Tuesday, May 30, 2006

இன்னொரு புலம்பல் மதுமிதாவிற்காக...

வலைப்பதிவர் பெயர்: பிரபாகர்

வலைப்பூ பெயர் :

தெக்கிக்காட்டான் - எனது வளர்சிதை மாற்றத்தினைசமூகத்தினுடே புகுத்தி என்னை வளர்த்துக் கொள்ளும் எண்ணத்துடன் தொடங்கப்பட்டது.

இயற்கை நேசி - இயற்கை சார்ந்த விழிப்புணர்வேற்று பூ

ஊருணி - எனது ஆங்கிலப் பதிவு

ஊர்:

புதுக்கோட்டையை அடுத்த சிறு காய்ந்துப் போன டவுனுமில்லாத கிராமமுமல்லாத - கரம்பக்குடி. எங்கெங்கோ எதற்கோ சுற்றித் திரிந்துவிட்டு, தற்போதைய வாசம் அட்லாண்டா...

நாடு:

இப்ப எந்தப் பக்கம் ரெண்டு பக்கமும்தான், இந்தியா-அமெரிக்கா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:

என் பசி என்னைக் இங்கு கொணர்ந்தது எனலாம்.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :

அக்டோபர், 09, 2005

இது எத்தனையாவது பதிவு:

எல்லா பூக்களையூம் சேர்த்து 56

இப்பதிவின் சுட்டி(url):

http://thekkikattan.blogspot.com/2006/05/blog-post_30.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:

*தெக்கிக்காட்டன்* என்பது ஒரு வலைப்பூவின் பெயர். ஏன் அப்படி ஒரு பெயரை பொருக்கி எடுத்தேன் என்றால், ஒரு ந(ட்)ப்பு ஆசையில்தான் எத்துனை பேர் இங்கு பெயருக்கும் ஆளுக்கும் முடிச்சுப் போடமல் உள்ளே வருகிறார்கள் தைரியமாக என்பதனை காண்பதற்கும், சுய அறிவிப்பாக நான் பெயருக்கும் வெளிப்புற தோற்றதிற்கும் அப்பாற்பட்டவன் என்பதனை உணர்த்துவதற்குமே... அங்கு நான் வளர்ந்து சிதைவுறுவதை அவ்வப்பொழுது எழுதி வருகிறேன் (எழுத்துப் பிழைகளுடன்).

எனது மற்றொரு வலைப்பூ *இயற்கை நேசி* அங்கு இயற்கை விழிப்புணர்வூட்டும் பொருட்டு எனது சொந்த அனுபவங்களையும், படித்ததையும், பார்த்தையும், கேட்டதையும் ஏனையோருடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டும், பரிணாமம் எனும் இப்பொழுதுக்கு கெட்ட வார்த்தையாக உள்ளதை நல்ல வார்த்தையாக்கும் முயற்சிலும் கூட அப்பூவை இயக்க எண்ணம்.

*ஊருணி* எனும் ஆங்கில வலைப்பூவும் உள்ளது, அதில் நிறைய விசயங்களை என்னுள் நடக்கும் மாற்றங்களை, புரிதல்களையும் பதித்து வைக்கிறேன், தெக்கிக்காட்டான் பதிவுகளுக்கும் இந்த வலைப்பூவிற்கும் சிறிது தொடர்பு இருக்கலாம்.

சந்தித்த அனுபவங்கள்:

எதனை விடுவது எதனை சேர்ப்பது... கற்றுக்கொண்டே இருக்கிறேன், நாளொரு மேணியும் பொழுதொரு வண்ணமுமாக... அனுபவமே ஒருவரின் அளவிற்கரிய பெட்டகம் என்பதனை நம்புகிறேன்.

பெற்ற நண்பர்கள்:

ஹீம்... மனிதர்கள் பலவிதம்... ஏகப்பட்ட நல்ல உள்ளங்கள், வளர்ந்தும் வளரும் நிலையிலும்.

