Monday, June 16, 2008

DasaAvataram : நானும் பார்த்திட்டேன்!!

தசாவதாரம் பார்க்க முடிஞ்சதே ஒரு chaotic eventஅ ஆகிப் போச்சு எங்க தரப்பில. மதியம் இரண்டு மணிக்கு அரக்க பறக்க கிளம்பி எப்பொழுதும் அட்லாண்டாவில் படமிடும் இடம்தானே என்று காலாக்சி சினிமா திரையரங்கிற்கு அத்தனை ட்ராஃபிக் லைட்டிலும் நிப்பாட்டி, நிப்பாட்டி ஒரு வழியா 2.45க்கு அரங்கத்தின் வாசலுக்கு வந்தடைந்தோம்.

முகப்பில் நம்மூர் இளைஞர்கள் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். இங்குதானே தசாவதாரம் ஓடுகிறது என்று கேட்டேன், அவர்களும் ஆமாமென்றார்கள். சரின்னு ஒரே எக்சைட்மெண்ட்ல கண்ணெல்லாம் இருட்டிப் போயி மூணு டிக்கெட்டை வங்கினத்துக்கபுறம்தான், திரும்பிப் பார்த்தேன், என்னாடாது மூணு மணி காட்சிக்கு அதுவும் ஞாயிற்றுக் கிழமை இப்படி காத்து வாங்குதேன்னு நினைச்சிக்கிட்டே திறந்து கிடந்த கதவின் வழியே பார்த்தா, பார்த்தா... "லோக நாயகனே, னே னேன்னு" பாட்டு ஓடிட்டு இருந்தது என் காதிற்கு தமிழில் உலக நாயகனேன்னு கேக்குது, என் மனைவி காதிற்கு லோகமா கேட்டுருக்கு என்னங்க இது தெலுங்கு வெர்சனால்லை இருக்கும் போலன்னு கேட்டு என் வயிற்றில் புளியைக் கரைத்தால்.

போச்சுடான்னு நானும் பக்கத்தில இருந்த மொத்த 12 பேரையும் பார்த்து இது தெலுங்கு வெர்சனான்னு கேட்கப் போக எல்லாம் ஆமான்னு சொல்ல, பிடிச்சேன் ஓட்டம் பீச்ட்ரி 8 சினிமா அரங்கத்திற்கு கொஞ்சம் அரைகுறையானா ட்ரைவிங் முகவரியோட அதாவது குத்து மதிப்பா. மணி 2.55க்கு ஓடி சரியா 3.05க்கு எப்படியோ தடவிப் பிடிச்சிட்டேன் மூணு மைல் தொலைவில் உள்ள சரியான திரையரங்கத்தை.

டிக்கெட் ஈசியாத்தான் கிடைச்சிச்சி. ஒரே நேரத்தில இரண்டு திரையரங்கத்தில் போட்டார்கள் ஒரே ப்ரெஜெக்டரிலிருந்துன்னு நினைக்கிறேன். அதுனாலே, நல்ல ஃப்ரீயா உட்கார்ந்து பார்த்தோம்.

சரி, இப்ப படத்தைப் பத்தி நான் நினைக்கிறதை சொல்லிடுறேன். கொடுத்த காசுக்கு கமல் அசராம தன்னோட சிரத்தையான உழைப்பின் மூலமா நிறுபிச்சிருக்கார், ஃப்ரேமிர்க்கு ஃப்ரேம். அப்படியே எந்த 'குத்'தையும் யோசிக்காம நேரடியா உள்வாங்கி பார்த்தா படத்தோட நீளம் தெரியாம வழுக்கிட்டு போகுமென்பது என்னோட வந்தவர்களையும் சேர்ந்து நாங்க உணர்ந்தது.

படத்தில இருக்கிற அரசியல் விசயங்களை அலசி காயப் போடணுமின்னா, இந்தப் படத்தில வார ஒவ்வொரு முக்கியமான கேரக்டர்களும் என்னா பேசுது அதற்கு தகுந்த மாதிரியான உடலைசவுகள், பின்னணி காட்சிகள்னு ஏராளமான விசயத்தை இன்னொரு இரண்டு, மூன்று முறைகள் பார்த்துத்தான், ஸ்கிரிப்டையே முழுசா வாங்கி வாசிச்சிட்டுத்தான் சொல்ல முடியுமின்னு நான் நினைக்கிறேன். நிறைய பேரு கதைக் களத்தைப் பற்றியும் தனிப்பட்ட கமலின் 10 காரக்டர்களை பற்றியும் தொடர்ந்து எழுதி தள்ளிட்டாங்க.

இந்த நிலையில் எல்லாத்தையும் படிச்சிட்டுத்தான் படம் பார்க்கப் போனேன். அப்படியிருந்தும் படம் நல்ல விறுவிறுப்பா நகர்த்துச்சு. குறிப்பா எனக்கு அந்த பூவராகவன், பால்ராம் நாயுடு கேரக்டர்கள் ரொம்பவே பிடிச்சிருந்தது. ஃப்ளெச்சர் கேரக்டரை வந்து "தி சின் சிட்டி"யில வந்த மொட்டைத் தலை கேரக்ட்ரை வைச்சி தலையை செதுக்கின மாதிரி தெரியுது. வெள்ளைக் கார துரைங்க தலைன்னா பெரிசா இருக்கணுமின்னு சொல்லிச் சொல்லி செஞ்ச மாதிரி இருக்கு.

அது சரி 12ஆம் நூற்றாண்ட்ல நடந்ததா காமிச்சி அது ஏன் வைஷ்ணவ ஆட்களை கொக்கிப் போட்டு தூக்குறத காமிச்சவங்க ஏன் சைவர்களை நடு ரோட்டில நிறுத்தி கழுவில ஏற்றினது, முழியைப் பிடிங்கினது மாதிரியெல்லாம் (இன்னொரு ஃப்ரேமில) காமிக்காம இந்த குறிப்பிட்ட காலக் கட்டதில இருந்து மட்டும் ஆரம்பிச்சிருக்குன்னு இயற்கையா மனசில ஒரு கேள்வியா தொக்கி நின்னுச்சு. நமக்கு இதில இருக்கிற அரசியல் எல்லாம் புரியாதுங்கிறதை நினைக்கும் பொழுது யப்பாடா ரொம்ப நல்லாதாப் போச்சுன்னு தோணுது. நான் எடுத்துக்கிறேன், எப்படியோ மனுசங்களுக்கு தேவை சண்டை போட்டுக்கிட்டு வயிற்றுப் பிழைப்ப அது மூலமா ஓட்டணும் அப்படின்னு.

