Sunday, April 25, 2021

குடும்பக் கட்டுப்பாடு: தமிழ்நாடு பெற்றதும் இழந்ததும்!

ஒரு பிள்ளை போதும் என்ற மனதிற்கு தமிழகம் பெற்றதும் இழந்ததும் என்ன?

1965களில் குடும்பக் கட்டுப்பாடு இந்தியாவில் பெருமளவில் கொண்டு சேர்க்க
ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டமே Family Planning in India. ஒரு கால கட்டத்தில சிகப்பு நிற முக்கோண வடிவ தலைகீழ் சின்னத்தை சுவர்களிலும், பேருந்துகளிலும் பார்த்திருப்போம். அதற்கான வாசகமாக நாமிருவர், நமக்கிருவர் என்றும் பின்னாளில் ஒருவர் என்றும் சுருங்கியது.

இந்த நாற்பது ஆண்டு கால நடையில் தென்னக மாநிலங்கள் மிகத் தீவிரமாக பின்பற்றி, வடக்கு மாநிலங்களோட ஒப்பீடும் பொழுது உண்மையாகவே ஒரு பெண்ணிற்கு சராசரியாக 2 குழந்தைகள் என்ற அளவிற்கு வந்து விட்டோம்.

ஆனால், வட மாநிலங்களில் அது இன்னமும் 4 குழந்தைகளை கொண்டதாகவே இருக்கிறது. அதனால், தென்மாநிலங்கள் இழந்து நிற்பது நிதி ஒதுக்கீட்டில் பெரும் ஓட்டை. அடைய வேண்டியதை அடைந்து கொள்வதில் சுணக்கம்.

இப்பொழுது எது என்னை இதனை எழுத வைத்தது? அன்மையில் நான் கண்ணுரும், கேள்வியுறும் விசயங்கள், எனக்கு தெரிந்தவர்களின் குடும்பங்களிலேயே ஒரு பிள்ளையோடு நிறுத்திக் கொண்டவர்களின் கடைசி காலங்களில், அந்த ஒரு பிள்ளையும் வெளி நாட்டிற்கு எங்காவது செல்ல நேர்ந்து சிக்கிக் கொண்டால், அந்த பெற்றோர்களுக்கு நிகழும் இன்னல்களை பார்த்ததாலே இதனை எழுதத் தூண்டியது.

ஒன்றே போதுமென்று நிறுத்திக் கொள்கிறார்களே அவர்களின் மன வலிமைக்கு நமது மத்திய அரசு கொடுக்கும் நற்சான்றிதழ் என்னத் தெரியுமா? நமக்கு இந்தக் குடும்ப கட்டுப்பாட்டிற்கென வரவேண்டிய உபரி நிதியை பிடித்து வைத்துக் கொண்டதுதான். அது எங்கே போகிறது என்றால் அரசாங்க கனவை எட்டி அனைவருக்கும் ஒரு டீசண்டான வாழ்வுச் சூழலை ஈட்டிக் கொடுப்பதிலிருந்து பின்தங்கி இருக்க நேரிடும் கேட்டில் நிறுத்தி வைக்கிறது.

சொன்ன பேச்சை கேட்டு வளர்ந்து நிற்கும் பிள்ளைக்கு கொடுத்த உறுதியை நிறைவேற்றி, ஊக்குவித்து அடுத்த பிள்ளையையும் ஆர்வத்துடன் அந்தப் பாதையில் வளர உதவுவீர்களா அல்லது சொல்லுப் பேச்சை கேட்டதால் தண்டீப்பீர்களா?

சரி, கீழே இணைத்துள்ள பதிவையும் வாசிங்க, ரொம்ப எளிமையா வடக்கத்தியர்களுக்கும், தென்னியந்திர்களுக்குமான அப்பம் பிச்சிக் கொடுப்பதில் எப்படி மத்திய அரசு கையாள்கிறது என்பதை, குடும்பக் கதை மாதிரி சொல்லி புரிய வைச்சிருப்பாங்க... 

••••••©©©•••••••

மகனே தென்னவா, என் பிள்ளைகள் உங்கள் இருவரையும் ஒன்று போலவே படிக்க வைத்தேன்.

நீ படிப்பில் சிறந்து விளங்கினாய்.பட்டங்கள் பெற்றாய்.பார்ப்போர் பொறாமைப்படும் பணி,பதவிகள் என்று உச்சம் தொட்டாய்.நல்ல வருமானம் திட்டமிட்ட வாழ்வு.அளவோடு இரு குழந்தைகள் அதனால் அளவில்லா மகிழ்ச்சி.


உன் அண்ணன் மூத்தவன் வடமாக்கானை நினைத்து பார்க்கிறேன்.அவனுக்கு படிப்பு துளியும் ஏறவில்லை.அதனால் ஒழுங்கான வேலை கிடைக்கவில்லை.போதிய வருமானமின்றி வாய்க்கும் வயிற்றுக்கும் அல்லாடுகிறான். போதாக்குறைக்கு வெளியில் தான் வேலையில்லை என்று வீட்டில் வத வதவென்று ஒன்பது பிள்ளைகளை வேறு பெற்று போட்டுவிட்டான்.தரித்திரம் அவன் வீட்டில் தாண்டவமாடுகிறது.

என்ன இருந்தாலும் அவன் உன் உடன்பிறந்தான் இல்லையா?அவனும் அவன் பிள்ளைகளும் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் உறங்க உதவி செய்ய வேண்டியது உன் கடமையல்லவா? பண்டிகை காலங்களில் பரதேசி போல் அல்லாது குடும்பத்தோடு அவன் நல்ல துணி உடுத்துவதும் நீ செய்யும் உதவியில் அல்லவா இருக்கிறது?

ஆகையினால் நான் பெற்ற மகனே உன்னை உரிமையோடு இரண்டு விஷயங்கள் கேட்கிறேன்.

முதலாவது,உன் வருமானத்தில் முக்கால்வாசியை அவன் வசம் ஒப்படைத்து விடு.ஏனென்றால் அவன் உன்னை விட ஏழு பிள்ளைகள் அதிகம் பெற்ற உன் அண்ணன்.

இரண்டாவது நாம் வெளியே செல்லும்போது சப்பாத்தி சாப்பிட வேண்டுமா? இட்லி,தோசை சாப்பிட வேண்டுமா? என்பதையும்,சைவம் சாப்பிடலாமா அல்லது ஆட்டுக்கறி,மாட்டுக்கறி உள்ளிட்ட அசைவம் சாப்பிடலாமா என்பதையும், சினிமாவுக்கு சென்றால் தமிழ் சினிமாவா அல்லது ஹிந்தி சினிமாவா என்பதையும் உன் அண்ணன் வடமாக்கானே முடிவு செய்யட்டும்.எண்ணிக்கையில்   நாங்கள் அதிகம் அல்லவா? ஒன்பது பிள்ளைகள் தம்பதி இருவரோடு என்னையும் சேர்த்தால் பன்னிரண்டு பேராகிவிடுகிறோம்.ஆனால் நீங்களோ இரண்டு பிள்ளைகள் மனைவியோடு நால்வர் தானே? என்ன நான் சொல்வது?

என் அருமை மகனே தென்னவா, படித்தவன்,உலகம் முழுதும் சுற்றி பலவற்றையும் கற்று தேர்ந்தவன்,கை நிறைய சம்பாதிக்கறவன் என்ற இறுமாப்பில் என் வார்த்தையை மீறி உன் அண்ணனை,என்னை அவமதித்து விடாதே.அது நம் கூட்டு குடும்பத்திற்கு மிகப்பெரிய கேவலத்தை தேடித்தரும் என்பதை அறியாதவனா நீ?

