Sunday, November 05, 2006

அந்திம காலம் by ரெ.கார்த்திகேசு...

ஒரு ஏழு நாட்களுக்கு இன்று இரவிலிருந்து என் தொந்திரவு ஆரம்பிக்கிறது. பொறுமை காத்து, ஏழு நாட்களையும் ஏழு நிமிடங்களாக உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

இது எனக்கு ஒரு சிறப்பு வாரம் என்பதால் இதற்காக ஒரு சிறப்பு நன்றியினை தமிழ்மண அன்பர்களுக்கு தெரிவித்துக் கொண்டு எனது பதிவினை தொடர்கிறேன். நன்றி!


நேற்றும் இன்றும் சுமார் ஒரு ஆறு மணி நேர இடைவெளியில் இரண்டு அமர்வுகளில் இந்த *அந்திம காலம்* என்ற புதினத்தை அவ்வப்பொழுது பொங்கி எழும் உணர்வுத் துளிகளுக்கிடையில் உணர்ந்துண்டேன்.

அதனை இங்கு வந்து போகும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமென்று தான் இந்த அறிமுக கட்டுரை. எனக்கு முன்னாலே அந்த நாவலை வேறு யாரேனும் வாசிக்க நேர்ந்திருந்தால் அக் கதையின் ஆழத்தை நீங்களும் உணர்ந்திருக்கக் கூடும்.

இந்த புதினம் முழுதுமே சுந்தரம் எனும் பணி ஒய்வுற்ற ஆசிரியர் தனக்கு விதிக்கப் பட்டிருக்கும் கடைசி நாட்களை எப்படி மாறி மாறி மரணத்துடன் தர்க்கித்து வாழ்வின் பொருளையும், பொருளற்ற தன்மையினையும் தன்னை சுற்றியுள்ள உறவுகளின் மூலமாகவும் ஆராய்கிறார் என்பதனை கதையாசிரியர் ரெ. கார்த்திகேசு வழி நடத்தி சென்றிருக்கிறார். இக் கதையை வாசிக்கும் பொழுது வாழ்வை பற்றிய தெளிவு நமக்கு பிறக்கும் படியாக உணர்த்தி இருக்கிறார் என்பதாகத்தான் நான் பார்க்கிறேன்.

எப்படி வாழ்வு இன்பமும், துன்பமும் கலந்த கலைவயே என்ற போதிலும், எந்த சுழ்நிலையில் அதனை நாம் ஆராதிக்கிறோம் எந்த சுழலில் அதனை நாம் சற்றும் உணராமல் ஒரு தாவர நிலையிலேயே பின் தங்கி முழுதுமாக ஆராதிக்க மறந்து வாழ்கிறோம் என்பதனை பல பக்கங்களில் மிக ஆழமாக மனதை நெருடி உணர்த்தியிக்கிறார்.

ஒரு நல்ல நண்பனுக்குரிய தன்மைகளாக ராமாவின் மூலமாகவும், ஜானகியின் மூலமாக நல்ல துணையாளுக்குரிய குண நலன்களைக் கொண்டும், தண்ணியின் மீது வெறுப்பைக் காட்டும் தனது அத்தையின் மூலமாக மெளனத்தின் சிறப்பையும், தனது அக்கா-அன்னாவின் மூலமாக அவள் தாயா அல்லது தனது சகோதரியா என்று கேள்விகள் எழுப்பும் அளவிற்கு, தனது அப்பாவின் மரணத்திற்கு பிறகு அவள் தனக்கென்று ஒரு துணையே தேடிக்கொள்ளாமல், தனக்கே துணையாக கடைசிகாலத்தில் இருப்பதைக் கொண்டு கேள்விகள் தொடுப்பதாக இருக்கட்டும் - பக்கத்திற்கு பக்கம் வாழ்வியல் பற்றிய ஆராய்ச்சி தொடர்கிறது.

அது மட்டுமில்லாமல், தனக்கு கடவுள் என்ற ஒரு தனிப்பட்ட உருவத்தின் மீது நம்பிக்கை மனத்தளவில் பிறக்க வில்லையெனினும், தனது வியாதி முற்றிய நிலையில் மனப் பிறழ்சி தொடுக்கும் கேள்விகள் - மரணத்தையொட்டிய பயத்தால்.

பிறகு இன்று பொதுநலம் குன்றிய நிலையில் சுயநலம் மிஞ்சிய நிலையில் எப்படி திருமணங்கள் விவாக ரத்துகளில் முடிகிறது என்பதனை, இரு வேறு வழிகளில் ஒப்புமை படுத்துவெதற்கென தனது மகளைக் கொண்டு இந்த நவீன மனித வாழ்வைப் பற்றிய அணுகுமுறையும் தொட்டுச் செல்ல தவறவில்லை.

ஆக மொத்தத்தில் ஒவ்வொருவரும் படித்துணர வேண்டிய அருமையான நாவல்.

மதுரை திட்டத்தின் கீழ் யுனிகோடு முறையில் PDF formatல் கீழிறக்கம் செய்து கொள்ளலாம். மொத்த பக்கங்கள் 174. கீழ் காணும் சுட்டியில் பயணித்து, அந்த பக்கத்தில் ஏழாவது வரியில் இப்படியாக காணும் *அந்திம காலம் (நாவல்) கார்த்திகேசு 0172* சுட்டியை சுட்டி பயனடையுங்கள்.

மேலும் ஒரு தகவல், இங்கு நிறைய பேருக்கு மதுரை திட்டம் பற்றி தெரிந்திருக்குமென்றே நினைக்கிறேன். கேள்விப்படாதவர்கள், அந்த பக்கத்தில் இன்னும் பல அறிய தமிழ் இலக்கிய பொக்கிஷங்கள் பொதிக்கப் பட்டிருக்கிறது என்பதனை அறிய. நன்றி.

