண்டிய விசயம். ஏனெனில் மாதவன் அங்கு சந்தேகப் பட வேலையே இல்லை! நம்ம பசங்களும் என் அம்மா மாதிரியேதான் தனக்கும் ஒரு பொண்ணு வேணும்னு தேடுறாய்ங்க, அதுனாலே ஒரு அம்மாவையே கமல் தள்ளிவிட்டுட்டார் :)). படமாக்கப்பட்ட விதம் ரிச்! ஹே! எங்க ஊர்லயும் அந்த கமல் கவிதையை கட் பண்ணிப்போட்டங்கப்பா... கடைசியா சில வரிகளே ஒலிக்கிறது. படு அநியாயம் இதெல்லாம்... அப்படி என்னதான் அந்தப் பாட்டில இருந்திச்சு!!

Friday, December 03, 2010

பூமி பாக்டீரியம் சொல்கிறது வேற்றுக் கிரகத்தில் உயிர் : GFAJ-1

இரவு வானத்தை அண்ணாந்து பார்த்தா சும்மா கற்பனைக் குதிரை மண்டைக்குள்ளர இருக்கிற அறிவைக் கொண்டு அது பாட்டுக்கு இலக்கில்லாம பறந்து திரியும். அப்போ இப்படி விரிஞ்சி கெடக்கிர வானக் கம்பளத்தில நம்ம பூமிய ஒரு தடவ திரும்பி பார்த்தா ஒரு தூசியின் அளவை விட சிறிசா ஒண்ணுமில்லாம போயிடும். அந்த அளவிற்கு இந்த அண்டவெளி நம் கற்பனைக்கும் எட்டாத விரிதலை உள்ளடக்கியது.

நம்ம சூரியன் இருக்கிற பால்வீதி (Milky Galaxy) மாதிரியே பல பில்லியன் பால்வீதிகள் இந்த வெளியில மிதந்து திரிகிறது. அந்த ஒவ்வொரு பால்வீதியிலும் மில்லியன்ஸ் அண்ட் மில்லியன்ஸ் நம்ம சூரியனையொத்த ஸ்டார்கள் இருக்கின்றன. அவைகளைச் சுற்றியும் நம் சூரியக் குடும்பத்திற்கென அமைந்த கிரகங்களையொட்டி கிரகங்களும் உள்ளன.

அந்த கிரகங்களில் நமக்கு கிடைத்த தட்பவெப்ப சூழல்களைக் கொண்டு உயிரினங்கள் உருவாகி பல்கி பெருகியிருக்கக் கூடுமே என்ற கருதுகோளின் படி நாம பல பத்தாண்டுகளாக வானத்தை அளந்து வருகிறோம். வேற்று கிரக வாசிகளிடமிருந்து ஏதாவது சமிக்கைகள் மிதந்து வந்து அடைகிறதாவென (SETI).

இப்படியான சூழ்நிலையில் நேத்து அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா நடத்தி வந்த ஓர் ஆராய்ச்சியில் அது போன்ற வேற்று கிரகங்களில் உயிர்கள் இருப்பதற்கான நிகழ்தகவுகள் ரொம்பவே சாத்தியம் என்று கட்டியம் கூறும் வாக்கில் ஒரு சான்று கிடைத்துள்ளது.

கேட்ட நேரத்தில இருந்து அண்டவெளி உயிரின ஆராய்ச்சியாளர்களுக்கு (Astrobiologist) சந்தோஷம் நிலைகொள்ள வில்லையென அமெரிக்கா தொலைகாட்சிகளின் செய்திகள் அலறி அடித்துக் கொண்டு அந்தத் துறை சார்ந்தவர்களை அழைத்து நேர்முகம் காண்பதிலிருந்து விளங்கிக் கொள்ள முடிந்தது.

பொதுவாக இந்தப் பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஆறு விதமான அடிப்படை உயிரின வேதியப் பொருட்களின் மூலக்கூறுகளைக் கொண்டே கட்டமைக்கப்பெற்றிருக்கிறது (கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்.பரஸ் மற்றும் சல்.பர்).

இதனில் முக்கியமாக பாஸ்.பரஸ் நமது மரபணு சமிக்கைகளை கடத்திச் செல்லும் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏக்களின் உயிர்ச் செல் கட்டமைப்பில் முக்கியமான பங்காற்றுகிறது.

இந்த பின்னணியில் நமக்கெல்லாம் அறிமுகமாகி இருக்கிற வேதிய அட்டவணையில் இந்த பாஸ்.பரஸின் பண்புகளையொத்த அளவில் ஆர்சினிக் என்ற வேதிய தனிமம் மட்டுமே இருக்கிறது. ஆனால், இது பூமிய உயிர் அனைத்திற்கும் உடலில் சாரும் பொழுது நச்சுத்தன்மையை வழங்கி, வளர்சிதை மாற்றம் அளவில் பாதிப்பை வழங்கும் தன்மையைக் கொண்டது. எனவே, ஆர்சினிக் வந்து பூமியில் வாழும் உயிர் அனைத்திற்கும் a big no no வேதியற் கூறு.

ஆனா, இயற்கையின் விளையாட்டப் பாருங்க. அறிவியல் புனைவுகளில் கன்னாபின்னான்னு கற்பனைக்கு எட்டிய மாதிரியெல்லாம் வேற்று கிரகங்களில் கிடைக்கிற வேதியற் கூறுகளையும், சுற்றுச் சூழலையும் கொண்டு உயிரினங்கள் வாழ்ந்து வருவதாக அள்ளிக் கட்டி எழுதுவாங்க. படிக்க படிக்க நாமும் கற்பனை உலகில் அந்த ஜீவராசி கூட்டத்தோட கூட்டமா ஒரு மனுச ஜீவராசியாவே திரிவோம்.

அந்த இட்டுக்கட்டு கதைமாதிரிக்கு, நாசாவின் புதிய பாக்டீரியம் கண்டுபிடிப்பு அது போன்ற கதைகள் எவ்வாறு உண்மையாகலாம்னு சான்று சொல்லி நிக்கிது. கலி.போர்னியா மகாணத்தில உள்ள ஓர் ஏரியில ஆராய்ச்சி செஞ்சிகிட்டு இருந்திருக்காங்க. அந்த ஏரிக்கு பேரு மோனோ ஏரி (Mono Lake). அந்த ஏரியை தேர்ந்தெடுத்ததற்கு காரணமே 50 வருஷத்திற்கு மேல மற்ற புதுத் தண்ணியோட கலக்காம கெடக்கிறதுனாலே அதில எக்கச்சக்கமான உப்பும், அமிலத் தன்மையும் மற்றும் இந்த ஆர்சினிக் நச்சுத் தன்மையும் இருக்குங்கிறதுனாலே தொழவி பார்த்துருக்காங்க ஏதாவது சிக்குதான்னு. அப்போதான் இந்த புதுவிதமான பாக்டீரியம் நம்ம பூமி உயிரி கட்டமைப்பு வேதிய மூலக்கூறுகளுக்கு எதிராக அமைந்த ஆர்சினிக்கைக் கொண்டு உயிர்வாழும் புது வகையான நுண்ணுயிரி வாழ்வது தெரிய வந்திருக்கு. அதுக்கு பேரும் வைச்சாச்சு GFAJ-1 அப்படின்னு.

சரி எப்படி நிரூபிச்சாங்க? ஆய்வுக் கூடத்தில வைச்சு இந்த பாக்டீரியத்தை வளர்த்திருக்காங்க. பாஸ்.பரஸை கொஞ்சமும், ஆர்சினிக்கை தாராளமாகவும் வழங்கி அதில இந்த பாக்டீரியம் ஆர்சினிக்கை ஊட்டமாக கொண்டு செழித்து வளர்ந்திருக்கு.

இந்த ஒத்த புது வகையான நுண்ணுயிரியை கண்டுபிடிச்சதின் மூலமா மொத்த உயிரியல் பாடப் புத்தகங்களையும் திரும்ப எழுதுற மாதிரி ஆகிப்போச்சு. அதுக்கெல்லாம் மேல இந்த அண்டவெளியில் இருக்கிற கோடான கோடி, கோடி, கோடி கிரகங்களில் எது போன்ற வேதிய மூலக்கூறுகளைக் கொண்டும் உயிர்கள் கட்டமைக்கப்படுமென்றால் கண்டிப்பாக வேற்று கிரக உயிர்கள் திளைச்சு வாழணும்மப்போய்னு உறுதியாகிப் போச்சல்ல.

இயற்கையின் விந்தையில் எதுவும் சாத்தியமேன்னு சொல்லி நிக்கிது இந்த ஆர்சினிக்கை காதலிக்கும் பாக்டீரியம். எந்த வெளி கிரகத்திலே எந்த பத்து தலை டைனோசரோ, இல்ல நாலு கால் மனுசன் பொய் பேச ஒரு மூஞ்சி, உண்மை பேச ஒரு மூஞ்சின்னு கரியமிலா வாயுவை சுவாசிச்சிட்டு நடந்து திரியுறானோ, I cant wait to get that news! :-)



பி.கு: நம்ம நண்பர் கையேடு கூட இது பொருத்து ஒரு கட்டுரை எழுதியிருக்கார் - வேறொரு உயிர்

- Photo Courtesy: Net

Tuesday, November 30, 2010

இயற்கையின் ஒளி விளையாட்டு :Photos 1

#1 உன்னுள் எனைக் காண்கிறேன் ...



#2 எத்தனை விந்தையடா...!




#3 ஆசை நிறைவேறுமா? கண்களை மூடிக் கொண்டு ஊதி மொத்த புற இதழ் கற்றைகளையும் தள்ளுங்க பார்ப்போம்...



#4 இந்த காட்டுப் பூங்கொத்து யாருக்கு...? [பின் இணைப்பு - இந்தப் பூங்கொத்தை தருமிக்கு வழங்கிவிட்டேன் - அவரின் இலக்கிய பயணத்தில் மென்மேலும் பல சிறப்புகளை எட்ட வாழ்த்துக்களுடன் ;-) ]



#5 ஒற்றை டூலிப் பறிக்கக் கூடாது...




#6 ரோசி ரோஸ் - வெட்கத்தின் உட்சத்தில்...



#7 ஒரு சிறு நெல்மணியின் அளவில் உள்ள விதைக்குள் இத்தனை கவிதையான அழகா...



*************************************
******************************

பி.கு: இந்தக் கவிதையை எல்லாரும் கேட்டிருக்கீங்களா? கமல் எழுதி, த்ரிஷாவோட வாசிச்சிருக்கார். பெரிய பெரிய விசயமெல்லாம் சொல்ல வந்திருக்காருங்கோவ்... ரெண்டு மூணு தடவ கேட்டா புரியுற மாதிரி இருக்கு. கேளுங்க! :)

Thursday, November 18, 2010

பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உரையாடல் இடைவெளி: What if...

தொடர்ந்து பதிவுகளா கொடுப்பதாக இந்த வாரம் அமைந்து போனதிற்கு வருந்துவதா? மகிழ்ச்சி கொள்வதா? பொதுவாக பழக்க போதைக்காக பதிவு எழுதுவது என்பது என்னிடம் இல்லை, சராசரியாக ஆண்டிற்கு 25 பதிவுகளே பதிந்து வருகிறேன். அது போன்ற பதிவுகளும் உள்ளிருந்து கொப்பளித்து வெளிக் கிளம்பும் வாக்கில் அமைந்தாலே உண்டு.

எண்ணங்கள் தவிர்க்க முடியாத வழியில் ஒரு குழந்தை முட்டிக் கொண்டு தாயின் மடியிலிருந்து வெளிவருவதாகவே எனது கட்டுரைகளும் இருந்தாலே ஒழிய அது வெளி உலக பார்வைக்கு கிடையாது. அப்படியாக உறங்க போட்ட கட்டுரைகளும் என்னிடமுண்டு. எதற்காக இதனை இங்கு முன் வைக்கிறேன் என்றால் தொடர்ந்து பதிவுகளை கொடுத்து திகட்ட வைத்து விடக் கூடாதே என்பதின் அடிப்படையிலேயே. நோ மோர் சுய புராணம்!

இந்த வாரத்தில் பல பதிவுகள் அவரவர்கள் பார்வையில் எது ஒழுக்கம்/பண்பாடு/பாரம்பர்யம்/கலாச்சாரம் என்று முன் வைத்து தன் தனது குதிருக்குள் எது போன்ற ஊறல்கள் இருக்கிறது என்பதனை மூடியை அகற்றி காமித்துக் கொண்டார்கள். என்னுடைய பெற்றோர்களின் வளர்ப்பின் அடிப்படையிலும், அவர்களைத் தாண்டி எனக்கு கிடைத்த வாய்ப்பின் அடிப்படையில் பெறப்பெற்ற உலக ஊடாட்டங்களைக் கொண்டும் எது போன்ற மன முதிர்ச்சியை, விசயங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அப்படியே இல்லையெனில் கேள்விப்படும் அல்லது அந்த சமயத்தில் என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியாத விசயங்களில் தலையை குனிந்து கொண்டு அதில் என்ன இருக்கிறது ஏன் என்னால் என் மன உலகை அந்த விசயம் சார்ந்து விரித்துக் கொள்ள முடியவில்லை என்ற பாங்கில் உள்ளரயே குமைந்துக் கொண்டு, காணாங் கோழியாகிவிடுவேன்; நன்கு புரிந்துகொள்ளும் வரையில்.

இங்கு நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையின் நிகழ்வுகளும், அது இயங்கும் தன்மையும் ரொம்ப விசிச்சிரமானது. எப்படியான வளைவுகளில் எது போன்ற ஆச்சர்ய விசயங்களை நம் வழியில் போட்டு அதனை புரட்டிப் போட்டுவிட்டு மேற்கொண்டு நம் பயணத்தை உந்தி தள்ள சவால் விடப் போகிறது என்பது யாருக்குமே தெரிவதில்லை.

அது போன்ற சவால்கள் மரணம் என்பது எவ்வளவு நாம் ஒவ்வொருவருக்கும் நிச்சயதாம்பூலம் செய்யப்பட்டு எதிர் நோக்கி காத்து கொண்டிருக்கும் ஒரு கொண்டாட்டமோ அது போலவே இது போன்ற வாழ்வின் சவால்களும் வந்து போகும். நாம் வளரும் பொழுது, அதிர்ஷ்ட வசமாக பொறுப்பான பெற்றோர்களை பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்களும் அவர்களுக்குத் தெரிந்த சமூக அறிவைக் கொண்டும், தானே வளர்த்தெடுத்துக் கொண்ட சுய அறிவையும் கொண்டுதான், தன் குழந்தைகளுக்கு வாழுமிடம், சூழல்களின் வழியாக கையிறக்கம் செய்து கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த பெற்றோர்களுக்கும் ஓர் அறிவுசார் எல்லை இருக்கிறது. அதனைத் தாண்டி தான் பெறாத அறிவையும், பேரையும், புகழையும் அடையவே பொறுப்பாக நின்று தனக்கு சரியென பட்ட விசயங்களைக் கூறிக் கொண்டே தன் பெற்ற கல்வியை விட தன் குழந்தைகளுக்கு சிறப்பாக அமையுமாறும், தாங்கள் புழங்கிய மனிதர்களைக் காட்டிலும் இன்னும் கூடுதலாக அறிவில் சிறந்த மனிதர்கள் உலவும் உலகில் சங்கமித்து பரந்து விரிந்து வன்முறையற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து அவர்கள் சந்ததியை பெருக்க வேண்டுமென்று நினைத்தே அவர்களுக்கு கிடைக்காத அத்தனை வாய்ப்புகளையும் மறந்து/மறுத்து குழந்தைகளுக்கு வழங்கியே வாழ்ந்து விடுகிறார்கள், இல்லையா?

