Tuesday, April 20, 2010

சுவடுகள் with photos...

முன்னைய காலங்களை விடவும் இன்றைய கால கட்டத்தில் பயணம் மேற்கொள்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகவே உலகமயமாக்கப்பட்ட சூழலில் நாம் கண்டு வருகிறோம். இது போன்ற பயணங்கள் பெரும்பாலும் பொருளாதாரத் தேவைகளை முன்னிறுத்தியே அமைந்து விடுகிறது. சில நேரங்களில் மட்டுமே அந்தப் பாதையிலிருந்து விலகி சிலரால் அந்தப் பயணங்கள் முறைப்படி தன்னுடைய சுயதேடல் வளர்ச்சிக்கும், தன்னுடைய பரந்து பட்ட பார்வை விரிப்பிற்கும் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது எனலாம்.

இதன் அடிப்படையில் அமைந்து விடும் பயணங்கள் ஒருவர் மனத்தினுள் ஒரு பசி போலவே ஆழ் மனதின் ஓர் ஓரத்தில் அரித்துக் கொண்டிருக்குமோ என்ற அளவிற்கு என்னை எண்ணச் செய்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு வாசிக்க நேர்ந்த ஒரு மின் புத்தகம். இந்தத் தருணத்தில் அது போன்ற ஒரு வாசிப்பை எனக்கு கொடுத்து மகிழ்ந்த நண்பருக்கு எனது நன்றிகளும், நேசிப்பும்.

அந்தப் புத்தகத்தின் இரண்டு அத்தியாயங்களைப் படித்து முடித்தவுடனேயே இதனையொட்டிய ஒரு கட்டுரையை எழுத வேண்டுமென்ற எனது விரல்களின் நமநமப்பை என்னுள் உணர முடிந்தது. அப்படி ஏன் தோன்றியது என்பதற்கும் காரணங்கள் எனக்கிருக்கிறது. முன்பொரு கால கட்டத்தில் தன்னந்தனியாக முதுகுப் பையுடன், ஒற்றை வார்த்தை பயணம் செய்யும் இடங்களின் மொழி கூட தெரியாமல் சுற்றியலைந்தவன் என்ற முறையிலும் அதிலிருந்து கிடைத்த அனுபவங்களைக் கொண்டும் அவ்வாறாக தோன்றியிருக்கக் காரணமாக அமைந்தது.

வாசிக்க நேர்ந்த புத்தகத்தில், அப்பொழுதே கல்லூரி பட்டப் படிப்பை முடித்த ஓர் இளைஞன் அத்தனை கால இருப்பும், அந்த பட்டய சேகரிப்பும் தன்னை நேசித்தவர்களுக்காக செய்த கடமையாக நினைத்து முடித்து கொடுத்துவிட்டு நாடோடியாக சில வருடங்களை தனிமையில் நடத்தி, இறுதியாக அவனது பயணத்தின் உச்ச இலக்கான அலாஸ்கா வனத்திற்குச் சென்று அங்கு பட்டினிச் சாவும் நிகழ்த்த நேரும். இதற்கு இடைப்பட்ட காலப் பயணிப்பில் அவன் சந்திக்கும் இடங்களும், மக்களும் அவனுள் ஏற்படுத்தும் எண்ணங்களை அவன் வெளிப்படுத்தும் பாங்கு, அன்றாடம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையிலிருந்து எவ்வாறாக முற்றிலுமாக மாறுபட்டு, நாமும் சற்றே பின் அமர்ந்து யோசிக்கும் பொழுது, எது போன்ற மகத்தான விசயங்களை இழந்தே நாமும் வாழ்ந்து முடிப்போம் என்ற எண்ணத்தை என்னுள் எழுப்பியதால், அந்தப் புத்தகத்தின் விமர்சனப் பதிவாக இதனை அமைத்துக் கொள்ளாமல் - ஒரு பயணத்தின் பால் எது போன்ற தனிமனித மன விஸ்திகரிப்பிற்கு அடித்தலமாக அமைந்து அதனை நம்முள் கரைத்து வாழும் கணம் தோறும் மனத்தினுள் எது போன்ற உலகத்தினை தரிசித்து வாழக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்பதனை உட்நோக்குவதகாக அமையட்டும்.

