Thursday, July 18, 2013

கற்சிலையொன்று உயிரெழும்பினால்...

ஒண்ணரை மாதமாகவே பூமி சற்றே சுழன்று தன்னுடைய பூமத்திய ரேகையை இடமாற்றிக் கொண்டதோ என்று நம்பும் அளவிற்கு சியாட்டிலில் கொட்டும் மழை போன்றும், நம்மூர் பருவமழை காலங்களையொட்டியே விட்டும் விடாமல் பெய்யும் மழை போன்றும் இங்கே மழை பெய்து வருகிறது.

நேற்று ஒரே பேச்சு. நான் வசிக்கும் இடத்திலிருந்து ஒரு மூணரை மைல் அளவிலே உள்ள பழைய நகரம் கான்யர்ஸில் டொர்னாடோ தரை தொட்டு இரயில் தண்டாவாளத்தையும், நிறைய மரங்களையும், கார்களையும் பொரட்டி போட்டுவிட்டு சென்று விட்டதாக.

சரி என்ன சங்கதி என்று தெரிந்து வருவோமென்று என்னுடைய காலச் சுருட்டியுடன் அந்த பக்கமா நகர்ந்தேன். அங்கே ஒரு பழைய காலத்து டச்சுடன் சிலையொன்று அமர்ந்திருப்பதை எப்போதுமே வைத்தக் கண் எடுக்காமல் அதனைச் சுற்றி காரைச் செலுத்தி கடந்து செல்வதுண்டு.

இன்று கீழே இறங்கி என்னதான் கிடைக்கிதுன்னு நெருங்கினேன். என்னால் நிஜம்மாக அந்த இடத்தை விட்டு நகர மனமேயற்று நாற்பத்தம்பது நிமிடம் சுற்றி வருவது மாதிரி ஆகிவிட்டது. அத்தனை வசீகரம் அந்த முகத்தில்! உச்சி வெயில் வேறு. வண்ணம் குழைத்து அப்பிக் கொள்ள முடியாவிட்டாலும். கிடைத்த வரை சுருட்டிக் கொண்டேன்.

அந்த கருஞ்சிலையின் முகத்தில் உள்ள வசீகரம் என் வீட்டு தோட்டத்தில் மெள்ளமே தவழ்ந்தெழும் ஆங்ரி பேர்டிடமும் ஓட்டி அந்த வசீகரச் சிலைக்கு உயிரோட்டியதைப் போன்ற பிரமை தட்டியதால்... இன்று பக்கம் பக்கமாக வைத்துப் பார்க்கத் தோன்றியது.  :)







இவள்தானோ அவள்!!



Thursday, June 13, 2013

பறவைகளின் உயரம் வேறு -ஒரு மானுடப் பார்வை!

நேற்று வெளியில உட்கார்ந்து நாலஞ்சு பேரு பேசிகிட்டு இருந்தோம். திடீர்னு மரத்து மேலே இருந்து Gray Catbirdவோட ஒரு குஞ்சு ஒண்ணு கீழே விழுந்து வைச்சிருச்சு. விழுந்த மாத்திரத்திலேயே எனக்கு தெரிஞ்சுப் போச்சு நிறைய ஆக்சன் இருக்கப்போவுதுன்னு. அடுத்த நொடி விழுந்து வைச்ச குஞ்சு சுதாரிச்சு எழுத்து தத்தித் தவறி நகர ஆரம்பிச்சிச்சு.

எங்கயோ சுத்திக்கிட்டு இருந்த அணிலொன்று சரசரவென நகர்ந்து மரத்தின் அடிக்கிளையை நோக்கி நகர அம்மா பறவை தாழப் பறந்து வந்து காச்சாமூச்சான்னு அணிலை பார்த்து சத்தம் போட ஆரம்பிச்சிச்சு தனது சிறகுகளை எல்லாம் கோவத்தில விரிச்சு அணிலை பயமுறுத்துவது மாதிரி.

பக்கத்தில அமைதியா இரை தேடிட்டு இருந்த Northern Cordinal, Eastern Towhee and Brown Thrasherநு ஒரு பெரிய பட்டாளமே ஒண்ணு கூடி வந்து சிலது அணிலை நோக்கி பறந்து போயி மேலே இடிக்கிற மாதிரி போயி மிரட்டினது. சிலது தனது சிறகுகளையும், வாலையும் ஆட்டி எத்தனை அந்த அணிலை மிரட்டி அந்த குஞ்சிடமிருந்து தூரமா வைச்சிக்க முடியுமோ அத்தனைக்கு உதவியா நின்னு பார்த்துகிச்சுங்க.

இத்தனையும் நான் பார்த்துக்கிட்டே ஓடு விவரணையில இறங்கி அந்த நிகழ்வை அங்கே உட்கார்ந்திருந்தவிங்ககிட்ட விளக்கிக்கிட்டே என்னோட கேமராவுடன் விளையாடிட்டு இருந்தேன்.

ஆனா, அந்த நிகழ்வு நடந்திட்டு இருந்தது கொஞ்சம் அடர்த்தியான கருப்பு அப்பிய இடமென்பதாலும், எங்களுக்கும் அவைகளுக்குமான தூரமும் கொஞ்சம் அதிகமென்பதாலும் சரியான படி புகைப்படமாக்க முடியல.

அந்த குஞ்சுப் பறவை இப்பவே சிறகெடுக்க ஆரம்பிச்சிருக்கிறதாலே உயர எவ்வி பறக்க முடியாம, தரையிலிருந்து ஓர் ஒண்ணரை அடி உயரத்திற்கு பறந்து கீழிறங்கிக் கொண்டிருந்தது. பின்னே புதருக்குள் நடந்து போயி மறைந்து கொண்டது.

இருந்தாலும் அவைகள் கூடி நின்று போராடினது, நமது பிழைத்து கிடப்பதற்கான ஆயத்தங்கள் எப்படியெல்லாம் நம்மை விட கீழ் தங்கிய விலங்கினங்களாக கருதப்படும் உயிரினங்களில் கூட நன்றாக ஆழ விதைக்கப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், விதிவிலக்காக மனிதன் மட்டுமே அந்த தன்முனைப்பற்ற உள்ளுணர்வின் முனையை மழுக்கி சுயநலத்தின் உச்சத்தில் இருந்து எந்தந்த காரணங்களுக்காகவோ பிறர் சாக மனமிறங்கா நவீன விலங்கினமாகி இருக்கிறோம் என்று நிரூபித்து வருகிறோம்.

இந்த சுயநலப் போக்கே நம்மை பரிணாம ஏணியில் ஏற்றி வைக்க காரணமானதும், கீழே இறக்க தேவையானதாகவும் காலம் சுற்றி வருகிறது.

Tuesday, April 16, 2013

கவிதா கலக்கின கேப்பங்கஞ்சி for தெகா - II

இது டந்த நேர்காணல் பதிவின் தொடர்ச்சி. நிறைவுப்பகுதி!


கவிதா:- நீங்கள் நிறைய படிக்கிறீர்கள் என்று தெரிகிறது..எனது தூசி தட்டப்பட்ட நூலகம்.... இதை தவிர உங்களின் பொழுதுபோக்கு...

தெகா: நிறைய மேய்ஞ்சேன்னு ஒத்துக்க மாட்டேன். ஆனா, அதன் பாதையில் செல்வதற்கு இன்னமும் என்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்னு வேணா சொல்லலாம், அந்தப் பாதையில் இருப்பதுனாலோ என்னவோ குறைவாகவே இங்க எழுத முடியுது :). மற்றபடி ஏனைய பொழுது போக்குன்னா, பிடிச்சவங்களோட நீண்ட நேரம் கடலை வறுத்து புகையை கக்க வைப்பது; அப்பாம்மா, துணைவி, பிடித்த நண்ப/பிகள் கூடன்னு. நான் ஆர்வமூட்டக் கூடியது என்று நினைக்கிற விதத்தில் அமைந்த சில பதிவுகளையும், என்னோட சொந்த கிறுக்கல்களையும் அவங்கள வம்படியா பிடிச்சு உட்கார வைச்சி, அவங்க நான் வாசிக்கிறதை கேக்கும் பொழுது கஷ்டப்படுவதை பார்த்து ரசிப்பது.

மேலும் பிடியளவே உள்ள நண்பர்கள் கூட அப்பப்ப அரட்டைக் கச்சேரி நடத்துவது. பிறகு என் குழந்தைகள், அதிலும் குறிப்பா இப்பொழுது என்னய ஹை டிமாண்டில் வைத்திருக்கும் 1 வயது பெண் புதுசு, புதுசா நானே வடிவமைத்து வாய் தாலத்தில் மெட்டிசைச்சு போடும் குத்தாட்டாம் அவளிடத்தே ஹிட்டாகி சூடு பிடித்திருப்பதால் # 6ல் கூறியபடியே ரீ-சார்ஜ் போட்டுக் கொள்வதில் இதுவும் கொஞ்சம் கூடவே எனக்கு உதவுகிறது. ட்டி.வியில் பொழுது போக்குன்னா டாகுமெண்டரிகள் பார்ப்பது.

கவிதா:- உங்கள் சொந்த ஊர், அதன் சிறப்பு, வெறுப்பு ஏதாவது.

தெகா: என்னோட சொந்த ஊர் கரம்பக்குடிங்க. புதுக்கோட்டையிலருந்து பேருந்தில் புழுதி பறக்க ஒரு 40 கிலோமீட்டர் பயணம் செய்தால் பட்டுக்கோட்டைக்கு போகிற வழியில் உள்ள ஊர். அந்த ஊருக்கே இன்னமும் தன்னை எந்தப் பக்கம் சேர்த்துகிறதுன்னு தெரியாம முழிக்கிற ஒரு கிராமமுமல்லாத சிறு டவுனுமல்லாத ஊர் 12,500 மக்களோட. என் சொந்த ஊரைப் பற்றி சொல்லிக்கணுமின்னா என்னோட டீனேஜியத்துப் பருவம்தான் நான் அங்கே வயசுக்கு வந்தது ;), நண்பர்களோட பள்ளிக்கு டிமிக்கி கொடுத்துட்டு மீன் பிடிச்சு விளையாண்டது.

