Wednesday, September 30, 2009

தீவிரவாதத்திற்கு பொறுப்பாளிகள் யார்?

*இது ஒரு மீள் பதிவு! 2006ஆம் ஆண்டு எழுதப்பட்டது, இப்பொழுது வலைப்பதிவுகளில் நடக்கும் சம்பாஷனைகளுக்கு தொடர்புடையதாகப் படுவதால் பின்னூட்டங்களுடன் அமைந்த இப்பதிவு முன்னமே வாசிக்க கிடைக்காதவர்களின் கண்களுக்கும் கிடைக்கட்டுமே என்ற எண்ணத்தில் தூசி தட்டப்பட்டு உங்கள் முன்னால்...

செல்வநாயகி அவர்கள் தனது "வன்முறை வாழ்க்கை" என்ற பதிவில் தனது சில ஆழமான, நியாயமான, சொந்த சுய-சிந்தனைகளை இங்கு வைத்திருக்கிறார்... அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தப் பதிவு அதன் தாக்கத்தில் இன்று என்னை எழுதத் தூண்டியது. இதுவும் சுயமாக எழுதப்பட்டதுதான்.

நாயகி,

...சமூகம் அப்படியானவர்கள் உருவாவதற்கும் தன் பரப்பின் மீதான நிகழ்வுகள்தான் காரணமாகின்றன என்பதை உணர்ந்து கொள்ளும் முனைப்பிலும், அக்காரண அழிப்பிலும் கவனம் செலுத்தவும் உழைக்க வேண்டும்...

உங்களின் பாணியில் மிகவும் சென்சிடிவான ஒரு விசயத்தை ரொம்பவும் கவனத்துடன் அணுகி அதன் கருவினை தொட்டுச் சென்றீருக்கிறீர்கள். நன்றாக வந்திருக்கிறது.

எனக்கும் இது போன்ற எண்ண வெளிப்பாடுகள் வந்து போவதுண்டு, இங்கு அமெரிக்காவில் பள்ளிகளிலும் (சூட்டீங்), தெருக்களிலும் நடக்கும் ஸ்னைப்பர் சூட்டீங் என்றழைக்கப்படும் நிகழ்ச்சிகளின் போதும், தொடர் கொலைகளின் போதும், சமூகம் அச் சம்பவம் நடத்தியவரைப் பற்றி மேலோட்டமான, சில நேரங்களில் புனையப் பட்ட கருத்துக்களையே ஊடகங்களின் வாயிலாக கொடுத்து, தீவிரவாதமென அறிவித்து கண்டிப்பாக அச் செயலில் இறங்கியவருக்கும் சாவு நாற்காலியோ அல்லது சாவு படுக்கையையோ கொடுத்து கொளரவித்து விடுகிறது. அதற்கென்ற தீர்வு எங்கிருந்து கொண்டுவருவது என்ற பொது பிரக்ஞை இல்லாமலேயே.

இருப்பினும் ஒவ்வொரு சூழல் நடக்கும் பொழுதும் சற்று அந்த நிகழ்ச்சியை நடத்தியவரின் பின்புலத்தை ஆராய்ந்தால், அவர் அதுபோல நடந்து கொண்டதற்கு இந்தச் சமூதாயமே முழுப் பொறுப்பாய் இருப்பது வெட்ட வெளிச்சமாய் இருக்கிறது.

எனக்கும் அது போன்றே ஒவ்வொரு சமயத்திலும் தோன்றச் செய்யும், எது எதுக்கோ பணத்தை செலவழித்து ஆராய்ச்சி செய்யும் இந்த அமெரிக்கா அது போன்ற கொலையாளிகளின் பின்புலத்தை ஆராய்ந்து அதற்கு காரணமாக இருந்த இந்த சமூக அவலத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவர ஏன் தயங்குகிறது.

அது போன்ற தருணங்கள் குடும்பங்களின் இன்றியமையாத் தேவையையும், குழந்தை பருவத்தில் பெற்றோர்களின் பங்கு எந்த அளவிற்கு பிற்காலத்தில் அக் குழந்தைகளுக்கு இந்த சமூகத்தை அணுகுவதற்கு உதவியாய் இருக்கிறது என்பதனையும் எடுத்துக் கூறி மக்களிடத்தே ஒரு விழிப்புணர்வை ஊட்டுவதற்கு அருமையான தருணங்கள் அல்லவா, என எண்ணச் செய்தன.

ஆனால், அச் சமயத்தில் அது போன்ற முறையில் அணுகினால் அந்த கொலையாளிக்கு தப்பித்துக் கொள்ள சாதகமாக அமைந்து விடுமென்பதினால் அது போன்ற அணுகு முறை பயன்படுத்தப் படுவதில்லை போலும். அப்படி இருப்பினும், அது போன்றதொரு அணுகு முறை மக்களிடத்தே ஒரு சரியான விழிப்புணர்வை இட்டுச் செல்வதில்லை என்பதனை ஏன் இந்த வளர்ந்த ஜென்மங்கள் புரிந்து கொள்வதில்லை.

உதாரணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மேரிலாண்ட் மாநிலத்தில் நடந்த ஸ்னைப்பர் சூட்டிங்கை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஸ்னைப்பரும் நல்ல படிப்பும், பொறுப்பான பதவியும் வகித்தவர்தான் ஆனால் எந்த சூழ்நிலை அவரின் வாழ்க்கையை ஒரு பொருளற்றதாக எண்ணத் தோன்றி இப்படி ஒரு இரண்டு வாரங்களுக்கு "கொலை வெறியுடன்" அலைந்து 10க்கும் மேற்பட்டடோரை சூரையாடினார்.

அதன் பின்புலத்தில் சமூக சீர்கேடே முன் நின்றது. ஆனால், மீடியாக்கள் தனக்கு வேண்டியதை ஜோடனை செய்து, மக்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு அமுங்கிப் போனது.

