இந்த ஓவியத்தைப் பார்த்ததும் எனது மனது பின்னோக்கி ஓடி, இடை நிலை பள்ளி காலத்தில் உறைந்தது.
பள்ளி சென்று விட்டு வீட்டிற்கு வரும் மாலை வேலைகளில் சில நேரம் அது வரையிலும் எனது அப்பா சால் ஓட்டிக் கொண்டு இருந்தால், நானும் அந்தக் கயிற்றில் ஏறி அமர்ந்து நீர் இறைத்ததுண்டு. நிரம்பப் பொறுமையும், உடல் உழைப்பும் கோரும் வேலை. ஓர் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, நாம் தொல்குடி வேளாண்மையாளர்களாக இருந்திருக்கிறோம் என்று இப்பொழுது எண்ணிப் பார்க்கும் பொழுது தோன்றச் செய்கிறது.
கலைஞரின் மின்சாரத் திட்டம் வருவதற்கு முன்பே அப்பா வேளாண்மையிலிருந்து விலகி விட்டார். இலவச மின்சாரம் வந்த பிறகு இப்பொழுது அந்த எருதுகளைக் கொண்டு கமலை ஓட்டும் பழக்கம் ஒழிந்தே போய் விட்டது என்றே கூறலாம். எங்குமே காண முடிவதில்லை!
அது மட்டுமல்லாது சிறிய அளவில் விவசாயம் செய்தால் கூட வீட்டில் உள்ள அனைவரின் உழைப்பையும், கவனிப்பையும் திகட்டத் திகட்ட கேட்டு நிற்கும் ஒரு தொழில் அது. பத்து வயது சிறுவனாகவே இருந்தாலும் கூட அவன் செய்வதற்கும் சில வேலைகள் காத்துக் கொண்டிருக்கும்.
0 comments:
Post a Comment