நாவற்பழம் பறிக்க ஐந்து கிலோமீட்டர் மிதிவண்டி அழுத்தி மரத்திலயே குரங்குக் கணக்கா நாள் முழுக்க தொங்கிறது இப்படி எத்தனையோ மனசில பசுமையா இருக்கிற ஞாபகங்கள். இப்போ எனக்கு அங்கே ஒண்ணுமே இல்ல. என்னோட அப்பாம்மாவை தவிர்த்து சொல்லிக்கிற மாதிரின்னு இருந்தாலும், இன்னமும் ஊர் மேல ஒரு இனம் புரியா காதலுண்டு.

வெறுப்புன்னா - மக்கள் ஆசையை மட்டுமே நிறைய சுமந்துட்டு ஆனா உழைக்காம சாப்பிட நிறைய பேர் ரெடியா இருக்கிறதுனாலே நிறைய பொறாமையை மட்டுமே ஊர் சுவாசிக்க காற்றாக உற்பத்திதிட்டு இருக்கிற மாதிரியான ஒரு உணர்வு. மேலும் இயற்கையின் பொருட்டு கடந்த கால பசுமை மறைந்து எங்கும் ஒரே கள்ளிக்காடா மாறிட்டு இருக்கிறது. அதனைப் பற்றி கவலைப் படாமல் மென் மேலும் எல்லா நிலங்களிலும் யூகாலிப்டஸ் மரக் கன்றுகள் நடுவதும், வீடுகள் பெருகி நியுயார்க் மான்ஹட்டன் ரேஞ்சிக்கு நிலத்தின் விலை எகிறிவருவதும் எரிச்சல்.


கவிதா : பதிவர் சந்தோஷ் எப்போது உங்கள் பெயரை எழுதினாலும் "தோசை தெகா" என்று எழுதிகிறார். அதனால் நீங்கள் சமையல் செய்வீர்கள் என்று அறிவேன். சமையல் என்பது இந்தியாவை பொறுத்தவரை பெண் என்று தான் இன்றளவும் இருக்கிறது. பற்றாக்குறைக்கு நம் மீடியாக்கள் சமையல் என்பது பெண்ணுக்கு மட்டுமே சொந்தம் போல் குழந்தைகளுக்கு சின்ன வயதிலிருந்து மனதில் பதியவைத்து விடுகின்றன. இதைப்பற்றி உங்களின் கருத்து.

தெகா: "தோசை தெகா" அட இது வரைக்கும் எனக்கு இப்படி ஒரு பெயர் இருக்கிறதை சொல்லவே இல்லை. சந்தோஷ், கொஞ்சம் எட்டாம தூரத்திலதான் இருந்து போனாரு இல்லன்னா பாவம் அந்தாளை வைச்சே என்னோட எக்ஸ்பெரிமெண்ட் சாப்பாட்டு வகைகளை அவர் மேல வைச்சு ஒரு ஆராய்ச்சியே நடத்தி முடிச்சிருக்கலாம். அவருக்கு ஒரு சட்னி பண்ணினேன் பாருங்க, அப்படி ஒரு சட்டினியை எங்குமே சாப்பிட்டுருக்க வாய்ப்பே இல்லை. சமையலறையில் இருந்த அந்தனை முந்திரிப் பருப்பிலுருந்து, நிலக் கடலை, பொட்டுக்கடலை வரைக்கும் போட்டு ஒரு பஞ்ச் பண்ணி சட்டினியென படைத்தேன், தோசை கடைசியில எனக்கே கிடைக்கலங்க :)).

இந்த சமையல் விசயமாங்க, அது எல்லாம் தானாகவே செய்ய வந்துடும் ஏன்னா பசின்னு ஒண்ணு இருக்கில்ல, அப்படி அதுபாட்டுக்கு வரும் பொழுது யாரும் செஞ்சுப்போடன்னு ஆள் பக்கத்தில இல்லைன்னா தானாகவே தடபிபார்க்கிற மனசு வந்துடும். ஆனா, நம்மூர் சூழ்நிலையில் அதுக்கான அவசியங்களை பெரும்பாலானவர்கள் உருவாக்கிக் கொள்வதில்லை. நம் சமூகத்தில் அதற்கான அவசியமும் ஒரு நாள் வருமென்பதனை உணர்த்துவதுமில்லை. ஆனால், சமையல் என்பது என்னயப் பொறுத்த மட்டில் ஒரு அல்டிமேட் அன்பைக் காட்டும் ஒரு போர் கொல்லை. அங்கே வைத்து எல்லாவற்றையும் சரிசெய்து விடலாம் என்பதேயது! என்னோட மேற்கு மலைக்காடுகளின் தங்கலின் போது, எனக்கு இந்த சமையல் விசயம் ஒரு சர்வைவல் விசயமாத்தான் என்னிடம் ஒட்டிக்கிச்சு . அங்கிருந்து கற்றுக் கொண்டது ரொம்பவே கை கொடுத்தது இங்கு வந்து என் சமையல் கைவரிசையை பல இனமக்களிடம் காமிச்சு ஆஹா, ஒஹோ பட்டம் வாங்க. இருந்தாலும், நம்ம ஆட்கள் இந்த அனுபவத்தையும் ரொம்பவே மிஸ் பண்றாங்க, கமல் மட்டும் படங்களில் அப்பப்போ செஞ்சு காமிப்பார், வாஞ்சையோட...

ஆனா, இப்போ என்னயும் உட்கார வைச்சி சமைச்சுப் போட ஒரு ஆள் வந்தாச்சு. ரொம்ப சுகமாத்தான் இருக்கு. அப்படியே பழகிட்டா நானும் அதே குட்டைதான் :). இன்னொன்ன நல்ல கவனிச்சுப் பார்த்திங்கன்னா, சமையற் கலை வகுப்பிற்கும் சரி, எந்த மாதிரி உணவு விடுதிகளா இருந்தாலும் சரி பெருமளவில் சமையலில் ஈடுபட்டுருப்பது ஆண்கள்தானே? அது என்னாமாதிரியான முரணுங்க, அது.


கவிதா: பெண்' மாதவிடாய் இருக்கும் போது வீட்டில் தனியாக உட்கார வைப்பது, கோயிலுக்கு அனுமதிக்கப்படாததற்கு மருத்துவரீதியான காரணங்கள் இருக்கின்றன். அதற்கு நீங்கள் உடன்படுகீறீர்களா?

தெகா: அது என்னங்க "பெரிய மருத்துவ சம்பந்தமான" காரணங்கள் எனக்குத் தெரியலையே. எனக்கு தெரியறது இதுதாங்க அந்த நாட்களில் - உடம்பும் மனசும் சோர்வா இருக்கிறது அம்புட்டுத்தேன். மற்றபடி அந்தப் பதிவில பின்னூட்டங்களில் அடிச்சு விளையாண்டு இருப்பாங்க பாருங்க, மத்த விசயங்களை.

கவிதா: "ஒரு பெண்ணை உடம்பபை தாண்டி அவளின் மனதை தொட்டு அன்பை செலுத்த வேண்டும் - " - உங்களின் ஊரணிப்பார்வையில்...

தெகா: உண்மைதானே அது. அந்த மனசில மட்டுமே தானே நினைவுகளை நாம் தூக்கிச் சுமக்கிறோம் பின்னால் வரும் காலங்களிலும், சூழ்நிலை எப்படியாக மாறினாலும். இல்ல, உடம்பை வளர்த்து காமித்தோ, நல்ல ட்ரெஸ் பண்ணி, தலைக் கேசத்தை கோவிக் காமித்தோ மனதை வெல்ல முடியுமா? அப்படியே வென்றாலும் அது அப்படியே நிற்குமா இவையெல்லாமே உதிரும் காலம்தோரும்?

கவிதா:- குழந்தைகள் பெற்ற தம்பதிகளின் விவாகரத்து அவர்களின் குழந்தைகளை வெகுவாக பாதிக்கிறது (எந்த வயது குழந்தையாக இருந்தாலும.)

தெகா: மறுப்பதற்கில்லை. கண்டிப்பாக பாதிப்புறும், ஆனால் அவ்வாறு பாதிப்புறும் விகிதாச்சாரத்தை கூட்டுவதும், குறைப்பதும் அடல்டாகிய நமது கைகளிலேயே உள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களினால் பிரிய நேரிட்டால் அப் பிரச்சினையை இரு அடல்டுகளுக்கிடையேனா பிரச்சினை என்ற விகிதத்தில் மட்டுமே அணுகி குழந்தைக்கு கிடைக்க வேண்டிய அத்துனை விசயங்களையும் கவனித்துகொள்வது, இன்றியமையாததது. அவ்வாறு அக் குழந்தைகள் பெற்றோர்களில் ஒருவரை பிரிந்து வளரும் சந்தர்ப்பத்தில் மற்றொரு பெற்றோரின் பொறுப்பில் வளரும் பொழுது, தனக்கு எதிரியான முன்னால் கணவனையோ/மனைவியைப் பற்றியோ இல்லாத அவதூருகளை பிஞ்சுகளின் மனதில் விதைப்பதை, தாம் அந்த குழந்தைகளின் வாழ்வையும், மனதையும் பாதிக்கிறோமென்றும், பின்னாளில் அதுவே பேக் ஃபயர் ஆகக் கூடிய வாய்ப்பாக இருக்குமென்பதனையும் அறிந்து நடந்து கொள்வது ரொம்ப நலம் பயக்கும், அக் குழந்தைகளுக்கு பிற்காலத்தில்.

