Saturday, March 02, 2013

எகிப்து முகமூடி கிழியும் நேரமிது: Egyptian Uprising!!

எகிப்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது? அதன் மூலமாக உலகத்திற்கும் நமக்கும் என்ன செய்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த எகிப்திய எழுச்சி சூழ்நிலையில் உலக அரசியல் பெரிய மாற்றங்களை சந்தித்து கொண்டிருக்கிறது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. வெளி உலக பார்வைக்கு நம் எல்லோருக்குமே அந்த நாடு பல சிறப்பு வரலாற்று சின்னங்களை தாங்கி நன்றாகத்தானே போயிக் கொண்டிருந்தது என்பதாகத்தான் அவதானித்து வைத்திருப்போம். எகிப்திலிருந்து இது போன்ற ஒரு மக்களின் எழுச்சியை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டோம். ஆனால், இதோ நம் கண்ணிற்கு முன்பாகவே ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்த மாற்றம் அரசியல் ரீதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன் ஏனெனில் உலக அமைதிக்கே அந்த பூமியே ஒரு ‘ஹாட்ஸ்பாட்’ஆக விளங்கி வருகிறது எனலாம். அதனையொட்டியே இது வரையிலும் உலக அரசியலும் புது பொழிவு அடைந்திருக்கிறது அல்லது அழகிழந்திருக்கிறது. ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது சமச்சீராக பாய்ந்து அங்கு வாழும் மக்கள் அனைவருமே தனக்கென மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை வாழ்வதற்கென அமைந்துபட்டிருப்பது அவசியம். அது இன, மொழி பொருளாதார பரவல் என பல வகையிலும் தன்னை பேணி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதனையும் உள்ளடக்கியவாரே இருப்பது அவசியம்.

தவிர்த்து, நாட்டை ஆளும் வர்க்கம் பொதுப்படையான நலனை மறுத்து, மறந்து மக்களுக்கு எதிர் திசையில் பயணித்து தன் நலனுக்கும், பிற நாடுகளின் ஆர்வத்திற்கென இயங்கினால் இறுதி நிலை நாம் காணும் இன்றைய எகிப்தின் நிலையாகத்தான் இருக்கும்.

முப்பது வருடங்களாக தனக்கென ஒரு துணை ஜனாதிபதியைக் கூட அமைத்துக் கொள்ளாமல் எகிப்தின் அதிபர் ஹோஸ்னி முபாரக், யாருடைய லாபத்திற்கோ அமைதியான முறையில் நாட்டை ஆள்கிறேன் என்று இயங்கியிருப்பதாக இந்த மக்களின் எழுச்சி உலகத்திற்கு பறைசாற்றி நம் கண் முன்னால் விரிந்து நிற்கிறது; பதினொராவது நாளான இன்றும். வரலாற்றில் இது போன்ற அமைதியான எழுச்சி ஒரு நாட்டின் அதிபருக்கு எதிராக முன்னால் நடந்திருக்குமா என்று அறியமுடியவில்லை. இதனில் ஆச்சர்யபடத்தக்க விசயம் என்னவென்றால் இணையத்தின் பங்கு அதிகமாக பயன்பட்டிருக்கிறது இந்த மக்கள் எழுச்சிக்கு பின்னால் என்று அறியும் பொழுது உண்மையிலேயே நமக்கெல்லாம் சுத்தமான அரசியல் ஆரோக்கிய காற்று இன்னும் எட்டிவிடும் இலக்கிலேயே இருக்கிறது என்பதாகப்படுகிறது.

மக்களின் எழுச்சிக்கு முன்னால் எந்த உலக அரசியலும் மண்டியிடும் என்பதற்கு இந்த எகிப்திய மக்களின் எழுச்சி சான்று கூறி நிற்கிறது. இந்த நிலைக்கு அந்த மக்களை எடுத்து வந்திருக்கும் முப்பது வருட கால அரசியல் பின்னணியை சற்று உள்வாங்கி பார்த்தோமானல் எத்தனை துன்பங்களை எகிப்திய மக்கள் தாங்கி வந்திருப்பார்கள் என்றும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். மரங்களை வெட்டி அகலச் சாலைகளை அமைத்து கொடுப்பதும், வெளி நாட்டு தொலைகாட்சி ஊடகங்களையும், சோப் ஆப்ராக்களை ஒலிபரப்பியும், அலைபேசிகளை கிலோவிற்கு இன்ன விலை என்று தருவித்து தருவதும், இணையத்தின் அலைகற்றைகளை அகலப்படுத்திக் கொடுப்பதும் உண்மையான வளர்ச்சியாக கொண்டு ஏமாற்றி ஒரு நாட்டில் வெறுமனே மக்களை ரொம்ப நாட்கள் கட்டிப் போட்டு வைத்திருக்க முடியாது என்பதாகத்தான் இந்த காட்சி நமக்கு விளக்கி நிற்கிறது. இத்துனை குரல்கள் வெளியில் வெடித்து தெரித்து வரமுடியாமல் இருந்திருக்க வேண்டுமென்றால், இந்த நீண்ட முப்பது கால இடைவெளியில் எத்தனை அடக்கு முறைகள் பயன்படுத்தப்பட்டு, அவர்களின் குரல்வளைகள் நெரிக்கப்பட்டு ஓரமாக்கியிருக்க வேண்டும்.

