Tuesday, November 07, 2006

காட்டிற்குள் ஓர் முதலிரவு...!!!

இது ஒர் இயற்கை நேசியின் தயாரிப்பு (டாப்ஸ்லிப்>> வால்பாறை மற்றும் அக்காமலை):

எனக்கு இது வாழ்வின் ஓர் மறக்க முடியாத நாள். எதிர் பார்த்து, திட்டமிட்ட படி நடப்பதில் ஒண்ணும் சுவாரசியம் அவ்வளவாக கிடைக்கிறது இல்லை. ஆனா, இது போன்ற எதிர் பாராம நடக்கிற விசயங்கள் தான் மனசில ஒரு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி பிறகு அதனை வாழ்க்கை முழுக்கவுமே சுமந்து திரியற மாதிரி அமைச்சுடும் இல்லையா, அது இனிமையான அனுபவமா இருந்தாலும் சரி கசப்பானதாக இருந்தாலும் சரி.

ஆனா, எங்களுக்கு அன்று கிட்டியது ஒரு இனிமையான அனுபவம். இது நடந்தது, புல் மேடுகளில் (Grass Hills). இந்த இடம் டாப் ஸ்லிப்பிலிருந்து ஒரு 12 லிருந்து 15 கிலோமீட்டர் தூரம், மேலே கீழேன்னு ஏறி இறங்கி நடந்து போன வரகலியார்னு ஒரு யானை முகாம் வரும். அங்கிருந்து நின்னு பார்த்த நம் முகத்துக்கு முன்னாடி மழைக்காடுகள் பச்சை கம்பளமாக விரிந்து ஒரு பெரிய, பாதி ஒன்றுமற்ற வழுக்கு பாறையாகவும், பாதி எலுமிச்சை புற்களும் (Lemon Grass) நிரம்பிய மலை ஒன்று எழுந்து நிற்கும்.

அந்த மலைக்கு பேரு, பெருங்குன்று. நல்ல சரிவான மலை. ஏறுவது கொஞ்சம் மலைப்பாகத்தான் இருக்கும், ஆனா, ஏறி உச்சத்தில நின்னு கீழே தெரியும் ஊர்காடுகளையும், வனத்தையும் பார்த்தால் அத்துனை சோர்வும் காணமல் போயி விடும்.

சரி, அன்னிக்கு நாங்க ஒரு ஆறு பேருங்க, டாப்ஸ்லிப்பிலிருந்து கொஞ்சம் மளிகை சாமான்கள், மெழுகுவர்த்தி எல்லாம் வாங்கிக் கொண்டு வரகலியார் செல்வதாக திட்டம். வரகலியார், போற வழியில கோழிகமுத்தின்னு (அப்படின்னா என்ன பொருள்னு கேக்காதீங்க, தெரியாது) ஒர் இடம், அங்கே ஒரு யானை முகாம் கூட இருக்கு. அங்க நிறைய சுற்றுலா பயணிகள் வந்து போவதைக் காணாலாம்.

ஏன்னா, நிறைய காட்டெருமை (Indian Bison) பார்க்கலாம் அப்படின்னு, ஆனா, ஒண்ணு தெரிஞ்சிக்கிறது இல்லை, அருதப் பழசான எட்டூருக்கு சத்தம் கேக்கிறமாதிரி வண்டிகளை எல்லாம் எடுத்துட்டு வந்து மிருகங்களை துரத்தி தூரத்தில் நிறுத்தி விடுறாங்க அவுங்களே அப்படிங்கிறத.

நம்ம கதைக்கு போவோம். அந்த கோழிகமுத்தி யானை முகாமில நாங்க உக்காருவதில்ல, அதனையும் தாண்டி ஒரு சின்ன ஆறு ஓடுற இடமா பார்த்துத் தான் உட்கார்ந்து, ஏதாவது கொஞ்சம் கடிச்சிகிட்டு, குடிச்சிக்கிடுவோம். இப்ப உட்கார்ந்துகிட்டு இருக்கும் போதே, யாரெல்லாம் என் கூட இருக்காங்க அப்படிங்கிறத பார்த்திடுவோம்.

ஆறு பேருன்னு சொன்னேன் இல்லீய. அதில் எங்களோட குருஷி ஒர் பி.ஹெச்டி கைடு. இவரு காம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில டாக்டரேட் வாங்கினவர், நம்ம மேற்கு மலைத்தொடர்களில் வாழும் சிங்கவால் குரங்குகளின் (Lion tailed macaque) மேல் ஆராய்ச்சி செய்து. இவர் கிட்டே இருந்து, எனக்கு வாழ்க்கையை பத்தின பிரக்ஞை நிறைய கிடைச்சுதுங்க.