கருப்பு வெள்ளை காலத்தில் கூட இப்படி ஒரு சென்டிமெண்ட் வசனத்தை அப்பா ரங்காராவ் பேசினால் மகன் சிவாஜியோ,ஜெமினியோ, ஏவிஎம் ராஜனோ கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

MR ராதா பாணியில் சுத்த நான்சென்ஸ் என்று உதறித்தள்ளிவிட்டு தனிக்குடித்தனம் போய் விடுவார்கள்.

தமிழ்நாட்டு விஷயத்தில் மத்திய ஒன்றிய அரசு இப்படித்தான் நடந்து கொள்கிறது.நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வருகிறேன் இரண்டையும் 

கலந்து ஊதி ஊதி சாப்பிடலாம் என்று 

நம் வளங்கள் எப்படி கொள்ளையடிக்கப்படுகிறது?

நாசகார திட்டங்கள் ஏன் இங்கு வலிந்து திணிக்கப்படுகின்றன?

கல்வியிலும்,மருத்துவத்திலும் முன்னேறிய மாநிலம் இப்போது ஏன் திட்டமிட்டு காயடிக்கப்படுகிறது?

உணர்வோமா? தெளிவோமா?

~ FaceBook via  யவன குமாரன்

Wednesday, April 14, 2021

தமிழ் புத்தாண்டு தை மாதமா, சித்திரையா? Know Your Tamil New Year!

 தமிழ்ப்புத்தாண்டு தை மாதமா? சித்திரை மாதமா? 

ஒருமுறை நாரதர், 'கடவுள்' கிருஷ்ணரைப் பார்த்து, "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். 

அதற்குக் கிருஷ்ணர், "நான் உடன் இல்லாமல், வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தாராம்.

ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றாராம்.

கிருஷ்ணர் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம் . பின் 'கடவுள்' கிருஷ்ணருடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு , அறுபது மகன்களைப் பெற்றாராம். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்களாம்.

இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்களாம். இதுதான் சித்திரையை புத்தாண்டு என்று சொல்வதற்கு சொல்லப்படும் புராணக்கதை. 

அப்படியாகக் கிருஷ்ணர் நாரதரை 35 வது ஆண்டில் கூடிப் பெற்ற பிள்ளைதான்  இன்று பிறந்த பிலவ ஆண்டு. இந்தக் கதைக்கு ஆதாரம் எது?

சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழ் பண்டிதராகப் பணியாற்றிய ஆ.சிங்காரவேலு முதலியாரால் தொகுக்கப்பட்டு, இராமநாதபுரம் சேதுபதி பரம்பரையில் வந்த பாண்டித்துரை தேவர் உதவியால் 1910 வெளியிடப்பட்ட நூல் அபிதான சிந்தாமணி.

அபிதான சிந்தாமணி நூலின் 1392 ம் பக்கத்தில் தான், வருடப்பிறப்பு குறித்த, மேற்கூறப்பட்ட இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. 

60 பெயர்களில் பிரபவ தொடங்கி அட்சய வரை எதுவும் தமிழ் பெயர் இல்லை.

1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு 17.சுபாணு 18. தாரண 19. பார்த்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீலக 43. செமிய 44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தாத்திரி 54. ரெத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய.


சித்திரையை ஆண்டின் தொடக்கமாக கருதுபவர்கள் இதைக் கொண்டாடிவிட்டுப் போவதில் பிரச்சனையில்லை. உலகில் பலபகுதிகளில் பலவிதமான ஆண்டு தொடக்கங்கள் கொண்டாடப்பட்டே வருகிறது. இதை தமிழ் புத்தாண்டு என்று சொல்வதில் தான் பிரச்சனை எழுகிறது.

எனவே தான் தமிழறிஞர்கள் பலகாலங்களில் கூடி தொடர் விவாதங்கள் நடத்தி, ஆய்வு செய்து, தை மாதமே தமிழ்ப்புத்தாண்டு என அறிவித்தார்கள். தமிழறிஞர்கள் யார்?

01. மறைமலை அடிகளார் (1921)

02. தேவநேயப் பாவாணர்

03. பெருஞ்சித்திரனார்

04. பேராசிரியர் கா.நமசிவாயர்

05. இ.மு. சுப்பிரமணியனார்

06. மு.வரதராசனார்

07. இறைக்குருவனார்

08. வ. வேம்பையனார்

09. பேராசிரியர் தமிழண்ணல்

10. வெங்காலூர் குணா

11. கதிர். தமிழ்வாணனார்

12. சின்னப்பத்தமிழர்

13. கி.ஆ.பெ. விசுவநாதர்

14. திரு.வி.க

15. பாரதிதாசனார்

16. கா.சுப்பிரமணியனார்

17. ந.மு.வேங்கடசாமியார்

18. சோமசுந்தர் பாரதியார்

19. புலவர் குழுவினர் (1971)


மலையகத்தில்...

01. கோ.சாரங்கபாணியார்

02. சா.சி. குறிஞ்சிக்குமரனார்

03. அ.பு.திருமாலனார்

04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார்

05. கம்பார் கனிமொழி குப்புசாமி

06. மணி. வெள்ளையனார்

07. திருமாறன்

08. இரெ.சு.முத்தையா

09. இரா. திருமாவளவனார்

10. இர. திருச்செல்வனார்

இவர்களோடு 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கூடி விவாதித்து இதை ஆரிய திணிப்பு என முடிவு செய்தனர். எனவே சித்திரை வருடப்பிறப்பினை விடுத்து தை முதல் நாளே தமிழாண்டின் தொக்கம் என்றார்கள். தை தொடக்கம் என்பதற்கான ஆய்வு என்ன? 

உச்சபட்சக் குரலெடுத்து பாவேந்தர் பாரதிதாசன் பாடினார்.

நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு

அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே

அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழனுக்கு

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

என்றார்.

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாள் என்பதை ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள். 

1.வைகறை

2.காலை

3.நண்பகல்

4.எற்பாடு

5.மாலை

6.யாமம்

ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.

(1 நாழிகை - 24 நிமிடங்கள்

60 நாழிகை - 1440 நிமிடங்கள்

இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்

1440 நிமிடங்கள்  என்பது

24 மணித்தியாலங்கள்

24 மணித்தியாலங்கள் -1 நாள்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள்.

ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ,  ஆண்டுக்குரிய தமது வாழ்வை, *ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்*.

1. இளவேனில் - (தை---மாசி)

2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)

3. கார் - (வைகாசி - ஆனி)

4. கூதிர் - (ஆடி - ஆவணி)

5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)

6. பின்பனி (கார்த்திகை - மார்கழி)

மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை-  வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.

சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள். 

காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகிறான். 

பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.

தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். சித்திரையை கொண்டாடுவதில் பிரச்சனையில்லை. ஆனால் அது தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாட இயலாது.

அபிதான சிந்தாணி கூறுவதன் படி,

நாரதரும், கிருஷ்ணரும் கூடிப்பெற்ற 60 பிள்ளைகளில், இன்று தொடங்கியிருக்கிற 35 வது ஆண்டுக்கு பிலவ என்று பெயர்.

பிலவ என்ற வடமொழிச் சொல்லுக்கு கீழறை என்று பொருள். கீழறை என்றால் பொந்து என்போமே அதுதான்.

அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துகள்.

by Surya Xavier

🔹️🔶️🔹️🔶️🔹️🔶️🔹️

தமிழ்ப் புத்தாண்டு என்றால்...

*தெலுங்கில் எப்படி விளம்பி இருக்கு?

*கன்னடத்தில் எப்படி விளம்பி இருக்கு?

*ஹிந்தியில் எப்படி விளம்பி இருக்கு?

*இதன் மூலக் களவாணி, Sanskrit-இல் ஏன் விளம்பி/ विलंबी இருக்கு?

இது विलंबी = தமிழா?

இதுக்கு, புத்தாண்டு வாழ்த்துக்கள் வேற ஒரு கேடா?