பெற்றோர்களுக்கும் அறிவுசார் எல்லைகளைக் கொண்டு என்று வரும் பொழுது, அவர்களுக்கு எட்டிய வளர்ச்சியைக் கொண்டே அவர்களால் தனக்கு வழங்கப்படும் வாழ்வின் சவால்களுக்கு விடையளிக்க முடியுமல்லவா? இது ஒரு சின்ன லாஜிக். தனது மகன்/மகள் தன்னைக் காட்டிலும் இன்னும் பெரிய பல்கலையில் பயிலும் வாய்ப்பைப் பெற்று, அறிவிலும், அவர்களுக்குக் கிடைத்த கூடுதல் உலக/மனித அனுபவம், வெளிநோக்கு (exposure) தளங்களைக் கொண்டு தன் இருப்பை கூடுதலாக ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளும் நிலையை எட்டிய பிறகு எப்படி அந்த மூளை இன்னமும் தனது பெற்றோர்களின் அறிவு சார் எல்லைக்கு உட்பட்டதாகவே இருந்து விட முடியும்?

அதனை ’உணர்ந்து கொள்ளும்’ பெற்றோர்கள் தனது பிள்ளைகளை வெளித் தளத்தில் எப்படி குப்புரடிச்சு எழுந்து தவழும் நிலைக்கு வந்தவுடன் தன் கண்களையே நம்ப முடியாமல் கைகொட்டி ஆர்ப்பரித்து கண்கள் அகல விரிய தங்களது முதல் அனுபவத்தை பெறுவார்களோ அதனைப் போன்றுதான், பின்னாலிலும் தன்னை விட பல வேறு வாழ்க்கை சவால்களை எதிர் நோக்கி முன்னெடுத்துச் செல்லும் பக்குவத்திற்கு வந்திருந்தால் வாயடைத்து சந்தோஷத்தில் நின்று அனுபவிப்பார்கள்.


தன் வயதில், அதே தெருவில் ஏதோ ஒரு social stigmaவைக் கொண்டு ஒரு குடும்பமே வெட்டிக் கொல்லப்பட்டதையோ, அல்லது சமூகமாக நெருக்கடி பேச்சுகளுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்வதையோ அவர் கண்ணுற்றிருக்கலாம் அது அப்படி நிகழ்ந்தது சரியென்றும் எண்ணியே அவரும் தனது முதுமை எட்டியிருக்கலாம். ஆனால், அந்த பெற்றோர்களைக் காட்டிலும் பல சாத்திய வித்தைகளை பெறும் வண்ணம் வாய்ப்புகளை பெற்று வளர்ந்த இந்த மனிதனும் அதே பாதையை தேர்ந்தெடுக்கிறான் என்றால், எங்கே தவறு நிகழ்ந்திருக்கிறது?

இப்போதான் பதிவின் கருவிற்கு வருகிறேன். இங்கேதான் குழந்தை பருவத்திலிருந்து பதின்மம் வரைக்குமான பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உரையாடல் எந்தளவிற்கு அமைகிறதோ அதனை ஒட்டியே எதிர்கால சமூக முகம் காட்டல் ஒரு தனி மனிதனுக்கு இருக்கப் போகிறது என்பேன்.

சில சமயங்களில் இந்த உலகம் பூராவும் வாழ்க்கையில் பக்குவ மடைந்த மனிதர்கள் கல்வியறிவே இல்லாது போனாலும் ஒரு அன்னை தெரசா ரேஞ்சிலேயோ ஏன் அப்படி, குறைந்த பட்சம் மனிதாபிமான முள்ளவர்களாக, தன் மனசாட்சியைக் கேட்டு தனக்கு நேர்ந்தால் (what if...) என்ற அடிப்படைக் கேள்வியை கேட்டுக் கொள்ளும் நல்லவர்களாகிப் போய்விடுகிறார்கள். அவன் கைக்கு மீறி நடந்த ஒரு நிகழ்விற்காக அவன் கழுத்தில் நான் கத்தியை வைக்கிறேனே, நாளக்கி இதே போன்று என்னால் எடுக்கப்படாத ஒரு முடிவிற்காக என் கழுத்தில் அவன் கத்தியை வைத்தால்.... (அப்படியாக யோசிப்பது...)

ஊரில் ஒரு சம்பவம் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இரு தரபட்ட பெற்றோர்களை வைத்து பார்க்கலாம். ஒரு பெண் தனக்கு தன் பெற்றோர்கள் பார்த்து செய்யப் போகும் திருமணம் பிடிக்காமல் தனக்கு பிடித்தவனுடன் நடையைக் கட்டி விடுகிறாள். அதுவும் திருமணத் தேதியெல்லாம் குறித்து பத்திரிக்கையும் அடித்து விநியோகித்து என்ற காலகட்டத்தில். இப்பொழுது இது வெளியில் தெரிய வருகிறது, வளர்த்தெடுத்த குடும்பத்திற்கும், தாம்பூலம் போட்ட குடும்பத்திற்கும் பிறகு சம்பந்தமே இல்லாமல் வெளியில் நின்று வேடிக்கை பார்க்கும் ஊருக்கும் என்று வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது நல்ல பண்பாட்டுடன் நடந்து கொள்ளும் படிப்பறிவே இல்லாத பெற்றோர் # 1) தனது பிள்ளைகளுடன் இரவு உணவை உண்டு கொண்டே சம்பாஷிக்கிறார்கள்... நன்றாகத்தானே போயிக்கொண்டு இருந்தது எப்படி பெத்தவங்களுக்கே தெரியாமல் இப்படி நடந்து போனது, இன்னும் கூடுதலாக அவரின்/ளின் அப்பா நேரத்திற்கு வீட்டிற்கு வந்திருக்கலாம், அவள்/னுடன் பேசி தெரிந்து கொண்டிருக்கலாம், வீட்டில் உரையாடுவதற்கு கூடுதலாக வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கலாமென்று லாஜிக்கல் விசயங்களின் பொருட்டு பேசிக்கொண்டே... ம்ம்ம் என்ன பிரச்சினையோ நமக்குத் தெரியாது. பாவம்! எவ்வளவு மனக் கஷ்டமோ இப்பொழுது...

என்று பேச்சை அடுத்த தளத்திற்கு நகர்த்தி எடுத்துச் செல்வார்கள். அது போன்றே ஒரு தொழு நோயாளியோ அல்லது மனப் பிறழ்சி கொண்டு அலைந்து திரியும் ஒரு நபரைப் பார்க்க நேர்ந்து அவர்கள் மற்ற சிறார்களால் கல்லை விட்டு எரிந்தோ அல்லது பரிகசித்து பேசி/துன்பமிழைப்பதனைக் கண்டால் தனது பிள்ளைகளுக்கு அது போன்று பேசுவதின் ‘அறியாமை’யையிம், அது துன்பம் இழைக்கப்பட்டவருக்கான வலியையிம் எடுத்துரைப்பார்கள் - அது பண்பாட்டுடன் வளர்ந்து வரும் குடும்பத்துக்கான அறிகுறி. அதாவது அடுத்தவர்களின் மனது புண்பட தன் வழியில் நேரடியாக ஒரு விசயத்தை இழைக்காதே என்பது அடிப்படையில் விதைக்கப்பட்ட ஒரு ”யுனிவெர்சல் நல்லொழுக்கம்.” அதனை ஆண்டிபட்டியிலும் பயன்படுத்தலாம், அண்டார்டிகாவிலும் பயன்படுத்தலாம். உதை வாங்கி சாக வைத்து விடாது.

குடும்பம் # 2) நல்ல படிப்பறிவும் வெளி நோக்கு பார்வையும் இருந்தாலும் அந்த பண்பாடு என்ற வஸ்து விழிப்புணர்வு கிடையாத பெற்றோர்கள். அங்கு தினமும் அடுத்த குடும்பங்களைப் பற்றிய பொரணிபேசுதல் அவர்களின் பொழுது போக்கு. அதனில் குழந்தைகளும் தெரிந்தோ தெரியாமலோ காது வழியாக கேட்டு பழகி பிறகு தானும் கலந்து கொள்ளும் அளவிற்கு வந்த குடும்பம். அங்கும் இது போன்ற ஒரு உணவு கூடல் - அங்கும் மேற் கூறிய நல்லொழுக்க அடிப்படை குறிகளைக் கொண்ட குடும்பத்திற்கான அதே சம்பாஷணை. அங்கு பெற்றோர்கள் சொல்கிறார்கள் - காதலனுடன் நடையைக் கட்டிய பெண்ணின் அம்மா பொறுத்தான முதல் விமர்சனம் ’அவ, பொம்பளையா அவ, சரியான ஓடுகாலிய பெத்து வைச்சிருக்கா’ இப்போ அப்பா சொல்லுறார் ’நானா இருந்த்த்தாஆஆஆ அந்த பொண்ண கண்டுபிடிச்சு வெட்டி பொலி போட்டுருவேன்...’ அப்படியே தொழு நோயாளி/மனப் பிறழ்வு சூழ்நிலைக்கும் இது போன்ற முரட்டு வைத்தியம் ‘இவிங்கள எல்லாம் தெருவுக்குள்ளர விடாம கூடியடிக்கணும்... சகிக்கல’ அப்படின்னு சொல்லிட்டு நகர்ந்திடும்.

இப்போ பேசுவோம். இந்த இரண்டு குடும்ப சூழல்களில் வளர்ந்த பிள்ளைகள் எந்தந்த சூழ்நிலைகளில் எது போன்ற ரியாக்‌ஷன்களை முன் வைப்பார்கள்? அந்த அடிப்படை சம்பாஷணை விதைத் தூவல் இரு வேறு உலகங்களாக பரிணமிக்கிறது ஒவ்வொரு தனிமனித சமூக வெளி நோக்கிலும், இல்லையா? அப்பொழுது, வாழ்க்கை தன்னை விட பெரிது, சூழ்நிலைகளை அது பாட்டுக்கு நகர்த்திக்கொண்டே செல்கிறது, #2வில் அந்த அப்பா சொன்னதைப் போன்று ...அந்த பொண்ணை கண்டுபிடிச்சு வெட்டி பொலி போட்டுருவேன்னு.... சொன்னதிற்கு இணங்க அவர்களின் பிள்ளைகள் நாளக்கி இது போன்று ஒரு சம்பவம் யாருடைய குடும்பத்திலோ நிகழப் போக அதே வார்த்தையை உதிர்ப்பார் அல்லது தனக்கு தன் பிள்ளை தன்னை விட அறிவுசார் தளத்தில் எங்கோ போய் நிற்கின்றது இவரால் ஜுரணிக்க முடியாத ஒரு கருத்தியலைக் கொண்டு வருகிறது அப்பொழுது, வெட்டிப் போட்டுவிட்டு சிறைச்சாலைக்கு அவர் சென்று விடுவாரா, அல்லது தானே விஷமருந்தி மரணத்தை கட்டி பிடித்துக் கொள்வாரா?

மீண்டும் இங்கேதான் அந்த பெற்றோர்களின் அடிப்படை உரையாடல் பிள்ளைகளிடத்தில் கைகூடி மிக்க நலன் பயக்கிறது. தன் சக்திக்கு மீறிய தனிக் குடும்ப நிகழ்வுகள் தன்னைச் சுற்றி நிகழும் பொழுது (முட்டாள் தனமான, எதிர்மறை எண்ணங்களை கொட்டுவதை தவிர்க்க), what if... கேள்வியைக் கேட்டு மூர்க்கமான தன் சினத்தை மூக்கணாங்கயிறு போட்டு அடக்கிக் கொள்வதின் பொருட்டு அந்த அடிப்படைக் கல்வி உதவ வேண்டும். தன்னை விட பெரிய நிகழ்வு அது வெளியில், ஆனால் அதற்காக தான் முட்டி தேய உழைத்து உருவாக்கிய/வளர்த்த பிள்ளைகள் தன் வாழ்க்கை அளவை விட Outgrow ஆகி நிற்கிறார்கள் என்பதனால் தன் குடும்பத்தை நிந்தித்து கொள்வது எப்படி சமயோசிதமாக யோசிக்கும் மண்டைக்கு சாத்தியம்?

இப்போ புரிகிறதா? நம்முடைய பெரும்பாலான வியாதிகளின் மூலம் எங்கிருந்து வருகிறதென்று. ஆம்! நாம் பிள்ளைகளை நல் வழி படுத்தவே “நமக்குத் தெரிந்த விசயங்களை” உட்புகுத்தி வளர்க்கிறோம், ஆனால் நாளக்கி நம் மீது பிள்ளைகள் ஏறி நம் பார்வைக்கும் எட்டாத தூர விசயங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதனை நாம் உணரவேண்டும். வளர்வதுதான் வாழ்க்கை தேய்வதல்லவே!

எனவே, முடிந்தளவிற்கு குழந்தைகளுடன் கிடைக்கும் ‘வாய்ப்புகள்’ தோரும் நல்ல ’யுனிவெர்சல் ஒழுக்கம் சார்ந்த’ உரையாடல்களை நிகழ்த்துங்கள் அது பின் வரும் காலங்களில் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் யாரையும் தனி மனித குடும்பங்களில் மூக்கை நுழைத்து பரிகசிக்கும் காட்டுமிராண்டித் தனத்தை தொடராத வாக்கில். அதுவே ஆரோக்கிய வாழ்வு உனக்கும், எனக்கும் ஒரு சமூகத்திற்கும் ஏன் இந்த உலகிற்குமே!!




பி.கு: அண்மையில் இந்தக் கட்டுரை எனது பெற்றோர்களுடன் உரையாடும் பொழுது கருவாக உருவானது. இங்கே அப்படியே சிறிதும் கலப்படமில்லாமல், உங்களுக்காகவே!!

Tuesday, November 16, 2010

நான் ஏன் வலைபதிகிறேன்: சுயசொரிதல்...

ஓ! பாய்!! எங்கிருந்து இந்த பகுதியை நான் ஆரம்பிக்கிறதிங்கிறதிலேயே ஜாங்கிரி சுத்துற அளவிற்கு விசயமிருக்கு. ம்ம்ம் நான் பதிவ எழுத ஆரம்பிச்சு ஐந்து வருஷமாகிப்போச்சப்போய்... எனக்கு இந்த கணினியில தமிழ்ல கூட எழுத முடியுங்கிறதை நானே தட்டு தடுமாறி விழுந்து, அங்க நின்னு இங்க நின்னு கடைசியா இந்த வலைப்பூக்கள், பிறகு தமிழ்மணம் அப்படின்னு ஒண்ணு ஒண்ணா என் சொந்த தேடல்ல (இப்பெல்லாம் இத பயன்படுத்தவே வெக்கமா இருக்கு...) இங்க வந்து விழுந்தேன்.

