Monday, January 18, 2016

மரணத்தை வென்றவன்: The Revenant

இந்த படத்தோட ஒவ்வொரு நிழல் படத்தையும் பார்க்கும் பொழுது, திரையரங்கு சென்று பார்க்க வேண்டுமென்ற அவாவை தூண்டிய படமிது. இருப்பினும் ஒரு பக்கம் ஒரு சிறு தயக்கம் இருந்து கொண்டே இருந்ததை மறுக்க முடியாது. லியோனார்டோ டிகாப்ரியோ, எதிர்பார்த்த படியே ஹக் க்ளாஸாக (Hugh Glass) வந்து நம்மை வாதையின் உக்கிரத்தையும், போராட்டத்தின் நெஞ்சுறுதியையும், தப்பி பிழைப்பதற்கென தனது கடைசி மூச்சை இழுத்து பிடித்து அவர் வெளி வரும் ஒவ்வொரு காட்சியிலும் நம்மையும் சேர்த்தே முனக விடுவதிலுமாக அள்ளி கொண்டு சென்று விட்டார்.

இந்த படம் சிறிது உண்மை கதையையும், நிறைய ஹாலிவுட் மசாலாவும் கலந்து கொடுத்து நமது 90 நிமிடங்களையும் வாயை பொத்தியபடி அமர வைத்திருக்கிறது. இயற்கை. அது ஆழப் பகுதியான வான் வெளியாக இருக்கட்டும், கடலாக. பாலையாக, வனமாக இருக்கட்டும் தனித்து விடப் படும் பொழுது வாழ்க்கையின் இண்டு இடுக்குகளையும் ஒன்று மற்ற சூன்யமாக காட்சி வழங்கி நம்மை உறைய வைத்து விடும் நிஜமது. இதற்கென இந்த படம் கனடாவிலும், அர்ஜெண்டைனாவிலும் படமாக்கப் பட்டிருக்கிறது. பனி சூழ்ந்த பாறை முகடுகளும், ஓயாத அருவிகள் மற்றும் ஆறுகளுக்கிடையிலும் நம்மையும் ஊர்ந்தும், நகர்ந்தும், மிதக்கவும் வைத்து, சுட்டுவிடும் பனிக் குளிரில் ஒட்டுத் துணி இல்லாமல் சிலிர்க்க வைத்துமாக டிகாப்பிரியோ நமது முகத்தில் அவருடைய உணர்வுகளை கொண்டு வர வைத்திருக்கிறார்.

அவருடைய நடிப்பின் உச்சம் க்ரிஸ்லி கரடி ஒன்று அவரை பொரட்டி போட்டு குதறுவதில் ஆரம்பிக்கிறது. அந்த கணத்தில் எனக்கு குறுக்குவாட்டாக மண்டை முழுக்க ஓடியது- நான் முதுமலையில் அதே தூரத்தில் வைத்து கரையான் புற்று ஒன்றை நோண்டி கொண்டிருந்த ஒரு கரடியைப் பார்த்ததை மனத்திரையில் கொண்டு வந்து ஜில்லிட வைத்தது. இந்த படத்தில் டிகாப்பிரியோவை விட்டு, விட்டு ஐந்து நிமிடத்திற்கும் மேலாக வந்து குதறும் கரடி காட்சியமைப்பு முதுகெலும்பை ஜில்லிட வைப்பதாக உள்ளது. அதனையொட்டி டிகாப்பிரியோவின் வலிக்கான முனகல்கள் நம்மை சீட்டின் முனைக்கு எடுத்து வந்து மீண்டும் சுதாகரித்து பின்னால் நகர வைக்கத் தக்கதாக உள்ளது.

