Monday, June 14, 2010

அமெரிக்கா எண்ணெய்க் கசிவும் உலகளாவிய உயிர்ப் பேரழிவும்...

கவலைப் படுவதற்கென ஒரு விசயமா ரெண்டு விசயமா இந்த உலகத்துல இருக்குது. திரும்பின பக்கமெல்லாம் ஏதாவது பார்த்து தொலைஞ்சு எந்த சுவத்தில மண்டையை முட்டிக்கிறதுங்கிற அளவிலான நாச வேலைகள் நடந்துக்கிட்டே இருக்குதே!

ஒரளவிற்கு எல்லாரும் இன்றைய நாள்ல கேள்விப் பட்டிருப்போம். வளைகுடா மெக்சிகோ
கடலில் கச்சா எண்ணெய்க் கிணறு வெடித்து ஒரு நாளைக்கு சராசரியாய் 60,000 பீப்பாய்கள் அளவிலான கச்சா எண்ணெய் கடல் நீரில் கலந்து வருகிறதென. நம்மூர்ச் செய்தித் தாள்கள் பெரிய அளவில் இதனைப் பற்றி எழுதியாக எங்கும் தெரியவில்லை. அவர்களுக்கு ஜோடனையில் திரித்து செய்திகள் கொடுப்பதற்கே நேரம் சரியாக இருக்கும் பொழுது, உண்மையான விசயங்கள் குறித்து ஆராய்ந்து மக்களுக்கு செய்தி கொடுப்பதற்கு ஏது நேரம்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். கடைசியாக பெரிய அளவில் இது போன்ற கடல் நீர் மாசுபாடு 1989ல் எக்‌ஷான் வால்டெஷ் என்ற கப்பல் சுமாருக்கு 11 மில்லியன் அளவிலான கச்சா எண்ணெய்யை கடலில் கொட்ட நேர்ந்ததாம், அதுவும் சூழலியல் முக்கியத்துவமுற்ற பகுதியில். அதற்கு பிறகான மிகப் பெரிய சுற்றுச் சூழல் சீரழிவு என்றால் அது கடந்த இரண்டு மாதங்களாக நடந்தேறும் இந்த BP (British Petroleum) கம்பெனிக்கு சொந்தமான எண்ணெய் கிணறு விபத்துதான்.

இது ஒரு ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எடுக்கும், மற்றுமொரு மனிதப் பேராசைத் திட்டம். இந்த விபத்தினையொட்டி இன்னமும் வெடித்த குழாய் அடைக்க முடியாமல் போக, இன்றைய அமெரிக்கப் அதிபர் பல் வேறுபட்ட அரசியல், அறிவியல் விற்பன்னர்களாலும் விமர்சிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், எனக்கு என்ன புரியவில்லையென்றால் இந்தக் கிணறு யாருடைய ஆட்சிக் காலத்தின் போது ‘ஒகே’வென’ கையெழுத்தானது, அந்த சமயத்தில எது போன்ற திட்ட விவரணைகள் இது போன்றதொரு விபத்து நிகழ்ந்தால், அதனை சமாளிக்கும் விதமாக திட்டம் இருப்பதாக விளக்கியிருப்பார்கள் போன்ற கேள்விகள் எல்லாம் எழும்பாமல், என்னமோ இன்றைய அதிபர் அந்த குழாய் வெடிப்பை அவரே மூச்சடைச்சு, ஆழ்கடல் சென்று அடைத்து விட வேண்டுமென்ற பிம்பத்தை வழங்கி தினமும் தொலைகாட்சிகளில் பேசிவருவது செமையா எரிச்சலூட்டுகிறது.

எது எப்படி இருப்பினும், இந்த கச்சா எண்ணெய் கடலில் கலந்து வரும் வேகம் உண்மையிலேயே மிகவும் கவலை அளிக்கக் கூடியது. இது உலகம் தழுவிய முறையில் அதன் பலன்களை அனுபவிக்கக் கூடிய ஒரு மாபெரும் சீரழிவை பெருக்கித் தரும் நிகழ்வு. இந்தக் கழிவு பல்வேறு வகையில் கடல் வாழ் மற்றும் அதனையொட்டிய கரையோர சுற்றுச் சூழலில் பெரிய மாற்றங்களை சங்கிலித் தொடர் போல ஏற்படுத்தும் வல்லமை பெற்றது.

மேலும், இந்தக் கழிவு ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு காற்றின் திசையினைக் கொண்டு கடல் நீர் பயணிக்க இருப்பதால் உலகின் மற்ற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லும் ஆபாயமிருக்கிறது. சரி, இந்த விபத்தினால் எது போன்ற மாற்றங்களை, பேரழிவுகளை உயிரினங்களும் நாமும் இன்று அனுபவித்திக் கொண்டிருக்கிறோம்; சிலவைகளை மட்டும் பார்ப்போமா...- எண்ணெய், நீருடன் கலக்கும் பொழுது அது வேதிய மாற்றத்திற்கு உட்பட்டு "mousse" என்ற பிசு பிசுப்பான நிலையைடைந்து விடுகிறதாம். அந்த நிலையில் எது போன்ற ஜீவராசிகள் அதன் அருகாமைக்கு தள்ளப்பட்டாலும் யோசிச்சுப் பார்த்துக்கோங்க... கதை இப்படித்தான் ஆயிப் போகும்.

- பறவைகளில் ஹைபோதெர்மியா வந்து சிறகுகளின் வெப்பச் சுழலேற்றத்தை தடுப்பதின் மூலம் அவைகள் நீரில் மூழ்கும் வாய்ப்பும், பறக்கும் திறனை இழந்து விடுகிறது; சிறகுகளில் எண்ணெய் ஏறி ஹெவியாகி விடுவதால்.

-மற்ற கடல் வாழ் பாலூட்டிகளின் (seal) குட்டிகளுக்கு கூட ஹைபோதெர்மியாவைக் கொண்டுவருகிறதாம்.

- எண்ணெய், உணவுடன் உட்கொள்ளப் படும் பொழுது நேரடியாக நச்சு உணவாகிப் போய்விடுகிறதாம்; அப்படியே இல்லை என்றாலும் நோய் வாய் பட்டு இறக்க நேரிடுகிறது. மேலும் உணவுச் சங்கிலியில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு சென்று விடுவதாகவும் அறிகிறோம். பவளப் பாறைகளும், shelfishகளும் நேரடியாக தப்பிப் பிழைப்பதற்கு வேறு வழியின்றி பேரழிவை சந்தித்து விடுகிறது.

- பறவைகள் மற்றும் விலங்குகளின் சுவாச மண்டலத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதித்து விடுகிறது.

- இனப்பெருக்கம் செய்வதில் தடை ஏற்படுத்துவதுடன், இனப் பெருக்கம் செய்யும் சுற்றுச் சூழல் பகுதிகளையும் கெடுத்து விடுகிறது நீண்ட நெடிய காலத்திற்கு.

- பறவைகள் மற்றும் கடல் ஆமைகளின் முட்டை ஓடுகள் மெலிவடைய வைத்து விடுகிறது. மீன்களின் லார்வாக்களில் குறைபாடுகளையும் உருவாக்கக் காரணமாகிவிடுகிறது.


- கடற் புற்கள், மற்ற உணவளிக்கும்/பாதுகாப்பு பகுதியாக விளங்கும் கடற் தாவரங்களின் மீதாகவும் இதன் விளைவுகளை விட்டுச் செல்வதுடன், பூஞ்சைக் காளான்களின் மீதும் கை வைத்து விடுவதால், நீரின் மொத்த (பிராணவாயு இழப்பின் மூலமாக) சூழலியத்தையே மாற்றியமைத்ததாகி விடுகிறது.

இத்தனைக்கிடையிலும், என்னைச் சுற்றிலும் இன்னும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் நடந்தே வருகிறது, இது ஒன்றும் புதிதல்ல என்று; பெரிதாக கவலைப் படுவதற்கில்லை என்று வாதிடுகிறார்கள். அது போன்று ஒரு இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மேலே சொன்னவாறு தன்னுடைய ஜால்ஜாபினை முன் வைத்தார் ஒருவர். அவரிடத்தில் நான் சொன்ன ஒரு விசயம், ஆய்வுக் கூடங்களில் நாம் ஒரு வேதியப் பொருளை மற்றொரு வேதியப் பொருளுடன் குறிப்பிட்டளவு கலக்கும் பொழுது அதன் மூலமாக நாம் விரும்பிய மாற்றத்தை அடைய வைக்கிறோம் அல்லது தானாகாவே அது வேறு ஒரு விளைவாக நிறமூட்டிக் காமித்துக் கொள்கிறது - அது போன்றே நாம் இழைக்கும் அத்துனை அநீதிகளுக்கும் இந்த பூமி என்ற பெரிய ஆய்வுக் குடுவை ‘போதும்’ என்ற நிலையை அடைய எந்தக் கடைசி குத்து மல்யுத்த வீரனைச் சாய்ப்பதற்கு இணையாக சாய்க்க வல்லதாக இருக்கப் போகிறதோ அன்று உணர்ந்து கொள்வோம், நம்முடைய தத்துப்பித்து காரணங்களுக்கான உண்மையான விளைவை.

அம்மாம் பெரிய டைனோசாரே ஒன்றுமில்லை என்று போய் விட்டது, இவ்வளவிற்கும் அவைகள் தன்னுடைய அகோர பசிக்கு சதா கண்டதை தின்று வைத்த ஒரு விதயத்திற்கே, அன்னிக்கு இந்தப் பூமியே பார்த்து இவிங்கள வைச்சு மேய்க்க முடியாதுன்னு ஊத்தி மூடி வைச்ச மாதிரி,இன்னிக்கு நம்ம அலும்பு ரொம்பவே ஓவரா இருக்கு, என்னக்கி உள் வாங்கிக்கப் போவுதோ!!Photo Courtesy: The Atlanta Journal-Constitution.

58 comments:

கோவி.கண்ணன் said...

//அம்மாம் பெரிய டைனோசாரே ஒன்றுமில்லை என்று போய் விட்டது, இவ்வளவிற்கும் அவைகள் தன்னுடைய அகோர பசிக்கு சதா கண்டதை தின்று வைத்த ஒரு விதயத்திற்கே, அன்னிக்கு இந்தப் பூமியே பார்த்து இவிங்கள வைச்சு மேய்க்க முடியாதுன்னு ஊத்தி மூடி வைச்ச மாதிரி,இன்னிக்கு நம்ம அலும்பு ரொம்பவே ஓவரா இருக்கு, என்னக்கி உள் வாங்கிக்கப் போவுதோ!!//

சிறப்பாக முடிச்சிருக்கிங்க.