கற்றவை:

அனுபவமே ஒருவரின் அளவிற்கரிய பெட்டகம் என்பதனை நம்புகிறேன். மேலும் அன்பே சிவம்.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:

கிடைக்கிறது... இருந்தாலும் கொஞ்சம் பின்னால் திரும்பி பார்த்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.

இனி செய்ய நினைப்பவை:

என்னை வளர்த்துக் கொள்வதும், பலதரப்பட்ட மனிதர்களின் மூக்குக் கண்ணாடியின் வழியியே இவ்வாழ்வையையும் அதன் முறண்பாடுகளை காணுவதும்...

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:

எங்கே தொடங்குவது... ஹீம் அதான் அந்த ரெண்டு கெட்டான் ஊரு கரம்பக்குடி, மழை பேஞ்சாத்தான் தண்ணீர் அப்படிங்கிற காஞ்சுப் போன புழுதி பறக்கும் ஊருல என்னுடைய பயணம் ஆரம்பித்து, ஊரணிக் கரையில இருக்கிற அரச மரத்தில ஏறி உக்கார்ந்து பரீட்சைக்கு படிச்சி, அப்புறம் ஊர் ஊரா சுற்றி அந்த டிகிரி இந்த டிகிரின்னு வாங்கி, கடைசில கோயம்புத்தூர் பக்கமா போயி மழைகாடுகளில் ஆதிவாசிகளோட வாசிகளா ஐக்கியமாகி. அங்கொயிருந்து சம்பந்தமே இல்லாத கான்கீரிட் காடான அமெரிக்கா வந்து விழுந்துட்டேன் இப்போ.

Friday, May 19, 2006

குளிர்சாதன வசதியிருக்கு உள்ளே வராதே...!

நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிற விசயம் கொஞ்சம் முக்கியமான சமூக கண்ணோட்டத்துடன் பார்க்கப் பட வேண்டிய விசயம். கடந்த முறை நான் இந்தியா வந்திருந்த போது இது எனக்கு ஏற்பட்ட அனுபவம். நான் எனது பொற்றோர்களுடன் அமெரிக்க விசா வாங்கும் பொருட்டு அவர்களை அங்கு மவுண்ட் ரோடு பக்கமிருக்கும் கட்டடத்திற்கு கொணர்ந்திருந்தேன்.

அங்கு ஆடு மாடுகளை விரட்டியடிப்பதை போல மந்தையில் மாட்டி (அப்படி ஏண்டா தெகா அமெரிக்கா போற அப்படின்னு கேக்றீங்களா, எல்லாம் நேரந்தான் வேற என்னாத்தா செல்றது) மஞ்சு விரட்டு முடிச்சுட்டு ஒரு அனுமதி சீட்டும் வாங்கிட்டு வெளியே வந்தா ஒரு மூணு மணி நேரம் வெளியே செலவு செய்யணும் அப்படிங்கிற நிலமை.

முன்னாலேயே ஒருத்தரு கைத்தடியும் அதுவுமா ஏய் அங்க நிக்கப்புடாது அந்த மரத்தாண்ட போ, ஏய் நீ என்ன இங்கன செரிஞ்சு கிட்டு நிக்கிற அப்படின்னு துப்பாக்கிய காட்டியெல்லாம் மிரட்டி ஒரே மரத்தடிக்கு கீழே எல்லோரையும் கட்டிப் போட முயற்சித்துகிட்டு இருந்தாங்க. அதப் பார்த்துப்புட்டு, ச்சே, நம்ம அப்பா அம்மாவிற்கு நிக்க வேற முடியாது பக்கத்தில ஏதாவது ஒரு பழமுதிர் சோலையோ, இல்லே ஒரு புத்தக கடையோ இருந்த நல்ல இருக்குமேன்னு கண்ணெ விட்டு தேடும் பொழுதுதான், நம்ம ஆக்ஸ் ஃபோர்ட் புத்தக நிலையம் ஞாபகம் வந்துச்சு.

