Sunday, November 12, 2006

எரோப்ளேனில் நான் கண்ட மேற்கத்தியப் பாதை

இப்பவே சொல்லிடறேன், நான் ஒரு அமெரிக்க எதிர்ப்பாளன் அல்ல. நான் இங்கு குப்பை கொட்ட ஆரம்பித்து பல வருடங்கள் உருண்டோடி விட்டன. எனக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாக நான் கருதுவது, எனக்கு நானே தருவித்துக் கொண்ட வாய்ப்புகள் அவற்றினூடே எனது பயணம். அதனைச் சார்ந்து நான் பார்க்கும் விசயங்களை இந்திய (அதுவும் #2 இந்தியாவிருந்து) மற்றும் அமெரிக்கா கலாச்சார கண்ணோட்டத்துடன் எவ்வாறு ஒன்றிலிருந்து பிரிதொன்று முரண்பட்டு நிற்கிறது என்பதனை நான் கண்டுணர்ந்த வரையில் இந்த வாரம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அள்ளித் தூவலாமென்று எண்ணியிருக்கிறேன்.

ஒகே, இப்பொழுது விசயத்துக்குள் போவோம். எப்பொழுதும் போல அரக்கப் பரக்க ஒரு 1 மணி நேரத்துக்கு முன்னாடி ஏர்போர்டில் எனது நண்பர் ஒருவரும், எனது தம்பியும் கொண்டுவந்து என்னை தள்ளிவிட்டு விட்டுச் சென்று விட்டார்கள்.

இந்த தொழில் நுட்பமும், அதன் வளர்ச்சியும் காட்டாற்று வெள்ளம் போல் பல சலுகைகளை வழங்கியிருக்கிறது.

உதாரணத்திற்கு பயண டிக்கெட்டை ஆன்லைனில் வாங்கி, ஒரு துண்டு காகிதத்துடன் உள்ளே போயி, ஏர்போர்ட் நுழைவாயிலில் உள்ள தான்இயங்கி போர்டிங் பாஸ் வழங்கும் எந்திரத்திடன் (Kiosk) சில நொடிகள் தொட்டுவிட்டு, அது துப்பும் நுழைவுச் சீட்டை பொருக்கி எடுத்து விட்டால் பயணத்திற்கு ரெடியாகி விட்டோமென்று பொருள்.

எனினும், என்னுடைய பயணத்திற்கு மீதம் 30 நிமிடங்களே இருக்கிறது என்பதால் இந்த அணுகுமுறை கூட எனக்கு துரிதமாக இல்லையென்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அடியேன் எவ்வளவு தொலைவு வந்துவிட்டேன் என்று. இந்தியாவில் நான் கரண்ட் பில் கட்ட அரைநாள் க்யூவில் நின்றது நினைவிலிருந்து தொலைந்து போனது, இந்த அவசரத்தில். ஒரு வழியாக ஓட்டமும் நடையுமாக ஒரு 10 நிமிடத்திற்கு முன்பு நானே கடைசி ஆளாக, பேண்டையும் சட்டையையும் தவிர எல்லாத்தையும் அவிழ்த்து செக்யூரிட்டி திரையில் என்னை காமித்து விட்டு வந்து ப்ளேனில் ஏறி கடைசி சீட்டுலையும் வந்து உட்கார்ந்தாச்சுங்க, ஒரு வழியா.

அந்த மிசினுக்கு கூட தெரிஞ்சுருக்கும் போல நான் ஒரு கிராக்குன்னு, கரெக்ட்டா ரெண்டு பசங்க ஐந்து வயசில ஒருத்தன் பேரு ஜெரிமி அப்புறம் ஒம்பது வயசில ஒரு ஆஃப்ரிக்க-அமெரிக்க பையன் பேரு மைக்கேல். இந்த ரெண்டு பசங்களும் தனியா என் கூட அட்லாண்டாவிலிருந்து மினியபாலிஸ் பறக்கிறானுங்க, ஒரே ரோ சீட்டுல அமர்ந்து.

எதுக்காக தனியாக அப்படின்னு கேளுங்க, பசங்கள்ள ஒருத்தன் அப்பாவோட கொஞ்ச நாள் கோடை விடுமுறையை கழிச்சுப்புட்டு அம்மாவீட்டுக்கு போறான், அடுத்தவன் அம்மா வீட்டிலிருந்து அப்பாவீட்டுக்கு போறான்.

இந்த அஞ்சு வயது ஜெரிமி கொஞ்சம் பாவமா ஒரு 10 நிமிஷம் தலையைக் கீழே போட்டுக்கிட்டு உம்னு வுட்கார்ந்து இருந்தான், ஏர்ஹோஸ்டஸ் கொண்டு வந்து உட்காரவைச்சுட்டு பெல்ட் போட்டுட்டு அப்புறம வாரேண்டான்னு சொல்லிட்டுப் போயிட்டா. நான் கையிலே வச்சுருந்த புத்தகத்தோட தெமேன்னு வெரிக்க, புத்தகத்தத்தான் பார்த்துகிட்டு உட்கார்ந்து இருக்கேன்.

