Thursday, April 07, 2011

துடைத்தழிக்கப்படும் நெல், தான்ய விதைகள்:GM Pollution!

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நம்மாழ்வாரின் ஒரு காணொளி பார்த்ததிலிருந்து அவரிடத்தின் மீது எனக்கு அளவற்ற ஈர்ப்பை உருவாக்கியிருக்கிறது. அதற்கு முன்னால் நவதான்ய என்றமைப்பின் நிர்வாகியும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிராக முழங்கி வரும் டாக்டர். வந்தனா சிவா மீதும் இருந்த அதே கவனம் இப்பொழுது இவர் மீதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. மேலாக அவரை இந்த முறை ஊருக்கு வரும் பொழுது எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்ற ஆவலை வளர்த்து விட்டிருக்கிறது.

இந்த நிலையில் பஸ்ஸில் ஒரு இழை ஓடிக் கொண்டிருந்தது. அங்கு பார்வையாளனாக மட்டுமே அந்த இழையை பின் தொடர்ந்து வந்தேன். அதில் நமது தஞ்சாவூரான் என்ற விவசாயி இப்படியாக தனது ஆதங்கத்தை இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்துவதின் பொருட்டு பேசிக் கொண்டே செல்லும் பொழுது இப்படியாக ஒரு விசயத்தை முன் வைத்தார்...

...தட்டான், ஈசல், மண்புழு, பிள்ளைப்பூச்சி, பாப்பாத்தி (செவப்பா கரும்புள்ளியோட இருக்கும்), குசுவினிபூச்சி, சில வகை எறும்புகள், தண்ணிபாம்பு, சாரை பாம்பு, பச்சை கொம்பேறிமூக்கன், வண்ணத்துப்பூச்சி, சிட்டுக்குருவி, அணில், ஓணான், அரணை, உடும்பு, தேரை, சாம்பிரானி, பால்நண்டு, நட்டுவாக்காளி, கூழைப்பாம்பு, பச்சைக்கிளி, மரங்கொத்தி, கொக்கு, நாரை, மடையான், மணிப்புறா, காடை, கவுதாரி, குயில், நரி, காட்டுப்பூனை - இது எல்லாமே வயக்காடு, கொல்லைக்காட்டுலேருந்து மறைஞ்சுபோச்சுண்ணே ;( ...

அதனை படித்த பின்பும் என்னால் ஒரு பார்வையாளனாக இருக்க முடியவில்லை. எனது புரிதலாக இயற்கையமைப்பில் எப்படி இந்த மரபணு மாற்ற தொழில் நுட்பம் பல பில்லியன் ஆண்டுகளாக இயற்கை எடுத்து செயல் படுத்தி சிறுகச் சிறுக கட்டியெழுப்பி வரும் உயிரின பன்முகத் தன்மையை, சூழலமைவை (ecosystem) ஒரு சில ஆண்டுகளிலியே துடைத்தெரிய தக்கது என்பதாக எனது கருத்தினை வைத்தேன். அங்கு கூறிக் கொண்டிருக்கும் பொழுதே தனிப்பதிவாக கொண்டு வருவதின் அவசியமும் உணர்ந்தேன்.

ஏற்கெனவே 2006, 07லிலுமாக இரண்டு பதிவுகளில் பல விசயங்கள் பின்னூட்டங்களின் மூலமாக அலசப் பட்டிருக்கிறது. இந்த பதிவில் பேசப்படாத விசயங்கள் அங்கே காணப்படலாம்.

அ) பரிணாமச் சீர்கேடு ஓர் அறிமுகம்

ஆ) இந்தியாவிற்கு வால்மார்ட் அவசியமா?


இப்பொழுது கொஞ்சம் விரிவாக எப்படி இந்த சர்வதேச பண முதலைகள் தன்னிறைவுடன் ஓடிக் கொண்டிருக்கும் தனியொரு விவசாயின் உயிர்வாதார பிழைப்பிலும், நேரடியாக கை வைத்து தங்களது பணப் பேராசையை தீர்த்துக் கொள்ள முயல்கிறார்கள் என்பதை லட்சக்கணக்கில் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் இந்த கால கட்டத்தில் பேசுவது உகந்ததாக இருக்கும்.

இயற்கையின் அமைவில் உணவு சுழற்சி என்பது தன்னியல்போடு ஓடிச் சேர்வது. அது காலங் காலமாக இயற்கை தேர்ந்தெடுப்பின் பொருட்டாக கிடைக்கும் சுற்றுப்புறச் சூழல் காரணிகளை கொண்டு மரபணு பண்புகளை கூட்டி குறைத்துக் கொண்டு அந்த சார்ந்து வாழும் ஊரின் மண்ணியல்போடு தொடர்பு கொண்டதாக பரிணமித்து வளர்கிறது. பெரிய படத்தில் சற்றே விரித்து பார்த்தால் அந்த மண்ணில் வாழும் ஆயிரக் கணக்கான நுண்ணுயிர்களையும் அந்த சுழற்சியில் பங்கேற்க வைத்து அவைகளையும் தழைத்து, செழிக்க வைத்து ஏனைய சார்பு உயிரினங்களையும் உய்வித்து வளர்ந்து வரும் சூழலியல் 'வானம்' அந்த நிலமும் அதனில் விளையும் பயிரும், உணவுப் பொருட்களும்.

எப்படி ஒரு குழந்தை உருவாவதில் ஒரு பெண்ணின் சார்பில் கரு முட்டையும், ஆணின் பங்காக ஒரு விந்தணுவும் மட்டுமே இயற்கையமைவில் போதுமானதாக இருக்கிறதோ, அது போலவே தாவர உணவு பொருட்களை சுய சுழற்சி செய்து கொள்ள நம்மிடம் இயற்கை எதிர்பார்க்கும் ஒரே விசயம் அதன் இயல்பில் கை வைக்காமல் விட்டு விடுவதுதான். ஏனெனில் ஒரு விதையின் வழியாக நமக்குத் தேவையான எதிர்கால உணவு உற்பத்திக்கான கருவையும் உள்ளடக்கியே விளைச்சலில் கொடுத்து நிற்கிறது. மாறாக மரபணு மாற்றமுற்ற விதையில் பூச்சிக் கொல்லியை முன்னமே வைத்து தைத்து கொடுத்து சமச்சீரை உடைப்பது மாதிரி இல்லாமல்.

அந்த இயற்கையின் அமைப்பை உடைத்து, சார்பு நிலையையும், அடிமை தனத்தையும் வளர்க்கும் மரபணு மாற்றமுற்ற மலடி விதைகளை விளைவித்து உண்டது போக மீண்டும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆய்வகத்தில் உருவாக்கித் தரும் விதைகளுக்கு கையேந்தி நிற்பதில் எத்தனை சுதந்திரம் ஒரு விவசாயிக்கு இருந்து விட முடியும். இதுவும் இன்றைய கால கட்டத்தில் பெட்ரோலிய விலை நிர்ணயம் பண்ணக் கூடிய ஒரு சார்பு பொருளாதார நிலைக்கு நாளை நம்மை இந்த உணவு உற்பத்தி திறன் சார்ந்து எடுத்துச் சென்று விடாதா?

பணத்தை மட்டுமே இலக்காக கொண்டு செயற்படுத்தப் படும் மலடி ரக விதைகளை ஊக்குவிக்கும் மரபணு தொழில் நுட்பம், ஒரு நாட்டின் ஒட்டு மொத்த விவசாயிகளின் உரிமையை மட்டும் பரித்து எடுத்துக் கொள்ள முயலவில்லை, ஒரு தேசத்தின் உணவு தன்னிறைவையும், அதன் உணவுசார் பாரம்பர்யத்தையும், வாழையடி வாழை விவசாய அறிவையும் பிடுங்கிக் கொள்ள முயற்சிக்கிறது என்பதனை ஏன் நம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை?

இது வரையிலும் நாம் இந்த தொழில் நுட்பத்தின் வழியாக இழக்கும் அரசியல்/சமூக/பொருளாதார சுதந்திரத்தை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம்! இதே செய்கை எப்படி பெரியளவில் சுற்றுப் புறச் சூழலையே சிதைத்து நாம் பார்த்து வளர்ந்த நமது கிராம பூமியையே கோரமாக்கிக் காட்டும் என்பதற்கு மேலே தஞ்சாவூரானின் பின்னூட்டமே சாட்சி. ஓர் ஊரில் வாழும் தாவர விலங்குகளுக்கும் அங்கு விளையும் உணவிற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எங்காவது ஒரு மாற்றம் அதனில் ஏற்படுமாயின் மொத்த வாழ்வுச் சங்கிலியுமே அறுபட்டு போகிறது.