🔻 அடுத்த புத்தாண்டு கொண்டாடப் போகும் 12 ராசி அன்பர்களே...

இதோ, புத்தாண்டின் Sanskrit பொருள்!

#சார்வரி / शार्वरी = "பலாத்கார எழுச்சி" (இதை கணிச்சி தான் ரஜினி எழுச்சி உண்டாக்க சொன்னாரா)

பயப்படாதீங்க!:)

அடுத்த வருசம் நல்ல பேரு அமையும்!

👉🏿 பிலவ / प्लव = "கீழ் ஓட்டை"

காமுகர்கள் எழுதிய சாஸ்திரங்களை..

புனிதம் என பூஜித்துக் கொண்டே இருங்கள்🤦‍♂️

வருஷப் பிறப்பு!

60 ஹிந்து (Sanskrit) வருஷங்களில்..!

👉🏿 பிராமண வருஷங்கள்= 15

👉🏿 க்ஷத்ரிய வருஷங்கள்= 15

👉🏿 வைஸ்ய வருஷங்கள்= 15

👉🏿சூத்திர வருஷங்கள்= 15

இவற்றில், சூத்திர வருஷங்களுக்கு, இழி பெயர்களே!

🔹️விகாரி= அசிங்கமான

🔹️சார்வரி= பலாத்கார எழுச்சி

🔹️பிலவ= கீழ் ஓட்டை

🔹️குரோதி= வன்மம் பிடித்தவள்

🔹️சார்வரி/ शार्वरी = தமிழ்ப் புத்தாண்டு எனில்..

*எப்படிச் சிங்களத்தில் அதே பெயர்?

*எப்படித் தெலுங்கில் அதே பெயர்?

*எப்படி ராஜஸ்தானத்தில் அதே பெயர்?

இந்த ஒரு கேள்வியைக் கேளுங்கோ!

பிறகு தெரியும்...

சார்வரி= தமிழ்ப் புத்தாண்டா? சம்ஸ்கிருதப் புத்தாண்டா? என்று!

சம்ஸ்கிருதம் தெரியுமா?

இல்லையேல், வாய்மூடி இருங்கள்!

விகாரி/ विकारि = அசிங்கம்

'எழில் மாறல்' -ன்னு தூய தமிழில் எழுதினா

அழகு போயிருச்சி-ன்னு தான்யா பொருள்!

அசிங்கம் இல்லைன்னு ஆயிருமா?

சார்வரி/ शार्वरी = வீறி எழல்

என்னா எழல்? எது வீறி எழல்?

பலாத்கார எழுச்சி இல்லைன்னு ஆயிருமா??

by

 Sirpi Rajan

Friday, April 09, 2021

தம்பீகளே இழப்பதற்கு இங்கே ஏராளமிருக்கிறது!


ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னா மெய் ஆகிடுமா? காமராசர் காலத்திற்கு பிறகு வளர்ச்சியே இங்கே இல்லையென்றால் எதனைச் சுரண்ட கட்டி எழுப்பிய அரசு கல்வி நிறுவனங்களை பட்டப் பகலில் ஜோப்படி செய்ய முயற்சிக்க வேண்டும்? ஒரு மாநில அரசே அந்த ஊர் மக்களின் உழைப்பில் உருவாக்கிய மருத்துவக் கல்லூரிகளில் எது போன்ற தேர்வுகளை நடத்தி மாணவர் சேர்க்கை செய்ய வேண்டுமென்ற உரிமையில் தலையை நுழைக்க வேண்டும்?
அரசாட்சி நடத்தவே தகுதியற்ற ஒருவருக்கு சரியான நேரத்தில் கோர்ட் தீர்ப்புகளை வழங்காமல் தள்ளிப் போட்டு, தேர்தலில் வெற்றியை வழங்கி, பிறகு அவரது மரணத்திற்கு பின்னாக, மீன் வலை போட்டு அள்ளியது போல அரசியல் ஞானமற்ற, அறமற்ற, எதிர்கால திட்டங்கள் ஏதுமற்ற பல சில்லுண்டித் திருடர்களை கொத்தாக வைத்துக் கொண்டு திரைமறைவு அரசியல் செய்வதா? அரசியல் அறம், மரபு?
இதனைச் செய்வதற்கு சிறிதும் அஞ்சாதவர்கள் மக்களாட்சியை எந்த குழிக்குள்ளும் தள்ளி புதைக்க மாட்டார்கள் என்பதில் என்ன சந்தேகம் இருந்திட முடியும்? ஒரு மாநிலம் கிடைத்த வளத்தைக் கொண்டு தன்னாலான அளவு வளர்ச்சியைக் காட்டி பிற மாநிலங்களோடு ஒப்பிடும் வாக்கில் சற்றே உயரத்தை காட்டியிருக்கிறது என்றால், அதனை மாடலாகக் கொண்டு தாங்கள் ஆளும் மாநிலங்களில் அவற்றை பின்பற்றி உயர்த்த நினைப்பார்களா அல்லது பிற பின் தங்கிய மாநிலங்களின் வரிசையில் அதனையும் வைத்து அழகு பார்க்க எண்ணுவார்களா?
பொய்களை பரப்பியே ஒரு சிறந்த நிர்வாகத்தை வழங்கிட முடியும் என்று யார் இவர்களுக்கு பாடம் எடுத்தது? வளர்ச்சி என்பது தன்னைச் சுற்றி நிகழ் காலத்தில் நாம் அனுபவிக்கும் வசதிகளைக் கொண்டு கண்டுணரும் ஒரு விடயம். அது கல்வி வசதியாகட்டும், மருத்துவ, சுகாதார வசதியாகட்டும் எல்லாவற்றையுமே சிறிது சிறிதாக கடினமான உழைப்பின் பெயரில் ஈட்டிக் கொள்வது. அதற்கு பல வருடங்கள் பிடிக்கும். பணத்தைக் கொட்டி ஊடகங்களில் போலியான பரப்புரைகளின் மூலம் அடைவது கிடையாது.
ஒரு நாட்டை கட்டியெழுப்பும் பொழுது, அது வரையிலும் சமூக சமநீதியற்ற ஒரு சமூதாயத்தில் அடையப்படாத விடயங்களான அணைகள், பள்ளிகள், மருத்துவம் ஏனைய வசதிகளுக்கென அடித்தளம் போடுவது என்பது ஓர் இயல்பான விடயம். அதுவும் போர்க்கால அடிப்படையில் சில துறைகள் பீரிட்டு வளர்த்தே எடுக்கப்பட வேண்டியதாக இருக்கும்.
உதாரணமாக கோயபல்ஸ் முறையில் தொடர்ந்து பரப்பப்படும் காமராசர் காலத்து பொற்கால துறைகளான அணைகட்டுகள் மற்றும் பள்ளிகள் திறப்பு. அதற்குப் பிறகு இத்துறைகள் எந்த மாற்றத்தையும் அடையவே இல்லை போன்ற ஒரு பிம்பத்தை கட்டி எழுப்புகிறார்கள். இது எத்தனை வடிகட்டிய முட்டாள்தனமான வாதம்? ஒரு மாநிலத்திற்கு முக்கிய அணைகட்டுக்களாக எத்தனை அணைக்கட்டுக்கள் தேவைப்படும். கிடைக்கும் நில அமைப்பு, வன வளம் அதனில் பெறப்படும் நீர் வரத்து, அந்த பூமியத்தை சுற்றியுள்ள மக்களின் வாழ்விடமென்று எத்தனையோ காரணிகளைக் கொண்டே ஒரு முக்கியமான அணைக்கட்டிற்கான அடித்தளம் அமைகிறது.
போகிற போக்கில் நினைத்த இடத்திலெல்லாம் அணைக்கட்டுக்கள் அமைத்து விட முடியுமா என்ன? இது எது போன்ற வாதம்? தெரிந்துதான் பேசுகிறோமா அல்லது மக்கள் அனைவரும் முட்டாள்கள், அடிப்படை அறிவே அற்றவர்கள் என்ற முறையில் பொய்யிலே அரசியல் அறமற்று தன் உடல் வளர்க்க பேசும் பேச்சா?
அந்த கால கட்டத்திற்கு பிறகு எந்த அரசும் எதுவுமே செய்யாமல் தான் நாம் உயிர் வாழ்ந்து, கல்வியறிவு பெற்று இன்று இப்படி வீண் வம்படித்து பிளவுகளை உருவாக்கி நம்முடைய வளங்களை வேற்று மாநிலத்து மக்கள் சூழ்ச்சியின் பால் பிடிக்க வழி கோலுகிறோமா?
ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன் அதில் எந்தளவிற்கு உண்மைத் தன்மை இருக்கிறது என்று அறிந்து கொள்ள குறைந்த பட்ச உழைப்பையாவது போட வேண்டாமா?
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க இப்பொழுது எந்த அரசியல் அறமுமற்று பொய் பிரச்சாரங்களை பரப்புவதற்கே பெரிய அளவில் தங்களுடைய நேரத்தையும், பணத்தையும் போட்டு அரசியல் வளர்க்கும் சூழலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழலிற்கு நாம் நகர்ந்திருக்கிறோம்.
கிடைத்த ஐந்து வருடங்களில் உங்களுடைய நாற்பது காலத்து கடின உழைப்பின் பெயரில் கட்டியெழுப்பிய, கோரிப் பெற்ற பல உரிமைகள் திரைக்கு பின்பாகவும், நம்முடைய கண்களுக்கு முன்பாகவும் கோமாளி அரசைக் கொண்டு பிடிங்கிக் கொண்டு செல்வதைக் காண்கிறோம்.
உணர்ச்சி வயத்தில் கூட்டத்தோடு சூழ்ச்சிக்கு இரையாகி பின்னால் திரும்பிப் பார்க்கும் பொழுது, இழந்ததை மீட்டெடுக்கவே மீண்டும் பல பத்தாண்டுகள் தேவைப்படலாம். முதலில் எதிரியை அடையாளம் காணுங்கள். யாரை அமர வைத்தால் தவறுகளை திருத்திக் கொண்டு சுயமான வளர்ச்சிக்கு நம்மை இட்டுச் செல்வார்களோ அவர்களை ஆதரியுங்கள். பிறகு உங்களுடைய பங்காளிச் சண்டையை வைத்துக் கொள்ளலாம்.

