Friday, May 19, 2006

குளிர்சாதன வசதியிருக்கு உள்ளே வராதே...!

நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிற விசயம் கொஞ்சம் முக்கியமான சமூக கண்ணோட்டத்துடன் பார்க்கப் பட வேண்டிய விசயம். கடந்த முறை நான் இந்தியா வந்திருந்த போது இது எனக்கு ஏற்பட்ட அனுபவம். நான் எனது பொற்றோர்களுடன் அமெரிக்க விசா வாங்கும் பொருட்டு அவர்களை அங்கு மவுண்ட் ரோடு பக்கமிருக்கும் கட்டடத்திற்கு கொணர்ந்திருந்தேன்.

அங்கு ஆடு மாடுகளை விரட்டியடிப்பதை போல மந்தையில் மாட்டி (அப்படி ஏண்டா தெகா அமெரிக்கா போற அப்படின்னு கேக்றீங்களா, எல்லாம் நேரந்தான் வேற என்னாத்தா செல்றது) மஞ்சு விரட்டு முடிச்சுட்டு ஒரு அனுமதி சீட்டும் வாங்கிட்டு வெளியே வந்தா ஒரு மூணு மணி நேரம் வெளியே செலவு செய்யணும் அப்படிங்கிற நிலமை.

முன்னாலேயே ஒருத்தரு கைத்தடியும் அதுவுமா ஏய் அங்க நிக்கப்புடாது அந்த மரத்தாண்ட போ, ஏய் நீ என்ன இங்கன செரிஞ்சு கிட்டு நிக்கிற அப்படின்னு துப்பாக்கிய காட்டியெல்லாம் மிரட்டி ஒரே மரத்தடிக்கு கீழே எல்லோரையும் கட்டிப் போட முயற்சித்துகிட்டு இருந்தாங்க. அதப் பார்த்துப்புட்டு, ச்சே, நம்ம அப்பா அம்மாவிற்கு நிக்க வேற முடியாது பக்கத்தில ஏதாவது ஒரு பழமுதிர் சோலையோ, இல்லே ஒரு புத்தக கடையோ இருந்த நல்ல இருக்குமேன்னு கண்ணெ விட்டு தேடும் பொழுதுதான், நம்ம ஆக்ஸ் ஃபோர்ட் புத்தக நிலையம் ஞாபகம் வந்துச்சு.

அடெடா, நமக்கு வேண்டிய இடமாச்சேன்னு ஆர்வமா அங்கன போயி கொஞ்சம் நேர நின்னுப்புட்டு மேஞ்சுப்புட்டும்தான் வருவோமின்னு குழந்தைதனமா உள்ளே போறதிற்கு முடிவு பண்ணிப் போனதாங்க தெரிஞ்சுச்சு நாம இந்தியாவின் மன நிலை எப்படியிருக்குன்னு. இன்னும் எவ்ளோ தொலைவில் உள்ளோம், நம்மை ஒரு மனுசனா நாமே மதிச்சுகிறத்துக்குன்னு.

அப்படிப் போக எத்தனிக்கும் போது, சும்மா சாதரணமாத்தான் ட்ரெஸ் பண்ணிருந்தோம், இன்னும் சொல்லப் போன கொஞ்சம் கிராமத்து தனமா(!?) சென்னை வாட்சுமேன் கண்ணுக்கு கூட சல்லிக்காசு பொருமானம் இல்லாமல் இருக்கிற லுக் போல. அந்த வாட்ச்மென் எங்கள வாசல்ல வச்சு நிறுத்தி கேட்டுபுட்டாரு ஒரு கேக்கக் கூடாத கேள்விய, ஏன் உள்ளே போறீங்க?

அடெ என்னாட இது அப்படின்னு ஆகிப் போச்சு, உள்ளே புத்தகங்கள் தானே விக்கிறீங்க இல்லே வேற ஏதாவதா அப்படின்னு நான் எதிர் கேள்வி கேட்டேன். அதுக்கு அவரு ஆமா புக்குதான் விக்கிறோம், ஆனா இங்க நிறைய பேரு சும்மா ஏ/சி இருக்கின்னு வந்து நின்னுப்புட்டு போவோமின்னு வராங்க அப்படின்னாரு.

எனக்கு சுளீர்னு யாரோ சூடு வைச்ச மாதிரி இருந்துச்சு. என்னங்கட இது ஒரு புத்தக்கடையில ஒரு நாள் இருந்து தடவித் தடவி பார்த்தாலும் நமக்கு பிடிச்ச புத்தகமா கிடைக்கிறது அரிது அப்படி இருக்கும் பொழுது எத்தனை கஷ்டமர் உள்ளே போயி வெளியே வந்தா எவ்ளோ புத்தகம் விக்கலாம் அப்படின்னு இருக்கிற தொழில்ல இருந்துகிட்டு, உள்ளே போறதிற்கு முன்னாலேயே இப்படி அடிக்காத குறையா மூஞ்சில சாத்தினா கொஞ்ச கொஞ்சம் படிக்கிற பழக்கத்தில இருக்கிற ஆட்களும் சன் ட்டி.வி, எம் ட்டி.வி அப்படின்னு போயிடுலாம் போலன்னு நினைச்சுக்கிட்டேன்.

நான் அந்த வாட்ச்மென்கிட்ட கேட்டேன், ஏங்கா எப்படி நான் புத்தகம் வாங்கேவேனா இல்லை வாங்கமாட்டேனா அப்படின்னு முன்னாலேயே கண்டுபிடிச்சி உள்ளே விடுறதா வேணாமான்னு வடிகட்டுவீங்கன்னு கேட்டேன்? முழிச்சாறு... அவரு முன்னாலே புத்தகம் எதுவும் வாங்கி பழக்கமுண்டான்னு எனக்குத் தெரியல. ஏன்னா, புத்தகக் கடைகுள்ள நுழையுற அத்தனை பேரும் புத்தகம் வாங்கித்தான் ஆகணுமின்னா யாரவது உள்ளே போவோமா? அப்படி பிடிச்சிருந்தா வாங்கமத்தான் வெளியே வருவோமா?

சரி இப்ப என்ன நடக்கிது நம்மூருல? ஒரு "வெள்ளைக் காரன்" அதே கடைகுள்ள நூழையுறான் அப்படின்னு வச்சுக்குவோம், இல்லேன்னா யாரவது கார்லே வந்து இறங்கி உள்ளே போறாங்க அப்படின்னு வச்சுக்குவோம், அந்த வாட்ச்மென் என்ன பண்ணியிருப்பாரு கதவா திறந்து விட்டதுமில்லமா, தலை தாழ்த்தி உள்ளே அனுப்புவாரு, இல்லையா?

