பதின்ம வயது டைரிக் குறிப்பில இருந்து சில பக்கங்கள் அப்படிங்கிற தலைப்பின் கீழே ஒரு வீட்டுப் பாடம் கொடுத்தாக இங்கே
சிறுமுயற்சி முத்துலெட்சுமி. சில தொடரழைப்புகளின் தலைப்பை பார்த்தாவே ஹ்ம்ம் நாமும் கலந்துகிடலாமேன்னு ஒரு ஆர்வம் தொத்திக்கும் அதில இதுவும் ஒண்ணு. எழுத கூப்பிட்டாளுக்கு இங்க வைச்சு ஒரு நன்றி சொல்லிக்கிறேன்.
இந்த தலைப்பில ஒரு முரண் இருக்கு என்னயப் பொருத்த மட்டிலும். நான் பதின்மத்தில இருக்கும் போதெல்லாம் ஏற்கெனவே பிரிண்ட் பண்ணி இருக்கிற சொந்தப் புத்தகப் பக்கங்களிலிருந்து மீண்டும் கை ஒடிய ஒடிய வண்டி வண்டியா நோட்டுப் புத்தகங்கள் வாங்கி எழுதித் தள்ளவே அம்மாவை சுரண்டணும். அம்மா, அப்பாகிட்ட போய் நின்னு ஏதாவது கொடுக்கிறத வாங்கிக் கட்டிகிட்டு உபரியா இந்த நோட்டுக்கள் வாங்கித் தர ஒத்துக்க வைக்கிற ஒரு சூழல்.
அப்படி இருக்கும் பொழுது, பள்ளி ஆறோ ஒரு அரசாங்கப் பள்ளி. அங்கே நீந்தி பேர் பட்டு வெளிக் கிளம்பும் காலம் வரையில் எவரும் 'டேய்! டைரின்னா என்னான்னு தெரியுமாடா, அத எப்படியெல்லாம் பயன்படுத்திக் கணுமின்னாவது தெரியுமாடான்னு' கேக்கிற அளவில இருந்த மாதிரி ஆசிரிய/சியைகளும் என் ஞாபக ரேடாருக்கு முன்னாடி துளாவிப் பார்த்தாலும் தெரியவில்லை. இது போன்ற ஒரு வளர்ப்புச் சூழலில், டைரிங்கிற ஒரு விசயமே 17 வயசு வரைக்கும் எட்டிப் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கவில்லைன்னு நான் சொல்லி இனிமே நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய நிலையில் இருக்க மாட்டீங்கன்னு தெரியும்.
இருந்தாலும் மண்டைக்குள்ளர இருக்கிற அந்த அளவற்ற நோட்டுப் புத்தகங்களில் பொதிஞ்சு போன பச்சை தாள்களிலிருந்து சிலதை அப்படி விசிறிக் காமிப்பது சிலருக்கும் எனக்கும் தேவைப்படலாங்கிறதாலே... நாலு நாளா இப்படி ஒரு விசயத்தை ஏத்துக்கிட்டமே என்ன எழுதலாம்னு எண்ணியபடியே உள்ளரே தூக்கிப் போட்டுட்டு அப்படியே அப்பப்போ மிதந்து வார விசயங்களின் மீது கொஞ்சம் பார்வையை பட்டுப் படாமல் தடவ விட்டு திரும்பவும் காணாம அடிச்ச படியே நாட்கள் நகர்ந்துச்சு.
இதெல்லாம் எப்படின்னா மறு அசை போடுவது மாதிரிதானே! கிடைக்கும் போது வேக வேகமாக இந்த கால்நடைகள் எல்லாத்தையும் உள்ளே வைச்சு அடைச்சிட்டு பின்பு ஓய்வில் இருக்கும் பொழுது எடுத்து மறு அசை போடுவது போல. என்னுடைய பதின்மத்தின் வழியாக கிடைத்த அனுபவ சேகரிப்புகளை எடுத்து அசை போடுவதில் அப்படி ஒரு கடினம் இருந்து விட முடியாது. ஏனெனில் ஆழமாக உராய்ந்து போன விசயங்கள் அது எதன் பொருட்டு ஆனாலும் பசுமையாக ஓர் ஓரத்தில் படிந்தே கிடக்கும் என்ற நம்பிக்கையில் அமர்ந்தே விட்டேன் இன்று முங்கி எடுக்க.