இயற்கையை வலிந்து மாற்றுவது அதன் அமைப்பை சேதப்படுத்துவது என்பதாக புரிந்து கொள்ளாதவரை முடிந்த அளவுக்கு சுய நல சுரண்டலாக நடக்கும் இது போன்றவை என்றாவது ஒருநாள் முடிவுக்கு வந்து தானே ஆகனும் தெகா

cheena (சீனா) said...

அன்பின் தெகா

அருமையான இடுகை - சிந்தனை நன்று - தேடிப் பிடித்து, பல அரிய தகவல்களைத் தந்தமை நன்று நன்று.

அரசோ மக்களோ கவலைப்படுவதாகத் தெரியவில்லை.அழிப்பதற்கு வழி முறையும் தெரிய வில்லை.

இறைவன் விட்ட வழி - அவ்வளவுதான்

விடிவு காலம் விடைவில் வரவேண்டும்

நல்வாழ்த்துகள் தெகா
நட்புடன் சீனா

ஸ்ரீதர் நாராயணன் said...

//இன்றைய அமெரிக்கப் பிரதமர் பல் வேறுபட்ட அரசியல், அறிவியல் விற்பன்னர்களாலும் விமர்சிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார். //

அமெரிக்க அதிபர்னு சொல்ல நினச்சீங்கப் போல.

எரிச்சல் வர்றது நியாயம்தான். ஆனா அதே சமயம் இப்படி எதற்கெடுத்தாலும் மனிதனின் பேராசை, சுயநல சுரண்டல்னு விமர்சிக்கறது எரிச்சலாத்தானே இருக்கும் :) கோச்சுக்காதீங்க.

சாலை வசதியில்லாமல் வாழ்பவர்களுக்குத்தான் சாலையின் அத்தியாவசியம் புரியும். நல்ல சாலை போட்டு அதில் போக்குவரத்துக்கு அதிகரித்து மக்களுக்கு வசதியும் வாய்ப்பும் பெருகும்போது விபத்து ஏற்பட்டால் ‘எவன் சாலை போட்டது, இப்படி விபத்து நடந்ததுக்கு சாலை போடும் பேராசைதான் காரணமா?’ என்று கேள்வி கேட்பது என்ன மனோபாவமோ :)

டைனோசர் காலம்வரை ஏன் போறீங்க? சில பத்து வருடங்கள் முன்னால்வரை இருந்த கொள்ளை நோய், வைசூரி பரவுதல், பேரழிவுகளைப் பாருங்களேன்... பதினெட்டாம் நூற்றாண்டில், ஐரோப்பா கண்டத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ப்ளேக் கொள்ளை நோயால் இறந்தாங்களாம். என்ன காரணமாம்? சரக்கு கப்பல்கள் மூலமாக பரவிய எலிகளினால். பலகாலம் வரை இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வரும் கப்பல் பயணிகள் என்றால் ஐரோப்பாவில் பீதி இருந்ததாம்.

மனிதன் மட்டுமல்ல... எந்த உயிரினமுமே இயற்கை வளத்தை தனக்கு சார்பாக உபயோகித்துக் கொள்வது வாழ்க்கையின் எதார்த்தம். இது அழும்பு அல்ல. ஒருவகையில் வாழ்க்கை போராட்டம்தான்.

மயில்ராவணன் said...

உங்கள் இடுகையும் நன்று. யூட்யூபில் இது சம்பந்தமான வீடியோக்களைக் காணும் போது ரொம்ப பாவமா இருக்கு. பாவம் பறவைகள்,கடல்வாழ் உயிரினங்கள்....நம்மாளுக பக்கத்து நாட்டுல மனிதைனம் அழிஞ்சாலே கண்டுக்கமாட்டேங்க...இதப்போயி என்னத்த சொல்றது

சந்தோஷ் said...

தல எனக்கு ஒரு சந்தேகம் Why cant they shut down the whole plant? Since they are pumping the oil is coming out of the pipes why cant they stop pumping oil?10:21 am

Thekkikattan|தெகா said...

எல்லாரையும் தாண்டி ’ஸ்ரீதர் நாராயணன்’ கூட கொஞ்சம் உரையாடுவோம். மன்னிச்சிக்கோங்க மக்கா! திரும்ப வருவோம்ல! :)

வாங்க ஸ்ரீதர்,

நலமா? அதிபர்னு மாத்திட்டேன். நன்றிங்கோவ்.

//ஆனா அதே சமயம் இப்படி எதற்கெடுத்தாலும் மனிதனின் பேராசை, சுயநல சுரண்டல்னு விமர்சிக்கறது எரிச்சலாத்தானே இருக்கும் :) கோச்சுக்காதீங்க.//

இங்கே நான் பேராசை, சுரண்டல்னு கருதுவதற்கு காரணம், இன்னய அளவில ஏழு பில்லியன் மக்களை பரப்பில ஒட்டி வைச்சிக்கிட்டு இந்தப் பூமி சுத்துது. ஒரு 60 வருஷத்திற்கு முன்னாடி வரைக்கும், இப்படி ஒவ்வொரு கண்டத்திலும் இன்னமும் ஜனங்க முண்டி அடிச்சிகிட்டு பரப்பிற்கு வருவாங்கன்னு கூட நினைச்சிருக்க மாட்டோம். கட்டற்ற முறையில பெருகிட்டே போறோம். சரி, அவ்வளவு பேரோட சராசரி ஆசையான வீட்டுக்கு ரெண்டு காரு என்ற ரேஞ்சில நாம நம்மோட ப்ரஷ்ரை இந்த இயற்கை வளத்தின் மேலே வைச்சா, எவ்வளவு நாளக்கி தாங்கும். சப்ளையும் சரி அதன் மூலமாக வெளித்தள்ளப்படும் நச்சுக் கழிவுகளும் சரி.

இப்படியே இன்னக்கி இவ்ளோ பசியில நாம இருக்கிறோம்னு இருக்கிற அனைத்தும் புடுங்கி, உறுவி திண்ணுப் போட்டா, இன்னும் 100 வருஷம் கழிச்சு வாரவிங்களுக்கு என்னாத்தை விட்டுட்டுப் போவோம்? சோ, இந்த மாதிரியான அணுகுமுறையத்தான் நான் ‘பேராசை’ன்னு சொல்ல வாரேன்.

மற்றபடி இயற்கை சமன்பாட்டில வருகிற நோய், அதனின்று நம்மை தற்காத்து கொள்ள எடுக்கிற பாதுகாப்பு நடவடிக்கைக்கும் ‘இயற்கை சுரண்டலுக்கும்’ பெரிய வித்தியாசமிருக்கின்னு நினைக்கிறேன்.

//எந்த உயிரினமுமே இயற்கை வளத்தை தனக்கு சார்பாக உபயோகித்துக் கொள்வது வாழ்க்கையின் எதார்த்தம்.//

உண்மை இருக்குதுதான். இருப்பினும், நம்மை போல அவ்வளவு கூர்மையான/நுண்மையான முறையில வேற எந்த விலங்கும் சுரண்டலேன்னு தெரியுது.

கோவிச்சிக்க என்ன இருக்கு அட வாங்க பேசுவோம் :) - நன்றி ஸ்ரீதர்!

Thomasruban said...

Written by Thomasruban 30 minutes

நல்ல ஒரு விழிப்புணர்வு கட்டுரை,அருமையான எளியநடை நன்றி..

செல்வா said...

// மனிதன் மட்டுமல்ல... எந்த உயிரினமுமே இயற்கை வளத்தை தனக்கு சார்பாக உபயோகித்துக் கொள்வது வாழ்க்கையின் எதார்த்தம். இது அழும்பு அல்ல. ஒருவகையில் வாழ்க்கை போராட்டம்தான் //
தவறு எனக் கருதுகிறேன். உயிர் வாழ்வதற்கான, இன அழிவிலிருந்து காத்துக் கொள்வதற்கான, இயற்கையின் அபாயங்களிளிருந்து காத்துக்கொள்வதற்கான முயற்சிகளே வாழ்க்கைப் போராட்டம். இப்போது நடப்பது அதுவல்ல... வீண் ஆடம்பரங்களுக்காகவும், பண வெறி பிடித்த பெரிய நிறுவனங்களின் வணிகப் போட்டிகளுக்காகவும் நடக்கும் இயற்கையின் மீதான சுரண்டல்.

Thekkikattan|தெகா said...

//இயற்கையை வலிந்து மாற்றுவது அதன் அமைப்பை சேதப்படுத்துவது என்பதாக புரிந்து கொள்ளாதவரை முடிந்த அளவுக்கு சுய நல சுரண்டலாக நடக்கும் இது போன்றவை என்றாவது ஒருநாள் முடிவுக்கு வந்து தானே ஆகனும் தெகா//

நான் சொல்ல வந்ததின் ஹைலைட்டே இதுதான் கோவி. கட்டற்ற, கண் மூடித்தனமான பேராசையின் பொருட்டு பெருகும் சுரண்டல் கொண்டு போயி முடிக்குமிடம் மற்றுமொரு புதன்கிரகம் மாதிரியான, பூமியா? என்பதே என்னோட கேள்வியின் அடிநாதம்...

Thekkikattan|தெகா said...

சீனா,

உங்ககிட்ட பேசினதிற்கும் பிறகுதான் கண்டிப்பா இதனைப் பற்றி சீக்கிரம் எழுதியாகணும்னு தோணிச்சு. அதுக்கு உங்களுக்கு ஒரு சிறப்பு நன்றி இத் தருணத்தில.

//அரசோ மக்களோ கவலைப்படுவதாகத் தெரியவில்லை.அழிப்பதற்கு வழி முறையும் தெரிய வில்லை. //

அரசே அந்த தனியார் கம்பெனி கை விரிச்சவுடன், மக்கள்கிட்ட வந்துதான் கையை ஏந்தும், வேறு வேறு வழிகளில் - சீக்கிரம் எதிர்பார்க்கலாம், பெட்ரோல் பங்குகளில் எண்ணெய் விலை கையைச் சுடுவதய்.

//விடிவு காலம் விடைவில் வரவேண்டும்//

வந்தா எல்லாருக்கும் நல்லதுங்கோவ்வ்வ்வ்...

செல்வநாயகி said...

Thanks for this post.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

செம நடுக்கமா இருக்குங்க படிக்க..

பேராசைக்கு அளவே இல்லையா..

Software Engineer said...