அப்படின்னா, எங்களுக்கு என்னாச்சு? சரி இது இங்க மட்டும்தானா அப்படின்னா இல்லையே, கோயில்ல ஸ்பெசல் பூஷை, ரயில் டிக்கெட் வாங்கிற இடத்தில, சரி அதெல்லாம் விடுங்க பல்கலை கழங்கள், கல்லூரிகளில் பணம் கட்டும் கவுண்டரில் ஒரு மாணவனுக்கு மரியாதை இருக்கா அங்க வேலை பாக்கிற ஆட்கள்கிட்டே இருந்து. ஏய்யா இப்படி நம்மை நாமே கேவலமா மதிச்சுகிறோம்?

ஒரு ஆளை அவன் என்ன கலரா இருக்கன், கருப்பா இருக்கானா இல்லை செவத்த தோல இருக்கானான்னு பார்த்து மரியாதை கொடுக்க முடியுமா? இல்லை வியபாரம்தான் பண்ண முடியுமா? எல்லாம் கொரகமய்யா. இதுக்காக நான் வெள்ளக் காரன் தோலை உரிச்சு மாட்டிக்க முடியுமா, இல்லை, காதில கடுக்கனும், பங்க் கட்டிங்கும் பண்ணிக்கிட்டு எங்கப்பன் குதிருகுள்ள இல்லென்னு திரிய முடியுமா?

சரி நாம ஏங்க இப்படி இருக்கோம், அல்பத்தனாம யோசிச்சுக்கிட்டு, ஏ/சி, காரு, பங்களா எல்லாம் இருந்த நாம பெரிய ஆள், எல்லாம் தெரிஞ்ச ஆள். மண்டைக்குள்ள மசாலவே இல்லாமல் இருந்தாலும் இதெல்லாம் இருந்தா நாம ஆளுன்னு நினைச்சுக்கிட்டு திரியரோம்.

எப்ப நாம ஆளா வெளிப் பார்வையிலே பார்த்து எடைப் போடுறதை நிப்பாட்றோமோ அன்னிக்குத்தான் இந்தியா உண்மையிலேயே ஒளிர்கிறது! இந்தியன்னா நாம்மை நாமே மதிச்சுக்கலாம், நாம அதுக்கு தகுதியானவங்கதான் அப்படின்னு நம்மூருல நம்மை மதித்து காமிச்சாதான், சிங்கப்பூர்ல இருக்கிற முஸ்தாபா கடை நம்மாலு உள்ளே போறதிற்கு முன்னாலேயே நம்பிக்கையில்லாமே பையை கட்டி உள்ளே அனுப்புறதை நிறுத்துவான். கோவலமா இருக்குங்க, நெலமை.

இதெ ஏன் நான் இங்க சொல்றேன் அப்படின்னா கல்லூரிகளிலும் இப்படித்தான் அங்கு உள்ள அலுவலகங்களில் வேலைப் பார்க்கும் ஆட்கள் மாணவர்களை ஆடு மாடுகளைப் போல நடத்துவது, ரேஷன் கடையில் க்யூவில் நிற்கும் மக்களை மாக்களைப் போல அங்குள்ள ஊழியர்கள் நடத்துவது, எந்த பொதுமிடமாயினும் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் நபர்கள் தாங்களை கடவுளின் மறுபிறப்பாக கருதி மக்களுக்கு வரம் தருவதாக நினைத்துக்கொள்ளும் மனப் பாங்கு என்று ஒழியப் போகிறது நம்மிடத்தே இருந்து.

இன்னும் நாம் நிறைய தொலைவு போக வேண்டியிருக்கிறதோ? அந் நாளை நாம் எட்ட!

40 comments:

Anonymous said...

//ஒரு வெள்ளைக் காரன் அதே கடைகுள்ள நூழையுறான் அப்படின்னு வச்சுக்குவோம், இல்லென்னா யாரவது கார்லெ வந்து இறங்கி உள்ளெ போறாங்க அப்படின்னு வச்சுக்குவோம், அந்த வாட்ச்மென் என்ன பண்ணியிருப்பாரு கதவா திறந்து விட்டதுமில்லமா, தலை தாழ்த்தி உள்ளே அனுப்புவாரு இல்லையா?//

இதிலிருந்து தெரியலயா தெ காட்டான், இன்னும் நாம அடிமைத் தனத்திலிருந்து முழுமையா மீளவில்லையென்று. நீங்கள் அந்த புத்தகக் கடையின் மானேஜரை பார்த்து இது குறித்து பேசியிருக்க வேண்டும்.

வருந்தத்தக்கது உங்களுக்கு நேர்ந்த அனுபவம்.

சாருமதி.

துளசி கோபால் said...

அய்யோ தெ.கா.
இப்படி விவரம் இல்லாமப் புலம்புறீங்களே! அதான் ஆள் பாதி ஆடை பாதின்னு ஆகிப்போச்சேங்க. எல்லாம் ஆடம்பரத்துக்கு
இருக்கற மதிப்பு அசலுக்கு எங்கெ இருக்கு? அதுவும் நாலு வார்த்தை இங்கிலிபீஸுலே விளாசிட்டாப் போதுமாமே!

மனுஷனை மனுஷனா நம்ம மனுஷங்களே மதிக்கறதில்லையேங்க. இதேதாங்க துணிக்கடைகளிலும். பார்க்கக் கொஞ்சம்
பாவமா இருந்துட்டாங்கன்னா அவுங்க கேக்குற துணிகளைக்கூடச் சரியாக் காட்டறதில்லையாம். எல்லாம் வேஷத்துக்குத்தான்
மரியாதைன்னு இருக்கு. நானும் புலம்பி ஓஞ்சுட்டேன். இப்ப இது உங்க டர்ன்.

Thekkikattan|தெகா said...

சாருமதி,

//இன்னும் நாம அடிமைத் தனத்திலிருந்து முழுமையா மீளவில்லையென்று. //

அப்படித்தான் தெரிகிறது.

//நீங்கள் அந்த புத்தகக் கடையின் மானேஜரை பார்த்து இது குறித்து பேசியிருக்க வேண்டும்.//

மானேஜரை சந்திக்கலாம்மென்று எத்தனிக்கும் பொழுது அந்த வாட்ச்மென், ஐயா, என் வேலையே போயிடும் இதெ இத்தோட விட்டுடுங்கன்னு சொல்லி கேட்டுகிட்டாரு. என்னமோ நடக்குது!

தெகா.

Sivabalan said...

உங்களுக்கு நேர்ந்த் அந்த அனுபவம் மிகவும் வருந்த தக்கது.

நிச்சயம் இது அந்த புத்தகக்கடையின் தரங்கெட்ட செயல்.

கன்டிக்க தக்கது!!

Deiva said...

