Sunday, January 27, 2019

உரையாடலின் புனைவுதான் கடவுள்: Sapiens - 2

இதுவே முதல் முறை கட்டாரின் வழியாக இந்திய பயணம் மேற்கொண்டது. ஒன்று எனக்கு வயசாகி இருக்கணும் இல்லன்னா எனக்கு தோன்றுவது போலவே தோகாவிலிருந்து அட்லாண்டாவை அடைவது மிக... நீண்ட அயற்சியைக் கொடுக்கக் கூடியதாக உள்ளதுன்னு மற்றவங்களுக்கும் தோன்றக் கூடியதாக இருக்கணும்.
அது ஒரு புறம் இருக்கட்டும். இந்த நீண்ட பயணத்தை எப்படி பயனுள்ளதாக ஆக்கிக்க முடியும் என்பதின் பேரில் வாசிப்பிலுள்ள சேப்பியன்ஸ் புத்தகம் துணைக்கு வந்தது. இன்னொரு பத்து பக்கங்கள் வாசிக்க ஆரம்பித்த உடனேயே எனக்கான தனிப்பட்ட எண்ண வெடிப்புகள் நிகழத் துவங்கியது.
வாசித்துக் கொண்டிருக்கும் பக்கங்கள் எது சேப்பியன்ஸை ஏனைய மனித இனங்களிலிருந்து பிரித்து உலகம் தழுவிய முறையில் ஒரே அடிப்படை கருத்துருவாக்கத்தின் மீது நம்மை நிற்க வைத்து, பிற ஆதி மனித இனங்களை பின்னுக்குத் தள்ளி நம்மை முன்னேறச் செய்தது என்று பேசுகிறது.
அதற்கு அடிப்படையே மொழி என்கிறது இந்த புத்தகம். அதனை நிரூபிக்கும் வாக்கில் அருமையான உரையாடலோடு முன் நகர்த்துகிறார் புத்தக ஆசிரியர்.
ஏனைய உயிரினங்களும் அவையவைகளுக்கேயான சங்கேத ஒலி குறிப்புகளுடன் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருந்து தங்களின் பாதுகாப்பை, உணவு தேடும் யுக்தியை பரிமாற்றம் செய்து தங்களின் இருப்பை தக்க வைத்துக் கொள்கிறது. இருப்பினும் சேப்பியன்ஸ் அடுத்தக் கட்டத்திற்கு எப்படியாக தங்களை நகர்த்திக் கொண்டது? என்பதே அடிப்படைக் கேள்வி.
நெருப்பின் பயன்பாட்டை தன்னுடைய ஆளுமைக்கு கீழ் கொண்டு வந்தது ஒரு வகையில் பெரிய தாண்டல் என்றால், நம்முடைய சிக்கலான மொழியறிவு இரண்டாவதாகும்.
இந்த மொழியறிவே கூட சிக்கலான கட்டமைப்பை பெறக் காரணம் நம்முடைய பொரணி பேசத் தக்க கற்பனா வாதமே முதன்மைக் காரணம் என்பதாக சொல்லி விரிகிறது இந்த புத்தகம்.
உதாரணமாக, நம்மை விட குறைந்த பட்ச உரையாடலைக் கொண்ட குரங்கினங்கள் ஆபத்து/உணவு அங்கே இங்கே என்று சுட்டிக்காட்டுக் கொள்ள ஒரு சில ஒலிக்குறியீடுகளின் வழியாக மட்டுமே தங்களது குழுவினருடன் கடத்திக் கொள்கிறது. ஆனால், சேப்பியன்ஸ் எங்கே உணவு இருக்கிறது, அதனை நெருங்கும் போது உள்ள ஆபத்து, அதன் பரப்பிடம், அருகில் என்ன இருக்கிறது, எப்படியாக சென்றால் அந்த இடத்தை விரைவில் அடையலாம், ஆபத்தை தவிர்த்து மீண்டு வருதல் என்பதாக உரையாடத் தலைப்படும் பொழுது எத்தனை மொழியறிவு தேவைப்படுவதாக உள்ளது.
