Saturday, January 26, 2019

மகப்பேறு மரணங்கள் ஒரு பரிணாமப் பார்வை: Sapiens வாசிப்பு - 1

இந்த முறை சென்னை புத்தகத் திருவிழாவில பல முக்கியமான புத்தகங்கள் வாங்கினேன். அதில் யுவால் நோவா ஹராரி எழுதிய "சேப்பியன்ஸ் மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு" ம் ஒன்று.

இந்தப் புத்தகம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி. மேலும் மொழி பெயர்ப்புகள் மிகத் தேவையான ஒன்று என்று பல இடங்களில் உணர்கிறேன்; அதுவும் 25 பக்க வாசிப்புக்குள்ளாகவே இந்தப் புத்தகம் அதனை உறுதி செய்கிறது!

ஏனெனில் பரிணாம உயிரியலின் (evolutionary biology) அடிப்படை இயங்குதளம் பற்றிய அறிவு போதுமானதாக இருக்கும் எனக்கே இந்த நூல் பல இடங்களில் அட என்று நிமிர்ந்து உட்காரச் செய்வதாக உள்ளது.

இதன் பின்னணியில் அந்த வாசிப்பே அற்ற மற்ற துறை சார்ந்த வாசகர்களுக்கு எது போன்றதொரு வாசிப்பனுவத்தை வழங்கக் கூடும் என்று எண்ணும் பொழுது அறிவியல், வரலாறு சார்ந்த தமிழ் மொழி பெயர்ப்புகள் நம்மை அடுத்தக் கட்டத்திற்கு அறிவுசார் நிலையில் நகர்த்தக் கூடிய முக்கிய கருவியாகும் என்று தோன்றச் செய்கிறது.

இந்த புத்தகம் இன்றும் நாம் எதிர் கொள்ளும் பல நிகழ்கால உடலியல், உளவியல் சார்ந்து நம் கைகளுக்கு அப்பால் உள்ள பிரச்சினைகளுக்கு எதுவெல்லாம் காரணிகளாக இருந்து செயல்படுகிறது என்பதை ஆழமாக அலசிச் செல்கிறது.

உதாரணமாக மகப்பேறு சமயத்தில் ஏன் தாய் சேய் மரணம் நிகழ்கிறது என்பதை நம்முடைய எழுந்து நின்று இரண்டு கால்களில் (bipedal) நடக்கும் காலத்திலிருந்து தொடங்கி, நம்முடைய மூளையின் அளவு, எடை என பிணைத்து பிறப்புறுப்பின் குறுகலே அதற்கான மூலம் என்று நம்மை புரிந்து கொள்ள கோரி நிற்கிறது. இங்கே உடனே ஏன் மகப்பேறு நேரத்தில் மருத்துவர் பேறு வழியை பெரிதாக்க கத்தி வைத்து சிறிது கிழித்து விடுகிறார் என்பதற்கான பரிணாம வழி விடைகிடைக்கக்கூடும்😲

மூளையின் எடையே ஒரு சுமை அதனை இந்த பரிணாமம் நம் தலையில் தூக்கி வைத்து உடலின் 25% சக்தியை உட்கொள்ளும் பேர்பசி கொண்ட வஸ்துவை, நாம் வேலை வாங்க சிந்தனையின் வீச்சம் அதிகரிக்கச் செய்தோமெனவும் அதுவே ஏனைய விலங்குகளைக் காட்டிலும் அதி வேகமாக முன்னேறி பரிணாம உச்சாணிக் கொம்பில் அமர வழி வகுத்தது எனவும் புரிந்து கொள்ளச் செய்தது.

இல்லையென்றால் வேட்டையாட உடல் திராணியற்ற நிலையில் ஊனுண்ணி சாப்பிட்டு மிச்சம் வைத்த மாமிசத்தை கழுதைப் புலிகள் வரண்டியது போக, நாம் இன்னமும் எலும்பை உடைத்து மஜ்ஜை உண்ணும் நிலையிலேயே இருந்திருப்போம்தானே.

அதே மூளையின் எடையே நம் தோள்களுக்கு மேல் வைக்கப்பட அதன் இன்னலாக கழுத்துப் பிடிப்பும், முதுகு வலியும் வரக்காரணம் என்று சொல்லும் போது, நிறைய உடல் சார்ந்த உபாதைகளுக்கு காரணம் கிடைக்கிறது.

அப்படியே தொடர்ந்து ஏன் பிற பாலூட்டிகளில் முழுமையாக வளர்ச்சியுற்ற குட்டி பிறந்து விழுந்த சில மணிதுளிகளுக்குள்ளாகவே எழுந்து நின்று நடக்கவும், சில வாரங்களுக்குள்ளாகவே இரைதேடிச் செல்லத் தக்கதாகவும் அமைந்து விடுகிறது எனக் கேள்வி எழுப்பி பதிலாக மனித மூளையின் வளர்ச்சி அளவும், கருப்பையில் சிசு இருக்கும் காலளவும், பிறக்கும் பொழுது பிறப்புருப்பின் குறுகல் கூறுகளுமே பரிணாமத்தில் இன்றளவும் ப்ரீமெச்சூர்டுத் தனமாக மனிதக் குழந்தைகள் ஈன்றெடுப்பிற்கான காராணமென சுட்டிக்காட்டுகிறார்.

இதுவே மனிதன் ஒரு நாகரீமாக பிற்காலத்தில் பரிணமிப்பதற்கான முதன்மைக் காரணி என்றும் அடையாளப்படுத்துகிறார். ஏனெனில் மனிதக் குழந்தைகளின் சார்ந்து வாழும் ஆண்டுகள் நீண்டிருப்பதால் அதற்கு குழுவாக சார்ந்து வாழும் ஒரு சூழல் தேவைப்படுகிறது, பின்னே அது ஒரு சமூகமாக கட்டமைக்கப்பட்டு, பிற்சேர்க்கைகளான மதம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்ற கற்பிதங்களை அளவிற்கு அதீதமாக ஏற்றிக் கொண்டு எப்படி நம்முடைய இருப்பையே இன்று கேள்விக்குறியதாக ஆக்கிக் கொண்டது சேப்பியன்ஸ் என்பதாக இந்தப் புத்தகம் பின் வரும் பக்கங்களில் பேசுமென்று நினைக்கிறேன்...

அப்பப்போ எழுதுவேன் as I further continue reading this book, I suppose! 😏 Part 2 Link : உரையாடலின் புனைவுதான் கடவுள்: Sapiens - 2

0 comments:

Related Posts with Thumbnails