இத்தனை தத்ரூபமான வாதையின் வெளிப்பாடுகளை இத்தனை அருகாமையில் வைத்து வேறு எந்த படத்திலும் பார்த்ததாக எனக்கு ஞாபகத்திலில்லை. இத்தனை அழகினை கொண்ட இயற்கை, ஓரிரு நிமிடங்களில் இரக்கமேயற்ற கொடுரீயாக மாற முடியுமா என்ற கேள்விக்கு இந்த படம் தொடர்ந்து பதிலுரைத்து கொண்டே வருகிறது.

தொடக்க காட்சியில் தொடர்பேயில்லாத விலங்கு தோல் சேகரிக்கும் ஒரு கூட்டத்தை சிவப்பிந்தியர்கள் ஏன் இப்படி வேட்டையாடுகிறார்கள், என்ற சினிமாத் தனமான ஒரு கழிவிரக்கம் மின்னலைப் போல நமது மனதில் தோன்றி மறையலாம். இருப்பினும் பல இடங்களில் சிவப்பிந்தியர்கள் பக்கமிருந்து பல நியாயமான வாழ்வாதாரங்களை பறித்து கொண்டதற்கான விசயங்களை அவர்கள் தரப்பிலிருந்து பேச விட்டு நம்மை கேக்க விட்டிருக்கிறார்கள்.

சிவப்பிந்திய பெண் ஒருத்தியை அந்த முகாமில் வைத்து அவளை தேவைப்படும் பொழுதுதெல்லாம் வன்புணர்வு கொள்ளுவதாக வரும் ஒரு காட்சியாக இருக்கட்டும், மற்றுமொரு சிவப்பிந்திய ஊரைத் தாண்டி செல்லும் பொழுது மொத்த ஊரே சாகடிக்கப்பட்டு உடல்கள் தங்களின் வாழ்விடத்திற்கு முன்பாகவே விட்டுவிட்டு சென்றது போன்ற காட்சியாக இருக்கட்டும், சிவப்பிந்தியர்கள் எது போன்ற விபரீதங்களை எல்லாம் அந்த கால கட்டத்தில் அனுபவித்திருப்பார்கள் என்பதனை நம்முள் கேள்விகளாக முன் வைத்த படியே நகர்கின்றது.

இந்த படத்தில் ஓர் அழகான காதல் கதையுமுண்டு! அது டைட்டானிக் பாணி. இந்த படம் பாதி உண்மைக் கதையும், மீதி ஹாலிவுட் மசாலாவும் என்று ஆரம்பத்தில் கூறினேலல்லவா? உண்மைப் பகுதி 1800களில் ஹக் க்ளாஸ் என்பவர் நீர் நாய் மற்றும் விலங்கு தோல் வேட்டையாளர். அவரை ஒரு கரடி பொரட்டி எடுத்து விடுகிறது. ஏனைய ஹக் நண்பர்களால் அந்தக் கரடி சுட்டு கொள்ளப்படுகிறது. அந்த நிகழ்வு அவரை சாகும் நிலையில் விட்டு செல்கிறது. காயமுற்ற நிலையில் உள்ள ஹக்கை தூக்கி கொண்டு, தங்களது பயணத்தை தொடர்கிறார்கள். பயணம் கரடுமுரடாகிறது. பயணத்தை தொடர்வதே கேள்விக்கு உள்ளாகும் பொழுது, பயண தலைமை இரண்டு பேரை ஹக்குடன் இருக்கு மாறு பணித்து விட்டு ஏனையவர்கள் தங்களது பயணத்தை தொடர்கிறார்கள்.

ஜான் ஃபிட்ஜரால்ட் தன்னை விட இளைஞரான ஜிம்மை மூளைச் சலவை செய்து, ஹக்கை அரைகுறை உயிரோடு விட்டு விட்டு ஏனையவர்களுடன் தங்களது பயணத்தை தொடர முயல்கிறார். இது வரையிலும் தான் உண்மை கதை. படத்திற்கென வரும் காதல் கதையில், டிகாப்பிரியோ சிவபிந்திய பெண் ஒருத்தியுடன் கலந்து, அவர்களுக்கு ஒரு மகனும் பிறக்கிறான். வெள்ளையின காலனி மக்கள் ஊர் புகுந்து சுட்டு கொல்லும் மேளாவில், கதாநாயகியும் இறந்து போகிறாள்.

