Wednesday, February 10, 2016

வால்பாறையிலிருந்து மான்ஹட்டனுக்கு - 1: Memory Lane

கிடைக்கும் இந்த சின்னஞ் சிறிய வாழ்க்கைக்குள் எத்தனை பயணங்கள், இடங்கள், புது மாதிரியான வேலைகள், புதிய மனிதர்கள் என்று விரித்து கொண்டே சென்றால் நம்முடைய வாழ்வின் கடைசி கோப்பையில் மிஞ்சி இருப்பது பிடித்த ரொட்டியை, பிடித்த கட்டன் காஃப்பியில் நனைத்து எடுத்து சாப்பிட எத்தனித்து சிறிதே தாமதித்து வெளியில் இழுக்க உடைத்துக் கொண்டு உள்ளே விழுந்து வைத்ததை கடைசி உறிஞ்சலில் ரசித்து அப்படியே விழுங்க ஊத்திக் கொள்வது போல நம்முடைய அனைத்து கடந்து வந்த நினைவு பொதிகளும் தித்திக்கும் வண்ணம் அமைந்திருக்க கூடும்.

என்னுடைய வால்பாறை மற்றும் டாப்சிலிப் நாட்களை இப்பொழுது நினைத்து பார்த்தால் ஏதோ கனவில் வாழ்ந்தது போல இருக்கிறது. ஆனால், நான் அன்றே இதே கோழித் தனமாக அதே கிறுக்குத் தனங்களுடன் வாழ எத்தனித்திருந்ததால், என்னால் முழுமையாக மழையையிலும், வெயிலிலும், அட்டை கடியிலும், யானை விரட்டலிலும், தேவாங்கு பார்க்க சென்ற இரவுகளிலும், யானை, காட்டெருமை சாணங்களை பொரட்டி போட்டும், காட்டு பூனைகளின் விட்டைகளை உடைத்து  போட்டும் அவைகளின் உணவு பழக்க வழக்கங்களை கண்டறியவெனவும் செய்யும் அத்தனை விசயங்களையும் ரசனையுடனும் செய்யும் ஒரு பெரும் வரம் பெற்றிருந்தேன்.

பனி படர்ந்திருக்கும் விடியற் காலப் பொழுதில் கிடைக்கும் ஏதோ உணவை எடுத்துக் கொண்டு காட்டினுள் நடையைக் கட்டினால் மீண்டும் உலகம் இருளினுள் சுருளச் சுருள ஓட்டமும் நடையுமாக மலை உருட்ட வீடு வந்து சேர்க்கும் சரிவான மலைகளில் உருண்டு பொரண்ட நட்களென சென்றவை அவை. எல்லாவற்றிலுமே ரசனை இருந்தது! மைன்ட் ஃபுல் நாட்களவை!!

வண்டுகள், வண்ணத்து பூச்சிகள், தவளைகள், ஊர்வன,  பறவைகள் என எது கிடைத்தாலும் அதனை அடையாளம் காணவென குறிப்பெடுத்து பட்டியலில் இணைத்தாக வேண்டுமென வெறி பிடித்து நகர்ந்த நாட்களவை.

அதே நாட்களில் தான் இக்பால் ம்யூசிகல் கடையுமெனக்கு அறிமுகமாயிருந்தது. வரும் வழியில் வாரத்திற்கு ஒரு டிடிகே90 புது கெசட் வாங்கி அங்கயே இளையராஜவின் 70பது மற்றும் 90களின் பாடல்களை மிக்க சிரத்தையாக கேசட் பை கேசட்டாக பதிவிற்கு கொடுத்து, இரவின் இடுப்பை தாண்டியும் மிக மென்மையாக, சிறுத்தையின் நடமாட்டத்திற்கு அஞ்சிய ஒரு புள்ளிமானின் அச்ச குரலுக்கும், விட்டு விட்டு சிம்ஃபொனி நடத்தும் சில் வண்டுகளின் ரீங்காரத்திக்கிடையிலே விடிய விடிய பாடல்களை ரசித்து கொண்டு கிடந்த நாட்களவையும் கூட.

இத்தனைக்கும் அன்று எனக்கு எந்த காதலியும் கிடையாது. இப்படி ஒரு ரசனையுடன் லயித்துக் கிடக்க. வரும் போகும் வழியில் நான்  உடுத்தி இருக்கும் உடையையும், கழுத்தில் தொங்கும் பைனாகுலரையும் கண்டு விடலைப் பெண்கள் கண் வைத்து போவது மட்டுமே நடந்து வந்தது.

ஆனால், இரவின் மடியில் மேகம் நடைபாதை இறங்கி தேயிலை தோட்டத்தின் ஊடாக தூவலாக அள்ளி கன்னம் வருட வருட எதனைப் பற்றியும் லட்சியமற்று ஓஷோவுடனும், கிட்டுவுடனும் கேள்வி பதில் செஷன் நடத்தியபடியோ, போடா கடவுளுமில்லை, பிசாசுமில்லை என்று அந்த கும்மிருட்டிருக்கு சவால் விட்டபடியோ காட்டெருமையின் நடமாட்டம் கவனித்தபடி காட்டு வாசியாகி திரிந்த நாட்களவை.

ஆனால், அந்த பச்சைய மொசைக் காடு வரும் காலங்களில் எனக்கென வேறு விதமான திட்டத்தை வைத்திருந்திருக்கிறது. என்னுடைய அகந்தயை, மனிதனின் புறவயமான வண்ண தோலுரிப்புகளின் ஊடாக எது போன்ற மனிதனாக பரிணமித்து நிற்கிறேன் என்று டெஸ்ட் வைக்க காத்திருக்கிறது என்று அறியாமலயே!

இது போன்ற மற்றுமொரு இரவில் தொடர்ந்து பயணம் செய்யலாம். நிறைய இருக்கிறது... பேச... 

2 comments:

மீரா செல்வக்குமார் said...

இரவின் மடியில் மேகம் நடைபாதை இறங்கி தேயிலை தோட்டத்தின் ஊடாக தூவலாக அள்ளி கன்னம் வருட வருட எதனைப் பற்றியும் லட்சியமற்று///கவிதையாய் விரிகிறது..வாழ்த்துக்கள்

Thekkikattan|தெகா said...

நன்றி!

Related Posts with Thumbnails