இந்த பதின்ம வயதினூடாகத்தானே வாழ்வின் அனைத்து உணர்ச்சிகளையும், முரண்களையும், சமூக கட்டமைப்புகளையும் ஓரளவிற்கேனும் வயதிற்கு ஒன்றாக அறிந்திருக்கக் கூடும். வாழ்வின் எதிர்மறை செயல்களான சுயநலமும், பொறாமைக் குணமும் வார்த்தெடுக்க பயன்படுத்தப் போகும் பட்டறையெனவும், ஒரே குடும்பமாக ஒற்றை மின் விசிறிக்கி கீழே காலம் சுழற்றி அடித்து திசைக் கொருவராக பல்லாங்குழி ஆடப்படப் போகிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் உண்டு களித்து ஓட்டுக் கூரையைப் பார்த்தபடி ஏதேதோ பேசிக்கொண்டு உறங்கிப் போன ஒரு அன்பால் பிணைந்த கூட்டம். ஒரே சிந்தனை, மன ஓட்டம் என அன்பைத் தவிர அங்கே பகிர்ந்து கொள்ள வேறு ஒன்றுமில்லை என்றமைந்த குடும்பமைப்பு. வாழ்வின் அருமை உணர்த்தவென அமைந்த பதின்ம படி நிலைகளவை. இவைகளை இன்னதென்று அறிந்து, அதனை முழுமையாக புரிந்து இது போல ஒரு நாள் தலைகீழாக நின்றாலும் அது போன்ற ஒரு காட்சி இன்று கிடைக்காதென நினைந்து வாழ்ந்திருக்கக் கூடிய அறியாப் பருவமும் அந்த பதின்மம் தானே.
ஊசித் தட்டானாக சிறகடித்து காணாங் கோழியாக நாள் முழுக்கவும் இங்குதான் செல்கிறோம், இதுதான் எங்களுடைய இன்றைய மிஷன் என்று சொல்லி தீர்மானித்துவிட முடியாதபடிக்கு அமைந்த தினப்படி நண்பர்களுடனான கேளிக்கை விளையாட்டுக்கள் தான் எத்தனை. பரிணாமத்தில் வேட்டையாடி பிழைத்து இன்று மனிதர்களாக காட்டிக் கொள்ள எத்தனிக்கும் மனிதர்களுக்கிடையே இருந்து அப்பவே விட்டு விலகி மணிக் கணக்காக வேலி ஓணான்களையும், சிறு வகை வேலிப் பறவைகளையும் தேடி திரிந்த காலமது. மண்டை உடைதல்களும், சிறு சிறு வீரத் தழும்புகளுமென உடலெங்கும் காயங்களால் எழுதிக் கொண்டதும் அதுவே சுவடுகளாக தன் பதின்மம் சுட்டும் கையேடு என்றறியாமல் எழுதி தீர்த்ததும் அதே பதின்மத்தில்தானே.
காதலுக்கென பள்ளி நண்பி ஒருத்தியின் வீட்டுப் பாட நோட்டை கெஞ்சி அடித்து வீட்டுக்கு வாங்கி வந்து அச்சு பிறழாமல், அவள் எழுத்துகளில் போடும் சுழிப்புகளின் அழகில் மயங்கிய நேரம் போக அந்த நோட்டு/புத்தகங்களுக்கு, எதிர்த்த வீட்டில் சினிமா கொட்டகையில் வேலை பார்க்கும் ஒருவரிடம் அழகான சினிமா போஸ்டர் வாங்கி அதில் எனது பதின்ம வயதுக் காதலை குறியீடாக காட்ட அட்டை போட்டு கொடுத்தனுப்பி எனது வேதிய உடற் செயற்பாடுகளை அறிந்து கொள்ள உதவியதும் இந்தப் பதின்மம்தான்.
பள்ளிப் பருவத்தில் தொடங்கிய பள்ளிகளின் மீதான வெறுப்பு அப்படியே இங்கும் தொடர்ந்து கொண்டே வந்திருக்கிறது. பள்ளி சென்ற நேரத்தில் சக நண்பர்களுடன் புழங்கிய நேரம் போக பள்ளி கட்டடத்தின் வேலிகளுக்குள் ஒரு வேற்றுக் கிரக வாசியாக தடித்த தோல்களுடனும், வெம்பிய மனதுடனும் சிறைப் பறவையாக திரிந்திருக்கக் கூடுமென்று இப்பொழுதும் என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. மாலை வேலையில் எனக்குப் பிடித்த நண்பர்களுடன் வரும் வழியில் செய்யும் அட்டகாசங்கள் அந்த எட்டு மணி நேர வாசனையை துடைந்தெறிந்து நாளைய நோக்கிய எதிர்பார்ப்பை விதைத்து அந்த மன நிலையை கடக்க வைத்திருக்கிறது. இப்பொழுது நிதானமாக நின்று யோசித்தால் அது யார் மீதான தவறு என்பது கொஞ்சமே விளங்குகிறது.
