Friday, January 03, 2014

புதுக்கோட்டையில் ஓர் ஞானாலயம்: Gnalaya P. Krishnamurthy

என் வாழ்நாளில் புதுக்கோட்டையை எத்தனையோ முறை  பேரூந்து வழியே கடந்து சென்றிருப்பேன். எண்ணிக்கையில் அடக்க முடியாது. அதுவும் அந்த மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஞானாலயா இல்லத்தை கடந்துதான் நான் பயணம் செய்த பேரூந்து சென்றிருக்கக் கூடும். ஆனால், இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்த பிறகு, வாழ்க்கையின் மத்திம பகுதியில் வந்து நிற்கும் எனக்கு சில நாட்களுக்கு முன் ஞானாலயா ஆய்வு நூலகத்தை பார்க்கவும், அதன் நிறுவனர் திரு. பா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் உரையாடவும் வாய்ப்பு கிடைத்தது. இவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், எனது உலகத்தில் இவர்களுக்கான காட்சியளிப்பு எனக்கு நானே வழங்கிக் கொள்ளவும் இப்பொழுதுதான் அமைந்திருக்கிறது.

ஒரு நாள் முழுதும் தங்கி ஐயா ஞானாலயா கிருஷணமூர்த்தி மற்றும் அவருடைய துணைவியாருடன் உரையாடினோம்.  அவர்கள் அளித்த மதிய உணவை முழுதும் உண்ணும் வரையிலும் அருகிலேயே அமர்ந்திருந்து என்னுடைய கொரித்து சாப்பிடும் பழக்கத்தை தற்காலிகமாக தள்ளி வைக்க செய்தார் அம்மா.

மனிதனின் நினைவாற்றல் என்பது ஒருவர் தனது துறை சார்ந்து எது போன்ற இலக்கை சென்றடைய வேண்டுமோ அதற்கென பயன்படுத்தி தன்னை சந்தைப் படுத்தி கொள்வது நடைமுறையில் நாம் காண்பது.

இவர் தான் வாசித்து சுவாசித்த அத்தனை புத்தக, நிஜ மனிதர்களின் நினைவுகளோடும் அவர்களின் கனவுகளோடும் வாழ்ந்து கொண்டிருப்பவரும், பெரியவர்களென தன்னைத் தானே தூக்கி வைத்துக் கொண்டாடும் சிறியவர்களுக்கு முன்னால் ஒரு சொப்பன மனிதர்.

இரண்டு மாடிகளில் உள்ள எந்த புத்தகத்தை தொட்டாலும் அதனைப் பற்றிய சிறப்புகளை எடுத்து வைக்கும் பாங்கு நம்மை கொக்கிப் போட்டு உடனே அந்த புத்தகத்தை வாசித்து விட வேண்டுமென்ற வேட்கையை வளர்த்தெடுக்கிறது.

எத்தனையோ பெரிய கூட்டங்களில் இவர் கலந்து கொண்டு உரையாடி இருக்கக் கூடும். ஆனால் திருப்பூர் ஜோதிஜியுடன் சென்ற போது, எங்களிருவருக்காக இத்தனை ஆர்வத்துடன் தன்னுடை அத்தனை வாழ்பனுவத்தை வருடியும், தேவையான இடத்தில் எங்களின் குறுக்கீடுகளை மன்னித்தும், கலந்து கொள்ளுமாறு எங்களையும் அணைத்து கருத்துகளையும் உள் வைத்து எடுத்துச் சென்றது முதல் ஆச்சரியம் என்றால் அவரின் உரையாடலின் அனுபவத்தை சொல்லாமல் சொல்லிக் கொண்டே சென்றது  என் கண்களை அகல விரிய வைத்தது.

அவர் ஓர் அறிவுச் சுரங்கம். 1800களின் இந்தியாவிலிருந்த வாழ்க்கை முதல்  சமகால அரசியல் நிலையென்று அத்தனை விசயங்களையும் இதுவரையிலும் நாம் வெகுஜன ஊடகம் வழியே அறியாத முக்கியமான தகவல்களாக சொல்லிக் கொண்டே செல்ல எனக்கு கனவா நினைவா? என்று யோசிக்கத் தோன்றியது.  அக்காலத்திய மனிதர்களின் வார்த்தைகளிலிருந்து அவர்களின் கனவுகள் எப்படியாக இன்றைய இந்தியாவில் வெறும் நினைவுகளாகி இருக்கின்றன என்று கூறி அவர் விடுக்கும் ஒரு வெறுப்பு கலந்த வரட்டுப் புன்னகை அவ்வப்பொழுது என் மனதை என்னவோ செய்தது.

அவரின் பார்வையில் காந்தியின் செயல்பாடுகளும் அவரின் தொலை நோக்கு பார்வையும் ஓவ்வொரு வார்த்தைகளின் ஊடாக ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டுமென்று அழுத்தமாக சில சான்றுகளை காந்தியின் வார்த்தைகளிலிருந்தே மேற்கோள் காட்டி சொல்லும் பொழுது “அட, ஆமால்ல” என்றுதான் வாய்பிளக்கச் செய்தது.

ஒரிடத்தில் நம்மை எல்லாம் காந்தியின் சுயசரிதை வாசிப்பிலிருந்து மீண்டு அவரைப் பற்றிய, காந்தியே எழுதிய பிற புத்தகங்களையும் ஆழ்ந்து வாசிக்க அழைக்கிறார். மற்றொரு இடத்தில் மிக அதிகமாக புத்தகங்களின் விற்பனையும், வாசிப்பாளர்களையும் பெற்ற மாவட்டமாக புதுக்கோட்டை விளங்கியதின் பின்னணியை விளக்கும் பொழுது, எப்படி நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தமிழுக்கென செய்த பெரும் தொண்டுகளை பெயர், வருடம் வாரியாக அட்டவணை இடுகிறார்.

முன்பொரு காலத்தில் தமிழகத்தில் மொத்த பிரசுரங்களே 13 தானாம். அதனில் பத்து பிரசுரங்கள் புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார செட்டியார்களால் நடத்தப் பெற்றவைதானாம். எனவே, இயல்பாகவே அதிகப்படியான புத்தகங்கள் விற்பனை மற்றும் வாசிப்பாளர்களையும் உள்ளடக்கிய மாவட்டமாக அமைந்து போனதாக உபரித் தகவலாக போகிற போக்கில் பெரிய தகவல்களைச் அள்ளித் தெளிக்கிறார்.

