எப்பொழுதும் அடர்வாக இருக்கக் கூடிய எழுத்துக்கள், பேச்சுக்கள், சிந்திக்கத் தூண்டும் நடைமுறை சார்ந்த விசயங்களை கண்டால் அவைகளைத் தவிர்த்து விட்டு, பொரும்பாலும் நமது மனது வாழைப்பழத்தை உரித்து வாயில் கொடுக்கத் தக்க விசயங்களையே நாடும்.
இது மிகவும் இயல்பானதொன்று! உள்ளடக்கம் இல்லாத இன்றைய அரசியல் தலைமைகளின் பேச்சை நம்பி ஏமாந்து நிற்பதற்கும் அதுவே காரணம். உழைப்பு இல்லாத பெற்ற எதுவும் நிற்காது, சுவைக்காது.
வந்த வழி (வலி) தெரிந்தால்தான் முயன்று பெற்றவைகளை, வாழும் பொழுது வாழ்க்கையில் ரசித்து ருசித்தது போக, பேணி, வரும் தலைமுறைக்கு கடத்திச் சேர்க்க முடியும்.
இல்லைன்னா, எடப்பாடி அன் கோ போன்ற அலிபாபா குழுகிட்ட கொடுத்துட்டு மேலை ஓட்டைப் பார்த்துக்கிட்டு மல்லாக்க படுத்திருக்க வேண்டியதுதான்.
இப்போ வந்த வழி தெரியணுமா, புதியவர்களே பொறுமையா கீழே உள்ள பதிவை படிங்க. நீங்க போட்டிருக்க மேல் சட்டைக்கு யார் காரணமின்னு தெரிஞ்சிக்கலாம்...
1915 இல் கல்வி இலாகாவில் இருந்த மொத்த உத்தியோகங்கள் 518. அந்த 518 இடங்களில் அமர்ந்திருந்த பார்ப்பனர் 399 பேர். கிறித்துவர்களும் ஆங்கிலோ இந்தியர்களும் 23 பேர், முஸ்லிம்கள் 28 பேர், ஆதிதிராவிடர் உட்பட பார்ப்பனரல்லாத இந்துக்கள் 18 பேர்.
1915 இல் அரசுப்பணியாளர் தேர்வாணையம் என்ற ஒன்று கிடையாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணி நியமனம் வழங்கிக் கொள்வார்கள்.
1916 இல் டாக்டர்.சி. நடேச முதலியார், டாக்டர். டி.எம்.நாயர், பி.தியாகராய செட்டியார் ஆகிய மூவரும் சேர்ந்து நீதிக்கட்சி என்று அறியப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் தொடங்குகிறார்கள்.
1920 இல் நீதிக்கட்சி அமைச்சரவை பதவிக்கு வந்தது. இதே ஆண்டில் திருநெல்வேலியில் நடைபெற்ற 26-வது தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் வகுப்புரிமை தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
1922 -இல் நீதிக்கட்சி அரசாங்கம் 12 பதவிகள் இருந்தால் அதை 5 பார்ப்பனரல்லாதார், 2 பார்ப்பனர், 2 மகமதியர், 2 கிறிஸ்துவர், 1 தாழ்த்தப்பட்டவர் என பிரித்து வழங்க வேண்டும் என ஒரு அரசாணையை வெளியிட்டது.
1924-இல் மருத்துவக் கல்லூரியில் படிக்க சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று இருந்ததை, நீதிக் கட்சி அரசாங்கத்தை நடத்திய பனகல் அரசர் நீக்கினார்.
இதே ஆண்டில் நியமனங்களில் வேண்டியவர்களை நியமித்துக் கொள்ளும் முறையை ஒழிக்க, பணியாளர் தேர்வுக் குழுவை இந்தியாவிலேயே முதன் முறையாக ஏற்படுத்தியது நீதிக்கட்சி.
1942- இல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையில் வகுப்புவாரி முறை அமலாக்கப்பட வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
1947-இல் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அமைச்சரவை வகுப்புவாரி உரிமையை பின்வருமாறு மாற்றி உத்தரவிட்டது.
இதன்படி 14 இடங்கள் இருந்தால் அதில் 6 இடங்கள் பார்ப்பனரல்லாத முன்னேறிய வகுப்பினருக்கும், 2 இடங்கள் பார்ப்பனரல்லாத பின்தங்கிய வகுப்பினருக்கும், 2 இடங்கள் பார்ப்பனர்களுக்கும், 2 இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கும், ஒரு இடம் முகமதியருக்கும், ஒரு இடம் கிறிஸ்தவ ருக்கும் ஒதுக்கப்படும்.
1948 - இல் நேரு தலைமையில் அமைந்த இந்திய அரசு "தாழ்த்தப்பட்ட மக்களைத் தவிர வேறு யாருக்கும் இட ஒதுக்கீடு கிடையாது” என சுற்றறிக்கை அனுப்பியது. ஓமந்தூரார் இதனை ஏற்கவில்லை. இதனால் அவரை ”தாடி இல்லாத ராமசாமி” என பார்ப்பனர்கள் அழைத்தனர்.
1950- இல் வகுப்புரிமை இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
1951 காலகட்டத்தில் மாணவர்கள் இன்டர்வகுப்பில் வாங்குகின்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்கள் இவை இரண்டையும் கூட்டி அதன் சராசரியின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை நடைபெற்றது.