பையன் மெதுவா ஆராய்ச்சில இறங்க ஆரம்பிச்சுட்டான், கொடுத்த ஹெட் செட்ட, அவுக்க முயற்சி பண்ணான் முடியல... நிமிர்ந்து ஒரு முறை பக்கத்து சீட்டு பயல பார்த்தான் அவன் தெமேன்னு ஐபாட்லெ பாட்டு கேட்டுகிட்டு ஜன்னல் வழியா எதையோ தேடிகிட்டு இருந்தான், என்ன தேடி இருப்பான்னு உங்களுக்கு தெரியும் தானே!

பிறகு நம்ம ஜெரிமி என்ன பார்த்தான். நானும் அவன என் ஒன்றைக்கண்ணெ காமிச்சு பய முறுத்திப்புடாம பக்குவமா பார்த்து கேட்டேன்... "டூ யு நீடு மை ஹெல்ப்"ன்னு, தலைய ஆட்டி வச்சான், அப்புறம் அந்த ஹெட் செட்டை எங்க சொருவி என்ன பண்றது அப்படிங்கிறதில ஆரம்பிச்ச எங்க நட்பு, அந்த முழு ப்ளைட் மக்களும் அந்த இரண்டரை மணி நேரம் எப்படா முடியும்ங்கிற அளவிற்கு, கேள்வி பதில் நேரத்திலிருந்து, அவன பூச்சி ஒண்ணு கடிச்சது, அப்புறம் நேத்தைக்கு அடிச்ச சுரம் அப்படின்னு ஒரே கதையாப் போச்சு.

நான் என் 'காட்டு'த்தனமான அணுகு முறையெல்லாம் சொல்லப் போகி, எப்படி பறந்து வட்டமிடும் பூச்சிகளிடமிருந்து கடி வாங்காமல் தப்பிக்கிறதுன்னு சொல்லப் போக அது பக்கத்து சீட்டு மைக்கேலுக்கும் ஆர்வத்தக் கொடுக்க அப்புறமென்ன. ஒரே ஜாலிதான் ப்ளைட் போங்க.

நான் கேட்டேன், தம்பீ, அந்த பூச்சி பறந்து வரும் பொழுது நீ என்ன பண்ணே, பயந்து ஓடுனீயா, இல்லே விரட்டப் பார்த்தீயா, இல்ல அத கண்ணுக்கு கண்ணு நேரா பார்த்தீயாடான்னு. கொஞ்ச நேரம் தீவிரமா யோசிச்சான், கார்டூன்ல வர்ற அவன் ஃபேவரைட் கேரக்டர்ஸ் செய்ற அத்துனை முகபாவங்களையும் செய்துட்டு, ஹீம்... நான் அந்த பூச்சிய நேரா பார்த்தேன் அப்படின்னான்.

நம்ம உடனே "நேசி" யாகி, கூடு விட்டு கூடு பாஞ்சி, நம்ம பூச்சி மனோ தத்துவ ரீதியா யோசிச்சு வைச்சுருக்கிற ஒரு விசயத்தை எடுத்து விட்டேன். என்னவா அது, நீ அது மாதிரி ஒரு ஜந்துவை இனிமே பார்த்தா கண்டுக்காத, சும்மா பார்க்காத மாதிரி எந்த சலனமுமில்லாம இருந்தின்னா உன்னை ஒண்ணும் பண்ணமா அவனுங்க போயிடுவானுங்கன்னு.

சரின்னு கேட்டுகிட்டவன், அடிச்சான் பாருங்க இன்னொரு கேள்வி. அப்ப யானை வந்தா என்ன பண்றது, அடடா, பெரிய கேள்விய கேட்டுப் புட்டானே, அப்படின்னு முழிச்சு ஏதாவது ஏடாகூடமா சொல்லி வைக்காம நீ பெரியவனா ஆனவுடன் பதில் கிடைக்கும் அப்படின்னு சொல்லி வைச்சேன்.

இதற்கிடையில் அப்பப்ப ஸைலண்ட் ஆகி திடீர்னு இருந்தாப்புல இருந்து கண் கலங்கி அம்மாவை பார்க்கணுமின்னு ஒரு ரெண்டு மூணு தடவை கேட்டான். அப்புறம் அதிலிருந்து மீட்டுக் கொண்டார வேற எதாவது ஒரு டாபிக், இப்படியே போயிக் கிட்டு இருந்தது நேரம். இதற்கிடையில் மக்கள் எல்லாம் எழுந்துருச்சு எழுந்துருச்சு எங்க சீட்ட நோக்கி பார்க்க ஆரம்பிச்சங்க, ஏன் அப்பிடின்னு உங்களுக்கு தெரியும்தானே !

எல்லாத்துக்கும் முத்தாய்ப்பு வச்ச மாதிரி, பாத்ரூம் வருதுன்னு சொல்லிப்புட்டான்... சரின்னு கூட்டிக்கிட்டும் போனேன் பாத்ரூம் வரைக்கும், நண்பனாகிப் புட்டானேன்னு, அங்க வைச்சு அவன் கொஞ்சம் பெரிய விசயமய்யா இதுன்னு சொன்னான். இது சரிப்பட்டு வராதுன்னு தூரத்தில செவனேன்னு தூங்கி வழிஞ்சுகிட்டு இருந்த ஏர் ஹோஸ்டஸ் அம்மணியை கூப்பிட்டு கிட்டு வாறேண்டா இருடான்னு, பிடிச்சு கொண்டுவந்து ரெண்டு பேரையும் அந்த டீலிங்க பாக்க வுட்டாச்சு.