ஆக மொத்தத்தில பார்க்க வேண்டிய படம்.

Sunday, June 15, 2008

The Happening : இது எங்களுக்குத் தேவையா?

சும்மா இருக்க முடியாம யூட்யுப்ப புடிச்சி நோண்டப் போக, வந்து மாட்டினது நம்மூரு இயக்குனரான (இப்படிச் சொல்லிக்கலாமில்ல) நைட் சியமாலன் ஹாலிவுட்டில் இயக்கிய தனது ஆறாவது படமான "த ஹாப்பனிங்"வோட ப்ரீவியூ. சரி, பார்த்து வைப்போமேன்னு அங்கே கிடைச்ச ரெண்டு, மூணு ப்ரீவியூவை பார்த்தேன், கொஞ்சம் ஆர்வம் வந்துச்சு மரம், மட்டை, செடி, கொடி எல்லாம் அசையிரதை பார்த்தும், மக்கள் ஆ'ன்னு வாய திறந்த படியே எப்பொழுதும் போல மேலே பார்த்துக்கிட்டு இருக்கிற வைச்சிம் - முடிவு பண்ணிட்டேன் தியேட்டருக்கு போயி பார்க்கிறதுன்னு.


இன்னொரு காரணமுமிருக்கு ஏன் இந்தப் படத்தை நான் திரையரங்கத்திற்கு சென்று பார்க்கணுமின்னு நினைக்க, அவர் எடுத்த The Lady In The Water, The Villager என்ற படங்கள் சொல்லிக்கிற மாதிரி ஒரு கிலியையும் பார்க்கிறவங்களுக்கு கொடுக்கலை. இப்பத்தான் நான் தி லேடி இன் த வாட்டர் டிவிடியில போட்டுப் பார்த்தேன், ரொம்ப அயர்ச்சியா இருந்துச்சு. கதை நகர்த்தும் விதம் நல்லா இருந்தாலும், அந்த திக், திக் குழந்தை தனமா இருக்கு.

சரி, இப்ப உள்ள தி ஹாப்பனிங்கு வருவோம். நியுயார்க் டைம்ஸ் தினசரி, வார்னிங் பெல் அடிச்சிருந்திச்சு மீறி நம்மூரு பாசத்தில மூணு பேருக்கு $28.50 கொடுத்து உள்ளே போனோமிங்க, படம் ஆரம்பிச்ச வேகம் அட்ரீனலை கணக்கில்லாம பம்ப் பண்ணவிட்டு ரொம்ப எதிர்பார்ப்போட நிமிர்ந்து உட்கார தவறவிடலை. ஆனா, போகப் போக நம்ம நைட் சியமாலன் குழந்தைகளுக்கு பெட் டைம் கதை படிக்கிற மாதிரி மக்களை விட்டே பேசிக்க வைச்சிட்டார் வந்த கடைசி மூன்று படங்களிலும் நடந்த மாதிரியே :(.

ஒரு வரிக் கதை: இந்த மரம், செடி, கொடிகளெல்லாம் நம்ம அடிக்கிற அட்டூழியத்திற்கு பதிலடி கொடுக்கிற மாதிரி ஏதோ நம்ம நரம்பு மண்டலத்தை ஸ்தம்பிக்க செய்ற மாதிரி ஓர் நச்சை வெளிப்படுத்தி சுவாசிக்கிறவங்களை தற்கொலை பண்ணிக்க தூண்டுது(குறிப்பிட்ட ஏரியாக்களில்).

இது வரை வந்த அவரோட படங்களில் இரத்தத்தை பார்த்திருக்க முடியாது, ஆனா இந்தப் படத்திலே இதுதானே மக்கா வேணுங்கிற கனக்கா அவரோட கற்பனையை முடிக்கி விட்டு எப்படியெல்லாம் தற்கொலை பண்ணிக்கலாமிங்கிற காட்சியமைப்புகள் ஏராளமா வருது. வரும் வழியெல்லாம் என்னோட படம் பார்த்தவர்கள் ஒரு படம் பார்த்த எபஃக்டே இல்லையேன்னு புலம்பல்.

மொத்தத்தில சுற்றுப்புரச் சூழல் சார்ந்து நைட் சியமாலன் பக்கமிருந்தும் ஒரு படமின்னு வைச்சிக்கலாம். ஒரு காட்சி பின்னணியில் அந்த அணு உலைகள் புகையை கக்கிக் கொண்டிருக்க அதே ஃப்ரேமில் ஹாட்டாகை நேசிக்கும் ஒருவர் தன்னோட தாவர தோட்டத்தில் செடிகளுடன் பேசும் காட்சியமைப்பினைக் கொண்டு முழுக்க, முழுக்க இது அந்த இயற்கை சார் விழிப்புணர்வு சார்ந்து எடுக்கப்பட்ட படமென்பது விளங்கியது.

Happy Feet (சந்தோஷக் குதிப்பு) தான் நான் கடைசியா திரையரங்கத்திற்கு சென்று பார்த்த கடைசிப் படம். அதுவும் ஒரு இயற்கைசார் விழிப்புணர்வேற்று படம்தான். அதுக்குகடுத்து இதுதான், அயர்ன் மேன் பார்க்கணுமின்னு நினைச்சிட்டு இருந்த என்னய இப்படி வலியப் போயி எலி பொறிக்குள்ள மாட்டின எலி மாதிரி 56 நிமிஷத்தில நானே மாட்டி வெளி வந்தக் கனக்காத்தான் இருக்கு இந்த படம் பார்க்கப் போயி வந்ததும்.

Thursday, May 08, 2008

அமெரிக்கா வாழ் இந்தியர்களின் ஓட்டு யாருக்கு?

இந்தப் பதிவை நான் எப்பொழுதோ போட்டு வைத்திருக்க வேண்டியது, சரி எதுக்கு தேவையில்லாத வம்பு என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இங்கு சமீபத்தில் தோன்றிய சில பதிவுகள் என்னோட எண்ணங்களை பதிந்துதான் ஆக வேண்டுமென்ற சூழலுக்கு இட்டுச் சென்றதால் இதோ இங்கு.

