எங்க வீட்டு சிட்டுக்குருவிகளைப் பத்தி பேசணும்னு நான் நினைச்சு, நினைச்சு தள்ளிப் போட்ட விசயத்தைப் எழுத உட்காருவதற்கான நேரம் இன்னக்கி காலையிலதான் அமைஞ்சிருக்கு. கிட்டத்தட்ட என்னோட வேலை இடத்தில நானும் இவைகளை எட்டு வருஷத்திற்கு மேலா பாத்துக்கிட்டு வாரேன்.
என்னய மாதிரி இல்லாம இந்த சிட்டுக்குருவிகள் பாட்டுக்கு அமைதியா எதைப் பற்றியும் கிஞ்சித்தும் அலட்டிக்காம தாவித் தாவி கிடைக்கிற உணவு விசயங்களை கொத்தி எடுத்திட்டு அங்கிட்டும் இங்கிட்டுமா தலையையாட்டி பார்த்திட்டு இருக்கும். தடிமாடு மாதிரி நான் அதன் வழியில நின்னா கொஞ்சம் நகருவனான்னு பார்க்கும் இல்லன்னா பொசுக்கின்னு தலைக்கு மேலே அடப் போப்பா அப்படின்னு பறந்து கூரையில கட்டி வைச்சிருக்க கூட்டில அமர்ந்து உணவு வழங்கிட்டு சிறிது நேரம் உள்ளரயே இருந்திட்டு மீண்டும் இரை தேட கீழே இறங்கிடும்.
அந்தக் கூடு நான் முதன் முறையாக வைத்துப் பார்த்த இடத்திலேயே அப்படியே இருக்கிது. அந்த அமைப்பில என்ன ஒரே ஒரு வித்தியாசம் பார்த்திருக்கேன்னா, கொண்டு வந்து சேர்க்கும் நார்களின் நிறத்தைக் கொண்டு அவை புதிதாக சேர்க்கப் பட்டிருக்கிறது எனவும், கூட்டின் நீளம் நீட்டப் பட்டிருக்கிறது என்றும் அறிந்து வைத்திருக்கிறேன். மற்றபடி வாகுவாக அதன் கூட்டை மிக்க சிரத்தையுடன் செங்கல் சுவற்றிற்கும் நீட்ட வாக்கில் ஓடும் இரும்பு கம்பிக்கும் இடையில் அமைத்து வைத்திருக்கிறது. அந்தக் கூடு என் தலைக்கு நேர் மேலாக இருக்கு, அங்க நின்று கொண்டிருக்கும் பொழுது நில நேரங்கள்ல அவைகளுக்கிடையேயான உரையாடல் சற்றே பலமாக இருக்கும் கீழே நின்று ரசிக்கும்படியாக. பல நேரம் மிக்க அமைதியாக இருந்துவிடுவதுமுண்டு.
என்னோட கூரையில அடையிற குருவி இனம் வந்து வீட்டுச் சிட்டுக்குருவி (the house sparrow - passer domesticus). எனக்கு இவைகளைப் பத்தி எழுதணும்னு ஆர்வம் வந்ததிற்குக் காரணமே இத்தனை வருஷமா இதே இடத்தில் பார்க்கிறேனே, இதுக எத்தனை தலைமுறையா இருக்கும்? அப்படி தலைமுறை தலைமுறையா வந்தா, இதுக எத்தனை வருஷம் வாழுது? எத்தனை முறை வருஷத்தில முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிது? எப்படி பெற்றோர்கள் இருந்த இடத்திலேயே அதுகளோட குஞ்சுகள் மிகச் சரியா அதே கூரையை கண்டுபிடிச்சு வந்து குடும்பம் நடத்துது? அப்படி இப்படின்னு பெரும்பாலும் நான் மொக்கையா இருக்கும் பொழுது இது போன்ற கேள்விகள் மண்டைக்குள்ளர குடைஞ்சதுனாலே இங்க பதிவா கொண்டு வர அளவிற்கு ஆயிப்போச்சு.