ஐரோப்பாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விளை நிலத்தின் பக்கமாக வந்து போகும் வண்ணத்து பூச்சிகளின் எண்ணிக்கை 40% சதவீதம் குறைந்து போனதாகவும், ஸ்கைலார்க் எனும் பறவையின் வரத்து போக்கும் சுத்தமாகவே நின்று போனதாகவும் பக்கத்து பக்கத்து வயல்காடுகளில் மரபணு மாற்றமுறச் செய்த விளைபயிர்களையும், இயற்கை முறையில் சாகுபடியாகும் வயல்களுக்கிடையில் செய்த ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது. இதனில் கீழே சிந்திய இயற்கை பயிர்களினான விதைகள் மீண்டும் முளைக்கும் சாத்தியமிருப்பதால் அதனையொட்டிய ஜீவராசிகளின் வரத்து போக்கிற்கான காரணமாக தெரிய வந்திருக்கிறது.

இந்த மரபணு மாற்று பயிர்களுக்கென தூவப்படும் உரங்கள் பயிர்களுக்கான போஷாக்கை தருவதற்கெனவே என்ற வகையில் பாவித்தாலும் மண்ணை நாட்போக மலட்டுத் தன்மைக்கு இட்டுச் செல்கிறது. மண்ணும் சுவாசிக்கிறது என்பதனை இந்த இடத்தில் மறந்து போகிறோம்! பூச்சிக் கொல்லிகள் பயிர்களை தாக்கும் தேவையற்ற பூச்சிகளை கட்டுபாட்டில் வைத்துக் கொள்ளவே என்ற போதிலும் இயற்கையிலேயே அங்கு வாழும் மற்ற ஜீவராசிகள் அதனதன் வேலைகளை செய்வதிலிருந்து முற்றிலுமாக விளக்கி விடுவதால் நன்மை தரும் பூச்சி, பட்டுகள் கூட காலப்போக்கில் சுத்தமாக துடைத்தெரியப் படுகிறது. அல்லது அவைகளிலும் ஏதோ ஒரு வகையில் மரபணு மாற்றத்தை முடுக்கி விட்டு சூப்பர், டூப்பர் வகையில் புது விதமான நச்சு வகையாக மாறிப் போய் விடும் அபாயமாகவும் ஆகிவிடுகிறது. இந்த ரசயானங்களும், பூச்சி கொல்லிகளும் விளைந்த உணவுகளின் ஊடாக நமக்கு வந்தடைகிறது என்று சொல்லிதான் விளங்கிக் கொள்ள வேண்டுமென்று இல்லை.

புதிதாக நம் உடம்பிற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத பல வேதிய பொருட்களின் இருப்பு (chemical traces) இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது இரு வேறு கால அவகாசங்களில் ஒரே மனித உடலில் இருக்கும் வேதிய tracesகளின் மூலமாக உறுதி படுத்தப்பட்டுள்ளது. இது எப்படி நிகழ்ந்திருக்கக் கூடும்? இது போன்ற புற வேதிய பொருட்கள் உடலில் எகிரும் பொழுது புதிது புதிதாக வியாதிகளின் வருகையும் அதிகரிப்பதினில் என்ன ஆச்சர்யமிருக்கக் கூடும். செயற்கையாக கரவை மாடுகளில் வளர்ச்சியைச் தூண்டும் மாற்று மரபணு வளர்ச்சிக் ஹார்மோன்களை உட்செலுத்தி அதிக பாலை பெறும் முயற்சியில் நமக்கு கிடைக்கும் உபரி - (IGF-1- இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி) அந்த பாலின் மூலமாக கிடைக்கப் போய் அதுவே புற்று நோயைத் தூண்டுவதாக அமைந்து விடுகிறது.

நாமே மரபணு மாற்றங்களை உருவி, சொருவி தேவையானதை சிருஷ்டித்து கொள்வதின் மூலம் உடனடி லாபம் ஈட்டினாலும், இயற்கையில் நிகழ்வுறும் பரிணாம சங்கிலித் தொடர் மாற்றங்கள் நிகழ்வுருவதை சிதைத்தவர்களாகிறோம்.

மேலும் இயற்கையில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் இந்த இயற்கை சுற்று சூழலியியல் பின்னணியில் பின்னி பிணைந்து கிடப்பது. ஒரு சில பூச்சிகள் ஒரு சில தாவரங்களை மட்டுமே உண்டு அவைகளின் இனப்பெருக்கத்தையும், பரவலையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதாக இருக்கலாம். ஒரு சில பூச்சிகள், ஒரு சில தாவரங்களில் மட்டுமே அழிவைக் கொடுக்கும் பூச்சிகளின் லார்வாக்களை உண்டு அந்த பூச்சிகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் இயற்கையமைவு இது.

எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கையின் பன்முகத் தன்மை போற்றி பாதுக்காக்கபட வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம், ஏனெனில் அந்தந்த சுற்றுப் புறச் சூழ்நிலையில் தமக்கேயான மருத்துவ குணங்களுடன் உள்ள indigenous, ethnollogically முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள் இயற்கை நமக்கு கொடுத்த கொடை, அதனை பேணி பாதுகாப்பதும் நமது எதிர் கால தலைமுறையினருக்கு நாம் விட்டுச் செல்லும் சொத்தே!

Selective breeding is wiping out the natural biodiversity! which is not good in the long run - full stop!

தஞ்சாவூரானின் ஊர் வயல் காடுகளில் அவர் பார்க்கும் சாதாரண ஜீவராசிகள் இவ்வளவு சீக்கிரமாக அவரின் பார்வையிலிருந்து காணாமல் போனதிற்கு ஒரு விளக்கமாக இதனையும் கொள்ளலாம். இந்த மறைந்து போனதிற்கு பின்னணியில் கூட நான் மேலே சொன்ன பரிணாமச் சங்கிலி (உணவுச் சங்கிலியும்) சிதைவுற்றதும் ஒரு காரணமாக இருக்கலாம். உதாரணமாக, நாம் தடைசெய்யப் பெற்ற ஒரு பூச்சிக் கொல்லியை நம் வயலில் பயன்படுத்துகிறோமென்று வைத்துக் கொள்வோம் அது அங்கு வாழும் தவளைகள், நண்டுகள் போன்றவற்றை நேரடியாக பாதிக்கிறது அடுத்த முறை அவைகளின் இனப்பெருக்க முறையில் பெரிய மாற்றமெனில் அவைகளையே உணவாக கொள்ளும் மற்ற பறவைகள், விலங்கினங்களின் நிலை என்னவாக இருக்கும்...? இதுவே மாற்று மரபணு தாவரங்களுக்கும் பொருந்தும், அந்த தாவரங்கள் அந்த லோகல் இயற்கை உணவுச் சங்கிலியை அறுப்பதாக இருக்கலாம் அப்படி அது சிதைவுரும் பொழுது நம்பி உள்ள ஏனைய பிராணிகளும், பூச்சிகளும் உடனடியாக பாதிக்கப்பட்டு மாண்டழியலாம்... :(.

இந்த பரிணாம மாசுபாட்டையும், இயற்கையின் சுழற்சியில் தலையிட்டு ஊடறுப்பையும் நிறுத்திக் கொள்வது எல்லா முட்டையையும் ஒரே கூடையில் போட்டு ஒரு நாள் போட்டு உடைத்து கொள்வதனை போலல்லாமல், தப்பி பிழைத்துக் கொள்ள சிந்தித்து செயல் படுவோம்! இதுவே ஒரு தேசத்தின் உணவு தன்னிரைவிற்கும், அமைதிக்கும், தனி மனித சுதந்திரத்திற்கும் குறியீடான ‘முளை விதை’ பொருள் சொல்லி நிற்கட்டும்.

முற்றிலுமாக நமது பன்முக உணவுத் தாவர விதைகளை இழந்ததிற்கு பின்பாக குய்யோ, முறையோ என்று கதறிக் கொண்டு எங்கோ செயற்கையாக விதைகளை உற்பத்தித் தரும் ஆய்வுக் கூடங்களை நம்பியே கையேந்தி நிற்பதில் பொருளொன்றுமிருக்காது.

அப்படியே இந்த காணொளியையும் பார்த்து விசயத்தின் வீரியத்தையும், தீவிரத்தையும் உணர்ந்து கொள்ளுவோம்...




43 comments:

saarvaakan said...

நல்ல அவசியமான பதிவு.உலகமயமாக்களின் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்று.உணவை விஷமாக்கும்,நிலத்தை மல்டாக்கும் தொழில் நுட்பத்தை கொண்டு வருவதை என்னவென்று சொல்வது?.
நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை ஊக்குவிக்காமல்,பொன் முட்டையிடும் வாத்தை அறுக்கும் கதையாகி விடக் கூடாது.இத்தலைப்பிலும் இயற்கை விவசாயம் தொடர்பாகவும் பதிவிடுங்கள் நண்பரே.வாழ்த்துகள்.