It looks like you are here in US. In US, when an indian see another fellow indian, they will not even smile and turn their faces. Whereas a non-Indian (white/black) immediately smile whether they know each other or not. I am not sure why indians have a bad attitude towards their fellow country men. This should be in genes

குமரன் (Kumaran) said...

நிறைய இந்த மாதிரி பாத்தாச்சுங்க நம்ம ஊருல. :-(

தருமி said...

pants vs வேஷ்டி;

pants with shirt tucked in vs pants & தொள தொள சட்டை

shoes vs செருப்புக் கால்

..........இப்படியாக பல hierarchical மரியாதை தரும் விஷயங்கள் உண்டு.
பேசாம உங்க ஊர்ல மாதிரி jeans தேசிய உடையா மாத்திட்டா நல்லா இருக்குமோ?

தருமி said...

pants vs வேஷ்டி;

pants with shirt tucked in vs pants & தொள தொள சட்டை

shoes vs செருப்புக் கால்

..........இப்படியாக பல hierarchical மரியாதை தரும் விஷயங்கள் உண்டு.
பேசாம உங்க ஊர்ல மாதிரி jeans தேசிய உடையா மாத்திட்டா நல்லா இருக்குமோ?

Santhosh said...

தெ.கா,
நல்ல பதிவு உண்மையும் கூட.

மணியன் said...

இது மிகவும் வருந்ததக்கதே. இதேபோல சாதரணமானவன் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு காசு கொடுத்து போனால்கூட கடன் சொல்லிவரும் பணம்படைத்தோருக்குக் கிடைக்கும் மரியாதையும் கவனிப்பும் கிடைக்குமா? அட, வேட்டி கட்டினவங்களை சில கிளப்புகளில் உள்ளேயே விடுவதில்லை.
என்னமோ போங்க!
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்!.. நாகேஷ் பாட்டுதான் ஞாபகம் வருது.:(

மகேஸ் said...

அப்படியா செய்கிறார்கள்,
அடுத்த தடவை இந்தியா வந்து, நம்ம படையோட உள்ள போகும் போது தடுத்தார்கள் என்றால் நல்லா கலாய்சிச வேண்டியது தான்.

நாமக்கல் சிபி said...

ஒரு நல்ல கிராமத்து ஆசாமிக்கு(என்னைப் போலன்னு வெச்சிக்குங்குளேன்) பேண்டு, கோட்டு, வெள்ளைக்கார தொரை மாதிரி தொப்பி எல்லாம் போட்டுவிட்டு உள்ள அனுப்பிடனும். உள்ள போனவுடனே நம்மாளு "ஐய்யா என்னமா சில்லுன்னு இருக்கு"ன்னு சத்தமா சொல்லணுமாம், எப்படி இருக்கும்!

Thekkikattan|தெகா said...

துள்சிங்க,

அது "ஆள்பாதி ஆடைபாதின்னு இருந்தாலும்" ஒரு 65 வயது அம்மாவை ஜீன்ஸ் பாண்ட் போட்டு உள்ளே கூட்டிகிட்டு போயி நான் புத்தகங்கள் வாங்க முடியுமா?

என் அம்மா இங்கு வந்திருந்த பொழுது கூட அது போன்ற ஒரு அவ மரியாதையை சந்தித்தது கிடையாது. நம் ஊரிலே இது போன்று. நாம் எங்கே போகிறோம்?

மாற்றங்கள் தேவைதான் அதற்கென தன்னை காணமலடித்து பெறுவது ஒரு தங்கக்கூண்டில் தன்னை தானே சிறைவைத்தாக அமையாதா?

//மனுஷனை மனுஷனா நம்ம மனுஷங்களே மதிக்கறதில்லையேங்க.//

அப்பன்னா நமது இந்தியா கடந்த கால நல்ல விசயங்களை மட்டுமே இன்றும் பேசிக்கொண்டு நிகழ்காலத்தை பணம் சேர்ப்பதில் கடத்தி வருகிறதா?

//எல்லாம் வேஷத்துக்குத்தான்
மரியாதைன்னு இருக்கு. நானும் புலம்பி ஓஞ்சுட்டேன். இப்ப இது உங்க டர்ன்.//

எது எப்படியிருப்பினும் உண்மையாக வாழ்வதில் கிடைக்கும் ஆத்ம திருப்தியில் பொய்யாக வாழ்ந்து மடிவதில் கிட்டுவது கிடையாது.
நன்றி தாங்களின் அனுபவத்தை இங்கு எல்லோரிடமும் தாரளமாக முன்வந்து பகிர்ந்து கொண்டமைக்கு...

அன்புடன்,

தெகா.

இலவசக்கொத்தனார் said...

அது அந்த வாயிற்காப்பாளருக்கு அவரது மேலாளர்கள் தந்த உத்தரவாகவும் இருக்கலாம் அல்லவா? நீங்கள் அதைப் பற்றி அங்கிருந்த அலுவலரிடம் கேட்டிருக்க வேண்டும். இல்லை எய்தவரை விட்டு அம்பை நோகும் கதையாய் ஆகிவிடும்.

இது மட்டும் நடந்தது அமெரிக்காவாக இருந்தால் இந்நேரம் நீர் பெரும் பணக்காராக ஆகியிருக்கலாம். :)

Thekkikattan|தெகா said...

ஆமா சிவா ரொம்ப வருந்தத்தக்கது. எங்களுடன் ஒரு அமெரிக்கா பெண்ணும் வந்திருந்தார், அவர் இங்கு தத்து எடுத்து வளர்க்கப்பட்டவரும் கூட.

அச் சூழலில் அவருக்கென நிறைய கேள்விகள் இந்தியாவை பொருத்து இருக்கிறது. ஏன் இந்தியக் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு தத்தெடுப்பு என்ற பெயரில் நாடு கடத்தப்பட வேண்டும், பிறகு அவர்களுக்கு விபரம் தெரியும் சூழலில் நம்மூரில் நடந்தேறும் ஏற்றத்தாழ்வுகள் மனுஷன மனுஷனா மாதித்துக் கொள்வதில் இப்படியெல்லாம் பிரட்சினைகள் இருக்கிறது என்பதனை படித்தும் கேட்டும் மட்டுமே இருப்பார்கள்... அது அப்படியிருக்க இப்படி அவர்களுக்கு நேரடி அனுபவமாக நடந்திருந்தால் எப்படி நினைந்துருக்க வேண்டும்.

ரொம்ப அசிங்கமா இருக்குதுங்க...

தெகா.

Sivabalan said...

தெகா

இங்கே நான், பார்ஸ்ன் & நோபல் செல்வது வழக்கம், இதுவரை நான் பார்த மட்டில் இதுபோன்ற செயல்களை நான் பார்ததில்லை.