சிட்டுக்குருவிகள் ஒரு காலத்தில் நீக்க மற மனித குடியேற்றம் எங்கெல்லாம் அரங்கேறியதோ அங்கெல்லாம் நோக்கத்தோடோ அல்லது திட்டமிடாமலோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நான் வாழும் இடத்தில் இது போன்று நகரங்களையொட்டி தட்பவெப்பம் கொஞ்சம் இதமாக இருக்கும் பொழுது மனித வாழ்விடங்களை சார்ந்து வாழ்வதாக அமைத்துக் கொண்டும், குளிர்காலத்தில் கிராமங்களை ஒத்த இடங்களுக்கும் குடி பெயர்ந்து விடுவதாக தெரிகிறது.
இந்த புகைப்படத்தில நீங்க பார்க்கிறது ஒரு ஆண் குருவி. ஆண்/பெண் என அடையாளப் படுத்தி பார்க்கிறது ரொம்பச் சுலபம். ஆண் குருவி நல்லா வண்ணமயமா இருக்கும், செங்கல் நிறம் மற்றும் கருமை நிறக் கோடுகள் அதன் இறக்கையின் மீதும், அலகிற்கு பக்கத்தில் கருமையான ஒரு திட்டும், அலகிற்கு மேலே முன் மண்டையின் மீது சாம்பல் நிறமாகவும் இருக்கும். பெண் குருவிகள் நிறம் குறைச்சலாவும், சாம்பல் நிறத்திலும் இருந்து போகும். இதோட ஆரோக்கியம் அதன் நெஞ்சுப் பகுதியில் இருக்கும் அந்த கருமையான திட்டைக் கொண்டும் அறியலாமாம். நல்லா அடர்த்தியா இருந்தா, ஆரோக்கியமாக இருப்பதாகவும், இனவிருத்தி செஞ்சிட்டும் இருக்காருன்னும் தெரிஞ்சிக்கோங்க.
அதோட அலகு இந்த நாட்டில குளிர்காலத்தில கருமை நிறமாகவும், மிதமான வெப்ப காலங்கள்ல மஞ்சளாவோ அல்லது பிரவுன் நிறத்திலோ இருக்கும்.
வருஷத்திற்கு ரெண்டு, மூணு முறை முட்டையிடும் போல, ஒவ்வொரு முறையும் 2-5 முட்டை வரைக்கும் இட்டு 14-16 நாட்கள் அடைகாக்குதாம். இது பொதுவா ஏப்ரல்-ஆகஸ்ட் மாதம் வரைக்கும் நடை பெறுவதாக தெரிகிறது. கட்டற்ற சுதந்திரத்தோட சுத்தித் திரியற சிட்டுக்குருவிகள் குறைந்தது ஐந்து வருடங்கள் வாழ்வதாகவும், கூண்டில அடைச்சு வாழ வைச்சிப் பார்த்ததில பத்து வருஷம் வரைக்கும் கூட நீட்டிச்சதா சொல்லிக்கிறாங்க. ஆனா, என்னயப் பொருத்த மட்டில அதில உடன்பாடு இல்ல, எத்தனை வருஷம் மூச்சு விட்டுக்கிட்டு திரிஞ்சோங்கிறது முக்கியமில்ல; எத்தனை மணி நேரம் வாழ்ந்தோங்கிறதிலதான் விசயம் இருக்கின்னு நினைக்கிற ஆளு நான். அதுனாலே அதோட வன வாழ்க்கை ஐந்து வருஷமே இனிப்பா இருக்கும் அதுகளுக்கும்; எனக்குமின்னு தெரியுது.
ஆனா, இது போன்ற ரொம்ப சாதாரணமா நாம கண்ணுற்று வந்த பல பறவைகளின் நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமா ஒடுக்கப்பட்டு, இப்பெல்லாம் நல்லா கண்ணை கசக்கிட்டு பார்த்தாத்தேன் தட்டுப்படுதுங்கன்னு கவனிச்சிட்டு வாரவங்களுக்குத் தெரியும். உலகம் முழுக்கவுமே இப்போ சிட்டுக்குருவிகள் 7.5% குறைஞ்சிடுச்சின்னும், பறவைகளின் ரெட் புக் இவைகளை அபாயத்தில் இருக்குங்கிற லிஸ்ட்லயும் சேர்த்து வைச்சிருக்கிது.