ஏன் அப்படி நிகழ்ந்ததுன்னா, ஏதோ ஒண்ணு இன்னும் நிறைய மனிதர்கள்கிட்ட இருந்து கத்துக்க இருக்கின்னு தேடித் தேடி கண்டம் கண்டமா பராக்கு பார்த்திட்டு கத்துக்கிட்டு வந்தாலும், நம்ம மக்கள், நமக்கு நெருக்கமானவங்க எப்படியா உரையாடிகிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கணும்னு வாரது இயற்கைதானே? அதானே சம்பந்தமோ, பொருத்தமோ இல்லாத இடமின்னாலும் இதுக்குள்ளர கெடக்கணும்னு ஒரு உறுதியும் கொண்டு அதுவும் நானே எடுத்துக்கிட்டது (இல்லன்னா, நான் விலகுகிறேன்னு பதிவ போடச் சொல்லும்...), யாரும் எனக்கு அறிவுரை கொடுக்கல. இங்க இருக்கவங்க யாரு என்னான்னு கூட அறிமுகப் படுத்தி அதுக்குப் பிறகு எழுந்து நடக்கவோ, தவழவோ சொல்லிக் கொடுக்கல. புதிசா வாரவங்க நிறைய பேரு நிறைய பக்க பலத்தோட, பின்னணியோட இப்பொல்லாம் வருவதனையும் அவதானிக்கிறேன்.

எல்லாமே என்னுடைய சொந்த முயற்சியில என்னோட அறிவு தளத்தில யார், என்ன சொல்லுறாங்க, எங்க உண்மை இருக்கு, எங்க பாசாங்கு நிரம்பி இருக்கு, எங்க சும்மா நேரத்தை கொல்ல யாகூ, கூகுள் சாட் அறையில இருந்து நேரடியா இங்க வந்து பழகிக்கிறதுக்கு மட்டும் இருக்காங்கன்னும், அதனைத் தாண்டி எப்படி மரணத்தை கண்ணுக்கு கண்ணாக பார்த்தவனாக, வாழ்க்கையையும் வாழ்ந்து, புரிந்து கொண்டவர்கள் யார் என்பதனையும் என்னளவிலான புரிதல்களோட மேலும் வாழ்வினை படிப்பதற்காக அவர்களின் வீடு தேடி போய் வாசிப்பதுமாக எனது ஐந்து வருட வலையுலக வாழ்க்கையை ஓட்டியிருக்கிறேன். இங்கு பல வலையுலகப் போர்களை பார்த்திருக்கிறேன், பல மனிதர்களின் நிறங்களைக் கண்டிருக்கிறேன், அவர்களுக்கான அங்கீகாரப் போரில் வாழ்வின் காலத்தினையும், தேய்வினையும் கண்டுணர்ந்ததிருக்கிறேன்.

இது எப்படி இருக்கின்னா எனக்கு, இப்படியாக; கற்பனைய விரிச்சிக்கோங்க கீழ் கண்டவாறு, எனக்கு திடீர்னு ஒரு 1000 வருஷம் வாழுற மாதிரியான வரம் கிடைச்சிருச்சு (அய்யோ நிஜ வாழ்க்கையில அப்படியான ஒரு தப்பை செய்ய மாட்டேங்க...). அதுவும் அந்த சிறப்பு வரத்தில ஒரு முப்பத்தஞ்சு மைலுக்கு மேல நிலையான இடத்தில பூமியை மட்டும் சுத்த விட்டு நான் கீழிருப்பவர்களின் வாழ்வையும், தேய்வையும் அவர்களின் பாரம்பரியம்/கலாச்சாரம்/பண்பாடு போன்ற மற்ற காலத்தினூடாக அழித்தெழுதும் விசயங்களையும் கண்ணுற்றுக் கொண்டே வாழ்ந்து வருவதனைப் போன்றதாக.

உங்களால் அனுமானிக்க முடிகிறதா அப்படிப்பட்டதான ஒரு வாழ்க்கையின் அவதானிப்பில் எத்தனை விசயங்களை கண்டுணர்ந்து எத்தனை விதமான நம்முள் எழும் கேள்விகளுக்கும் விடை கிடைத்திருக்கும் தனிமனித/சமூக வாழ்வின் பொருட்டு எது போன்ற விசயங்களில் அலட்டிக் கொள்வது நலம் பயக்கும், பயக்காது என்பதிலிருந்து இன்னும் எது எதுக்கோ சுயமாக கற்றுக்கொள்ள முடிந்திருக்கும்!

சமூகத்தில வாழ்ந்திட்டு இருக்கும் போது பிச்சை எடுத்து சாப்பிடுற நிலைக்கும் போறோமா அதுவும் நம்மோடதான், இல்ல ஊழல் செஞ்சு கோடி கோடியா சுருட்டிக் கொண்டு வாழுறோமா அதுவும் நம்மோடதான். அதப்பொருத்து ஒருத்தனுக்கும் கவலை இருக்காதுங்கிறதையும் தெரிஞ்சிக்கணும். காலம் பாட்டுக்கு இயங்கி போயிட்டே இருக்கு!

திரும்பவும் கதை. இப்போ அந்த பூமிக்கு மேல நின்னு பார்த்துட்டு இருந்தப்போ, மூணு தலை முறைக்கு முன்னாடி நம்மோட பாட்டி மொட்டை போட்டுக்கிட்டு ஆறு வயசில கல்யாணம் கட்டி, 17 வயசில அதுவோட கணவன் புட்டுக்கப் போக இதுக்கு ஒரு மொட்டை போட்டு, வெள்ளப் புடவை சாத்தி திண்ணைக் கொண்டையில உட்கார வைச்சி எத்தனை ஈ போகுது வருதுன்னு எண்ணிக்கிட்டு உட்கார வைச்சிருந்ததையும் பார்த்தோம், அதே நேரத்தில ஒரு 200 வருஷத்தை பாஸ்ட் ஃபார்வேர்ட் பண்ணி இன்னைக்கு மறுமணம் பண்ணவிட்டு அதே வயசு ஆள ISOல வேலைக்கு அனுப்பி அடுத்த நிலாவிற்கு போற ராக்கெட்டின் திசையறி மானியின் புரெஜெக்ட் கட்டுறதின் தலைமைக்கு ஆளாப் போடுற அளவிற்கு மாறியிருந்தா அதிசயமா இருக்குமா இல்லையா. வெயிட், வெயிட், இந்த நிலையில பாவம் அந்த மொட்டை போட்ட பாட்டி, வெறும் ஈயை எண்ணியே, போர் அடிச்சுப் போயி சேர்ந்திருக்கும் சமூகத்தின் மேல அத்தனை கோபத்தையும் வைச்சிட்டு; நியூக்ளியார் வெப்பனையே மனசிக்குள்ளர அது கட்டி முடிச்சிருக்கும் தான் சாவும் பொழுது இந்த ஊரையே எவனெல்லாம் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருந்தானோ அவனப் பூராவும் கூடவே வாரிக்கிட்டு போற ரேஞ்சிற்கு... யாருக்குத் தெரியும் அது என்ன புத்தகமா எழுதினிச்சு, நாம தெரிஞ்சிக்க.

சோ, நஷ்டம் அந்த தனி மனுசிக்குத்தான். ஆனா, அதே கால கட்டத்தில் ஏதாவது பலப்பல மனுசியோ/மனுசனோ அதன் வலியை நன்கு உள்வாங்கி சிறிது சிறிதாக நம்ம பாட்டியின் தெருமுனையிலோ ஊரின் மறு கோடியிலோ முனகியிருக்கக் கூடும். அந்த சிந்தனையின் பொருட்டு விளங்காத தடிமாட்டுத் தோல் கொண்ட மற்ற மனிதர்களுக்கும் விளங்கியிருக்கக் கூடும்; நாம் பேசிக் கொண்டிருக்கும் பாட்டியின் சிறு வயதின் தேவைகளும், ஏக்கங்களும், வலிகளும்... இது போன்றதாகத்தான் சமூகத்தின் தேவைகள் காலம் தோரும் விரித்து உள்வாங்க உதவியாக இருந்திருக்கிறார்கள். இந்தக் கால கட்டத்தில் பேசுவதற்கு கூட கூலி கிடைத்தால்தானே வாயைத் திறப்பதான சந்திப்பில் காலம் சுழன்று நம் கலாச்சாரத்தை கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் பொழுது, உண்மையான அக்கறையோடு பேசுபவர்களையும் காகம் கரைந்து கூட்டத்தை சேர்த்து அழுகி கெடக்கும் மாமீச எச்சத்தை உண்ணக் காத்து நிற்கும் ஹைனாக்கள் போல சுற்றி வந்து அவர்களை விரட்டியடிப்பதாலும், கிடைத்திருக்கும் சுய உணர்வோடு தன்னிச்சையாக சிந்திக்கும் காலங்களான ஒரு 30 வருடங்களுக்குள் என்னாத்தை பெரிசாக வாழ்ந்து முடித்ததினைப் போன்று உணர்ந்து விடப் போகிறோம்; தன் எண்ணத்தை கூட வெளிப்படுத்திவிடா வண்ணம்.

தனக்கான சிந்தனைகளுக்கு கூட வாய்பூட்டு போட்டு, நழுவிக் கொண்டு நன்றாக வாழ்ந்து முடித்திருக்கிறோம் (தனக்கு மட்டுமேயாக) என்று எண்ணி மண்ணுக்குள் புகுந்து பாறையின் ஒரு பகுதியா மீண்டும் ஆகிக்கொள்வதில், யாருக்கு லாபம்?

இப்போ பாயிண்டிற்கு வருகிறேன், என்னுடைய தளம் ஐந்து வருடங்களாக இயங்கி வருகிறது என்று கூறினேன். எழுதுவது அனைத்தும் எனக்கேயான சுய விமர்சனங்களும், என்னால் முடியாத, என்னை விட பெரிதாக எனக்கு முன்னால் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த வாழ்வை பொருத்தான சிக்கல்களில் ஏன் நான் இப்படி ரியாக்ட் செய்கிறேன்; எப்படியாக எனக்கு வழங்கப்பட்ட சூழல்களிலிருந்து மீண்டு அதன் பொருட்டான தெளிவு சார்ந்த கட்டுரைகளையுமே, தேடல்களையுமே இங்கு பிரதானமாக வைத்து எழுதி வைக்கிறேன்.

இந்த வலைத்தளத்தின் மூலமாக என் அறிவார்ந்த தளத்தில் இயங்கும் மக்களை அறிமுகப்படுத்திக் கொள்ள முடிந்தது. அவ்வளவுதான். வேறு எங்குமே இதனை வைத்துக் காரியம் சாதித்துக் கொள்ளவோ, அல்லது நாளக்கி அவர்கள் தேவைப்படுவார்கள் கர்மமே கண்ணாக கும்மியடிக்க வேண்டிய நிலையில் எந்த மனிதர்களையும் நான் பிடித்தும் வைத்திருக்கவில்லை, அவர்களும் என்னைப் பிடித்து வைத்திருக்கவில்லை? ஆச்சர்யம்தானே?! அப்படியான மனிதர்கள் இங்கு மென்மேலும் இருக்கக் கூடும்.

இது போன்ற புரிதல்கள் உண்மையாக தன்னுடைய கருத்துக்களை பதிய வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு கண்டிப்பா உதவக் கூடும். இல்லையெனில் கூட்டமாக வந்து, கூட்டமாக சென்றால் நாம் எதுவுமே தனிமனித சோதனைகள் சார்ந்து முகம் கொடுத்து, அதிலிருந்து மீண்டு எழ ஒரு போதும் தன்னை தயார்படுத்திக்கொள்ள முடியாது.

மேலும் முன்னெப்பொழுதுமில்லாத வாக்கில் இப்பொழுது இந்த இணையம் ஒரு அருப்பெரும் கதவை திறந்து விட்டிருக்கிறது. அது பல வேறுபட்ட நிலைகளில், தளங்களில் இயங்கும் ஜாம்பவான்களையும் அவர்களின் வாசிப்பின் வீச்சம், வாழ்க்கையின் ஆழம், பிற பிரதேசங்களின் பழக்க வழக்கம்/அங்கே நிலவும் கலாச்சாரம்/பண்பாடு போன்ற பல விசயங்களை ஒருங்கே கொண்டு வந்து ‘உரையாட’ ஒரு அருமையான இடமாக்கிக் கொடுத்திருக்கிறது.

இதெல்லாம் ஒரு 20 வருடத்திற்கு முன்பு கனவிலும் நினைத்துப் பார்த்திருக்காத விசயம். நானெல்லாம், அறிவார்த்தமாக இயங்கும் மனிதர்களை அவரவர்கள் இருக்குமிடங்களிலேயே சென்று பார்க்கும் நிலையிலேயே இருந்தது. அதுவும் தேடித் தேடி. இன்று அவரவர்களும் கிடைக்கும் நேரத்தில் இப்படி இணையத்தின் ஊடாக ‘உரையாட’ காத்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்களை படியுங்கள், எங்கிருந்து, எங்கு சென்று எது போன்ற வாழ்வுச் சாலையின் மூலமாக நடந்து எங்கே இருக்கிறார்கள், ஏன் இப்படி பேசுகிறார்கள் என்பதனை அவதானியுங்கள். நாம் செய்யும் பெரிய தவறு தனக்கு முன்னாக இருக்கும் வாய்ப்பினை பார்க்கத் தவறுவதுதான்.

பல இடங்களில் நான் குறிப்பிட்டபடி இந்த தளத்திற்கு வந்து வாசிப்பவர்கள் முதலில் என் பெயரைக் கொண்டு முன் முடிவு செய்பவர்கள் அத்தோடு நிற்கட்டும், அதனைத் தாண்டியும் எடுத்தாளும் பேசு பொருள், எழுத்து நடை உவப்பாய் இல்லையா, கழியுங்கள். பொருட்டு கிடையாது. ஆழமறிந்தவர்கள் மட்டுமே எஞ்சினாலே போதும். இந்தத் தளம் எனக்கானது, என் விழிப்பு நிலையை மேலும் வளர்த்துக் கொள்ளவும், முகம் கொடுக்கவே அஞ்சும் கேள்விகளை எழுப்பிக் கொள்ளவுமே இந்தத் தளம்.

அதன் பொருட்டு எனக்கு உறுதுணையாய் இருப்பவர்கள், இங்கே பொழங்கி வருகிறார்கள். புரியாதவர்கள், புரியும் பொழுது படித்துக் கொண்டால் போதும்!

இது எந்த தனிமனித லாப நோக்கிற்காகவும் எழுதப்படும் தளமில்லை. த்தோ, அவரை தெரிந்து வைத்திருந்தால் அது ஆகும்; இவரைத் தெரிந்து வைத்திருந்தால் இதுவாகும் என்பதற்கு - என்னை மென்மேலும் வளர்த்தெடுக்க வைத்திற்கும் ஒரு விளையாட்டுத்தளம்.

என்னுடனான இந்த ப்ளாக்கின் மூலமாக நெருக்கமானவர்களுக்கு கூட பூர்ண சுதந்திரம் கொடுத்தே வைத்திருக்கிறேன், நேராகவே சொல்லி என்னுடனான கருத்துக்களில் ஒப்புமை இல்லையெனில் எப்பொழுது வேண்டுமானாலும், சுதந்திரமாக நடையை கட்டலாமென்று. ஏனெனில், எதுவும் கட்டிப் போட்டிருக்கக் கூடாது. அவர்களுக்காக நானும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது, என்ற நல்ல எண்ணத்திலேயே. முகமூடியுடன் பழகிக்கொள்வது நேர விரயம், இரண்டு பக்கமுமே.