இப்ப முடிவுக்கு வந்தாச்சு. சரிங்க, அமெரிக்கர்கள் ரொம்ப ப்ரைவேசி வேணுங்கிற ஆட்கள், ஒருத்தன் தோள்பட்டை இன்னொருத்தன் தோள்பட்டை மேல உரசக் கூடாது, எல்லாம் உலகத்த காப்பத்திறதுக்காக எப்பொழுதும் சதா படிச்சிக்கிட்டும், அதப் பத்தி சிந்திச்சுக்கிட்டும், கோட்டும் சூட்டுமா வேலைன்னு வந்துட்டா ரொம்ப சீரியஸா இருக்காங்க.

இப்ப இந்த ஜெரிமி மாதிரி பசங்கள் கிட்டதட்ட 42% ஒரே பெற்றோருடன் (single parent) வாழும் சூழல், பாசம் பங்கு போடப்பட்டு இங்கும் அங்குமாக அலைக்கழிப்பட்டு வருதுங்க. பெற்றோர்கள் யாரு, நாம முன்னமே சொன்ன அந்த உலகத்தை காப்பத்துறவங்கள்ள ஒண்ணுதான். அப்படி இருக்கும் பொழுது, இந்த மாதிரி குழந்தைகள் எல்லார் மனசிலும் என்னங்க எண்ணங்கள ஓடும், எதைப் பார்த்து, கேட்டு வளர்ந்து வருதுங்க.

இந்தமாதிரி முதல் முறையா அப்பாவும் சரி அம்மாவும் சரி ஒருத்தரும் பக்கத்தில இல்லாமல் ப்ளைட் எடுத்துட்டு வரும் பொழுது அதுகளோட மனசில ஒரு இனம் புரியா தவிப்பு, இந்த இன்செக்யூரிட்டின்னு சொல்லுவாங்களே அது எட்டிப் பார்த்துவிட்டு அனுபவம அதன் சுவடுகளை அடி மனதில் விட்டுச் செல்லுமா, செல்லாதா?

ஒரு "வால் ஸ்ட்ரீட் ஜார்னல்" படித்துக் கொண்டு வரும் மோரான், ஜெரிமியின் பக்கத்தில் அமர்ந்திருக்க நேரிட்டு, அந்த மோரானுக்கு குழந்தைகள் என்றாலே அலர்ஜி எனும் பட்சத்தில், கொஞ்சம் யோசிக்க வைக்கிறது, இல்லையா?

இது போன்ற சூழலில் வளரும் குழந்தைகளின் "கலெக்டிவ்" மனப் பாங்கு இந்த உலகத்தைப் பொருத்து எதுவாக இருக்கும். வீட்டிலும் அருதி பெரும்பான்மையான நேரம் ட்டி.வியின் முன்பு செலவளிக்க நேரிட்டு, அதில் காட்டப்படும் வன்முறைகள், பாசத்திற்கு ஏங்கிய ஒருவன் ஈவில்-ஆக பின்னால் முரடணாக மாறுவது போன்ற காட்சிகள், கண்களின் வழியே வாங்கி, மனத்தில் இறக்கி, பின்னாளில் அவனும் இதே சமூதாயத்தில் வாழும் ஒரு பிரஜையாகிப் போகிறான்.

அப்படிப் போகும் பட்சத்தில் நாளை அவன் தனது காதலை துப்பாக்கியின் வழியில் வெளியிட எத்தனித்தால், அமைதிக்காக எனும் போர்வையில், இதில் இன்று யாரை குற்றம் கூறுவது? உங்களுக்கு நான் சொல்ல வருவது புரிகிறதா?

நாம் அடிப்படையிலேயே தவறு செய்து வருகிறோம். குழந்தைகளை எங்கு சென்று சந்தித்து பழகினாலும் அவர்கள் இனிமையானவர்கள்தான், சூதுவாதற்று, ஆனால் ஒரு சமுதாயம் தனது சொந்த வெறுப்பு விருப்புக்களுக்காக அவர்களை பகடைக் காய்களாக ஆக்குவது, உண்மையிலேயே வருத்தத்துக்குரியது.

இந்தியாவும் இந்த விரைவுப் பாதையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதை இப்பொழுது காண முடிகிறது. ஆனால், கேள்வி மட்டும் ஒன்றே, எதனை இழந்து எதனைப் பெறுவதற்கு?

37 comments:

தமிழ்ப்பிரியன் said...

//எதனை இழந்து எதனைப் பெறுவதற்கு?//

நச் கேள்வி!! இனியாவது யோசிப்போம்!
நன்றி,

பத்மா அர்விந்த் said...

இதைப்பற்றி நான் பல இடங்கைல் எழுதி இருந்தாலும் விவாகரத்து என்று வரும்போது குழந்தைகளை பலரும் கவனிப்பதில்லை. அமெரிக்க பெற்றோராவது குழந்தைகளுக்காக நண்பர்களாக பழகுவது உண்டு. (80%) ஆனால் இந்திய பெற்றோர்கள் குழந்தைகளின் மனநலனுடன், அன்புடன் விளையாடி தங்களுக்கேற்றவாறு மாற்ற முயற்சிப்பதும், விவாகரத்தே ஆகாவிட்டாலும் கூட பெண்ணின் பெற்றோர் அல்லது பெண் அதே போல ஆணின் பெற்றோர் அல்லது ஆண் இன்னொரு பெற்றோரை பற்றி அவதூறாக சொல்லுவதும் அவர்களின் நலனை பாதிக்கிறது. உண்மையில் நாம் பல விஷயங்களை சிந்திப்பதே இல்லை.
குழந்தைகளின் தனிமை இப்போது அதிகரித்து வருகிறது எல்லா மக்களிடமும். பெற்றோர் தங்கள் வேலைகளில் கண்ணாகிவிட, குழந்தைகல் அவர்கள் உலகத்தில். இன்னும் விரிவாக பேச வேண்டிய விஷயமிது. குழந்தைகலும் பின்னாளில் அதே போல தங்கள் நலனும் விருப்பமுமே முக்கியமானதாக நினைத்து கொள்கிறார்கள்.