பேசப் பேச எனக்கு தோன்றியதெல்லாம், ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை தமிழில் எம்.ஃபில் செய்வதற்கான அத்தனை தகவல்களையும் நம் முன் வைத்து நகருவதாக  ஒரு பிரமிப்பை எனக்குள் விதைத்துக் கொண்டிருந்தார்.

ஞானாலயா நூலகத்தில் உள்ள பல புத்தகங்கள் முதற் பதிப்பு கண்டு அத்துடனே அத்தனை மூலத்தையும் உள்ளடக்கி அதற்கென உரிய புனிதத் தன்மையுடன் நம்மை சற்றே பணிவுடன் வணங்கச் செய்கிறது.

பெரியாரின் 1920களின் விடுதலை செய்தித் தாளை தொடும் பொழுது பயம்மா/மிரட்சியா/அதன் அதிர்வா அல்லது அந்தத் தாளின் இப்பொழுதோ அப்பொழுதோ விரலோடு ஒட்டிக் கொண்டு வந்துவிடுவேங்கிற புனிதம் தோய்ந்த பழமையா ஏதோ ஒன்று அந்த பைண்டிங் தொகுப்பை திறக்கும் பொழுது காலுக்கு கீழ் பூமி நகர்வதாக உணரச் செய்தது.

இத்தனை புத்தங்களையும் ஒரே இடத்தில் வசிக்க வைக்க வேண்டி தனது வளர்ச்சியை ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் அளவிலே வைத்துக் கொண்டிருந்திருக்கிறார். தான் ஆசிரியர் பணியில் இருந்த அனுபவம், புதுக்கோட்டை தவிர வேறு எந்த பகுதிக்கும் செல்ல விரும்பாத காரணத்தால் வந்த பதவி உயர்வை ஏற்றுக் கொள்ளாமல் ஆசிரியராகவே வாழ்ந்த அனுபவம், கடைசியில் தலைமையாசிரியர் பொறுப்பில் இருந்த போது பள்ளியில் உருவாக்கிய சீர்சிருத்தம் என்ற அவர் நிஜவாழ்க்கை சாதனை என்பது தமிழிலில் வந்த சாட்டை படம் போலவே இருந்தது.
ஆனால் எதையும் எவரிடமும் சொல்வதும் இல்லை. எந்த ஆதாயத்தையும் எதிர்பார்த்து செய்யும் பழக்கமும் இல்லாத அவரைப் பார்த்த போது சகமனிதர்களின் குறிப்பாக பணமே சரணம் என்று காட்டு ஓட்டமாக ஓடும் இன்றைய நவீன இந்தியர்களின் மீதாக நான் வைத்திருந்த பார்வையை சற்றே மறு பரிசீலனை செய்யச் சொல்லி இருக்கிறது. சென்ற பள்ளிகளில் எல்லாம் தனது நிர்வாக திறமையால் பல மாற்றங்களையும் செய்திருக்கிறார்.

குறிப்பாக கந்தர்வகோட்டை அரசு தொடக்கப் பள்ளியில் ரஜினி ரசிகர்கள் ஒரு முறை பென்சில் நோட் புத்தகம் வழங்க வந்த பொழுதில் அவர்களை பள்ளியின் சுற்றுச் சுவற்றை வெள்ளையடிக்க பயன்படுத்திக் கொண்ட லாவகம் ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் கடைபிடிக்க வேண்டிய ஆளுமைத் திறன்.

இன்றைய அரசியல் போகும் போக்கிலும் மக்களின் மனங்களில் ஏற்பட்டிருக்கும் பணத்திற்கு ஓட்டு என்கிற பரிணாம சுழற்சியில் இது போன்ற மனிதர்களும் இவைகளை சகித்துக் கொண்டு எப்படியாக தங்களை இன்னமும் சந்தோஷமாக வைத்துக் கொள்கிறார்கள் என்பது சமூக அறிவியல் - உளவியலுக்கே உரித்தான கேள்வியது.

நம்முடைய வயதை ஒத்தவர்களுக்கு இதுவே வாழ்க்கையென ஓடும் ஓட்டத்தோடு கலந்து கரையேறுவது எளிமையாக இருக்கலாம். ஆனால், நாட்டின் அடிப்படை உரிமைகளை காக்கவும், அதன் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை கட்டிக் காக்கவென போராடியே வாழ்ந்தவர்களின் வாழ்க்கையின் ஊடாக வாழப் பெற்ற இது போன்ற அறிவார்ந்தவர்களின் அங்காலய்ப்புதான் எதனை ஒத்ததாக அமையக் கூடும்.

இப்பொழுது உள் நாட்டிலும் சரி, உலக அரங்கிலும் சரி எந்த ஒரு முடிவும் தன் நாட்டின் நலனுக்காகவும், மக்களுக்காகவும் சார்ந்து இல்லாமல் வியாபாரிகளின் நலனுக்காகவே நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நாட்டின் மண்ணை/பாறை முகடுகளைக் கூட கூறு போட்டு விற்கும் நிலைக்கு நகர்ந்து வந்துள்ளோம்.

இத்தனைக்கு நடுவிலும் இத்தனை ஆயிரம் புத்தகங்ளையும் அதனூடாக வசிக்கும் மனிதர்களையும் வாசித்து அவர்களின் கனவுகள் எல்லாம் காற்றில் ஒன்று ஒன்றாக பறக்க விடுவதனையும் கவனத்தில் நிறுத்தி இன்னமும் மனதை விட்டு விடாமல் நேர்மறை எண்ணத்தில் அவருக்கே ஆன வாழ்வை அவரது தத்துவார்த்த நோக்கில் வாழ்வது simply notable and impressive!

அந்த குடிலை விட்டு வெளிக் கிழம்பி வரும் பொழுது நான் விளையாட்டாக சொன்னது எனது நண்பரிடத்தில் “ஏதாவது செய்யணும் பாஸ்.” அங்கே உள்ள அனைத்து புத்தகங்களையும் இண்டஸ்ட்ரியல் இயக்கமாக இயங்கி ஸ்கான் செய்து கணினியில் ஏற்ற வேண்டியது அனைத்து கணினி பயனீட்டர்களான நமது ஒவ்வொருவரின் கடமை.

Monday, December 16, 2013

வடுவூரில் எதிர்கால நீச்சல் வீரர்கள்: Potential National Swimmers at Vaduvoor

நேற்று வடுவூர் வடக்கு பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றிருந்தோம். எங்கெங்கு நோக்கினும் பச்சைப் பசேல் வயற்காடுகளும், அண்மையில் பெய்து வரும் தொடர் மழையால் மரங்கள் நீரை அருந்தி செழுமையை இலைகளில் காட்டியவாறு தனிந்து நின்று குளுமை காட்டிக் கொண்டிருந்தது.

