பரமக்குடி, எனது ஊரிலிருந்து இரண்டு மூன்று மணி நேர பேருந்து பயணிப்பில் போய் சேர்ந்து விடக்கூடிய தூரத்தில் அமைந்திருக்கிறது. அது ஒரு வேலிக்கருவை மரங்கள் நிரம்பிய, தண்ணீரற்ற ஒரு வறண்ட பாலையூர்.
அதனை ஒற்றி அமைந்ததே எனது ஊரும். எனவே அந்த ஊருக்கும் எனது ஊருக்கும் பெரியளவில் சிந்தனை வேறுபாடுகளோ மனிதர்களின் ஓநாய்த்தனமான மனத் திண்மைக்கு வித்தியாசமிருந்து விட முடியாது. இந்த புகைப்படத்தை நான் காண நேர்ந்தது. இரண்டு மூன்று நாட்களாக இந்த சாதீக் கலவரம் தொடர்பாக எங்கும் பரப்பரப்பு ஒத்திக் கொண்டு அனலாக தகிக்கிறது.
ஒவ்வொரு முறையும் இந்த காட்டுமிராண்டித் தனத்தின் வக்கிரம் எண்ணிடலங்கா வழிகளில் முகம் தரித்தே காண்பித்து விட்டு ஓடி ஒளிந்து கொள்கிறது, மனித ஓநாய்களின் போலிப் புன்னகைகளுக்கு பின்னே. மீண்டும் சரியான நேரத்தில் தன் கோரப்பற்களை துருத்திக் காட்டுவதும் வாடிக்கையாக இருக்கிறது. இதனை பார்த்து வளர்ந்தவர்களுக்கு இதுவு’ம் ஒரு மற்றுமொரு தினசரிச் செய்தியாகிப் போய் விடுகிறது.
ஆங்கிலேயன் இண்டு இடுக்களிலெல்லாம் வெறும் பத்தாயிரம் பேருக்கும் குறைவாக இங்கு கொண்டு வந்து இத்தனை பெரிய பரப்பை அவனால் கட்டி ஆளமுடிந்ததெனில் அதற்கு காரணம் இந்த காட்டுமிராண்டித்தனத்தின் ரேகைகளே காரணமாக இருந்தது 300 வருடங்களுக்கு முன்பும். அவர்களும் வந்தார்கள், அடிமைகளான வாழ்வை நாமும் சுவைத்தோம்.
ஆனால், அதிலிருந்து இந்த தேசமென அழைத்துக் கொள்ளும் கூட்டு தேச இந்தியா ஏதாவது பாடம் கற்றுக் கொண்டாதா? அது போன்ற சாதீய வேறுபாடுகளை களைவதற்கு எத்தனை வலிமையான சட்டங்களை பாய்ச்சி மாக்களை மக்களாக்கி வைத்திருக்கிறது? காலம் நகர்ந்திருக்கிறதே ஒழிய, ஏதாவது மனித மனங்களில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா? அதனையொட்டிய கற்றறிந்தவர்களின் உழைப்பெங்கே? ஏன் அந்த லைம் லைட்டில் அமர்ந்திருக்கும் பெருசுகள் இதனைப் பற்றி அலட்டிக் கொள்வதே இல்லை?
இப்படி குழுமங்களாக வாழ்வது ஆஃப்ரிகா சமவெளிகளில் 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக நம்மை நரி அடித்து தின்றுவிடாமல் இருக்கவும், பிற காட்டுமிராண்டி கூட்டமும் தான் உண்ணும் உணவையும், நிலத்தையும் அபகரித்து கொள்வதினிலிருந்து தற்காத்து வைத்து கொள்ள தேவைப்பட்டிருக்கலாம். காட்டுமிராண்டித் தோல் இருக்கின்னு உணர நினைத்தால்
இங்கே அழுத்தி படிச்சிப்போம் மேலே.