59 comments:

பொன்ஸ்~~Poorna said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள் தெகா... இயற்கை நேசியும் நட்சத்திரமா? இல்லை இந்த வாரம் ஏன் இப்படி மட்டும் தானா ? :))

வெட்டிப்பயல் said...

அட! நம்ம பிரதான சிஷ்யர்தான் இந்த வார நட்சத்திரமா!

வாழ்த்துக்கள் தெகா!

பொன்ஸ்~~Poorna said...

கார்த்திக் படம் நல்லா இருக்கு....

Anonymous said...

அந்திமக் காலத்தை அறிமுகப்படுத்திய அன்பு நண்பருக்கு நன்றி. இந்நாவலை நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன். அற்புதமான நாவல். மரண பயம் உள்ளவர்கள் இதனைப் படிக்கவேண்டாம் என பின் அட்டையில் போட்டிருப்பார்கள். இதைப் பற்றி பின்னர் விரிவாகவே எழுதலாம் எனத் தோன்றுகிறது.

அன்புடன்,
சைதை முரளி.

நன்மனம் said...

நட்சத்திர வாரத்திற்க்கு வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் [GK] said...

தெகா !

நட்சத்திர வாழுத்துக்கள் !
எரிக்கிறதா ? புதைக்கிறதா ? போல் புகழ்பெற்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன் !
:)

வசந்த் said...

இது போன்றே லியொ டால்ஸ்டாயின் "நீதிபதியின் மரணம்" என்ற நாவல் ஒன்று.. அதிலும் மரணத்திற்கு முந்தைய காலம் பற்றி மிகச் சிறப்பாக எடுத்து சொல்லி இருப்பார்.

"அந்திம காலம்" அறிமுகத்திற்கு நன்றி. கண்டிப்பாக நேரம் கிடைக்கும் போது படிக்கின்றேன்.

வசந்த்

வடுவூர் குமார் said...

ரெ.கார்த்திகேசு
நட்சத்திர பதிப்பாளரானதுக்கு
வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

தெ.கா,
புத்தக அறிமுகத்துக்கு நன்றி.
நீங்க சொல்றது
ப்ரொஜக்ட் மதுரை என்று நினைக்கிறேன்.

மீண்டும் ,நினைவு ஒஅடுத்தியதற்கு நன்றி,

வல்லிசிம்ஹன் said...

சொல்ல மறந்துவிட்டேன். நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்.

மஞ்சூர் ராசா said...

இந்த வார நட்சத்திரத்திற்கு பாராட்டுக்கள்.

இந்த வாரம் வெற்றிகரமாக மிளிர வாழ்த்துக்கள்.

சின்னக்குட்டி said...

நட்சத்திரத்துக்கு எனது வாழ்த்துக்கள்

Sivabalan said...

தெகா (Dr.பிரபாகர்)

நட்சத்திர வார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.

ஒரு நல்ல நூலைப் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். மிக்க நன்றி.

நானும் இன்னும் படிக்கவில்லை. ஒரிரு நாளில் படித்துவிடுகிறேன்.

பொரபைல் போட்டோவில் உள்ளது உங்கள் மகன் கார்த்திக்?

நாகை சிவா said...

நட்சத்திர வாழ்த்துக்கள் தெ.கா.

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் தெகா!! கலக்குங்க!

'அந்திம காலம்' இறக்கியாச்சு...படிச்சுட்டு வரேன் ;)

மணியன் said...

நட்ச்சத்திர வாரத்திற்கான வாழ்த்துக்கள்!! நீங்கள் சுட்டிய நாவலை பதிவிறக்கம் செய்துள்ளேன். படித்து என் அனுபவத்தைப் பகிர்கிறேன்.

Santhosh said...

இந்த வார நட்சத்திரமா தெ.கா கலக்குங்க. சொல்லவே இல்லை ஆனாலும் அநியாயத்துக்கு confidentiality maintain பண்றீங்க :)).

கால்கரி சிவா said...

//வயசு என்னவா இருக்கலாம்: ஹோமோ எரெக்டஸ்லிருந்து - ஹோமோ சாபியன்ஸ் ஆக பரிணமித்து இன்னமும் பரிணமிக்க உதவியாக இருக்கும் ஒரு ஆண் குரங்கு. //


வாங்க பிரபாகர். நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

இயற்கையைப் பற்றி நிறைய தகவல்கள் கிடைக்கும் என் எதிர்பார்ப்பில்

Thekkikattan|தெகா said...

நண்பர்களே நேற்று இரவு சோதனை மேல் சோதனையாக ;) வீட்டு தொலைபேசி மண்டையை போட்டுவிட்டதால், எனது பணியிடத்திலிருந்து அந்த பதிவை பதிப்பித்தேன். பிறகு இன்ன பிற அவசர வேலைகளால் மட்டுறுத்த நேரம் கிடைக்காமல், இப்பொழுதுதான் முடிந்தது.

திரும்பவும் கேட்டுக் கொண்டது போலவே, அடியேனுடன் பொருமைகாத்து, கொண்டு சென்று சேர்த்து விடுங்கள்.

இதோ, பின்னூட்ட விளையாட்டு ஆரம்பிக்கிறது ;)

அன்புடன்,

தெகா.

இலவசக்கொத்தனார் said...

இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

Sivabalan said...

தெகா,
அந்திம காலம் நூலில் எனக்கு பிடித்த வரிகள்.

"பெண்ணே உன் உலகம் சரியப் போகிறது. தயார் படுத்திக்கொள். இது உன்னை வீழ்த்தும் செய்தி. ஆனால் வீழ்ந்துவிடாதே. விழப் போகுபவன் நான். என் பக்கத்தில் இருந்து என்னைத் தாங்கிக்கொள்ள வலுப் பெற்றவளாக இரு."


