Friday, February 12, 2016

வால்பாறையிலிருந்து மான்ஹட்டனுக்கு: மரங்களடர்வு -2



மலையணில்களின் நீண்ட தூரிகையையொத்த அந்த மழைக்காடுகளினூடாக நின்றுநிதானித்துக் காட்டு பூனைகளின் பாதச் சுவடுகள், விட்டைகள், காட்டெருமைகளின் சாணம் மற்றும் அவைகளின் இருப்பு என்று அவதானித்தவாறே
வேலைகளை முடித்த கையோடு, கிடைக்கும் சிற்றோடைக்கு அருகில் பாறையென்றின்மீதாக சப்பணமிட்டவாரு பல மதியங்கள் கழிந்திருக்கிறது.

கண்ணாடிப்  படிகமென சன்னமாக உருண்டோடும் நீராக அத்தனை சுத்தமான தண்ணீர்.
அதன் மீதாக உந்தித் திரியும் ஸ்கிட்டர்ஸ். காய்ந்த சருகொன்றின் மீதாக தொத்தி டைட்டானிக் ஜாக்காக மிதந்து திரியும் எறும்பு. நீர் படிகத்தின் கீழாக என்னையும் கொஞ்சம் பார் என்றபடி ஊர்ந்து நடக்கும் நண்டு. தண்ணீரின் வண்ணத்துடன் இயைந்து போகும் மீன் குஞ்சுகள். ஒன்று மற்றொன்றை விஞ்சும் பேரழகுடன் அணி வகுத்து எனை சுவாசிக்க மறக்கடிக்கும் ஒருரம்மியமான சூழலில் கட்டி போட்டு வைத்திருந்தது அந்த மேற்கு மலை மழைக் காடுகள்.

திரும்பிய பக்கமெல்லாம் மழையில் நனைந்து அடர் கருப்பில் பருத்த அடிப்பகுதியை கொண்ட மரங்களின் அடர்த்தி. பெரும்பகுதியான நேரங்களில் என்னைச் சுற்றிலும் அது என்ன விதமான நேரம் என்று கூட அறிந்து கொள்ள முடியாத வாக்கில் சூரியக் கதிர்களும் கூட காட்டின் தரை தொட அஞ்சி நிற்கும் அடர்வு கொண்ட உச்சிகளையும், உயரங்களையும் கொண்ட மரங்கள். அந்த

மரங்களில் பலவும் என்னை விட பல மடங்கு அதிக வயது கொண்டவை.சற்றே உற்றுக்கேட்டால் நிறைந்த நிசப்தத்தில் பேரமைதியை கற்றுத் தந்தன.


சில் வண்டுகள் மட்டுமே அவ்வப்பொழுது யாரோ ஒருவர் சன்னமான சப்தத்தில் தொடங்க அங்கே இங்கேயென பேரிரைச்சலாக நூற்றுக்கணக்கில் ஒன்று சேர்ந்து ரீங்காரமிட்டு யாரோ ஒரு சிம்ஃபெனி இசைத் தொகுப்பாளர் கையசைத்து திடும்மென ஒரே நேரத்தில் நிறுத்துவதையொத்து நிறுத்திக் கொள்ளும். எங்கோ தூரத்து எதிரொலியாக ஒரு மலபார் விஸ்ஸிங் த்ரஸோ, காட்டுக் கோழியோ அல்லது மரகதப் புறாவோ சப்தமெழுப்பி அந்த அடர் வனமே அதிரச் செய்யும். மதிய உறக்கத்திலிருந்து அப்பொழுதே நெட்டி முறித்து, வாய் பிளந்து கொட்டாவி உதிர்த்து, உயரக் கிளைகளில் ராஜ மிடுக்குடன் ஒரு சிங்கத்தின் கம்பீரத்துடன் மரக் கிளைகளின் தண்டுகளில் நடந்து திரியும் சிங்கவால் குரங்குகள்.

திடும்மென எங்கிருந்தோ அடித்து விரட்டிக் கொண்டு வந்த ஒரு பெரும் கரு 
மேகத் திரள் சூரியக் கதிர்களை மறைத்த படி ஜமுக்காளம் விரிக்க, காடு மேலும் கரிய இருளுக்குள் விழுந்து, அத்தச் சூழலையும் மாற்றிக் காண்பித்து இருக்கிறாயா, அல்லது உன்னையும் சேர்த்து எங்களுடன் இணைத்து கொள்ளவா என்று உருமிக் கடந்து செல்லும்.

பல பொழுதுகள் அதன் மிரட்டலுக்கு அஞ்சாமல் உள்ளிருக்க, இடியுடன் தன் மடி அவிழ்த்து கொட்டிய மழையாக பொழிந்து கொட்டும். குளிர் மழையில் விசிறியாக பரந்து விரிந்த மரத் தண்டுகளின் ஓரமாக அந்தச் சூழலில் ஒதுங்கி கொள்வதும் உண்டு. இல்லையென்றால் தொப்பலாக நனைந்து மேடேறி, நாகரீகமடைந்தால் கடந்து போகும் பேருந்து ஓட்டுநர் பாதி தூரம் போயும் பக்கக் கண்ணாடியில் பார்த்து நிறுத்தி ஏற்றிக் கொள்ளும் பொழுது “சார், அட்டை பார்த்தீங்களா,” உள்ளே ஏத்திறப் போறீங்கன்னு கேட்டபடி வாகனம் நகர்த்துவார். 

இங்கு எங்குமே உணவு பற்றி பேசாததிற்கு காரணமிருக்கிறது. காலையில் கெட்டிச் சட்னி வைத்து வாங்கிய இரண்டு இட்லிகள் மதியம் மூன்று மணிக்கு பிரித்தால் என்ன வாசனையுடன் கிடைத்து விடக் கூடும். அத்தனை நடைக்குப் பிறகு பொட்டலத்தைப் பிரித்து கிள்ளிக் கிள்ளி சாப்பிடும் பொழுது அதன் சுவையே எந்த காண்டினெண்டல் உணவிலும் கிடைக்காத அளவில் உளத்தையும், வயிற்றையும் ஒரு சேர நிரைக்கும். 

வெளியில் வந்தால் மலைவாழ் தேயிலைத் தொழிலாளிகளின் தேநீர்க் கடையில் சில சமயம் ஈக்கள் முதல் போணி செய்யாத போண்டாவோ, வடையோ நல்ல சிவப்பேறிய தேநீருடன் உணவுக்குழாயை வருடியபடி இரைப்பையை நிரப்பும். அரவமற்ற வனப்பகுதிகளுக்குச் செல்ல நேர்ந்தால் பசியால் கண்களில் வண்ணத்துப் பூச்சிகள் சிறகசைக்க சிவப்பேறிய கண்களுடன் கூடடைவோம்

0 comments:

Related Posts with Thumbnails