விளைவு, இன்னும் இது போன்ற உடைந்து, விலகிப் போய்க் கொண்டிருக்கக் கூடிய குடும்பம் என்கிற கட்டமைப்பு, மனிதர்கள் தனித்தனியாக தீவுகளாக வாழும் அவலம் இத்தியாதிகள். இதுவான, காரணத்தை விட்டுவிட்டு, விளைவுக்கு மட்டுமே வைத்தியம் செய்யும் தவறான அணுகுமுறை. மென்மேலும் அது போன்ற துர்சம்பவங்கள் நடைபெற காரணமாய் அமைந்துவிடுகின்றன.

தாங்கள் கூற வரும் சங்கதிக்கும், இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இருக்கும் என்றே கருதுகிறேன். எங்கிருந்து கிளம்புகிறது இந்த தீவிரவாதம்? யார் இதற்குப் பொறுப்பாளிகள்...? தீவிரவாதத்தை தீவிரவாதம் கொண்டு அணைத்துவிட முடியுமா? அல்லது தீவிரவாதத்திற்கு மிதவாதம்தான் ஒரு எதிர்த்தீயா (எது ஒரு சரியான Antidote)...?

இப்பொழுது ஒரு உலகம் தழுவிய தீவிரவாதியை சரியானதொரு அணுகுமுறையுடன் அதனை கையாளாமல் ஜஸ்ட் அவனை துடைத்தெறிந்துவிட்டால், நாளை அதுபோல நூறு தீவிரவாதி உருவாக வழி வகுக்காது என்பது என்ன நிச்சயம்? இதில் எந்த அணுகுமுறை சரியான அணுகுமுறை பயத்தை மூட்டி தற்காலிகமான முறையில் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதா அல்லது மொத்த சமூதாயத்தையே ஒரு விழிப்பு நிலைக்கு எடுத்துச் சென்று காரண, காரணியை கண்டறிந்து அதற்கென நிரந்தர தீர்வு காண்பதா?

கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற நியதி நிரந்தர தீர்வைக் கொணர முடியுமா? முடியும், தற்காலிகமாக அதற்கும் ஒரு கேஸ் வால்வ் போட்டு.

இப்பொழுது நடந்து கொண்டிருக்கிற தேசம் சார்ந்த நிகழ்வுகள் என்ற பிரக்ஞை அற்ற முறையில் இந்த விசயத்தை அணுகி, ஒரு தனிப்பட்ட மனிதன் என்ற நிலையில் இவ் விசயத்தை அணுகும் பொழுது எனக்கு தோன்றும் சிந்தனையே இவைகள்...

...அப்படிக் கொன்று அவர்களைச் சாதியின் பெயரால் தீண்டத்தகாதவர்கள் ஆக்கி வைத்திருந்த சமூகத்தில், அவர்களை அப்படி ஆக்கியவர்களெல்லாம் வன்முறையாளர்கள் இல்லையா?...

ஹும், யாரும் பிறக்கும் பொழுதுதே தீவிரவாதியாகி தன் வாழ்வை தொலைத்துக் கொள்ள வேண்டுமென்று கங்கனம் கட்டிக் கொண்டு பிறப்பது கிடையாதே. தன் வாழும் சமூக கட்டமைப்பே வழி நடத்தி, அவரை அந் நிலைக்கு இட்டுச் செல்கிறது எனக் கொள்ளாலாமா??

****இதுக்கு தொடர்பான மற்றுமொரு தீவிரவாதம் சார்ந்த பதிவு என்னிடமிருந்து- இந்திய துணை கண்டத் தீவிரவாதம் -தெகாவின் பார்வையில்!


பி.கு: நாயகி, இதனையே தாங்களின் பதிவை மேற்கோள் காட்டி தனிப்பதிவாக போடுவதாக உத்தேசித்துள்ளேன்... தவறாக எண்ண வேண்டாம். செய்தி போய்ச் சேர்ந்தால் சரிதான். :-)

21 comments:

Thekkikattan|தெகா said...

P.S: இந்தப் பதிவிற்கு தொடர்பான சில பின்னூட்டங்கள் மேலும் தீர்க்கமாக பல விசயங்களை ஆராய்ந்த நிலையில் அமைந்திருந்தது. அதனையும் வாசிக்க விருப்பப் படுபவர்கள் இங்கே சொடுக்கவும் ... வன்முறை வாழ்க்கைக்கு யார் பொறுப்பு...?

ராஜ நடராஜன் said...

தீவிரவாதங்கள் பன்முகப் பட்டாலும் பொதுவான வகையில் இனம்,மதம்,பொருளாதார பாகுபாடுகள்,இசங்களின் ஆக்கிரமிப்பு என்ற கோட்டுக்குள் வந்து விடுகின்றன.

9/11 க்கு முந்திய உலக நிகழ்வுகளை எடுத்துக் கொண்டால் அடி வாங்கி அழுதுகிட்டே இருந்த குழந்தையாக இந்தியாவே இருக்கும்.போட்டா போட்டி போட்டவர்கள் இங்கிலாந்து,அயர்லாந்துக்காரர்களாய் இருப்பார்கள்.இனப்படுகொலையாக ஆப்பிரிக்க ருவாண்டா மக்களும்,சமமின்மை என்ற காரணத்தால் இலங்கை தேசமும் தைமூரும் இருக்கும்.கம்யூனிஸ சித்தாந்தக் கலவையும் அதை விட்டு வெளியேறும் முயற்சியாக ரஷ்யாவும்,மதம்,இனம் என்ற அழுத்தத்தால் செச்சினியாவும் வன்முறைதான் மீட்சி என்ற சித்தாந்தத்தில் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் திளைத்து இருக்கும்.

ரஷ்யாவில் கம்யூனிஸம் தோற்றுப் போனதும் (தோழர்கள் மன்னிப்பார்களாக)ரஷ்யா ஆப்கானிஸ்தானை வெற்றி கொள்ள முடியாததும் யூனிப்போலார் புதிய பொருளாதார தத்துவம் தெற்காசிய உலக நிகழ்வின் நெம்புகோலை மாற்றிப் போட்டு விட்டது.