Friday, February 26, 2021

கமல் அரசியல் அபத்தங்கள் - சக்கர நாற்காலி/கிராமசபை கூட்டம்

சக்கர நாற்காலியில் அமர்ந்து சொந்திரவு தரமாட்டேன்!

லெட் மீ கெஸ், கமல் தட்டை தூக்கிட்டு தளபதிகிட்ட போயிருக்கணும். அவரு தம்பி நீ அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டே, அப்படி ஓரமா போயி விளையாடுன்னு சொல்லி அனுப்பிட்டார். மிதி தாங்க முடியாம, வெளியில வந்து உலக்கை தன்னோட முன்னோர்கள் வழியில் புத்தியை காட்டி இருக்கும்.

இவனுங்க பூராப்பயலும் காரிய வாதிகள். காரியம் ஆக என்ன வேணா செய்வானுங்க. காலப் பிடிச்சு அதில இருந்து ஒரு படி மேலே பொயிட்டான்னா, அடுத்தப் படிக்கான ஆளை பிடிச்சிருவான், ஏறிவர உதவினவனை எள்ளவு கூட மதிக்கமாட்டானுங்க. இவன மாதிரி ஆளுங்களுக்காக கலைஞர் "#பலிபீடம்_நோக்கி"ன்னு ஒரு சிறிய நூல் எழுதி வைச்சிருக்கார்.
வயசாகி இவனோட மூட்டு கழண்டு போகும் போது தானே கழுத்தை நெரிச்சிக்கிட்டு செத்துடுவான் போல. இவனுக்கெல்லாம் மரியாதை ஒரு கேடு!
Art Courtesy: Gokula Varadharajan

பி.கு: மின்நூல் வேண்டும் என்பவர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை விட்டுச் செல்லவும். வெறும் 30 பக்கங்களுக்கும் குறைவான நூல். நன்றி!

@@@@@****@@@@@

நான் தான் கிராமசபை கூட்டம் கண்டுபிடித்தேன்:

கமல் எல்லாம் அரசியல் பழகலேன்னு இப்போ யார் அழுதா? இப்போ என்ன நடந்திட்டு இருக்கு இவரு என்ன பேசிகிட்டு அரசியல் செய்றோம்னு பேர் போட்டுகிட்டு திரியறார்?

ஆட்சியில இல்லாத ஓர் எதிர் கட்சியை நோண்டுறதில உள்ள லாபம், தனக்கு சம்பளம் போடுற மத்திய அரசை நேரடியா விமர்சனம் பண்ற துணிச்சலும் நேர்மையும் இல்லையே, ஏன்? ஏன் அழுத்தமா கிள்ளி வைச்சாத்தான் அடுத்த நகர்விற்கான பேமெண்ட்னு சொல்லிட்டாங்களா?  

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடத்தப்பெற்றிருந்தா இந்த கிராமக் கூடுதல்கள் தேவையா? முறைபடுத்தப்பட்ட அரசு உள்ளாட்சி கட்டமைப்பு 1000 பேர் வாழும் ஒரு வார்டிலிருந்து 8000 பேர் வாழும் ஊராட்சி வரைக்கும் வீதி பை வீதியாக சென்று பிரச்சினைகளை கண்டறிந்து கொண்டு வந்து சேர்த்து விடும் அமைப்பில்தானே இருந்தது. ஏன் தேர்தல் நடத்தலேன்னு கேக்கணும். யார் செஞ்சா என்ன வேலையானா சரித்தானே? இதிலென்ன போட்டி வேண்டிக்கிடக்கு. அதுவும் கை கறைபடாத ஒரு சொக்கத் தங்கமான நீங்க இப்படி பேருக்கு ஆசைபடலாமா?

அப்படி எடுத்துக்கிட்டு போறதை விட்டுப்போட்டு, என்னமோ தன்னையே தேவ தூதரா கருதிகிட்டு தானே கிராம சபைகளை இந்தியக் கிராமங்களில் அறிமுகப்படுத்தியது போல பேசுவதை எதனில் சேர்ப்பது...

அப்போ கீழே புகைப்படத்தில் உள்ள, இது போன்ற கூட்டங்களை நடத்தியதையெல்லாம் என்ன பெயர், செயலென்று பெயரிடுவது மிஸ்டர் மய்யம். 😂🙄😏

முதல் கோணல் முற்றும் கோணல்! PMK's Election Stunt

 நானும் அந்த ”பாமக சின்னய்யா” சம்பவத்தை பார்த்தேன். என்ன சொல்லுறதுன்னே தெரியல! இப்படி ஒரு (ஜாதிக்) கட்சியை கருத்தரிச்சு, அதை அடை காத்து தன் சமூக மக்களுக்காகவாவது சிறுக ஆசைப்பட்டு பெரும் வாழ்வு வாழ்ந்திருக்கலாம். நீங்க என்னதான் அழி ரப்பர் வைச்சு அழிச்சு நாங்க ஜாதிக் கட்சி இல்லன்னு இனிமே நிரூபிக்க நின்னாலும் எடுபடாது. தமிழக தமிழர்களையே காப்பாத்தறேன் அளவிற்கெல்லாம் யோசிச்சு நீங்க இப்படி இறங்கி இருக்க வேண்டாம். 

யாரையோ நம்பி இப்படி இத்தனை ஆபத்தான ஒரு சூறாவளியில சிக்கிச் சின்னாபின்னமாகிட்டீங்களே.