நல்ல நூல். அறிமுகப் படித்தியதற்கு மிக்க நன்றி

வெளிகண்ட நாதர் said...

நட்சத்திர வாழ்த்துக்கள், தெ.கா.

//நீண்ட கால ஆசை: சும்மா குருட்டான் போக்கிலே இந்தியாவில் எங்காவது ஒரு மூலையில் நடந்து திரியணும்.// ரொம்ப நாளா எனக்கும் இதே ஆசை, அதுவும் இமயமலை அடிவாரப்பகுதிகளில்!

Thekkikattan|தெகா said...

பொன்ஸூ,

//இயற்கை நேசியும் நட்சத்திரமா? இல்லை இந்த வாரம் ஏன் இப்படி மட்டும் தானா ? :))//

ரெண்டு பர்சானாலிடிகளும்தான்;). ரொம்ப ஸ்விட்ச் ஆகம பார்த்துக்கிறேன் :-)))

கார்த்திக் படம் நல்லா இருக்கு....//

நன்றி! அவன் தான் எழுதுறான்... இவ்ளோ எழுத்துப் பிழைகளோட ;-))

Thekkikattan|தெகா said...

அட! நம்ம பிரதான சிஷ்யர்தான் இந்த வார நட்சத்திரமா! //

வாருங்கள் சுவாமிஜி! கொஞ்ச நாட்களாக யாருந்த பித்தான ஆனந்தா என்று தேடிக் கொண்டிருந்தேன், கடைசியாக அது என்னுடைய குருவேதான் என்று அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

தாங்களின் வாழ்த்துகளை அன்போடு ஏற்று, எனது நன்றியினை தாங்களுக்கு சமர்பிக்கின்றேன் :-)

Anonymous said...

நண்பர்களே,

நான் ரெ.கார்த்திகேசு, "அந்திம காலம்" நாவலின் ஆசிரியன். "அந்திம காலம்" 1998-இல் பதிப்பிக்கப்பட்டது. எட்டு ஆண்டுகள் கழித்து ஒரு நல்ல வாசகரின் கண்ணில் பட்டு அது பற்றிய கருத்து வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனை என் கவனத்துக்குக் கொண்டு வந்த பாலாஜி அவர்களுக்கும் எனது நன்றி.

நானும் cyber வெளியில் இருக்கிறேன்.
karthi@streamyx.com. விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

Thekkikattan|தெகா said...

writersrm,

//இந்நாவலை நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன். அற்புதமான நாவல். மரண பயம் உள்ளவர்கள் இதனைப் படிக்கவேண்டாம் என பின் அட்டையில் போட்டிருப்பார்கள்.//

அப்படியா, கூறியிருப்பார்கள்!! தாண்டி படித்துவிட்டால் நாம் மரணத்தை பக்குவத்துடன் பார்க்க கற்றுக் கொண்டதாகத்தானே பொருள் :-). எனக்கு அப்படித்தான் தோனச் செய்கிறது.

//இதைப் பற்றி பின்னர் விரிவாகவே எழுதலாம் எனத் தோன்றுகிறது.//

கண்டிப்பாக எழுத வேண்டும். உங்களின் எண்ணங்களையும் தெரிந்து கொள்ளலாம் இதனைப் பொருட்டு. நேரம் கிடைக்கும் பொழுது அவசியம் எழுதுங்கள்.

தாங்களின் வருகைக்கும், பகிர்தலுக்கும் நன்றி SRM.

அன்புடனே,

தெகா.

Thekkikattan|தெகா said...

நல்ல மனம்,

எல்லா (வரப் போகிற)பதிவுகளையும் கஷ்டம் பார்க்காம மருந்து சாப்பிடற மாதிரி சாப்பிட்டு வைச்சுருங்க ;-)

வாழ்த்துக்களுக்கு நன்றி!

துளசி கோபால் said...

நட்சத்திரத்துக்கு வாழ்த்து(க்)கள்.

பொருமை= பொறுமை:-)

மங்கை said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள் தெகா

Thekkikattan|தெகா said...

கோவியாரே,

எரிக்கிறதா ? புதைக்கிறதா ? போல் புகழ்பெற்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன் !//

பார்க்கலாம் அது போன்ற பதிவு எது அமைகிறது என்று ;) ஒரு பதிவு அதற்கு பக்கத்தில் வரலாம்... தெரியலா, ஆனா...

கொஞ்சம் காய்ஞ்ச பதிவுகள் தான், இருக்கிறதுதானே வரும் :-)))

நன்றி தாங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும், கோவி.

Thekkikattan|தெகா said...

வசந்த் அவர்களே,

//இது போன்றே லியொ டால்ஸ்டாயின் "நீதிபதியின் மரணம்" என்ற நாவல் ஒன்று.. அதிலும் மரணத்திற்கு முந்தைய காலம் பற்றி மிகச் சிறப்பாக எடுத்து சொல்லி இருப்பார். //

நீங்கள் கூறிய புதினம், ஆங்கிலத்தில் உள்ளதா அல்லது தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா? கொஞ்சம் முடிந்தால் மற்ற விபரங்களையும் தாருங்களேன், இணையத்தில் தேடிப்பார்க்க உதவும்.

கண்டிப்பாக நேரம் கிடைக்கும் போது படிக்கின்றேன். //

கண்டிப்பாக படித்துப்பாருங்கள். You won't regret, I guarantee on it :-). நன்றி, தாங்களின் பின்னூக்கிக்கும் பகிர்தலுக்கும்.

Thekkikattan|தெகா said...

