Tuesday, January 19, 2016

நட்சத்திரம் பயணிக்கச் சென்ற ரோகித் வெமுலா: Casteism!

கரையான் புற்றிலிருந்து கிளம்பும் ஈசல்கள் போல இந்த சமூகத்தில் தான் எத்தனை கோடி தலைகள் இந்த பூமியின் மேலோட்டில் தினமும் சிறகெடுத்து வெளிக்கிளம்பி, போராடி உணவு சேகரித்து, பொருளீட்டி, இனப்பெருக்கம் செய்து கிடைக்கும் அற்ப ஆயுளுக்குள் தங்களுடைய தடயத்தை விட்டுச் செல்ல வித விதமான முறையில் தங்கள் பாதையில் வைக்கப்படும் சவால்களை சந்தித்து மூன்றுக்கு ஆறில் கனிமமாக தங்களை மாற்றிக் கொள்ளும் இடைவெளியில் எதனை வென்றெடுக்க போராடுகின்றது?

ரோகித் வெமுலா வகை மன வெற்றிடங்களை உருவாக்குவதில் தான் இந்த ஈசல்களுக்கு எத்தனை கொண்டாட்டம். இங்கே ஒரு மனதின் நேர்மையான கேள்விகளுக்கு, தன்னுடைய இருப்பின் அவசியமான தேடல்களுக்கு பொய்மையான, வெற்றுத் தனமான போலி அவசியங்களின் பொருட்டு தொடர்ந்து ரோகித்துகளின் சிறகுகள் சிதைக்கப்பட்டு அவர்கள் மலர்ந்து மணம் பறப்புவதற்கு முன்னாலேயே கசக்கி, சமூக கூட்டு கொலை செய்து எதனையோ தொடர்ந்து நீட்டித்து கொள்ளும் அவசியம் இந்த சமூகத்திற்கு இருந்து போகிறது.

அவர்களின் கடின உழைப்பும், எதிர் நீச்சலின் மூலமாக தாங்களே கற்று கொண்ட மொழி, அறிவுச் சுடரின் பேனா முனையில் தங்களையே உள்ளே மையாக நிரப்பி, வைத்திருந்த அத்தனை மனக் குமுறல்களையும் ஓரு ஏ4 சைஸ் தாளில் நிரப்பி வைத்து விட்டு நட்சத்திரங்களை தேடிச் செல்ல வைத்து விடுகிறது இந்த நாற்றமெடுத்த சமூகம்.

இந்த ஈசல்களின் குறுகிய, சாதீயம் என்ற புற்றால் இந்த அறிவியலுக்கே சிறிதும் சம்பந்தமில்லாத கனன்று கொண்டிருக்கும் அந்த ’தீ’ மரபணுக்குள் புகுந்து அடுத்த தலைமுறைக்கும் கடத்தி விட்டுச் செல்லும் அத்தனை சாத்தியங்களையும் கொண்டதாக இந்த தோல் சார் இன வெறுப்பு கையிறக்கம் செய்யதக்கதாக அமையப் பெற்று ஒரு சமூகமாகவே பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் சமூக கூட்டுக் கொலைகளை நிகழ்த்திக் கொண்டே ஒன்றுமே அதில் தங்களுக்கு பங்கு இல்லை என்ற வாக்கிலும் கடந்து போயி கொண்டே இருக்கிறது. இதற்கு அடிப்படையான துர் நாற்றத்தின் மூல குழிதான் எங்கே இருக்கிறது? மருத்துவத்தில் ஒரு புற்றுக் கட்டியை அகற்றி கொள்ள அதற்கான வழிகள் இருக்கிறது. ஆனால், உணர்வுகளில் சாக்கடைத் தண்ணீரை கலந்தது போல இருக்கும் இந்த வெறுப்பை எப்படி டைலயசிஸ் செய்வது கொள்வது? அதனை ஓன் ஆன் ஓன் செய்து கொள்வது சாத்தியமா?

இல்லை, இல்லை என்று கூறி கொண்டே மண்டையின் மறு பக்கம் கோரப் பற்கள் துருத்த, ஓநாயின் எச்சிலை ஒழுக விட்டபடி அடுத்து எங்கே கூட்டு சமூக கொலையை நிகழ்த்த முடியுமென்று தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறோம்.