Thekkikattan|தெகா said...

ரா. ந,

9/11 என்ற நிகழ்வு என்பது உடம்பிற்குள் சிக்கலான முறையில் புற்று நோயாக வளர்ந்து கொண்டிருந்த ஒரு தீவிர பிரச்சினையின் 'வெளிக் கட்டி'யாகத்தான் தோன்றி அதன் விகாரத்தை உலகத்தின் பார்வைக்கும் கொண்டு வந்தது எனலாமா?

அதற்கு முன்பிலிருந்து நீங்கள் சுட்டிய அந்தப் பன்முக காரணிகளில் அதன் தீவிரம் அடங்கி இருந்தாலும், வீடு தேடிச் சென்று வளர்ந்த நாடுகளின் இயற்கை வளத் தேவைக்கென நடத்திய சுரண்டல்களின் நீச்சியாக விளையாடிய சித்து விளையாட்டுக்கள் நம் பார்வைக்கு வராமலேயே சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையை சிதைத்திருக்கக் கூடுமல்லவா?

அந்த நாளைய தேவைக்கென பயன்படுத்தப்பட்டுக்கொண்ட ...பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் திளைத்து இருக்கும். .. இருந்திருக்கலாம், ஆனால் பிரிதொரு சமயத்தில் அதுவே backfire ஆகிப் போனதல்லவோ துரதிருஷ்டம், அதனைத்தானே நாம் இன்று அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். அது போன்ற சித்து விளையாட்டுக்களில் நம்மையும் உட்படுத்திக் கொள்வது, நீட்டித்த அமைதிக்கு வழிகோண வாய்ப்புகள் இல்லை என்பதனை அறிந்தும் அந்த திசையில் பயணிப்பது எப்படி அறிவுடைமையாகும்?

Thekkikattan|தெகா said...

மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். இந்த புது உலக வரிசைக் கிரமத்தில் எவன் வல்லவன் என்ற நிலையை நிரூபிக்கக் கோரி, சிறு சிறு நாடுகளில் வாழும் மக்கள் தங்களின் சொந்த உரிமைகளை மீட்டெடுக்க நடத்தும் சந்தர்ப்பங்களை ஆயுதங்கள் விற்கும் தளங்களாக மாற்றி ஜரூராகக் கடை விரித்து அதன் போக்கைச் சூடேற்றி முடிந்த அளவிற்கு கல்லா கட்டி விட்டு முடிவாக எந்தப் பக்கம் அதிக லாபம் கிட்டுகிறதோ அவர்களுக்கே வெற்றியோ அல்லது நீட்டித்த போரையோ ஈட்டித் தருவதும், இந்த தீவிரவாத வளர்ப்பிற்கு ஒரு அடித்தளமாக அமைகிறதும் நடைமுறைதானே?

ராஜ நடராஜன் said.. said...

ராஜ நடராஜன் said...

போகிற போது அப்சல் பெயர் பழைய மறந்த நிகழ்வுகளை நினைவு படுத்தியது.
நோவம் சாம்ஸ்கி குழந்தைகளின் சத்தங்களை வைத்து linguistic தியரிகள் சொன்னது போல் செல்வநாயகி குழந்தைகளின் அடம் பிடிக்கிறது பற்றி சொன்னது யோசிக்க வைத்தது.அடத்திலயும் எல்லா குழந்தைகளும் ஒரே பாணியை பின்பற்றுவதில்லை என நினைக்கிறேன்.மண் சார்ந்த பழக்கமோ ஜீன் சார்ந்த குணமோ ஆங்கில,அரேபிய,எகிப்திய,பிலிப்பைன்ஸ்,இலங்கை,இந்திய குழந்தைகள் அடம் பிடிப்பதிலும் வித்தியாசம் காட்டுகின்றன.

மறுபடியும் வருகிறேன்

Thekkikattan|தெகா said...

ரா. ந,

மூலப் பதிவிற்கு இட்ட பின்னூட்டத்தை இங்கு கொண்டு வந்துவிட்டேன் உரையாடுவதற்கு வசதியாக :-)...

//அடத்திலயும் எல்லா குழந்தைகளும் ஒரே பாணியை பின்பற்றுவதில்லை என நினைக்கிறேன்.மண் சார்ந்த பழக்கமோ ஜீன் சார்ந்த குணமோ ஆங்கில,அரேபிய,எகிப்திய,பிலிப்பைன்ஸ்,இலங்கை,இந்திய குழந்தைகள் அடம் பிடிப்பதிலும் வித்தியாசம் காட்டுகின்றன.//

அப்படியா நினைக்கிறீர்கள்? எனக்கு என்னமோ எல்லா குழந்தைகளும் அடிப்படையாக கோவித்துக் கொள்ள எடுத்துக் கொள்ளும் விசயங்கள் சார்ந்து ஒன்றாகத்தானிக்க முடியுமென்றும், வேண்டுமானல் அக்கோபத்தினை வெளிப்படுத்தும் பாங்கில் கொஞ்சமே வித்தியாசப் படலாம் எனவும், அதுவும் ஒரு கலாச்சார ஒட்டுக்குமே கூட பெரும் வேறுபாடுகளை காட்டும் என்று கூறிவிட முடியாதென்றும் நினைக்கச் செய்கிறது.