வல்லி அவர்களே,

ஆமாம், நான் ப்ரொஜக்ட் மதுரை'த்தான் பேசிக்கொண்டுள்ளேன். அங்கே நிறைய இருக்குதில்ல... :-)

நன்றிம்மோ... இந்த பக்கமா வந்து படிச்சிட்டு பின்னூட்டமிட்டதிற்கு...

Thekkikattan|தெகா said...

மஞ்சூர் ராசா, சின்னக்குட்டி, சிவபாலான், கப்பியார் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியோ நன்றி.

மறக்காம புதினத்தை படித்துவிட்டு, அதனைப் பற்றிய எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மறக்காமல்.

Thekkikattan|தெகா said...

மணியன்,

//நீங்கள் சுட்டிய நாவலை பதிவிறக்கம் செய்துள்ளேன். படித்து என் அனுபவத்தைப் பகிர்கிறேன்.//

கண்டிப்பாக வந்து பகிர்ந்து கொள்ளுங்கள். வாழ்த்துக்களுக்கு நன்றி!

அன்புடன்,
தெகா.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் தெகா.

வசந்த் said...

// நீங்கள் கூறிய புதினம், ஆங்கிலத்தில் உள்ளதா அல்லது தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா? கொஞ்சம் முடிந்தால் மற்ற விபரங்களையும் தாருங்களேன், இணையத்தில் தேடிப்பார்க்க உதவும். //

நான் படித்தது தமிழ் மொழி பெயர்ப்புத்தான். ஆங்கிலம் கொஞ்சம் இடிக்கும் :-). பதிப்பகத்தார் பாரதி புத்தகாலயம் என்று நினைக்கிறேன். புத்தகம் தற்சமயம் கைவசம் இல்லாததல் வேறு தகவல் ஏதும் தெரியவில்லை. தங்கள் ஆர்வம் என்னை வியக்க வைக்கிறது. கண்டிப்பாக விசாரித்து சொல்கிறேன்.

நன்றி
வசந்த்

தருமி said...

மன்னிக்கணும்...மன்னிக்கணும்... ரொம்பவே மன்னிக்கணும்...

எப்படியோ பார்க்காம விட்டுட்டேன். ரொம்பவே தாமதமா வந்திருக்கேன். சொல்லிட்டு வருவீங்கன்னு இருந்திட்டேன்!

எங்க வயசுகாரங்க படிக்க வேண்டிய கதைமாதிரி தெரியுது.. படிச்சிப் பாக்கிறேன்.

நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.
ஜொலிங்க..ஜமாய்ங்க...

Thekkikattan|தெகா said...

வடுவூராரே,

ரெ.கார்த்திகேசு,
நட்சத்திர பதிப்பாளரானதுக்கு
வாழ்த்துக்கள்//

இந்த நட்சத்திர வாரத்தில் முதல் பதிவாக கதையாசிரியரின் கதையிட்டு கவுரவித்ததற்கு, வாழ்த்துக்கள் என்றுதானே குறிப்பிட்டுள்ளீர்கள், குமார். இங்கு சில நண்பர்களுக்கு குழப்பம் வந்துவிட்டது... தெளிவு படுத்துங்கள் :-)

நன்றி!

Thekkikattan|தெகா said...

சந்தோஷ்,

சொல்லவே இல்லை ஆனாலும் அநியாயத்துக்கு confidentiality maintain பண்றீங்க :)).//

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சந்தோஷ், சொல்லணுமின்னு தோணலை. அவ்வளவுதான். நமக்குள்ள என்ன லூஸ்_ல விடுங்க ;-)). என்ன ஒரே மிஸ்டியா இருக்கு இந்த காலைப் பொழுது?

வாழ்த்துக்களுக்கு நன்றி!

Thekkikattan|தெகா said...

கால்கரி சிவா,

இயற்கையைப் பற்றி நிறைய தகவல்கள் கிடைக்கும் என் எதிர்பார்ப்பில்..//

ஹூம், பார்க்கலாம் கா.சிவா. அது போன்ற பதிவுகள் கொஞ்சம் நீளமாக போவதால் படிப்பதற்கு மக்களுக்கு அயற்சியாக இருக்குமென்று நினைக்கிறேன். முன்னால் எழுதிய கட்டுரைக்களுக்கு அவ்வளவாக அங்கீகரிப்பு இருந்ததைப் போல தெரிய வில்லை...

Thekkikattan|தெகா said...

இலவசக்கொத்தனார், நாகை சிவா நண்பர்களே உங்களுக்கு எனது நன்றி!

Thekkikattan|தெகா said...

நாதரே,

ரொம்ப நாளா எனக்கும் இதே ஆசை, அதுவும் இமயமலை அடிவாரப்பகுதிகளில்!//

அருமையான ஆசை. அது ஈடேரும் பக்கத்தில்தான் இருக்கிறது. நானும் அங்கிருந்துருக்கிறேன். ரிஷிகேஷத்திலிருந்து கேதர்நாத் பேருந்தில் பயணித்து, ஒரு இரவு தங்களுக்குப் பிறகு நடை சிவன் கோவிலை நோக்கி. மறக்க முடியாத நிகழ்சி. முயன்று பாருங்கள்.

நன்றி, இந்த பக்கமாக வந்து போனதிற்கு.

Thekkikattan|தெகா said...

திரு. ரெ. கார்த்திகேசு,

நான் ரெ.கார்த்திகேசு, "அந்திம காலம்" நாவலின் ஆசிரியன். "அந்திம காலம்" 1998-இல் பதிப்பிக்கப்பட்டது. எட்டு ஆண்டுகள் கழித்து ஒரு நல்ல வாசகரின் கண்ணில் பட்டு அது பற்றிய கருத்து வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனை என் கவனத்துக்குக் கொண்டு வந்த பாலாஜி அவர்களுக்கும் எனது நன்றி.//

உங்களின் வருகையை நான் சற்றும் எதிர் பார்க்கவிலை. அப்படி இங்கு கண்ட பொழுது, எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. எனது ஒரு வார இந்த நட்சத்திர பதிவுகளும் அந்த ஒரு பதிவின் மூலமாக கிடைத்து விட்டதாக எண்ணி பூரிப்படைந்தேன்.