ப.கந்தசாமி said...

தெகா அவர்களே,
பதிவை இன்னும் முழுமைநாகப் படிக்கவில்லை. படித்துவிட்டு விரிவான பின்னூட்டம் போடுகிறேன்.

நான் ஒரு ஓய்வு பெற்ற விவசாய மண்ணியல் துறை விஞ்ஞானி. உங்கள் தொழில் பின்புலம் தெரியவில்லை.
அன்புடன்........

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

தெக்ஸ்.. நீங்க ஒரு கன்செர்வேட்டிவ் பயாலஜிஸ்ட்.. சரியா? (நான் சொல்லல.. எதிர்ப்பாளர்கள் அப்படித் தான் உங்களைக் கூப்பிடுவாங்க :) )

ஒரு இயற்கை விரும்பியா நானும் உங்களை ஆமோதிக்கிறேன்.. நிறைய விஷ(ய)ங்கள் இப்போ தெரிய வராது.. சில பல வருடங்கள் கழித்து தான் தெரிய வரும்..

ஜெனிடிக் எஞ்சிநியரிங்கை ஆதரிப்பதா இல்லையா என்பதில் இன்னும் குழப்பமே.. ஆனா அதை வைத்து நடக்கும் "விதை மறுப்புச்" சுரண்டலை ஒரு பொழுதும் ஏற்க முடியாது.. இவங்க சொல்றதைப் பார்த்தா, மான்சாண்டோ பூ ல இருந்து காத்து அடிச்சு வந்து இன்னொருத்தர் வயல்ல பாலிநேஷன் நடந்தாக் கூட சூ பண்ணிடுவாங்களாமே? :))

நீங்க எல்லாம் வீடே கட்டக் கூடாது, நாங்க மட்டும் தான் கட்டுவோம், நீங்க மாசா மாசம் எங்களுக்கு வாடகை மட்டும் அழுதுகிட்டு இருக்கனும்ன்னு சொன்னா எப்படி இருக்கும்?

ஆனா விவசாயத்துல அனுபவப் படாததால விவசாயிகள் இடத்துல இருந்து என்ன சொல்றதுன்னு தெரியல..

நீங்க சீட்லஸ் க்ரேப்ஸ் சாப்பிடுவீங்களா இல்ல சீட் உள்ளதா? நான் சீட்லஸ் விரும்பி :).. இதைப் படித்ததும் தான் இந்த சீட்லஸ் சமாச்சாரம் நினைவுக்கு வந்தது.. க்ரேப்ஸ்.. தர்பூஸ்.. இப்படி.. இதை விளைவிப்பதாலும் விவசாயிக்கு விதைகள் அற்ற நிலை தான் இல்லையா? ஆனா மக்கள் இதைத் தானே விரும்பி வாங்குறாங்க?

இந்த வைட்டமின் மாத்திரையோ மேனியா இருக்கே.. சில விஷயத்தில் எக்ஸ்ட்ரா விட்டமின்ஸ் ரொம்ப அவசியமே, கர்ப்பிணிப் பெண்களைப் போல.. ஆனா அந்த உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடாம இந்த மாத்திரைய மட்டும் முழுங்கி வர்றதால மாத்திரை கம்பெனிக்காரனைத் தவிர யாருக்கு என்ன புண்ணியம்? :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//செயற்கையாக கரவை மாடுகளில் வளர்ச்சியைச் தூண்டும் மாற்று மரபணு வளர்ச்சிக் ஹார்மோன்களை உட்செலுத்தி அதிக பாலை பெறும் முயற்சியில் நமக்கு கிடைக்கும் உபரி - (IGF-1- இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி) அந்த பாலின் மூலமாக கிடைக்கப் போய் அதுவே புற்று நோயைத் தூண்டுவதாக அமைந்து விடுகிறது.//

ரெபரன்ஸ் இருந்தாத் தாங்க.. நான் பால் விஷயத்தில் ஆர்கானிக்கு மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்..

Thekkikattan|தெகா said...

எல்போர்ட்ஸ், வாங்க வாங்க!

//நீங்க ஒரு கன்செர்வேட்டிவ் பயாலஜிஸ்ட்.. சரியா?//

//ஆனா அதை வைத்து நடக்கும் "விதை மறுப்புச்" சுரண்டலை ஒரு பொழுதும் ஏற்க முடியாது.//

எதுவும் இயற்கைக்கு புறம்பாக செயற்கைத்தனமிருந்தால் அதற்கு எதிர்ப்பு காட்டுவேன். இங்கு நான் எதிர்த்து நிற்பதற்கு பல காரணங்களுண்டு. என்னால் கிஞ்சித்தும் கற்பனை பண்ணி பார்க்க முடியவில்லை, நம் கையிருப்பில் இருக்கும் அற்புதமான உணவுத் தாவர பன்முகத் தன்மையில் கையிறக்கம் பெறும் அனைத்து விதைகளையும் இழந்து கையேந்தும் ஒரு நாளுக்கு சுத்தமாக மாறி நிற்போமென்று.

//மான்சாண்டோ பூ ல இருந்து காத்து அடிச்சு வந்து இன்னொருத்தர் வயல்ல பாலிநேஷன் நடந்தாக் கூட சூ பண்ணிடுவாங்களாமே?//

பணம் மட்டுமே வாழ்க்கை என்பதனை நம்பும் ஒரு சில சி.ஈ.ஓக்களின் மூளைக் குழந்தையை நம்பி மொத்த சுரண்டலுக்கும், உணவு சார்பு நிலைக்கும் நம்மை அடிமையாக்கிக் கொள்ள முடியுமா? ஆனா, அதுதான் வேணும் இந்த பணப் பேராசை பிடித்த முதலைகளுக்கு.

//நான் சீட்லஸ் விரும்பி :)..//

//ஆனா மக்கள் இதைத் தானே விரும்பி வாங்குறாங்க?//

இனிமே மாறிக்கோங்க. எல்லாம் சோம்பேறித் தனம்தான். பெரிசா, சீட்லெஸா இருக்கிறது என்னவோ சோறு சாப்பிடுவது மாதிரி இல்ல... அதன் சுவை இழந்து.

//ஆனா அந்த உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடாம//

நம்ம நாட்டில 2500 நெல் வகைகள் இருந்ததாம். அதில் சில அரிசி வகை ஜஸ்ட் கர்ப்பிணிப் பெண்களுக்கு தகுந்த சத்து கிடைப்பது போன்றே அமைந்ததாம். அதெல்லாம் இப்போ வந்தனா சிவா, விதை சேமிப்பகத்தில் இருந்தால் தான் உண்டு :((

Thekkikattan|தெகா said...

//ரெபரன்ஸ் இருந்தாத் தாங்க.//

இந்தாங்க பிடிங்க...

rBGH (Posilac) -- Breast Cancer and Prostate Cancer

recombinant bovine growth hormone (rBGH)

//நான் பால் விஷயத்தில் ஆர்கானிக்கு மாறலாமா //

உங்க ஊர்ல உழவர் சந்தை இருக்கா? அங்க முயற்சி பண்ணுங்க எல்லாமே ஓரளவிற்கு நியாயமான பொருட்கள் கிடைக்கும். அங்கேதான் நான் மேயுறது :)

இதெல்லாம் படிச்சு தெரிஞ்சிக்க தெரிஞ்சிக்க பேசாம நாலு ஆடு, மாடு வாங்கி சொந்தமா இருக்கிற நிலத்தில வேணுங்கிறதை விளைவிச்சு வெளித் தொடர்பே இல்லாம வாழ்ந்திடலாமோங்கிற அளவில இருக்கு. ஆனா, போற போக்கில இனிமே கிணறு கூட வெட்டிக்க முடியாது போல... ஒரு சொட்டுத் தண்ணீருக்கும் காசு கேக்கப் போறாய்ங்க.

Thekkikattan|தெகா said...

வாங்க டாக்டர்,

//படித்துவிட்டு விரிவான பின்னூட்டம் போடுகிறேன்.//

அவசியம் உங்களின் கருத்தை எங்களுடன் விரிவாக பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் கூற எவ்வளவோ இருக்கும், இந்த மரபணு மாற்று பயிர்களில் விளைச்சல் சார்ந்தும், நம் நாட்டின் எதிர்கால biodiversity preservation சார்ந்துமென எவ்வளவோ இருக்கிறது. பேசுங்க! தெரிஞ்சிக்கிறோம்.

//நான் ஒரு ஓய்வு பெற்ற விவசாய மண்ணியல் துறை விஞ்ஞானி.//

ஓரளவிற்கு தெரியுமய்யா. உங்களோட விவசாயம் சார்ந்த தளத்தில் பல பதிவுகள் வாசித்திருக்கிறேன்.

// உங்கள் தொழில் பின்புலம் தெரியவில்லை.//

I am trained to be a wildlife biologist.