அது போன்று குழந்தைகள் கோபத்தினை வெளிப்படுத்துவதின் கணம் தனிப்பட்ட வளர்ப்புச் சூழலை பொருத்து வேண்டுமானால் வித்திசியப்பட்டு நிக்கலாம். பொதுச் சமூக வெளிப்பாடாக கூறிக் கொள்ளும்படியாக குழந்தைகளின் கோபங்கள் வேறுபட்டு வெளிக்கொணர்வதாக எதையெல்லாம் நீங்கள் கருதுகிறீர்கள்? ஓடிச் சென்று கதவைச் சாத்திக் கொள்வது - அப்பா, அம்மா கதவைத் தட்டினால் "லீவ் மி அலோன்" என்று இங்கு மேலை நாடுகளில் கோவத்தினை குழந்தைகள் காட்டுவது சாதாரணம், அது நமது சமூகச் சூழலில் பொதுவாக கிடையாது. ஆனால், பெரும் வசதிகளைக் கொண்ட குடும்பங்களிடையே வளரும் குழந்தைகளிடத்தே நடைமுறையில் இருக்கலாம்.

எப்படியிருப்பினும் அடம் பிடித்தல் சார்ந்து "குழந்தைகள் கத்தி" எடுத்து தனது பெற்றோர்களையே மிரட்டுவது எந்த சமூகத்திலும் நடைபெறாது தானே :-P ??

காட்டாறு said...

பெரிய பெரிய ஆளுங்க நெறையா சொல்லி இருக்கீங்க. என் சிற்றறிவிற்கு எட்டியது இவ்வளவு தாங்க. நாட்டை திருத்தனுமா வீட்டிலிருந்து ஆரம்பிங்க. அப்பா வீட்டில அம்மாவையும், அம்மா அப்பாவையும் எப்படி நடத்துறாங்கன்னு பார்க்குது குழந்தை. அங்கே தான் அதற்கு முதல் பாடம் ஆரம்பமாகுது. அது பசுமரத்து ஆணி போல பதிந்து போகுது. வளர்நிலை அடந்தும் தன்னிச்சையாக இந்த செயல்கள் தன்னுள்ளும் வளர்ந்து விடுது.

சில உதாரணங்கள் இங்கே சொல்லிக்கிறேன்.
1) என்னுடைய நண்பர் அவங்க வீட்டு கதை ஒன்னு சொன்னார். அவருடைய தங்கை மகன் வெளியில் எல்லோரும் சேர்ந்து கிளம்புமுன் தன் தாயிடம் சரியாக சேலையுடுத்தி வருமாறு சொன்னான் என. 10 வயசு குழந்தை எங்கிருந்து பாடம் படித்தான்?
2) எங்க மாமாவுக்கு கை நீளம். பட்டு பட்டுன்னு அத்தைய அடிப்பாரு. அவரு மகன் இன்று தன் மனைவியை மட்டுமல்ல தாயையும் அடிக்கிறான். குண்டு சட்டில வாழ்பவர்களின் முதிர்ச்சி அவ்ளோ தான் இருக்கும்.
3) A Controversial one now. காந்தி வீட்டில உள்ளவங்களை கவனிக்காமல் நாட்டை கவனிக்க போனாறாம். இன்று அவர் மக்கள்… ??

வீட்டை திருத்துங்க முதல்ல. குழந்தைகளுக்கு பழகி கொடுங்க. அவர்களின் பார்வையை விரிவாக்குங்க. நமக்கு அடுத்த ஜெனரேசனாவது கட்டம் கட்டி வாழாமல் நல்லா இருக்கட்டும்.

அக மாற்றம் said...

எனது கருத்துகளை இங்கு முன் வைக்க விரும்புகிறேன்.

வன்முறை மற்றும் தீவிரவதம் இரண்டும் ஒன்று போல் தோன்றினாலும் அடிப்படையில் வெவ்வேறானவை. இன்னும் அழமாக நோக்கினால், தீவிரவதம் வன்முறையின் ஒரு பகுதியாக அல்லது வெளிபாடாக தோன்றும்.

நாம் அனைவரும் வன்முறையில் ஊறி இருக்கிறோம். வன்முறை என்பது உடல் ரீதியான தாக்குதல் மட்டுமல்லாது மனரீதியான தாக்தலையும் குறிக்கும். நாம் அனைவரும் நம் மீதும் நம்மை சார்ந்தவர்கள் மீதும் எப்போதும் வன்முறையை கையாண்டு வருகிறோம். எபொழுது நம் நம்பிக்கைகளை நம் மீதோ பிறர் மீதோ பலவந்தமாக செலுதுகிறோமோ, அப்பொழுது நாமும் வன்முறையில் ஈடுபடுகிறோம்.
இன்னும் அழமாக நோக்கினால், நாம் எபொழுதும் நம் நம்பிக்கைகளை நம் மீதும் பிறர் மீதும் செலுதிகொண்டிருகிறோம்.

தீவிரவதம் மிக அழமான நம்பிகை அல்லது அடக்குமுறை காரணமாக ஏற்படுகிறது. எந்த ஒரு தீவிரவதயும் எதாவது ஒரு கோட்பாட்டின் மேல் அல்லது அடக்கபட்டுள்ளதாக தீவிர நம்பிக்கை கொண்டிருப்பன்.

எனவே, நம்பிக்கையை எவ்வாறு கையாள வேண்டும் என்னும் அறிவின் குறைபாடு தீவிரவதம் வெளிப்பட காரணமாக இருக்கலாம். இன்னும் அழமாக நோக்கினால், நமது நம்பிகைகளே தீவிரவாதத்திற்கு அடிப்படை கரணம்.

Thekkikattan|தெகா said...

//வீட்டை திருத்துங்க முதல்ல. குழந்தைகளுக்கு பழகி கொடுங்க. அவர்களின் பார்வையை விரிவாக்குங்க. நமக்கு அடுத்த ஜெனரேசனாவது கட்டம் கட்டி வாழாமல் நல்லா இருக்கட்டும்.//

நூற்றில ஒரு வார்த்தைங்க! அதாவது முதல்ல உங்களச் சுத்தி வாழ்ந்திட்டு இருக்கிற மனிதர்களின் பார்வையை விரிவாக்குறதுக்கு முயற்சி பண்ணுங்கங்கிறீங்க, அப்படித்தானே? சரி, முதல்ல நல்லா வளர்ந்து நிற்கிற அப்பாவிற்கோ அல்லது குழந்தைகளை கவனிச்சிக்கிற எந்த ஒரு அடல்டுக்கோ சரியான பார்வை இது போன்ற 'கட்டங்'களைத் தாண்டிப் பார்க்கிற பொது ப்ரக்ஞை(அறிவு) இருந்தாத்தானேங்க அடுத்த தலைமுறையான குழந்தைகளுக்கு நல்ல பார்வை பெறக் கூடிய சூழலை கொடுத்து வழி நடத்திச் செல்ல, கணவன்-மனைவியே ஜாடிக்கு ஏத்த மூடியா ஒரு மித்த "கோண"லான பார்வையை கொண்டிருந்தால் அங்கே என்ன நடக்கும்?