உங்க உழைப்பெல்லாம் இப்படி அவசரப்பட்டு இந்த கால கட்டத்தில அதுவும் தமிழகம் கொந்தளிச்சு போயி கிடக்கிற நேரத்தில போயி, அவிங்களோட சேர்ந்து உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணான்னு சோலியை முடிச்சிக்கிட்டீங்க.

சரி போறதுதான் போறேன் கொஞ்சம் டேமேஜ் செஞ்சிப்புட்டு போவோம்னு...

திராவிட நாடு கோரிக்கையை நிறைவேற்றினாங்களா, அதுக்காக எத்தனை பேரு சுடுகாடு போனாங்கன்னு- சம்பந்தா சம்பந்தமில்லாம எந்த கால கட்டத்தில இருந்த விசயத்தை எந்த கால கட்டத்தோட இணைச்சு டேக் டைவர்ஷன் போட்டு கோர்த்து விடப் பார்த்தீங்க.

அண்ணா எந்த காரணங்களுக்காக அதை படமெடுக்க விட்டர், பின்பு சுருட்டி ஓர் ஓரத்தில வைச்சார்னு ஏன் எங்கயும் படிக்கலயா? ஏன் ஒரு புரட்டு வரலாற்றை  தாங்களே வாசித்து அறிந்து கொள்ள விருப்பமில்லாத ஒரு கூட்டத்திற்கு ஊட்ட நிக்கிறீங்க.

நாம வாழற காலம் என்ன பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் உயிரைப் பணயம் வைத்து போராடி இயக்கம் வளர்த்த காலமா? என்ன பெரிசா தியாங்களை செஞ்சு இன்றைக்கு இப்படி நாமல்லாம் வெள்ளையும் சொள்ளையுமா ஃபைவ் ஸ்டார் விடுதியில பத்திரிக்கை சந்திப்பு நடத்துர அளவிற்கு வளர்ந்திருக்கோம்.

எத்தனை ஆண்டுகள் நமக்கு முன்னோடிகளாக இருந்தவர்கள் சிறைச்சாலைகளில் தங்களுடைய பொன்னான காலத்தை கழித்திருப்பார்கள். எத்தனை ஹார்ட்கோர் போராட்டங்களை முன்னின்று வழி நடத்தி இருப்பார்கள். நமக்கு ஒரு மூன்று தேர்தலுக்காக உழைத்த உழைப்பு பலன் கொடுக்க வில்லை என்றவுடன் இத்தனை ஆயாசத்துடன் சாணக்கியன் ஆகுகிறேன் என்று சகுனி வேலை செய்ய தயார் ஆகிவிட்டீர்களே நீங்கள். சரியா?

திராவிட நாடேதான் வேண்டுமென்றால் மற்றுமொரு ஈழத்தை இங்கே அவர் கொண்டு வந்திருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? மாநில சுய ஆட்சிக்கான அழுத்தத்தை கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ள எடுத்த வியூகத்தை, நடக்கவே முடியாத விசயத்திற்காக எத்தனை பேர் சுடுகாடு போனார்கள் என்று கேக்குறீர்கள். எது மாதிரியான தர்க்கமிது? 

அன்று அண்ணா சாதுர்யமாக காய் நகர்த்த வில்லை என்றால் இன்றைக்கு உங்களுக்கு இந்த மேடையே கிடையாது என்பதை உணருங்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கக் கூடாது. நாமதான் முழுந்துறோம்னா கூடவே இரண்டு பேரை சேர்த்து கூட்டிட்டு போவோம்னு நினைக்கக் கூடாது. Come up with some other valid argument, the one you uttered is utter nonsense!

பி.கு: இந்தப் பதிவு 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போது எழுதியது.

கமலஹாசன் சிறுமையின் எச்சம்: Wheelchair Speech

கமலோட சக்கர நாற்காலி ஏகடியம் அவருக்கேயான மிக இயல்பான வளர்ப்பிற்கு பின்னான சிறுமையின் எச்சம். அவரோட நிதானத்தையும் தாண்டி இப்படியான வன்மம் பொங்கி வழிகிறது என்றால், இன்னும் சொற்களாக பேசப்படாத, வக்கிர எண்ணங்கள் எவ்வளவு இருக்கக் கூடும்?

அம்பேத்கர், காந்தி, பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் எதனை உணர்ந்து கொண்டதால் சாதரணர்களைக் காட்டிலும் பன்மடங்கு உழைக்க தழைப்பட்டார்கள்? மரணித்த நொடிகளுக்கு முன்பு கூட அய்யோ செய்ய இன்னும் இவ்வளவு இருக்கும் போது, பாதியிலேயே விட்டுவிட்டுச் செல்லும் படி ஆகிவிட்டதே என்ற வேதனையே அவர்களிடையே தங்கியிருக்கக் கூடும்.
பெரியாரும், கலைஞரும் அந்தப் பரிதவிப்பை தனது உடல் உபாதைகளைப் புறந்து தள்ளி களத்தில் நின்றதே அதற்குச் சான்று. ஒரு தனி மனித வளர்த்தெடுப்பு என்பது, எத்தனை பிரயத்தனங்களை உள்ளடக்கியது? தொடர் பயணம், சமூக உள்வாங்கல், அது தொடர்பான ஊடாடல்கள், போராட்டக் களங்கள், வரலாற்று வாசிப்பு, இலக்கிய அறிமுகங்கள், அது தொடர்பான எழுத்துப் பணி என்று எத்தனை அனுபவம் அவர்களால் சேகரிக்கப்பட்டிருக்கும். அந்த நிறை மனிதர்களின் சமூகம் சார்ந்த ஆழ்ந்த புலமையை, தான் நேசிக்கும் மக்களோட பகிர்ந்து கொள்ள ஒவ்வொரு மணித்துளிகளையும் செலவு செய்திருக்கிறார்கள் என்றால், எத்தனை ஆழ்ந்த மனித நேய passion இருந்திருக்க வேண்டும்.
இத்தனை அறிவும் ஒருவர் மரணிக்கும் போது அவரோடு சேர்ந்தே பேசப்படாத,
வழங்கப்படாத பகுதிகளும் மறைந்து விடுகிறது. காலத்தின் நிலையின்மை உணர்ந்தவன் எப்படி அதனை வீணடிப்பான்? எனவே, ஒரு மனிதரின் நினைவு தவறும் நொடிகளுக்கு முன்பு வரை கூட, ஏரணத்தோடு விசயங்களை தொடர்பு படுத்தி பேசும் திறன் இருக்கும் வரையிலும் அந்த மூளை அந்தச் சமூகத்திற்கு தேவைதான்.
சக்கர நாற்காலியில் அமர்ந்த படியே ஸ்டீவன் ஹாகின்ஸ் போன்ற அறிவியலாளர்களின் வாழ்நாள் சாதனைகளையும் அறிந்தவரே கமல். புரியாமல் எல்லாம் கலைஞர் பொருட்டு பேசி இருப்பார் என்று நான் நம்பத் தயாரில்லை. கமலையொத்த குடும்பங்களின் பேச்சு முழுக்க தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு யார் காரணம் என்று, குறுக்கி வந்தடைந்த புள்ளிதான் இந்தத் திராவிடத் தலைவர்கள். அவர்களின் சப்கான்ஸியஸ் மனம் எப்பொழுதும் இவர்களைச் சுற்றியே இயங்குகிறது.
கமல் பகடியாக பேசியது போல் மற்றுமொரு சிறுமைத் தனமே மோடியை வைத்து, கலைஞரின் இறுதி நாட்களில் அவர் தோளின் மீது கை வைத்து நலம் விசாரிப்பது போல, கலைஞரை திகிலூட்டுவதாக நினைத்து தங்களது வக்கிரப் பகுதியை அவர்கள் சொரிந்து கொண்டதும் என்பேன். அந்தப் புகைப்படத்தை சற்றே உள்வாங்கி ஆராய்பவர்களுக்கு புரியும், துரைமுருகன், கலைஞர் உடற்மொழியை கவனித்தல் பொருட்டு. ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது, ஏதாவது பேசி அது ஒரு மகிழ்வான தருணத்திற்கு இட்டுச் சென்றிருந்தால், அது மோடியின் தோள் தொடுதலுக்கான நட்பு உணர்ச்சி போல் வெளிப்பட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால், நான் இந்தச் சூழலை ஒரு திட்டமிட்ட எக்ஸ்ப்ரசனாகப் பார்க்கிறேன்.
கமலின் சக்கர நாற்காலி ஏகடியத்திற்கு இணையானதே மோடி குழாமின் தோள் தொடுதலும். இங்கு மறைமுகமாக இவர்கள் அனைவரையும் இயக்குவது சித்தாந்தச் சமரே!

