இந்த புகைப்படத்தை பார்த்ததிலிருந்து இனம் புரியாத எரிச்சலும், மானுட நம்பிக்கை இழக்க வைக்கும் எண்ணங்களுமாக என்னுள் எழுந்து போகிறது. நம்முடைய அரசு யாரை எரிச்சல் படுத்தி பார்க்க மேலும், மேலும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி பார்க்கிறது? இந்த புகைப்படத்தினை பார்த்த மாத்திரத்தில் இருந்து என்னுள் எழுந்த கேள்விகளில் சில:
அ) ஆயிரக் கணக்கில் மனித உயிர்களை உயிரோடும், குத்துயிரும், கொலை உயிருமாக இருக்கும் போதே புல்டோசர் கொண்டு நிரவியும், குழியுனுள் போட்டு மூடியும் கொன்ற ஒருவருக்கு எப்படி இன்னமும் மனித மாண்புகள் இருக்கக் கூடுமென்று எந்த கடவுளும் ஆசிர்வதிக்கும்? அதற்கு சாமீ பூஜாரிகளும் இந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் போலவே அங்கீகரித்து ஆசீர்வதிப்பார்கள்? அவருக்கு மென்மேலும் எதனை நிகழ்த்த ஆசீர்வாதம் வழங்கப்படுகிறது?
ஆ) ஒருவரை ஏதோ ஒரு நோக்கத்திற்காகவோ அல்லது அறியாமலோ கொன்று விட்டால் கூட ஒரு காலத்தில் மனசாட்சி கேக்காமல் தன்னையே ஒப்படைத்து கொள்ளும் மனித மனத்திற்கிடையே, எப்படி ஒருவர் பல்லாரயிக்கணக்கான உயிர்களை கதறக் கதற அழித்தொழித்துவிட்டு இப்படி மண்டைக்குள் எந்த குடைச்சலுமே இல்லாமல் புன்னகைத்து அலைந்து திரிய முடியும்? சரி, சில மனிதர்கள் நம்புவது போலவே ஆவி, பேய், பிசாசு சமாச்சாரங்கள் உண்மையாக இருந்தால் இவர்களை ஏன் போய் பிராண்டப்படாது? அப்போ அதுவும் உண்மையில்லையா??
இது போன்ற பல கேள்விகள். அதனையொட்டியும் சில பின்னூட்டங்களையும்,
உண்மைத் தமிழன் பதிவினையும் படித்ததிற்கு பின்னாலும் வந்த சிந்தனையையும் சற்றே விரிவாக கீழே வைத்திருக்கிறேன். பொறுமை உள்ளவர்களும், தன்னைத் தானே தரம் பிரித்து பார்த்துக் கொள்ள விரும்புவர்களும், please go on read...
மற்ற விலங்குகளிடமிருந்து நம்மை பிரித்துணர நமக்கு கிடைத்த சிறப்பு பண்புகளிலேயே ஆறாம் அறிவாக கிடைத்த சிந்திக்கும் பண்பே சிறந்தது என்று இங்கே பலர் அறிவோம். இந்த சிந்திக்கும் திறனாலேயே நாம் இன்றைய பரிணாம ஏணியின் உச்சத்தில் ஒரு மானுட இனமாக ஏனைய ஜீவராசிகளை அடக்கி ஒடுக்கி உச்சாணிக் கொம்பில் அமர்ந்து கிடைத்த குச்சி ஐசை சுவைத்துக் கொண்டுமிருக்கிறோம்.
இந்த சிந்திக்கும் திறனுக்கு மிகவும் துணையாக இருப்பது நமது ஞாபக சக்தி. இந்த ஞாபக சக்தி தனிமனித வளர்ச்சியினைக் கொண்டு பல குண நலன்களாக தேவையான பொழுது இப்பொழுது நடக்கும் ஒரு நிகழ்வினூடாக பழைய விசயத்தினை வைத்து தைத்து எடுக்கும் முடிவிற்கு முக்கிய காரணியாக செயல்பட்டு நம் முன்னால் நிற்கும் அந்த மனிதன் எது போன்ற எண்ணச் செயல்பாடுகளை கொண்டவன் என்பதனை அறியத் தருவதாக இருக்கிறது.