இதுவரையிலுமே கவனித்திருக்கக் கூடும் பள்ளிப் புத்தகங்களை தவிர்த்து பிற விசயங்களை படிப்பதற்கான ஒரு புறச் சூழல் அமையா வாழ்வமைப்பு என்பதனை. இருப்பினும் அப்பாம்மாவின் உறுத்தலற்ற வாழ்வியல் சூத்திரங்களான, தனித்துவம் பேணல், தனி மனித மனச் சுதந்திரத்தின் அவசியம், விரும்பிய அளவில் சுதந்திரமாக விட்டுத் திருப்புவது, எனக்கும் அப்பாவிற்குமான இயல்பான நட்பு முறை - கடைசியாக பள்ளி இறுதியாண்டில் "தம்பீ, தோலுக்கு மேலே வளர்ந்திட்டே, நண்பன் மாதிரிதான் இனிமே பாவிக்க முடியுமென்ற அந்த பண்பான வார்த்தைகளும்," யார் ஏதாவது என்னைப் பற்றி அப்படி இப்படிக் கூறினாலும் "அவன் அப்படி செய்திருக்க மாட்டானே"ங்கிற இன்றளவும் உள்ள அம்மாவின் அசாத்தியமான நம்பிக்கையும் கூடுதல் பொறுப்பை என்னிடமே வழங்கிவிட்டது. அன்று தொடங்கிய வாழ்வியல் பாடம் அந்தப் பட்டறையில் பயின்ற எனக்கு இன்றளவும் தோல்விக்கும்/வெற்றிக்குமான முழு பொறுப்புகளை நானே முகம் கொடுத்து யார் மீதும் விரல் நீட்டும் கெட்ட பழக்கத்தை பழகிக் கொள்ளாதவாறு பார்த்துப் பழகிக் கொண்டதும் அந்தப் பதின்மத்தில்தானே.
அப்பாவின் அந்தப் பண்பு நிலையும் அம்மாவின் பொறுப்புணர்வும் ஒரு கலவையாக என்னுள் இறங்க 15 வயதிற்குப் பிறகு பள்ளியில் கொஞ்சம் ஈடுபாடு கூடிக்கொண்டது. அதற்கு என்னைச் சுற்றி அமைந்த சமூக மக்களின் அழுத்தமும் ஒரு காரணமாக அமைந்து போனது. இருப்பினும் அங்கும் என் விருப்பப்படியே கணக்குப் பாடங்களுக்கு ஒளிந்து உயிரியல் பிரிவை தேர்ந்தெடுத்ததும் அதற்குத் துணையாக வீட்டில் உள்ளவர்களின் "கணக்குப் போட்டுப் பாடங்களை" தேர்ந்தெடுக்க வைக்கும் குறுக்கீடுகளும் இல்லாமல் போக படிப்பு விசயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த உதவியாக இருந்தது.
அதுவே பின்னாளில் காடுகண்டிக் கழுதையாக மேற்கு மலைத் தொடர்களில் சறுக்கித் திரியும் வாய்ப்பையும் பெற்று, இன்றும் பொருளாதார ரீதியில் பெரிய அளவில் சாதித்துக் காட்ட முடியாதெனினும் மனசிற்கு நெருக்கமாக எப்படி வேண்டுமானாலும் வாழ்க்கையை திருப்பிக் கொள்ளும் அந்த திசை திருப்பும் துடுப்பை என் கையிலேயே அமைத்துப் பார்க்கும் அளவிற்கு அந்தப் பதின்ம வாழ்வுப் பட்டறை சுதந்திரத்தை கொடுத்துப் பார்த்தது.
அதுவே பள்ளிகளில் இருந்த போதும் சரி, கல்லூரிகளின் தொடக்கத்தில் ஆரம்பித்த பதின்மத்தின் இறுதி நிலையிலும் சரி உடை அலங்காரங்களில் கொஞ்சம் வித்தியாசமாக தலைக்கு எண்ணெய் வைக்காமல் நீண்ட கேசத்துடன் போவதற்கும், குத்தூசி போன்ற ஒடிந்த தேகம் உடையவனாகினும் கை வைக்காத செய்தித் தாள்களை ஒத்த டி-ஷர்ட்கள் அணிந்து செல்வது என நீண்டது. அப்பொழுதெல்லாம் வகுப்பு ஆசிரியர்கள் மீண்டும் வீட்டுக்கு அனுப்பியோ அல்லது வார்னிங் கொடுத்து மீண்டும் மற்றவர்களுடன் சேர்த்து கொள்வது வரைக்குமான தனித்துவம் பேணலாக தொக்கி நிற்கிது ;-).
இன்றளவிலும் 'தெக்கிக்காட்டான்' பெயர் வைத்துக் கொள்வது வரைக்குமாக தொடர்கிறது. அதற்கும் இதற்குமான வயது வித்தியாசம் 21 வருடங்கள். எனினும், இன்னும் சில பேருக்கு நம்பிக்கை இருக்கிறது நான் ஒரு தண்ணியில் வெந்துவிடுவேன் என்று. பார்ப்போம். இறுதியில் யார் வெல்கிறார்கள் என்று;-) .
கூட்டிக் கழித்து எனது பதின்மத்தை திரும்பிப் பார்த்தால் வாழ்க்கை எனக்கு குறைவில்லாமல் அந்த கூர்மைத் தீட்டல்களுக்கான ஆயத்தங்களை வாழ்வுச் சாலையின் இரு மருங்கிலும் வஞ்சகமில்லாமல் காட்சியகப் படுத்தியே வந்திருப்பதாய் இன்று மெல்ல மறு அசை போடும் பொழுது என்னால் உணர முடிகிறது.
இத் தொடரைத் தொடர நான் அழைக்க விரும்புவது...
தருமி
காட்டாறு
மீன்துள்ளியான்
செல்வநாயகி