என்னைப் போன்று ஓடித் தேய எண்ணமுள்ளவர்கள் சத்தமில்லாமல் வந்து போவது ஒன்றே போதும், இதற்கான நேரம் செலவழிப்பதற்கான தட்டிக் கொடுப்பதாக. முகமூடிகளற்ற, உண்மையை நேசிக்கும், மரணத்தை அதன் கண் நோக்க தைரியமுள்ளவன் எஞ்சக் கடவ!

Friday, November 12, 2010

கண்ணுக்கு புலப்படாத கலாச்சாரம், பண்பாடு: A template post

கலாச்சாரம், பண்பாடு இன்னும் என்னன்னவோ சரியாகவே புரிந்து கொள்ளப்படாத ஒரு விசயத்தைப் பத்தி பேசிகிட்டு ரொம்ப அரைவேக்காட்டுத் தனமா விசனப்பட்டு பதிவுகள் மேல பதிவுகளா படிச்சு எனக்கு மண்டை காஞ்சிப் போச்சு. தேடித் தேடி அது மாதிரி பேசுற கட்டுரைகளை எல்லாம் போயி படிக்கிறதில்ல. எதிர்பாராத விதமா எடரி விழுந்து படிக்கப்போயி தனித்தனியா மறுமொழிகள் வேற இட்டு, அதனைச் சார்ந்து வேற்று சிந்தனைகளை கிளறி விடல் எண்ணி எப்பவோவது என்னோட சொந்த புரிதலை வைப்பதுண்டு.

இருந்தாலும் தனித்தனியாக விவாதித்திக்கொண்டே இருக்க முடியாது. ஏன்னா இன்றைய நவீன சூழல்ல நிறைய புதிய புதிய ஆட்களை பழைய மண்டைக்குள்ளரயே வைச்சு வெளி உலகத்திற்கு அறிமுகப் படுத்துறதுனாலே எல்லாருக்கும் பொதுவான ஒரு கட்டுரையா இருக்கட்டுமேன்னு இது.

நண்பர் கல்வெட்டு கலாச்சாரம் என்ற கழிச்சலில் போகும் வார்த்தைக்கு இப்படியாக அவரின் பதிவென்றில் விளக்கமளித்திருக்கிறார்...

...கலாச்சாரம் என்றால் என்ன என்று ஒருமுறை ஒரு பேராசியருக்கு பாடம் எடுக்கப்போய் அவர் அதில் இருந்து என்னிடம் இருந்து விலகிப்போய்விட்டார். நான் சொல்லும் பேராசிரியர் தமிழர் அல்ல வட இந்தியர் ஒருவர். கலாச்சாரம் என்பது எப்போதும் இறந்தகாலத்தைக் குறிக்கும். இறந்தகாலம் அல்லது கடந்தகாலம் என்பது எல்லை இல்லாதது. கி.பி என்று ஆரம்பித்து கடந்தகாலத்தை நோக்கிச் சென்றால் கிறித்துவின் பிறப்பில் நின்று அந்தர்பல்டி அடுத்து கி.மு என்றாகி எல்லையில்லாமல் விரியும்.

கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று புலம்பும் பெரிசுகளிடம் "எந்த காலகட்டத்திற்கான கலாச்சாரம் இப்போது இந்த ஆண்டில் கெட்டுவிட்டது?" என்று கேட்கலாம். ஒரு பேச்சுக்கு கண்ணகி காலத்தில் இருந்ததே அக்மார்க் கலாச்சாரம் என்றால், எல்லா ஊரிலும் பரத்தையர்கள் பகிரங்கமாக வாழ அதே பெரிசுகள் ஒத்துக்கொள்வார்களா? இல்லை, குறைந்த பட்சம் "கட்டைவண்டியில் மட்டும்தான் பயணம் செய்வேன்" என்று வாழ்வார்களா? டயர் வண்டி வந்த காலத்தில் கட்டைவண்டிக்காரர்களும், கட்டை வண்டிக்கு சக்கரம் செய்யும் தச்சர் மற்றும் மேல் இரும்புப்பட்டை பட்டை செய்யும் கொல்லரும் "இதெல்லாம் அழிவுக்கான அறிகுறி . டயர் வயக்காடில் போனா நல்லதா?" என்றுகூட அலுத்துக் கொண்டார்கள். ட்ராக்டரே போகும் காலம் வரவில்லையா? கூமுட்டைகள் பேசும் கலாச்சாரம் என்பது தனக்குத் தெரிந்த வரலாற்றில் இருந்து வசதிப்படி செலக்ட் செய்து கொள்வது.

இதுதான் டமிளனின் கலாச்சாரம் என்று ஏதேனும் ஒரு காலத்தை மட்டும் குறிக்க முடியாது. ஒவ்வொரு காலத்திலும் அந்த அந்த சூழலுக்கு ஏற்ப ஒருவித பழக்கங்கள் இருந்து இருக்கும். அடுத்து வரும் காலங்களில் அது மாறிவிடும். கண்ணகியின் பாட்டிகூட கண்ணகியிடம் "அந்தக்காலத்தில் இருந்த மாதிரியா இருக்கு? காலம் கெட்டுப்போச்சு. சூதானமா இரு புள்ள‌" என்று சொல்லி இருக்கக்கூடும். அந்தப்பாட்டிக்கு அவரின் காலம் நல்ல கலாசாரம். நமக்கு?

கலாச்சாரம் என்பது வரலாறு. மேலும் கலாச்சாரம் என்பது மற்றவர்களால் மதிப்பிடப்படும் ஒன்று. பண்பாடு, கலாச்சாரம் குறித்து விரிவாக எழுதும் போது நிறைய உரையாட வாய்ப்புண்டு...


இப்போ என்னோடது. கீழ் படிக்க நேர்பவை பின்னூட்டமாக எழுத ஆரம்பித்தது இந்தப் பதிவிற்காக... ஆபத்தான கலாச்சாரம்...!

வாழ்க்கை என்பது ஒரே நேர் கோட்டில் ஓடுவது கிடையாது. அது மனிதருக்கு மனிதர் புரிந்து கொள்ளும் படிகளைக் கொண்டு வளைந்து வித்தியாசப்பட்டு நிற்கிறது; எப்படி வான்வெளியில் பொருட்களின் பருமனுக்கு ஏற்ப வெளியே வளைந்து பிற பொருட்களின் ஈர்ப்பினிலின்றி விலகி ஓடவோ, இழுத்து பிடித்து தன்னைச் சுற்றி சுழலலவோ ஆக்கிக் கொள்வதனைப் போன்று.

இந்த தவறாக புரிந்து உள்வாங்கி கொள்ளப்பட்ட “கலாச்சாரம்” என்ற ஒற்றைச் சொல் எப்படி அடுத்தவரின் உடல் நிலையையிம், அவரின் தினசரி வாழ்க்கையையில் கூட நிம்மதியாக இல்லாமல் ஆக்கும் அளவிற்கு, தன் கையை மீறிய ஒரு விசயம் பாதிப்பினை வழங்கி விடுகிறது.

ஒருவருக்கு ஒரு விசயம் அதிருப்தியையும், கலக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்பதற்காக காலம் பிறர் ஒருவர் தன் வளர்ச்சியைக் கொண்டு எடுத்திருக்கும் முயற்சிக்கு அவரது அனுபவத்தின் மூலமாக தேடிச் சென்றடையக் கூடிய பாடங்களை வழங்காமல் அவர்களின் வாழ்கையை முடித்து விடுவது கிடையாதுதானே!

எதார்த்த வாழ்வில் விசயங்களின் ஓட்டம் அவ்வாறாக சுழன்றடித்து ஓடித் தேய்கையில் எப்படி தனி ஒருவனாக கடந்த கால விழுமியங்களில் சிக்கி தனக்கு உவப்பாய் இருக்கிறது என்பதற்காக, முட்நோக்கியே நகரும் கால அம்புக்குறியை வளைத்து பின்னோக்கி இழுக்க முடியும்.

இங்கு நம்மால் முடிந்தது, ஒதுங்கி நின்று அது போன்ற அனுபவப் பாடம் வேண்டியவர்களை விட்டு அதன் சாதக பாதகங்களை பெற விடுவது மட்டுமே! அந்தக் கட்டுரையில் பேசப் பட்ட விசயம் ஆண்/பெண் திருமணம் கட்டாமல் “சேர்ந்து வாழ்வது”பற்றியது என்பதால் இப்படியாகச் சொல்லியிருந்தேன். அது போன்ற ஒரு வாழ்வுச் சூழலில் ஈடுபடுபவர்கள் ஒன்றும் வயது முதிராத பள்ளிச் சிறார்கள் இல்லையே, உடல்/மன ரீதியில் சுயமாக சிந்திக்கும் நிலையில்தானே இருக்கிறார்கள்... இந்த பின்னணியில் எல்லாம் அவர்களுத் தெரிந்தேதானே இறங்குவார்கள்; எல்லா சாதக/பாதங்களையும் நேர் கொள்ளும் முடிவோடு.

ஏன், அது போன்ற உறவு நிலைகளில் கற்றுக்கொள்வதற்கு ஒன்றுமே இல்லையா? ஏன், மனிதனின் மனம் எப்பொழுதும் ஆண்/பெண் உறவு நிலையை குறுக்கி காமம் என்ற ஊறுகாய்க்குள்ளரயே தன்னையும் சேர்த்து ஊற வைத்துக் கொள்கிறது? எங்கே அப்போ தவறு நிகழ்கிறது? ஒரு பெண்ணை ஆற்றைக் கடக்க தோளில் சுமந்து சென்று அத்துடனே சுமையை இறக்கிய நபரா நீங்கள், அல்லாது மனத்துடனேயே வாழ்வுச் சாலையெங்கும் தூக்கிச் சுமக்கும் நபரா?


.... அந்தக் கட்டுரையில் சில சமூகம் கெட்டுப் போகிறதே என்று விசனத்துடன் என்ன செய்து இதனை கட்டுப்படுத்தாலம் என்ற தொனியில் கீழ்காணும் வரிகள்...

//'நமது கலாசாரத்திற்கு களங்கம் கற்பிக்கும்' //

//என்ன செய்து இதனை நிறுத்த போகிறோம் அல்லது தடுக்க போகிறோம்...?//


அடுத்து கலாச்சாரம், கலாச்சாரம் என்று பேசுகிறோமே, எது கலாச்சாரம்? பெற்றவர்களை புறந்தள்ளி வாழ்வது, தனக்காக தனது படிப்பை/தேவைகளை விளக்கி வைத்து மற்றவருக்காக வழி விட்டு வாழ்ந்தவர்களை தன் தேவை முடிந்தவுடன் அவர்களை தூக்கி கடாசிவிட்டு வாழத் துணிவது, வரதட்சிணைக்கென வயதானவர்களையும் நொந்து சாகும்படியான சூழலுக்கு இட்டுச் செல்வது, நாட்டையே சுரண்டும் வாக்கில் ஊரான் சொத்தை திருடி கொண்டு போய் வைத்துக் கொள்ளும் களவாணித் தனம், ஒருத்தனுக்கு ஒருத்தி என்று ஏமாற்றிக் கொண்டு வாழ்வதெல்லாம் இந்த கலாச்சார கூண்டிற்குள் வராதா?

ஆண்/பெண் உறவு சார்ந்தும், ஆடைகள் உடுத்தி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பாங்கில் மட்டுமே இந்தக் கலாச்சாரம் விழிப்புடன் இருக்கிறதே அது ஏன்? அதுவும், இந்த உறவு நிலையில் போலியாக இணைந்தே 30, 40 வருடங்கள் என ஊருக்காக வாழ்ந்து முடிக்கும் நிலையில் - இடையில் அடிதடி, நிம்மதியின்மை, மனச் சோர்வு, அடுத்தவருக்கு என்ன வேண்டும், தன்னுடைய டேஸ்ட் என்ன, தனக்கே என்ன வேண்டும் என்றே தெரியாமல் விழிபிதிங்கி என்னமோ பிறப்பெடுத்துவிட்டேன் வாழ்ந்து முடிக்கணுங்கிற கடமை உணர்ச்சியோட மல்லுக்கட்டி அக்கப்போர் பண்ணி வாழ்வதில் என்ன சிறப்பு இருந்துவிடப் போகிறது?

அதே சமயத்தில் இப்படியாக ஆண்/பெண் உறவுகளின் சிக்கல்களை புரிந்து கொண்டு மீண்டும் நிலையான உறவுகளுக்குள் வருவது எவ்வளவு மேல் எனலாம்; தன்னைப் பற்றிய சுயமான முடிவுகளோட, தேவைகள், குறிக்கோல் என பெற்ற அனுபவங்களைக் கொண்டு தனக்குத் தகுந்த மாதிரி தைத்துக்கொண்ட உடையை மட்டும் அணிந்து கொள்ளும் பக்குவத்தோடு. ... sum of experiences = lifely wisdom for future harmony.

மாறாக மோட்டில் முட்டிக் கொள்வதனைப் போன்று ஒவ்வொருவரும் ஒரு துருவத்தில் நின்று கொண்டு, இவர் பேசுவது அவருக்கு புரியவில்லை; அவரது இவருக்கு... ஒண்ணு காட்டிற்கு இழுத்தால் இன்னொன்னு மோட்டிற்கு இழுத்துக் கொண்டுமென உரையாடலே இன்றி அமைத்துக் கொள்ளும் வாழ்வில் எப்படியான தன்னைப் பற்றிய புரிதல் முழுமையாக இருக்க முடியும்.

இன்னும் எவ்வளவோ இருக்கிறது பேசுவதற்கு. அதற்காக எல்லாரும் இப்படி செய்து வாழ்க்கை புரிஞ்சிக்கோங்கப்பான்னு சொல்லல. தனக்குப் புரிஞ்சதை வைச்சு, தன்னோட வளர்ச்சியை வைச்சு, தான் வாழும் சூழலை வைச்சு மட்டுமே இந்த மொத்த உலகத்தையும் அளந்துவிட முடியாது. அதுனாலே உடம்ப பார்த்துக்குவோம். தனிமனித நிலையில் அவங்கவங்களும் தனக்குத் தேவையான வழியில, வாழ்க்கை பாடத்தை பெற அனுமதிப்போம். அடிச்செல்லாம் பழுக்க வைக்க முடியுமா??


*** இதுவும் கலாச்சார சீரழிவிற்குள் வருமா ...

புது ஃபேஷன் ஷெட்டி, ஐயர், ரெட்டி, மேனன்: Is it fool's identity?


***அப்படியே இதுவும் வருமுங்களா பார்த்துச் சொல்லுங்க...



பி. கு: அப்படி இல்லாம இந்த பொஸ்தகத்தில எழுதியிருக்கு அத தூக்கிப் புடிச்சிக்கிட்டு, த்தோ அந்த அஞ்சாவது வீட்டில இருக்கவன் தொடர மாட்டிங்கிறான் எப்படி அவன வழிக்கு கொண்டு வாரதுன்னு அடாவடியா உட்கார்ந்து யோசிச்சா, நம் பிள்ளைகளுக்கும் ஆளுக்கு ஒரு அருவா தயார் செஞ்சு தலையணைக்கு கீழே வைச்சிக்க வேண்டியதுதான் - வீட்டுக்கு வீடு. :)

Wednesday, November 10, 2010

பிள்ளைகளுக்கான பாலியல் உபத்திரமும், நம்மூர்ச் சட்டமும்...

