Thursday, February 14, 2019

ஆழிப்பேரலையை ஒத்த மனித இனம்: Sapiens 3

சேப்பியன்ஸ் புத்தகத்தின் முதலாம் பகுதியை முடித்த நிலையில் இதனை பகிர்ந்து கொள்ளாமல் நகர்வதற்கு மனம் ஒப்பவில்லை.
எப்பொழுது சேப்பியன்ஸின் மூளையளவு பெருத்து, நிமிர்ந்த நடை கொண்டு, இரண்டு கைகளை வீசி நடந்து திரியும் நிலைக்கு இந்த பரிணாமம் அவர்களை எடுத்துச் சென்றதோ அன்றே அவர்களின் அறிவுப் பசியும், குடற்பசியும் பல்கிப்பெருகி மிக்க அழிவுகளையும், கட்டுக்கடங்கா வளர்ச்சியையும் விதைத்து அவர்களின் வழித்தடம் தோறும் தடயங்களை விட்டுச் சென்றிருக்கிறது எனலாம்.
ஆஃப்ரிகாவின் கிழக்கு கடற்கரையோரம் மெதுவாக நடந்து ஆசியாவின் மத்தியப் பகுதியை அடைந்தவர்கள் அப்படியே கொஞ்சம் பேர் இந்திய துணைக்கண்டப் பகுதியிலும், மேற்படி நகர்ந்து தெற்காசியப் பகுதிகளிலும் குடியேறினர்.
இடையில் தங்களுடைய உப மனித இனங்களை சந்திக்கும் கணம் தோறும் அறிவின்பால் சார்ந்தவர்களை புணர்ந்து உள்கிரகித்தோ, அல்லது பகையுணர்ச்சியின்பால் போரிட்டு அழித்தோ சேப்பியன்ஸ் இனம் தங்களை அந்த சூழலியலுக்கு தகுந்தாற் போல் தகவமைத்துக் கொண்டு தழைத்து வாழ்கிறார்கள்.
வேட்டையாடிகளாக இருந்த காலத்தில், நம்முடன் புழக்கத்தில் இல்லாத விலங்கினங்களை சந்திக்கும் கணம் தோறும், அதி புத்திசாலித்தனமான மண்டையறிவுடன் உருவாக்கப்பட்ட நாம் பல்வேறு பட்ட வேட்டை உக்திகளைக் கொண்டு ஏனைய விலங்கினங்களை கொன்று குவிக்கும் ஒரு பேரழிவின் கருவியாக்கி இருந்தது நம்மை இந்த இயற்கை என்பதை நாம் இங்கு மறந்து விடக் கூடாது.
பல கோடி ஆண்டுகளாக பல கண்டங்களில் செழித்து வாழ்ந்து வந்த பல பெரும் பாலூட்டிகள் எங்கெல்லாம் இந்த வேட்டையாடி சேப்பியன்ஸ் காலூன்றினானோ அங்கெல்லாம் ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்குள்ளாகவே அழித்தொழிக்கப்பட்டிருந்தது.
இந்த பின்னணியில் நாம் வேட்டையாடிகளாக இருந்த காலத்தில் இயக்கமே அற்ற நாடோடிகள் என்றளவில் மட்டுமே நம்மை குறுக்கி பார்த்துக் கொள்ள முடியாது. நாம் பேரழிவுகளையும், போராட்டங்களின் ஊடாகவும் இந்த பரந்து விரிந்து கிடந்த கிரகத்தில் நம்முடைய ஆளுமையை மென்மேலும் வளர்தெடுத்துக் கொள்ள இரத்தம் சிந்தி ஆதி சேப்பியன்ஸ் செப்பணிட்டுக் கொண்டிருந்தார்கள் என்றளவில் புரிந்து கொள்ள வேண்டும்.
தெற்காசியாவின் தீவுகளிலிருந்து மெல்லப் பரவி என்று அவர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலண்ட் போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கும் பெருமளவிலான விலங்கு உணவுச் சங்கிலிகளையும், அதனைத் தொடர்ந்த சூழலியல் மாற்றங்களையும் உருவாக்கத் தொடங்கினார்களோ அன்றே நமது அடுத்தக்கட்ட நகர்வும் தொடங்கிவிட்டது.
அதற்கு சில பத்தாயிரம் வருடங்களுக்குப் பின்னால் சைபீரியாவின் மேற்கு நிலப்பரப்பில் பனி உறைவினால் தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருந்த இணைப்பு, மேம்பட்ட சூழலியல் தகவமையும், விலங்கு புரதத்தின் பால் ஈர்க்கப்பெற்றிருந்த அந்த பகுதியில் வாழ்ந்த சேப்பியன்ஸ்களை மெல்ல வலசை போகும் பாலூட்டிகளின் பின்னால் நகர வைத்து வட அமெரிக்கா கண்டத்திற்குள் காலூன்ற வைத்தது.
அங்கும் ஒரு மாபெரும் பேரழிவிற்கு இந்த வேட்டையாடி சேப்பியன்ஸ் வழி கோணி, சுற்றுச் சூழலில் ஒரு பெரும் மாற்றத்தினை உருவாக்குகின்றனர்.
இதிலிருந்து என்ன புரிய வருகிறது என்றால் எங்கெல்லாம் சேப்பியன்ஸ் காலடி பட்டதோ அங்கெல்லாம் அதி பயங்கரமான உருவத்தினை கொண்ட பாலூட்டிகளையும், எடையுடைய பறவைகளையும், பல்லூயிர்களையும் பெருமளவில் கொன்று குவித்திருக்கிறான். தங்களுடைய உடை, உணவு, பாதுகாப்பு என பல காரணங்களுக்காக.
அது மிக இயல்பாகவே நடந்திருக்கிறது. கற்கால கருவிகளை கையாண்ட காலத்திலேயே கிட்டத்தட்ட 50 விழுக்காடு அத்தனை பெரிய பேரழிவுகளையும் நிகழ்த்தியிருக்கிறது இந்த இருகால் கொண்ட அப்பாவிகளைப் போல் உள்ள சேப்பியன்ஸ் இனம்மென்று இந்த புத்தகம் பல சான்றுகளுடன் சுட்டிச் செல்கிறது.
பின் வந்த காலங்களில் அந்த பல்லூயிர்களின் நடமாட்டம் குறைந்த காலத்தில், வேளாண் இனம் அடுத்தக் கட்ட அலையாக இந்த நிலப்பரப்பெங்கும் ஆளுமை கொள்கிறது. முதல் ஆழிப்பேரலையையொத்த வேட்டையாடி சேப்பியன்ஸ் பரவலில் பெரும் விலங்கினங்கள் அழித்தொழிக்கப்பட்டன. இரண்டாவது அலையான வேளாண் குடிகள் நிலத்தினை திருத்தியும், அழித்தும் அடுத்த மாற்றத்தினை நிகழ்த்துகிறார்கள்.
மூன்றாவது அலையாக தொழிற்புரச்சி ஓங்கிய காலத்தில் நாம் இருக்கிறோம்... அவர்கள் அளவிற்கு அழிக்க ஒன்றுமில்லை என்றாலும் மிச்சமிருப்பது நம்முடைய இருப்பிற்கான இந்த பிராணவாயு அதுவும் மிச்சமிருக்கும் இந்த வனங்களில் மட்டுமே. அதனையும் கண் மூடித்தனமாக பழைய நினைப்புதான் பேராண்டி கணக்காக கையாண்டால், நாம் இந்த பூமிப்பந்தின் மேலடுக்கில் முகவரியில்லாமல் துடைத்தெரியப்படுவோம்.

0 comments:

Related Posts with Thumbnails