Wednesday, February 24, 2021

சமூக ஊழலைப் பேசாத சகாயம்!

தமிழ்நாட்டிற்கான அடுத்த அன்னா ஹசாரேவை அனுப்பி இருக்கானுங்க. குழம்பிய குட்டையில் மீன் பிடிச்ச வரைக்கும் லாபம் என்பதே கணக்கு. இந்த மண்டகாசயம் அவ்வளவு நாணயஸ்தராக இருந்திருந்தால், தன் கண்ணுக்கு முன்னால் நடந்த ஒரு ஊழல் திட்டத்தை வைத்தே, பதவி விலகி அதனை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பேன் என்றல்லவா செய்திருக்க வேண்டும்?

அவ்வாறு இல்லாமல் அந்த அரசாங்கத்திடமிருந்தே இத்தனை ஆண்டுகள் சம்பளம் பெற்றுக் கொண்டு, தேர்தலுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பாக பதவி விலகி இப்படி "#பண_ஊழலே" இந்த #சமூகத்தின் ஏனைய பிரச்சினைகளுக்குமான #பிணி என்று வெற்று கோசம், கமலைப் போல செய்யப் போவது ஏன்?
👉🏿மதத்தை அரசியலோடு கலக்கிறார்களே அது ஊழல் கணக்கில் வராதா?
👉🏿கல்விக்கு செல்லக் கூடிய நிதியை, அனைவரும் கல்வி கற்கும் சூழலை கண்ணிற்கு புலப்படாத இடங்களிலெல்லாம் வைத்து கதவை அடைக்கிறார்களே அது ஊழலில் வராதா?
👉🏿தன் மாநிலத்திற்குள் இயங்கும் மக்கள் சேவை நிறுவனங்களிலெல்லாம் மொழி தெரியாத வெளி மாநிலத்தவர்களை வைத்து நிரைக்கிறார்களே அது ஊழலில் வராதா?
👉🏿மாநில மொழியை தவிர்த்து ஹிந்தி மொழியை உங்க துறைக்குள்ளாகவே திணிக்கிறார்களே அது ஊழலில் வராதா...
👉🏿மக்களாட்சியின் மாண்பையே குலைக்கும் விதமாக வெற்றிப்பெற்ற பிற கட்சி எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கிறார்களே அது ஊழலில் வராதா?

இவற்றையெல்லாம் யார் பேசுவது. இதெல்லாம் யாருடைய பிரச்சினைகள்?
சகயம், இதெல்லாம் எங்க பேசி ஆரம்பிங்க பார்ப்போம். நீங்க அரசியல் கட்சி தொடங்கிறீங்களா இல்லை டிட்டேரியல் கல்லூரி தொடங்கிறீங்களான்னு தெரிஞ்சிடும்.
ஏன்யா! கொடுத்த உத்தியோகத்தில நேர்மையா இருக்கிறது ஒரு தகுதியாய்யா இப்படி ஊரை ஏமாத்த? மனசாட்சின்னு ஒரு விசயம் இருந்தா இந்த நேரத்தில நீங்க இதை செய்ய மாட்டீர்?







ஏன் கலைஞர் கருணாநிதி வெறுக்கவைக்கப்பட்டார்?

 எப்போதுமே நமது மனது புறவயமான மயக்கத்தில் கட்டுண்டு கிடப்பதிலேயே பெரும் உவகை கொள்கிறது. அதற்கென காட்சிப் படுத்தலும், மாயவாத செயல்பாடுகளை காணும் போதும் நாம் வெகு எளிதாக அந்த சூழ்ச்சிகளுக்குள் விழுந்து விடுகிறோம். துப்பாக்கிச் சூடு நடத்திய, பொள்ளாச்சி கூட்டு வன்புணர்வுக்கு காரணமாகிய ஓர் ஆளுங்கட்சி, தேர்தல் கால ஸ்டண்டாக கெடா வெட்டி விருந்து வைத்தாலும், அந்த ஒரு வேளை உணவிற்குப் பின்னாக தாங்கள் இழந்த, இழக்கவிருக்கிற உரிமைகளை எண்ணிப் பார்க்காமல் கை அலம்புகிறோம்.

ஆனால், என்று நாம் ஒரு சமூகமாக மனிதர்கள் பொருட்டு தீர்க்கமான ஆராய்ச்சியின் பால் காரண காரியங்களை கண்டடைகிறோமோ, அன்று கடைசி நேர மாயவாத மயக்களுக்கு நாம் செவி சாய்க்க மாட்டோம்.
எப்படி இவ்வளவு கோமாளித்தனங்களை அரங்கேற்றிய படியே அதிமுக_வால் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் யாரால் அமரவைக்கப்பட்டு அழகு பார்க்கப்படுகிறது?
ஏன் கலைஞர் கருணாநிதி வெறுக்க வைக்கப்பட்டார்? யாரால் அது போன்ற ஒரு கருத்து, காட்சி கட்டமைக்கப்பட்டது, அவ்வாறு செய்வதற்குபின்னான லாபம் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்போ மேலே வாசிங்க!
🔹️🔹️🔹️🔹️🔹️
எனது முகநூல் பக்கத்திலும், பொதுவான விவாதங்களிலும்...
நீங்கள் கருணாநிதி நல்லவர், வல்லவர் என்கிறீர்கள், ஆனால் மக்கள் அவரை மீண்டும் தேர்ந்தெடுக்கவில்லையே...
நீங்கள் குறை கூறும், அதிமுகவைத் தானே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கின்றனர்!
ஏன் என்ற கேள்வியை முன் வைப்பார்கள்!!!
நியாயமான கேள்வி, அதற்கான பதிலும் நான் கூறிவிடுவேன்,
இருந்தாலும் ஏற்க மறுப்பார்கள், அது அவர்களது உரிமை என்று அடுத்து விவாதம் செய்ய மாட்டேன்!!!
ஏன் கலைஞரை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கவில்லை!!
காரணம்,
அதிகார பரவலை, பொருளாதார பரவலை, சாதிய ஏற்றத் தாழ்விண்மையை, மாநில உரிமைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த முயன்றார்!
1. நிலங்களை எல்லோருக்கும் பகிர்ந்தளித்தார்!
2. பேருந்துகளை எல்லோருக்கும் பொதுவாக்கினார்!
3. இடஒதுக்கீட்டை 40% (SC 15%+ BC25%) 48% உயர்த்தி எல்லோருக்கும் கல்வி மற்றும் அரசு வேலைகளை பொதுவாக்கி அதனை உறுதி படுத்தினார்!
4. குடிசை மாற்று வாரியம் மூலமாக, குடிசைகளில் கிடந்தவர்களை அண்ணா நகரில் அடுக்கு மாடிகளில் குடியமர்த்தினார்!
5. குடிசைகளில் வாழ்ந்த பறையர்கள், பள்ளர்கள் சமூக மக்களைப் மக்களைப் பார்த்து "அய்யோ பாவம்" என்று கூறி மகிழ்ந்த குடியானவர்களுக்கு முன்பு, அவர்களை ஓட்டு வீட்டில் வாழ வைத்தார்!
6. உயர்கல்வியை கிராமத்தில் உள்ளவர்களும் படிக்க ஏதுவாக, சென்னை பல்கலைக்கழகத்தை (Madras University) பிரித்து பல பல்கலைக்கழகங்கள் அமைத்து, நிறைய கல்லூரிகளை நிறுவினார்!
7. தாழ்த்தப்பட்டவர்கள் படிக்க ஏதுவாக விடுதிகளை கட்டி விட்டார்!
8. நகரத்தில் மட்டுமே இருந்த வசதிகளை கிராமப்புறங்களுக்கும் விரிவுபடுத்தி விட்டார்! அதனால் நகரத்திற்கு செலவு செய்ய நிதி குறைவாக இருந்தது!
9. பெற்றோர்கள் சொத்தில் பங்கு மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு என்று பெண்களுக்கு, அதிகாரத்தை அள்ளி வழங்கி விட்டார்! உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு என்று அரசியலில் பெண்களை முன்னிலை படுத்திவிட்டார்!
10. இந்தியாவிலேயே, உயர் சாதி மக்கள் மட்டுமே கோலோச்சிய நீதிமன்றத்தில், ஒரு பறையர் சமூகத்தைச் சேர்ந்தவரை நீதிபதியாக நியமனம் செய்தார்!
11. சாதிய படிகளில் கீழ் நிலையில் இருந்த கருணாநிதி முதலமைச்சராகி விட்டார்!
12. கட்சியின் மாவட்ட செயலாளர், மாவட்ட ஆட்சியருக்கு இணையானவர் என்று சுதந்திரம் கொடுத்து விட்டார்!
13. மாநில உரிமைகளை பெற, ராஜமன்னார் கமிட்டி அமைத்து, திருமதி இந்திரா அமைச்சரவையிலேயே அதனை சமர்ப்பித்தார்!
14. ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த ஊடகத்துறையில் (சினிமா, அச்சு) தனது ஆளுமையை செலுத்தினார்!
15. எல்லாவற்றுக்கும் மேலாக...
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டத்தை இயற்றி விட்டார்!
விளைவு...
ஊழல் குற்றச்சாட்டு, தனிமனித தாக்குதல்!!!
அதனைத் தொடர்ந்து கலைஞர் ஆட்சிக்கு வரவிடாமல் பார்த்து கொண்டனர்!
சரி, பயனடைந்த மக்கள்........
அவர்கள் பாவம், அறியாமையிலேயே இருப்பவர்கள்!!

