நேற்று வனவியல் ஆராய்ச்சியாளரும், இந்திய வனவுயிரி நிறுவனத்தின் இயக்குநருமான (Wildlife Trust of India) டாக்டர் அஷ்ரஃப் அவர்களின் சங்க இலக்கியத்தில் புலியைப் பற்றிய குறிப்புகள் என்று ஒரு ஒன்னரை மணி நேரம் ஜுமில் காணொளி மூலமாக உரையாற்றினார்.
இவருக்கு தமிழில் இருக்கும் ஆர்வமும், வன உயிரிகள் பொருட்டான ஆழமும் ஓர் அரிய கலவை. அசத்தி விட்டார், மனிதர். நிறைய ஸ்லைடுகள் இடையிடையே காண்பித்து மிக எளிதாக புரிந்து கொள்ளும் படியாக சங்க இலக்கியத்தின் மூலமாக புலிகளின் பங்கு தொன்மைய தமிழ் பண்பாட்டில் எப்படியாக குறிப்பிடப் பட்டிருக்கிறது என்பதை விளக்கினார்.
அந்த மெனக்கெடலுக்கு நிரம்ப வாசிப்பு தேவைப்பட்டிருக்கும் என்று புரிந்து கொள்ள முடிந்தது. ஹைலைட்டாக ஒரு சில விசயங்களை அவர் கூறியவற்றில் இருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு மகிழ்வளிக்கும் என்பதால் இங்கே கொண்டு வருகிறேன்.
இந்தியாவிலேயே சங்க இலக்கியத்தில் மட்டுமே புலிகளைப் பற்றிய குறிப்பு அதிகமாக உள்ளதாம்.
புலிகளின் மேல் காணப்படும் வரிகளை வர்ணித்து - கொடுங்கேழ், கொடுவரி, வாள்வரி, குயவரி, பல்வரி, சிறுவரி என்பதாக எழுதப்பட்டிருக்கிறது.
புலிகளுக்கு பல பெயர் உண்டு அவைகள்- உழுவை, வேங்கை, வயம், வயமா(ன்), வல்லியம், கொடுவரி, குயவரி, பல்வரி, சிறுவரி.
பிடித்தமான ஒரு வரி - "கடையல் அம் குரல வாள் வரி உழுவை - அகம். 277" - அதாவது புலியின் உறுமலை சங்கத் தமிழ் பாடல் ஒன்றில், தயிர் கடையும் ஓசையுடன் இணைத்து எழுதி வைத்திருக்கிறார்கள். அதனை அஷ்ரஃப் அவர்கள் மிக அழகாக ஒரு காணொளி துணுக்குடன் இரண்டையும் ஒலிக்க விட்டார். வாவ்!
இருப்பதிலேயே அசத்தலான ஒன்று - வன உயிரிகளை, வனங்களின் பாதுகாப்பு சார்ந்து மண்டை பிளக்கும் விதத்தில் இன்று நாம் ஆராய்ச்சிகளை செய்து, அங்கு வாழும் பூர்வ குடிகள் மீதும், பூமியின் பருவநிலை மாறுபாட்டையும், பனிப்பாறைகள் உருகி வருவதையும், அதீதமான வேட்டையாடலையும் சுட்டிக்காட்டி ஆவணங்கள் தயாரிக்கிறோம்.
ஆனால்...
சங்கப்பாடல் போற போக்கில் இப்படியாக ஆய்ந்தறிந்து முன் வைத்து நகர்கிறது. இரண்டே வரிகள் பல மில்லியன் டாலர் புலிகள் பாதுகாப்பிற்கே வேட்டு வைப்பதனைப் போல...
........புதற்குப் புலியும் வலியே புலிக்குப்
புதலும் வலியாய் விடும்'. (200) ......
அதாவது, காட்டுப் புதரில் (thickets) அடைந்துகொண்டால் புலிக்கு வலிமை. புலி அடைந்திருப்பதால் அந்தக் காட்டிற்கு வலிமை. முடிஞ்சிதா! இதற்கு மேல் என்ன வேணும், Conservation of tiger பற்றிப் பேச.
இப்படியாக டாக்டர் அஷ்ரஃப் மேற்கோள் காட்டி பேசிய அனைத்தும் புதுமை. இந்த ஏரியாவிற்குள் வன உயிரியல், தமிழ் ஆர்வமுள்ள இளம் தலைமுறையை இவர் திருப்ப அநேக வாய்ப்புள்ளது. பயன்படுத்திக் கொள்வோமே! நன்றி
Ashraf Nvk
பி.கு: இதோ அவருடைய காணொளி இணைப்பு ஒர்த் யுவர் டைம்!
0 comments:
Post a Comment