ஒரு சராசரி இந்திய ஆண் மகனுக்கு இருக்கும் இயல்பிலிருந்து, கொஞ்சம் விலகி வாழ்வின் சூட்சுமங்களை உணர்ந்து, மேற்கத்திய தொடுதலுடன் இந்திய முறையில் எப்படி குடும்பம் சந்தோஷமாக நடத்துவது என்பதனைப் பொருட்டு, சொல்லாமல் வாழ்ந்து சொல்லிக் கொடுத்திருக்கிறார். இவர் கையால் சமைத்து நாங்கள் நிறைய சாப்பிட்டிருக்கிறோம். ஒரு நல்ல நண்பனுக்கு நண்பனாகவும், ஆசிரியனுக்கு ஆசிரியாராகவும் இருந்து வருகிறார். இன்றும்.

அடுத்தது, நம்ம வரகலியார் யானை முகாமில் வாழும் பண்மையாளன், பெயர் எழுதப்படுவதற்காக மாற்றப்பட்டு வேல் முருகன் என்று வைத்துக்கொள்ளுவோம். முருகன் எனக்கு, என்னுடைய பி.ஹெச்டி குரு எப்படியோ அப்படியே இவரும், இன்னொரு வகையில். நேற்று விட்டுவிட்டு வந்த ஒரு படிப்பிற்கான குரங்கு கூட்டத்தை மறுநாள் எங்கு, எத்தனை மணிக்கு சென்றால் பிடிக்கலாம் என்பதிலிருந்து - நடந்து போகும் வழியில் காட்டு யானைகள் நடந்து போயிருக்கிறதா இல்லையா என்பது வரைக்கும் காட்டிற்குள் எல்லாமே அத்துப் படியாக வைத்திருப்பார்.

அதற்கெல்லாம் மேலாக, சார் என்ற வார்த்தைக்கு மறு வார்த்தை கிடையாது. இவரிடமிருந்தும் நிறைய பணிவு சார்ந்த வாழ்வியல் சூட்சுமங்களை கற்றுக் கொண்டேன். அவன் ஒரு மடையன் என்று தெரிந்தும் எப்படி அவனுக்கு வேண்டியதை கொடுத்து, மடையனை சந்தோஷமாக வைத்துக்கொள்வது என்ற மனோத்துவம் முருகனுக்கு அத்துப்படி ;).

சரி, மீதம் உள்ள நான்கு பேர்களும் ஆராய்ச்சி மாணக்கர்கள் என்னையும் சேர்த்து. இதில் ஒரு பெண்ணும் அடக்கம்.

அன்று வரகலியார் வந்து சேர்ந்தவுடன், அன்றிரவு பால் வீதியில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை அள்ளிப் பருகிக் கொண்டே (இது எங்களுக்கு ஒரு வாடிக்கை), முகாம் தீ போட்டுக் கொண்டு எங்களது குருவின் அனுபவங்களை கேட்டுக் கொண்டிருந்தோம். அப்பொழுது, முருகன் அலும்னிய தட்டுக்கள், பாத்திரங்கள் சகிதமாய் தனது மகளுடன் பருப்பு சாம்பாரும், சோறும் எடுத்துக் கொண்டு வந்திருந்தார். இருக்கும் உடம்பு அயர்ச்சியில் எது கொடுத்தாலும் அது அமிர்தமே அங்கு. அதிலும், முகாமில் இருப்பவர்களின் கைவண்ணத்தில் சமைத்ததை சாப்பிட கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவர்களின் சமையல் வேறு எங்குமே காண முடியாத சுவையில் அமைந்திருக்கும் :).

மறுநாளும் வந்தது. அன்று மிதமான குளிருடன், நல்ல மிஸ்டியான நாள். காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து, மலைகாடுகளுனுடே நடந்து பெருங்குன்று ஏறுவதாக திட்டமிட்டோம். அதன் படி ஒரு நான்கு நாட்கள் அங்கிருந்து விட்டு, திரும்ப வருவதாகவும் திட்டமிடப் பட்டது. அதற்கென தேவையான, ஸ்லிப்பிங் பேக், மெழுகுவர்த்தி, அரிசி, கருவாடு, உருளைக் கிழங்கு அப்புறம் ஓல்டு மாங்க் (அட அது இல்லாமலா :-) எல்லாம் அள்ளிக் கொண்டு. நடுங்கும் குளிரில், தரிசனம் தரும் அத்துனை மிருகங்களையும் தரிசித்துக் கொண்டே பெருங்குன்றின் அடிவாரத்தை அடைந்தாகிவிட்டது.

பெருங்குன்றின் உயரம் 1850 மீட்டர்கள் கடல் மட்டத்திற்கு மேல். ஆனால் அந்த உயரத்தின் உச்சியை அடைவதற்கு நடந்து செல்லும் பாதைதான் அலாதியான சுகம். நெஞ்சு தரையை தொட ஒரு இரண்டு அடி இடைவெளிதான் இருக்கும், அப்படியெனில் பார்த்துக் கொள்ளுங்கள் அதன் சரிவை.