கவிதா: இந்திய குடும்ப வாழ்க்கை முறைக்கும் அமெரிக்க வாழ்க்கை முறைக்கும் இருக்கும் அதிகபட்ச நன்மை தீமைகள்? அமெரிக்கவாழ் இந்தியர்கள் படும் கஷ்டங்கள்.

தெகா: இங்க குழந்தைகளுக்கு தீர்வு எடுக்கும் முடிவை ஒரு குறிப்பிட்ட வயதிற்குமேல் அவங்க கையிலயே கொடுத்திடுறாங்க, அது ரொம்பவே நல்ல விளைவுகளை ஏற்படுத்துறதா தெரியுதுங்க. அது ஆண்/பெண் என்றாலும் தான் முயன்று பார்க்கும் முயற்சி தோல்வியுற்றாலும் அதன் மூலமாக கிடைத்த அனுபவங்கள் அந்த தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை வழங்குகிறது, அதுவே ஒரு பொறுப்புள்ள அடல்டாக வாழ்வதற்கும், நிறைய விசயங்களை சாதிப்பதற்கும் உறுதுணையாக இருக்க உதவுகிறது. இதில சில தீமைகளும் உண்டுதான் மறுப்பதற்கில்லை, ஆனால் தவறுகள் நிகழ்ந்து விடுமோன்னு பயந்திட்டே இருந்தா எப்படி அடுத்தடுத்து வரப் போகின்ற அனுபவங்களை தீர்க்கமாக அணுகி அதனில் வெற்றி பெறவும் முடியும். இப்படி தன்னிச்சையாக முடிவு எடுக்கவிடும் சமூகத்தால், சும்மா நடித்துக் கொண்டே தன்னோட முழு வாழ்க்கையையும் யாருக்காகவும் வாழ்ந்து தீர்த்துவிட முடிவதில்லை, கொஞ்சமே உண்மையாக வாழ்கிறார்களோன்னு தோணச் செய்கிறது. ஆனா, இதனையே அப்யூஸ் பண்ணுவதனையும் மறுப்பதற்கில்லை.

நம்மூர்ல இதுக்கு அப்படியே எதிர்மறையாக நடை பெறுகிறது. இதுனாலேதான், குடும்பமென்ற ஒன்று அமைத்துக் கொள்ளக் கூட பணம் கொடுத்து மணம் செய்து வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது, யாரோ பார்த்து வைத்த பெண்ணை மண முடித்துக் கொள்ள முடிகிறது, அதனில் ஏதாவது பிரச்சினையென்றாலும், யாரையாவது விரல் சுட்டி காட்டி விட்டு எனக்கென்ன என்று இருந்து விட முடிகிறது... கடைசி வரைக்கும் திருமணமான தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளமலேயே சமூகத்திற்காக வாழ்ந்து முடித்திடும் நிலையும் அதிகமாக நடைபெறுகிறது. இப்படி எத்தனையோ, தவறே தான் செய்பவன் கிடையாது என்ற மன நிலையிலையே லயித்து உயித்து வாழ்ந்து அடுத்தவர்களின் உயிரை வாங்கிவிட்டும் சென்று விடுகிறோம்.

அமெரிக்காவில் இந்தியர்கள் படும் கஷ்டமின்னா, சில பேர் இங்க ஒரு கால் அங்கே ஒரு கால்னு வைச்சிட்டு முழுமையா இரண்டு பக்கமுமே வாழமே, குழப்பத்திலயே குழந்தைகளிலிருந்து தன்னோட சுற்றி வாழும் அணைவரையும் படுத்தி எடுத்துவிடுகிறார்கள். அப்படி ஒரு மன நிலை இல்லாத பட்சத்தில், ஏதோ அங்கே கிடைக்காத ஒரு வாழ்க்கைத் தேடித்தானே இங்கு வந்திருக்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது கண்டிப்பாக மகிழ்ச்சியாத்தான் இருந்தாகணும், அப்படியில்லென்னா வேஸ்ட் எல்லாமே :)).


கவிதா: காதல் - எந்த வயது காதல் முதிர்ச்சி அடைந்ததாக இருக்கும், வெற்றி பெரும். ? மொழி,இனம், நாடு இவை கடந்த காதல் கல்யாணம் வெற்றி பெருமா?

தெகா: என்னோட "ஏன் நடிக்கணும்" பதிவு படிச்சீங்களா, அதில ரொம்பத் தெளிவா நம்மூர்க் காதல் திருமணங்கள் வெற்றிப் பெறணுமின்னா என்னன்ன அதுக்கு அடிப்படைத் தேவைகள்னு பேசியிருப்பேன். காதலுக்கு முதன்மைத் தேவை... எதனையும் திறந்த மனதுடன் அணுகும் பண்பு, மன முதிர்ச்சி, பொருளாதார தன்னிரைவு, ஒருவரின் மீது ஒருவர் வைக்கும் அசைக்க முடியா நம்பிக்கை இது போல பல பண்புகளை வளர்த்துக்ககணும் அந்தக் காதலை, மணத்தை கடைசி வரை கொண்டு போய் சேர்க்க வேண்டுமாயின்.

மனப் பொறுத்தம் அமைந்துவிட்டால் அது எல்லா தடைகளையும் தாண்டி வந்துவிடும் மேற்கூறிய ஏனைய "தேவைகளுடன்." இது இனம், மொழி, நாடு கடந்து நடை முறை படுத்தக் கூடியதுதான் என்றாலும் அசாத்திய மனத் துணிவும், வாழ்க்கை சார்ந்த தெளிவுமில்லையானால் அதுவே பின்னாளில் பெரும் இடைஞ்சலாக இருக்கக் கூடும், வரும் வாழ்க்கைச் சவால்களை எதிர் கொள்ளும் பொருட்டு.

கவிதா: உங்களிடமிருந்து அடுத்தவர்கள் (குறிப்பாக நான்) கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம்/குணம்/பண்பு ?

தெகா: வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே வாழ்ந்து பார்க்கணுமின்னு எல்லாச் சூழ்நிலையிலும் நினைக்கிற மனசு. எத்தனை முறை வீழ்ந்தாலும் வாழ்க்கையை ஒரு கடமையா வாழ நினைக்காம, திரும்பவும் ஆசை ஆசையாக வாழ நினைத்து எழுந்து நிற்கிற குணம். மற்றவங்களுக்கு எடுத்துக்காட்டா இருக்கணுமின்னுட்டு வாழ்க்கை பூராத்தையும் முகமூடி போட்டு வாழ்ந்திட்டு, எனக்கின்னு வரும்பொழுது உள்ளே வெறுமையா உணர்ரதில எனக்கு உடன்பாடு கிடையாதுங்க. அதுனாலே, எனக்கு எது சரின்னு படுதோ, அதனை எடுத்து நடத்துறேன், அதனையே என்னை சுற்றி இருப்பவர்கள் சரின்னு பார்க்கும்படியும் பக்குவப்படுத்துறது, அதுவே தவறாக என்னய பார்க்கும் பொருட்டு அது அவர்களின் பார்வைன்னு ஏற்றுக்கிற பக்குவத்தை எனக்கு ஏற்படுத்திக்கொள்ளும் பாதையிலன்னு சில கோடுகளில் பயணித்திட்டு இருக்கேன். இது போன்ற வரையறை செய்யப்பட்ட பாதையிலிருந்து விலகி, முடிவற்ற கோடுகளில் பயனிப்பதால் காலத்திற்கேற்ப வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மன நிலையோட இருக்க முடியுது. இது போன்ற மன நிலையை வளர்த்துக் கொள்ள எல்லோரும் தங்களை தயார்படுத்திகொண்டால் எத்தனை பிரச்சினைகள் காணமலே போய்விடுமென்று நினைக்கும் பொழுது சற்றே அயர்சியாக இருந்ததுண்டு.


ஓடவிட்டு அடித்து கேட்ட கேள்விகள் :

1. உங்களுக்கு பிடித்த சிறந்த 3 புத்தங்கங்கள்

1) த அல்கெமிஸ்ட் 2) கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சிக் காவியமும் 3) ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் த தேர்ட் சிம்பன்சி.

2. ஜார்ஜ் புஷ் ஷிடம்- பிடித்த ஒரு குணம்

அவரின் அசட்டுத் துணிச்சல், அதனை சொல்லிட்டு ஹக் பிக்னு சிரிச்சு வைக்கிறது.

3. உங்களின் மனைவியின் சமையலில் உங்களுக்கு பிடித்தது.

கலவைச் சாதங்களில் சிலதுகள்(மாங்காய், தேங்காய் இப்படி...).

4. இயற்கை நேசிக்கு பிடித்த கலர், பிடித்த இடம் (இந்தியாவில்), பிடித்த உடை

இப்படியெல்லாம் யோச்சித்ததே இல்லை - ட்ராபிகல் கலர்ஸ்னு. பிடித்த இடம் நிறைய இருக்கே , மலையும் மலையும் சார்ந்த இடங்களும். அமைதியா யாருமே இல்லாத இடங்கள். பிடித்த உடையன்னா "லூஸ் குலோத்திங்" கவ்வி பிடிக்காத எல்லா உடைகளும்.

5. உங்கள் குழந்தைகளுக்கு இந்திய கலாசாரத்தை சொல்லிகொடுத்து வளர்க்கறீர்களா?

