Friday, July 29, 2011

அய்ன் ராண்ட் - பகுதி 2 : The Fountainhead (Part - 2)

இந்த பதிவின் முதல் பகுதி வாசிக்காதவங்களுக்கு - இங்கே வைச்சிருக்கேன் அதை.

றோர்க்கிற்கும், டாமினிக்கிடையேயான காதல் ஆழ்ந்து கவனிக்கும் மட்டிலுமே எத்தகைய நுண்ணிய நுண்ணுணர்வுகளின் அடிப்படையில் பின்னப்பட்டிருக்கிறது என்று விளங்கிக் கொள்ள முடிகிறது. அதற்கு உதாரணமாக சில இடங்களை சுட்டிக்காட்ட முடியும். எங்கோ பாஸ்டனுக்கு அருகே றோர்க் ஒரு ப்ராஜெக்ட் செய்து கொண்டிருக்கிறான். டாமினிக், வைனாண்டை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக அவனை இரண்டு வருடங்கள் கழித்து சந்திப்பதற்காக அந்த இடத்திற்கு வருகிறாள்.

வரும் வழியில் அவன் நடந்து திரியும் கடை வீதிகளில் உள்ள கடைகளில் உள்ள காட்சி பொருட்களை பார்த்தவாறு இவைகளைத்தானே தினமும் றோர்க் பார்த்து திரிவான், உணவகங்களை பார்த்து இங்கேதானே உணவருந்தி இருக்க வேண்டும் என்று வாஞ்சையுடன் அவன் பார்த்த, பழகிய அனைத்து விசயங்களையும் இந்த ஊரில் தானும் செய்வதற்கு எல்லா உரிமையையும் இருக்கிறது என்பதாக நினைத்துக் கொள்கிறாள்.

அவனை சந்தித்து இருவரும் உரையாடிக் கொள்கிறார்கள். அப்பொழுது டாமினிக் அவனுடன் அவனது அறையில் இன்று இரவு தங்கிச் செல்லவா என்று கேட்கிறாள், வேண்டாமென மறுத்து அருகிலுள்ள ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்தே அழைத்துச் செல்கிறான்.

அப்பொழுது காற்றில் அடித்து புரட்டிச் சென்ற பழைய செய்தித்தாளொன்று அவள் காலில் சுருட்டியபடி சுற்றிக் கொள்ளும், அதனைக் குனிந்து எடுத்து மடித்து டாமினிக், றோர்க்கின் நினைவாக தன் பையில் வைத்துக் கொள்ள எத்தனிப்பாள். றோர்க் அதனை செய்வது பொருளற்றது என்று புரிந்து கொண்டவனாக பிடிங்கி கசக்கி தூரப் போடுவான்.

மற்றுமொரு இடத்தில் பீட்டர் தனது தொழில் ரீதியான அந்திம காலத்தில் ஒரு ப்ராஜெக்ட் மட்டுமே தன்னை விழும் பாதாளத்திலிருந்து தூக்கி நிறுத்த முடியுமென்று கெஞ்சி கூத்தாடி வாங்கி வந்து, அதனையும் றோர்க் மட்டுமே எதிர்பார்த்தபடி திட்டத்தை வரைந்து கொடுக்க முடியுமென்று அவன் முன்னால் வந்து கேட்டு குறுகி நிற்பான்.

றோர்க்கும் ’தொலைந்து போ’ என்ற வாக்கில் நான் செய்து கொடுக்கிறேன், ஆனால் நான் வரைந்த வரைபடத்தில் கட்டடமாக எழும் பொழுது எந்த ஒரு மாற்றமும் இருக்கக் கூடாது என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் செய்து கொடுப்பான். ஆனால், பீட்டர் தனது நிலையை மாற்றிக் கொண்டு கட்டடத்தில் சில மாற்றங்களை செய்து விடுவான். றோர்க் நம்பிய அந்த கட்டடத்தின் ஆன்மா சிதைக்கப்பட்டது என்றபடி அந்த கட்டிடத்தையே வெடி வைத்துத் தகர்த்து விடுவான்.