Thekkikattan said...

ப்ரியன்,

என்னால் இந்த கேள்விகளை உணர்வுப் பூர்வமாக கேட்க முடிகிறது என்றால், அதற்கு அடிப்படைக் காரணமும் உண்டு. அதனை இரண்டாவது பத்மா அர்விந்த் அவர்களின் பின்னூட்டத்துடன் பகிர்ந்து கொள்ளலாம்.

நன்றி!

Thekkikattan said...

//அமெரிக்க பெற்றோராவது குழந்தைகளுக்காக நண்பர்களாக பழகுவது உண்டு. (80%) ஆனால் இந்திய பெற்றோர்கள் குழந்தைகளின் மனநலனுடன், அன்புடன் விளையாடி தங்களுக்கேற்றவாறு மாற்ற முயற்சிப்பதும், விவாகரத்தே ஆகாவிட்டாலும் கூட பெண்ணின் பெற்றோர் அல்லது பெண் அதே போல ஆணின் பெற்றோர் அல்லது ஆண் இன்னொரு பெற்றோரை பற்றி அவதூறாக சொல்லுவதும் அவர்களின் நலனை பாதிக்கிறது.
//
பத்மா அவர்களே,

நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. அதற்கு காரணம் தாங்கள் அவ்வாறு அவதூறு ஒருவர் மேல் ஒருவர் குழந்தைகளின் மூலமாக் பேசுவதின் மூலம் நாம் குழந்தைகளுக்கு என்ன தீங்கு விளைவிக்குறொம் என்ற அடிப்படை புரிதல் இல்லாததே காரணம் என்று நினைக்கிறேன்.

எனக்கு இது போன்ற ஒரு சுழல் இருப்பினும் முடிந்த அளவிற்கு அதன் தாக்கத்தை குறைக்கவே ப்ரியப் படுகிறேன்.

//குழந்தைகலும் பின்னாளில் அதே போல தங்கள் நலனும் விருப்பமுமே முக்கியமானதாக நினைத்து கொள்கிறார்கள். //

இதுதான் நடந்து வருகிறது. அரிதிப் பொரும் பாண்மையினர் தன்னைச் சுற்றி என்ன செய்கிறார்களோ அதனைப் பார்த்தே வளரும் குழந்தையும் பழகிக் கொள்வதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லையே.

பத்மா அவர்களே, தங்களின் பகிர்தலுக்கு ரொம்ப நன்றி. உங்களின் படைப்புகளை தவறாமல் படித்து வருகிறேன்.

பெத்த ராயுடு said...

தெகா,

நல்ல அருமையான பதிவு.

Dharumi said...

மனச தொடுற பதிவா போச்சுது இது. கேள்விகள் புரியுது; பதில்தான் தெரியலை. இழப்பை விட பெறப்போகும் விஷயங்களின் கசப்பு அதிகமாகவே இருக்கும் என்பது தெளிவு.

Thekkikattan said...

ராயுடு,

நன்றி! மற்ற பதிவுகளையும் வாசித்தீர்களா?

மங்கை said...

திருமண உறவில இருக்கும் பொறுப்புணர்சி பற்றிய புரிதல், எண்ணம், பெற்றோர்களிடம் இருந்துதான் வரும்...

இவங்களோட Emotional health பற்றி அவங்க நினைக்கிறதில்லை..

இந்த குழந்தைகள் பிற்காலத்தில இதே போல விவாகாரத்து செய்யறதுக்கு 3 மடங்கு வாய்ப்பு இருக்குன்னு ஆராய்ச்சியாளர் சொல்லும்போது மனசுக்கு கஷ்டமா இருக்கு...

It is the child who often pays the price..


நல்ல பதிவு தெகா

Thekkikattan said...

//இழப்பை விட பெறப்போகும் விஷயங்களின் கசப்பு அதிகமாகவே இருக்கும் என்பது தெளிவு.//

உண்மைதான் தருமி. என்ன செய்வது, நனைந்த பின்புதானே சில உண்மைகளே புரிய வருகிறது. அந்த பாதையில் தான் இப்பொழுது எம்மில் நிறைய பேர் இறங்கி நடக்க ஆரம்பித்துருக்கிறோம்.

நேற்று ஒரு சின்ன கவனிப்பு, மீண்டும் ஏர்போர்ட்டில் தான். பனியின் வெண்மை நிறத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்ணின் மற்ற நிறங்களை காண்பதில் ஏதோ பிரட்சினைகள் வருமாமே. அப்படி இருந்தாலும் வெண்மையை காட்டிலும் பிற நிறங்களின் ஆழம் தெரியும் உடனே நமது பார்வையை நகர்த்தி மற்ற நிறத்தைப் பார்த்தால், அது போலவே, (அப்பாடா விசயத்திற்கு வந்துட்டேன் அப்படிங்கிறீங்களா :-) அப்படி ஏர்போர்ட்டில் உட்கார்ந்திருக்கும் பொழுது ஒரு வயதான நம்மூர் தாத்தா, பாட்டியைப் பார்த்தேன், இங்கு.

