இப்படி நாம ஒன்னு ஒன்னா சிந்து சமவெளி நாகரீக மக்கள் எப்படியாக வாழ்ந்தார்கள்னு கண்டு பிடிச்சு நிறுவுவதற்குள்ளும் மனிதகுலம், வேற்றுக் கிரகத்திற்கே குடியேறிடுவாய்ங்க போல. அவ்வளவு காலமெடுத்துக்கிறோம்! இப்போதான் நமக்கு அந்த நாகரீக மக்கள் என்ன உணவு சாப்பிட்டார்கள்னு நிறுவத்தக்க சான்று கிடைத்திருக்கிறது.
அவர்களின் உணவில் செம்மறியாடு, மாடு, கால்நடைகள், பன்றிகளின் இறைச்சி அதீதமான அளவில் எடுத்துக் கொண்டிருப்பதாக அவர்கள் பயன்படுத்திய தட்டு, பானைகளில் எஞ்சியிருந்த எச்சங்களின் வழியாக கண்டறிந்திருக்கிறார்கள். மனித குலம் கால்நடையாகவே நடந்து திரிந்த காலங்களில், உணவும், தண்ணீரும் தாராளமாகக் கிடைக்கும் இடத்தில் கிடை போட்டு விலங்குகளை வேட்டையாடி சுட்டு உண்டுருப்பான், இல்லையா?
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு உள்ளாகவே நிலையாக ஓரிடத்தில் தங்கி வேளாண்மை பழகி, சமுகமாக வாழ ஆரம்பித்த கால கட்டத்திலும் கூட, கால்நடைகளின் பங்கு அவர்களின் வாழ்வோடு பெருமளவில் பிண்ணி பிணைந்திருக்கவே வேண்டும். ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும், ஒரு 45 ஆண்டுகளுக்கு முன்பே கூட எங்க வீட்டில் எருதுகளும், காளைகளும், பசுவுமென 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் இருந்தன. இன்றும் கூட என் அம்மா கோழி வளர்க்கிறார்கள்.
இது போன்ற வயலும் வாழ்வுமாக உள்ளவர்கள் அந்த கால்நடைகளை தனது வாழ்வின் அங்கமாகக் பயன்பாட்டில் கொண்டிருக்கும் போது, அதனை உணவாக உண்டிருக்க 100% வாய்ப்பு இருக்கிறது; ஏனெனில், கால்நடைகளும் பொருளாதார வேளாண்மை செய்வதின் ஓர் அங்கமே!
ஈயடிச்சான் காப்பியாக நாலு வீட்டில் வாங்கிய உணவை ஒன்றாகக் கலந்து, இதுதான் எனது உணவு என்று காட்டுவதைப் போல, தனக்கென்று எந்த வித தொன்மையான வரலாற்றுச் சான்றுகளையும் கொள்ளாத ஓர் இனம், அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த மாவாக- இந்தியத் துணைக் கண்டத்தில் நிகழ்ந்த அன்றைய உணவு பழக்க வழக்கத்தை (புலால் மறுப்பு சார்ந்த இறை நம்பிக்கை) நகலெடுத்து, ஓ! இதுவே இந்த நிலப்பரப்பின் பரந்து பட்ட உணவென்று நம்பி, இயல்பாக தான் உண்ட இறைச்சி உணவையே புறந்தள்ளி 'கொல்லாமை' என்ற சிறைக்குள் தனைப் புகுத்தி இதுவே இந்து மதம் என்று 'நான்கு வீட்டு உணவை' நேற்று வந்தவர்கள் காட்டினார்கள்...
ஆனால், அந்த மக்களுக்கு அன்று தொலை நோக்குச் சிந்தனையில் என்ன தெரியவில்லை என்றால், ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆனாலும், பல்லாயிரம் ஆண்டுகள் ஓரிடத்தில் வாழ்ந்து செழித்த ஒரு நாகரீகம் எத்தனை காலச் சுவடுகளை, எதனதன் வடிவுகளில் எல்லாம் எங்கெங்கு விட்டுச் சென்றிருப்பார்கள் அது தொடர்ந்து வெளிக்கிளம்பிக் கொண்டே இருக்குமே அதனை என்ன செய்வது என்று மறந்து போனதுதான்.
அவர்கள் நவீன புரட்டு ஆவணங்களாக எத்தனையோ கதைகளை எழுதி வைத்துக் கொள்ளலாம். இருப்பினும் அறிவியல் அவைகளை போற போக்கில் இதோ இந்த இறைச்சி விசயத்தில் எப்படி பல நூறு புரட்டுக்களை இடது கையால் துடைத்துப் போட்டதோ அப்படி துடைத்தே நகரும். ஆனால், அவர்கள் எழுதி வைத்த அத்தனை ஆயிர புரட்டுக் கதைகளும், பக்கங்களும் கால வெள்ளத்தில் கிள்ளி எறிந்த நகக் துணுக்காகி விடும்.
இனிமே சரஸ்வதி ஆற்றை தோண்டி எடுத்து, அதில் ஒரு சிறு காது ஜிமிக்கியாவது கண்டெடுத்து நம் கண் முன்னால் காண்பித்து, மேலும் இதோ நாங்கள் அன்று பாடியதாக, ஆடியதாக, எழுதியதாக சொன்ன ஒவ்வொன்றிற்கும் சான்று என்று ஒவ்வொன்றாக அகழ்வாயின் மூலம் காட்டுவார்களா பார்ப்போம்.
0 comments:
Post a Comment