அந்த நூலில் நாயகனாக வரும் அலெக்ஸ் தன்னுடன் ஒன்பது புத்தகங்களை கூடவே கடத்திச் செல்கிறான்.அந்தப் புத்தங்களின் பல பக்கங்களில் முக்கியமான வாசகங்கள் அடிக்கோடிடப் பட்டிருக்கிறது. இங்கும் எது போன்ற புத்தகங்கள் ஒரு மனிதனை சிந்தனை ரீதியாக செதுக்கி வாழ்வின் நகர்த்தலையே முழுமைக்கும் மாற்றி விடுகிறது என்பதாக அலெக்ஸின் பயணத்தில்/தேடலின் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அவன் வைத்திருந்த Family Happiness by Leo Tolstoy என்ற புத்தகத்தில் கீழ்க் கண்ட வாசகத்தை அடிக்கோடிட்டு பயணத்தின் முக்கியத்துவம் அறியத் தருகிறான்...

...I wanted movement and not a calm course of existence. I wanted excitement and danger and the chance of sacrifice myself for my love. I felt in myself a superabundance of energy which found no outlet in our quiet life...

இன்று பயணம் அதுவும் தூரத்து கண்டங்களுக்கும், தேசத்திற்கு நிகழ்த்துவது என்பது ஒன்றுமே இல்லை என்ற ஒரு நிலைக்குச் சென்றுவிட்டது; குறைந்த பட்சம் வெளிப்பார்வையில். அது போன்ற பயணங்கள் ஒரு இலக்குகளற்ற, அதிலிருந்து பெறுவதற்கு பொருளாதாரமும், பெருமை பட்டுக்கொள்வதற்கான ஒரு வாழ்நாள் சாதனையாகவும் மட்டுமே அணுகும் பட்சத்தில் அதுவே ஒரு வெற்றிடத்தை உருவாக்கி நம்மை பதர்களாகவே வெளியே அனுப்பியும் வைத்து விடக்கூடிய அபாயமாகவும் அமைந்துவிடக் கூடும். எதிர்பாராத விதமாக, அது போன்ற மேம்போக்கான பயணங்களே பலருக்கும் இன்று கிடைத்துக் கொண்டிருக்கிறது!

பயணங்களின் போது நம்முடைய வளர்ச்சி சார்ந்த நிறைகளை மட்டுமே தன்னுள்ளே அடக்கிக் கொண்டு அந்தச் சாளரத்தின் வழியாக, நம் தோளோடு உரசிச் செல்லும் மக்களையும், கலாச்சாரங்களையும், இயற்கையையும் கூட அணுகி ஓப்பீட்டளவில் கண்ணுற்று, அதனின்று கற்றுக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லை என்ற திறந்த மனப்போக்கு இல்லாமல் பல வருடங்கள் பிரிதொரு சூழலில் வாழக் கிடைத்திருந்தாலும், அதே செக்குமாட்டுத்தனத்துடன் வாழ்ந்து தொடங்கிய இடத்திலேயே வந்தும் அமர்ந்து நம் பார்வையில்கிட்டும் மற்ற மக்களை நம் வெற்றிடத்தைக் கொண்டு அவர்களை நிறைத்துக் கொண்டிருப்போம்.பயணங்கள் - நமக்கு நம்முள் தேங்கிக் குட்டையாகிப் போன நாற்றமடித்துக் கொண்டிருக்கும் பார்வைகளை வெளிக்கொணர்ந்து, ஒரு பரந்து பட்ட பார்வையை வளர்த்துக் கொள்ள உதவ வேண்டும். அதுவே நாட்பட நாட்பட உலகியல் பார்வையில் பரந்த ஒரு படத்தினை பார்த்துக் கொண்டிருப்பதனைப் போன்ற ஒரு பிரக்ஞையை நம்முள் அழுத்தமாக விட்டுச் செல்வதற்கான படி நிலையாக அமைய வேண்டும். அது போன்ற உணர்வு நம்முள் புகுந்து வெளிக்கிளம்ப நம்முடைய மனத்தை திறந்து வைத்திருந்தாலே ஒழிய அதற்கான சாத்தியங்களே இல்லை - முன் முடிவுகளோடு நாம் யாவற்றையும் அணுகும் பட்சத்தில்.