குறிப்பாக இப்படித்தான்னு இருக்கிற மாதிரி எந்தவொரு அடையாளமும் காமிச்சு வாழ்றதில்லை, அப்படியே எப்படியாக நானிருக்கேனோ அதனையே பார்த்து வேணுங்கிறதை எடுத்துட்டு வேணாததை விட்டுட்டுப் போனாலும் அப்படியே எடுத்துக்கிற மனசோட நான் இருக்கேன். திணிப்பது இல்லை.

6. எல்லா பொருளிலும் ஏதோ ஒரு பதிவு நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். இன்னும் எழுத வேண்டும் என்று நினைக்கும் ஏதாவது?

நிகழ்வுகள் நடைபெற நடைபெற நமது எண்ணத்தையும் அதனைச் சார்ந்து பதிந்து வைத்து விடுவோம், அவ்வளவுதான். அதுவும், இது என்னோட வளர் நிலையில் நான் எங்கிருந்துருக்கிறேன் என்பதனை பிரிதொரு நாளில் திரும்ப புரட்டிப் பார்க்க உதவும் என்ற எண்ணத்தில்தான்.

7. அமெரிக்காவை விட்டு துரத்திவிட்டால் என்ன செய்வீர்கள்?

அடச் ச்சே ஏண்டா இவ்வளவு கால தாமதம், அப்படின்னு நினைச்சிக்கிட்டு சந்தோஷமா மூட்டை, முடிச்ச கட்டிக்கிட்டு அடுத்த டெண்ட் அடிக்க கிளம்பிட வேண்டியதுதான்.

8. உங்களுடைய வலைபதிவில் தருமி' என்ற பெயரை நிறைய பார்த்தேன்.ஏன் ன்னு சொல்ல முடியுமா?

அத அவர்கிட்ட இல்லே கேக்கணும் :). இருந்தாலும், அவரு தன்னோட எண்ணத்தை என் பதிவில் விட்டுச் செல்ல காரணமா நான் நினைக்கிறது என்னன்னா "பயகிட்ட சொன்னா எடுத்துக்கொள்ளும் மன நிலையில் இருக்கிறான்"னு நினைச்சு அப்பப்போ வந்து அவரோட தடத்தை விட்டுட்டு போறார் போல. இன்னொன்னு, அடுத்த கேப்பங்கஞ்சி நீங்க கொடுக்கப் போறது அவருக்காகத்தான் இருக்கணும், ஆனா, நிறைய தோண்டணும் அங்கே, செய்வீங்களா??

தெகாவின் இன்றைய தத்துவம் :- காகா, காகாவா இருந்தாத்தான் அதுக்கு அழகே... அதுவே தான் மயிலுக்கும்!




Thursday, April 04, 2013

மழை திருடும் குழந்தமை: w/photos...


இது ஓர் அழகிய மழைக்காலம். எப்பொழுதும் மழையென்றாலே எனக்கு அலாதிப் பிரியம். அது எனது குழந்தமையை விடாது உசிப்பு எழுப்பி மீண்டும் துளிர்க்க வைத்து விடும் ஒரு கார்காலச் சங்கிலி. இங்கு நேற்றும் இன்றும் விடாது மழை பெய்து கொண்டிருக்கிறது.

இந்த மழை ரசிப்புத் தன்மையை உளத்திலிருந்து பிரித்தெடுக்க ஒரு வயதிற்கு ஒரு சூழல் என காலம் தவாறது பல வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கொடுத்து, வயதானவர்களின் அனுபவத்தில் ஒரு கிலியையையும் சேர்த்தே செருகி வைத்து விடச் செய்யும். அது சாலையோரத்து வியாபாரியில் தொடங்கி, லாரி ஓட்டும் ஓட்டுநரைத் தொட்டு, பேருந்திற்கு பரபரப்புடன் காத்திருக்கும் அத்துனை பேரையும் வஞ்சகமில்லாமல் நனைத்தெடுத்து அவர்களின் முகத்தில் ஒரு சேர இறந்த போன குழந்தமையை கன நேரம் மறக்கடித்து துள்ளலானா முக மலர்ச்சியையும், அழுத்தி நமத்துப்போன வயோதிக முக வாட்டங்களையும் ஒரு சேர வெளிக் கொணர எத்தனிக்கும் இந்த மழை.

எனக்கும் அது போன்ற ஒரு கிலியை என் மனதினுள் விதைத்து என் குழந்தமையை திருடிச் செல்ல தலைப்பட்டது. சிறு வயதில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியில் நான் கொட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதை நிரூபிக்கும் விதமாக கூரையை பொத்துக் கொண்டு ஒரு சில இடங்களில் ஒழுகி காமித்தது. வீட்டில் பின்புறமாக அடுக்களையை ஒட்டி ஒரு கதவு. நெட்டித் திறந்தால் வெட்ட வெளிக்கு எடுத்துச் செல்ல அத்தனை அம்சக் காட்சிகளையும் உள்ளடக்கியவாறு அமைந்திருக்கும் ஒரு மந்திரக் கதவது.

தாழ்வாரத்தை உடைத்துக் கொண்டு அத்தனை மழை நீரும் உன் அடுக்களைக்குள் கொண்டு வந்து கொட்டுகிறேன் பார் என்று விடாது கொட்டித் தீர்க்கும். பாட்டி அந்த மழையை நைய்ய புடைத்து திட்டியவாரே கிடைக்கும் பாத்திரங்களைக் கொண்டு இரைத்து கொட்டுவாள். பின்பு அப்பா சிறுதொழில் செய்து வந்ததால் வாடிக்கையாளர்களின் வந்து போதலும் பாதிக்கப்பட்டது. இவைகளைப் போன்றே பல சில முகங்களை காட்டி குழந்தமை திருடல் தொடர்ந்து கொண்டே வந்தது. இருந்தாலும் நான் விட்டுக் கொடுப்பதாய் இல்லை. இது ஓர் இயற்கையின் திட்டமிடல். நம்மை அதன் முன்னால் மண்டியிடச் செய்யும் அணுகூலம். அந்த சூத்திரத்தை வென்றெடுப்பவனுக்கே இந்த மொத்த பூமியின் அத்துனை அழகையும் ஒரு சேர கையளித்து அவனை தன்னுடன் ஆரத் தழுவி தன்னுள் கரைத்துக் கொள்கிறது.

அதான் நீட்சியாக இன்று பல நாட்களாக எண்ணத்தில் வைந்திருந்த நீர்க்குமிழ் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது. இருப்பினும் குழந்தமைத் திருடல் விடுவதாய் இல்லை. எனது குடையைத் தாண்டி மழை சில் சில்லென்று என் முதுகையும், புகைப்படக் கருவியின் லென்ஸை தொட்டு என் வயோதிக வாடலை படரச் செய்ய எத்தனித்தது. புறம் தள்ளி கிடைத்ததை சுருட்டிக் கொண்டு வந்து விட்டேன். இதோ உங்களுடன் ஒரு சில மழைக்காட்சிகள்.

மழையும் நானும் என்று எழுத வேண்டுமானால் என்னால் குறைந்தது இருநூறு பக்கங்கள் எழுத முடியும் என்றே எண்ணுகிறேன். எப்பத்தானோ! :)

பி.கு: மேலும் ஓய்ந்து போன ஒரு மழை பற்றிய நினைவோடை வாசிக்க - பூவன் கடவுளாகிப் போனான்:காட்டாறு
****************************
********************

1) ஒரு தென்மேற்கு பருவ மழை காலத்தின் போது தொப்பலாக நனைந்து போன கரம்பக்குடி வீதியும், மரங்களும் அந்த ஓட்டு வீடும்.


2) மஞ்சள் வெயிலுனூடாக ஒரு அம்ம்மெரிக்கா மாலை மழை நேரம்.

 

3) இலைகளுக்கு வலிக்காமல் மெல்ல பட்டுப்பரவி உருண்டு திரண்டு...


 


4) இன்றைய மழையில் துளித் துளியாய் முகிழ்ந்து, வெடித்து குடைக்குள் எனையும் காட்டியவாறே...

Wednesday, March 20, 2013

கவிதா கலக்கின கேப்பங்கஞ்சி for தெகா - I

இந்த கேப்பங்கஞ்சிக்காக உழை உழைன்னு உழைத்த கவிதாவை எப்படியாவது கெளரவித்து காட்டிவிட வேண்டுமென்று அவரது தளத்தில் வெளியிடப்பட்ட எனது இந்த நேர்காணல் மறுபிரசுரிப்பு செய்ய பல முறை கேட்டும் எனக்கு அனுமதி வழங்காமலேயே கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.

ஒரு வழியாக மூன்று வருடங்கள் எடுத்துக் கொண்டு சரி எடுத்து போட்டுக் கொள்வதனால் போட்டு கொள்ளுங்கள் என்று அனுமதியும் கொடுத்தாகி விட்டது. அப்படி போராடி இதன் மறு பிரசுரிப்பு வாங்கியதற்கான காரணமாக சட்டென்று என் மனதில் படிவது என்ன வென்றால், பத்தி பத்தியாக நான் சிந்திச்சு எனது பார்வையை பகிர்ந்து கொண்டதை விட, இதற்கென பல மாதங்கள் என்னுடைய அத்தனை பதிவுகளையும் வாசித்து, அதனின்று கேள்விகளை உருவி மீண்டும் எங்கும் அடி பிராளமல் நான் சென்று கொண்டிருக்கிறேனா என்று என்னை மறு தோண்டுதல் செய்த கவிதாவிற்கு நன்றி கடனாகவாவது இருந்து விட்டு போகட்டுமே என்று மொத்த நேர்காணலையும் இரண்டு பகுதிகளாக பிரித்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இது எனது கடந்த வருடங்களுனுடைய முக்கிய பதிவுகளின் சாரம்சமாக அமையும் என்றால் மிகையாகது. நன்றி! Squirrel Kavitha, are you happy now! 