தனி மனித ஒழுக்கம் சார்ந்த குற்றங்கள் ஒரு சமூக பார்வையில் பார்க்கப்படும் பொழுதும், அதே நேரத்தில் மிக நெருக்கமாக உணரும் பொழுதும் எவ்வாறாக அந்த பிரச்சினை திசை திருப்பப்படலாம் என்பதற்கு அண்மைய கோயம்புத்தூரின் சிறார்கள் கடத்தலும் அதனைத் தொடர்ந்த அவர்களின் படுகொலையும் ஒரு உதாரணமாகக் கொள்ள முடியும்.

பரவலாக இது போன்ற குற்றங்கள் ஒரு சமூகத்தில் முற்று முழுதாக தவிர்த்து வாழ்ந்து கொண்டிருப்பதாக எந்த நாட்டிலும் காண முடியாதுதான். ஆனால், இது போன்ற ransomக்காக குழந்தைகளை கடத்தி வைத்து பணம் பறிப்பதென்பது ஆங்காங்கே பரவலாக இப்பொழுது தலையெடுத்து வருகிறது நம்மூரில் என்பது கவணிக்கப்பட வேண்டிய ஒரு க்ரைம். ஏனெனில், நம் போன்ற ஒரு ஃப்ரீ ரேஞ்சிங் சமூகத்தில் அவ்வாறாக தொடர் நிகழ்வுகளாக ஆகிப் போவதற்கு மிக்க வாய்ப்புகளும் இருக்கிறது.

ஆனால், நான் அவதானித்த வரையிலும் நம் சமூகத்தில் குழந்தைகளின் மீதான வன்முறை கட்டவிழ்ப்பிற்கு போதுமான சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லை என்றுதான் கருதச் செய்கிறது. இது போன்ற தற்காப்பு நடவடிக்கைகள் சட்டம் சார்ந்த தண்டனைகளில் சிறிதும் சமரசங்களற்று எல்லா இடங்களிலும் விரவி பயன்பாட்டில் இருக்கும் போதுதான், அது போன்ற செயல்களில் இறங்க எத்தனிக்கும் எதிர்கால மனிதர்களுக்கு ஒரு விழிப்பேற்றும் அரணாக இருந்து குற்றங்கள் குறைப்பதற்கான வழியாக அமைய முடியும்.

அதற்கு மாறாக ஒரு சமூகம் கண்டும் காணாததுமாக வீட்டிற்குள்ளும், வெளியிலும் பாலியல் சார்ந்த உபத்திரங்கள் தன் குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கும் பொழுது கட்டப்பஞ்சாயத்து நிகழ்த்தியோ, அல்லது வெளியில் தெரிந்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் எதிர்காலமே பாலாய் போய்விடுமென்றோ அல்லது தன் குடும்ப மானத்திற்கே கலங்கமென்றோ அல்லது குற்றமிழைத்தவர் தனக்கு ரொம்ப வேண்டியவராகிப் போய்விட்டார் வெளியில் தெரிந்தால் அவரின் குடும்பமே நடுத்தெருவிற்கு வந்து விடுமொன்றோ நாம் சாதாரணமாக கடந்து போய் விடுவது மென்மேலும் இது போன்ற உபரத்திரவாதிகளை வளர்த்தே விடும் என்பதில் ஏதாவது ஐயமுண்டா?

இதுவேதான் மீண்டும், மீண்டும் அடக்கி வைக்கப்பட்ட புற வய உணர்வுகள் ஒரு சமூகத்தில், இது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் குழந்தைகளிடத்திலும் கூட மென்மேலும் வளர்தெடுக்க வழிகோணிவிடுகிறது. உதாரணமாக, பள்ளிகளில் இது போன்ற துன்புறுத்தலை பழக்க விதத்தில் (habitual behavior) தொடர்ந்து ஒரு மனிதர் செய்து வருகிறார், அவருக்கு நல்ல பின்புலமும் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த மனிதரும் சமூகத்தில் ஒரு குடும்பத்துடன் எல்லாரையும் போலவே தானும் முழுதுமாக வாழ்ந்து முடிக்க வேண்டுமென்ற ஆசையுடனே வளைய வந்து கொண்டிருக்கிறார்; தான் செய்வது தவறு என்று தெரிந்தும் கூட அந்த குற்றத்தை தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டே.

இந்த சூழலில் சட்டம் தன் வேலையை மிகச் சரியாக செய்தால் இது போன்ற சபல மனிதர்கள் மிகச் சுலபமாக தன்னை அந்த பழக்க நிலையிலிருந்து தன்னோட குடும்ப கெளரவத்திற்காகவேனும் தன்னை மாற்றி எழுதிக் கொள்வார். மாறாக, ஒவ்வொரு முறையும் அவரின் சபல இயக்கம் வெளிப் பட்டு அவருக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு, பாதுகாப்புடன் திரியும் பொழுது, பின்னாலில் அதே முறையில் இயங்க எத்தனிப்பவர்களுக்கு எப்படியானதொரு விழிப்புணர்வு கிட்டியிருக்கக் கூடும்.

நாமும் தினசரிகளிலும், அண்டை அயலர் வீடுகளிலும் பல இது போன்ற குழந்தைகள் சார்ந்த பாலியல் உபத்திர இன்னல்கள் பற்றி வாசித்து விட்டு நகர்ந்து கொண்டேதான் இருப்போம். ஆனால், இதற்கு பின்னான சமூக படிப்பும், சட்டத்தின் கிடுக்கிப் பிடியான முறையான தண்டனையும் அமுலில் இருந்தால் கண்டிப்பாக விசயம் பரவலாக சென்றடைந்து மனசாட்சிக்கு பயப்படாதவர்களுக்கு இந்த சட்டமாவது பயமுறுத்தி நேர் பாதையில் பயணிக்கச் செய்யலாம்.

பல நிகழ்வுகளில் கவனித்திருக்கிறேன், அமெரிக்கன் மீடியாக்களில் இது போன்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறும் கனம்தோரும் பலவிதமான சட்ட ரீதியான பாய்ச்சல்கள் அந்த குற்றம்சாட்டப்பட்டவரின் மீதானது மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. ஒரு முறை மாட்டினால், சொச்ச மிச்ச காலங்களும் அந்த மனிதரின் பின்னாலே அந்த குற்றம் ஊர் உலகறிய தொடர்கிறது. அதுவும் எதார்த்த ரீதியில் மிகவும் உண்மை. முதலில் தேசிய அளவில் மீடியாக்களில் அந்த நபரின் முகம் நிறுத்தி நிதானமாக காட்டப்படுகிறது. பின்பு அவருக்கான தண்டனை சிறைச்சாலையில் கழித்து முடித்து வெளியில் வந்தால் அவருக்கான child predator என்ற அடைமொழியுடன் கூடிய ஒரு எண்ணும், முழுமையான மற்ற விபரங்களும் அடங்கிய ப்ரோஃபைல் ஒன்றும் தயார் செய்யப்பட்டு அது கணினியிலேயே பொது மக்களும் பெறத்தக்க வகையில் போட்டு வைத்து விடுகிறார்கள்.

இப்பொழுது அந்த குறிப்பிட்ட நபரோ அல்லது அது போன்ற குற்ற பின்னணியில் சிறை சென்று வெளி வந்தவர் எந்த நகரத்தில், எந்த தெருவில் வசிக்கிறார் என்றளவில் தெரிந்து கொள்ளக் கூடிய வசதிகளை செய்து தந்து விடுகிறார்கள். எனவே எப்பொழுதும் அது போன்ற நபர்கள் தொடர் கண்கானிப்பில் இருப்பதனைப் போன்றே ஆகிவிடுகிறதல்லவா?

இது போன்ற கடுமையான சட்டம் தன் வாழ் நாள் முழுதும் தன்னைச் சுற்றி வருகிறது என்று ஒரு சமூகத்தையே விழிப்புணர்வு அடையச் செய்யும் பொழுது, குற்றமிழைக்க எண்ணும் சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கொண்டு வெளிக்கிட துணிந்தாலும் சம்பந்தப்படுபவர் ஒரு கனமேனும் எண்ணிப்பார்க்கக் கூடிய நிலையை உருவாக்கித் தருகிறது. ஆனால், நம்முடைய சமூகத்தில் இப்படியா செய்திகளில் படிக்கிறோம்? முதலில் பத்தி பத்தியாக சம்பவ வர்ணனை விரசமூட்டும் வகையில், பிறகு கட்டுரையின் கடைசி பத்தியில் போனால் போகிறதென்று அந்த நபரின் அடுத்த நிலை எப்படியாகும் என்ற சொல்லிவிட்டு ஊத்தி மூடிவிட்டு நகர்ந்து விடுவார்கள். அடுத்த கேசு கிடைக்கிறதா வேறு எங்காவது என்று, இதுதானே நிலமை?

மேலும் சட்டத்தை முறை படுத்தி செலுத்த வேண்டியவர்களே சிறு, சிறு சபலங்களுக்கு பின் சென்று தங்களுடைய வாலிடிட்டியையே இழந்து நிற்கும் பொழுது, எப்படி குற்றம் இழைக்க வரிசை கட்டுபவர்களிடத்திலும் சட்டம் முறைப்படி இயக்கப்படுமென்ற விழிப்புணர்வு இருக்கும். இது போன்ற சிவிக் சென்ஸ், சாலை விதிகளை கடைபிடிக்காதவர்களிடமிருந்து ஆரம்பித்து எந்த சமரசமுமின்றி, ஏழை/பணக்காரன்/பதவி என்று பார்க்காமல் இயக்கப்படுத்தி சட்டம் உயிரோடும், உயிர்ப்போடுமிருக்கிறது என்று காட்டினாலே ஒழிய குற்றங்களின் வீச்சம் குறையாது.

அப்படி ஒரு நாள் மலர்ந்து விட்டால் இது போன்ற ரசிக மனோபாவ ‘என்கவுண்டர்கள்’ தேவைப்படாது. இந்த என்கவுண்டரின் மூலமாக என்னதான் நமக்கு புரிய வைக்க எத்தனிக்கிறார்கள், ஒரு சமூகமாக இது போன்ற நிகழ்வுகளுக்கு பின்னான சட்ட மாற்று மாசோதாக்களை எழுப்பவதற்கான வாய்ப்புகளைத் தவிர்த்தும், சமூக அறிவியல் ரீதியில் குற்றவாளியிடமிருந்து மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறா வண்ணம் எது போன்ற விசயங்களை கரந்து அதனை நடைமுறை படுத்த முடியுமென்ற ஆய்வுகளற்றும், பிராச்சார தொனியில் சமூகமறிய வழங்குவதனைத் தவிர்த்து, ஊழல் மலிந்து வழியும் ஒரு சமூகத்தில் ப்ரீமெச்சூர்டாக வேக வேகமா ஒரு கேசை மூடுவதின் மூலம் இன்னும் காத்துக்கிடக்கும் குற்றவாளிகள் அறியாமை வழி நடந்தேரவே காத்துக் கொண்டிருப்பார்கள்.





பி.கு: குற்றங்கள் குறைப்பதற்கான ஒரே வழி சட்டத்தை சரியாக முறையாக சமரசங்களற்றும், கை நீட்டுவதை அரவே நிப்பாட்டுவதின் மூலமுமே சாத்தியம். முறைப்படி சட்டம் பின் தொடரப்படும் பொழுது அது கண்டிப்பாக மக்களின் மனதில் (pyschic) ஆழமாக பதியப்பட்டுவிடும். காசு கொடுத்து வெளிய வந்திரலாம்னு தோன்றுவது நின்றுவிட்டால், encounterபண்ணி கேசை மூட வேண்டிய அவசிமிருக்காது.

இது போன்ற சம்பவங்களையொட்டி எது போன்று பின்வரும் க்ரைம்களுக்கு நம்மை தயார்படுத்தி கொள்ள முடியுமென்று புதுக்கோட்டையில் தொடர்கொலை செய்து மாட்டிய சம்பவத்தின் பொழுது எழுதிய பதிவையும் முடிஞ்சா வாசிங்க ... புதுக்கோட்டையில் ஒரு ‘சைக்கோபாத்!” - Psychopath


Wednesday, October 27, 2010

கலவை: அருந்ததி ராய்-கரன் தாபர்/காஃப்கா - (Metamorphosis-ஈ புக்)

டாக்டர் ருத்ரன் சமீபத்தில காஃப்காவின் பிம்பம் என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக அந்த எழுத்தாளனைப் பற்றிய அறிமுகத்தை நமக்கு வழங்கியிருந்தார். முதன் முதலாக காஃப்காவினை கேள்விப்படும் அன்பர்களுக்கு Metamorphosis வாசிக்கும்மாறும் கேட்டிக் கொண்டிருந்தார்.


இன்று எதார்த்தமாக கூகுள் செய்யும் பொழுது அப்படியே முழுமையாக டவுன்லோட் கூட செய்ய வேண்டாத அளவிற்கு மெட்டமார்ஃபோசிஸ் கிடைத்தது. அது முழு நீள புதினமா அல்லது குறு நாவலா என்று தெரியவில்லை. இருப்பினும், வாசிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள இணைப்பினை சொடுக்கி, அனுபவிங்க.


****************************************

அடுத்து, நம்ம ஆல்டைம் சூப்பர் வுமன் அருந்ததி ராய், கரன் தாபருடனான காணொளி காணக் கிடைத்தது. ராயை நினைக்கும் பொழுது பயமா இருக்கு, எப்படி இத்தனை மிரட்டல்கள், கூச்சல்களுக்கிடையேயிம் உண்மையை உண்மையா எடுத்து வைக்கிற துணிச்சலா இருக்க முடியுதேன்னு நினைக்கும் பொழுது.

ராய் அளவிற்கெல்லாம் என்னால உண்மையா மனசாட்சியோட இருக்க முடியாட்டியும் ஏதோ மனசில நறுக்கின்னு சுட்டதை உங்க கூடவும் பகிர்ந்துக்குவோமேன்னுதான் அந்த இணைப்பை இங்கயும் போட்டு வைக்கிறேன். பாருங்க முழுசும்!


*************************

நண்பர் கல்வெட்டு தளத்தில் இன்று ஒரு அருமையான கட்டுரை வாசிக்க நேர்ந்தது. கதைசொல்லிகளின் வாயிலாக எப்படியாக ஒரு வாசிப்பாளன் சித்திரங்களை உள்வாங்கி, அந்த கதைசொல்லியின் நியாயப்படுத்தல்கள் நம்மை அந்த ஓட்டத்திலே எடுத்துச் சென்று உறையப் போட்டுவிடுகிறது என்று விளக்கி இருக்கிறார். அது போன்ற எண்ணச் சுழிப்பிலிருந்து விடுபட்டு தன்னித்து நிற்பதின் சாதக பாதகங்களையும், அவசியத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது அந்தக் கட்டுரை. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய பதிவது...


Saturday, October 16, 2010

இசையமைப்பாளர் சந்திரபோஸ் ரீ-மிக்ஸ்...