இங்கிருந்துதான் சேப்பியன்ஸ்க்கு இரண்டாவது பெரிய தாண்டல் கிடைத்தது. இந்த உரையாடல், எதார்த்த, கற்பனை, புனைவு என்று பல நிலைகளில் விரிந்து விரிந்து சிறு குழுக்களை இணைக்கத் தக்க பெரிய பொய்களை உருவாக்கி கற்பனை கடவுளர்களை, நிறுவனங்களை எழும்பச் செய்து பரந்த நிலப்பரப்பில் வாழும் ஏனைய குழுக்களையும் இணைத்து ஒரு ஐடியாவிற்கு கீழ் வாழும் எதிரிகளற்ற வாழ்விடங்களை உருவாக்கிக் கொள்ள முடிந்தது.
இதுவே நமக்கு முன்னால் வாழ்ந்த பிற மனித இனங்களுக்கு சாத்தியப்படாமல் போனது அவர்களின் இருப்பை ஆழ நிர்மாணித்துக் கொள்வதிலிருந்து தவறச் செய்தது.
புனைவுக் கதைகளே, உடல் இல்லாத ஒரு நிறுவனத்திற்கோ (நல்ல கதை சொல்லிகளே முதுகெலும்பு), கடவுளுக்கோ (சடங்குகள், சம்பிரதாய கட்டுப்பாட்டு புனைவுகளே முதுகெலும்பு) அல்லது நாட்டிற்கோ எல்லைகளை வகுத்து (வாழ்வு சார்ந்த விழுமியங்களை கடைபிடிப்பதாக சொல்லப்படும் புனைவுகளே முதுகெலும்பு) அதற்கென ஓர் உடலைக் கொடுத்து அது இருக்கிறது என்று நம் அனைவரையும் அதன் பின்னால் நிற்கச் செய்து ஒரு பெரும் இனக்குழுவாக கட்டி வைத்திருக்கிறது.
இந்த புனைவுக் கதைகள் சிக்கலான மொழிகளின் ஊடாக சேப்பியன்ஸ்களின் மனங்களில் விதைக்கப்படுவதின் பொருட்டே நம்முடைய இனம் தனித்துவம் பெற்றதாகிறது.
இப்பொழுது நான் நடு வானில் பறந்து கொண்டே இந்த சிந்தனை சிக்கல்களில் என்னை அமிழ்த்தி மீட்டெடுக்கும் வகையில் பறத்தலின் அபாயக் கவலைகளை மறக்கடித்தது கூட அதே கற்பனைப் புனைவுதான்.
பறத்தல் ஆபத்தற்றது என்ற எதார்த்த கற்பனைக் கதைகள் நன்றாகவே ஆழ விதைக்கப்பட்டதும் அது அனைத்து சேப்பியன்ஸ்களின் நம்பிக்கை பெற்றதுமேயாகும்.
இதன் ஒழுங்கிலேயே சென்று யோசித்தால் திருமணம், விழாக்கள், நல்ல பெயரைக் கொண்ட நிறுவனப்படுத்தப்பட்ட ஒரு கம்பெனி அனைத்துமே புனைவுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது என்பதாகிறதுதானே?
எனில் எது உண்மை? எல்லைகளற்ற நிலமும், இந்த மரங்களும், ஆறுகளும் மலைகளும்தான். மற்ற அனைத்தும் ஓர் ஐடியாதான். அதுவே நம்முடைய இருப்பை முழுமையாக எத்தினிக் (இனப்) போரில் விழுந்து அழிந்து விடாமல் இருக்க தப்பி பிழைத்துக்கிடக்க வைத்திருக்கிறது.
இந்த கதைகளே பெருமளவில் கேள்விகளற்று விதைக்கப்படும் போது பிற்காலத்தில் நமக்கு ஆப்பு வைக்கக் கூடியதாகவும் அமையக் கூடும். அது எப்படி என்று மேல் வாசிப்பில் பிரிதொரு நாள் என்னுடைய எண்ணங்களையும் இணைத்துத் தருகிறேன்.

Link for Part 3: ஆழிப்பேரலையை ஒத்த மனித இனம்: Sapiens-3

0 comments:

Related Posts with Thumbnails