பல மொழிகள் பேசத் தெரிந்தவர்களாக, எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாகவும், பல தேசங்களில் கால் பதித்திருந்தவர்களாகவும் அமைந்தும் இது போன்ற ஒரு திறந்த மனநிலையையற்றவர்கள் அது போன்ற பயணங்களின் மூலமாக எதனையுமே தன்னுள் கடத்திக் கொண்டிருக்க முடியாது, தேக்கமட்டுமே அங்கும் சாத்தியப்பட்டு மேலும் வாசனை கொண்டவர்களாக பரிணமித்து நிற்பதனை நம்முன்னால் இன்றும் கூட காண முடியும். எப்படி அங்கே உண்மையான வளர்ச்சியும், முழுமையும் கிட்டியிருக்க முடியும்?

உதாரணத்திற்கு ஒருவர் சக மனிதனை அடிமையாக குளிர்சாதன பெட்டியின் குமிழை முடிக்கி விடுவதற்கும், தனக்கு வந்த கடிதங்களின் உரையைக் கிழித்து கொடுப்பதற்குமான மனித வளத்தை ஓர் ஆளூமையின் திறன் என்று பறைசாற்றிக் கொண்டால், அதற்குப் பின்னான தன் நாட்டின் வறுமையும், மக்களின் சிறுமையும், சக மக்களின் இயலாத்தனத்தையும் கருத்தில் கொள்ளாமால் அவைகளைக் கூறி பிரிதொரு கலாச்சாரத்தில் திளைத்துக் கொள்ளும் மேட்டிமைத்தன எண்ணம் எங்கிருந்து புறப்பட்டிருக்க முடியும். அதனையொட்டியே உணவு, உடை பழக்க வழக்கங்களை வைத்து பிரிதொரு கலாச்சாரத்தை கீழே போடுவது, சாதீயக் கூறுகளை மண்டைக்குள் தூக்கித் திரிந்து கொண்டே க்ராண்ட் கன்யானின் அழகினை கண்டு வியந்து, ரசித்துக் கொண்டிருக்கும் கணத்தில் பிரபஞ்சத்தின் சூத்திரம் அறிய முடியாமல் போக நிற்பதும், இது போன்ற விழிப்பு நிலையற்ற, தேக்கமுற்ற மனநிலையேயன்றி வேறு எது போன்ற காரணிகள் முன் நிற்க முடியும்?

இது போன்ற மனிதர்கள் எது போன்ற சுவடுகளை ஏனையவர்களின் மனத்தினுள் விதைத்துச் சென்றிருப்பார்கள்? அங்கே நான் காண்பது வெற்றீடமான நடந்து திரியும் ஒரு கண்ணாடிக் குடுவை உள்ளே அடைத்து வைத்திருக்கும் தன் கழிவுகளை சமூகப் பார்வைக்கு முன் வைத்தவாரே நகர்ந்து கொண்டிருப்பதாக...
பி.கு: அந்த மின் புத்தகம் எல்லாருக்கும் பிடிக்குமின்னு சொல்ல முடியாட்டியும் அங்கே இங்கேன்னு சில கேசுகள் இருக்கத்தான் செய்யுமின்னும் தெரியறதுனாலே வேணுங்கிறவங்க, மின்னஞ்சல் செய்யுங்க புத்தக டெலிவரிக்கு...

25 comments:

மீன்துள்ளியான் said...

good experience narrated in better way

kutipaiya said...

சூப்பர் தெக்கி... ஒரு புத்தகத்தை படிச்சு அப்படியே அத உள்வாங்கி, க.க.க. போ’வா கொடுத்திருக்கிங்களே..கலக்கல் போங்க!

பதி said...

உண்மை தான் தெகா. பலரும் அப்படித் தான் தங்களது கற்பிதங்களில் இருந்து மாறாது தனது தேகத்தை அங்காங்கே சுமந்து கொண்டு திரிகின்(றோம்)றார்கள் !!!!

எனக்கும் அந்தப் புத்தகத்தினை அனுப்புகின்றீர்களா? மின்மடல் அனுப்புகின்றேன்.

நன்றி

பழமைபேசி said...

இரசிச்சிருந்தாதான் இப்படி எழுத முடியும்...

முகுந்த் அம்மா said...