அருகாமையில் உள்ள நீர் நிலையில் இந்தியாவின் potential divers தங்களின் தேசியத் திறன் அறியாது “அண்ணா, அண்ணா எங்களை படம் பிடியுங்கள்” என்று கூறியவாறே அத்தனை நேர்த்தியையும் காட்டி அரை மணி நேரத்திற்கும் மேலாக காற்றில் சுழன்றபடி நீருக்குள் தங்களவு ஆன்மாவை செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

இரண்டாவது படத்தில் உள்ள சிறுவனின் நீர் புகும் நேர்த்தியைக் காணுங்கள்! இதுவே ஒலிம்பிக் போட்டிகளில் பல வருடப் பயிற்சியில் செய்யும் ஒரு நீச்சல் வீரர் செய்யும் சாகசமென்று ஆ, ஓன்று கூச்சலிடும் (what an entering) ஒரு திறமை. இங்கே தானே பழகியதில் செய்து காட்டுகிறான்.

இப்படியாகத்தான் நமது கிராமப்புறங்களிலிருந்து பல தேசிய விளையாட்டு வீரர்கள் இந்தியா ஒன்று, இரண்டாவதை பின் தள்ளியவாரே தன்னை மண்ணுக்குள் புதைத்து விட்டு அரை ஜட்டி போட்டு 20/20 மட்டுமே விளையாட்டு என்று ச்சீயர் லீடிங் செய்து வருகிறது. எல்லாமே பணம், வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே தூக்கிப் பிடிக்கும் குணம்.

The real talents yet to be found in the heart of India!

1)


2)
3)
4)
5)
6)
7)
8)

Tuesday, December 10, 2013

பிள்ளையிம் கிள்ளி தொட்டிலையும் ஆட்டு: An Irony of Life!

அண்மையில் ஒரு படம் பார்த்தேன் மாட் டொய்மன் நடித்து வெளி வந்த “எலிசியம்.” அதில கதை என்னான்னா பூமியில எத்தனை முடியுமோ அத்தனை கொண்டாட்ட வாழ்க்கை முறையையிம் வாழ்ந்து முடிச்சிட்டு பெருகிப் போன மக்கட் தொகை, சுவாசிக்க நல்ல காத்து, குடிக்கத் தண்ணீர் கிடைக்காத சூழலுக்குப் போயி பூமி ஒரு குப்பை காட ஆகிடுது. பணம் படைத்தவர்களாக சேர்ந்து ஒரு வான் வெளி நகரம் அமைத்து (எலிசியம்) அங்கே வாழத் தலைப்படுகிறார்கள்.

பிறகு என்ன இப்போ எல்லாரும் அமெரிக்காவிற்குள் நுழைய எத்தனிப்பதை வெளியுறவுத் துறை அமைச்சகம் அதனையொட்டிய கெடுபிடிகளையும் வைத்து பார்த்துக் கொள்வதைப் போல எலிசியம் நகரத்திற்குள் இல்லீகள் பூமி இமிக்கிரண்ட்ஸ்களை வர விடாமல் வைத்து பார்த்துக் கொள்கிறார்கள். இந்த நிலையில் பூமியில் வாழும் ஹீரோவிற்கு ஓர் அநீதி நடந்து விடுகிறது. அதனை எதிர்த்து போரட உந்தி எழ இரண்டு உலகத்திற்கும் சுமூகமான பாதை அமைத்துக் கொடுப்பதாக படம் திரையில் விரிகிறது.

போலவே, இப்போ என்னோட முக்கியமான விசயத்திற்கு பார்வையை திருப்புவோம். ஒரு கட்டுரையை இந்தத் தலைப்பில் The Gates Foundation’s hypocritical investments வாசிக்க நேர்ந்தது. வாசிச்சிட்டு கடந்து போவோம்னுதான் நானும் நகர்ந்து பார்த்தேன். ஆனா, கெரகம் விடலை. இந்த உலகத்தில இயங்கும் எந்த ஒரு சோ கால்ட் நல்ல விசயமும் சரி கெட்ட விசயமும் சரி ஒன்றொடொன்று பின்னி பிணைந்தே கிடக்கிறது. எதில இருந்து எதை பிரிச்சு எடுக்கிறதின்னு சிக்கலை உட்கார்ந்து அவிழ்க்க ஆரம்பிச்சு இனம் காண்பதற்கு முன்னமே சுடுகாட்டு பக்கத்தில ஒரு சாதா மனுசன் வாழ்க்கை நகர்ந்து வந்து நின்னுருது.

இப்படியாத்தான் நம்ம பெரிய கடை அண்ணாச்சி பில் கேட்ஸ் இம்பூட்டுத்தான் சம்பாரிக்கணும்னு வழித்தொகை தெரியாம கன்னாபின்னான்னு அவரு கொம்பெனி சம்பாரிக்கப் போக அவருக்கு இப்போ டாலர் பில் எல்லாம் அது துடைக்கக் கூட லாயக்கில்லைன்னு உணரரும் இடத்திற்கு நகர்த்தி வைச்சிருச்சு இந்த வாழ்க்கை. சரி, இரண்டு பூமி கிரகத்தையே வாங்கிப் போடும் அளவிற்கு பணம் குவிஞ்சிருச்சே என்ன செய்றதுன்னு தெரியாம இந்த உலகத்து ஏழை மக்களுக்கு சுகதாரமான உணவு, ஆரோக்கியமான காற்று, உழைக்கும் உழைப்பாளி வர்க்கத்திற்கு முறையான வழியில் சென்றடையும் விசயங்களை ஆதரிப்பது,  வன்முறையற்ற சமூகம் உருவாக வித்திடுவதற்கென அமைந்த நிறுவனத் திட்டங்களை ஆதரித்து முதலீடுவது என தன்னிடம் குவிந்து கிடக்கின்ற அந்தப் பணம் தனக்கு வேலை செய்யத் திட்டமிட்டார்.

அப்படி திட்டமிட்டபடியே அந்த கையிருப்பு பணத்தை பெருக்க எங்கெல்லாம் தனது நிறுவனம் முதலீடு செய்தால் அவரின் கனவை நிறைவேற்றி வைக்க முடியும்னு பாடுபட்டு யோசிச்சு அங்கெல்லாம் பணத்தை முதலீட வைத்திருக்கிறார்கள்.