அடெடா, நமக்கு வேண்டிய இடமாச்சேன்னு ஆர்வமா அங்கன போயி கொஞ்சம் நேர நின்னுப்புட்டு மேஞ்சுப்புட்டும்தான் வருவோமின்னு குழந்தைதனமா உள்ளே போறதிற்கு முடிவு பண்ணிப் போனதாங்க தெரிஞ்சுச்சு நாம இந்தியாவின் மன நிலை எப்படியிருக்குன்னு. இன்னும் எவ்ளோ தொலைவில் உள்ளோம், நம்மை ஒரு மனுசனா நாமே மதிச்சுகிறத்துக்குன்னு.

அப்படிப் போக எத்தனிக்கும் போது, சும்மா சாதரணமாத்தான் ட்ரெஸ் பண்ணிருந்தோம், இன்னும் சொல்லப் போன கொஞ்சம் கிராமத்து தனமா(!?) சென்னை வாட்சுமேன் கண்ணுக்கு கூட சல்லிக்காசு பொருமானம் இல்லாமல் இருக்கிற லுக் போல. அந்த வாட்ச்மென் எங்கள வாசல்ல வச்சு நிறுத்தி கேட்டுபுட்டாரு ஒரு கேக்கக் கூடாத கேள்விய, ஏன் உள்ளே போறீங்க?

அடெ என்னாட இது அப்படின்னு ஆகிப் போச்சு, உள்ளே புத்தகங்கள் தானே விக்கிறீங்க இல்லே வேற ஏதாவதா அப்படின்னு நான் எதிர் கேள்வி கேட்டேன். அதுக்கு அவரு ஆமா புக்குதான் விக்கிறோம், ஆனா இங்க நிறைய பேரு சும்மா ஏ/சி இருக்கின்னு வந்து நின்னுப்புட்டு போவோமின்னு வராங்க அப்படின்னாரு.

எனக்கு சுளீர்னு யாரோ சூடு வைச்ச மாதிரி இருந்துச்சு. என்னங்கட இது ஒரு புத்தக்கடையில ஒரு நாள் இருந்து தடவித் தடவி பார்த்தாலும் நமக்கு பிடிச்ச புத்தகமா கிடைக்கிறது அரிது அப்படி இருக்கும் பொழுது எத்தனை கஷ்டமர் உள்ளே போயி வெளியே வந்தா எவ்ளோ புத்தகம் விக்கலாம் அப்படின்னு இருக்கிற தொழில்ல இருந்துகிட்டு, உள்ளே போறதிற்கு முன்னாலேயே இப்படி அடிக்காத குறையா மூஞ்சில சாத்தினா கொஞ்ச கொஞ்சம் படிக்கிற பழக்கத்தில இருக்கிற ஆட்களும் சன் ட்டி.வி, எம் ட்டி.வி அப்படின்னு போயிடுலாம் போலன்னு நினைச்சுக்கிட்டேன்.

நான் அந்த வாட்ச்மென்கிட்ட கேட்டேன், ஏங்கா எப்படி நான் புத்தகம் வாங்கேவேனா இல்லை வாங்கமாட்டேனா அப்படின்னு முன்னாலேயே கண்டுபிடிச்சி உள்ளே விடுறதா வேணாமான்னு வடிகட்டுவீங்கன்னு கேட்டேன்? முழிச்சாறு... அவரு முன்னாலே புத்தகம் எதுவும் வாங்கி பழக்கமுண்டான்னு எனக்குத் தெரியல. ஏன்னா, புத்தகக் கடைகுள்ள நுழையுற அத்தனை பேரும் புத்தகம் வாங்கித்தான் ஆகணுமின்னா யாரவது உள்ளே போவோமா? அப்படி பிடிச்சிருந்தா வாங்கமத்தான் வெளியே வருவோமா?

சரி இப்ப என்ன நடக்கிது நம்மூருல? ஒரு "வெள்ளைக் காரன்" அதே கடைகுள்ள நூழையுறான் அப்படின்னு வச்சுக்குவோம், இல்லேன்னா யாரவது கார்லே வந்து இறங்கி உள்ளே போறாங்க அப்படின்னு வச்சுக்குவோம், அந்த வாட்ச்மென் என்ன பண்ணியிருப்பாரு கதவா திறந்து விட்டதுமில்லமா, தலை தாழ்த்தி உள்ளே அனுப்புவாரு, இல்லையா?