இதோ அந்த ஆறிப்போன கேப்பங்கஞ்சியை மைக்ரோவோவ் பண்ணி கவிதாவுடன் சேர்ந்து உங்களுக்காகவும்...

**************************************


2005ல் வலைப்பதிவு தொடங்கியுள்ள பிரபா என்ற தெகா'வின் முதல் பதிவிலே கண்டெடுத்த வார்த்தைகள் "தெக்கிக்காட்டானுக்கு முகமூடி கிடையாது, பெயரிலே தெரிந்திருக்கலாம்." முகமூடிகளோடு எழுதும் பலரின் மத்தியில், முகமூடி என்று ஒன்று இல்லாமல், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல், ஓரளவிற்கு தன்னை தானாக இருக்க வைத்துக்கொண்டு, எல்லாவிதமான பரிமாணங்களிலும், எல்லா பொருள்களிலும் எழுதக்கூடிய நண்பர் தெக்கிக்காட்டான் இன்று எங்களுடன்.

லிவிங்ஸ்மைல் வித்யா'விற்கு பிறகு கேள்விகள் கேட்க மிகவும் யோசித்த ஒரு நண்பர் இவராகத்தான் இருப்பார். இது வரை மிக எளிதாகவே எல்லோரிடமும் கேள்விகள் கேட்டு இருக்கிறேன். ஆனால் தெகாஜி ஐய் கேள்விக்கேட்க 2005-08 வரை அவருடைய எல்லா பதிவுகளையும் ஒன்று விடாமல் படித்து கேட்க வேண்டியதாக இருந்தது. காரணம் எதுவுமே கான்ரோவா, அவரை துருவி கேட்கும்படியாக இல்லை. இப்பவும் இவரை என்ன கேட்பது என்ற தெளிவில்லாமலேயே...


இதோ தெகா...

அடக் கொடுமையே! 2005-'08வரைக்கும் ஒரே மூச்சில படிச்சீங்களா? ஏன் டாக்டர் ஏதும் அறிவுருத்தினாரா எப்படித் தூக்கம் வராதவங்களுக்கும் தூக்கம் இது போன்ற போரிங்கான பதிவுகளை படிப்பதின் மூலமாக தூங்க வைக்க முடியுங்கிறமாதிரி. எப்படியோ பொழச்சுப் கெடந்து வந்து கேள்வியும் கேட்டுறீக்கலே அதுவும் இன்னமும் அந்தத் தூக்கத்திலிருந்து "தெளியாமலயே..." :)). அதுக்காகவாவது இந்தப் பதில்களை தாரேன், திரும்பவும் தூங்கவாது பயன்படுத்திக்கோங்க.

நகைச்சுவை ஒரு பக்கம். பை த வே, கவிதா உங்கள் அனைத்துக் கேள்விகளும் ரொம்பவே ஆழமாக உணர்ந்து இங்கு கொணரப்-பட்டதாகவும் என்னய நானே உட்முகமாக மேலும் பார்த்துக் கொள்ள வேண்டி கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாகவும் எண்ணச் செய்தது, உங்களின் உழைப்பும் அது சார்ந்த இந்த கேப்பங்கஞ்சியும். வாழ்த்துக்கள்! நன்றி!!

இப்பக் உங்க கேப்பங்கஞ்சி குடிச்சிக்கிட்டே... பேசுவோமா...


கவிதா: வாங்க தெகாஜி..எப்படி இருக்கீங்க. .வீட்டில் அனைவரும் சுகமா..? அமெரிக்காவில் இருக்கீங்க.அங்கேயிருந்து ஆரம்பிக்கலாமே. பொழுது விடிந்து பொழுது போன.. அமெரிக்காவை நம்பியே உலகம் இருப்பது போன்ற பிரம்மை அதிகமாகிக்கிட்டே போகுது...அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியால் நாம் கண்டிப்பாக அடிப்படுகிறோம், அடிப்படுவோம் என்று தெரிகிறது. 1 லட்சம் அமெரிக்கர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்று சமீபத்திய சர்வே சொல்லுகிறது. அங்கே இருக்கும் நம் இந்தியர்களுக்கு வருங்காலத்தில் பாதுகாப்பு இருக்குமா? உங்களால் நிலைமையை ஏதாவது கணிக்க முடியுமா .?

தெகா:- சுகத்துக்கு என்னங்க குறைச்சல், மனசு நம்ம கையாண்ட இருக்கிறதுனாலே எதைதை எப்படி பண்ணிக்கோணுமோ அப்படிப்படிப் பண்ணிப் போட்டு சந்தோஷமா வைச்சிக்க வேண்டியதுதான். எனக்கு இந்த சந்தோஷம் கடையில எடை போட்டு காசு கொடுத்து வாங்கிட முடியுங்கிறதில நம்பிக்கையில்லைங்-கோவ்(அதாவது புறப் பொருட்களின் மூலமாக). இது போலவே வீட்டில இருக்கிறவங்களையும் மனச வைச்சிக்க சொல்லி கேட்டுக்கிறதுனாலே எல்லாரும் நல்லாத்தான் இருக்கணுங்கிற மாதிரி நான் நம்பிக்கிறேன்.

[வாசகர்கள்: கேட்ட கேள்வி ஒரு வரி, இதுக்கு இப்படி எழுதினா எவன் உட்கார்ந்து படிக்கிறதாம் :))]

அமெரிக்காவா, அதை ஏன் கேக்குறீங்க நான் இங்கன வந்த நேரம் அமெரிக்காவை இந்தியாவிற்கு மாத்திட்டாங்களாம். அதுனாலே இங்கிருக்கிற பொருளாதார, கலாச்சார, மற்ற ஏனைய அதிர்வுகளை-யெல்லாம் என்னால் அங்கிருக்கும் செய்தித்தாள்களின் மூலமாகவும், ஏனைய மீடியாக்களின் மூலமாகவும்தான் உணர்ந்து கொள்ள முடிகிறதுன்னா பார்த்துக் கொள்ளுங்களேன் எந்தளவிற்கு உலகம் இறுக்கி கட்டப்பட்டிருக்கிறதா எல்லாரும் உணர்ராங்கன்னு.


இந்தியர்களின் நிலையும், பாதுகாப்பும்: பார்க்கலாம் அது வரப் போகின்ற அமெரிக்கா அதிபர் தேர்தலை ஒட்டியே சந்திக்கவிருக்கும் நிகழ்வுகளவை. குடியரசுக் கட்சி ஆட்சியமைத்தால் நிலமை கொஞ்சம் மேலும் சிக்கலாகக் கூடிய வாய்ப்புகள் அதிகமிருப்பதாக எண்ணத் தோணுகிறது. நம்மூர்ல ஐம்பது பேர் மட்டுமே ஏறிப் போர பேருந்தில 110பேரு பேரோம் எனக்கும் ஒரு ஒத்தைக் கால வைச்சிக்க நீங்க தள்ளி நின்னு இடங் கொடுக்காமயா போயிடுவீங்க, அப்படியே என் உசிருக்கு இங்க கேடு வரும் பொழுது அங்கே வாரேன்னா... சொல்லுங்க. எதுக்கும் இரட்டைக் குடியுரிமை வாங்கி வைச்சிட்டோம்ல.

கவிதா: மனித அட்டைகள்? உங்களுடன் முற்றிலுமாக முரண்படுகிறேன். கூட்டுகுடும்ப நிலை மாறுவதால், நிறைய பிரச்சனைகள் நம்மிடையே வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த பிரச்சனைகள் நம் இந்திய கலாசாரத்திற்கு எதிராக நம்மை அழைத்து செல்கின்றன. இருவரே இருக்கும் ஒரு வீட்டில், அவர்கள் தவறுகள் செய்யும் போது சொல்லிக்காட்டி திருத்தவோ, சண்டையிடும் போது நடுவில் சென்று சமாதானம் செய்யவோ ஆள் இல்லையென்றால் எல்லோருமே திருமணம் ஆன 2 வருடங்களுக்குள் விவாகரத்து பெறவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விடுவார்கள். மட்டுமல்லாது குழந்தைகள் பெரியவர்களின் ஆசிர்வாதத்திலும், அறிவுரை, அன்பிலும் வளருவதே சிறந்தது.. மட்டுமல்லாது முதியோர் இல்லங்கள் உருவாகாது. முதிய வயதில் கண்டிப்பாக நம்மின் அன்பும் அனுசரணையும் அவர்களுக்கு தேவையல்லவா?

தெகா:- இந்த கூட்டுக் குடும்பத்தினால கிடைக்கிற நன்மை தீமைகளை நன்றாகவே அலசித்தான் அந்தப் பதிவில் பேசியிருப்பேன். அதாவது ஒரு காலத்தில இது போன்ற கூட்டமைவு தன்னலமற்ற நிலை சற்றே மேலோங்கி, பொதுநலம் சற்று தூக்கலாக அதாவது தேவைகள் மட்டுக்குள் இருக்கப்பெற்று ஒரு குடும்பத்திற்குள் இருக்கப் பெற்ற அணைவரும் ஏதோ ஒரு வழியில் தனது பங்களிப்பை முன் வைத்து மன முறிவுகளை தவிர்த்து வாழ்ந்திருந்த பட்சத்தில் நீங்கள் கூறியபடி பல விதத்தில் உபயோகமாக இருந்திருக்கலாம் (ஆனா, குடும்பமே அழகிழந்து நிம்மதியில்லாமல் பல ஓட்டைகளுடனுடம், அரசியல் பூசல்களுடனும் வாழ நேரும் பொழுது அங்கே என்ன குழந்தைகளுக்கு சென்றுகிடைக்க வழிவகை இருக்க முடியும்?).