போன வருஷம் பறவை பார்த்தல் அப்படிங்கிற பதிவில இந்த செல் ஃபோன் டவர்களின் பெருக்கம் இது போன்ற பறவைகளின் இருத்தலை குறைச்சிடுச்சான்னு ஒரு பேச்சு வந்து ஒரு பின்னூட்டத்தின் மூலமா பேசினோம், அதனையும் இங்கே இணைக்கிறேன் ஆர்வமுள்ள மக்கள் எஞ்சாய்! ...
...இயற்கை நேசி|Oruni said...
கல்வெட்டு,
//செல்போன் டவர் மற்றும் அது ஏற்படுத்தும் நுண்ணலைகள் பறவைகள் மற்றும் சிறு பூச்சிகளின் இருப்பை அதிகம் பாதிப்பது உண்மையா? சிட்டுக்குருவிகள் நிறைய தென்படுவது இல்லை இப்போது.//
நல்லதொரு கேள்வியுடன் வந்திருக்கீங்க. இது ஆழமாக அலசப் பட வேண்டிய ஒரு விசயமிங்க. அதுவும் மனிதச் சமூகத்தின் மாறிப்போன வாழ்வு முறையில, கிலோவுக்கு இவ்வளவுன்னு எடை வைத்துக் கொடுக்குமளவிற்கு அலைபேசிகளின் பெருக்கம் அவைகளை சென்றடைய வைப்பதற்கான நுண்ணலை டவர்கள்; அதனையொட்டிய நுண்ணலைகளின் தாக்கம் இன்னமும் நம் புலன்களுக்கு எட்டாத அளவில் சுற்றுப்புறச் சூழலை சிதைச்சிட்டு வருதுன்னே அடிச்சுக் கூறலாம் ...
சிட்டுக்குருவி மட்டுமா? எது போன்ற பறவைகளை நாம் அடிக்கடி இது போன்று நவீன வளர்ச்சிகளுக்கு முன்பு கண்ணூற முடிந்திருக்குமோ (உதாரணத்திற்கு அந்த ப்ராமினி பருந்து, புல்புல் மற்றும் புறா மாதிரியான) அவைகளையெல்லாம் இப்பொழுது எங்கே பார்க்க முடிகிறது அவ்வளவு எளிதாக?
எனக்கு என்னவோ நம்முடைய மாறிப்போன கட்டடங்களின் புற அமைப்பும், சிந்தி சிதறும் தானியங்களின் தட்டுப்பாடு மற்றும் பயன்படுத்தப்படும் உரங்களின் தாக்கம் என நவீனப் படுத்தப்பட்ட எல்லாமே அவைகளை துடைத்தெறிந்து கொண்டு வருகிறதோ என எண்ணச் செய்கிறது. முன்னாலே இப்படி ஒரு பதிவு போட்டுருந்தேன் அவைகள் மற்ற என்ன என்ன காரணங்களால் காணாமல் போகலாமின்னு... "வெர்மின்" விலங்குகளே இன்று அரிதாகும் காரணம்...
யானைகளில் (அல்ட்ரா சோனிக்) நம் காதுகளுக்கு எட்டாத ஒலியெழுப்பி அவைகளுக்குள் கம்யூனிகேஷன் செய்து கொள்வதாக அறிகிறோம்... அப்படியெனில் அவைகளின் உலகமே வேறாகத்தானே இருக்க முடியும் அவைகளின் புலன்களின் மென்மையும், அறியும் திறனையும் கொண்டு பார்க்கும் பொழுது.
அப்படியாக இருக்கையில் இது போன்ற மின்னலைகளும், நுண்ணலைகளும் அவைகளின் வாழ்வு முறையில் இடையூறு விளைவிக்காமல் இருக்க முடியாது. பறவைகளில் வலசை போதலே இது போன்ற துருவ மின்காந்த அலைகளை கொண்டே என்பதும் அறியப்பட்ட நிலையில் இருக்கிறது. விசயம் இப்படி இருக்கையில் இது போன்ற அதிகரித்து வரும் electro magnetic radiation பல வகைகளில் நம்மையும், நம்மை சுற்றியுள்ள சூழலையும் பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளதாகப் படுகிறது.
பூச்சி வகைகள் இதனைக் காட்டிலும் அவைகளின் உலகம் இன்னமும் நுட்பமானது... எனவே சிக்கலும் இறுக இணைத்துதான் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
இங்கே ஒரு ஆர்டிகில் படித்தேன் இதன் விகாரம் கொஞ்சம் பெரிதாகவே விளக்கப்பட்டுள்ளது... Killing Fields - Electromagnetic Radiation ...