நடக்கவிருக்கிற அமெரிக்க ஜனாதிபதி பொதுத் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது எனபதனைப் பொருட்டு ஏற்கெனவே இங்கு ஒரு பதிவு பதியப் பட்டிருக்கிறது எனது அவதானிப்பின் பொருட்டு. அங்கு நான் குறிப்பிட்டபடியே தேர்தல் கலத்தில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் இருவருமே இரு வேறு தளங்களில் சொத்தையாகிப் போனதால், இந்தத் தேர்தலில் மிக எளிமையாக வெற்றி வாகை சூடியிருக்க வேண்டிய ஜனநாயக் கட்சி குடியரசு கட்சிக்கு அவ் வெற்றியை கொடுத்து விட்டு விலகிக் கொள்வதனைப் போன்று இருக்கிறது என்று எழுதியிருந்தேன் இப்படி "ஓர் கருப்பினத்தவருக்கோ, பெண் ஜனாதிபதிக்கோ அமெரிக்கா ரெடியா?."

அதில் இன்னமும் எந்த மாற்றமுமில்லை. இப்பொழுது, இந்தப் பதிவில் நான் பேச வந்த விசயம். ஹில்லரி, பெருவாரியாக பெரிய மாநிலங்களில் முதன்மைத் தேர்தலில் வெற்றியடைந்து வருவதும், அவரை எதிர்த்து நிற்கும் ஓபாமா சிறு மாநிலங்களில் கறுப்பர்கள் மைனாரிடி மிகுந்து இருக்கக் கூடிய மாநிலங்களில் வென்று வருவதும் தெரிந்ததே.

இந்நிலையில் அண்மையில் நடந்த இண்டியானா மற்றும் வட கரோலினா முதன்மைத் தேர்தலில் ஆளுக்கொரு இடமாக வென்று மீண்டும் தொடர் ஓட்டத்தை தொடர்கிறார்கள். இதில் இன்னும் 6 மாநிலங்களில் மிச்சமிருக்கிற 217 டெலிகேட்டுகளின் மூலமாக யாரையும் அரிதியிட்டு சொல்லி விட முடியாத வண்ணம் அத் தேர்தலும் அமையவிருப்பதால், அக் கட்சியிலிருக்கிற மூத்த மற்றும் சூப்பர் டெலிகேட்ஸ்களான 265 பேர் யாரைச் சுட்டிக் காமிக்கிறார்கள் என்பதனைப் பொருட்டும் யார் ஜனாதிபதி தேர்தலுக்கு கடைசியாக தேர்வாவர்கள் என்பது அமையப் போகிறது.

இது அப்படி இருக்க, முன்னமே ஹில்லரியை நம் பதிவர்கள் உள்பட அக்கட்சியில் இருக்கிற சிலரும் ஓட்டத்தை நிறுத்தச் சொல்லி வற்புருத்துகிறார்கள் ;-). இப்ப வாரேன் விசயத்துக்கு. ஆசை ஆசையா 500 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டுக் குத்து பண்ணி நாங்கதாண்டா முதல்லேன்னு கொலம்பஸ்லிருந்து ஆரம்பித்து இன்னிக்கு வரைக்கும் 75 சதவீதம் வெள்ளையர்களே அமெரிக்காவில் இருக்கிறார்கள் எனும் பட்சத்தில், அதுக்குள்ளும் அவர்களிடத்தே ஆட்களே இல்லைங்கிற மாதிரி அந்த நாட்டை ஆள ஒரு அண்மைய இமிக்ரெண்டோட பிள்ளையை நாடாள அமர்த்திடுவாங்களா, என்ன? தெரியாமத்தான் கேக்கிறேன்.

சரி, இப்ப நம்மூர் ஆட்களைக் கொண்டே கடைசியா ஓட்டும் போடும் இடத்தில் எப்படி ஓபாமாவிற்கு ஓட்டுப் பொட்டியில் என்ன கிடைக்குமென்று பார்ப்போம். நாமல்லாம் நம்மூர்லையே வர்ணம் பார்த்து வளர்ந்தவங்க, அப்படி இருக்கும் பொழுது இன்னமும் வெள்ளைக் காரங்கன்னாலே "துரை" அப்படின்னுதான் விளித்து பார்க்கிற மக்கள் மிகுந்துருக்கிற ஒரு சமூகத்தில இருந்து வந்துட்டு (தோல் சிகப்பா இருக்கிறவங்கத்தான் எல்லாத்திலும் சிறப்புன்னு - நம்மூர் விளம்பரங்களும் இன்னமும் தூக்கிப் பிடிச்சி வியாபாரம் பண்ணிட்டு இருக்கிற சூழலில் வந்த நாம) போயிம் போயிம் ஒரு கறுப்பருக்கு நாம ஓட்டு போடுவோமா ;-)? மனச தொட்டுச் சொல்லுங்க. எத்தனை பேரு போடுவீங்க?

அதுக்கெல்லாம் மேலே நாம வேற ரொம்ப கன்சர்வேடிவ் :). இந்த ஓரினச் சேர்க்கை திருமண அங்கீகரிப்பு, கருக்கலைப்பிற்கு எதிர்ப்பு, உலகம் தழுவிய தீவிர வாதிகள் அடக்கு முறைக்கு நம்மோட மன நிலைன்னு நிறைய விசயங்கல் உள்ளே வரும், இல்லையா ஓட்டு போடுறதுக்கு முன்னாடி. அப்படி இருக்கும் பொழுது உங்க ஓட்டு ஜனநாயகக் கட்சிக்கா இல்ல குடியரசுக் கட்சிக்கா?

நான் பேசிச் தெரிஞ்சிக்கிட்ட வரை இந்த புஷுன் ஈராக் போரை இங்க வாழ்ற இந்தியர்கள் நிறைய பேர் வரவேற்கிறாங்க! அதுக்கு பின்னணியா நியாயப் படுத்தி சில காரணங்களையும் சொல்றாங்க. எல்லாத்துக்கும் மேலே குடியரசுக் கட்சி ஆளுங்க அமெரிக்கர்களின் பொது நலத்தைக் கூட யோசிக்காமே தன்னோட தனிப்பட்ட லாபத்திற்காக நம்மூருக்கு வேலைகளை கண்ண மூடிக்கிட்டு அனுப்புறதும் பிடிச்சிருக்கு இங்க வாழ்ற இந்தியர்களுக்கு.