இசையமைப்பாளர் சந்திரபோஸ் 1980களில் பல பாடல்களை திரையுலகத்திற்கு வழங்கியவர். மறக்க முடியாத பல பாடல்களையும் கொடுத்திருக்கிறார். அண்மையில் அவர் மரணமடைந்ததாக அறிந்தேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் அவரின் மரணத்தையொட்டி.


சில வருடங்களுக்கு முன்பு அவருடைய சில ரீ-மிக்ஸ் பாடல்களை யுட்யூப் தளத்தில் பார்க்க முடிந்தது. மனிதர் நன்றாக ரசித்து வாழ்ந்து கொண்டிருப்பதாகப் பட்டது அந்தப் பாடல்களின் மூலமாக. மீண்டும் இந்த நிகழ்வையொட்டி அந்த தளத்திற்குச் சென்று தேடிப்பார்த்தேன் பார்க்காதவர்கள் யாரேனும் இருப்பின் கண்டு/கேட்டு மகிழுங்கள். I loved his voice and mannerism... seemed to be very loving, funful person to be around with ...

பூஞ்சிட்டுக் குருவிகளா...


ஏண்டி முத்தம்மா...

இந்தப் பாடலை படமாக்கும் பொழுது சந்திரபோஸ் அவர்கள் செமயாக அனுபவிச்சு செய்ததைப் போன்று இருக்கிறது. நீங்களே பாருங்களேன்... ரகளை பண்ணியிருக்கார்! - having heard a couple times this song, his voice is becoming addictive...

Saturday, October 02, 2010

ஆஃப்கான் புத்தர் சிலை வெடிப்பு - பாபர் மசூதி இடிப்பு!

இந்த நிலத் தகராறு விசயமா இவ்வளவு நாலு இத்தனை பேரு எங்கப்பா போயிருந்தீங்கன்னு எல்லாருக்கும் தோணும். எனக்கும் தோணுச்சு. ஆனா எந்த நேரத்தில குரல் எழுப்பணுமோ அந்த நேரத்தில மட்டும் சில விசயங்களுக்கு குரல் எழுப்பினாத்தான் பொருத்தமா இருக்கும்.

சரி நானும் இந்த வரலாற்று சந்திப்பில என்னோட நிலை என்னான்னு சொல்லி வைச்சிர்றது என்னோட பசங்களுக்கும், என்ன உன்னிப்பா கவனிச்சிட்டு இருக்கிற என் நண்பர்கள் வட்டம் பல்முக கலாச்சார மத, இன மக்களையும் உள்ளடக்கி இருப்பதால் நாளக்கி உதவும்னு சொல்லி வைச்சிடுறேன். இது போன்ற சூழல்களில் மட்டுமே தன்னுடைய பார்வையை வைப்பதின் பொருட்டே எது போன்ற தனி மனித புரிதல் இந்த சமூகம் பொருட்டும், இந்த உலக ஞானம் பொருத்தும் தனிமனிதனாக தம்முள்ளையே வளர்த்தெடுத்திருக்கிறோம் என்பதனை முன் மொழிய வாய்ப்பாக இருக்கிறது என்று எண்ணி முன்வைக்கிறேன். நான் மற்றுமொரு மண்ணு மூட்டையாக இருந்து மடிய ஆவணப் படுத்திக்கொள்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

சரி விசயத்திற்கு போவோம். மனிதன் ஆஃப்ரிகா சமவெளிகளில் கற்களை கொண்டு மாமிசம் பிளந்து சாப்பிடுவதற்கு முன்னால் மனித குரங்குளாக நாலு கால்களில் அலைந்து திரிந்த கால யுகங்களில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மரங்களில் தஞ்சம் புகுந்திருந்தான். பிறகு எழுந்து நின்றால் சமவெளியில் வெகு தூரம் பார்க்கும் வாய்ப்பிருப்பதால், தன்னை அணுகி வரும் அபாயத்தை கண்டறியும் திறன் இருப்பதனையொட்டி காலப் போக்கில் சிறுகச் சிறுக அந்த உடற்சார்ந்த தகவமைவினை பெற்றுக் கொண்டான். குறைந்தது இந்த ஒண்ணரை லட்ச வருஷங்களுக்கிடையேதான் இன்றைய முழு நிலையை நாம் எட்டியிருக்கிறோம். ஆனால், இன்னும் போக வேண்டிய தொலைவு வெகு தூரம் இருக்கு; அதுவரைக்கும் நம்மை நாமே விட்டு வைச்சிக்கிட்டா.

அதற்குப் பிறகான சமூகமாக கூடி வாழ்தல். இந்தத் தன்மை பாலூட்டிகளில் பல விலங்குகள் நம்மை போலவே இன்றும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறது வனங்களிலும், சமவெளிகளிலும். அது போன்ற கூடி வாழ்தல் ஒரு தற்காப்பு யுக்தியாகவே படைப்பில் அறியப்படுகிறது. அங்கிருந்துதான் நாமும் அது போன்ற வாழ்வமையை கற்றறிந்திருக்க முடியும். சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து, கிடைக்கும் உணவு, சீதோஷ்ண நிலையைக் கொண்டு இனப்பெருக்கமும், அதனையொட்டிய இடப்பெயர்வும் பிரிதொரு குழுவின் மீதான வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கான சூழ்நிலையை இயற்கையே அமைத்து கொடுத்து அதனை எப்படி நாம் எதிர்கொள்கிறோம் என்பதனைப் பொருத்தே இயற்கை ஒரு உயிரினத்தின் இருத்தலை இந்த பூமிப்பரப்பில் நிர்ணயம் செய்கிறது எனலாம்.

இந்த நிலையில் ஒரு பிராந்தியத்தில் வாழும் பல சிறு குழுக்கள் ஒன்றாக இணைந்திருந்தாலே ஒழிய பிரிதொரு குழு ஊடுருவி நிலத்தையோ அல்லது அங்கிருக்கும் இயற்கை வளங்களையோ சுரண்டும் பாங்கில் ஆக்கிரமிக்கும் பொழுது தன்னை தற்காத்து தனது நிலத்தை மீட்டெடுக்க ஒரு பெரும் இனமாக தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் யுக்தி அவசியமாகிப் போகிறது.

இங்குதான் ஏதோ ஒன்றின் பொருட்டு அனைத்து சிறு சிறு குழுக்களையும் இணைக்கும் விதமாக மொழி, நிறம், பின்பு கல்லு, மண்ணு, தெருப் புழுதி என்று எதனையோ ’பயத்தின்பால்’ சார்ந்து தங்களது மனக் கவலையை அல்லது தன்னிடமிருக்கும் பயத்தை போக்கிக்கொள்ள பயன்படுத்துவதாக தனிமனித நிலையில் வைத்திருந்த ஒரு விசயத்தை ஒரு பரந்துபட்ட குறியீடாக நிறுவனப்படுத்தி ஒரு மதமாக உருத் தேத்துவதின் அவசியம் வந்திருக்கக் கூடும்.

நாம பேசிக்கிட்டு இருக்கிறது எல்லாம் பல ஆயிரம் வருஷங்களை கடந்து, இன்னும் மனிதன் முழுதுமாக நாகரீகமடையாமல் இருந்ததிற்கு முன்னாடி உள்ள கதை. அது போன்ற இடப்பெயர்வு ஓரளவிற்கு கற்காலம் தாண்டி, நாகரீகமடைந்ததாக கருதிக் கொள்ளும் அய்ந்தாயிரம் வருடங்களுக்குப் பின்னாலும் பல்வேறு தேவைகளால் நாடு விட்டு நாடு போயி இடம் பிடிப்பதும், பிரிதொரு கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்டு அவர்களை இவர்களாக்குவதும் வரலாறறிந்ததே!

அந்த காலக் கட்டத்தையும் நாம் கடந்து அண்மைய 1000 வருடத்திய வரலாற்றை புரட்டினாலும் இது போன்ற அவசியமே இருந்து வந்திருக்கிறது. ஏன் இன்று கூட ஓர் அந்திய நாட்டின் இயற்கை வளத்தைச் சுரண்ட கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு நாடு விட்டு நாடு சென்று ஆளுமை செய்து வருவதும் நடந்துதான் வருகிறது. கண்டும் வருகிறோம்.

அது போன்ற கால கட்டத்தில் இடப்பெயர்வின் பொருட்டு பிரிதொரு கலாச்சாரத்தை உட்கொள்ளுவதோ, இடம் பிடிப்போ ஒன்றும் புதிதல்ல. அது அன்றைய காலத்து நடைமுறை, எதார்த்தம்! அப்படியாகத்தான் வட அமெரிக்காவிலேயே ஒரு நாள் கொலம்பஸ் கால் வைத்து ‘யுரேகா!’ என்று கத்தி கூப்பிட்ட அன்றைய தினத்திலிருந்து செவ்விந்தியர்கள் அழிக்கப்பட்டு இந்த பரந்த நிலப்பரப்பை தனதாக்கிக் கொண்டார்கள், காலனிய மக்கள். அதற்காக, நவீன அமெரிக்காவின் இடம் பூர்வீக குடிகளான எங்களுடையது என்று நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கும் இன்றைய நாளில் அவர்கள் ஒரு கோரிக்கையை வைத்தால் நிலத்தை மீட்டெடுக்க விட்டுவிடுவார்களா? கனவிலும் நிகழாதுதானே!

இப்போ நம்ம விசயம். மொகலயா காலத்தில் அப்படியாக இடப்பெயர்வு பண்ணி இங்க வந்து தனக்கு வேணுங்கிற (அதுக்கும் முன்னடி எங்கங்கோ இருந்து எல்லாம் புகுந்து அள்ளிகிட்டு கொண்டு போயி வைச்சிருக்காங்க அது வேற விசயம்) மாதிரி ஆட்சி நடத்தி ஒரு நாட்டை ஆண்ட காலத்தில தனக்குத் தேவையான வழிபாட்டுத் தளம், அரசாங்கம் நடத்த கட்டடமின்னு கட்டி ஜெக ஜோதியா வாழ்ந்திட்டு பிரிதொரு நாள் கிளம்புற நேரம் வந்தவுடன் மிச்சங்களாக இது போன்ற சுவடுகளையும், அவர்களின் வழியை பின்பற்றி வாழ்ந்த மக்களையும் விட்டுட்டு போயிருக்காங்க.

அதுக்குபிறகு, இன்னுமொரு நாடு பிடிப்பு நடக்கிது. அது போன்றே அவர்களும் செய்துவிட்டு போகிறார்கள். இடையில் ஒரு நாடா சேர்ந்து போராடி, நாடுங்கிற ஒரு கான்செப்டிற்குள்ளர நாம முதல் முறையா நுழையிறோம். அன்றைய தேதியிலிருந்து அதுக்குள்ளர வருகிற எல்லா இன, மத, மொழி மக்களும் ஒரு நாடுங்கிற கட்டமைப்பிற்குள்ளர அவங்கவங்க வழித் தோன்றல், வரலாறு என்றும் உள்ளடங்கி வந்தாச்சு, நல்லா புரிஞ்சிக்கணும். இனிமே உள்நாட்டு குழப்பமே டைம் பாசிற்கு கூட இருக்கக் கூடாது. ஒரு நாடாக இருந்து அத்துனை பன்முகத் தன்மையையும் உள்வாங்கி அது வரைக்கும் எது நடந்தேறி இருக்கிறதோ, அதனையும் ஏத்து அவர்களின் வாழ்வு முறைக்கும் மரியாதை கொடுத்து, உயிருக்கும் உத்திரவாதம் வழங்கி ஒரு பாதுகாப்பான இடத்தில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம் என்று உணர வைப்பதில்தான் ஒரு நாட்டின் அமைதியும், முன்னேற்றமும் இன்றைய நிகழ்காலத்திற்கு உகந்ததாகவும் இருக்க முடியும்.

அதனைத் தவிர்த்து, புராண கால இதிகாசங்களைக் கொண்டு நம்பிக்கையின் அடிப்படையில் 500 வருடங்களுக்கு முந்திய வரலாற்று சிக்கலை இன்றைய நாகரீகமடைந்த நாடாக, தனக்கென சட்டங்களையும் கொண்டு இயங்கும் ஒரு நாடு ‘பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை’ மட்டுமே அடிப்படையாக கொண்டு நிகழ்காலத்தை சிதைத்துக் கொள்வது எந்த விதத்தில் சமயோசித யுக்தியாக இருக்க முடியும்? கண்டிப்பாக பண்படைந்த மக்களை உள்டக்கிய ஒரு நாடாக இது போன்ற நிகழ்வுகள் நம்மை மிகவும் வெட்கித் தலை குனிய வைக்க வேண்டிய இடத்திற்கே நகர்த்தும்! இன்றைய வரலாற்றுச் சின்னங்களை நேற்றைய பழிக்குப் பழி சிறுமையைக் கொண்டு சிதைப்பதும், அதன் வழியில் இன்றைய வாழ்வு சார் மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பங்கம் வருமாறுபிரச்சினைகளை உருவாக்கிக் கொள்வதும், தன் தலையை தானே கொல்லிக்கட்டையால் சொரிந்து கொள்வதற்கு சமம் என்பேன்.

இந்த பாபர் மசூதி இடிப்பும், ஆஃப்கானிஸ்தீய புத்தர் சிலை இடிப்பிற்கும் பெரிய வித்தியாசமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அந்த சிலை இடிப்பு இன்னமும் உலக அரங்கில் ‘காட்டுமிராண்டித்தனமாகத்தான்’ அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டுள்ளது. அது போலவேதான் இந்த நவீன உலகில் புராண காலத்து நம்பிக்கையைக் கொண்டு ஒரு வரலாற்றுச் சின்னத்தை அன்று இடித்ததும். ஆக மொத்தத்தில இந்த ஓட்டு ஆண்டிங்க அவங்களோட வயித்துப் பொழப்பிற்கு எல்லா பயலையும் தூண்டி விட்டு அடிச்சிக்கிட்டு சாக விடவும் தயாரா இருக்காங்க!

I feel very sad this day!



- Photo Courtesy: Net

Monday, September 20, 2010

ஊடுருவி...



கிறுக்கனாக்கிப் போன அந்த
ஒற்றை வார்த்தையின் சுகத்தில்
அடர்வான ஒரு பாடலொன்றை கேட்டவாறு
காலச் சுழிப்பற்ற ஓர் ஆழ்கறுந்துளையின்
வழியாக பயணித்தவாறே அமிழ்ந்து திளைக்கிறேன்...

பெரும் வெடிப்பினைப் போல் எங்கும்
சிதறிய வெண் வண்ணத்தினூடே
கண் முன் குமிழ்ந்த உயிரினங்களுடன் ஒன்றித்து
உட்கொண்ட சங்கீதத்தில் நனைந்தபடி எனை தொலைத்து
வெளியேறுகையில்
வெளியெங்கும் சிதறியொடுங்கிய
வார்த்தை இடிபாடுகள் கிறுக்குநிலையின்
மகத்துவமறிய நிழலாடியது!

Thursday, September 09, 2010

புனைவுகளின் தீவிரம் உணர்வோம்: To Writers...!!