21 comments:
அன்பின் பிரபா
சின்னச் சின்ன சிட்டுக் குருவியப் பத்தி இத்தனை தகவல்களா - நாங்கல்லாம் பாப்போம் - கீச் கீச் கீச் கேட்போம் - கொஞ்ச நேரம் ரசிப்போம் - அவ்வளவுதான்
ஆராய்ச்சியின் பயன் இடுகையாக மலர்ந்திருக்கிறது. எங்கள் வீடு முழுவதும் 15 ரூபாய்க்கு ஒன்றென வாங்கப்பட்ட சிறிய சிட்டுக் குருவிகள் ( பொம்மைகள் ) நீக்கமற நிறைந்திருக்கிறது. நாம் பேசினால் அவையும் பேசும். சப்தம் கொடுத்தால் எதிரொலிக்கும் - மின்கலம் தீரும் வரை. எங்க ஊட்டம்மாவுக்கு நான் அலுவலகம் சென்று விட்டால் இவைகள் தான் துணை.
படங்களும் அருமை பிரபா
நல்வாழ்த்துகள் நண்பா
நட்புடன் சீனா
great ..
photos um super..
சிட்டுக் குருவிபற்றிய நல்ல பதிவு.
http://tvpravi.blogspot.com/2008/01/blog-post_30.html
இது குறித்து நான் எழுதியதை படிச்சு பாருங்க தெ.கா
ARUMAI
VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com
சீனா, அது என்ன கொஞ்ச நேரம் ரசிப்போம் இனி காலை நடை பயிற்சி போகும் பொழுது இவைகள் வழியில தட்டுப்பட்டா அங்கயே உட்கார்ந்து வஞ்சகமில்லாமல் நிறைய நேரம் ரசிங்க :).
//எங்க ஊட்டம்மாவுக்கு நான் அலுவலகம் சென்று விட்டால் இவைகள் தான் துணை.//
அப்போ சீக்கிரமா ஊட்டம்மாவிற்கு [ஊட்டம் கொடுத்து வளர்ப்பதால் ஊட்டம்மாவா;)] ஒரு பைனாகுலரும், பறவைகள் புத்தகமும் பார்சல்...
நன்றி சீனா!
// delphine said...
Why is it the males are very colorful?//
டாக்டர், இத இதத்தான் எதிர்பார்க்கிறேன். இப்படித்தான் ஆர்வமா வந்து கேள்விகளா கேக்கணும். ஆமா, என்ன இப்பொல்லாம் அடிக்கடி தெக்கி பக்கம் பார்க்க முடியறதில்ல என்ன பயம்மாஆஆ :-)...
சரி பதிலுக்கு போவோமா? கண்டிப்பா தனிப்பதிவா போடுறளவிற்கு இந்தக் கேள்வியில அவ்வளவு விசயமிருக்கு. எப்பொழுதும் இயற்கையமைவில பாருங்க, பெண் இனத்தை ஈர்க்கிற நிலையிலதான் ஆண் இனம் அமைந்துப் பட்டிருக்கிறது. இதற்கு பரிணாம உயிரியியல் ரீதியாக பல காரணங்கள் பின்னணியில இருக்கு. அதில ரெண்டு மட்டும் சொல்லிட்டு இங்க அப்பீட்டாயிக்கிறேன் விரிவா தனிப் பதிவில, சரியா...
1) பறவைகள்ல ஆண்களில் நிறம் தூக்குதலா இருப்பதற்கு பால் தேர்ந்தெடுப்பின் (sexual selection) பொருட்டு பெண்கள் அதன் வண்ணங்களைக் கொண்டு நிர்ணயிக்கிறதே காரணம், எப்படின்னா நிறத்தைக் கொண்டு எவ்வளவு ஆரோக்கியமான ஆண், இரை சேமிக்கும் திறன் - இவைகளை அறிந்து கொள்கிறது பெண்.
2) எடுப்பான நிறம் எதிராளியான மற்ற ஆண் பறவைகளுக்கு எச்சரிக்கை ஊட்டும் விதமாகவும், பிற predatorகளிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் உதவுகிறது... பெண் பறவைகள் நிறமிழந்து இருப்பதற்கும் சில காரணங்கள் இருக்கிறது. அது தனிப்பதிவா.