அதாவது ஒரு பக்கம் வியாதிக்கு, சுகாதரமற்ற ஓர் வாழ்வை வாழத் தேவையான அடிப்படை விசயங்களை வளர்த்து விட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் அதன் மூலமாக ஈட்டிய பணத்தில் வைத்தியம் செய்கிறார். என்ன ஓர் beautiful mind! முதலீடு செய்யப்பட்ட ஒரு சில நிறுவனங்களை நீங்களே காணுங்கள். அவர்கள் எப்படியெல்லாம் ஆரோக்கியமான உணவும், பானங்களும் இந்த உலக மக்களை சென்றடைய பாடுபடுகிறார்கள் என்பதை நீங்களும் அறிந்து கொண்டு எனக்கும் அறியத் தாருங்கள்.



உலக சூடேட்றத்திற்கு எதிராக போராடும் கம்பெனிகளுக்கு ஆதரவாக இங்கும் முதலீடு...




நமக்கு கிடைத்திருக்கும் ஓர் நவீன எலிசியம் படத்தின் நாயகன், எலிசிய நகரத்திலிருந்தே போராடுகிறான் :) .



பி.கு: மேலும் வாசிக்க இங்கே செல்லுங்க... 

http://grist.org/climate-energy/the-gates-foundations-hypocritical-investments/?utm_source=facebook&utm_medium=update&utm_campaign=socialflow

Tuesday, November 19, 2013

தஞ்சாவூர் - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஓர் பயணம்: Mullivaaikkaal Mutram (Photos)

என்னோட நண்பன் ஒருத்தனை கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு ஒளிஞ்சு கண்டுபிடிச்சு விளையாண்டுகிட்டே இருந்துட்டு நேற்று முகநூலில் வைச்சு கன்னம் மாத்தி, கன்னம் அறைஞ்சுகிட்டு  இன்று நேரா சந்திசிக்கலாம்னு முடிவாகி அவன் தஞ்சாவூர் வந்திருந்தான்.

அவன் எங்களோட நட்பை வட துருவமும் தென் துருவமும் சேராதுங்கிற ரேஞ்சிக்கு 90களிருந்தே சொல்லிட்டு திரியறது உண்டு. ஆனா, அதுக்கு பின்னாடியான திரை மறைவில் ஒரு hate and love காற்றில் தொங்கிட்டே இருக்கும் எங்களைச் சுத்தி.

என்னோட துணைவி, நேற்று நானும் அவனும் அலைபேசியில் பேசிக் கொண்ட தனிப்பட்ட மொழியை கவனிச்சிட்டு ”அப்படி பேசுவீங்க இப்படி நடிக்கிறீங்க ஃபோன்ல அவரோட” அப்படின்னு புருவம் உயர்த்திர அளவிற்கு எத்தனை நாயை கூப்பிட்டுக்க முடியுமோ அத்தனை தடவை மாத்தி மாத்தி கூப்பிட்டுக்கிட்டோம்.

நேரா வந்தவன்கிட்ட என்னய பிடிச்சும் கொடுத்தா. அவன் இது எப்போதுமே அப்படித்தான். அப்படின்னு அதே கிக்கேபிக்கே சிரிப்போட நழுவிட்டான். அவனுக்கு கடுப்பு ஏண்டா நல்ல விசயமே சொல்லி வைக்க மாட்டீங்களாடன்னு. எப்பூடி நாங்க எங்க வைஃபை கிட்ட கூட ஹீரோ வேஷம் கட்டலன்னா- நாலு பேரை வில்லனா ஆக்கினாத்தானே நான் ஹீரோ ஆக முடியும்னு நினைச்சிக்கிட்டு ஹிஹிஹின்னு மனசுக்குள்ளர சிரிச்சிக்கிட்டேன்.

அப்பறம் அவனுக்கு முள்ளிவாய்க்கால் முற்றம் பார்க்கணும்னு தோணி நேற்றே சொல்லிட்டான் போலாம்டான்னு. சரின்னு ஒரு வழியாக தத்தி தவழ்ந்து இடம் கண்டுபிடிச்சு போனோம்.

இந்த அண்ட வெளியில மிதக்கிற அத்தனை வஸ்துவையும் பார்க்க அரக்கபறக்க ஓர் ஓழுங்கற்ற வழியில இயங்கிற மாதிரி இருந்தாலும், அததது இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டுத்தான் இயங்கி மிதந்துகிட்டு இருக்கு. ஆனா, இந்த மனுசப்பய நடந்துக்கிறதுக்கான காரணங்கள் படிக்க இன்னொரு உலகத்தையே படைக்கணும் போல. கண்ணைக் கட்டுதப்போய்!

நினைவு முற்றம் போயிருந்தோம். மூன்று வருடங்களுக்கு முன்னாலேயே அதனை கட்ட முற்பட்டவர்கள் முறையான அனுமதிச் சான்றிதழ்கள் பெற்றுத்தானே ஒதுக்கப்பட்ட இடத்திற்குள் அதனை கட்டியெழுப்பி இருப்பார்கள். அப்படி இருக்கும் பொழுது, அத்தனை வருடம் எழும் வரையிலும் காத்திருந்து விட்டு இப்பொழுது மதில் சுவரை இடித்து யாருக்கு எதனை தெரியப்படுத்த அப்படி ஒரு அலங்கோலச் மட்டச் சுவர் கட்டினார்கள் என்ற கேள்வியை தவிர்க்கமுடியவில்லை சாலையிலிருந்து அந்த மொத்த அமைப்பையும் கண்ணுரும் பொழுது. என்னவோ போங்கப்பா!

அங்கு எங்களுடன் அந்த முற்றத்தினை பார்வையிட்ட சிலரில் ஒரு பெண்மணிக்கு ஆச்சர்யம் பெண்களை இப்படி கயிற்றால் பிணைத்து எல்லாம் இப்படிச் செய்திருக்கிறார்களா என்று. எந்தளவிற்கு பதினான்கே கிலோமீட்டர் தொலைவில் உள்ள இன்னொரு இடத்தில் இடம் பெயர்ந்து வாழும் தன் இன மக்களுக்கு நேர்ந்த கோரம் அவர்களது பார்வையிலிருந்து முற்றிலுமாகவே மறைக்கப்பட்டிருப்பதற்கு அது ஒரு சான்று வார்த்தையாக காற்றில் மிதந்து காதடைந்தது.

இத்தனை குறுகிய புவியியல் அமைப்பின் குறுக்கப்பட்ட தொலைவிற்குள்ளும், நமக்கும் அவர்களுக்குமான துயரங்களும், தேவைகளும், தொலைதூர நோக்கும் நமக்கும் மத்திய அமெரிக்காவிற்கும் இடையே கிடக்கும் தூரங்களை கடந்து நிற்பதற்கு ஓப்பானது.