நின்று நின்று பறவைகள், தவளைகள் பார்த்து நேரமாகிப் போனதால், காட்டிற்குள்ளேயே பாத்திரத்தை வைத்து கஞ்சி காச்சி, கருவாடு நெருப்பில் சுட்டு சாப்பிட்டு விட்டு மீண்டும் நடை. எப்படியோ, மாலை நேர வாக்கில், மலையின் மீது இருக்கும் குடிலுக்கு சென்றடைந்தோம். அந்த குடில் கட்டப் பட்டது வெள்ளைக்காரன் காலத்தில், கோடையை குளு குளுன்னு கொண்டாட போல.

அங்க போயிட்டா அது தாங்க புல் மேடுகள் (Grass Hills). சும்மா, கண்ணுக் கெட்டிய தூரம் வரைக்கும், உதறிப் போட்ட வெளிர் நிற பச்சை ஜமுக்காளம் போல மேடும் பள்ளமுமாக இருக்கும். நாங்க போன சமயம் பார்த்து குறிஞ்சிப் பூ பூத்திருந்தது. ரொம்ப லக்கிங்க நாங்க. அப்பப்பா, எவ்ளோ அழகு!

ஹும், அன்று இரவு கொஞ்சம் ஓல்ட் மாங்க நாக்கில் தடவிக் கொண்டு வந்த கலைப்பு தெரியாமல், ஒரு 11 மணி வாக்கில் கிடைத்த இடத்தில் சுருண்டாச்சு. மறுநாள் காலையும் புலர்ந்தது, இன்னும் அடர்த்தியான மிஸ்ட்டும், குளிருடனும். எங்கோ இன்னொரு உலகத்தில் இருப்பதை போல ஒரு உணர்வு, இருக்காதா பின்னே. எம்புட்டுத் தூரம் இந்த நாகரீக கோமாளிகளை விட்டு விட்டு, இப்படி அந்ரான காட்டுக்குள்ள வந்து இருக்கோம். ஏதாவது ஒண்ணுன்ன, தன் காலே தனக்கு உதவி இங்கெல்லாம்.

பிறகு ஒரு பதினோரு மணிக்கெல்லாம் மிஸ்ட் கொஞ்சம் மட்டுப்பட்டு, இடங்கள் தெளிவாக தெரிய ஆரம்பித்தது. வந்தது, நம்ம குருஷிக்கு ஒரு ஐடியா, வரைபடத்தை எடுத்து விரித்தார் எங்கள் முன்னால், இங்கிருந்து மூணாறு (Munnar) எங்கிருக்கிறது என்பதனை சுட்டிக் காமித்து விட்டு, நாம் இன்று அங்குதான் செல்லப் போகிறோம். இப்பொழுது கிளம்பினால் இன்று மாலைக்குள் அங்கு சென்று விடலாமென்று யூகித்து, கையில் இருக்கும் காம்பஸ்-சை நம்பி. போகலாமென்று எலோரும் ஒரு மனதாக ஒத்துக் கொண்டோம். எனக்கு மட்டும், நாளைக்கு போகலாமே என்று உள்ளுக்குள் ஒர் நப்பாசை.

முருகன், ஒரு அலும்னிய பானை, இரண்டு தட்டுக்கள், முன்று டம்ளர் அரிசி, கொஞ்சம் கருவாடு, ரெண்டு உருளைக் கிழங்குகள், மட்டும் எடுத்துக் கொண்டார். அதான் நாளைக்கு திரும்ப வந்துடுவோம்லன்னு நினைச்சுக்கிட்டு.


வழியெங்கும் குறிஞ்சி மலர்களை செடிகளோடு பார்த்துக் கொண்டே, புல் வெளி பறவைகளையும், ஓர் இடத்தில் நீலகிரிமலை ஆடு (Nilgiri Tahr) பார்க்கக் கூடிய வாய்ப்புடன் சென்று கொண்டே இருந்தோம். பிறகு ஒரு இரண்டரை மணி வாக்கில் கட்டன் காபி குடிக்கலாமென நினைத்தோம். முருகன், மல மலவென்று கொண்டுவந்ததை இறக்கி வைத்துவிட்டு, ஒரு சின்ன பாறைச் சந்தில் பாத்திரம் உட்காரும் படியாக இடத்தை தேர்வு செய்து தீ போட விறகு குச்சிகளுக்கு அலைந்ததை கவனித்து நானும் கொஞ்சம் உதவி செய்யப் போய், என் அறை மாணக்கன், ஒரு நமட்டுச் சிரிப்பை உதிர்த்து, குருஷிக்கு தூபம் போடும் விதமாக, நீயும் ஒரு அஸிஸ்டெண்ட் ஆகிவிட்டாயா என விளித்தார். எல்லோரும் சிரித்தார்கள்... பாடம் எண் 10000023 ;).

அந்த சிரிப்பின் விலை என்ன என்பதனை பின்னால் பார்க்கலாம். மீண்டும் கதைக்கு போகலாம். கட்டன் காபியும் சில பிரட் துண்டுகளும் சாப்பிட்டு விட்டு, ஒரு அரை மணி நேரம் நடந்திருப்போம், எதிர்த்தார்ப் போல ஒரு பெரிய பள்ளத்தாக்கு இறங்கி நடக்க முடியாத வாக்கில் சரிந்து கிடந்தது எங்களின் முன்னால்.