இது போன்ற காரணங்களுக்கும் மேலே குறிப்பிட்ட ஜனநாயகக் கட்சி உவப்புகளுக்கும் நம்மாலுங்க குத்தப் போறது குடியரசுக் கட்சி ஆளுங்களுத்தான் ஓட்டை.

ஏன், குடியரசுக் கட்சியே உள் நோக்கத்தோடதான் ஓபாமைவை ச்சியர் லீடீங் பண்ணி இந்த ஓட்டத்தில் ஓட வைச்சிட்டு இருக்குது, அவிங்க ரொம்ப புத்திசாலிங்க! ஹில்லரியை முதன்மையில ஒழிச்சிட்டா, இறுதித் தேர்தல்ல ஓபாமை ஒண்ணுமில்லாம பண்றதுக்கு ரொம்ப நேரம் எடுத்துக்காதுன்னு கணிச்சி வைச்சிருக்காங்க.

அது எல்லாருக்கும் ஜனநாயக கட்சியில இருக்கிறவங்களுக்கு புரிஞ்சிருக்கான்னு தெரியலை, ஆனா அப்படித்தான் தெரியுது எனக்கு. அது அப்படி இருக்க இந்த கறுப்பினத்தவர் வேற ஓபாமாவை தன் இனத்துக்கு வந்த சேவியர் கணக்கா மற்ற வெள்ளையர்களை வெறுப்பேற்றும் வண்ணம் தலையில் தூக்கி வைத்து ஆடுவதும், ட்டிவிக்கு முன்னால் அவர் தோன்றும் பொழுது கையை மேலே தூக்கி ஆடுவதும் கண்டிப்பாக வெள்ளையர்களின் பார்வையை ஈர்க்காமல் விடாது. அதற்கும் சேர்த்தே சாதா மெஜாரிடியும்(வெள்ளை) ஓட்டுக் களத்தில் தங்களது எண்ணங்களை பதிந்து செல்லுமென்பது எனது கருத்து.

Sunday, April 06, 2008

வெண்ணை திரண்டு வந்துச்சு இப்ப ஒடைக்கணுமா? : ஒகேனக்கல்.

இரண்டு வாரங்களாவே தமிழ்மணத்தை உத்து உத்து பார்த்துக்கிட்டே வாரேன் எங்கட நிறைய ஒக்கேனக்கல் சார்ந்த பதிவுகளை உணர்வுப் பூர்வமாக காணோமேன்னு. இங்க மக்கள் நினைச்சிருப்பாங்க போல நாமும் வெறும் புரட்சி கருத்துக்களா எழுதி எதுக்கு வீணா வன்முறையைத் தூண்டி விடுறோமின்னு சும்மா இருந்திருக்கலாம் போல. எப்படியோ, இப்ப திடீர்னு திரைப்படத் துறையினர் நடத்தின உண்ணாவிரதப் போரட்டத்தினை தொடர்ந்து அங்கு சில பேர் பேசிய பேச்சுக்கள் அனல் பறக்க இங்கும் எங்கும் சூடு பற்றிக் கொண்டது.

அதிலும் குறிப்பாக இந்த முறை கழுவுற மீன்ல நழுவுற மீனாக தப்பிக்க வாய்ப்பே இல்லாதபடிக்கு சூழ்நிலையும் அமைந்து போக சில வார்த்தைகளை அள்ளி தெளித்தே ஆகவேணுமிங்கிற கட்டாயத்தில வார்த்தைகளை உதிர்க்க வேண்டியதாப் போச்சு, சில பிரபலங்களுக்கு.

என்னுடைய எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது என்றால் இந்த கலைக் கூத்தாடிகள் என்னாத்தை பெருசாக பேசிடப் போறாங்க, இன்னமும் பெரிய அளவில் வியாபாரம் அண்டைய மாநிலங்களுடன் பண்ணிக் கொண்டிருக்கும் பொழுதென்றே நினைத்திருந்தேன். ஆனால், நாட்டின் ஒருமை பாட்டில் அதீத நம்பிக்கையும், பொறுப்பும் கொண்ட சில கர்நாடாக சமூக அமைப்புகள் தொன்று தொட்டு அடித்து வரும் அழிச்சாட்டியங்கள் எல்லோர் மனத்திலும் கசப்புணர்வையே வளர்த்து வந்திருக்கிறது என்பதனை இந்த திரைப்படத் துறையினரின் பேச்சுக்களை கேட்கும் பொழுது அறிய முடிந்தது.

அதிலும் குறிப்பாக நடிகர் சத்யராஜ் மற்றும் கவிஞர் வைரமுத்துவின் பேச்சுக்கள் குறிப்பிடும் படியாக அமைந்திருந்தது. சத்யராஜ் தன்னுடைய நீண்ட நாள் மனக் குமுறலை இங்கு கொட்டித் தீர்த்துக் கொண்டதாகவே கருதுகிறேன். அவரின் மீது எழுந்த குற்றச் சாட்டுகள்: முகம் சுழிக்க வைக்கக் கூடிய வகையில் அமைந்த வார்த்தைகள், மற்றும் உடற் செயற்பாடுகள் (body gestures).

மேடையில் அமர்ந்திருக்கும் ஒரு சில மணி நேரங்கள் அவையடக்கத்துடனும், ஏனைய ஜெண்ட்ல்மென்களுக்கேயான அடக்க நடிப்புகளுக்கிடையே தானும் அப்படியே சற்று அமர்ந்து இளைப்பாறிவிட்டு செல்வதில் பெரிதாக ஒன்றும் கஷ்டமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை அதிலும் நடிப்பையே தொழிலாக கொண்டவர்களுக்கு, இல்லையா? அப்படியாக இருக்கையில் எதற்காக அதிலிருந்து நழுவி இப்படி தன்னை ஒரு தரம் கெட்டவனாக ஆக்கிக் கொள்ள ஒருவர் முன் வர வேண்டும் (அதற்கு நீங்கள் என்ன பெயர் வைத்துக் கொண்டாலும் சரி...).