அந்த தனிமனிதன் தனிப்பட்ட முறையில் குண நலன்களாக பொது நலனை கருத்தில் கொண்டு அடுத்தவர்களுக்கு நிகழும் தன் முயற்சியற்ற அநீதிகளை தனக்கானதாக கருதி எந்த தருணத்திலும் சமரசம் அடைந்து கொள்ளாமல் தக்க தருணத்தில் நீதி பெற்றுத் தரும் ஒரு ’மைட்டோகாண்ட்ரியா’வாக ஒரு சமூகத்தில் இருக்கலாம். மாறாக, சுயநலத்துடனும், வசதியாகவும் தனக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் உண்மை விசயங்களை புறந்தள்ளி இயல்பாகவே அது போன்ற விசயங்களிலிருந்து தன்னை விடுவித்து கடந்து செல்லும் ஒரு நிகழ்வாக பார்வையுரும் சுயநல நபராகவே தன்னை, தன் சிந்திக்கும் திறனை பழக்கப்படுத்திக் கொள்பவராக அமைந்து விடுவர்.
இது போன்று ஞாபக சக்தியில் நிறுத்தும் பழைய, கடந்து போன சம்பவங்களில் கசப்பான, உடலுக்கும்/மனதிற்கும் தீய்மை தரும் விடயங்களை மறந்து கடப்பது நமக்கு மிக்க நன்மை பயக்கும். அதே சமயத்தில் உலக ப்ரபஞ்ச ரீதியில் ஒட்டு மொத்தமாக மனித நிலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிறந்து போனதினையொட்டி இன்னொரு இனத்தின் ஊடாக பிறந்தவர் தவறான எண்ணங்களை தனது இனத்திற்கு ஊட்டி வலிமையற்ற ஓரினத்தை தனது சுய லாபங்களுக்காக துடைத் தெரியும் துர்ச் சம்பவத்தை கண்ணுருகிறோம் என்றால் எப்படி அந்த மனிதனை இன்னமும் நம் கூடவே வைத்துக் கொண்டு ஒன்றுமே நிகழாத மனநிலையில் நம்மால் மறந்து வாழ்ந்து விட முடியும்?
மனிதர்களாக அப்படி கடந்து விடுவதும், அது போன்ற மனிதர்களை நம் கூடாக வாழ விடுவதும் நாளை நடந்து முடித்திருப்பதனைக் காட்டிலும் பெரியளவில் எடுத்து நிகழ்த்த முயல மாட்டான் என்று எந்த நிச்சயத்தில் நாம் நிம்மதியாக உண்டு, உறங்கி எழ முடியும்? இதற்காக நீ செய்வதனை நிறுத்திக் கொண்டாயா என்ற அதி புத்திசாலித்தனமான கேள்வியை கேட்டு மடக்க நேரத்தை இழக்க வேண்டாம்...
சில வருடங்களுக்கு முன்பு மும்பை தாஜ் மற்றும் புகைவண்டி நிலையத்திலும் கண் மூடித்தனமாக கட்டவிழ்த்து விடப்பட்ட துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தானின் நேரடித் தலையீடு இருப்பதாக அதனைத் தொடர்ந்த வருடங்களில் பாகிஸ்தானும் அந்த துப்பாக்கிச் சூட்டிற்கான விசாரணையில் ஒத்துழைக்க செய்யவில்லையென ‘கிரிக்கெட் பேச்சு வார்த்தையில்’ கூட சேர்த்துக் கொள்ளாமல் உலக மேடையில் நம் தேசம் அவர்களை அவமானப் படுத்தி பார்த்தது.