செல் போன் டவர் ஒரு பிரச்சினைய இருக்கிற மாதிரி தெரியலை . எப்படி சொல்லுகிறேன் என்றால் நெல்லை வீட்டிற்கு இன்று வரை சிட்டு குருவிகள் எப்பொழுதும் போல் வந்து செல்கின்றன , வீட்டுல ஒரு குருவி கூடே இருந்தது .
பதிவு வழக்கம் போல அருமை
அன்பின் பிரபா
இனிமே வஞ்சகமில்லாம ரசிக்கறேன் - ஊட்டம் ஊக்கம் கொடுப்பதால ஊட்டம்மா சொல்லலாம் - அவர் என் தங்க்ஸ் - துணை - இணை - சிறந்த பாதி - இன்னும் என்னன்னெவோ
சரியா
நல்வாழ்த்துகள் பிரபா
நட்புடன் சீனா
romba azhagaana padiappu...ippo puriyuthu Bharathi yen kaakai kurivigal engal jaathi endru padinaar endru paadinaar endru. :)
avar panna ore thappu...manushangalaiyum paadi tholaichathu-thaan :)
Romba rasichen thekka...neenga sonna mathii..its a combination of everything...not just towers..
முத்து - நன்றிங்கோவ்...
**************
மாதேவி - நன்றி too...
*********
செந்தழல் ரவி - உங்க பதிவ படிச்சிட்டு அப்பவே பின்னூட்டமிட்டிருக்கேன் போய் பார்த்தப்போத்தான் எனக்குத் தெரிஞ்சது. நானும் வெர்மின் விலங்குகளைப் பத்தி ‘நேசி’யில பதிவு போட்டுருந்தப்ப பின் குறிப்பில சொல்லியிருந்திருக்கிறேன் இது மாதிரி பின்னாடி ஒரு பதிவு போடுறேன்னு அதாவது 2006ல... இப்ப போட்டுத்தள்ளியாச்சு, உங்களுது கொஞ்சம் ஃபீலிங்ஸ் ஜாஸ்தி :)
//VAAL PAIYYAN said...
ARUMAI//
இன்னொரு வால் பையனா :) வருக வணக்கம் - நன்றி!
------------------
மீனு,
//செல் போன் டவர் ஒரு பிரச்சினைய இருக்கிற மாதிரி தெரியலை . எப்படி சொல்லுகிறேன் என்றால் நெல்லை வீட்டிற்கு இன்று வரை சிட்டு குருவிகள் எப்பொழுதும் போல் வந்து செல்கின்றன , வீட்டுல ஒரு குருவி கூடே இருந்தது //
நுண்ணலைகளும் ஒரு காரணம்னு படிச்சிக்கோங்க. அதுவே காரணமில்லை. ரெண்டாவது தொலை தூரக் காலங்களில் எது போன்ற விளைவுகளை ஏற்படுத்துன்னு தெரிஞ்சிக்க நீங்க குறிப்பிட்ட காலமெல்லாம் பத்தாது :) - நன்றி மீனு.
வாங்க ராஜி, எவ்வளவு நாட்களாச்சு தெக்கி வீட்டுப் பக்கம் பார்த்து. சொகமா இருக்கீளா?
//ippo puriyuthu Bharathi yen kaakai kurivigal engal jaathi endru padinaar endru paadinaar endru. :)//
ஏன் பாடினார், பாரதி? சொல்லுங்க நீங்க என்ன புரிஞ்சிட்டீங்கன்னு நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்.
//avar panna ore thappu...manushangalaiyum paadi tholaichathu-thaan :)//
:)) ஆமான்னு நானும் ஒத்துக்கிறேன். அவரு காகம், குருவி, யானையோட நிப்பாட்டிருக்கலாம் ...
//Romba rasichen thekka...//
நன்றி, ராஜி!
படங்களும், சிட்டுகுருவி பற்றிய செய்திகளும் அருமை.
தெகா நலமா?
இங்கு(அமெரிக்காவில்)எங்குப் பார்த்தாலும் சிட்டு குருவிகள் சந்தோஷமாய் திரிகின்றன.