குறைந்த பட்சம் இவ்வளவு தொலைவு இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினை வளர்ந்து அதில் எந்த விதமான மத்திய அரசின் குறுக்கீடுகளுமில்லாமல் ஏதோ இரண்டு வெவ்வேறு நாடுகளுக்கிடையான பிரச்சினை போன்று பாவித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த பக்கமிருந்து ஒரு சிலரேனும் தனக்கும் அது போன்ற மான உணர்வு இருக்கிறது என்பதனை மனதில் பட்டதை பட்டதாக (அதிலும் உண்மையில்லாமலில்லை) கூறுவதில் என்ன தவறு இருக்கிறது.

ஆனால், இதிலிருக்கும் உள் அரசியல்தான் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. காவேரி பிரச்சினையில்தான் நாம் ஏமாந்து விட்டோம், இதில் ஏமாறத் தயாராக இல்லையென்று கூறிய தலைமையிடம், நன்றாக சூடேறி எல்லா கட்சிகளும், மக்களும் ஓரளவிற்கு ஒன்றுதிரண்டு விழிப்புணர்வுற்று ஒரே குடையின் கீழ் இருக்கும் சமயத்தில் திடீரென்று தலைமையிடம் கர்நாடாக தேர்தல் முடியும் வரை முறுக்கேறிய ஒரு விசயத்தை தள்ளிப் போட்டுவிட்டது. சிறிது ஏமாற்றம்தான்.

எனக்கென்னான்னா, ஒரு தேசத்தை மதிக்கிற ஒரு மூத்த அரசியல் தலைவரா கலைஞர் இப்படி வன்முறையின் ஊடாக ஒன்றும் சாதித்து விட முடியாது என்பதனையும், நாட்டின் ஒருமை பாட்டையும் கருத்தில் கொண்டு இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க வேண்டுமென்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படியே இருக்கட்டும், இருந்தாலும் இந்த உணர்வை தூண்டி அரசியல் விளையாட்டாக ஆக்கிவிட்டு பிறகு எந்த ஒரு தீர்வும் இல்லாமல் ஒரு காவேரிப் பிரச்சினை போலவே பின்னாளில் தொங்கலில் விட்டால், பூனை வெளியே வரப் போவது நிச்சயம்.

நமது எதிர் பார்ப்பை பொய்க்க வைக்காமல் இருந்தால் சரித்தான். ஆனால், இது போன்ற பிரச்சினைகளில் உணர்வை தடவி, உசிப்பு விட்டுவிட்டு பிறகு அதனை வைத்து அரசியல் நடத்தும் சாணக்கியத் தனமிருந்தால், பின்பொரு நாளில் நிஜமாகவே (இப்பவே என்ன எல்லா மாநிலங்களும் தெரிந்து கொண்டுதானே அந்த உணர்வு இல்லையென்று) தேவைப் படும் பொழுது, மக்கள் நினைக்கலாம் "மண் குதிரையை நம்பி ஆற்றுக்குள் இறங்கிய"தைப் போன்றுன்னு. அது மாதிரி கழகத்திற்கு ஒரு களங்கம் ஏற்படா வண்ணமும், இந்த கடைசி வாய்ப்பையும் நழுவ விடாமலும், கழகத்தின் மீது இருக்கும் களங்கத்தை துடைத்தெறிவது போன்றும், கர்நாடாக தேர்தலுக்குப் பிறகு தமிழக மக்களுக்காக இந்த குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்க கழகம் கடமை பட்டிருக்கிறது.

இல்லை ஒரே அடியாக தூங்கப் போட்டு விட்டு அரசியல் நடத்த மட்டுமே காவேரியும், ஒகேனக்கல் பிரச்சினையும் தோண்டி எடுக்கப் படுமானால், மக்கள் என்னைக்குமே இந்த நிகழ்வை மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்பது நிதர்சனம்.

Thursday, March 20, 2008

ப்ரகாஷ்ராஜ், வெள்ளித் திரை - செய்தியாளர்கள் சந்திப்பு!

நேற்று நான் ட்யூப்தமிழ்.காம் தளத்தில் ப்ரகாஷ்ராஜின் வெள்ளித் திரை படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பை ஒரு 30 நிமிடங்கள் ஓடக் கூடிய படக் காட்சியுடன் காண நேர்ந்தது.

ஏற்கெனவே, நான் ப்ரகாஷ்ராஜின் "சொல்லாததும் உண்மை" சமீபத்தில்தான் படித்ததிலிருந்து அவரைப் பற்றியான எனது பார்வையை இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று எண்ணிக் கொண்டுள்ள நிலையில் இந்த 30 நிமிட படக் காட்சி நிச்சயமாக அவரைப் பற்றி எழுதியே ஆக வேண்டுமென்ற ஒரு நிலையில் என்னை கட்டிப் போட்டு விட்டது. இருந்தாலும், அவரின் "சொல்லாததும் உண்மை"யைப் பற்றி பிரிதொரு சமயத்தில் விளக்கமாக எழுதலாமென்று இருக்கிறேன்.

இப்பொழுது இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் ப்ரகாஷ்ராஜ் எதனை நிறுவ முயல்கிறார் என்பதனைப் பார்ப்போமா. ப்ரகாஷின் தைரியம் நிச்சயமாக பாரட்டப்பட வேண்டிய ஒன்று. அவரின் தைரியத்திற்கு அவர் வைத்திருக்கும் மாற்றுப் பெயர் - நம்பிக்கை.

இன்றைய காலக் கட்டத்தில் தமிழக சினுமா வெறும் போட்ட பணத்தை எடுக்க வேண்டுமென்ற உத்தியில் இயங்கும் ஒரு சிறு ஃபார்மிலாவைக் கொண்டே இயங்குமொரு பணச் சந்தை. மீறிக் கேட்டால் மக்களின் ரசனை அப்படி இருக்கும் பட்சத்தில் என்ன டிமாண்ட் இருக்கிறதோ அதனைத் தான் எங்களால் கொடுக்க முடியுமென்ற பொறுப்பற்ற பேச்சுக்களுக்கு கிடையே இது போன்ற மனிதர்களும் அங்கே இருந்து எதிர் நீச்சல் போட தயாராகி வருவது ஒரு ஆரோக்கியமான சூழல் திரண்டு வருவதை காட்டுகிறது.