ஆனால், அருகிலேயே ஒரு பசுஞ் சோலை (Shola) இருந்தது. இந்த புல் மேடுகளில் இருக்கும் சோலைகளுக்கும் (Grass Land Sholas) அதனை விட கொஞ்சம் குறைந்த உயரத்தில் இருக்கும் சோலைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. புல் மேடுகளில் அடிக்கும் காற்று மற்றும் திசை, கொட்டும் மழையளவு, மலையின் உயரம் இவைகளைக் கொண்டு அங்கு வளரும் தாவரங்களின் உயரம், அதன் இலையமைப்பு, பூ, காய்காக்கும் விதம் இவையெல்லாமே வித்தியாசமாக இருக்கும். ரொம்ப அடர்வாக, மரங்கள் குள்ளமாகவும் இருக்கும்.

ஏற்கெனவே, மேகம் திரண்டு மிஸ்டியான சூழலில் சிறிது மழைத் தூரவும் செய்திருந்தது. இந்த நிலையில், வெளிச்சம் மங்க ஆரம்பித்து , பள்ளத்தாக்கின் மேற்புறமாக அதி வேக காற்றை உணர முடிந்தது. அதன் விளிம்பில் நின்று பார்க்கும் பொழுது தூரத்தில் தெரியும் மூணாறு ட்டீ எஸ்டேட்டின் ஃபாக்டரியின் அஸ்பெடாஸ் கூரை அங்கு அடிக்கும் வெயிலில் தகதகத்தது. அதுதான் நாங்கள் அடைய வேண்டிய இலக்கு. முடியுமா இன்றைக்கு.

வேறு வழியில்லாமல் அந்த குறைந்த அளவே நம்பகத் தன்மையுடைய திசைகாட்டியை நம்பி அந்த அடர்ந்த சோலைக்குள் இறங்கி விட்டோம். இப்பொழுது மழையும் சற்று கனத்திருந்தது. மழைக்காட்டிற்குள் எப்பொழுதுமே பூமி சற்று ஈரப்பசையுடந்தான் இருக்கும், அதிலும் புதிதாக அண்மையில் மழை பெய்திருந்தால் சறுக்கி விழுவதற்கு சொல்லவே வேண்டியதில்லை.

புதியவர்கள் அந்த ட்ரிக்கை கற்றுக் கொள்ளும் வரைக்கும், கொஞ்சம் கஷ்டம்தான் காட்டினுள் காணக் கூடிய விலங்குகளை அவைகள் நம்மை காண்பதற்கு முன்பு நாம் அவைகளை காண்பது ;-).

சோலைக்குள் அந்த நெலைமைதான் இப்பொழுது. நிறைய அட்டைகள் (Leeches) வெளி வர ஆரம்பித்து விட்டன, காலை வைத்து எடுக்குமிடமெங்கிலும் இரண்டு மூன்று தலையை தூக்கி நாட்டியமாடியபடி தனது பசியை தீர்த்துக் கொள்ள தயாராக இருந்தது. உங்களுக்கு தெரியுமா? அட்டைகள் கடிப்பதற்கு முன்பு ஹிருடின் என்ற சுரப்பை கடிக்கும் வாயிலில் சொலுத்தி விடுவதால் நமக்கு கடிக்கப்பெறுகிறோம் என்ற பிரஞ்கையும் அற்று, அவருக்கு இரத்தமும் தடையில்லாமல் சப்ளை ஆகிக் கொண்டிருக்க அந்த சுரப்பு பயன்படுகிறது. அந்த அட்டையும் இரத்தத்தை தன் வயிறு வெடிக்குமட்டும் அருந்தி விட்டு, தானாக விழுந்த பின்னும் இரத்தம் வழிவது நிற்க 5லிருந்து 10 நிமிடங்களாவது எடுத்துக் கொள்ளும்.

மீண்டும் விசயத்திற்கு போவோம். அந்த அட்டைகளுக்கு பயந்தும், மேலும் மேலும் வெளிச்சம் மங்கி இருண்டு கொண்டே சென்றதால் இதற்கு மேலும் எந்த திசையில் செல்கிறொம் என்பதனை அறியாது, நடப்பதது உசிதமல்ல என்பதனை கொண்டு வெளியில் வந்துவிடுவது என்று முடிவு கட்டினோம். ஏனெனில், திசைகாட்டி காட்டும் திசையில் சென்று நடக்கும் பொழுது சரிவு மிக மோசமாக நடக்க முடியாத பட்சமாக இருக்கும் பட்சத்தில், திசையை மாற்றி நடக்க வேண்டி வரும், அவ்வாறு அடிக்கடி மாற்றி மாற்றி சுத்தி நடக்கும் பொழுது நேரமும் விரயமாகி, காணமல் போகவும் சாத்தியமுண்டு.