புத்தகத்தை பற்றிய தங்களின் இடுகை புத்தகத்தை படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை உண்டாக்குகிறது. தங்களின் ரசிப்பு அருமை. முடிந்தால் எனக்கும் அந்த புத்தகத்தை அனுப்புங்க தெகா.

cheena (சீனா) said...

அன்பின் பிரபா

முழுவதும் படிக்காவிட்டாலும் - படித்தவை எழுத வைக்கிறது - மனம் முற்றிலுமாக அப்புத்தகத்தில் ஆழ்ந்துவிட்ட படியால் - நமநமக்கும் விரலுக்கு வேலை வைக்கிறது - படித்ததை - ரசித்ததை - ஏற்பட்ட மாற்றத்தினை பகிர வேண்டும் என்ற எண்ணம் வாழ்க ! நடை நன்றி - தமிழ் நன்று - இயல்பான இடுகை.

நல்வாழ்த்துகள் பிரபா
நட்புடன் சீனா

Thekkikattan|தெகா said...

//மீன்துள்ளியான் said...

good experience narrated in better way...//

மீனு! படிச்சியளா நீங்களும்? கிட்டத்தட்ட முடிச்சிருபியன்னு நினைக்கிறேன்... இல்லன்னா படிச்சு முடிச்சிருங்க சொல்றேன் :) - நன்றி!

மங்கை said...

படிக்கிறதுங்கறது நமக்கு வராத ஒன்னு.. :(

நல்லா அனுபவிச்சி எழுதி இருக்கீங்க

மங்கை said...

இங்க பெரும்பாலும் ஒருத்தருடன் பழகறது கூட ஒரு தேவையின் அடிப்படையில் தான் இருக்கு...valued friendship or social connection ஐ பத்தி அதிகமா யாரும் சிந்திக்கறதில்லை.. அது போலத்தான் பயணங்கள்...socialisation கூட நம்ம எண்ணங்களை, பார்வையை விஸ்தரிக்கும்...அதுக்கே பலர் தயார் இல்லை...வசதியாக கிணற்றுத்தவளையா வாழ்ந்த்துட்டு இருக்காங்க...

kutipaiya said...

தெக்கி

இந்த புத்தகத்தை இன்று படிக்க நேர்ந்தது..முழுதாக முடியவில்லை எனினும் அதன் சாராம்சம் புரிந்துகொள்ள முடிந்தது..

இந்த கட்டுரை அதனை சார்ந்து அமையாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்குமோ என தோன்றுகிறது..

பயணம் சார்ந்த கற்றல்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது இக்கதையின் நாயகனுக்கு வாழ்க்கையை என்ன மாதிரியான புரிதல்,கற்றல் இருந்திருக்கிறது என்பது சிறிது முரண்படுகிறது போல் தோன்றுகிறது..

படித்தது சம்பாரித்தது, மிக ஆசையாக வாங்கிய கார்,பெற்றோர்கள், என அனைவரையும் விட்டுவிட்டு, அவன் மேற்கொண்ட அப்பயணத்திற்கு தேவையான அளவுகூட பாதுகாப்பு ஏற்பாட்டுகளைக் கூட செய்துகொள்ளாமல் போனது கொஞ்சம் கூட நடைமுறைக்கு ஒத்துவராத காரியங்களாக, ஏன், சிறிது பைத்தியக்காரத்தனமாகக் கூட தெரிகிறது..

இக்கதையினைச் சார்ந்து இக்கட்டுரையில் எதுவும் சொல்ல இருப்பதாகத் தெரியவில்லை...

மற்றபடி, தாங்கள் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்..

காட்டாறு said...

//kutipaiya said... இந்த கட்டுரை அதனை சார்ந்து அமையாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்குமோ என தோன்றுகிறது..//
குட்டி பையன் சொல்லுறது சரி தானுங்கோ… இக்கட்டுரை பயணச் சுவடுகள் ஏற்படுத்த வேண்டிய/கூடிய மாற்றங்களை மட்டுமே சொல்லியிருப்பின் சுவை கூடியிருக்குமோ என்ற எண்ணம் எனக்கும் வந்தது என சொன்னால் மிகையில்லை.
இரு வெவ்வேறு கட்டுரையாக போட்டிருக்கலாமோ. ஒன்று புத்தக விமர்சனமாகவும், மற்றொன்று இத்தலை முறையினரிடம் பயணங்களால் ஒருவர் கண்ணோட்டம் எப்படி மாறுபட வேண்டும்; அதுவே எவ்வாறு தத்தம் சுய வளர்ச்சியை அளக்கும் அளவு கோலாக மாற்றலாம் என்பதையும் இதே விறு விறு நடையில் சொல்லியிருந்தால் ‘நச்’ கொடுக்கவும் சரியான தருணமாய் அமைந்திருக்குமே.