நீங்கள் அனைவரும் இந்த விடியோ லிங்கை க்ளிக்கித்துப் பாருங்கள், அந்த சுட்டி வேலை பார்க்கலைன்னா கோலிவுட்டுடெ.காம் போங்க, உங்களின் நிமிடங்கள் ஒரு நல்ல சிந்தனையாளனுடன் உரையாடிவிட்டு வந்த திருப்தியில் அமையும். அவ்வளவு ஆழமான பேச்சு இது வரைக்கும் இந்த டின்சல் உலகில் இப்படி தீர்க்கமாக தன் சார்ந்து இருக்கும் துறையையே கேள்விக்கு உள்ளாக்கி அதன் மூலம் தன்னுடைய தொழில் தர்மம் காத்து, நல்ல விசயங்களை வெளிக் கொணர வேண்டுமென்று ஒரு சாதாரண பார்வையாளன் நிலையிலிருந்து பேசிய கலைஞனை நானறியேன்.

இன்றையச் சூழலில் நடிக, நடிகை என்றாலே கோழிமுட்டை போன்ற பரட்டை தலைக் கேசத்துடனும், அதீத மேற்கத்திய உடையலங்காரத்துடனும், இன்னொரு கிரகத்திலிருந்து இறங்கிய வேகத்தில் திக்தித், திணறி பேசும் மொழி, காலியான மொட்டை மாடியுடனும் இருக்கும் பல கலைஞர்களுக்கிடையில் இது போன்று அலட்டலே இல்லாத புத்திசாலிகளைப் பார்க்கும் பொழுது, நம் தமிழ் சினுமா உலகத்தில் அதனுள் வாழும் பல அரைகுறைகளையும் சிந்திக்க வைக்கும் சூழலை நோக்கி நகர வைக்கச் செய்கிறதோ என்ற நம்பிக்கை துளிர்க்கிறது.

எல்லாம் சரி, நான் இன்னமும் இந்த வெள்ளித் திரை படம் பார்க்கவில்லை, இந்த செய்தியாளர்கள் எதற்காக இப்படி வியர்வை சிந்த நோண்டி, நொங்கெடுத்து ப்ரகாஷ்ராஜிடம் சண்டை பிடிக்கிறார்கள் என்று யாருக்காவது விளங்கினால் எனக்கு அந்த விடியோவை பார்த்துவிட்டு பின்னூட்டங்களில் சொல்லி விட்டு போங்கள்.

வேறு எந்த படத்திற்காவது யாரவது இது போன்ற செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி இந்தப் படத்தின் மூலமாக நீங்கள் சொல்ல வந்த கருத்து என்ன இந்த சமூகத்திற்குன்னு கேள்வி கேப்பாங்களா? இல்லை அது போன்று நடத்தத்தான் தைரியமிருக்கா? ஏதோ, இதன் மூலம் முன்னோடியாக ஒரு நல்ல செயலை ப்ரகாஷ்ராஜ் அறிமுகப் படுத்தி வைச்ச மாதிரி இருக்கு.

ஆனா, அந்த கூட்டத்திற்கு வந்து ஆர்வத்துடன் கேள்விகளைக் கேட்ட செய்தியாளர்களை பார்த்தால் யாரோ "என்வலாப்" (பண முடிப்பு - ப்ரகாஷ்ராஜே கொடுத்திருக்க மறுத்திருக்கும் பட்சத்தில்) கொடுத்து அனுப்பி பொறுப்பாக பார்த்துக்கச் சொன்ன மாதிரி எனக்குத் தோணச் செய்தது ;)). அந்த யாரோக்கள் எல்லாம் ப்ரகாஷ்ராஜ் இப்படி நமது முகத்திரையை அகற்றிக் காமிக்க எத்தனிக்கிறானே என்றும் செய்யக் கூடுமோ...

Thursday, February 14, 2008

Valentine's Day - ஏன் நடிக்கணும்?

இந்தக் கட்டுரை நம்மூரை நினைவில் கொண்டே எழுதப் பட்டது. இதனில் உண்மையாக தன் நேசிக்கும் ஒருவரை மணம் முடிக்க எண்ணி வியர்வை சிந்தும் நல்ல உள்ளங்கள் இந்தக் கட்டுரைச் சாடலிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். ஏனையதுகளுக்கு இந்தக் கட்டுரை ஒரு அவசியமான வாசிப்பாக அமைய வாய்ப்புண்டு.

தினகரனில் நான் படித்த விழுப்புரம் அருகே காதலன் வீட்டு முன் அமர்ந்து விடிய விடிய காதலி தர்ணா போன்ற போராட்டக் காதல்களுக்கு முன்னாலும், சில சமயத்தில் வீட்டு மிரட்டல்களையும் மீறி திருமணம் முடித்துக் கொண்ட நபர்களைத் தேடிக் கண்டுபிடித்து பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் ஹானர் கொலை (Honor Killing) போன்றே இங்கும் அது போலவே கண்டுபிடித்து உயிரோடு எரிக்கவும் துணியும் நிலையிலும், நன்றாக மூன்று, நான்கு வருடங்கள் ஒளிந்து மறைந்து கடலை வறுத்து, ஸ்பரிசம் உணர்ந்து திடீரென்று ஒரு நாள் காதலிக்கும் ஆண் மகனோ அல்லது அந்தப் பெண்ணோ நெஞ்சில் மாஞ்சா இல்லாமல் உருவிக் கொண்டு போவதைக் கொண்டும், ஒரு படி மேலேச் சென்று தன்னை விரும்பியவனையே நம்பிச் செல்லும் ஒரு சில பெண்களை வசதியாக ஒரு இரண்டு மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி விட்டு தூக்கியெறிஞ்சிச் செல்லும் அவல நிலைக்கு முன்னாலும், நம்மூர் "வாலண்டைன்'ஸ் டே"ஒரு ஏமாற்று நாளாகத்தான் எனக்குப் படுகிறது.