அப்படின்னா, எங்களுக்கு என்னாச்சு? சரி இது இங்க மட்டும்தானா அப்படின்னா இல்லையே, கோயில்ல ஸ்பெசல் பூஷை, ரயில் டிக்கெட் வாங்கிற இடத்தில, சரி அதெல்லாம் விடுங்க பல்கலை கழங்கள், கல்லூரிகளில் பணம் கட்டும் கவுண்டரில் ஒரு மாணவனுக்கு மரியாதை இருக்கா அங்க வேலை பாக்கிற ஆட்கள்கிட்டே இருந்து. ஏய்யா இப்படி நம்மை நாமே கேவலமா மதிச்சுகிறோம்?

ஒரு ஆளை அவன் என்ன கலரா இருக்கன், கருப்பா இருக்கானா இல்லை செவத்த தோல இருக்கானான்னு பார்த்து மரியாதை கொடுக்க முடியுமா? இல்லை வியபாரம்தான் பண்ண முடியுமா? எல்லாம் கொரகமய்யா. இதுக்காக நான் வெள்ளக் காரன் தோலை உரிச்சு மாட்டிக்க முடியுமா, இல்லை, காதில கடுக்கனும், பங்க் கட்டிங்கும் பண்ணிக்கிட்டு எங்கப்பன் குதிருகுள்ள இல்லென்னு திரிய முடியுமா?

சரி நாம ஏங்க இப்படி இருக்கோம், அல்பத்தனாம யோசிச்சுக்கிட்டு, ஏ/சி, காரு, பங்களா எல்லாம் இருந்த நாம பெரிய ஆள், எல்லாம் தெரிஞ்ச ஆள். மண்டைக்குள்ள மசாலவே இல்லாமல் இருந்தாலும் இதெல்லாம் இருந்தா நாம ஆளுன்னு நினைச்சுக்கிட்டு திரியரோம்.

எப்ப நாம ஆளா வெளிப் பார்வையிலே பார்த்து எடைப் போடுறதை நிப்பாட்றோமோ அன்னிக்குத்தான் இந்தியா உண்மையிலேயே ஒளிர்கிறது! இந்தியன்னா நாம்மை நாமே மதிச்சுக்கலாம், நாம அதுக்கு தகுதியானவங்கதான் அப்படின்னு நம்மூருல நம்மை மதித்து காமிச்சாதான், சிங்கப்பூர்ல இருக்கிற முஸ்தாபா கடை நம்மாலு உள்ளே போறதிற்கு முன்னாலேயே நம்பிக்கையில்லாமே பையை கட்டி உள்ளே அனுப்புறதை நிறுத்துவான். கோவலமா இருக்குங்க, நெலமை.

இதெ ஏன் நான் இங்க சொல்றேன் அப்படின்னா கல்லூரிகளிலும் இப்படித்தான் அங்கு உள்ள அலுவலகங்களில் வேலைப் பார்க்கும் ஆட்கள் மாணவர்களை ஆடு மாடுகளைப் போல நடத்துவது, ரேஷன் கடையில் க்யூவில் நிற்கும் மக்களை மாக்களைப் போல அங்குள்ள ஊழியர்கள் நடத்துவது, எந்த பொதுமிடமாயினும் அரசாங்க உத்தியோகம் பார்க்கும் நபர்கள் தாங்களை கடவுளின் மறுபிறப்பாக கருதி மக்களுக்கு வரம் தருவதாக நினைத்துக்கொள்ளும் மனப் பாங்கு என்று ஒழியப் போகிறது நம்மிடத்தே இருந்து.

இன்னும் நாம் நிறைய தொலைவு போக வேண்டியிருக்கிறதோ? அந் நாளை நாம் எட்ட!

Sunday, May 14, 2006

பின்னூட்ட போராட்டங்கள்...!?