ராஜ நடராஜன் said...

எனக்கு ஒரு கெட்ட பழக்கம்.யாராவது வீட்டுக்குப் போனா அங்கேயே சம்மணமிட்டு உட்கார்ந்து கொள்வது.இந்தப் பின்னூட்டம் இந்த இடுகைக்கு மீண்டும் வருவதற்கு முன் ஒரே பக்கத்தில் கண்ணில் பட்ட உங்கள் இடுகைகளை பார்வையிட்டதற்கு.


இந்த இடுகையின் பின்னூட்டங்கள் ஒப்புக்குச் சப்பாணியாக இல்லாமல் ஆழ்ந்து எழுதுவது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.அடிக்கடி இடுகையிடுங்க.

குழந்தைகள்,அடம் வன்முறை பற்றி மீண்டும் ஒரு விளக்கம்.பல கலாச்சாரம் கொண்ட நாடாக மத்திய கிழக்கு நாடுகள் இப்போது மாறிவிட்டன.வளர்ப்பு முறைகளுக்கும் அப்பால் வாழும் சூழலின் கலாச்சாரமும் சேர்ந்து அடத்தில் பங்கு வகிக்கிறது.

எகிப்திய பையன் அடத்தை கையில் கிடைத்த பொருளை வீசுவதில் காண்பிக்கிறான்.இந்தியக் குழந்தை வீல் என்று கத்தியே அம்மாவை திரும்ப பார்க்க வைக்கிறது.இப்படி குழந்தைகளின் அடம் மனோபாவம் வேறுபடுகிறது.இது வீட்டுக்குள் விளையாடும் வயது என்று வைத்துக் கொண்டால் இன்னும் கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள் வீட்டுக்கு வெளியே கூட கல் எறிவது போன்ற வன்முறை காட்டுகிறார்கள்.இன்னும் சில சலாம் மாலிக்ஹும் சொல்லத் தவறுவதில்லை.இந்தியக் குழந்தைகள் ஹலோ அங்கிள்,ஹலோ ஆண்ட்டி சொந்தம் கொண்டாட ஆரம்பித்து விடுகிறார்கள்:)

Thekkikattan|தெகா said...

ரா. ந,

//வளர்ப்பு முறைகளுக்கும் அப்பால் வாழும் சூழலின் கலாச்சாரமும் சேர்ந்து அடத்தில் பங்கு வகிக்கிறது.//

ம்ம்ம் மேலே ஒரு பின்னூட்டத்தின் மூலமா எப்படி இது ஒட்டு மொத்த கலாச்சாரத்தின் வாயிலாக குழந்தைகளின் tantrum throwing உள்ளடக்க முடியாதுன்னு சொல்லியிருப்பேனே. ஒத்துக்கொள்கிறேன் கொஞ்சமே ஒரு நாட்டின் கலாச்சாரம் எப்படி குழந்தைகளில் அடம் சார்ந்த தாக்கத்தினை விட்டுச் செல்லலாம் என, இருப்பினும் கண்டிப்பாக எந்த ஒரு கலாச்சாரமும் destructiveவான அடத்தினை வெளிப்படுத்த ஒத்துக் கொள்ளாது என்பதே நடைமுறை.

அதற்கு எகிப்திய பையன் சார்ந்து நீங்கள் கொடுத்த ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம், அந்த பையன் வீசி எறிவதால் ஏற்படும் பொருட்களின் சேதத்தினை பொறுத்துக் கொண்டு பெற்றோர்கள் மீண்டும் மீண்டும் அது போன்ற destructiveவான பழக்கத்திற்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியுமா? இதனை அப்படியே ஒட்டு மொத்த அந்த எகிப்திய சமூகத்திற்கும் பொருத்திப் பார்த்தால், எல்லா பெற்றோர்களும் அந்த அடத்தினை சகித்துப் போவதாக அல்லவா தெரிகிறது.

கண்டிப்பாக சில குழந்தைகள் கொஞ்சம் முரட்டுத் தனமாக இருந்துவிடுவது மறுப்பதற்கில்லை. அது நாடு, சமயம் என்ற எந்த ஏற்றத்தாழ்வுகளற்றும் அப்படியாக அமைந்து விடுவதுண்டு. ஆனால், 10 வயதிற்குள்ளும் அமைந்து விடும் குழந்தைகளின் வளர்ப்பு மொத்தமாக பெற்றவர்களின் கைகளிலேயே இருக்கும் பட்சத்தில் அடுத்தவர்களுக்கு தீங்கு இழைக்கும் எது போன்ற செயல்களையும் ஊக்குவிக்க மாட்டார்களென்று எண்ணச் செய்கிறது.

அது தான் விரும்பி பெற்றுக் கொண்ட பிள்ளைகள் என்ற பட்சத்தில், உண்மைதானே? நல்ல ஒழுக்கம் எல்லா பெற்றவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கும் சென்றடைய வேண்டுமென்றே விரும்புவார்கள் ...

Thekkikattan|தெகா said...

வாங்க மாற்றம்(change),

முதல் வருகைக்கு நல் வணக்கங்கள்! தங்களின் ஆங்கில பக்கத்திற்கு சென்றேன் நிறைய எழுதியிருக்கிறீர்கள், பொறுமையா படிக்க வேண்டும்.