மகனுடன் டிகாப்ரியோ பயணத்தை தொடர்கிறான். இந்த நிலையில் படத்திற்கென ஃபிட்ஜரால்ட், ஹக்கின் மூக்கையும், வாயையும் மூடி கொன்று விட எத்தனிக்கும் பொழுது மகன் போராடி காப்பாற்ற முனையும் பொழுது தந்தைக்கு முன்பாகவே கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்படுகிறான். பின்பு, டிகாப்ரியோவை அப்படியே விட்டுவிட்டு மற்ற இருவரும் சென்று விடுகிறார்கள்.

மூன்று வாரத்தில் முதல் முறையாக படுத்த படுக்கையாக கிடந்தவன், தன் உடம்பை தரையில் போட்டு இழுத்து, இழுத்து ஊர்ந்து சென்று தன்னுடைய மகன் கொலையுண்டு கிடக்கும் காட்சியை காண்பதும், அதற்கென முகத்தில் காட்டும் உணர்வுகள், நமது தொண்டையில் ஏதோ ஒன்று ப்ளக் என்று அடைத்து கொள்ள வைப்பதாக உள்ளது. அந்த காட்சிக்கிடையே சிறிது நேரம் மேகம் சூரியனை மறைத்தும் மறைக்கமாலுமாக நகர்ந்து கொண்டிருப்பதை ரொம்ப நிதானமாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள். இது போன்ற பல மாலை, காலை சூரிய உதயமும், மறைவுமாக காட்சி படுத்தல்கள், அந்த பகுதியில் நாமும் வாழ்ந்து விட்டு வந்ததிற்கான அடர்த்தியான மன நிலையை விட்டுச் செல்கிறது.

மறைந்து போன காதலி டிகாப்ரியோவின் மரண போராட்டதின் போதும், ஆழ்ந்த உறக்கத்தின் போதுமாக வந்து ஹஸ், ஹஸ்பதும், மரத்தின் வலிமையோடு வாழ்வின் போராட்ட குணத்தை ஒப்பீட்டு அவனை போராட உந்துவதும் ஏதோ சிவப்பிந்தியர்களின் அதெண்டிக்கான மைண்ட் ஸ்பிரிட் இசையை ஒலிக்க விட்டு கேட்பதனை போல வெரி மெடிட்டேடிவ். 

மிச்சக் கதை டிகாப்ரியோ பலி வாங்கும் எண்ணத்துடன் ஃபிட்ஜரால்டை தேடி சென்று பலி வாங்குவதே கதை.

பனியில் ரத்தம் பார்க்கும் பொழுது ஏதோ மனதை பிழிகிறது. வீட்டிற்கு வந்து பாப்பாவின் முகம் பார்க்க முடியாமல் அழுது கொண்டே இருக்க நேர்ந்தது. அவள் என் கண்களை பார்த்து விட்டு அவள் கண்களில் தொடர்ந்து முன் மண்டை முடி கண்களில் வீழ்வதாக கண்ணை துடைத்து கொண்டே இருந்தாள். பிறகு, ஒரே ஒரு கேள்வி எதற்காக அந்த படத்தை பார்க்க சென்றாய்? அதற்கு என்னிடத்தில் பதில் இல்லை. 

ஏன் இந்த படத்தை பார்க்க மனது விரும்பியது. உள்ளே ஏதோ ஒரு வெற்றிடம் தொடர்ந்து பரந்து விரிந்த அந்த பனிக் காட்டின் மரங்களில் உரசி எழுப்பும் சப்பத்துடன் ஓலமிட்ட படியே எதனையோ நிரப்பிக் கொள்ள மனது தொடர்ந்து கனத்தை விரும்புகிறதோ என்னவோ. நிலையாமை!!


0 comments:

Related Posts with Thumbnails