அங்கே பார்த்த சிற்பங்கள் அனைத்தும் இணையத்தில் புழங்கியவர்களுக்கு காணக் கிடைத்ததாகவே இருக்கும். இருந்தாலும், அரிதிப் பெரும்பாண்மையான நமது மக்களுக்கு நிச்சயமாக இந்த முற்றம் ஒரு பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி மனதில் ஒரு குற்ற உணர்வை ஊட்டக் கூடியதாகவும், சிந்திக்க வைக்கக் கூடியதாகவும் அமையும் என்பது திண்ணம்.


1) நுழைவு முற்றம்...


2) தமிழகம் மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் தீக்குளித்தவர்களுக்கான மதில் பதிப்பு...

3) ஈழம் மண்ணில் அவர்கள் படும் வதையை விவரணம் செய்யும் மதில் பதிப்பு...

4)

5)
6)

7)
8)


9)
10)

Sunday, October 27, 2013

திசைகளறு பயணம் I - கன்யாகுமரி (Photos)

நேற்றிரவிற்கு முந்தைய இரவில் திடீரென்று ஏதோ வீடற்றவன் மனநிலையில் கிடைத்த பேருந்தில் தாவித் தாவி பயணித்ததில் விடியற்காலத்தில் சூரியனார் விழித்து அரைமணி நேரம் கடந்து இறங்கிய இடம் கன்யாகுமரியாக இருந்தது. :)

புதுக்கோட்டையிலிருந்து மதுரைக்கு அந்த நேரத்தில் ஒரு தனியார் பேருந்து ஒன்று கிடைத்தது. போகும் வழியெங்கும் அப்பொழுதே பெய்திருந்த மழை , மரங்களின் இலைகளில் சார்ந்திருந்த ஈரப்பதத்தை காற்றில் பரப்பி, நெஞ்சின் அடியாழம் வரைக்கும் நுரையீரலின் வழியாக உயிரைத் தொட்டுக் வருடிக் கொண்டிருந்தது. கூடவே இளையராஜவின் என்பதுகளின் பாடல் தொகுப்பை மிதமான சப்தத்துடன் ஓட்டுநர் வேறு தவழ விட்டிருந்தார்.

எனது தலைக்கு நேர் மேலாக பெட்டிகளை வைக்கும் தட்டில்  சுற்றியிருந்த ஒரு வெளிப்புற பிளாஸ்டிக் சிறிதே கிழிந்து காற்றில் ஆடியாடி அசைந்தது. அது என்னுடைய கேசமே காற்றில் சிலும்பிப் பறக்கிறதென ஒரு மயக்கத்தை உண்டு பண்ணி என்னுடைய கல்லூரிக்காலத்துப் பயணத்தை மீண்டும் ஞாபகமூட்டியபடியே தனை மறந்து கேசத்தை சிலுப்பிக் கொள்ளும் அவாவை வழங்கிக் கொண்டிருந்தது.

அது இளையராஜாவின் மந்திர விரல்களின் ஊடே கசிந்தொழுகும் பாடல்களுக்கு மட்டுமேயான சாத்தியம் போல!  இல்லாத முடியை, பயணத்திற்கான இலக்கை, வாழ்க்கைக்கான பொருளை, இறந்து போன ஆன்மாவை இன்னும் உயிர்ப்புடனே ஏதோ ஒரு மூலையில் உன் ஆன்மா வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று ஞாபகமூட்டுவதற்கான அத்தனை சாத்தியங்களையும் அது வழங்கி, வாடிய மனதை மேகத்திற்கு மேலாக எடுத்துயர்த்தி வைத்து விடும் ஒரு வெண்புரவி போல.

மிதக்க மிதக்க அப்பொழுதே ஒரு நோட்டுப் புத்தகத்தில் இளையாராஜவிற்கு செலுத்த வேண்டிய எனது காணிக்கையை எழுத்தின் மூலமாக எழுத வேண்டிய தருணமிது என்று எண்ணும் அளவிற்கு அது என்னை கடந்த காலத்திய ஆயிரக்கணக்கான மைல்களின் பயணிப்புகளின் ஊடே தோன்றிய அனுபவங்களை சார்ந்து இப்பொழுதே மொத்தமாக இறக்கி வைக்கும் தருணமாக அழுத்திக் கொண்டிருந்தது.

ஆனால், இப்பொழுது நான் சொல்ல வந்த விசயம் வேறு. பிரிதொரு சமயம் இளையராஜாவிற்கென ஓர் அமர்வு செய்யலாம்.

எப்பொழுதுமே எனக்கு இந்தியா என்றாலே நெருக்கமான விசயமாக எனக்குள் பற்றிப் படர்வது பேருந்து மற்றும் புகை வண்டிப் பயணங்கள். இது போன்ற தனிப்பட்ட முறையில் இலக்கே அற்று கால் போன போக்கில் கிடைக்கும் ஊர்தியில் ஜன்னலோரமாக அமர்ந்து பிரயாணிப்பதுதான்.

அவ்வாறு பயணிக்கும் பொழுது, பேருந்தின் வேகம்  அதிகரிப்பதனை விட்டு அதனை விட என்னுடைய மனம் வேகம் பிடித்து பிரபஞ்சத்தின் விளிம்பை எட்டிப்பிடித்து விட்டு அதற்கு மேல் அது வளைந்து செல்கிறதே என்ற ஆதங்கத்துடன் பூமிக்கே இறக்கிக் கொண்டு கடந்து செல்லும், ஊர்களையும், மரங்களையும், தண்ணீரற்ற குளம் குட்டைகளையும், மாடு மேய்க்கும் தாத்தாபாட்டிகளையும், சிறார்களையும், மனிதர்களையும் அலுக்காமல் பார்த்துக் கொண்டே அவர்களை பின் தள்ளி முன் நகர்வது ஏதோ வாழ்வின் எதார்த்தத்தை எனக்கு ஞாபகமூட்டியபடியே கடந்து செல்வதாக மனமொரு லயிப்பை எட்ட வைக்கும்.

பெரும்பகுதி இது போன்ற ஊர்திகளின் முன் நகர்வு என்னுடனேயே என்னுள் மையம் கொண்டிருக்க பெரிதும் உதவுகிறது. ஏறி இறங்கும் மனிதர்களின் முகங்களும் அவர்களுடனேயே பயணிக்கும் அனைத்து விதமான வாழ்வு வழங்கிய ரேகைகளும், வீடுகளும் சட் சட்டென திரையிழுத்து காட்சிகளை மாற்றுவதனைப் போல மாறிக் கொண்டே இருக்கும். அது நமது வாழ்வின் நிலையாமைக்கான ஒரு குறியீடாக அமைந்து என்னுள் மென்மேலும் உறங்கிப் போக வடிகாலாக அமைய உதவுவதும் இது போன்ற இலக்கற்ற பயணங்கள் ஒரு கிளர்வுற்ற ஈர்ப்பு நிலையில் நடந்தேற உந்தித் தள்ளுகிறதோ என்று ஒரு முடிவிற்கு வர வேண்டி இருக்கிறது.