Post- Thanks:
Kandasamy Mariyappan
Art Courtesy:
Gokula Varadharajan

Sunday, January 24, 2021

பெரியாரின் பொருளடக்கம்: Periyar In A Nutshell!

நீங்களும் மனிதர்களாகி கொஞ்சமே சிந்திக்க ஆரம்பித்து இதில் ஏதாவது ஒன்றை தொட்டுப் பேசினாலும், வெறுக்கப்படுவீர்கள்.

பெரியார் என்ற மனிதரின் உள்ளடக்கம். 👇
1. இடஒதுக்கீடு,
2. பெண்ணுரிமை,
3. கைம்பெண் மறுமணம், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு,
4. திருக்குறள் மாநாடு,
5. தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் எழுத்து சீரமைப்பு,
6. ஆங்கில மொழியின் அவசியம்,
7. மாநில உரிமைகள்,
8. சாதிய ஒழிப்பு,
9. சமூகநீதிக்காக கடைசி வரையிலும் பாடுபட்டது
10. சுயமரியாதை,
👉11. சனாதன கொள்கையை போட்டுடைத்தது,
12. ஹிந்தி மற்றும் சமஸ்கிருத எதிர்ப்பு.
இத்தனையும் இருக்கும் போது ஏன் பெரியார் "கடவுள் மறுப்பு. (#11)" மட்டுமே பேசினார்னு உருட்டுரானுங்க. அந்த அரசியல் புரிஞ்சிட்டா நீங்க வயசிக்கு வந்திட்டீர் என்று உணர்வீராக!

ட்ரம்ப் அரசவைக்கு பை : Joe Biden's Inauguration!

 "பன்முக கலாச்சாரம் என்பது மட்டுமே அமெரிக்கா அல்ல" - வெளியுறவுத் துறை அமைச்சர், மைக் பாம்பையோ. - செய்தி.

இவர் வெளியேறும் ட்ரம்பு அரசவை அமைச்சர். போறதுதான் போறேன் இந்தா வாங்கிக்கோன்னு அப்படி தன்னோட அக அழுக்கை அவிழ்த்து கொட்டிட்டு போயிருக்கார்.
...Secretary of State Mike Pompeo's tweet that multiculturalism “is not who America is," sent on his last full day at the State Department, infuriated American diplomats who described it as a final insult by the Trump administration...
இன்றும் சரி, அன்றும் சரி அமெரிக்காவை நவீன பொருளடக்கத்தில் "பன்முக கலாச்சாரங்கள் கூடி இரண்டர கலக்கும் (melting pot) நாடு" என்றளவில் தான் புரிந்து கொள்ள முடியும். என்னுடைய 25 ஆண்டு கால வாழ்க்கையில் அப்படியாகத்தான் இந்த நாட்டின் முகம் அறிமுகமாகி அதனை இன்றும் நுகர்ந்து வருகிறேன்.
அப்படியாக இந்த நாடு என்றும் துடிப்போடு இளமையாக இருக்கக் காரணம், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல விதமான எதிர்பார்ப்புகளோடு குடியேறும் மக்களுக்கு அவரவர்களுக்கான ஒரு வாழ்விடச் சூழலை வழங்கி தழுவிக் கொள்கிறது. அவர்களின் அன்றாட பழக்க வழக்கங்களிலும் கூட பெரிதும் தலையிட்டு ஒரு தர்மசங்கடத்தில் தள்ளாமல், அடுத்தவர்களின் மூக்கை தட்டாதவரை ஒகே என்றே பார்த்து பண்புடன் நகருகிறது.
இதுவே இன்றையளவில் நவீன உலகின் நாகரீகக் கூரை எனக் கொள்ளலாம். எனக்கு முதன் முதலில் அறிமுகமான நகரம் நியூயார்க். வாரத்திற்கு இரண்டு நாட்கள் ப்ராடுவேயில் நடந்து திரியத்தக்கதொரு வாய்ப்பு. விதவிதமான மனிதர்கள், மொழிகள் என களைகட்டி பரபரப்பாக இருக்குமொரு இடம்.
ஆனால், அதற்குள்ளும் மைக், ட்ரம்ப் போன்ற மனிதர்களும் தங்களுக்கான வாய்ப்பை எதிர்பார்த்து உறங்கிக் கிடந்திருக்கிறார்கள். அமெரிக்கா என்பது இன்னொரு கிரகத்திற்கு மனிதகுலம் சென்று காலனி ஏற்றம் செய்தால், எப்படியொரு வாழ்வுமுறையை அமைத்துக் கொண்டு அனைவருக்கும் பொதுவான ஒரு அரசை கட்டியெழுப்பி , அங்கு வந்து சேரும் பிற வேற்றுகிரக இனத்தவரையும் அரவணைத்து வாழப் பழகும் ஒரு பயிற்சி கூடத்திற்கு ஒப்பானது.
இங்கு புதிதாக குடியேறிய மக்கள் அந்த அமெரிக்க ஸ்பிரிட்டை புரிந்து கொண்டு கலந்து விடுவது அனைவருக்கும் நல்லது. வெறுப்பில் பேசித் தெரியும் ட்ரம்பை ஒத்தவர்கள் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவர். நம்பி ஏமாந்து சென்று விடாதீர்கள்.
**************************************