Unknown said...

மிக நல்ல கட்டுரை.. பாராட்டுக்கள்..

Thekkikattan|தெகா said...

//saarvaakan said..

நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை ஊக்குவிக்காமல்,பொன் முட்டையிடும் வாத்தை அறுக்கும் கதையாகி விடக் கூடாது.//

அமெரிக்காவின், ஐரோப்பாவின் விவசாயத் துறையும் வளர்ச்சியுமென்பது பெரு நிலங்களை அடிப்படையாக கொண்டது. ஆனால் இந்தியாவின் கதை அப்படியல்லவே! மேலும் இன்னமும் 65 சதவீதத்திற்கும் மேலான மக்கள் விவசாயத்தையே நம்பியிருக்கிறார்கள் அதுவும் துக்கடாக்களாக அமைந்து பட்டு போயிருக்கும் தங்களது பூர்விக நிலங்களில்... அதனால் புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதாக ஆயிவிடக் கூடாது.

//இத்தலைப்பிலும் இயற்கை விவசாயம் தொடர்பாகவும் பதிவிடுங்கள் நண்பரே.வாழ்த்துகள்.//

சம்பந்தப்பட்டவர்களை சந்திக்கும் வாய்ப்பும், நானும் அறிந்து கொள்ள கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக பகிர்ந்து கொள்ளுவோம். நன்றி!

ஜோதிஜி said...

http://deviyar-illam.blogspot.com/2010/07/blog-post_11.html

பங்காளி இந்த முறை இத்ந நல்ல கட்டுரைக்கு என் வசம் விமர்சனம் ஏதும் இல்லை. இந்த தலைப்பை படித்துப் பாருங்க.

Thekkikattan|தெகா said...

//பங்காளி இந்த முறை இத்ந நல்ல கட்டுரைக்கு என் வசம் விமர்சனம் ஏதும் இல்லை. இந்த தலைப்பை படித்துப் பாருங்க.//

வீட்டிற்குள் நிற்கும் குதிரும் (விதை நெல்), பத்தாயமும் மனதில் வந்து போகிறது. இலை, தழைகள், சேமித்து வைத்திருந்த சாணக் குப்பை வண்டி மாடு வைத்து வயலுக்கு எடுத்து சென்றதும் ஞாபகத்தில் வந்து போகிறது-

எல்லாம் என்னவோ இன்னொரு கிரகத்தில் இப்பொழுது நடந்தது மாதிரியே இருக்கு. அவசரத்தில் எங்கே செல்கிறோம்!

இயற்கை விவசாயத்தை பத்தி பிளிரிட்டீங்க, ஜி! கட்டுரையை அறியத் தந்தமைக்கு நன்றி!

Unknown said...

சல்யூட்...தெகா!

ஒரு விவசாயியாக நான் முன்வைத்த சோகங்களை அருமையாக பதிவில் வடித்துவிட்டீர்கள். நன்றி!!

தொடர்வோம்...

ராஜ நடராஜன் said...

தெகா!அகன்ற பார்வைக்கான இடுகை.மீண்டும் ஒரு முறை படித்து விட்டு வருகிறேன்.

ராஜ நடராஜன் said...

பஸ்ல தஞ்சாவூரான் சொல்லியதா சொன்ன புல்,பூச்சி,பறவை,ஊர்வன என்பவை மனதில் இன்னும் உறுத்திக்கொண்டேயுள்ளது:(

கல்வெட்டு said...

.

Food Inc - பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன் தெகா. கொஞ்சம் நல்லா ஆவணப்படுத்தி இருப்பாங்க‌

ராஜ நடராஜன் said...

நீங்கள் கொடுத்த மனித உரிமை அமைப்புகள் தொடுப்பை படித்தேன்.கூட காணொளியும் இன்று காலையில் கண்டேன்.

நான் பிறகு வருகிறேன்.நன்றி.

Thekkikattan|தெகா said...

கே.ஆர்.பி.செந்தில் said...

மிக நல்ல கட்டுரை.. பாராட்டுக்கள்.//

வணக்கம் செந்தில்.

***************

//ஒரு விவசாயியாக நான் முன்வைத்த சோகங்களை அருமையாக பதிவில் வடித்துவிட்டீர்கள்.//

நீங்கள் காணும் அதே காட்சியைத்தானே நானும் கண்டு வருகிறேன். மிக்க வருத்தத்துக்குறியது. இழந்த அனைத்து விசயங்களும்... திரும்ப எப்பொழுது பெற முடியும்.

Thekkikattan|தெகா said...

Food Inc - பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன் தெகா. கொஞ்சம் நல்லா ஆவணப்படுத்தி இருப்பாங்க‌//

ஆமா கல்வெட்டு சில வருடங்களுக்கு முன்பே Eric Schlosser எழுதிய The Fast Food Nation வாசிக்கும் பொழுதே பகீர் என்றது. அதனை அப்படியே காட்சிய படுத்தியதாக industrialized meat, diary industry பற்றி காமித்து மேலும் எனது கண்களை அகல விரிக்க வைத்து விட்டார்.

ஒவ்வொருவரும் அவசியம் காண வேண்டிய டாகுமெண்டரி. எந்தளவிற்கு இந்தியாவில் மான்செண்டோ தனது காலை ஊன்றியிருக்கிறது என்று தெரியவில்லை. குறைந்த பட்சம் இன்றைய நிலவரத்தில கரவை மாடுகளுக்கு போடு rBGH (bovine growth hormone) உள்ளர நுழைய விடவில்லை என்று அறியும் பொழுது உஷ்ஷ்ஷ் யப்பாடா என்று இருக்கிறது.

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே, நம்பூருல நிலம் சேர்த்துகிட்டு இருக்கேன். எண்ணி ஒருவருஷம், முழுநேர விவசாயத்துக்கு போயிருவேன். அந்த நேரத்தில் உங்க உதவி ரொம்ப வேணும்.

http://rajavani.blogspot.com/ said...

தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரையில் அருமையான விளைநிலங்கள் அனைத்தும் வீடடு மனைகளாக ஆக்கப்படடிருக்கிறது. ஆக்கப்பட காத்திருக்கிறது. இன்னும் பிற நிலங்கள் அரசியல் வியாதிகளால் பிடித்துவைக்கப்பட்டுள்ளது. பண்ணை விவசாயம் கூட ஆட்கள் பற்றாகுறையால் வீட்டு மனைகளாக ஆக்கப்படுகிறது. இதில் இன்னொரு பெரியகொடுமை பல ஏக்கர் விளைநிலங்கள் கல்லூரிகள் கட்ட சுற்றிவளைக்கபட்டுள்ளன.

விவசாய கூலிகள் ஈரோடு , திருப்பூர் என இடம் மாறி தங்களுடைய தொழிலை மாற்றிகொண்டுள்ளனர்.புதிய தலைமுறைகள் எதுவும் விவசாயத்திற்கு வரவில்லை அதைப்பற்றி தெரிந்தும்கொள்ளும் ஆர்வம் இல்லை என்பதும் உண்மை

விவசாயம் குறைந்ததினால் பல்லுயிர் பெருக்கமும் குறைவாய் இருக்கலாம் என்பது என் கருத்து.

மரபணு மாற்றம் பெற்ற பருத்திவிதைகளே பிரபலம் அடைந்துள்ளது தெகா.

விரிவான அலசல் வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா எழுதி இருக்கீங்க..தெகா..
அந்த அழிஞ்சுபோன பூச்சிகள் பத்தி கேட்டா கவலையாத்தான் இருக்கு..
பழைய வகை உணவுகளை உன்ணாமல் இப்ப விதவித வியாதிகள்..:(

மனுசங்களுக்கே இப்படின்னா அந்த சின்ன பூச்சியும் பறவையும் என்ன செய்யும்..

முகுந்த்; Amma said...

தெகா,

மிக மிக அவசியமான மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய இடுகை இது.

மரபணு மாற்று உணவுப்பொருள்களால் ஏற்படும் பின்விளைவுகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்து இருக்கின்றன என்று நினைக்கிறேன்.

இந்த மரபணு மாற்று தொழில் நுட்பத்தை பரப்ப மான்சாண்ட்டோ போன்ற விதை கம்பனிகள் சொல்லும் முதல் காரணம், ”உற்பத்தியை பெருக்கி, உணவுப்பற்றாக்குறையை இந்த விதைகள் தவிர்க்கும் என்பதே”
உற்பத்தியை அதிகரிக்கலாம்,ஆனால் உடல்நலத்தை காக்காவிட்டாலும் பரவாயில்லை, அழிக்காமல் இருக்குமா? என்பதை யாரும் எண்ணிப்பார்ப்பதில்லை.

rBGH எனப்படும் மாடுகள் அதிகம் பால்கறக்க போடப்படும் ஊசியால் இனப்பொருக்க உறுப்புகளுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் மிக அதிகம். ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் இவற்றை எல்லாம் சொன்னால் எடுபடுமா? யார் கேட்க்க கவனிக்க போகிறார்கள் சொல்லுங்கள்..