இதுல கண்கவர் படங்கள் வேறு; பதிவின் தாக்கத்தை மட்டுப் படுத்தி விட்டன. :-)

//மங்கை said... வசதியாக கிணற்றுத்தவளையா வாழ்ந்த்துட்டு இருக்காங்க...//
இதுல நெறையா உண்மை இருக்குது என்பதற்கு பதிவுலகில் உலவும் பதிவுகளை மேற்கோள் காண்பிக்க முடியும். அன்று முகுந்தம்மா சொன்ன சாதி கதை, இன்று நம் சக பதிவர்கள் பந்தாடும் ‘மருத்துவம் பார்க்க வந்த 80வயது தாயாரை திருப்பி அனுப்பிய நம் அருமை நாடு’.

Thekkikattan|தெகா said...

குட்டிப்’பையா - இன்னொரு மறுமொழியும் கொடுத்திருக்கீங்க கொஞ்சம் விளக்கமாவே எழுதுறேன் அடுத்ததில...
____________________________

பதி - புத்தகம் படிக்க ஆரம்பிச்சாச்சா? பிடிக்கும்னு நம்புறேன், படிச்சிட்டு சொல்லுங்க என்ன நினைச்சீங்கன்னு.

“கற்பிதங்களிலிருந்து மாறாது’ மட்டுமில்லாம சுற்றுப்புறத்தையும் அந்த எண்ணங்களை கொண்டு மாசுபடுத்துறதுதான் தாங்கிக்க முடியல, இங்கயே வலையுலகிலேயே பாருங்களேன் சகிக்கல...

நன்றி - பதி!

_____________________

வாங்க பழம - இரசிச்சிப்போட்டதாலேதான் இங்கன இல்லன்னா எழுதி கிடப்பிலே :). நன்றி, நண்பரே!

ராஜ நடராஜன் said...

எழுத்தின் ரசனையோடு படங்களும்,அதன் வண்ணங்களுக்கூடாக சொல்லும் காமிராக் கண்ணுக்கு மீண்டுமொரு முறை பாராட்டுக்கள்.

Thekkikattan|தெகா said...

முகுந்தம்மா வணக்கம். எனக்கு படிச்சவுடன் மனசில கொஞ்சம் உரசிப் போனதாலேதான் அதனையொட்டி இங்க எழுதினேன்.

படிச்சிப்பாருங்க. பிடிச்சிருக்கலாம். எஞ்சாய்!
______________________

சீனா வணக்கம்,

//படித்ததை - ரசித்ததை - ஏற்பட்ட மாற்றத்தினை பகிர வேண்டும் என்ற எண்ணம் வாழ்க ! நடை நன்றி - தமிழ் நன்று - இயல்பான இடுகை.//

கண்டிப்பாக கற்றலே பகிர்ந்தளிப்பதில்தானே வளர்கிறது? தொடர்ந்து செய்வோம். தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றிகளும் எனது வணக்கங்களும்.

Thekkikattan|தெகா said...

மங்கை, உங்களோட இரண்டாவது பின்னூட்டம் ஆணி அறைஞ்ச மாதிரி இருக்குது. லாப நோக்கு இல்லன்னா, பழக்கம் என்னாத்திற்கு என்கிற மன நிலைதான் பெரும்பாலான இடங்களில். பயணங்களை முறைப்படி பயன்படுத்திக்கிட்ட ரொம்ப ஈசிய மற்ற மனிதர்களின் உணர்வுகளை புரிஞ்சிக்க முடியும்தானே?

கிணற்றுத் தவளையா இருந்திட்டு அத அவங்களுக்குள்ளரயே அடக்கி வைச்சிக்கிட்டாங்கன்னா யாருக்கும் இழப்பில்லை அவங்களைத் தவிர.