உங்கள் பதிவை படித்ததும் வருத்தப்பட்டேன்!

Unknown said...

தெகா,

இதே போல் மைசூரில் தசராத் திருவிழாவின் போது - அரண்மனைக்குள்ளும் - மற்ற இடங்களிலும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் மரியாதையில் ஒரு சதவீதம் கூட நம்மவருக்கு வழங்கப்படாததை நேரில் அனுபவித்திருக்கிறேன்!

யாரை நோக???

அன்புடன்,
அருள்.

வெளிகண்ட நாதர் said...

வெளி பூச்சுக்கு மயங்கற ஆளு நம்மவங்க! இந்த போலித்தனம், ரொம்பவே நம்மக்கிட்ட அமிங்கி போயிருக்கு! இந்த 'behaviour' வரக்காரணம் தொன்றுதொட்டு ஏழ்மை, படிப்பறிவுன்மை தான்! காலங்கள் பல ஆகலாம், இதெல்லாம் மாற!

Thekkikattan|தெகா said...

Deiva,

ஓ, அந்த அனுபவம்பத்தி இங்கே கொஞ்சம் பகிர்ந்துக்க சொல்லிறீங்களா... செய்றேனே,

நான் அமெரிக்கா வந்த புதிதில் நான் இருந்த இடம் கொஞ்சம் அதீதமா வெள்ளைக்காரங்க வசிக்கும் பகுதி, அதனால இந்தியர்களெ பார்க்கிறதே கொஞ்சம் கஷ்டமின்னு வச்சுக்கங்க்ளேன். அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையிலெ ஒரு நாள் மிதிவண்டி போட்டு ஊர்வலம் வந்துகிட்டு இருக்கிறாப்ப திடீர்னு ஒரு இந்தியா ஆள் ஒருத்தர் நம்ம சாய்ல்லே வீட்டுக்கு வெளியில ச்சேர் ஒண்னு போட்டு உட்கார்ந்திருந்தார்.

எனக்கு அவர பார்த்தவுடன் ரொம்ப உற்சாகமாகி மிதிவண்டிய அப்படியே சாச்சி போட்டுட்டு ஓடிப் போயி அய்யா, நீங்க இந்தியாவன்னு மூச்சிறைக்க கேட்டேன். அவரும் நிதானம மேலே கீழே பார்த்துப்புட்டு ஊருக்குப் புச்சா அப்படின்னு ஆங்கிலத்தில கேட்டுப்புட்டு நான் ஒரு மலையாளி, நீங்க தமிழா அப்படின்னா தமிழ் பேசுற மக்கள் இருக்கிற பாக்கம போயி ஆத்மாவை கண்டுப் பிடிச்சுங்கன்னு சொல்லிட்டு பேச்ச முடிச்சுக்கிட்டாரு.

எனக்கு என்னெட இதுன்னு ஆகிப்பூச்சு, எவ்ளோ பேசவேண்டியிருக்கிற இடத்தில ஒரு மொழி வந்து புகுந்து காலிபண்ணிப் புடிச்சே அப்படின்னு ஒரே ஏமாத்தமா போயிருச்சு, இவ்வளவுக்கும் அவரு வீட்டுக்கும் நான் இருக்கிற வீட்டுக்கும் நடந்து போற தொலைவுதான்னு வச்சுக்கங்க.

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு உலக அறிவு கிட்ட ஆரம்பிச்சு எப்படி நாம் மனிதர்கள் நமக்குள்ளேயே நிறைய பிளவுகளை வச்சுக்கிட்டு வெளியில வாழ்ந்துகிட்டு இருக்கிறோம். வெளுத்தது எல்லாம் பால் இல்லை என்கிற குழந்தை தனமான எண்ணத்திலிருந்து அடெல்ட் உலகத்துக்கு வந்துட்டேன்.

அதற்கு பிறகும் சில டெஸ்ட்களும் செஞ்சுட்டுத்தான், குஜாராத்தி மக்களோட இன்னபிற குரூப் இப்பிடி...

இப்ப எனக்கு நானே ஒரு நாடு, அதிலெ நானே எவெரித்திங்...

பி.கு: இதில் மாணவ உலகத்திற்கும், சாப்ட் வேர் மக்களுக்கும் பொருந்தாது. இது அடெல்ஸ் ஒன்லி. ;-))

இலவசக்கொத்தனார் said...

//பி.கு: இதில் மாணவ உலகத்திற்கும், சாப்ட் வேர் மக்களுக்கும் பொருந்தாது. இது அடெல்ஸ் ஒன்லி. ;-))//

சாப்ட்வேர் மக்கள் அடல்ட்ஸ் இல்லீங்களா?

Thekkikattan|தெகா said...

இ.கொ,

//சாப்ட்வேர் மக்கள் அடல்ட்ஸ் இல்லீங்களா?//

அப்டி எடுத்துகிட்டீங்களா கொத்தனாரே, நான் சொல்ல வந்தது... அவங்கெல்லாம் "இன்னமும் வெளுத்தது எல்லாம் பால் அப்படின்னு நினைச்சுக்கிட்டு" குழந்தை மனசு சோட இருக்கலாம்மில்லையா அதான் அப்படி சொன்னேன்...

நானும் அந்த குரூப்ல விழத்தான் ஆசைப் படுறேன் எப்போதும்... ஒரு மீன் கொத்தி ரெண்டு வெங்காயாம் ரெண்டு முட்டை... சந்தோசமா வாழ்க்கை கலகலன்னு ஒடுமில்லெ... ;-)))) மனப் பிளவாவது மண்ணாங்கட்டியாவது...

ஆனா, கல்யாணம் கட்டிகிட்ட அவங்களும் ஆட்டத்திலிருந்து அவுட். ஹி...ஹி...ஹி...

தெகா.

இலவசக்கொத்தனார் said...

//ஆனா, கல்யாணம் கட்டிகிட்ட அவங்களும் ஆட்டத்திலிருந்து அவுட். ஹி...ஹி...ஹி...//

ஆனாலும் ஆட்டத்திலயே சேர்க்காமல் இப்படி அவுட் குடுத்திட்டீங்களே. என்ன அநியாயம். நான் இந்த ஆட்டத்துக்கே வரலை! போங்கு ஆட்டம்.

:((

Thekkikattan|தெகா said...

இ.கொ, இப்படி கோபிச்சுகிட்டதுக்காக,

//ஆனாலும் ஆட்டத்திலயே சேர்க்காமல் இப்படி அவுட் குடுத்திட்டீங்களே. என்ன அநியாயம். நான் இந்த ஆட்டத்துக்கே வரலை! போங்கு ஆட்டம்.