அப்படியாக அந்த குற்றத்தை செய்வதற்கு முன் றோர்க், டாமினிக்கின் உதவியை முதல் முறையாக கேட்டு நிற்பான். டாமினிக் எதனை நினைத்து பயந்தாளோ அது இப்பொழுது றோர்க்கிற்கு நிகழ்கிறது, என்பதனை டாமினிக் வெளிப்படுத்தும் உணர்வுகள் சொற்களில் அடங்காது. வேறு எந்த வார்த்தையும் சொல்லாமல் அந்த ஆபத்தான வேலைக்கு துணை நிற்பாள். இதுவும் பரஸ்பரமாக ஒருவரின் மீது மற்றொருவர் வைத்திருக்கும் காதலின் ஆழத்தையும், நம்பிக்கையையுமே காட்டுவதாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த காட்சி சிறப்பாக சினிமாவில் வெளிக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

றோர்க்கிற்கு கட்டுமானப் பணியில் முழு உரிமையுடன் கிடைத்த மற்றொரு ப்ராஜெக்டான செக்யூலர் கோவில் கட்டும் திட்டத்தில் முதன்மை ஹாலில் டாமினிக்கை மாடலாகக் கொண்டு முழு நிர்வாணச் சிலையொன்று நிறுவ எண்ணி அவளிடம் அதனைக் கூறும் பொழுது வேறு மறுப்பே இல்லாமல் ஒத்துழைக்க முன்வருவாள்; அது டாமினிக் எந்த அளவிற்கு றோர்க்கை நேசிக்கிறாள் என்பதனை புரிந்து கொள்ள வைக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. அங்கு றோர்க் பெண்களுக்கு கொடுக்கும் முன் உரிமையையும் அதன் ஊடாக சொல்ல வரும் தத்துவார்த்த சித்தாந்தமும் புரிந்து கொள்ளக் கூடியது. கூடுதலாக றோர்க் தான் காதலித்த பெண்ணையே அதற்கென தேர்ந்தெடுப்பது எத்தனை அளவிற்கு டாமினிக்கை நேசிக்கிறான் என்று சொல்லி நிற்கிறது.

இது போன்ற இடங்களிலிலேயே அவர்களுக்கிடையேயான காதல் எத்தனை வலிமையானது என்று புரிய வைத்து விடுகிறார் கதையாசிரியர். அவர்களுக்கிடையேயான பிரிதல்கள் வருடக் கணக்கில் ஓடினாலும், மனிதர்களில் சிலர் உறவு நிலைகளில் மாறி குறுக்கே வந்தாலும் காதல் நிலையாக நிற்கிறது.

சிலை வடிப்பவன் மீதான டாமினிக்கின் எண்ணம் வழியாக ஆண்/பெண் நட்பின் மாண்பை சொல்லிச் செல்லத் தவறவில்லை. ஏனெனில் சிலை வடிப்பவன் டாமினிக்கின் முழு நிர்வாணத்தை தினமும் தரிசித்தவனாகினும், அவர்களுக்கிடையே எல்லைகளற்ற நட்பு விரிந்து செல்கிறது. அந்நோன்யம் உணரப்படுகிறது. எந்த திரைச்சீலைகளும் அற்று இருப்பினும் உடல் சார்ந்த நட்பை தாண்டி எடுத்துச் சொல்லும் இடம் ஒரு ஸ்பெஷல் ஹைலைட்.

காதலுக்குண்டான இத்தனை அழுத்தமானதொரு மரியாதையை வேறு எந்த புதினத்திலும் கொடுத்து படித்ததாக எனக்கு ஞாபகத்தில் இல்லை.

நமது நிதர்சனத்தில் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் காதலித்த காதலி வேறொருவரின் மனைவியாகி, இன்று குழந்தையுடன் விதவையாகிப் போனால் மீண்டும் இந்த சமூகம் அவளின் தலையில் தூக்கிச் சுமக்க வைத்து செல்லும் பாராங்கல்லை - தன் பொறுப்புகளாக கொண்டு ஒரு நாள் இறக்கி வைத்து விட்டு திரும்பி பார்க்கும் பொழுது இன்னமும் அங்கு காதலன் ஏதோ ஒரு சூழலில் தனக்கு மீண்டும் கிடைக்கும் நிலையிலிருந்தால் தனி மனித மனதில் எது தடுக்கக் கூடும்?