Thekkikattan|தெகா said...

குட்டிப்’பையா, நீங்களும் இந்த புத்தகத்தை வாசித்தவர் என்ற முறையில் விரிவான பதில் பொருத்தமெனப் படுகிறது.

//இந்த கட்டுரை அதனை சார்ந்து அமையாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்குமோ என தோன்றுகிறது...//

இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. புத்தகத்திற்கான தனிப்பதிவாக ஒன்று எழுதியிருக்க முடியும்தான். இருப்பினும் இந்தப் புத்தகம் ஒரு மனிதனின் தனிப்பட்ட தாகம்/தேடல் அவனை எந்தளவிற்கு உந்தி பல extreme இயக்கங்களை, அது பைத்தியக்காரத்தனமானதாகவே நம்மளவில் புரிந்து கொள்ள முடிந்திருப்பினும், அதற்குப் பின்னான கண்டறிவிப்பு அவனால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியதாக அமைந்திருக்கும் பட்சத்தில், நம்மால் ஒரு மூன்றாவது மனிதராக ஓரளவே புரிந்து கொள்ள முடியும் என்பதால் ஒரு சராசரி வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நம்மை போன்றவர்களுக்கு அது போன்று ஒரு உச்ச அளவு கனவுகளைத் தேடி நிகழ்த்திக் கொள்ள முடியாவிட்டாலும், முடியும் என்ற நிலையில் உள்ள விசயங்களையாவது இது போன்ற மனிதர்களின் வாழ்வினை படிக்கும் பொழுது கொஞ்சமே யோசிக்க வைத்தால் நலமே என்பதால் இத்துடன் சொருகி விட்டேன்... உஷ்ஷ்ஷ் யப்பா கண்ணக் கட்டுதா... இருங்க இன்னும் முடிக்கல...

பாகம் இரண்டில் சந்திப்போம் ....

Thekkikattan|தெகா said...

தொடர்ச்சி ... பாகம் 2....

//பயணம் சார்ந்த கற்றல்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது இக்கதையின் நாயகனுக்கு வாழ்க்கையை என்ன மாதிரியான புரிதல்,கற்றல் இருந்திருக்கிறது என்பது சிறிது முரண்படுகிறது போல் தோன்றுகிறது..//

இந்த உண்மைக் கதையையொட்டி நிறைய பேச இருக்கிறது, அலெக்ஸ் - அவன் வாழ்வின் இந்த பயணத் தொடக்கத்திற்கான காரணங்கள் சப்பையாக இருந்தாலும் காலப் போக்கில் அவன் இந்த பரந்த வெளியுடன் தன்னை இணைத்துக் கொண்ட விதத்தினையும், அவன் எழுதிய கடிதங்களின் ஊடாகவும், சுமந்து சென்ற புத்தகங்களில் அடிக்கோடிடப் பட்டிருக்கும் விஷயங்களை கொண்டும் பார்க்கும் பொழுது, அந்தப் பயணத்தின் முழுச் சுவையினையும் அனுபவித்தவனாகவே என்னால் உணரச் செய்துகொள்ள முடிகிறது.

அதற்கெனவே ஒரு மலையேறும் நபரின் அனுபவத்தைக் கொண்டு விளக்கும் பொழுது, அந்த நபர் 32 நாட்கள் தன்னந்தனியாக பனி மூடி நிற்கும், யாரும் ஏற அஞ்சும் இடத்தை நோக்கி, பார்த்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே கடைசி நொடியில் துறந்துவிட்டு, மலை ஏறி சாவின் விளிம்பில் தோள் உரசிவிட்டு பின்னாடி உயிர் பிழைத்து தன்னுடைய அனுபவங்களை புத்தகமாக விரித்துக் காட்டும் பொழுது, ஒரு மனிதனுக்குள் இத்தனை சாத்தியங்கள் பொதிந்து கிடக்கின்றனவா எனவும், தாம் பார்த்து அதிசியத்துப் போக இத்தனை விசயங்கள் தன்னைச் சுற்றிலும் விரவிக் கிடக்கின்றன என்பதனை முன் வைக்கும் பொழுதும், அவர் பட்ட இன்னல்கள் paid off என்றே கருதச் செய்கிறது இல்லையா; நம் வாழ்க்கையில் ஒன்றுமற்ற விசயங்களுக்கெல்லாம் அல்லாடி அரட்டிக் கொண்டிருப்பதோடு ஒப்பீட்டு பார்க்கும் அளவில்...