வெளியேறும் ட்ரம்ப் பதவியேற்கும் போது, அன்று வந்திருந்த கூட்டத்தின் எண்ணிக்கை கூட பெரியளவில் இல்லை. ஆனால், கூட்டுத்தொகையில் ஏதோ சூடு வைத்து அதீதப் படுத்தி இருந்ததாக நாளிதழ்கள் எழுதின. ஃபோட்டோஷாப்பை வைத்து ஓபாமா பதவியேற்பு விழாவிற்கு நெருக்கமாக கொண்டு வர முயற்சித்தார்கள்.
ஆனால், இன்று அவரின் கரிசனமற்ற, மக்களிடையே வெறுப்பை சம்பாதித்த நிலையில் வெளியேறும் நாளில் சி என் என், Trump departs Washington as a Pariah என்று தலைப்பிட்டு எழுதி இருக்கிறது (எவண்டா, இவிங்களுக்கு அந்தச் சொல்லின் அரசியல் வக்கிரம் புரியாமல் பயன்பாடு சொல்லிக் கொடுத்தது 🙄).
இந்த நிலையில் ஜோ பைடனின் பதவியேற்பு விழாவிற்கு ஹாலிவுட் பிரபலங்களும், பரந்த சிந்தனையாளர்களுமாகிய (லிபரல்ஸ்) டாம் ஹாங்க்ஸ், லேடி காகா, ஜெனிபர் லோபஸ் போன்றவர்கள் வரவேற்பு நிகழ்சி நடத்துகிறார்கள். இதனைக் கவனித்த ட்ரம்ப் தாங்கிக் கொள்ள முடியாமல் "கடுமையான கோபத்தில் உள்ளதாகத் தெரிகிறது."
... Donald Trump is furious that so many top celebrities, including Lady Gaga, Jennifer Lopez and Tom Hanks, are going to feature at president-elect Joe Biden’s inaugural celebrations on Wednesday, in stark contrast to his own event four years ago...
ட்ரம்ப் தனது 2005 மெலோனியாவுடனான திருமணத்தின் போது எல்டன் ஜான், பான் ஜோவி போன்ற பிரபலமான மேற்கத்திய இசை பாடகர்கள் சிறப்பிக்க வாழ்ந்து பார்த்தவர். 2016ல் ஆரம்பித்த அவருடைய அரசியல் அடாவடிகள் பிடிக்காமல், ஹாலிவுட் ஒதுங்கிக் கொண்டது.
இப்பொழுது அவரின் வெளியேற்றத்தை வெளிப்படையாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட தயாராகி விட்டது.

Saturday, January 09, 2021

கதம்ப நிகழ்வுகளும் என் எண்ணங்களும் - 1

மக்களாட்சி மீதான வன்முறையும் ட்ரம்பும்: A Failed Coup

இவிங்க எல்லாம் 1650களில் பல்லு விளக்காம கரையேறின பற்களோட, குளிக்காம அழுக்கா, கண்கள் எல்லாம் பஞ்சடைத்துப் போயி, குதிரை மேல ஏறி வழிப்பறி பண்ணிக்கிட்டு திரிவானுங்களே அந்த மாதிரி தங்களை கற்பனை செய்து கொண்ட கற்காலத்து எண்ண மனிதர்கள். வெளியுலகத்தோட தொடர்பே இல்லாம திடீர்னு ஜுமான்சி படத்தில சம்பந்தமே இல்லாத காலத்திய மனிதர்கள் நகரத்திற்குள் புகுந்து ஓடித் திரிவது போன்று ஒரு காட்சி வருமே, அது போல இருந்தது நேற்று பார்த்த காட்சிகள்.

நிறைய பிள்ளைகள் அதிர்ச்சியில் அழுததாகவும் செய்தி வந்தது. கூட்டத்தில்
இருந்தவர்கள் ஏதோ அவுட் ஆஃப் டைமிலிருந்து வந்தவர்களாக புரட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றும், ஆனா, போலிஸ் பெப்பர் ஸ்பிரே அடித்து விட்டது என்றும் கேவிக் கேவி அழுது கொண்டே நடைய கட்டிக் கொண்டிருந்தார்கள்.
அந்தக் கூட்டத்தில் இருந்த எண்ணப்பாடுகளை ஒத்த மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன். இந்தச் சிறிய கூட்டத்தின் உலகமே வேறையப்பா! 12 பேக் பியரும், ஒரு ஷாட் துப்பாக்கியும், கராஜ்க்குள் அமர்ந்து கவ்பாய் வாழ்க்கையை கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையற்ற ஒரு கூட்டமது. நல்ல புத்தியில் உள்ளவனுக்கு அங்கே வேலையில்லை. இது நவீன அமெரிக்க வானில் படர்ந்து மறைந்த ஓரங்க கோமாளி நாடகம்!
                                                            @@@@@@@@@@@
                                                                @@@@@@
மழைக்காடுகள் அழிப்பும் Xவைரஸ்களும்

மழைக்காடுகள் அழிக்கப் படுவதாலே, ஈபோலா போன்ற உயிர்கொல்லி வைரசுகள் விலங்குகளிலிருந்து மனிதனுக்கு தாவும் புதிய திரிபு வைரசுகளாகி தொற்றுகிறது என்கிறது புதிய வகை ஆராய்ச்சிகள்.
எப்படி?
காடுகள் அழிந்து அங்கு வாழும் விலங்குகள் அழியும் பொழுது நம் கூடவும் வாழப் பழகிய எலி, பூச்சி, கொசு போன்றவைகள் அந்த இடத்தை நிரப்பி வைரஸ்களை அங்கிருந்து நம்முடைய இடத்திற்கு நகர்த்துகிறது. இப்பொழுது ஈபோலா போல புது விதமான வைரஸ் ஒன்று மனிதக் கரை ஏறி இருப்பதாக செய்தி கசிந்திருக்கிறது. அதுவும் ஈபோலா வைரஸை கண்டறிந்து அறிவித்த அதே ஆராய்ச்சியாளர் வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.
எனக்கு இந்தத் தொடர்பு படுத்தல் மிக்க பொருள் உள்ளதாகப் படுகிறது. நம்முடைய செயல்பாடுகளில் சுற்றுச் சூழலைப் பேணும் வாழ்க்கை முறையோடு மாற்றிக் கொள்ளவில்லை என்றால், இந்த நுண் கிருமிகளே மனித குலத்தை அச்சுருத்தும் பெரும் சவலாக அமையும்.
                                                        @@@@@@@@@@
                                                                @@@@@@

100% திரையரங்க நிரப்பல் கொரோனாவிற்கான சிவப்பு கம்பள விரிப்பு! உருமாறிய நுண்மின்னு அலறி தீர்த்தது ஊடகங்கள். இன்று திரையரங்களில் 100% நிரப்பலோட படம் பார்க்கலாங்கிறதிற்கு விளம்பரம்.

இப்படி அரசிற்கும் பொறுப்பில்ல, ஊடகங்களுக்கும் பொறுப்பில்லன்னா, மக்களா பார்த்து தங்களது உசிரையும், குடும்பத்தின் உசிரையும் காப்பாத்திக்கிட்டாத்தான் உண்டு. ஜஸ்ட் பூனை கண்ணை மூடிக்கிட்டதாலே உலகம் இருண்டுவிடுவதில்லை, என்பதற்கிணங்க பணப் பைத்தியங்கள் தங்களது சுயநலத்திற்காக எடுக்கும் முடிவுகளால் தொற்று ஒழிந்து விட்டது என்று முடிவிற்கு போகாதீர்கள் மக்களே!
இன்னும் கொரோனா என்கிற கத்தி நம் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டுதான் உள்ளது. ஞாபகத்தில் நிறுத்தி ஒதுங்கியே இருங்க!

Related Posts with Thumbnails