:(( //

பி.கு: அப்படி கல்யாணம் கட்டிக்கிட்டும் சில உலகம் புரியாததுங்க இ.கொ மாதிரி நான் மாறமாட்டேன் அப்படின்னு அலுச்சாட்டியம் பிடிச்சா திரும்பவும் ரொம்பவும் சிரமங்களுக்குகிடையில் ஆட்டத்தில் இருப்பார்கள். என்பதனை அறிவித்துக் கொள்கிறேன்.

என்ன கொத்தனாரே இப்ப சந்தோசமா... எதுக்கும் இன்னொரு தபா யோசிச்சுக்கங்க ஆமா சொல்லிப்புட்டேன்... அப்புறம் டின்னருக்குப் பதில் டின்னுதான் (முதுகுல) கிடைக்கும்

தெகா.

பொன்ஸ்~~Poorna said...

என்னங்க தெகா, அமெரிக்கத் தூதரகத்துல எப்படி நடத்துறாங்களாம்?!! நம்மூரை மட்டும் சொல்லிட்டீங்க?!! நான் போயிருந்தப்போ ஒரு தாத்தா பாட்டி வந்திருந்தாங்க.. அவங்களுக்கு வெயில் தாங்க முடியலை.. இருந்தும் வெகு நேரம் காத்திருந்து சோர்ந்து போய்ட்டாங்க.. அதெல்லாம் எங்க சேர்க்கிறது?!! எல்லா கடையும் அப்படித்தான்..

அப்புறம், இந்த மாதிரி குளிர் சாதன வசதிக்காகவே கடைகளுக்கு "விண்டோ ஷாப்பிங்" செய்ய வருபவர்களும் இருக்காங்களே?!! நான் பூனாவில் இருந்தப்போ என் கூட இருந்தவங்க ஒவ்வொரு சனி, ஞாயிறும் இது மாதிரி பெரிய கடைகளுக்குப் போவாங்க.. ஒண்ணும் வாங்க மாட்டாங்க.. ஏன்னு கேட்டப்போது, பூனாவில் ஒவ்வொரு நாளும் 3 மணி நேரம் மின்சாரம் இருக்காது. வார இறுதிகளில் வீட்டில் இருந்தால், வெயிலில் சிரமப்பட வேண்டுமே, அதற்குத் தான் இப்படி என்று சொன்னாங்க.. இப்படிப்பட்ட ஆட்களும் இந்தியாவில் இருப்பதால், இந்த மாதிரி கேள்விகளும் அவசியமாகிறது!! வேறென்ன சொல்ல??!!!

இலவசக்கொத்தனார் said...

//அப்புறம் டின்னருக்குப் பதில் டின்னுதான் (முதுகுல) கிடைக்கும்//

அவங்க கிட்ட உங்க பதிவையெல்லாம் காமிக்கலை, அதனால டின்னர் உண்டு. :)

துளசி கோபால் said...

தெகா,

//It looks like you are here in US. In US, when an indian see another fellow indian, they will not even
smile and turn their faces. //

இப்படி ஒருத்தர் சொல்லியிருக்கார் பார்த்தீங்களா?
இங்கே ஆக்லாந்து, வெலிங்கடனில் கூட இந்தியர்கள் ஒருத்தரை ஒருதர் பார்த்தா ஒரு தலை அசைப்போ ஒரு
புன்முறுவலோ கூட இருக்காது. சிலசமயம் ஏதோ விரோதியப் பார்க்கற பார்வை கூட இருக்கும்.
ஆனா எங்கூரு இப்படி இல்லை.(நான் இருக்கேனே!) அதிலும் குறிப்பா ஃபிஜி இந்தியர்களைப் பார்க்கறப்ப,
ஒருத்தருக்கொருத்தர் 'கைஸே?'ன்னு கேக்கறது ஒரு வழக்கமாவே இருக்கு.

ஆனா, சமீபத்துலே இங்கே வந்துருக்கற இந்தியர்கள், இந்த பாராமுகம் காட்ட ஆரம்பிச்சு இருக்காங்க.
இதெல்லாம் நல்லதுக்கில்லை.

பொன்ஸ்,

பூனாக் கதையைச் சொல்றிங்கல்லே. இங்கே சிலஇந்தியர்களும்,சில தமிழ்காரர்களும்,
நிறையச் சீனர்களும் மால் வாழ்க்கைதான். குளிருக்கு அடக்கமா ஹீட்டிங் இருக்குல்லே:-))))

இப்ப ச்சீனர்கள் லைப்ரரிகளை பிடிச்சுக்கிட்டு இருக்காங்க.

Thekkikattan|தெகா said...

குமரன்,

//நிறைய இந்த மாதிரி பாத்தாச்சுங்க நம்ம ஊருல. :-( //

எதாவது உங்கிட்ட ஐடியா இருக்கா இதனை எப்படி எதிர்கொள்வதுயென? அடுத்த முறை ஏதாவது இப்படி நடந்த அமெரிக்கன் attitude-லெ ஒண்ணெ எடுத்து விடப்போறேன்.

நன்றி தாங்களின் வருகைக்கு...

தெகா.

Thekkikattan|தெகா said...

பொன்ஸ்,

//என்னங்க தெகா, அமெரிக்கத் தூதரகத்துல எப்படி நடத்துறாங்களாம்?!! நம்மூரை மட்டும் சொல்லிட்டீங்க?!! //

அவன் அப்படி நடந்துகிறதெ சரின்னு வாங்கவில்லையே! கலெக்டிவ்-வா நம்ம சமூகத்திலெ ஒரு விசயம நம்மை நாமே அவமாரியாதை பண்ணிகிறாதலே இவனுங்களும் இந்த மக்களெ இப்படி ட்ரீட் பண்ணா உரைக்காது அப்படின்னு முடிவுக்கு வந்திருக்கலாமில்லையா?

ஆனா அங்க பெரிய ஆட்கள் எல்லாம் அப்படி வெளியில காத்திகிடக்காங்களா என்ன, எனக்குத் தெரியவில்லை?

//"விண்டோ ஷாப்பிங்" செய்ய வருபவர்களும் இருக்காங்களே?!! நான் பூனாவில் இருந்தப்போ என் கூட இருந்தவங்க ஒவ்வொரு சனி, ஞாயிறும் இது மாதிரி பெரிய கடைகளுக்குப் போவாங்க.. ஒண்ணும் வாங்க மாட்டாங்க..//

ஏ.சி-ங்கிற சமாசாரம் இன்னும் ஒரு rare commodity-யா இருக்கிற வரைக்கும் இப்படித்தாங்க... எல்லாம் போகப் போக சரியா வந்துடும்... ஆனா இது இரண்டு பேருக்குமே பொருந்துமில்லையா? இருந்தாலும் எப்படிங்க வாசல்லெ வச்சு மடக்கி கேப்பீங்க அப்படி...