தங்களின் பார்வை வன்முறைக்கும் - தீவிரவாதத்திற்குமான அடிப்படை வித்தியாசங்களின் கூறுகளை ஆழமாக அலச முற்பட்டிருக்கிறது ...ஆனால்

//தீவிரவதம் மிக அழமான நம்பிகை அல்லது அடக்குமுறை காரணமாக ஏற்படுகிறது.//

சரியாக இருக்கலாம்...

//நம்பிக்கையை எவ்வாறு கையாள வேண்டும் என்னும் அறிவின் குறைபாடு தீவிரவதம் வெளிப்பட காரணமாக இருக்கலாம். //

இங்கே முரண்படுகிறதே...

அடக்கு முறையின் காரணமாகவும் வெடித்து வெளிக்கிளம்புவதாக கொண்டால் அதெப்படி "அறிவின்"குறைப்பாட்டால் தீவிரவாதம் வெளிக்கிளம்புவதாக அமைய முடியும்?

அக மாற்றம் said...

எனது கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்தமைக்கு நன்றி!

//நம்பிக்கையை எவ்வாறு கையாள வேண்டும் என்னும் அறிவின் குறைபாடு தீவிரவதம் வெளிப்பட காரணமாக இருக்கலாம். //

//இங்கே முரண்படுகிறதே...

அடக்கு முறையின் காரணமாகவும் வெடித்து வெளிக்கிளம்புவதாக கொண்டால் அதெப்படி "அறிவின்"குறைப்பாட்டால் தீவிரவாதம் வெளிக்கிளம்புவதாக அமைய முடியும்?//

எனது பார்வையில் இதில் முரண்பாடு இல்லை என்பதை விளக்க முயல்கிறேன்.

அடக்குமுறைக்கு தீர்வு தீவிரவாதம் அல்ல - போராட்டம். தீவிரவாதம், போராட்டம் இரண்டிற்க்கும் மிகபெரிய வித்தியாசம் உண்டு என நினைகிறேன். தீவிரவாதம், சாதரண மக்களின் வாழ்கை ஆதாரத்தை பாதிக்கிறது. அடக்குமுறைக்கு அதிரான போராட்டம் அடக்குபவரயும் அடக்கபட்டவரயும் மட்டுமே சார்திருக்கும். அறிவின் குறைபாடுதான் இந்த வித்தியாசத்தை நமது பர்வைலிருந்து மறைகிறது.

Thekkikattan|தெகா said...

மாற்றம்,

கருத்து சார்ந்த உரையாடல் எப்பொழுதும் எனக்குப் பிடித்தமான ஒன்று. நீங்கள் என் பதிவினை அறிந்து கொண்டமை மிக்க மகிழ்வளிக்கிறது.

//அடக்குமுறைக்கு தீர்வு தீவிரவாதம் அல்ல - போராட்டம். தீவிரவாதம், போராட்டம் இரண்டிற்க்கும் மிகபெரிய வித்தியாசம் உண்டு என நினைகிறேன். தீவிரவாதம், சாதரண மக்களின் வாழ்கை ஆதாரத்தை பாதிக்கிறது. அடக்குமுறைக்கு அதிரான போராட்டம் அடக்குபவரயும் அடக்கபட்டவரயும் மட்டுமே சார்திருக்கும். அறிவின் குறைபாடுதான் இந்த வித்தியாசத்தை நமது பர்வைலிருந்து மறைகிறது.//

தீவிரவாதம் எல்லா சூழ்நிலைகளிலும் நீட்டித்த அமைதியை ஈட்டித் தந்துவிடுவது கிடையாதுதான். முழுமையாக உடன்படுகிறேன். தீவிரவாதத்திற்கான மூலத்தை தேடினால் அது கொண்டு நிறுத்துமிடம் முறைபடுத்தப்பட்ட அரசாங்கம் அல்லது கழகங்களில் உள்ள சமச்சீரற்ற அதிகாரப் பகிர்வும், மனித நேயமற்ற வகையிலே பிற மனிதர்களிடம் காட்டும் வித்தியாசமுமே ஆகும்.

இப்பொழுது அண்மையில் கொஞ்சம் கூட நியாயமற்ற முறையில் ஈழத்தில் நடந்தேறிக் கொண்டிருக்கும் அநீதியே இதற்கு சாட்சியாக அமைந்து விடுகிறது. உங்களையும் என்னையும் போன்றவர்களே கூட இது போன்ற injusticeகளை கண்ணுரும் பொழுது வேறு எங்கு சென்றுதான் முறையிடுவது என்ற அயர்ச்சி மிஞ்சி நிற்பதனை தவிர்க்க முடியாத நிலையில் நிற்பதனைக் உணர்வோம். அந்த மன நிலையில்தான் இப்படியான ஒரு பதிவினை ஆங்கிலத்தில் தட்டி வைத்தேன்... Media's War On Our Lives

போரட்டத்தினை நீர்த்துப் போகச் செய்வதின் பொருட்டுத்தான் அதிகாரத்தில் இருக்கும் மக்கள் தங்களுக்குச் சாதகமான வகையில் எல்லா வற்றையுமே இயங்கிக் கொள்ள வைத்துக்கொள்ளும் நிலையில் எப்படி பட்டினியும், பசியுமாக கூட்டமாக கிடந்து எத்தனை நாட்களுக்கு அதனை முன்னெடுத்து செல்வார்கள்? மனித நேயம் இறந்து கொண்டிருக்கிறது, மாற்றம் அவர்களே - அதுதான் நடைமுறையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதற்காக தீவிரவாதத்தை நான் தூக்கிப் பிடிக்கவில்லை. அதன் விகாரம் அறிந்து எல்லா நிலையிலும் இருக்கும் மக்களும் தூக்கி தூரப் போட முன்னெடுப்புகள் எடுப்பது அவசியமாகிறது.

அக மாற்றம் said...