பொருளாதார சமச்சீரமைவு எல்லா இடங்களிலும் நிரம்பி இருந்திருக்கவில்லை. எழுபது மில்லியன் மக்களை உள்ளடக்கிய ஒரு நாட்டில் ஒரு சாரார் மட்டும் அந்த பொருளாதார குச்சி ஐசையை சுவைத்துக் கொண்டிருக்க நிறைய படித்த இளைஞர்கள் வேலையற்று, குரல்வளை திருகப்பட்டு அடக்கி ஒடுக்கிப்பட்ட வாக்கில் இணையத்தையும் திறந்து கொடுத்து, உலக அரசியலையும் கவனிக்கும் வகையில் பணிக்கப்பட்டிருந்திருக்கிறார்கள். பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு ஒரு தீப்பொறியாக கிளம்பி இன்று காட்டுத் தீயாக நாடு முழுமைக்குமே விரவி நிற்கிறது இந்த எழுச்சி.

இந்த நிலையில் ஏன் உலகமே இந்த நிகழ்வை கவலையுடன் பேசியும், கவனித்து வருகிறது? உலகமே என்றால் அமெரிக்காவும், ஐரோப்பாவும் கவனித்து கண்ணத்தில் கைவைத்தால் உலகமே கவனிக்கிறது என்றுதானே கொள்ள வேண்டும். எகிப்தின் மக்கள் எழுச்சிக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? இங்கேதான் வருகிறது, உலக அரசியல் சித்து விளையாட்டும், மறுயமைவும். அந்த பிராந்தியத்தில் எகிப்து மிகப்பெரிய நாடு. இதன் அரசியல் நகர்வுகள் மொத்த மத்திய கிழக்கு நாடுகளிலும் அதன் அலைகளை எழுப்பும்.

இது வரையிலும் நாட்டையாண்ட அதிபர் வருடத்திற்கு 1.5 பில்லியன் டாலர்களை அமெரிக்காவிடமிருந்து பெற்று அந்தப் பணம் அங்குள்ள ராணுவத்தை மேலாண்மை செய்வதற்கெனவே செலவிடப்பட்டிருக்கிறது எனும் பொழுது சற்றே யோசிக்க வேண்டும். அமெரிக்கா எதற்காக இத்தனை பெரிய தொகையை அந்த நாட்டிற்கென கொடுத்து வருகிறது? எகிப்து தனது அண்டைய நாடான இஸ்ரேலுடன் தனது நீண்ட எல்லையை பகிர்ந்து கொள்கிறது. நம் அனைவருக்கும் தெரியும், மத்திய கிழக்கு நாடுகளின் இஸ்ரேலூடனான உறவு. இப்பொழுது புள்ளியை இணையுங்கள். அந்த பிராந்தியத்தில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் எந்த விசயத்திலும் கவனித்து பார்த்திருந்தால் எகிப்து எதுவுமே சொல்லுவதற்கு இல்லை என்ற நிலையையே எடுத்திருப்பதாக அறியலாம். அப்படியெனில் என்ன நடந்திருக்கலாம் அந்த எகிப்து அதிபருக்கும் அவருக்கு கீழே வாழ்ந்து வரும் மக்களுக்கும் என்பதனை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