சமூக ஆற்றின் ஒவ்வொரு துளைகளிலும், இடுக்குகளிலும் இந்த சாக்கடை நீர் கலந்தே இருக்கிறது. கடவுளர்களின் உருவத்தில், அவர்களுக்கு செய்யும் பூஜை அதனையொட்டி செய்யப் படும் சடங்களில், அதுக்கென அழைக்கப்படும் ஈசல் கூட்டங்களில், தோலின் நிறத்தில், அமற வைக்கப்படுமிடத்தில் , திருமண நிச்சயத்தில், பெயர் சூட்டலில், பந்தலில், பேருந்தில், கிணற்றடியில், கல்விச் சாலையில் இது போன்று எத்தனை எத்தனையோ தினசரி வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் பிளவுகளை தொடர்ந்து அறிந்தோ அல்லது மூளை என்ற ஒரு வஸ்து தங்களுக்கு இருப்பதே அறியாமலேயோ செய்து கொண்டு தான் வருகிறது.

கிஞ்சித்தும் சக மனித உணர்வுகளை மதிக்கத் தெரியாத ஒரு சமூகத்திற்கான கேடு வரலாற்று புத்தகங்களில் நமக்கு பாடமாக கற்றுக் கொடுக்க காத்திருக்கிறது. ரோகித் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டிய “எனது உடலுக்கும் ஆன்மாவிற்குமான தூரம் அதிகரித்து கொண்டே இருக்கிறது” இந்த ஒரு விசயமே அந்த இளைஞனின் மன அழத்தை, அறிவை, பக்குவத்தை, தொலை நோக்கு பார்வையை எடுத்து பறைசாற்றக் கூடியது.

அவன் எவர்களை எதிர்த்து போராடினான்? எதற்காக போராடினான்? தான் வாழும் ஒரு சமூகத்திற்குள்ளயே ‘தன்னுடைய பிறப்பே ஒரு தேவையற்ற விபத்து என்றும் சரியாக அங்கீகரிக்கப்படாத தன்னுடைய குழந்தமை” என்று வெம்பி தொடர் இன்னல்களை அவன் வழியில் பொதித்து மனதை வெற்றிடமாக, நம்பிக்கையிழப்பை உருவாக்கி கொடுத்தது எது? நமது அன்றாட வாழ்க்கையில் நட்சத்திரங்களை பற்றியும், இயற்கையின் இயல்பியலையும் நம்மில் எத்தனை பேர் தொடர்ந்து ஒன்றுடன் மற்றொன்றிற்கு தொடர்பு படுத்தி வாழத் தலைப்படுகிறோம்?

தன்னுடைய தாய் ஒரு சாதாரண தையல் மிஷினைக் கொண்டு அத்தனை தூரம் அவனை கொண்டு வந்ததிற்கு பலனாக அவன் தன்னுடைய இருப்பை அத்தனை பெரிய குன்றில் ஏறி அமர்த்திக் கொள்ள செய்த முயற்சி சரிதானே. அவன் நட்சத்திரங்களையும் இயற்கையின் மான்பையும் போற்றி வாழும் இடத்திற்கு தன்னை நகர்த்திக் கொண்டது அவன் பெற்ற கல்வியும், அந்த இடத்திற்கு தன்னை நகர்த்தி வைத்துக் கொள்ள உதவிய அந்த உண்மையான புத்தகங்களும், அது போன்ற தொலை நோக்கு கொண்ட நல்ல மனிதர்களுமே காரணமாக இருக்க முடியும். சரியான பாதையில் தானே பயணித்து கொண்டிருந்திருக்கிறான்?

ஆனால் இந்த ஈசல்களின் பார்வையில் அதுவே அவனை எதிர் முனையில் நிறுத்தி விட்டது. இன்று அவன் “நான் அந்த நட்சத்திரங்களில் வேறு மாதிரியான வாழ்க்கை ஏதாவது இருக்கிறதா” என்று தேடித் செல்கிறேன் என்று தேடிச் செல்ல வைத்து விட்டது. இது போன்ற எத்தனையோ கடிதங்களை நாமும் வாசித்து கடந்து சென்று கொண்டே இருக்கிறோம்.