இப்போது சூப்பர் பக் எனப்படும் எந்த மருந்துக்கும் அடங்காத எதிர்ப்புசக்தி கொண்ட ஒரு பாக்டீரியாவை இந்தியாவில், டெல்லியில் இருக்கும் நிறைய நீரோடைகள் மற்றும் குடி நீர் குழாய்களிலும் பார்த்திருக்கிறார்கள்.. http://www.nytimes.com/2011/04/08/world/asia/08briefs-India.html
ஆனால் எந்த தலைவர்கள் இதனை பற்றி கவலை பட போகிறார்கள் சொல்ல்லுங்கள். :(((

Anonymous said...

உலக மரபணு மாற்ற விதைகள் எதிர்ப்பு தினத்தில் (ஏப்-8) ஒரு அருமையான பதிவு.
நாட்டில் தற்கொலை செய்துகொண்ட 2 லட்சம் விவசாயிகளில் 70 சதவிகிதம் பேர் மரபணு மாற்ற விதைகளைப் பயன்படுத்தியவர்கள்தான்
மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பயிரிடுகிற போது முதல் ஆண்டில் கூடுதல் விளைச்சலும் ஆனால், அடுத்த ஆண்டுகளிலேயே நிலத் தின் தன்மை முற்றிலுமாக சீர்கெட்டு, வேறு பயிர் களையோ, ஊடு பயிர் களையோ விளைவிக்க இயலாத நிலைமை ஏற்படும். குறிப்பிட்ட விதைகளுக்காக தனியார் நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலையும், கடன் சுமை மட்டுமே அதிகரிக்கும். பாரம்பரிய விவசாய முறைக்கு திரும்பி வரமுடியாத அளவுக்கு நிலம் பாழ்பட்டு விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுவார்கள். மரபணு மாற்ற விதைகளைத் தடை செய்ய நடவடிக்கை எடுப்பது யார்???

நன்றி சார்.

Thekkikattan|தெகா said...

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே, நம்பூருல நிலம் சேர்த்துகிட்டு இருக்கேன். எண்ணி ஒருவருஷம், முழுநேர விவசாயத்துக்கு போயிருவேன். அந்த நேரத்தில் உங்க உதவி ரொம்ப வேணும்.//

வாங்கண்ணாச்சி. இப்பூடி எல்லாரும் வருஷத்தை சுருக்கிப்புட்டியளே! நானும் அந்தா இந்தான்னு ஓட்டிக்கிட்டே இருக்கேன். இத்தோ, நானும் வந்திர்ரேன். உங்களுக்கில்லாத உதவியா... மண்புழுவை கூச்ச நாச்சமில்லாது அள்ளி அள்ளி போடுறேன். போதுமா!

உங்க தோப்பில எனக்கு இப்பயே ஒரு துண்டு போட்டு வேச்சர்றேன். கூப்பிட்டு மாட்டேன்னு சொல்லுவேணா :). சீக்கிரம் கிளம்புங்க, சொல்லுறேன்.

Thekkikattan|தெகா said...

வாங்க தவறு,

//தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரையில் அருமையான விளைநிலங்கள் அனைத்தும் வீடடு மனைகளாக ஆக்கப்படடிருக்கிறது. ஆக்கப்பட காத்திருக்கிறது. இன்னும் பிற நிலங்கள் அரசியல் வியாதிகளால் பிடித்துவைக்கப்பட்டுள்ளது//

இது நம்மை பீடித்திருக்கும் ஒரு பெரும் சாபமிது. அனைத்து விளை நிலங்களையும் பட்டா போட்டு வீட்டு மனைகளாக மாற்றுவது. விவசாயம் செய்வதனை கவுரவக் குறைச்சலாக கருதக் கூடிய ஒரு தலைமுறை நம் கையில் இருக்கிறது. பூர்விக நிலங்களை கொண்டவர்களின் பிள்ளைகள் அழுக்கு படியாத வாக்கில் நிலத்தில் கிடந்து உருண்டு புரண்டு ஈட்டுவதை சட்டை கசங்காமல் ஈட்டிக் கொள்ள முடியுமென்ற இடப்பெயர்வு, இப்படியாக விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாகின்றன போலும்.

மட்டுமின்றி, எகிப்திய நணபெருவர் கூறுகிறார். உள்ளூர் மக்களை சோம்பேறியாக்கி நிலத்தில் இறங்கி வேலை பார்க்க அச்சப்படும் கூட்டமாக்கி விட்டால், பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள் மொத்த நிலங்களையும் சுருட்டுவதற்கு ஏதுவாக இருக்குமென்று எகிப்தில் அரசாங்கமே வழிகளை உருவாக்கி கொடுத்ததாம். இப்பொ நம்மூரில், இன்றைய தினத்தில் செய்து வரும் சில தில்லாலங்கடி இலவச வேலைகளும் இதனை போன்று கார்ப்பரேட்களுக்கு நிலம் பெற்றுத் தருவதின் இன்னொரு அணுகுமுறையோ!

சிறு விவசாயிகளை ஒழித்து கட்டி விட்டால், கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க என்ன நடக்குமின்னு...இது தனியாக பேசப்பட வேண்டிய விசயம் என்று கருதுகிறேன்.

//விவசாயம் குறைந்ததினால் பல்லுயிர் பெருக்கமும் குறைவாய் இருக்கலாம் என்பது என் கருத்து.//

நிறைய உண்மை இருக்கிறது. அப்படியே ஒத்துக்கொள்கிறேன்!

ராஜ நடராஜன் said...

தெகா!பின்னூட்டத்திற்காக இல்லாமல் வாசிப்புக்காக மீண்டுமொரு முறை.

ராஜ நடராஜன் said...

நீங்க GM விதைகள் அதன் தாக்கங்கள் பற்றியெல்லாம் சிந்திப்பதும்,மேடம் வந்தனா சிவாவின் பேட்டியும் ஒரே நேர் கோட்டில் பயணிக்கிறது என்பது மட்டும் எனக்குப் புரிகிறது.

விவசாயிகளுக்கும்,விவசாயக்கல்லூரிக்கும் உங்கள் கருத்துப் பகிர்வு போய்ச் சேர்ந்தால் மகிழ்வேன்.

Thekkikattan|தெகா said...

"சர்வதேச பண முதலைகள்" என்பதெல்லாம் நம் பொருளாதாரத்திற்கு உதவ போவதில்லை.//

கார்ஸ், நீங்க சொல்ல வாரது புரியுதுங்க. அதாவது நம்மூரில் வாய்கள் அதிகரித்து விட்டன, ஏற்கெனவே பல பஞ்சங்களை கண்டவர்கள் நாம் எனவே இந்த பசுமை புரட்சியை தழுவி ஏற்றுக் கொள்வதும் வருங்கால பழைய பஞ்சங்களிலிருந்து தப்பிப் பிழைக்க உதவுங்கிறீங்க. அதெல்லாம் சரிதான்.

ஆனால், நாம் இங்கு பேசிக் கொண்டிருப்பது உயிர் பன்முகத் தன்மை பேணலும்... விதை நெல்லை எடுத்து அப்படி தூர வைத்து விட்டு உண்பதற்கு எஞ்சியது போக விற்று ஏனைய பண்டங்கள், செலவுகள் செஞ்ச காலம் போய் இன்று ரூபாய் 17 கொடுத்து விதை நெல் வாங்கும் கட்டத்தில் இருந்தால் எப்படி ஒரு தனியொரு விவசாயி தன்னிறைவுடன் வாழ முடியும்.

அத்தோடு மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் ஓர் OS வைத்திருக்கிறது அதனையொட்டியே பல வைரஸ்களும் வெளி வந்திருக்கிறது, நீ இதனை வைத்திருந்தால் அதற்கான பாதுகாப்பிற்கு இதனையும் வாங்கித்தான் ஆக வேண்டுமென்ற மென் பொருட்களும் நன்மையும்/தீமையுமாக வெறும் லாபத்தை மட்டுமே கொண்டு இயங்கும் ஒரு தளமாக விவசாயத்தையும் ஆக்கிக் கொள்ள முடியுமா?

Should not we consider more about our ecological niche of local flora and fauna?

இன்னும் பேசுவோம் அடுத்தடுத்த பின்னூட்டங்களில்... நிறைய பேச வேண்டியிருக்கிறது.

Thekkikattan|தெகா said...