அவன் கடிதங்களை படிக்கும் பொழுதே எத்தனை புத்துயிர் ஊட்டுவதாக இருக்கிறது; அதுவும் அந்த 80 வயது தாத்தாவிற்கு எழுதியிருக்கும் ஒரு கடிதம் போதுமே, அலெக்ஸின் உலகம் எதனை ஒத்தது என்று அறிந்து கொள்ள... அலெக்ஸும் அந்த நபரைப் போல, அந்த அலாஸ்கா பயணத்தை மட்டும் முடித்திருந்தால், கடிதங்களில் தான் உணர்ந்த விசயங்களை கொட்டி வைத்தது போல, இன்னமும் எத்தனை விசயங்கள் விரிந்து அவனுக்கும், நமக்குமாக எவ்வளவு வாழ்வியல் சார்ந்த புரிதல்கள் கிட்டியிருக்கக் கூடும், இல்லையா?

பி.கு: மற்றபடி இந்த கார், வீடு எல்லாம் தட்டிவிட்டுப் போறதில இருக்கிற சுகம் அதெல்லாம் அனுபவிச்சிப் பார்த்தாத்தான் உண்டு ;-) ... அது ஒரு மாதிரியான மனநிலையில் செய்யும் பொழுது...

kutipaiya said...

தெக்கி - அருமையான பதில்..
இந்த தொகுப்பினைத் தான் பதிவாக்கியிருக்கனும் நீங்க இங்க...

இத இத இதத் தான் எதிர்பார்த்தேன் :) :)


அந்த புத்தகம் எனக்கும் பிடிச்சிருந்தது :)ஆனா ஏன் இப்படி(!) ஒரு பின்னூட்டம்னு நாங்களும் பாகம் 2ல சொல்லுவோமில்ல....

Thekkikattan|தெகா said...

வாங்க காட்டாறு,

எல்லாம் பேசி வைச்சிட்டு வந்து சொன்ன மாதிரி ஒரே மாதிரிக்கா சொல்லுறீயா. பையனுக்கு சொன்னதுதேய்ன் உங்களுக்கும். தனித்தனியா பதிவ போட்டு இருந்திருக்கலாமோன்னு தோனச் செய்றீக. அநியாயமா வட போச்!

படம் இந்த இடத்திலே கொஞ்சம் அதிகமா போவாதுன்னு நான் நினைச்சு செஞ்சது, பயணங்களில் கிடைக்கக் கூடிய அமைதியும், பசுமையும் ஒட்டிக்கிடணுங்கிறதை சிம்பாலிக்கா சொல்ல முயற்சிப் பண்ணினதும் காரணம்தேய்ன்.

இன்னும் நீங்க சொல்ல வந்த விசயத்தை முடிக்கலங்கிற ஃபீல் வருது, அதுனாலே திரும்பவும் வந்து முடிச்சிருங்கங்கோவ்... நன்றி!

செல்வநாயகி said...

arumai theka.

kutipaiya said...

தெக்கி

அந்த பின்னூட்டத்தில் சொல்ல வந்தது என்னவெனில்
பயணங்கள் தரும் கற்றலின் நன்மைகளைச் சொல்ல அந்த புத்தகம் பெரிதான எடுத்துக்காட்டு அல்ல என்பதே.
அல்லாமல், தன் உள்மன உந்துதல்களை எவ்வாறு இந்த உலகப்பூர்வமான விஷயங்களைப் பற்றி கவலைப்படாமல்
எடுத்துச்செல்வது என்பதையும் இயற்கையையோடு தன்னை இணைத்துக்கொள்ளும் ஆர்வத்தையும் விளக்க மிக அருமையான புத்தகங்களில் இதுவும் கண்டிப்பாக ஒன்று..