அவன் வயதை ஒத்தவர்களும், கல்விச் சாலைகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களும் சமூக அக்கறையும், அறிவும் கொண்டு அரசியல் நிலைப்பாடுகளை இப்பொழுது செதுக்கி கொள்ள வில்லை என்றால் பின்பு எந்த வயதில் அவர்கள் தங்களுக்கான மன வெளிப்பாடுகளை செதிக்கி கொள்ள முடியும். அரசியல் வாதங்களும், நிலைப்பாடுகளும் தானே நம்முடைய வாழ்க்கையையே செதுக்குகிறது. யார் எங்கே இருக்க வேண்டும், எதனை வணங்க வேண்டும், எந்த வழிபாட்டு தளத்துக்குள் யார் நுழைய வேண்டும் நுழையக் கூடாது என்பது வரைக்குமாக அது நீட்டுகிறது. இந்த வயதில் என்ன அரசியல் வேண்டிக் கிடக்கிறது என்று கேட்பவர்களை நோக்கி இந்த கேள்வியை வைக்கிறேன்.

இந்த சமூகத்திற்கு எந்த விதமான கடவுளர்களும், பிழைப்பு வாத நீதிமான்களும், கட்சி தலைவர்களும், மத குருமார்களும், கதை புக் எழுத்தார்களும் உணர்வூட்டமோ, மனசாட்சியோ கொடுத்து விட முடியாது என்பது ஊர்ஜிதமாகி வருகிறது. கூட்டமாக மீண்டு வரவே முடியாத ஒரு பெரும் சாம்பல் பள்ளத் தாக்கை நோக்கி மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம்.

தான் வணங்கும் ஒரு கடவுளின் அடையாளத்தில் ஒருவன் தன்னுடைய ஆளுமையை, சாதியை காட்டிக் கொள்ள முடியுமெனில் இந்த ஈசல் சமூகம் எப்படி தன்னிரைவோடு தனக்கென அக மன ஆராய்ச்சி செய்து கொள்ளும். வெளியுலகில் இல்லை நரகமும், சொர்க்கமும் அடித்து பிடித்துக் கொண்டு துண்டு போட்டு வைக்க, இங்கயே இப்பொழுதே அதனை உருவாக்கியும், அழித்து வரும் நம் கைகளிலேயே அது உள்ளது.

ஏன் மனிதத்தை நம்பிய ரோகித் போன்றவர்களுக்கு பேய், பிசாசுகளின் பேரிலும் கடவுளர்கள் பேரிலும் நம்பிக்கை இல்லையென்பது, இது போன்ற அகால மரணத்தை தழுவியர்கள் கூட இருண்மையில் அதற்கு காரணமானவர்களை ஒன்றுமே செய்து விட முடியவில்லை என்பதனை தனது நிகழ்கால வலியின் ஊடாக எழுப்பி கொண்ட கேள்விகளின் விளைவாகத்தன் இருக்கக் கூடும்.

எது எப்படியாகினும் சானம் தொடர்ந்து ஒரு சமூகத்தை மென்மேலும் மூடிக் கொண்டே வருகிறது. இங்கே தாராசு தட்டுகளில் இருக்க கூடிய நியாய, அநியாங்களின் எடை சமமானதாக இல்லை. எடுத்து கொண்டிருப்பவர்கள் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். கொடுத்து கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இங்கே விட்டு கொடுப்பதும், அனுசரித்து போவதும் பலவீனமாக பார்க்கப் படுகிறது.

நட்சத்திரங்களையும், பிரபஞ்ச துகள்களையும் தினசரி வாழ்வில் இணைக்கத் தெரிந்தவன் இங்கு வாழ தகுதியற்றவனாகிறான். சிறுமைக்கு பிறந்தவனாகிறான். தன்னை முனைவர் அளவிற்கும் அறிவியலை மூச்சாக சுவாசிக்க தெரிந்தவன் ‘இன்னொரு உலகிற்கு தனது ஆவியை அனுப்பி பயணம் செய்ய நிர்பந்தப்படுத்தப் படுகிறான்.”

ஒரே கிணற்றுக்குள் கிடந்து உழண்டு கொண்டிருக்கும் தலைபிரட்டைகளில் எது உயர்வு, எது தாழ்வு! இது ஒரு சமூக அவலம்!! வெட்கித் தலை குனிய வேண்டிய விசயம். யாருக்கு என்ன, துடைத்து போட்டு விட்டு நகர்ந்து கொண்டே இருப்போம். எத்தனையோ பார்த்து விட்டோம் இதனையும் பார்க்கத் தெரியாதா!

P.S: இந்த கடிதத்தை வாசிக்கும் பொழுது என்ன மாதிரியான உணர்வுகளை உங்கள் மனது கடந்து செல்கிறது... முதலும் கடைசியுமான கடிதம்


0 comments:

Related Posts with Thumbnails