நான் சிங்கப்பூர் போயிருந்தப்பா ஒரு வெள்ளைக்காரரோட முஸ்தபாங்கிற ஒரு பெரிய ஷாப்பிங் செண்டருக்கு போனோம், அப்ப வாசல்லெ வச்சு பைய கட்டணும் அப்படின்னு பைய பிடிங்கினாங்க எங்களுக்கு எதுக்குன்னு ஒண்ணும் புரியாலெ... அப்புறமா கேட்ட இங்கன நிறைய திருட்டு போகுது அதுனாலெதான் அப்படின்னாங்க...

வெள்ளக்காரர் போட்டாரு ஒரு போடு, இது கஷ்டமெர அவமாரியாதை பண்றமாதிரி, உன்கிட்ட நான் வியாபாரம் பண்ண வந்திருக்கிறேன் என்ன ஒரு திருடனெ ட்ரீட் பண்ற மாதிரி அல்லாவா ட்ரீட் பண்றெ அப்படின்னு, என்ன அடவாப்பா அவன் சும்மா கொடுத்தாலும் தேவையில்லைன்னு தரதரன்னு இழுத்துக்கிட்டு வந்துட்டாரு....

என்னா அதிலெருந்து நான் கத்துக்கிட்டேன்...

தெகா.

Thekkikattan|தெகா said...

தருமி,

வேஷ்டி கட்டின நீங்க இப்பெல்லாம் இந்தியா # 2 வில இருந்து வாறீங்கன்னு பொருள்... கண்டிப்பா யூ வர் நாட் வெல்கம்.

//shoes vs செருப்புக் கால்//

அது செஞ்சுபார்த்தாச்சு, இந்தியாவில பெரிய டீலா பார்த்தாங்க... ஏன் சொல்லிக் கூட கொடுத்தாங்க... பாண்ட் போட்டு சட்டையை tucK- பண்ணியிருந்தா காலில் சாண்டல் (செருப்பு) போடக் கூடாதுன்னு. அங்கேயே நான் தருதலை சார்... எல்லோமே எதிர்பதம்தான் நமக்கு!

ஆனா, இங்கே எனக்கு எந்த பிரட்சினையும் இல்லை...

//..........இப்படியாக பல hierarchical மரியாதை தரும் விஷயங்கள் உண்டு. //

இது ரொம்ப ஈசி, எதிர் நீச்சல் அடிக்கிறதுதான் கஷ்டம்.

//பேசாம உங்க ஊர்ல மாதிரி jeans தேசிய உடையா மாத்திட்டா நல்லா இருக்குமோ?//

நல்லவே இருக்கும். ரொம்ப தொலைவில் இல்லை.

தெகா.

துளசி கோபால் said...

தெகா,

//நான் சிங்கப்பூர் போயிருந்தப்பா ஒரு வெள்ளைக்காரரோட முஸ்தபாங்கிற ஒரு பெரிய ஷாப்பிங் செண்டருக்கு போனோம், அப்ப வாசல்லெ வச்சு பைய கட்டணும் அப்படின்னு பை..//

இதைப் பத்தி நம்ம நா. கண்ணன்
ரொம்ப நாளைக்கு முந்தியே ஒரு பதிவு போட்டுருக்கார்.

இப்ப இதே நிலமை ச்சென்னை சரவணா ஸ்டோர்ஸில் நடக்குது.

இல்லேன்னா திருடிக்கிட்டுப் போயிடறாங்களாமே!

Unknown said...

நிஜங்கள் சுடும்.இன்னும் சில நட்சத்திர விடுதிகளில் வேட்டிக்கெ அனுமதி இல்லை.ப.சி வேட்டி கட்டினால் மரியாதை. நானோ நீங்களோ வேட்டியோடு உள்ளே சுலபமாக நுழைய முடியாது.இதற்கு நல்ல உதாரணம் சென்னை ஜிம்கான கிளப் .

இருந்தாலும் சுயத்தை இழக்க வேண்டாம்.இந்த முட்டாள்களுக்காக வளைந்து வளைந்து கூனாகிப் போறதை விட நிமிர்ந்து நின்று மோதியே சாகலாம்.

//உன்கிட்ட நான் வியாபாரம் பண்ண வந்திருக்கிறேன் என்ன ஒரு திருடனெ ட்ரீட் பண்ற மாதிரி அல்லாவா ட்ரீட் பண்றெ அப்படின்னு, என்ன அடவாப்பா அவன் சும்மா கொடுத்தாலும் தேவையில்லைன்னு//

உண்மைதான் இதனால் நான் பெரிய கடைகளுக்கு போவதில்லை. ஆனாலும் குழந்தைகளின் Diaper போன்ற சமாச்சாரங்கள் இந்தியாவில் பெரிய கடைகளில் மட்டுமே கிடைப்பதால்,தன் மானத்தை தரையில் போட்டுவிட்டு சில முறை சென்றததுண்டு. சில சமசமயம் நிஜ வாழ்க்கையின் முன் கொள்கைகள் வெற்று வார்த்தைகளாகி விடுகிறது.

சரவணா ஸ்டோர்ஸ் என்ற கீழ்த்தரமான கடைக்கு ஒரு முறைதான் சென்றேன் . அதன் அனுபவம் இன்னும் வேம்பாக கசக்கிறது. இங்கே நாம் கொண்டு போகும் பையை ஒரு கட்டு கட்டி (Safety lock-strap) நம்மையே சுமக்கச் சொல்வார்கள். அனைவருமே ஒரு மூட்டையுடன் நிஜத்திருடர்களாக தோற்றம் தருவார்கள்.

VSK said...

தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற பீடிகையுடன் ,

நீங்கள் சொன்ன தலைப்புக்கும், எழுதிய சொல்லுக்கும் சம்மந்தமே இல்லை!

உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்கிறேன்!

ஆனால், சொல்ல நினைத்ததற்கும், சொன்னதற்கும் நிறைய வேறுபாடுகள்!

படிப்பவரை திசை திருப்பும் நோக்கமன்றி, வேறேதும் காணவில்லை நான்!

ஒரு மூணு மணி நேரம் ஓட்டவேண்டுமென அக்கம் பாக்கம் பார்த்து ஆக்ஸ்ஃபோர்ட் கடையில் நுழைந்தீர்களேயன்றி, வேறேதும் நோக்கமில்லை உங்களுக்கு!

பொழுதைக் கழிக்க பக்கத்திலேயே, 'உட்லன்ட்ஸ்' உள்ளது!

இன்னும் வேறு சில இடங்களும் இருக்கின்றன![மரத்தடி உட்பட!]

உங்கள் சொல்படியே, 'நின்னுப்பிட்டு, மேஞ்சுப்பிட்டும்தான் வருவோமின்னு' மட்டுமே தெரிந்தெடுத்த இடம்தானே தவிர, வியாபார நோக்கில் சென்ற இடமல்ல அது!