அதில் ஒரு பெரிய உடனடியாக என் கண்களுக்கு புலப்பட்டது, என்னன்னா, மகன் நெளிந்து கொண்டே முன்னால் செல்ல அம்மா மலித்து சீவிய தலையும், எலிவால் சடை முடியும், அப்பா அந்த குளிரிலும் சான்டல் போட்டுக் கொண்டு தனது மனைவியுடன் கூடவே நடந்து (தன்னை ஒத்த ஆணும், தனது மனைவியை ஒத்த பெண்களும் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டே).

இதிலிருந்து எனக்கு ஒரு விசயம் புலப் பட்டது. என்ன சொல்ல வருகிறேன் என்றால், அய்யா, உங்களின் காலத்தை நினைத்தால் எனக்கு ரொம்பவே பொறாமையாக இருக்கிறது. எவ்வளவு சகிபுத்தன்மையும், போதும் என்ற மனமும், இருப்பதைக் கொண்டு வாழ கற்றுக் கொண்ட பண்பாடும்... ஏதோ சொல்ல வருகிறேன் இன்னும் முழுதாக சொல்ல முடிய வில்லை :-(

Sivabalan said...

தெகா

நீங்கள் சொல்லும் கருத்தை மறுப்பதிற்கில்லை..

மீன்டும் ஒரு நல்ல விசயத்தை பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்..

நல்ல பதிவு.

நன்றி

Thekkikattan said...

மங்கை,

//It is the child who often pays the price..//

அப்படித்தான் தெரிகிறது. அப்படி ஆகிப் போன பெற்றோர்கள் கடுமையாக இதன் பொருட்டு உழைத்து உண்மை தனது குழந்தைகளிடம் புரிய வைத்துப் பேசி, சரியான பார்வை கிடைக்கும் படி செய்வது மிக்க நலம் பயக்கும் குழ்ந்தைகளுக்கு.

மங்கை, சூப்பர்ப்_ங்க...

தெகா.

இலவசக்கொத்தனார் said...

பசங்க கிட்டதான் இப்படின்னு இல்லை. நான் விமானத்தில் செல்லும் போதெல்லாம் அருகில் இருப்பவர்களுடன் பேச்சு கொடுப்பேன். ரயில் சிநேகம் போல் இந்த விமான சிநேகமும். தரையிறங்கிய பின் அவர் அவர் வழியே.

ஆனால் இப்பொழுது எல்லாம் வரும் பொழுதே காதில் ஒரு ஐ-பாட் மாட்டிக் கொண்டு வந்து விடுகிறார்கள். அதனால் பேச்சு என்பதே நின்று போய் விட்டது. என்ன செய்ய நானும் ஒன்று வாங்கி விட்டேன். ஆனால் பேச்சு கொடுக்க யாரும் இல்லை என உறுதி செய்தபின் தான் அதனை அணிகிறேன்.

சென்ற முறை நான் வந்த பொழுது அருகில் ஒரு பெண். வெள்ளைக்கார அம்மிணிதான். அதுதான் அவர்களின் முதல் விமான பயணமாம். எங்கோ சென்று விட்டு பின் திரும்பி செல்கிறார்கள். நான் இறங்க வேண்டிய விமான நிலையத்தில் இறங்கி வேறு ஒரு விமானம் பிடித்து அவர்கள் ஊருக்கு செல்ல வேண்டும்.

நான் வழி முழுவதும் பேசிக்கொண்டே வந்தேன். இறங்கிய பின் என்னிடம் இருந்த பத்திரிகைகளையும் அவர்களிடம் தந்தேன். அவர்கள் செல்ல வேண்டிய விமானம் இருக்கும் கேட் நம்பரைப் பார்த்து சொல்லி அனுப்பி வைத்தேன். நம்பினால் நம்புங்கள், அவர்கள் கண்ணில் உண்மையிலேயே கண்ணீர்.

முதலில் செல்லும் பொழுது அவரிடம் யாரும் பேசாமல், அவருக்கும் என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாமல் மிகவும் வருத்தமடைந்து இருக்கிறார்கள். இப்படி விமானம் மாற வேண்டிய இடத்தில் ரொம்பவே தடுமாறி இருக்கிறார்கள். இனி விமான பயணமே வேண்டாம் என்ற அளவுக்கு இருந்திருக்கிறது. திரும்பி வரும் பொழுது என் துணை அவர்களுக்கு நல்லவிதமாய் இருந்திருக்கிறது.

இனி விமானங்களில் செல்ல பயப்படமாட்டேன். நானும் இனி அருகில் இருப்பவர்களுடன் பேச முயல்வேன் எனச் சொல்லிச் சென்றார்கள். நான் பேசாமல் இருந்திருந்தால் அவர்களுக்கு இதுவும் கசப்பான அனுபவமாகவே இருந்திருக்கக் கூடும்.

அதே சமயம் நான் பேச்சு கொடுக்க முயலும் பொழுது முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றவர்களும் உண்டு. நான் முயலாமல் இருக்க வேண்டாமே.