முக்கியமான இடங்களை சுற்றிப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். எல்லா இடங்களிலும் பயமில்லாமல் இரையை கொத்தி தின்கின்ற சிட்டு குருவிகளை ஆசை தீர போட்டோ எடுத்து கொண்டு ரசித்து வருகிறேன்.
இங்கு சிட்டுக் குருவிக்கு இல்லை தட்டுபாடு.
இங்கு மிட்டாய் ரோஸ் கலரில் மைனா மாதிரி இருக்கு பார்க்க. அலகு கிளி மாதிரி இருக்கு. தெகாவிடம் தான் கேட்க வேண்டும் என்ன பறவை என்று நினைத்துக் கொண்டேன்.தெரிந்தால் சொல்லுங்கள்.
நான் இருக்கும் ஊரில் சிட்டு குருவி இல்லை.
உங்கள் சிட்டு குருவி பதிவு நல்ல பதிவு.
//கோமதி அரசு said...
தெகா நலமா?//
அம்மா, நலமா? அமெரிக்கா பயணம் பற்றி அறிந்தேன். தவறவிடாமல் முக்கியமான இடங்கள் அனைத்தையும் பார்த்துவிடுங்கள்.
சிட்டுக் குருவிகள் எங்கும் ஒரே மாதிரிதான், நமக்கு பழக்கமான மக்கள் போன்றே மனதிற்கு நெருக்கமாக இருக்கும், விடாமல் பார்த்து வைங்கள் :).
//இங்கு மிட்டாய் ரோஸ் கலரில் மைனா மாதிரி இருக்கு பார்க்க. அலகு கிளி மாதிரி இருக்கு. தெகாவிடம் தான் கேட்க வேண்டும் என்ன பறவை என்று நினைத்துக் கொண்டேன்.தெரிந்தால் சொல்லுங்கள்.//
என்னது குருவியைப் பார்த்தவுடன் தெகா நினைவு வந்திச்சா! சூப்பரு போங்க!! நீங்க பார்த்த குருவி சிட்டுக் குருவியோட சைஸ் ஒட்டின்னு சொன்னதுனாலே அது ‘red finch'ஆக இருக்குமின்னு நினைக்கிறேன். புகைப்படம் எடுத்திருக்கீங்கள்ல அனுப்பி விடுங்க, ஊர்ஜிதப் படுத்திக்கிடுவோம்.
நன்றிம்மோய், குருவிக்கும் எனக்கும் தொடர்பு படுத்தினதும் ரிலாக்ஸ்டா பதிவுகளும் படிக்கிறதுக்கும். எஞ்சாய் பண்ணுங்க!
நீங்கள் படத்தில் காட்டியிருப்பது வெறும் குருவி தான் என்று நினைக்கிறேன்..
சிட்டுக் குருவிகள் இன்னும் அளவில் சிறியதாக இருக்கும்.. பூக்களில் அலகை விட்டு தேன் எடுக்கும்..
தவறாக இருந்தால் திருத்துங்கள்..
அப்புறம் எங்கள் வீட்டில் புதிதாக ஒரு வரவு.. அதுதாங்க காடை. இது கோழியா மைனாவான்னு ஒரு குழப்பம்... விட்டா எங்கப்பா குழம்பு வைச்சிடுவார்.. எங்கள் குடும்பத்தில் மற்றவர்கள் யாரும் பாசம் வைத்து வளர்த்த பிராணிகளை கொள்ள மாட்டோம்.. எட்டு கோழிகளை வாங்கி வளர்த்து பின் இறைச்சிக்குப் பயன்படுத்தலாம் என்று தப்புக் கணக்குப் போட்டோம்.. அனால் கடைசி வரை அவை தொலைந்து போய்,காக்கை தூக்கிக் கொண்டு போய், நாய் கடித்து, அப்புறம் நோய் வந்து தான் இறந்தன.. அதிலும் கடைசி கோழி,உடல்நிலை சரியில்லாமல் கிட்டத்தட்ட இரண்டு மாதம் என் அம்மா தயாரித்த துணித் தொட்டிலிலேயே படுத்துக் கிடந்தது.. தினமும் நாலைந்து வேளை, சத்துணவை கரைசலாக அதற்குத் தருவார்..பாக்கவே கண்கள் கலங்கும்.. இறந்து போது கண்ணீர் விட்டு அழுதார்.. எங்கப்பா கூட கொஞ்சம் மனசு இளகி அதைக் கொல்லும் ஆசையை விட்டார்.. அதனால் தான் மனித நோயாளிகளுக்கு சேவை செய்த அன்னை தெரசாவை விட வாய் பேச முடியாத நம்மை நம்பி வந்த அந்த சிறு பிராணிக்கு பாசம் செலுத்தி சேவை செய்த என் தாய் ஒரு படி மேலாகத் தெரிகிறார்..