மீண்டும், மீண்டும் ஒரே பதிவுக்கு பின்னூட்டம் இடுவதை மன்னிக்கவும்!

//மனித நேயம் இறந்து கொண்டிருக்கிறது, மாற்றம் அவர்களே - அதுதான் நடைமுறையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.//

மனித நேயம் இறந்து கொண்டிருக்கிறது - இதற்கு மாற்று கருத்து இல்லை. ஆனால், இதற்கு நாம் என்ன செய்தோம் என்பதே கேள்வி. தனி மனிதனாக நம்மால் என்ன செய்ய முடியும் என்று வெறுமனே இருந்தால், அது நமது பொறுப்பை தட்டிகழிப்பது ஆகும்.

நான், நீங்கள் மற்றும் நம்மை போலே பலரும் சேர்ந்துதான் இந்த சமூகம். நாம் நமது கருத்துகளை தெரிவிப்பதுடன் நின்று விடாமல் உண்மையிலே மனித நேயதுடன் இருக்கிறோமா? நானும், நீங்களும் மாறினால் சமூகத்தின் ஒரு பகுதி மாறிவிட்டது! நம்மை சார்ந்து இருப்பவர்களிடமும் நமது மாற்றத்தின் ஒரு பகுதி தொற்றி கொள்ளும். சமுகத்தின் முழுமயான மாற்றம் அங்கே தொடக்கி விட்டது!

இந்த மாற்றத்தின் பயன் குறுகிய காலத்தில் தெரியாமல் போகலாம்! இந்த உலகம் இன்னும் பல கோடி ஆண்டுகள், நமக்கு பின்னும் இருக்க போகிறது. மாற்றத்தை இப்போதே நாம் நமக்குள் தொடங்கினால், ஒரு நாள் மனித நேயம் மட்டும் என்ன, உலகமே ஒரு வாழும் சொர்கமாக மாறி விடாதா - இது கற்பனை அல்ல, நாம் உண்மையில் அத்தகைய மாற்றத்தை உண்மையாக விரும்பினால் மட்டும்!

நன்றி!

Thekkikattan|தெகா said...

மாற்றம்,

//மீண்டும், மீண்டும் ஒரே பதிவுக்கு பின்னூட்டம் இடுவதை மன்னிக்கவும்!//

அப்படியெல்லாம் நினைக்க வேண்டியதில்லை, மாற்றம் அவர்களே! நீங்கள் தமிழ்ப் பதிவுகளை அதிகமாக படிப்பதில்லையோ? மிகவும் மென்மையான எழுத்துக்களுக்கு சொந்தக் காரராக இருக்கீறீர்களே :).

//நம்மை சார்ந்து இருப்பவர்களிடமும் நமது மாற்றத்தின் ஒரு பகுதி தொற்றி கொள்ளும். சமுகத்தின் முழுமயான மாற்றம் அங்கே தொடக்கி விட்டது! //

அந்த மாற்றத்தினை மனத்தினுள் தொடங்கி வைக்கவே இத்தனை எழுத்துக்களும் தனிமனித விளக்க நிலைகளும். மனிதன், மனிதம் நிலையில இருக்க வேண்டின் அவன் பலபடி நிலைகளை கடந்து வர வேண்டியது அவசியமாகிறது. அந்த மாற்றம் "விழிப்பு நிலை"யில் இருப்பவனுக்கே சாத்தியமாகிறது. சில பேருக்கு அது இயல்பிலேயே அமைந்து விட்டாலும், பல பேருக்கு உழைப்பின் மூலமாகவே தனதாக்கிக் கொள்ளமுடிகிறது.

ஆனால், இப்பொழுதுதான கால கட்டத்தில் 'பாலன்ஸ்' கொஞ்சம் தவறித்தான் இருக்கிறது. தனி மனித ஆட்டிட்யூட் தானே ஒரு நாட்டை போருக்கு எடுத்துச் செல்வதும் (புஷ் வெர்சஸ் ஓபாமா) அந்த நிலைக்கு எடுத்துச் செல்லாமலும் மாற்று வழிகளை தேர்ந்தெடுப்பதனையும் தேர்வு செய்கிறது. இருப்பினும் அது போன்ற மனவோட்டத்தை பெற பல விசயங்கள் "இன்ஃபுளுயன்ஸ்" செய்கிறது.

நம்மால் முடிந்தளவிற்கு அது போன்ற சிந்தனைகளை வளர்க்க வேண்டி பகிர்ந்து கொள்ளுவோம்.

நீங்களும் தமிழில் எழுதுங்கள். நன்றி, மாற்றம்.

மங்களூர் சிவா said...

நிறைய யோசிக்க வைக்கும் பதிவு.

கோமதி அரசு said...

//குடும்பங்களின் இன்றியமையாத் தேவையையும், குழந்தை பருவத்தில் பெற்றோர்களின் பங்கு எந்த அளவிற்கு
பிற்காலத்தில் அக் குழந்தைகளுக்கு
இந்த சமூகத்தை அணுகுவதற்கு உதவியாய் இருக்கிறது.என்பதனையும்
எடுத்துக் கூறி மக்களிடத்தே ஒரு விழிப்புணர்வை ஊட்டுவதற்கு அருமையான தருணங்கள் அல்லவா என எண்ணச் செய்தன//

உண்மை தான் தெகா,குழந்தை வளர்ப்பில் பெற்றோர் பங்கு மகத்தானது.சமுதாயத்தில் நல்ல குடிமகனாய் ஆக்குவது பெற்றோர் கடமை.

குழந்தைகள் எல்லோரும் நல்ல உயர்ந்த எண்ணம் உடையவர்களாக
இருக்க வேண்டும். குழந்தையை பெறக் கூடியவர்கள் உயர்ந்த எண்ணங்கள்,நல்ல ஒழுக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும்.