அங்கே அந்த காதல் அதுவரையிலும் மரணித்து விட்டதாக எடுத்துக் கொள்ள முடியுமா? இங்கே நம்முடைய சமூகத்தில் அந்த மரணம் நமக்கு தேவைப்படுகிறது. ஆனால், சற்றே வளர்ந்த, நாகரீமடைந்த சமூகத்தில் பிடித்து கட்டிப்போட்டு சோறு போடாமல் அவர்களின் வாழ்க்கையை அவர்களின் கைகளிலேயே ஓப்படைத்து விடுகிறார்கள், அவ்வளவே!

புதினத்தின் முடிவில் வைனாண்ட், றோர்க் மற்றும் டாமினிக்கின் குணாதிசியங்களை வளைக்க முடியாமல் தனது எண்ணப்பாட்டை நினைத்து அதற்கு முன்பாக வந்த தற்கொலை எண்ணங்களை தவிர்த்தவன் தான் ஈட்டி வைத்திருந்த பெயர், புகழ் அனைத்தையும் றோர்க்கிற்கென இழக்க முன் வருகிறான். அவர்கள் நல்ல நண்பர்கள் நிலைக்கும் உயர்கிறார்கள். இங்கே வைணாண்ட் பற்றிய பார்வையே சற்று சிந்திக்க வைக்கிறது. எது போன்ற மன நிலை அவனை அப்படியாக ஒரு ‘யூ’ டர்ன் அடிக்க வைக்கிறது றோர்க்கிற்கென எடுக்கும் ஒரு நிலை.

கடைசியில் இதுவே சரியான நேரமென றோர்க்கிடம் இந்த நகரத்திலேயே பெரிதாக எழுந்து நிற்கும் வாக்கில் ஒரு கட்டிடம் எழுப்புமாறான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு அதற்குண்டான அனைத்து பொருளாதார முன்னேற்பாடுகளையும் செய்து வைத்துவிட்டு துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்து விடுகிறான், வைனாண்ட்.

டாமினிக் வானாளாவி எழுந்து நிற்கும் அந்த கட்டடத்தின் உச்சத்தில் நிற்பவனை பார்ப்பதற்கென லிஃப்டில் பயணம் செய்தபடியே, மேலே மேலே என்று முடிவற்றதாக பயணம் செய்தபடி அவள் காலுக்கு கீழே பல ஈயடிச்சான் சராசரிகளின் வாழ்வமைப்பை பல கட்டிடங்களை கடந்து மேலெழும்பி செல்வதின் குறியீடாக மனிதர்களின் குழு மனப்பான்மைக்கு எடுத்துக் காட்டியபடி அந்த உயர்ந்த மனிதனிடம் சென்று அடைவதாக கதையை முடித்திருப்பார்.

************

புத்தகத்தின் நீதி: பட்டங்கள் வாங்குவது என்பது ஒரு திரையரங்கத்திற்குள் நுழைவதற்கான நுழைவுச் சீட்டினை ஒத்தது. அதுவும் அந்த குறிப்பிட்ட காட்சியினை பார்ப்பதாக இருந்தால் மட்டுமே முட்டு மோதல் எல்லாம். இங்கு பட்டம் வாங்கி ஒரு பதவியில் அமர்வது மட்டுமே குறிக்கோள் என்றால் முட்டி உடைய, உடைய அதனை ஈட்டிவிட்டு அந்த திரையரங்கத்திற்கு நுழைவதனையொத்த தொழில் குழுவோட சேர்ந்து தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளலாம். ஆனால், றோர்க் போன்ற எத்தனையோ பேர் தனது இயல்பிலேயே தனித்துவமாக நின்று அந்தத் துறையில் சிறக்க முடியும். முயன்றால் இது ஓரளவிற்கு எல்லாத் துறையிலும் சாத்தியமே!