இதற்கு முன்பு இது போலவே பல பயணங்களை எனக்கு நானே வழங்கிக் கொண்டிருக்கிறேன். அதிலொன்று வட அமெரிக்காவில் நான் நிகழ்த்திய 2980 மைல் அளவிளான மகிழுந்து பயணம் வாயிலாக ஆறு மாநிலங்களை கடந்து சென்றது. வாழ்வின் மறக்க முடியா பயணங்களில் அதுவும் ஒன்று. அதற்கும் பெரிதாக எந்த ஒரு திட்டமிடலுமில்லை. அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது. ஆனால்,  ஏதோ ஒரு வானத்தின் நிலா பின் தொடர்ந்த படியே!

பயணங்கள் எப்பொழுதும் எனக்கு அலுப்பை கொடுத்ததே இல்லை. மனம் வெம்பி சூம்பிக் கிடக்கும் பொழுது இப்படியான பயணங்கள் உள்முகமாக சிந்தனையைத் திருப்பி விடவும், வழியில் தான் சந்திக்கும் புதிய மனிதர்களுடானான உரையாடல் தனக்குள் இருக்கும் உண்மையான இயல்பினை வெளிக்கொணர்ந்து மீண்டும் விரைவாக துளிர்த்தெழும் சாத்தியத்தையும் வழங்குகிறது.

அதனினும் பயணங்களின் பொழுது வாசிக்கும் பழக்கம் இருக்குமாயின் அது மேலும் கூர்மையடைய வாய்ப்பளிக்கிறது. என்னுடைய ஆதர்ச எழுத்தாளரான பாலோவின் த ஸகீர் புத்தகம் வீட்டில் படுத்தவாரே வாசித்துக் கொண்டிருந்தேன். அந்த புதினத்தின் ஓட்டம் புத்தகத்தின் எல்லையைத் தொடத் தொட இது இந்த நிலையில் வாசிக்கும் புத்தகமல்ல என்று அவமானமாக உணர்ந்தேன். அதன் விளைவாக அமைந்தது ஒரு நான்கு மணி நேர பேருந்து பயணம். அந்த பேருந்தின் கடைசி நிறுத்தத்திற்கு முன்பாகவே புத்தகத்துனூடான பயணமும் முடிவடைந்தது. பயணத்தின் பிற்பகுதி ஒரு ரம்மியமான மாலை நேரம். காவிரிக் கரையோரமாக பச்சை பசேல் நிறம் பூசிய வயல் காடுகள் அனைத்தும் கலக்கஸ்தான் புல் மேடுகளாக மாறிப்போயிருந்தன.

மீண்டும் கன்யாகுமரி பயணத்திற்கு வருவோம். மதுரையிலிருந்து குமரிக்கு செல்லும் நேரடி அரசு பேருந்து ஒன்றில் ஏறி அமர்ந்தேன். அரசு பேருந்துகளே இப்பொழுதெல்லாம் தொலை தூர பயணத்திற்கு செல்வதற்கென இயக்கப்படுவதாக கருதுகிறேன். அரசு பேருந்துகளின் பயணச் சீட்டின் விலையும் ஒன்றும் சொல்வதற்கில்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் தஞ்சாவூருக்கும் புதுக்கோட்டைக்குமான பயணச் சீட்டின் விலை அரசு பேருந்திற்கும் தனியாருக்கும் ஒன்பது ரூபாய் வித்தியாசங்களை கொண்டதாக இருக்கிறது. முன்பு ஒரு காலத்தில் தனியார் பேருந்துகளிலேயே விலை அதிகமிருக்கும். இப்பொழுது அது தலைகீழாக இருக்கிறது. பேருந்துகளின் நிலையும் ஒன்றும் பெரிதாக மெச்சிக் கொள்ளும் படியாகவுமில்லை.

ஓடும் பேருந்திற்குள் முதல் முறையாக கொசுக்கள் முத்தமிட முத்தமிட பயணித்து மகிழ்ந்தது இதுவே முதல் முறை. ஓட்டுநர் எத்தனை மிதித்தும் பேருந்து மணிக்கு 50கி.மீ வேகத்திற்கும் மேல் சென்றிருக்க வாய்ப்பில்லை.

பேருந்தின் ஜன்னல்களின் கண்ணாடிகள் சிரித்து அதிர்ந்து சிரித்து என கொஞ்சம் கொஞ்சம் எட்டிப்பார்த்த தூக்கத்தையும் கொசுக்களுடன் சேர்ந்து கொண்டு காவல் காத்தது.

இந்தனை சந்தோஷத்திலும் விருட்டென்று அமைந்த பயணத்தினால், கையில் இருந்த கேமராவில் பாட்டரி இருக்கிறதா இல்லையா என்று பார்க்க அச்சப்பட்ட படியே நேரத்தை கடத்திக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காலை மணி மூன்றரையைப் போல எடுத்துப் பார்க்கும் பொழுது சுத்தமாக இறந்து கிடந்தது. கொஞ்சமே என்னை திட்டிக்கொண்டு மேலும் அதனை நினைத்துப் பயணத்தின் இனிமையை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அந்த மன அறைக்கு ஒரு பூட்டைப் போட்டு சாத்தி விட்டேன்.

பின்னே என்ன இறங்கி கையில் இருந்த சம்சங் s4 வழியாக கிடைத்ததை எடுத்துக் கொண்டேன். இருந்தாலும் காலை நாலரை மணிக்கு சென்றடைந்து விடும் என்ற பேருந்து சரியாக ஆறரை மணிக்கே சென்றடைந்தது. அதற்குள்ளாக சூரியனார் கொஞ்சம் காத்திரமாகி லென்ஸை பதம் பார்க்க ஆரம்பித்து விட்டார். இன்னும் குமரியில் ஐந்து இட்லிகள் பத்து ரூபாய்க்கு விற்கிறார்கள்! அந்த பெண்கள் மீன் விற்பனை செய்யும் சமூகத்தை சார்ந்தவர்களாக இருக்கக் கூடும். சுற்றி நின்று உணவருந்தியவர்களின் தோல் காய்ச்சலைக் கொண்டு அனுமானிக்க முடிந்தது.