ஆனால் இன்றுதான் நாம் நவீன காட்டுமிராண்டிகளாகிவிட்டோமே, நமக்கென்று அழைத்துக் கொள்ள ஒரு நாடு, அரசாங்கம், சட்டம் என்று இருக்கிறது. ஒருவன் வாய்க்குள் போட்ட சோற்றை மற்றொருவன் பிடிங்கி தின்று விட முடியாது, பாதுகாப்பு இருக்கிறது. அதனைத் தவிர்த்து எதனை நாம் தற்காத்து வைத்து அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்ல இப்படி 500 மீட்டர் இடைவெளிக்குள் இருக்கும் உனது வீட்டில் இருப்பவனும் அவன் வீட்டில் இருப்பவனும் இப்படி மூர்க்கமாக தாக்கிக் கொள்கிறீர்கள்?
சரி மேல்தட்டில் அமர்ந்திருக்கும் அந்தக் குழு குடிக்கும் தண்ணீரும், சுவாசிக்கும் காற்றும் என்ன புதன் கிரகத்திலிருந்து இறக்குமதி செய்து குடித்து, சுவாசிக்கிறார்களா? இரண்டு பேரும் பொது இடத்தில் மலம், ஜலம் கழித்து அவை இரண்டற கலந்து நாம் அனைவரும் தானே மீண்டும் உள்ளே தள்ளி உணவாக உண்கிறோம். வளர்கிறோம். அதெப்படி, ஒருத்தனில் இருந்து மற்றொருவன் உயர்வாகிவிடுகிறான்?
யார் நமது ஒற்றுமையை விளக்க பாடம் எடுப்பது? சைனாக்காரனா? இல்லை இயற்கை பேரழிவா? எனக்கு இப்பொழுது இதுதான் தோன்றுகிறது. பூமியில் அதுவும் குறிப்பாக இந்தியாவில் ஜனத்தொகை வீங்கி வெடிக்கிறது. இயற்கையாகவே ஒரு வழியை கண்டடைந்தாலே ஒழிய இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியாத ஒரு இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். அமெரிக்காவில் ஒரு சதுர கிலோமீட்டரில் 35 மக்கள் வாழ்கிறார்கள் என்றால் நமது தேசத்தில் சராசரியாக 350 பேர்களை கொண்டிருக்கிறோம்.
அதனையொட்டிய இயற்கைசார் தேவைகளை கொண்டே பார்த்தால் கூட, குடிநீருக்கும், சுத்த காத்திற்கும் கூட பெரும் அடிதடி தேவைப்படப் போகிறது. இந்த லட்சணத்தில் அவன் இவனை செத்த சிவப்பாய் இருக்கிறான், என் மூக்கு நீளம் அவனது சிறுசின்னு அதே சாக்கடைக்குள் கிடந்து கொண்டு ஒருத்தன் மீது இன்னொருவன் கல்லை விட்டெறிந்து கொண்டு நாம் இன்னமும் ஒரு லட்சம் வருடத்திற்கு முன்பு வாழ்ந்த அதே ஹோமோ எரெக்டஸ் குரங்கேதான் என்று நிரூபிக்கிறோமே? இதனை எதனில் சேர்ப்பது?
சரி இயற்கையே இப்படி ஒரு மக்கள் தொகை ஒழிப்பை தேர்ந்தெடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதாவது, நமது மூளையின் செயல்பாடுகளையொற்றி நமக்கு நாமே குழி பறித்து கொள்வது. அதன் எதிர் முனையில் நின்று மிருக நிலையில் இருக்கும் நம் புத்தி செயல்பாட்டை எப்படி மனித நிலைக்கு நகர்த்துவது என்று ஏன் கிஞ்சித்தும் எண்ணுவது கிடையாது.