இப்படி கூட ஒரு உலகம் இருக்குன்னு நீங்கள் சொல்லி தான் தெரிந்து கொண்டேன்!
எனக்கு பிடித்து இருந்ததால் வோட்டு போட்டுட்டேன். பகிர்வுக்கு நன்றி!

Shiva said...

our world already starts destroying itself in various forms (tsunami, ice melt down, temperature increase). we human should realize that by ourselves and starts saving our earth from now. otherwise a last night without next day morning is unstoppable.
i dont know how to write this in tamil, since im a new user.

kutipaiya said...

மிக எளிய முறையில் பெரிய பிரச்சனையை தெளிவா விளக்கியிருக்கீங்க தெக்கி...
நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில ..
அருமை..

Thekkikattan|தெகா said...

//மயில்ராவணன் said...

உங்கள் இடுகையும் நன்று. யூட்யூபில் இது சம்பந்தமான வீடியோக்களைக் காணும் போது ரொம்ப பாவமா இருக்கு. பாவம் பறவைகள்,கடல்வாழ் உயிரினங்கள்....நம்மாளுக பக்கத்து நாட்டுல மனிதைனம் அழிஞ்சாலே கண்டுக்கமாட்டேங்க...இதப்போயி என்னத்த சொல்றது.//

ராவணன் மிகச் சரியா கோத்துறிக்கீங்க நிகழ்வுகளை. கண்டிப்பா நம்மாளுங்க கண்டுக்க வாய்ப்பே இல்லை. இப்பொழுதெல்லாம், ஸ்டண்ட் போட்டே அரசியல் நடத்துறதுனாலே ஒன்றிற்கு இணையாக சினிமத்தனமாக மற்றொரு நிகழ்வை நடத்திக் காட்டி திசை திருப்புறதுனாலே முழு வீச்சின் தாக்கம் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கிறதில்ல... பாவம் - பொது மனுசனும் தான் :((

எட்வின் said...

விஞ்ஞானம் எங்க போய் முடியுமோ தெரியலங்க. டைனோசருக்கு அந்த கதின்னா நமக்கு :( உங்க பதிவுக்கு என் வலைப்பூவில் சுட்டி கொடுத்திருக்கிறேன். நன்றி

Thekkikattan|தெகா said...

சந்தோஷ்,

//Why cant they shut down the whole plant? Since they are pumping the oil is coming out of the pipes why cant they stop pumping oil?//

நல்ல கேள்விதான். தோண்டத் தோண்ட பெரும் அரசியலே இதுக்குப் பின்னாடி இருக்கிறதாப்படுது..

ஒரு சிறு உ. தா: ஊர்ல தண்ணீர் எடுக்க ட்ரில் பண்ணுவாய்ங்க அப்போ, ட்ரில் பண்ணுற ஹெட் ஸ்பிரிங் ஃப்லோ-வெ குழாய் தட்டிருச்சின்னா அது உள்ளே செலுத்தப்பட்ட குழாய் வழியா வழி கண்டுபிடிச்சு வெளிய குதிச்சு வருது ஓர் அவுட்லெட்-அ கன்னாபின்னா அழுத்தத்தோட இல்லையா? அதுக்குப் பிறகுதான், நாம கேப்பிங் பண்றதெல்லாம் எந்த முறையில தேவையானப்போ, பம்ப் பண்ணி எடுக்கிறதோ அப்படின்னு நினைக்கிறேன்.

ஆர்டீசியன் ஊற்று கேள்விப் பட்டிருக்கியல்ல, இந்த ரிசர்வாயர், எண்ணெய் இருக்கிற கொள்ளளவு... பெரிசா இருந்த பட்சத்தில, கம்ப்ரெஷர் கொண்டு அதனை கண்ரோல் பண்ணும் பாயிண்டிற்கு மேலாகவும் குழாயில் வெடிப்பு நடந்த பட்சத்திலேயே... இதனை சீல் பண்ணுவதில் பிரச்சினை இருப்பதாகப் படுகிறது சரியாக.... டிவியில பார்த்த அளவிற்கு தெரிஞ்சதைத் சொல்லுறேன்.

ஆனா, அவிங்க இப்போ புதிசா, ஏதும் பம்ப் பண்ணுற மாதிரி தெரியல. வெளியில பிறீட்டு அடிக்கிறதை கேட்ச் பண்றாய்ங்க, மூடி போட்டு.

ஒரு ஃபாரம்ல இப்படி பேசிக்கிறாய்ங்க...

...The human race does not have the technology to stop something that is gushing at 18k-20k sustained PSI. It cannot and will not be stopped...

...இன்னும் கூடுதல் விவரம் தெரிஞ்சவுங்க இங்கே பகிர்ந்துக்கலாமே...

மயில்ராவணன் said...

நானும் BP யின் எதிரி பெட்ரோலியக் கம்பெனியில்தான் காண்ட்ராக்ட் வேலையாளாக வேலை பாக்குறேன். ஆனா இந்த விசயத்துல எல்லா பயலும் ஒண்ணா சேர்ந்து அருமையா சமாளிக்கிறாங்க சார். மனசு வலிக்குது.இந்த ஆயில் ஸ்பில்லுக்காக ஒரு வலைத்தளம்,முன்னெச்சரிக்கை பயிற்சிகள் என்ற அளவிலேயே இவிங்க படம் ஓட்டிக்கிட்டு இருக்கானுவ. என்னத்த சொல்ல கடவுள்னு யாராச்சும் இருந்தா அவர் பார்த்து சிறந்த நீதியாக கொடுத்தா சரி. நன்றி

மயில்ராவணன் said...

இதைப்போல நிறைய நடந்திருக்காம் பாஸ். இது கொஞ்சம் பெருசு அளவிலும், தன்மையிலும். ஒபாமா கூட வேற ஏதோ மாதிரி திசை திருப்புறார்னு சொல்றாங்கெ... என்ன எழவோ போங்க.

Thekkikattan|தெகா said...

//Thomasruban said...

நல்ல ஒரு விழிப்புணர்வு கட்டுரை,அருமையான எளியநடை நன்றி.//

ஊக்குவித்தலுக்கு வணக்கம்.

*******************************

செல்வா said...

.......// மனிதன் மட்டுமல்ல... எந்த உயிரினமுமே இயற்கை வளத்தை தனக்கு சார்பாக உபயோகித்துக் கொள்வது வாழ்க்கையின் எதார்த்தம். இது அழும்பு அல்ல. ஒருவகையில் வாழ்க்கை போராட்டம்தான் //....

தவறு எனக் கருதுகிறேன். உயிர் வாழ்வதற்கான, இன அழிவிலிருந்து காத்துக் கொள்வதற்கான, இயற்கையின் அபாயங்களிளிருந்து காத்துக்கொள்வதற்கான முயற்சிகளே வாழ்க்கைப் போராட்டம். இப்போது நடப்பது அதுவல்ல... வீண் ஆடம்பரங்களுக்காகவும், பண வெறி பிடித்த பெரிய நிறுவனங்களின் வணிகப் போட்டிகளுக்காகவும் நடக்கும் இயற்கையின் மீதான சுரண்டல்///

வாங்க செல்வா, மிகச் சரியாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் எனது பார்வையையொட்டியே! அழுத்தமாக வித்தியாசங்களை பதிந்திருக்கிறீர்கள். நன்றி

Thekkikattan|தெகா said...

//செல்வநாயகி said...

Thanks for this post.//

You are welcome - நாயகி!

****************************

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

செம நடுக்கமா இருக்குங்க படிக்க..//

தூரத்தில இருந்து படிக்கிற நமக்கே இப்படி இருக்கே, லூசியானா போன்ற நேரடி பாதிப்பிற்குள்ளான கடற்கரையோர மக்கள், கண்ணு, நெஞ்செல்லாம் எரியுதுதாம், வாமிட்டிங் சென்சேஷன்ல மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் படுவதாக செய்திகள் வெளி வந்த வண்ணமிருக்கிறது.

//பேராசைக்கு அளவே இல்லையா..//

இருந்தா ஏன் நாம இந்த நிலையில இருக்கோம்.

Thekkikattan|தெகா said...

//Software Engineer said...

இப்படி கூட ஒரு உலகம் இருக்குன்னு நீங்கள் சொல்லி தான் தெரிந்து கொண்டேன்!
எனக்கு பிடித்து இருந்ததால் வோட்டு போட்டுட்டேன். பகிர்வுக்கு நன்றி!//

நீங்க சாஃப்ட்வேருங்கிறதை இப்படி பச்சை மண்ணா இங்க வந்து வெளிக்காட்டிக்கிட்டீங்ளே... உங்கள எப்படி பாராட்டுறது :)). உங்களுக்கு பல இது போன்ற உலகங்கள் காத்துக்கிடக்கு ‘இயற்கை நேசி’ பதிவுகளில்... லிங்க் ப்ரோஃபைலுக்கு கீழே இருக்கும் பாருங்க, பிடிச்சு அங்கே கிளரிப் பாருங்க நிறைய கிடைக்கும். எஞ்சாய்! அப்புறம் வோட்டுக்கும், முதல் தடவையா இந்தப் பக்கம் நடந்து வந்ததிற்கும் ஒரு நன்றி -

Thekkikattan|தெகா said...

//Shiva said...

our world already starts destroying itself in various forms (tsunami, ice melt down, temperature increase). we human should realize that by ourselves and starts saving our earth from now. otherwise a last night without next day morning is unstoppable.//

வாங்க சிவா, நீங்க சொல்றபடி இயற்கை தானாகவே சீற்றங்களின் மூலமாக அவ்வப்பொழுது தனது இருத்தலை ஆணித்தரமாக ஊர்ஜிதப் படுத்தியே வந்தாலும், சுனாமியத் தவற நீங்க குறிப்பிட்ட ஏனைய இரண்டு விசயங்கள், பனிப் பாறைகள் உருகுவதும், வெப்பச் சூடேற்றமும் ஒன்றுக்கு ஒன்று நெருங்கிய தொடர்புடையது. இதுவும் இன்றையச் சூழ்நிலையில் நாமே துரிதப் படுத்தி வருவதாக தெரிகிறது. கூகுள் செஞ்சிப் பாருங்க கிடைக்கும், குளோபல் சூடேற்றம் என்று.