இங்கு வலைப்பதியும் அனைத்து அன்பர்களும் இதனை தயவு செய்து படித்துப் பாருங்கள்...சீனியர், சூனீயர் பாகுபாடின்றி... இமேஜை தள்ளிவைத்துவிட்டு உள்ளே வாருங்கள் அன்பர்களே...

1) இதற்கென ஒரு பதிவு பதிய வேண்டுமென கொஞ்ச நாட்களாகவே எண்ணியிருந்தேன். நானும் சில நல்ல ப்ளாக்குகள் சென்று படித்து வருகிறேன், அங்கெல்லாம் பதிவர் தனது எண்ணங்களை பதிப்பித்த பின், அதற்கு வரும் பின்னூட்டங்கள்தான் அப்பதிவை நிறைவு செய்கிறது. ஆனால்...

2) ஈமெயில் ஐ.டி கொடுத்து தாங்களுக்கு பின்னூட்டமிட மன்மில்லையெனில், the choice is yours. இதில் என்ன இருக்கிறது, அவர் பயன்படுத்தும் சேவையில் அது போன்று வடிவமைத்திருந்தால் அது அப்படியே பயன் படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக அவர்களை கீழே தள்ளி பேசுவது நலம் பயக்கா...

3) பின்னூட்டமென்பது ஒரு addictive விசயமல்ல என்பதனை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும், தெரிந்தவர்களின் பதிவுகளை மட்டுமே படிப்பது பின்னூட்டமிடுவது, புதியவர்களாக இருப்பின் நல்ல விசயங்களை முன் நிறுத்தினாலும் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவது, இது போன்ற விசயங்கள் அடி வடிகட்டிய பசலித்தனம் எனலாம்.

4) ஒரு நல்ல விசயத்தை படித்ததும் மனதில் முதலில் என்ன தோன்றுகிறதோ அதனை அப்படியே இங்கே கொட்டி பகிர்ந்து கொள்வதின் மூலம் எழுதியவருக்கும் வாசிப்பவருக்குமிடையே கருத்து பரிமாற்றத்தின் மூலம் தன்னை உள் நோக்கி பார்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைகிறது.

5) இங்கு இருக்கும் சில சீனியர் எழுத்தாளர்கள் எல்லா இடங்களில் சிக்கியுள்ள அரசியல், Image பிரச்சனைகள் போல மாட்டிக் கொண்டு உழண்டு கொண்டுள்ளாதாகப் எனக்குப்படுகிறது. இங்கும் அது போன்ற பாகுபாடுகள் தேவைதானா? நாம் ஏன் இப்படி இருக்கிறோம், எனக்குப்புரியவில்லை...

6) அது போல ஒரு மாயை வலையில் சிக்கியிருப்பது நல்ல படைப்பாளிகளை நாம் இழப்பதற்கு வழிகோலளாம். சில நல்ல உள்ளங்களும் இங்கு இருப்பதை மறுப்பதற்கில்லை.

7) இந்த பின்னூட்ட விசயம் பொருட்டு ஒரு தனிப் பதிவிட வேண்டுமென்பது எனது அண்மை காலத்திய எண்ணம், நீங்கள் இங்கு தனிப் பதிவிட்டிருப்பதால் இங்கும் தனிப்பதிவாகவும் (மேலும் சில கருத்துகளுடன் என் பதிவிலும் விட்டுச் செல்கிறேன்.) சீனியர்களும் இமெஜையை சற்று ஒரங்கட்டி வைத்துவிட்டு, எல்லோரையும் வளர்த்து தானும் வளர வேணுமாய் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளும் பெயரளவில் உள்ள காட்டான்.

அன்புடன்,

தெக்கிக்காட்டான்.

Monday, May 08, 2006

என்னை புதைக்கிறதா இல்லெ எரிக்கிறதா...?

