சதா எந்நேரமும் பழுப்பேறியபடி மேகங்கள்
தலைக்குச் சற்றே மேலாக
மிக அருகில் மேலும் மேலுமென
கருக்குளித்துக் கொண்டிருந்தது...
காலக் கடிகாரம்
என்னுள் கிரீச்சிட்டபடியே
மிக மெதுவாக
மூர்ச்சைக்கு அருகில் முன்னேறி
மிக அரிதாக
தனது கண்களை மூடிமூடித் திறந்தது...
கடிகாரம் தொட்டு
இப்படியும் அப்படியுமாக குலுக்கியதில்
ஓரிரு நிமிடம் குளக்கரையில்
அரைஞாண் கயிறு தெரிய
யார் தோட்டத்திலோ திருடிய
வெள்ளரிப் பிஞ்சுகளை குமித்து வைத்துவிட்டு
காலத்தை சுழற்றியடித்து நீந்திக்கொண்டிருந்தோம்...
மறு குலுக்கலில் டையும் கோட்டும் பாவித்தபடி
தினப்படி சாத்தியறைந்த அறைக்கதவிற்கு பின்னாக
வார்த்தைப் போர் நிகழ்வதாக நிழலாடி
வெளியே நிறுத்தியிருக்கும்
பென்ஸ் ஊர்தியின் அடுத்தமாத
தவணையை நினைவூட்டியது...
வெளியேறி ஊர்தியை
செலுத்தத் துவங்குகையில்
சிறுதூறலாக விழுந்து
தெறிக்கும் மழைத்துளிகள்
குளத்துச் சிறுவர்களின் சிரிப்பொலிகளாகி
அரைஞாண்கயிற்றின் ஞாபகமூட்டியபோது
காலக் கடிகாரம் இறந்தே கிடந்தது.
2 comments:
குளக்கரையில் குளித்த
நினைவுகள் இன்னும்
ஹ்ம்ம் ம்
வாழ்க வளமுடன் ஆசிரியரே
தண்ணீருக்கு அருகில் வாழவில்லை.
அதனோடு பழகவில்லை.
இப்போ இதுபோல ஒரு ஆற்றையோ குளத்தோயோ கண்டால் பயம் தான் வருகிறது. ஆனால் இக்குழந்தைகளுக்கு அது ஒரு விளையாட்டு பொம்மைபோல ..விளையாட்டு தோழனைப்போல இருக்குது..
முன் நாளையும் இப்பத்தைய நிலையையும் நினைச்சுப்பார்த்து.. ‘
“நாங்களெல்லாம் அந்த காலத்துல “ குட் :) அவ்வளவுதான். அதே மகிழ்ச்சி இப்ப கையில் கிடைக்காதே..
Post a Comment