தாங்களின் மின்னஞ்சலுக்கும் பல நன்றிகள். விரைவில உங்களுக்கு மீண்டும் விபரங்களுடன் மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

நீங்கள் கூறியபடியே "அந்திம காலம்" புதினம் சார்ந்த விசயங்களை இங்கு பகிர்ந்து கொள்வதாக சொல்லியிருந்தீர்கள். மறக்காமல் அப்படியே செய்யவும்.


அன்புடன்,

பிரபாகர் (தெகா).

Anonymous said...

I have read Antimakalam many times and every time I read I am carried away by the emotions as if I am the main character described by the author. I have read all his works available in the Project Madurai. All are superb works & it looks like real life drama about the tamils In Malaysia. I convey my sincere appreciation for his works.
R.Venkataraman, Dubai.

Anonymous said...

I have read Antimakalam many times and every time I read I am carried away by the emotions as if I am the main character described by the author. I have read all his works available in the Project Madurai. All are superb works & it looks like real life drama about the tamils In Malaysia. I convey my sincere appreciation for his works.
R.Venkataraman, Dubai.

Thekkikattan|தெகா said...

துள்சிங்க,

பொறுமையாக வந்து பொருமையென்ற ஏற்கெனவே திருத்தப் பட்ட எழுத்துப் பிழையை பொறுமை என்று சுட்டி காட்டியாதற்கு, பொறுமையாக வந்த என்னுடைய நன்றி நவில்தல்கள் :-))

பதிவினை படித்தீர்களா?

Thekkikattan|தெகா said...

மங்கை மற்றும் குமரன், வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி.

மலைநாடான் said...

தெ.கா!

நடசத்திரவாரத்திற்கு வாழ்த்துக்களும், நாவல் அறிமுகத்திற்கு நன்றிகளும்.

Anonymous said...

அன்புள்ள பிரபாகர்,

இதுவரை நான் எழுதியுள்ள நூல்கள்:
நாவல்கள்: வானத்து வேலிகள்" (1981); தேடியிருக்கும் தருணங்கள் (1993);அந்திம காலம் (1998); காதலினால் அல்ல(1999); "சூதாட்டம் ஆடும் காலம்" (2006)

சிறுகதைத் தொகுப்புகள்: புதிய தொடக்கங்கள் (1974); மனசுக்குள் (1995); இன்னொரு தடவை (2001); ஊசி இலை மரம்(2003)

கட்டுரைத் தொகுப்பு: "விமர்சன முகம்" (2004)

பெரும்பாலான நூல்கள் சென்னை மித்ர பதிப்பாளரால் பதிப்பிக்கப்பட்டவை.

Thiru S. Ponudurai (ESPO)
Mithra Publications
375/8-10 Arcot Road
Chennai 600024
India.
Tel: 00-91-44-23723182 or 24735314
Fax: 33733160

இவற்றுள் "அந்திம காலம்" என மனதுக்கு அணுக்கமானது. ஆனால் அது விரிவான வாசக கவனிப்பை அடைந்ததாகச் சொல்ல முடியாது. மலேசியாவில் அது பரவலாக அறியப்பட்டுள்ளது. அந்த ஆண்டின் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு "தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசினைப் பெற்றது. மலாயாப் பல்கலைக் கழகத் திறனாய்வாளர்கள் அது பற்றி எழுதியிருக்கிறார்கள்.

Gabriella Eichinger Ferro-Luzzi என்பவர் (பெண்) ஒரு இத்தாலியத் தமிழ் ஆய்வாளர். லா.ச.ரா.விடம் நெருக்கமாக இருந்து அவர் கதைகள் பற்றி இத்தாலிய மொழியிலும் ஆங்கிலத்திலும் நிறைய எழுதிப் பதிப்பித்துள்ளார். இவர் என்னைப் பற்றிக் கேள்விப் பட்டு என்னிடம் தொடர்பு கொண்டு என் நூல்களை அஞ்சல் மூலம் பெற்றார். பின்னர் ஒரு முறை (நான்காண்டுகளுக்கு முன்) என்னைக் காண மலேசியா வந்தார். நாங்கள் சந்தித்த போது அழகிய எழுத்துத் தமிழில் பேசினார். என்னை ஆங்கிலம் பேச விடவே இல்லை.

எனக்கு அன்பளிப்பாக ஒரு படப் போஸ்கார்டைக் கொடுத்தார். ரோமில் உள்ள மைக்கல் ஏஞ்சலோவின் Creation என்னும் கூரை ஓவியத்தின் படம் அது. எங்கும் கிடைக்கும். யூரோ 50 காசுக்கு வாங்கலாம். ரொம்ப சாதாரணமான பரிசு எனினும் மரியாதையுடன் வாங்கி வைத்துக் கொண்டேன். சந்திப்பின் முடிவில் சொன்னார்: "இந்தப் பரிசு நான் உங்கள் அந்திம காலத்தைப் படித்ததன் நினைவாக!"

எனக்கு இது புரிய கொஞ்ச நேரம் ஆயிற்று. புரிந்தவுடன் இது எவ்வளவு அர்த்தச் செழுமையுள்ள பரிசு என்றும் புரிந்தது.

நாவலைப் படித்துள்ள உங்களில் யாருக்காவது இது புரிந்தால் சொல்லுங்கள். யாரும் சொல்லவில்லை என்றால் நானே பிறகு சொல்லுகிறேன்.