இன்றுள்ள மக்கள் தொகை மற்றும் வறுமையை கணக்கில் கொண்டு பார்த்தால், நாம் பல புதிய வழிமுறைகளை (GM food உட்பட) நாடியே ஆக வேண்டும்.//

இதுவும் ஒரு முக்கியமான கவனத்தில் நிறுத்த வேண்டிய விசயம்தான். ஆனால், பசிக்கிறது என்பதற்காக நாம் என்ன உண்கிறோம் என்பதனை கருத்தில் கொள்ளாமல் உண்பது நாளை வேறு மாதிரியான பிரச்சினைகளுக்கு அல்லவா நம்மை இட்டுச் செல்கிறது. இங்கு நம் நிலை மூட்டை பூச்சிக்கு (பசிக்கு) பயந்து வீட்டையே கொளுத்திக் கொள்வது போலத்தானே (தேசத்தின் உணவு தாவர வகைகளை கையை விட்டே போக வைத்துக் கொள்வது எனக் கொள்க - மறைமுகமாக அத்துடன் பின்னி பிணைந்திருக்கும் லோகல் ஜீவராசிகளும் தானே).

பறவைகளோ/பூச்சிகளோ இல்லாத ஒரு வயல் காட்டை உங்களால் நினைத்து பார்க்க முடிகிறதா, கார்ஸ்? நம்மைத் தவிர வேறு எந்த உயிரினம் co-evolve செய்ய விடமாட்டோமென்ற ஒரு நிலைக்குள் நம்மை இட்டு நிரப்பிக் கொண்டதாக அல்லவா ஆகி விடுகிறது.

//நெருப்பை, கத்தியை முதலில் பயன்படுத்திய மனிதன் அவற்றின் கெடுதல்கள் மட்டுமே பார்த்து பயந்திருந்தால் இன்றும் நாம் குகைகளில் தான் வாழ்ந்து கொண்டிருப்போம்.//

ஆமாம். அந்த க்யூரியாசிடியே இன்று நம்மை பரிணாமத்தின் உச்சத்தில் வைத்திருக்கிறது என்ற போதிலும் உயிர்களில் வழிந்து சென்று மாற்றங்களை செருகுவது சற்றே சிந்தித்து செயல்பட வேண்டிய விசயமென்பது எனது நிலைப்பாடு. ஏனெனில் நம்மின் இருப்பு அவைகளுடன் மிக்க நெருக்கமாக கட்டப்பட்டுள்ளது. 2500 நெல் வகைகளும் அவற்றின் சிறப்பியல்பும் சரிவர புரிந்து கொள்ளப்படாமலேயே வெறும் நான்கு நெல் வகைகளுடன் மொத்த பூமிய மக்களுமே வாழ்ந்து விடுவது என்பது ஒரே கூடைக்குள் எல்லா முட்டைகளையும் போட்டுக் கொண்டு பரிணாமத்துடன் விளையாடும் விளையாட்டு என்பது போல் உள்ளது.

Anna said...

நன்றாக எழுதியுள்ளீர்கள். Broadly I agree with you. எனது எண்ண‌ங்கள் கிட்டத்தட்ட எல் போர்ட்டினதும் CorText இனதும் கருத்துக்களோடு ஒத்துப் போகின்றன.


Selective breeding நாம் விவ‌சாய‌த்தைத் தொட‌ங்கிய‌திலிருந்தே ந‌ட‌ந்து கொண்டிருக்கிற‌து. Selective breeding செய்திருக்காவிடில் நாம் த‌ற்போது உட்கொள்ளும் எந்த‌வொரு ம‌ர‌க்க‌றிக‌ளும் இருக்காது தானே. ஆனால் selective breeding அவ்வினத்தாவரங்களில் ஏற்கனவே இருக்கும் மரபணுக்களை வைத்தே செய்யப்படுகின்றன. ஆனால் இத‌ற்கு அடுத்த‌ ப‌டியாக‌ வ‌ந்திருக்கும் இந்த‌ ம‌ர‌ப‌ணு மாற்று முறைக‌ள் தொட‌ர்ப‌ற்ற‌ ப‌ல்வேறு இன‌ங்க‌ளிலிருந்து ம‌ர‌ப‌ணுக்க‌ளை எடுத்து தாவ‌ர‌ங்க‌ளுக்குள் புகுத்துகின்ற‌ன‌. அத‌னால் ஏற்ப‌டும் நீண்ட‌ கால‌ விளைவுக‌ள் எம‌க்கு நிச்ச‌ய‌ம் தெரியாது, அத‌னால் மிக‌ மிக‌க் க‌வ‌ன‌த்துட‌னேயே இதை அணுக‌ வேண்டும். ஒழுங்காக‌ ப‌ல‌ கால‌ங்க‌ளுக்குத் தனிமைப்படுத்திப் ப‌ரிசோதிக்காம‌ல் இய‌ற்கையில் இவ்வின‌ங்க‌ளை விடுவ‌து மிக‌ ஆப‌த்தாக‌ அமைய‌லாம். நிச்ச‌ய‌மாக‌.

"அந்த இயற்கையின் அமைப்பை உடைத்து, சார்பு நிலையையும், அடிமை தனத்தையும் வளர்க்கும் மரபணு மாற்றமுற்ற மலடி விதைகளை விளைவித்து உண்டது போக மீண்டும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆய்வகத்தில் உருவாக்கித் தரும் விதைகளுக்கு கையேந்தி நிற்பதில் எத்தனை சுதந்திரம் ஒரு விவசாயிக்கு இருந்து விட முடியும்."

இது நிச்சயமாக எதிர்க்கப்பட வேண்டியதே.

Anna said...

"செயற்கையாக கரவை மாடுகளில் வளர்ச்சியைச் தூண்டும் மாற்று மரபணு வளர்ச்சிக் ஹார்மோன்களை உட்செலுத்தி அதிக பாலை பெறும் முயற்சியில் நமக்கு கிடைக்கும் உபரி - (IGF-1- இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி) அந்த பாலின் மூலமாக கிடைக்கப் போய் அதுவே புற்று நோயைத் தூண்டுவதாக அமைந்து விடுகிறது."

செயற்கையாக மாடுகளுக்கோ கோழிகளுக்கோ growth hormones ஒ IGF-1 ஓ கொடுப்பதில் எனக்கும் உடன் பாடில்லை. ஆனால் இப்படி bGH கொடுக்காவிட்டாலும் (இங்கு NZ மாடுகளுக்கு இந்த bGH ஓ IGF ஓ வேறெந்த hormones ஓ கொடுப்பதில்லை) கூட, அந்தக்காலத்தைப் போலல்லாமல் இப்ப மாடுகள் கன்றுகள் ஈன்ற மூன்று மாதங்களிலேயே மீண்டும் செயற்கையாகக் கருத்தரிக்கப் பண்ணி அதன் பின்னும் பால் பறந்து கொண்டும் இருக்கிறார்கள். They are pregnanct and constantly lactating thorough out the year. அதனாலேயே பாலில் பல hormone களின் அளவு மிகக் கூடுதலாக உள்ளது.

Thekkikattan|தெகா said...

வாங்க Analyst,

//Selective breeding நாம் விவ‌சாய‌த்தைத் தொட‌ங்கிய‌திலிருந்தே ந‌ட‌ந்து கொண்டிருக்கிற‌து. //

தேர்ந்தெடுப்பு இனப்பெருக்கும் என்று நான் இங்கே குறிப்பிட்டது, மரபணு மாற்று முறையில் ஒரு சில ரக வகை உணவு பயிர்களை மட்டும் வைத்துக் கொள்வதனைத்தான். ஆதிகாலத்திலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வரையும் நாளை நடக்கவிருக்கும் இயற்கை சார்ந்து நன்கு பலன் தரும் விதைகளை தேர்ந்தெடுப்பதற்கு எதிராக அல்ல.

//ஆனால் selective breeding அவ்வினத்தாவரங்களில் ஏற்கனவே இருக்கும் மரபணுக்களை வைத்தே செய்யப்படுகின்றன.//

ஆமாம். இது மிக மிக முக்கியம் என்று கருதுகிறேன்.

கீழே அமைந்த பதில் நண்பர் கார்ஸ்க்கும் பொருந்தும்...