இந்தப் பதிவு மீண்டும் உங்கள் பார்வைக்கு வைக்க காரணம், இந்த மாதம் நிறைய மத நல்லிணக்க செயல்கள் நிகழ்வதாக உள்ளது... மற்ற மதத்தவர்கள் தன் மதம் சாராத விசயங்களையும் கேள்விகளாக வைத்து தெளிவுரை பெறும் இப்பட்சத்தில், இந்த சமூகம் சார்ந்த பதிவினையும் எல்லா மதத்தினரும் பாரபட்சமின்றி படித்து தாங்களது எண்ணவோட்டத்தை இங்கு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளவே இப் பதிவு மீண்டும் உயிர் ஊட்டப்பட்டு இங்கு கொணரப்பட்டது.

மத நல்லிணக்க வாதிகளே...! வாருங்கள், வந்து தாங்களின் கருத்துக்களையும் படையுங்கள், தெரிந்து தெளிந்து கொள்வோம்...!


இதோ செய்தி:

இன்னைக்கு இன்னொரு முக்கியமான கேள்வி இது ரொம்ப நாளா எனக்குள்ள அரிச்சிக்கிட்டு இருக்கிற கேள்விதான். இங்க இன்னிக்கு கேட்டு வைக்கிறேன். ஆனா, எல்லாருகிட்டயும் இப்பவே அழுத்தம் திருத்தமா ஒண்ணெ சொல்லிடறேன், இது எந்த மத சம்பந்தப் பட்ட விசயமும் இல்லவே இல்லை...

ஒரு சுற்றுச் சூழல் மற்றும் எதிர் கால மக்கட் தொகை பெருக்கம் இவைகளை கருத்தில் கொண்டே இந்தக் காட்டான், இதனை உங்க முன் வைக்கிறேன்.

இப்போ என்ன விசயமுன்னா, நாம எல்லோரும் என்னைக்காவது ஒரு நாள் பொசுக்குன்னு மண்டையை போட்டுடுறோம். அப்போ, மத ரீதியா பொதுவா நாமலோட விருப்பு வெறுப்பின்றி அதப் பின்பற்றி புதைக்கவோ இல்ல எரிக்கப்பட்டோ விடுறோம். இல்லையா?

இதில என்னடா இருக்குகிறீங்கா, இருங்க சொல்றேன், எனக்கு என் உடம்பை எரிக்கிறது தான் நல்ல சுகாதாரமான, பிற்காலத்தில் இடச் சிக்கல் இல்லாம பார்த்துகிறதுக்கும் அம் முறை உதவுதுன்னு கொஞ்சம் நடைமுறைப் படி சிந்திச்சு பார்த்தா தோணுது.

அடடா, எப்படிடா உனக்கும் மட்டும் இந்த மாதிரி சிந்தனை ஓட்டமெல்லாம் வருதுங்கிறீங்களா, சீரியஸ்லி, இது மாதிரி நான் யோசிச்சதிற்கு ஒருத்தரு காரணங்க. அவரு என்னொட எக்ஸ்.மாமனார் (அதென்னடா, எக்ஸ் வொய்ஃப் கேள்வி பட்டிருக்கோம், இது எக்ஸ்.மாம்ஸ், அதானே இது என் எக்ஸ் வோட அப்பா, அப்போ அவரு எனக்கு...:), அவரு சாவுறத்துக்கு முன்னாடி தன்னோட ஆசையா இந்த கோரிக்கையை எங்க முன்னாடி வைச்சுட்டு அதற்கு என்னக் காரணம் அப்படிங்கிறதையும் சொல்லிட்டு செத்துப் போனாரு.

இது நடந்தது அமெரிக்காவில, அவரு ஒரு வெள்ளைக்காரர். பொதுவா இங்கே எல்லோரும் தன்னை புதைக்கறதத்தான் விரும்புவாங்க, இல்லையா. கொஞ்சம் படிச்சவங்க, விபரம் தெரிஞ்சவங்க இப்படித்தான் தன் வாயலேயே தன்னோட உடம்பை எரிக்கிறதா இல்ல புதைக்கிறதா அப்படின்னு சொல்லி வைச்சுடறங்க.