இன்றைய நிலையோ வேறாக இருக்கிறது. தேவைகள் பெருகிவிட்டது, உழைக்காமல் உண்ண வேண்டுமென்றோ அல்லது சட்டை கசங்காமல் பொருளீட்டுவது [இது போன்ற ஒட்டுண்ணி வாழ்வும் இதில வருதாங்க ஒயிட் காலராம்:)] போன்ற எண்ணம் தலைத்தோங்கி பொத்தாம் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும் மன நிலையும் வந்த நிலையில் இது போன்ற கூட்டமைவு தேவையற்ற மன உளைச்சல்களயே கொடுக்கிறது குடும்ப உறுப்பினரிடத்தே, அதுவும் குறிப்பாக வயதான பொற்றோர்களுக்கு. திருமணமான தம்பதிகளில் பிற மக்களின் பங்களீப்பு என்பது அத் திருமணம் உடைந்துவிடாமல் பாதுக்காக்கப்படவே என்று சொல்லும் நிலையே, இரு வயதுக்கு வராத சிறு பிள்ளைகளுக்கு எதற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் ஊர்? என்றுதான் மாற்றுக் கேள்வி கேக்க வைக்கிறது. அவர்களே இன்னமும் குழந்தைகளாக தங்களின் அன்றாட வாழ்வியல் முரண்களை உற்று நோக்கி, பேசித் தெளிவு ஏற்படுத்திக் கொள்ளும் மன நிலையில் கூட தங்களை வைத்துக்கொள்ளத் தெரியாத மன பக்குவத்தில் இருக்கும் பொழுது, பிறகு சம்பிரதாயத்திற்காக பிறர் கொடுக்கும் தீர்வுகளை அவர்களது என்று எண்ணி ஏமாற்றிக் கொண்டு வாழும், வாழ்வும் இனிக்கவா செய்யும்? இதிலிருந்து எனக்குத் தெரிய வருவதே, தம்பதிகளின் இடைவெளி எவ்வளவாக மனத்திலும், மணப் பொருத்தத்திலும் இருக்க முடியுமென தெரிகிறது.

இப்பொழுது மேலை நாடுகளில் அவ்வாறு "தன் பொறுப்புணர்த்தி" வாழ வழிவகை செய்யும் குழந்தைகள் அனைத்துமே பெற்றோர்களை உதாசீனப் படுத்துகிறதென்றோ, யாருமே திருமணத்தில் முழுமையாக வாழாமல் இருக்கிறார்களொன்றோ பொருள் கொள்ள முடியுமா? நான் அருகாமையிலிருந்து கவனித்த வரையிலும், பொற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமிருக்கிற உறவு நல்ல நண்பர்கள் நிலையிலிருப்பதால், தூரத்தே பிரிந்து இருந்தாலும், தேவையானதை நன்றாகவே பார்த்து பார்த்து செய்து கொடுப்பதனைப் போல் உள்ளது பொற்றோர்களுக்கு, அவர்களும் தங்களின் நிலையுணர்ந்து எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்வதால் தேவையற்ற மனச் சங்கடங்கள் தவிர்க்கப்படுகிறது.இந்தப் பதிவிலும்... முதுமை ஒரு சாபக்கேடாஅந்தப் பதிவிலும நடை பெருவதினைப் போல நான் இங்கு கண்ணுற்றது கிடையாது.

ஆனால், இங்கு போன்று பொருளாதார, சமூக கட்டமைப்பு நம்மூரில் இன்னமும் அரசாங்கமோ அல்லது மங்களோ அமைத்துக் கொள்ளாத காரணத்தினால் இது போன்ற உதாசீனங்கள், முதுமையில் அப்யூஸ் எல்லாம் பார்க்க வேண்டிய நிலையில் அவர்களை பிடித்து தள்ளிவிடுகிறது.

கவிதா: கருக்கலைப்பு சட்டம் தேவையான்னு ஒரு பதிவு போட்டு இருக்கீங்க. கண்டிப்பா தேவையில்லை. நான் கருவுகிறேன் என்றால் அது என் உடம்பும் மனசும் சம்பந்தப்பட்ட என்னுடைய சொந்த விஷயம், குழந்தை சரியாக வளரவில்லை என்பது மட்டுமல்ல எந்த ஒரு என் சொந்த காரணங்களுக்காக நான் கருவை கலைக்கலாம் என்பதே சரி என்று நினைக்கிறேன். ஒரு பெண் தனக்கு தேவை தேவையில்லை என்று தானே முடிவெடுக்க உரிமை கண்டிப்பாக கொடுக்கப்படவேண்டும் இல்லையா?

தெகா:- கருக்கலைப்புச் சட்டம் தேவையா என்ற பதிவில் என்னுடைய நிலையை தெளிவாக கூறிவிட்டேன். அதாவது கருவுற்றிருக்கும் பொழுது ஆரம்ப கால கட்டத்தில் நன்கு தேர்வுற்ற மருத்துவர்களால் கண்டறியப்பட்ட - குழந்தையின் இன்றியமையா உறுப்புகள் பாதிப்புற்று பிறப்பிற்குப் பிறகு தொன்று தொட்டு மருத்துவ தேவைகளையும், பிற மக்களின் அருகமையும், பொற்றோர்களின் ஈடுபாடு அவர்களின் பொருளாதார சூழ்நிலை இவைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கே அந்த கருவை வளர்த்து ஈன்றெடுப்பதா வேண்டாமா என்ற இறுதிக் கட்ட முடிவை அவர்களின் பொருட்டே கொடுப்பதே சிறப்பு என்று கூறியிருக்கிறேன் தெளிவாக அந்தப் பதிவின் மூலமாக.

கருத்தடை சாதனம் கொண்டு குழந்தை கட்டுப்பாட்டை தவிர்த்து விடுவதிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. தன்னால் வைத்து பார்க்க முடியாத நிலையிலும் குழந்தை "கடவுள் கொடுத்தது" அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற காலாவதியான கருத்தோட்டத்தில் எந்தவிதமான பொருளும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றிகும் மேலாக குழந்தையின் பாலினத்தைப் கண்டறியும் பொருட்டு லக்சுரியில் வைத்துக் கொள்வதும், கலைத்துக் கொள்வதெல்லாம் ரொம்பவே ட்டூ மச். எ பிக் நோ, நோ.

கவிதா:- தீவிரவாதம், வன்முறை போன்ற செயல்களில் ஈடுபடும் குழந்தைகளுக்கு அவர்களின் வளர்ப்பு முறை, குடும்ப சூழல் காரணம் என்பது தவறான கருத்தாக இருக்கிறது. எனக்கு தெரிந்து நல்ல முறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் தீயநட்பு, சமுதாய தாக்கம் போன்றவற்றால் வாழ்க்கையில் தடம் மாறி போனதை பார்த்து இருக்கிறேன். உங்களின் கருத்து.?!

தெகா:- குழந்தைகள் எது போன்ற சூழலில் வாழ்ந்து வருகிறது என்பதும், எது போன்ற பொற்றோர்களை ஒரு முன் மாதிரியாகக் கொண்டு இந்த சமூதாயத்தை முதலில் பருவத்தை எட்டுவதற்கு முன்னமே வீட்டின் வளர்ப்புச் சூழலைக் கொண்டே பார்த்து, கேட்டுத் தெரிந்து கொள்கிறது. அது போன்றே குழந்தைகளின் தனித்துவத்தன்மை பேணல் என்ற கட்டுரையின் மூலமாக எப்படி குழந்தைகள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள் என்பதனை விளக்கியிருப்பேன். என்னை பொருத்த மட்டில் பெரியவர்களின் வழிகாட்டுதல்கள் என்று கூறிக்கொண்டு எல்லாவற்றையுமே வலிய குழந்தைகளின் தலையில் வைத்து திணிப்பதனையே ஒரு வன்முறையாகத்தான் பார்க்க முடிகிறது.

மற்றபடி நீங்கள் கூறியபடியே பிரிதொரு சமயத்தில் தானும் ஒரு அடல்டாக எட்டும் நிலையில் கூடா நட்பு, தீய பழக்கம், சமூகத் தாக்கம் இன்ன பிற வன்முறையை நோக்கி அடியெடுத்துச் செல்ல வழிகோணலாமென்றாலும், அது நடைபெறும் காலமும் சூழலும் வேறு. ஆனால், முதல் அடி வளர்ப்புத் தளத்திலயே கோளாறுக்கி விடுவதுதான் மிக்க வருத்தத்துக்குரியது. உதாரணம்: பிடிக்காத ஒரு கல்வியில் கட்டாயப்படுத்தி புகுத்தி விடுவதோ, அல்லது தவறானா முறையில் பிற சமயங்களைப் பற்றியோ, அல்லது பிரிதொரு பாலினத்தின் மீது காழ்புணர்ச்சி வரும் வகையில் தனது புரியாத கருத்துக்களை தனது குழந்தைகளிடத்தே ஊட்டி வளர்த்து விடுவது, இப்படி. வித்தியாசம் புரிகிறதா??

கவிதா:- உங்களின் குட்டி கவிதைகள் படித்தேன்..:))-ஓடி ஒளியும் நாளைய பிணங்கள்!!! எப்படி இப்படி எல்லாம் சிந்திக்க தோன்றுகிறது..? உயிருடம் இருக்கும் நம்மை பிணங்கள் என்று சொல்லலாமா? உணர்வுகள் அற்றவர்களை, மனிதநேயம் இல்லாதவர்களை வேண்டுமானால் சொல்லலாம்.. ஆனால் எல்லோரையுமா? ஓடி ஒளியும் நாளைய பிணங்கள்!!!