அந்த புகைப்படத்தில் பார்த்தோமானல், ஒரு மனிதனை. நாயை விடக் கேவலமான முறையில் அவன் வாழ்ந்த வீதியிலேயே வைத்து நடத்தப்பெறுவதாக தெரிகிறது. எனக்கு அந்த ஒரு அசையா படத்தினை பார்க்கும் பொழுதே, ஈழத்தில் தமிழர்கள் பட்டிருக்கக் கூடிய சிதைவு நினைவுக்கு பளிச்சென மின்னி மனத்திரையில் வெட்டி மறைகிறது.
அங்கு சிங்களவன் - தமிழன் என்ற இனவெறி இருக்கிறது. இங்கே என்ன கேடு, உங்களுக்கு? அங்கே ஏறி மிதித்து கொண்டு வரும் சிங்களவன் ஒரு நாள் சைனாக்காரனுடன் சேர்ந்து நம்மை பிடரியில் மிதித்தால் அப்பொழுதும் நாம் இருவரும் கம்புச் சண்டை போட்டு நம்முள்ளரயே அடித்துக் கொண்டு செத்துக் கொண்டிருப்போமா? அல்லது அவனை சந்திக்க தயாராவோமா? எவன் நமக்கு சரியான பாடத்தை நம் எருமை மூளையில் உறைக்கும்படி உணர வைப்பான்?
இல்ல மொத்தமா இயற்கையின் நகர்வின் பாதையிலேயே சென்று இப்படி வீதிக்கு வீதி, வீட்டிற்கு வீடு அடித்துக் கொண்டு சிறுகச் சிறுக முடித்துக் கொள்வோமா? அதுதான் இயற்கையின் திட்டமுமோ? சிந்திக்க மறுப்பின் எருமை மாட்டு நிலையிலேயே உழண்டு மிருக நிலையிலேயே மரணிப்பும் நிகழ்ந்து, நிகழ்ந்து மீண்டும் மீண்டும் மீசை முறுக்கிக் கொண்டே திரிந்து விடலாமா?
ஒரு குரங்கு எழுந்து வெட்ட வெளியில் நின்று பார்க்க எத்தனித்ததின் விளைவே இன்று புதன் கிரகத்திற்கு ரோபாட் அனுப்பி தண்ணீர் இருக்கிறதா என்று சிந்திக்கும் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியது. ஆனால், நம்மில் இன்னும் பலபேர் வெட்டவெளியில் நின்றபடியே உறைந்து விட்டோம்... பிற மனிதர்களோட சமமாக பயணிக்க திராணியற்று. விளைவு, மனித பிணங்கள். வீட்டுக்கு வீடு தலையணைக்கு கீழ் அருவாள்கள் வைத்துக் கொண்டு குரங்கு மூதாதையர்கள் மாதிரியே வாழ்க்கையை நகர்த்த சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தியா 2020 அல்ல இன்னும் 1000 வருடமானாலும் அங்கயேதான் நாம் தேங்கிக் கிடப்போம். போலோ, நைக்கி ஷு, டையும் மனிதனை வெளிப்புறத்தில்தான் மாற்றியிருக்கிறது பெயருக்கு பின்னான வெறீஈஈஈ
ஷெட்டி, நாயர், ஐயர், புதிதாக வன்னி... போன்ற அடைமொழிகளுக்கு உள்ளாக ஒளிந்து கிடக்கிறது நம் பரிணாம ஓநாயின் கூரான, கோரமான பற்கள்.
பி.கு: இந்த பதிவினை எழுதுவதற்கான ஜுவலை இங்கிருந்து கிடைச்சது. அதையெல்லாம் முழுசா படிச்சா நானும் பின்னோக்கி 50 ஆயிரம் வருஷம் நடக்கணும். அதுனாலே முழுசா படிக்கல இருந்தாலும்...
ஒரு முறை பாத்து வைங்க. ஒரு தேசத்தின் எதிர்காலம் எங்கே ஒளிந்திருக்கிறது என்பதனையாவது அறிந்து கொள்ளலாம்.