'வந்தவரெல்லாம் தங்கி விட்டால், இந்த கடையில் வியாபாரம் நடப்பதேது?' எனத் தடுத்தவரை மட்டப்படுத்தி, தாங்கள் அவமானப்பட்டதாக எழுதியிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

அந்தக் காவலாளி தன் கடமையைச் செய்தார்!

அவருக்கு மதிப்பளித்து, வேறிடம் சென்றிருக்க வேண்டும் நீங்க, நம் ஊரைப் புரிந்து கொண்டவராயின்!

இப்படிச் சொல்வதற்கு மன்னிக்கவும்!

முதலில், நம் நோக்கம் நிறைவனாதாக வேண்டும்!
பின்னரே, மற்றவரைப் பழித்தல் தகும்!

இந்த செய்தியில், உங்களது டிரஸ்சை ஒரு அங்கமாகக் கொண்டு வந்தது, திசை திருப்பலே என நான் கொள்வேன்!

'போகாத இடந்தனிலே போக வேண்டாம்!
பொல்லாங்கு செய்வாரோடு இணங்க வேண்டாம்!
என பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே, என் பாட்டி பாடிச் சென்று விட்டாள்!
அது நினைவிருந்தால்,
இது நிகழ்ந்திருக்காது!

மீண்டும், தவறாகக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்!

Thekkikattan|தெகா said...

ஐயா எஸ்.கே,

//படிப்பவரை திசை திருப்பும் நோக்கமன்றி, வேறேதும் காணவில்லை நான்!//

அப்படியா தெரிகிறது. இதனால் எனக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்கிறதா Mr. எஸ்.கே, தாங்களின் இரக்கத்தை சம்பாதிப்பதின் மூலம்?

//ஒரு மூணு மணி நேரம் ஓட்டவேண்டுமென அக்கம் பாக்கம் பார்த்து ஆக்ஸ்ஃபோர்ட் கடையில் நுழைந்தீர்களேயன்றி, வேறேதும் நோக்கமில்லை உங்களுக்கு! //

புத்தகக் கடை என்பது ஒரு நூல் நிலையம் மாதிரியே தான், அது தெரியுமா தாங்களுக்கு. எத்தனை அருமையான புத்தகங்கள் படைப்பாளிகள் வார்த்தைகளில் தன்னை கொட்டி வைத்து தன்னை யாரவது தீண்டி புரிந்து கொள்வார்களா என்ற ஆசையுடன் புத்தக அலமாரிகளிலே காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கு நான் இருக்குமிடத்தில் Borders, Barnes and Nobles என்ற இரு பெரும் புத்தகக் கடையிலெ தான் எனது ஆராய்ச்சிக்கென நிறைய நேரத்தை அங்கு அமர்ந்து ஒரு 5-6 மணி நேரம் படித்து, குறிபெடுத்துக் கொண்டு வருவது வழக்கம்... என்னை யாரும் எதுவும் கேட்டது கூட இல்லை...அப்படி ஒரு மூன்று மாதங்கள் செய்திருக்கிறேன். அறிவு பறிமாற்றம் அங்கே நிகழ்ந்தது.
சென்னையில் நடந்தது தனது மனைவியை தனி அறையில் பூட்டு போட்டு பூட்டியதை போன்று. அறிவு பறிமாறல்களை தடுத்தது, தனது அறிவிலித்தனத்தால்.

படிப்பவர்கள் மிக வேகமாக குறைந்து வரும் இக் காலக் கட்டத்தில், விழிப்புணர்வேற்றி படிக்கும் ஆர்வத்தை ஊட்டும் நிலையில் உள்ள நாம் இங்கே ஆர்வத்துடன் உள்ளெ சொல்பவரை அவமதித்தது மட்டுமில்லாமல். நான் அங்கே சென்றது மேய்வதற்கும் பிடித்திருந்தால் பிடித்து வருவதற்கும் தான்.

//அந்தக் காவலாளி தன் கடமையைச் செய்தார்!//

காவலாளியின் கடமை எது யார் எப்படி இருக்கிறார்கள், இவர்களை உள்ளே அனுப்பினால் அந்த கண்ணாடி கதவுக்கு பொருத்தமாக இருக்குமா என்று எடை போடுவதற்காகவா? அதற்காகவா அந்த காவலாளி சம்பளம் பெறுகிறார்?

//'போகாத இடந்தனிலே போக வேண்டாம்!
பொல்லாங்கு செய்வாரோடு இணங்க வேண்டாம்!
என பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே,
அது நினைவிருந்தால்,
இது நிகழ்ந்திருக்காது! //

//என் பாட்டி பாடிச் சென்று விட்டாள்!//

ஓ, உங்க பாட்டிதானா அந்த அம்மா?

So, கோட்டு, சூட்டு போட்டு அந்த மாதிரி இடத்துக்கு போனாதான் மரியாதை அப்படிங்கிறீங்கா... இதுக்கு இந்த பாட்டெ எல்லாம் பாடி அந்த பாட்டியை ஏங்க அசிங்கப் படுத்துறீங்க...

எவனுகுள்ள எந்த மண்டையை வைக்கணும் அப்படிங்கிறதுக்கு அளவுகோல் ஏதாவது இருக்க...

ஒண்ணு செய்யுங்க எஸ்.கே, சென்னையில் உள்ள இந்த மாதிரி இடங்களில் எது மாதிரி dress code எதிர் பார்க்க படுகிறது, அப்படிங்கிற பட்டியல் ஒண்ணு கொடுத்துட்டீங்க அப்படின்னா, உங்க ஊரை இந்த மாதிரி காட்டு ஆளுங்க எல்லாம் வந்து சிட்டியை அசிங்கப் படுத்த மாட்டோமில்லெ... இன்னொரு பாட்டி பாட்டு இருந்தா பாடிப் புட்டு போங்க...

என்னாத்த சொல்றது... காலம் கெட்டுக் கெடக்கு...

தெகா.

இலவசக்கொத்தனார் said...

எஸ்.கே,

நம்ம ஊர் பழைய ஹோட்டல்களில் இவ்விடம் பெரு நோயாளிகளுக்கு அனுமதி இல்லைன்னு போர்ட் போடுவாங்க. அல்லது இவ்விடம் அரசியல் பேசக்கூடாதுன்னு ஒரு போர்ட் இருக்கும்.