தெகா: கவுஜா என்றால் வாழ்வின் முரண்பாடுகளின் மூட்டைகளை தோலுரித்து காட்டுவதற்கெனவே அமைந்தவை இல்லையா? அந்த ரீதியில் வைத்துப் பார்க்கும் பொழுது என்றோ ஒரு நாள் நாம் எல்லாம் மரணிக்கப் போகிறவர்கள்தான் இருந்தாலும், இன்று இறந்தவர் என்னமோ தேவையற்றுப் போனதாகவும், நமக்கு அவரை(பிணத்தை) பார்க்கக் கூட நேரமில்லா தொனியில் பரபரவென்று இருப்பதனைப் போலவும் கண்ணுற நேர்ந்ததால், அப்படி மரணத்தின் மடியில் நான் அமர்ந்து கொண்டு எள்ளி நகையாடுவதனைப் போல அமைத்திருக்கிறேன். பாதி பேரு இங்கே "இறந்த நிலையில்" தானேங்க இன்னமும் வாழ்ந்திட்டு இருக்கோம். எதுக்காகவாவது ஒன்றுக்கு தினமும் பயந்தவாறே.

கவிதா: நீங்கள் இயற்கை நேசி என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.. இது இயற்கை குணமா அல்லது நீங்கள் வளர்த்துகொண்டதா?

தெகா:- நம் எல்லோருக்குள்ளுமே அந்த வேட்டையாடும், இயற்கையுடன் ஒட்டி உறவாடி மகிழும் பொழுது கிடைக்கும் ஆத்ம சுகம் என்றைக்குமே அழியாது இருக்கும், இது குழந்தை பருவத்தையொட்டி பீரிட்டு வெளிப்படுவதனை காண முடியும், ஆனால் மீண்டும் தான் வளரும் சூழலும், வாழ்க்கைத் தேவைகளும் கொஞ்ச கொஞ்சமாக வாழ்வின் எதார்த்தம் மறந்து செயற்கைத் தனத்தில் ஒட்டிக் கொள்ள வழிவாகை செய்துவிடுகிறது. எனக்கு என்னமோ, அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி வானத்தை அன்னாந்து பார்த்து பேட்டரியை (எண்ண) ரீ-சார்ஜ் செய்து கொள்வது பழக்கமாகிப் போன ஒன்று, அதுவும் இரவு வானமென்றால் அலாதி பிரியம். அப்படியே அதற்கு கீழே இருக்கக் கூடிய மரம், மட்டை, பூச்சி அத்துனை ஜந்துக்களையும் பார்க்கும் பொழுது பூமிப் பந்தின் பரிணாமச் சுழற்சியில் நம்முடனே ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் தாம், அவைகளன்றி இங்கே நமக்கென்ன பூலோக சொர்க்கம் கிடைக்க வழி, என்றாகிப் பார்க்கத் தோன்றுகிறது.

அது அப்படியாக இருக்க ஏதோ குருட்டாம் போக்கில் நல்ல வேளையாக எனது பொற்றோர்கள் மெத்தப் படித்தவர்களாக இல்லாமல் போக, எனக்கு மூளைச் சலவை பண்ணப்படக் கூடிய வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்ததும் ஒரு லக்கியான நிகழ்வுதான், ஏனெனில் அப்படியாக அமைந்திருந்தால் இன்னேரம் எங்கோ ஒரு கூண்டுக்குள் அமர்ந்து ஆணிப் புடுங்கியிருப்பேன், கண்ணீல் ரத்தம் சொட்டச் சொட்ட. என் கல்லூரி வாழ்க்கை முழுதுமாக பச்சைப் பசேல் மேற்கு மலைக் காடுகளில் அமைந்து போனதும் நேசியாகிப் போனதற்கு மற்றொரு காரணம்.


கவிதா:- எப்படி அடுத்தவர்களை புண்படுத்தாமல் பதிவெழுத நம் மனதை கட்டுப்படுத்த வேண்டும், எப்படி முகமூடிகளாக உலாவராமல் உணமையான பெயரில் பதிவுகளும் , மறுமொழிகளும் இட நம்மை கட்டுப்படுத்தவேண்டும் என்று பதிவுலக நண்பர்களுக்கு சொல்லுங்களேன்.

தெகா: பொதுத் தளத்தில் எது போன்ற புரட்சிக் கருத்துக்களையும், மாற்றுச் சிந்தனைகளையும் யாவரும் பகிர்ந்துகொள்ளல் எண்ணி(பொறுப்போடு) வைப்பதில் நமக்கு உள்ளார்ந்த திருப்தி கிடைக்கிறது என்றாலும், ஏனையோரின் பிரதி விவாதங்களும் அவர்களின் மாற்றுக் கருத்துக்களும் ஒருமித்த சிந்தனையுடனும், இசைபுடனும் இருக்க வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பை சற்றே நம் கட்டுக்குள் வைத்துக் கொண்டாலே, பாதி இரத்த அழுத்தத்தை பங்களீப்பவர் தவிர்த்துக் கொள்ள முடியும். ஏனெனில், அது போன்ற மாற்றுச் சிந்தனைகளை முன் வைப்பவர் என்னுடைய வளர்ச்சி நிலையின் எல்லைக்குள் பிரவேசிக்காமலோ அல்லது அவருக்கு அவர் எடுத்திருக்கும் சார்பு நிலை சரியொன்றோ எண்ணிக் கொண்டிருக்கும் பட்சத்தில், எவரவர் சார்பு நிலையோ அல்லது கருத்துக்களோ தினப்படி பல மாறுதல்களை அவர்கள் எண்ணும் எண்ணமாகவே விட்டு பயணித்து செல்லும் பட்சத்தில் தானாகவே மனத்தினுள் மாற்றங்களை உணர்வர்.

இருந்தாலும், பங்களீப்பவர் அதனை முன்னமே உணர்ந்தவர் என்ற முறையில் நம்முடைய பார்வையை முன் வைக்காலமே தவிர "அடித்து பழுக்க வைத்துவிட முடியும்" என்ற அணுகு முறை ஒரு போதும் பலனளித்ததாக பொருள் கிடையாது என்று கருதி விலகி இருப்பது நலம் பயக்கலாம். பங்களீத்தவர் மனவோட்டம் எப்படியாக இருக்க வேண்டுமெனில் மாற்றுச் சிந்தனையை மனத்தினுள் விதைத்தாகிவிட்டது, காலப் போக்கில் அலசி, ஆராய்ந்து நன்மை தீமைகளை ஏற்றுக் கொள்வது வாசிப்பாளரின் கைவசமென்றெண்ணி அவர்களிடத்தேயே விட்டுவிடுவதாக இருக்க வேண்டும்.

இல்லையெனில், கோபத்தில் சொல்ல வந்த விசயத்தின் மையக் கருத்து சிதைபட்டு, எதிர்பார்க்கப்பட்ட தாக்கத்தை வாசிப்பாளனிள் விட்டுவிடாமல் இருக்க வாய்ப்புண்டு. இரண்டாவதும், சினமுறும் பொழுது அங்கே எண்ணவோட்டம் சீராக இருப்பதும் கிடையாது. ஒரு நல்ல விசயத்தை முன்னுறுத்தி எழுதப் படும் கருத்து குறைந்த பட்சம் மனத்தினுள் பல மணி நேரங்கள் தக்க வைக்கப்படும் பொருட்டு அங்கே தெளிவான சிந்தனை பிறக்க ஏதுவாகிறது, அப்படியாக முன் வைக்கப்படும் கருத்துக்களும் கண்டிப்பாக "திறந்த நிலை" (தன் முனைப்பில் தன்னை வளர்த்துக் கொள்ள விரும்புபவனை) வாசிப்பாளனை தொட்டுச் செல்லாமல் விட்டுப் போவதுமில்லை என்பது என் கருத்து.


...to be contd -2



Saturday, March 02, 2013

எகிப்து முகமூடி கிழியும் நேரமிது: Egyptian Uprising!!

எகிப்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது? அதன் மூலமாக உலகத்திற்கும் நமக்கும் என்ன செய்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த எகிப்திய எழுச்சி சூழ்நிலையில் உலக அரசியல் பெரிய மாற்றங்களை சந்தித்து கொண்டிருக்கிறது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. வெளி உலக பார்வைக்கு நம் எல்லோருக்குமே அந்த நாடு பல சிறப்பு வரலாற்று சின்னங்களை தாங்கி நன்றாகத்தானே போயிக் கொண்டிருந்தது என்பதாகத்தான் அவதானித்து வைத்திருப்போம். எகிப்திலிருந்து இது போன்ற ஒரு மக்களின் எழுச்சியை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டோம். ஆனால், இதோ நம் கண்ணிற்கு முன்பாகவே ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்த மாற்றம் அரசியல் ரீதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன் ஏனெனில் உலக அமைதிக்கே அந்த பூமியே ஒரு ‘ஹாட்ஸ்பாட்’ஆக விளங்கி வருகிறது எனலாம். அதனையொட்டியே இது வரையிலும் உலக அரசியலும் புது பொழிவு அடைந்திருக்கிறது அல்லது அழகிழந்திருக்கிறது. ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது சமச்சீராக பாய்ந்து அங்கு வாழும் மக்கள் அனைவருமே தனக்கென மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை வாழ்வதற்கென அமைந்துபட்டிருப்பது அவசியம். அது இன, மொழி பொருளாதார பரவல் என பல வகையிலும் தன்னை பேணி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதனையும் உள்ளடக்கியவாரே இருப்பது அவசியம்.