அவர்கள் கடலுக்கும் சற்றே அருகே நின்று இந்த வியபாரம் செய்து வருவது அறியாமல் முகம் அலம்பி பல் விளக்கவென மனதில் நிறுத்தி ஒரு வெண் பொங்கலும், காஃபியும்  அருந்த 95 ரூபாய் கொடுத்து  முதல் போனி செய்து வைத்தேன். கொஞ்சமே வருத்தம். அடுத்த முறை ஐந்து இட்லிகள் பத்து ரூபாய் :) .

நான் பருகித் திளைத்ததிலிருந்து ஒரு சில துளிகள் உங்களின் பார்வைக்காகவும்...


1)



2)
3)
4)
5)
6)
7)
8)
9)
10)

Monday, September 30, 2013

தஞ்சாவூர் அரசு பொருட்காட்சி : Thanjavur Govt Exhibition'2013

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக அமைந்திருக்கும் முனிசிபல் திடலில் அரசு பொருட்காட்சி ஒன்றைத் தொடங்கி இருக்கிறது. நேற்று இரண்டு குட்டிப் பெண்களுடன் அந்தப் பக்கமாக நடையைக் கட்டினோம்.

பொருட்காட்சியின் முதல் நாள் என்பதால் அனுமதி இலவசமாக வழங்கப்பெற்றோம். அத்தனை சிறிய மைதானத்திற்குள் நல்ல திட்டத்துடன் ஸ்டால்கள் அமைக்கப்பெற்றிருந்தாலும், எங்கெங்கும் காணும் மக்கள் கூட்டத்தைத் தவிர சிறிய/பெரிவர்களுக்கென்று மகிழ்வூட்டி தொண்டையை உடைத்துக் கொண்டு கதற வைக்கும் ஃபன் ரைட் எதனையும் காணவில்லை.

பின் வரும் நாட்களில் அவைகள் சேர்ந்து கொள்ளுமோ என்னவோ. போலவே, நிறைய விற்பனை ஸ்டால்களும் இன்னும் அமைக்கப்படவில்லை. அவர்களும் அவர்களின் வழிகளில் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

தொலைந்த போன கூட்டத்திற்குள் என்னை கண்டு கொண்டது போல அத்தனை மக்களையும் ஒரு சேர ஓர் இடத்தில் வைத்து மையமாக உணவு மைதானத்தில் அமர்ந்து பொண்ணுங்களோட ஒரு சிறு சிற்றுண்டி உண்டது ஹம் ஹம்ம்ம் அனுபவம்! பெண் சிறிதே ஆடினாள்... சாப்பிட்டுக்கொண்டே!

சவகாசமாக மீண்டும் ஒரு முறை பொருட்காட்சி திடல் சூடு பிடிக்க ஆரம்பித்த நாட்களில் செல்ல வேண்டும்.

1) காட்சித்திடலின் நுழைவு வாயில் ...



2) திடலின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் வனத் துறை காட்சியகம்...







3) ஆவின் பால் நிலைய ஸ்டாலுக்கு நேர் எதிர் முனையில் அமைந்திருக்கும் மீன் வளத்துறை ஸ்டால். இங்கே என்னோட அறுபது வயதித்திய புறக் கண்ணாடி பிம்பம் ஒன்றைச் சந்தித்தேன் :) ...




4) தொடக்க நாள் என்பதால் ஏதோ வரவேற்பு நிகழ்ச்சியையொட்டி ஓர் அண்ணாவும் தங்கையும் தங்களது திருமணத்தை சார்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். வரதட்சிணை கொடுப்பதும்/வாங்குவதும் தவறு என்ற உரையாடலும் காதில் விழுந்தது. தாண்டிச் சென்று, அண்ணா தனது தங்கையை மூளைச் சலவை செய்வது போன்ற ஒரு உரையாடலில் கூறினார் - திருமணத்திற்கு பிறகு தனித் தனியாக குடும்பம் அமைவதே நம் சமூக வழக்கு என்று?! :)


6) பொண்ணு டொய் ஸ்டால் டொய் ஸ்டால் என்று படுத்த ஆரம்பித்து கண்களில் கண்ணீர் குளம் வெட்டிக் கொண்டிருக்கும் ஒரு தருவாயில், இந்த வடக்கத்தி தம்பி ஒருவன் உயிர் காத்தான்... :)



Friday, August 09, 2013

எனது மறுபக்கம்...: The Flip Side!

எத்தனை அடித்தாலும் நான் திருந்துவதாக இல்லை. இன்னமும் மனுசங்களின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எனது அம்மா அடிக்கடி அவளது 67 வருட வாழ்க்கையில் கற்றுக்கொண்ட நடைமுறை வார்த்தை மிகவும் தாமதமாகவே புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது; இருப்பினும் காத்திருப்பதில் பிரயோசனமுள்ளதாக இருக்கிறது its worth a wait. அந்த வார்த்தை- உறவுகளில் சிக்கல்கள் எழுந்து விலகிச் சென்றும், வார்த்தைகளில் அமில மழை பொழிபவர்களைப் பற்றிய நேர்மறை எண்ணமாக எடுத்துக் கொள்வதற்கிணங்க இப்படியாக சொல்வாள்...

 *தெரிந்தா செய்கிறார்கள், என்ன செய்றோம்னு தெரியாமச் செய்றதுதானே! காலம் வரும் பொழுது புரிந்து கொள்வார்கள்* .

இந்த காலம் சில பேருக்கு நாட்களாகவோ, மாதங்களாகவோ, வருடங்களாகவோ ஏன் இந்த பிறப்பிற்கும் எட்டாத ஒரு விசயமாகவோ கூட அமைந்து விடக் கூடும். இருப்பினும் இந்த நேர்மறை எண்ணமாக எடுத்துக் கொளல் தமக்கு தாமே மன அழுத்தத்திலிருந்தும், வெறுப்பு நம்மை ஆட்கொண்டு நமது பொன்னான இக் கணத்தை அனுபவிக்க விடாமல் சிதைத்து விடக் கூடியதிலிருந்தும் நம்மை கரை தூக்கி விடுவதுமாக அமைந்திருக்கிறதாகப்படுகிறது.

நம் வாழ்வில் வந்து போகும் உறவு மனிதர்களையொட்டி எத்தனை பெரிய கால எதிர்மறை செயல்பாடுகள் நடந்தேறும் பொழுதும் இந்த take in நிச்சயமாக உதவுவதாகவே இருக்கிறது.