//i dont know how to write this in tamil, since im a new user.//

ரொம்ப எளிமையா செய்யலாங்க. http://software.nhm.in/ அந்தத் தளத்திற்கு சென்று தமிழ் தட்டச்சு மென் பொருள் கீழிறக்கம் பண்ணி, நிறுவிட்டு நோட்பேட் திறந்திட்டு atl 2 அமுக்கி தமிழில் தட்டவும், மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற alt 0 வும் போட்டு விளையாடுங்க (the key strokes works based on the phonetic sound - eg. a m m aa = அம்மா). எஞ்சாய் :)

செல்வராஜ் (R.Selvaraj) said...

தெ.கா, நல்ல கட்டுரை தான். இந்த விபத்தால் உண்டாகும் சீரழிவுகளையும் ஏற்படும் தாக்கங்களையும் விளக்கி இருக்கிறீர்கள். ஆனால், ஸ்ரீதர் சொன்ன சிலவற்றோடு ஒத்துப் போகிறேன்.


பேராசை, வணிக வெறி என்று ஒரு நிறுவனத்தை மட்டும் சொல்லி நாம் தள்ளி நின்று கொள்ள முடியாது. அடுத்த அறையில் வீணாய் எரிந்து கொண்டிருக்கிற விளக்கை அப்போதே அணைக்கச் சோம்பல் பட்டுக் கொண்டு அடுத்த முறை எழுந்து போகும் போது அணைத்துக் கொள்ளலாம் என்று இன்னும் அரை மணி நேரம் எரிய விடும் நாமும்; அப்பப்பா என்ன கொளுத்தும் வெய்யல் என்று சதா காலமும் குளிர்பெட்டியை ஓட விட்டுக் கொண்டும்; இன்னும் இப்படியாகப் பல வகையில் ஆற்றலைப் பயன்படுத்தும், வீணாக்கும் நாம் அனைவருமே கூடத் தான் காரணம். ஒரு வீட்டுக்கு ரெண்டு கார் மட்டுமல்ல. இப்படிப் பல வகையிலும் பயன்படுத்த ஆற்றல் தேவையை உருவாக்கும் மக்களால் தான் இப்பெரிய நிறுவனங்கள் அதிகரித்த இக்குகள் நிறைந்த சூழலில் தேடத் தொடங்குகின்றன. அது ஒன்றே அவர்களுக்குச் சாக்காக அமைய முடியாது தான். போதுமான பாதுகாப்பு முறைகளைக் கையாளாததும், குறுக்கு வழிகளைப் பயன்படுத்தியதும், இப்படியான குற்றச் சாட்டுக்களை வைக்கலாம்.

எப்படி இருப்பினும் இது விரைவில் கட்டுப் படுத்தப் படவேண்டும் என்பதிலும், இதன் தாக்கங்களில் இருந்து மீளவேண்டும் என்பதிலும் உங்கள் எண்ணங்களோடு சேர்ந்து கொள்கிறேன்.

நிகழ்காலத்தில்... said...

வாழ்த்துகள் தெகா.

உண்மையை உள்ளடக்கிய இடுகை..

Thekkikattan|தெகா said...

//kutipaiya said...

மிக எளிய முறையில் பெரிய பிரச்சனையை தெளிவா விளக்கியிருக்கீங்க தெக்கி...
நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில .//

எழுதும் பொழுது ரொம்ப நுட்பக் கட்டுரையா வந்திடக் கூடாதுன்னு, மனசில வைச்சிட்டே எழுத ஆரம்பிச்சேன். எல்லாருக்கும் புரியற மாதிரி அமைஞ்சதில கூடுதல், சந்தோஷம் - நன்றி - குட்டிப்’பையா.
************************

//எட்வின் said...

விஞ்ஞானம் எங்க போய் முடியுமோ தெரியலங்க. டைனோசருக்கு அந்த கதின்னா நமக்கு :( உங்க பதிவுக்கு என் வலைப்பூவில் சுட்டி கொடுத்திருக்கிறேன். நன்றி//

வாங்க எட்வின், முதல் வருகை என் தளத்திற்கு கவலையோட வர வைச்சிருக்கு. விஞ்ஞானம் இரு பக்கங்களை கொண்டது தானே, நிறைய நல்ல விசயங்களும் நடந்திட்டுத்தான் இருக்கு.

நீங்க இணைத்த சுட்டியை உங்க தளத்திற்கு சென்று பார்த்தேன், அருமையாக ரொம்ப முக்கியம் கொடுத்து வைச்சிருந்தீங்க, சிறப்பு - நன்றி, எட்வின்.

ஸ்ரீதர் நாராயணன் said...

//மற்றபடி இயற்கை சமன்பாட்டில வருகிற நோய், அதனின்று நம்மை தற்காத்து கொள்ள எடுக்கிற பாதுகாப்பு நடவடிக்கைக்கும் ‘இயற்கை சுரண்டலுக்கும்’ பெரிய வித்தியாசமிருக்கின்னு நினைக்கிறேன்.//

நான் சொல்ல நினச்சது திருத்தமா சொல்லப்படலைன்னு நினைக்கிறேன்.

கொள்ளை நோய் பரவிய காலகட்டங்களில் மனிதர்களிடையே இதே மனோபாவம்தான் இருந்தது. ‘கடல்கடந்து வருபவர்களினால்தான் நோய் பரவுது. இதை தடுக்கனும். இது மனித சமூகத்திற்கு தேவையில்லாதது’ ஆனா வர்த்தகமும் பரிமாற்றமும் வளர மனிதர்கள் பயணம் செய்தது அதிகரிக்கவே செய்தது.

//இப்படியே இன்னக்கி இவ்ளோ பசியில நாம இருக்கிறோம்னு இருக்கிற அனைத்தும் புடுங்கி, உறுவி திண்ணுப் போட்டா, இன்னும் 100 வருஷம் கழிச்சு வாரவிங்களுக்கு என்னாத்தை விட்டுட்டுப் போவோம்? //

பூமி தோன்றி மில்லியன் வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மனித இனம் தோன்றி 75 ஆயிரம் வருடங்களோ என்னவோதான் கணக்கு சொல்றாங்க. நீங்க 100 வருசத்துக்கு அப்புறம் என்னாகும்னு கவலைப் படறீங்க.

//நம்மை போல அவ்வளவு கூர்மையான/நுண்மையான முறையில வேற எந்த விலங்கும் சுரண்டலேன்னு தெரியுது.//

இயற்கை வளம் என்பது அளவிட முடியாதது. மனித இனமோ அல்லது வேறு உயிரினமோ அதை சார்ந்துதான் இருக்கு. இயற்கை வளத்தை அவரவர் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்வதை ‘சுரண்டல்’னு எந்த வகையில சொல்றீங்கன்னு தெரியல.

இன்றைக்கு நாம் உயிர்வாழ ஆதாரமான பிராண வாயு ஒரு காலத்தில் பூமியில் நச்சு வாயுவாக இருந்திருக்காம். மைக்கேல் க்ரைடனோட ‘ஜுராசிக் பார்க்’ல எழுதியிருப்பார் பாருங்க.

// உயிர் வாழ்வதற்கான, இன அழிவிலிருந்து காத்துக் கொள்வதற்கான, இயற்கையின் அபாயங்களிளிருந்து காத்துக்கொள்வதற்கான முயற்சிகளே வாழ்க்கைப் போராட்டம். இப்போது நடப்பது அதுவல்ல... வீண் ஆடம்பரங்களுக்காகவும், பண வெறி பிடித்த பெரிய நிறுவனங்களின் வணிகப் போட்டிகளுக்காகவும் நடக்கும் இயற்கையின் மீதான சுரண்டல்.//

உயிர் வாழ்வது - இதன் அடிப்படை விளக்கம் என்ன? உண்ண உணவு, உறைய உறைவிடம்... அவ்வளவுதானா? உடுக்க உடை? அதுவே லக்ஸரிதானே? அதுக்கு மேல? இனம் வளர, அறிவியல் பெருக, ஆராய்ச்சி செய்ய, கோட்பாடுகள் உருவாக்க, நாகரீகம் வளர.... எங்கே நிறுத்துவீங்க?

வீண் ஆடம்பரம் எது? My point is... all these things are very very subjective. உதாரணத்திற்கு தெகா பார்வையில சராசரி தேவைன்னு சொல்றது என்ன?

//அவ்வளவு பேரோட சராசரி ஆசையான வீட்டுக்கு ரெண்டு காரு//

இது அவரோட வாழ்க்கை பின்புலத்தின் பாதிப்பில் சொல்றது. வேறு ஒருத்தருக்கு ஒரு ஏக்கர் நிலம். வேறு சிலருக்கு தினம் ஒரு வேளை நெல்லுச் சோறு. அதீதமாக பொதுமை படுத்துவதின் அபாயமாக ‘முன்னேற்றத்தை’ காரணமேயில்லாமல் வெறுப்பதில் போய் முடியும்.

எண்ணெய் கசிவிற்கான பதிவில் இந்த விவாதம் தேவையில்லாமல் தொடங்கியதற்கு மன்னிக்கவும். வேறு சமயத்தில் விரிவாக விவாதிப்போம். பின்னூட்டம் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

மனித இனம் வெறும் உண்ண உணவு, சந்ததி பெருக்குதல் என்று மட்டும் இருந்துவிட முடியாது.

கையேடு said...

விரிவான பகிர்வுக்கு நன்றிங்க.

ஆனாலும், மனிதயினம் மிக முக்கியமானதொரு காலகட்டத்தில் இருக்கிறது என்று மட்டும் அவதானிக்க முடிகிறது.

திரு.ஸ்ரீதர் நாராயணன் அவர்கள் மிக முக்கியமான புள்ளியைத் தொட்டிருக்கிறார். அறிவியல் உலகிற்கே இருக்கும் மிக முக்கியமானதொரு குழப்பமும் கூட, எங்கு நிறுத்துவது, எப்படி நிறுத்துவது?

இதனையடுத்து ஏன் நிறுத்த வேண்டும் என்ற கேள்வியும் தொடர்ந்து வரும், ஆனால், அதற்கு மனிதயினத்தின் நலன் சார்ந்த வலுவான பதில் கிடைக்காதவரை நிறுத்துவது, மட்டுப்படுத்துவது போன்ற சிந்தனைகள் வருவதே கடினம்தான்.

இந்திய அறிவியல் பற்றிய ஒரு வேடிக்கையான குறிப்பும் உண்டு அவர்களுக்கு எந்த திசையில் செல்வது என்பதிலேயே குழப்பம் என்று..

Thekkikattan|தெகா said...