தவிர்த்து, நாட்டை ஆளும் வர்க்கம் பொதுப்படையான நலனை மறுத்து, மறந்து மக்களுக்கு எதிர் திசையில் பயணித்து தன் நலனுக்கும், பிற நாடுகளின் ஆர்வத்திற்கென இயங்கினால் இறுதி நிலை நாம் காணும் இன்றைய எகிப்தின் நிலையாகத்தான் இருக்கும்.

முப்பது வருடங்களாக தனக்கென ஒரு துணை ஜனாதிபதியைக் கூட அமைத்துக் கொள்ளாமல் எகிப்தின் அதிபர் ஹோஸ்னி முபாரக், யாருடைய லாபத்திற்கோ அமைதியான முறையில் நாட்டை ஆள்கிறேன் என்று இயங்கியிருப்பதாக இந்த மக்களின் எழுச்சி உலகத்திற்கு பறைசாற்றி நம் கண் முன்னால் விரிந்து நிற்கிறது; பதினொராவது நாளான இன்றும். வரலாற்றில் இது போன்ற அமைதியான எழுச்சி ஒரு நாட்டின் அதிபருக்கு எதிராக முன்னால் நடந்திருக்குமா என்று அறியமுடியவில்லை. இதனில் ஆச்சர்யபடத்தக்க விசயம் என்னவென்றால் இணையத்தின் பங்கு அதிகமாக பயன்பட்டிருக்கிறது இந்த மக்கள் எழுச்சிக்கு பின்னால் என்று அறியும் பொழுது உண்மையிலேயே நமக்கெல்லாம் சுத்தமான அரசியல் ஆரோக்கிய காற்று இன்னும் எட்டிவிடும் இலக்கிலேயே இருக்கிறது என்பதாகப்படுகிறது.

மக்களின் எழுச்சிக்கு முன்னால் எந்த உலக அரசியலும் மண்டியிடும் என்பதற்கு இந்த எகிப்திய மக்களின் எழுச்சி சான்று கூறி நிற்கிறது. இந்த நிலைக்கு அந்த மக்களை எடுத்து வந்திருக்கும் முப்பது வருட கால அரசியல் பின்னணியை சற்று உள்வாங்கி பார்த்தோமானல் எத்தனை துன்பங்களை எகிப்திய மக்கள் தாங்கி வந்திருப்பார்கள் என்றும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். மரங்களை வெட்டி அகலச் சாலைகளை அமைத்து கொடுப்பதும், வெளி நாட்டு தொலைகாட்சி ஊடகங்களையும், சோப் ஆப்ராக்களை ஒலிபரப்பியும், அலைபேசிகளை கிலோவிற்கு இன்ன விலை என்று தருவித்து தருவதும், இணையத்தின் அலைகற்றைகளை அகலப்படுத்திக் கொடுப்பதும் உண்மையான வளர்ச்சியாக கொண்டு ஏமாற்றி ஒரு நாட்டில் வெறுமனே மக்களை ரொம்ப நாட்கள் கட்டிப் போட்டு வைத்திருக்க முடியாது என்பதாகத்தான் இந்த காட்சி நமக்கு விளக்கி நிற்கிறது. இத்துனை குரல்கள் வெளியில் வெடித்து தெரித்து வரமுடியாமல் இருந்திருக்க வேண்டுமென்றால், இந்த நீண்ட முப்பது கால இடைவெளியில் எத்தனை அடக்கு முறைகள் பயன்படுத்தப்பட்டு, அவர்களின் குரல்வளைகள் நெரிக்கப்பட்டு ஓரமாக்கியிருக்க வேண்டும்.

பொருளாதார சமச்சீரமைவு எல்லா இடங்களிலும் நிரம்பி இருந்திருக்கவில்லை. எழுபது மில்லியன் மக்களை உள்ளடக்கிய ஒரு நாட்டில் ஒரு சாரார் மட்டும் அந்த பொருளாதார குச்சி ஐசையை சுவைத்துக் கொண்டிருக்க நிறைய படித்த இளைஞர்கள் வேலையற்று, குரல்வளை திருகப்பட்டு அடக்கி ஒடுக்கிப்பட்ட வாக்கில் இணையத்தையும் திறந்து கொடுத்து, உலக அரசியலையும் கவனிக்கும் வகையில் பணிக்கப்பட்டிருந்திருக்கிறார்கள். பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு ஒரு தீப்பொறியாக கிளம்பி இன்று காட்டுத் தீயாக நாடு முழுமைக்குமே விரவி நிற்கிறது இந்த எழுச்சி.

இந்த நிலையில் ஏன் உலகமே இந்த நிகழ்வை கவலையுடன் பேசியும், கவனித்து வருகிறது? உலகமே என்றால் அமெரிக்காவும், ஐரோப்பாவும் கவனித்து கண்ணத்தில் கைவைத்தால் உலகமே கவனிக்கிறது என்றுதானே கொள்ள வேண்டும். எகிப்தின் மக்கள் எழுச்சிக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? இங்கேதான் வருகிறது, உலக அரசியல் சித்து விளையாட்டும், மறுயமைவும். அந்த பிராந்தியத்தில் எகிப்து மிகப்பெரிய நாடு. இதன் அரசியல் நகர்வுகள் மொத்த மத்திய கிழக்கு நாடுகளிலும் அதன் அலைகளை எழுப்பும்.

இது வரையிலும் நாட்டையாண்ட அதிபர் வருடத்திற்கு 1.5 பில்லியன் டாலர்களை அமெரிக்காவிடமிருந்து பெற்று அந்தப் பணம் அங்குள்ள ராணுவத்தை மேலாண்மை செய்வதற்கெனவே செலவிடப்பட்டிருக்கிறது எனும் பொழுது சற்றே யோசிக்க வேண்டும். அமெரிக்கா எதற்காக இத்தனை பெரிய தொகையை அந்த நாட்டிற்கென கொடுத்து வருகிறது? எகிப்து தனது அண்டைய நாடான இஸ்ரேலுடன் தனது நீண்ட எல்லையை பகிர்ந்து கொள்கிறது. நம் அனைவருக்கும் தெரியும், மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்ரேலூடனான உறவு. இப்பொழுது புள்ளியை இணையுங்கள். அந்த பிராந்தியத்தில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் எந்த விசயத்திலும் கவனித்து பார்த்திருந்தால் எகிப்து எதுவுமே சொல்லுவதற்கு இல்லை என்ற நிலையையே எடுத்திருப்பதாக அறியலாம். அப்படியெனில் என்ன நடந்திருக்கலாம் அந்த எகிப்து அதிபருக்கும் அவருக்கு கீழே வாழ்ந்து வரும் மக்களுக்கும் என்பதனை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

இந்த மக்கள் போராட்டச் சூழலில், இவ்வளவு பெரிய தொகையை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கா ஜனநாயகத்தை உலகளாவிய முறையில் வழங்க உழைத்துக் கொண்டிருப்பதாக தன்னை முன்னிருத்திக் கொள்ளும் நிலையில், கண்டிப்பாக இந்த இக்கட்டான நிலையில் ஒரு நல்ல முடிவை எகிப்திற்கு மக்களின் பக்கமாக நின்று வழங்க முடியும், அவ்வாறு செய்ய வேண்டியது அதன் கடமையாகிறது.
அதுவே தன்னெழுச்சியாக ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கும் அந்த நாட்டிற்கெனவும் பிற்காலத்தில் அனைத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தன்னுடைய எஜெண்டாவை க்ளியராக முன்னெடுத்து வைக்கும் ஒரு நகர்வாக அமைய முடியும். மாறாக, 11 நாட்கள் நகர்ந்தும் இன்னமும் பழைய அரசியல் நாடங்களை அரங்கேற்றி கொண்டிருந்தால் உலக அரங்கில் முகமூடி கிழிந்து தொங்கி அமெரிக்கா தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதிலிருந்து தப்பிக்க முடியாது. மேலும் அந்த பிராந்தியத்து இளைஞர்களின் மனதில் மென்மேலும் வில்லனாக தன்னை தக்க வைத்துக் கொள்ளும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுப் போகும். இந்த சூழலை அமெரிக்கா சரியாக பயன்படுத்திக் கொள்வது மிக்க அவசியமாகிறது.

இந்த எகிப்தின் மக்கள் எழுச்சி பல நாடுகளுக்கும் தேவைப்படுவதாகத்தான் தெரிகிறது. புரையோடிப் போன அரசியல் பெருச்சாளிகளை உள்ளடக்கிய நாடுகளாக பல நாடுகள் தன் அழகிழந்து நிற்கிறது. ஊழல்களிலும், வறுமையிலும் சுயமிழந்து, தொலைகாட்சிகளிலும் அதனூடான வக்கிரங்களிலும், அலைபேசிகளிலும், இலவசங்களிலும் தற்காலிகமாக தங்களை தொலைத்து இலக்கற்று மிதந்து கொண்டிருக்கும் ஜனநாயங்களை கொண்டிருக்கிறது. அனைத்திற்கும் இது போன்ற ஒரு புதிய ஜனநாயக் எழுச்சி தேவை. அதனூடாக தங்களை மீட்டெடுத்திக் கொள்ள என்பதனையே இந்த எகிப்திய தன்னெழுச்சி தனித்துவமாக நின்று விழித்தெழ சொல்கிறது!


Photo Courtesy: NY Times and Net.

Thursday, February 28, 2013

வாழ்வும் வண்ணங்களும்! Photos




கனவு நினைவுருவாக்கம்
கொள்கையில்
வாழ்வும் முதுமையும்
மிகுதிகளாக...







பரந்த வாழ்வு
பாடகசாலையில்
தூரிகைகளைக்
கொண்டு
வண்ண
திட்டமிடுகையில்
அதனதன்வழியில்
அனைத்தும்
தன்னையே
தீட்டிக்கொண்டது!


Related Posts with Thumbnails