//அத‌னால் ஏற்ப‌டும் நீண்ட‌ கால‌ விளைவுக‌ள் எம‌க்கு நிச்ச‌ய‌ம் தெரியாது, அத‌னால் மிக‌ மிக‌க் க‌வ‌ன‌த்துட‌னேயே இதை அணுக‌ வேண்டும். ஒழுங்காக‌ ப‌ல‌ கால‌ங்க‌ளுக்குத் தனிமைப்படுத்திப் ப‌ரிசோதிக்காம‌ல் இய‌ற்கையில் இவ்வின‌ங்க‌ளை விடுவ‌து மிக‌ ஆப‌த்தாக‌ அமைய‌லாம்.//

இயற்கைவியலர்கள் சொல்ல முனைவதும் இதுவே! எது போன்ற விளைவுகளை நாளை நிகழ்த்துமென்று நமக்குத் தெரியாது ஒரு முறை wildல் புகுத்தி விட்டால். உதாரணத்திற்கு மரபணு மாற்று முறையில் டிலேபியா வகை மீனிடமிருந்து இனப்பெருக்கம் செய்யும் மரபணுவை உருவி எடுத்து விட்டு, அகோரப் பசியுடன் சாப்பிட்டு உடம்பை மட்டுமே போடத் தெரிந்த மீன் ஒரு நீர் நிலையில் புகுந்தபடுகிறது, அது அங்கு வாழ்ந்த பூர்விக wild டிலேபியாவிற்கு மட்டும் அச்சுருந்த்தலாக அமையவில்லை. அந்த நீர் நிலையிலிருந்த ஒட்டு மொத்த சூழலியத்திற்குமே (ecosystem) வேட்டு வைத்துவிடும்தானே!

ஓறு முறை தளத்தினுள் இறக்கிவிட்டால் இதனை எப்படி நாம் கட்டுக்குள் வைக்க முடியும்?

அதனை போன்றே மாற்று மரபணு முறையில் கண்டு பிடிக்கப்பட்ட சோயா பீன்ஸோ அல்லது பருத்தியோ மகரந்த சேர்க்கையின் போது அண்டைய வயல் காடுகளில் தேவையற்ற அதே இயற்கை வகை பயிர்களோடு இனக்கலப்பு செய்து பிறகு கார்ப்பரேட் பேடண்ட் வகை என கண்டுபிடிப்பில் தெரிய வந்தால், அந்த விவசாயி தண்டத்தொகை கட்ட வைக்கப்பட்ட கதை அமெரிக்காவில் நிறைய நடந்து பல ஆயிர சிறு விவசாயிகள் விவசாயத்தை விட்டே விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற அடாவடி, குண்டர்தனத்திற்கு என்ன பதில் வைத்திருக்கிறோம்...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

சில சமயங்களில் இந்த மரபணு எஞ்சினியரிங் பெரியதான நன்மையையே பாவிக்கிறது.. உதாரணத்துக்கு, rDNA மருந்துகளைச் சொல்லலாம்.. அதையெல்லாம் நாம் எதிர்ப்பதில்லை..

ஒரு சாப்ட்வேரை உருவாக்கி விக்கிறாப்புல இவங்க இந்த டெக்னாலஜிய நம்ம அரசாங்கத்துக்கு பெரிய விலைக்கு வித்துட்டு அதுக்கு மேல நீங்களாச்சு உங்க விவசாயிகளாச்சுன்னு விட்டுட்டா பரவாயில்ல.. இவங்க விதைக்கான பேடன்ட் உரிமைய நாங்களே வச்சுப்போம் ன்னு சொல்லுறாங்க.. அதாவது ஒவ்வொரு வாட்டியும் விவசாயி இவங்க கிட்டத் தான் வாங்கியாகனும்.. சில சுற்று இவங்களோட விதையை வைத்து விவசாயம் செய்து முடிஞ்சப்புறம், the farmers would become totally dependent on them as by that time all the native seeds would have become totally useless or depleted.. this is what they intend for.. eventual monopoly of agriculturism!!

ஒரு விவசாயி இந்த விதைகளை அவனோட நிலத்திலே விதைச்சு, உண்மையிலேயே இது pesticide resistant ஆக இருந்து விட்டாலும், பூச்சிகள் resistant ஆ இல்லாத செடிகளைத் தாக்கினால் பக்கத்து தோட்டக்காரனுக்கு நஷ்டம் ஆகும்.. அதனால அவனும் இதையே வாங்கிப் போட்டாக வேண்டிய நிலைமை உருவாகும்..

கார்ஸ், நீங்க சொன்ன உதாரணம் மாதிரி இன்னொன்னு.. கைத்தறி போயி விசைத்தறி வந்ததையெல்லாம் கூட வரவேற்கலாம்.. ஏன்னா ஒரு சிறு தொழில் நிறுவனர் விசைத்தறிய வாங்கிப் போட்டுட்டா அது அவன் காலம் வரைக்கும் அவனோடது.. ஆனா இதுல அப்படியில்ல..

நம்ம நாட்டுல நேர்மையாக சிறு pilot projects ல இதைப் பரீட்சித்துப் பார்த்து அதனால் ஏற்படும் நன்மையை ஆய்ந்து விவசாயிக்கு வழங்குறது எல்லாம் நடக்கிற காரியமா?

Thekkikattan|தெகா said...

கார்ஸ்,

// நம் நாட்டின் தேவைக்கேற்ப புதியவற்றிலுள்ள நல்லவற்றை தேர்ந்தெடுப்பதும்,//

அது ஓரளவிற்கு நடந்தேறியே வந்திருக்கிறது. இயற்கைசார் தேர்ந்தெடுப்பில் எனக்கு எந்த பிரச்சினையுமில்லை. குறுகிய கால சாகுபடியில் அதிக மகசூல் பெறத்தகுந்த ரகமா ஒத்துகொள்ளபட்டது ஆனால் அதற்கென பேடண்ட் கிடையாது., விதை அடுத்த விதைப்பிற்கு இருக்க வேண்டும்.

//Based on your Microsoft example, I'm just curious... Are you against capitalism in general? or do you just think capitalism is not suitable for agriculture industry? or...//

எதிர்ப்பாளன் என்ற ஒரு நிலையெல்லாமில்ல, கார்ஸ். நான் கூற வந்தது மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் மென்பொருட்களை அடிப்படையாக கொண்டு அதனை தாக்கும் வைரஸ்களுக்கு நிதியளித்து அந்த விதமான மென்பொருட்கள் வெளி வருகிறது, அதனிலிருந்து நம் கணினியை பாதுகாத்து கொள்ள அதற்கான மென்பொருளை வாங்கியே ஆக வேண்டுமென்ற நிலை. அப்படித்தானே!

ஆனால், இதற்கு முடிவுதான் எங்கே? இந்த தாக்கும் வைரஸைகளை எழுத/கண்டுபிடிக்க யார் நிதியளிக்கிறார்கள்... அதற்காக வெளி வரும் பாதுகாப்பு வைரஸ்க்கு யார் நிதியளித்தார்கள் என்று நமக்குத் தெரிகிறது.

இது போலவே நாளை விவசாயத் துறையில் இது போன்ற தில்லாலங்கடி வேலைகள் நடக்காது என்று என்ன நிச்சயம்? ஆனால், ஒரு வித்தியாசம் இங்கே நாம் உயிர் உள்ள பூச்சிகளுடன் விளையாண்டு மென் மேலும் புது வித strandவுடனான உயிரிகளை உருவாக்கித் தொலைய மாட்டோம் என்ற உத்ரவாதம் உள்ளதா? பணம் மட்டுமே குறிக்கோள் எனும் போது... அங்கே ஏதாவது ethics உள்ளதா?

//இன்று, இந்தியாவில் ஒரு நாளைக்கு 6000 குழந்தைகள் பட்டினியால் சாகின்றார்கள். அப்படியெனில்... எத்தனை பேர் பட்டினியில் வாழ்கின்றார்கள்? //

புரிகிறது, கார்ஸ். வெட்கி வருத்தப்பட வேண்டிய விசயம். அதற்காக நம்மிடம் உணவு பற்றாக் குறை இன்று இருக்கிறது என்று பொருளா? நான் அப்படி கருதவில்லை. சமமான முறையில் பொருளாதாரம் போய்ச் சேர்ந்து வாங்கும் திறனை உருவாக்கி கொடுக்கும் அமைப்பு நம்மிடமில்லை என்று கருதுகிறேன். ஜஸ்ட் ஒரு 60 வருடங்களுக்குள் இந்தியாவின் ஜனத் தொகை மூன்று மடங்கு எகிற முடிந்ததே எப்படி?

இன்றைய நிலவரப்படி 1.4ட்ரில்லியன் டாலர்ஸ் ஸிவிஷ் வங்கியில் நமது பணம் இருக்கிறதாம். இது எத்தனை கோடி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதும், உணவளிப்பதுமாக, அடிப்படை கட்டு மானங்களில் முன்னேறிக் கொள்வதற்குமான பணமிது... சோ, எங்கே தவறு நடக்கிறது?

Shrek said...

makeup? = myth of
false met? = false myth
cindy's? = in these
gently engineering? = genetic engineering
one estimate? = one is to make resilience? =resilient
spread more on top ? = spread more around up
won't look the state? = you get to spread more glufosinate (its an ammonium based salt):)) LOL
get to spend on prices?? = get to spread more poison
nothing desirable = not a desirable watchmen sent a Bill called means? = what Monsanto will call seeds

man's hand to hand ads = Monsanto had ads

Thekkikattan|தெகா said...