//அலெக்ஸும் அந்த நபரைப் போல, அந்த அலாஸ்கா பயணத்தை மட்டும் முடித்திருந்தால், கடிதங்களில் தான் உணர்ந்த விசயங்களை கொட்டி வைத்தது போல, இன்னமும் எத்தனை விசயங்கள் விரிந்து அவனுக்கும், நமக்குமாக எவ்வளவு வாழ்வியல் சார்ந்த புரிதல்கள் கிட்டியிருக்கக் கூடும், இல்லையா?//

கண்டிப்பாக. அது ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கும். அவ்வாறு அமையாமல், தன் பாதுகாப்பு பற்றிக் கூட பெரிதாக கவலைப்படாமல் அவன் சென்று இந்த நிலைமைக்கு ஆளானதில், ஒரு பாடமாக அமைந்தது போல் ஆகிவிட்டதில் தான் எனக்கு வருத்தமே..

பயணங்கள் தரும் கற்றல்கள் தொடர்பான உங்கள் கருத்துக்களுக்கு இங்கு மறுப்பேதுமில்லை.. 'Into the wild' is sort of a deviated example for the points that you have highlighted in your post என்பதே இங்கு நான் முன்வைக்க விரும்பிய கருத்து...

செல்வராஜ் (R.Selvaraj) said...

பயணங்கள் பத்தி அருமையா எழுதியிருக்கீங்க. படமும் அருமை. வேற ஒரு காரணத்துக்காகக் கொஞ்சம் ஆச்சரியமும் அடஞ்சேன். அது பிறகு.
முடிஞ்சா மின்புத்தகத்த இங்கேயும் அனுப்புங்க. நன்றி.

Thekkikattan|தெகா said...

//ராஜ நடராஜன் said...

எழுத்தின் ரசனையோடு படங்களும்,அதன் வண்ணங்களுக்கூடாக சொல்லும் காமிராக் கண்ணுக்கு மீண்டுமொரு முறை பாராட்டுக்கள்.//

ராஜ நட, உங்க ரசனையும் என்னான்னு சொல்லுறது. அதுக்கு ஒரு நன்றி!

Thekkikattan|தெகா said...

நாயகி,

நன்றி - படிச்சிடீங்களா, நல்லது!

என்ன புத்தகம் கேக்கலை. இருந்தாலும் நாங்க விடுவோமா, அனுப்பி வைச்சிருவோம்ல :-)
___________________________

வணக்கம் செல்வராஜ்,

நன்றி முதல் முறை நம்மபக்கம் நின்று போனதிற்கு.

//வேற ஒரு காரணத்துக்காகக் கொஞ்சம் ஆச்சரியமும் அடஞ்சேன். அது பிறகு.//

அப்படியா?! ஒரே க்கெஸ்ல இறக்கி விட்டுட்டீங்களே :) அதுவும் ’பிறகு’ன்னு வேறச் சொல்லி - சீக்கிரம் உடைங்க தெரிஞ்சிக்குவோம். புத்தகம் வந்திருக்கணுமே...

செல்வராஜ் (R.Selvaraj) said...

நீங்க அனுப்பிய புத்தகம் வந்துருச்சுங்க. நன்றி. படிக்கத்தான் கொஞ்சம் நாளாகும்! பார்க்கலாம்.

முதன்முதலா பின்னூட்டம் இட்டாலும் பல இடங்கள்ல உங்க பதிவ, பின்னூட்டத்தப் பாத்துருக்கேன். பொறுமையா படிக்கணும்னு பல சமயம் தாண்டிப் போயிருக்கேன். அண்மைய காலத்து நேரம்/வேலை சமன்பாடு அப்படி...

ஆச்சரியம்னு சொன்னதுக்கு காரணம் பயணங்கள் பற்றி நானும் கொஞ்சம் எழுதிக்கிட்டு இருந்தேன். அது புறவயமானது மட்டுமல்ல அகவயமானதும் கூடன்னும் இன்னும் சிலதும் எழுதியிருந்தது நீங்க எழுதி இருந்ததோடு ஒத்துப் போன மாதிரி இருந்துச்சு. (ஆனா, நீங்க இன்னும் ரொம்ப அழகா, நல்ல நடையில எழுதியிருக்கீங்க). கொஞ்ச நாள் முன்னால தான் நானும் ஒரு நண்பருக்கு மின்னஞ்சல்ல அதை அனுப்பினேன். அதான் அப்படி...

Related Posts with Thumbnails