ஆகினும் இந்த உலக, சமூக அரசியல் மேடையில் அது எத்தனை போராட்டங்களை கொண்டதாக அமைகிறது என்பதே கதையில் முதன்மையாக ஓடும் அடி நாதம். அவ்வாறாக தனித்தன்மையுடன் ‘சுயம்’ இழக்காமல் இருப்பதின் அவசியத்தை, தன்னம்பிக்கையை ஊட்டுவதற்கெனவே இந்த புதினத்தின் களம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய இந்திய கல்விச் சூழலில் போட்டிகள் நிரம்பியதாகவும், ஈயடிச்சான் காப்பிகளை உருவாக்குவதுமாகவே பரிணமித்திருக்கிறது. குழந்தைகளின் மீதாக தூக்கி சுமத்தப்பட்டிருக்கும் இந்த சமூக நிர்பந்தம் சிறிதே தளர்த்தப்பட்டு (அவர்களிடம் தற்கொலை எண்ணங்கள் எட்டிப்பார்க்காமல் இருக்க...) அவர்களின் உண்மையான ஆக்கங்களை/திறமைகளை கண்டறிந்து அந்த குழந்தைகளின் ’சுயம்’ பேணி பாதுகாக்கப்படுவதற்கு இது போன்ற ஆழ்ந்த சிந்தனைகளை கிளறும் புத்தகங்களும் நமக்கு உதவலாம். நன்றி!

பி.கு: இந்த புத்தகத்தை வாசிக்க முடியாவதர்கள் முடிந்தால் இதனை திரைப்படமாக பாருங்கள். ஆனால், திரைப்படத்தில் நிறைய விசயங்கள் மிஸ்ஸிங். எனது ஓட்டு புத்தகத்திற்கே!
10 comments:

வானம்பாடிகள் said...

ஹ்ம்ம்..நல்லாருக்கு தெ.கா. இன்னொருக்கா படிக்கும்போது (படிப்பீங்க) அத இத எப்படி மறந்தோம்னு புதுசா சிலது முளைக்கும். காமரூனப் பத்தி சொல்லலையேன்னு நினைச்சிட்டே காணொளி பார்த்தேன். மொத்தமும் சொல்லிடுச்சி. ஹ்ம்ம்.. இப்படி வாழ்ந்துட்டு செத்து போய்டணும்:)

Thekkikattan|தெகா said...

காமரூனப் பத்தி சொல்லலையேன்னு நினைச்சிட்டே காணொளி பார்த்தேன். //

அவர் றோர்க்கை தன்னிடமிருந்து விரட்டி விடுவதெற்கென பேசும் நறுக் வார்த்தைகள் அதனையொட்டிய வாஞ்சையான பகிர்தல்கள் தனக்கு என்ன நேர்ந்தது என்ற விளக்கங்கள் என காமரூனுக்கெனவே தனிப் பதிவா போடலாம்தான். அந்த குணாதிசியத்தின் மூலமாகவே நிறைய விசயங்கள் இது போன்று தன்னியல்புடன், சுயத்துடன் வாழத் தலைப்படுபவர்களுக்கான உள்ளார்ந்த விசாரணைகள்/சாலஞ்சுகள் எதுவென முன் வைக்கப்பட்டிருக்கும் - வாழ்ந்து பார்த்த காமரூனின் மூலமாக.

விசயம் அப்படியாக இருக்க எப்படி இது போன்ற புத்தகங்களை படித்து விட்டு குருட்டாம் போக்கில் மன முதிர்ச்சியில்லா வாசிப்பாளர்கள், கதையின் நாயகனை பின்பற்றி சமூகத்திற்கு உதவாத, கவுன்சலிங் செய்யத் தக்கவர்களாக ச்சாய்சஸை எடுத்து விடுவார்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள், அது எப்படி சாரே!

//இப்படி வாழ்ந்துட்டு செத்து போய்டணும்:)//

வாழ நினைத்தால் வாழலாம் ;) ... எல்லாம் நம்மாண்டைதான் இருக்கு சூட்சுமம்...

தவறு said...

தனித்துவமாக நிற்க ஆரம்பித்தால் நிறைய விமர்சனங்கள் நிறைய எதிர்ப்புகள் உட்பட்டே ஆகவேண்டும். இருக்கும் நூறில் தனியாய் தெரிய இப்படியெல்லாம் இருந்தால் தான் முடியும் தெகா...

Rathi said...

தெகா, இரண்டு பகுதிகளையும் படித்துப்பார்த்தேன். மீண்டுமொருமுறை படிக்க வேண்டும். தனக்குத்தானே உண்மையாய் இருப்பவர்களால் தான் றோர்க், டொமினிக் போல வாழமுடியும். எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்ளும் போது எங்கள் சொல், செயல், வாழ்க்கை எல்லாமே பொய்த்துப்போகிறது.