எனவே, வெளியே வந்து விட்டோம். மணியைப் பார்த்தால் மணி ஆறு ஆகிவிட்டிருந்தது. இப்பொழுது மீண்டும் தூரலாக மாறி இருந்தது. கொஞ்ச நேரத்தில் அந்த சோலை ஓரத்திலேயே பெரிய பாறை ஒன்றை கண்டோம். அருகிலேயே ஒரு மரமும் கூட, சிறு தூரலிருந்து தப்பித்துக் கொள்ள. பாறையான பகுதி அட்டைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், ஏனைய மிருகங்களின் அண்மையினை அறிந்து கொள்ளவும்.

இப்பொழுது, தெரிந்து விட்டது. இரவு இங்குதான் கழியப் போகிறது எங்களுக்கென்று. இன்னும் அந்த அரிசியும் ஏனைய பொருட்களும் கைவசம் இருக்கிறது. ஓல்ட் மாங்க்தான் மிஸ்ஸிங். ஒரு உரச் சாக்கும் கைவசம், அது முருகனின் அவசர குடையாக அவாதாரமெடுத்துக் கொள்ளும் அவ்வப்பொழுது. இப்பொழுது அந்த உரச் சாக்கும், எங்களது இரண்டு பேரின் மழை கோட்டும் எங்களுக்கு கேம்பிங்க் கூரையாக ஆகிப் போனது.

முதலில் என்னைப் பார்த்து சிரித்தார்களே ஞாபகம் இருக்கிறதா, காப்பி போடும் பொழுது, சுள்ளி பொருக்குவதில் உதவினேன் முருகனுக்கென்று? இப்பொழுது சுள்ளி கதைக்கு உதாவாது. எரிக்கக் கூடிய வகையில் உள்ள மரக் கிளைகள் வேண்டும். அதுவும் ஒரு பணிரெண்டு மணி நேரத்திற்கு எரிக்கப் படும் விதமாக.

அப்படியானால், எல்லோரும் எழுந்து சென்று முழுதுமாக இருட்டுவதற்கு முன்பு பொருக்கி சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டிய நிலை. முருகனுக்கு, கவலைப் படர்ந்த சந்தோஷம், சில மடையன்கள் தன் நிலையிலிருந்து இறங்கி வந்து தனக்கு உதவுவதை பார்த்து ;).

ஒரு வழியாக கிடைத்தது. தண்ணீர், தண்ணீருக்கு என்ன பண்ணுவது? அருகில் இருந்த ஒரு சிறு பாறையின் பிளவிலிருந்து ஒரு நீண்ட புல்லின் நுனியின் வழியே வடிந்த சொட்டு நீரை, கால் கடுக்க நின்று அரை பாத்திரம் நிரப்பி எடுத்து வந்தோம். சமைப்பதற்கு அது உதவியது. கேம்ப் தீயும் போட்டாகிவிட்டது. நமது கருவாட்டு ப்ரியர் - குருஷிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அடடா, பசங்களுக்கு ஒரு மிகப் பெரிய அனுபவம் கிடைச்சுக்கிட்டு இருக்குங்கிறத நினைக்கும் பொழுது.

ஆனா, குளிருதே என்ன பண்ணுவது. இருந்த ஒரு நண்பியையும் நேரமாக நேரமாக ஒரு வட இந்திய நணபர் தனது கூட்டுக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டார். நானெல்லாம் ஒரு ட்யூப் லைட் அப்ப (அந்த காலத்தில...:-)) . சரி அது போகட்டும், அந்த இரவு, சுழற்சி அடிப்படையில் ஒருவர் மாத்தி ஒருவர் கண் விழித்திருந்து (காவலுக்காக), தூங்கி வழிஞ்சு கொண்டே, அந்த மிஸ்ட், அந்த தூரல், அந்த த்ரில் அப்படின்னு ஒரு கலந்த கலைவயா கழிந்தது.

விடிந்ததும் சில காட்டெருமைகள் அருகில் மேய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தோம். பார்த்ததும் எங்களுக்கு தெரிந்த சங்கோதப் பாஷையில் ஒருவருக்கு ஒருவர் தலையாட்டிக் கொண்டு, சாமீ திரும்ப குடிலுக்கு நடையைக் கட்டுவொமென்று, குருஷியை மல்லுக்கட்டி திரும்ப அழைத்தோம். மீண்டும் மழையில் நனைந்த குறிஞ்சு பூக்களினுடே நடந்து மதியம் போல குடில் வந்த்தடைந்தோம்.

அந்த இரவு எல்லா இரவுகளை விடவும், ஒரு சிறந்த இரவு எனக்கு. இப்ப வுடு ச்சூட்... நீங்க என்னா இரவுன்னு நினைச்சுக்கிட்டு படீச்சீங்க இதுவரைக்கும்;-))

இதற்கு முன்னால் எழுதப்பட்ட டாப் ஸ்லிப் தொடர்பான பதிவுகள்:

காதலிக்க நேரமில்லை...!

அபூர்வக் காதல் : சிம்பயொசிஸ்

பிள்ளையார சந்திச்சப்பா: யானை விரட்டு..!

31 comments:

வானமே எல்லை said...

ஹி ஹி,நாக்கை தொங்கப் போட்டுகிட்டு வந்தா இப்படி ஏமாத்திட்டிங்களே!!