இன்னும் போக வேண்டிய தொலைவை எங்கோ வைத்துக் கொண்டு எதற்காக இந்தப் பகட்டு, நாங்களும் உலகளவில் வளர்ந்து விட்டோமென்று தொலைகாட்சிகளில் நடித்துக் காட்டிக் கொள்வதற்காகவா இந்த நாள்? அல்லது வியாபாரத் தந்திரம் தெரிந்த பெரிசுகள் வைக்கும் விளக்கின் கீழ் விழும் விட்டில் பூச்சிகளாக இருப்பதற்காகவா? எதற்காக நீங்கலெல்லாம் இந்த வாலண்டைன்'ஸ் டே கொண்டாடுகிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா?

ஓவ்வொரு வருடமும் இந்தத் தொலைகாட்சிகளின் பேனை பெருமாளாக்கும் தனத்தால் வெகுண்டெழுந்து எழுத வேண்டுமென்று நினைத்து நினைத்து தள்ளிப் போட்டதை இந்த வருடம் கடைசியாக எழுதலாமென்று எழுதவும் செய்தாகிவிட்டது.

எனக்கு நம்மூர் சிறுசுகள், அதாவது இந்த விடலைகள் முப்பதுக்குள் இருப்பவர்களும் இதற்குள் அடக்கம் தான். ஏனெனில் அந்த வயதிலும் இன்னமும் ஒருத்தியை காதலிப்பதாக அழைத்துக் கொண்டு திரிபவர்கள், அதற்கென நாள் நெருங்கும் பொழுது எங்க அம்மாவும், அப்பாவும் என் பிணத்தின் மீது ஏறிப் போயி அவ கழுத்தில தாலியைக் கட்டுன்னு சொல்லி மிரட்டுறாங்கன்னு சொல்லிட்டு கடைசி நிமிட்ல அப்பீட் ஆகிக்கிறது பெரும்பான்மையா நடக்குதுன்னா, இவர்களை விடலைப் பசங்க லிஸ்ட்ல சேர்க்கலாமில்லையா?

எத்தனை கலப்புத் திருமணங்கள் இந்தியாவில் தினந்தோறும் நடந்தேறுகிறது, அதிலும் இந்த ஜாதி, மத, இனத் தொடர்பான வெட்டுக் கொத்து, ஆட் கடத்தல் போன்றவைகள் இல்லாமல்? உண்மை நிலை இப்படியாக இருக்க, எதற்காக தெரிந்தே இந்த ஏமாற்றுத் தனம், அதாவது என்னுயிர் உன்னிடத்தில், உன்னுயிர் என்னிடத்தில் என்றுக் கூறி நாட்களை இந்த ஒரு உயிர்ப்பூ நிலையில் வைத்தற்கோரி தற்காலிகமாக நகர்த்தும் ஏமாற்றுத் தனம். இங்கு ஏமாற்றுத் தனம் என்றழைக்கக் காரணம் அந்த உறவில் ஈடுபட்டிருக்கும் இருவருக்குமே தெரிகிறது, இது இறுதி நிலையை அடையப் போவது கிடையாது என்று அறிந்தே இருவரும் ஒரு வரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டு நடித்தித் திரிவதற்கு வேறு என்ன பெயர் பொருத்தமாக இருக்கும்.

இதற்கு எதற்கு வெள்ளைகாரத் துரைகள் தன் காதலியினடத்தே அல்லது தன் மனைவியிடத்தே பக்குவமாக, உண்மையாகவே காட்டப் பயன் படுத்தும் ஒரு நாள் உங்கள் கைகளில் ஒரு ஏமாற்றுத் தினமாக? ஒரு பெண்ணையோ அல்லது ஒரு ஆணையோ விரும்பவதற்கு முன்னால் உன் பின்புலத்தை திரும்பிப் பார்த்துக் கொண்டாயா - எது போன்ற மக்களை உனது குடும்பம் பெற்றிருக்கிறது, அருவாக் கலாச்சாரம் கொண்டதா, மத, ஜாதி பித்து பிடித்திருக்கிறதா அல்லது உன் நலமே எங்களின் நலமென்ற பண்பாடு கொண்ட குடும்பமா?

அப்படி இல்லாதப் பட்சத்தில் உனது மனத் தைரியத்தை கேள்வி நிலைக்கு இட்டுச் சென்றாயா - எந் நிலையிலும் எல்லா பிரச்சினைகளையும் சந்திக்க தயாராகி விட்டோமா, எனது சமூக, பொருளாதார, மனப் பக்குவம் பின்னால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்கும் பொருட்டு எனது மன நிலை என்னவாகா இருக்கிறது போன்ற கேள்விகள் கேட்டறிந்திருக்கிறாயா? இது போன்ற நிலையில் ஆக்கப் பூர்வமான போராட்டத்திற்கு தயாராகமல் தன்னை அதற்கு ஒரு தகுதியானவனாக ஆக்கிக் கொள்வதற்கு முன்னர் எதற்கு இப்படி ஒருவரை ஒருவர் ஏப்ரல் ஃபூல் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

பதிவர் தஞ்சாவூரானின் பரவாக்கோட்டையில் வாலன்டைன்ஸ் டே கொண்டாட்டங்கள்! என்ற பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம் நம்மூர் காதலர்(!?)களுக்கு ரொம்பவே பொருந்தும். அந்தப் பின்னூட்டம் கீழே:

Thekkikattanதெகா said...

... //ஆனா, எதையுமே அறைகுறையாகப் புரிந்துகொண்டு பந்தா காட்டும் நமது நாட்டில்.....???//

இன்னமும் இந்தியாவில் இந்த காதல் திருமணங்கள் என்பது ஃபாண்டஸி நிலையிலயே தேக்கமுற்றுப் போனதால்தான் அதன் பொருட்டே கச்சடா திரைக்கதைகளைக் கொண்டு கதைச் சொல்லி சினிமா உலகம் காசு பார்த்துக் கொண்டுள்ளது. இந் நிலையில் இந்த மேற்கத்திய "வாலண்டைன்ஸ் டே" வியாபாரம் கூடக் கொடி கட்டிப் பறக்கலாம் அங்கே. காரணம், ஃபாண்டஸி நிலையில் எல்லாமே அழகாகத்தான் இருக்கும்...

ஆக மொத்தத்தில் இவனுங்களுக்கு (காதலிக்கிறவங்களுக்கு) உண்மையான guts இருந்தால் காதலிப்பவளையே கரம் பிடித்து பிறகு இன்று இந்த ஃபாண்டஸி நிலையில் செய்வதை தொடரட்டும் நான் ஒத்துக் கொள்கிறேன், இவனுங்க a real gutsy guys என்று. அதுவரைக்கும் இது ஒரு பேத்தல், "ஏப்ரல் ஃபூல் டே," to pacify eachother... shame on them...!

