Sunday, January 24, 2016

பயத்தின் வழியாக எதிர்மறை எண்ணங்களை சென்றடைதல்!

சிகரெட்டை கட் செய்யும் பணியில் மனத்தை திசை திருப்ப கண் மூடி அமர்ந்த பொழுது மனம் தெரு சுத்தியதில் கிடைத்ததை இங்கே... :)

சில காலங்களுக்கு முன்பு யோகா செய்வதின் மூலமாக எது போன்ற பலன்களை ஈட்டிக் கொள்ள முடியும் என்பதனைச் சார்ந்து ஒரு பதிவு இட்டு அங்கயே யோகா மின் புத்தகம் வேண்டுபவர்கள் எனக்கு மின்னஞ்சல் செய்யுமாறும் கேட்டு கொண்டிருந்தேன். அது ஒரு ஐந்தாறு வருடமிருக்கும்.

அதனையொட்டி வாரத்திற்கு ஒரு இரண்டு மூன்று மின்னஞ்சல்களாவது யோகா புத்தகம் கேட்டு வந்து கொண்டிருக்கிறது. தவறாது நானும் அனுப்பிக் கொண்டுமிருக்கிறேன்.

சரி இப்பொழுது அது எதுக்கு இங்கே என்று கேக்கலாம். ஏதோ தேடி அடைய வேண்டுமென்பவர்களுக்கு ஒரு சிறு கல்லை எடுத்து அவர்கள் உள்ளே தங்களுக்கென கட்டிக் கொள்ள விருக்கும் மன கட்டுமானத்திற்கு என்னாலான ஒரு சிறு உதவியாக அது இருக்கக் கூடும் என்பதில் கிடைத்த ஒரு அல்ப மகிழ்ச்சி.

நேற்று ஒரு கட்டுரை வாசித்தேன். அதனில் தொடர்ந்து தனக்கென ஓர் ஐந்து நிமிடம் செலவு செய்து கொள்ளக் கூட நேரமில்லை என்பவர்கள் தான், மணிக்கணக்காக இணையத்திலும் தேவையற்ற மற்ற விடயங்களிலும் எத்தனையோ நேரத்தை தொலைத்துக் கொண்டுமிருக்கிறோம் என்று கூறியது. அந்த கட்டுரையில் பட்டியலிட்ட நம்முடைய தினசரி வாழ்வின் நேர தொலைப்பை மறுப்பதற்குமில்லை.

நம்முடைய தினசரி வாழ்வை, முடிவுகளை, போராட்டமாக கருதிக் கொண்டு மண்டை உடைத்து கொண்டிருப்பவைகள் அனைத்துக்குமே உட்கார்ந்து நன்றாக தீர்க்கமாக சிந்தித்து நமக்கென எடுக்கபடாத முடிவுகளே காரணமெனவும், தேவையற்ற, கண்ணுக்கு புலப்படாத பயங்களுமே காரணம் என்பதாக அந்த கட்டுரை சுட்டிச் செல்கிறது.

இந்த பயத்தினை வெல்லும் பொழுதே நமக்கு தேவையான வாழ்க்கைப் பயணம் நமக்கே சென்சிபிலாக இருக்க செய்கிறது. நம்மிடம் உள்ள எதிர்மறை சிந்தனைகளை நாமே உள் நோக்கி ஆராயப்படாமலேயேதானே தொடர்ந்து நாற்பது வருடங்கள் ஆனாலும் பேசியதையே பேசி, நடந்து கொண்ட பாவனையிலேயே தொடர்ந்து சரியென்று மனம் தீர்மானிக்க அதுவே நமது குண இயல்பாக வெளிப்படுத்தி கொள்ள முடிகிறது.

தொடர்ந்து மிகுந்த இறை பக்தியில் தினசரி சடங்காக நான்கு புகைப்படங்களுக்கு முன்பாக அமர்ந்து எழும் ஒருவர் எப்படி எதிர்மறை எண்ணங்களில் சிக்கி, தன்னுடைய வழியில் குறுக்கிடும் மக்களிடமும் அத்தகைய அதிர்வுகளை செலுத்த முடியும். இவைகளை கொண்டு சற்றே அருகே அது போன்ற மனிதர்களை நெருங்கி சென்று படிக்கும் தருவாயில், அங்கே உள் முகமாக தன்னை அறிந்து கொள்ளும் முயற்சி எதுவுமே சாத்திய பட்டிருக்கவில்லை என்று புரிந்து கொள்ள முடிகிறது.

ஏனெனில் மதச் சடங்கின் வாயிலாக தொடர்ந்து என்ன வெளியே வழங்கப்படுகிறது என்பதிலேயே மனம் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. அந்த எண்ணங்களை உடைத்து கொண்டு தனக்கென யோசிக்கும் 'தியான' மனத்தை அடைய முடிவதே கிடையாது.

இங்கேதான், தனக்கென ஐந்து நிமிடங்கள் தன்னுடைய சுவாசத்தை கவனிப்பதிலேயே கூட 'மனத்தின் திண்மை' ஈட்டும் பக்குவம் கைவரப் பெறுவதாக நவீன என்டெப்ருனர்ஸ், தன்னம்பிக்கையூட்டு குருமார்கள் கண்டறிந்து கூறுகிறார்கள். இதுவே சரியென்றும் எனக்கும் படுகிறது.

வயதோடு நான் அறிந்து கொண்டே வருவது- தனக்குள் செல்லவே இங்கே நம்மில் பலருக்கும் பயமிருக்கிறது. அது அப்படி ஒரு இருட்டறையாக இருக்கிறது. பயம் மட்டுமே நம்மை செலுத்தும் மூலமாக இருக்கிறது. நேர்மறை எண்ணங்களை மட்டுமே தங்களுக்குள் கொண்டவர்களே தங்களுக்கான உலகத்தில் நறுமணங்களை பரப்பும் பூஞ்சோலைகளை உருவாக்கி கொள்கிறார்கள். 

0 comments:

Related Posts with Thumbnails