Sivabalan said...

நேசி சாரி தெகா என்று நினைச்சுட்டு படித்தேன்..

சுத்தமா ஏமாத்திடீங்க..Ha Ha Ha..

ரொம்ப நல்லா எழுதியிருக்கிங்க..

சுவாரசியம்..

மங்கை said...

நான் எல்லாம் ஒன்னும் நினைக்கலைப்பா...

டாப் ஸ்லிப் பல தடவை போயிருக்கேன்.. trekking... ஆனா இது மாதிரி adventure எல்லாம் இல்லை...

நல்லா இருக்கு தெகா

துளசி கோபால் said...

நானும் எதோ மிருகம் சம்பந்தப்பட்டதுன்னு வந்தேன்.

ஆனா, நீங்க ஏமாத்தலை:-)))

Thekkikattan said...

வானமே எல்லை,

//ஹி ஹி,நாக்கை தொங்கப் போட்டுகிட்டு வந்தா இப்படி ஏமாத்திட்டிங்களே!!//

ஹா...ஹா...ஹா நல்லா ஏமாந்துட்டீங்களா ... ஆமா நானும் என்னன்னமோ செஞ்சுத்தான் பாக்கிறேன், பிள்ளைங்க வந்து படிப்பனான்னு அடம் பிடிக்குதுங்க ;-))...

இலவசக்கொத்தனார் said...

எதோ மிருகங்கள் பற்றிய தகவலா இருக்கப் போகுதுன்னு நினைச்சேன். எல்லாம் நல்லா தலைப்பு வைக்க கத்துக்கிட்டீங்கப்பா!

இந்த மாதிரி எல்லாம் இருக்கறதை விட்டுட்டு இங்க என்னய்யா பண்ணறீரு?

ramachandranusha said...

நேசி, பொறாமை தலைக்கு ஏறியது என்ற வார்த்தைகளுக்கு பொருள் இன்னைக்குத்தான் புரிந்தது. படிக்க படிக்க அந்த நிலைமைதான் எனக்கு :-)
நல்லா இருக்கு :-(

Thekkikattan said...

சிவா,

நீங்க கூட ஆசையோட ஓடி வந்தீங்களா... பாவம் புள்ளை ஏமாந்துப் போச்சுது :-)))

நன்றி சிவா!

Thekkikattan said...

நான் எல்லாம் ஒன்னும் நினைக்கலைப்பா...//

நல்லது மங்கை. கொஞ்சம் யோசிச்சுத்தான் வைச்சேன் தலைப்பை.

டாப் ஸ்லிப் பல தடவை போயிருக்கேன்.. trekking... ஆனா இது மாதிரி adventure எல்லாம் இல்லை...//

அப்படி போயிருந்தா, கண்டிப்பாக கரியன் சோலை வாட்ச் டவர் வரைக்காவதும் நடந்து போயிட்டு வந்திருப்பீங்க... செஞ்சீங்களா??

Thekkikattan said...

ஆனா, நீங்க ஏமாத்தலை:-)))//

துள்சிங்க, உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. இருந்தாலும் உங்களுக்கு துணிச்சல் ஜாஸ்திதான் :-))

பிடிச்சிருந்ததா...???

பெத்த ராயுடு said...

கணிணியெல்லாம் ஈரமாயிடுச்சேன்னு பாத்தா எல்லாம் நான் விட்ட ஜொள்ளுதான் :)))))

Jokes apart. நீங்கள் விவரித்த கானகத்தை மனக்கண்ணில் நிறுத்தும்போதே அவ்வளவு அட்டகாசமா இருக்கே.

அங்க போய் சில நாள் இருந்துட்டு வந்தா எப்படி இருக்கும்னு தோணுது.

Dharumi said...

தெக்கிக் காட்டான் ...சரியாத்தான் இருக்கு... :)

Thekkikattan said...

இ.கொ,

எதோ மிருகங்கள் பற்றிய தகவலா இருக்கப் போகுதுன்னு நினைச்சேன். எல்லாம் நல்லா தலைப்பு வைக்க கத்துக்கிட்டீங்கப்பா!//

எல்லாம் எந்த work shopல கத்துகிட்டது, உங்கள மாதிரி ஆட்கள்கிட்ட இருந்துதான் :-)

இந்த மாதிரி எல்லாம் இருக்கறதை விட்டுட்டு இங்க என்னய்யா பண்ணறீரு?//

ஒரே மாதிரி செஞ்சுகிட்டு இருந்தாலும் திகட்டிப் போயிடாதா, இலவசம். அதான், ஒரு இடைவெளின்னு வைச்சுக்குவோமே, 12 வருஷம் காட்டிற்குள் இருந்தோம்... இப்ப வெளியில இருக்கோம், திரும்பவும் போவோம், காலம் கை கூடும் பொழுது :-)

Thekkikattan said...