இந்த உரையாடலை நண்பர்கள் செல்வராஜ் மற்றும் ஸ்ரீதர் நாராயணன் அவர்களுக்கும் பொதுவான ஒன்றாக வைத்தே தொடர்வோம். இருப்பினும் செல்வராஜ் இயற்கை வள sustainable utilization பொருத்து கொஞ்சமே என்னுடைய பார்வை கொண்டிருப்பதாக படுவதால், அவருக்கு என்னுடைய பதில் பொருத்தமற்றதாக சில இடங்களில் படுமாயின் விலக்கிக் கொள்ளுங்கள், செல்வா.

//அடுத்த அறையில் வீணாய் எரிந்து கொண்டிருக்கிற விளக்கை அப்போதே அணைக்கச் சோம்பல் பட்டுக் கொண்டு //

செல்வா, கண்டிப்பாக இந்தப் பொறுப்புணர்வு எல்லா விதயங்களிலும் உணர்வு சார்ந்த ப்ரஞையில் முன் நிறுத்தப்பட்டு விட்டாலே ஓரளவேனும் நம்முடைய டிமாண்ட் இயற்கை வளங்களின் மீது பயன் படுத்தப் பட்டுக்கொண்டிருக்கும் அளவினில் குறைந்து, சிறுகச் சிறுக சேமிக்கப்பட்டு விடுமென்பதில் எந்த வித ஐயப்பாடுமில்லைதானே.

//ஒரு வீட்டுக்கு ரெண்டு கார் மட்டுமல்ல. இப்படிப் பல வகையிலும் பயன்படுத்த ஆற்றல் தேவையை உருவாக்கும் மக்களால் தான் இப்பெரிய நிறுவனங்கள் அதிகரித்த இக்குகள் நிறைந்த சூழலில் தேடத் தொடங்குகின்றன. //

அப்படியே இப்படியும் கொஞ்சம் மாத்தி யோசிங்க, இந்த affordability index யார் உறுவாக்கித் தருகிறார்கள். மனிதனுக்கு ஆசை என்பது கட்டுப்பாடற்றதுதான், கச்சா பொருட்களை கிடைக்கும் இடங்களில் எல்லாம் சுரண்டி எடுத்து வந்து, ஒரு லட்ச ரூபாய்க்கு கூட வாங்கும் திறனில் உருவாக்குகிறோம் என்று குப்பை மேடாக்குவதில் யாருடைய பங்கு அதிகமாக இருக்கிறது?

//பூமி தோன்றி மில்லியன் வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மனித இனம் தோன்றி 75 ஆயிரம் வருடங்களோ என்னவோதான் கணக்கு சொல்றாங்க. நீங்க 100 வருசத்துக்கு அப்புறம் என்னாகும்னு கவலைப் படறீங்க.//

அறிவியல் பூர்வமாக பேசணும்னா நமக்கு சாம்பில் சைஸ் வேணுமில்லையா அதுக்கு இரண்டு மூணு உதாரணம் எடுத்துக்குவோமா, ஸ்ரீதர். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையிலும் பசிபிக் பெருங்கடலில் திளைத்து வளர்ந்த ஈஸ்டர் தீவுகளும், பிட்கரின் தீவுகளில் அடங்கிய ஹெண்டர்சன், மங்கிரீவா தீவுகளுக்கும் என்னவாகிற்று? எதன் தொடர்பாக சுத்தமாக மனிதர்கள் அங்கே வாழவே தகுதியற்ற இடமாக கருதி அழிந்து பட்டுப் போனார்கள்?

ஏன் அவ்வளவு தூரம் அண்மைய காலங்களில் ஹெய்டியில் நடந்தேறும் பஞ்சமும், வறட்சியும் அதனையொட்டிய பொருளார நலிவடைவும் அங்கும் மனிதர்கள் வாழ தகுதியற்ற நிலையை எட்டி வரும் காரணங்கள் என்னவாக இருக்கிறது?

இன்றைய நிலையில் நமக்கு அது போன்ற வரலாறுகளே பெரிய அளவில் அதனை நோக்கிய இயற்கை வள சுரண்டலை முன்னெடுத்துச் செல்லும் போதில் நாளைய விடியப் போகும் நிலை. நீங்கள் கூறியபடி ....இயற்கை வளம் என்பது அளவிட முடியாதது.... இருக்க வாய்ப்பே இல்லை. முன்னொப்பொழுதும் இல்லாத வாக்கில் நமது அபரீதமான தேவைகள் உலக மழைக்காடுகளின் மீதான அழுத்தத்தை செலுத்தி 14% சதவீதமாக இருந்த காடுகளின் பரப்பளவு வெறும் 6% சதவீதமாக குறைந்திருக்கிறது. அக்காடுகளே நமது பிராணவாயு தயாரிப்பின் முக்கிய அங்கமாகவும், சுத்திகரிப்பின் நுரையீரல் என கொள்ளும் சூழலில் எப்படி நாம் கட்டற்ற அளவில் இயற்கை வளம் பரந்து விரிந்து கிடக்கிறது என்று ”நம்பிக்” கொண்டிருக்க முடியும். இங்கயும் பாருங்க The Disappearing Rainforests

நம்மூர்ல மேற்கு மலைத் தொடர்களில் 1800களில் அழிச்ச மழைக்காடுகளின் அழிவே கொஞ்ச கொஞ்சமாக இன்று நாம் இழந்து வரும் பருவ மழை - அந்த சங்கதி தெரியுமா? :-( அதுக்குப் பின்னாடியும் ஒரு பெரிய சோகக் கதை இருக்கு.

......மற்றவை பகுதி ரெண்டில :) ....

Thekkikattan|தெகா said...

...தொடர்ச்சி...

//இனம் வளர, அறிவியல் பெருக, ஆராய்ச்சி செய்ய, கோட்பாடுகள் உருவாக்க, நாகரீகம் வளர.... எங்கே நிறுத்துவீங்க?//

மிகச் சரி எங்கே எப்போ நிறுத்துவது என்பதில்தான் நமது பிரச்சினையே. மேலே கூறிய தீவுகளின் பொருட்டு கொண்ட விடையே நமக்கு கிடைத்திருக்கக் கூடிய பதில்கள். கண் மூடித்தனமான இயற்கை சுரண்டல் இட்டுச் செல்லும் பாதை நாளை அதுவாகத்தான் இருக்க முடியும் என்பதுவே அது.

நாகரீகம் கண்ட பூமியான தென் அமெரிக்காவில் மாயா, இன்கா, அனசாசி, அzடெக் போன்றவைகளே இது போன்ற கண் மூடித் தனமான இயற்கை சுரண்டகள்ளே அவைகளின் அழிவிற்கு காரணமாயிருந்திருக்கிறது. இப்பொழுது, அமெரிக்காவில் மாண்டான பேன்ற மாநிலங்களில் நிலத்தடி நீர் மாசுபாடும், மண் குணமும் சுத்தமாக மாறிப்போய் பெரும்பாலன முன்னய சுரங்கங்களைவொட்டிய இடங்களை அப்படி அப்படியே abandon செய்யப் பட்ட நிலையிலே மக்கள் அந்த பகுதிகளைச் சுற்றி வாழ்வதற்கு கூட தகுதியற்றதாய் அறிவிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் எதன் பொருட்டு அமைந்து போனது?

//உதாரணத்திற்கு தெகா பார்வையில சராசரி தேவைன்னு சொல்றது என்ன? //

ரெண்டு காரு/-

இது அவரோட வாழ்க்கை பின்புலத்தின் பாதிப்பில் சொல்றது. //

என்னோட பாதிப்பில நான் உணர்ந்தது, 1000 பேர் செய்யாத மாசு படுத்தலை நான் செய்றேன் ஆனா நான் செய்ற அக்கிரமும்...

இதுவும் -

////வேறு ஒருத்தருக்கு ஒரு ஏக்கர் நிலம். வேறு சிலருக்கு தினம் ஒரு வேளை நெல்லுச் சோறு. ////

ஒன்றாகி விடுமா? அது நியாயமான ஆசை தானே! அதன் மூலமாக எது போன்ற மாசுபாட்டை ஒருவர் ஏற்றி வைத்துவிடுவார். ஆனால், தேவை இருக்கிறது என்பதனால், தாது பொருட்களை குடைஞ்சு வெளியில எடுத்திட்டு வந்து ஹே! 50 ஆயிரத்திற்கு நீயும் ஒரு டப்பா வாங்கி, புகையைக் கக்குன்னும் அதன் பொருட்டு அண்டார்டிக் வரைக்கும் எண்ணெய் எடுக்க திட்டமிடுவது அதன் ஊடான நாடுகளுக்கிடையான அரசியல் போட்டா போட்டி, போர் (அண்மைய ஈராக் அதன் பொருட்டான ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் நிலை...)

இது ஒரு சங்கிலித் தொடருங்க... நான் ஒண்ணும் மீண்டும் எல்லாரும் ஆடு, மாடு வளர்த்துகிட்டு மாட்டு வண்டி வைச்சு பண்ட மாற்றுச் செஞ்சு வாழணும்னு சொல்ல வரல, நமக்குத் தேவை responisbly we should approach the natural resources keeping in mind it can not be last like a "Kamadhenu" but sustainably we can go on take it, so long it afford to keep us on this planet - that is it.

//எண்ணெய் கசிவிற்கான பதிவில் இந்த விவாதம் தேவையில்லாமல் தொடங்கியதற்கு மன்னிக்கவும். வேறு சமயத்தில் விரிவாக விவாதிப்போம்//

அப்படியெல்லாம் ஏன் வருத்தப்படுறீங்க, இதுவும் தொடர்புடையதாகத்தான் எனக்குப் படுகிறது. பொருத்தமான பதிவு வரும் பொழுது அங்கும் இந்தக் கருத்துகளை எடுத்திட்டுப் போவோம் :-).

நன்றி நண்பர்களே!! :-)

கல்வெட்டு said...

.

மனிதனின் கட்டுக்குள் இருந்து (நினைத்தால் எடுக்க நினைத்தால் நிறுத்த) அழிக்கப்படும் இயற்கை வளம் ---> நல்லது


மனிதனால் ஆரம்பிக்கப்பட்டு அவனால் கட்டுப்படுத்த முடியாமல் போன ஒன்று ---> கெட்டது

***

ஸ்பின்டில்டாப் எண்ணெய்க் கிணறும் இப்படித்தான் மனிதனின் எதிர்பார்ப்பை மீறி வெடித்துக் கிளம்பியது.
http://www.priweb.org/ed/pgws/history/spindletop/spindletop2.html

**

இப்படி நடந்து இருந்தால் என்னவாகி இருக்கும்....