(பதிவு நீளத்துக்கு பின்னூட்டம் போட்டதற்கு மன்னிக்கவும், தெக்கி)

Thekkikattan said...

Siva,

//மீன்டும் ஒரு நல்ல விசயத்தை பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்...//

Thank you so much, Siva! You have done a great favor by giving me that Suradha Unicode link. I can not imagine without that LINK I could have done, what I am doing now at my last day with Star Week :-).

Thanks, again!!

வசந்த் said...

தெகா அவர்களே,

நல்ல பதிவு. நேற்றுதான் திரு அவர்களின் "முற்றத்தில் கூடும் உறவுகள்..." எனும் பதிவு படித்தேன்.

இன்று உங்களுடைய முறை. கலக்குங்கள்.

நன்றி
வசந்த்

வசந்த் said...

பதிவுக்கு சம்பந்தம் இல்லாத கேள்வி...

மினியாபோலிசில் எங்கு இருக்கிறீர்கள். நானும் இங்குதான் கொஞ்ச நாட்களாக --- கொட்டி கொண்டுள்ளேன்.

நன்றி
வசந்த்

Thekkikattan said...

Vasanth,

//மினியாபோலிசில் எங்கு இருக்கிறீர்கள்.//

I am visiting here for a week. Right now, I am at Bay Shore (area).

வசந்த் said...

நன்றி,

உடனே பதில் அழித்தமைக்கு.

துளசி கோபால் said...

நல்ல பதிவு தெ.கா.

கொஞ்சம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ரெண்டு பெற்றோருக்கும்
இருந்தாலே போதும், குழந்தைகள் இந்தக் கஷ்டமெல்லாம் படாது.
ஆனால், மனுஷங்களுக்கு இந்த பாழாப்போன 'ஈகோ' வந்திருதே(-:

நாம் வாங்கிக்கொடுக்கற எல்லாப் பரிசுப் பொருள்களையும் விட சிறந்தது,
அந்தப் புள்ளைங்களோட நாம் செலவு செய்யற நேரம்.

பத்மா சொன்னது போல, சிலசமயம் இந்தத் தாத்தா பாட்டிங்களும்
பேரப்புள்ளைங்க, தங்ககிட்டே மட்டும் ரொம்ப அன்பா இருக்கணுமுன்னு
தப்பா நினைச்சுக்கிட்டு இன்னொரு செட் தாத்தா பாட்டிகளைப் பத்தி இல்லாததும்
பொல்லாததும் சொல்லிவைக்கிறதும் உண்டுதான்.

பிள்ளைங்க மனக்குழப்பம் அடைஞ்சுடறது எல்லாம் பெரியவங்க
செய்கைகளால்தான்(-:

சந்தோஷ் aka Santhosh said...

நல்லா கேட்டு இருக்கிங்க தேகா. //எதனை இழந்து எதனைப் பெறுவதற்கு?// இதனை படிக்கும் பொழுது ஒரு கவிதையின் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருது. கண்களை இழந்து வெளிச்சம் வாங்கினேன் அது மாதிரியான ஒரு பொருளோட வரும். பணம், பளபளக்கும் வாகனம் போன்ற ஆடம்பரங்களுக்காக நான் வாழ்க்கையை இழந்து வருகிறோம்.

மலைநாடான் said...

தெகா!

நான் சார்ந்த சமுகப்பணியில் இத்தகைய தம்பதிகள் சிலரைத் சந்திக்கும் தருணங்கள் கிடைத்தன. அப்போதெல்லாம் அவர்களது பிள்ளைகளின் முகம் பார்க்கவே எனக்குப் பெரிதும் சங்கடமாக இருக்கும்.... ஆனால் அந்தப் பெற்றோர்கள்..?

Thekkikattan said...

//இனி விமானங்களில் செல்ல பயப்படமாட்டேன். நானும் இனி அருகில் இருப்பவர்களுடன் பேச முயல்வேன் எனச் சொல்லிச் சென்றார்கள். நான் பேசாமல் இருந்திருந்தால் அவர்களுக்கு இதுவும் கசப்பான அனுபவமாகவே இருந்திருக்கக் கூடும். //

இதே தான் இலவசம் சொல்ல வருவதும். இந்த அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொண்டதின் மூலம், சில நேரங்களில் சில பேருக்கு கண் திறக்கலாம். நான் subtleஆக சொல்ல வந்ததை நீங்கள் கொஞ்சம் strongஆவே சொல்லி விட்டீர்கள்.

அருமை. நன்றி!

மகேந்திரன்.பெ said...

தெகா உங்க நாள் என்றும் இனிதாக இருக்க வாழ்த்துக்கள்

Thekkikattan said...

//கொஞ்சம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ரெண்டு பெற்றோருக்கும்
இருந்தாலே போதும், குழந்தைகள் இந்தக் கஷ்டமெல்லாம் படாது.
ஆனால், மனுஷங்களுக்கு இந்த பாழாப்போன 'ஈகோ' வந்திருதே(-://

நீங்க சொல்வது சரி தான். ஆனா, ரெண்டு பேருமே ஒத்த மன போக்குடன் இதில் இருப்பது மிகவும் அவசியம்தானே. இல்லையென்றால், ஒருவரின் விட்டுக் கொடுக்கும் போக்கு அடுத்தவருக்கு, வீக்கினஸ் ஆக படும் பட்சத்தில் பிரிதொரு சமயத்தில் taken it grantedஆக
போயி பின்பு abusive உறவு முறையாக ஆகிவிடுகிறது, இல்லையா.