நேசி, பொறாமை தலைக்கு ஏறியது என்ற வார்த்தைகளுக்கு பொருள் இன்னைக்குத்தான் புரிந்தது. படிக்க படிக்க அந்த நிலைமைதான் எனக்கு :-)
நல்லா இருக்கு :-(//

ஓ, அப்பிடீங்களா!! நான் என்னங்க பண்றது. நடந்ததை அப்படியே சொன்னேன். நீங்க உண்மையிலேயே அந்த சூழ்நிலையில இருந்திருக்க முடியுமின்னு நினைச்சு ஆசை படுறீங்களா?

நல்லா இருக்குன்னு வேற அழுவாச்சி முகம் வேற :-)

G.Ragavan said...

விலங்குகள் பத்தி இருக்கும்னு நெனச்சு வரலை. உண்மையிலேயே காட்டுக்குள்ள கசமுசன்னுதான் வந்தேன். it shd be nice. நிச்சயமா நல்லாத்தான் இருக்கனும்.

ஆனாலும் ஏமாத்தம்தான். இருந்தாலும் வரையாடுகள் படம் போட்டதால ஒரு திருப்தி. :-)

கப்பி பய said...

தெகா,

சுவாரசியமான பதிவு!!

அந்த ஏரியாவில காடு சுத்தும்போது ஒரு நண்பன் புண்ணியத்துல ஆழியாறு 'காதலிக்க நேரமில்லை' கெஸ்ட் ஹவுஸ்ல தங்கியிருக்கிறோம்..ஆனா இதுவ்ரைக்கும் காட்டுக்குள்ள தங்கினதில்ல :(

ramachandranusha said...

நேசி, அப்படியே மானிட்டர் வழியாய் உள்ளே பூந்துகாட்டுக்குக்கே போய்விட்டேன்.அவ்வளவு அருமையாய் இருந்தது உங்க
விவரிப்பு. அடுத்து என்ன?

ரெ.காவின் மதுரை திட்ட நாவல்கள் இரண்டைப் பற்றி நானும் விமர்சனம் எழுதியிருக்கிறேன். அந்திம காலத்தில் பல இடங்களில் கண்கள் கலங்க வைத்துவிட்டார் இல்லையா?

Thekkikattan said...

கணிணியெல்லாம் ஈரமாயிடுச்சேன்னு பாத்தா எல்லாம் நான் விட்ட ஜொள்ளுதான் :)))))//

பெத்த ராயுடு, நல்லா ஜொள்ளுவிட்டீங்களா :-))

அங்க போய் சில நாள் இருக்கணுமா? முயற்சி பண்ணுங்க கொஞ்சம் கஷ்டம்தான் அந்த மாதிரி இடங்களுக்கு பர்மிஷன் கிடைக்கிறது.

Thekkikattan said...

தருமி,

தெக்கிக் காட்டான் ...சரியாத்தான் இருக்கு... :)//

இப்பவாவது புரிஞ்சுக்கிட்டீங்களே ஏன் நான் காட்டானாக இருக்கேன்னு :-))

அதான் உங்களையும் ஆக்கிப்புடுவோமின்னு பார்த்தேன்... ஹூம் முடியாது போல இருக்கு...

Thekkikattan said...

தருமி,

தெக்கிக் காட்டான் ...சரியாத்தான் இருக்கு... :)//

இப்பவாவது புரிஞ்சுக்கிட்டீங்களே ஏன் நான் காட்டானாக இருக்கேன்னு :-))

அதான் உங்களையும் ஆக்கிப்புடுவோமின்னு பார்த்தேன்... ஹூம் முடியாது போல இருக்கு...

Sivabalan said...

தெகா

அப்பவே சொல்லனுன்னு நினைத்தேன்..

படங்கள் எல்லாம் அருமை..

ஆமா, ஒரு படத்தில் யாரோ ஒருவர் தோள் பையுடன் போகிறாரே?? யாரவர்?

Thekkikattan said...

ஜி. ரா,

விலங்குகள் பத்தி இருக்கும்னு நெனச்சு வரலை. உண்மையிலேயே காட்டுக்குள்ள கசமுசன்னுதான் வந்தேன்.//

முருகா! நீங்களுமா :-))

எனவே வந்திட்டு வரையாடுகள் (அப்பாடா, இந்த பேரு மறந்து போயி இருந்தது, நீங்க வந்து எடுத்துக் கொடுத்ததிற்கு ரொம்ப நன்றிங்க, ஜிரா) படத்தை மட்டும் பார்த்திட்டு போயிட்டீங்களா, அப்போ, படிக்கலயா :-)

Thekkikattan said...

அப்படியா கப்பி, ஆழியாறுல லோவரா அப்பரா? லோவர் ஆழியாராத்தான் இருக்கணும், குரங்கு அருவி(Monkey Falls) இருக்கே அதுக்கு பக்கத்திலே தானே நீங்க சொல்ற கெஸ்ட் ஹவுஸ் இருக்கு? அதுவா?

ஆனா இதுவ்ரைக்கும் காட்டுக்குள்ள தங்கினதில்ல :( //

ஏங்க, அப்படி ஒரு ஆசை உங்களுக்கு...