ஐ லைக் தட் ஸ்டைல்! அவரு சொன்ன காரணத்தையே இங்க உங்ககிட்ட சொல்றேனே, மாம்ஸ் சொன்னாரு நம்மை புதைக்கிறதுக்கு ஒரு இடத்த பணம் கொடுத்து ஆசையா வாங்றோம், அங்க வைச்சாச்சுன்னா அப்புறம் எத்தனை செஞ்சுரி ஆனாலும் என் பேரக் குழந்தைங்க அங்கேயிருந்து என் கல்வெர்ட்-அ நகர்த்த விடமாட்டங்க எதிர்காலத்தில என்ன வச்ச ஊர் எவ்ளோ வளர்ச்சி அடைஞ்சாலும். அப்போ, நான் செத்துப் போயும் மத்தவங்களுக்கு இடைஞ்சலாத்தனே இருக்கேன் அப்படின்னு, ஒரு நியாயமான கேள்விய கேட்டு வைச்சாரு. எனக்கும் நியாயமா பட்டுது.

இப்ப ஒரு சின்ன தீவு மாதிரி இடங்களா எடுத்துக்குவோம், சரி, நியு Zலாந்த எடுத்துக்களாம், அப்பதான் நாம்மோட நண்பர் துள்சிங்க வந்து சொல்வாரு அங்கே என்ன பண்றங்க பெரும்பாலும் அப்படின்னு. அந்த மாதிரியான தீவுகளில் இப்படி கல்லறைங்களா நிறைய இடங்கள் ஆகிப் போன அப்புறம் எப்படி பின்னாலில் வளர்ச்சிப் பணிகள் எல்லாம் பார்துப்பாங்க? இடப் பற்றாக்குறை வராதா?

இப்ப நான் இருக்கிற ஊர் ஒரு சின்ன டவுனா இருந்துச்சு ஒரு ஐந்து வருசத்துக்கும் முன்னாலே வரைக்கும் இப்ப ஜன நெரிசல் தாங்கலே, அட ஆளுக்கு ஒரு காரவைச்சுகிட்டுதான், ட்ராபிக் ஜாம் எங்க பார்த்தாலும், சினிமால காட்டும் போதும், இந்தியாவிலிருந்து பார்க்கும் போதும் ஆசையா இருந்துச்சு ஆனா அத செஞ்சு பார்க்கும் போது பகப் பகன்னு உடம்பெல்லாம் பத்திக்கிட்டு எரியுது, தினமும் பண்ணும் போது.

நான் போயிட்டு வந்துகிட்டு இருக்கிற சாலை வந்து நான்கு லேன் சாலை, இரண்டு ஒவ்வொரு வழியிலும், இப்ப அது பத்தலெ, சாலையை விரிவு படுத்துறாங்க, அப்படிப் படுத்தும் பொழுது ஒரே ஒரு சிக்கல் ஒரு இடத்துல மட்டும். ஒரு அரை கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு graveyard இருக்கு நிறைய கல்லறைங்களோட. அங்ஙன வந்தவுடன் அப்படியே வேலை நின்னுப் போயிகிடக்கு. நாங்க ட்ராபிக் ஜாம்ல, ஹாய்ய ஏ.சி போட்டுகிட்டு 3 டாலருக்கு பெட்ரோல் (1 காலன்) போட்டு எரிச்சுகிட்டு மூணு மைல கடக்க 25 நிமிஷத்துக்கு மேல எடுத்துக்கிட்டு (எந்த ஈராக் புள்ளை சாவுதோ அதுக்கு, நமக்கென்ன).

அங்கதான் தோன்றினது, இந்த கேள்வி இன்னும் அழுத்தமா, இங்க கொண்டுவந்து அத எழுப்புற வரைக்கும். அந்த காலத்து இந்தியர்கள் ரொம்ப சுமார்ட் மக்கள்னு நினைக்கிறேன். ரொம்ப யோசிப்பாங்க போல, பிராக்டிகலா!

அட நீங்க என்னங்க நினைகிறீங்க, இதைப் பத்தி...

Sunday, May 07, 2006

"இடியட்=TV" பெட்டிக்குள் தமிழனின் கலாச்சாரம்..!