நேற்று ஒரு நண்பரோட அரட்டைக் கச்சேரி நடத்திக்கொண்டிருந்தேன். அவரு வலையுலகில் நடக்கும் அவ்வப்போதைய அடிதடிகளிலிருந்து எப்பொழுதாவது எழுதினாலும் கூட செறிவு மிக்க, சிந்தனைகளை தூண்டக் கூடிய விசயங்களை எழுதுபவர்கள் ஏன் விலகியே இருக்கிறார்கள் என்று என்னய சீண்டிப் பார்த்தார். அதுக்காக ”சுயமாக” தன்னை வளர்த்து எடுத்துக்கொண்ட அந்தக் கூட்டத்திற்குள்ளர விழுற ஆள்னு என்னய படிச்சி வைக்காதீங்க.

நான் எதிலும் சேராசேத்தி. இன்னும் நான் அவதானிக்கும் நிலையிலேயே இருக்கிறேன். எனக்கும் திரிச்சு எழுதும் சோ கால்ட் ‘புனைவிற்கும்’ ரொம்பத் தூரம். வலையுலக புனைவு இலக்கியம் படிச்சுப் படிச்சு, புனைவு எழுதுறது அவ்வளவு எளிமையான விசயமாக பட்டாலும் என்னால அப்படி பார்க்க முடியல :). நான் எழுதும் கட்டுரைகளிலிருந்தே புனைவிற்கு தேவையான அனேக கருக்களை எடுத்து கையாள முடியும்தான். இருந்தாலும், புனைவு கொடுப்பதற்கின்னு எனக்கு நானே பல எதிர்பார்ப்புகளை, கட்டுப்போக்குகளை உருவாக்கி வைச்சிருக்கேன்.

எப்பொழுதெல்லாம் என்னாலும் புனைவுகள் கொடுக்க முடியும், என் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக் கொண்ட விசயங்களிலிருந்தே வண்டி வண்டியாக மூக்கை சிந்த வைக்கும், தன்னையே உணர்ந்து (தடவி) பார்த்து கொள்ள வைக்கும் ரேஞ்சிற்கு கூட அனுபவ பாடங்களைக் கொண்டு புனைவு என்ற பெயரில் வாந்தி எடுத்து வைக்க முடியும்தான். அது எனது கட்டுரைகளின் நீளங்களைக் கொண்டே கூட நீங்களும் யூகிக்க முடியும்தானே!

சரி இத்தனை முஸ்தீபுகளைக் கொண்டிருந்தாலும், ஏன் முயற்சி எடுத்துப் பார்க்கவில்லை, என்ற அடிப்படைக் கேள்வி எழும்பலாம். முதலாவது, புனைவுகளின் மூலம் நம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி பாசாங்கு செய்ய முடியாது. நன்கு அறிந்த வாசகர்களிடம் மாட்டிக் கொள்வோம். இரண்டாவதாக, தகவல் பிழையோ, அல்லது தன்னுடைய அரைகுறை மண்டைப் புரிதலை வைத்துக் கொண்டு ஒரு பெண்ணின் மூலமாக அவளுடைய வாழ்வியல் சிக்கலை சொல்கிறேன் என்று தத்துபித்துத் தனமாக நம்முடைய சிறு சாளரத்தின் வழியாக கண்ட விசயத்தை வாந்தி செய்து வைத்தால் அதுவே தம்மை விட இன்னும் பல படிகள் வளர்ச்சியில் பின் தங்கி இருக்கும் மக்களின் மனத்தில் தவறான ஒரு கற்பிதத்தை வளர்த்து விடச் செய்யலாம்.

என்னை பொருத்த மட்டிலும் கதை சொல்லிக்கென்றே பல திறமைகள் வேண்டும். காப்பியடித்து எழுதுவதான எழுத்து நடை, சொல்லாடல், வட்டார மொழி பயனேற்றம் செய்வது மட்டுமே புனைவிற்கான அடிப்படை தகுதிகள் கிடையாது என்று நினைக்கிறேன். அவன் மிக மிக கூடு விட்டு கூடு பாயும் திறன் கொண்டவனாக இருத்தல் அவசியமென்று கருதுகிறேன். அஃறிணை பொருட்கள் கூட சம்பாஷணை செய்து கொண்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனை உலகத்திலும் சஞ்சரிக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும்.

விசயம் அப்படியாக இருக்கும் பொழுது மனிதர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியைப் போன்றவன் வெறும் பிறர் படைப்புகளையும், உலகச் சினிமாக்களையும், பேருந்து நிலையத்தில் அமர்ந்து வயதான பாட்டி ஒன்று பேருந்தில் ஏறக் கஷ்டப்படும் பொழுது மற்றொருவன் உதவுவதைப் பார்த்து, கேட்டு, வாசித்து கதை சொல்லியாக பக்குவப் பட்டிருந்தால் போதுமா? அது படிக்கும் வாசகனிடத்தில் உண்மையான ஒரு தாக்கத்தை நிகழ்த்தி விட்டுச் செல்ல முடியுமா? அப்படியே பயிற்சியின் மூலமாக ஒரு தேர்ந்த கதை சொல்லியாக பேர் பட்டுப் போனாலும் அது எந்த அளவிற்கு அந்த கதை சொல்லியின் சொந்தப் பார்வையில் தாக்கத்தினைக் கொடுத்து அவன் உண்மையான அகப் பார்வையினை மாற்றியிருக்கக் கூடும்?

உண்மை உலகில் சமூகம் கட்டமைத்த பல நம்பிக்கை, அவ நம்பிக்கைகளை உடைத்து, பிற விளிம்பு நிலை மனிதர்களுக்கெதிரான சமூக அநீதிகளுக்கூடான வாழ்க்கைப் பயணத்தில் தானும் பங்கேற்று எது போன்ற அனுபவப் பொதிகளை சிறிதேனும் தன்னுள் இறக்கி இருப்பார்கள். இது போன்ற என்னுடைய சொந்த எதிர்பார்ப்புகளே ஒரு கதை சொல்லியின் பின்புலமாக இருக்க வேண்டுமென்ற நிலைப்பாடோ என்னவோதான், புனைவிற்கெதிரான படிப்போட்டத்தை இன்றைய நிலையில் தடை செய்து வைத்திருக்கிறது எனதுள்ளம் என்று எண்ணச் செய்கிறது. இருப்பினும் அது போன்ற பயணங்களின் ஊடாக எழுதும் மனிதர்களை என் மனதும் தேடிச் சென்று படிக்கச் சொல்கிறது.

கற்பனை உலகில் சஞ்சரித்து எழுதும் அறிவியல் புனைவுகளின் மீது எனக்கு அலாதியான காதல் இருக்குமளவிற்கு, நம் சமூகத்தில் எழுதும் சமூகம் சார்ந்த எழுத்துக்களை என்னால் படிக்க முடிவதில்லை காரணம், அதனில் நிறைய skewed பார்வை இருக்கிறது. அது நிகழக் காரணமாக இருப்பதற்கு அவர்கள் வாழ்ந்த உலகின் பக்கமாக உள்ள பகுதியை மட்டுமே பார்த்து வளர்ந்ததுனாலேதான் என்று என்னால் கூற முடியும். அதனைத் தாண்டியும் இன்னமும் கதைச் சொல்லிகளே வளரவில்லை என்றுதானே கட்டியம் கூறி நிற்கிறது அவர்களின் படைப்புகளும்.

அப்படியாக நமது சமூகத்தில் நல்ல தேர்ந்த எழுத்தாளர் பல இளைஞர்களுக்கு ஆதர்ஷ குரு என்று பெருமையாக கூறிக் கொள்பவரும் கூட தனது பயணக்கட்டுரைகளில் தன் கண்டக் காட்சிகளை, பிரிதொறு கலாச்சாரத்தில் வாயிலாக பார்க்கும் திறனற்று அதே குறுக்குச் சந்து பார்வையோடு வெகு ஜன பத்திரிக்கைகளில் கூட வாந்தியெடுத்து வைத்திருப்பார். இது போன்ற கட்டுரைகளே ஒரு எழுத்தாளனின் வளர்ச்சியை உலகம் பொருத்து, தான் சார்ந்து வாழும் சமூகம் பொருத்து உண்மையான பார்வையினை வைக்கும் முகமாக அமைந்த சாளரம்; அந்த மனிதனை உள் முகமா படிக்க.

ஆனால், தன் ஊரின் எல்லையையே தாண்டி உலகம் பார்த்திடாத ஒருவர் பிரிதொரு கலாச்சாரத்தின் அத்தனை கூறுகளும் தெரியக் கூடியதாக பாசாங்கு செய்து எழுதும் புனைவுகள் எத்தனை தகவல் பிழைகளை கொண்டிருக்கக் கூடும். தன்னுடைய சொந்த சமூகத்திலேயே விரவிக் கிடக்கும் ஏற்றத் தாழ்வுகளை தனக்குக் கிடைத்த வளர்ப்பு சூழ்நிலைக் கொண்டு அதன் வழியாக குணாதிசியங்களின் மூலமாக குருட்டுத் தனமாக வைத்துப் பேசும் பொழுது, பிரிதொரு கலாச்சாரம், அவர்களின் வாழ்வியல் முறைகளைப் பற்றி ஆய்ந்து எப்படி biased பார்வை இல்லாமல் கொடுக்க முடியும்.

இன்றைக்கு இணையம் வழங்கியிருக்கும் வாய்ப்பு தனிப்பட்ட மனித நிலையில் ஏதாவாது எழுதி தானும் ஒரு தேர்ந்த எழுத்தன் என்று அவனளவில் பாராட்டிக் கொள்ளவே பயன்படுத்தப் பட்டிக் கொண்டிருக்குமளவிற்கு செழித்து வளர்ந்து வருகிறது. அரைவேக்காட்டுத்தனமான புரிந்துணர்வோடு மனித உணர்வுகள் சார்ந்து உளறி வைப்பது. ஒற்றைப் பரிமாணத்தில் விசயங்களை அணுகி தன்னுடைய பார்வையை பொது சமூகத்தின் எண்ணமாக புனைந்து வைப்பது என்ன எந்த விதமான பொறுப்புணர்வில்லாமல், எழுத தலைப்படுவதுமென ஜரூரா நடந்து வருகிறது.

இலக்கியம் ஒரு சமூகத்தின் சமகால நிகழ்வுகளை பதியப்படுவதாக அதன் நீள, அகலங்களை அறியும் கண்ணாடியாக அமைய வேண்டும். அதற்கு அதனை படைக்கும் படைப்பாளி எத்தனை தீர்க்கமான, திறந்த மனதுடைய, மாற்றங்களை தழுவிச் செல்லும் ஒரு கருவியாக செயல் பட வேண்டியதிருக்கும். அவன் எப்படி மூடிய நிலையில், சார்பு நிலைகளை கொண்டு இயங்கும் ஒரு சாமான்யனாக இருக்க முடியும். இப்பொழுது இயங்கக் கூடிய பல சமகால எழுத்தாளர்கள் பிளவுற்ற (duality) மன நிலையிலேயே இருப்பதாகப் படுகிறது எனக்கு.

எழுத்து என்பது என் நிலையில் ஒரு தவம் போன்றது. எழுதுவது பிரிதொரு மனிதருடன் உரையாடுவதனைப் போல சிந்தனை சிதறலுக்கு அங்கே வாய்ப்பில்லை. நேரடியாக சமயோசிதமாக, புத்திசாலித்தனமாக சிந்திக்கும் புத்தி செயலிழந்து, நேரடியான ஆத்ம உரையாடல் நடைபெறுகிறது. அப்பொழுது எழுதும் எழுத்தும் நேர்மையாக சுய லாப நோக்குகள் அழிந்து, அறச் சீற்றம் கொள்ளும் நேரத்தில் சரியாக பிரதிபலித்து சமூகத்திற்கு தேவையான விசயங்கள் வந்து சேரும். ஒரு எழுத்தாளன், படைப்பாளியாக இருப்பதால் மற்றவரின் கஷ்ட நஷ்டங்கள், ஒடுக்கப்படும் சமூகத்தில் வாழும் மக்களின் அவல நிலை அவ்வாறாக ஒடுக்கப்படும் சமூகம் தொடர்ந்து அமிழ்த்து வைக்கப்படுமாயின் அது எது போன்ற விளைவுகளை உற்பத்திக்கக் கூடுமென்ற அனைத்து விளைவுகளையும் அறிந்தவனாக இருக்க வேண்டும். அதுவே அவன் பேனா பிடிப்பதற்கான அடிப்படைத் தகுதி கூட!

ஆனால், அண்மையில் நடந்தேறிய ஈழப் படுகொலையின் போது சில விரல் விட்டு எண்ணும் படைப்பாளிகளைத் தவிர ஏனையோர் அனைவரும் முதுகெலும்பு உடைந்தவர்களாக, எழுதவே தகுதியற்றவர்களாக, தான் சார்ந்து வாழும் சமூகத்திற்கு ஒரு சொல்லனாத் துயரம் நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது பேனாவின் முனை உடைந்து விட்டதாக ஆன்மீக தத்துவங்களும், லத்தீன் இலக்கியமும், சினிமா இயக்குனர்களின் முதுகையும் சொறிந்து கொண்டிருந்தார்கள். பிறகு இவர்களின் படைப்பை எந்த சீற்றத்தை, எந்த உலக ஞானத்தை அடைய நான் வாசிக்க வேண்டும்; இவர்கள் எழுதுவதற்கான அடிப்படைத் தகுதியே இழந்து நிற்கும் பொழுது? அந்த மொழி பேசும், அந்த உணர்விற்காக இந்த துயரங்களை சுமந்து திரிபவர்களின் எலும்பு கூடுகளின் மீது இவர்கள் இலக்கியம் வடித்து அடிக்கி வைக்கும் பொழுது அவர்கள் கல்லறைகளிலிருந்து படைத்த இலக்கியங்களை கொண்டாடுவார்களா?

இதுவே இன்றைய இணைய காலத்தில் பல ’சோ கால்ட்’ எழுத்தாளர்கள் விமர்சனத்திற்கு ஆளாவதும், புனைவுகளைத் தாண்டியும் சமூக நிகழ்வுகளையொட்டி அவர்களின் கருத்துக்களை வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதால், அவர்களின் உண்மையான குறிக்கோளும், வளர்ச்சியும் வெளிப்பட்டு சந்தி சிரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்களோ என்று எண்ணச் செய்கிறது.

எப்பொழுது ஒரு எழுத்தாளன், படைப்பாளி தான் சார்ந்து வாழும் சமூகத்தை அவதானிக்கத் தவறி, தேவையான ஏற்றத் தாழ்வுகளை செப்பனிடும் பொருட்டு தன் பொறுப்புகளிலிருந்து நழுவி தன் சுய லாபத்திற்காக பாதையை மாற்றிக் கொள்கிறானோ அவன் எழுத்தை வைத்து விபச்சாரம் செய்து வருகிறான் என்றே என்னால் பொருள் கொள்ள முடிகிறது. அதற்கு இது போன்ற புனிதமாக கருதப்படக் கூடிய படைப்புத் திறனை விட்டு விலகி விடல் நலம் பயக்கும்; பிற்கால தலைமுறைகளாவது தப்பிப் பிழைக்கும். நன்றி!

Wednesday, September 08, 2010

*வெளி...*


சோம்பலாக தலையுயர்த்தி
அவசரமொன்றும் எனக்கில்லை
என்றுணர்த்திவிட்டு அரைக்கண்ணால்
பார்த்தவாறு தூங்கிப்போனது
தெருநாயொன்று...