அந்த வருகையின் போது கேப்ரியெல்லா மலாயாப் பல்கலைக் கழக இந்திய இயல் பகுதியில் தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு தமிழிலேயே ஒரு செமினார் நடத்தினார். "நவீனத் தமிழ் இலக்கியத்தில் மரணம்" என்பது அதன் தலைப்பு. அதில் "அந்திம காலம்" பற்றியும் பேசினார்.

இறுதியாக ஓராண்டுக்கு முன்னர் அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் (அவர் மின்னஞ்சல் வைத்துக் கொள்ளவில்லை) தனக்கும் இரத்தப் புற்றுநோய் கண்டிருப்பதாகவும் சுந்தரத்தைப் போல் தமக்கு அவ்வளவு துயரங்கள் ஏற்படக் கூடாது என வேண்டிக் கொள்வதாகவும் எழுதியிருந்தார். அதன் பின் தொடர்பு விட்டுப் போயிற்று.

Gabriella Eichinger Ferro-Luzziயின் எழுத்துக்கள் (அல்லது reference) இணையத்தில் அகப்படும்.

ரெ,கா

Anonymous said...

At Thursday, 09 November, 2006, Johan-Paris said...
எஸ்பொ! ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். அவர் "நனவிடை தோய்தல்" ஓர் அருமையான படைப்பு; ஈழத்தவர்கள் அனுபவித்து வாசிக்கலாம். காரணம் அவர் குறிப்பிடும் விடயங்கள் நாம் கண்ட,கேட்டவை.
விபரத்துக்கு நன்றி!!
யோகன் பாரிஸ்

Thekkikattan|தெகா said...

எஸ்பொ! ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். அவர் "நனவிடை தோய்தல்" ஓர் அருமையான படைப்பு; ஈழத்தவர்கள் அனுபவித்து வாசிக்கலாம். காரணம் அவர் குறிப்பிடும் விடயங்கள் நாம் கண்ட,கேட்டவை.
விபரத்துக்கு நன்றி!!
யோகன் பாரிஸ் //

யோகன், தகவல்களுக்கும், வருகைக்கும் நன்றி! அது போன்ற ஈழத்துப் படைப்புகள் தமிழகத்தில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. எஸ்பொ! கேள்வி பட்டதே இல்லை :-(

Thekkikattan|தெகா said...

At Thursday, 09 November, 2006, ramachandranusha said...
நேசி, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் ஆரம்பிக்கிறேன். நானும் அந்திமக்காலம் படித்துவிட்டு,
யார் என்ன என்றெல்லாம் தெரியாமல், யோசிக்காமல் அந்த எழுத்து தந்த தாக்கத்தில் ரெ.காவிற்கு
மெயில் போட்டேன். அவரும் திரு. ராமசந்திரன் என்று அழைத்து பதில் போட்டார். இது நடந்து மூன்று வருடம் இருக்கும்.
கதையில் அவர் கேட்ட கேள்விக்கு பதில் தெரியவில்லை. இன்னொரு முறை ஆரம்பித்தால் நினைவு
வரலாம். ஒரு கதையோ அல்லது சிறுகதையோ கவிதையோ மிக பிடித்துப் போக காரணம்
ஒன்றே தான். எங்காவது நம்மை நாம் சந்திப்போம்.
இக்கதையில் வருவதுப் போல என் மகனுக்கு மூன்று வயதில்
லுகேமியா என்று சந்தேகப்பட்டபொழுது நான் பட்ட வேதனையா அல்லது கடவுளை குறித்து
அவரின் அலசல் ஏறக்குறைய என்னுடையதுதான். நம்பிக்கை வரவில்லை அவ்வளவுதான். பலமுறை
கஷ்டம் வந்தப்பொழுது தூக்கம் வராமல் புரளும்பொழுது யாருபா கட்வுள், கொஞ்சம் வந்து என்னை காப்பற்ற கூடாது என்று புலம்பிவிட்டு நானே சிரித்துக் கொள்ளுவேன்.
கதையில் எனக்கு மிக பிடித்த அம்சம், சோகத்தையும், துக்கத்தையும் வெளிப்படுத்தும்பொழுது
ஒரு செய்தி சொல்லும் உத்திதான் இருக்குமே தவிர, வலிய நம்மை அழ வைக்கும் எழுத்து
இல்லை. எப்படி நகைச்சுவை எழுதுவது கடினமோ, துக்கத்தை வார்த்தைகளில் கொட்டாமல்,
அதே சமயம் வேதனையும், வலியும் படிப்பவரையும் உணர வைக்கும் எழுத்து இது.

இவரின் ஊசி இலை மரம்ச்சிறுகதைக்குதான் கல்கி சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. என்று
நினைக்கிறேன். இன்னும் ஒரு சயின்ஸ் பிக்ஷன் அதுவும் கல்கியில் வந்தது சரியா சார்?

Thekkikattan|தெகா said...

உஷா,

யோசிக்காமல் அந்த எழுத்து தந்த தாக்கத்தில் ரெ.காவிற்கு
மெயில் போட்டேன். அவரும் திரு. ராமசந்திரன் என்று அழைத்து பதில் போட்டார்.//

அது யாருங்க திரு. ராமசந்திரன்?