என்னோட இன்னொரு அம்மா’ [மாமீ’யார் - i hate this term, ஏன்னா அந்த தமிழ் வார்த்தையே பாருங்க மாமி யார் ? என்று போட்டி போடுவதாக அமைந்து பட்டிக்கிறது :) ], அதாவது என்னோட வைஃபை அம்மாகிட்ட இன்னிக்கு ரொம்ப நேரம் காணொளியில் அரட்டை அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவங்களும் அதை ரொம்பவே சிலாகிச்சு பேசினாங்க.

“இந்த மாதிரியான ஒரு கணத்தை நமக்கு இந்த காலம் கொடுத்திருக்கின்னா கிடைக்கற்தக்கன என்று.”

பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக சில கேள்விகளின் மூலமாக அவர்களுடைய இன்றைய வாழ்க்கையை எடுத்துக் கொள்ளும் போக்கை நோக்கி நகர்ந்தது. அம்மாவிற்கு ஆறு ஏழு பிள்ளைகள் எல்லாம் முப்பது வயதைத் தாண்டி. தான் தனக்கு என்று தன் பெற்றோர்கள் அரைத்த மாவை தனக்கென அரைக்க ஆரம்பித்திருக்கும் நிலையில் உள்ளவர்கள்.

அம்மாவின் கணவர் ஓர் மூன்று வருடங்களுக்கு முன்பு மரணித்துவிட்ட நிலையில் தனியாக இவர்கள் வாழ தலைப்பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் இவர் விரும்பினால் தன் பிள்ளைகளின் யார் வீட்டிலாவது இருந்து துணையோட இருக்கக் கூடிய கதவை தன் பிள்ளைகள் எப்பொழுதும் திறந்தே வைத்திருக்கிறார்கள். 

இருப்பினும் இந்தம்மாவின் தன்னம்பிக்கையும், அந்த நாகரீகமும் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிற நிலையில் இந்த கேள்வியை முன் வைத்தேன். ஏன் உங்களுக்கு இத்தனை பிள்ளைகள் இருந்தும் தனியாக வசிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்? என்று கேட்டவுடனேயே வெடித்து சிரித்து தன் அனுபவத்தை முன் வைக்க தயாராகினார்கள்.

“எத்தனைதான் நமக்கு சேவகம் பண்ண, கவனிச்சிக்கன்னு ஆட்கள் இருந்தாலும், நமக்கு பிடிச்ச இடத்தில உட்கார்ந்து எழுந்துன்னு, பிடிச்சதை பிடிச்ச நேரத்தில செஞ்சிகிட்டு வாழுறதுல உள்ள சுகம் கிடைக்குமா தம்பீ” என்பதே அம்மாவினுடைய பதிலாகக் கிடைத்தது.

எத்தனை வாழ்வு அனுபவங்கள் அவர்களை இந்த ஒரு புரிதல் நிலைக்கு நகர்த்தி இருந்தால் தன்னுடைய எழுபதைத் தொட்டு நிற்கும் ஒரு மனுஷியின் எண்ணமாக இது வெளிப்பட்டிருக்கக் கூடும்.

நான் அதன்பால் கட்டுண்டேன். என்னுடைய ஈர்ப்பு- மனிதர்களின்பால் சார்பற்ற நிலையில் மனிதர்களுடன் ஒட்டி ஒழுகுதல், அது வயது நிலைகளையும் கடந்து யார் வெளிப்படுத்தினாலும் அந்த மனிதர்களுக்குள் ஏதோ வெட்டி எடுக்க புதையல் இருப்பதாக கூடுதல் ஒட்டல் ஏற்படும்.

பிறகு அம்மாவின் இந்த நிலைப்பாட்டை பாராட்டி விட்டு, நீங்கள் எடுத்திருப்பதும் ஒரு தேர்வுதான். தனது திருமண நாளிருந்தே, குடும்பம், கணவர், பிள்ளைகள் என்று அடுத்தவர்களுக்காக தன்னுடைய வாழ்வை தோய்த்த நிலையில் கடைசி ஒரு கட்டத்திலாவது தனக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து தீர்க்கிறேன் என்று எடுத்திருக்கும் இந்த தேர்வை நான் மதிக்கிறேனம்மா.

இருந்தாலும் இன்னும் காலங்கள் நகரும் பொழுது இப்பொழுது இருக்கும் இந்த உள்ளார்ந்த மனசக்திக்கு உடம்பு ஒத்துழைக்காத ஒரு நாளும் வரக் கூடும். அப்படியாக வரும் ஒரு நாளில் அடுத்த ஒரு தேர்வை நீங்கள் எடுக்கும் பொழுது, எனக்கு உங்களைப் பார்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பை வழங்குங்கள் என்று கூறினேன்.

ஏனெனில் அந்த வாய்ப்பை வழங்குவதும், வழங்காமல் போவதும் அவர் தேர்ந்தெடுக்கும் சாய்ஸ்களிலே உள்ளது. இது எப்படியாக இருக்கிறது என்று சற்றே உள்ளே புகுந்து யோசித்தால், எந்த வீட்டில் எந்த மனிதர்களுடன் நாம் விருந்தாடப் போகிறோம் என்று வாய்ப்பளித்துப் பார்ப்பதற்கு ஒப்பானாது.

தீர்க்கமாக வாழ்பவர்களுக்கு அங்கே எந்த விதமான சமரசங்களுமில்லை. சுத்தமான தேர்வு மட்டுமே மீதமாகிறது. அங்கே இது போன்ற மனிதர்கள் புகுந்து வெளி வரும் பொழுது விருந்தளிப்பவர்கள் கெளரவிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை.

அதுனாலேயே நான் மிகக் கவனமாக அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். இன்று ஒரு வாழ்ந்து தீர்த்தவளின் வாயிலிருந்து சில நல்ல வார்த்தைகளை வாழ்த்தாக பெற்றேன். இன்றைய நாள் எனக்கு மிகவும் இனிதான நாளாக அமைந்திருக்கிறது!

சந்தோஷத்திலேயே அடுத்தவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதற்கு ஒப்பான விசயம் வேறொன்றும் இருப்பதாகப் படவில்லை. அது இந்த மிர்சிடீஸ் வகையாறா கார்களையும், சம்ஷாங் s3 and s4 வகை கைபேசிகளையும் விட அதி மன மகிழ்வை ஊட்டுவதாக உள்ளது.

சீக்கிரம் விழித்துக் கொள்பவர்களுக்கு இந்த வாழ்வு ஏதோ ஒரு வகையில் எப்பொழுதுமே மட்டற்ற சந்தோஷத்தை வழங்க காத்துக்கொண்டே இருக்கிறது!

Related Posts with Thumbnails