முகுந்தம்மா,

//rBGH எனப்படும் மாடுகள் அதிகம் பால்கறக்க போடப்படும் ஊசியால் இனப்பொருக்க உறுப்புகளுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள் மிக அதிகம்.//

ஆமாம், தனியாக ஒரு டாகுமெண்டரி இதனைச் சார்ந்து பார்த்தேன். மிகக் கொடுமை!

//ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் இவற்றை எல்லாம் சொன்னால் எடுபடுமா? யார் கேட்க்க கவனிக்க போகிறார்கள் சொல்லுங்கள்...//

கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால், கடுமையாக போராடித்தான் கொண்டு போய் சேர்க்கணும். இப்பொழுது இங்கே கொஞ்சம் விழிப்புணர்வு அதிகரித்து தான் எது போன்ற உணவை உட்கொள்கிறோம் என்று தேர்வு செய்து சாப்பிடும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். எல்லாம் புற்றுநோயின் பெருக்கம் கொடுத்த பாடமாக இருக்கலாம்...

//டெல்லியில் இருக்கும் நிறைய நீரோடைகள் மற்றும் குடி நீர் குழாய்களிலும் பார்த்திருக்கிறார்கள்...//

ஓ! அப்படியா, கொடுத்த இணைப்பை படித்து பார்க்கிறேன். ஆமா, இந்தியாவில் இதற்கு முன்னால் சிக்குன் குனியா, டொங்கு காய்ச்சல் போன்ற சீசனல் வியாதிகள் இருந்தனவா? எந்த ஆண்டிற்கு பிறகு இது அறியப்பட்டது விபரமறிந்தால் பகிர்ந்து கொள்ளுங்க, முகுந்தம்மா.

//ஆனால் எந்த தலைவர்கள் இதனை பற்றி கவலை பட போகிறார்கள் சொல்ல்லுங்கள். //

தலைவர்களா? விஜயகாந்த் போன்றும் நாளை வடிவேல் ஒரு கட்சி ஆரம்பித்து அவரும் தலைவராக இருந்தால் எல்லாமே விளக்கி வேண்டுமென்பதனை பெற்று விடலாம்... hopelessங்க அரசியல் சூழ்நிலை :(

Thekkikattan|தெகா said...

//அந்த அழிஞ்சுபோன பூச்சிகள் பத்தி கேட்டா கவலையாத்தான் இருக்கு..
பழைய வகை உணவுகளை உன்ணாமல் இப்ப விதவித வியாதிகள்..:(

மனுசங்களுக்கே இப்படின்னா அந்த சின்ன பூச்சியும் பறவையும் என்ன செய்யும்...//

@முத்து - அதான் வேணுமாம், நம்மை சுத்தி வேறு எந்த விதமான பூச்சி, பட்டைகளும் இருக்கப்பிடாது கண்ணுக்கு எட்டிய தொலைவிற்கு. நமக்கே இப்படின்னா - அவைகள் சத்தமில்லாம நிப்பாட்டிக்கும் சுவாசிக்கிறதை... எத்தனை செங்கல் நிற பருந்து (brahminy kite) இப்பொல்லாம் பார்க்கிறீங்க ஊருக்கு பார்க்கும் போது சொல்லுங்க?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

தெகா.. இவங்க ரொம்ப பெரிய ஆளு.. பல நாட்டுல பல வழக்குகள்.. ம்ம்..

http://en.wikipedia.org/wiki/Monsanto

கார்ஸ்.. உங்க கேள்விக்கு எனக்கு பதில் சொல்லத் தெரியல.. ஆனா இவங்க நோக்கம், உணவுப் பஞ்சத்தைப் போக்குவது இல்ல அப்படின்னு தோணுது..

ப.கந்தசாமி said...

நிலம் மாசுபடுதல் என்பது விவசாயம் பற்றிய தனிப் பிரச்சினை இல்லை.
மொத்த உலகமும் எவ்வாறு மாறிக்கொண்டு இருக்கிறது என்பதை வைத்தே தனித்தனி தொழில்களை மதிப்பீடு செய்ய இயலும்.

இந்தியாவின் முக்கியப் பிரச்சினை அதன் ஜனத்தொகை. அதைப்பற்றி யாரும் பேசுவதாகத் தெரியவில்லை. ஆனால் அது தொடர்பாக வரும் பிரச்சினைகளை அதன் மூலவேர் தெரியாமல் அலசிக்கொண்டு இருக்கிறோம்.

நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் - குறள்.

மாதேவி said...

அவசியமான பதிவு.

Anna said...

It's time to question bio-engineering

Scary!

Thekkikattan|தெகா said...

அனலிஸ்ட்,

காணொளியை பார்த்தேன். நாம் பெட்ஸ் ’ஆர்’ எஸ்-ல் சென்று இரண்டு மூன்று பிராணிகளின் பண்புகளை உள்ளடக்கிய விசயங்களை ஒரு வளர்ப்பு பிராணியில் போட்டு வாங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நகைச்சுவைக்காக எனது பதிவில் ஏதோ ஒரு பின்னூட்டத்தில் பேசியிருந்தோம்.

அது கிட்டத்தட்ட எட்டி விடும் தூரத்தில்தான் இருக்கிறது- மனிதனால் உற்பத்திக் கொள்ளும் இந்த ’இலக்கையுடைய பரிணாம (directed evolution)’ யுகத்தில். இங்கு பணம் மட்டுமே பிரதானம். இதனை அறிவியலின் leap என்று கருதிக் கொள்ள மாட்டேன், பரிணாம பாதையில் சிறு தடங்களை ஏற்படுத்தி நம்மை நாமே சிதைத்துக் கொள்ளும் an obsessive disorder in pushing things with science-maniac attitude.

இருட்டில் ஒளிர வேண்டுமா... ஆழ் கடல் மீனின் அதற்கான மரபணுவை உன்னுள் வைத்து தைத்துக் கொள்... அட அட என்னே கற்பனை!

Amy Cook said...

இன்றுள்ள மக்கள் தொகை மற்றும் வறுமையை கணக்கில் கொண்டு பார்த்தால், நாம் பல புதிய வழிமுறைகளை (GM food உட்பட) நாடியே ஆக வேண்டும்.// இதுவும் ஒரு முக்கியமான கவனத்தில் நிறுத்த வேண்டிய விசயம்தான். ஆனால், பசிக்கிறது என்பதற்காக நாம் என்ன உண்கிறோம் என்பதனை கருத்தில் கொள்ளாமல் உண்பது நாளை வேறு மாதிரியான பிரச்சினைகளுக்கு அல்லவா நம்மை இட்டுச் செல்கிறது. இங்கு நம் நிலை மூட்டை பூச்சிக்கு (பசிக்கு) பயந்து வீட்டையே கொளுத்திக் கொள்வது போலத்தானே (தேசத்தின் உணவு தாவர வகைகளை கையை விட்டே போக வைத்துக் கொள்வது எனக் கொள்க - மறைமுகமாக அத்துடன் பின்னி பிணைந்திருக்கும் லோகல் ஜீவராசிகளும் தானே). பறவைகளோ/பூச்சிகளோ இல்லாத ஒரு வயல் காட்டை உங்களால் நினைத்து பார்க்க முடிகிறதா, கார்ஸ்? நம்மைத் தவிர வேறு எந்த உயிரினம் co-evolve செய்ய விடமாட்டோமென்ற ஒரு நிலைக்குள் நம்மை இட்டு நிரப்பிக் கொண்டதாக அல்லவா ஆகி விடுகிறது. //நெருப்பை, கத்தியை முதலில் பயன்படுத்திய மனிதன் அவற்றின் கெடுதல்கள் மட்டுமே பார்த்து பயந்திருந்தால் இன்றும் நாம் குகைகளில் தான் வாழ்ந்து கொண்டிருப்போம்.// ஆமாம். அந்த க்யூரியாசிடியே இன்று நம்மை பரிணாமத்தின் உச்சத்தில் வைத்திருக்கிறது என்ற போதிலும் உயிர்களில் வழிந்து சென்று மாற்றங்களை செருகுவது சற்றே சிந்தித்து செயல்பட வேண்டிய விசயமென்பது எனது நிலைப்பாடு. ஏனெனில் நம்மின் இருப்பு அவைகளுடன் மிக்க நெருக்கமாக கட்டப்பட்டுள்ளது. 2500 நெல் வகைகளும் அவற்றின் சிறப்பியல்பும் சரிவர புரிந்து கொள்ளப்படாமலேயே வெறும் நான்கு நெல் வகைகளுடன் மொத்த பூமிய மக்களுமே வாழ்ந்து விடுவது என்பது ஒரே கூடைக்குள் எல்லா முட்டைகளையும் போட்டுக் கொண்டு பரிணாமத்துடன் விளையாடும் விளையாட்டு என்பது போல் உள்ளது.

Related Posts with Thumbnails