நன்றி..
எங்கள் வீட்டில் நான்கு பூனைகள் இருந்தன.. இப்போது இரண்டு இருக்கின்றன.. அதில் ஒன்று நேற்று முன்தினம் ஒரு சிறு அணிலைப் பிடித்து வந்து விட்டது.. அதனை என் தங்கை காப்பாற்றி வைத்திருந்தாள்.. அதற்காகக் காடையின் கூட்டில் ஒரு சிறிய பகுதியைப் பிரித்து அதற்குச் சிறு கூடமைத்தோம்.. ஐந்தாறு முறை குச்சியில் துணி சுற்றி பசும்பாலை நானும் என் அம்மாவும் தங்கையும் கொடுத்தோம். தாயைப் பிரிந்த சோகத்தில் அந்த அணில்குஞ்சு பலமுறை கத்தியது.. எங்கள் பூனை அதைத் தின்னத் தருமாறு அடம்பிடித்தது.. நேற்று காலை அது இறந்து விட்டது.. அப்போது தான் பார்த்தோம், அதன் காலில் பூனையின் பல் பலமாக இறங்கி இருந்தது.. இயற்கையை நாம் கண்டு கொள்ளாமல் விட்டிருக்க வேண்டுமோ..? காப்பாற்றப் போய் அந்தப் பிஞ்சு ஒரு நாள் முழுவதும் வலி அனுபவித்து தான் கத்தியிருக்கிறது என்று நினைத்து என் அம்மா எங்களைத் திட்டுகிறார்.. விட்டிருந்தால் எங்கள் பூனை ஒரு அரை மணி நேரம் விளையாடிப் பின் கொன்றிருக்கும்.. என்ன ஒரு போராட்ட உலகம்.. இதைப் பற்றி தனியாக ஒரு பதிவே போட வேண்டும்... நன்றி..
வணக்கம் கோடங்கி,
இப்படியும் இருக்கிறீர்கள் மக்கள் என்று அறியும் பொழுது வியப்பாக இருக்கிறது. அருமை!
//நீங்கள் படத்தில் காட்டியிருப்பது வெறும் குருவி தான் என்று நினைக்கிறேன்..
சிட்டுக் குருவிகள் இன்னும் அளவில் சிறியதாக இருக்கும்.. பூக்களில் அலகை விட்டு தேன் எடுக்கும்..//
இல்லை கோடங்கி இவைகள் வீட்டுச் சிட்டுகுருவிகளேதான். நீங்கள் கூறுவது தேன் சிட்டுக்கள். நாம் அவைகளைப் பற்றி இங்கு பேசவில்லை. தேன் சிட்டுக்கள் இன்னும் அளவில் சிறியதும், அதன் அலகு சற்றே வளைந்தும் காணப்படும்.
உங்கள் வீட்டு மக்களுக்கு எனது வந்தனங்கள். அவசியம் தனிப்பதிவாக எழுதுங்கள்.
//இயற்கையை நாம் கண்டு கொள்ளாமல் விட்டிருக்க வேண்டுமோ..? //
ஆமாம், அது அப்படித்தான். மனதை இது போன்ற இயற்கை நிகழ்வுகள் கஷ்டப்படுத்தினாலும் அதன் ஓட்டத்தில் இயங்க விடுவது இரு தரப்பிற்கும் நல்லது. இதன் பொருட்டு சற்று பெரிய பதிவாக இங்கே பதிந்து வைத்தேன், ஆனாலும், தெரிந்த ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கிறேன், ஆர்வமிருப்பின் க்ளிக்குங்க Wahsed Ashore Frog
நன்றிங்க தெகா...
இதுவும் குருவியை பற்றிதான், பின்னூட்டங்களில் சில விஷயங்கள் உள்ளன
http://viewsofmycamera.blogspot.com/2010/05/blog-post.html
Post a Comment