ஆயில் கடல் நீரில் குறிப்பிட்ட உயர் அழுத்தத்தில் சேர்வதால் வரும் நுரை கலந்த அபூர்வதிரவம் ஒன்று சற்றுமுன் கண்டறியப்பட்டு உள்ளது.

1.இந்த திரவம் அணுசக்தியைவிட பல மடங்கு கொண்டது.

2.இதை எடுத்து எலுமிச்சைபழச் சாற்றில் க‌லந்து தடவினால் கேன்சர் மறையும்.

3.இதை முட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால் சடாரென்று 10 வயது குறைந்துவிடும்.

ஆனால் ஒரு லிட்டர் எடுக்க 1 சதுர கடல் மைல் பரப்பில் எண்ணெய் கலக்க வேண்டும். இதை கடலில் இயற்கையாக மட்டுமே செய்ய முடியும்.


பிபி யின் இந்த விபத்தே இதைக் கண்டுபிடிக்க உதவியது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

....

உடனே எல்லா நாடுகளும் அவர்கள் பங்கிற்கு கடலைப் பிரித்து இதைவிட அதிக அளவில் ஆயில் கலக்க ஆரம்பித்துவிடுவார்கள். அது கண்டுபிடிப்பு என்று அறியப்படும்.

***********


பிரிட்டிஷ் பெட்ரோலியத்தில் நடந்த பிரச்சனை அவர்களின் கவனக்குறைவு மற்றும் பாகங்கள்/ இயந்திரங்கள் குறைபாடு. இப்போது கை மீறிப் போய்விட்டது.


***********குற்றம் சாட்டப்படவேண்டும் என்றால் 'தெகா' தொடங்கி நான் வரை பெட்ரோல் பயன்படுத்தும் அனைவருமே குற்றவாளிகள்தான்.
.பிரிட்டிஷ் பெட்ரோலியம் நாம் எல்லாருக்காகவும்தான் இப்படிக் குடைந்து குடைந்து எண்ணெய் எடுத்தது. அனைவருமே பாவிகள்தான்.

**

வலிவானவன் இயற்கையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அதற்காக இந்த ஆட்டையில் பங்கெடுக்காத கடல் உயிரினங்கள் படும் கஸ்டம் கண்டு கொஞ்சம் அழுது கொள்ளலாம்.

ஆட்டை வெட்டி பிரியாணி சாப்பிடத் தயாராக இருக்கும்போது புயல் வந்து ஆட்டை அடித்து சிதைத்துவிட்டது.... இங்கே ஆட்டிற்காக வரும் வருத்தம் , உண்மையில் அதன் நலனுக்காக இல்லை.

" அது இருந்தால் பிரியாணி சாப்பிட்டு இருக்கலாமே" என்று தான்.


ஆட்டுப் பிரியாணி சாப்பிட்டுவிட்டு ப்ளூகிராஸில் மூலம் நாய் காக்கும் மக்கள். இவர்களின் உண்மையான வருத்தம் இயற்கை என்றால் இன்றைய வாழ்க்கையை வாழ முடியாது.


**

ஆயில் பிரச்சனையில் கவலைப்படும் கடலோர மீன் வியபாரிகள் தங்களால் மீன் பிடித்து அடுத்தவருக்கு (சாப்பிடக் கொடுக்க) விற்கமுடியாமல் போனதால்தான்.

ஆயிலையும் மீனையும் தனித்தனியாக விற்று வருமானம் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். இப்போது ஆயிலால் மீன் அழிந்து இரண்டும் நாசமாவதுதான் அவர்களின் வருத்தம்.

அதுபோல பீச்சில் கூட்டம் குறைந்த‌தால் லாட்ஜ் வருமானம் குறைந்த கவலை பலருக்கு.


மனிதன் கவலைப்படுவது மற்றவர்களுக்காக அல்ல. அவனின் தேவைகளுக்காகவே


.

கல்வெட்டு said...

.

தெகா,

ஏரல் ஏரிக்கு நடந்த கொடுமை தெரியுமல்லவா?

http://en.wikipedia.org/wiki/Aral_Sea

விவாசாயம் குடிதண்ணீர் என்று திருப்பிவிடப்பட்ட நோக்கம் நல்லதுதான். அதே நல்ல நோக்கம் ஏரல் ஏரிக்கும் ஆப்பாகி அனத் இடத்திற்கே கேடாக முடிந்தது.

ஒன்றும் சொல்வதெற்கு இல்லை தெகா. அழிவும் ஆபத்தும் இயற்கையே ஒன்ரும் செய்ய இயலாது.

புலி வாலைப்பிடித்த கதை இது.

:-((((

Thekkikattan|தெகா said...

ராவணன்,

//எதிரி பெட்ரோலியக் கம்பெனியில்தான் காண்ட்ராக்ட் வேலையாளாக வேலை பாக்குறேன்//

எதிரி கம்பெனியா :-P அது யாரா இருக்கும்...

//முன்னெச்சரிக்கை பயிற்சிகள் என்ற அளவிலேயே இவிங்க படம் ஓட்டிக்கிட்டு இருக்கானுவ.//

படம் தானே காமிச்சிட்டே இருப்போம் இது மாதிரி ஏதாவது நடந்து மாட்டிக்கிற வரைக்கும்.

//ஒபாமா கூட வேற ஏதோ மாதிரி திசை திருப்புறார்னு சொல்றாங்கெ... //

அப்படியா? எப்படி?? சொல்லுங்க தெரிஞ்சிக்குவோம்...

Thekkikattan|தெகா said...

//நிகழ்காலத்தில்... said...

வாழ்த்துகள் தெகா.

உண்மையை உள்ளடக்கிய இடுகை.//

ஊக்கத்திற்கு நன்றி நிகழ்காலம்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

மிக அருமையான விழிப்புணர்வு கட்டுரை நண்பரே,மிக்க நன்றி எழுதியமைக்கு.

பிரதீபா said...

//அம்மாம் பெரிய டைனோசாரே ஒன்றுமில்லை என்று போய் விட்டது, இவ்வளவிற்கும் அவைகள் தன்னுடைய அகோர பசிக்கு சதா கண்டதை தின்று வைத்த ஒரு விதயத்திற்கே, அன்னிக்கு இந்தப் பூமியே பார்த்து இவிங்கள வைச்சு மேய்க்க முடியாதுன்னு ஊத்தி மூடி வைச்ச மாதிரி,இன்னிக்கு நம்ம அலும்பு ரொம்பவே ஓவரா இருக்கு, என்னக்கி உள் வாங்கிக்கப் போவுதோ!!//

அருமை !!
ஒரு நாள் பூமாதேவி வாய பொளக்கப் போறா நம்ம எல்லாரும் உள்ள போய்டுவோம்.
என்ன, அதுக்கப்புறம் அதைப் பத்தி பதிவெழுத கடவுள் ஒரு ஆள் தான் இருப்பார் - நகைச்சுவைங்கற லேபில்-ல !! :-)

ராஜ நடராஜன் said...

//எரிச்சல் வர்றது நியாயம்தான். ஆனா அதே சமயம் இப்படி எதற்கெடுத்தாலும் மனிதனின் பேராசை, சுயநல சுரண்டல்னு விமர்சிக்கறது எரிச்சலாத்தானே இருக்கும் :) கோச்சுக்காதீங்க.

சாலை வசதியில்லாமல் வாழ்பவர்களுக்குத்தான் சாலையின் அத்தியாவசியம் புரியும். நல்ல சாலை போட்டு அதில் போக்குவரத்துக்கு அதிகரித்து மக்களுக்கு வசதியும் வாய்ப்பும் பெருகும்போது விபத்து ஏற்பட்டால் ‘எவன் சாலை போட்டது, இப்படி விபத்து நடந்ததுக்கு சாலை போடும் பேராசைதான் காரணமா?’ என்று கேள்வி கேட்பது என்ன மனோபாவமோ :)
//

நாராயண!நாராயண!எரிச்சல் வர்றது நியாயம்தான்ன்னு சொல்லி விட்டு எதற்கெடுத்தாலும் என்பது என்ன அளவீடூ?இந்த எண்ணெய் கசிவு,மனிதனே மனிதனுக்கு சூனியம் வைத்துக்கொள்ளும் உலகவியல் நிகழ்வுகள் போன்றவை எதற்கெடுத்தாலும் போன்ற வரையறைக்குள் வர இயலாது.

ரோடு போட்டும்,அதற்கான வசதிகளை உருவாக்கியும் கூட ரேஷ் டிரைவிங்க் செய்பவர்களை பற்றியே இங்கே விமர்சனம்.ரோட்டைப் பற்றி எந்த மனிதரும் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை.கல்லும்,முள்ளும் காருக்கு மெத்தை வாசகம் இந்தியா போன்ற நாடுகளுக்கு சொந்தமான வாக்கியம்.

ரோட்டைப்பற்றி பேசியதால் பொதுவான ஒரு க்விஸ்.

ஒரு ஹைவேஸ் போக வர ரோடு போடுவதற்கு எத்தனை மீட்டர் நிலம்
தேவை?மொக்கை போடாம தெரிந்தவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்:)

Thekkikattan|தெகா said...

வாங்க கையேடு,

உங்க கருத்து என்ன சொல்ல வருகிறது என்று முழுமையாக உள்வாங்கிக் கொள்ளப் படுகிறது.

Sooner is better, this sort of realization :)

//இந்திய அறிவியல் பற்றிய ஒரு வேடிக்கையான குறிப்பும் உண்டு அவர்களுக்கு எந்த திசையில் செல்வது என்பதிலேயே குழப்பம் என்று//

அப்படி ஒரு தெளிவிற்கு வந்திருக்கும் பொழுது ரோட்டு ஓர புளிய மரம், 100 வருஷத்திற்கு மேலாக நின்ன ஆல மற்றும் அரச மரமெல்லாம் மொட்டை அடிக்கப்பட்டு 2 டிகிரி வெயில் சேர்ந்திருக்கும் :((

நன்றி - கையேடு!!

Anonymous said...

ingayum parunga .. unga post - good one

http://www.z9world.com/view.php?2bbddnBBddc23QQAA334aaee0EEdd0eeXXO44ccd33mmldR22eeMs866cce00mmM0044b44ZZBBp00

Thekkikattan|தெகா said...

வாங்க கல்வெட்டு,

இது மாதிரி கட்டுரைகளுக்கு நல்ல உரையாடல் தேவை வந்த வரைக்கும் மிக்க மகிழ்ச்சி...