இந்த மக்கள் போராட்டச் சூழலில், இவ்வளவு பெரிய தொகையை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கா ஜனநாயகத்தை உலகளாவிய முறையில் வழங்க உழைத்துக் கொண்டிருப்பதாக தன்னை முன்னிருத்திக் கொள்ளும் நிலையில், கண்டிப்பாக இந்த இக்கட்டான நிலையில் ஒரு நல்ல முடிவை எகிப்திற்கு மக்களின் பக்கமாக நின்று வழங்க முடியும், அவ்வாறு செய்ய வேண்டியது அதன் கடமையாகிறது.
அதுவே தன்னெழுச்சியாக ஜனநாயகத்திற்காக குரல் கொடுக்கும் அந்த நாட்டிற்கெனவும் பிற்காலத்தில் அனைத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தன்னுடைய எஜெண்டாவை க்ளியராக முன்னெடுத்து வைக்கும் ஒரு நகர்வாக அமைய முடியும். மாறாக, 11 நாட்கள் நகர்ந்தும் இன்னமும் பழைய அரசியல் நாடங்களை அரங்கேற்றி கொண்டிருந்தால் உலக அரங்கில் முகமூடி கிழிந்து தொங்கி அமெரிக்கா தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதிலிருந்து தப்பிக்க முடியாது. மேலும் அந்த பிராந்தியத்து இளைஞர்களின் மனதில் மென்மேலும் வில்லனாக தன்னை தக்க வைத்துக் கொள்ளும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுப் போகும். இந்த சூழலை அமெரிக்கா சரியாக பயன்படுத்திக் கொள்வது மிக்க அவசியமாகிறது.

இந்த எகிப்தின் மக்கள் எழுச்சி பல நாடுகளுக்கும் தேவைப்படுவதாகத்தான் தெரிகிறது. புரையோடிப் போன அரசியல் பெருச்சாளிகளை உள்ளடக்கிய நாடுகளாக பல நாடுகள் தன் அழகிழந்து நிற்கிறது. ஊழல்களிலும், வறுமையிலும் சுயமிழந்து, தொலைகாட்சிகளிலும் அதனூடான வக்கிரங்களிலும், அலைபேசிகளிலும், இலவசங்களிலும் தற்காலிகமாக தங்களை தொலைத்து இலக்கற்று மிதந்து கொண்டிருக்கும் ஜனநாயங்களை கொண்டிருக்கிறது. அனைத்திற்கும் இது போன்ற ஒரு புதிய ஜனநாயக் எழுச்சி தேவை. அதனூடாக தங்களை மீட்டெடுத்திக் கொள்ள என்பதனையே இந்த எகிப்திய தன்னெழுச்சி தனித்துவமாக நின்று விழித்தெழ சொல்கிறது!


Photo Courtesy: NY Times and Net.

5 comments:

Thekkikattan|தெகா said...

இன்னும் நாங்கள் ட்விட்டரில் நமது மீனவர்களுக்கென நடத்தும் பிரச்சாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கலந்து கொள்ளாதவர்கள், ஏற்கெனவே கலந்து கொண்டு மனம் சோர்ந்தவர்கள் மீண்டு’ம் வாங்க இங்கே #tnfisherma

எண்ணங்கள் 13189034291840215795 said...

1.5 பில்லியன் டாலர்களை அமெரிக்காவிடமிருந்து பெற்று //

இன்று ஜெர்மன் டிவி DW ல் பேட்டி கண்டபோது " வாஷிங்டன்னில் , எகிப்தில் யார் வரணும்னு நினைக்கிறார்கள் ?. " என்றே நேரிடையாக கேட்டார்கள்..

எல்லாம் பெரியண்ணன் கீழேதான் கட்டுரை சொல்வதுபோல..

நல்ல அலசல்..

பல நாடுகள் விழிக்க ஆரம்பித்துள்ளது..

http://thavaru.blogspot.com/ said...

ஆதாரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் என மக்களை பிளவுப்படுத்தி விட்டார்கள்.ஆயினும் போராட்டம் தொடர்கிறது.

அரசியல் என்பது எங்கு நோக்கினும் அசிங்கப்பட்டே நிற்கிறது. அதிலும் சிறிது ஒழுங்கு என்பது தனிமனித ஒழுக்கத்தையே சார்ந்துநிற்கிறது தெகா..

Anonymous said...

Man, why this re-post after two years of the revolution. In Egypt now happening so many things. Why don't find any srticle and post that here

Anonymous said...

எகிப்து மக்களின் கையறுனிலையைக் கானூறுவார் யார் இங்க....... பூர்வாங்க புதினமாக திரியும் பெரியண்னத்தனத்தின் வைதீக வாஸ்தலயங்களை சாமான்யர்கள் எப்பபோ அறிவார்கள். மத்தளமாய் அடிபட சாமான்யன் தினத்திங்களின் தருஷ்ய நிமிடங்களும் உத்தரமாக உள்ளதாலேயே சமுதாய அடி சட்டென விழுகின்றதே. அற்றைத் திங்களில் அமுதூரம் புன்னைவன நிலவின் ஒளியில் நைல் பார்த்த நினைவொன்று நெஞ்சை நெடுநேராய் எனோ பிசைகிறது.

Related Posts with Thumbnails