இங்கு சில பேர் சொல்வது போல அதாவது விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் அன்றைய சூழ்நிலையில் பாகிஸ்தானை புறக்கணித்து உலகத்தின் பார்வையை அந்த நாட்டை நோக்கி பார்க்க வைக்கும் நோக்கில் செய்து காமித்தோம். என்னை பொருத்த மட்டில் அதுவும் ஒரு நல்ல அரசியல் நகர்வு என்பேன். ஆனால், இன்று எந்தளவிற்கு அந்த நாடு இந்தியாவின் பாதுகாப்பு கருதி பாதி வழி வந்து நம் நாட்டின் கோரிக்கைகளை ஏற்றிருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், இப்பொழுது வட்டியும் முதலுமாக இந்த வாரம் நடந்து முடிந்த ‘கிரிக்கெட் பேச்சு வார்த்தையில்’ முதல் மரியாதை கொடுத்து பாகியின் பழைய கோபத்தை தனிந்து போகச் செய்திருக்கிறது.
இதன் பின்னணியிலேயேதான் உலக அரங்கில் அந்த குட்டியூண்டு இலங்கை தீவில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்தேறிய இனப்படுகொலை தொடர்பாக உலக அரங்கில் மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரிப்பு அந்த நாட்டின் அதிபருக்கு இருக்கிறது. ஆனால், அதனின்று தப்பித்து தப்பித்து எந்த அடையாளங்களை அப்புறப்படுத்தவோ என்னவோ இன்றைய அளவிலும் எந்த ஒரு வெளி நாட்டு மனித உரிமை கழகத்தினையோ, பத்திரிக்கைகளையோ உள்ளே விடாமல் அடைத்து வைத்துக் கொண்டு எதனையோ அவசர அவசரமாக செய்து கொண்டிருக்கிறார்.
அண்டைய தேசமான மிகப் பெரிய ஜனநாயகத்தை உள்ளடக்கிய ஒரு நாடு அதன் கை சுத்தமாக இருந்தால், காந்தி பிறந்த மண் அஹிம்சையை போதிக்கும், சிறப்பாக எடுத்தியம்பும் ஒரு நாடு இலங்கையில் இது போன்றதொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது எனும் பட்சத்தில் அந்த அதிபரை உலக சபையின் முன் நிறுத்தி நீதியை நிலை நாட்டித் தருவது என்பது அதன் பங்கும், கடமையுமில்லையா?
ஒரு முரடனை தனிமைப் படுத்தி, அவன் உண்மையான முகம் வெளிக் கொண்டு வர அதற்கான வழிகளுக்கான சந்தர்ப்பம் அமையும் பொழுதெல்லாம் சுறுக்கை இறுக்குவதின் மூலமாக மட்டுமே அல்லவா அநீதியை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியும். அதனை விட்டுவிட்டு ஒரு இனப்படுகொலையாளனை எப்படி தோழனாக கொள்ள முடியும்? அப்போ பாகிஸ்க்கு ஒரு நீதி, இந்த குட்டித் தீவு அதிபருக்கு ஒரு நீதியா?!
இது வரையிலும் சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருந்த உலக மானுட ஒழுக்க நெறி, மாண்புகளை எல்லாம் இழந்து விட்டோம் என்ற வாக்கில் ஒரு மனிதன் இனப் படுகொலையை நம் கற்பனைக்கும் எட்டாத வகையில் எல்லாம் நிகழ்த்தி விட்டு எப்படி இப்படி விசிலடித்துக் கொண்டு கேளிக்கை விளையாட்டுகளில் நல்லவனாக வலம் வர முடியும்?
விளையாட்டை விளையாட்டாக பார் என்றால் அத்தனை உயிர்களின் விலை என்ன மயிரா? யார் நீதியை பெற்றுத் தருவது? விளையாட்டு வீரர்களுக்கும் சமூக கடமை இருக்கிறதா இல்லையா? அவர்கள் என்ன ரோபாட்டா? இது போன்ற விளையாட்டுக்களிலிருந்து தனிமை படுத்தி காட்டுவதிலிருந்து உலக சபையில் என்ன நடந்திருக்கிறது என்று நாம் யோசிக்க வைக்க வில்லையெனில் பிறர் யார் யோசிக்க வைப்பார்கள்?
Photo Credit: Net