//மனிதனின் கட்டுக்குள் இருந்து (நினைத்தால் எடுக்க நினைத்தால் நிறுத்த) அழிக்கப்படும் இயற்கை வளம் ---> நல்லது//

அதாவது செய்றதை திருந்தச் செய்றது, எடுக்கணும் அதே மாதிரி திரும்பிக் கொஞ்சம் எடுத்த இடத்தில இருக்கிற மாதிரி வைக்கணுங்கிற புரிந்துணர்வு - sustainably - tree cutting associated with replanting மாதிரி ;)...

//மனிதனால் ஆரம்பிக்கப்பட்டு அவனால் கட்டுப்படுத்த முடியாமல் போன ஒன்று ---> கெட்டது//

அதாவது இப்போ நாம போயிட்டு இருக்கிற சாலைப் பயணம் மாதிரி சொல்லுறீங்க ... ரொம்பக் கெட்டது.

//ஆனால் ஒரு லிட்டர் எடுக்க 1 சதுர கடல் மைல் பரப்பில் எண்ணெய் கலக்க வேண்டும்.//

அப்படி ஒரு நிலை வந்திச்சுன்னு வைச்சிக்கோங்க, கண்ண மூடிட்டி பங்கு போட்டு பாட்டில் பண்ணிட்டு இருக்க மாட்டோம் - எல்லாம் சுயநலம் கருதி வந்திட்டா ஏது நேரம் நாளைப் பற்றி யோசிக்க - நாளக்கி உள்ளது நாளக்கி முகம் கொடுத்துக்வோம்யா டட்டுவம்தேய்ன்.

கல்வெட்டு நீண்ட லாஜிக்கல் மறுமொழிக்கு நன்றி, இன்னும் சேருங்க சொல்ல வேண்டியது இருந்தா :))

NRS@Ram said...

Hi, I liked your article.

I am closely following this issue. I can only relate to the movie "Anniyan" the consecutive negligence. (It is there through out the world.)

கல்வெட்டு said...

.

தெகா,
பறவைகள், சுற்றுப்புறம் பாதிப்படைவது மனதை வலிக்கிறது. :-(((

உண்மையில் வருத்தம் அதிகம் இருந்தாலும் , நானும் எண்ணெயின் நேரடிப் பயனாளி என்ற முறையில் எனக்கும் பாவத்தில் பங்கு உண்டு.

**

மனிதனாக பூமியில் நாம் செய்யும் அக்கப்போர்களை கண்டால் வருத்தம்தான். கையாலத்தனம் என்ன செய்வது. :-((((

பாவம் செய்துவிட்டு கோவில் உண்டியலில் காசுபோடும் சாரயக்கடை அதிபர்கள் போல, நம்மால் முடிந்தது வாரம் 3 நாள் பஸ், சைக்கிள் , நடை. அம்புட்டுத்தான். :-(((

***

எப்படி பூமி தோன்றியதோ அதுபோல அது அழிவதும் இயற்கையே. நமக்குத்தெரியாமல் எத்தனையோ பிளானட்கள் இப்படி தினந்தோறும் அழிந்துகொண்டு இருக்கலாம்.

எல்லாக் கழிவுகளையும் ஏற்றுச் செரிக்கும் கடல் இதையும் ஏற்று தன்னை சுத்திகரித்துக் கொள்ளும். அழிப்பேரலை போன்று வந்தால் மிதக்கும் எண்ணெய் எல்லாம் அடித்து ஊருக்குள் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை.

:-(((

.

Thekkikattan|தெகா said...

//கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
மிக அருமையான விழிப்புணர்வு கட்டுரை நண்பரே,மிக்க நன்றி எழுதியமைக்கு//

You are welcome, Geethappriyan!
*********************

வாங்க பிரதீபா,

//அதுக்கப்புறம் அதைப் பத்தி பதிவெழுத கடவுள் ஒரு ஆள் தான் இருப்பார் - நகைச்சுவைங்கற லேபில்-ல !! :-)//

அதுக்குப் பிறகு அவரே சிரிச்சிகிட்டும் இருப்பார் - பாவம், அதில என்னான்னா செம மொக்கையா இருக்கும் - game விளையாட ஆள் இல்லாம :-)

நன்றிங்க!!

Thekkikattan|தெகா said...

வாங்க வாங்க ராஜ நட,

நீங்க எல்லாம் இல்லாம இந்தக் கட்டுரையை முடிவிற்கு கொண்டு வர முடியுமா?

//மனிதனே மனிதனுக்கு சூனியம் வைத்துக்கொள்ளும் உலகவியல் நிகழ்வுகள் போன்றவை எதற்கெடுத்தாலும் போன்ற வரையறைக்குள் வர இயலாது.//

நிலமை கட்டுக்கடங்காம போயிட்டு இருக்குது போல, அண்மைய கணக்கின் படி நாள் ஒன்றிற்கு 60,000 பீப்பாய்களாம் கசிவு. ஒரு காலன் எண்ணெய் வந்து ஒரு ஃபுட்பால் ஃபீல்ட் அளவிற்கு கடல் நீரின் இயல்பை மாற்ற முடியும் போல. இன்னொரு செய்தியும் கேள்விப்பட்டேன், அந்த கழிவை செரித்து வெளியிடுவதற்கு ஏதோ புது விதமான தொழிற் நுட்பம் பயன்படுத்தப் பட இருப்பதாக. அது போன்று செய்து விட்டு அந்தக் கழிவை சுத்தப் படுத்த என்ன செய்வார்கள் :D.

பறவைகள் சுத்தகரிப்பிற்கு ஆள் தேடிட்டு இருக்காங்களாம். ஒரு பறவை at a time :(( ...

உங்க க்விஸ் யாருக்குத் தெரியும் அதுவும் மொக்கை போடாமன்னு வேற கண்டிஷனோட... நீங்களே வந்து சொல்லிருங்க.

மயில்ராவணன் said...

நண்பரே, உங்க கட்டுரை பற்றிய லிங்கை ஜெமோக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கேன். தியோடர்கிட்டயும் சொன்னேன்.பார்ப்போம் என்ன நடக்குதுன்னு!!நன்றி

The Analyst said...

நன்றாக எழுதியுள்ளீர்கள்.

கல்வெட்டு சொல்வது மாதிரி, "குற்றம் சாட்டப்படவேண்டும் என்றால் 'தெகா' தொடங்கி நான் வரை பெட்ரோல் பயன்படுத்தும் அனைவருமே குற்றவாளிகள்தான்.
.பிரிட்டிஷ் பெட்ரோலியம் நாம் எல்லாருக்காகவும்தான் இப்படிக் குடைந்து குடைந்து எண்ணெய் எடுத்தது. அனைவருமே பாவிகள்தான்."

As part of the solution, நாம் தான் கொஞ்ச கொஞ்சமாகவாவது நாமே உணர்ந்து எம் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டுமென நினைக்கிறேன்.

We should force ourselves to use less cars, to use public transport more, or better yet cycling, to car pool to work, etc.

We just have to learn to live eco-friendly as much as possible.

இன்னும் கூட oil எங்கே, எப்படி சுலபமாக‌ எடுக்கலாம் எனும் ஆராய்ச்சிக்குப் பதிலாக பணத்தை affordable environmetal friendly hybrid cars, or similar technololies ஜ உருவாக்கப் பயன் படுத்தினால் நன்று.

plastics, global warming, using up all the natural resources, etc, etc, etc. - hate to think where its all going to end! :(

The Analyst said...

இந்த disaster ல் இருந்து தப்பி உயிர் பிழைத்த ஒரு தொழிலாளியின் 60 minutes நேர்காணல்: பகுதி ஒன்று,பகுதி இரண்டு ,பகுதி மூன்று.

The Analyst said...

"இது ஒரு சங்கிலித் தொடருங்க... நான் ஒண்ணும் மீண்டும் எல்லாரும் ஆடு, மாடு வளர்த்துகிட்டு மாட்டு வண்டி வைச்சு பண்ட மாற்றுச் செஞ்சு வாழணும்னு சொல்ல வரல, நமக்குத் தேவை responisbly we should approach the natural resources keeping in mind it can not be last like a "Kamadhenu" but sustainably we can go on take it, so long it afford to keep us on this planet - that is it."

Totally agree with you.

Thekkikattan|தெகா said...

//Anonymous said...

ingayum parunga .. unga post - good one

http://www.z9world.com/view.php?2bbddnBBddc23QQAA334aaee0EEdd0eeXXO44ccd33mmldR22eeMs866cce00mmM0044b44ZZBBp00//

அனானி, நல்ல விசயம் மற்ற தளங்களிலும் போட்டு பரவலாக விசயத்தை எடுத்துச் சேர்ப்பது, ஆனா, அதில பாருங்க அந்த தளத்தில ஒரு பேரோ அல்லது எங்கிருந்து இந்தக் கட்டுரை வந்தது அப்படிங்கிறதுக்கான மூலமோ கொடுக்கப் படவில்லை. சரி, அங்க ஏதோச்சையா படிக்கிறவங்க என்னோடதில வந்து அதே கட்டுரையை பார்க்க நேர்ந்தால் என்னாகும்.

அது மாதிரி இங்க ஒரு ஆளு http://asafardeen.blogspot.com/2010/06/blog-post_7371.html இதே பதிவ ஒட்டி வைச்சிருக்காரு, எனக்கு சந்தோஷம்தான் இன்னும் நாலு பேருக்கு போய்ச் சேருது விசயமின்னு இருந்தாலும் கொடுக்க வேண்டியதை கொடுத்திரணும்ல - அதேய்ன் ரெண்டு பேருக்கும் மின்னஞ்சல் அனுப்பி இருக்கேன் கேட்டு இது வரைக்கும் பதில் வரல.

இல்லன்னா, ஒரு பொது பதிவா போட்டு கொஞ்சம் விசயங்கள் பேசி தெரிஞ்சிக்க வேண்டியதுதான்... நன்றி, அனானி என்னோட கவனத்திற்கு கொண்டு வந்ததிற்கு.

காட்டாறு said...

எல்லோர் மனதையும் அழுத்திக் கொண்டிருக்கும் பிரச்சனை. ம்ம்ம்... மனிதம் ஒரு புறம் இயற்கையை சீறத் தூண்டி கொண்டிருக்க, மறுபுறம் புத்தியை தீட்டித் தீட்டி அழிவு பாதையிலும் சென்று கொண்டிருக்கிறது. வரும் முன் காக்க என்ற சொல் எப்படி கையாளப் படுகிறது? தொலை நோக்கு பார்வையுடனா அல்லது தன்னிலை பார்வையுடனா என்பது கேள்விக் குறியே.