வீட்டில் அன்பு கிடைக்காத குழந்தைகள் தான் அன்பை தேடி வெளிஉலகத்தில்
தவறான ஆட்களிடம் சிக்கி வாழ்க்கை யை தொலைக்கிறார்கள்.

//யாரும் பிறக்கும் பொழுதே தீவிரவாதியாகி தன் வாழ்வை தொலைத்துக் கொள்ள வேண்டுமென்று
கங்கணம் கட்டிக் கொண்டு பிறப்பது கிடையாதே தான் வாழும் சமூக கட்டமைப்பே வழி நடத்தி, அவ்ரை அந்நிலைக்கு இட்டுச் செல்கிறது எனக் கொள்ளாலாமா??//

ஆம் தெகா, குழந்தை பிறக்கும் போது கள்ளம் கபடு தெரியாமல் தான் பிறக்கும்.வளரும் சூழ்நிலை , சமுதாயம் இவை தான் அவனை மாற்றுகிறது.

//குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகினில்
குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயம்
கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி மேலாம்
கடமைகளைச் சிந்தித்துச் செயலாற்றி
உய்வோம்;
உற்றசெல்வம்,உடலுழைப்பு,அறிவு இவை கொண்டு
உலகுக்கு உதவியருள் தொண்டாற்றி மகிழ்வோம்
மற்றவரை எதிர்ப்பார்த்தல்,கையேந்தல்
வேண்டாம்
மாநிதியாம் இறைவனை நம் மனத்தடியில் தேர்வோம்.

தனி மனிதனால் சமுதாயமும் சமுதாயத்தால் தனி மனிதனும் ஆக்கவும் காக்கவும் படுகின்றதென்னும்
உண்மை உணர்விலே மக்கள் வளமாக வாழ வேண்டுமெனில் அதற்கேற்ற கல்வி முறையை வகுத்துச் செயல்படுத்த வேண்டும். வாழ்வில் சிக்கல்,பிணக்குகள்,பறித்துண்டு வாழும் சூழ்நிலைகள் அனைத்தையும்
மாற்றி மனித குலம் தன்னம்பிக்கையோடு உழைத்துப் பொருள் ஈட்டி, தானும் உண்டு பிறர்க்கும் இட்டு உள்ள நிறைவோடு
வாழ வழி வகுக்கும் கல்வி முறை உலகெங்கும் அமுலுக்கு வரவேண்டும்//
இப்படி வேதாத்திரி மகரிஷி சொல்கிறார்.
செல்வநாயகியின் வன்முறை வாழ்க்கைக்கு யார் பொறுப்பு?
படித்தேன்.

குற்றவாளிக்கு கொடுக்கபடும் தண்டனை அவனை நல் வழி படுத்துவதாய் இருக்கவேண்டும்.
மேலும் குற்றவாளி ஆக்ககூடாது.


வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம். என்பது போல் பெற்றோர்கள்
நல்லவர்களாய் ஒழுக்க பழக்கத்தில் சிறந்தவர்களாய் வாழ்ந்து காட்ட வேண்டும்.

அன்பும் கருணையும் இயல்பாய் ஆக வேண்டும்.
“தவறுகளைச் செய்துகொண்டே ஒருவர் தர்மத்தைப் போதிக்க, அதனைக்
கேட்ப்போரும் தர்மத்தைப் பேசிக்கொண்டே துணிந்து தவறுகளைச்
செய்து கொண்டிருப்பர்.’”
மகரிஷி.

பறித்துண்டு வழும் பண்பாடு இன்று பரவலாக நிலவி வருகிறது. இது உழைத்துண்டு வாழும் பண்பாடக மாற வேண்டும்.இட்டுண்டு வாழும் பண்பாடாகவும் , பகிர்ந்துண்டு வாழும் பண்பாடாகவும்,ஒத்தும் உதவியும் வாழும் ஒழுக்கப் பண்பாடாகவும் மாறவேண்டும்.

கல்வி,தொழில்,பொருளாதாரம் ஒத்த படி அமையாத காரணத்தால் ஒரு வேகத்தில் எண்ணிறந்தோர் வெறுக்கத் தக்க செயலில் இறங்குகின்றார்.
வித்து சமுதாயத்தின் குற்றமே தான்.

பழமைபேசி said...

சிரத்தையான இடுகை போலிருக்கு... ஆனா என்னோட ரெண்டு பைசா....

வலியவன் எளியவனை வதைப்பதில் இருந்து தன்னைத் தக்க வைக்கப் பிறக்கிறது தீவிரவாதம்!

Thekkikattan|தெகா said...

//மங்களூர் சிவா said...

நிறைய யோசிக்க வைக்கும் பதிவு...//

அப்படியா, சிவா? எஞ்சாய்!

Thekkikattan|தெகா said...

வாங்க கோமதியம்மா,

ரொம்பப் பொறுமையா இவ்வளவு பெரிய பின்னூட்டத்தின் மூலமா, வாழ்க்கைக்கு அவசியமான நிறைய விசயங்களை எடுத்து முன் வைச்சிருக்கீங்க.

இது போல பழைய பதிவுகள் படிக்கக் கிடைத்தாலும், தேதியையோ/வருடங்களையோ கணக்கில் கொள்ளாமல் மனதில் படும் எண்ணங்களை பதிந்து செல்லுங்கள்...

//கல்வி,தொழில்,பொருளாதாரம் ஒத்த படி அமையாத காரணத்தால் ஒரு வேகத்தில் எண்ணிறந்தோர் வெறுக்கத் தக்க செயலில் இறங்குகின்றார்.
வித்து சமுதாயத்தின் குற்றமே தான்.//


ம்ம்ம் அங்கிருந்துதான் ஏனைய அனைத்து 'வாதங்களும்' பிறக்கின்றன என்று நினைக்கிறேன்... எப்பொழுது அந்த ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் நீங்கி ஒற்றுமையாக வாழும் காலம் கிட்டுமோ!!?

தங்களின் பின்னூட்டத்திற்கு, நன்றி!

Related Posts with Thumbnails