அது போல இவ்விடம் புத்தகம் வாங்குபவர்கள் மட்டுமே வரவும்ன்னு போர்ட் ஒண்ணும் வைக்கலையே. அப்படி இருந்தா புத்தகங்களைப் பார்வைக்கு வைக்க வேண்டாமே. தெருக்கோடி அண்ணாச்சி கடை மாதிரி முதலாளி முன்னாடி நின்னுக்கிட்டு சுஜாதா புத்தகம் ரெண்டு குடுங்கன்னு கேட்டுட்டு போகலாமே.

நான் இந்த மாதிரி வாங்கும் எண்ணமில்லாமல் ஒரு கடைக்குள் நுழைந்து வாங்கிய புத்தகம் எத்தனையோ. அதைப்போல் இவரும் வாங்கியிருக்கலாம். ஆனால் இவரின் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டதால் நட்டம் யாருக்கு.

அந்த கோபம் இன்னும் இருப்பதால்தான், அவரின் நிலை அறியாமல் நீங்கள் உங்கள் கருத்தைச் சொன்னீர்கள் என சினம் கொள்கிறார் பாருங்கள்.

என்ன இருந்தாலும் நாலு பேருடன் ஒரு க்டைக்குள் செல்லும் போது வாயிலில் நிறுத்தப்படுவது தவறுதானே. அதுவும் பெற்றோருடன் போகும் போது.

அப்படி என்ன அவர் 5 நட்சத்திர விடுதிக்குள் கிழிந்த வேட்டியுடனா சென்றார்? Where do you draw the line?

உங்கள் மறுமொழியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Thekkikattan|தெகா said...

இ.கொ,

நான் அங்கு அவர்களை இட்டுச் சென்றதற்கு மற்றொரு காரணமும் உண்டு, Dr. Salim Ali எழுதிய பலப் புத்தகங்கள் இந்த பதிப்பகத்தின் மூலமாக பிரசுரமானது எனக்குத் தெரியும். எனது பெற்றொர்களை அங்கு எடுத்துச் சென்றது அவைகளை காட்டுவதற்கெனவும்தான்.

அதில் எத்தனை உணர்வு சார்ந்த விசயங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளமுடியாதவை எவ்வளொவோ இருக்கிறது. நான் இது போன்ற பதிவிட்டதெற்கே நிறைய உள் தெம்பு எனக்கு இருந்திருக்க வேண்டும். ஏனெனில் எனது குடும்பத்தாரை முன்னிலைப் படுத்தி உண்மையை உள்ளதாக கூறுவதற்கு (நம்மில் எத்தனை பேருக்கு இது போன்று வெக்கத்தை விட்டு வெளியே சொல்லும் துணிவு இருக்கிறது?) .

ஆனால் இதில் இவ்ளோ விசயம் இருக்கிறது என்பது இப்பொழுதுதான் தெரிய வருகிறது. இது அவசியம் பேசப்பட வேண்டிய ஒரு விசயம்தான் என்பது எனக்கு விளங்கிறது இப்பொழுது, நான் சந்தோசப் படுகிறேன், இந்த விசயத்தை முன்னிறுத்தியதற்கு. இன்னும் நிறைய பகிர்தல்களை எதிர்பார்க்கிறேன்.

தெகா.

Thekkikattan|தெகா said...

சந்தோஷ்,

உண்மையத்தானே சென்னேன்... நன்றீங்க!!!

மணியன் சார்,

அதேதான் நானும் நினைக்கிறேன், இதுவும் மிகவும் வருந்தக்கது என்று. இதில் எத்தனை உணர்வு பூர்வமான விசயங்கள் அடங்கியிருக்கிறது என்பதனை சற்று ஆழ்ந்து கவனிக்கும் பொருட்டு பார்த்தால் தெரியும். எல்லோரையும் எப்படி ஒரே மாதிரியாக நினைத்துவிட முடியும்?

//அட, வேட்டி கட்டினவங்களை சில கிளப்புகளில் உள்ளேயே விடுவதில்லை.
என்னமோ போங்க! //

இந்தியாவின் ஆழகே அந்த டைவர்சிடியில் தானே இருக்கிறது. அதனை நாம் இழந்தால் மரங்களையிழந்து இப் பூமியில் நாம் வாழ்வதற்குச் சமம்.

நன்றி மணியன் தாங்களின் வருகைக்கும் புரிதல்களுக்கும்...

தெகா.

Thekkikattan|தெகா said...

மகேஸ்,

//அப்படியா செய்கிறார்கள்,
அடுத்த தடவை இந்தியா வந்து, நம்ம படையோட உள்ள போகும் போது தடுத்தார்கள் என்றால் நல்லா கலாய்சிச வேண்டியது தான்.//

உங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி!

தெகா.

Thekkikattan|தெகா said...

சிபியாரே,

கொஞ்சம் நாள ஆளே காணலெ!

//உள்ள போனவுடனே நம்மாளு "ஐய்யா என்னமா சில்லுன்னு இருக்கு"ன்னு சத்தமா சொல்லணுமாம், எப்படி இருக்கும்! //

அப்படியே அவரு கோட்டுக்குள்ள வச்சிருக்கிற மஞ்சப் பைக்குள்ளயிருந்து ஒரு ஐநூரு ரூபா கட்டு ஒண்ணு எட்டிப் பார்க்கிற மாதிரியிருந்த இன்னும் நல்ல இருக்கும் ;-)))

Man, you are so funny!!!

தெகா.

சிறில் அலெக்ஸ் said...

ஒரு வாதத்திற்காக.. நீங்க கடை ஓனராக இருந்து.. அங்கே வாடிக்கையாளரைவிட வேடிக்கையாளர் அதிகமானால்?

விசா வாங்கவரும் நம் மக்கள் சிலரின் போக்கும் சரியானதா என பார்க்கவேண்டுமே?

எத்தனை தொல்லையாயிருந்திருந்தால் கடைக்காரர் potential customerஐ உள்ளேவர தடுத்திருப்பார் எனப் பார்க்கவேண்டும்.

just the other side of the coin. இந்தப் பகுதியிலிருந்த ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்திருக்கிறேன்.

Sivabalan said...

தெகா,


BTU என்ற அளவு உள்ளது. நீங்களும் அறிந்திரிப்பீர்கள்.

இந்த அளவைக்கொண்டு AC System நிர்னிக்கப்படும். இது மட்டுமின்றி அங்கே இருக்கும் பொருள்களும் கணக்கில் கொள்ளப்படும்.

இதை வைத்துதான் AC system முடிவுசெய்யப்படும்.

இந்த சிஸ்டத்தில் சில மனிதர்கள் வந்து செல்வதில் மிகப்பெரிய மின் இழப்பு ஏற் பட வாய்ப்பு இல்லை.

அப்படியிருக்க ஏன் இந்த புத்தக கடை உரிமையாளர்கள் தரம் தாழ்ந்து நடந்து கொன்டார்கள் என தெரியவில்லை.

Related Posts with Thumbnails