மாறுதலுக்காக லையபிலிட்டி பற்றி இங்கு என் கருத்தை சொல்வது அவசியம் என கருதுகிறேன்.

தனி மனித பாதிப்பு பற்றி அக்கரை கொள்பவர் (கம்பெனி பெருந்தலைகள்) எத்தனை பேர் என சொல்ல தெரியவில்லை எனக்கு. தவறு நேர்ந்தால், எல்லா கம்பெனிகளுக்கும் உள்ள ஒரே குறிக்கோள் தன் மேல் பழி வராமல் எவ்வாறு தற்காத்து கொள்ள வேண்டும் என்பதே. இப்போ பி.பி என்ன சொல்லுது - பாதிப்பு நேர்ந்தால் தன் கடமை (லையபிலிட்டி) மேக்சிமம் 75 மில்லியன் மட்டும் தான் என்று. இது எந்த மூலைக்கு. பாதிப்பின் வீரியம் எவ்வளவு என்பதெல்லாம் கணக்கில் இல்லை. எதை கணக்கில் கொண்டு இப்படி 75 மில்லியன் என்று தீர்மானிக்கிறார்கள்? இதெற்கென இருக்கும் liability legislation என்ன செய்கிறது. விதிமுறைகள் என்ன என்பதெல்லாம் இன்னும் பொதுப் பார்வைக்கு கொண்டு வரப் படவில்லை.

பிபி விட்டு விலகி நம் திருநாடு செல்வோம். தலைவர் புஷ் இந்தியாவில் அணுமின் நிறுவ கொடுத்த (என்ன கொடுமையப்பா இது) ஒப்பந்தம் இன்றும் கையொப்பமிடாமல் காற்று வாங்கிக் கொண்டு இருக்கிறது. ஏன்? பல காரணங்களில் இதுவும் ஒன்று: பாதிப்பு நேர்ந்தால் அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிற்கு கொடுக்கும் லையபிலிட்டியில் பிரச்சனையாம். இன்று 75 மில்லியன் பற்றி கேள்வி தொடுக்கும் ஒபாமா அரசாங்கமும், அமெரிக்க மக்களும் என்ன செய்யப் போறாங்க என பொறுத்திருந்து பார்ப்போம். அதே சமயத்தில் இந்திய அரசாங்கம் ஒப்பந்ததில் கையொப்பமிட்டால், இன்னுமொரு போபால் விஷ வாயு கசிவிற்கு நாம் தயாரா? பொது மக்களாகிய நாம் இன்று என்ன நடவடிக்கை எடுக்கனும்? இல்ல.. எப்பவும் போல் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? நண்பரே, இது குறித்தும் விரிவா எழுதுங்களேன்.

ஜான் கார்த்திக் ஜெ said...

இந்த பதிவை படிச்சதும் பின்னூட்டம் போடணும்ன்னு நெனச்சேன்.. ஆனா கொஞ்சம் கால தாமதமாயிருச்சு.. சில தினங்களுக்கு முன்பு தான், இதை பற்றி தேடி கொண்டிருந்தேன் (times of india-la potrundhaan, 40000 barrel per day nu).. அந்த சமயத்தில் இந்த பதிவு மேலும் உதவிற்று.. என்ன தான் நம்ம எவளவோ சாதித்தாலும், ஒரு சில அத்துமீறல்கள தவிர்க்க மறந்திடறோம்.. அதையும் ஒரு கை பார்ப்போமேன்னு.. எப்பவும் நம்ம இயற்கையோட போராடி தான் பல விஷயங்கள கண்டுபிடிக்குறோம், அனுபவிக்குறோம்.. ஆனா ஒரு சில எல்லையை மீறும்போது, அதன் விளைவுகள் எவ்வளவு கொடுமை என்பதற்கு இது ஒரு உதாரணம்..

Thekkikattan|தெகா said...

//NRS@Ram said...

Hi, I liked your article//

Thanks @Ram... keep following.

****************************

//மயில்ராவணன் said...

நண்பரே, உங்க கட்டுரை பற்றிய லிங்கை ஜெமோக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கேன். தியோடர்கிட்டயும் சொன்னேன்.பார்ப்போம் என்ன நடக்குதுன்னு!!நன்றி//

ராவணன், உங்க ஆர்வம் எனக்கும் வந்து ஒத்திக்கிச்சு போங்க. எவ்வளவு வேலை பார்த்திருக்கிறீங்க. அதான் நீங்க எதிர் பார்த்த மாதிரியே ‘ஜெமோ’ தளத்தில வந்திருச்சுப் போலவே.

ஆமா, உங்களுக்குத் தியோடர் பாஸ்கரனைத் தெரியுமா? ம்ம்ம்... நன்றி சில கூடைகள் :)

Thekkikattan|தெகா said...

வாங்க Analyst வந்திட்டிங்களா வாங்க,

நிறைய பரிந்துரைத்திருக்கிறீர்கள், அவைகளில் சில வற்றையாவது நாம் அன்றாட நாட்களில் பயன் படுத்தினாலே collectiveவாக மாற்றங்களை காண்பது உறுதி.

ஓபாமா ஆட்சியிலாவது மாற்று எரிபொருள் கண்டிபிடிப்பிற்கென நிதி ஒதுக்கப்பட்டு ஆராய்ச்சிகள் முடிக்கி விடப்படுமென இருந்த நம்பிக்கையில் இப்பொழுது எண்ணெய்க் கசிவு பெரும் சவலாக அமைந்து, அந்த வழியில் இறங்கி நடக்க துரிதப் படுத்தப் போகிறதா அல்லது பின் தங்கி போகப் வைக்கப் போகிறதா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

//plastics, global warming, using up all the natural resources, etc, etc, etc. - hate to think where its all going to end! :(//

யோசிக்காமே வாழக் கத்துகிட்டா கவலை நிறைய வாரதில்லையோ...

விடியோ இணைப்புகளுக்கும் ஓரு நன்றி - இனிமேல்தான் பார்க்க வேண்டும்.

நன்றி - அனலிஸ்ட்!!

Thekkikattan|தெகா said...

வாங்க காட்டாறு,

சென்சிபிலான மறுமொழியோட வந்திருக்கீங்க. இங்கே பேசப்படாத விசயமும் கூட.

//பாதிப்பின் வீரியம் எவ்வளவு என்பதெல்லாம் கணக்கில் இல்லை. எதை கணக்கில் கொண்டு இப்படி 75 மில்லியன் என்று தீர்மானிக்கிறார்கள்?//

இப்போ இந்த பி.ப்பி எண்ணெய்க் கசிவு விசயத்தில ஒரு பில்லியன் டாலர்ஸ் ஒதுக்கி இருக்காய்ங்களாம் சுத்திகரிப்புக்கெனவும் மற்ற சுற்றுப் புற பாதிப்புகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவெனவும். இன்னும் 20 பில்லியன் டாலர் எஸ்குரோவாக பாதிக்கப்பட்ட சுத்துப்பட்டு தொழிற் நிறுவனங்களுக்கும் கொடுக்க வேணும்னு எடுத்து தனியா வைக்க வேண்டுகோல் வைச்சிருப்பாங்க போல. சரி இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், இந்தப் பணமெல்லாம் வாய் உள்ள புள்ளைக பங்கு போட்டு எடுத்துக்கென்னே வைச்சிக்குவோம், இந்த பாதிப்பில செமை அடி வாங்கின வாய் பேச முடியாத கொக்கு, குருவிக்கு, மீனுக்கு இன்னும் எத்தனையோ கண்ணுக்கு தட்டாத உயிரிக்கு எல்லாம் யாரு என்னாத்தை வாங்கிக் கொடுக்கப் போறாங்க - வாயி உள்ள பிள்ளைகளான நாம வாங்கி தின்னுப்ப்போம் அதுக.

//பாதிப்பு நேர்ந்தால் அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிற்கு கொடுக்கும் லையபிலிட்டியில் பிரச்சனையாம். //

அதாவது இவிங்க பாக்கெட்டுக்கு எவ்வளவு வரும்னு தீர்மானிக்கிறதிலேன்னு சொல்லுங்க. ஆமா, போபல் விஷ வாயுக் கசிவில பாதிக்கப்பட்ட, இறந்தவிங்க குடும்பங்களுக்கு எவ்வளவுதான் நஷ்ட ஈட்டுத் தொகையா கடைசியா கொடுத்தாங்க, எனி ஐடியா?

//அதே சமயத்தில் இந்திய அரசாங்கம் ஒப்பந்ததில் கையொப்பமிட்டால், இன்னுமொரு போபால் விஷ வாயு கசிவிற்கு நாம் தயாரா? //

ம்ம்ம்ம் தயார்தான்... எடுத்து வரிசையா அடுக்கி தொலைக்காட்சிக்கு ஃபோஸ் கொடுக்க, அடப் போங்கங்க நம்ம ஊரு உசிரெல்லாம் வெறும் --- :((

நன்றி - காட்டாறு

The Analyst said...

Another interesting read about the subject over at culturing science.

DrPKandaswamyPhD said...

நல்லா இருக்குங்க.

ஜோதிஜி said...

வெட்கப்படுகின்றேன். வேதனைப்படுகின்றேன் என்று சொல்லிக்கொண்டே உங்கள் எழுத்தை அதற்கு வந்த விமர்சனத்தில் ஸ்ரீதர் நாராயணன் செல்வராசு போன்ற எதிர்தரப்பு வாதங்களைப் பார்த்து இத்தனை நாளாய் எங்கேயிருந்தாய் பங்கு என்று கேட்கத் தோன்றுகிறது. போட்டிக்கு புகைப்பட தலைப்பை விட இது எனக்கு ரொம்ம்ம்பபபப பிடிச்சுருக்கு.

நானும் செல்வராசு கட்சி தான்.

நாம்......... சரியா கழுவினா ஏன் நாத்தம் வருது. இங்கே வந்து பாருங்க.

பொண்டாட்டிக்கு ஒன்று, வைப்புக்கு ஒன்று, பிள்ளைக்கு ஒன்று என்று கார்கள் இருந்தாலும் அடுத்த ஐந்து கார்கள் அனாதையாக நின்று கொண்டுருக்கும். அடுத்த கார் வாங்க கடனுக்கு அலைந்து கொண்டுருக்கும் நாதாரிகளுடன் வாழும் உலகத்தில் ஏன் வணிக நிறுவனங்களை குற்றம் சாற்ற வேண்டும் என்று கூறி

இந்த உரையை இத்துடன் நிறைவு செய்கின்றேன்.

நன்றி வணக்கம்.

Related Posts with Thumbnails