Thekkikattan said...

உஷா,

நேசி, அப்படியே மானிட்டர் வழியாய் உள்ளே பூந்துகாட்டுக்குக்கே போய்விட்டேன்.அவ்வளவு அருமையாய் இருந்தது உங்க
விவரிப்பு. அடுத்து என்ன?//

என்னங்க இவ்வளவு சீரியஸ இருக்கீங்க :-)) மானிட்டர் வழியாவா...அய்யய்யோ அப்படி ஏதும் செஞ்சு புடாதீங்க நல்லா இருப்பீங்க... Grass Hills போகமா time travel பண்ணி வேற எங்காவது கொண்டு போய் விட்டுட போகுது :-)).

அடுத்து என்னவா, வந்து படிங்க தெரியும்...

ரெ.காவின் மதுரை திட்ட நாவல்கள் இரண்டைப் பற்றி நானும் விமர்சனம் எழுதியிருக்கிறேன். அந்திம காலத்தில் பல இடங்களில் கண்கள் கலங்க வைத்துவிட்டார் இல்லையா?//

நீங்க எழுதினீங்களா, எனக்கு தெரியாதே. கொஞ்சம் சுட்டி கொடுங்களேன் பார்ப்போம்.

உஷா, நான் அப்படி கண் கலங்கினதாத்தான் எழுதியிருந்தேன், புள்ளைங்கெல்லாம் சிரிக்கும் அப்படின்னுதான், அத வெட்டி எடுத்துப் புட்டேன். நிஜமாவே பல இடங்களில் கண் கலங்கினேன்.

தெரியுமா உங்களுக்கு, கார்த்திகேசுவிற்கு மயில் அனுப்பினேன் எனக்கும் திருப்பி மயில் அனுப்பினார் :-). ஒரே சந்தோஷம்தான் போங்க எனக்கு.

G.Ragavan said...

// Thekkikattan said...
ஜி. ரா,

விலங்குகள் பத்தி இருக்கும்னு நெனச்சு வரலை. உண்மையிலேயே காட்டுக்குள்ள கசமுசன்னுதான் வந்தேன்.//

முருகா! நீங்களுமா :-)) //

ஏங்க? கூடாதா? என்னைய முருகன் தங்கத்துலயும் வெள்ளியிலயும் செய்யலையே. :-)))))

// எனவே வந்திட்டு வரையாடுகள் (அப்பாடா, இந்த பேரு மறந்து போயி இருந்தது, நீங்க வந்து எடுத்துக் கொடுத்ததிற்கு ரொம்ப நன்றிங்க, ஜிரா) படத்தை மட்டும் பார்த்திட்டு போயிட்டீங்களா, அப்போ, படிக்கலயா :-) //

படிச்சேங்க. ஆனாலும் வரையாடுகள் படம் ரொம்ப நல்லாயிருந்துச்சுன்னு சொன்னேன்.

Thekkikattan said...

சிவா,

அந்த படங்கள் எல்லாம் புல் மேடுகளில் எடுத்ததுதான். அந்த பூக்கள் குறிஞ்சுப் பூக்களேதான்.

அந்த படத்தில் இருப்பவர் எல்லாம் நம்ம கேங்கு ஆசாமி தான் ;-). நிறைய படங்கள் திருட்டு போயிடுச்சு இல்லைன்னா இன்னும் படங்கள் இங்க போடலாம்.

Thangamani said...

அருமையான பதிவு தேகா.

delphine said...

Nicely written..

Thekkikattan said...

//ஏங்க? கூடாதா? என்னைய முருகன் தங்கத்துலயும் வெள்ளியிலயும் செய்யலையே. :-)))))//

ஜிரா, அப்போ உங்களையும் ரத்தமும், நரம்பும், சதையும் கொண்டுதான் செஞ்சுருக்கான் அப்படிங்கிறீங்க... சரி, சரி அப்ப நடத்துங்க நடத்துங்க :-))

Thekkikattan said...

தங்கமணி,

அப்பாடா, முதல் முறையாக நம்ம வீட்டுப் பக்கமா வந்த மாதிரி தெரியுது :-))

என்ன ஊரில் எல்லாம் செளவுக்யம் தானே? நான், நினைத்திருக்கிற தங்கமணின்னு நினைத்து இந்த கேள்விகள்... :-)) நீங்கள் அவரா???

Victoriaiqze said...

ஜி. ரா, விலங்குகள் பத்தி இருக்கும்னு நெனச்சு வரலை. உண்மையிலேயே காட்டுக்குள்ள கசமுசன்னுதான் வந்தேன்.// முருகா! நீங்களுமா :-)) எனவே வந்திட்டு வரையாடுகள் (அப்பாடா, இந்த பேரு மறந்து போயி இருந்தது, நீங்க வந்து எடுத்துக் கொடுத்ததிற்கு ரொம்ப நன்றிங்க, ஜிரா) படத்தை மட்டும் பார்த்திட்டு போயிட்டீங்களா, அப்போ, படிக்கலயா :-)

Related Posts with Thumbnails