இட ஒதுக்கீடு செல்லாது என்று ஆன நிலையில், காங்கிரஸ் ஆட்சியாக இருந்தபோதிலும், அதிகாரம் பார்ப்பனரல்லாத குமாரசாமி ராஜா அவர்கள் கையில் இருந்ததால், 1951-52 கல்வியாண்டில் நேர்காணலுக்கு அதிக மதிப்பெண்களை ஒதுக்கி பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு ஓரளவு நியாயம் வழங்கியது மாகாண அரசு.
இதனால் இந்த ஆண்டில் மொத்தமிருந்த 318 மருத்துவ இடங்களில் 63 இடங்கள் பார்ப்பனர்களுக்கும், 130 இடங்கள் ஜாதி இந்துக்களுக்கும், 125 இடங்கள் மற்றவர்களுக்கும் கிடைத்தது.
1952 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜாஜி ஆட்சிக்கு வருகிறார். பார்ப்பனர்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் வகையில் ,நேர்காணலுக்கு இருந்த மதிப்பெண்களை 150 லிருந்து 50 ஆக அதிரடியாகக் குறைத்தார். 1952-53 கல்வியாண்டில் மொத்தமிருந்த 318 மருத்துவ இடங்களில் 104 இடங்கள் பார்ப்பனர்களுக்கும், 56 இடங்கள் ஜாதி இந்துக்களுக்கும், 158 இடங்கள் மற்றவர்களுக்கும் கிடைத்தது.
அதாவது மக்கள் தொகையில் 100க்கு 3 பேராக இருந்த பார்ப்பனர்களுக்கு கடந்த ஆண்டைவிட 41 மருத்துவ இடங்கள் கூடுதலாகக் கிடைத்தது. பார்ப்பனரல்லாத ஜாதி இந்துக்களுக்கு கடந்த ஆண்டைவிட 74 இடங்கள் குறைவாகக் கிடைத்தது.
எஞ்சினியரிங் கல்லூரி சேர்க்கையிலும் கடந்த ஆண்டைவிட பார்ப்பனர்கள் 92 இடங்களை அதிகமாகப் பெற்றார்கள்.
பார்ப்பனரல்லாத ஜாதி இந்துக்கள் கடந்த ஆண்டைவிட 88 இடங்கள் குறைவாகப் பெற்றார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி தேர்விலும் தேர்ச்சி விகிதத்தை 42 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாகக் குறைத்தார். இதனால் கூடுதலாக பாதிக்கப்பட்டது பார்ப்பனர் அல்லாத மாணவர்கள்தான் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.
10.6.1953 விடுதலையில் வந்த ஒரு செய்தி ” சென்ற ஆண்டில் செலக்ஷன் என்ற பன்னாடை முறை இல்லை. ஆனால் இந்த ஆண்டில் உயர்திரு ஆச்சாரியார் அவர்களின் அதிகார லீலைகளில் ஒன்றாக இந்த வடிகட்டும் முறை புகுத்தப்பட்டது" என்று சொல்கிறது.
பன்னாடை என்றால் வடிகட்டும் துணி. அதைக்கொண்டு வடிகட்டி பலரையும் தூக்கி எறிந்து விடுவார்கள். அதனால்தான் இந்த செலக்ஷன் முறைக்கு இந்தப் பெயர் சொல்லி அழைத்தது விடுதலை.
மூன்றாவது ஐந்தாவது மற்றும் எட்டாவது வகுப்பிற்கு பொதுத்தேர்வை பரிந்துரைக்கும் புதிய கல்விக் கொள்கையின் ஏற்பாட்டையும், மருத்துவ கல்லூரி சேர்க்கையில் உள்ள NEET தேர்வையும் நாம் இந்த பன்னாடை முறையோடு ஒப்பிடலாம்.
இதோடு நிறுத்தவில்லை ஆச்சாரியார், குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். அதாவது கிராமத்தில் உள்ள மாணவர்கள் மூன்று மணி நேரம் மட்டும் பள்ளிக்கு சென்றால் போதும். மற்ற நேரங்களில் தந்தையார் செய்யும் தொழிலைச் செய்ய வேண்டும். ஆனால் நகரங்களில் உள்ள மாணவர்களுக்கு இது பொருந்தாது. இந்த அநீதியும் கிட்டத்தட்ட NEET என்ற அநீதிக்கு இணையானதுதான்.
பெரியார் தலைமையில் நடந்த போராட்டங்களின் விளைவாக உண்டான முதல் அரசமைப்புச் சட்ட திருத்தம்தான் இன்று இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் இட ஒதுக்கீட்டை அனுபவிக்க காரணம்.
இட ஒதுக்கீடும் பணியாளர் தேர்வு வாரியமும் இல்லையென்றால் பதவிகள் அனைத்தும் ஏற்கனவே பதவிகளில் இருப்பவர்களின் உறவினர்களுக்கே சென்று சேரும் என்பதில் ஐயமில்லை.
வகுப்புரிமைப் போராட்டம் ( கம்யூனல் ஜி.ஓ) பேராசிரியர் க அன்பழகன், திராவிடர் கழக வெளியீடு.
ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம், பேராசிரியர் அருணன், திராவிடர் கழக வெளியீடு.