இன்னொரு முறை ஆரம்பித்தால் நினைவு
வரலாம். ஒரு கதையோ அல்லது சிறுகதையோ கவிதையோ மிக பிடித்துப் போக காரணம்
ஒன்றே தான். எங்காவது நம்மை நாம் சந்திப்போம்.
இக்கதையில் வருவதுப் போல என் மகனுக்கு மூன்று வயதில்
லுகேமியா என்று சந்தேகப்பட்டபொழுது நான் பட்ட வேதனையா அல்லது கடவுளை குறித்து
அவரின் அலசல் ஏறக்குறைய என்னுடையதுதான். நம்பிக்கை வரவில்லை அவ்வளவுதான். பலமுறை
கஷ்டம் வந்தப்பொழுது தூக்கம் வராமல் புரளும்பொழுது யாருபா கட்வுள், கொஞ்சம் வந்து என்னை காப்பற்ற கூடாது என்று புலம்பிவிட்டு நானே சிரித்துக் கொள்ளுவேன்.//

உஷா, i am very sorry to hear that. இப்பொழுது பையன் எப்படி இருக்கிறான்? நீங்கள் கூறுவது மிகச் சரியே. அந்த புதினத்தை வாசிக்கும் பொழுது எனக்கென்னமோ, நம் வீட்டில் நிகழ்வதைப் போன்ற ஒரு உணர்ச்சி. அதிலும் ஒரே நேரத்தில் எப்படி அந்த Pendulam கஷ்டமான சூழலின் பக்கமே ஆடிப் போய் அங்கேயே நிலை கொண்டது என்பதனை உணரும் பொழுது. இது போல நமது சொந்த வாழ்விலும் நடக்கிறது தானே, "பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும்" என்று சொல்வார்களே அது போல.

//பலமுறை கஷ்டம் வந்தப்பொழுது தூக்கம் வராமல் புரளும்பொழுது யாருபா கட்வுள், கொஞ்சம் வந்து என்னை காப்பற்ற கூடாது என்று புலம்பிவிட்டு நானே சிரித்துக் கொள்ளுவேன்.//

இப்பொழுது புரிகிறது, உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கிறது விசயங்கள் எழுதுவதற்கென்று. இந்த கட்டுரையின் மூலம் உங்களின் வாழ்வு அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள கிடைத்த தருனத்திற்கு என்னுடய நன்றிகள்.

//இவரின் ஊசி இலை மரம்ச்சிறுகதைக்குதான் கல்கி சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு கிடைத்தது.//

ஓ, அப்படியா!! அந்த சிறுகதையையும் படித்து விட்டீர்களா?

இன்னும் ஒரு சயின்ஸ் பிக்ஷன் அதுவும் கல்கியில் வந்தது சரியா சார்?//

எனக்குத் தெரியவில்லை. இதுக்கு திரு. கார்த்திகேசு அவர்களே (நேரமிருந்து) பதிலிரைக்கட்டும்.

இயற்கை நேசி|Oruni said...

At Friday, 10 November, 2006, ரெ.கா. said...
அன்புள்ள உஷா,

மன்னிக்க வேண்டும். "இராமச்சந்திரன் உஷா" என்றுதானே உங்கள் பெயர் இருக்கிறது? அதனால் நீங்கள் இராமச்சந்திரன் என்று எடுத்துக் கொண்டேன். இப்போது கவனித்துப் பார்க்கும்போது நீங்கள் "உஷா" என்பது விளங்குகிறது. குளறுபடிக்கு மன்னியுங்கள்.

ஏற்கனவே உங்கள் மடலுக்கு ஒரு பதில் இங்கு எழுதினேன். (அதிலும் உங்களை இராமச்சந்திரன் என்றுதான் அழைத்திருக்கிறேன் போல.) இன்னும் வந்ததாகத் தெரியவில்லை. ஒரு நாள் பொருத்திருந்து வரவில்லையானால் மீண்டும் எழுதுகிறேன்.

எஸ்பொ அருமையான மனிதர். அற்புதமான எழுத்தாளர். அவரைப் பற்றியும் சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன.

ரெ.கா.

இயற்கை நேசி|Oruni said...

At Sunday, 12 November, 2006, *இயற்கை நேசி* said...
//இன்ஷியல் விரிவாக்கத்தில் பஸ்போர்ட் போன்றவற்றில் அப்படி இருந்ததால்,ராமசந்திரன் உஷா என்று எழுது பெயர் வைத்துக்கொண்டேன்.//

உஷா, உங்களுக்கும் இதே கதைதானா :-)) எனக்கும் அப்படியே ஆகிப் போனது, எனது அப்பாவின் பெயர்தான் எனது முதல் பெயராகிப் போனது. இருந்தாலும், அதிலும் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது. எனக்கு கொடுத்தப் பெயர் இரண்டாவது இடத்தை எடுத்துக் கொன்டதில் :-) புரிகிறதா, அதிலும் ஒரு தத்துவ நோக்கு இருக்கிறது...

ஆமா, எந்த கமென்ட்ட பத்திக் கேக்குறீங்க... நேசியில ஒரு கமென்ட்_ம் இல்லை மட்டுறுத்தப் படாமல். எதற்கும் தெக்கி பதிவில் பாருங்கள்

இயற்கை நேசி|Oruni said...

At Sunday, 12 November, 2006, ramachandranusha said...
ரெ.கா சார், அப்பா பெயர் ராமசந்திரன், இன்ஷியல் விரிவாக்கத்தில் பஸ்போர்ட் போன்றவற்றில் அப்படி இருந்ததால்,ராமசந்திரன் உஷா என்று எழுது பெயர் வைத்துக்கொண்டேன். இணைய நட்பின் ஆரம்பத்தில் பலரும் நான் ஆண், என் பெயர் ராமசந்திரன் என்று நினைத்திருந்தார்கள்.

பிறகு அந்த சைன்ஸ் பிக்ஷன் கதை? அதுவும் மூன்று வருடம் முன்னால் வந்தது என்றி நினைக்கிறேன்.

நேசி, கமெண்ட் மாடரெஷனில் சாரோட கமெண்ட் இருக்கான்னு பாருங்க

இயற்கை நேசி|Oruni said...

At Sunday, 12 November, 2006,

*இயற்கை நேசி* said...