பி.கு: உங்கள் பதிவுகளைப் படித்த பின் இவ்வளவு நாளும் என் புத்தக ஷெல்பில் தூங்கிக்கொண்டிருந்த Ayan Rand - Atlas Shrugged தூசு தட்டி எடுத்து வைத்திருக்கிறேன் :)

Thank you.

Thekkikattan|தெகா said...

தவறு,

தன்னியல்போடு இருந்தாலே உண்மையான ஆக்கம் தலைப்படுவதனை காணலாம். அதற்கென தனியாக முயற்சிக்கவே தேவையில்லை என்பது என்னுடைய கருத்து.

காலம் கடக்க கடக்க நாம் நமது பழைய அனுபவங்களிலிருந்து அறிந்து கொண்டதை எதிர்காலத்திற்கென பயமாக மாற்றி சமரசங்களுக்கு நம்மை கடுமையாக உட்படுத்தி பாதி சுயத்துடனும், மீதியை நடிப்புடனும் கடத்தி அந்திம காலத்தில் அனைத்தையும் ஓர் ஓட்டமாக நமக்குள்ளரயே ஓட்டி சீர் தூக்கி பார்த்துக் கொள்ளுவோம் போல! :)

Thekkikattan|தெகா said...

ரதி,

//ஏமாற்றிக்கொள்ளும் போது எங்கள் சொல், செயல், வாழ்க்கை எல்லாமே பொய்த்துப்போகிறது.//

ஏதோ ஒரு வகையில் நம் அனைவருக்குமே நீங்க சொன்னது பொருந்தும்தானே. நிறைய பொய்க்காமல் ஓரளவிற்கு நிறைவோட வாழ முயற்சிப்போம். :)

//Ayan Rand - Atlas Shrugged தூசு தட்டி எடுத்து வைத்திருக்கிறேன் :) //

பரவாயில்லயே நீங்க அப்பவே வாங்கி வைச்சிட்டீங்களா? என்னோட அடுத்த வாசிப்பு ராண்டோடது உங்ககிட்ட இருக்கிற அட்லாஸ்தான் :) ...சீக்கிரம் ஆரம்பிங்க. உங்களுக்கு நான் pdf புத்தகம் அனுப்பி வைக்கிறேன்

Vetrimagal said...

அருமை. அழகாக எழுதப்பட்டுள்ளது.

Thekkikattan|தெகா said...

Vetrimagal said...

அருமை. அழகாக எழுதப்பட்டுள்ளது.//

மகிழ்சியும் நன்றியும் :)

The Analyst said...

நன்றாக விபரித்துள்ளீர்கள்.

இப்புத்தகத்திலிருந்து ஒரு quotation வாசித்தேன் இணையத்தில்.

"The great creators—the thinkers, the artists, the scientists, the inventors—stood alone against the men of their time. Every great new thought was opposed. Every great new invention was denounced. The first motor was considered foolish. The airplane was considered impossible. The power loom was considered vicious. Anesthesia was considered sinful. But the men of unborrowed vision went ahead. They fought, they suffered and they paid. But they won."

So true.

இதை வாசிக்கும் போது Elbert Hubbard சொன்ன "To avoid criticism do nothing,say nothing and be nothing" உம் நினைவில் வந்தது. எம‌து க‌லாச்சார‌ம் அநேக‌மாக‌ ச‌ன‌த்தை இவ்வாறிருக்க‌வே train ப‌ண்ணுகிற‌து, to go with the flow.

Thekkikattan|தெகா said...

அனலிஸ்ட் வந்திட்டீங்களா, வாங்க :)

//எம‌து க‌லாச்சார‌ம் அநேக‌மாக‌ ச‌ன‌த்தை இவ்வாறிருக்க‌வே train ப‌ண்ணுகிற‌து, to go with the flow.//

அது போன்று ட்ரைன் செய்யும் ஒரு குணாதிசியமே இந்த புதினத்தில் வந்து போகும் எல்ஸ்வொர்த் டூஹே :)

அவசியம் வாசிக்கப்பட வேண்டிய புதினம். கொஞ்சம் சைஸ்தான் பயமுறுத்தும் பயந்துக்காதீங்க :)... முதல் பகுதியில ஒரு சிறிய காணொளி இணைச்சிருப்பேன் don't miss it, that is the highlight part in the movie -ரொம்ப impressiveஅ இருக்கும் பாருங்க!

Related Posts with Thumbnails