கண்ணில் அறையும்
வாஸ்து பார்த்து நிறமூட்டிய
வீடொன்றில் தேக்கிலிழைத்த
மரக் கதவை பிறாண்டியவாறு
தூக்க மருந்து கொடுத்தும்
திமிர்ந்து எழுந்த நாயொன்று
எஜமான் வரவிற்காய்
கோடிட்டு
பொழுதைக் கழிக்கிறது!




P.S: Photo Courtesy - Net

Sunday, September 05, 2010

ஃபேஷன் ஷோ பகுதி - 2 : Photography in Fashion Show

போன மாசம் ஒரு ஃபேஷன் ஷோ போயிருந்தேன் அங்கே சிக்கின ஒரு வாய்ப்பை எனது காமிரவிற்குள் சுருட்டினேன்னு சொல்லி முதல் பாகமா இங்கே ரிலீஸ் பண்ணியிருந்தேன்.


அதோட தொடர்ச்சிதான் இது. ஆர்வமுள்ளவர்கள் மட்டு’ம் உள்ளர பொயிட்டு வாங்க! நெஞ்சடைச்சிகிறவங்க தூரமா நின்னுக்கோங்க :) .


# 1




#2





#3






#4 நம்புங்க என்ன பார்க்கலை, என் காமிரா லென்ஸைத்தான் பார்த்தாங்கோ...





#5




#6




#7




#8




உள்ளர முடிச்சிட்டு வெளியில வந்து வேற என்ன சிக்குமின்னு பார்த்தா மையமா இந்த ஒலிம்பியன் சிலை ஆக்சன்ல நின்னுச்சு. அங்கே கொஞ்சம் நேரம் நின்னு லபக்கினேன்.




கீழே இருக்கிற படம் எப்படி?




என்னதான் சொல்லுங்க, இதுக்கு இணையாகுமா எதுவும் :) பளீர்னு கண்ணுக்கு இதமா... ஹ்ம்ம்!



Tuesday, August 24, 2010

பாகிஸ்தான் வெள்ளத்தில் மிதக்கிறது இந்திய நாட்டின் அமைதி!!

ஒரு ஞாயிற்றுக் கிழமையில் என்னை இன்செப்ஷன் படம் பார்க்கத் தூண்டிய தாத்தா இன்று வந்திருந்தார். நானும் தொலைபேசியில் எப்பொழுதும் போல வெட்டி அரட்டையில மூழ்கி கிடந்தேன். தாத்தா சுத்தி சுத்தி வந்து எதனையோ பேச முயற்சிக்கிற மாதிரி ஓர் உணர்வைக் கொடுத்தார். தொலைபேசியை மூர்ச்சையாக்கிட்டு அவரை பார்த்தேன். அவரும் அதுக்காகவே காத்துக்கிட்டு இருந்த மாதிரி, பாகிஸ்தான்ல வெள்ளம் சொல்ல முடியாத அளவிற்கு பெரும் அழிவைக் கொடுத்துருக்கு கவனிச்சிட்டு வாரீயா அப்படின்னு ஒரு கேள்விய தூக்கிப் போட்டார்.

விசயத்திற்குள்ளர போறதிற்கு முன்னாடி அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. அவர் ஒரு வெள்ளையர். அறுபதிகளில் ஹிப்பி இயக்கம் அதி தீவிரமா இயங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அதன் ஊடாக பயணித்து உலகத்தின் பால் ஒரு தனி அக்கறையை உருவாக்கிக் கொண்டவர். இன்னமும், அதன் விட்டக் குறை தொட்டக் குறையாக போருக்கு எதிரான அமைதி ஊர்வலங்களில் கலந்து கொள்வதும் அது தொடர்பாக சில நேரங்களில் கைதாகும் நிலைக்குக் கூட தன்னை முன் நிறுத்திக் கொள்பவராகவும் இருந்து வருபவர். அது மட்டுமின்றி உள்நாட்டில் அநீதி இழைக்கும் வழியில் ஏதாவது சட்ட மசோதாக்கள் இயற்றப்பட்டு கடத்தப்படும் நிலைக்கெதிராக அதனையொட்டிய கருத்தரங்கங்கள், கூட்டங்களில் கலந்து கொள்வது, சைட்ல உலகப் படங்களும் அறிவியல் புனைவு படங்களையும் பார்த்து திளைப்பதுவெமென வாழ்க்கையை ஜரூராக நடத்தி வருகிற அறுபதுளின் தொடக்கத்தில் இருக்கும் ஓர் இளங்காளையவர்.

மீண்டும் விசயம் பேசுவோமா? பாகிஸ்தானின் வெள்ளத்தினை ஒட்டிய பேரழிவைப் பற்றி கேள்வியைக் கேட்டாரா. எனக்கு போன வாரத்தில் சி. என். என் -ல் ஒரு நழுவும் செய்தியாக பார்த்ததோட முடிந்து போனது, அந்தச் செய்தி. இருப்பினும் எனக்கு அந்த வாரத்தில கொஞ்சம் ஆட்டம், ஓட்டமென்று சொந்த விசயங்கள் காரணமாகவும் உலக விசயங்களில் கவனம் செலுத்த முடியவில்லை ;). இங்கு தமிழ் ப்ளாக்குகளிலும் அவ்வளவாக அதனையொட்டிய பதிவுகளை பார்த்த மாதிரியாக ஞாபகமில்லை. இருந்தாலும் பாகிஸ்தான்ல அதுவும் நம்ம எதிரிங்க கஷ்டப்பட்டா நமக்கு கொண்டாட்டமாத்தானே இருக்கணும்ங்கிற சின்னப் புள்ளத்தனமான நாட்டுப் பற்றும் அவிங்க பண்ணுற அழும்பிற்கு கடவுளே பார்த்து தண்டனைக் கொடுக்கிற ரேஞ்சிற்கு யோசிக்கிற புத்தியும் சேர்ந்திருக்கிறதாலே, இதெல்லாம் நம்மோட பிரச்சினையான்னு விட்டிருப்போம் போல.

ஆனா, அன்னிக்கு அவர் கேட்ட தொனியே ஏதோ பெரிய அளவில் பிரச்சினை இருப்பதாக எண்ணச் செய்தது. ஒவ்வொரு முறையும் அவருடன் பேசும் பொழுதும் பலத்த சிந்தனைகள் எழும்பும்மாரு கேள்விகளையோ அல்லது சம்பாஷணைகளையோ நிகழ்த்திவிட்டு சென்றுவிடுவார். அப்படியே இன்று என்னிடம் அவர் கேட்ட கேள்வி - இந்தியாவும் பாகிஸ்தானும் எலியும் பூனையுமாக இருப்பதாக அந்தப் பிராந்தியத்தில் காட்டிக் கொள்கிறார்கள். நல்லுறவை பேணும் பொருட்டு நட்புறவை மேம்படுத்திக் கொள்ள இரு நாடுகளுமே பாடுபட வேண்டிய கட்டாயத்திலுள்ளது. மக்களின் மனத்தில் அது போன்ற நன்னம்பிக்கையை விதைத்து தொலை தூர நட்புறவு பாதையில் நடந்து செல்ல வேண்டுமாயின் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் அதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரலாற்று எதார்த்தம் அப்படியாக இருக்கும் பொழுது அண்டைய நாட்டில் அப்படியொரு மாபெரும் இயற்கைச் சீற்றம் நிகழ்ந்து 170 மில்லியன் மக்களில் 60 விழுக்காடுகளுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட நிலையில் உலக நாடுகளின் முன்னால் கெஞ்சிக் கொண்டிருக்கிறது உதவி கேட்டு, இந்தியா ஏன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அந்த நாட்டின் மீதான தனது அரசியல் நிலைப்பாடுகளைத் தாண்டி மக்களின் மனங்களில் நல்லெண்ணங்களை கோலோச்சும் வழியாக ஐந்து மில்லியன் டாலர்களைத் தாண்டி தனது உதவிக் கரங்களை நீட்டியிருக்கக் கூடாது? என்பதே அவரின் கேள்வி.

அதனையொட்டி எப்படி உலக அரங்கில் உலக நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகள் சாதா மக்களின் அன்றைய அவலத் தேவைகளைத் தாண்டியும் கோணல் பார்வையில் அந்தச் சூழலை கடந்து செல்ல வைக்கிறது என்று பேசிக் கொண்டோம்.

ஒரு வியாபாரிக்கு தன்னிடம் இருக்கும் சரக்கை வித்து தீர்க்க வேண்டுமாயின் என்ன தேவையாக இருக்கிறது. சந்தையில் அந்தச் சரக்கின் தேவை. அந்தத் தேவை அதிகரிக்க அதிகரிக்க விலையும் அதனையொட்டியே தீர்மானிக்கப் படுகிறது. அப்படி அந்த வியாபாரி கையிருப்பு அதிகமாக வைத்திருக்கும் பட்சத்தில் ஒரு தற்காலிக வறட்சியை ஏற்படுத்தி பின்பு லாப நோக்கில் வெளியிட்டு அதிக முதலீட்டை திரும்பப் பெற எத்தனிக்கிறான். அதே போர்வையில்தான் எது போன்ற சூழலாக ஒரு அண்டைய நாட்டின் அவலம் அமைந்து போனாலும், உள் நாட்டு அரசியல் வாதிகளும் கண்களை இறுக மூடிக் கொண்டு வாய்ப்புகளை தெரிந்தே நழுவ விட்டு விடுகிறார்கள். எந்த அண்டைய நாட்டுடனும் மற்றொரு நாடு மிகவும் தோழமையுடன் இருந்து போக எத்தனித்தாக தெரியவில்லை. ஏனெனில், பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தனக்குத் தேவையான (தன் தலை தப்பியிருக்க தேவையான) பொழுது பிரச்சினை இருப்பதாக அண்டைய நாட்டுடனான உறவுச் சிக்கலைப் பேசி, தன் உள்நாட்டு குழப்பங்களை தற்காலிமாக மறக்கடிக்க சாதா மக்களுக்கு போதையூட்டு கைச்சித்திரமாக காட்சியப் படுத்த முடியும்; என்ற வாக்கில் எனது வாதத்தினை வைத்தேன்.

இதனை எழுத அமர்வதற்கு முன்னால், இன்னும் காத்திரமாக எனது கருத்துக்களை வைக்க வேண்டுமென்றேதான் நினைத்திருந்தேன். ஆனால் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியை படிக்கும் பொழுது கொடுத்த ஐந்து மில்லியன் டாலர்களைக் கூட பாகிஸ்தான் அரசு பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்று பரிசிலீத்துக் கொண்டிருக்கிறது என்றும், ஓபாமா அரசு இந்தியாவின் உதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறும் சிபாரிசு பண்ணுமளவிற்கும் இருக்கிறது நிலமை என்று படித்ததும் தான் நான் மேலே குறிப்பிட்ட அரசியல் உள் லாப நிலை பல்லிளித்துக் கொண்டிருக்கிறது என்று ஊர்ஜித படுத்திக் கொள்ள முடிந்தது.

இரண்டு நாடுகளும் இத்தனை வறுமைக் கேடுகளை கொண்டிருப்பினும் தனது பாதுகாப்பிற்கென தன்னுடைய நாடுகளின் எல்லைகளுக்குள் அத்தனை இராணுவ தளவாடங்களையும், வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டுப்பாக்கி, வானூர்தி, டேங்குகள் என்றும் பல்லாயிரக்கணக்கில் காவல் பணியில் ஈடுப்பட்டிருக்கும் மனித உயிர்கள் என்றும் பல செலவுகளை கோடிகளில் செய்து கொண்டிருந்தாலும், இன்று நாட்டு முழுமைக்குமே பேராபத்து இயற்கைச் சீற்றத்தால் என்று வரும் பொழுது தன்னுடைய அத்துனை resourcesகளையும் பயன் படுத்தி மக்களை காப்பாற்றி அதன் மூலமாக இவர்கள் எதற்காக அத்தனை பொருளையும் செலவு செய்து காக்கிறார்களோ அந்த செலவீனங்களை மட்டுறுத்தி நிறுவிக் கொள்ள முடியாதா? மக்களின் மனங்களில் அமைதி, சகோதர பாசம் என்ற விதைகளை இது போன்ற அவல நிலைகளின் மூலமாக தங்களுடைய இருப்பைக் காட்டி, கண்களுக்கு புலப்படாத பாசக் கயிற்றைக் கொண்டு கட்டி நீண்ட தூர தீர்விற்கு வழிவகை செய்து கொள்ள முடியாதா...

நாமும் பேருந்து விட்டுப் பார்க்கிறோம். கிரிக்கெட் விளையாண்டு பார்க்கிறோம். பிற நாடுகளுக்குச் சென்று பேச்சு வார்த்தை நிகழ்த்திக் கொள்கிறோம். இருப்பினும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் பக்கத்து பக்கத்து கதவுகளைக் கொண்ட அண்டைய வீட்டுக்காரர்களுக்கு ஒன்றென்றால் ஓடிப் போய் கை கொடுக்கும் வாய்ப்புகளை எல்லாம் உள் அரசியல் லாப நோக்கிற்காக தட்டிக் கழித்துக் கொண்டே எந்த அமைதியை வளர்க்க இவர்கள் பாடுபடுகிறார்கள்? இதெல்லாம் அரசியல் சித்து விளையாட்டுக்களன்றி வேறென்ன? ஏன், சாதா மக்களான நாம் அதனைப் பற்றி யோசிப்பதே இல்லை?

லார்ட் ஆஃப் வார் Nicholas Cage நடித்து வெளி வந்த படம் அதனில் மிகத் தெளிவாக காட்டுவார்கள் எப்படி வளர்ந்த நாடுகளில் உற்பத்தியாகும் இராணுவ விளை பொருட்கள் வளரும் நாடுகளில் விற்பனையாகிறது அதற்கு எப்படியாக வளரும் நாடுகளில் பிரச்சினைகள் உருவாக்கப் பட்டு எண்ணெயிட்டு வளர்த்தெடுத்து பிரச்சினை ஓய்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது என்ற ரேஞ்சிற்கு கதை நகரும்; அதுவே உண்மையும் கூட. அதனையும் தாண்டி இன்று நம் அரசியல் வாதிகளுக்கு உள் நாட்டு பிரச்சினையிலிருந்து தப்பிக்க வேண்டுமாயின் அண்டைய நாடு தொட்டுக் கொள்ள ஊறுகாயாக வேண்டும் என்பதே அடிப்படை நாதம். அதற்கு மக்கள் உயிரொன்றும் பெரிய விலையல்ல! யாருக்கு வேண்டும் தொலை தூர அமைதியும், தென்றல் காற்றும்...




பி.கு: இதில பெரிய ஜோக் என்னத் தெரியுமா பாகிஸ்தான்ல இப்ப அடிச்சு முடிச்சிருக்கிற வெள்ளத்திற்கு இந்தியாவும், அமெரிக்காவும்தான் காரணமாம். இயற்கையை திசை திருப்பி அங்க ஏவி விட்டாங்களாம். மக்கள ஏமாத்தி போதையிலேயே வைச்சிக்க இதை விட பெரிய கேணத்தனமான சப்பைக் காரணங்களை கூறி தன் நாட்டு மக்களையே முட்டாள்களாக காட்டிக் கொள்ள வேறு யாரும் அஞ்ச மாட்டாங்க இந்த அரசியல் வியாதிகளை விட்டால்.


Photo Courtesy: Net

Related Posts with Thumbnails