தமிழகத்தின் நிலைமையை பார்தீங்களா? எனக்கு அரசியல் பிடிக்கவே பிடிக்காது. காரணம், நாம எவ்வளவுதான் நல்லவென இருந்தாலும் அந்த சூழ்நிலை நாம மாத்திடும் (ஆனா, காமராஜர் போன்றவர்களைத் தவிர).

ஆனா, இப்ப இந்த அக்கிரமத்த பார்த்துகிட்டு என்னால பேசாம இருக்க முடியலங்க. அதுவும் இந்த இரண்டு நையா பைசா தேர்தல் அறிக்கைங்கள பார்த்துக் கிட்டு.

நாம நாட்டுல இவ்ளோ அந்நிய முதலீட்டுப் பணத்தை கையில வைச்சுகிட்டு அதப் எப்படி முறையோட பயன் படுத்துறதுன்னு தெரியாம. அடப் போங்கப்பா!

ஏங்க, தெரியாமத்தான் கேக்குறேன், இந்த இலவச ட்டி.வி திட்டம் என்னங்க திட்டமிது. ஒரு மூணு மாசத்திலோ இல்லென்னா ஆறு மாசத்திலோ 'டெபுக்குன்னு' செட் உட்காந்திருச்சுன்னு வைச்சுக்குவோம், இனிமே செட்டே கதைக்கு உதவாது அப்படின்னா என்னங்க பண்ணுவாங்க? புத்சா கொடுப்பாங்களா?

அதெல்லாம் விட முக்கியமான ஒரு கேள்வி எனக்கிட்ட இருக்குங்க...ஏற்கெனவே வேலை வெட்டி இல்லாமல் மழை பேஞ்ச தான் விவசாயம் அப்படின்னு இருக்கிற விவசாயிங்களையும் அவங்களோட படிச்ச பட்டாதாரி புள்ளைங்களையும் வீட்ட விட்டு வெளியே தலையே காட்டமா கையில ட்டி.வி யோட ரிமோட்ட கொடுத்து மோட்டு வலையத்த பார்துகிட்டு மாத்தி மாத்தி சீரியலும் படமும் பாருங்கப்பா, நாடு விடுஞ்சுரும் அப்படின்னு சொல்ல வராங்களா? இல்லை நீங்க பிஸியா இருங்க "செல்வி" சீரியலோட, நாங்க நெருக்கி சுருட்டிகிட்டு இருக்கோம் அப்படிங்கிறாங்களா.

ட்டி.வி என்னங்கா அப்படி கத்துக் கொடுக்குது, நமக்கு?

ஸ்கூல் போற பசங்கதாங்க ரொம்ப கெட்டு போவுதுங்க. ஆனா, ஒண்ணு, சின்ன பசங்கள 'கிரேஸி' யாக்கி வியாபாரத்த பெருக்கலாம். ஓ, அப்படிக் கூட ஏதாவது இதில இருக்குமோ!

கடைசியா, நல்லா கிராம புறத்திலயாவது சின்ன பசங்க கொஞ்சம் ஒடிப் பிடிச்சி விளையாடி ஒடம்ப ஹெல்த்தியா வச்சிருப்பானுங்க அதுக்கும் இந்த அறிவு ஜீவி திட்டம் ஊதப் போகுது சங்கு.

ஏங்க தெரியாமத்தான் கேக்கிறேன், இந்த பணத்தையெல்லாம் கிராமப்புறத்தில வேலை வாய்ப்பை ஏதாவது ஏற்படுத்துற மாதிரியோ, இல்ல பள்ளிக் கூடங்கள்ள இன்னொரு மொழி ஏதாவது கத்துக் கொடுக்க ஆசிரியர்களை போடறதிற்கோ பயன்படுத்தலாம் இல்லையா?

ஒண்ணுமே பிரியலங்கா? நாம மக்களுக்கு மண்டைகுள்ள என்னாதான் இருக்குன்னு. நீங்களாவது எனக்கு சொல்லுங்க. இல்ல எனக்குத் தான் ஏதாவது மிஸ்ஸிங்கா?

Related Posts with Thumbnails