Wednesday, February 06, 2008

ஓர் கருப்பினத்தவருக்கோ, பெண் ஜனாதிபதிக்கோ அமெரிக்கா ரெடியா?

உலகம் போகிற போக்கைப் பார்த்தால் இந்த வருடத்தில் நடக்கப் போகிற அமெரிக்கா தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாக உலகம் தழுவிய முறையில் எதிர் பார்க்கப் படவேண்டியா ஒன்றாக இருப்பதனைப் போல உள்ளது.

இங்கு தொலைக்காட்சி பெட்டியைத் திறந்தாலே எப்பொழுதும் தேர்தல் கலத்தில் போட்டியிடும் நபர்களின் பேட்டியோ அல்லது முதன்மைச் சுற்று வாக்களிப்பதற்கு ஏதுவான பிரச்சாரங்களோதான் நடந்து கொண்டிருக்கிறது.

கடந்த எட்டு வருடங்களாக நம்ம தீரன் புஷுன் முகம் பார்த்து சலித்தவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு தென்றலாக தீண்டிச் செல்லவிருக்கையில், இந்த தேர்தலில் யார் வெற்றியடைப் போகிறார்கள் என்பதனைப் பொருட்டு மீண்டும் நாம் ரோலர் கோஸ்டர் ரைட் எடுக்கப் போகிறோமா இல்லை நம்ம உண்டு, நம்ம வீட்டு பொருளாதார, சுகாதார காப்பீட்டுப் பிரச்சினைன்னு கலாத்தை கடத்தப் போறமான்னு ஆர்வம் பிறீட காத்துக் கொண்டிருக்கிறார்கள், மக்கள்.



இந் நிலையில் பாருங்க ஜனநாயக கட்சியில் சொல்லிக்கிற மாதிரி ஒருத்தரும் நிக்காததாலே, நியாயமா இந்த முறை ஒரு மாறுதலுக்காகவாவது எட்டு வருட அவஸ்தையிலிருந்து தப்பித்து ஓட்டுப் போட மக்கள் ரெடியா இருந்தாலும், குடியரசுக் கட்சியிலேயே அந்த நிறமும், தேவைப்பட்டளவில் ஆண்ட்ரோஜனும் இருந்து போனதால் இந்த முறையும் அந்தக் கட்சியே வெற்றியடையும் நிலையில் இருக்கிறது.

ஜனநாயகக் கட்சியில் எப்பொழுதும் புரட்சிகரமான திட்டங்களுக்கும், அடிமட்ட மக்களின் குரலுக்கும் கொஞ்சம் மதிப்புண்டு (சர்ச் போன்ற விசயங்களை கொஞ்சம் அப்படித் தள்ளிவைத்து விட்டு அரசியல் நடத்துவார்கள் - கொஞ்சம் மனசாட்சியுடன்). ஆனால், இந்த அண்மைய போர்கள், மற்றும் வெளியுலக அதிருப்தி இன்னமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் துரதிருஷ்ட வேளையாக ஜனநாயகக் கட்சி வெற்றியடைந்து சற்றே ஆருததளிக்காமல் போவப் போவது ஒரு பலத்த பின்னடைவே, அமெரிக்காவிற்கும் உலக நாடுகளுக்கும்.

இப்பொழுது நிகழும் இந்த முதற் கட்ட தேர்தல் அங்கீகரிப்பின் படி ஓபாமாவும், ஹிலாரியும் ஜனநாயக கட்சியில் மேலோங்கி இருக்கிறார்கள். இதில் கடைசியாக யார் ஜனாதிபதிக்கு நின்றாலும் இருவருமே வெற்றியடைய வாய்ப்புகள் மிகவும் குறைவென்றே என்னால் எண்ணத்தோன்றுகிறது. காரணம் ஓபாமா - ஒரு கருப்பினத்தவர், மேலும் இசுலாமிய முன்னோர்கள் அவர்களின் வழி வந்திருப்பதாலும் மக்கள் கடைசி நேரத்தில் கணினித்திரைக்கு முன்னால் நிற்கும் பொழுது மனதை மாற்றிக் கொண்டு எதிர் தரப்பில் நிற்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர் மெகனைக்கு ஓட்டைக் குத்தித் தள்ளி விடுவார்கள்.

அது போலவே ஹிலாரியின் நிலையும் கடைசி நேரத்தில் ஒரு பெண் உலக அரங்கில் நின்று என்னாத்தை சாதித்து விடப் போகிறாள், என்று ஆண்ட்ரோஜன் பீறிட மக்கள் மீண்டும் மெகைனுக்கே ஓட்டைக் குத்தித் தள்ளப் போகிறார்கள். நான் இங்கு தென் கிழக்கு மகாணத்தில் இருந்து பார்த்து, பேசி வருவதொட்டும் வெள்ளைப் பெண்களே ஹிலாரியை ஒரு 'விட்ச்'ன்றே விளிக்கிறார்கள் (ஆனால், வட கிழக்கு மகாணங்களில் அப்படியே இதற்கு நேர் மாறாக இருக்கும் அதுவும் தெரியும்).

எனவே, அமெரிக்கா எல்லா தகுதியையும் கொண்ட ஒரு பெண் ஜனாதிபதியையோ அல்லது ஒரு கருப்பினத்தவரையோ (அனுபவம் கொஞ்சம் குறைவே என்றாலும் - புஷ்சே எனும் பொழுது ;) முழுதுமாக அரசாட்சியில் அமர வைக்க தயாராகவில்லை என்பது எனக்கு வெளிச்சமாக தெரிகிறது.

இந்த எட்டு வருடங்களுமே போதும் போதுமென்று ஓடித் தேய்ந்திருக்கிற நிலையில் மேலும் இன்னொரு ரிபப்ளிகன் ஜனாதிபதியை இந்த நாடும், இந்த உலகமும் தாங்குமா? பொறுத்திருந்து பார்ப்போம், என்ன நடக்கப் போகிறது வரும் நவம்பருக்குளென்று.

Related Posts with Thumbnails