வணக்கம் கார்த்திகேசு,

ஒரு முறை தான் வாசித்தேன் என்பதனால் என்னால் தொடர்பு படுத்தி பார்க்க முடியவில்லை என்று நினைக்கிறேன். இருப்பினும், கதையின் ஆழத்துடன் ஒன்றிப் படிக்கும் பொழுது அந்த வரிகள், கண்டிப்பாக மனதில் தைத்துப் போவதை மறுக்க முடியாது.

அடிக்கடி இனிமேல் மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்வோம் திரு. கார்த்தி அவர்களே. மேலும் ஏதேனும் வாய்ப்பு கிட்டி உங்கள் ஊர்ப் பக்கம் வர முடிந்தல் உங்கள் அழகிய தீவு பக்கமும் எட்டிப் பார்க்கிறேன்.

இந்த வாரத்தில் உங்களை என்னுடைய முதல் பதிவின் மூலம் சந்திக்க நேர்ந்ததை ஒரு அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நானும் அடுத்த மாதம் இந்தியா செல்லும் பொழுது, நீங்கள் கொடுத்த பிரசுரத்தின் முகவரிக்கு சென்று அத்துனை புத்தகங்களையும் வாங்கி விடுவதாக திட்டம். கண்டிப்பாக அதில் நிறைய *அந்திம காலம்* புதினத்தின் பிரதிகள் அதிகமிருக்கும், ஏனெனில் அதுவே நான் சந்திக்கும் நண்பர்களுக்கு பரிசுப் புத்தகம் :-) இனிமேல்.

இயற்கை நேசி|Oruni said...

At Sunday, 12 November, 2006,

ரெ.கா. said...

உஷா, நேசி,

வணக்கம். முதலில் எழுதி வராமல் போனதைத் திருப்பி எழுதுகிறேன்:

என்னுடைய அறிவியல் புதினம் என்று நீங்கள் குறிப்பிட்டது திண்ணையில் வந்த "எதிர்காலம் என்று ஒன்று" என்ற கதையாக இருக்க வேண்டும். அறிவியல் புனைகதைப் போட்டியில் இரணடாம் பரிசு பெற்றது. பின்னர் AnyIndianCom பதிப்பகத்தார் அந்தப் பரிசு பெற்ற கதைகளை நூலாக வெளியிட்டார்கள். என்னுடைய தலைப்பையே தொகுப்பின் தலைப்பாகவும வைத்தார்கள்.

வேறு அறிவியல் புனைகதைகளும் எழுதியிருக்கிறேன். "சூரியனைக் கொன்று விட்டார்கள்" எனக்கு மிகவும் பிடித்தது.

கல்கியில் அவர்களின் வைரவிழா சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை "ஊசி இலை மரம்".

இந்த போஸ்ட் கார்ட் விஷயத்தையும் சொல்லி விடுகிறேன்.

அந்திம காலத்தில் 17ஆம் அத்தியாயத்தில் மதர் மேகி தான் வத்திகன் போக இருப்பதாக சுந்தரத்திடம் கூறுகிறார். அப்போது சுந்தரம் கூறுவார்: "மதர் மேகி, வத்திகனில் உள்ள தேவாலயத்தில் மைக்கலேஞ்சலோ ஓவியம் ஒன்று உள்கூரையில் இருக்கிறதாம். அதில் கடவுளின் கைகள் மனிதனை நோக்கி நீண்டிருந்தாலும் அவரின் விரல்கள் மனிதனின் விரலைத் தொடாமல் இடைவெளி விட்டு நீண்டிருக்கிறதாம். அந்த ஓவியத்தை நீங்கள் பார்த்தால் அதன் கீழ் நின்று இறைவனின் விரல்கள் மனிதனைத் தொட வேண்டும் என எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்" என்பார்.

இந்த ஒரு சிறிய உரையாடலை நினைவில் வைத்துத்தான் கேப்ரியெல்லா எனக்கு அந்த போஸ்ட் கார்ட் படத்தைக் கொடுத்திருக்கிறார். ஆகவே மிக பொருட்செறிவு உள்ள பரிசல்லவா?

அன்புடன்

ரெ.கா.

இயற்கை நேசி|Oruni said...

At Sunday, 12 November, 2006,

Anonymous said...

நணபர்களே,

என்னை ரெ.கா. என்று சுருக்கமாகவே அழைக்கலாம்.

இயற்கை நேசியும் தெகாவும் ஒருவர்தானா? அவர்தான் பிரபாகரா?
மிக நன்றாக எழுதுகிறீர்கள். அமெரிக்காவில் சம கால வாழ்வு பற்றிய உங்கள் பார்வைகளும் பதிவுகளும் மிக அருமையானவை. உங்களைப் போலவே பி.கே.சிவகுமாரும் அமெரிக்க வாழ்வு பற்றி (மற்ற பல விஷயங்களுக்கு ஊடே) எழுதுகிறார். அமெரிக்காவுக்கு வெளியே வாழ்பவர்களுக்கு இந்தத் "தமிழ்" நோக்குநிலை மிக முக்கியமானதாக இருக்கிறது.

தொடருங்கள்.

நேசி, மித்ரவைத் தவிர New Booklands-இலும் கேட்டுப் பாருங்கள். அங்கு ஸ்ரீநிவாசன் என் நண்பர். அவர் முயற்சி செய்து புத்தகங்களைத் தேடிக் கொடுப்பார். Make New Booklands your first stop.

ஆனால் கொஞ்ச புத்தகங்கள் வாங்கி கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே அவர்கள் வைத்திருப்பதால் எது கிடைக்கும் எது கிடைக்காது என்று சொல்ல முடியவில்லை. முயற்சியின் பலன் என்ன என எனக்குத் தெரிவியுங்கள்.

நன்றி.

ரெ.கா.

Related Posts with Thumbnails