//நாம் வாங்கிக்கொடுக்கற எல்லாப் பரிசுப் பொருள்களையும் விட சிறந்தது,அந்தப் புள்ளைங்களோட நாம் செலவு செய்யற நேரம்.//

இப்பொழுது அதெல்லாம் ஒரு laxuary ஆகிப் போச்சேங்க.

மற்றபடி நீங்க சொல்றது எல்லாமே சரிங்க. காலம் முத்திப் போச்சுங்க. எல்லோருக்கும் கொம்பு முளைச்சுக்கிட்டு வருது. ஆனா, வாழ்கிற அறையோ இன்னும் சின்னதாத்தான் இருக்கு :-). அது போல சின்ன அறைக்குள்ள ரெண்டு கொம்பு முளைச்சவுங்க நடந்து திரியும் பொது, கொம்புங்க ரெண்டும் clang clangன்னு மாட்டிடிங்குதுங்க...;-)))

Thekkikattan said...

மலைநாடான்,

//அப்போதெல்லாம் அவர்களது பிள்ளைகளின் முகம் பார்க்கவே எனக்குப் பெரிதும் சங்கடமாக இருக்கும்.... ஆனால் அந்தப் பெற்றோர்கள்..?//

ஆனால், பார்ப்பதற்கு குழந்தைகள் அந்த சூழலுடன் வாழ கற்றுக் கொண்டது போல இருக்கும், இல்லையா. அது தானே, இயற்கை - தகவமைப்பின் செயல்பாடும் கூட. பள்ளியில் தன் வயதை ஒத்த சிறுவர், சிறுமியர் தன் வீட்டில் நடக்கும் கதைகளை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொள்ளும் பொழுது, சில நேரங்களில் ஸ்டீரியோ டைப்பாக ஒரே மாதிரியான கதைகள் கேள்வியுறும் பொழுது, குழந்தைகளும், ஓ! இது ஒண்ணும் புதிதல்ல போல என்று எடுத்துக் கொண்டுச் செல்ல தொடங்கி விடுமோ.

Thekkikattan said...

சந்தோஷ்,

//பணம், பளபளக்கும் வாகனம் போன்ற ஆடம்பரங்களுக்காக நான் வாழ்க்கையை இழந்து வருகிறோம்.//

அப்படி ஆகும் பொழுதானே சந்தோஷ் வாழ்வே ஒரு இயந்திரத் தனமாக ஆகிப் போகிவிடுகிறது. எவ்வளவோ இருந்தும் ஏதோ ஒன்று மிஸ் ஆவது போல. சிங்கப்பூர் transit எடுத்திங்கன்னா தெரியும் ஒரு பயலும் அசைய மாட்டானுங்க, யாரு யாரையும் பார்க்க மாட்டானுங்க. அப்படியே சிலை மாதிரி, இருகிப் போயி உட்கார்ந்து கிட்டு வருவானுங்க. ஒரு தடவை, என்னோட வந்த அமெரிக்கர் ஒருத்தருக்கே பெரிய ஆச்சர்யம், என்னைய எழவு வீட்டுல இருக்கிறவங்க மாதிரி இப்படி இருக்கானுங்க அப்படின்னு :-))

எங்கோ போறானுங்கப்பா...

குமரன் (Kumaran) said...

இப்போதெல்லாம் அடிக்கடி வீட்டில் பேசப்படும் பொருளுக்கு அருகாமையில் வரும் சிந்தனையுள்ள பதிவு தெகா. இப்படி அடிக்கடி பேசுவதாலும் சிந்திப்பதாலும் வீட்டிலும் எங்களின் வாழ்விலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

குமரன் (Kumaran) said...

இப்போது மினியாபோலிஸில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அடியேனும் மினியாபோலிஸில் தான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். முடிந்தால் சந்திக்கலாம். வசந்த் நீங்களும் மின்னஞ்சல் அனுப்புங்கள்.

மின்னஞ்சல் முகவரியை என் ப்ரொபைலில் பாருங்கள்.

Thekkikattan said...

நன்றி குமரன்! மின்னஞ்சல் ஒன்று வந்து கொண்டே இருக்கிறது. வசந்தனிடம் என் இடம் பற்றி கூறிய போது தவறுதலாக Bay shore என்று கூறிவிட்டேன். இப்பொழுது தான் கவனித்தேன் அதனை. திருத்தி படித்து விடவும் அதனை Shoreview என்று. :-)

வசந்தன் இருக்கிறீர்களா...???

குமரன் (Kumaran) said...

அதானே பார்த்தேன். என்னடா 9 வருடமா இங்கே இருக்கோம். Bayshore தெரியலையே என்று முழித்துக் கொண்டிருந்தேன். Shoreview தானா? மின்னஞ்சல் கிடைத்தது. நாளை காலை பேசலாம்.

Thekkikattan said...

//Bayshore தெரியலையே என்று முழித்துக் கொண்டிருந்தேன். Shoreview தானா? //

அது ஒண்ணுமில்ல குமரன், Long Island, NY இங்க கொண்டு வந்து இணைத்து விட்டேன் அதான். வசந்தன் தெரிச்சு ஒடீட்டாருன்னு நினைக்கிறேன் :-))

KARTHIKRAMAS said...

தெக்கி,

நட்சத்திர வாரத்தில் குறிப்பிட்ட சில பதிவுகள் மிகவும் பிடித்திருந்தன. நன்றி. மற்றவைகளை இனிதான் வாசிக்கவேண்டும். தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

என் 7 வயது மகன் வகுப்பில் இன்னொரு இந்திய மாணவனின் பெற்றோர் விவாகரத்து செய்துவிட்டதை அவன் சொல்ல கேட்டதிலிருந்து, நானும் என் மனைவியும் ஒரு சிறு விஷயத்திற்கு விவாதம் செய்தால்கூட, நீங்களும் அந்த மாதிரி தனித்தனியாக போய்விடுவீர்களா என்று பயத்துடன் கேட்கிறான். என்ன செய்வது! எதை எண்ணி கவலைப்படுவது - நம் வேலை, வருமானம் மற்றும் எதிர்காலம்? குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம்? வயதான பெற்றோர்களின் உடல்நலம், கடைசி காலம்?

Thekkikattan said...

//KARTHIKRAMAS said...

நட்சத்திர வாரத்தில் குறிப்பிட்ட சில பதிவுகள் மிகவும் பிடித்திருந்தன. நன்றி. மற்றவைகளை இனிதான் வாசிக்கவேண்டும். தொடர்ந்து எழுதுங்கள். //

நன்றி! மற்ற பதிவுகளையும் படிச்சுட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க, தெரிஞ்சுக்குவோம்.

Thekkikattan said...

மகி, நீங்கள் இல்லாமல் வலையுலகம் ஒரே போராக இருக்கிறது :-) எப்பய்யா வருவீங்க,,,

ம்ம்ம்... வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!!

Thekkikattan said...

//என் 7 வயது மகன் வகுப்பில் இன்னொரு இந்திய மாணவனின் பெற்றோர் விவாகரத்து செய்துவிட்டதை அவன் சொல்ல கேட்டதிலிருந்து, நானும் என் மனைவியும் ஒரு சிறு விஷயத்திற்கு விவாதம் செய்தால்கூட, நீங்களும் அந்த மாதிரி தனித்தனியாக போய்விடுவீர்களா என்று பயத்துடன் கேட்கிறான். என்ன செய்வது! எதை எண்ணி கவலைப்படுவது - நம் வேலை, வருமானம் மற்றும் எதிர்காலம்? குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம்? வயதான பெற்றோர்களின் உடல்நலம், கடைசி காலம்?//

அனானி,

ஒரு முக்கியமான விசத்தை இப்படி பெயர் கூட இல்லாமல் வந்து கூறும் அளவிற்கு மன நெருடலா? இருந்து விட்டுப் போகட்டும். இங்கு குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வயதிற்கு வந்து, தனது சக நண்பர்களுடன் பள்ளிகளில் ஏதோச்சையாக பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒருவரின், குடும்பச் சூழ்நிலை மற்றொரு குழந்தையின் வீட்டு நடப்போடு ஒத்துப் போகும் பொழுது, குழந்தைகளுக்கு இயற்கையாகவே இது போன்ற அச்சம் மனத்தில் துளிர்கிறது.

இது போன்று நிறைய நானும் கேள்விப் பட்டதுண்டு. இருப்பினும், தினமும் தம்பதிகள் குழந்தைகளின் முன்னால் அதி பயங்கரமான முறையில் வாய்ச் சண்டையிடுவதை தவிர்ப்பது, மிக்க நலம் பயக்கும், இதனை தம்பதிகள் தான் பேசி எப்படி பிரட்சினைகளை கையாள்வது என்பதனைப் பொருத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். இதுவும், எனது ஒரு சொந்த அணுகுமுறைப் புரிதலே :-)

Good luck with your issue... remember there is always Sun above the darkened clouds :-)

Sivabalan said...

//remember there is always Sun above the darkened clouds //

Super...

கயல்விழி said...

தெகா,

கருவாச்சியின் பதிவுக்கு இந்த பதிவை ஏன் லிங்க் கொடுத்தீர்கள் என்று புரியவில்லை. இருந்தாலும் இந்த பதிவு நன்றாக இருந்ததால் தொடர்ந்து படித்தேன்.

இதிலும், பின்னூட்டங்களிலும் எழுதி இருக்கும் விஷயங்கள் பலவற்றிலும் எனக்கு முழுமையான ஒப்புதல் உண்டு.

திருமண உறவில் விட்டுக்கொடுத்தலும், சின்ன சின்ன சண்டை வந்தால் உடனே தீர்த்துக்கொள்வதிலும் மிகவும் சரியானதே, அதில் மாற்றுக்கருத்து இல்லை.

கருவாச்சி காவியத்தில் வருவதைப்போல பெண்கள் உடல் ரீதியாக/மனரீதியாக துன்புறுத்தப்படுவதும், பல மனைவிகளில் ஒருவராக வாழுவது போன்ற மனித தன்மையற்ற செயல்களை மட்டுமே பெண்கள் பொறுத்துக்கொள்ளத்தேவை இல்லை என்பதே என் கருத்து. இதற்காக குடும்ப அமைப்பை இழந்தாலும் பரவாயில்லை.

Related Posts with Thumbnails